பழமை மாறாத ‘பொங்கல்’!…
பெருவை பார்த்தசாரதி
இன்றய காலகட்டத்தில், நாம் அனுசரித்து வரும் பண்டிகைகள், விழாக்கள் பற்றி சற்றே சிந்தித்தோமானால், அனைத்துப் பண்டிகைகளும் நாளடைவில் மறைந்து விடுமோ என்கிற அச்சம் தோன்றும், ஏனென்றால் வாழ்க்கை முறையில் பெருகிவரும் மிகப்பெரும் கலாச்சார மாற்றங்கள் நமது அனாதியான நன்னெறிகளையும், நற்பண்புகளையும், நல்லொழுக்கத்தையும் பறைசாற்றுகின்ற வழிவழி வந்த இந்துப் பண்டிகைகள் அனைத்தும் பெருமளவில் மறைந்து விடுகின்ற மாதிரி, பண்டிகைகளின் கால அளவும் சுருங்கி விட்டது என்று கூடச் சொல்லலாம்.
எல்லாமே சாஸ்த்திரத்துக்குத்தான் என்கிற படியாக, பண்டிகைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது என்கிற பிடிவாதத்துக்காக, ஒரு சரவெடி வெடித்தால் தீபாவளி முடிந்துவிடுகிறது, ஒரு நாளைக்கு மட்டும் ஒரு வரிசை விளக்கேற்றி வைத்தால் ஒரு வார கார்த்திகைதீபம் முடிந்து விடுகிறது. இப்படி, எல்லாப் பண்டிகைகளும், விழாக்களும் ஓரிரு மணி நேரங்களில், கால அவகாசத்தை கணக்கில் கொண்டு, சட்டென மறைந்து விடுகிறது. அந்நியக் கலாச்சாரங்களின் மேல் உள்ள மோகமும், ஆதிக்கமும், ஒருவகையில் இதற்குத் துணைபோகிறது.
இதற்கு ஒரு தீர்வு காணவேண்டுமென்றால், வயதில் முதியவர்கள் இளைய தலைமுறையினருக்கு, நமது நாட்டின் கலாச்சாரங்களின் பெருமைகளையும், நல்லொழுக்கப் பண்புகளையும், பண்டிகைகளின் மகத்துவத்தையும் அவர்களுக்கு போதிக்க வேண்டும்.
நல்லவேளையாக, பொங்கல் பண்டிகை மட்டும் தப்பித்து, ஒரு நாளுக்கு மேல், நான்கு நாட்களுக்கு நீடிப்பது தமிழராகிய நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே. ஒரு பண்டிகையை முழுமையாக அனுபவித்துக் கொண்டாட வேண்டுமானால், நமக்கெல்லாம் போதிய அவகாசம் வேண்டும், அன்றாடப் பிரச்சினைகளிலுருந்து விடுதலை வேண்டும்.
முதலில் அலுவலகத்திலிருந்து, தற்காலிக விடுமுறை வேண்டும், இவை எல்லாவற்றையும் விட, பண்டிகையைக் கொண்டாட பொருளாதார வசதியும் வேண்டும். இவையனைத்தும் இன்றைய காலகட்டத்தில் நிறையவே கிடைக்கிறது, அரசாங்கத்தின் அனுகூலமும் கிட்டுவதால், எப்போதுமே “பொங்கல் விழாவின்” பொலிவு ஒவ்வொரு வருடமும் மெருகேறிக் கொண்டுதானிருக்கிறது.
ஒரு காலத்தில், பொங்கல் விழா, ஒரு மாதம் வரை கொண்டாடப்பட்டதாக, தமிழ் இலக்கியங்களில் தகவல் உள்ளது. இவ்வழக்கம், தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில், நகரங்களில் அல்ல, ஒரு சில கிராமங்களில் மட்டும் இந்த பொங்கல் பண்டிகை ஒரு மாதம் வரை நீடிப்பதாக பத்திரிகைச் செய்திகளின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும்.
மற்ற மாநிலங்களைவிட, ‘பொங்கல்’ தமிழகத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இந்தப் பண்டிகையோடு தமிழும் ஒட்டிக்கொண்டு “தமிழர் திருநாள்” என்றும், பெரும்பாலான உழவர் கொண்டாடும் விழாவாக “உழவர் திருநாள்” என்றும், அனைத்துயிருக்கும் மூலமாக விளங்குகின்ற சூரியனை வழிபடும் விதமாக அமைவதும் காரணம்.
மேலும், ‘பழயன கழிதல்’, ‘புதியன புகுதல்’ என்கிற பழமொழிக்கேற்ப பொங்கலன்று பழய பொருட்களைத் தவிர்த்து, உபயோகப் படுத்தப் படாத புத்தம்புதிய பொருட்களைவைத்தே பொங்கல் தினம் ஆரம்பிக்கிறது. புதுப்பானை, புத்தரிசி, அன்றுகறந்த புதுப்பால், புத்துருக்குப் பசுநெய்யோடு கூடிய புதுப்பொங்கலை, புத்தாடைகூட்டி பொங்கல் விழாவை பொலிவு மிக்கதாக்கி வழிபடுகிறோம்.
ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்பாக அமைய, அன்றய விருந்து, அப்பண்டிகைக்கு அழகூட்டுக்கிறது. பொங்கல் விழாவுக்கு பொங்கல் மட்டுமல்ல, “கரும்புதின்னக் கூலி வேண்டுமோ” என்பதற்கிணங்க, பொங்கலன்று கரும்புக்கும், மங்கலத்தின் முதன்மையான மஞ்சளுக்கும், அதீதமான மருத்துவகுணமிகுந்த இஞ்சிக்கும் முதல் மறியாதை உண்டு.
இதனால்தான், பண்டைக்காலம் முதல் இன்றைக்கும் தொடர்ந்து பொங்கலுக்கு கரும்பு, மஞ்சள் கிழங்கு, இஞ்சிக் கொத்து. இன்றும் நிலத்தில் விளைந்த தான்ய வகைகளை “பொங்கல் சீர்” என்று கொடுக்கும் வழக்கம், கிராமங்களில் குறைந்து விடவில்லை. அவைகளின் மருத்துவ மகத்துவமும் மறைந்து விடவில்லை.
இளைமைக்காலத்தில், நான் பிறந்த கிராமத்தில் பொங்கலுக்கு மறுநாள், மக்கள் கடித்துச் சுவைத்த கரும்புச் சக்கையை அகற்றுவதற்கே பல நாள் ஆகும் என்பது நினைவுக்கு வருகிறது. இன்று கரும்பைக் கடித்தால், ‘பற்கள் பலமடையும்’ என்பதற்குப் பதிலாக, பல் உடையும் என்பதாக, பல்மருத்துவர் அறிவுறுத்துகிறார். ஆக கரும்பைக் கடித்துச் சுவைப்பது மறைந்து, குடித்துச் சுவைப்பது (ஜூஸ்) பெருகி விட்டது.
அதுபோல் கிராமத்து இளமங்கைகள் முகத்தின் மேல் மஞ்சளை அரைத்துப் பூசி, முகம் முழுவதையும் மஞ்சளாக்கி விடுவார்கள். ஆனால் இன்றோ மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மஞ்சள் எங்கோ மறைந்து விட்டது.
பொங்கலன்று தெருவழியே போய்கொண்டிருக்கும்போது, சித்தமருத்துவர் எதிரே வருவார், செல்கின்ற இடமெல்லாம், மஞ்சளின் மகத்துவத்தை மாதருக்கு எடுத்துரைப்பார். மஞ்சளுக்கும், மாதருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பார்.
மஞ்சளையும், மருதாணியையும் ஒருசேர உள்ளங்கையில் உரசினால், கருச்சிதைவு ஏற்படாதென்பார்.
கழுத்திலும், மார்பிலும் எப்போதும் உரவாடுகின்ற தாலிச்சரட்டில் மஞ்சளைப் பூசப்பூச, பெண்களுக்கு எளிதில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுமென்பார்.
மாதர்களின் பூக்காலில் மஞ்சளிட, மலட்டுத்தன்மை நிரந்தரமாக மறைந்துவிடுமென்பார்.
மருத்துவருக்கு அடுத்து நல்லாசிரியர் எதிர்ப்படுவார். எங்களைப் பார்த்து!….
மண்கலப் பானையில்,
மாட்டுப் பாற்பொங்கலோடு
மங்கலமும், மகிழ்ச்சியும் சேர்ந்தே
பொங்கியதா?…….
என்று அழகிய தமிழில் வினவுவார்!….
‘ஆம்’ என்போம் மகிழ்ச்சியோடு. இன்று SMS வாழ்த்துக்களில் ஒருவரியோடு ஆங்கிலத்தில் பொங்கல் வாழ்த்துக்கள் முடிந்துவிடுகிறது.
இன்னும் இரண்டு நாளில், மார்கழி நிறைநாளில், தைமாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை ஆரம்பம். கடந்துசென்ற நாட்களில் ஸ்ரீஆண்டாளின் அருளிச்செயலான “திருப்பாவை” என்கிற கோதை தமிழை, வேதமனைத்துக்கும் வித்தாகிற திவ்ய பிரபந்தத்தை, நாள் தோறும் ஞானக்கனிவுடன் அனுசந்தித்தாயிற்று. இன்று, இக்கட்டுரை வெளியாகும் மார்கழி’ 28 ஆம் நாள், கோதை தமிழின் 28 வது பாசுரமாகிய
“கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்”….
என்கிற இப்பாடலோடு பொங்கலுக்கும் தொடர்பு உள்ளது. எங்கெல்லாம் புல்வெளி, வயல்வெளி, காடுகள் உள்ளதோ, அந்த இடங்களில் பசுமாடுகளை மேய்பதற்காக, அதன் பின்னே சென்று, வயல் வெளிகளில் இருந்து கொண்டு ஜீவனம் நடத்துவோம் என்பதாக இந்தப் பாசுரத்தின் விரிவுரைகள் அமைகிறது. போகி, பொங்கலுக்கு அடுத்தபடியாக வருகிற மாட்டுப் பொங்கலையும் இந்நன்னாளில் நினனவு கூரும் விதமாக அமைந்துள்ளது இப்பாடலின் சிறப்பு.
மேலும் ஒரு பழந்தமிழ்ப் பாடலோடு, இந்த வருடம் மட்டுமல்ல, இனிவரும் பொங்கல் பண்டிகையை, நண்பர்களோடும், உற்றார், உறவினரோடும் “பொங்கல் வாழ்த்துக்களை” மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்வோம்.
பூமித்தாயாம் புரவி பூட்டிய தேரில் பவனிவரும் “சூரியனைக் கண்ட பனிபோல” பொங்கலன்று இன்னல்கள் விலகி, அனைத்தில்லங்களிலும் பொங்கலோடு, மங்கலமும், மகிழ்ச்சியும் சேர்ந்தே பொங்கட்டும்.
செங்கதிரோன் தேரை வடபாற் செலுத்தும்நாள்
பொங்கலெனக் கொண்டாடப் போந்தீர், மங்கலமாய்ப்
பொற்குடத்தை ஏற்றி, புதுப்பால் உலையூற்றி
நற்பொங்கல் காண்பீர் நயந்து.
வாழ்த்துக்களும், இன்சொல்லும், இனிய
வாழ்க்கைக்கு வழிவகுக்குமாதலால்,
வல்லமை அன்பர்கள் அனைவருக்கும், என்
“இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்”
அன்பு பார்த்தசாரதி என் இனிய பொங்கல் வாழ்த்துகள் மஞ்சள் பூசுவது குறைந்ததாலோ என்னமோ விக்கோ டர்மெரிக் கிரீம் பிரபலமாகியது . “அந்த நாள் முதல் இந்த நால் வரை வானம் மாறவில்லை ,மனிதன் {மனுஷி } மாறிவிட்டான்{ள்} என்ற பாடல் எத்தனைப்பொருத்தம் அழகான கட்டுரை
” அதுபோல் கிராமத்து இளமங்கைகள் முகத்தின் மேல் மஞ்சளை அரைத்துப் பூசி, முகம் முழுவதையும் மஞ்சளாக்கி விடுவார்கள். ஆனால் இன்றோ மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மஞ்சள் எங்கோ மறைந்து விட்டது.”
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ உண்மைகளை நயம்பட உரைப்பதில் வல்லவர் திரு பெருவை பார்த்தசாரதி என்னும் என் இனிய நண்பர்
அன்புடன்
தமிழ்த்தேனீ
dear sarathi,
your description about pongal on the eve of pongal festival is a fit in presentation . As you said let us maintain our old customs and heritage in celebrating pongal and other festivals as formulated by our elders in a sytematic manner without skip over
k.muraleedharan
madurai
இனிய நண்பர் திரு. பெருவை பார்த்தசாரதி அவர்களே!
தங்களது பொங்கல் பெருவிழா பற்றிய கட்டுரைய ரசித்துப் படித்தேன். அருமையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
தங்களுக்கும் ‘வல்லமை’ குழும அன்பர்கள் அனைவர்க்கும் எளியேனின் பொங்கல் வாழ்த்துக்கள்.
வணக்கத்துடன்
ஸம்பத்
மதிப்பிற்குறிய எழுத்தாளர்கள் திரு தமிழ்த்தேனீ அய்யா, திரு ராமஸ்வாமி சம்பத் அய்யா, திருமதி விசாலம் அம்மையார் மற்றும் நண்பர் திரு முரளி இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படித்தவுடன் சிரமம் பாராது தங்களது கருத்துக்களைப் பகிர்வதால், எழுதுபவருக்கு ஊக்கம் அளித்து, மேலும் மேலும் எழுத வேண்டும் என்கிற அவாவைக் கொடுக்கும். மீண்டும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
இனிய நண்பர்வல்லமை திரு. பெருவை சாரதி அவர்களே!
என் இனிய பொங்கல் வாழ்த்துகள் தங்களது அருமையான பண்டைக்கால பொங்கல் கட்டுரை என்னை திரும்பி பார் என்றது.
அன்புடன்
suri