இரா. தீத்தாரப்பன்

சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதல் தேதியில் சூரியனைப் பூஜித்து பொங்கல் வைத்துக் கொண்டாடும் நாள்! சூரியன் தெற்கோரத்திலிருந்து வடக்குமுகமாகச் செல்ல ஆரம்பிக்கும் முறைமையைக் கொண்டாடும் நாள்! காட்டில் மிருகம் போல வேட்டையாடித் திரிந்து கொண்டிருந்த மனிதன் தன் உணவைத் தானே உற்பத்தி செய்து மனிதனாக உருவாகிய நாள்!

அதுவே அறிவு பிறந்த நாள் என்பதை எண்ணி ” நாடிப் புலன்கள் உழுவார் கரமும்” என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறுவார். பாரதியாரும்” உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பெருமைப் படுத்துவார். இவ்வளவு பெருமைக்கும் உரிய தமிழர் திருநாள்! அதுவே நாம் கொண்டாடும் பொங்கல் திருநாள். இந்த நாளிலிருந்து தொடங்குவது தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழ் அறிஞர்கள் கலந்து பேசி முடிவு செய்தார்கள்.

சங்க காலத்தில் “தை நீராடல்” என்று கொண்டாடப் பட்டது. பின்னால் வந்த ஆண்டாள் கிருஷ்ணனுக்கு உகந்த மாதமான மார்கழியில் திருப்பாவை பாசுரங்கள் பாடி “மார்கழி நீராடல்” என்று கொண்டாடினாள். திருவள்ளுவர் ’உழவு’ எனும் அதிகாரத்தில் உழவன், பிறதொழில்களைச் செய்பவர்களைவிட மட்டுமல்ல, அரசன், துறவி ஆகியோரை விடவும் உயர்ந்தவன் என்று காட்டுகிறார். இன்றைய உலகில் பேசப்படும் “பொருளாதாரம்” என்பது அடிப்படையில் உழவில் இருந்து பிறந்தது தான்! முதலில் பண்டமாற்று முறையில் தொடங்கிய பொருளாதாரம் இன்று வெறும் காகிதப் பணத்தை நம்பி இருக்கிறது. மனிதன் கரன்சி, டாலர் நோட்டுக்களில் புரண்டாலும் பசி வந்தால் உணவை நாடியே அவன் வந்தாகவேண்டும்! அந்த உணவை,
மனிதனின் அடிப்படை ஆதாரத்தை, உற்பத்தி செய்யும் உயர்ந்த மனிதன் தான் உழவன்.

அத்தகைய பெருமைசால் உழவையும் உழவனையும் பெருமைப்படுத்தும் விழாவே பொங்கல் விழா!

படத்திற்கு நன்றி : http://www.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=899&title=pongal-marks-the-cultural-celebration-of-tamil-people

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *