புவனா கோவிந்த்

“ப்ரியா செல்லம், எந்திரிம்மா. டைமாச்சு” என்ற அவள் அம்மா கவிதாவின் கொஞ்சல் குரலில், “ஹும்ஹும்…” என மழலையில் சிணுங்கினாள் ப்ரியா.

“ப்ரியா…” என அதட்டலாய் உலுக்கி எழுப்பி, பிள்ளையின் கை கால் உதறலைப் பொருட்படுத்தாது, தூக்கிச் சென்று குளிக்கச் செய்து மீண்டும் அறைக்குள் தூக்கி வந்தாள் அவள் அம்மா.

“எனக்கு இந்த டிரஸ் வேணா” எனப் ப்ரியா அவள் அம்மாவின் கையில் இருந்த உடையைத் தட்டி விட,

அதே நேரம் “கவிதா… மணி ஆறே முக்காலாச்சு… ஏழரைக்குக் கெளம்பினாத் தான் ப்ரியாவ டேகேர்ல விட்டுட்டுப் போக கரெக்டா இருக்கும்… Hurry up” எனக் கீழறையில் இருந்து குரல் வர,

“அங்க நின்னுட்டுக் கத்தற நேரம் இங்க வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல… உக்காந்துட்டே அதிகாரம் பண்ணுங்க” என்றாள் எரிச்சலாய்.

“நான் உக்காந்துட்டு அதிகாரம் பண்றேன்… நீ நின்னுட்டுப் பணிவாப் பேசறியோ?” எனக் கேலியாய்க் கேட்டபடி பிரவீன் படி ஏறி வர,

“பிங்க் ட்ரெஸ் பிங்க் டிரஸ் பிங்க் டிரஸ்” என ப்ரியா கத்தியபடி குதிக்க,

“ரெண்டு வயசுக்கு இவ்ளோ பிடிவாதம் ஆகாதுடீ… அப்படியே அப்பனுக்குத் தப்பாமப் பொறந்திருக்கு” என முணுமுணுத்தாள்

“திட்டரதுன்னா நேரா திட்டு… ஏண்டி என் செல்லத்தச் சாக்கா வெச்சுட்டு திட்ற” என்றபடி அறைக்குள் நுழைந்தவன் பொய் கோபத்துடன் மனைவியை முறைத்து விட்டு “நீ வாடி செல்லம்.. உனக்கு எந்த டிரஸ் வேணுமோ சொல்லு, டாடி போட்டு விடறேன்” என மகளை தூக்கிக் கொண்டான்.

“ஐ லவ் யு டாடி” என மகள் அன்பாய் தந்தையின் கன்னத்தில் இதழ் பதிக்க,

மனம் நெகிழ “ஐ லவ் யு டூ ஸ்வீட்ஹார்ட்” என பிள்ளையை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான் பிரவீன்.

“கொஞ்சினது போதும்… சீக்கரம் டிரஸ் பண்ணிக் கூட்டிட்டு வாங்க…” என கவிதா கூற,

“உன் மம்மிக்குப் பொறாம, உன்னை மட்டும் கொஞ்சறேன்னு” என பிரவீன் கூற, வெளிய செல்லத் திரும்பிய கவிதா திரும்பி அவனை முறைத்தாள், பிரவீன் மனைவியின் கோபத்தை ரசித்தபடி கண் சிமிட்டி முறுவலித்தான்.

“மம்மிக்கு பொறாம” எனத் தந்தை கூறியதையே ப்ரியாவும் மழலையில் கூற, கவிதா சிரித்து விட்டாள்.

சிறிது நேரத்தில் பிரவீன் மகளுடன் தயாராய் வர, “பிரவீன், ப்ரியாவ ஹை-ஷேர்ல உக்கார வெச்சுட்டு அவ ஷூ சாக்ஸ் எல்லாம் கொஞ்சம் எடுத்து வெயுங்க சீக்கரம்” எனப் பரபரப்புடன் கையில் உணவுக் கிண்ணத்துடன் வந்தாள் கவிதா. சொன்னபடி மகளை அமரச் செய்து விட்டு முன்னறைக்குச் சென்றான் பிரவீன்.

“ம்… இந்தா…” என ஸ்பூனை அருகே கொண்டு செல்ல, தலையை இடமும் வலமும் அசைத்தபடி “ஐ வான்ட் நூடுல்ஸ்” என்றது குழந்தை.

“ப்ரியா… ஒழுங்கா வாய தெற” என அதட்டியபடி வாயில் திணித்தாள் கவிதா. அடுத்த நொடி ப்ரியா முகம் சுளித்துத் துப்ப, தன்னை மீறிய கோபத்தில் பிள்ளையின் முதுகில் ஓங்கி அடித்தாள் கவிதா.

ப்ரியா பெருங்குரலெடுத்து அழத் தொடங்க, சத்தம் கேட்டு உள்ளே வந்த பிரவீன் “என்னடா கண்ணா? ஏன் அழற?” என மகளை அணைக்க,

“ம…மம்மி… பீட் மீ…” எனத் தேம்பலுடன் கூறினாள்.

“அத மட்டும் சொல்லு… ஏன் அடிச்சேன்னு சொல்லிடாத?” என்றாள் கவிதா கோபமாய்.

“என்ன கவிதா இது? எத்தன வாட்டி சொல்றது உனக்கு, காலைல நேரத்துல அவள அழ வெக்காதனு” என்றான் சற்றே கோபமாய்.

“எனக்கு அவள அழ வெக்கணும்னு ரெம்ப ஆசை பாருங்க” என்றாள் எரிச்சலாய்.

“இப்ப என்ன பிரச்சன?” என்றான்.

“நூடுல்ஸ் தான் வேணுமாம். இது சாப்பிட மாட்டாளாம்”.

“அவளுக்கு பிடிச்சத குடுக்க வேண்டியது தான”.

“அவ சொல்றபடியெல்லாம் ஆடிட்டே இருந்தா இன்னும் அதிகமா சொன்ன பேச்சு கேக்காம தான் அடம் பிடிப்பா”

“உன் புத்தி கொஞ்சமாச்சும் நம்ம பொண்ணுக்கும் இருக்குமல்ல” என கேலியாய் கூற,

கவிதா இருந்த மனநிலையில் அவன் கேலி கோபத்தைத் தூண்ட “ஆமா… எல்லாத் தப்பும் என்னோடது தான்” எனக் கோபமாய்க் கூறியவள் அவனைத் தவிர்த்து உள்ளே சென்றாள்.

ப்ரியாவைச் சமாதானம் செய்ய அவள் கேட்டபடி ஒரு குக்கியை(பிஸ்கட்) அவள் கையில் கொடுத்து விட்டு மனைவியை நோக்கிச் சென்றான் பிரவீன்.

நூடுல்ஸ் செய்து கொண்டிருந்தவள் அவன் உள்ளே வந்ததை உணர்ந்தும் கண்டும் காணாதது போல் மௌனமாய் இருந்தாள்.

“ஏய்… கோவமா?” என அவளை அணைத்தபடி கேட்க, அவள் பதில் சொல்லாமல் அவன் கையைத் தட்டி விட்டாள்.

“என்ன கவி இது? இதுக்கு போய் டென்சன் ஆகற. ப்ரியா அழறத பாத்தா மூட் அவுட் ஆய்டுதுடா. அதான் அவ கேக்கறதையே குடுக்கலாமேனு சொன்னேன். இன்னும் கோபம்னா சாரி” என்றான்.

“கோபமெல்லாம் இல்ல… நீங்க ரெம்ப செல்லம் குடுத்து அவளக் கெடுக்கறீங்க, அதான் பயமா இருக்கு” என்றாள் சமாதானமான குரலில்.

“இன்னும் சின்ன கொழந்த தானே கவி. கொஞ்சம் பெருசான சரியாயிடும்” என்றான்.

“முப்பது வயசாகியும் எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் சரியான மாதிரி தெரில” என்றாள் கேலியாய் அவனைப் பார்த்தபடி.

“கொழுப்புடி உனக்கு” என்றவன் வலிக்காமல் அவள் கன்னத்தில் அடிக்க,

“சரி சரி… நம்ம சண்டைய அப்புறம் வெச்சுக்கலாம். உங்க பொண்ணு இந்த நூடுல்ஸ் ஆச்சும் சாப்பிடராளானு பாப்போம்” என்றபடி நகர்ந்தாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் மூவரும் காரில் ஏறி இருக்க, கார் டே-கேர் நடத்தும் பெண்மணியின் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

“மம்மி” என ப்ரியா அழைக்க,

“என்ன குட்டிமா?”

“டம்மி ஹர்ட்டிங்” என வயிற்றை பிடித்தபடி உதட்டை பிதுக்கி கொண்டே கூற,

“உங்க பொண்ணுக்கு தினமும் இந்த நேரத்துக்கு வயிறு வலிக்கும் கண்ணு வலிக்கும் காலு வலிக்கும்…ஒண்ணு பாக்கியில்ல” என முன் சீட்டில் இருந்த கணவனிடம் முணுமுணுத்தவள், மகளிடம் திரும்பி “டம்மி வலிக்குதா? அச்சச்சோ… ப்ரியா குட்டிக்கு இன்னிக்கி சாயங்காலம் பிரெஞ்சு பிரைஸ் வாங்கிட்டு வரலாம்னு நெனச்சனே… டம்மி ஹர்ட்டிங்னா அப்ப வேண்டாம்” என வேண்டுமென்றே பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கூற,

“நோ மம்மி… டம்மி நோ ஹர்ட்டிங்… லிட்டில் ஒன்லி. பிரெஞ்சு ப்ரைஸ் வேணும்” என்றது குழந்தை.

அதை கேட்டதும் பிரவீன் சத்தமாய்ச் சிரிக்க “என்ன சிரிப்பு… எல்லாம் உங்க புத்தி தான் அப்படியே வாய்ச்சிருக்கு” எனக் கணவனைப் பொய்யாய் முறைத்தவள், மகளிடம் திரும்பி “இப்ப வலிக்கலையா டம்மி” என கேட்டபடி வயிற்றில் கிச்சு கிச்சு மூட்ட,

“டிக்லிங்… நோ மம்மி… மம்மி நோ” எனப் பெற்றவளின் கையைப் பற்றித் தடுத்தபடி சிரிப்பில் நெளிந்தாள் ப்ரியா.

மகளின் மழலை சிரிப்பில் மயங்கி அவளை கவிதா முத்தமிடவும் கார் டே-கேர் முன் நிற்கவும் சரியாய் இருந்தது.

“ஒகே கொஞ்சல்ஸ் எல்லாம் இனி சாயங்காலம் வெச்சுக்கலாம்… டே கேர் வந்தாச்சு ப்ரியா குட்டி.. டாடிக்கு ஒரு ஹை-பை குடு” என பிரவீன் முன் சீட்டில் அமர்ந்தபடியே கை நீட்ட, ப்ரியா தந்தையின் கையைத் தட்டிச் சிரித்தாள்.

கார் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்த பெண்மணியைப் பார்த்து “ஹாய் மார்கரெட்” எனச் சிநேகமாய்ச் சிரித்த கவிதா, ப்ரியாவை கீழே இறக்கி விட்டு “பை ஸ்வீட்டி” என மகளுக்கு முத்தமிட்டாள்.

அதற்குள் “ப்ரியா” என உள்ளிருந்து ஒரு சிறு பிள்ளையின் குரல் கேட்க, ப்ரியா உள்ளே ஓடினாள்.

*******************************************

மாலை ஆறு மணிக்கு டே கேர் வாசலில் தன் பெற்றோரின் காரைக் கண்டதும், ப்ரியா ஓடி வந்து தன் அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டாள். வீடு வந்து சேரும் வரை வாய் ஓயாமல் அன்று ஆடிய விளையாட்டுகள், போட்ட சண்டைகள், புகார்கள் என எல்லாமும் கூறி கொண்டே வந்தாள் ப்ரியா.

“ரெண்டு வயசுக்கு பேச்சு கொஞ்சம் ஓவராதான் இருக்கு” என கவிதா சிரிப்புடன் கூற,

“நீ ஒரு வயசுலேயே ஊரை வித்துருவேனு உங்கம்மா அன்னைக்கி சொல்லல” என பிரவீன் சமயம் பார்த்து கேலி செய்ய

“ஆமா என் செல்லம் என்னை மாதிரி தான் போங்க” என பெருமிதமாய்ப் பிள்ளையை அணைத்துக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்ததும் நேரம் இறக்கை கட்டி கொண்டு பறந்தது. உணவு முடித்து ப்ரியாவைக் குளிப்பாட்டி மற்ற வேலைகளை முடித்து ஆயாசமாய் உணர்ந்தாள் கவிதா.

பிரவீன் ஹால் சோபாவில் அமர்ந்தபடி டிவியில் நியூஸ் பார்த்து கொண்டிருக்க, ப்ரியா தரை கார்பெட்டில் அமர்ந்து பொம்மைகளைக் கவிழ்த்துப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.

கவிதா சோபாவில் அருகில் வந்து அமர, “வேற எதாச்சும் பாக்கறயா?” என டிவி ரிமோட்டை அவளிடம் நீட்டினான்.

“இல்ல இதே இருக்கட்டும்” என்றாள்.

“டாடி, எனக்கு பேபி எலிபென்ட் வாங்கி தர்றியா?” என்ற மகள் காலைக் கட்டி கொண்டு கேட்க, டிவியில் இருந்து கவனத்தைப் பிரித்து ப்ரியாவைத் தூக்கி மடியில் இருத்தி முத்தமிட்டவன் “அதென்ன பேபி எலிபென்ட். என் செல்லத்துக்கு பெரிய எலிபன்ட்டே வாங்கித் தரேன் குட்டிமா” என்றான்.

“நோ டாடி… பேபி தான் வேணும்” என்றாள் விடாமல்.

“ஏண்டா?” என கவிதா புரியாமல் கேட்க,

“மம்மி எலிபன்ட், டாடி எலிபன்ட் எல்லாம் ஆபீஸ் போய்ட்டா பாவம் பேபி எலிபன்ட் டே-கேர் போகனுமில்ல… அதை நாம வாங்கினா நான் வீட்ல இருந்து மம்மு குடுத்து ஜோ ஜோ பாடி அதை தூங்கு வெச்சு பாத்துப்பேன்ல மம்மி” என கை, கால், கண்கள் என மொத்தமும் பேச ப்ரியா அபிநயத்துடன் கூற, கவிதாவின் கண்ணில் சட்டென நீர் நிறைந்தது.

“ஏய்….” என ஆதரவாய் மனைவியின் தோள் தொட்டான் பிரவீன். அதற்குள் டிவியில் ஏதோ கார்ட்டூன் வர ப்ரியாவின் கவனம் திரும்பியது.

“தன்னை அந்த பேபி எலிபன்ட் நிலைல வெச்சு பாக்கராளோனு தோணுது பிரவீன், அவ மனசுல எவ்ளோ ஏக்கம் இருந்தா அந்த வார்த்தை வரும். ஆறு மாச கொழந்தையா இருந்தே டே-கேர் போறா பழகிட்டானு நாம நினைக்கிறோம். ஆனா அவ பேபி எலிபன்ட் பத்தி சொன்னத கேட்டப்ப கஷ்டமா இருக்கு பிரவீன்” என விசும்பியவளைத் தோளில் சாய்த்துக் கொண்டவன்,

“கவி ப்ளீஸ், என்ன இது? வீட்ல ஒருத்தர் மட்டும் வேலைக்கு போறது ப்ராக்டிகலா நடக்குமா நீயே சொல்லு. எப்படியும் இன்னும் ஆறு மாசத்துல ஸ்கூல் போய்டுவா… அது வரைக்கும் தான. அழாத ப்ளீஸ்”

“உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?” எனத் தலையை உயர்த்திக் கேட்ட மனைவியை அன்பாய் அணைத்தவன்,

“கஷ்டமாதான் இருக்கும்மா” என்றான் வருத்தமாய்.

“யோசிச்சு பாருங்க பிரவீன். நமக்கெல்லாம் மூணு வயசு வரைக்கும் தரைல விடாம அம்மாவோ பாட்டியோ பாத்துகிட்டதும், ஸ்கூல் போனப்புறம் கூட லஞ்ச் கொண்டு வந்ததும் அதெல்லாம் நம்ம பொண்ணுக்கு நாம குடுக்க முடியலையேனு கில்டியா இருக்கு பிரவீன்” என்றவளை,

“லெட்ஸ் பி பிரக்டிகல் கண்ணம்மா, டோண்ட் கெட் எமோசனல்” என சமாதானம் செய்தான்.

கவிதா மௌனமாய் தரையில் இருந்த மகளைத் தூக்கி எதிலிருந்தோ காப்பது போல் இறுக அணைத்துக் கொண்டாள்.

“மம்மி மம்மி…டைனோசர் டைனோசர்…” என ஆர்வமாய் டிவி திரையைச் சுட்டிக்காட்டி ப்ரியா கூற,

“குட்டி டைனோசர் வேணும்னு கேக்கப் போறா பாரு இப்போ” என பிரவீன் பேச்சை மாற்றும் பொருட்டுக் கேலியாய்க் கூற, அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் கவிதா சிரித்தாள்.

அதைப் பார்த்துப் ப்ரியாவும் கை கொட்டிச் சிரித்தாள்.

படத்திற்கு நன்றி: http://www.123rf.com/photo_3299776_mother-resting-outdoor-with-daughter.html

2 thoughts on “சின்னத் தாயவள்…

  1. எங்கோ ஒரு குண்டு வெடிப்பு என்று கேள்விப்பட்டு துயரப்பட்ட காலம் போய், தினமும் அது போன்ற செய்திகளைக் கேள்விப்பட்டதால், மரத்துப் போன மனங்கள்.. எங்கோ ஒரு குழந்தை இது போல வருந்திய காலம் போய், பெரும்பாலான நகரத்துக் குழந்தைகளின் நிலை இது தான் என்றாகி மனம் மரத்துவிட்ட போதும், இந்தக் கதை(?)யைப் படித்தவுடன், மனம் வலித்ததென்னவோ நிஜம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *