மனதைத் திருப்பிக் கொடு மாயவா..

மூலம் – நம்மாழ்வார், விவரணை – திவாகர் , ஓவியம் – ஜீவா

“ஊம்ஹூம், உன் போக்கே புரிபடவில்லை, ஒரு சமயம் அவன் தான் உனக்கு எல்லாமே என்பது போல பேசுகிறாய்.. இப்போது என்னவோ, அவன் மாயம் செய்பவன், சேட்டை புரிபவன், எல்லாப் பெண்களையும் கொள்ளை கொள்ளும் மன்மதன் என்றெல்லாம் எரிந்து விழுகிறாய்.. அந்தப் பெண்களெல்லாம்  அழகிகள்.. அதனாலேயே அவர்களிடத்தில் சென்றுவிட்டான் என்கிறாய்.. ஒன்று அவனை பரிபூரணமாக நம்பு, இல்லையேல் அவன் நினைப்பையே உதறித் தள்ளி விடு..”

“அவன் நினைப்பையே உதறித் தள்ள வேண்டுமா.. பார்த்தாயா.. இப்போது இன்னும் புரிந்துகொண்டேனடி, அவன் உன்னைக் கூட தன் வசம் மயக்கத்தில் பூட்டி வைத்துக் கொண்டிருக்கிறான். உன் மனதையும் கூட கொள்ளை கொண்டு விட்டான்.. இல்லையேல் என் தோழியான நீயே இப்படி பேசுவாயா..  நான் என்னடி தவறு செய்தேன்.. நானாகப் போய் அவன் வலையில் விழுந்தேனா.. இதோ பார்.. ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்! நான் ஒன்றும் அவனுக்காக ஏங்கிக் கொண்டிருந்தவள் இல்லை.. அவனாகத்தான் வந்தான்.. ஏதோ மாயம் செய்தான்.. அவன் செய்த மாயலீலையில் வசம் இழந்தவள் நான்.. எனக்கல்லவா அந்த இழப்பின் அருமை தெரியும்..”

“உனக்கு எப்படி விளக்கிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. உன்னுடைய குறைகளை சுட்டிக் காண்பித்தால் என்னையே குற்றம் சொல்கிறாயே.. இது நியாயமா.. நான் என்ன கேட்டேன் உன்னை.. அவனையே நினைந்து நினைந்து உருகும் நீ இப்படி அவனை ஏன் ஏசவும் செய்கிறாயே என்றுதானே கேட்டேன்.. அவனைக் கோபிப்பதாக நினைத்து என்னைக் குற்றம் சொல்லி உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாயா “

 radhakrishna

“அடடா.. உன்னைக் குற்றம் சொல்வேனோடி.. நீ கோபித்துக் கொள்ளாதே.. என்னை அவன் கைவிட்ட நிலையில் உன்னையே உற்ற தோழியாக்கி உன்னிடம் என் புலம்பல்களைச் சொல்கிறேன். அவன் மகா அழகன், மகா உத்தமன், மூவுலகமும் அளந்த மிகப் பெரியவன் எனும் கர்வம் அதிகம் கொண்டவனடி.. நீயே சொல்லடி! அப்படிப்பட்டவன் என்னைப் போன்ற ஏழைகளிடம் வரலாமா.. வந்தாலும் என் மனதைக் கொள்ளை கொண்டு போகலாமோ.. வந்தோமோ, சென்றாமோ என்றில்லாமல் அவனைப் பற்றிய ஆசைகளை என் மனதில் வளர்க்கலாமோ.. நான் என்ன குற்றம் செய்தேன், என்னையும் மீறி, என் மனம் எதிலும் அடங்காமல், என்னைப்பிரிந்து அவன் மனதோடு ஒன்றிப்போய்விட்டதை எப்படிச் சொல்வேன்.. எடுத்துச் சென்ற என் மனதை அவன் திருப்பித் தரவாவது வந்திருக்கலாம் இல்லையா.. இப்படி எத்தனை பெண்களை மோசம் செய்கின்றானோ.. சரி, எதுவானாலும் அவன் லீலை செய்யட்டும், அவன் என்னைப் பார்க்குமுன்னர் என் மனம் எப்படி இருந்ததோ, அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டுப் போகச் சொல்லடி, அவன் யாராக இருந்தால் எனக்கென்ன? அவன் எத்தனை உலகங்களுக்கு அதிபதியாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அல்லது எத்தனையோ உலகங்களை அளந்துகொண்டே போகட்டும்.. அல்லது எத்தனை அழகிகளுக்குக் காதலனாகவும் சுற்றிக் கொள்ளட்டும், அந்த அழகிகள் எல்லாம் குணவதிகள் என்றே இவன் பீற்றிக் கொள்ளட்டும்.. யார் வேண்டாமென்கிறது.. என் உள்ளத்தை பழுதில்லாமல் திருப்பிக்கொடுத்துவிட்டு அவன் எத்தனை பேரோடும் இருந்து கொள்ளட்டும்…எனக்கென்ன..”

“என்ன பேசுகிறோம் என்று உணர்ந்து பேசடி!.. இப்படி ஏசும் இதே வாய்தான் அன்றொரு நாள் அவனை ஸ்ரீராமச்சந்திரனாக வர்ணித்து உன்னை சீதாதேவியாகவும் நினைத்துப் பேசினாய் என்பதையும், அந்த சீதைக்காக வேண்டி அதிபராக்கிரமனான ராவணனை சுலபமாக அழித்தவன் என்று சொல்லிப் போற்றியதையும் சற்று நினைத்துப் பார்..”

“ஏன் அப்படிப் பேசினேன் என்று தெரியாமல் அப்படிப் பேச வைத்தவனும் அவனேதானடி.. இப்படி எத்தனை பெண்களைப் பேச வைத்து மாயம் செய்கிறானோ அந்த மாயக்காரன்.. அவன் ஒரே ஒரு முறையாவது என்னைப் பார்க்கவரவேண்டும்.. அவன் சேட்டைகளை அவனிடமே வைத்துக் கொண்டு என் மனதை மட்டும் திருப்பிக்கொடுத்துவிட்டு அவன் மாயமாக மறைந்துபோனாலும் போகட்டும்… அந்த மாயக்காரனிடம் நான் இனிமேல் மயங்கி விழமாட்டேனடி… அவன் வருவானா.. அதைச் சொல்லடி”

“ஆமாம்.. உன்னைத் தெரியாதா எனக்கு, அவன் வந்து விட்டால், அதுவும் அவனை ஒருமுறை மறுபடிப பார்த்துவிட்டால் இப்படியெல்லாம் பேசுவாயா.. ஏசும் இதே வாய்தான் எப்படியெல்லாம் மாற்றியும் போற்றியும் பேசும் என்பதையும் நான் அறிவேனடி..

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்

மன்னுடை யிலங்கை அரண்காய்ந்த மாயவனே

உன்னுடைய சுண்டாயம் நானறிவேன்,, இனி அதுகொண்டு செய்வதென்

என்னுடைய பந்தும் சுழலும் தந்துபோகு நம்பீ! (நம்மாழ்வார்)

மின்னல் போன்ற இடையும், நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களைக் கொண்டவரும், உன்னுடைய அருளைத் தலையில் கொண்டவருமான மகளிர் முன்பு இருப்பதற்கு எனக்கு அச்சமாக உள்ளது. மிகப் பெரிய அரசனால் காக்கப்பட்ட இலங்கை மாநகரையே அழித்த மாயக்காரன் அவனே ஆனாலும் அவனுடையை சேட்டைகளை நான் நன்கு அறிவேன். முதலில் என்னுடைய பந்தும், சுழற்சியும் திருப்பித் தந்து விட்டு, – அழகிய தலைவனாக தன்னை உலகத்தார் போற்றும்படி அறியச் செய்பவனாயிற்றே,  – அப்படிப்பட்டவன் யாரிடம் எங்கு வேண்டுமானாலும் போகட்டும்! – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *