Author: டாக்டர்.சுபாஷிணி

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 85

    சைப்ரஸ் அருங்காட்சியகம், நிக்கோசியா, சைப்ரஸ்

    முனைவர் சுபாஷிணி

    ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களும் சந்திக்கும் இடத்தில் மெடிட்டரேனியன் சமுத்திரம் சூழ அமைந்திருக்கும் ஒரு தீவு சைப்ரஸ். இந்த காரணத்தினாலேயே பல பேரரசுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு நிலப்பகுதியாக இந்தத் தீவு அமைந்து, அதனால் இத்தீவிற்கு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பேரரசுகளின் ஆதிக்கத்தைச் சந்திக்க நேர்ந்தது.

    as1

    சைப்ரஸ் நாட்டின் வரலாறு என்பது தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் கி.மு.7500க்கும் முன்னரே இங்கு மனித குலம் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருப்பதாகச் சான்று அளிக்கின்றது. இங்கு பரவலாக மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மனிதர்களின் நடமாட்டம் கி.மு 10,000 வாக்கிலேயே Aetokremnos பகுதியில் வேட்டையாடிப் பிழைத்த மக்கள் இங்கு வாழ்ந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. நாடோடிகளாகத் திரிவதை விடுத்து கிராமங்களை அமைத்து மக்கள் வாழ்ந்ததற்கு இந்தப்பகுதியில் அறியப்பட்ட தொல்லியல் சுவடுகள் சான்றுகளாக இருக்கின்றன.

    as2

    இங்கே மக்களால் உருவாக்கப்பட்ட இன்றைக்கு ஏறக்குறைய 10,000 ஆண்டுகள் பழமையான கிணறுகள் இரண்டு இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. எட்டு மாத பூனை ஒன்றின் எலும்புக்கூடு ஒரு மனித எலும்புக்கூட்டுடன் இருக்கும் வகையில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் சைப்ரஸ் தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சமாதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பண்டைய எகிப்திய சடங்குகளுடன் இங்கே இறந்தோருக்கான வழிபாடுகள் நிகழ்ந்தமையை விவரிப்பதாக உள்ளன. சைப்ரஸின் மேற்குப் பகுதியில் உள்ள Khirokitia என்ற நகரம் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் பழம் பெருமை கொண்ட நகரமாகத் திகழ்கின்றது. இப்பகுதி கி.மு 6500 ஆண்டு பழமையான நகர் என்ற பெருமை கொண்டதாக அமைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இரும்புக்காலத்தில் கிரேக்கத்திலிருந்து வந்தவர்கள் சைப்ரஸில் மிகுதியாகக் குடியேறியிருக்கின்றனர். மைஸேனியன் கிரேக்க (Mycenaen Greek) வணிகர்கள் குழு இங்கு கி.மு 1400 வாக்கில் வந்து வணிகத்தில் ஈடுபட்டனர் என்பதோடு இங்கேயே வந்து தங்கி வாழ்விடங்களை அமைத்தனர். அதன் பின்னர் கி.மு. 1100 லிருந்து 1050 வரை மிக அதிக அளவிலான கிரேக்க வணிகர்கள் இங்கே குழுக்களாக வந்து குடியேறினர். இதுவே இங்கு நிகழ்ந்த மிகப்பெரிய குடியேற்றம் எனலாம். கிரேக்க புராணங்களில் வருகின்ற முக்கிய கதாபாத்திரங்கள் பிறந்த ஊராகவும் சைப்ரஸ் திகழ்கின்றது. அப்ரோடைட் (Aphrodite) , அடோனிஸ் (Adonis), சினிராஸ் மன்னர் (King Cinyras), டொய்சர் (Teucer), மற்றும் பிமேலியன் (Pygmalion) ஆகிய கடவுள்களின் பிறப்பு இங்கே நிகழ்ந்ததாக கிரேக்க புராணங்கள் கூறும்.

    as3

    மிகப்பழமை வாய்ந்த அசிரிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் சைப்ரஸ் கி.மு.708இல் இருந்தது. பின்னர் எகிப்தியர்களாலும் ஆட்சி செய்யப்பட்டு, பின்னர் கி.மு.545இல் பெர்சிய மன்னர்களின் ஆட்சிக்குக் கீழ் சைப்ரஸ் இருந்தது. பின்னர் வெவ்வேறு மன்னர்களின் கைப்பிடிக்குள் வந்து கி.மு333இல் மாமன்னன் அலெக்ஸாண்டரால் கைப்பற்றப்பட்டது . அத்தோடு நிற்கவில்லை. தொடர்ந்து ரோமானியர்களால், துருக்கியர்களால், ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு இதன் ஆட்சி என்பது பலமுறை கைமாறிய ஒரு நாடாக சைப்ரஸ் இருந்துள்ளது. 1960ஆம் ஆண்டில் இங்கிலாந்து, கிரேக்கம், துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சைப்ரஸ் சுதந்திரம் அடைந்தது. ஆனாலும் உள்நாட்டில் அமைதி நிலவவில்லை. 77% கிரேக்கர்களும், 18 % துருக்கியர்களும் 5% ஏனையோரும் என இருந்த நிலையில், தொடர்ந்து பிரிவினைக்கான பல முயற்சிகள் நடந்து கொண்டேயிருந்தன. கிரேக்கர்கள் அதிகம் வாழும் மேற்குப் பகுதியையும் கிழக்கில் துருக்கியர்கள் வாழும் கிழக்குப் பகுதியையும் பிரிக்கும் சுவர்களும் முள் கம்பிகளும் அமைக்கப்பட்டன. இன்று சைப்ரஸ் தீவு ஒரு பகுதியில், அதாவது மேற்குப் பகுதியில் அதிகமான கிரேக்கர்களும் மற்றொரு பகுதியான அதாவது கிழக்குப் பகுதியில் துருக்கியர்கள் அதிகமாக வசிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. நான் 2005ஆம் ஆண்டு சைப்ரஸ் சென்றிருந்த வேளையில் பெருமளவு கிரேக்கர்கள் வாழும் பகுதியில் இருந்தாலும், துருக்கியர்கள் வாழும் பகுதியில் அமைந்திருக்கும் எல்லைப்பகுதியையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு அமைந்தது.

    சைப்ரஸின் வரலாற்றை விவரிக்கும் மிக முக்கியமான ஒரு அருங்காட்சியகமே சைப்ரஸ் அருங்காட்சியகம். 1882ஆம் ஆண்டில் இது கட்டப்பட்டது. சைப்ரஸில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு தொல்லியல் ஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் அடங்கிய மிக முக்கியமான வரலாற்றுக் கூடம் இது எனலாம். சைப்ரசின் தலைநகரான நிக்கோசியாவில் இது அமைந்திருக்கின்றது. சைப்ரஸ் அருங்காட்சியகம் என்றும் சைப்ரஸ் தொல்பொருள் அருங்காட்சியகம் என்றும் இரு பெயர்களில் இந்த அருங்காட்சியகம் அழைக்கப்படுகின்றது.

    as4

    சுவீடன் நாட்டு தொல்லியல் ஆய்வாளர்களுடன் இணைந்து 1927 முதல் 1931 வரை சைப்ரஸின் சில பண்டைய நகர்களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகளில் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்துள்ளன. கட்டிடத்திற்குள் உள்ள 14 பெரிய அறைகளுக்குள் மண்பாண்டங்கள், எலும்புக்கூடுகள், தங்க ஆபரணங்கள், இரும்புக் கருவிகள், சிற்பங்கள், கிரேக்க தெய்வங்களின் சிற்பங்கள், இறந்தோருக்கான சடங்குகள் செய்து இறந்தவர் உடலை வைக்கும் பானைகள் என பலவாரியான அரும்பொருட்கள் இங்குள்ளன. ஒரு அறையில் நூலகமும் அமைந்திருக்கின்றது.

    as

    பொதுவாக திங்கட்கிழமைகளில் இந்த அருங்காட்சியகம் மட்டுமல்ல, எல்லா அருங்காட்சியகங்களும் மூடப்பட்டிருக்கும். திங்கட்கிழமை தவிர்த்த ஏனைய நாட்களில் இந்த அருங்காட்சியகம் வருகையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    சைப்ரஸ் நாட்டின் பண்டைய வரலாற்றை கால வாரியாகப் பிரித்து அறிந்து கொள்ள பல தகவல்களை ஒரே இடத்தில் வழங்கும் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டிடமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது.

    குறிப்பு:Cyprus, Plurigraf.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 84

    விவேகானந்தர் உரையாற்றிய கலை அருங்காட்சியகம், சிகாகோ, வட அமெரிக்கா

    முனைவர் சுபாஷிணி

    வியக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமான ஒரு கோத்திக் வகை கட்டிடத்திற்குள் 300,000 கலைப்பொருட்கள், பத்து வெவ்வேறு பகுதிகளில் தன்னகத்தேக் கொண்ட Art Institute of Chicago உலகின் முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்று. 1879ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் வட அமெரிக்காவின் மிகப்பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 1.5 மில்லியன் வருகையாளர்கள் வந்து பார்த்துச் செல்லும் ஒரு வரலாற்றுக் கூடம் என்ற சிறப்பு கொண்டது இந்த அருங்காட்சியகம். இதன் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதாய் இங்குள்ள முதல் தளத்தில் ஒரு கருத்தரங்க வளாகம் அமைந்திருக்கின்றது. ஆம். இங்குதான் இந்தியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராக, இந்து சமயத்தைப் பிரதிநிதித்து உலக சமயங்களின் பார்லிமெண்டில் கலந்து கொள்ளச் சென்ற சுவாமி விவேகாநந்தரின் 1893ம் ஆண்டு நிகழ்ந்த உலகப் பிரசித்தி பெற்ற சொற்பொழிவு அமைந்தது.

    as
    உலக சமயங்களின் பார்லிமண்ட் என்ற நிகழ்வு முதன்முதலாக நடைபெற்றதும் அந்த ஆண்டில் தான். 1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை இந்த உலகப் பிரசித்தி பெற்ற மாநாடு நடைபெற்றது. சுவாமி விவேகாநந்தரின் உரை, நிகழ்வின் முதல் நாளான செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது.

    as1

    Sisters and Brothers of America…

    எனத்தொடங்கிய அவரது உரையின் தொடக்கமே அந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைத்து கருத்தரங்கப் பேராளர்களையும் திகைக்க வைத்தது. இதற்குக் காரணம், பொதுவாக சொற்பொழிவாளர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் ‘பெருமதிப்பிற்குறிய ஆண்களே பெண்களே’ என விளிக்காமல், வந்திருந்தோரைத் தனது சகோதர சகோதரிகளாக நினைத்து அவர் தனது உரையைத் தொடங்கிய விதம் ஏனையோரை திகைக்க வைத்தது.

    as2

    உலகப்பிரசித்தி பெற்ற அந்தத் தனது உரையில் அவர் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

    We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth.

    தான் பிரதிநிதித்து வந்திருக்கும் இந்தியா உலகளாவிய வகையில் சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் கொண்ட மக்களைக் கொண்ட நாடு, எல்லா மதங்களும் உண்மையே சொல்கின்றன என்று நாங்கள் நம்புகின்றோம். இத்தகைய நாட்டில் பிறந்து வளர்ந்தமைக்காக நான் பெருமைப்படுகின்றேன் எனச் சொல்லி இந்தியாவை திறந்த மனத்துடன் எல்லா மதத்தினரையும் ஆதரித்து, வந்தாரை வாழவைக்கும் ஒரு நாடு என்று சொல்லி பேராளர்களுக்கு அன்று தனது நாட்டை அறிமுகப்படுத்தினார் சுவாமி விவேகாநந்தர். அன்றைய நிலையில் சுவாமி விவேகாநந்தர் விவரித்த அதே வகையிலான சிந்தனைப்போக்கு இன்று உள்ளதா என்று கேள்வி கேட்காமல் இருக்க இயலவில்லை. இந்திய நாட்டின் ஒரு சாரார் உயர் வகுப்பினரென்றும், மறு சாரார் நடுத்தர வகுப்பென்றும், ஒரு சாரார் தீண்டத்தகாதார் என்றும், ஒரு சாரார் பார்க்கவே தகாதார் என்றும், பிரித்து வகுத்து வைத்திருக்கும் நிலையை சுவாமி விவேகாநந்தர் அன்றே பார்க்கத்தவறினாரா? அல்லது அவரது பார்வைக்கு இந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் எட்டவே இல்லையா? என்ற கேள்வியும் எழுத்தான் செய்கின்றது.

    சுவாமி விவேகாநந்தரின் சிக்காகோ பயணம் ஒரு நீண்ட பயணம். அவரது இப்பயணத்திற்கு மிக முக்கியக் காரணமாக அமைபவர் தமிழகத்தின் இராமநாதபுரத்தின் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியாவார். இவரது ஏற்பாட்டில் சுவாமி விவேகாநந்தரின் அமெரிக்க பயணம் அமைந்தது. இன்று போல அன்று கடல் பயணங்கள் எளிமையானவை அல்ல. நீண்ட தூரப் பயணம் அது. ஆக 1893ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி தனது பயணத்தை மும்பையிலிருந்து தொடங்கினார். அமெரிக்காவை அடைவதற்கு முன்னர் இந்தப் பயணத்தில் சீனா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளுக்கும் சென்று பின்னர் அங்கிருந்து அமெரிக்கா சென்றடைந்தார். சீனாவிலும் ஜப்பானிலும் புத்த விகாரைகளைத் தரிசித்துப் பின் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

    சுவாமி விவேகாநந்தரை உலக மக்கள் அறியச் செய்த நிகழ்வாக இந்த சிகாகோ உலக சமயங்களின் கருத்தரங்கம் அமைந்தது. அதே வேளை இந்த கருத்தரங்கம் தனிப்பட்ட வகையில் சுவாமி விவேகாநந்தருக்கும் புதிய பல அனுபவங்களை வழங்கிய நிகழ்வாக அமைந்ததையும் மறுக்க இயலாது.

    as3

    இன்று வட அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் இந்தக் கலை அருங்காட்சியகத்தில் உள்ள இந்த அறை அவரது நினைவாக அமைந்துள்ளது. அங்கே அருகாமையில் உள்ள விவேகாநந்தா வேதாந்த மையம் (Vivekananda Vedanta Society of Chicago) சுவாமி விவேகாநந்தரின் பெயரில் இயங்கி வரும் ஒரு அமைப்பு. இங்கே வேதாந்த வகுப்புகள், பஜனைகள், பூஜைகள் ஆகியனவற்றோடு சுவாமி ராமகிருஷ்ணர், சாரதா அம்மையார் பூஜைகளும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

    சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் உள்ள இந்த கருத்தரங்க வளாகத்திற்கென்று தனிக்கட்டணம் ஏதும் கிடையாது. அருங்காட்சியகத்திற்கு மட்டும் நுழைவுக்கட்டணத்தைச் செலுத்தி விட்டால் இந்த கருத்தரங்க அறையையும் சென்று காணலாம். இந்த அறை பூட்டியே இருக்கின்றது. 1893ஆம் ஆண்டில் எப்படி இருந்ததோ அதே வடிவத்தில் எந்த வகை மாற்றமும் செய்யாமல் இந்த அறையை அப்படியே வைத்திருக்கின்றார்கள். வருகின்ற சிறப்பு வருகையாளர்களுக்கு ஒரு அதிகாரியின் துணையுடன் திறந்து காட்டுகின்றனர்.

    as4

    நான் சென்றிருந்த வேளையில் எனக்கும் அந்த அரும் வாய்ப்பு கிட்டியது.
    சுவாமி விவேகானந்தர் நின்று உரை நிகழ்த்திய இடத்தில் நின்று அந்த மண்டபத்தின் அமைதியான சூழலில் அதன் சிறப்பையும் தெய்வீகத்தையும் உணர்ந்தேன். உலக மாந்தர்கள் அனைவரும் ஒன்றே எனும் குரலில் தெள்ளத்தெளிவாக, ”எனது அமெரிக்க சகோதரியரே, சகோதரர்களே” என அழைத்து, வந்திருந்த மற்ற அனைத்து பேச்சாளர்களையும் சிறப்பு வருகையாளர்களையும் அன்பினால் கட்டிப் போட்ட அந்த நிகழ்வு இன்று இந்தியர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகத்தான் அமைந்துள்ளது.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 83

    முனைவர் சுபாஷிணி

    பண்டைய கலாச்சாரங்கள் – ஹோஹண்டூபிங்கன் அரண்மனை அருங்காட்சியகம், ஜெர்மனி

    மன்னர்கள் வாழ்ந்த அரண்மைனைகளில் சில இன்றைக்கு அருங்காட்சியகங்களாக மாற்றம் கண்டுள்ளன. ஐரோப்பாவில் இத்தகைய அருங்காட்சியகங்களை ஏறக்குறைய அனைத்து நாடுகளில் காணலாம். ஜெர்மனியிலோ கோட்டைகளுக்கும் அரண்மனைகளுக்கும் சிறிதும் குறைவில்லை. அப்படி ஒரு அரண்மனை அருங்காட்சியகம் தான் டூபிங்கன் நகரில் இருக்கும் பண்டைய கலாச்சாரங்கள் – ஹோஹண்டூபிங்கன் அரண்மனை அருங்காட்சியகம்.

    இந்த அரண்மனை கி.பி.1050ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த அரண்மனை 1979 தொடங்கி 1994ஆம் ஆண்டு வரை பெரிய அளவில் சீரமைக்கப்பட்டது. தற்சமயம் உலகப்புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகவும் இந்த அருங்காட்சியகம் விளங்குகின்றது. கட்டிட சீரமைப்புப் பணிகள் முற்றுப்பெற்ற பின்னர் அரும்பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்காக இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் 2000 சதுர அடிப் பரப்பில் 4600 அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சேகரிப்புக்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துச்சேகரிப்புக்கள், தொல்லியல் அகழ்வாய்வுகள், மற்றும் எகிப்திய, கெல்ட், கிரேக்க ரோமானிய வரலாற்றுச் சான்றுகளின் சேகரிப்புக்களாக அமைந்துள்ளன.

    1961ஆம் ஆண்டில் டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் எகிப்திய வரலாற்றுத்துறை தொடங்கப்பட்டது. ஸ்டுட்கார்ட் நகரின் வர்த்தகரான எர்ன்ஸ்ட் ஃபோன் சீகலின் அவர்கள் வழங்கிய எகிப்திய அரும்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத்துறை தொடங்கப்பட்டது. படிப்படியாக மாநில அரசின் பொருளாதார உதவியுடனும் ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தின் உதவியுடனும் எகிப்திய சேகரிப்புக்கள் இங்கே மேலும் சில இணைந்தன. இன்று ஜெர்மனியில் இருக்கும் மிக முக்கியமான எகிப்திய அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது. இதுவரை எகிப்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காட்டிற்கும் மேலாக ஜெர்மானிய அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ஈடுபட்டனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சேகரிப்புகளில் இன்றைக்கு 5000 ஆண்டுகள் வரையிலான அரும்பொருட்கள் இடம்பெறுகின்றன. மம்மிகளை வைத்து பாதுகாக்கும் மரப்பெட்டிகள், பாப்பிரஸ் ஆவணங்கள், இறந்தவர்களுக்கான சடங்குகளில் சேர்க்கும் சடங்குப்பொருட்கள், இறை வடிவங்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள், கருவிகள் என இவை வெவ்வேறு வகையில் அமைந்தவை.

    ஐரோப்பிய பண்டைய நாகரிகங்களில் கிரேக்க, ரோமானிய நாகரிகங்கள் அதி முக்கியமானவை. ஏறக்குறைய எல்லா ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி அமெரிக்காவிலும் சரி உலகின் ஏனைய நாடுகளிலும் சரி, கிரேக்க, ரோமானிய கலைப்பொருட்களும் கட்டுமானக் கலைகளும், சித்தாந்தங்களும் கொண்டாடப்படும் கலைகளாகவே இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் பல அருங்காட்சியகங்களில் கிரேக்க, ரோமானிய சிற்பங்களும் கோயில்களின் எச்சங்களும், ஏதாகினும் ஒரு வடிவில் அமைந்த கலைப்பொருட்களும் பாதுகாக்கப்படுகின்றன. டூபிங்கன் அருங்காட்சியகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு தனிக்காட்சி வளாக அறையில் 350 கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தைச் சிறப்பிக்கின்றன.

    asu

    இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புகளில் ஒன்று பிரான்சின் லாஸ்ஸாஸ் (Lascaux) குகையில் அமைந்திருக்கும் விலங்குகள் பாறை ஓவியம். சுமார் 17,000 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் அறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்த குகை பாறை ஓவியங்களின் மறுபதிப்பு ஒன்று இங்கே இந்த டூபிங்கன் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. லாஸ்ஸாஸ் குகையில் வியக்கத்தக்க வகையில் அமைந்த ஏறக்குறைய 2000 ஓவியங்கள் குகையின் உள்ளே பாறைச் சித்திரங்களாக தீட்டப்பட்டுள்ளன. விலங்குகள், மனிதர்கள், உருவங்கள் என மூன்று வகையில் இந்த ஓவியங்கள் உள்ளன. பெரும்பாலான ஓவியங்கள் கருப்பு, சிவப்பு, மஞ்சள் ஆகிய வர்ணங்களில் அமைந்திருக்கின்றன. இவற்றுள் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுவது காளை மாடுகள் நிறைந்த ஒரு சுவர்ப்பகுதியில் இருக்கும் ஓவியங்கள். இது 36 விலங்குகளின் வரை ஓவியங்கள் நிறைந்த ஒரு தொகுதி. இந்தத் தொகுதியை ஆராய்ந்த David Lewis-Williams மற்றும் Jean Clottes என்ற அறிஞர்கள் இவற்றை உருவாக்கிய பண்டைய மனிதர்கள் தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீக சக்திகளை உருவகப்படுத்தும் வகையில் இதனை அமைத்திருப்பதாகக் கருதுகின்றனர். அது மட்டுமன்றி பிரான்சில் அன்றைய காலகட்டத்தில் மக்களின் சுற்றத்தில் அவர்கள் பார்த்துப் பழகிய மிருகங்கள் எவை என்பதை அடையாளம் காணவும் இந்த குகை பாறை ஓவியம் உதவுகின்றது.

    இந்த அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய டூபிங்கன் பல்கலைக்கழகம் தற்சமயம் வெவ்வேறு தொல்லியல் ஆய்வுகளில் தம் குழுவினரை ஈடுபடுத்தியுள்ளது. 1988ம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தின் மான்ஃப்ரெட் காஃப்மான் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகளாகக் குறிப்பிடப்பட்டு மேலும் பல ஆய்வுகள் தொடர வழி அமைத்துக் கொடுத்தது. தற்சமயம் இந்த பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை ஜெர்மனி, பிரான்சு, ஐக்கிய அரபு நாடுகள், கிரேக்கம், ஈரான், தென்னாப்பிரிக்கா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. ஜெர்மனியின் தென்பகுதி ஆச் மற்றும் லோன் பள்ளத்தாக்கில் இக்குழுவினர் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் இப்பல்கலைக்கழகத்திற்கு புகழ் சேர்த்தவையாக அமைந்திருக்கின்றன.

    இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் குறிப்பிடத்தக்க சில சேகரிப்புகளைப் பற்றியும் அறிந்து கொள்வது பயனளிக்கும்.

    asu1

    இது ஏறக்குறைய நாற்பதாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு சிற்பம். புலியின் வடிவம் இது. காட்டெருமையின் கொம்பினால் செய்யப்பட்டது இச்சிலை. இன்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விலங்கினைப் பார்த்து அதன் உருவத்தை வடிவமைக்கும் ஆற்றலுடன் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இருந்தனர் என்பதற்குச் சான்றாகிறது இச்சின்னம். ஜெர்மனியின் தென்பகுதி ஆச் மற்றும் லோன் பள்ளத்தாக்கில் சேகரிக்கப்பட்ட இதே வகையான 50 அரும்பொருட்கள் இங்கே காட்சிக்கு உள்ளன.

    asu2

    கிரேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிற்பங்கள் கிடைத்தது போலவே பானைகளும் விளக்குகளும் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. அத்தகைய ஒரு மண்பானை தான் இது. பல வடிவங்களை உள்ளடக்கிய, நீர் சேகரித்து வைக்கும் இறைவழிபாட்டுச் சடங்கில் பயன்படுத்தப்படும் பானை இது.

    asu3

    எகிப்து பண்டைய கோயில்களுக்கும் கடவுள் வடிவங்களுக்கும் எண்ணற்ற சடங்குகளுக்கும் பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கலாச்சாரப் பின்னனி கொண்ட நாடு. எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட, ஹீரோக்லிப்ஸ் எழுத்துக்கள் நிறைந்த ஒரு சிதைந்த ஆலயத்தின் உட்புறச்சுவர் பகுதி இது.

    asu4
    இறந்து போன உடல்களை மம்மியாக்கி அதனை வைக்கும் சவப்பெட்டிகள் இங்கு சேகரிப்பில் இடம்பெருகின்றன. சாதாரண மனிதர்களுக்கு மரத்தால் செய்யப்படும் இவ்வகை பெட்டிகள் அரசகுலத்தோருக்குத் தங்கத்தால் இழைக்கப்பட்டு ஆபரணங்களாலும் விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

    asu5
    கிரேக்க ரோமானிய சிற்பங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் சிற்பங்கள் இவை. கையில் டிஸ்க் வடிவிலான ஒன்றை ஏந்தியிருக்கும் இச்சிற்பத்தின் பெயர் டிஸ்கோபொலுஸ் (Discobolus). இதனை உருவாக்கியவர் மைரோன் என்ற கிரேக்க சிற்பி. கி.மு.460-450 வரை எனக்குறிப்பிடப்படும் காலகட்டத்தில் இச்சிற்பியால் பல சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் டிஸ்கோபோலுஸின் சிற்பமும்.

    இப்படி சிறப்புகள் மிக்க பல்வேறு அரும்பொருட்களை கண்காட்சியில் அமைத்திருக்கின்றார்கள். இந்த அருங்காட்சியகத்தின் ஊழியர்களின் அன்பான சேவையும் மனதைக் கவரத்தவறவில்லை.

    ஜெர்மனியில் காணவேண்டிய ஒரு முக்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அருங்காட்சியகம் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த அருங்காட்சியகம் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் https://www.unimuseum.uni-tuebingen.de/ என்ற வலைத்தளத்தில் மேலதிக தகவல்கள் பெறலாம்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 82.

    டோஜஸ் அரண்மனை அருங்காட்சியகம், வெனிஸ், இத்தாலி

    முனைவர் சுபாஷிணி

    வெனிஸ் நகரின் மிக முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று டோஜஸ் அரண்மனை. இத்தாலிய மொழியில் இது Palazzo Ducale எனக் குறிப்பிடப்படுகின்றது. கி.பி.9ஆம் நூற்றாண்டில் ஒரு அரண்மனையாக உருவாக்கம் கண்ட இந்த அரண்மனை தொடர்ச்சியான தாக்குதல்களால் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தற்சமயம் மிஞ்சி இருக்கும் பகுதி என்பது 14ஆம் மற்றும் 15ஆம் நூற்றாண்டு வெளிப்புறக் கட்டிடத்தின் ஒரு பகுதி மட்டுமே. மெல்லிய இளஞ்சிவப்பு நிற பளிங்குக்கற்களால் வடிவமைக்கப்பட்ட கோத்திக் அமைப்பிலான கட்டுமானம் கொண்டது இக்கட்டிடம். இவ்வகை அமைப்பு என்பது அக்காலத்து வழமையான கட்டிட அமைப்பிற்கு ஒரு மாற்றாக அமைந்தது.

    as

    வெனிஸ் நகர அமைப்பின் ஆரம்பக்காலம் தொட்டு இந்த டோஜஸ் அரண்மனை அரசாங்க அலுவலகமாகவே செயல்பட்டு வந்தது. அது மட்டுமன்றி இதே கட்டிடத்திற்குள் தான் நீதிமன்றமும் வெனிஸ் பிரபுவின் தங்கும் இடமும் அமைந்திருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் பல நூற்றாண்டுகளுக்கு இந்த ஒரு அரண்மனை மட்டும் தான் வெனிஸ் நகரில் அரண்மனை என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தின் உட்பகுதி சுவர் சித்திரங்கள் பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டவை. உலக கலைக் கூடங்களின் உயர் தரக் கலைக்கு உதாரணமாக இந்தக் கட்டிடத்தின் உட்பகுதியில் அமைந்திருக்கும் பிரமாண்டமான ஓவியங்களும் சித்திரங்களும் அமைந்திருக்கின்றன .

    கண்காட்சியும் அருங்காட்சியகமும் அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும் முன் நாம் நுழைவாயிலைக் கடந்து செல்வோம். இது 15ம் நூற்றாண்டு கோத்திக் வகை முகப்பு. கோத்திக் அமைப்பு என்றாலே நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் அமைந்த ஒரு அமைப்பு எனக் கொள்ளலாம். உள்ளே நுழைந்த உடன் நாம் அருங்காட்சியகத்தை வந்தடைந்து விடுவோம். இந்த அருங்காட்சியகப் பகுதியில், முன்னர் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களின் போது சேதமடைந்த இந்த அரண்மனையில் தூண்கள், பகுதிகள், ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அப்படி சேதமடைந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான சிற்பங்களின் சிதறிய பகுதிகளும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் மட்டுமன்றி இன்று வருகையாளர்களுக்காகத் திறந்து விடப்படும் அனைத்துப் பகுதிகளுமே சிற்பங்களும் வரலாறுகளும் நிறைந்து ஒவ்வொரு பகுதியும் ஒரு அருங்காட்சியகமாகவே திகழ்கின்றன.

    ​கட்டிடத்தின் முன் பகுதியில் ஆதாம் ஏவாள் ஆகிய இருவரின் சிலையும் நுண்ணிய முறையில் பளிங்கில் செய்யப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இதனை அந்தோனியோ ரிஸோ என்னும் சிற்பி வடிவமைத்தார். அரிய ஒரு சிற்பம் இது. ​ இன்னொரு பக்கத்தில் Torture Chamber என அழைக்கப்படும் சித்ரவதை அறை உள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் நபர்கள் இங்கே தான் விசாரிக்கப்படுவார்களாம். எவ்வகை விசாரணை என்பது இந்த அறையின் பெயரை வாசிக்கும் போதே நம்மால் ஊகித்துக் கொள்ள இயலும் தானே?

    as1

    இதனைப் பார்த்து விட்டு வரும் போது நம்மைப் பிரமாண்டத்தில் ஆழ்த்தும் சுவர் சித்திரங்கள் நிறைந்த கூடங்கள் வரவேற்கும்.அதில் Sala del Maggior Consiglio என அழைக்கப்படும் மைய அறை சிறப்பு வாய்ந்தது. மலைத்துப் போய் நம்மை நிற்க வைக்கும் வகை ஓவியங்கள் இவை. உலகின் மிகப்பெரிய அரண்மனைச் சுவர் சித்திரம் என அறியப்படும் தி பேரடைஸ் (The Paradise) இங்கு தான் அமைந்துள்ளது. 1557ம் ஆண்டு தொடர்ச்சியாக ஒன்றின் பின் ஒன்றாக இந்த அரண்மனை தீக்கிரையானது. தீயினால் சேதமடைந்த பகுதியைப் புதுப்பிக்கும் சமயத்தில் புதிய சுவர்ச்சித்திரங்களை அரண்மனையில் நிறைக்க வேண்டும் என வெனிஸ் பிரபு முடிவெடுத்து அந்த நூற்றாண்டின் இத்தாலியின் தலைசிறந்த ஓவியக்கலைஞரான டிண்டொரெட்டோ (Tintoretto) அவர்களுக்கு இப்பணியை வழங்கினார். சொர்க்கம் என்ற பொருளில் அந்தப் பிரமாண்டமான சுவரில் நூற்றுக்கணக்கான உருவங்களை நிறைத்து சொர்க்கலோகத்தில் இறையடியார்களும் தேவதைகளும் உலா வருவது போல இந்தச் சித்திரத்தை வடிவமைத்தார். ஆண்டுகள் ஐநூறைக் கடந்தாலும் இன்றளவும் உலகளாவிய அளவில் பேசப்படும் ஒரு கலைப் பொக்கிஷமாக இந்த ஓவியம் காட்சியளிக்கின்றது.

    இந்த அரண்மனையின் கீழ்த்தளம் வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. அதில் ஒரு பகுதி சிறைச்சாலையாக கி.பி16ம் நூற்றாண்டு தொடக்கம் இயங்கி வந்துள்ளது. இந்தச் சிறைச்சாலைப் பகுதியில் கொடுமையான தவறிழைத்தவர்கள் சிறை வைக்கப்படவில்லை. சிறிய திருட்டுக்கள், ஏமாற்றுத்தனம் செய்தோர் ஆகியோர் தண்டனை வழங்கப்பட்டு இங்கே கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர் என்ற செய்தியையும் இங்கே அறிய முடிகின்றது. மிகக் குறுகலான அறை. செல்லும் பாதையும் குகைக்குள் செல்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி விடும். ஒவ்வொரு அறையும் சிறிதாக, உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நானூறு வருடம் பழமை வாய்ந்த சிறைச்சாலை இன்றும் சேதமடையாமல் நல்ல நிலையில் இருக்கின்றது. இதில் என்ன வியப்பென்றால், மேல் தளத்தில் வெனிஸ் நகரை ஆளும் பிரபு தங்கியிருக்க, கீழ்த்தளத்தில் சிறைச்சாலைக் கைதிகள் இருந்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வித்தியாசமாகத்தான் இருக்கின்றது.

    as2

    இதே அரண்மனையின் ஒரு பக்கத்தில் அரசின் ஆயுதக் கிடங்கு உள்ளது. கி.பி.14ஆம் நூற்றாண்டு தொடங்கி இந்த ஆயுதக்கிடங்கு பயன்பாட்டில் இருக்கின்றது. வாள், துப்பாக்கி வகைகள், பீரங்கிகள், குதிரைப்படையினரின் இரும்புக் கவசங்கள், பல்வேறு வகையான தாக்கும் கருவிகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இந்த ஆயுதக் கிடங்கில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. இதனைப் பேர்க்கும் போது வருகையாளர்களுக்கு இப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த போர்களின் நினைவு நிச்சயம் வந்து செல்லும்.

    as3

    டோஜஸ் அரண்மனை வெனிஸ் நகரின் ஒரு வரலாற்றுச் சின்னம். அருங்காட்சியகம், அரசாங்கக் கட்டிடம், பிரபுவின் மாளிகை, சிறை, ஆயுதக்கிடங்கு கலைக்கூடம் என வெவ்வேறு வகையில் பல பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியக்கட்டிடமாக இந்த அரண்மனை திகழ்கின்றது. இதன் உள்ளே சென்று அனைத்து விசயங்களையும் நேரில் பார்த்து, ரசித்து, அதன் வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டு குறிப்பெடுத்து வருவதற்கு நிச்சயம் ஒரு நாள் தேவைப்படும். இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே செல்ல வசூலிக்கப்படும் கட்டணம், மற்றும் சிறப்புக் கண்காட்சிகள் பற்றி அறிந்து கொள்ள இதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் நீங்கள் அலசலாம். http://palazzoducale.visitmuve.it/en/home/ .

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 81

    முனைவர் சுபாஷிணி

    கடலாய்வு அருங்காட்சியகம், மோனாக்கோ

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லையென்றாலும் அதன் சட்டதிட்டங்களை ஏற்ற ஒரு நாடு மோனாக்கோ. ஒரே நாளில் சுற்றி வரக்கூடிய வகையில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்று தான் இது. உலகிலேயே இரண்டாவது சிறிய நாடு இது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. மோனாக்கோ நாட்டை ஒரே நாளில் ஒருவர் சுற்றிப்பார்த்து வந்துவிடலாம். அதிவேக கார் ரேஸ் பந்தயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மோனாக்கோவைப் பற்றித் தெரிந்திருக்கலாம். ஏனெனில், இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் க்ரான் ப்ரீ கார் பந்தயம் உலகளாவிய அளவில்` மிகப் பிரபலமான ஒன்று. அதுமட்டுமல்ல. மோனாக்கோ கேசினோ எனப்படும் சூதாட்ட விளையாட்டிற்குப் புகழ் பெற்ற ஒரு நாடும் கூட. Never Say Never Again, Golden Eye போன்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் மோனாக்கோவின் கேசினோவில் எடுக்கப்பட்டவை தாம்.

    asu

    மோனாக்கோவை ஆட்சி செய்பவர் இளவரசர் 2ம் ஆல்பெர்ட். ப்ராசின் தென் கோடிப் பகுதியில் மெடிட்டரேனியன் கடலை ஒட்டியவாறு பக்கத்தில் இத்தாலிக்கு எல்லை நாடாக அமைந்திருக்கின்றது மோனாக்கோ. சிறிய நாடுதான் என்றாலும் கூட பிரம்மாண்டமான அருங்காட்சியகங்கள் இங்கே இருக்கின்றன என்பது ஒரு தனிச் சிறப்பு. அதில் கடலாய்வு அருங்காட்சியகத்திற்கு நான் செல்லும் வாய்ப்பு 2009ம் ஆண்டு அமைந்தது. கடலாய்வுகளைப் பற்றிய தகவல் களஞ்சியங்களின் சேகரமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது.

    asu1

    இளவரசர் முதலாம் ஆல்பெர்ட்டினால் 1910ஆம் ஆண்டு இந்தக் கடலாய்வு அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் கட்டிடம் பாரோக் கலைவடிவத்தில் கட்டப்பட்டது. கடலை ஒட்டிய வகையில் அமைக்கப்பட்ட கோட்டை போன்ற வடிவிலான அமைப்புடன் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. Temple of the Sea என ஆங்கிலத்தில் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது இந்த பிரமாண்டமானக் கட்டிடம்.

    கடல் வாழ் உயிரினங்களில் பல வகையானவை இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மீன்கள், கணவாய்கள், விதம் விதமான கடல் உயிரினங்கள் என இந்த அருங்காட்சியகம் விரிவான உயிரினங்களைக் காட்சிப்படுத்துகின்றது. அதுமட்டுமன்றி கடல் சார்ந்த விசயங்களை விளக்கும் வகையிலும் இங்குள்ள கண்காட்சிப் பொருட்கள் அமைந்துள்ளன. உதாரணமாக மாதிரி கப்பல்கள், கடல் உயிரினங்களின் எலும்புக் கூடுகள், கப்பல்கள், கடல் பயணங்களின் போது மாலுமிகள் பயன்படுத்தும் துணைக்கருவிகள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

    asu2

    இக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள அக்குவாரியத்தில் கடல்வாழ் தாவரங்கள், மீன் வகைகள்,கடல் குதிரைகள், ஆமைகள், ஏனைய கடல் உயிரினங்கள் என்பவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    asu3

    இக்கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு பயணியின் பயணப்பெட்டி என்ற பொருளில் அமைந்த கண்காட்சி இடம்பெறுகின்றது . இதில் இந்த அருங்காட்சியகத்தைத் தொடக்கிய இளவரசர் முதலாம் ஆல்பெர்ட் அவர்களின் கடல் பயணங்கள் தொடர்பான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இளவரசர் முதலாம் ஆல்பெர்ட்டின் கூற்றுப்படி, மனிதர்கள் கடலை அறிந்து, அதனை நேசித்து அதனைப் பாதுகாக்க வேண்டும். தனது வாழ்வின் பெரும்பகுதியை இளவரசர் முதலாம் ஆல்பர்ட் கடலாய்வுகளிலேயே செலவிட்டார். ராணுவத்தில் சில ஆண்டுகள் சேவை செய்த பின்னர் தனது நெடுந்தூரக் கடல் ஆய்வுப் பயணங்களை அவர் 1885ஆம் ஆண்டு தொடங்கி மேற்கொண்டார். தனது நெடுங்கால ஆய்வுகளின் அடிப்படையில் சேகரித்த ஆவணங்களையெல்லாம் கொண்டு இந்தப் பிரமாண்டமான கடலாய்வு அருங்காட்சியகத்தை அவர் உருவாக்கினார்.

    asu4

    க்ரேண்ட் ப்ரீ அதிவேகக் கார் பந்தயம் நடைபெறும் நாளிலும் டிசம்பர் 25ஆம் தேதி தவிர்த்து வருடத்தில் ஏனைய எல்லா நாட்களும் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டிருக்கும். உள்ளே சென்று காண்பதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மோனாக்கோ நாட்டிற்குச் செல்பவர்கள் கேசினோவின் பக்கத்திலேயே அமைந்திருக்கும் இந்தப் பிரம்மாண்டமான அருங்காட்சியகக் கட்டிடத்தை தவறவிட வாய்ப்பில்லை. மோனாக்கோவில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் என்பதோடு ஆய்வில் ஈடுபாடு கொண்டோருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய கடல் சார் ஆய்வுக் களஞ்சியம் இந்த அருங்காட்சியகம்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 80

    முனைவர்.  சுபாஷிணி

    அனைத்துலக செய்தித்தாள் அருங்காட்சியகம், ஆகன், ஜெர்மனி

    உலகச் செய்திகளை உடனுக்குடன் வாசித்தால் தான் நம்மில் பலருக்கு அன்றாட ​கடமைகளைச் செய்த மன திருப்தி ஏற்படும். அந்த அளவிற்கு நமது சிந்தனையானது உலக விசயங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் இணைந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்றைய சூழலில் உலகச் செய்திகளாகட்டும், உள்ளூர் செய்திகளாகட்டும், எதுவாகினும் செய்தித்தாட்களை வாசிக்கின்றோமோ இல்லையோ இணையத்தின் வழியாகச் செய்தி ஊடகங்கள் பலவற்றிலிருந்து உலக நடப்புகளை அறிந்து கொள்வது போலவே சமூக ஊடகங்களின் வழியாகவும் தகவல் பரிமாற்றம் நிகழ்வதை சாத்தியப்படுத்தியிருக்கின்றோம். இதுதான் இன்றைய தகவல் தொழில்நுட்பம் அளித்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு.

    உலக நாடுகள் சிலவற்றில் செய்தித்தாட்களின் சேகரிப்புகள் கொண்ட அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. சில, தனியார் ஏற்படுத்தியிருக்கும் அருங்காட்சியகங்கள். ஏனைய சில அரசாங்கமே அமைத்த அருங்காட்சியகங்களாக உள்ளன. ஜெர்மனியின் ஆகன் நகரிலும் ஒரு அனைத்துலக செய்தித்தாட்கள் அருங்காட்சியகம் உள்ளது. இது தனியார் ஒருவரின் சேகரிப்பில் உருவான பிரமாண்டமான சேகரிப்புகள் நிறைந்த ஒரு அருங்காட்சியகம்.

    ஆகன் நகரம் ஜெர்மனியின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இதன் முக்கிய வரலாற்றுச் சிறப்பு இது பேரரசர் கார்ல் அவர்கள் வாழ்ந்த நகர் என்பதுதான். பேரரசின் தலைநகராக முன்னர் இருந்ததன் அடையாளமாக இன்றும் இங்குள்ள பெரிய தேவாலயத்தில் மட்டுமல்ல இங்குள்ள பல மூலைகளிலும் பேரரசர் கார்ல் அவர்களை நினைவு கூறும் சின்னங்களைக் காணலாம்.

    asu

    இந்த அனைத்துலக செய்தித்தாட்கள் அருங்காட்சியகம் ஆகன் பழைய நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கின்றது. அதாவது நகரின் மாநகர மையம் அமைந்துள்ள Pontstrasse சாலையிலேயே கட்டிடங்களின் வரிசையிலேயே ஒரு கட்டிடமாக இருக்கின்றது. ஆகன் நகரிலேயே பிறந்தவரான திரு.ஓஸ்கார் ஃபோன் ஃபோர்க்கென்பெக் (1822 – 1898) அவர்களது சேகரிப்புகள் தான் இங்குள்ளவை. உள்ளூர் சேகரிப்புகளோடு அவரது பல்வேறு பயணங்களின் போது அவர் சேகரித்து வந்த செய்தித்தாட்களின் ஏடுகள் இங்கே மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. உலகின் மிக அதிகமான செய்தித்தாட்களின் சேகரிப்பு உள்ள ஒரு அருங்காட்சியகமாகவும் இது திகழ்கின்றது என்பது ஒரு சிறப்பல்லவா? அதாவது, 17ஆம் நூற்றாண்டு தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரையிலான செய்தித்தாட்கள் 200,000க்கும் மேற்பட்டவை இங்கிருக்கின்றன.

    asu1

    ​இங்கே உள்ளே நாம் நுழையும் போது முதலில் நம்மை வரவேற்பது பவுல் ஜூலியஸ் ரோய்ட்டர் அவர்களது பெரிய புகைப்படமும் அவரைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்புமாகும்.​ ரோய்ட்டர் என்ற பெயரைக் கேட்டாலே உலகம் முழுமைக்கும் செய்தி அனுப்பும் ரோய்ட்டர் சேவை நம் நினைவுக்கு வரலாம். அந்தச் சேவையை உருவாக்கிய நிறுவனத்தை உருவாக்கியவர் தான் திரு. ரோய்ட்டர். இவர் முதலில் 1850ஆம் ஆண்டு ஜெர்மனியின் இந்த ஆகன் நகரில் தனது செய்தி சேகரித்துப் பரிமாறும் ஒரு சோதனை முயற்சியைத் தொடங்கி ரோய்ட்டர் நிறுவனத்தை உருவாக்கினார்.

    பின்னர் அடுத்த ஆண்டு, 1851இல் ரோய்ட்டர் ஏஜென்சியை லண்டன் நகரில் விரிவாக்கினார். ஆரம்பத்தில் புத்தக வெளியீட்டாளர்களாகவும் சீர்திருத்தக் கருத்துகளைப் பரவலாக்கும் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வந்த ரோய்ட்டர் ஏஜென்சி பின்னர் ரோய்ட்டர் டெலிக்ராம் நிறுவனமாக 1851ஆம் ஆண்டிலேயே விரிவடைந்தது. இந்த நிறுவனத்துக்கு முதல் உறுப்பினராக லண்டன் மோர்னிங் அட்வடைசர் பத்திரிக்கை அமைந்தது. பின்னர் படிப்படியாக இந்த நிறுவனத்தின் சேவையை உலகளாவிய நிலையில் பல பத்திரிக்கைகள் பயன்படுத்தத் தொடங்கின. இந்தச் செய்திகளை வாசித்தவாறே நாம் இந்த அருங்காட்சியகத்தின் ஏனைய பகுதிகளுக்குச் செல்லலாம்.

    asu2

    இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப்பொருட்கள் ஐந்து வெவ்வேறு வகைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.
    முதலில் செய்தி சேகரிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள், நிருபர்களின் செயல்பாடுகள் என்பது பற்றி விளக்கும் காட்சிப்பொருட்கள் உள்ளன. இந்தப்பகுதியில் வருகையாளர்கள் ஒரு நிகழ்வு என்பது எவ்வாறு ஒரு செய்தியாக வடிவமைக்கப்படுகின்றது என்ற விசயத்தை அறிந்து கொள்ளலாம்.

    asu3
    அடுத்ததாகச் செய்தி ஊடகங்களின் பண்பு, பலன்கள் ஆகியவற்றோடு அவற்றினால் ஏற்படும் சமுதாயத் தாக்கங்கள் யாவை என்பதை விளக்கும் காட்சிப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கடுத்தார்போல எழுதுவதும் வாசித்தலும் என்பது பற்றிய வரலாற்றுப் பார்வையில் அமைந்த காட்சிப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கடுத்து, செய்திகளில் உள்ள நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பும் விசயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செய்தி தயாரிப்பில் உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் என்றும், எவ்வாறு முக்கியச் செய்திகள் திரிக்கப்பட்டு அவை மக்களைச் சென்றடைகின்றன என்ற விசயத்தைத் தக்க ஆதாரங்களோடு காட்சிப்படுத்தியிருக்கின்றனர். மிகச் சுவாரசியமான தகவல்கள் இப்பகுதியில் உள்ளன. இறுதியாக வருவது செய்தி ஊடகங்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதைக் காட்டும் கண்காட்சிப் பகுதி.

    இந்தக்காட்சிப்பொருட்கள் மட்டுமன்றி இங்குள்ள செய்தித்தாட்களின் சேகரிப்புகளும் வருகை தருவோர் பார்வையிடக் கூடிய வகையில் உள்ளன.

    asu4

    இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும்போது சிறிய கட்டிடத்திற்குள்ளே நுழைகின்றோமோ என்ற சிந்தனை வந்தாலும் இங்குள்ள எல்லாப் பகுதிகளையும் பார்த்து முடித்து வருவதற்குள் குறைந்தது மூன்று மணி நேரங்களாவது ஆகிவிடும். வரலாற்றுப்பிரியர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மிகப்பல தகவல்களை வழங்கக்கூடிய ஒரு அனைத்துலக அருங்காட்சியகம் இது. ஜெர்மனிக்கு வருபவர்கள், அதிலும் குறிப்பாக ஆகன் நகருக்கு வருவோர் தவறாமல் இந்த அருங்காட்சியகத்தையும் சென்று பார்த்து வர மறக்க வேண்டாம்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 79

    ”கவ் போய்” அருங்காட்சியகம், ஃபோர்ட் வொர்த், டெக்சாஸ், வட அமெரிக்கா

    asu5

    ”கவ் போய்” (Cow Boy) படங்களை இளைமை காலத்தில் பார்த்து அவர்கள் ஓட்டி வரும் குதிரையும், வேகமாகப் பறக்கும் அக்குதிரையின் மேல் அமர்ந்து வரும் கதாநாயகர்களையும் பார்த்து வியந்திருக்கின்றேன். என் மனதில் அவர்கள் பெரிய வீரர்களாக அச்சமயத்தில் பதிந்திருந்தார்கள். பின்னர் Cow Boy எனப்படுவோர் மாடுகளைப்பராமரிக்கும் இளைஞர்கள் என்பதும் அமெரிக்காவின் டெக்சாஸ் போன்ற வறண்ட நிலப்பகுதிகளில் குதிரைகளில் சென்று தங்கள் கால்நடைகளான மாடுகளை வளர்ப்போர் என்பது பற்றியும் அறிந்து கொண்ட பின்னர் ”கவ் போய்”கள் பற்றிய பிரமிப்பு என்பது கறைந்து போனது. இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு வார காலம் நான் டெக்சாஸ் மாநிலம் சென்றிருந்த போது அங்கே டல்லாஸ் நகருக்கு அருகே உள்ள Fort Worth என்ற சிறு நகருக்கும் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அது டெக்சஸ் நகரின் பழமையான வாழ்வியல் கூறுகளை இன்றும் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கிராமியச் சூழலை மையமாக வைத்து காட்சியளிக்கும் ஒரு சுற்றுலா தளம். அங்கு சென்றிருந்த போது டெக்சாஸ் கவ்போய் அருங்காட்சியகம் ஒன்று இருக்கின்றது என்று அறிந்த போது அங்கு சென்று Cow Boyகள் பற்றி தகவல்கள் அறிந்து வந்தேன்.

    அமெரிக்காவிற்கு ”கவ் போய்”கள் கலாச்சாரம் என்பது ஸ்பெயின் நாட்டிலிருந்து தான் வந்தது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த பின்னர் ஐரோப்பாவிலிருந்து அதிலும் குறிப்பாக ஸ்பெயினிலிருந்து ஏராளமானோர் அமெரிக்காவிற்கு குடியேறினர். ஸ்பெயின் நாட்டிலிருந்து சற்று மாறுபட்ட தட்பவெட்ப நிலை என்றாலும், அவர்கள் தங்கள் வாழ்வில் இடம்பிடிக்கும் பல அம்சங்களை இங்கே தொடர்ந்தனர். அதில் முக்கிய அம்சமாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலும் அடங்கும்.

    asu1

    18ம் நூற்றாண்டில் ஸ்பெயினிலிருந்து அமெரிக்காவின் இன்றைய தென் அமெரிக்காவின் இன்றைய மெக்சிகோ மற்றும் வட அமெரிக்காவின் ஃப்ளோரிடா ஆகிய பகுதிகளுக்கு குடியேறிய மக்கள் மாடுகளையும் குதிரைகளையும் கப்பல்களின் மூலம் கொண்டு வந்து இறக்குமதி செய்து புதிய குடியேற்றத்திற்கு வித்திட்டனர். ஏற்கனவே உள்ளூரில் வசித்த மக்களின் வாழ்வியல் கூறுகளிலிருந்து இவர்களது விவசாயக்கலை என்பது மாறுபட்டிருந்தது. தங்கள் குடும்பத்திற்கு மட்டுமே என கால்நடைகளை வளர்த்து வந்த ஆதிவாசி மக்களிடமிருந்து மாறுபட்ட நிலையில் இவர்கள் பால் உற்பத்திக்காகவும், மாட்டிறைச்சி விற்பனைக்காகவும், மாட்டின் தோலினால் செய்யப்படும் பொருட்களின் உற்பத்திக்காவும் என பெருவாரியான வணிக நோக்கத்துடனான முயற்சிகளை மேற்கொண்டனர். இப்படி உருவானவர்களே ”கவ் போய்”கள். இவர்களின் உடையலங்காரமும் தோற்றமும் இவர்களை வீரர்களைப் போல மக்கள் மனதில் பிரமிப்பை ஏற்படுத்தியது. ”கவ் போய்”கள் தங்கள் தொழில் என்ற ரீதியில் மட்டும் எண்ணாமல் வீர விளையாட்டுக்களில் ஈடுபடுதல், வித்தியாசமான தொப்பிகள், தோல் ஆடைகளை அணிதல், கவர்ச்சிகரமான உபகரணங்களை உருவாக்குதல், அவற்றைத் தமது அன்றாட தேவைகளுக்குப் பயன்படுத்துதல் என்ற வகையிலும் இவர்கள் மற்றவர்களின் கவன ஈர்ப்பைப் பெற்றனர்.

    டெக்ஸஸ் லோங்ஹோர்ன் (Texas Longhorn) என்னும் நீளமான பெரிய வளைந்த கொம்புகளைக் கொண்ட மாடுகள் ஸ்பெயினிலிருந்து 17, 18ம் நூற்றாண்டுகளில் மெக்சிக்கோவிற்கு கொண்டுவரப்பட்டவை. இன்றைய டெக்சாஸ் மாநிலம் முன்னர் மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். வேறு வகை மாடுகள் இன்று டெக்சஸ் மாநிலத்தில் அதன் பால், மற்றும் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வளர்க்கப்பட்டாலும், கலாச்சார நிகழ்வுகளில் இந்த டெக்ஸஸ் லோங்ஹோர்ன் வகை மாடுகள் தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு காட்சிக்கும் ஊர்வலங்களுக்கும் அழைத்து வரப்படுகின்றன.

    asu4

    asu

    இந்த அருங்காட்சியகத்தில் மிகச்சிறப்பான இரண்டு விசயங்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். முதலாவது, இங்குள்ள வெவ்வேறு வகையான குதிரை வண்டிகள். விவசாயம் இப்பகுதியில் செழித்து விரிவடைய ஆரம்பித்த பின்னர் மக்கள் வாழ்வியல் நிலை மேம்பாடு அடையத்தொடங்கியது. இந்த சூழலில் ஓரிடத்திலிருந்து காய்கறி கொண்டு சென்று விற்பனை செய்யவும், பால் வண்டிகளில் ஏற்றிச் சென்று விற்பனை செய்யவும், தபால் தலை கொண்டு செல்லவும், மக்கள் போக்குவரத்துக்காகவும் என வெவ்வேறு வகையிலான வண்டிகளை இங்கு மக்கள் உருவாக்கியிருக்கின்றார்கள். இந்த வண்டிகளில் பெரும்பாலானவை குதிரைகள் பூட்டி ஓட்டப்படுபவையே. சில, மனிதர்களே கைகளால் இழுத்துச் சென்று விற்பனை செய்யும் வகையில் அமைந்தவை. விவசாயிகள் தங்கள் கற்பனைத்திறனையும் கைத்தொழில் திறனையும் கொண்டு தங்கள் விளைப் பொருட்களை சந்தை செய்ய மேற்கொண்ட முயற்சிகளின் வெளிப்பாடாக இந்த வண்டிகளைக் காண முடிகின்றது. இத்தனை வகை வண்டிகளா என இந்த அருங்காட்சியகம் வருவோரை வியக்க வைக்கின்றது இங்குள்ள வண்டிகள் சேகரிப்பு.

    asu2

    இதனை அடுத்து ”கவ் போய்”கள் தங்கள் ஓய்வு நேரத்தில் தயாரித்த வெவ்வேறு வகை தோல் கருவிகள், ஆடைகள், மற்றும் அவர்களது இசை ஆர்வத்தினால் அவர்கள் உருவாக்கிய பாடல் ஆல்பம், அவர்களின் வீர விளையாட்டுகள் தொடர்பான புகைப்படங்கள், விருதுகள், பரிசுகள் எல்லாம் வரிசையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியைச் சொல்லலாம். Texas Cow Boy Hall of Fame எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பகுதியில் இத்தகைய பல ”கவ் போய்”களின் சாதனைகளைக் கண்டு வியக்கலாம்.

    இந்த அருங்காட்சியகம் தொடர்பான செய்திகள், இது அமைந்திருக்கும் இடம், கட்டணம், திறந்திருக்கும் நேரம், சிறப்பு கண்காட்சிகள் என எல்லா விசயங்களையும் http://texascowboyhalloffame.org/contact.php என்ற வலைப்பக்கத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 78

    மகாத்மா காந்தி அருங்காட்சியகம்- நினைவு இல்லம், (ஃபீனிக்ஸ்) டர்பன், தென் ஆப்பிரிக்கா

    முனைவர்.சுபாஷிணி

    மகாத்மா காந்தி என பெருமையுடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 1869ஆம் ஆண்டில் இந்தியாவின் போர்பந்தர் என்ற பகுதியில் பிறந்தார். இளம் பிராயத்தில் உள்ளூரில் கல்வி கற்று திருமணமும் முடித்து பின்னர் 1888ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்குச் சென்று அங்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இந்திய கம்பெனிக்குச் சட்டத்துறை உதவிகள் செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்டு 1893ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார். 1914ஆம் ஆண்டுவரை, அதாவது 20 ஆண்டுகள் தன் குடும்பத்துடன் மகாத்மா காந்தியவர்கள் தென்னாப்பிரிக்காவின் டர்பன் புறநகர் பகுதியான ஃபீனிக்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இல்லம் சீரமைக்கப்பட்டு ஒரு அருங்காட்சியகமாகவும் நினைவாலயமாகவும் இருக்கின்றது. அருகிலேயே மகாத்மா காந்தியவர்கள் தொடங்கிய அச்சகமும் இன்னமும் அதன் சிறப்பு குறையாது அமைந்திருக்கின்றது.

    as1

    டர்பன் நகரிலிருந்து வடக்கு நோக்கிய பயணமாக N2 சாலையில் 177 எக்ஸிட் எடுத்து Kwamashu H’way (M25) Inanda R102 சாலையில் வந்து இடது பக்கம் தொடர்ந்து பயணிக்கும் போது சாலையின் இருபக்கமும் மகாத்மா காந்தி நினைவு இல்லம் பற்றிய விளம்பர அட்டைகள் விளக்குக் கம்பங்களில் இணைத்திருப்பதைக் காணலாம். வழிகாட்டிப் பலகையைப் பார்த்தே உள்ளே நுழைந்தால் அங்கே சுலபமாக இந்த இடத்தை நாம் அடைந்து விடலாம். ஃபீனிக்ஸ் மக்கள் குடியிறுப்புப் பகுதி என இப்பகுதி அழைக்கப்படுகின்றது.

    ​2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்து நாட்கள் பயணமாக டர்பனுக்குச் சென்றிருந்தேன். இங்கு செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காந்தியின் சத்தியசோதனை நூலை நான் வாசித்திருப்பதால் அவர் ஆப்பிரிக்காவில் சில காலங்கள் வாழ்ந்தார் என்பது நினைவில் இருந்தது. இந்தப் பயணம் அமைந்தபோது கண்டிப்பாகச் சென்று பார்த்து வரவேண்டிய ஒரு இடம் இது என என் பயணக் குறிப்புப் பட்டியலில் இணைத்துக் கொண்டேன்.

    as2

    காந்தி நினைவு இல்லம் காணச் செல்கின்றோம். இந்திய வம்சாவளியினர் நிறைந்த ஒரு இடமாக இது இருக்கும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் சுற்றிலும் எளிமையான, ஆப்பிரிக்க இனமக்களின் கிராமமாகக் காட்சியளித்தது ஃபீனிக்ஸ். நான் சென்றிருந்த வேளையில் ஆப்பிரிக்க சூலு இன மக்கள் சாலையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் குழந்தைகள் விளையாடிக் கொண்டும் என இருந்தனர்.

    as3

    உள்ளே செல்லும் போது முதலில் நம்மை வரவேற்பது மகாத்மா காந்தி ஆரம்பித்த அச்சகத்தின் கட்டிடம். இது ஒரு சர்வதேச பத்திரிக்கை அச்சகம் என்ற குறிப்புடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இங்குதான் காந்தி தனது Indian Opinion என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். பின்னர் இந்தப் பத்திரிக்கை Opinion எனப் பெயர் மாற்றம் கண்டது. 1903 முதல் இந்தப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1961ஆம் ஆண்டு இப்பத்திரிக்கை வெளியீடு நின்று போனது.

    இங்கு காந்தி வாழ்ந்த இல்லத்திற்கு சர்வோதயா என்ற பெயர் அமைந்திருக்கின்றது. இந்த இல்லம் இருக்கும் இடத்தில் முதலில் காந்திக்கும் அவர் குடும்பத்திற்கும் அமைக்கப்பட்ட இல்லமானது 1985ஆம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்த இனாண்டா கலவரத்தில் தீயில் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அதே இடத்தில் அதே வகையில் புதிய இல்லம் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் தரைப்பகுதிகள் தீயில் சேதமடையாததால் வீட்டின் மேல் பகுதியை மட்டும் புதுப்பித்து நினைவில்லமாக எழுப்பியிருக்கின்றனர். இந்த இல்லத்தின் உள்ளே மிக எளிமையான வகையில் காந்தியை நினைவூட்டும் பல வரலாற்று நிகழ்வுகளின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    as4

    ​வீட்டின் முன் புறத்தில் சிறிய பூங்காவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவனத்தின் ஒரு பகுதியில் மிக அழகான சிறிய குடில் ஒன்று அமைக்கப்பட்டு அதில் உள்ளே காந்தியின் சிலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ஒரு சமூக மையம் போன்ற ஒரு கட்டிடம் உள்ளது. இங்கே காந்தியின் பெரிய உருவப் படங்கள் குறிப்புகளுடன் உள்ளன.

    ​மீண்டும் முன் பகுதிக்கு வந்தால் அச்சகத்தை வந்தடைவோம். அச்சகத்தின் உள்ளே உள்ள அறையில் காந்தி வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இவை வரலாற்றை நினைவூட்டும் ஆவணங்கள். இங்கே விரும்புவோர் காந்தி தொடர்பான நினைவுச் சின்னங்களை வாங்கிச் செல்லலாம். இங்கே வருவோருக்கு இலவசமாக இந்த நினைவு இல்லம் பற்றிய ஒரு சிறு குறிப்பு அட்டையை வழங்குகின்றனர்.

    as5

    இங்கு, இந்த அச்சகத்தில் தான் காந்தி தனது முதல் நூலான Indian Home Rule நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலில் அவர் இந்தியாவிற்கான தனது அரசியல் சிந்தனைகளையும் பல மதங்களுக்கிடையிலான மத நல்லிணக்கத்தின் தேவை பற்றியும் எழுதியுள்ளார். அண்ணல் காந்தி மதத்தீவிரவாதக் கொள்கை கொண்டோரால் கொல்லப்பட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது சிலைக்கு மரியாதை செய்கின்றோம். ஆனால் நாம் அவரது கொள்கைகளான அகிம்சையைப் போற்றுவதும் இல்லை, அவரது கொள்கையான மத நல்லிணக்கத்தை மதிப்பதும் இல்லை என்ற சூழலே பெருகி வருகின்றது.

    மகாத்மா காந்தியடிகளின் வாழ்வில் தென் ஆப்பிரிக்க வாசம் என்பது மிக முக்கியமானது. இங்கிருந்த காலத்தில் அவர் நேரில் சந்தித்த ஆப்பிரிக்க மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையும் தென் இந்தியாவிலிருந்து சென்றிருந்த இந்திய கரும்புத் தோட்டக் கூலித் தொழிலாளருக்கு எதிரான ஒடுக்குமுறையும் அவரை விடுதலை பற்றி சிந்திக்க வைத்தன. இந்த சிந்தனைக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் தமிழகத்திலிருந்து ஆப்பிரிக்காவிற்குக் கூலியாகக் குடியேறிய பெற்றோருக்குப் பிறந்த தில்லையாடி வள்ளியம்மை என்ற போராளிப் பெண். தம் மக்களுக்கு எதிராக ஆங்கிலேய அரசு மேற்கொண்ட கடும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார். மகாத்மா காந்தியடிகள் ஏற்பாடு செய்து நடத்திய போராட்டத்தில் ஈடுபட்ட அவரை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அங்கு மோசமான நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட சில நாளிலேயே இவர் இறந்தார். இவரது மறைவு காந்தியடிகள் மனதில் விடுதலை உணர்வினை ஆழமாகப் பதிய வைத்தது.

    தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் ஜோன் ரஸ்கின் எழுதிய Unto This Last என்ற நூலின் தாக்கத்தால் டர்பனின் புறநகர்பகுதியான ஃபீனிக்ஸில் ஒரு சமூக நலக்குடியேற்றப்பகுதியை 1904ம் ஆண்டில் இவர் வடிவமைத்தார். இப்பகுதியில் ஒரு அச்சகம், ஒரு மருத்துவமணை, பள்ளிக்கூடம், வீடுகள் என அனைத்தும் இந்த குடியேற்றப்பகுதியிலேயே இருப்பது போல அமைத்தார். கூலிகளாக இருக்கும் மக்களும் எல்லா நலன்களையும் பெற வேண்டும் என்பது அவரது மைய நோக்கமாக இருந்தது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்தக் குடியிறுப்பு பகுதியை அவர் வடிவமைத்து செயல்படுத்தியும் காட்டினார். இன்றும் தென்னாப்பிரிக்காவில் மனித உரிமைக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கும் குறியீடாக மகாத்மா காந்தியடிகளின் இந்த சர்வோதய நினைவில்லம் திகழ்கின்றது.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 77

    ஹெச்.சி.ஆண்டர்சன் அருங்காட்சியகம், ஓடன்சீ, டென்மார்க்

    முனைவர்.சுபாஷிணி

    பிளாட்டோவின் தி ரிப்பப்ளிக் நூலில், சாக்ரடிஸ் அடிமண்டிசுடன் நிகழ்த்தும் கருத்துரையாடலில் புராணக்கதைகள் பற்றிக் கூறும் போது ஒரு கருத்தை முன்வைப்பார். அதாவது புராணக்கதைகள் தரம் மிகுந்தவையாக அறிவுக்குப் பொருந்துவதாக அமைய வேண்டும். கற்பனைகள் அதில் நிறைந்திருந்தாலும் அழகியல் அதில் இருக்க வேண்டும். கீழான சிந்தனைகளோ, குழந்தைகளின் சிந்தனையைக்கெடுக்கும் கதைகளோ தவிர்க்கப்படவேண்டும். ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகளே குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உரமாக அமையும்.

    கற்பனைகள் இல்லாத மனிதர்களைப்பார்ப்பது கடினம். மனித மனம் ஏதாகினும் ஒன்றினை கற்பனை செய்துப்பார்த்து அந்த கற்பனை தரும் சுகத்தில் லயிக்கும் தன்மை கொண்டது. எத்தகைய சிந்தனைகளை மனம் உள்வாங்க பழக்கப்பட்டுள்ளதோ, அத்தகைய சிந்தனைகளே கற்பனைகளுக்கும் அடித்தளமாக அமைகின்றன. அத்தகைய கற்பனைகள் நாளுக்கு நாள் மாறி வளர்ந்து புது வடிவம் பெறலாம். அல்லது கற்பனைகள் மறைந்தும் போகலாம். கற்பனைகளில் வாழும் நிலையை இன்று விர்ச்சுவல் ரியாலிட்டி எனும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு பொருந்தியும் பார்க்கலாம். விச்சுவல் ரியாலிட்டி தரும் வாய்ப்பினைக்கொண்டு புது அவதாரங்களை எடுத்துக் கொண்டு அந்த அவதாரங்களாக மனிதர்கள் கற்பனை உலகத்தில் சில மணிப்பொழுதுகளைக் கழிக்கலாம். உதாரணமாக, வானில் பறப்பது போன்ற அனுபவம், நிலவில் நடப்பது போன்ற அனுபவம், வானூர்தியைச் செலுத்துவது போன்ற அனுபவம், நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்தில், கடலின் ஆழ்கடலில் நீந்திச் சென்று ஆழ்கடல் உயிரினங்களைக் கண்டு ரசித்தல் என பலவகைப்படும் அனுபவங்களை விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் கணினி சார்ந்த தொழில்நுட்பம் நமக்கு வழங்குகின்றது. இந்தக் கருவிகள் இல்லாமலும் மனமெனும் குதிரையில் ஏறி அமர்ந்தால் இந்தப் பேரண்டத்தையும் வலம் வரும் அனுபவத்தை நாம் பெறலாம். மனமிருந்தால்.

    as1

    கற்பனையில் உதிக்கும் கதைகளை எழுதி வைத்து அவற்றைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தோர் பலர். நம் வழக்கில் இருக்கும் நிலாவில் வாழும் பாட்டி வடைசுட்டுத்தர அதனைக்கவ்விச் சென்ற காகத்தின் கதையை யார் உருவாக்கினரோ.. இன்னமும் தமிழ்ச்சூழலில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் இந்தக் கதையைக்கேட்டே வளர்கின்றனர். மேற்கத்திய உலகில் சிறுவர் கதைகளுக்குப் புகழ்பெற்றவர் என்றால் ஹெச்.சி.அண்டர்சன் அவர்களைத்தான் குறிப்பிடவேண்டும். அவர் பிறந்த சிறு குடிசை இருந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள அவரது அருங்காட்சியகம் பற்றியதுதான் இன்றைய கட்டுரை.

    as2

    ஹெச்.சி.அண்டர்சன் அவர்கள் 1805ஆம் ஆண்டு பிறந்தவர். தம் பெற்றோர்களுக்கு ஒரே குழந்தை இவர். நல்ல பொருளாதார நிலையில் இருந்து பின்னர் நொடித்துப்போன தந்தைக்கும் தாயாருக்கும் மகவாகப்பிறந்தவர். இளம் வயதிலேயே செருப்புத்தைக்கும் தொழிலுக்குத் தள்ளப்பட்ட தாயும் பின்னர் எளிய வேலைகள் செய்து பொருளீட்டிய தந்தைக்கும் பிறந்தவர் இவர். தந்தையாருக்கு தாம் பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் மிக ஆழமாக இருந்தது. ஏதாகினும் சாதித்தே ஆகவேண்டும் என இருந்தவர் அவர். ஆனால் அவரால் எவ்வகையிலும் உயர்நிலைக்கு வரமுடியாதுப்போக பின்னர் காய்ச்சல் ஏற்பட்டு ஹெச்.சி.அண்டர்சன் இளம் சிறுவனாக இருந்தபோதே இறந்து விடுகின்றார்.

    கற்பனைத்திறன் வாய்க்கப்பெற்றவர் ஹெச்.சி.அண்டர்சன். அவர் தமது இளம் வயதிலேயே தமது சூழலில் தாம் சந்திக்கும் மூதாட்டிகளிடம் தமது கற்பனைக்கதைகளைச் சொல்வது என்றும், கதாபாத்திரங்களை வடிவமைத்து அவற்றை வரைந்து உருவாக்குவது என்றும் கதாபாத்திரங்களை பொம்மைகளாக வடிவமைத்து உருவம் கொடுத்து அவற்றிற்கு ஆடைகள் தைத்து அணிவித்து கதையை நாடகமாக நடத்துவது எனத்தனது திறமைகளை படிப்படியாக வளர்த்துக் கொண்டார். அவரது பொருளாதார ஏழ்மை நிலை அவரது கற்பனைக்கு வறுமையைத் தந்துவிடவில்லை.

    as3

    இளம் வயதிலேயே மனித உடற்கூறு பற்றி அறியாத நிலையிலேயே மனித உடலின் உறுப்புகளைப்பற்றிய ஈர்ப்பும் ஆர்வமும் இவருக்கு இருந்தது. ஏதும் புரியாத நிலையிலும் மனித உடல்கூற்றை விள்க்கும் ஒரு வரைபடத்தை ஒரு சுவரில் வரைந்து மனித உடலில் நுரையீரல், இதயம் என உறுப்புகளை வரைந்து தமது சூழலில் இருந்த மூதாட்டிகளிடம் காட்ட, இது அவர்கள் மத்தியில் ஹெச்.சி.அண்டர்சனுக்கு நன்மதிப்பை வழங்கியது. வரைந்ததோடு நின்றுவிடாமல் தனது படத்தை விளக்கி அந்தச் சிறுவயதிலேயே சொற்பொழிவும் ஆற்றியிருக்கின்றார். இதனைக்கேட்டு மகிழ்ந்த மூதாட்டிகள் இவருக்குப் பல கற்பனைக் கதைகளைச் சொல்ல ஆயிரத்து ஒரு இரவு கதைகள் போல் முடிவில்லாத கற்பனை உலகம் இவர் கண் முன்னே இளம் வயதிலேயே திறக்க ஆரம்பித்தது.

    எதனை நோக்கினும் அதில் தனது கற்பனையை ஓடவிடுவார். அது புது உலகைப்படைக்கும். கதாப்பாத்திரங்கள் அப்புது உலகில் வலம் வருவார்கள். இவர் கண்களை மூடிக்கொண்டு கற்பனையிலேயே நீண்ட நேரம் இருப்பது வழக்கமாகியது இதனைப்பார்க்கும் ஏனையோர் இவருக்குக் கண்களில் ஏதேனும் கோளாறோ என நினைத்து கவலையுற்றனர். இவருக்குக் காணும் சக்தி அதிகரித்ததோடு மனக்கண்ணில் காணும் திறனும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

    as4

    இவரது கதைகளில் உலக மக்கள் அறிந்த சிறுவர் கதைகளில் மிகப்பிரபலமானவை என்றால் “The Little Mermaid”, “The Nightingale”, “The Snow Queen”, “The Ugly Duckling”, “Thumbelina”, போன்றவற்றைக்குறிப்பிடலாம்.

    ஷேக்ஸ்பியரின் கதைகளைக் கேட்டு பின்னர் அக்கதைகளை தம் மனக்கண்ணில் தொடரச் செய்து கற்பனை செய்வார்.அதில் ஹாம்லட்டின் ஆவியைக்கண்டு கதையில் தன்னையும் ஒரு கதாப்பாத்திரமாக அமைத்துக் கொண்டு கற்பனைக்கதையை தொடர்ந்து பெரிதாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வேளையில் தான் தனது முதல் படைப்பையும் இவர் உருவாக்கினார். இவரது முதல் படைப்பு சோக முடிவைக் கொண்டது. நாடகம் உருவானதும் அவர் வசித்த தெருவிலிருந்த அனைவருக்கும் அதனை வாசித்துக் காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கின்றார் ஹெச் .சி.அண்டர்சன் .

    இவரது நூல்கள் உலகின் 125 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியிலும் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. டென்மார்க் வாழ் தமிழரான திரு.தர்மகுலசிங்கம் “அனசன் கதைகள்” என்ற பெயரில் தமிழில் இந்த நூலை மொழிபெயர்த்துள்ளார்.

    ஹெச்.சி.அண்டர்சன் பற்றி குறிப்பிடுவதென்றால், அவர் வாழ்க்கையின் இரண்டு முக்கிய அம்சங்களாக அமைந்தவை எழுத்தும் அவர் செய்த பயணங்களும் தான். தன் கற்பனைகளையெல்லாம் எழுதி வைத்தார். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் ஊர் ஊராக நாடு நாடாகச் சுற்றுப்பயணம் செய்தார். பரந்த உலக அறிவு அவரது கற்பனைக் களத்திற்கு உரமாக அமைந்தது.

    தனது வாழ்க்கையில் .ஆரம்பம் முதலே வறுமையான சூழலில் இருந்தாலும், பல அசௌகரியங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் கூட, அவையனைத்தையும் பொருட்டாக எண்ணாமல், வருந்தித் தளர்ந்து வீழாமல், யாரையும் குறைகூறாமல், தொடர்ச்சியாகத் தனது கதைகளை உருவாக்குவதிலும், கதாப்பாத்திரங்களை வடிவமைப்பதிலும் அவரது ஆர்வமும் காலமும் சென்றன.

    1875ம் ஆண்டு உடல் நலக்குறைவினால் ஹெச்.சி.அண்டர்சன் இறந்தார். இவரது சமாதி டென்மார்க் தலைநகரான கோப்பன்ஹாகனில் உள்ள அசிச்டெண்ட் கல்லறைப்பகுதியில் அமைந்திருக்கின்றது. ஹெச்.சி.அண்டர்சனின் சிலைகள் உலக நாடுகளில் வைக்கப்பட்டுள்ளன. அவரது பெயரில் டென்மார்க்கும் கசகிஸ்தானும் அஞ்சல் தலைகளை வெளியிட்டு அவரைச் சிறப்பித்தன.

    as5

    ஹெச்.சி.அண்டர்சன் வாழ்ந்த இல்லம் இன்று அருங்காட்சியகமாக அமைந்திருக்கின்றது. இங்கே ஹெச்.சி.அண்டர்சன் அவர்கள் தாமே தயாரித்து உருவாக்கிய 111 காகித உருவங்கள், அவர் கைப்பட உருவாக்கிய ஓவியங்கள். அவரது சேகரித்த பழம் நூல்கள் ஆவணங்கள், அவரது பயணக்குறிப்புகள் என வளாகம் நிறைந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக்கட்டிடத்தின் முன்புற வாசலில் அழகிய பூந்தோட்டமும் சிறிய குளமும் அலங்கரிக்கின்றன. மிகுந்த எழில் கலையம்சம் கொண்ட வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

    டென்மார்க் செல்பவர்கள் இந்த அருங்காட்சியகம் சென்று வரலாம். இந்த அருங்காட்சியகத்தின் முகவரி
    Hans Christian Andersen Museum
    Bangs Boder 29
    5000 Odense C

    இந்த அருங்காட்சியகம் பற்றிய மேலதிகத் தகவல் பெற:
    museum@odense.dk  வலைப்பக்கத்திலோ அல்லது tel. +45 6551 4601 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    சிறுவர்களுக்குப் பல கதைகளை எழுதிய ஹெச்.சி.அண்டர்சன், தனது வாழ்க்கைக்குறிப்பினையும் எழுதியிருக்கின்றார். அதற்கு அவர் சூட்டிய பெயர், தமிழில் ” என் வாழ்க்கை – ஓர் அழகான கதை” என்பதாகும். தன் வாழ்க்கையை ரசித்தவர் அவர். அவரது கதைகள் வழி நம் வாழ்க்கையையும் மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர் என்பதில் மிகையில்லை.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 76

    76. எரிமலை ஆய்வுக்கூடம்-அருங்காட்சியகம், லா பல்மா தீவு, கனெரி தீவுக்கூட்டம்

    முனைவர்.சுபாஷிணி

    இந்த பூமி பல அதிசயங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. இயற்கை நம் கண் முன்னே காட்டும் பல கோடி அதிசயங்களைப் பார்க்கும் மனமிருப்போரால் அவற்றைப் பார்த்து இயற்கை அழகில் இலயிக்க முடிகின்றது. ஏனையோருக்கு அவை பொருளற்றதாகப் போய்விடுகின்றது. இந்த பூமிப்பந்தின் பூகோள இயற்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பவை எரிமலைகள். உயிருள்ள, அதாவது இன்னமும் பூமிக்கு வெகு அடியில் கனன்று கொண்டு தீப்பிழம்புகளுடன் உள்ள எரிமலைகள் இன்னமும் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது தொலைக்காட்சி ஊடகங்களில் நாம் பார்த்திருக்கலாம். மிகப்பல எரிமலைகளோ உயிரில்லாதவை. அதாவது, இத்தகைய எரிமலைகளிலிருந்து வெடிப்புக்கள் நிகழாது என்பதால் இவை அபாயகரமற்றவை என அறியப்படுபவை. இத்தகைய உயிரற்ற எரிமலைகள் பல தீவுகளாக நம் கண் முன்னே காட்சியளிக்கின்றன. அத்தகைய தீவுகளில் ஒன்று தான் லா பல்மா தீவு.

    asu
    லா பல்மா தீவு என்பது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒரு தீவு. கனெரி தீவுகள் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் ஒரு தீவு இது. மொரொக்கோ நாட்டுக்குக் கீழே, அதாவது பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குக் கீழும் ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதியிலும் அமைந்திருப்பது இந்தக் கனெரி தீவுக்கூட்டம். இந்தத் தீவுக்கூட்டத்தில் எட்டு பெரிய தீவுகளும், மேலும் பலப்பல சிறு தீவுகளும் நிறைந்திருக்கின்றன. இந்தக் கனெரித்தீவுக்கூட்டம் தற்சமயம் ஸ்பெயின் நாட்டிற்குச் சொந்தமானதாக உள்ளது.

    லா பல்மா தீவைப்பற்றிச் சொல்வதென்றால், இது கனெரித்தீவுக்கூட்டத்தில் ஐந்தாவது பெரிய தீவு. ஆயினும் ஒரு நாள் வாகனத்தில் தீவு முழுவதையும் சுற்றி வந்து விடலாம். இந்தத் தீவின் தலைநகரம் சந்தாகுரூஸ் டி லா பல்மா நகரம். இது ஒரு சிறு நகரம்.

    சுற்றுலா பயணிகள் விரும்பிச்செல்லும் சுவர்க்கபுரிகளில் ஒன்று இந்த லா பல்மா தீவு. வருடம் முழுவதும் சுற்றுப்பயணிகளின் கூட்டம் அலைமோதும் ஒரு தீவு. இந்தத்தீவு பூகோளவியலாளர்களின் ஆய்வுகளின் படி மூன்று அல்லது நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வெடித்த எரிமலையிலிருந்து உருபெற்ற ஒரு தீவு ஆகும். அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தபுரியண்ட எரிமலை வெடித்துச் சரிந்து பெரும் பள்ளத்தினை ஏற்படுத்தியது. இப்பகுதியை கல்டேரா டி தபுரியண்ட என அழைக்கின்றனர். ஸ்பேனிஷ் நாட்டின் ஆளுமைக்குள் லா பல்மா வந்த பின்னர் ஏழு எரிமலை வெடிப்புக்கள் நடந்துள்ளன. அவையாவன:
    1470-1492 மொந்தானா குவேமேடா ( Montaña Quemada)
    1585 தாயுவா – எல்பாசோ (Tajuya near El Paso)
    1646 சான் மார்ட்டின் எரிமலை (Volcán San Martin)
    1677 சான் அந்தோனியோ எரிமலை ( Volcán San Antonio)
    1712 எல் சார்க்கோ எரிமலை ( El Charco)
    1949 நம்ப்ரோக் எரிமலை, ஹோயோ நெக்ரோ எரிமலை (Volcán Nambroque at the Duraznero, Hoyo Negro and Llano del Banco vents)
    1971 தெனகூயா எரிமலை (Volcán Teneguía)

    as1

    இதில் ஆக இறுதியாக வெடித்து பின்னர் மடிந்த தெனகூயா மற்றும் 1677இல் வெடித்து பின் மடிந்த சான் ஆந்தோனியோ எரிமலையின் ஃபுவான்கலியாந்தாவில் உள்ள ஆய்வுக்கூடமும் அருங்காட்சியகமும் உள்ள பகுதிக்கு நான் 2012ஆம் ஆண்டில் சென்றிருந்தேன்.

    ஒரு நீண்ட நிலப்பரப்பு அது. சீதோஷ்ணம் ஏறக்குறைய 10டிகிரி செல்சியஸ் மலையின் உச்சிப்பகுதியில் . கீழே இறங்க இறங்க 15 டிகிரி செல்சியஸ் வரை சீதோஷ்ணம் கூடியவாறு இருந்தது. எரிமலைக்கு மேலே நிற்கும் போது மேகமூட்டம் நம்மைக் கடந்து செல்லும். அதற்குள்ளே ஊடுருவி நடந்து செல்வது புது அனுபவமாக நிச்சயமாக இருக்கும்.

    as2

    எரிமலைகள் வெடித்துச் சிதறும் போது பூமியின் அடியிலிருந்து வெடித்துக் கிளம்பும் தீப்பிழம்புகள் பல நூறு வகையான தாதுப்பொருட்களை உள்ளடக்கியவை. மனிதர்கள் அதிகம் வாழாத தீவுகளில் எரிமலைகள் கக்கிய தீப்பிழம்புகள் இறுகி பாறைக்கற்களாக புதிய தோற்றம் பெற்று அதன் மேற்பரப்பில் இந்த சீதோஷ்ணத்திற்கு ஏற்ற தாவார வகைகள் முளைத்துக் கிளம்பியிருக்கின்றன.

    இந்த எரிமலைப்பிரதேசத்தில் நடக்க நடக்கக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் நடமாட்டம் குறைந்த, எந்தவித சத்தமோ, இடையூறோ இல்லாத தனிமையை உணரலாம். பூமியைக்கடந்து ஏதோ வேற்றுக் கிரகத்தில் உலாவிக் கொண்டு இருக்கின்றோமே என்ற எண்ணத்தை வரவழைக்கும் வித்தியாசமானதொரு அனுபவம் இது. எரிமலைப்பகுதியின் கீழ்ப்பகுதியில் நடந்து பின்னர் தெனகூயா எரிமலை வெடிப்பு பள்ளத்தாக்குப்பகுதிக்கு அதன் உச்சிப் பகுதியான ஃபுவான்கலியாந்தா வந்து சேர்ந்தால் அங்கே எரிமலை ஆய்வுக்கூடமும் அருங்காட்சியகமும் இருப்பதைக் காணலாம்.

    as3

    லா பல்மா மட்டுமன்றி கனெரி தீவுகளின் எரிமலைகள் பற்றிய விளக்கம், எரிமலைகள் எவ்வாறு உருவாகின்றன என்ற தகவல்கள், உலகின் முக்கிய எரிமலை வெடிப்புச் சம்பவங்கள் பற்றிய விபரங்கள் என விரிவான நில அமைப்புப்பற்றிய ஆய்வுகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

    லா பல்மா தீவில் சுற்றுலாப் பயணிகள் எரிமலைகளில் நடந்து அதன் அனுபவத்தைப் பெறும் வகையில் தரமானத் தகவல்களை வழங்குகின்றனர். வழிகாட்டி கையேடுகளை வைத்துக்கொண்டே இந்த எரிமலையில் நடந்து திரிந்து நில அமைப்பு, தாவர வகைகள், எரிமலை தீப்பிழம்பு கற்பாறைகள் ஆகியனவற்றைக் கண்டறியலாம். பூகோள நில ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டோருக்கு இவ்வகை அனுபவங்கள் மிகப்பயனுள்ளதாக அமையும்.

    as4

    சரி. நமது அடுத்த அருங்காட்சியகத் தேடலில் மற்றுமொரு அருங்காட்சியகம் அழைத்துச் செல்கின்றேன். என்னைத் தொடரலாமே!.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 75

    வதை அருங்காட்சியகம், ப்ராக், செக்

    முனைவர்.சுபாஷிணி

    உலகமெங்கும் ஒரு அரசின் கருத்துக்கு எதிர் கருத்து ஒன்று எழும்போது, மாற்றுக் கருத்துகளை உரக்கப் பேசுவோர் ஏதாவது ஒரு வகையில் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது என்பது காலம் காலமாக நடந்திருக்கின்றது. உலகெங்கிலும் இவ்வகை நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் இத்தகைய வதைகள் எவ்வாறு நிகழ்த்தப்பட்டன? அவற்றை நிகழ்த்துவதற்கு உபயோகித்த வதைக்கும் கருவிகள் என்பன பற்றிய செய்திகளை ஆசிய நாடுகளில் பொதுவாகக் காணமுடிவதில்லை, தாய்லாந்து போன்ற ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர.

    ஆனால் ஐரோப்பாவில் வதை முகாம்கள் பற்றியும், வதை செய்யும்போது பயன்படுத்திய கருவிகள், வதை செய்யப்பட்ட முறைகள் பற்றிய ஆவணங்கள் என்பன சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தனது தேசத்திலேயே தங்கள் மூதாதையர் நிகழ்த்திய கொடுமைகளை இன்று மனம் திறந்து பேசும் சிந்தனைப்போக்கு ஐரோப்பாவில் விரிவாக வந்துவிட்டமைக்கு இது ஒரு சான்று என்றே நினைக்கின்றேன். ஆசிய நாடுகளிலோ, தாமும் தம் மூதாதையரும் என்றுமே நன்மைகளை மட்டுமே செய்தவர்கள் என்றும், குறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற சிந்தனையும், பொதுவாகவே எண்ண ஓட்டத்தில் நிறைந்திருக்கும் தன்மையைப் பார்க்கின்றோம். ஆக, தங்கள் மூதாதையர்களின் நிறைகளை மட்டுமே பேசத்துணியும் வரலாற்று ஆர்வலர்களாகவே ஆசிய நாடுகளின் மக்கள் சிந்தனைப்போக்கு இருக்கின்றது என்றே நினைக்கத்தோன்றுகிறது..

    ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளின் சுவடுகளாவன பல்வேறு வகையில் ஆவணப்படுத்தப்படுதல் என்பது நடந்துள்ளது. பொதுமக்கள், அரசியல் எதிரிகள், விஞ்ஞானிகள், மாற்றுச் சிந்தனையும் மாற்றுக் கருத்துகளையும் பிரச்சாரம் செய்பவர்கள், தெய்வீக சக்தியைக் கொண்டுள்ளதாகச் சொல்லிக் கொள்பவர்கள் போன்றோர் அரச சக்திகளாலும் அரசு ஆதரவு பெற்றோராலும் கண்டுபிடிக்கப்பட்டு “சமுதாயச் சீரழிவைத்தடுத்தல்” என்று முத்திரைக்குத்தப்பட்டு அத்தகையோர் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வுகள் ஏராளம் நடந்திருக்கின்றன என்பதை இவ்வகை அருங்காட்சியகங்களில் நாம் காண்கின்ற ஆவணங்களின் வழி அறிய முடிகின்றது.

    நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், பெல்ஜியம் நாட்டின் ப்ரூகஸ், ஜெர்மனியின் ரூடர்ஷைம் அம் ரைன், ரோத்தன்பர்க், இத்தாலியின் சான் கிமிக்னானோ போன்றவை அவ்வகையில் பிரசித்தி பெற்றவை. அந்த வரிசையில் இடம்பெறும் ஒன்றுதான் செக் நாட்டின் தலைநகரான ப்ராகில் இருக்கின்ற வதை அருங்காட்சியகம்.

    ப்ராக் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதி கட்டிடத்தின் வரிசையான கடைகளுக்கு இடையே இந்த வதை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. வதைப்பது என்றாலே அச்சமூட்டும் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வுதானே. ஆக முகப்பிலும் வரவேற்பு பகுதியிலும் நம்மை வரவேற்பனவாக வதை செய்யப் பயன்படுத்தும் சில கருவிகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.

    as4

    வதைக்கருவிகள் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு என மாறுபாட்டுடன் பயன்படுத்தினாலும் ஒட்டு மொத்தத்தில் ஒரு மனிதரைக் கொல்வதற்கு முன்னர் அவர் எவ்வளவு வதைகளை அனுபவிக்க முடியுமோ அந்த அளவிற்குக் கொடுமை செய்து கொல்வது என்பது வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒவ்வொரு வகை வதைக்கும் என பிரத்தியேகக் கருவிகளைத் தயாரித்து வதை செய்து கொலைகளை நிகழ்த்தியிருக்கின்றனர் என்பதையும் குறிப்புகளின் வழி அறியமுடிகின்றது.

    உதாரணமாக மரத்தை வெட்ட தச்சர்கள் பயன்படுத்தும் ரம்பம் போன்ற ஒரு கருவியைக் கொண்டு மனிதனின் உடலை இரு வேறு பகுதிகளாக வெட்டுவதோ அல்லது சிறிது சிறிதாக மனிதரின் உடலின் பாகங்களை வெட்டி வதைத்துக் கொல்வது என்பது வழக்கில் இருந்திருக்கின்றது.

    as3

    இரும்பு ஆணிகள் பொருத்திய நாற்காலி என்பது ஒரு வகை வதைக்கருவிதான். ஒரு ஆணி நம் உடலில் பட்டாலே எத்தகைய உடல் வேதனை ஏற்படும் என்பதை நாம் அறிவோம். ஆனால் முழுவதும் ஆணிகள் பொருத்தப்பட்ட ஒரு நாற்காலியில் தண்டனைப்பெறுபவரை உட்கார வைத்து கயிற்றினால் கட்டி சிறிது சிறிதாக இறுக்கி வதைத்துக் கொல்வது என்பதை பண்டைய ஐரோப்பாவில் நிகழ்த்தியிருக்கின்றனர். இப்படி வதைக்கும் போது இந்தத் தண்டனை மணிக்கணக்கில் நீண்ட நேரம் நிகழ்த்தப்படுமாம். உடலில் இரத்தம் வெளியேறி மனிதர்கள் இறந்து போவது ஒருவகை என்றால் ஒரு சிலரை அச்சமூட்டும் வகையில் மட்டுமே இந்த இரும்பு ஆணி நாற்காலியை பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதையும் அறிய முடிகின்றது.

    as1

    இப்படி ஒவ்வொரு கருவிக்கும் அதனை எவ்வாறு பயன்படுத்தினார்கள். எப்படி தண்டனை கொடுத்தார்கள் என்பதை அறியும் போது மனம் அச்சத்தால் உறைந்து போவதை தடுக்க முடிவதில்லை. ஒரு மனிதர் தன் சக மனிதரை எவ்வாறு வதைக்க மனம் வருகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது.

    பொதுவாகத் தண்டனை வழங்குவது என்பது ஒருபுறமிருக்க, போர்க்காலங்களில் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்படுவோர் எதிரி நாட்டு படையினரால் வதைக்கப்படுவது என்பது எல்லா நாடுகளின் வரலாற்றிலும் காணக்கூடிய ஒன்றே. கற்காலத்தில் மட்டும்தான் இந்த நிலை என்பதல்ல. இன்றும் கூட இந்த நிலை தொடர்கின்றது.

    as

    ப்ராக்கில் உள்ள இந்த வதை அருங்காட்சியகம் தொடங்குவது கீழ்த் தளத்தில். பாதையைக் குறுகலாக அமைத்து ஆங்காங்கே சில மாதிரி வடிவங்களைச் செய்து வைத்திருக்கின்றார்கள். வதை செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் காட்சிக்கு இருப்பதோடு அவற்றிற்கான விளக்கங்களும் செக், டோய்ச், ஆங்கிலம், பிரென்சு ஆகிய நான்கு மொழிகளில் வழங்கப்பட்டுள்ளன. ப்ராக் செல்பவர்கள் இந்த அருங்காட்சியகம் சென்று நேரில் பார்த்து பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். அருங்காட்சியகத்தின் முகவரி :
    Křižovnické nám. 1, 111 00 Praha 1-Staré Město, Czech Republic

    as5
    சரி, அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்தைப் பற்றிய தகவல்களைத் தருகின்றேன். தொடர்ந்து வாருங்கள்!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 74

    ஏதென்ஸ் அகாடமி, ஏதென்ஸ், க்ரீஸ்

    முனைவர்.சுபாஷிணி

    ஏதென்ஸ் அகாடமி (The Academy of Athens) பண்டைய கிரேக்கத்தில் கி.மு..387ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு தத்துவ மையம். தத்துவ மேதைகளில் உலகப்பிரசித்தி பெற்ற ப்ளேட்டோ என்ற தத்துவ மேதை உருவாக்கிய ஒரு தத்துவக்கூடம் இது. அக்காடெமோஸ் என்ற பண்டைய கிரேக்கத்தின் தலைவன் ஒருவனின் நினைவாக அவரது நினைவாலயத்துக்கு அருகாமையிலேயே கிரேக்கத்தின் புகழ் மிக்க நகரான ஏதன்ஸில் இந்த அமைப்பை உருவாக்கினார் ப்ளேட்டோ.

    as

    ஏறக்குறைய ஒன்பது நூற்றாண்டுகள் தத்துவக்கூடமாகவும் கல்வி மையமாகவும் செயல்பட்ட இந்த அகாடெமி, கி.பி.529ஆம் ஆண்டில் முடக்கப்பட்டது. தத்துவங்கள் போதிப்பதற்குத் தடை செய்யப்பட வேண்டும் என வெளியிடப்பட்ட ஒரு அரச சட்டத்தினால் இந்தப் புகழ்மிக்க அறிவுக்கருவூலம் கி.பி.6ம் நூற்றாண்டில் முடக்கப்பட்டது. ஆனால் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அதாவது மீண்டும் தோன்றிய மறுமலர்ச்சிக்காலத்தில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தொடங்கின. கிரேக்கத்தில் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஏனைய சில நாடுகளிலும் இந்த ஏதன்ஸ் அகாடமி தன்னை விரிவாக்கம் செய்து செயல்பட ஆரம்பித்தது. கிரேக்கத்தைத்தவிர்த்து ஏனைய நாடுகளில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இயங்கி வந்தாலும் கூட, மீண்டும் 1926ஆம் ஆண்டில் தான் ஏதென்ஸ் நகரில் கிரேக்கத்தில் இதன் செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. அது முதல் இந்த அறிவுக்கருவூலம் எந்தத் தடைகளும் இன்றி தொடர்ச்சியாக பல்வேறு துறைசார்ந்த ஆய்வுகளை நிகழ்த்தும் ஆய்வுக்கூடமாகத் திகழ்ந்து வருகின்றது.

    இந்த அமைப்பின் மிக முக்கிய செயல்பாடுகளாக அமைபவை ஆய்வுகள் தாம். அறிவியல், மானுடவியல், நுண்கலைகள் போன்ற துறைகளில் இங்கே ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றனர்.

    as1

    இந்த அமைப்பின் குறிப்பிடத்தக்க சாதனைகளாக சில நடவடிக்கைகளைச் செய்து நிறைவேற்றியுள்ளனர். பண்டைய கிரேக்கத்தின் வரலாற்றுக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கி அதனை வெளியீடு செய்தது இந்த அமைப்பு. அதன் தொடர்ச்சியாக பைசண்டைன் , லத்தீன் ஆகிய மொழியில் பண்டைய வரலாற்றுத்தகவல்களை சேகரித்து தொகுப்பாக வெளியிட்டது. மேலும், கிரேக்க தத்துவம், கிரேக்க சட்டதிட்டங்களின் வரலாறு, கணிதம் மற்றும் வானவியல் தகவல்களின் தொகுப்பு, எனக் குறிப்பிடத்தக்க இன்னும் பல சாதனைகளை வெளியீடுகளாக ஆய்வுலகத்திற்கு இந்த ஏதன்ஸ் அகாடமி வழங்கியிருக்கின்றது.

    as2

    ஏதென்ஸ் நகரின் பிரமாண்டமான சாலையில் ஏதென்ஸ் நூலகம், ஏதென்ஸ் பல்கலைக்கழகம் ஆகியனவற்றிற்கு அடுத்ததாக இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டைச் சார்ந்த தியோபில் ஹான்சன் (1813-1891) என்னும் ஒரு கட்டிடக் கட்டுமானக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் இது. சைமன் சினாஸ் (1810-1876) என்னும் ஒரு செல்வந்தர் இக்கட்டிடத்தைக் கட்டுவதற்கான செலவுகளைத் தாமே ஏற்றுக்கொள்ள இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இந்தக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி நிகழ்ந்தது. அப்போதைய கிரேக்க அரசின் மன்னர் ஓட்டொ, அரசியார் அமாலியா ஆகியோர் முன்னிலையில் இந்தக்கட்டிடத்தின் தொடக்கவிழா நிகழ்ந்தது. நீண்ட காலப்பணிகளுக்குப் பின்னர் 1887ஆம் ஆண்டு இதனைக் கட்டி முடித்த ஆர்க்கிடெக்ட் எர்ன்ஸ் சிலர், இதனை முழுமையாக்கி அன்றைய பிரதம மந்திரி சார்லியோஸ் ட்ரிகோப்பிஸ் அவர்களிடம் ஒப்படைத்தார். இன்றைய அளவிலும் உலகிலேயே மிக அழகிய நியோக்லேசிக்கல் வகை கட்டிடக் கலையில் அழகில் முதலிடத்தில் குறிப்பிடப்படும் பெருமையைப் பெற்றது இந்தக் கட்டிடம்.

    இக்கட்டிடத்தின் மேலே நீண்ட அழகிய சிற்பத்தொகுதி ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இது பெண் தெய்வம் அத்தேனாவின் பிறப்பை உணர்த்தும் ஒரு சிற்பமாகும். முகப்புப்பகுதியின் இரு பக்கங்களிலும் நீண்டு பருத்து உயர்ந்த தூண்களில் ஒரு பக்கம் பெண் தெய்வம் அத்தேனாவும் மறுபக்கம் ஆண் தெய்வம் அப்போலோவும் செதுக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சிற்பங்களும் பண்டைய கிரேக்கத்தின் தத்துவச் சிந்தனைகள் மீண்டும் எழுச்சி பெற்று எழுந்தமையும் அவை ப்ளேட்டொ,சாக்ரடீஸ் ஆகிய இருவரின் வழித்துணையோடு செயல்படுவதையும் குறியீடாகப் புலப்படுத்தும் வகையில் இக்கட்டிடம் வடிவமக்கப்பட்டுள்ளது.

    கட்டிடத்தின் உள்சுவர்களில் பெரிய அளவிலான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. எட்டு பகுதிகளில் வர்ணக்கலவைகளால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன. இவை கிரேக்க ஓவியக்கலைஞரான கிறிஸ்டியான் கிரிப்பேன்கெர்ட் என்பவராலும் கார்ல் ரூல் என்பவரின் ஒரு மாணவராலும் உருவாக்கப்பட்டவை. இந்த எட்டு ஓவியங்களும் புராணக்கதைகளின் வெளிப்பாடுகளாக அமைக்கப்பட்டுள்ளன.

    as4

    விரிவான வளாகம் இது. பல துறை ஆய்வுகள் இங்குத் தொடர்ந்து நிகழ்வதால் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

    ஏதென்ஸ் அகாடமி வார நாட்களில் திங்கள் தொடங்கி வெள்ளி வரை காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏதென்ஸ் நகர் செல்பவர்கள் அருங்காட்சியகமாகவே திகழும் இந்த கட்டிடத்தைச் சென்று பார்த்து வருவதைக் கட்டாயமாகத் தங்கள் பட்டியலில் வைத்துக்கொள்ளத்தான் வேண்டும்!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 73

    பாப்பிரஸ் அருங்காட்சியகம், வியன்னா, ஆஸ்திரியா

    முனைவர்.சுபாஷிணி

    பண்டைய எழுத்து ஆவணங்களைப்பற்றி ஆராய முற்படும்போது கல்வெட்டு ஆவணங்களைப் போலவே நமக்கு பேப்பிரசில் கீறப்பட்ட ஆவணங்களும் கிடைக்கின்றன. மிகப்பழமையான பேப்பிரஸ் ஆவணங்கள் எகிப்தின் செங்கடல் பகுதியைச் சுற்றி செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்றன. இன்றைக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பேப்பிரஸ் ஆவணங்கள் கி.மு.2560- கி.மு2550 எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க பேப்பிரஸ் ஆவணங்கள் உலக அதிசயங்களில் ஒன்றான கீசே பிரமிட் கட்டப்பட்ட இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளை பதிவனவாக அமைந்துள்ளன. உலகின் ஏனைய பாகங்களை விட எகிப்தில் தான் பேப்பிரஸ் ஆவணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பேப்பிரஸ் தாட்கள் நைல் நதிக்கரையோரத்தில் வளர்கின்ற பேப்பிரஸ் செடிகளைத்தக்க முறையில் பதப்படுத்தி தயார் செய்து அதிலிருந்து தாட்களாக உருவாக்கப்படுகின்றன.

    as1

    உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் பேப்பிரஸ் ஆவணங்கள் அரும்பொருட்களில் ஒன்றாக இடம்பெறுவதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். பல அரும்பொருட்களுடன் ஒன்றாக என்றில்லாமல், பேப்பிரஸ் ஆவணங்களுக்கு மட்டுமன்றி பிரத்தியேகமாக ஒரு அருங்காட்சியகம் ஆஸ்திரிய நாட்டின் வியன்னா நகரில் இருக்கின்றது. ஆஸ்திரிய தேசிய நூலகம் இருக்கும் அதே பிரமாண்டமான கட்டிடத்தின் மறுபகுதியில் இந்த பேப்பிரஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

    வியன்னாவில் உள்ள இந்த பேப்பிரஸ் அருங்காட்சியகத்தில் இருப்பவை அனைத்துமே எகிப்தின் கலாச்சார பண்பாட்டு வரலாற்று நிகழ்வுகளின் பதிவுகள். பல நூறு ஆண்டுகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் முழுமையான அல்லது சற்று சிதைந்த அல்லது பெரும்பாலும் சிதைந்த வகையில் காணப்படும் ஆவணங்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஆவணங்களில் உள்ள செய்திகள் பெரும்பாலும் இறப்பு சடங்குகளை விவரிப்பதாகவோ, மருந்து மூலிகைகள் பற்றியோ, மேஜிக் விசித்திரமான நிகழ்வுகள் என்ற வகையிலோ, இலக்கியங்களாகவோ, உணவுப்பழக்கம் பற்றியதாகவோ, நைல் நதி பயணம் பற்றியதாகவோ என்ற வகையில் அமைந்திருக்கின்றன.

    as

    இங்கு ஆவணப்பகுதியில் ஏராளமான பேப்பிரஸ் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்பில் 180.000 பேப்பிரஸ் ஆவணங்கள் உள்ளன என்பது வியப்பாக உள்ளது அல்லவா? இந்த அருங்காட்சியகம் மூன்று தளங்களில் அமைந்துள்ளது. அதில் ஒரு தளத்தில் மட்டுமே 200 பேப்பிரஸ் ஆவணங்கள் மட்டுமே பொது மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏனையவை ஆய்வாளர்களுக்குப் பிரத்தியேக ஆய்வுகளுக்கு எனத்தகுந்த அனுமதி பெற்ற பின்னர் மட்டுமே வழங்கும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பேப்பிரஸ் சேகரிப்பு உள்ள அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று என்பது இதன் சிறப்பை நமக்குப் புலப்படுத்தும். இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பினை பெருமைப்படுத்தும் வகையில் யுனெஸ்கோ நிறுவனம் 2001ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்திற்கு “Memory of the World” என்று அறிவித்து சிறப்புச் செய்தது.

    as2

    இந்த அருங்காட்சியகத்தின் வலைப்பக்கத்தில் நிரந்தர கண்காட்சி பற்றியும் சிறப்புக் கண்காட்சி பற்றியும் பல தகவல்களைப் பெறலாம். இதன் முகவரி
    http://www.onb.ac.at/ev/papyrus_museum.htm. அருங்காட்சியகத்திற்கு நேரில் செல்ல விரும்புபவர்கள் வியன்னாவின் மத்திய சாலையில் தேசிய நூலகத்தை தேடிச் சென்றால் அதே பிரமாண்ட மண்டபத்தின் வலது புறத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருப்பதைக் காணலாம். இதன் முகவரி:
    Papyrus Museum
    Heldenplatz, New Hofburg
    1010 Wien
    Tel.: (+43 1) 534 10-420

    இங்குள்ள பேப்பிரஸ் ஆவணங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட செய்திகளைப் பதிவனவாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக ஒரு பெப்பிரஸ் ஆவணம் பார்லி, இறைச்சி, கோதுமை எண்ணெய் ஆகியவை பல்வேறு காலகட்டங்களில் கொடுக்கப்பட்டமையைக் குறிப்பதாக உள்ளது. இதில் பார்லி நைல் நதியில் ஏற்றிச் செல்லப்பட்டமையால் கூடுதல் வரி கட்டவேண்டியதைப் பற்றி குறிப்பிடுகின்றது. இந்த ஆவணம் கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

    as3

    இங்குள்ள மற்றுமொரு ஆவணம் எகிப்திற்கும் இந்தியாவிற்கும் ரோமானிய காலத்தில் இருந்த வர்த்தகத்தொடர்பை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. விலையுயர்ந்த பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டமையை இந்த ஆவணம் குறிப்பிடுகின்றது. இதில் ஒரு வியாபாரி கட்டவேண்டிய வரி பற்றிய செய்தியும் அவர் செங்கடல் பகுதியிலிருந்து இந்தியாவிற்குக் கப்பல் வழி பொருட்கள் ஏற்றி அனுப்பிய செய்தியையும் பதிகின்றது.

    as4

    எகிப்து தொடர்பான பல்வேறு தகவல்களை வருவோருக்கு வழங்கும் ஆய்வுக்கூடமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது. நான் பார்த்து வியந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் இந்த அருங்காட்சியம் தவறாமல் இடம் பெறும் ஒன்றே.

    சரி. அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா? தொடர்ந்து வாருங்கள்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 72

    ஹெர்மான் ஹெஸ்ஸ அருங்காட்சியகம், கால்வ், ஜெர்மனி

    முனைவர்.சுபாஷிணி

    ஹெர்மான் ஹெஸ்ஸ 1962ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றபோது அவருக்கு வயது 82. ஜெர்மானிய இலக்கியவாதி என்ற ஒரு எல்லைக்குள் மட்டுமே அவரது இலக்கிய ஆளுமை என்றில்லாது உலகப்புகழ்பெற்ற, உலகத்தரம் வாய்ந்த ஒரு எழுத்தாளர் என்ற புகழைப் பெற்ற அவரை அன்றைய “டி சைட்” (Die Zeit) நாளேடு இனி இந்த எழுத்தாளர் காலத்தால் மறக்கப்படுவார் என எழுதியது. ஆனால் இந்தக் கூற்று பொய்யானது என்பதைக் காலம் நிரூபித்து விட்டது. ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களின் எழுத்துக்கள் இதுவரை அறுபது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இன்றும் அவரது எழுத்துக்களால் அவர் நினைக்கப்படுபவராக இருக்கின்றார்.

    as

    தான் ஒரு இலக்கியவாதி.. இன்னும் சொல்லப்போனால் ஒரு கவிஞன் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்தியாவில் அவரது தந்தையார் ஒரு லூதரன் மதபோதகராகப்பணியாற்றியதாலும் அவரது தாயார் ஒரு லூதரன் மத போதகரின் மகள் என்பதாலும் பெற்றோரின் எண்ணம் தன் மகனும் அதே பணியைத் தான் மேற்கொள்ளப்போகின்றான் என்பதாக இருந்தது. ஆனால் தனது எண்ணம் முழுமையும் இலக்கியத்திலே தோய்ந்திருப்பதை அவர் உணர்ந்து தன் வாழ்க்கைப் பாதையை தன் விருப்பப்படியே அமைத்துக்கொண்டு, அழியாப் புகழை இன்று பெற்றிருக்கின்றார்.
    as1

    ஹெர்மான் ஹெஸ்ஸ ஜெர்மனியின் பாடர்னுர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் கால்வ் நகரில் 1877ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதி பிறந்தார். இந்த கால்வ் ஒரு அழகிய சிற்றூர். எனது இல்லம் இருக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து ஏறக்குறைய 27 கிமீ தூரம் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு ஊர் இது.

    மதபோதனையாளர்கள் குடும்பத்தில் பிறந்த ஹெர்மான் ஹெஸ்ஸவிற்குப் ப்ராட்டஸ்டண்ட் சமய நம்பிக்கைகளை இளமைக் காலம் முதல் பெற்றோர் மற்றும் அவர் வளர்ந்த சூழல் அவருக்கு இயல்பாக ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் அதில் மனம் நிறைவடையாமல் தனது சுயத்தைத் தேடுவதிலே அவர் கவனமும் ஆர்வமும் இருந்தது. ஒருபள்ளியை விட்டு மற்றொன்று என திருப்தியுறா நிலையிலேயே தன் கல்வியைத் தொடர்ந்து பின்னர் தன் 15ம் அகவையில் கல்வியை விட்டு விட்டு ஒரு கடிகாரம் செய்யும் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்குக் கடிகாரம் பழுது பார்த்தலோடு புத்தக விற்பனை செய்வதும் தொழிலாக அமைந்தது.

    சமயத்திலிருந்து விடுதலை என்பதாகவும், தனி மனித சுதந்திர எண்ணங்களின் செயல்பாடு எவ்வகையில் அமைத்துக் கொள்வது என்றும் அவரது சிந்தனை இருந்தது. வாழ்க்கையைப் பற்றிய பல கேள்விகள் அவரது தேடலில் இருந்தன. தனது சுய அனுபவங்களையே தனது இலக்கியப்படைப்புகளில் புகுத்தி இலக்கியங்களைப் படைத்தார் ஹெர்மான் ஹெஸ்ஸ.

    as2

    அவரது நாவலான Peter Camenzind அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து வெற்றியை அளித்தது. இது அவருக்கு இலக்கியத்தின் வழியே அவரது வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை ஈட்டும் வழியை அமைத்துக் கொடுத்தது. ஒரு புகைப்படக்கலைஞரான மரியா பெர்னோலியை திருமணம் செய்து கொண்டு ஜெர்மனியின் தெற்குப் பகுதியான கான்ஸ்டன்ஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவரது மண வாழ்க்கை இனிமையாகத் தொடரவில்லை. இருவரும் திருமண பந்தத்திலிருந்து பிரிந்தனர். பின்னர் பயணங்களில் தன் வாழ்க்கையைச் செலவிட ஆரம்பித்தார் ஹெர்மான் ஹெஸ்ஸ. புதிய ஊர்களும் மக்களும் வாழ்க்கை நெறிமுறைகளும் சமய அனுபவங்களும் அவர் தேடுதலுக்கு விருந்தாக அமைந்தன. இலங்கைக்குச் சென்று பின்னர் இந்தோனீசியா சென்று சேர்ந்தார். ஆசிய நாடுகளின் வாழ்க்கை முறை அவருக்குப் புதிய அனுபவங்களைத் தர, வாழ்க்கையில் புதிய கோணங்களை அவர் உணர வாய்ப்பாக இது அமைந்தது. இந்தப் பயணங்கள் தொடர்ந்தன. பயணங்கள் தந்த அனுபவத்தின் சாராம்சமாக சித்தார்த்தா என்ற காப்பியத்தை இவர் வடித்தார்.

    திருமண முறிவுக்குப் பின்னர் பல இடங்களில் பயணித்து பின்னர் சுவிச்சர்லாந்திற்குக் குடிபெயர்ந்தார், அங்குதான் அவரது பல இலக்கிய ஆக்கங்கள் படைக்கப்பட்டன. 1924ம் ஆண்டில் சுவிச்சர்லாந்தின் குடியுரிமை பெற்று ரூத் வாகனர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் மூன்று ஆண்டுகள் தான் நிலைத்தது. பின்னர் வரலாற்றுத்துறை நிபுணரான நினோன் டோல்பின் என்பவரைத் திருமணம் செய்து தன் புது வாழ்க்கையை மீண்டும் 1931ம் ஆண்டில் தொடங்கினார். இவர்கள் உறவு அவரது வாழ்நாளின் இறுதி வரை நீடித்தது.

    culture-hermann-hesse-museum
    culture-hermann-hesse-museum

    இரண்டாம் உலகப்போர் ஐரோப்பா முழுமையையும் பாதிக்கச் செய்த ஒரு நிகழ்வு. ஹெர்மான் ஹெஸ்ஸ, நாசி அரசின் மீதான தனது எதிர்ப்புகளை வெளிப்படையாகக் காட்டியதோடு ஜெர்மானிய அகதிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வந்தார். இரண்டாம் உலகப்போர் காலகட்டமான 1946ஆம் ஆண்டில்தான் இவரது இறுதி படைப்பான “The Glass Bead Game” நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்தப்பரிசு அவரது மனித உரிமைக் கருத்துகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும் உரக்கச்சொல்லும் அவரது இலக்கியப்படைப்புக்காக வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்து அவரைப் பெருமைப்படுத்தியது. ஹெர்மான் ஹெஸ்ஸேவின் நூல்கள் ஜெர்மனியில் மிகப்பிரபலம் அடைந்தன. ஆனால் பின்னர் அவரது நூல்களுக்கான புகழ் சிறிது சிறிதாக குறையத் தொடங்கி அவரது மறைவு நேரத்தில் அவர் இலக்கிய உலகால் மறக்கப்படுவார் என சிலரால் பேசப்படும் அளவிற்கு அவரது நூல்கள் மேல் விமர்சனம் எழுந்தன. ஆனால் அந்த விமர்சனங்கள் பொய்யாக்கப்பட்டதை காலம் நிரூபித்தது.

    அவரது நூல்கள் ஜெர்மனி மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. இவரது சித்தார்த்தா என்ற நாவல் தமிழில் திரிலோக சீத்தாராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் வாசகர்களின் மனத்தையும் கொள்ளைக் கொண்டது. ஞானத்தேடலினை மையமாக வைத்து அவர் புனைந்த இந்த நாவல் பலரது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காவியமாகத் திகழ்கின்றது.

    as4

    ஹெர்மான் ஹெஸ்ஸே அவர்களின் பிறந்த இல்லம் ஒரு அருங்காட்சியகமாக கால்வ் நகரில் அமைக்கபப்டுள்ளது. நதி பாயும் ஓர் அழகிய சிற்றூர் இது. இங்கே நகரின் மையப்பகுதியில் ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களின் வெண்கல சிலை வருவோரை வரவேற்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    அருங்காட்சியகத்தின் முகவரி
    Hermann-Hesse-Museum
    Marktpl. 30, 75365 Calw,Germany
    00 497051 7522

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 71

    தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (3)

    முனைவர்.சுபாஷிணி

    ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலம் என்பது ஐரோப்பிய வரலாற்றுக்கு மட்டுமன்றி உலகின் ஏனைய கண்டங்களில் உள்ள நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சரித்திர நிகழ்வு. ரெனைசான்ஸ், அதாவது மறுமலர்ச்சிக்காலம் எனக்கூறப்படுவது, 1400 தொடங்கி 1600 வரை எனக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் தீவிரமான மாற்றங்கள் பல நிகழ்ந்தன. அதில் குறிப்பாக, சமயம், கலை, அறிவியல், கட்டுமானக் கலை, மருத்துவம், தத்துவங்கள், சிற்ப வடிவமைப்புக்கள், கடல் பயணங்கள் எனப் பன்முகத் தன்மையில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் குறிப்பிடத்தக்க ஒரு விசயமாக அமைவது இதுகாறும் ஐரோப்பிய கலாச்சாரமாகவும் கலை வளங்களாகவும் தத்துவக் கருத்துக்களாகவும் இருந்த விசயங்கள் இக்காலகட்டத்தில் தான் பெருமளவில் கேள்விக்குட்பட்டுத்தப்பட்டன. இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட கலைவடிவங்களும், தத்துவங்களும், தத்துவச்சிந்தனைகளும் கூட கேள்விக்குட்படுத்தப்பட்டு அவற்றினில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு அவை மக்கள் முன்னிலையிலும், சிந்தனையிலும் பொதுவாரியாக முன் வைக்கப்பட்டன. நீண்ட காலங்களாக அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களின் மேல் கலந்துரையாடல்கள் முன் வைக்கப்பட்டன. அக்காலத்தில் ஐரோப்பவைத் தாக்கிய ப்ளேக் நோய் ஏற்படுத்திய மரண இழப்பின் உயர்ந்த எண்ணிக்கையின் பயங்கரமும் சேர்ந்து கொண்டு மக்கள் சிந்தனையை வேறு கோணத்தில் செலுத்தியது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

    ஐரோப்பிய மறுமலர்ச்சி காலம் இத்தாலியில் தான் தொடங்கியது. சிற்ப வடிவமைப்பு, ஓவியங்கள் கட்டிடக் கட்டுமானங்கள் ஆகியவற்றில் முந்தைய வகையிலான ஆக்கங்களுக்கு மாற்றாக புதிய கோணத்தில் இக்கலைப்படைப்புகளைப் படைக்கும் முயற்சிகள் தொடங்கி விரிவடைந்தன. ஒரு சாராரின் ஆதரவைப் பெற்ற அதே வேளையில் பழமைவாத சித்தாந்தங்களில் ஊறிப்போனோருக்கு அதிலும் குறிப்பாக சமய ஸ்தாபனங்களுக்கு, இது கடும் எதிர்ப்பாகவே அமைந்தது.

    புதிய கலைப்படைப்புகளை வடித்த சிற்பிகள் தம் புதிய கருத்துகளை, வரைபடங்களாக வரைந்து வைத்த கையெழுத்து படிவங்கள் ஐரோப்பாவின் பல நாடுகளில் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் சில சூரிச் தேசிய அருங்காட்சிகத்தில் உள்ளன.

    a1

    ரோம் நகரின் கொலீசியத்தைச் சுற்றி வடிவமைத்து உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளை அதனை மண்ணும் கற்களும் கொண்டு உருவாக்கும் முன்னர், கையெழுத்துப் பிரதியாக வடித்திருக்கின்றனர். இத்தாலியின் ரோம் நகருக்குச் சென்றவர்களுக்கு அங்கே கொலீசியம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே உள்ள கட்டிடங்கள், சிற்பங்கள் ஆகியன நினைவில் இருக்கலாம். அவற்றை உருவாக்கியபோது தயாரித்த அடிப்படை வரைபடங்கள் தொகுக்கப்பட்டு ஒரு நூலாக உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் 1400களில் உருவாக்கப்பட்டவையே. இந்த வரைப்படங்களை மாடலாக வைத்துக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகளையும், கட்டிடங்களையும் உருவாக்கினர். இந்த நூலில் இருக்கும் வரைப்படங்களில் சில 15ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் ஸ்பெயினுக்குக் கொண்டு செல்லப்பட்டன . இதில் உள்ள வரைபடங்கள் காட்டும் கட்டிட மாடல்களின் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு அவ்வகையில் புதுமையாக கலை வேலைப்பாட்டுடன் அமைந்த கட்டிட கட்டுமானக் கலை ஸ்பெயின் நாட்டிலும் உருவாக்கம் கண்டது. இதற்கு நல்லதொரு உதாரணமாக அமைவது, க்ரானாடாவுக்கு அருகே உள்ள காலாஹோரா அரண்மனை.

    a2

    இங்கிருக்கும் மற்றுமொரு அரிய நூல் 1513ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதனை சுவிச்சர்லாந்தின் பாசல் நகரில் நீதிபதியாக பணியாற்றிய போனிஃபாஷியஸ் ஆம்மெர்பாக் என்பவர் உருவாக்கினார். இந்த நூலில் இருப்பவை அனைத்தும் ரோமன் கல்வெட்டுகளின் படியெடுத்த பிரதிகள் போன்றவையே. ரோமன் கல்வெட்டுகளில் மிகவும் ஈர்க்கப்பட்டு ஸ்ட்ராஸ்பூர்க் நகரின் தோமஸ் வூல்ஃப் என்பவர் சேகரித்து வைத்திருந்த கல்வெட்டுகளைப் பார்த்து அதனை நூலில் படியெடுத்து தயாரித்தார். இந்தச் சேகரிப்புகள் அனைத்தும் ரோம் நகரின் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கல்வெட்டுகள் பதிக்கப்பட்ட கற்களாகும். இந்த ஆவணப்படுத்துதல் பணியை அவரது மறைவுக்குப் பின்னர் திரு.ஆம்மர்பாஹ் அவர்களின் மகன் தொடர்ந்து செய்து வந்தார்.

    a3

    5ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் அக்காலகட்டத்தில் ரோமானிய நகரில் உருவாக்கப்பட்ட நூல்கள் பல காணாமல் போயின. ஆயினும் ஆங்காங்கே கிடைத்த சில பழம் நூல்களை அக்காலத்தில் இயங்கி வந்த ரோமன் கத்தோலிக்க மடாலயங்கள் எடுத்து படியெடுத்து பாதுகாத்து வந்தன. இவை ஒவ்வொன்றும் கிடைத்தற்கரிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. இந்த மடாலயங்கள் அவற்றை ஏதோ ஒரு வகையில் பாதுகாத்திராவிட்டால் அதில் கூறப்பட்ட, பதியப்பட்ட எண்ணற்ற வரலாற்றுத் தகவல்கள் இன்று ஆய்வாளர்களுக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.

    a4
    ரெனைசான்சு என்னும் சொல்லிற்கு உள்ள மற்றொரு பொருள் மறுபிறப்பு என்பதாகும். அதாவது கலைப்படைப்புகள், தத்துவச் சிந்தனைகள் ஆகியன மீள்பார்வை செய்யப்பட்டும் அல்லது வேறொரு கோணத்தில் புதுப்படைப்பாக பிரசவிக்கப்பட்ட காலகட்டம் அது என்றும் சொல்லலாம்.

    சூரிச் தேசிய அருங்காட்சியகம் இத்தகைய விலைமதிக்க இயலாத பல்வேறு ஆவணங்களைப் பாதுகாத்து வருகின்றது. இங்கே சென்று இங்குள்ள ஆவணங்களையும், பாதுகாக்கப்படும் அரும்பொருட்களையும் பார்த்து வருபவர்களுக்கு ஐரோப்பிய வரலாற்றின் சில பரிமாணங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

    a5

    நான் பார்க்க வேண்டும் என பல நாட்கள் காத்திருந்து பார்த்து மிக ரசித்து, பல விசயங்களை அறிந்து கொண்ட ஒரு அருங்காட்சியகம் இந்த சூரிச் தேசிய அருங்காட்சியகம்.

    சரி.அடுத்த பதிவில் மேலும் ஒரு நாட்டில் மேலும் ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

    Share