கவிநயாfestival-index
மனசெல்லாம் சுத்தம் செய்து நல்லதாக்குவோம்

கள்ளங் கபடமில்லா வெள்ளை உள்ளமாக்குவோம்

இறைவன் வந்து வாழுகின்ற இல்லமாக்குவோம், நம்

இஷ்ட தெய்வம் வந்துறையும் கோயிலாக்குவோம்!

நல்ல எண்ணங்களால் மனசை உழுது வைக்கணும்

நற்குணத்தை நாத்து நட்டு பயிரு வளர்க்கணும்

ஆசை, குரோதம், தன்னலமாம் களைகள் பிடுங்கணும்

அன்பை வளர்த்து அனைவருக்கும் அள்ளிக் கொடுக்கணும்!

மாடு போல சோர்வில்லாம நாம உழைக்கணும்

மற்றவர்க்கு உதவிடவே வாழ்க்கை வாழணும்

உலகமெல்லாம் ஒரேவீடா நாம நினைக்கணும்

உள்ள மக்களெல்லாம் நம்ம சொந்தமாகணும்!

அகத்தினிலே படிந்த இருள் விலகி ஓடட்டும்

அகமெல்லாம் இறையருளால் நிறைந்து ஒளிரட்டும்

இதயத்திலோர் கதிரவனாய் அவன் விளங்கட்டும்

இன்பமெல்லாம் அவன் பதமே என்றுணரட்டும்!

இறையடிகள் பணிந்து விட்டால் ஓடும் துன்பமே

இறையவனை உணர்ந்து விட்டால் என்றும் இன்பமே

இறையவனின் நினைவாலே இதயம் பொங்குமே

இறை நாமம் சொல்லச் சொல்ல இன்பம் தங்குமே!

படத்துக்கு நன்றி

http://festival-images.designdecor.in/Pongal-Pot-Rangoli-Kolam4-pongal-pot.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *