தமிழின் புதிய தேவைகளின் பார்வையில் தமிழ் கற்பித்தல்

0

இ.அண்ணாமலை

 செப்டம்பர் மாதம் 2011 சிங்கப்பூரில் நடந்த பத்தாவது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் சிறப்புரையாகப் படிக்கப்பட்டது.

காலந்தோறும் தமிழ் மொழியின் தேவைகள் மாறிவருகின்றன. அந்தத் தேவைகளை நிறைவு செய்வதில் தமிழின் வாழ்வு இருக்கிறது. அவற்றி நிறைவு செய்யும் வகையில் தமிழ் கற்பித்தல் அமைய வேண்டும். உலகம் ஒருமைப்பட்டுவரும் இக்காலத்தில் தமிழின் முதல் தேவை இந்த உலகில் தமிழின் இடத்தை இருத்திக்கொள்வது. இதற்குத் தமிழைப் பேசுபவர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது அவசியம். தமிழ் வழக்கில் இருந்தால்தானே அதன் தேவையைப் பற்றிய கேள்வி எழ முடியும்? தமிழை எழுதுபவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது இரண்டாவது தேவை. இதில் தமிழில் பல நிலைகளில் எழுதுபவர்களும் –குழந்தைக்குப் பாட்டு எழுதுபவர்களிலிருந்து கணினிக்குத் தமிழ் ஆராய்ச்சி செய்பவர்கள் வரை- அடக்கம். எழுத்தறிவு தரும் முதியோர் கல்வியும் இதில் அடங்கும். இவர்களெல்லாம் தமிழில் எழுதக் கற்க வேண்டும். தமிழில் பேசவும், எழுதவும் எந்தத் தமிழைக் கற்பிப்பது, எப்படிக் கற்பிப்பது என்னும் கேள்விகள் காலத்திற்கேற்ற தமிழைக் கற்கும் தேவையை நிறைவேற்றுவதில் முக்கியமானவை.

தமிழைக் கற்பிக்கும் நோக்கங்களில் இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் உள்ள மொழியை இருபத்தோராம் நூற்றாண்டில் துடிப்புடன் செயல்பட வைக்க வேண்டியது முக்கியமான ஒன்று என்பது தெளிவு. பழம் பெருமையைப் போற்றுவதில் நின்றுவிடாமல், புதிய வன்மை பெறுவதற்குத் தமிழைத் தயார்ப்படுத்தும் வகையில் தமிழ் கற்பித்தல் – அதாவது தமிழ்ப் பாடத்திட்டமும் பயிற்சி முறையும்- இருக்க வேண்டும். உலகளவில் இன்று உயர்ந்து நிற்கும் ஆங்கில மொழியின் கவர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் நிலையைத் தமிழுக்கு உருவாக்கும் வகையில் அவை இருக்க வேண்டும். தமிழ்ப் பயிற்சியை இன்று உலகில் பலவிதமான கலாச்சாரச் சூழல்களில் தரும் தேவை இருக்கிறது. உலகம் முழுவதும் தமிழ் கற்பித்தல் ஒரே வகையாக இருக்க முடியாது. வெவ்வேறு நாட்டுக் கல்வி அமைப்பில் பாடத்திட்டத்தின் நோக்கமும் உள்ளடக்கமும் வேறு. தமிழ் கற்போரின் நோக்கமும் கற்கும் சூழலும் வேறு. தமிழ்நாட்டிலும் சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் இவை வேறு. வேறுபாடுகளுக்குப் பொருந்தும்படி தமிழ்ப் பயிற்சி அமைய வேண்டிய தேவை இன்று இருக்கிறது. ஒரே நாட்டிலும் பல திறப்பட்ட கற்போரின் தேவைகளுக்கேற்பத் தமிழ்ப் பயிற்சி அமைவது பொருத்தம். இலக்கிய மாணவன் கற்கும் தமிழும் அறிவியல் மாணவன் கற்கும் தமிழும் ஒன்றாக இருக்க முடியாது. அவர்களுடைய கருத்து வெளிப்பாட்டின் தேவைகளை அவர்கள் கற்கும் தமிழ் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அறிவியல் மாணவர்கள் தங்களுக்குத் தமிழ் தேவை இல்லை என்றுதான் எண்ணுவார்கள்.

தமிழ் கற்பித்தலின் இன்றைய தேவையின் இந்தப் பின்னணியில், அதன் வரலாற்று நிலையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். தமிழ்க் கல்வி தமிழின் வரலாற்றுக் காலத்திலிருந்து தமிழின் இலக்கியத்தையும் இலக்கணத்தையும் கற்பதாகவே இருந்து வந்திருக்கிறது. இன்றும் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை இவை இரண்டுமே தமிழ்க் கல்வியின் உள்ளடக்கமாக இருக்கின்றன. இலக்கியம் என்பதன் வரையறையை விரித்துத் தற்கால (அதாவது சமகால) இலக்கியம், நாட்டார் இலக்கியம், உரைநடைத் தமிழ், ஊடகத் தமிழ், திரைப்படத் தமிழ் முதலானவை தமிழ்ப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில உயர்கல்வி மட்டத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றன். இலக்கியத்தின் இந்த விரிவு எல்லாக் கல்வி மட்டங்களிலும் ஏற்பட வேண்டும். அப்படி ஏற்பட்டாலும் இலக்கியக் கல்வியே தமிழ்க் கல்வியின் ஒட்டுமொத்தமும் ஆகாது.

முற்காலத்தில் இலக்கியம் படிப்பதன் நோக்கம் தமிழ் இலக்கிய மரபைத் தெரிந்துகொள்வதும், இலக்கியத்தை அர்த்தப்படுத்தி நயம் காண்பதும் இலக்கியம் புனைவதும், இலக்கியத்தைக் கற்பிப்பதுமே. இது இக்காலத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பள்ளிப்படிப்பு முடிந்தபின் கற்பிப்பதற்கு மட்டுமே பொருந்தும். இந்தக் கட்டுரையில் தமிழைப் பொதுப்பாடமாகக் கற்பதைப் பற்றிப் பேசுகிறோம். இதிலும் இலக்கியத்திற்கு இடம் உண்டு; ஆனால் இலக்கியக் கல்வி மட்டுமே பொதுத் தமிழ்க் கல்வி ஆகாது. இலக்கியக் கல்வி தமிழ்ப் பண்பாட்டை அறிமுகப்படுத்துவது, இலக்கிய உணர்வை மனதில் விதைப்பது ஆகியவற்றோடு மொழியின் அழகியியல் வெளிப்பாட்டை அறிந்து பயன்படுத்தும் கருத்துப் பரிமாற்ற (aesthetic communicative) சாதனமாகவும் அமைய வேண்டும். அழகியல் வெளிப்பாடு இலக்கியத்திற்கு மட்டுமே உரியது அல்ல; இது அலங்கார மொழியும் அல்ல. இது ஒருவர் தன் கருத்தைப் பிறர் மனதைக் கவரும் வகையில் சொல்லும் திறனாகும். பல வகை மொழித் திறன்களில் இதுவும் ஒன்று. கருத்து வெளிப்பாட்டுத் திறனை வளர்க்கும் வகையில் இலக்கியம் கற்பிக்கப்படவேண்டும்; மனப்பாடம் பண்ணுவதற்கோ மூதாதையினரின் பெருமை பேசுவதற்கோ அல்ல.

தமிழ் கற்பதில் பேண வேண்டிய பிற திறன்களில் உறவை உரப்படுத்திக்கொள்ளும் உரையாடல் திறன், சொல்லவந்த கருத்தைப் பிசிறின்றி, வேண்டாத சொல்லின்றி, ஒரு தடவையில் விளங்கும்படி சொல்லும் பேசும் திறன், எழுதும் திறன், ஒன்றைக் கேட்டு அல்லது படித்துத் தவறின்றிப் புரிந்துகொள்ளும் திறன், அறிவார்ந்த விவாதத் திறன், ஆங்கிலத்தில் கேட்டதை, படித்ததைத் தமிழில் எடுத்துச் சொல்லும், எழுதும் திறன் முதலானவையும் அடங்கும். இவற்றின் முக்கியத்துவம் இக்காலத் தமிழ்க் கல்வியைப் பழங்காலத் தமிழ்க் கல்வியிலிருந்து வேறுபடுத்தும். இவை போன்ற திறன் தொகை (skill set) ஒன்றை ஏற்படுத்திக்கொண்டால், கல்வி மட்டப்படி, மாணவரின் பின்னணிப்படி, கற்கும் நோக்கப்படி பாடத் திட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டிய தேவை விளங்கும். முற்காலத்தில் தமிழ் இலக்கணம் கற்பிப்பதில் செய்யுள் எழுதத் தரும் பயிற்சியே குறிக்கோள். தற்காலத்தில் சிறப்புத் தமிழ்க் கல்வியிலும் கவிதை எழுதக் கற்பிப்பது ஒரு நோக்கமல்ல. புதுக் கவிதை எழுத மரபிலக்கணமும் தேவை இல்லை. இலக்கணம் மொழி கற்பிப்பதற்குப் பயன்படும் கருவி. இன்றைய தமிழைக் கற்க அதனுடைய இலக்கணத்தைப் படிக்க வேண்டும்; பழைய தமிழின் இலக்கணத்தை அல்ல. இலக்கணத்தை நேரடியாக்க் கற்பிக்காமலே மொழியைக் கற்பிக்க முடியும். மொழி கைவரப் பெறும்போது அதன் இலக்கணம் தனி முயற்சி இல்லாமலே மனதில் உருவாகிவிடும்; இலக்கணத்தைத் தனியே கற்பிக்கத் தேவை இல்லாமல் போகும். குழந்தைகள் தமிழை இயல்பாகக் கற்றுப் பேசும்போது இலக்கணத்தை மனனம் செய்வதில்லை; இலக்கணத்தை மனதிற்குள் உருவாக்கிக் கொள்கிறார்கள். சில மாணவர்கள் இந்த மாதிரியான முறையையே வகுப்பறையில் மொழி கற்பதற்கும் விரும்புவார்கள். ஆனாலும், மொழியின் அமைப்பை ஆசிரியர் விளக்க இலக்கணம் தேவைப்படும்; மாணவர்களின் கற்றல் பிழைகளை விளக்கித் திருத்த இலக்கணம் உதவும். தமிழை முதல் மொழியாக – தாய்மொழியாக- கற்கும் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கணத்தை எடுத்துரைக்கும் திறன் வேண்டும்; அதற்கு இலக்கணக் கலைச்சொற்கள் தெரிய வேண்டும் என்னும் ஒரு கல்வி நோக்கம் இருக்கிறது. இந்த மொழிப்பயனை அடையவும் இலக்கணம் கற்பிக்கும் தேவை இருக்கிறது.

தமிழை வாழும் சூழலிருந்து இயல்பாகக் கற்காமல் வகுப்பறையிலிருந்து கற்கும் மாணவர்களுக்கு – தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் மாணவர்களுக்கு- இலக்கண விளக்கம் தேவைப்படும். இவர்களுக்குத் தமிழைக் கற்கும் நேரம் குறைவு. இலக்கண விளக்கம் நேரக் குறைவைச் சரிக்கட்ட ஒரு வழி. இது தமிழறியா அந்நிய மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அந்நிய நாடுகளில் வாழும் தமிழ்க் குடும்பங்களில் தமிழ் பேசாமலலே வளரும் மாணவர்களுக்கும் பொருந்தும்.

இலக்கணத்தைக் கற்பிக்கும்போது அது தமிழைக் கற்கும் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்பது பலரும் ஒப்புக்கொள்ளும் ஒரு கருத்து. இதைச் சாதிப்பதில் தமிழாசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். இலக்கணம் கற்பதை நவீன தொழில்நுட்பச் சாதனங்கள் மூலம் சுவையுடையதாக ஆக்கலாம். இதில் முக்கியமான கேள்வி கற்பிக்கும் இலக்கணம் எதுவாக இருக்க வேண்டும் என்பது. அது இக்காலத் தமிழின் இலக்கணமாக இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது; கூடாது. இந்த இலக்கணம் இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை என்பதும் பலர் ஒத்துக்கொள்ளும் கருத்து. எனவே, இலக்கணத்தை வரைப்படுத்திக்கொள்ளும் வேலை தமிழைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் தலையில் விடிகிறது; அல்லது அது பாடப் புத்தகம் தயாரிப்பவரின் பொறுப்பாகிறது. இவர்கள் எல்லோருக்கும் இந்தத் திறன் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, இன்றைய தமிழின் இலக்கணத்தை விளக்கத்துடன் எழுதி, ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில்- முக்கியமாகத் தன்னார்வத் தமிழாசிரியர்கள் பயன்படுத்தும்வகையில்- இணையத்தில் தரவேண்டிய தேவை இருக்கிறது. இதைத் தமிழில் தரவேண்டும்; தமிழை இரண்டாம் மொழியாகப் பயில்பவர்களுக்காக ஆங்கிலத்திலும் தரலாம். தமிழ்க் கல்வி வரலாற்றில், தமிழைப் பிற மொழியின் மூலம் பயிற்றுவது காலனிய காலத்தில் துவங்கியது. லத்தீன், போர்ச்சுகீஸ் முதலிய மொழிகளில் தமிழ் இலக்கணம் எழுதப்பட்டது; அந்த மொழிகளின் மூலம் தமிழ் கற்கப்பட்டது. போன நூற்றாண்டிலிருந்து ஆங்கிலத்தின் வழி தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பது பெருகிவருகிறது. தமிழ் கற்கும் மாணவர்கள் –இதில் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களும் சேர்த்தி-உலகம் முழுவதும் பரவியிருக்கும் இன்று ஆங்கிலம் தமிழின் பயிற்றுமொழியாக விளங்குவதைத் தடுக்க முடியாது. இது ஒன்றே வழி என்பதல்ல; இதுவே நடைமுறையில் உலகச் சூழலில் பெருவழி.

உலகளாவிய நிலையில் தமிழ் கற்கும் மாணவர்களின் தமிழ் கற்கும் நோக்கம் பலதரப்பட்டது என்று சொன்னோம். இதில் ஒன்று பேச்சுத் தமிழைக் கற்பது. இது தமிழ்க் கல்வியில் புதிதாக வந்துள்ள மாற்றம். இந்தத் தேவையைத் தீவிரமாக மறுப்பவர்களும் இருக்கிறார்கள். பேசும் தேவையை வற்புறுத்தினால், இவர்கள் செந்தமிழையே பேசும் தமிழாகக் கற்பிக்க வேண்டும் என்பார்கள். அயல் மாணவர்களுக்கு வேண்டுமானால் தமிழ்நாட்டு மாணவர்களைப் போல இயல்பாகத் தமிழ் பேசும் தேவையை நிறைவுசெய்யலாம் என்று இவர்களில் சிலர் கொஞ்சம் விட்டுக்கொடுத்தாலும், பேச்சுத் தமிழ் எல்லோருக்கும் வேண்டும் என்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள். புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்கள் பண்பாட்டுத் தொடர்புக்காகத் தமிழைப் படித்தாலும், அதற்காக இலக்கியத் தமிழைப் படித்தாலும், அது ஒன்றே அவர்கள் தேவையை நிறைவுசெய்யப் போதுமானது அல்ல. அவர்கள் தமிழ்த் திரைப்படங்களை ரசிக்கப் பேச்சுத் தமிழ் வேண்டும்; தங்கள் தனி அடையாளத்தைத் தமிழ் பேசி நிறுவிக்கொள்ளப் பேச்சுத் தமிழ் வேண்டும்; தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள ஆங்கிலம் தெரியாத உறவினர்களின் உறவை வலுப்படுத்த பேச்சுத் தமிழ் வேண்டும்.

இந்தத் தேவையை அரைமனதாகப் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒப்புக்கொள்பவர்களுக்கும் தெருக்களில் தமிழ் வழங்கும் நாடுகளில் பேச்சுத் தமிழ் பள்ளிகளில் தீண்டத்தகாத ஒன்று. இவர்களுக்குப் பேச்சுத் தமிழ் தெருக்களில் படிக்க வேண்டிய மொழி, வகுப்பறைகளில் அல்ல எனபது அவர்கள் வாதம். இந்தத் தீண்டாமை உணர்வு நீங்குவது தமிழ்க் கல்வியின் இன்றைய தேவைகளில் ஒன்று. தமிழை வகுப்பறைக்கு வெளியே பேசி வளரும் சிறாரும் பேச்சுத் தமிழைப் பிழையறப் பேசுவது அவசியம். தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை; ஆங்கிலம் கலக்காமல் பேசத் தெரியவில்லை என்பது போன்ற கவலைகள் பத்து ஆண்டுகள் தமிழை முறையாகப் படித்த மாணவர்களைப் பற்றியும் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்தக் கவலைகள் போக வேண்டுமென்றால் பேச்சுத் தமிழைக் கற்பிப்பது அவசியம். பேச்சுத் தமிழே பிழை என்னும் உணர்வு போனால்தான் அதைப் பிழையின்றிப் பேசுவது தமிழ்க் கல்வியின் நோக்கங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும்.

தரமான பேச்சுத் தமிழ் (Standard Spoken Tamil) என்று ஒன்று இல்லை; வட்டாரப் பேச்சுகளும், சாதிப் பேச்சுகளுமே உண்டு என்று வாதிடுபவர்களும் உண்டு. இவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கியதில்லை; சினிமா பார்ப்பதில்லை என்றே சொல்ல வேண்டும். பேச்சுத் தமிழ் பாடத் திட்டத்தில் இடம்பெறும்போது தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் தனியே தரமான பேச்சுத் தமிழ் உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். இரண்டு பேச்சுத் தமிழுக்கும் தமிழில் இலக்கணம் எழுதவேண்டிய தேவை இன்று இருக்கிறது. பேச்சுத் தமிழைக் கற்பிக்கும்போது ஆசிரியர்களுக்கு இது உதவும். தமிழ் இரட்டை வழக்கு உள்ள மொழி (diglossic language) என்பது தெரிந்த செய்தி. இரண்டையும் பாடத்திட்டத்திற்குள் கொண்டுவருவதே புதிய செய்தி. இரண்டு வழக்கையும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கற்றுக்கொடுக்கும்போது அதற்கு ஒரு பயிற்சி முறை (pedagogical method) உருவாக்க வேண்டும். பேச்சுத் தமிழைத் தமிழ் எழுத்துகளில் எழுதப் பலரும் ஏற்றுக்கொளளும் வகையில் ஒரு எழுத்துக்கூட்டு முறைப்பாடு (spelling system) உருவாக வேண்டும். மாணவர்களின் கற்கும் சுமை குறையும் வகையில் இரட்டை வழக்கைக் கற்பிக்கும் முறை உருவாக வேண்டும். இன்று இரட்டை வழக்கை அயல் மானவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களிடையே இதற்குப் பின்பற்றும் முறையில் வேறுபாடு இருக்கிறது. இந்த முறைகளின் அறிமுகம் தன்னார்வத் தமிழாசிரியர்களுக்குத் தேவை.

தமிழ் கற்பிக்கும் சாதனங்கள் அச்சுப் புத்தகங்களோடு நிற்கவில்லை. மணலில் விரலால் நெடுங்கணக்கை எழுதிப் படித்த காலத்திலிருந்து சிலேட்டுப் பலகைக்குத் தாவியதைப் போல, அச்சிலிருந்து மென்பொருளுக்குத் தாவுவதற்கு முயற்சிகள் தேவை. மாணவர்கள் தமிழை நண்பர்களுடன் செய்தி பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்தும் புதிய தொடர்புச் சாதனங்களில் வழங்கும்படி செய்வது தமிழை மாணவர்களின் வாழ்க்கையோடு இணைப்பதற்குத் தேவையான ஒன்று. இன்று பாடப் புத்தகங்களில் உள்ள தமிழ் இதற்குப் பொருந்தாது. மாணவர்களைத் தன்பால் ஈர்ப்பதற்கு, அவர்கள் தமிழைக் கட்டாயத்திற்காக அல்லாமல் விரும்பிக் கற்பதற்கு, செய்ய வேண்டிய பலவற்றில் பல்லூடக வழி (multi media) தமிழைக் கற்பிப்பதும் ஒன்று. கண்ணுக்குக் கவர்ச்சியாகவும் காதிற்கு இனிமையாகவும் தமிழ்ப் பாடங்களை மாணவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் கற்பது ஒற்றையடிப் பாதை அல்ல; அது பல்வழிச் சாலை. மாணவர்கள் தங்கள் வேகத்தில் பயில வகை செய்வது இப்போது தேவை. ஆசிரியர் இல்லாமல் தன் முயற்சியில் தமிழைக் கற்க வசதிகளும் தேவை. இதற்கெல்லாம் துணைசெய்ய இன்று கணினி இருக்கிறது. கரும்பலகை போல், கணினியைக் கற்றுக்கொடுக்கும் சாதனமாகப் பயன்படுத்தும் திறனைப் பெறுவது தமிழாசிரியர்களுக்கு இன்றியமையாததாகிறது. இந்தத் திறன் அச்சுப் புத்தகத்தை அல்லது அதன் மாதிரியைக் கணினியில் ஏற்றுவது அல்ல. மொழி கற்கும் மென்பொருள் அச்சுப் புத்தகத்தின் எண்வயமாக்கப்பட்ட வடிவம் அல்ல. கணினி தரும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பாடங்கள் தயாரிக்க வேண்டும். இதைச் செயல்படுத்த, மேலே சொன்னபடி தமிழ் கற்ற கணினி வல்லுநர்களின் கூட்டுறவு தேவை.

தமிழ் கற்பது இன்று உலகளாவி நிற்கிறது. தமிழ் மண்ணில் பிறந்தவர்களும் தமிழ் பயில்கிறார்கள்; புலம் பெயர்ந்தவர்களும் பயில்கிறார்கள். இப்படி அது பன்னிலை கொண்டதாக இருக்கிறது. கற்றலில் முதல் மொழியாகவும் இருக்கிறது; இரண்டாம் மொழியாகவும் இருக்கிறது, அயல் மொழியாகவும் இருக்கிறது. தமிழைப் பேசத் தெரிந்தவர்களும் படிக்கிறார்கள்; கேட்டும் பேசாமல் வளர்ந்தவர்களும் படிக்கிறார்கள்; தமிழின் பெயரைமட்டுமே கேட்டவர்களும் படிக்கிறார்கள். சிறு வயதிலும் படிக்கிறார்கள்; வயது வந்தபின்னும் படிக்கிறார்கள். தமிழின் இலக்கியத்திற்காகவும் படிக்கிறார்கள்; தமிழ் நாட்டில் பயணம் செய்வதற்காகவும் படிக்கிறார்கள். வெவ்வேறு நாடுகளில் உள்ள கல்விப் பாடத்திட்டங்களின் கீழ், அங்கு விதிக்கப்பட்டுள்ள தமிழ்க் கல்வியின் நோக்கங்களைப் பின்பற்றிப் படிக்கிறார்கள். தமிழ் கற்பதன் எல்லா வகைத் தேவைகளுக்கும் தனித்தனிப் பாடப்பொருள்கள் (pedagogical materials) தயரிப்பது சாத்தியம் அல்ல; தேவையும் அல்ல. தமிழ் கற்பிக்கும் முறை பல வகைப் பாடப்பொருளகளைப் பொறுக்கி, அவற்றை வேண்டும் வகையில் இணைத்து மாணவர்களுக்குத் தருவதாக அமைய வேண்டும். ஆங்கிலத்தில் இதை modular approach என்பார்கள். தமிழில் கூட்டு முறை எனலாம். இதற்குப் பலர் தயாரித்த, தெரிந்தெடுக்கப்பட்ட, மென்பொருளாக எழுதிய பாடப்பொருள்களை ஒரு இணைய தளத்தில் ஏற்றி, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் கோர்த்து அளிக்க வகைசெய்ய வேண்டும். தமிழ் உலக மொழி என்றால் அதை உலகெங்கும் உள்ளவர்கள் கற்கும் வகை செய்ய வேண்டும். அதைச் செய்யத் தமிழைப் பார்க்கும் பார்வையை ஒரு அரசியல் சித்தாந்தத்திற்குள் அடக்குவது உதவாது. தமிழை வணங்கும் மொழியாக இருத்தாமல் வழங்கும் மொழியாக ஓடவிட வேண்டும். தமிழைக் கொண்டாடும் மொழியாகச் சுருக்காமல் அதைப் பேசுபவர்களை முன்னே கொண்டுசெல்லும் மொழியாக விரிக்க வேண்டும். இதற்குத் தமிழ்ப் பாடங்கள் தயாரிப்பது அரசுகளின் அல்லது சில தமிழறிஞர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதும் உதவாது. தமிழ்ப் பாடங்கள் உருவாக்குவது திறந்தவெளிப் படைப்பாக (open source), கூட்டு முயற்சியாக மாற்றம் பெறுவது முக்கியமான தேவை. தகவல் தொழில்நுட்பத்தால் நெருங்கி வரும் உலகில் இது சாத்தியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *