ஞாயிறு போற்றுதும்!..ஞாயிறு போற்றுதும்!!
ஒளி தந்து இருள்நீக்கி நலம் தந்து வளம் சேர்க்கும்
ஒப்பிலா கதிரவனை வணங்குவோம்!
மழை தந்து மண்ணுலகம் மகிழ்வித்து அருள் செய்யும்
பர்ஜன்யன் உன்னடியைப் போற்றுவோம்!
வானவரைக் காத்தருளும் இந்திரனின் திருவுருவே
வாழ்த்தினோம் வாழ்த்தினோம் அருள்கவே!
வயல்களில் விதைத்ததை விளைவிக்கும் பூஷாவே
வான்மணியே உனைத் தொழுதோம் வருகவே!
மூச்சிலே வரும் காற்று உன்னருட் செயலன்றோ
முழுமுதலே அர்யமான்!! வணங்கினோம்!
மூலிகைகள் உள்ளாடும் சக்தியாய் நோய் தீர்க்கும்
த்வஷ்டா உன் தாளிணைகள் போற்றினோம்!
பகன் என்ற பெயர் கொண்டு நீ தரும் வெம்மையால்
பாரிலே மன்னுயிர்கள் வாழுமே!
ஜடராக்னி ரூபத்தில் உயிர்க்குலம் காத்தருளும்
விவஸ்வானின் திருநாமம் போற்றினோம்!
வாயுக்கள் வடிவான வளம் தரும் அம்சுமான்
வள்ளலே!..உன்னடியை வணங்கினோம்!
எண்ணத்தில் தீமை தனை எரித்திடும் சக்தியே
எமைக் காக்கும் விஷ்ணுவே அருள்கவே!
இவ்வுலகம் படைத்தருளும் என் தேவே தாதாவெ
இகலோகம் வாழ நலம் தருகவே!
நீர் வடிவில் உயிர்க்குதவும் வருணனே வாழ்த்தினேன்
நீர் வளம் நிறைய அருள் பொழிகுவாய்!
நிலையாக மன்னுயிர்கள் வாழவே தவம் புரியும்
நிலவுலக மித்திரா வளம் வழங்குவாய்!
ஆதித்ய தேவா நல்லறம் வளர்க்கும் பகலவா
ஆருயிர்கள் காக்கும் எழில் ஞாயிறே!
அன்பான சூரியனே பண்பாளர் உளம் இருந்து
அகலாமல் வாழ்விக்க வரமருள்!
இந்தப் பாடல், த்வாதச ஆதித்யர்கள் என்று போற்றப்படும் சூரியனின் பன்னிரண்டு திருநாமங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது…சூரியனே அனைத்துத் தேவர்களின் திருவுருவங்கொண்டு உலகைக் காக்கிறான் என்கிறது ‘பவிஷ்ய புராணம்’. பவிஷ்ய புராணத்தில், ஸ்ரீகிருஷ்ணர், தமது புதல்வன் சாம்பனுக்குச் சொல்வதாக வருகிறது இது.
இதன்படி, சூரிய பகவானே, ‘த்வாதச (பன்னிரெண்டு) ஆதித்யர்க’ளாக, பன்னிரெண்டு வடிவங்களை எடுத்துக் கொண்டு, பன்னிரெண்டு வகையான செயல்களைப் புரிகிறார். த்வாதச ஆதித்யர்கள் பின்வருமாறு.
1. தேவர்களைக் காக்கும் இந்திரன். மேகத்தைக் கட்டுப்படுத்துபவர் சூரியபகவான். சிம்ம மாதமாகிய ஆவணி மாதச் சூரியனின் திருநாமமே இந்திரன்.
2. படைக்கும் தொழிலைச் செய்யும் தாதா. இந்த திருநாமம் கொண்ட சூரியன், உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமான வெம்மையைத் தருபவர். மாதங்களில், இவர் சித்திரை மாதத்திற்கு உரியவராகக் கருதப்படுகிறார்.
3. உலகத்தில் மழையைப் பொழிவிக்கும் பர்ஜன்யன். நீர் நிலைகளில் இருக்கும் நீரை அமுதமென அள்ளி மேகமாக்கித் தருபவர் இவரே!. இவர் பங்குனி மாதத்துக்கு உரியவராகக் கருதப்படுகிறார்.
4. உணவுப்பொருள்களை விளைவித்து அருளும் பூஷா.விதைத்த விதைகள், பூமியில் முளைக்கத் தேவையான அளவு வெப்பத்தை அளிப்பவர் பூஷா. மாசிமாதச் சூரியனே பூஷா.
5. மூலிகைகளின் சக்தியாக இருந்து நோய்களைப் போக்கும் துவஷ்டா. இவர் ஐப்பசி மாதத்திற்கு உரியவராகக் கருதப்படுகிறார். அடைமழை மாதமான ஐப்பசியில், நோய் நொடிகள் அண்டாதிருக்க அருளுபவர் இவரே.
6. மூச்சுக்காற்றை அளித்து உயிர்களை இயங்கச் செய்யும் அர்யமான். ‘வைகாசி வாய் திறக்கும்’ என்று தொடங்கி, வீசும் காற்றின் அளவைக் குறித்துச் சொல்லப்படும் பழமொழிகளை நாம் அறிவோம். மிதமான காற்றுக்குத் தலைவன் அர்யமான். வைகாசி மாதச் சூரியனின் திருநாமம் இதுவே.
7. உயிர்களுக்கு நலம் வழங்கும் பகன். உயிரினங்களின் உடலில் உயிர் தங்கியிருக்க வெம்மை தேவைப்படுகிறது. இந்த வெம்மை இல்லாவிட்டால் உடல் குளிர்ந்துவிடும். அத்தகைய வெம்மையைத் தரும் பகலவனின் திருநாமமே இது. மாதங்களில் இவர் தைமாதச் சூரியனாக அறியப்படுகிறார்.
8. உயிர்களிடத்தில் ஜடராக்னி ரூபத்தில் இருந்து, உண்ணும் உணவின் ஜீரண சக்திக்கும், உடல் வெப்பம் சீராக இருக்கவும் உதவும் விவஸ்வான். எல்லா வகையான அக்னிக்கும் ஆதாரம் இவரே. மாதங்களில் இவர் புரட்டாசி மாதத்துக்குரியவராகக் கருதப்படுகிறார்.
9. தீய எண்ணங்களையும் தீய சக்திகளையும் அழிக்கும் விஷ்ணு. பரம்பொருளின் எங்கும் நிறைத் தன்மையே விஷ்ணு. பகலவனின் பிரகாசம் போல் தீப ஒளி நிறையும் கார்த்திகை மாதத்திற்கான சூரியனே விஷ்ணு என்று அறியப்படுகிறார்.
10. வாயுக்களின் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் அம்சுமான். இதமான வெப்பம் தருபவரே அம்சுமான். பனி நிறைந்த மார்கழி மாதத்திற்கான சூரியனே அம்சுமான்.
11. நீர் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் வருணன். ஆடியில் வீசும் பெருங்காற்றுக்கு அதிபதி இவரே. ஆகவே ஆடி மாதச் சூரியனே வருணன் என்று அறியப்படுகிறார்.
12. உயிர்களின் நலனுக்காக, சந்திரபாகா நதிக்கரையில் தவமியற்றும் மித்திரன். கடலரசனின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி உயிர்களுக்கு உற்ற தோழனாக விளங்குபவர். சந்திரபகவான் இவராலேயே ஒளி பெறுகிறார். மாதங்களில், ஆனி மாதச் சூரியனே மித்ரன் என்று புகழப்படுகிறார்.
ஞாயிறு போற்றுதும்!..ஞாயிறு போற்றுதும்!!
அன்பர்களுக்கு மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!
படத்துக்கு நன்றி:
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!