பெருவை பார்த்தசாரதி

‘தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழிக்க’ விழைந்த பாரதி பிறந்த தமிழ்த்திருநாட்டில், தமிழர் திருநாளாம் பொங்கல் நாளன்று வளமான வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வோம். இன்று நாம் நகரத்தில் வாழ்ந்தாலும், ‘பொங்கல்’ என்றதுமே கரும்புத்தோட்டமும், மஞ்சள் காடுகளும் நிறைந்த கிராமம் நம் நினைவுக்கு வருவது இயற்கைதான். ஆறு, குளம், கோவில், சத்திரம், வாய்க்கால் அனைத்தும் அமைந்த செழுமையான கிராமத்தை நம்மால் மறக்க முடியுமா?…பிறந்த கிராமத்துக்குச் செல்கின்ற போது, எல்லை சாமிகளின் துணையோடு, அதிகாலையில் ஆலய மணியின் ஓசையும், அந்தி சாயும் வேளையில் ஆன்றோர்கள் கட்டிய அன்னசத்திரமும் அனைவரையும் அன்போடு வரவேற்கும். குதூகலத்தோடு பள்ளங்களில் பாசத்தோடு பாய்ந்தோடும் காவிரி ஆறு வளம் பெருக்கும் கிராமங்களில் கொண்டாடப்படும் உழவர் திருநாளுக்கு, மற்ற பண்டிகையை விட தனிச்சிறப்பு தமிழகத்தில் உண்டு.

மார்கழி நிறைநாளில் தைமாதம் முதல் நாளில் உலகை உய்ய வைக்கின்ற சூரியன், ஒரு சக்கரத்தோடு, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் தென் திசையில் ஆறு மாத பயணம் முடித்து, தேரின் சக்கரத்தை, வடதிசைக்குத் திருப்பி, தை மாதம் முதல் நாள் அன்று அடுத்த ஆறு மாதப் பயணத்துக்கு ஆயத்தமாகும். இந்த நாளன்று, இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் பொங்கல் திருநாள் கொண்டாடப் படுவது அனைவரும் அறிந்ததே. ‘உத்தராயணம்’ என்னும் வடதிசைப் பயணத்திற்கு வழிவகுப்பதாலும், உலகம் உய்ய ஆதித்யனின் அனுகூலம் அவசியம் என்பதாலும் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியை தமிழ்மக்கள் தம் வழக்கத்தில் பயன்படுத்தாமல் இருக்காமல் இருக்க மாட்டார்கள். பயிர்கள் எல்லாம் தழைத்தோங்கி நெற்கதிர்களை தலையில் தாங்கிக்கொண்டு, வயல் வரப்புகளில் நடைபாதையெல்லாம் அடைத்துக்கொண்டு, செல்லுகின்ற வழி தெரியாத அளவுக்கு நெற்பயிர்கள் நிரம்பிக் கிடக்கும். அந்தக் காலத்தில், கால்டாக்ஸி, ஷேர் ஆட்டோவெல்லாம் கிடையாது என்பதால், எங்கு சென்றாலும் கால் நடையாகத்தான் செல்லவேண்டும், அறுவடைக்கு முன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு, கதிர்களின் ஊடே குறுக்கே செல்லமுடியாமல், பல மைல் கடந்து, ஊர்சுற்றிக் கொண்டுதான் செல்லவேண்டும். விவசாயிகள் நெற்கதிர்களை அலட்சியம் செய்யாமல், கால்கள் படாமல், கையால் பயிர்களை விலக்கியபடியே வரப்புகளில் நடந்து செல்வது வழக்கம். நெல்மணிகளை மணிமகுடம் போல் தலையில்தந்து, நாணத்தோடு சாய்த்து நிற்கும் பயிர்களை அறுவடை செய்த பிறகு, ‘தைத் திங்களுக்கு’ பிறகு நடக்கின்ற பாதைகள் தெளிவாகத் தெரிய வழி பிறக்கும் என்ற அர்த்தத்தில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி வழக்கத்துக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.

வையம் தழைத்தோங்க மூலமாக விளங்கும் ஆதித்யனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, புதிய மண்சட்டிப்பானையில், புத்தரிசியிட்டு பொங்கல் செய்து, கதிரவனுக்குப் படைத்து மகிழும் நாள் மகரசங்கராந்தியாம். அன்று, கிராமங்களின் வீட்டு வாசலில் புதிதாக முளைக்கும் அடுப்புகளின் மேல் மெகந்தி இட்ட பொங்கல் பானைகளின் கழுத்தில் காணி நிலத்தில் விளைந்த கரும்புதுண்டு, மஞ்சக்கொத்து, இஞ்சி இலை ஆபரணங்களோடு நல்ல நேரம் கணிக்கப்பட்டு பொங்கல் வைக்கத் புதுப்பானைகள் தயாராக இருக்கும். எப்போதாவது நம் குழந்தைகளோடு, பொங்கல் கொண்டாட சொந்த கிராமத்துக்குப் போகும்போதெல்லாம் துள்ளிக்குதிக்கும் இளங்கன்றையும், பசும்பாலை பக்கெட்டில் கறப்பதையும் நகரத்துவாழ் பசங்க வேடிக்கைப் பார்ப்பார்கள். பொங்கலுக்கு அடுத்த நாள் “எங்க ஏரோட்டம் நின்னு போன உங்க காரோட்டம் நின்னு போகும்னு” கவியரசரின் பாடல் வரிகளை நினைவுபடுத்தும் விதமாக சவால் விடும் காளை மாடுகள் ஜல்லிக்கட்டுக்குத் தயாராகி தன் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டிக்கொண்டு, மேக்கப் முடிந்தவுடன், மிடுக்காக கிராமத்து வீதிகளில் வலம் வரும். சுட்டிப் பசங்க, சிறிய சட்டிப் பானையில், தோலைக் கட்டி, தட்டி எழுப்பும் “பொங்கலோ பொங்கல்” என்ற ஒலி எழுப்ப, நான்கு நாட்கள் நீடிக்கும் தனிச்சிறப்பு பெற்றது ‘பொங்கல் திருநாள்’ ஒன்றுதான்.

  •  தீய எண்ணெங்களைச் சுட்டெறிக்கும் விதமாக முதல் நாள் ‘போகி’,
  •  உயிர்களின் இயக்கத்துக்கு மூலமாக விளங்கும் கதிரவனுக்கு மறியாதை செய்யும் இரண்டாவது நாள் ‘பொங்கல்’,
  •  விவசாயம் தழைக்க உறுதுணையாக இருக்கும் விலங்கினங்களை மதிக்க ‘மாட்டுப் பொங்கல்’
  •  மூன்று நாள் விழாவிற்கு அனைவரின் ஆசி கேட்கச் செல்லும் கடைசி நாள் ‘காணும் பொங்கல்’…………

இந்நன்னாளில், பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் விதமாக ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், அன்றயப் பத்திரிகைகளில் கவிஞர்கள் புதுக்கவிதைகள் புனைந்து அனைவர் மனதையும் பொங்க வைப்பதும் வழக்கம். கவியரசு முதல் கவிப்பேரரசு வரை தமிழர் திருநாளையும், மாசில்லாத கிராமங்களைப் பற்றியும் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். பொங்கல் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, திரையிசைக் கவிஞர் சிநேகன் அவர்கள் இயற்றிய மனதைக் கவர்ந்த பொங்கல் கவிதை ஒன்றையும் இங்கே நினைவு கூற விரும்புகிறேன். கிராமத்தில் பிறந்தாலும், இன்று பலர் பட்டணத்தில் வாழ்கிறார்கள், ஆனால் கிராம வாழ்க்கை நினைவுகள் பலருக்கு நெஞ்சை விட்டு அகலுவதில்லை. எளிய தமிழில் பழய நினைவுகளைத் தூண்டும் ஓர் புதுக்கவிதை:

பத்து காணி கரும்பு போட்டேன்,
அஞ்சு காணி மஞ்சள் போட்டேன்,
தொழுவம் முழுக்க ஏறுமாடு, தொழிலாளி ஆறு பேறு,
மூச்சு வாங்கும் தூரம் வரை கடலைக் காடும் எள்ளுக்காடும்,
மூச்சிறைக்க தூக்கம்போட, இருக்கு மூணு தென்னந்தோப்பு,
பொங்கலுக்குப் பொங்கலு,
எம்வீட்டுத் திண்ணையிலே ஏழுரு கூடியிருக்கும்,
எனாம பழங்கரும்ப ஈ, எறும்பு இழுத்துப் போகும்,
கொப்பரையில் வச்சப் பொங்கல்,
கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் பத்துநாளு பாக்கியிருக்கும்,

இப்படி வாழ்ந்ததெல்லாம் ஏழு வருஷமாச்சு:

மழ தண்ணி இல்லாம மாடு கன்னு செத்துப் போச்சு,
ஊரவிட்டு பாவிமக்க பொழப்பு தேடி ஓடுனாங்க,
என்ன செய்ய நான் மட்டும், கண்ணச் சுத்தி கருவட்டம்,
பக்கத்து ஊரு ராமசாமி பட்டணத்தில் இருப்பதாக
படம் போட்டுச் சொன்னாக,
உண்டியலுக் காசோட ஊரவிட்டுக் கெனங்புனேங்க,
ராமசாமிப் புண்ணியத்திலே அஞ்சுமாடிக் கட்டிடத்தில்,
காவ வேல கொடுத்தாக,
வேர்வ சிந்தி ஒழச்ச கட்ட,
வெறுமனே இருந்ததுல சோம்பேரியா மாறிப்போச்சு,
எழுந்து நின்னு வணக்கம் சொல்லி ‘கை’ எளச்சுப் போனதுங்க,
இங்கிலீசு பேச்சுக்கூட, இப்ப கொஞ்சம் புரியுதுங்க,
இங்கேயும் பொங்கலுண்டு, ரெண்டு முழக் கரும்போட,
டீ.வி பெட்டி பாத்துக்கிட்டே,
குக்கருல வச்ச பொங்கல்
பொங்கறது தெரியலீங்க!…

கிராமியச் சூழ்நிலையை அடிப்படையாக வைத்து எழுதிய கவிஞரின் அருமையான புதுக்கவிதையைப் படித்த மகிழ்ச்சியில், கிராமத்தின் பசுமை மாறாத நினைவுகள் மீண்டும் மலர்கின்றன. அந்தப் பிஞ்சுப் பிள்ளைப் பருவத்தில், கிராமிய சூழ்நிலையில் வளர்ந்த, அந்த நாள் ஞாபகத்தை!……..இன்று நினைவு கூறி எனது “பொங்கல் நல்வாழ்த்துக்களை” வல்லமை சார்பாக, வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் அகம் மகிழ்கிறேன்.

 

2 thoughts on ““பொங்கல் நினைவுகள்”

  1. எனது “பொங்கல் நல்வாழ்த்துக்களை” பகிர்ந்து கொள்வதில் அகம் மகிழ்கிறேன். புதுக்கவிதை:Super (O) Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *