கிராமத்துப் பொங்கல் நினைவுகள்

மோகன் குமார்

தஞ்சை மாவட்டத்தில் பிறந்து தற்போது சென்னையில் வாழ்பவன் என்கிற முறையில் பொங்கல் குறித்தான ஒரு பார்வை இது :

தஞ்சையும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் பொங்கல் பண்டிகையின் போதுதான் வயல்களில் அறுவடை முடியும் காலம்…!! அதனால் கிராமத்தில் இருப்போரிடம் அப்போது தான் பணப்புழக்கம் ஓரளவு இருக்கும். கிராமங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் !

முதல் பண்டிகை போகி !! சரியாக போகியன்று தான் பொங்கல் பொருட்கள் வாங்க கிராமத்தில் இறுதி பலரும் அருகில் உள்ள சிறு நகரத்துக்கு வருவார்கள். அதென்னவோ ஏழைகள் தீபாவளி ஆகட்டும், பொங்கல் ஆகட்டும் முதல் நாள் தான் துணி மற்றும் முக்கிய பொருட்கள் வாங்குகிறார்கள்.

போகி தினத்தில் தெருவில் இருக்கும் குப்பைகளைச் சேர்த்து எரிய விடும் வழக்கம் உண்டு என்றாலும் இந்த விஷயத்தில் சென்னை தான் ரொம்ப மோசம் ! அன்று முழுதும் வெளியில் வர முடியாத அளவு சென்னை புகை மண்டலமாக இருக்கும். டயர் போன்ற எரிக்கக் கூடாத விஷயங்களையும் எரித்து நாசம் செய்வோரும் உள்ளனர் என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

போகிக்கு அடுத்த நாளான பொங்கலுக்கு வருவோம். கிராமத்தில் கொண்டாடப்படும் பொங்கல் தான் மிக அற்புதமாக இருக்கும். தைப் பொங்கல் என்பது சூரியனுக்கான விழா அல்லவா? கிராமத்துத் தெருக்களின் நடுவே பானையும், அடுப்பும் வைத்து பொங்கல் செய்வார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பொங்கல் பானை வைத்து வழிபடுவது அருமையாக இருக்கும். ஒரு முறை என் நண்பன் கருணாநிதி (பெயர் தான் கருணாநிதி ! ஆனால் இவன் பக்கா ADMK ) ஊரான காவராபட்டுக்கு சென்ற போது இப்படி தெருவின் நடுவே பொங்கல் வைப்பதை பார்த்து ரசிக்க முடிந்தது. அந்த ஊரில் பல வீட்டிலும் வீட்டுக்கு வெளியே, தெருவில் கயிற்று கட்டில் போட்டுதான் இரவில் தூங்கவே செய்கிறார்கள் !! ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

பொங்கலின் போது மூன்று நாளும் எங்க ஊர் நீடாமங்கலத்தில் அம்சவல்லி & காவேரி தியேட்டரில் மூணு ஷோ சினிமா நடக்கும். (வழக்கமா மாலை மற்றும் இரவு காட்சி மட்டுமே நடக்கும்!) மக்கள் கரும்பு, பொங்கல் மற்றும் வாழைப் பழங்களுடன் தியேட்டர் சென்று படம் பார்ப்பார்கள். படம் முடிந்ததும் கரும்புச் சக்கை தியேட்டர் முழுதும் கொட்டிக் கிடக்கும். இதை சுத்தம் செய்து அடுத்த காட்சி ஆரம்பிக்க தாமதமாகும். போன வருட பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆன படங்கள் பொங்கலுக்குத் தான் எங்க தியேட்டருக்கு வரும். ஆனாலும் பண்டிகைகளில் தியேட்டரில் மிக அதிக கூட்டம்

வருவதன்னவோ பொங்கலின் போது தான் !!

ஒரு காலத்தில் அம்சவல்லி, காவேரி, சரவணபவன் என மூன்று தியேட்டர் இருந்த எங்க ஊரில் இப்போது ஒரு தியேட்டரும் இல்லை!

தைப் பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கல் !

மாட்டுப் பொங்கல் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமெனில் நீங்கள் நிச்சயம் கிராமத்துக்குத்தான் செல்ல வேண்டும். அவரவர் வீட்டில் இருக்கும் மாட்டுக்கு, குளிப்பாட்டி, பொட்டு வைத்து அலங்காரங்கள் செய்வார்கள். கொம்பில் வர்ணம் பூசுவார்கள். மாட்டின் உடலில் கலர் காகிதத்தில் செய்த அலங்காரங்கள் அலங்கரிக்கும். அன்றைக்கும் பொங்கல் தான் செய்வார்கள். கோமாதாவுக்கு நன்றி சொல்லி செய்யும் பொங்கல் இது.

ஜல்லிக் கட்டு நடக்கும் நேரமும் கூட இது தான். ஜல்லிக் கட்டு தேவை/ தேவையில்லை என இரு வேறு கருத்து உண்டு. நான் நிச்சயம் ஜல்லி கட்டு தேவையில்லை என நினைப்பவன். மாடுகளை துன்புறுத்துகிறோம் என்பது ஒரு முக்கிய காரணம். அதை விட பெரிய காரணம் உண்டு.

என் அக்கா கிராமத்து மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். அவர் இருக்கும் கிராமத்தில் வருடா வருடம் ஜல்லிக் கட்டு நடக்கும். சரியாக ஜல்லிக் கட்டு போட்டி நடக்கும் நேரம், வெவ்வேறு நேரத்தில் டியூட்டி பார்க்கும் அனைத்து டாக்டர்களும், நர்சுகளும் மருத்துவ மனையில் இருந்தாக வேண்டும். குத்துப் பட்ட நிலையில் மனிதர்கள் வந்த வண்ணம் இருக்க, வரிசையாக தையல் போட்டு போட்டு ஓய்ந்து போவார்கள். நிலைமை மோசம் என்றால் பெரிய ஆஸ்பத்திரி கொண்டு போகச் சொல்வார்கள். இந்த ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று பேராவது ஜல்லிக் கட்டில் உயிர் இழக்கிறார்கள். அதன் பின் அந்த குடும்பம் என்ன ஆகும்? ஒவ்வொரு வருடமும் கை, கால் என உறுப்புகள் இழப்பவரும் உள்ளனர். ஜல்லிக் கட்டு வேண்டாம் என நினைக்க முக்கிய காரணம் இது தான்.

கன்னிப் பொங்கல் அல்லது காணும் பொங்கல், இந்த வரிசையில் கடைசி பண்டிகை தினம் ! இந்த நாளன்று நம் தெருவிலும், பக்கத்து தெருக்களிலும் உள்ள பலரும் ஒன்றாக சேர்ந்து மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் கிடைத்த வாகனங்களில் கூட்டமாக அருகில் உள்ள மூணாம் தலைப்பு என்னும் இடத்துக்கு செல்வார்கள். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பிக்னிக் ஸ்பாட் அது தான் . மூன்று ஆறுகள் ஒன்றாய் கூடுமிடம்… சின்ன அணை போல இருக்கும் … சுற்றி நிறைய மரங்களும், காலி இடமும் இருக்கும்.

புளி சாதம், தயிர் சாதம் என கட்டு சோறு கட்டி காலையே சென்று, நாள் முழுதும் அங்கு விளையாடி விட்டு வருவார்கள். சில வருடங்கள் முன்பு ஒரு காணும் பொங்கலன்று அக்கா, அண்ணன் குழந்தைகளுடன் அந்த இடம் சென்றேன். இப்போது முன்பு போல் அதிக கூட்டமில்லை. நமது நல்ல பழக்க வழக்கங்களில் சிலவற்றை நாம் இழந்து வருகிறோமோ என சற்று வருத்தமாக இருந்தது.

கேஸ் அடுப்பில் பொங்கல்வைத்து, சாப்பிட்டு முடித்ததும் சாலமன் பாப்பையா பட்டி மன்றமும், டிவியில் போடும் புதுப் படமும் பார்க்கும் நகர வாசிகள் ஒரு முறையாவது பொங்கல் விடுமுறையில் கிராமங்கள் பக்கம் சென்று வரலாம். நம் பாரம்பரியம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருப்பதை நேரில் காண இது ஒரு அரிய வாய்ப்பு !!

படங்களுக்கு நன்றி : http://www.indyapulse.com/indiaguide/pongal.asp

http://way2readonline.blogspot.com/2011/01/happy-mattu-pongal-festival-2011-wishes.html


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *