தில் குல் க்யா ,கோட்கோட் போலா [thil gul gya ,goad goad bola]
விசாலம்
தலைப்பைப் பார்த்து குழம்பி விட்டதா? இதற்கும் மகர சங்கராந்திக்கும் சம்பந்தம் இருக்கிறது . என்வாழ்க்கையின் முதல் இருபது வருடங்கள் மும்பையில் தான் கழிந்தது அப்போது இந்தச் சங்கராந்தி தினத்தில் என்னை என் வீட்டு மாடியில் இருந்த திருமதி நளினி கேல்கர் மஞ்சள் குங்குமத்திற்கு அழைத்திருந்தார்.நான் அப்போது ” ஸ்வீட் சிக்ஸ்டீன்” என்னைத்தவிர ஐந்து சுமங்கலிகளும் அங்கு அமர்ந்திருந்தனர்.அந்த வீட்டின் தலைவி ஒன்பது கஜப்புடவையை அவர்கள் அணிவது போல் அணிந்துக்கொண்டு மூக்கில் ஒரு பெரிய முத்து வைத்த நத்துடன் வந்தாள் பின்தன் புடவைத்தலைப்பில் தேங்காய் வெற்றிலை, கொட்டைப்பாக்கு பழங்கள் வைத்து தன் புடவைத்தலைப்பின்நுனியைப்பிடித்தபடி எல்லோருக்கும் வழங்கினார்.
அதைப்பெற்றுக்கொள்பவர்களும் தங்கள் தலைப்பிலேயே வாங்கிக்கொண்டார்கள். பின் எள்ளுருண்டை சர்க்கரை மிட்டாயில் செய்த பலவிதமான பறவைகள் மிருகங்கள் {அச்சில் வார்த்தது] வழங்க’ப்பட்டன. இதைக்கொடுக்கும் போது அவர்கள் சொல்வது “தில் குல் கியா கோட் கோட் போலா” “thil gul gya goad goad bola “இதன் பொருள் எள்ளுருண்டை பெற்றுக்கொள் பின் இனிமையாக பேசு .இதன் உள்ளர்த்தம் எப்போதும் இனிமையான சொற்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும் என்பதுதான் எல்லோரும் இனிமையாகப்பேச அங்கு வெறுப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை.
கோபம் ஓடிப்போகும் இனிமைப்பேச்சினால் பரஸ்பர அன்பு பெருகும் இதனால் ஒற்றுமை ஏற்படும் .அன்புக்கு மட்டும் நாம் வாழ அன்பே கடவுள் என்ற உணர்வு ஏற்படும்
திருவள்ளுவர் சொன்னது என் ஞாபகத்தில் வருகிறது
‘அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் ‘
‘ அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலல் ஆகப்பெறின் ‘
இதே போல் தான் கன்னட மக்களும் “எள்ளு பெல்லாதிண்டு ஏல மாத்தாடு” என்கின்றனர்
நாம் வடக்கை நோக்கி நகர்ந்தால் நம்பொங்கல் பண்டிகை அங்கு மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது இன்றைய தினம் சூரியோதயம் முன் கண் விழித்து புண்ணிய நதிகளில் நீராடி முன்னோர்களுக்குத் திதி செய்து அவர்களின் ஆசிகளைப்பெறுகிறர்கள் அலஹாபாத் ஹரித்துவார் ரிஷிகேஷ் ,யமுனை ,போன்ற இடங்களில் கூட்டம் மாளாது. பின் சூரிய நமஸ்காரம் செய்து ஆதவனை வழிபடுகிறார்கள்
இன்றைய தினம் தானம் செய்வது மிகச்சிறப்பாகும் .அவரவர் வசதிப்படி பாத்திரதானம் .அன்னதானம் வஸ்திரதானம் பசு கன்றுடன் தானம் ,குதிரை ,தங்கம் என்று இது நடத்தப்படுகிறது
மராட்டியப் பெண்மணிகள் இன்றைய தினம் ஐந்து மண்சட்டிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு அவைகளை ஒரு நூலினால் சுற்றி உள்ளே கேரட் துண்டுகள் கரும்பு துண்டுகள் நிலக்கடலை பொட்டுக்கடலை எள் உருண்டை போன்றவைகளால் நிரப்பி ஒரு பலகையின் மேல் வைக்கிறார்கள் அதைச்சுற்றி பல வண்ணங்களில் ரங்கோலி என்ற கோலத்தைப்போட்டு அழகு படுத்துகிறார்கள் பின் அவைகளை பூஜித்தப்பின்னர் மூன்று சுமங்கலிகளுக்குக் கொடுத்து நமஸ்கரிக்கிறார்கள் நான்காவதை துளசி செடியில் வைத்து தனக்கென்று ஒன்று எடுத்துக்கொள்வார்கள்.
இந்த எள்தானம் பாபங்களைப்போக்கும் என்ற நம்பிக்கை பல மக்களிடம் உள்ளது சனிப் ப்ரீதியாக நல்லெண்ணை தானம் செய்வது உண்டு. வடக்கில் பொங்கல் நேரத்தில் குளிர் மிகக்கடுமையாக இருப்பதால் இந்த எள் வெல்லம் போன்றவைகள் முக்கியமான அம்சமாக இருக்கிறது. இவைகள் உடலுக்கு உஷ்ணத்தை அளிக்கும் .எள்ளை ஹோமத்தில் உபயோகிக்க தீயசக்திகள் நீங்கும் என்ற கருத்தும் உண்டு
கர்நாடகாவில் இந்த தினம் கால்நடைகளுக்காகவே ஸ்பெஷல் ! பசு, காளைகள் மிக அழகாக அலங்கரிக்கப்ப்ட்டு பேண்டு வாத்தியங்களுடன் ஊர்வலம் வருகின்றன ஆடுகளும் மந்தை மந்தையாக வலம் வருகின்றன அந்த ஊர்வலம் காண மக்களும் கூடுகின்றனராம் அவைகளுக்கென்று பொங்கல் தயாரித்து வாயில் ஊட்டியும் விடுகிறார்கள்.பின் அவைகள் சில வித்தைகளும் காட்ட பழக்கிவிடுகிறார்கள் அதில் நெருப்பைத்தாண்டி குதிக்கும் அம்சமும் உண்டு .
பஞ்சாபில் நாம் போகிப்பண்டிகை கொண்டாடுவது போல் லோஹ்ரி என்ற பெயரில் பஞ்சாபியர்கள் கொண்டடுகிறார்கள்.பல மரக்குச்சிகள் மரப்பலகைகள் குப்பை சத்தைகள் சேகரித்து இருள்சூழ்ந்தவுடன் அதை எரித்து அதில் எள்மிட்டாய் பாப்கார்ன் கரும்புத்துண்டுகள் போட்டு மகிழ்ந்து பாடுகிறார்கள் இத்துடன் பாங்கரா நடனமும் சேர்ந்து களைக்கட்டும் பாங்க்ரா நடனம் ஆடும் நபர்களின் லுங்கிகள் பல வண்ணங்களிலிருக்க கைகளிலும் வண்ணக்கைக்குட்டைகள் கட்டிக்கொண்டு ஆடுவதைப்பார்த்தால் நமக்கும் ஆடத்தோன்றும் அப்பப்பா அவர்களுக்கு எத்தனை எனர்ஜி என்று வியந்துப்போகிறேன்
பொங்கல் பல மாகாணங்களில் பலவிதமாக கொண்டாடப்பட்டாலும் விஷயம் ஒன்றுதான் அதுதான் விவசாயம் வளம் பெற வேண்டி நன்றியும் தெரிவிப்பது
இந்தியா விவசாயத்தை முக்கியமாகக் கொண்ட ஒரு நாடு சூரியன் இல்லை என்றால் தாவரங்கள் இல்லை /சூரியனுக்கு நன்றி சொல்லும் நாளாக இந்த சங்கராந்தி தினம் ஏற்பட்டிருக்கிறது. இன்றைய தினத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான பால் மங்களகரமாக மஞ்சள் இனிப்புக்கு கரும்பு அதிலிருந்து வரும் வெல்லம் அத்துடன் அரிசி எல்லாம் சேர்ந்து “பொங்கலோ பொங்கல்” ஆகி எங்கும் உற்சாகம் எங்கும் மகிழ்ச்சி தான்
விவசாயம் சம்பந்தப்பட்ட ஓர் ஆலயம் இந்த நேரத்தில் என் ஞாபகத்தில் வருகிறது
நம் தமிழ்நாட்டில் பயிர்கள் காக்க ஒரு ஆலயம் இருக்கிறது .இது சீர்காழி அருகில் மணல்மேடுஎன்ற இடத்தில் உள்ளது ஈச்வர சிருஷ்டியில் பல உயிர்கள் வாழ தாவரங்களையும்:சிருஷ்டி செய்து அவைகளைக்காக்கும் ஈச்வரனை நன்றியுடன் வழிப்பட்டு தங்கள் நிலங்களைக் காக்க வேண்டிக் கொள்ளும் விவசாயிகளையும் வியாபாரிகளையும் இந்தக்கோயிலில் காணலாம் அதுவும் பொங்கல் திருநாளில் கூட்டம் அதிகமாகிறது. இந்த ஆலயத்தின் பெயர் “புத்தமங்கலம் ஆலயம் ” இந்த இடம் முன்பு சதுர்வேதமங்கலம் என்று அழைக்கப்பட்டு வந்தது இந்த ஊரில் நுழையும் போதே எங்கும் பசுமையைக் காணமுடிகிறது பயிர்களின்வாசனை காற்றுடன் கலந்து எல்லோருக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது அருகே வாய்க்கால் சலசலக்கும் ஒலியுடன் ஒடுகிறது மாசு இல்லாத சூழ்நிலை .இங்குதான் அருள்மிகு கிருபாலநாதர் அமர்ந்து அருள் புரிகிறார்
அன்னை அபிராமசுந்தரி மஹாமண்டபத்தின் வலது பக்கம் கருணைக்கடாட்சத்துடன் தன் அருள்பார்வையை பகதர்கள் மீது வீசுகிறார்.சூரிய வழிபாடும் நடக்கிறது பகதர்கள் தாங்கள் பயிர் செய்யும் பயிர்கள் சேதமில்லாமல் நன்கு தழைத்து வளர பிரசாதம் வைத்து வேண்டிக் கொள்கின்றனர் இங்கு வேண்டிக் கொண்டால் பயிர்கள் காக்கப்பட்டு செழிப்பாக வளருவதையும் மக்கள் கண்டு மகிழ்கிறார்கள் பொங்கல் பண்டிகை சம்பந்தப்பட்ட இந்தக்கோயிலில் உற்சவமூர்த்திகள் இல்லை
கிருபால நாதர் இந்த இடம் முழுவதும் தன் அருள் பார்வையினால் காத்துவருவதாக இந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள் அவரே இந்த ஊரையும் காத்து வருவதாக சொல்கிறார்கள்.
அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள் பொங்கும் மங்களம் எங்கும் தங்குக
படங்களுக்கு நன்றி : http://en.wikipedia.org/wiki/Makar_Sankranti
http://www.punjabonline.com/servlet/entertain.entertain?Action=Intro