பொங்கட்டும் பானைகள்
பொங்கட்டும் பானைகள் – அதிலே
பொசுங்கட்டும் தீமைகள்
புலரட்டும் பொழுதுகள்
பகரட்டும் உண்மைகள்
ஏறடித்துத் தோழனவன் – எமக்கு\
சோறடிக்கும் வினைகள்
மாரடிக்கும் வாழ்க்கை
மண்ணின் மைந்தருக்கே
இயந்திர உலகம் தனிலே – இன்று
இயங்கிடும் மனிதர் எல்லாம்
இசைந்திடும் மனிதப் பண்பை
இயற்றிடும் பொங்கல் திருநாள்
வியந்திடும் வகைகள் உண்டு – வயலில்
வியர்வைகள் விதைத்திடும்
வீரமிகு தோழர் தம்மின்
வெற்றியைப் பாடு இன்று
காலத்தின் மாற்றம் கண்டோம் – ஆயினும்
காலத்தால் மாறா உண்மை
உழைப்பதன் மகத்துவம் ஒன்றே
உணர்ந்திடும் திருநாள் இன்றே
நிலைத்திடும் வாழ்க்கை என்றே – உலகில்
நினைத்திடும் மாந்தர் முன்னே
நிலையில்லா தன்மை தன்னை
நிறுத்திடும் நாளும் இன்றே
பொறுத்திடு தோழா கொஞ்சம் – நாளை
புரிந்திடும் உந்தன் பெருமை
பொங்கிடு அதனை எண்ணி
போக்கிடு வறுமை தன்னை
எல்லோர்க்கும் எல்லாம் வேண்டாம் – எனினும்
எவருக்கும் வறுமை வேண்டாம்
பசியெனும் பிணியைப் போக்க
பொங்கிடு தமிழா இன்றே
பூக்குது எந்தன் நெஞ்சில் – பலவாய்
புதுப்புது அன்பு மலர்கள்
வாழ்த்துது எந்தன் நெஞ்சம்
வளரட்டும் என்னினிய சொந்தங்கள்