அணு உலை ஆபத்தா?
டாக்டர். பி. இராமநாதன்
இன்று அமெரிக்காவும் , மற்ற ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்கத் திணறும் போது இந்தியா ஓரளவேனும் நிமிர்ந்து நிற்கிறது என்றால், இதற்குக் காரணம் நம்மிடம் இருக்கும் பலதரப்பட்ட தொழிற்சாலைகளேயாகும். நம்மால் இந்த நிலையிலும் வளர்ச்சி காட்ட முடிகிறது. இந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வது நம்முடைய மின்சாரத் தேவைகளை நாம் எதிர் கொள்வதற்கேற்பவே அமையும்.
இன்று இந்தியா உலகிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மற்ற நான்கு நாடுகள் அமெரிக்கா , ஜெர்மனி, டென்மார்க், மற்றும் ஸ்பெயின். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மின் தேவைகளை அதிகரிக்கச் செய்கிறது. கடந்த 30 வருடங்களில் மின் தேவை வருடத்திற்கு 3.6% வீதம் அதிகரித்துள்ளது. 2030இல் இந்த மின் தேவை 950,000 மெகா வாட் ஆக அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஆகையால் நாம் மாற்று முறை மின் உற்பத்திகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். இந்த மின் தேவைகளை சந்தித்தால்தான் தொழில் வளர்ச்சியும் அதன் மூலமாக வேலை வாய்ப்பும் மற்ற வளர்ச்சிகளும் இடம் பெறும். நம் விஞ்ஞானிகள் வேறு எந்த வகையில் மின் உற்பத்தியைப் பெருக்கலாம் என்று ஆராயும் அதே நேரத்தில் சுற்றுச் சூழலையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறார்கள் என்பது பாராட்டப் பட வேண்டிய ஒன்று.
முதலில் எந்தெந்த முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது அதன் கஷ்ட நஷ்டங்கள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
1. நீர் மின்சாரம்.
2. சூரிய சக்தி மின்சாரம்
3. அனல் மின்சாரம்
4. காற்றாலை மின்சாரம்
5. அணு மின்சாரம்.
முதலில் நீர் மின்சாரத்தை எடுத்துக் கொள்வோம். இப்போதே இந்தியாவில் மிக அதிகமான அளவு இந்த வகையில் தான் எடுக்கப் படுகிறது. உற்பத்தியை மேலும் பெருக்க மேலும் அணைகள் கட்ட வேண்டும். அதற்கு முதலில் பலியாவது சுற்றுச் சூழல் தான். ஆம்! அணை கட்ட மிக அதிக அளவு மரங்கள் வெட்டுப்படும். அதனால் சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் அதற்கு சம்மதம் கொடுக்க மாட்டார்கள்.
இரண்டாவதாக சூரிய சக்தியை எடுத்துக் கொண்டால் அது பருவ காலங்களுக்கேற்ப மாறும் தன்மை கொண்டது. இருந்தாலும் இப்போது தெரு விளக்குகள் , கிராமப் புறங்களின் மின்சாரத்தேவைகள் , தண்ணீர் மேலேற்ற போன்ற தேவைகளுக்கு சூரிய சக்தி மின்சாரமே பயன்படுத்தப் படுகிறது. நம் நாட்டில் தார்ப் பாலைவனத்தில் ஒரு மிகப்பேரிய சூரிய சக்தி மின்னுற்பத்தித் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த முறையின் பிரச்சனை என்னவென்றால் இந்த வகை மின் உற்பத்திக்கு மிகப்பெரிய இடம் தேவை. நம் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் அது போல பல இடங்களில் கொண்டு வர சாத்தியம் இல்லை. ஏனென்றால் நம் மக்கள் தொகைப் பெருக்கம் அதற்குத் தடையாய் இருக்கிறது.
அடுத்தது காற்றாலை மின்சாரம். இந்த மின் உற்பத்தியில் இந்தியா உலகிலேயே ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் சங்கடம் என்னவென்றால் பெருங்காற்று வீசும் பருவங்களில் மட்டுமே இதனால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். வருட முழுமைக்குமான தேவைக்கு இதை நம்ப முடியாது.
அனல் மின்சாரத்தை எடுத்துக் கொண்டால் நம் நாட்டில் நிலக்கரி பரவலாகப் பல இடங்களில் கிடைப்பதால் இதன் உற்பத்தியும் அதிகம். ஆனால் இது சுற்றுச் சூழலுக்கு முற்றிலும் கேடானது. நிலக்கரி எரியும் போது அதிலிருந்து வெளி வரும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, சல்ஃபர் டை ஆக்சைடு போன்றவை வானத்தை மாசு படுத்தும் தன்மையவை. உலக வெப்பமயமாதல் ஓசோன் படலத்தில் துளை என்று உலகமே கலங்கி நிற்கும் வேளையில் இவற்றை மேலும் அதிகரிக்கச் செய்வது புத்திசாலித்தனமான செயலல்ல. அதுவும் தவிர இவை கனிம வளத்தை நம்பிச் செயல்படுபவை. கனிம வளம் என்பது தீர்ந்து போகும் தன்மையது. அதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
கடைசியில் மிஞ்சுவது அணு மின்சாரம் மட்டும் தான். அணு மின்சாரம் என்றதுமே எல்லோரும் பயப்படுவதன் காரணம் அதன் கதிர் வீச்சுத் தன்மை. ஆனால் அணு உலைக் கூடங்கள் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட முறையில் செயல் படுகின்றன. சிலர் செர்னோபிலில் நடந்ததோ, ஃபுகுஷிமாவில் நடந்ததோ நம் நாட்டில் நடக்காது என்பது என்ன நிச்சயம்? என்று கேட்கிறார்கள். உண்மை இதற்கு விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்களாவார்கள். செர்னோபில் சம்பவத்திற்கும் ஃபுகுஷிமா சம்பவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்தாலே அது புரிந்து விடும். செர்னோபிலால் வெளியிடப்பட்ட கதிர் வீச்சில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே ஃபுகுஷிமாவில் வெளியேற்றப் பட்டது. அந்த அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் நவீனமடைந்துள்ளன.
இப்போது அணு மின்சார எதிர்ப்பாளர்கள் மிகப்பெரிய விஷயமாக முன்வைப்பது மின்சாரம் தயாரித்தபின் வெளிவரும் கதிரியக்கக் கழிவுகள். உண்மை! இவை தகுந்த முறையில் கையாளப் பட வேண்டியவைதான். கழிவுகளைக் கையாளும் முறைக்குச் செல்லுமுன் ஒரு விஷயம் அணு மின்சாரம் பற்றி நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இந்த வகை மின் உற்பத்தியில் எந்த விதமான நச்சுப் பொருட்களும் காற்றோடு கலப்பதில்லை. டாக்சிக் பொருட்கள் நீரோடு கலக்கப்படுவதில்லை. இவற்றை வைத்துப் பார்க்கும் போது அணு மின்சாரம் சுற்றுச் சூழலுக்கு மிக உகந்தது என்று தெரிகிறது.
சரி ! இனி அணு உலைக் கழிவுகளுக்குச் செல்லலாம். கழிவுகள் என்றதும் தினமும் ஏதோ லாரி லாரியாக வெளி வரும் என்று எண்ண வேண்டாம். நால்வர் கொண்ட ஒரு குடும்பம் எல்லா மின்சாதன வசதிகளையும் கொண்ட குடும்பம் (ஃப்ரிட்ஜ், ஏசி, மைக்ரோ வேவ், ஹீட்டர் , வாஷிங்க் மெஷின் முதலியவை) வாழ் நாள் முழுக்க உபயோகிக்கத் தேவையான மின்சாரம் தயாரித்தால் வரும் கழிவு ஒரு கிரிக்கெட் பந்து அளவுதான் இருக்கும்.
அதனால் அது தீங்கில்லையா என்று கேட்கலாம்? அதற்காகத்தான் அது பூமியில் சரியான இடம் பார்த்து மிக ஆழமாகப் புதைக்கப் படுகிறது. அங்கேயே அவை மக்கிப் போகின்றன. அதனால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இது அனல் மின் தயாரிப்பில் வெளியேறும் கழிவைக் காட்டிலும் மிகவும் குறைவு. இங்கே மற்றொரு விஷயத்தையும் வாசகர் முன் வைக்க ஆசைப்படுகிறேன். தற்போதைய அணு உலைகள் உமிழும் கதிர் வீச்சு , நாம் தினந்தோறும் வளி மண்டலத்திலிருந்து பெறும் கதிர் வீச்சுக்குச் சமம் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
அதனால் அணு உலை என்றதும் என்னவோ ஏதோ என்று பதறாமல் அதைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டால் நாம் அதற்குத் தடையாய் இருக்க மாட்டோம். மேலும் தற்போதைய அணு உலைகள் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றன. அவற்றைப் பழைய 1980 அணு உலைகளோடு ஒப்பிடுவது 1980 ஆம் வருட ஒரு காரை தற்போதைய அதி நவீன காருக்கு ஒப்பிடுவது போன்றதாகும். அது தவிரவும் கதிரியக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அறிவியலார்கள் , மற்றும் விஞ்ஞானிகள் கடமை. கதிர் வீச்சு என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி. தினமும் நாம் ஒரு குறிப்பிட்ட அளவு கதிர் வீச்சை வளி மண்டலத்திலிருந்து பெற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். சுற்றுச் சூழல் மாசு படும்போது உலகம் வெப்பமயமாதல் , ஓசோன் படலத்தில் துளை என்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விளைவுகளால் பூமிக்கு வரும் கதிர் வீச்சின் அளவு அதிகரிக்கிறது. இது நம் உடல் நலத்திற்கு நல்லதல்ல. அந்த வகையில் பார்க்கும் போது சுற்றுச் சூழலை மாசு படுத்தாத, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும்பங்கு வகிக்கும் மின் உற்பத்திக்கு அணு உலைகளே மிகச் சிறந்தவை என்பதில் ஐயமில்லை.
படத்திற்கு நன்றி: http://usetamil.forumotion.com/t3506-topic
Vey useful and informative article. Keep it up Sir.
Interesting facts regarding the Nuclear Power. Thanks for creating positive awareness about nuclear power.
Very informative.