சூரியனும் , சர்க்கரைப் பொங்கலும்!

0

காயத்ரி பாலசுப்பிரமணியன்

ஒளியின் நாயகனான சூரியன் மகர ராசியில் பிரவேசம் செய்கிறார் என்பதைக் குறிக்கும் விதமாகவே மகர சங்கராந்தி-தை பொங்கலாய் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று சூரியனை சிறப்பாக வழி படுகிறோம். சூரியன், இல்லையேல் உலகில் உயிர் ஏது? பயிர் ஏது? உலகில் எந்த செயலும் நடைபெறாது. நம் வாழ்விற்கு ஜீவாதாரமாக இருக்கும் கிரகமான சூரியனின் சிறப்பை உலகுக்கு அறிவிக்கவே, இந்தியா முழுவதும் பல பாகங்களிலும் பொங்கல் பல பெயரில் பல விழாக்களாக கொண்டாடப் படுகி ன்றன. அத்துடன் வழிகாட்டியாய் விளங்குபவர்தானே வழியைக் காட்ட முடியும்? 12 மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிப்பதுதான் சித்திரை, வைகாசி என்று வரும் 12 தமிழ் மாதங்களாக விளங்குகிறது.

உத்திராயணயத்தின் முதல் மாதமான தையின் வரவை அறிவிப்பது சூரியனின் சஞ்சாரம்தான். அதனால் தான் தை முதல்நாள் அன்று, சூரியனுக்கு, விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அன்று தலையாய இடம் பிடிப்பது பொங்கல். சூரியனுக்கு உரிய தானியம் கோதுமை. ஆனால் தை மாதம் ஏன் பொங்கல்? அதுவும் சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படுகிறது? அதில் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது! தட்சன் தன் மகள் தாட்சாயணியை சிவனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்திரு ந்ததால், பரமேஸ்வரன் தட்சனுக்கு மருமகன் முறை ஆகவேண்டு மல்லவா? அதனால் தனக்கு விசேஷ மரியாதை கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் ஒரு சமயம் தட்சன் கைலா யம் சென்ற போது, தேவாதி தேவர்கள், மற்றும் பிரமன், விஷ்ணு போன்றோர்களும் ஈசனைத் தரிசிக்க வந்திருந்தனர். அங்கு, தட்சனுக்கு விசேஷ மரியாதை கிட்டவில்லை. அதனால் தட்சன் பெரும் கோபம் கொண்டதுடன், ஈசன் தன்னை தேவர்களுக்கு நடுவே அவமதித்து விட்டதாக எண்ணி குமுறி, ஈசனைப் பழிக்குப் பழி வாங்க எண்ணம் கொண்டு ஒரு பெரிய யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தான். பழி வாங்குதலின் உச்சக் கட்டமாக, சிவனைத் தவிர, அனைவருக்கும் யாகத்திற்கான அழைப்பை விடுத்தான். ஒரு பக்கம் பயம் இருந்தாலும், தட்சனின் அழைப்பைத் தட்ட முடியாமல், அனைவரும் யாகத்தில் கலந்து கொள்ளச் சென்றனர். ஈஸ்வரனின் மனைவியான தாட்சாயிணியும், தன் தந்தை நடத் தும் யாகத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று இறைவனிடம் தன் ஆசையையைத் தெரிவித்தாள். அழையாத இடத்திற்கு போனால் அவமானமே மிஞ்சும் என்று சக்திக்கு அறிவுரை சொன்னார் ஈசன். ஆனால், ஈசனின் வார்த்தையைக் கேளாமல், தாட்சாயணி அங்கு சென்றாள். தட்சன், தாட்சாயணியிடம் பாராமுகமாக நடந்து கொண்டதுடன், ஈசனைப் பற்றியும், அவர் உடுத்தியிருக்கும் புலித்தோலாடை, பூசியிருக்கும் சாம்பல் ஆகியவற்றைப் பற்றியும் கேலி பேசினான். அப்பொழுது அங்கு கூடியிருந்த தேவர்கள் கலகல வென்று சிரித்தனர். முக்கியமாக சூரிய பகவான் பெருஞ்சிரிப்பு சிரித்தார்.

அவமானம் தாங்காத தாட்சாயணி, மீண்டும் ஈசனிடம் சென்று, நடந்ததை எடுத்து சொல்லி, மனம் குமுறியதோடு, தன்னுடைய யோக சக்தியால், அக்னியைத் தோற்றுவித்து அதில் தன் உடலைத் துறந்தாள். விஷயம் தெரிந்ததும் ஈசன் கோபமுற்று, தன்னுடைய அம்சமான வீர பத்திரனைத் தோற்றுவித்தார். அவரை நோக்கி “நீ யாகசாலைக்குச் சென்று, தேவியை அவமதித்தவரின் தலையைத் துண்டித்து எறிவதோடு, என்னை அவமதிப்பதற்காக செய்யப்பட்ட, அந்த யாகத்ததில் பங்கு கொண்ட அனைவரையும் சரியான முறையில் தண்டிப்பாயாக” என்று ஆணையிட்டார். உட னடியாக சாலைக்குச் சென்ற வீரபத்திரர் தேவர்களை நிலை குலையச் செய்ததுடன் அனைவரையும் ஓட, ஓட விரட்டி அடித் தார்.

சூரியனை நெருங்கிய வீரபத்திரர்’, ” தட்சன் ஈசனை நிந்தித்த போது இந்த வாய்தானே பெருஞ்சிரிப்பு சிரித்தது?” என்று கேட்டபடி ஓங்கி சூரிய பகவானின் கன்னத்தில் அறைந்தார். பொலபொல வென்று சூரிய பகவானின் பற்கள் அனைத்தும் கொட்டின! . விஷயம் விபரீதமாய்ப் போவதை அறிந்த பிரமன் ஓடி வந்து அனை வரையும் சமாதானம் செய்தார். பிறகு அனைவரும் ஈசனை வழிபட்டு, மன்னிப்பு வேண்டினர். மனமகிழ்ந்த ஈசன் அனைவருக்கும் அருள் பாலித்தார். ஆனால் சூரியன் விஷயத்தில் மட்டும் அவர் கோபம் ஆறவே இல்லை. இழந்த பற்களைத் திரும்பப் பெறுமாறு அனுக்கிரகம் செய்யவில்லை!
பல்லில்லாதவர் கடினமான உணவுப் பொருளை சாப்பிடுவது என்பது எளிய காரியம் இல்லையே!

பொங்கல் என்றால் உண்பதற்கு எளிமையாக இருக்கும். அதனால்தான் சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்கிறார்கள்! கதை ஒரு பக்கம் இருக்கட்டும். அதில் ஒரு மகத்தான உண்மையும் அடங்கியிரு க்கிறது! இந்தியாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும், அரிசி தான் பிரதான உணவாய் விளங்குகிறது. .மனிதனுக்கு அரிசியிலிருந்து தயாராகும் அன்னம் மிகவும் இன்றியமையாதது. அதுதான் நமக்கு பிராணனைக் கொடுப்பது. அதனால்தான் ‘அன்னமயா, பிராணமயா” என்ற சொற்றொடர் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. ஆகவேதான் பொங்கல் பண்டிகை அன்று, உணவு அளிக்கும் பயிர்கள் வளர, இன்றியமையாத சூரிய ஒளியை அளிக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, பொங்கலைப் படைத்து, அதனையே உண்டும் மகிழ்றோம்! இந்தப் பொங்கல் நன்னாளில், சூரியனை வழிபடுவோம்! சர்க்கரைப் பொங்கலை உண்போம்!

படத்திற்கு நன்றி : http://www.desicomments.com/desi/pongal/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *