மஞ்சு விரட்டு
நாகேஸ்வரி அண்ணாமலை
பழையன கழிதலும் புதியன புகுதலும் நடக்கும் பொங்கல் திருநாளையொட்டி மஞ்சு விரட்டு என்னும் கொடூரமான விளையாட்டைத் தமிழக மக்கள் கண்டு மகிழ்கிறார்கள். பொங்கல் நாளான தை மாதம் ஒன்றாம் தேதியை புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது. புத்தாண்டின் ஆரம்பத்தில் இப்படி ஒரு விளையாட்டை ஆடிப் புத்தாண்டைத் துவக்க வேண்டுமா?
மனிதனை மனிதன் அடித்துக்கொள்ளும் குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளுக்கு நான் எப்போதுமே எதிரி. விளையாட்டுக்காகவே என்றாலும் மனிதனை மனிதன் அடித்துக்கொள்ளுவதைப் பார்ப்பதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது? சேவல், நாய், ஆடு போன்ற மிருகங்களை ஒன்றொடொன்று மோதவிட்டு அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்களும் இருக்கிறார்கள். பாவம் அந்த மிருகங்கள் நமக்கு என்ன கெடுதல் செய்தன? அவற்றைக் கொன்று தின்பதோடு அவற்றிற்கு இழைக்கும் துன்பங்களை நிறுத்திக்கொள்ளக் கூடாதா? பிராணிகள் தாங்கள் உயிர் வாழ்தலுக்காக மற்றப் பிராணிகளுடன் சண்டையிட்டுக்கொள்ளலாம். அதைத் தவிர மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகச் சண்டையிட்டுக்கொள்வதில்லை. இயற்கை இப்படியிருக்க மனிதன் அந்தப் பிராணிகளைத் தன்னுடைய அற்ப மகிழ்ச்சிக்காகச் சண்டையிட வைத்து அதைக் கண்டு மகிழ்ச்சி அடைய வேண்டுமா?
மஞ்சு விரட்டிற்காக இந்தக் காளைகளை அதன் உரிமையாளர்கள் தயார்ப்படுத்தும் விதத்தைப் பற்றிப் படித்தாலே நெஞ்சு வலிக்கிறது. சாதாரணமாக ஆடு மாடுகள் தாவர உணவை மட்டுமே உண்பவை. அவற்றிற்கு மாமிச உணவின் வாசனைகூடப் பிடிக்காது என்பார்கள். நான் சிறுபிள்ளையாக வளர்ந்து வரும்போது எங்கள் வீட்டு ஊறலை (அரிசி, பருப்பு போன்றவற்றை நீரில் களைந்து சுத்தம் செய்யும்போது அந்த நீரை விணாக்குவதில்லை. அதை மாடுகளுக்காகச் சேமித்து வைக்கும் பழக்கம் அப்போது இருந்தது). எங்கள் வீட்டில் மாடுகள் வளர்க்காததால் பக்கத்து வீட்டுப் பெண் அதை எடுத்துச் செல்வார். அந்த ஊறலில் எந்த விதமான அசைவச் சாப்பாடும் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் என் தாய் குறியாக இருப்பார். ஏனென்றால் அந்த ஊறலில் சிறிது அசைவ உணவு வாசனை வந்தால் கூட அந்த நீரை மாடுகள் குடிப்பதில்லை என்பார். இப்போது மஞ்சு விரட்டில் கலந்துகொள்ளப் போகும் ஒரு காளைக்கு அதைத் தயார்ப்படுத்தும் அதன் உரிமையாளர் அதற்குத் தினமும் ஒரு கிலோ கோழிக்கறியை அரைத்து உணவாகக் கொடுக்கிறாராம்! அனக் காளையை எப்படி இந்த மாமிச உணவை உண்ணப் பழக்கினார் என்று தெரியவில்லை. இப்படியாவது மனிதனோடு சண்டை போட அதை உசுப்பேற்ற வேண்டுமா?
மஞ்சு விரட்டில் கலந்துகொண்டு சண்டை போடுவதில் அந்தக் காளைகளுக்கு எந்த விதத்திலும் சந்தோஷம் கிடைப்பதில்லை என்று நான் அடித்துக் கூறுவேன். அதன் வாலைப் பிடித்து இந்த ‘வீரர்கள்’ அதை இம்சிக்கும்போது அந்தக் காளைகளுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்பதை மனிதன் உணரவில்லையா? அதே மாதிரி அந்தக் காளைகள் இந்த ‘வீரர்களைத்’ தங்கள் கொம்புகளால் தூக்கி எறியும்போது இவர்களுக்கு அது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கறது? எவ்வளவு வேதனையையும் வலையையும் கொடுக்கும்? இப்படித் தேவையில்லாமல் மனிதனும்மிருகமும் ஒருவரையொருவர்வேதனைப்படுத்திக்கொள்ள வேண்டுமா?
இதில் தங்களுக்கு நிறைய ‘திரில்’ கிடைக்கிறது என்று சிலர் வாதடலாம். நாம் சங்ககாலத்திலா இருக்கிறோம் இம்மாதிரி வீர விளையாட்டுகளை ரசிப்பதற்கு? இம்மாதிரியான வீர விளையாட்டுகள் அன்று ஒரு ஆணுக்கு அணிகலனாக விளங்கியதெல்லாம் இன்றும் போற்றப்பட வேண்டுமா? குஸ்திச் சண்டையிலும் இம்மாதிரி சண்டைகளிலும் ஒருவரையொருவர் காயப்படுத்திக்கொள்வதில் என்ன வீரம் இருக்கிறது? இந்த ‘வீரவிளையாட்டுக்கள்’ ஒரு முறைசட்ட விரோதமாகக் கருதப்பட்டுத் தடைசெய்யப்பட்டுப் பின் மறுபடியும் மக்களிடையே பிரபலமாகி வருவது மனிதனுக்குள்ளே இன்னும் மிருக உணர்வு இருக்கிறது என்பதைத்தான் குறிக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்லவா?