பிச்சினிக்காடு இளங்கோ


தவறு செய்கிற போதெல்லாம்
நினைவுக்கு வருவது
இந்த மொழிதான்

இது எத்துணை
உண்மையான மொழி

எத்துணைப்
பட்டறிவின் வெளிப்பாடாகும்

முடிவெடுத்துதான் புறப்பட்டேன்
முடியவில்லை
முடிவைக் கடைப்பிடிக்க

முடிவாக
பழைய குருடி
கதவைத் திறடி கதைதான்

இருப்பும்
குறைவாக இருக்கும்போது
இப்படி நடந்து கொள்வதால்
பொறுப்பற்றவன் என்ற
வழக்கமான குற்றச்சாட்டிற்கு
பொருத்தமானவனாகிவிடுகிறேன்

இருப்பதைத் தீர்த்து விட்டால்
அடுத்தது
என்ன செய்ய முடியும்
என்று
சிந்திக்கும் திறனை
ஏன் இழந்து விடுகிறேன்
என்பது தெரியவில்லை

பொறுமையாகவே
வாங்கலாம் என்ற
பொறுமை இல்லை
பொறுப்பும் இல்லை

ஆயிரம்தான் இருந்தாலும்
அதை வாங்குவதுதான் அவசியம்
எனக் கருதி
ஓராயிரத்தை
நேற்றுப் புத்தக விழாவில்
செலவிட்டேன்

அம்மா மனைவி வாயில்
அடிக்கடி உதிரும் பழமொழி
நினைவுக்கு வரத் தவறவில்லை

(05.01.2012 புத்தகவிழா)

 

படத்திற்கு நன்றி : http://www.tempe.gov/library/events/grtbooks.htm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *