எதிர்கால இந்தியாவும் பண்பாட்டுப் பிரித்தறிதலும்

0

அருண் காந்தி

“India conquered and dominated China culturally for 20 centuries without ever having to send a single soldier across her border!”
~ Hu Shih (former Ambassador of China to USA)

இது பண்பாட்டுச் சீரழிவைப் பற்றியதல்ல – திரிபைப் பற்றியது. திரிபு அழிவை விட மோசமானது.

அடிமையின் மோகம் / உலகமயமாக்கலின் உபரி/மேற்கீர்ப்பு விசையின் செறிவு என எதைக் காரணமாகச் சொன்னாலும் சரி நம்முடைய வாழ்வானது ஒட்டுமொத்த உலகிற்கும் பொதுவான ஒரு வாழ்க்கை முறைக்கு மெல்ல மெல்ல அதே வேளை நிரந்தரமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.அந்நியர்கள் நம்மை அடிமைப் படுத்துகின்றனர் என வருந்தி நாம் மீட்டெடுத்த சுதந்திரத்தை நாம் நம் கையில் எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் தாராளமாக அவர்களிடமே கொடுத்திருக்கிறோம்.சில நேரம் குழந்தையின் கையில் இருக்கும் பொருளைக் கேட்டால் அது அடம் பிடிக்கும். நாம் வேண்டாம் என்று திரும்பிக் கொண்டால் அது தானே வந்து நம் கையில் கொடுக்குமே அதைப் போல!

முதலில் நம் காலநிலையையும் தாண்டி அவர்களின் உடை நம்மை ஈர்த்தது. வாய் மொழியும், உண்ணும் உணவும்,ஸ்டைலாக கையில் ஏந்தும் காப்பியும், மதுக் கோப்பையும் இனித்தது. பின் இசை, ரசனையின் திசை மாறியது. நம்முடைய சில கட்டுக் கோப்புகளைக் கேலியாகவும் கேளிக்கையாகவும் கடைவிரித்துக் காட்டும் அவர்களின் வாழ்க்கை முறை நம் வாழ்வில் எளிமை சேர்த்தது. அக்காலம் தொட்டு இன்று வரை அவற்றின் மீது ஏற்பட்ட ஈடுபாடும் ஒருவித ஏக்கப் பார்வையும் நம்மை வெகுவாக மாற்றிவிட்டது. இந்தத் திரிபு நிலைக்கு நம்முடைய பொருளாதாரப் பிந்துதலும் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி நிலையும் இது நாள் வரை எப்படி ஏதுவானதோ அதே போல சற்று முட்டுக் கட்டையாகவும் இருந்து வந்தது. ஆனால் இன்றைய நிலை வேறு. இன்று நாம் கிரீசுக்கு பெயில் அவுட் செய்யும் (உள்ளூர் விவசாயிகள் செத்தாலும் செய்வதுதான் வல்லரசின் அடையாளம்!) அளவிற்கு வளர்ந்திருக்கிறோம். 2011 மாண்டில் உலகிலேயே அதிகளவு தங்கத்தை (960 tonnes approx.) இறக்குமதி செய்த நாடு இந்தியா. நம் கிராமத்துப் பெண்கள் களை பறித்த, நடவு நட்ட காசுகளும் பத்திரமாக நகைப் படுத்தப்பட்டிருக்கின்றன! இந்தக் கெட்டிக்காரத்தனத்தால் இன்றைய நலிந்த உலகம் நம்மை விரும்புகிறது. அவர்களின் விற்பனைக்கு இடம் தேடுகிறது (மறுபடியுமா!). அதற்கேற்றார் போல் இன்றைய ஆளும் அரசும் சிறு தொழிலில் அந்நிய முதலீட்டை ஆதரிக்கிறது. இதற்கு வழி வகுக்கும் நடவடிக்கை தான் நாம் நெடுங்காலமாக ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த உலகளாவிய அங்கீகாரம். நம்மைக் குஷிப்படுத்தவும் குளிர்ச்சியூட்டவும் விலையாக. ஆனால் அந்த அங்கீகாரத்தின் பின்னே நாம் நம் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் காவு கொடுப்பதை யாரும் கவனிப்பதில்லை.

ஒரு முறை பெற்ற ஆஸ்கார் ரகுமானை தமிழிசை உலகிலிருந்து தொலைவே கொண்டு சென்றுவிட்டது.(நல்ல வேளை இசை ஞானிக்கு குடுக்கல!)

ஒரு கொலைவெறிப் பாடல் ஏற்படுத்திய அதிர்வு இன்னும் எத்தனை கொலை வெறிஞர்களை உருவாக்கப் போகிறதென்று தெரியவில்லை!

ஆக நாம் தனித்து நின்ற கலை இலக்கியமும் இனிவரும் காலத்தில் பிரித்தறிய முடியாததாக மாறிப் போகும் அபாயம் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் நமக்குத் திருக்குறளை தமிழில் தான் விட்டுச் சென்றார். அது இன்று உலகப் பொதுமறையானது.அப்படி நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? திருக்குறளின் ஆங்கிலப் பதிப்பையா?

இப்படி எல்லாவற்றிலும் மேற்கைப் பேணத் துடிக்கும் நாம் நம்மை அடுத்த 100 ஆண்டுகளில் தோற்றத்தைத் தவிர வேறு எதை வைத்துப் பிரித்தறிய முடியும்? கண்டிப்பாக பண்பாட்டுப் பிரித்தறிதல் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கும். அந்நாளில் நம்முடைய உண்மையான பண்பாட்டு முறை என்பது வெறும் காகிதக் கறிவேப்பிலையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை!

படத்திற்கு நன்றி

http://www.southdreamz.com/2011/12/kolaveri-turns-dhanush-into-indias-most-wanted-man.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *