தை பிறந்தால் வழி பிறக்கும்

0

நாகேஸ்வரிஅண்ணாமலை

தமிழக அரசு தை மாதம் ஒன்றாம் தேதியை புதுவருடப் பிறப்பாகக் கருதுகிறது. ஆங்கில வருடப் பிறப்பன்று சில புது பிரதிக்ஞைகளை எடுத்துக்கொள்வது போல் பொங்கல் திருநாளன்றும் சில பிரதிக்ஞைகளை நாம் எடுத்துக்கொள்வோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். நமக்கும் சில புது வழிகள் பிறக்கட்டுமே.

பழையன கழிதலும் புதியன புகுதலும் பொங்கல் திருநாளன்று நடக்க வேண்டிய சிறப்பு அம்சங்கள். அன்று நாமும் சில பழைய, வேண்டத்தகாத பழக்கங்களை விட்டுவிட்டுச் சில புதிய நல்ல பழக்கங்களைப் பின்பற்றலாம்.

நாம் ஏற்றுக்கொள்ளப் போகும் புதிய பழக்கங்களை முதலில் வீட்டிலேயே ஆரம்பிக்கலாம். முதலில் உணவுப் பொருள்களை வீணாக்குவதை (நீங்கள் வீணாக்குபவர்களாக இருந்தால்) முழுவதுமாக நிறுத்திவிடலாம்.

உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பார்கள்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்,மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் என்பது திருவள்ளுவர் வாக்கு.

தங்கள் உழைப்பைச் சிந்தி உழவர்கள் விளைவித்த தானியங்களை ஒரு போதும் வீணாக்காதீர்கள். அவர்கள் அப்படித் தங்கள் வேர்வையைச் சிந்தி உழைக்கவில்லை என்றால் நமக்கு இந்த உணவு கிடைக்காது. அவர்களுக்கும் அவர்கள் விளைவித்த உணவிற்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டுமென்றால் உணவை வீணாக்காமல் இருப்பது ஒன்றுதான் சிறந்தவழி. உழவர் திருநாளன்று உழவர்களின் உழைப்பிற்கும் நன்றி செலுத்துவோமே.
வீட்டில் வேலைபார்க்கும் வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள் ஆகியோரை நன்றாக நடத்த வேண்டும் என்ற புதிய நல்ல பழக்கத்தை விருப்பமாக ஏற்றுக்கொள்வோம். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, வீடு இருக்கிறது, அங்கு நிறைய வேலைகள் இருக்கின்றன, அவர்களும் அன்று பொங்கல் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று எண்ணி அவர்களுக்கு அன்று முதல் ஒவ்வொரு பண்டிகை நாளன்றும் விடுமுறை கொடுப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம். இந்தப் பழக்கத்தை நீங்கள் ஆரம்பித்த புதிதில் உங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் அல்லது உங்கள் வேலைக்காரி வேலை பார்க்கும் மற்ற வீட்டுக்காரர்கள் தாங்களும் அந்தப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டுமோ என்று எண்ணி எதிர்ப்புத் தெரிவிக்கலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தால் அவர்களும் நாளடைவில் அதைப் பின்பற்ற ஆரம்பிக்கலாம். இந்த நல்ல பழக்கத்தை முதலில் ஆரம்பித்தவர் என்ற பெயரும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களிடம் வேலை பார்ப்போர் மறுநாள் வேலைக்கு வந்து தாங்கள் பண்டிகையைக் கொண்டாடிய விதத்தை உங்களிடம் மகிழ்ச்சியோடு தெரிவிக்கும்போது உங்களுக்கு ஏற்படும் சந்தோஷமே அலாதியானது.

வீட்டிற்கு வெளியில் சென்று அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்குக் கீழ் வேலைபார்ப்பவர்களை அன்று முதல் நன்றாக நடத்துவதாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம். அவர்களை அரட்டி மிரட்டி வேலைவாங்கும் சந்தோஷத்தைவிட அவர்களை இனிமையாக நடத்தி வேலைவாங்கினால் அவர்களுக்கும் அது சந்தோஷத்தைக் கொடுக்கும், உங்களுக்கும் மனநிறைவு உண்டாகும்.

இன்று முதல் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டி அந்த இடங்களை அசுத்தப்படுத்துவதை முற்றிலுமாக மறந்துவிடலாம். உங்கள் குழந்தைகளுக்கும் இந்தப் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கலாம். இப்போது அந்தப் பழக்கத்தை உங்களிடமிருந்து கற்றுக்கொண்டால் பின் அதை ஒரு போதும் அவர்கள் மறக்க மாட்டார்கள். அமெரிக்காவில் சிறு பிள்ளைகள் கூட ஒரு சாக்லேட்டைத் திறந்தால் அந்தக் காகிதத்தைப் போடுவதற்கு குப்பைக் கூடை எங்கே என்று தேடும். அப்படிப் போடக் குப்பைக் கூடை எல்லா இடங்களிலும் இருக்கும் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். நம் நாட்டில் பெரியவர்கள் கூட குப்பைகளைக் குப்பைக்கூடையில் போடும் வழக்கத்தைப் பின்பற்றுவதில்லை. உங்கள் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது எப்படி உங்கள் கடமையோ அதே போல் உங்கள் ஊரையும் சுத்தமாக வைத்திருப்பது உங்கள் கடமை.

இந்தப் புத்தாண்டன்று உங்களால் முடிந்த அளவு பிறருக்கு உதவ முயலுங்கள். இனிமேலும் ஒவ்வொரு பண்டிகையன்றும் ஒரு சிலருக்காவது உதவ வேண்டும் என்று பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் வேலைபார்ப்பவர்கள், ஏழை உறவினர்கள் ஆகியோருக்கு நிறைய தான தருமங்கள் செய்யுங்கள். பகிர்ந்துண்டு வாழ்வதின் இன்பம் மிகப்பெரிது. அதை நீங்கள் உணர்வீர்கள்.

உழவர்களின் நண்பனாகிய மாடுகளின் மீது மட்டுமன்றி மற்ற எல்லா மிருகங்களின் மீதும் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்ளலாம். மிருகங்கள் வாயில்லாச் சீவன்கள். அவற்றிற்குப் பேசத் தெரியாது. அவற்றைத் துன்புறுத்தாதீர்கள். இறைவன் படைப்புகளில் ஒன்றான அவற்றையும் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அப்படி நடந்துகொள்வதும் இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.

இந்தப் பொங்கல் – புத்தாண்டில் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க என் நல்வாழ்த்துகள்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

படங்களுக்கு நன்றி : http://www.pongalfestival.org/pongal-pictures.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *