லயம்
ரிஷி ரவீந்திரன்
கோபால்சாமி. நூறைத் தாண்டிய வயது. பழம் பெரும் சுதந்திரப் போராட்ட வீரர். நீளமான வெண்பஞ்சுத் தாடி. தீர்க்கமான தீட்சண்யமான கண்கள். முகத்தில் ஒரு பிரம்ம தேஜஸ். புருவ மத்தியில் சின்னதாய் வட்ட வடிவில் குங்குமப் பொட்டு, தோளில் வெள்ளை நிறக் கதர்த்துண்டு,கையில் ஊன்றுகோல்,காந்தித் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி, ஆரோக்கியமான உடல்.
புள்ளியாக அந்த வீடு, பெரியவரின் பார்வையில் பட்டது. அதை நோக்கி நகர நகர அந்தப் புள்ளி விரிந்து ஒரு பெரிய புராதன வீடாக அதன் நிஜப் பரிமாணத்தை வெளிப்படுத்தியது. சில நூறு வருடங்களை உள் வாங்கிய காரைவீடு. இடிந்து கொண்டிருக்கும் கற்சுவர்கள். எஞ்சி நிற்கும் மதிற்சுவரில் கண்ணீர் போல எட்டிப் பார்க்கும் ஆழமான விரிசல்கள்.
ஆழ்ந்த வேர்கள் கொண்ட இச்சிதைவுகள் பொருள் தேடலில் வேட்கை கொண்ட சுயநலமான மனிதர்களின் தலைவிதியைக் காட்டுகின்றன. அகத்தேடல் இல்லாததினால் வாழ்வு இன்றும் ஆதிகாலம் போன்ற காட்டுமிராண்டி வாழ்வாகவே இருக்கிறது.
பர்மா தேக்கு மரங்கள் விட்டங்களாகவும் கதவுகள் மற்றும் ஜன்னல்களாகவும் உருமாற்றம் பெற்றிருந்தன. வீட்டின் வெளியே மிகப்பெரிய நிலவெளி. அதற்கப்பால் கூரை சிதைந்து வானைப் பார்த்த மாட்டுத் தொழுவம்.
மதில் கற்சுவரை ஒட்டி இரண்டு வாவரசி மரங்கள். மாட்டுத் தொழுவத்தின் அருகில் பரந்து விரிந்து கிடக்கும் வீட்டுத் தோட்டத்தில் முளைத்திருந்த எருக்கஞ் செடிகளினூடே ஒரு சிதைந்த அரிக்கேன் விளக்கு. நீர்த்தொட்டியில் சருகுகள், சிறகுகள் குழுமியிருந்தன.
நிகழ்வுகளின் நிழல்கள் படிமங்களாகியிருந்தன-
ஒரு சரித்திர ஏட்டின் நைந்துபோன பக்கங்களாக.
காற்றின் உரசலால் ஒரு வாவரசி மரம் கற்சுவரை உரசி சலசலப்பை உண்டாக்குகிறது. வாவரசி மரங்களினூடே செல்லும் முணுமுணுக்கும் தென்றலில், ஒரு குலவைச்சத்தம் மெல்லியதாகக் கேட்கிறது. சப்தம் பெரிதாகிக் கொண்டே போகிறது………………………………….
” பொங்கலோ…..பொங்கல்……”
பெரிய நிலவெளியில் அரிசிமாவினால் கோலம் போடப்பட்டிருந்தது. ஆங்காங்கே அதன்மீது பசுவின் சாணம் வைக்கப்பட்டிருந்தது. அதில் பூசணிப்பூ பூத்திருந்தது. செங்கற்கள், கோலத்தின் நடுவே ஆயுத எழுத்தாக்கப்பட்டிருந்தது. இதன் மீது மிகப்பெரிய மண்பானை வைக்கப்பட்டிருந்தது. வெளிப்புறத்தை வெள்ளையடித்து காவிக்கோடுகள் கிழிக்கப்பட்டு அழகான மங்களகரமான மண்பானையாக அது உருமாற்றம் பெற்றிருந்தது. பொங்கலுக்கென விசேஷமாக விளைவிக்கப்பட்டச் சிவப்பு நிற கார்போக அரிசியுடன் நாட்டுச்சர்க்கரையும் சேர்ந்து பொங்கிக்கொண்டிருந்தது.
அது ஒரு காலம்…………………………………………………
கும்மரபள்ளத்திலிருக்கும் இலந்தை மரக் கண்மாயும் சரி, எர்ர பள்ளத்திலிருக்கும் கண்மாயும் சரி வற்றியதே இல்லை. சிறுவர்கள் தட்டையான கல் அல்லது ஓட்டினை நீர்ப்பரப்பின் மீது நேர்த்தியாக விட்டெறிந்து இரண்டு மூன்று முறை நீரில் மோதி எம்பிக்குதித்தோடி அது உருவாக்கும் சலன அலைகள் ரம்மியமாக இருக்கும்.
நெல் சாகுபடி முடிந்து தைமாதக் கடைசியில் உளுத்தம் பயிர் விளைவித்தால் சித்திரை மாத இறுதியில் விளைச்சலை எடுத்து விடலாம். பின்னர் எள் சாகுபடி. மறுபடியும் ஆனி, ஆடியில் குறுவை சாகுபடி. வருடம் முழுவதும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைப் பச்சைக் கம்பளம் விரிந்திருக்கும். மாடுகளின் எச்சங்களே உரங்களாயின.
மாட்டுத்தொழுவம் பசுக்களாலும், காளைகளாலும் எப்பொழுதும் நிரம்பி வழியும். மாடுகள், மேய்ச்சலை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்பும்பொழுது அவைகள் தொலைவிலிருந்தே ‘ம்மா… ‘ என்று அதன் மொழியில் தகவல் சொல்லும். வெள்ளை நாய் வெளிப்புற வாசலைத் தன் வாயால் கவ்வித் திறந்து அவைகளை வரவேற்கும்.
குழந்தைகள், பசும்பாலை ஒவ்வொரு உபாத்யாயர்களின் வீட்டிலும் பயபக்தியுடன் இலவசமாகவே ஊற்றி விட்டு வருவர். அண்டை அயலார்கள் மற்றும் உறவினர்கள் தங்களது விளைச்சலை பரிமாற்றம் செய்து கொள்வர். வணிகச்சிந்தனை இல்லாத காலங்கள்..!
பொங்கலன்று பசுமாடு ஈன்றால் மிகவும் விசேஷம். இராட்சஷ ஆண்டிலும் அப்படித்தான் நிகழ்ந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி. கன்று மிகவும் அழகாக இருந்தது. தெருக்குழந்தைகள் அதை வாஞ்சையாக வருடி விட்டனர். புதுவரவுக்காக மட்டுமல்ல; பொங்கல் பண்டிகை அன்று பிறந்ததற்கும் சேர்ந்தே மகிழ்ந்தனர். பொங்கலன்று பிறந்தால் கன்று கிருஷ்ணன் கோவிலுக்கே சொந்தம்.
கன்றை வளர்த்து ‘ சலகை எருது பழக்குதல்’ என்ற சாங்கியம் முடிந்த பின்பே கோயிலில் விட முடியும். வளர்ந்த கன்றை மார்கழி மாதம் பிறந்ததும் ஊருக்குப் பொதுவான ஒரு இடத்திற்குக் காலில் சலங்கை கட்டி அழைத்து வரப்படும். இரவு உணவை முடித்தபின் மக்கள் அங்கே கூடுவர். ஆண்கள் காலில் சலங்கை கட்டியபடி , தாரை தப்பட்டை அடித்து நடனமாடுவர். மாடும் அவர்களைப் போலவே வளைந்து நெளிந்து அவர்களுக்குப் பின்னால் ஆடி வரப் பழக்கப் படுத்தப் படும். மார்கழி முழுவதும் பழக்கிய பின், தையில் மாட்டை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று கிருஷ்ணன் கோவிலில் விடப்படும். அனைவரும் உற்சாகமாக இதில் பங்கு கொள்வர்.
வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்திருந்த எருக்கஞ்செடிகளினூடே கிடந்த சிதைந்த அரிக்கேன் விளக்கு, சூரியன் அதிகாலையில் விழிக்கும் முன் ஏரில் கட்டப்பட்டு உழுத நாட்கள். நீரும், சூரிய ஒளியும், நுண்ணுயிர் ஆற்றலும் நிலத்திற்கிருந்ததால் விவசாயம் செழித்திருந்தது. கண்களுக்கெட்டிய தூரம் வரை பசுமை.
குறிப்பாகத் திருத்தங்கல்லிலிருந்து நாராயணசாமி மற்றும் நாச்சியாரம்மாள் என்ற கடவுள்கள் இந்தக் கிராமத்திற்கு ஒவ்வொரு பங்குனி மாதமும் வருகை புரிவதை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவர். ஒவ்வொரு வீட்டிலும் முறுக்குச் சுடுவது என்பது ஒரு சடங்காகவே நிகழும். காலப்போக்கில் இந்த விழாவானது ” முறுக்குச்சாமி விழா” என்றே மருவிப் போனது.
பண்டிகைக்கு ஏழெட்டு நாட்களுக்கு முன்பிருந்தே பலகார வகைகள் தயாரிக்க ஆயத்தமாகிவிடுவர். அதற்கென ஒரு பெரிய வடைச்சட்டி உண்டு. இரண்டு மூன்று மனிதர்களின் உதவியோடு அடுப்பின் மீது அமர்த்தப்படும். பலகாரங்கள் தயாரானபின் முற்றத்தில் வைத்து அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் பொழுது பண்ணைப் பணியாட்களின் முகத்தில் மகிழ்ச்சி, பிரவாகமெடுக்கும்…. விழா முடியும்வரை வீடு முழுவதும் ஊர் உறவு என கலகலக்கும்.
வீட்டிற்குள் இந்த ஊஞ்சல் கட்டிலில்தான் துயில்வது வழக்கம். அருகிலிருந்த ஜன்னலின் கம்பியில் ஒரு கயிற்றினைக்கட்டி அதன் மறுமுனையைக் கட்டிலில் இணைத்துக் கொண்டுத் தேவையான பொழுது தூளியை ஆட்டுவது போல ஆட்டிக் கொண்டு அனந்த சயனம் கொண்ட நாட்கள். மேலே ஏற ஒரு மடக்கு நாற்காலி.
கோடை காலத்தில் பரந்த நிலவெளியில் நிலா ஒளியில் அனைவரும் படுத்துக் கொண்டு, புராதனக் கதைகள், புராணக்கதைகள் என நித்திரை வரும் வரை காலட்சேபம் நீளும்.
பூதான் இயக்கத்தில் தீவிரமாயிருந்த பொழுது ஒருமுறை விநோபா இந்த வீட்டிற்குத்தான் வருகை புரிந்தார். தன்னுடைய எல்லா நிலங்களையும் பூதான் இயக்கத்திற்குத் தானம் செய்து விட்டார்.
வீடே அந்தத் தெருக் குழந்தைகளால் நிரம்பி வழியும். தனக்குக் குழந்தை இல்லையே என ஒரு நொடிப் பொழுதேனும் எண்ணி வருந்தியதில்லை. ‘குழந்தைச்சோறு ‘ இந்த வீட்டில் மிகப்பிரச்சித்தம். தெருவிலிருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இங்கிருந்துதான் ‘ குழந்தைச்சோறு’ ஊட்டி வளர்க்கப்பட்டனர். சுவர் நிறைய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் படங்கள் அலங்கரித்தன.
தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிற்சாலைகள் கிராமத்தை ஊடுருவி ஆட்கொள்ள ஆரம்பித்த பின், மெல்ல மெல்ல அது கந்தக பூமியாக மாறிப்போனதால் மழை பொய்த்தது. விளை நிலங்கள், விலை நிலங்களாக மாறிப்போனது.
வாவரசி மரங்களினூடே செல்லும் முணுமுணுக்கும் தென்றலில் குலவைச்சத்தம் கம்மலாகிக் கேட்டது. இப்பொழுது சப்தம் முற்றிலும் நின்று போயிருந்தது.
மனைவி மரணித்தபின், வளர்ப்பு மகனிடம் தஞ்சமடைந்தார். இப்பொழுது பேரனின் பராமரிப்பில் நகரில் வசிக்கின்றார். கொள்ளுப்பேத்தியின் பொறியியல் கல்லூரிக் கல்விக்குக் கட்டணம் கட்ட ஒரு கணிசமானத் தொகை அவசியத் தேவையானதால் வீட்டை விற்கலாமா என்ற யோசனையில் நின்று கொண்டிருந்தார்.
சிறிது நேரங்கழித்து தரகன் வந்தான். அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசினான். தன் பேரனிடம் கலந்தாலோசித்து விட்டுத் தகவல் தெரிவிப்பதாகக் கூறினார்.
ஏன் இந்த கிராமங்களெல்லாம் அழிந்து வருகின்றன…? தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், பட்டாசுத் தொழிற்சாலைகளும் முளைக்கின்ற பொழுது மனித நேயம் மட்டும் ஏன் முளைக்கவில்லை……? ஏன் இந்த சிதைவுகள்….?
இச்சிதைவுகள் பொருள் தேடலில் வேட்கை கொண்ட சுயநலமான மனிதர்களின் தலைவிதியைக் காட்டுகின்றன. அகத்தேடல் இல்லாததால் வாழ்வு இன்றும் ஆதிகாலம் போன்ற காட்டுமிராண்டி வாழ்வாகவே இருக்கிறது.
அங்கிருந்து நகர நகர அந்த வீடு தன்னுடைய நிஜப் பரிமாணத்திலிருந்து ஒரு சின்னப்புள்ளியாகிப் பெரியவரின் பார்வையில் பட்டது.
அருமையான கதை.
கிராமங்களின் நிலைமை இப்படித் தான் இருக்கிறது.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
இனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா.
வாசித்து முடிக்கையில் இயலாமையுடனான பெருமூச்சை தவிர்க்க முடியவில்லை. நிலைமை என்றேனும் மாற வேண்டும்.
தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், பட்டாசுத் தொழிற்சாலைகளும் முளைக்கின்ற பொழுது மனித நேயம் மட்டும் ஏன் முளைக்கவில்லை……? ஏன் இந்த சிதைவுகள்….? அருமையான வரிகள். மனித நேயம் முளைக்கட்டும் . நல்ல கதை.
நிறைய எழுதுங்கள் . பொங்கல் வாழ்த்துக்களுடன் வித்யா பாலாஜி.
very nice presentation and also good work
narration was wonderful
done a super job
i didn’t go to village. while reading this article i felt i was in a village. what a peaceful and happy surroundings there. conclusion is super and heart touching !!!
மிகவும் அருமை. யதார்த்தமான உண்மையை சொல்லி இருகிறீர்கள். சமுதாய பொறுப்பு மக்களிடம் பரவ அகல் விளக்கை போன்று உங்கள் கடமையை இச் சிறுகதையின் மூலம் நினைவு படுத்தி இருகிறீர்கள். எதிர்காலதில் ஒரு சிறு மாற்றமாவது இதனை உணர்வதன் மூலம் நம் சமுதாயத்தில் கண்டிப்பாக வரும். உங்கள் உன்னத முயற்சி வெற்றி அடையும். மனித நேயம் வளரும். அகத் தேடல் மலரும். தற்பொழுது அமெரிக்கா வில் இருந்தாலும் நம் தாய்நாட்டு அக்கறை உள்ள உங்களை போன்ற மனிதர்களால் நம் தேசம் சிறக்கும். நல்ல மறுமலர்ச்சி வரும். மக்கள் வாழ்வு மிளிரும்.
A moving presentation – quite realistic
A fantastic presentation – so realistic that makes people sit and ponder! Pranams to the composer
Very good narration, Keep it up Ravi!
கதை சரியான முடிவை எட்டவில்லை. முடிக்கையில் என்ன சொல்வது எனப் புரியவில்லையோ? அல்லது அப்படியே விட்டுவிட்டால் போதும்னு நினைப்பானு தெரியலை. மற்றபடி பழைய நினைவுகளை நன்றாக அசை போட்டிருக்கிறீர்கள். மறந்து போன பல பழக்கங்களையும் சொல்லி இருக்கிறீர்கள்.
வீடு நகரில் இருக்கிறதா, கிராமத்தில் உள்ளதா எனத் தெளிவாய்ச் சொல்லவில்லை; தாத்தா நகரில் வசிப்பதாய்ச் சொல்லி இருக்கீங்க. அப்போ வீட்டை விற்கக் கிராமத்துக்கு வந்திருக்கார்; வந்திருக்கணும்; அழுத்தமான சம்பவம் ஒன்றைச் சொல்லி முடித்திருக்கலாம்.
Wonderful narration. Natural flow of thought. Raveendran sir is all rounder. I wish you should continue writing.