உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்!
வித்யாசாகர்
ஒரு பானைப் பொங்கலிலே – நூறு
பானை சந்தோசம்; பொங்கும்
நூறு பானையிலும் –
மணக்குது பார் மண்வாசம்!
மஞ்சக் கொத்துக் கட்டியதும்
சிரிக்குது பார் சூரியனும்,
வெந்த பானைக் குளித்ததுபோல்
மினுக்குது பார் வீடுகளும்!
குருத்தோலைத் தோரணமும், கரும்பச்சை மாயிலையும்
அறுத்தமர வாசலுக்கு அடிப்பச்சை பூசிவிடும்,
மஞ்சுவிரட்டுக் காளைகளும் – நீலம் சிவப்பு
வண்ணஞ்சொலிக்கப் பொங்கல் தின்னுத் தலையாட்டும்!
முகங் காட்டிய வெளிச்சத்திற்கும்
தைப்பிறந்தாலே வெண்பொங்கலினிக்கும்,
வீசும் காற்றுக்கும் குடிக்கும் நீருக்கும்
ஆற்றங்கரையில் கற்பூரமெரியும்; ஊதுபத்தி வாசம் பரப்பும்!
நன்றி சொல்ல வாய்நிறைத்து
இயற்கையை வணங்கும் நாளுமிது – நன்றி
மறக்கும் மனிதருக்கு – நன்றியை
நினைவில் மீட்டும் தைப் பொங்கலிது!
உழைக்கும் மாட்டுக் கூட்டத்தையும்
வணங்கிய சனத்தின் பண்பு இது,
வியர்வையால் நனைந்த நெல்விதையை
விளைத்த’ வயலுஞ் சாமியான சாட்சியிது!
குடிக்கும் குவளைத் தண்ணீருக்கும்
நன்றியைப் பாராட்டும் பக்தியிது, ஏர்பிடித்த
கைகளுக்கு தேரிழுத்து சாமி காட்டும்
சடங்கின் மீதெழுந்த நம்பிக்கையிது!
அப்பாம்மா கைபிடித்து நடந்தத் தெரு அத்தனையும்
கதைசொன்ன கருசுமந்து கையெடுத்துக் கும்பிட்டோம்,
பாட்டன் முப்பாட்டன் நட்டகல்லை சாமியாக்கி
மண்ணையும் வணங்கிப் பொங்கலிட்டோம்!
நானிலம் சுற்றியத் தமிழர் – பாலையிலும்
ஓயவில்லை, இங்குவந்தும் பொங்கல்வைத்தோம்,
இனி வருங்காலம்
வயலை யறிய – மாட்டுக்கும் மண்ணுக்கும்
படத்திலேனும் பொட்டுவைத்தோம்!
குடித்த பாலுக்கும் கும்பிட்ட வர்க்கம்
வளர்த்த மண்ணை விட்டுவிடுமா?
வெடித்த காலில் பசியையடைத்து – உழவர்
பூட்டியக் காளையை மறந்திடுமா?
மிதித்தச் சேற்றில் விளைந்தநெல்லை
அறுக்கும் கைகளை கும்பிடுவோம்;
நன்றி என்பதை நினைக்கும் மட்டில்
பொங்கலோப் பொங்கல் சொல்லிடுவோம்!!
–படத்திற்கு நன்றி : http://vayalaan.blogspot.com/2011/02/blog-post_20.html