தமிழ்த்தேனீ

பொங்கலென்று சொன்னாலே பொங்குகின்ற நல்லுணர்வு
நன்றிசொல்லும் நம் உணர்வு நாம் நவில காரணமாய்
காணுகின்ற நல்லேர் உழவர்களும் சொல்லேர்
உழவர்களும் சுற்றி வந்து கும்பிட்ட நல்லேர் உழவர்களே

வரப்புயர நீர் உயரும் நீருயர நெல் உயரும்
சொல்லாட்சி புரிந்த நங்கை இளவயது கிழவியவள்
அவ்வை சொன்ன மொழி ஆய்ந்தே சொன்ன வழி
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

எழுத்தாணி பிடித்தீரடி வேந்தன் வள்ளுவன் சொன்னதும்தான்
அத்துணை பேருக்கும் நன்றி சொல்ல வார்த்தை
தேடி முத்தான வழி கண்டேன் காரணியாம்
உழவருக்கு ஒர் நன்றி நாம் சொல்வோம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த நல்லதோர் முதுமொழியாம்
தினம் தினம் புதுப்பிக்கும் நம் உடலின் திசுக்களுமே
சோர்வகற்றி வளம் சேர்க்கும் நம் மனமே,

புத்தம் புதுமலராய் நித்தம் நித்தம் மலர்ந்து வரும்
ஆதவனின் ஒளியேற்றும் இயற்கை விந்தை
மாதவனின் தோற்றம் போலும் வைய்யமெல்லாம்
ஒளிகூட்டும் தைமாத பொங்கலன்று விடியும் வேளை

நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே,
நல்வேளயதுதனிலே முத்தான அரிசியுடன் இனிப்பான
வெல்லமதை அளவோடு நாம் சேர்த்து,
காமதேனு மடிகறந்த கலப்பில்லா பால் சேர்த்து,

பொங்கி வரும் வேளையிலே முப்பாலும் பொங்கிடவே
பொங்கலோ பொங்கல் என்றே முத்தமிழில் முழங்கிநாமும்
நம்மையும் படைத்து ,நாம் வாழ இத்துணை இன்பங்களையும்
படைத்த இயற்கையென்னும் இறைவனின் நாமம் சொல்லி

பொங்கல் பொங்குதற்கு உதவுகின்ற உழவர்களை,
மனதார நாம் நினைத்து,அவர் நமக்கு உதவுகின்ற
நல்லறமும் தருமங்களும் ,பொங்கலோ பொங்கலென்று
உளமார உரத்துச் சொல்லி,வைய்யகத்து மாந்தரெல்லாம்

வாழ்வாங்கு வாழ்ந்திடவே,பொய்யகற்றி மெய்யுணர்ந்து
வைய்யகத்து உழவர்க்கெல்லாம் வாழ்வாங்கு நன்றி சொல்லி
வைய்யகத்தை தினம் தினமே கதிரென்னும் கலப்பை
கொண்டு சக்தியென்னும் ஏர் கொண்டு உழுகின்ற சூரியனின்

தாள் பணிவோம் ஞான ஒளி பரப்பும் ஆதவனின்
மோனத் தவத்தை முழுமையாய் வணங்கிடுவோம்
அங்கெங்கும் போகாமல் இங்கிருந்தே உழவருக்கோர்
நன்றி சொல்வோம் அத்துணை கடவுளுக்கும் போய்ச் சேரும்!!!!!

2 thoughts on ““பொங்கல் திருநாள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *