பொங்கலும் பொங்கும் போல்புராஃபும்!…

0

இன்னம்பூரான்

64170[1]

பொங்கல் திருநாள் மகிழ்ச்சி பொங்கும் திருவிழா. அன்றைய தினம் நற்செய்திகளையும் நன்நிமித்தங்களையும் பகிர்ந்து கொள்வது தான் தகைமை. விவாதிக்கபடும் நிகழ்வுகள் மக்களின் ஆட்சி மேன்மையையும், நாமக்கல் கவிஞர் கூறிய படி ‘கத்தியின்றி ரத்தமின்றி’ அமையும் யுத்தம் என்றால், அது ‘சத்தியத்தின் நித்தியத்தை’ நம்பும்படி மக்களை இணைத்து விட்டால்,  ‘மண்டலத்தில் கண்டிலாத சண்டை’ என்ற புவனத்தின் புதுமையை முன்னிறுத்தி விட்டால், ‘கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல்’ இல்லை என்று பகர்ந்து விட்டால்… அது ‘காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து’ காட்டிய செந்நெறி ஆகும். ‘மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே ’ அது என்பதில் ஐயமில்லை, ஐயமில்லை, ஐயமென்பது இல்லையே.

இனி துணிவுடன் என் பாதையில் செல்லலாம், அது நற்செய்திகளையும் நன்நிமித்தங்களையும் பகிர்ந்து கொள்ளும் பாதை என்பதால். இது அரசியல் கட்டுரை அன்று. ‘நல்லாட்சியியல்’ (Good Governance) என்று இன்று என்னால் நாமகரணம் செய்யப்பட்ட துறை சார்ந்த கட்டுரை. எந்த தேசீய கட்சியும், பிராந்திய கட்சியும், கன்னா பின்னா கூடாநட்புக்களும் என் தொலை நோக்கு பார்வையில் இடம் பெறவில்லை. புதுமை பித்தன் பாணியில் அவற்றை யான் பொருட்படுத்தவில்லை.

கடந்த சில வருடங்களாக, தருணம் கிடைத்த போதெல்லாம், யான் இந்தியாவில் புரட்சி வரும். மக்கள் கொதித்தெழுவார்கள். தலைகள் உருளும். மக்களால் உயிர்மை தானம் பெற்ற தலைகள் அரசாளும். லஞ்சலாவண்யம் நிர்வாணப்படுத்தப்பட்டு நடுத்தெருவில் நிற்கும். கரும்புள்ளி, செம்புள்ளி குத்தப்பட்டு அலங்கோலோர்வலம் வரும். சட்டம் தலை தூக்கும். அதை நீதி தூக்கிப்பிடிக்கும். தர்மம் தலை காக்கும் என்றெல்லாம் எழுதி வருகிறேன். எனினும் என் ஆரூடம் ஒரு வகையில் பொய்த்து விடும் போல தோற்றம் இருப்பது நன்நிமித்தமே. கடந்த சில வருடங்களில் சில நாடுகளில் வன்மை மிகுந்த மக்கள் புரட்சி நடந்து வருகிறது, அதிர்ச்சி தரும் திசை மாற்றங்களுடன். பாரதப்போர், சாக்ரட்டீஸின் மரணம், ஃப்ரென்ச் புரட்சி, இங்கிலாந்து மாக்னா கார்ட்டா, அமெரிக்க டீ பார்ட்டி, இந்திய விடுதலை புரட்சி, சோவியத் புரட்சி, சீன புரட்சிகள், சிங்களம், மலேஷியா, கடாரம், இந்தோனேஷ்யா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மக்களெழுச்சி, எகிப்து, சிரியா, சூடான் புரட்சி ஆகியவை பற்றி விவரமாக பல இடங்களில் எழுதிய எனக்கு, இந்தியாவிலும் கடுமையான வன்முறை புரட்சி நடந்து, பல்லாயிரக்கணக்கில் மக்கள் மாண்டபின் தான் விடிவுகாலம் வருமோ என்ற அச்சம் எழுந்தது உண்மை. அவ்வாறு சிந்தனைகள் எனது உறக்கத்தை பல நாட்களில் குலைத்ததும் உண்மை. ஏனெனில், வன்மை புரட்சியின் முதல் பலி கடா ஏழை, எளியவர்கள், இளைத்தவர்கள், நசுக்கப்பட்டவர்கள். இதற்கு பரிகாரமே கிடையாது.

ஆனால், சில இந்திய நிகழ்வுகள் எனக்கு ஊக்கமளிக்கின்றன, இன்று டில்லி ஆளும் கட்சியின் கூடாநட்பு தாக்கமளித்தாலும். சில வருடங்களாகவே வட இந்தியாவில் மக்களின் வெளிப்படை எதிர்ப்பு கண் கண்ட காட்சியாக இருந்து வருகிறது. கண் கொள்ளா காட்சிகளும், கண் கூசும் காட்சிகளும் இடைவேளை தரிசனம் அளித்தாலும், மக்களின் வலிமை கண்கூடு. தேர்தலில் சாயம் வெளுத்தது. அது மக்களின் கைங்கர்யம். வாழ்க டில்லிவாழ் மானிடர்கள்! அவர்களின் நம்பிக்கை பெற்றவர்கள் நல்லாட்சி செய்ய கடமைப்பட்டவர்கள். ஊரை சொன்னாலும் பேரை சொல்லாதே என்பார்கள். யான் பக்கத்தைப் புரட்டி வாசிக்கிறேன், ஊரையும் சொல்லாமல்! ஒரு ஊரில் மக்கள் கூடுகிறார்கள். அங்கு பகிங்கரமான குற்றச்சாட்டு: (நிரூபணத்துடன் என்று சொல்கிறார்கள்) இரு அதிகாரிகள் லக்ஷோபலக்ஷமாக லஞ்சம் வாங்கியதாக. இரண்டு ஜீ ஆகட்டும், நிலக்கரி ஆகட்டும், கச்சா எண்ணெய் ஆகட்டும், விமானங்கள் ஆகட்டும், மின் பேத்துமாத்து ஆகட்டும். ‘இலக்ஷியம்’ (ஆதர்ஷ் என்றால் அது தான் பொருள்!) என்ற அலக்ஷியமாகட்டும்: ஆடிட்டர் ஜெனெரல் வாக்கு சத்திய வாக்கு ஆகி விட்டது. கடை விரித்தால் கேட்பார் இல்லை. அதனால் அதை பற்றி எழுதுவதை நிறுத்தி விட்டேன். அது பெரிய விஷயமில்லை.

நரியை பரியாக்கி, பரியை நரியாக்கி, அட்டேக்கும் பட்டாசுமாக படோடோபம் நடந்த ஊரில் ஆளுமையில் இல்லாதவர்களே மக்களை மதிக்கிறார்கள், குறைந்தது அவமதிக்க அஞ்சுகிறார்கள் என்ற தோற்றம். இந்திரபிரஸ்தத்தில் (அதான் டில்லி தர்பார்!) அள்ளித்தெளித்த கோலம் போன்ற ஜேபேசி அறிக்கைகள் தாக்கல் ஆனாலும், ஒரு அசிங்கமான தாக்கீதை ஜனாதிபாதியே தாக்கி, மக்கள் உரிமைக்கு கவசம் அளித்து விட்டார். ஹெலிகாப்டர் ஊழலின் மீது படையெடுத்துப் பறந்து வந்த ஆடிட் வாளி (அம்பு) அந்த ஊழலின் ஊற்றையே கொய்து விட்டது. ‘இலக்ஷியம்’ அதிகாரிகள் பக்ஷணம் ஆவார்கள் என்று தோற்றம். குற்றமிழைத்த அரசியலரை ஊறுகாய் போட தாமதம் ஆகலாம். பொதுவாக நோக்கின், அன்றாடம் ஊடகங்கள் லஞ்சலாவண்யத்தை தேள் கொட்டுவது போல் கொட்டுகிறார்கள். பார்ர்ர்க்கலாம்! நல்லதே நடக்கட்டும்.

அடடா! சொல்ல மறந்து விட்டேனே! ‘போல்புராஃபும்!’ (POLBURAF) என்றால் என்ன?

பத்து நாட்கள் முன்னால் ஹிந்து இதழில் வந்திருந்த தகவல் படி இந்த நாசமாப்போன ஆகஸ்டா வெஸ்ட்லாண்டின் மற்றதொரு ஹெலிகாப்டர் டீல் (ஆங்கிலத்தில் அதற்கு அநாகரீகமான ஒப்பந்தம் என்றும் மறைபொருள் உண்டு.) சம்பந்தமாக இந்திய பிரிகேடியர் சைனி என்பவர்50 லக்ஷம் யூரோ லஞ்சம் கேட்டதாக இத்தாலியில் ஆவணம் கிடைதுள்ளதாம்! அதுவும் எங்கே?  கோடி கோடியாக லஞ்சம் கொடுப்பதில் மன்னாதி மன்னனாகிய கைடோ ஹாஷ்கே என்பவரின் அன்னை வீட்டில். பேஷ்!  அவரும் தாராளமாகவே உள்ளது உள்ளபடி பேசினாராம்! நல்ல வேளை. அந்த காண்டிராக்ட் 2007லேயே ரத்து.

அது போகட்டும். இத்தாலிய அதிகாரிகள் இந்தியாவிடம் பதினோரு லக்ஷம் (ஹூம்! பக்கங்கள்) கொண்ட தகவல்கள் கொடுத்துள்ளார்களாம். அதில் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ஈயுகெனியோ ஃபுஸ்கோ கொடுத்த மர்ம நோட்டுப்படி:

60 லக்ஷம் யூரோ அரசியலருக்கு (POL): 84 லக்ஷம் யூரோ அதிகாரிகளுக்கு (BUR): 60 யூரோ லக்ஷம் (AF)!…

POL+ BUR + AF = POLBURAF

ஓவர் டு பின்னூட்டம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *