சூரியனெனும் உழவன்

0

தமிழ்த் தேனீ

                                                                                                                                திரு வள்ளுவன் மனதுழுதான்,

         மறுவள்ளுவன் வயலுழுகிறான்

    உழுகின்ற நாளெல்லாம் திருநாளே

                           பரிதியாய் பரிவாய் அவனெழுகின்ற திருநாளே

                     அவன்   வாராத    நாளென்றும் வெறு நாளே

        கதிரவன் தானேஎழுகிறான் கதிர்களால் உழுகிறான்,

ஏழு வண்ணக் குதிரைகள் தன் தேரில் பூட்டியே

     திண்ணமாக வருகிறான் வாழ்வின் இயலுழுகிறான்

தரணியிலே தர்மத்தை பகிர்ந்தளிக்க வருகிறான்

சுற்றுப்பாதை தன்னிலே கட்டுப்பட்டு வருகிறான்

     தர்மமென்னும் விதியையே நமக்களிக்க வருகிறான்

பட்டுக் கதிர் சுட்டியே தொட்டு நம்மை அணைக்கவே

தொடர்ந்து மிளிர வைக்கவே, கெட்டவைகள் விலக்கியே

வாழ்வை ஒளிர வைக்கிறான், பட்டு தூய்மையாக்கியே

மனதைக் குளிர வைக்கிறான், கொட்டும் ஒளி அருளியே

சுழன்று கொண்டே வருகிறான்

தொழுதாலும் தவிர்த்தாலும் பொதுவாக அருள்கிறான்

மனிதத்தின் வேருக்கு வலுவாக மிளிர்கிறான்

மண்ணை வளம் செய்ய தரமாக வருகிறான்

முப்போக விளைச்சலுக்கு உரக் கதிராக வருகிறான்

தீமை கண்டு பொங்கியே தீமைகளை அழிக்கவே

போகி போகி போகி என்று தீயிட்டுக் கொளுத்துவோம்

உலகுக்கே பொதுவான தர்மத்தின் சக்கரம்

தாயாக நம்மையே தாங்குகின்ற நற்கரம் நீட்டுகின்ற

நற்கரம் அருளுகின்ற பொற்கரத்தான் தாளை வணங்குவோம்

அவனளித்த அரிசியும், அருமையான வெல்லமும்,

விளைந்து வந்த கரும்பையும், வாழவைத்த வாழையும்

அவனளித்த நெருப்பையே அடுப்பில் அங்கு மூட்டியே

அதன் மீது இருத்தியே ஆக்கும் பொங்கல் பொங்கவே

பாலும் ஊற்றிக் காய்ந்ததும் பொங்கிவரும் வண்ணமாய்

பொங்குகின்ற போதிலே பொங்கலோ பொங்கலென்று

ஓங்கும் குரல் எழுப்பியே ஒளியவனை வணங்குவோம்

பொங்குகின்ற நம் மனதைப் பொங்கலிட்டுப் பதப்படுத்தி

தங்குகின்ற மனிதம் தனைத் தாங்குகின்ற சக்கரம்

நன்மை கொண்டு களிக்கவே, தீமை கண்டு பொங்குவோம்

தீமைகளைக் கழித்துவிட்டு நன்மைதனை வளர்க்கவே

வாழையடி வாழையாய் வந்ததொரு நன்னாளாம்

ஆகாத சோர்வகற்றி ஆன்மாவை வளமாக்கி

புத்தம் புதுமலராய் நித்தம் நித்தம் நம் மனமும்,

மலரும் வண்ணம் ஆரியமோ திராவிடமோ

சாதி மத பேதமின்றி வைய்யமெல்லாம் ஒளிகூட்ட

தவறாமல் மலர்ந்து வரும் தர்மசக்கரம்,

தைமாதத் திருநாளில் விடியும் வேளை

நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே,

நல் வேளயது தனிலே முத்தான அரிசியுடன்

இனிப்பான வெல்லமதை, அளவோடு நாம் சேர்த்து,

காமதேனு மடிகறந்த அமுதமென்னும் பால் சேர்த்து,

பொங்கி வரும் வேளையிலே, பொங்கலோ பொங்கல்

என்றே நம் வாழ்வும் இன்பமுற இயற்கையின்

தாள் பணிந்தே இறைவன் நாமமது நாம் சொல்லி

நல்லறமும் தருமங்களும், பொங்கலோ பொங்கலென்று

மனமொத்து உரத்துச் சொல்லி,வையகத்து மாந்தரெல்லாம்

வாழ்வாங்கு வாழ்ந்திடவே, பொய்யகற்றி மெய்யுணர்ந்து

பொங்கல் திருநாளில் மங்கலமாய் நாம் களிப்போம்

நல்லேர் உழவர்களும், சொல்லேர் உழவர்களும்

மனமென்னும் பூமிதனை உழுது விளைத்தல் போல்

ப்ரபஞ்ஜத்தை தினம் உழுது, ஞான ஒளி பரப்பும்

இளம்பரிதி இறைவனுக்கே கதிரவனின் காலடியில்

நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு நாளாய் எண்ணி

நல்வாழ்வு தனை நாடி நன்மைகளைப் பொங்கிடுவோம்

அன்புடன்

தமிழ்த்தேனீ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *