முந்தானை முட்டாள்!
ஜோதிர்லதா கிரிஜா
சந்திரன் வழக்கம் போல் காலை ஐந்து மணிக்குக் கடிகாரத்தில் ‘அலறல்’ வைத்து, அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவன் போல் அதன் முதல் சிணுங்கல் காதில் விழுந்ததுமே அதைத் தலையில் தட்டி அடக்கிவிட்டு எழுந்துகொண்டான். மாதவி மிகச் சன்னமான குறட்டை ஒலியுடன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். தொட்டாலோ மேலே பட்டாலோ விழித்துக்கொண்டு விடுவாள் என்னும் அச்சத்தால் அவன் தன் போர்வையைக் கூட அவள் மீது படாமல் மெல்ல விலக்கிவிட்டு எழுந்து கட்டிலை விட்டு இறங்கி, மங்கிய இரவு விளக்கு வெளிச்சத்திலேயே மெதுவாக நடந்து பின்கட்டுக்குப் போய்த் தன் காலைக் கடன்களை முதலில் முடித்தான்.
பிறகு, தன் வழக்கப்படி அடுக்களைக்குள் நுழைந்து விளக்குப் போட்டு அடுப்பைப் பற்ற வைத்தான். காப்பிக்குத் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் ஏற்றி, வடிகட்டியில் காப்பித் தூளைப் போட்டு அதை அமுக்கியபின் தண்ணீர் கொதிப்பதற்குக் காத்திருக்கலானான். இதற்கிடையே குளிர்வுப் பெட்டியிலிருந்து பாலை எடுத்து இன்னொரு பாத்திரத்தில் அதை ஊற்றி அடுப்பின் மற்றோர் அனல்வாயில் அதை வைத்து ஏற்றினான்.
அப்போது பின்னால் காலடியோசை கேட்டது. மாதவிதான். கைகளை உயரே உயர்த்திச் சோம்பல் முறித்தவாறு அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்: “எதுக்குங்க உங்களுக்கு இந்த வேலையெல்லாம்? நாந்தான் ஆறு-ஆறரைக்குள்ள எழுந்திரிச்சுடுவேனில்ல?”
“சரி, சரி. போய்ப் பல்லு விளக்கிட்டு வா. காப்பி ரெடியாயிடும். முதல் டிகாக்ஷன்ல கொதிக்கிற பாலைக் கலந்து அதை அடுப்பில ஏத்திச் சூடு பண்ணாம குடிச்சா, அதோட ருசியே தனி! போ, போ!” என்று அவன் அவளைப் பிடித்துத் தள்ளினான். அவளும் விளையாட்டாய் அவனைத் தள்ளிய பின் மகிழ்ச்சியுடன் பின் கட்டுக்குப் போனாள். காலைக்கடன்களைச் செய்துகொண்டே அவள் சந்திரனைப் பற்றி யோசித்தாள்: ‘நான் தான் எவ்வளவு பெரிய அதிருஷ்டக்காரி! படித்த பெண்கள் பெண்ணுரிமை பேசும் குடும்பங்களிலும் கூட, நிறைய ஆண்கள் காலையில் நாளிதழும் கையுமாய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு. ‘காப்பி கொண்டுட்டு வா’ என்று கூவுகின்ற நாளில் என் கணவர் என் அலுப்பு சலிப்புகளைப் புரிந்துகொண்டு ஒரு நாளைப் போல எனக்கு முன்னால் எழுந்து காப்பி போட்டு விடுகிறார்! வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை. தன் அலுவலகத்துக்குப் புறப்படுவதற்கு முன்னால் சமையல் வேலையில் உதவுகிறார். காய் அரிவது, புளி கரைப்பது, சாப்பாட்டு மேசையைத் துடைப்பது, சமைத்தவற்றையெல்லாம் கொண்டு போய் அதன் மீது வைப்பது, சாப்பிடுவதற்குத் தட்டம் எடுத்து வைப்பது, குடிதண்ணீர் வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளையெல்லாம் செய்து உதவுகிறார். இவை யாவும் சிறு வேலைகள்தான் என்றாலும், காலை வேளையில் எவ்வளவு உதவியாய் இருக்கின்றன! அவர் எதுவும் செய்யாமல் பெரும்பாலான ஆண்பிள்ளைகளைப் போல் காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்து அதிகாரம் செய்பவராக இருந்தால் ஒரு வேளை நானும் பிற பெண்களைப் போல் எரிச்சல்படுபவளாக இருக்கக் கூடும்தான். ஆனால், இவர் மாய்நது மாய்ந்து எனக்காக இந்த வேலைகளைச் செய்யும்போதும் ஒரு ‘செல்ல’ எரிச்சல் வருகிறதே! ‘எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்?’ என்று அன்பாய்க் கடிந்து கொள்ளத் தோன்றுகிறதே! சின்ன சின்ன விஷயங்களில் மனைவிமாருக்கு அனுசரணையாக இருந்தால், அவர்கள் பெரிய, பெரிய விஷயங்களில் விட்டுக்கொடுத்துவிடுவார்கள் என்னும் மனத்தத்துவம் புரிந்தவர் இவர் என்று தோன்றுகிறது. ஆனாலும், எந்தப் பெரிய விஷயத்திலும் விட்டுக் கொடுக்கச் சொல்லி இவர் கேட்டதே இல்லையே! எனவே, இவர் தந்திரமாய் என்னை வளைத்துப் போடுகிறார் என்றெல்லாம் சொல்லவே முடியாது. இவர் சுபாவமே உதவுவதுதான் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்….’
”என்ன! இன்னுமா பல் விளக்கிட்டு இருக்கே?” என்று சந்திரன் கூவ, அவள் சிந்தனை கலைந்தவளாய் வாயைக் கொப்பளித்து விட்டுத் துடைத்த பின் சாப்பாட்டு மேசைக்குப் போய் அவனெதிரே வழக்கம் போல் அமர்ந்துகொண்டாள்.
இருவரும் மவுனமாய்க் காப்பியை எடுத்துப் பருகலானார்கள். “சர்க்கரை சரியாய் இருக்கா?” என்று அவன் வினவியதும், அவள் கண்கள் இலேசாய்க் கலங்கின.
”ஒரு பொஞ்சாதி கேக்க வேண்டிய கேள்வியை நீங்க கேக்கறீங்க!” என்று சொன்ன அவள் குரல் உணர்ச்சி வசப்பட்டு இலேசாய் அதிர்ந்தது.
”என்னது நீ! உனக்கும் பத்து மணி ஆஃபீஸ், எனக்கும் பத்து மணி ஆஃபீஸ்! ரெண்டு பேருமே சரியான நேரத்துல அவங்கவங்க பணியிடத்துல இருக்கணும்னா, வீட்டு வேலைகளைச் சரிசமமாப் பகிர்ந்துக்கிட்டு ரெண்டு பேருமே செய்யணும்கிறது யாருக்குமே புரிய வேண்டிய ஒரு சின்ன நியாயம். இன்னும் சொல்லப் போனா, ஏதோ சின்னச் சின்ன வேலைகளைத்தான் நான் செய்யறேனே ஒழிய, வீட்டு வேலையிலெ உன்னோட பங்குதான் ரொம்பவே அதிகம். சாயந்திரம் நான் வர்றதுக்கு ஒரு நாளைப் போல லேட்டாகுது. அதனால உனக்கு எந்த ஒத்தாசையும் என்னால செய்ய முடியறதில்லே. நீயே ராவுச் சமையல் வேலையை முழுசாச் செய்துட்றே. அதுவே என்னை உறுத்துது! அதனால ரொம்பவுந்தான் என்னைத் தூக்கிவச்சுப் பேசாதே!”
”தூக்கி வச்சுப் பேசல்லீங்க. நெஜமாவே சொல்றேன். எங்க ஆஃபீஸ்ப் பொண்ணுங்க அவங்கவங்க புருசன்மாரைப் பத்திப் பேசுறதையெல்லாம் கேட்ட பெறகு, உங்களைக் கையெடுத்துக் கும்பிடணும்னுதான் எனக்குத் தோணுது!”
“அவங்களோடது லவ் மேரேஜாய் இருக்காது! அதான்!”
“நீங்க வேற! லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க விஷயம் மட்டும் என்ன வாழ்ந்திச்சு! எங்க ஆஃபீஸ்ல நிறையப் பேரு லவ் மேரேஜ் பண்ணிக்கிட்ட ஜோடிங்கதான். ஆனாலும் அவங்க புருசன்மாருங்க காப்பி குடிச்ச கப்பைத் தொட்டிமுத்தத்துல கூடப் போட மாட்டாங்களாம்! குடிக்கத் தண்ணிகூட எடுத்து வச்சுக்க மாட்டாங்களாம். சாப்பிட்ட தட்டத்தை டைனிங் டேபிள்ல அப்படியே போட்டுட்டு எந்திரிச்சுப் போயிடுவாங்களாம். சமயம் போதுன்னா, ஒரு வெந்நீர் கூடப் போட்டுக்க மாட்டாங்கன்னா பாத்துக்குங்களேன்! அந்தப் பொண்ணுங்க அழமாட்டாக் கொறையா அவங்க புருசன்மாரைப் பத்திப் புகார் படிப்பாங்க, பாருங்க, அப்பல்லாம் எனக்கு ரொம்பப் பெருமையாய் இருக்கும்!”
சந்திரனுக்குப் பெருமையில் முகம் பெரிதாயிற்று: “உடனே, நீ உங்க வீட்டுக் காரன் மகிமையை ‘அளப்ஸ் அம்புலு’ கணக்கா அவுத்து விடுவியாக்கும்!”
”நான் ஒண்ணும் ‘அளப்ஸ்’ எல்லாம் பண்ண மாட்டேங்க. நீங்க என்னென்ன உதவியெல்லாம் பண்ணுவீங்கன்றதை வரிசையாச் சொல்லுவேன். அம்புட்டுத்தான்!”
”உன்னோட பெருமையில நான் செய்யாததை யெல்லாம் கூடச் செய்யிறதாச் சொல்லுவே! அதானே?”
”ஒரே ஒரு தரம் மட்டும் ஒரு பொய் சொன்னேன்தான்! ஒரு தரம் எனக்குக் காய்ச்சல் வந்தப்ப எனக்குக் கால் கூடப் பிடிச்சு விட்டிருக்கீங்கன்னு!”
”ஓ! … அப்ப இனிமேப்பட்டு உனக்குக் காலும் பிடிச்சு விட்டுர்றேன்.!” என்று அவன் சிரிக்க, அவள் தன் தவற்றை உணர்ந்தவளாய், “சீச்சீ! உங்களைப் பத்தி இன்னும் ஒசத்தியாப் பீத்திக்கணும்கிறதுக்காக அப்படிப் பொய் சொன்னேங்க! அப்படியெல்லம் எதுவும் செய்யாதீங்க!”
”எனக்குக் கால்வலின்னா, நீ பிடிச்சு விடு. உனக்குக் கால்வலின்னா, நான் பிடிச்சு விடுறேன். அப்ப சரியா?”
”சும்மாருங்க. நான் அதைச் சொல்லியிருக்கக் கூடாது. உங்களுக்கும் கால் வலி வராது, எனக்கும் வராது… காப்பி வழக்கம் போல பிரமாதம்! சரி. நான் போய் என் வேலையைக் கவனிக்கிறேன்!.” என்று காப்பித் தம்ப்ளர், டவராக்களுடன் அவள் எழ, அவனும் “இன்னிக்கு என்ன காய் அரியட்டும்?” என்று கேட்டுக்கொண்டே அவளுக்குப் பின்னால் நடந்தான்.
“கொடமிளகாய் இருக்கு. கறி பண்ணிடறேன். வெண்டைக்காயப் பருப்புக் கொழம்பு வைக்கிறேன். தக்காளி ரசம்! போதுமில்லே?”
“கொழம்பு ஒண்ணு போதுமே, மாதவி? ரசம் வேற எதுக்கு? அப்பால டிஃபன் வேற பண்ணணுமில்ல?”
“இட்டிலிதாங்க. தட்டுல ஊத்திவெச்சா அது பாட்டுக்கு வேகுது. கிண்டணுமா, கிளறணுமா? தொட்டுக்க மிளகாய்ப்பொடி இருக்கு. வெண்டைக்காய்க் கொழம்பை வேணும்னாலும் எடுத்துக்கலாம். ரசம் வெச்சா ராத்திரிக்கு சூடு பண்ணிச் சாப்பிடலாம். அதான் பாத்தேன்.”
”சரி உன்னிஷ்டம்…” என்ற சந்திரன் வெட்டுக்கத்தியையும் காய்களையும் எடுத்துக்கொண்டு அவற்றை அரிவதற்காகச் சாப்பாட்டு மேசைக்குப் போனான்….
அப்போது வாசல்கதவு தட்டப்பட்டது. அழைப்பு மணி வேலை செய்யாததால் வந்தவர் கதவைத் தட்டினார். அவன்,” இதோ வந்துட்டேன்,” என்று குரல் கொடுத்துக்கொண்டே போய்க் கதவைத் திறந்தான்.
”என்னப்பா! கத்தியும் கையுமாய் வந்து கதவைத் திறக்குறே? பயம்மாயிருக்கே! காய் வெட்டிட்டு இருந்தியாக்கும்!” என்றவாறு, திறந்த கதவைத் தள்ளிக்கொண்டு அவனுடைய சகலை வாசு தான் உள்ளே வந்தார்.
”அடடே! வாங்க, வாங்க…மாதவி! யாரு வந்திருக்காங்கன்னு பாரு! வாங்க. உக்காருங்க!”
”வாங்க அத்தான்! காப்பி குடிக்கிறீங்கதானே?”
“ஊஹூம்! உன் அக்காக்காரிக்கு ரெண்டு நாளாக் காய்ச்சல். ஆஃபீசுக்கு லீவ் போட்டிருக்கா. அதான் உன்னை உதவிக்குக் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்… உன்னால ஒரு நாலு நாளுக்கு லீவ் போட முடியுந்தானே?”
மாதவிக்குள் தாங்க முடியாத எரிச்சல் மூண்டது. “இல்லே, அத்தான். எங்க ஆஃபீஸ்ல இப்ப இன்ஸ்பெக்ஷன் நேரம். ஏன், அத்தான், நீங்க ஒரு நாலு நாள் லீவ் போடலாமே? உங்க ரெண்டு பிள்ளைங்களும் பாட்டி வீட்டில வளருதுங்க. அதுங்களைக் கவனிக்கணுமேன்ற சுமை உங்க ரெண்டு பேத்துக்கும் கிடையாது. உங்களுக்கு உடம்புக்கு வந்திச்சுன்னா எங்க அக்காதானே லீவ் போடுது? அதென்ன, பொம்பளைங்களுக்கு உடம்பு சரியில்லேன்னா மட்டும் அவங்களோட, அக்கா-தங்கச்சிகளையும் , அம்மாக்களையும் உதவிக்குக் கூப்பிட்றீங்க?”
மாதவி ஆத்திரமாய்ப் பேசவில்லை யெனினும், பேச்சின் அழுத்தம் சந்திரனை அயர்த்தியது. வந்திருந்த வாசுவுக்கு முகம் அறுந்து தொங்கிற்று.
கூடத்துக்கு வந்து வாசுவின் எதிரே நின்ற மாதவி தொடர்ந்தாள்: குரலில் ஒரு குழைவை வரவழைத்துக்கொண்டு, “என்னடா, இவ இவ்வளவு கண்டிப்பாப் பேசுறாளேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, அத்தான், ”என்ற பின், சந்திரனிடம், “கொஞ்சம் இட்டிலிப் பானையை இறக்கி இட்டிலிகளை எடுக்கறீங்களா? அத்தான் கிட்ட ஒரு நிமிஷம் பேசிட்டு வந்துடறேன். ப்ளீஸ்!” என்றாள்.
சந்திரன் உடனே அடுக்களைக்கு விரைந்தான்.
அவன் அப்பால் போனதும், “அத்தான்! எங்க வீட்டுக்காரரை அன்னைக்கு ஒரு நாள் உங்க வீட்டிலே ‘முனாமுனா’ன்னு சொன்னீங்கல்ல? நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். அக்கா ‘முந்தானை முடிச்சா’ன்னு கேட்டதுக்கு, நான் குளிச்சு முடிச்சுட்டுப் பக்கத்து அறைக்கு வந்தது உங்களுக்குத் தெரியாததனால, ‘முந்தானை முட்டாள்’னு நக்கலாச் சொல்லிச் சிரிச்சீங்க. இது நாள் வரை அதை இவர் கிட்ட நான் சொல்லல்லே. சகலைங்களுக்குள்ள சண்டை வரவேணாம்னுதான். ஆனா நீங்க அப்படிச் சொன்னது என்னை ரொம்பவே புண்படுத்திடிச்சு. நீங்க சொன்னது என் காதில விழுந்துட்டதா நான் அக்கா கிட்ட கூடக் காமிச்சுக்கல்லே. பொஞ்சாதிக்கு உடம்பு சரியில்லைன்னா, மச்சினிச்சியை உதவிக்குக் கூப்பிட்டு வேலை வாங்கிட்டு ஹாய்யா உக்கார நினைக்கிற உங்களை மாதிரிப் பொஞ்சாதி மேல அன்பில்லாம இருக்கிற ஜென்மங்களை விட, பொஞ்சாதியோட ஆரோக்கியத்துல உள்ள அக்கறையால அவளுக்குக் கூடமாட ஒத்தாசை செய்யிற முந்தானை முட்டாளா இருக்கிறவரு ஒசந்தவருதான், அத்தான்!” என்று கிசுகிசுப்பாய்ச் சொன்ன மாதவி, “சாரி, அத்தான். வெளிப்படையாப் பேசிட்டதுக்கு மன்னிச்சுக்குங்க!” என்ற பின் அடுக்களைக்கு விரைந்தாள்.
சந்திரன் காப்பியுடன் கூடத்துக்கு வந்த போது வாசு போய்விட்டிருந்தான்.
”என்னது! போயிட்டு வர்றேன்னு கூட எங்கிட்ட சொல்லிக்காம போயிட்டாரே உங்க அத்தான்!”
”அவசரமாப் போகணுமாம். உங்ககிட்ட சொல்லிடச் சொன்னாரு!” என்ற மாதவி கணவனை மட்டமாய் விமர்சித்த அத்தானுக்குச் சூடு கொடுத்துவிட்ட நிறைவுடன் சமையற்கட்டில் மீதி வேலைகளைக் கவனிக்கலானாள்.
நன்றி : கோகுலம் இதழ் வெளியீடு