ஆவ்சம் அமெரிக்கா

3

செல்வன்

அமெரிக்கா, சுதந்திரத்தைத் தேடி வந்தவர்களால் உருவான நாடு. அந்நாட்டின் அரசியல், பொருளாதார வரலாற்றிலிருந்து மற்ற நாடுகள் கற்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவற்றை முடிந்தவரை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

அமெரிக்கா அடிப்படையில் சுதந்திரம் நாடி வந்த மக்களால் உருவான நாடு. ஐரோப்பாவில் வசித்து வந்த சிறுபான்மை புராட்டஸ்டெண்டு கிறிஸ்தவர்கள் அங்கே நிலவிய கத்தோலிக்க அரசுகளின் சர்வாதிகாரம் தாங்க முடியாமல் தம் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவில் குடியேறினார்கள். புராட்டஸ்டண்டு பிரிட்டன் அரசின் காலனியாக அமெரிக்க மாநிலங்கள் இருந்தபோதும் அவை பெயரளவுக்கே பிரிட்டிஷ் அரசின் காலனிகளாக இருந்தன. அந்த உரிமையைப் பறிக்கும் வகையில் அமெரிக்க மக்கள் பிரிட்டிஷ் அரசுக்கு வரிசெலுத்த வேண்டும் என ஒரு சட்டத்தைப் பிரிட்டன் கொண்டுவந்தது. அமெரிக்க மக்கள் பெருமளவில் அருந்தி வந்த தேயிலைக்கு வரி விதித்ததன் மூலம் காலனி மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தது பிரிட்டன்.

(பாஸ்டன் டீ பார்ட்டி)

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தங்களுக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் இல்லாதபோது பிரிட்டனுக்குத் தாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும் எனக் கேட்டு பாஸ்டன் டீ பார்ட்டி மூலம் சுதந்திரப் போருக்கு வித்திட்டனர் அமெரிக்கர்கள்.அமெரிக்க அரசியல் பொருளாதார வரலாற்றை இந்த நிகழ்வு மூலம் விளக்க இயலும். அதாவது அமெரிக்க மக்கள் விரும்பியது அதிகாரம் குறைந்த மக்களை கட்டுப்படுத்தாத சிறிய அரசை மட்டுமே. அரசின் அதிகாரம் உயர உயர மக்களின் அதிகாரம் குறையும் என்பதை அவர்கள் அறிந்தே இருந்தனர். பின்னாட்களில் தாமே தேர்ந்தெடுத்த அமெரிக்கக் குடியரசின் பெடெரல் அரசின் (மத்திய அரசு) அதிகாரம் அதிகரித்தபோது கூட அதை எதிர்த்து அமெரிக்கர்கள் போராடியதும் இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே. அரசுக்கு அளவற்ற அதிகாரம் அளித்த சோஷலிச ஆட்சி முறையை அமெரிக்கர்கள் எதிர்த்ததையும், ஹிட்லர், முசோலினி உட்பட பல சர்வாதிகாரிகளை அவர்கள் போராடி வீழ்த்தியதும் இதன் அடிப்படையிலேயே.

அமெரிக்கக் காலனிகளில் வசித்த மக்கள் விரும்பியது அதிகாரம் குறைந்த அதே சமயம் தமக்குப் பாதுகாப்பை அளிக்கும் ஒரு அரசை மட்டுமே. இப்போது இருப்பது போன்ற மிகப்பெரும் அரசுத் துறைகளைக் கொண்டதாகவும், அதிக எண்ணிகையில் அரசு ஊழியர்களைக் கொண்டதாகவும், அதிக வரிகள், அதிக விதி முறைகளைக் கொணடதாகவும் இருக்கும் தற்கால அரசுகளைக் கூட அவர்கள் விரும்பவில்லை.அவர்கள் விரும்பியது சிறிய, வலு குறைந்த பெடெரல் அரசை. சுதந்திரப் போரில் வென்ற பிறகு மத்திய அரசின் அதிகாரங்கள் குறைவாகவும் மாநில அரசுகளின் அதிகாரம் அதிகமாகவும் இருக்கும் அரசை அவர்களின் தேசத்தந்தைகள் நிறுவினர். மக்களுக்கு நெருக்கமான மாநில அரசு, பஞ்சாயத்து அமைப்புகள் போன்றவற்றுக்கு அதிக அதிகாரமும் மக்களுக்கு தொலைவில் உள்ள பெடெரல் அரசின் அதிகாரம் குறைவாகவும் இருக்கும் வண்ணம் அமெரிக்க அரசியல் சட்டம் உருவாக்கபட்டது.

அரசின் அதிகாரத்தை குறைப்பதில் அரசியல் சட்டத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. ரேகன் குறிப்பிட்டது போல “அரசின் அதிகாரம் வரம்பற்றது. அதற்கு வரைமுறை விதிக்கவே அரசியல் சட்டம் உருவாக்கபட்டது”. அரசியல்வாதிகள் தம் அதிகாரத்தை அதிகரிக்கவே விரும்புவார்கள். அவர்கள் அதிகாரம் அதிகரிக்க அதிகரிக்க மக்களின் அதிகாரம் குறையும். இதைத் தடுக்க அமெரிக்க அரசியல் சட்டம் மக்களுக்கு கீழ்க்காணும் உரிமைகளை வழங்கியது.

1) முழு அளவிலான பேச்சுரிமையை மக்களுக்கு வழங்கும் முதலாவது சட்ட திருத்தம். இதன்படி மக்களின் பேச்சுரிமையை எதுவும் தடுக்க முடியாது என ஆனது. இந்தப் பேச்சுரிமையே பத்திரிக்கை சுதந்திரம், அரசியல் கட்சிகள் உருவாக்கம் முதலிய பலவற்றுக்கும் அடிப்படையாக அமைந்தது.

2) ஆயுதம் தாங்கும் உரிமை. ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளாக மக்களுக்கு ஆயுதம் தாங்கும் உரிமை இருந்தது. பிரிட்டிஷ் அரசில் மன்னனின் படைவீரர்கள் மக்களை அடிக்கடிக் கொள்ளையடிப்பது வழக்கமாக இருந்ததால் தம்மைக் காத்துக் கொள்ள துப்பாக்கி, வாள் போன்ற ஆயுதங்களை ஏந்த பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றம் அதிகாரம் அளித்திருந்தது. அமெரிக்கக் காலனி மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததால் அவர்களுக்கும் அந்த உரிமை இருந்தது. அந்த உரிமையை அமெரிக்க அரசியல் சட்டம் உறுதி செய்து “ஆயுதம் ஏந்துவது மக்களின் அடிப்படை உரிமை” என பிரகடனம் செய்தது. இதன் மூலம் ஆயுதம் தாங்குவது அரசுக்கு மாத்திரமே ஏகபோக உரிமை என்ற கருத்து மறுக்கபட்டது. ஆயுதம் ஏந்திய மக்களை எந்த அரசாலும் அடக்கி ஆள்வதோ, அடிமைப்படுத்துவதோ இயலாது அல்லவா? ஆக முதலாவது சட்டதிருத்தத்தில் பேச்சுரிமையும் இரண்டாவது சட்டதிருத்தத்தில் அதைக் காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்தும் உரிமையும் மக்களுக்கே வழங்கப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால் “இதோ உன் சுதந்திரம். அதைக் காக்க இதோ உனக்கு ஆயுதம்” என மக்களுக்குச் சுதந்திரத்தையும், அதைக் காக்க வலிமையையும் வழங்கினார் அமெரிக்கத் தேசத்தந்தை ஜார்ஜ் வாஷிங்டன்.
மக்களின் அதிகாரத்தின் மூலம் எது? மக்களுக்கான உரிமைகளின் மூலம் எது என்பதையும் அமெரிக்க அரசியல் சட்டம் விளக்கியது. கடவுளே மக்களுக்கான அனைத்து அதிகாரங்களின், உரிமையின் மூலம். அமெரிக்கக் குடியரசின் தலைவர் ஜனாதிபதி அல்ல. உலகம் முழுவதையும் படைத்த ஆண்டவனே அதன் தலைவர். அவர் தம் பிள்ளைகளுக்கு “உயிர் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியாக இருத்தல்” ஆகிய உரிமைகளை வழங்கியதாக அமெரிக்க அரசியல் சட்டம் குறிப்பிட்டு கடவுள் அளித்த இந்த உரிமைகளைக் காக்கவே அரசு! அவற்றை மக்களிடமிருந்து அரசால் ஒரு பொழுதும் பறிக்க இயலாது என்றும் தெரிவித்தது. அதனால் தான் இன்றும் அமெரிக்கர்கள் தம் நாட்டை “One nation under god” (கடவுளின் ஆட்சியின் கீழ் அமைந்த தேசம்) எனக் குறிப்பிடுகின்றனர். கடவுளை ஆட்சிபொறுப்பில் இருந்து அகற்றிவிட்டு அரசை கடவுளாக்கிய கம்யூனிசத்தை அவர்கள் நிராகரிக்கக் காரணமாக அமைந்ததும் இதுவே.கடவுள் தமக்கு வழங்கிய சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியாக இருத்தல் ஆகிய உரிமைகளை கம்யூனிசம் அல்லது வலுவான மத்திய அரசு பறிக்கும் என அவர்கள் நம்பினர். மகிழ்ச்சியாக இருக்க செல்வம் சேர்ப்பது முக்கியம். செல்வம் சேர்க்கச் சுதந்திரமாக இருப்பது முக்கியம். இதற்குக் குறைவான அதிகாரம் கொண்ட அரசு அமைவது முக்கியம். அந்த அரசு வலுவான ராணுவத்தைக் கொண்டிருப்பதும் முக்கியம்.

அமெரிக்கத் தேசத்தந்தைகள் கடவுளை நம்பினாலும் தம் நாடு மத சுதந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவே விரும்பினர். இல்லாவிட்டால் அமெரிக்கா மதவாத நாடாகிவிடும். மதவாத நாடானால் சுதந்திரம் பறி போகும். அதனால் அமெரிக்க அரசியல் சட்டம் “அமெரிக்க அரசு எந்த மதத்தையும் நிறுவக்கூடாது” என தெளிவாகக் குறிப்பிடுகிறது. புராட்டஸ்டண்டுகள், கத்தோலிக்கர்கள், கால்வினிஸ்டுகள், யூதர்கள், மெதடிஸ்டுகள் எனப் பலப் பிரிவுகள், பல நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் வசித்த நாட்டில் இத்தகைய மதம்சாரா கொள்கை மக்களுக்கு வழிபாட்டுரிமையை உறுதி செய்தது.

அந்தக் குடியரசின் பின்னாளைய வரலாறு, அதன் போர்கள், அதன் அரசியல் பொருளாதார கொள்கைகள் அனைத்தையும் இப்படி அதன் அரசியல் சட்டத்திலிருந்தும், அதன் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப் பட்டவர்கள்” என்ற அரசியல் சட்ட வாசகமே பின்னாளில் ஆபிரகாம் லிங்கனை கருப்பர்களின் விடுதலைக்கு ஒரு மிகப்பெரும் உள்நாட்டுப் போரை நிகழ்த்தும் உத்வேகத்தை அளித்தது. “மகிழ்ச்சியாக வாழ்தல்” எனும் உரிமையே பின்னாட்களில் அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளுக்கும், அதன் செல்வ வளத்துக்கும் சுதந்திரப் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் கம்யூனிச்த்துக்கு எதிரான அதன் போருக்கு அடிப்படையாகவும் அமைந்தது. முதலாவது சட்டத்திருத்தமே தனிமனித உரிமைகள் அனைத்துக்கும், பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் அடிப்படையாக அமைந்தது.

விடுதலையை விரும்பும் ஒவ்வொரு மக்கள் சமூகத்துக்கும் அமெரிக்கச் சமூகமும் அதன் மகத்தான அரசியல் சட்டமும் ஆதர்சம். மானிட விடுதலையை வலியுறுத்திய மிகப்பெரும் பிரகடனமாக அமெரிக்க அரசியல் சட்டம் திகழ்கிறது. காரணம் அது சுதந்திரத்தை விரும்பிய மனிதர்களால் தம் சுதந்திரத்தை காத்துக்கொள்ள எழுதப்பட்ட பிரகடனம். அதை அறிவதன் மூலம் ஒரு சமூகம் சுதந்திரத்தை நோக்கி எந்தக் கொள்கைகளுடன் பயணித்தது என்ற வரலாற்றை முழுவதும் அறியலாம்.

3 thoughts on “ஆவ்சம் அமெரிக்கா

 1. ஐயா செல்வன் அவர்களுக்கு வணக்கம்.
  அமெரிக்காவைப்பற்றி மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறியுள்ளீர்கள். உலகமே அமெரிக்கா போல் வாழ்ந்த்தால் என்ன என்று தோன்றுகிறது?

  “விடுதலையை விரும்பும் ஒவ்வொரு மக்கள் சமூகத்துக்கும் அமெரிக்கச் சமூகமும் அதன் மகத்தான அரசியல் சட்டமும் ஆதர்சம். மானிட விடுதலையை வலியுறுத்திய மிகப்பெரும் பிரகடனமாக அமெரிக்க அரசியல் சட்டம் திகழ்கிறது. காரணம் அது சுதந்திரத்தை விரும்பிய மனிதர்களால் தம் சுதந்திரத்தை காத்துக்கொள்ள எழுதப்பட்ட பிரகடனம்.”

  ஆனால், அமெரிக்காவை விட இந்தியாவே சிறந்த சுதந்திர நாடு ஆகும்.
  இங்குதான் யார்வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்.
  அமெரிக்காவில் அது முடியாதே?
  அரசியல் சுதந்திரம் இல்லாதா நாடு அமெரிக்கா!
  எல்லா சுதந்திரங்களும் உள்ள ஒரே நாடு இந்தியா மட்டுமே.

  அன்பன்
  கி.காளைராசன்

 2. இந்த கட்டுரையை வரவேற்கிறேன், சில விஷயங்களில் கருத்து வேற்றுமை இருந்தாலும். அமெரிக்காவிடமிருந்து நாம் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்: தகுதிக்கு மதிப்பு. அமெரிக்காவிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டாத பாடங்களும் உண்டு. அது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

 3. எளிய, விளக்கமான கட்டுரை. எல்லாவற்றையும்விட அந்தச் சின்ன பையனின் படம் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது. அப்புறம் … செல்வன் எப்போது சந்தையியலை விட்டுப் பொருளாதாரத் துறைக்கு மாறினாராம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *