தை மகளே வா வா (மருமகளே மெட்டில்)

0

 

தை மகளே தை மகளே வா வாபொங்கலோ பொங்கல்-2
கை திறந்து மங்களமே தா தா
மை அழகே பொங்கலுடன் வா வா
வையகத்தில் அன்புதனைத் தா தா ()

வாசலெங்கும் கோலங்களாய் அந்த காலத்தில்
வைகறையில் பாசுரங்கள் பாடும் காலையில்
போரடித்து புத்தரிசி குவியும் குதிரினில்
சாறெடுத்து வெல்லம் வரும் மஞ்சள்கழனியில்
புத்தம்புது மண்பானை அலங்கரித்துமே
பொங்கலிட வான்கதிரும் உண்ணும் விருந்துமே ()

தைபிறந்த காரணத்தால் மாமன் மகனுமே
பரிசம்போட அத்தைமகள் நாணம் கமழுமே
கொம்புகளில் வண்ணமோடு மாடுகன்றுமே
பொங்கல் தின்று களிப்புடனே தெய்வமாகுமே
தங்கை வைத்த கணுப்பிடியில் காகம்குருவியும்
தமயன் வாழவாழ்த்து சொல்லும் அந்தபொங்கலே ()

விசிலடித்து குக்கரிலே பொங்கல் வேகுமே
பசையடித்து ஸ்டிக்கர் கோலம் வாசலோரமே
வேகவைக்க காய்கறிகள் ஓவன் இசைக்குமே
பேஷனாகி பேஸ்புக்கில் பொங்கலாகுமே
பாசமெல்லாம் காதலெல்லாம் மாறியிங்குநேர்
வேசமுடன் பெரும்சுகத்தில் இந்தகாலமே ()

பணத்திற்கென்று தாயைவிட்டு அண்டைநாட்டிற்கு
அடிமையாகி உழைக்கும் வாழ்வும் பொங்கலாகுமா
பிறந்தகத்தின் பணவீழ்ச்சி கண்டும் பிள்ளைகாள்
பாரதத்தாய் மார்பினிலே குருதி போறுமா
வித்தையோடு தைமகளே சித்தம்மாற்றடி
சொத்தையானப் பண்பாட்டை தேறவையடி ()

S.Sathiyamani,
Director (Technical)
NIC, DIT, M/o IT And Communcation,
New Delhi
9868126406

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *