‘கனுப்பொங்கல்’, ‘கா’….’கா’….’கா’
விசாலம்
சூரியன் மகர ராசியில் அதாவது பூமத்ய ரேகையிலிருந்து வடக்குப் பக்கம் போக ஆரம்பிக்கும் முதன் நாள் நமது பொங்கல் திருநாள் இதை சஸ்கிருதத்தில் உத்தராயணம் என்பார்கள். மஹா பாரதப் போரில் பாண்டவர்களின் பாட்டனாரான திரு பீஷ்மர் துரியோதனின் பக்கம் இருந்தவர் மஹாபாரதப்போரின் போது அம்புப் பட்டு கீழே விழுந்தார்’ ஆனால் அவர் உத்தராயணத்தில் தன் உயிரை நீக்க எண்ணி கீழே பூமியில் தன் உடல் படாதபடி முள் படுக்கையின் ,மேல் உயிரைப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தார் பின் இந்த மகர சங்கராந்தியின் போது உயிர் நீத்தார் அவ்வளவு புண்ணியக் காலம் இது.
இதன் முதல் நாள் போகி.இந்த வருடம் போகி பிரதோஷம் அன்று வருவது மிகவும் விசேஷம் தான்.அதுவும் திங்கட்கிழமை சோமவார பிரதோஷம் மிகச் சிறப்பான நாளாகக்கருதப்படுகிறது போகி என்று வந்தாலே வீட்டைச்சுத்தம் செய்து தேவையில்லாத குப்பைகளை அகற்றி எரிக்கும் வழக்கம் இருக்கிறது.பழையன கழிதலும் புதவன புகுதலும் என்றபடி பழைய வேண்டாத பொருட்கள் அகற்றப்படுகின்றன. வெளியில் இது போல் ஒவ்வொரு வீட்டுக்குப்பைகளும் சேர்ந்து எரிக்கப்பட்டால் அந்தப்புகை மண்டலம் எங்கு போகும்? நம்மிடமே சுற்றி வந்து நம்மைக் கரிமலவாயுவை சுவாசிக்க வைக்கின்றன.
இது நமது ஆரோக்கியத்திற்கு கேடு வாராதா? நாமே நம்மைக்கெடுத்துக்கொள்ளும் கதை தான். இதற்குப்பதிலாக போகியன்று மட்டும் இது நடக்கவேண்டும் என்று எண்ணாமல் தினமுமே வீட்டைச்சுத்தமாக வைத்துக்கொண்டால் இந்தப்பிரச்சனை மிகக்குறையும்.எனக்கென்னமோ பழையன கழிதல் என்றால் நம் மனதில் இருக்கும் பழமையான கெட்ட எண்ணங்களை ஒழித்துவிட்டு நல்ல எண்ணங்களைக் கொள்ள வேண்டும் என்ற அர்த்தம் தோன்றுகிறது குப்பைகளை எரிப்பது போல் நம் மனம் அழுக்கில்லாம அதிலுள்ள குப்பைகளான கெட்டப் பழக்கங்கள்.கெட்ட எண்னங்களை எரித்துவிடவேண்டும். இதையே மருந்தில்லாத சிகிச்சையான ரேய்க்கி ,பிரானிக் ஹீலிங். போன்ற சிகிச்சை வகுப்பில் ஒரு தாளில் நாம் செய்த அநியாய காரியங்கள்.கெட்ட எண்ணங்கள். வேண்டாத நிகழ்வுகள் எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதி பின் அதை நெருப்பு வைத்து கொளுத்தச்சொல்கிறார்கள்.அல்லது நீரோட்டத்தில் ஓட்டிவிடச்சொல்கிறார்கள்
மனதுக்குள் ஒரு போகிப்பண்டிகை. பின் அங்கு நிலவுவது ஆனந்தப்பொங்கல்.
பொங்கல் மறுநாள் ‘கனு’ என்றுச்சொல்லும் திருநாள். அன்று சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்காக் அவர் நலதிற்காக பிரார்த்தனைச் செய்கிறார்கள்,அதற்குச் சாத உருண்டைகளை மஞ்சள் குங்குமத்துடன் பிசைந்து உருட்டி பின் ஒரு வாழை இலையில் வெளியில் வைக்க அது காக்காய் குருவிகளுக்கு ஆகாரம் ஆகிறது கிராமங்களில் காளையின் கொம்புகளில் வர்ணம் பூசி பசுவிற்கும் பூஜை செய்து மாலை ஜல்லி கட்டு விழாவில் கலந்துக் கொள்கிறார்கள் அதாவது முரட்டுக் காளையையின் கொம்பைப் பிடித்து அடக்க வேண்டும் அதற்குப் பரிசும் உண்டு, அதற்கு மறு நாள் காணும் பொங்கலில் ஊர் சுற்றி கூட்டமாக் பீச், சினிமா, நதியின் கரை என்றுப் பிக்னிக் வைத்துக் கொண்டு மகிழ்வார்கள். இந்த நாலு நாட்களும் மஜாதான் .
சரி இந்தக்கனு அன்று நான் கா கா கா என்று அழைக்கிறேன்
என்ன அன்பர்களே இது என்ன வித்தியாசமாக “காக்கா வா வா ” என்று அழைக்கிறேன் என்று தோன்றுகிறதா ! யாரையாவது காக்கா பி்டிக்கிறேனா! இல்லை ! இது நான் அழைக்கவில்லை
இது உத்ராஞ்சலில் மகரசங்கராந்தி. நம் நாட்டைப்பற்றிய பொங்கல் எல்லோருக்கும் தெரியும் ஆகையால் வித்தியாசமாக உத்தராஞசலின் பொங்கலைப்பற்றி தெரிந்து கொள்வோம்
இங்கு இத்திருநாள். ‘காலே கௌவா “அல்லது குக்குஷியா {ghughutia} என்ற பெயரில் கொண்டாடுவார்கள். கறுப்பு காக்கா வா வா”என்று அழைப்பார்கள்
சென்னையில் நான் இருக்கும் இடத்தில் காகமே இல்லாமல் போய்விட்டது பல மரங்கள் வெட்டப்பட்டு அடுக்கு வீடுகள் வந்ததால் பாவம் காகங்களுக்குக் கூடு கட்டமுடிவதில்லை
கனுப்பிடி என்று பொங்கல் மறுநாள் பழைய சாதத்தை சிவப்பாக்கி ,மஞ்சளாக்கி
ஒன்றுமில்லை, குங்குமமும் மஞ்சள்பொடியும் கலந்தது} ஏழுபிடிகள் வைத்து, திருஷ்டி போகவும் சகோதர்களின் நலத்திற்கும் ஒரு இலையில் வைத்து வாசலில் வைத்தாலும் காக்காவைக்காணோம் , எறும்புகள் தான் வரிசை வைக்கின்றன.
ஆனால் உத்தர்கண்டில் “குமான்” என்ற பகுதியில் நமதுபொங்கல் அதாவது அவர்களது மகரசங்கராந்தி மிகவும் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. குளிர்ப்பிரதேசத்தில் இருக்கும் குளிரைத்தாங்க முடியாமல் பல பறவைகள் இந்த மாதத்தில் குமான் இடத்திற்கு வந்து தங்கும் ,
இத்தினத்தில் பல சிறுவர்களுடன் பெரியவர்களும் சேர்ந்து “காலே கௌவா”
{கறுப்பு காக்கா}என்று கோஷம் இடுவார்கள்.காலையில் எழுந்து நதியில் நீராடி சூரியனைக்கும்பிட்டு பிரசாதமாக “கிச்சடி “செய்வார்கள்
கோதுமை மாவு வறுத்து அதில் நிறைய நெய்விட்டு சீனியுடன் கலந்து உருண்டைப்பிடிப்பார்கள் பின் அந்த மாவிலேயே கத்தி , மாதுளை , வாள் போன்ற பல உருவங்கள் செய்து அத்துடன் பல தின்பண்டங்களும் செய்து சிறுவர் சிறுமிகளுக்குக் கழுத்தில் நெக்லெஸ் போல் அணிவிப்பார்கள்.பின் பெரிய வளைந்த ஆர்கேன் என்னும் வாத்தியத்தை வாசித்தபடி ஊர்வலம் வருவார்கள்
குழந்தைகள் தங்கள் கழுத்தில் இருக்கும் தின்பண்ட நெக்லெஸிலிருந்து பறவைகளுக்குக் கோதுமை மாவைப் பிய்த்துப்பிய்த்து போடுவார்கள்.கூடவே பக்ஷணங்களும் சிறு பகுதிகளாக்கி வீசுவார்கள்
அப்போதுதான் அவர்கள் “காலேகௌவா” என கூச்சல் இடுவார்கள்.
வரப்போகும் பறவைகளுக்கு நல்வரவு சொல்லி வரவேற்கிறார்கள். கோதுமை போன்ற தான்யங்களும் அன்பாகக்கொடுக்கின்றனர்
அவர்கள் பாடும் பாட்டு { உச்சரிப்புக்காக ஆங்கிலத்தில் }
kaale kaalee
bol bate aile bora puva
khale le kauva ,bara mai ke de sunu gharo
le kauva dal ,mai ke de sunu thai
எனக்குத்தெரிந்த ஓரளவு அனுமானத்தில் இதன் பொருள்
கறுப்புக்காகங்களே {பறவைகளே}
தினமும் வாருங்கள் தினமும் வடையும் புவாவும் {அவல்}சாப்பிடுங்கள்
உண்டப்பின் எனக்கு தங்கம் தாருங்கள்
தால்{ பருப்பு } தின்னப்பின் எனக்குத் தங்கத்தட்டு கொடுத்து விடுங்கள்.
இந்தக் காலே கௌவா வைத்துத்தான் “ஜூட் போலே கௌவா காட்டே காலே கௌவே ஸே
டரியோ ” என்று “Bobby” படத்தில் வந்தது.ரிஷிகபூரும் டிம்பிளும் சேர்ந்து நடித்தப்படம் என நினைக்கிறேன்
நம் கிராமத்தில் பல பறவைகள் வந்து திண்ணை அருகில் அமர்ந்து அரிசிமா கோலத்தைக் கொத்திக்கொத்தித்தின்னும் அழகை இன்றும் ரசிக்க முடிகிறது. ஆனால் நகரத்திலோ குருவிகள் மறைந்தே போய்விட்டன , காக்கா சத்தமே கேட்பதில்லை , இயறகையைச்சேதமாக்க என்னவெல்லாம் நடக்குமோ ?
அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.