குமரி எஸ். நீலகண்டன்

வழக்கம் போல்

பொங்கல் வந்து விட்டது…

காய்கனிகளோடு

பொங்கல் பானையுடன்

கம்ப்யூட்டர் பத்தி

கமகமக்க

பக்தி மயமாய் பரவசமாய்

பொங்கல்.

 

குண்டு குண்டாய்

காய்கறிகள் வைக்கப் பட்டிருக்கின்றன

வாழை இலைக்குப்

பதிலாயிருந்த

பச்சைக் காகித இலையில்.

 

கரும்பு இருக்கிறது

அதே இனிப்புடன்.

ஆனால் அது

ஆதவனைக் காண

இன்னும் வளர வேண்டும்

பத்து மாடி உயரத்திற்கு.

 

கத்தரிக்காய் கண்ணைப்

பிய்க்கும் வண்ணத்தில்

காட்சி அளிக்கிறது.

அதன் மேல்

புண்ணிற்குச் சிறிய

பிளாஸ்டர் ஒட்டியது போல்

ஒரு ஸ்டிக்கர் வேறு.

பையன் கேட்டான்

“அப்பா அது செய்ததா

அல்லது விளைந்ததா” என்று.

விளக்குவதற்கு

விளங்கவில்லை எனக்கு.

 

“அந்தக் காலத்தில்

விளக்கின் முன்

நாழி நிறைய

நெல் வைப்பார்கள்”

என்றேன் பையனிடம்.

அவன் நெல்லென்றால்

எப்படி இருக்குமென்றான்.

நகரத்தில் தேடிக்

கிடைக்கவில்லை.

இனி கூகுளில் தேடிக்

காட்டிக் கொடுக்க

வேண்டும்.

 

மங்களமாய் மஞ்சளோடு

டூத் பேஸ்டைப் போல்

இஞ்சிக்குப் பதில்

இருந்தது இஞ்சி பேஸ்ட்

பொங்கலில் மங்கலாய்.

 

எல்லாவற்றிற்கும் பதிலாய்

ஏதோ ஒன்று இருந்தது.

ஒரு கிராமத்தைப் போல்

குருவி சத்தம் கேட்கிறது

அழைப்பு மணியில்.

எதற்காக எது இருந்தது

என அறியாமல்

எதற்காக நாம்

இருக்கிறோமெனத்

தெரியாமல் பொங்கலோப்

பொங்கலெனக் கூவிக்

கொண்டாடினர் பொங்கலை.

 

அறுவடை நாளாம் இன்று.

எதை அறுவடை செய்தார்கள்.

 

படத்திற்கு நன்றி: http://www.facebook.com/pages/Thai-Pongal/106740219382?sk=photos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *