ஸ்ரீஜா வெங்கடேஷ்

மீண்டும் ஒரு பொங்கல் இந்தக் காங்கிரீட் காடுகளில். என்ன பெரிய வித்தியாசம் தெரியப் போகிறது பொங்கல் சமயத்திற்கும் மற்ற சமயங்களுக்கும்? எப்போதும் போல கடைகளில் கூட்டம், காய்கறிகளின் அணி வகுப்பு, 6X6 சமையலறையில் குக்கரில் பொங்கல், டிவியின் முன் தவம். இது தானே இன்றைய நகரவாசிகள் கொண்டாடும் பொங்கல். (என்னையும் சேர்த்துத்தான்).இன்றைய நுனி நாக்கு ஆங்கிலத் தலைமுறைக்கு பொங்கல் என்றொரு தமிழர் திருநாள் கொண்டாடப்படும் முறை தெரிவதற்கான வாய்ப்பே இல்லை. தீபாவளி, நவராத்திரி போல இதுவும் ஒரு பண்டிகை, மற்றொரு விடுமுறை நாள். அவ்வளவு தான்.

இந்தச் சமயத்தில் என்னுடைய கிராமமான ஆழ்வார்குறிச்சியில் நாங்கள் கொண்டாடிய மூன்று நாள் பொங்கல் பண்டிகை நினைவில் ஆடுகிறது. இது குறித்து நான் என்னுடைய ”நிலவொளியில் ஒரு குளியல்” பத்தியில் லேசாக எழுதியிருக்கிறேன். அதையே மீண்டும் வழிமொழியப் போவதில்லை. பதிலாக நாங்கள் (நாங்கள் என்பது நான் என் அண்ணன் மற்றும் தோழியர்) பொங்கல் சமயத்தில் அடித்த லூட்டிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அரையாண்டுத்தேர்வு முடிந்த பின் பொங்கல் வருவது  தான் அதன் சிறப்பே. இல்லையென்றால் பரீட்சை வருது படி படி என்று பெரியவர்கள் படுத்தி எடுத்து விடுவார்களே!

பொங்கல் வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்னரே அறுப்பு துவங்கி விடும். புது நெல் வீட்டிற்கு வரும் சந்தோஷம் எல்லா விவசாயிகளிடத்தும் கும்மாளமிடும். வீட்டுத் தேவைக்கு என்று ஒதுக்கி வைத்துக் கொண்டு மற்றவற்றை விலை பேசி விற்று விடுவார்கள். அதனால் கையில் பணப் புழக்கமும் இருக்கும். குழந்தைகளுக்கு கண்டிப்பாகப் புதுத்துணி எடுப்பார்கள். வீட்டுத் தாய்மார்கள் வீட்டின் அண்டா குண்டா , சட்டி பானை உட்பட சகலத்தையும் ஆற்றிலோ குளத்திலோ கொண்டு போய் சுத்தம் செய்து கொண்டு வருவார்கள்.

வீட்டுக்கு வெள்ளையடிக்கும் படலம் அடுத்தது துவங்கும். இப்போது உள்ளது போல் அப்போதெல்லாம் ஸ்னோசம், டிஸ்டம்பர் போன்ற பல வகையான பெயிண்டுகள் கிடையாது. நல்ல நீலம் கலந்த சுண்ணாம்பு தான் அடிப்பார்கள். கிளிஞ்சல் சுண்ணாம்பு வாங்கி வந்து வீட்டிலேயே நீர்த்துவார்கள். அதை வேடிக்கை பார்ப்பது ஒரு தனி சுவாரசியம். ஆள்காரர்கள் இரண்டு பேர்தான் இருப்பார்கள். ஒரு வீடு முழுக்க வெள்ளையடிக்க அவர்களே போதும். கூலியோடு டீயும் கொடுக்க வேண்டும்.

ஒரு கனமான இரும்பு வாளியில் கிளிஞ்சல்களைப் போட்டு அளவாகத் தண்ணீர் ஊற்றுவார்கள் அப்போது அது கொதிக்கும் பாருங்கள் அந்த நெடியும், கொதிப்பும் பார்க்கப் பயமான பரவசமாக  இருக்கும். சுமார் இருபது நிமிடங்கள் கழித்து மீண்டும் தண்ணீர் ஊற்றுவார்கள். இப்போது கொதிப்பு சற்று அடங்கியிருக்கும். இதே போல செய்து சுண்ணாம்பை மாவு பதத்துக்குக் கொண்டு வந்து வெள்ளை அடிக்கத் தோதாக ஆக்கிக் கொள்வார்கள். இதை எழுதும் போது என் பள்ளி நாள் நண்பன் குபேர் வீட்டில் வெள்ளையடிக்கும் போது அந்தக் கொதிக்கும் சுண்ணாம்பில் அவன் தடுமாறிக் கால் வைத்ததை எழுதாமல் இருக்க முடியவில்லை. தற்போது பல் டாக்டராக இருக்கும் அவனிடம் இந்த நிகழ்ச்சி பற்றி நினைவூட்டிய போது காலின் தழும்பைக் காண்பித்தான் (ர்). எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் அதன் சூடு அப்படித் தாங்க முடியாததாக இருக்கும்.

வெள்ளையடிக்கச் சுண்ணாம்பு ரெடி. இப்போது நீலம் கலக்கும் கட்டம். நீலம் என்றதும் உஜாலா சொட்டு நீலம் என்று நினைத்து விடாதீர்கள். சுண்ணாம்பில் கலக்கப்படும் நீலம் தனி. அது பொடியாக ஒரு பொட்டலத்தில் கட்டித் தருவார்கள். நம் தேவைக்கேற்பக் கலந்து கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப என்று சொன்னேன் அல்லவா? அங்கு தான் குழப்பம் ஆரம்பிக்கும். வாங்கிய பொடி அத்தனையும் போட்டாலும் நல்ல நிறம் வரவில்லை என்று தோன்றும் எங்களுக்கு. ஆனால் பெரியவர்களோ கொஞ்சம் போட்டதுமே ”போதும்” என்று கூறி விடுவார்கள். நாங்கள் ”இன்னும் போடு, இன்னும் போடு” என்போம். ஒரு வழியாகச் சுமாரான ஒரு நீல நிறம் வரும்போது இரு சாராரும் சமாதான உடன்படிக்கைக்கு வருவோம்.

அடுத்தது பிரஷ். உருளை பிரஷ்ஷெல்லாம் அப்போது கேள்விப் பட்டது கூடக் கிடையாது. தேங்காய் மட்டை தான் பிரஷ். அதன் நுனியை நன்கு சதைத்து வெள்ளையடிக்க வாகாக வைத்துக் கொள்வார்கள். அந்த மட்டைகளை (அப்படித்தான் சொல்வார்கள்) , ஒரு பொக்கிஷம் போல் பாதுகாப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். அதைக் கொண்டு கெட்டியான அந்த நீலம் கலந்த சுண்ணாம்புக் குழம்பில் முக்கி அடிப்பதை நாள் முழுக்க வேடிக்கை பார்ர்க்கலாம். வீட்டுப் பெண்களின் வேலை அன்றைய தின வெள்ளையடிப்பு முடிந்ததும் கீழே தெறித்திருக்கும் சுண்ணாம்புத் துளிகளைத் துடைப்பது தான். அதை உடனடியாகச் செய்ய வேண்டும் இல்லையென்றால் தரையிலிருந்து அவைகளை அழிக்கவே முடியாது.  முழு வீட்டுக்கும் வெள்ளையடித்து முடிய எப்படியும் இரண்டு நாட்களாகும். அந்த நாட்களில் எழும் சுண்ணாம்பு மணமும், பண்டிகையின் எதிர்பார்ப்பும் கலந்த பரவச மனநிலையை என்னால் பின்னாட்களில் உணரவே முடியவில்லை. அன்றைய தின வெள்ளையடிப்பு முடிந்ததும் ஆள்காரர்களுக்கு என் அம்மா தலையில் உடம்பில் தேய்த்துக் கொள்ளவென நல்லெண்ணெய் நிறைய ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொடுப்பார்கள். அவர்கள் அதைத் தேய்த்துக் கொண்டு வீட்டிற்குப் போய் குளிப்பார்கள். ஏனென்றால் சுண்ணாம்பு சூடு உடம்புக்கு ஆகாது என்பதால் தான். இப்போது நல்லெண்ணெய் விற்கும் விலையில் அதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா?

வெள்ளையடிப்பு முடிந்ததும் தொடங்கும் எங்களுடைய காவி அடிக்கும் வேலை. எங்கள் நெல்லை மாவட்டத்தில் வீட்டுக்கு வீடு திண்ணைகள் கண்டிப்பாக இருக்கும். அந்தத் திண்ணைகளின் கீழே காவியால் பட்டை (நாமம் அல்ல) போடுவதும் எங்கள் வழக்கம். அதாவது காவியை ஒரே மாதிரி இடைவெளி விட்டுத் திண்ணையின் கீழே நெடுங்கோடுகளாக அடிப்போம். இது பெரும்பாலும் வீட்டிலுள்ளோரே செய்யும் வேலை தான். வெள்ளையடிப்பவர்கள் இது போன்ற சில்லறை வேலைகளைச் செய்வதில்லை.

எங்களுக்கு உற்சாகம் பீறிட்டு எழும். “நாங்க காவி அடிக்கிறோம்” என்று கெஞ்சிக் கூத்தாடி பெரியவர்களிடம் அனுமதி வாங்கி விடுவோம். கடையிலிருந்து காவி வாங்கி வருவது, யாரிடமிருந்தாவது மட்டை கடன் வாங்கி வருவது எல்லாமே எங்கள் பொறுப்பு. பெரிய மனிதத் தோரணையோடு காவி வாங்கும் நாங்கள், மட்டை கிடைக்க வளைந்து நெளிந்து கூழைக்கும்பிடு போடுவோம். வெள்ளையயடிப்போரிடம் சென்று காவி மட்டை வெண்டுமென்று இரந்தால் அவர்கள் நைந்து பழசாகிப் போன மட்டையை ஆயிரம் எச்சரிக்கையோடு கொடுப்பார்கள். அதை வாங்கி வந்து எங்கள் வேலையை ஆரம்பிப்போம். வேலை முடிந்ததும் கண்டிப்பாக அவற்றை எந்தச் சேதாரமும் இல்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

என் அண்ணன் எதையுமே திட்டமிட்டுச் செய்பவன். பெரிய நீள மரக்கட்டை ஒன்றை எடுத்து காவி அடிக்க வேண்டிய இடங்களை அழகாக மார்க் செய்வான். பின்னர் தான் உண்மையான காவி அடிப்பு துவங்கும். என்னை அடிக்க விடவே மாட்டான். எனக்கோ மிகவும் ஆசையாக இருக்கும். அவன் காலைக் கையைப் பிடித்து, அம்மா கொடுக்கும் பண்டங்களை அவனுக்கே கொடுப்பதாகப் பேரம் பேசி இரண்டு வரி அடிக்க எப்படியும் அனுமதி வாங்கி விடுவேன். மற்றவர்கள் செய்யும் போது இலகுவாகத் தோன்றும் அந்த வேலையை நாம் செய்யப் புகும் போது தான் அதன் கஷ்டங்கள் விளங்கும். மட்டை காவியில் சரியாக முங்காது. வெளியில் எல்லாம் தெறிக்கும். ஒரு இழுப்புக்கே காவி பரவாமல் பல்லிளிக்கும். இப்படிப் பல கண்டங்களைத் தாண்டி எனக்கு கொடுக்கப் பட்ட இரு வரிகளை நிரப்பி விடுவேன். என் தோழிகளை அழைத்து பெருமையாகக் காட்டும்போது தான் என் அண்ணன் அந்த இடம் சரியாக அடிக்கப் படவில்லையென்று அதன் மேலேயே அடித்துக் கொண்டிருப்பான்.

ஒரு வழியாக வருமையா பொங்கல். எங்கள் வீட்டில் வாசலில் பொங்கலிடும் வழக்கம் இல்லை. ஆனால் எங்கள் தெருவில் பெரும்பாலான வீடுகளில் வாசலில் அடுப்புக் கூட்டி வைத்து மண்பானையில் பொங்கலிடுவது தான் வழக்கம். அதில் நாங்களும் கலந்து கொள்வோம். வாசலில் பெரிதாகக் கோலமிட்டு சில நாட்கள் முன்னால் வீட்டில் இருக்கும் ஆண்களே மண்ணைக் குழைத்து வடிவமைத்த மூன்று உருளைகள் தான் அடுப்பு. அந்த மண் அடுப்புக்கும் வெள்ளையும் காவியும் அடித்திருப்பார்கள். விறகு எப்போதும் வீட்டிலிருக்கும். இது தவிர விளக்கேற்றி வைத்து கரும்பு, பூ பழம் வைத்து ஒரு சுளகில் (முறம்) பனங்கிழங்கு, சீனிக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சிறு கிழங்கு என அந்தப் பருவத்தில் கிடைக்கும் கிழங்கு வகைகளையும் படைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும்போது குலவையிட்டுக் கொண்டாடுவார்கள். குலவையிடுவது என்பது தற்போது அநேகமாக வழக்கொழிந்து போய் விட்டது. (திராவிடக் கலாசாரமான குலவையிடும் வழக்கம் ஒரிஸ்ஸாவிலும் இருப்பது ஒரு ஆச்சரியமான விஷயம்). சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்லி சூடம் காட்டிக் கும்பிடுவார்கள். அப்போது தவிர நாங்கள் பொங்கலோ பொங்கல் என்று கத்துவோம். அன்று மதியம் எல்லார் வீட்டிலும் பொங்கல், மூன்று வகைக் காய்களோடு விருந்து என்று அமர்க்களப் படும். அதைத் திணறச் சாப்பிட்டு விட்டு நல்ல மதியத்தில் ஏதாவது ஒரு வீட்டு வாசலில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்போம். அந்த நேர இன்பம் தவிர வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லையென்று தோன்றும் பருவமது.

மறு நாள் இன்னும் ஜோராக இருக்கும். எங்களுக்குத் தெரிந்தவர் வீட்டு மாடுகளுக்கெல்லாம் (அது கன்றுக்குட்டியாக இருந்தாலும் கூட) கொம்பில் கரும்பு, பனங்கிழங்கு மஞ்சள் கட்டி அந்த வீட்டுக்காரரின் வசதிற்கேற்ப 50 காசு முதல் 5 ரூபாய் வரை வைப்பார்கள். எங்கள் அண்ணன்மார்களெல்லாம் அந்த மாடுகளைப் பிடிக்க அலைவார்கள். எல்லாமே பழகிய மாடுகள். ஜல்லிக்கட்டு போல ஆக்ரோஷமாக எல்லாம் இருக்காது. அவை பாட்டுக்கு வைக்கோல் தின்று கொண்டு சிவனே என்றிருக்கும். எந்த மாட்டை யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்கள் அதன் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பொருட்களை எளிதாக எடுத்துக் கொள்வார்கள். என் அண்ணனுக்கு எப்படியும் ஒரு ரூபாயாவது கிடைத்து விடும். அதை வைத்து எங்களுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பார்கள்.

சில விளையாட்டுப் புத்தியுள்ள கன்றுக்குட்டிகள் கொம்பைத் தொட விடாமல் துள்ளித் துள்ளி ஓடும். அவைகளைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அவைகளை மெதுவாகத் தாஜா பண்ணி கொம்பிலுள்ளதை எடுத்து விடுவார்கள். யாருக்கும் எந்த ஆபத்துமில்லாத அருமையான விளையாட்டு. அன்று நாங்கள் முதல் நீள் மீந்து போன பொங்கலையும், அன்று செய்த இட்லிகளையும் பசுக்களுக்குக் கொடுப்போம். தாய்மார்கள் அன்று பசுவை அழகாகக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து கொம்பில் பூ வைத்து அதற்குப் பூஜை செய்வார்கள்.

இப்படிப் பொங்கல் தினங்கள் பறந்து போனதே தெரியாமல்  போய்விடும். இன்று கிராமத்திலும் கூட இந்தப் பழக்கங்கள் அருகி வருகின்றன. பொங்கல் படி என்று சொல்லப்படும் பொங்கல் சீர் கொடுக்கவென கரும்புகளும் , கிழங்கு காய்களும் சுமந்த வண்டிகள் இப்போது சாலைகளை நிறைப்பதில்லை. பதிலாக எல்லாரும் அவரவர் வீடுகளில் மூழ்கி இருக்கின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் டிவி என்ற பெரிய போதைக்கு அடிமையாகி நாள் முழுக்க அதைப் பார்ப்பதிலேயே செலவிடுகிறார்கள். தொலைக்காட்சிச் சேனல்களும்  போட்டி போட்டுக் கொண்டு முன்னணி நடிகரின் பேட்டி, புதுப்படப் பாட்டு, நடிகைகளின் குலுக்கல் ஆட்டம், உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாகத் திரையிடப் படும் ஏதோ ஒரு படம் என்று இளைஞர்களைக் கவர என்று நிகழ்ச்சிகளை அள்ளி வீசுகின்றன. அவைகளுக்கு எந்த விதமான சமூகப் பொறுப்போ, கடமையுணர்ச்சியோ இருப்பதில்லை. பணம் பண்ணுவது மட்டுமே அவைகளின் குறிக்கோள். இதில் யாரும் விதி விலக்கு இல்லை.

இந்தச் சூழ்நிலையில் வளரும் நம் இளைய தலைமுறையினர் எப்படி உண்மையான பொங்கல் பண்டிகை பற்றியும் அதன் கொண்டாட்டங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்? கூடுமானவரை பெற்றோர் தம் குழந்தைகளுக்குப் பொங்கலின் உண்மையான பக்கத்தை அறிமுகப் படுத்தலாம். கிராமத்தில் இன்னும் தம் வேர்களை வைத்திருக்கும் நகர வாசிகள் குழந்தைகளை அங்கு அழைத்துச் சென்று குடும்பத்தினரோடும் ஊராரோடும் ஒன்றாகப் பொங்கலைக் கொண்டாடலாம். அப்படி இல்லாதவர்கள் பொங்கல் என்பது இப்படித்தான் கொண்டாடப்பட வேண்டும் என்று எடுத்துக் கூறி கூடுமானவரை அவ்வாறே கொண்டாட முயற்சி செய்யலாம்.

இந்தப் பொங்கலில் நம் அனைவரின் வீட்டிலும் செல்வமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்.  உண்மையான இன்பம் நம் இல்லங்களில் நிறைந்திருக்கட்டும்.

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

படத்திற்கு நன்றி: http://www.travelindia-guide.com/festivals_holidays/pongal.php

2 thoughts on “பொங்கும் நினைவுகள்

 1. Interesting article about the Pongal Festival in Villages celebrated nearly 20 years back. Nowadays even the village scenario is changing and people prefer to stay indoor rather than coming and celebrating in groups together.

 2. Dear Madam,

  Good article and interesting one. Now-a-days people are celebrating ‘cooker pongal’ only instead of ‘Pot Pongal’. Those who live in village can celebrate very well and who live in cities can celebrate by watching TV only. Your aritcle shows how they are celebrating pongal in villages. The joyness and happiness can not be expressed in words.

  Thanks a lot

  “WISH YOU A HAPPY BOGI PONGAL, THAI PONGAL , MATTU PONGAL & KANUM PONGAL”

  Your Beloved Readers

  Trichy Sridharan &

  Srirangam SaradhaSridharan &

  Chromepet Brothers Master Siva sankaran & Master Srivatsan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *