“அந்த இனிய நாட்கள்”
நாகேஸ்வரி அண்ணாமலை
நான் வளர்ந்தது கூட்டுக் குடும்பத்தில். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தங்கை, பெரிய சித்தப்பா, பெரிய சித்தி, அவர்களது குழந்தைகள், சின்னச் சித்தப்பா, சின்னச் சித்தி, அவர்களது குழந்தைகள் என்று பெரிய குடும்பம். இத்தனை பேர் ஒன்றாக வாழ்ந்து வந்ததால் எப்போதும் மனஸ்தாபங்கள், பூசல்கள் வெடித்துக்கொண்டிருக்கும். ஆனாலும் உடனேயே சமாதானமும் ஏற்பட்டுவிடும். பெரிய சித்தி உறவினர் வட்டாரத்திற்கு வெளியே இருந்து வந்தவர். சின்னச் சித்தி சொந்த அத்தை மகள் – அதாவது சித்தப்பா சொந்த அக்கா மகளையே மணந்துகொண்டிருந்தார். அந்தக் காலத்தில் இது எல்லாம் சகஜம். சின்னச் சித்தி திருமணத்திற்கு முன்பே உறவினர் என்றாலும் அது என்னவோ பெரிய சித்தியைத் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அமெரிக்காவில் திருமணத்தைப் பதிவுசெய்துகொள்ளும் போது மணமகனும் மணமகளும் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் வரை உறவினர்களாக இருந்திருக்கக் கூடாது என்ற சட்டம் இருப்பது பற்றித் தெரிய வந்தது. அமெரிக்காவிலும் எப்போதாவது நெருங்கிய உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்துகொண்டார்களா என்று தெரியவில்லை.
வீட்டில் அதிகப் பேர் இருந்ததால் எப்போதும் ஏதாவது சமையல் நடந்துகொண்டிருக்கும். இப்போது போல் காஸ்அடுப்பு கிடையாது. மண்ணெண்ணெய் அடுப்பு கூட அம்மா வைத்துக்கொள்ளவில்லை. மிஞ்சிப் போன குழம்பைச் சுட வைக்க வேண்டுமென்றால் கூட அடுப்பைத்தான் மூட்ட வேண்டும். யாராவது விருந்தினர் வந்துவிட்டால் அவர்களுக்குக் காப்பி போட வேண்டுமென்றாலும் இதே நிலைதான். காலையில் மூட்டிய அடுப்பை இரவு வரை அணைக்க மாட்டார்கள் என்று எங்கள் பாட்டி எங்கள் வீட்டைப் பற்றிக் கூறுவார். அப்படி அணைக்கப்படாமல் இருந்தாலும் இடையிடையே அடுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கப்படும். அதனால்தான் அந்த ஓய்வு நேரத்தில் ஏதாவது தேவைப்பட்டால் அடுப்பை மூட்ட வேண்டியிருக்கும்.
அம்மா, சித்திமார் இருவர் ஆகிய யாரும் வேலைக்குப் போகவில்லை. வேலைக்குப் போகவில்லை என்றால் வெளியில் சென்று வேலை செய்யவில்லை என்று அர்த்தம். வீட்டில் வேலைக்குப் பஞ்சமில்லை. சதா நேரமும் பெண்கள் மூவரும் ஏதாவது வேலைசெய்துகொண்டிருப்பார்கள். ஓய்வு கிடைத்தால் குமுதம், விகடன் பத்திரிக்கைகள் படிப்பதுண்டு. எப்போதாவது அவர்களுக்கு சினிமாவுக்குப் போக அனுமதி கிடைக்கும். அதுவும் எல்லோரும் சேர்ந்து போக முடியாது. ஒரு நாளைக்கு அம்மா தலைமையில் குட்டிகள், இன்னொரு நாளைக்கு இரு சித்திமார்கள் என்று வரிசைமுறை வைத்துக்கொண்டுதான் போக வேண்டும். இம்மாதிரி பொழுதுபோக்கப் படிப்பது, சினிமாவுக்குப் போவது போன்ற பொழுதுபோக்குகளோடு எப்போதாவது உள்ளூரிலோ அல்லது வெளியூரிலோ திருமணங்களுக்குச் செல்வது இன்னொரு வகையான பொழுதுபோக்கு. இவற்றை விட்டால் வீட்டில் வேலை, வேலைதான்.
வீட்டில் எல்லோரும் சுத்த அசைவர்கள். அதனால் கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் அசைவ உணவு இருக்கும். அதிலும் பண்டிகை நாட்களில் கேட்கவே வேண்டாம். ஆனால் பொங்கல் பண்டிகை அன்று மட்டும் சுத்த சைவ உணவுதான். அந்த ஒரு நாளாவது வீட்டில் அசைவ வகையறா எதுவும் இருக்காது. நான் மிகச் சிறிய வயதிலேயே சைவமாகிவிட்டேன். அதனால் பொங்கலன்று எல்லோருக்கும் சைவச் சாப்பாடு என்பதால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
தீபாவளிக்கு வடை, பணியாரத்தோடு அதிரசம், முறுக்கு தயாரிக்கிறார்களோ இல்லையோ பொங்கலுக்குக் கண்டிப்பாக சர்க்கரைப் பொங்கல் இருக்கும். தமிழ்நாட்டில் கிடைக்கும் அச்சு வெல்லம், தேங்காய், முந்திரி, திராட்சை, நெய் எல்லாம் கலந்து தயாரித்த பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். மாதத்தில் ஒரு முறை என்று கூட அம்மா பொங்கல் செய்துவிடுவார். இருந்தாலும் பொங்கலன்று அது எப்போதையும் விட அதிகமாக ருசிப்பது போல் இருக்கும்.
கரும்பு சீசன் ஆரம்பித்ததிலிருந்து சித்தப்பா வீட்டிற்குக் கரும்பு வாங்க ஆரம்பித்து விடுவார். பொங்கலன்றும் கரும்பு வாங்கத் தவற மாட்டார். அன்று கட்டுக் கரும்பே வீட்டிற்கு வந்துவிடும். (சித்தப்பா பொருட்களை வாங்குவதில் மிகவும் சாமர்த்தியசாலி. மிகவும் தரமான பொருட்களாகவும் மலிவு விலையிலும் வாங்கி வருவார். இவருக்கென்று ஏமாறக் கூடிய வியாபாரிகள் இருக்கிறார்களா என்று நான் வியப்பதுண்டு. நானோ பொருட்கள் தரமாக இருந்தால் பேரம் பேசுவதே இல்லை. அவற்றை விற்பவர்கள் கேட்கும் விலையைக் கொடுத்துவிடுவேன்.)
கரும்பை நாமாக உரித்துத் துண்டுகளை வாயில் மென்று கரும்புச் சாற்றைக் குடிக்கும்போது ஏற்படும் இன்பமே அலாதியானது. வலுவிழந்துகொண்டிருக்கும் பற்களுக்கு என்ன ஆகுமோ என்றெல்லாம் கவலைப் படத் தேவையில்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்கு வந்தபோது கரும்பை ‘மிஸ்’ பண்ணினேன். கேன்களில் பதப்படுத்தப்பட்ட கரும்பு கிடைத்தது. அதைச் சாப்பிட்ட பிறகுதான் அதைச் சாப்பிடாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. இப்போது சில சீனக் கடைகளில் ஒரு விதமான கரும்பு கிடைக்கிறது. ஆனாலும் நம் தமிழ்நாட்டுக் கரும்பிற்கு எதுவும் இணையாகாது.
எங்கள் ஊர் பனங்கிழங்கு பெயர் போனது. அவற்றையும் அன்று வாங்கிப் பக்குவமாக அவித்துச் சாப்பிடுவோம். பொங்கல் என்றால் சர்க்கரைப் பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு என்ற மூன்றும் என் ஞாபகத்திற்கு வந்துவிடும். அமெரிக்கா வந்த பிறகு இவை மூன்று அரிதான பொருள்களாகி-விட்டன. பொங்கலை அமெரிக்க வீட்டில் தயாரித்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம். இங்கு கிடைக்கும் கரும்பை – அது நம் தமிழ்நாட்டுக் கரும்பிற்கு எந்த விதத்திலும் நிகரில்லை என்றாலும் – சாப்பிட்டுக்கொள்ளலாம். ஆனால் பனங்கிழங்கு தமிழ்நாட்டில் தவிர வேறு எங்கும் கிடைக்காது. பனங்கிழங்கு சாப்பிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இது சீசனில் மட்டும்தான் கிடைக்கும். நாங்கள் தமிழ்நாட்டிற்கு அந்தச் சமயம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் அதைச் சாப்பிடும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இந்தப் பொருட்களை எல்லாம் இப்போது ‘மிஸ்’ பண்ணுகிறேன் என்றால் அவற்றை மட்டுமா ’மிஸ்’ பண்ணுகிறேன்? அவற்றோடு என் இளமைக் கால அனுபவங்களையும்தான்.
“இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்”
நான் பனங்கிழங்கைச்சாப்பிட்டதே இல்லை முழுவதும் வட இந்தியாவிலேயே இருந்தமையால் எல்லாமே ரொட்டி ,சப்ஜிதான் உங்கள் பழங்கால நினைவு என்னையும் அந்தக்காலத்திற்கு இழுத்துச்சென்றது உங்கள் கட்டுரை படித்தப்பின் எனக்கும் பனங்கிழங்கு திங்கும் ஆசை வந்துவிட்டது