Author: பவள சங்கரி

  • தாமிர சபை

    பவள சங்கரி

    காந்திமதியமமன் உடனமர் ஸ்ரீ நெல்லையப்பர் ஆலயம்

    மூலவர்    :     நெல்லையப்பர்  (வேண்ட வளர்ந்தநாதர் )
    அம்மன்/தாயார்    :     காந்திமதி, வடிவுடையம்மை
    தல விருட்சம்    :     மூங்கில்
    தீர்த்தம்    :     பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை
    பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்

    சிவபெருமானாரின், நடராசத் திருமேனியின் அருட்கூத்து நடத்துகின்ற ஐம்பெரும் சபைகளான, ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவற்றில் “தாமிர சபை” என்று போற்றப்படுகிற காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சபைகளில், இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.

    தேவாரப் பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 14வது தலம்.

    திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகம்

    அக்குலா மரையினர் திரையுலா

    முடியினர் அடிகளன்று தக்கனார்

    வேள்வியைச் சாடிய சதுரனார்

    கதிர்கொள் செம்மை புக்கதோர்

    புரிவினர் வரிதரு வண்டுபண் முரலும்

    சோலைத் திக்கெலாம் புகழுறுந்

    திருநெல்வேலியுறை செல்வர் தாமே.

     தெற்கிலிருந்து வடக்காக 756 அடி நீளமும் மற்றும் மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும்  கொண்ட ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான சிவன் ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  இடையில் அழகிய கல் மண்டபம் மூலம் இணைக்கப்பட்ட அம்மன் ஆலயம் ஒரு புறமும், மறுபுறம் நெல்லையப்பர் ஆலயமும் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

    ஆல்யத்தினுள் நுழையும் போதே மேற்கூரையில் கேரள ஆலயங்களில் உள்ளது போன்று அற்புதமான மர வேலைப்பாடுகளைக் காணலாம். உள்ளே நுழைந்தவுடன்  10 அடி உயர மிகப்பெரிய நந்தி நம்மை வரவேற்கிறது. அவரை வழிபட்டுச் சென்றால் உடன் நெடிதுயர்ந்து நிற்கும் பளபளவென்ற கொடிமரம் சுற்றி வணங்கி மேலே சென்றால், மூலவர் ச்ன்னிதானத்தின் முகப்பில் 9 அடி உயரமுள்ள மிகப் பெரிய விநாயகர் திருவுருவம் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளது போன்று   இங்குள்ள விநாயகரும் இதே திருநாமத்துடன் ’முக்குறுணி விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். ஆனால், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    மூலவர் சன்னிதானத்தைச் சுற்றி மூன்று பிரகாரங்கள் அமைந்துள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பு. தமிழகத்திலேயே மூன்று மூலவர்களைக் கொண்ட கோவில் என்றால் அது ஸ்ரீ நெல்லையப்பர் கோவில் மட்டுமே. சுயம்பு மூர்த்தியான, மூலவர் “வேண்ட வளர்ந்தநாதர்’  பிரதான சன்னதியில் “நெல்லையப்பர்’ என்று அழைக்கப்படுகிற பெரிய திருமேனி லிங்கமாக அருள்பாலிக்கிறார்.  மூங்கில் வேணுவனேசுவரர், வெய்முத்தீசர் ஆகிய திருநாமங்களும் வழங்கப்படுகிறது. இந்த சிவலிங்கத்தின் மத்தியில்  அபிஷேகத்தின் போது அம்பிகையின் திருஉருவத்தைக் காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாகக் கொள்ளலாம் அல்லவா. இதனால் பெருமானுக்கு “சக்தி லிங்கம்’ என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது.

    மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதி உள்ளது. இங்கு மகாவிஷ்ணு பூசித்த லிங்கம் ஒன்று உள்ளது. பாதாள லிங்கத்தில் உள்ள சிவபெருமானே ஆதிமூலவர் என்றழைக்கப்படுகிறார். சாலி வாடீசுவரன், (சாலி என்பது நெல்), விருகி விடுதீசுவரன், ஸ்ரீதான மூர்த்தி ஆகிய திருநாமங்கள் கொண்ட இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூசை நடக்கிறது.  இங்கு பஞ்சமுக தெட்சிணாமூர்த்தி வடிவங்களையும் தரிசிக்கலாம். சண்டிகேசுவரர், மகிசாசுரமர்த்தினி, கால பைரவர் திருவுருவங்களும் காணலாம். சிவபெருமானுக்கு அருகிலேயே வேங்கடவனும் பள்ளி கொண்டிருக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம்.

    பெரிய அளவிலான இரண்டாவது பிரகாரத்தின் முகப்பிலேயே “இசைத்தூண்கள்” மற்றும் “தாமிர சபை”, அறுபத்து மூவர் சிலைகள், அஷ்ட லட்சுமி, சகசுவரலிங்கம், சனி பகவான் ஆலயமும் காணலாம்.

    மூன்றாவது பிரகாரத்தின் வழியாக அம்மா மண்டபம் உள்ளது. இதிலிருந்து அம்மன் சன்னதி செல்லலாம். ஆஞ்சநேயர், மஞ்சனத்தி அம்மன், ஐயப்பன், சரசுவதி, பிரம்மா ஆகிய மூர்த்தங்களுக்கு தனி சன்னதிகளும் உண்டு. அம்மன் சன்னதியில் மிகப்பெரிய  உள் தெப்பமும் ஆலயத்திற்கு வெளியே சற்று தொலைவில் வெளித்தெப்பம் ஒன்றும் காணப்படுகிறது.

    அம்மை, அப்பன் என இரு சன்னிதானங்களின் கிழக்குப் புறத்திலும் தனித்தனியே இராச கோபுரம் அமைந்துள்ளது. அம்மன் கோவிலுக்குத் தென் புறத்தில் ஒரு வாசலும், வடபுறத்தின் சங்கிலி மண்டபத்தின் மூலையில் ஒரு வாசலும் , வடபுறமும், மேற்புறமும் தனித்தனி வாசல்களும் உள்ளன. 2000 ஆண்டுகள் பழமையான இத்தலம் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலம். 32 தீர்த்தங்கள் கொண்ட இத்தலம் அருணாசல கவிராயரால் வேணுவன் புராணத்திலும் காந்தியம்மை பதிகம், சொக்கநாதப் பிள்ளையாலும் பாடல் பெற்றுள்ளது.

    காந்திமதி அம்மன் ஆலயம்


    இத்தலத்தில் உள்ள அம்மன் காந்திமதி வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பிரதோச காலங்களில்  இக்கோவிலில் அம்பிகைக்கு பிரதோச வழிபாடு நடப்பது தனிச்சிறப்பு. வழமையாக அனைத்துக் கோவில்களிலும் சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூசை நடக்கும். ஆனால், இங்கு அம்மன் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோச பூசை நடைபெறுகிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுவது கண்கொள்ளாக் காட்சி.. அம்மன் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  மகாசிவராத்திரியன்றும் நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு கால அபிசேகம், மற்றும் பூசைகள் நடைபெறுகிறது

    ”கணவர் நெல்லையப்பருக்கு அன்னம் பரிமாறும் அம்பிகை” என்று போற்றப்படும் காந்திமதி அம்மன்,  உச்சிக் காலத்தில் ஐயனுக்கு அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்மன் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்குக் கொண்டு சென்று அங்குள்ள அர்ச்சகர்கள் மூலமாக சிவ பெருமானுக்கு படைக்கின்றனர். இந்த பூசை முடிந்தபின், அம்மனுக்கு அதே நைவேத்யம் வைத்து பூசை நடக்கிறது.

    இங்குள்ள துர்க்கை தெற்கு நோக்கியபடி, சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் காட்சி அளிக்கிறாள். சிம்மமும், மானும் ஒரு சேர இருப்பதால், எதிரிகளையும் அன்பால் அடக்கும் வல்லமையை அருளுகிறாள். மேலும் பண்டாசுரனை வதம் செய்த அம்மன் சிலையும் இங்கு உள்ளது. துர்கையின் வடிவான இந்த அம்மன் “மஞ்சன வடிவாம்பிகை’ என்று போற்றப்படுகிறாள்.

    உலகிலேயே வேறு எங்குமே இல்லாத  ’மிடறு’ என்ற் இசைத்தூண்கள்:

    இரண்டாம் பிரகாரத்தின் முகப்பில் அமைந்துள்ள மண்டபத்தில், இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூண்களிலிருந்தும்  ” ச, ரி, க, ம, ப, த, நி ” என்ற ஏழு சுரங்களையும் கேட்க முடிவதே இதன் சிறப்பு! ஒவ்வொரு பெரிய தூண்களைச் சுற்றியும் பல சிறிய தூண்கள் கட்டப்பட்டுள்ளது.. இதிலிருந்து ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களைக் கேட்க முடியுமாம். .  பெரிய தூணிலிருந்து கர்நாடக சங்கீதமும்., அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களிலிருந்து, மிருதங்கம், வீணை, கடம், சலங்கை, மணி போன்ற இசைக் கருவிகளின் நாதத்தையும் கேட்க முடியுமாம். மெலிதாக விரல்களில் மீட்டினாலே எந்த வலியும் இல்லாமல் சுகமான நாதம் இசைக்கிறது. நல்ல இசை ஞானம் உள்ளவர்களால் இதன் வேறுபாடுகளை நன்கு உணர முடியும். ’மிடறு’ என்று அழைக்கப்படும்  இது போன்ற இசைத் தூண்கள் உலகில் வேறு எங்குமே இல்லையென்கிறார்கள். தொழில்நுட்பங்கள் முன்னேறாத அந்த காலத்திலேயே இது எங்கனம் சாத்தியமானது என்று நினைக்கும் போது ஆச்சரியமே மேலிடுகிறது.இன்றைய நவீன தொழில்நுட்ப முறையைக் கொண்டு (spectral analysis) ஆய்வு செய்த போது இத்தூண்களிலிருந்து வரும் இசைகள் தன்மைகளுக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாகிறது என்று தெரிவிக்கின்றது இத்தூண்களில் ஒரு சிறு துவாரமோ அல்லது வேறு ஏதும் தூண்டுகோலோ இல்லாமல் அழகாக இசைப்பதுதான் அதிசயத்தின் உச்சம்.

    இக்கோவிலில் எழுந்தருளியுள்ள திருமாலின் திருமார்பில் லிங்கம் உள்ளது மற்றொரு சிறப்பம்சம். கருவறையின் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளி கொண்ட கோலத்தில், சிவலிங்க பூசை செய்தபடி இருக்கிறார். அருகில் மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தரும் உற்சவர் விஷ்ணுவையும் காண முடிகிறது. திருமாலை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.

     

    இக்கோவிலின் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. தினசரி சிறப்பான பூசைகளுடன், ஆண்டுதோறும் ஆனி மாதம். 10 நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும் இத்திருவிழாவில் தேரோட்டம் நிகழ்வு சிறப்பான ஒன்றாகும். கார்த்திகை மாத உற்சவம், ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று மற்ற பிற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

     

     

     

    Share
  • திருமுருகன் திருப்புகழ்!

     

    அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

    1. விநாயகர் துதி (இராகம் – நாட்டை; தாளம் – ஆதி)

            தத்தன தனதன தத்தன தனதன
            தத்தன தனதன …… தனதான

            கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
            கப்பிய கரிமுகன் …… அடிபேணிக்

            கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
            கற்பகம் எனவினை …… கடிதேகும்

            மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
            மற்பொரு திரள்புய …… மதயானை

            மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
            மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே

            முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
            முற்பட எழுதிய …… முதல்வோனே

            முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
            அச்சது பொடிசெய்த …… அதிதீரா

            அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
            அப்புன மதனிடை …… இபமாகி

            அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
            அக்கண மணமருள் …… பெருமாளே.

            “அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் — 3”

            “முத்தைத்தரு”

            இராகம்: கௌளை
            தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு

            தத்தத்தன தத்தத் தனதன
            தத்தத்தன தத்தத் தனதன
            தத்தத்தன தத்தத் தனதன ….. தனதான

            முத்தைத்தரு பத்தித் திருநகை
            அத்திக்கிறை சத்திச் சரவண
            முத்திக்கொரு வித்துக் குருபர ….. எனவோதும்

            முக்கட்பர மற்குச் சுருதியின்
            முற்பட்டது கற்பித் திருவரும்
            முப்பத்துமு வர்க்கத் தமரரும் ….. அடிபேணப்

            பத்துத்தலை தத்தக் கணைதொடு
            ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
            பட்டப்பகல் வட்டத் திகிரியில் ….. இரவாகப்

            பத்தற்கிர தத்தைக் கடவிய
            பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
            பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ….. ஒருநாளே

            தித்தித்தெய ஒத்தப் பரிபுர
            நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
            திக்கொட்கந டிக்கக் கழுகொடு ….. கழுதாடத்

            திக்குப்பரி அட்டப் பயிரவர்
            தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
            சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ….. எனவோதக்

            கொத்துப்பறை கொட்டக் களமிசை
            குக்குக்குகு குக்குக் குகுகுகு
            குத்திப்புதை புக்குப் பிடியென ….. முதுகூகை

            கொட்புற்றெழ நட்புற் றவுணரை
            வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
            குத்துப்பட வொத்துப் பொரவல ….. பெருமாளே.

    http://youtu.be/RCHGtC49byQ

    Share
  • சொர்க்க வாசல்!

     

    பவள  சங்கரி


    அகக் கண்கள் திறந்து
    காட்சிகள் விரிகின்றன.
    அழகான நீர் நிலையைக் காண்கிறேன்!
    இரு புறமும் கொத்துக் கொத்தாக
    மலர்கள் தாங்கிய குறுஞ்செடிகள்

    நீலமேகக் கூரையில்
    வெண்பஞ்சுப் பொதிகள்
    வெளிர்நீல மலைக் குன்றுகளில்
    பனிபடர்ந்த மரக் கன்றுகள்!

    அந்தி மயங்கும் நேரம்…..
    கூட்டில் அடையப் போகும்
    புள்ளினங்களின் கீச்சுக் கீச்சு கீதம்.
    மனம் அமைதியில் திளைத்த இன்பம்.

    அந்த ஓடைக்கரையிலொரு குச்சு வீடு
    சின்ன அறையில் நிறைமனதுடன் நான்!
    குச்சு வீட்டின் கொல்லைப்புறத்து
    பசுமையான வயல் வெளி
    நாணம். கொண்ட பயிர்களின் மோனம்

    கரையோரத்து மலர்களின் நறுமணம்
    குடில்… அழகான குடில்
    எளிமையான மனிதரும்
    அழகான புள்ளினங்களும்
    பகிர்ந்து வாழும் அழகிய குடில்!

    குடிலின் அருகில் என் சொந்தங்கள் இல்லை
    என் சாதி இல்லை… என் மதம் இல்லை
    என் இனம் கூட இல்லை
     பெயர் மட்டுமே அடையாளமாக…..
     அன்பு மட்டுமே ஆதாரமாக

    இயற்கையின் இனிமையைக்
    கொண்டாடும் இனமாக
    அந்த அழகைப் பகிர்ந்து
    பருகும் இனமாக.
    திறந்த இதயத்துடன், பரந்த
    மனதுடன் வாழும் இனம்.
    அங்கு என் அமைதியான
    ஆனந்தமான வாழ்க்கை!!


    நன்றி – இன் & அவுட் சென்னை பிரசுரம்

    படத்திற்கு நன்றி:

    http://www.allpics4u.com/nature/top-10-natural-scenery.html

    Share
  • குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்! (2012)

     

    பவள சங்கரி

     மலரும் மொட்டுகளுக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

    உலகிலேயே மிக அதிகமான குழந்தை மக்கள் தொகை உடைய நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று. குழந்தைகள் மீது அதீதமான அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர், நம்முடைய சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லார் நேரு. இவரின்  நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாளான நவம்பர் மாதம் 14ம் தேதியன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 1925ம் ஆண்டு, ஜெனீவாவில் குழந்தைகள் நலவாழ்வு என்பதன் அடிப்படையில் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்தியிருக்கிறர்கள். 1954ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் தினத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. சர்வசேத குழந்தைகள் தினம் நவம்பர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.  குழந்தைகள்தான் ஒவ்வொரு நாட்டின் வருங்காலத் தூண்கள் மற்றும் அந்நாட்டின் எதிர்காலம்ர்ர் அவர்கள்தான் என்று பல பெரியோர்களால் போற்றப்பட்டாலும், அவர்களை நல்வழியில் செலுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசியர்களுக்கு உண்டு.

    உலகளவில் கோடிக்கணக்கானக் குழந்தைகள் இன்று ஊட்டச்சத்து குறைபாடு, பாலியல் வன்முறைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் போன்று பலவிதமான பிரச்சனைக்களுள்ளாவதையும் கருத்தில் கொண்டு அதற்கான தீர்வு காண வேண்டிய காலமிது. சரியான உணவும், நல்ல உடைகளும், சுகாதாரமான தங்குமிடங்களும் இல்லாமல் எண்ணிலடங்காத குழந்தைகள் இன்று அல்லலுறுவதைக் காண மனம் வேதனை கொள்ளுகிறது. குழந்தைகள் தினக் கொண்டாட்டங்கள் இது போன்ற பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகளின் நலவாழ்வு குறித்து பல்வேறு திட்டங்களும், தீர்மானங்களும் நிறைவேற்றியிருந்தாலும் அவை யாவும் இன்று நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. அனைத்தும் பேச்சளவிலேயே நின்று கொண்டிருப்பதே நிதர்சனம். இந்த பிரச்சனைகளெல்லாம் களையப்பட்டு குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாகச் சிறகடிக்கும் காலமே அவர்களின் வசந்த காலம்.  அடுத்த ஆண்டின் குழந்தைகள் தினமாவது அப்படி ஒரு தினமாக அமைய வேண்டும் என்று மனமார வாழ்த்துவோம்!

    தளிரே, எம் இளந்தளிரே
    அரும்பாய் நீ மலர்ந்திடவே
    கனிவாய் நீ கற்றிடுவாயே

    உவகையும் ஊட்டமும் ஊறட்டும்
    ஈகையும் எளிமையும் இருக்கட்டும்
    நம்பிக்கையும் ஊக்கமும் பெருகட்டும்

    சிறகு விரித்து பரவசமாய்
    வானில் மிதந்து களிப்பாய்
    கடமையுணர்ந்து கருத்தாய்

    காலம் கடந்து ஞானம் நிறைந்து
    வாழையடி வாழையாய் வாழ்கவே!

     

    படங்களுக்கு நன்றி :

    http://www.desicomments.com/childrens-day/

    Share
  • காந்தி கண்ட ராமராச்சியம்

     

    பவள சங்கரி

    1869ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 2,) அண்ணல், மகாத்மா, தேசப்பிதா, என்று அன்புடன் அழைக்கப்படுகிற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நம் இந்திய அன்னையின் செல்ல மகனாக அவதரித்தார். நம் நாடு மட்டுமன்றி, உலக நாடுகள் பலவும் அண்ணலை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டதன் முக்கிய காரணம் அவருடைய சத்தியாகிரகம் என்ற அறவழிப் போராட்டம்தான். குஜராத் மாநிலத்தில் கரம்சந்த காந்தி மற்றும் புத்லிபாய் என்ற பெற்றோருக்கு மகனாகப் பிறந்த இவருக்கு தம் 13ம் வயதிலேயே அன்னை கஸ்தூரிபாயுடன் திருமணம் நடந்தது. இங்கிலாந்தில் தம் வழக்குரைஞர் (பாரிஸ்டர்) படிப்பை முடித்து, மும்பையில் சில காலம் பணியாற்றினார். பிறகு ராஜ்காட்டில் சிலகாலம் ப்ணிபுரிந்து, அங்கிருந்து 1893 ஏப்ரல் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் பணிபுரியச் சென்றார். தென்னாப்பிரிக்காவின் நிகழ்வுகளே இவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஆங்கிலேயர் ஆட்சியினால், இனப்பாகுபாடும், மதவெறியும் மக்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டு மனம் நொந்தவர், போராட்டத்தில் ஈடுபடத்துவங்கினார்.

    ஒருமுறை பிரிட்டோரியா நகருக்குச் செல்லும் பொருட்டு, தொடருந்தில், முதல் வகுப்பில் தகுந்த பயணச்சீட்டுடன் பயணித்தாலும், தான் ஒரு வெள்ளையராக இல்லாத காரணத்தினால் , அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்ச்சி அவர் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை எதிர்த்து, அதன்மூலம் மக்களுக்கு தங்கள் உரிமையைப் பெறவேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1906ம் ஆண்டு, ஜோகானாஸ்பர்க் நகரில் முதன் முறையாக ஒத்துழையாமை, சத்தியாகிரகம் என்ற அறவழியில் போராடியதன் மூலமாக தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் சமூக வாழ்வை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். இதற்காக காந்தியுடன் சேர்ந்து பலரும், பலமுறை சிறைவாசமும் செய்ய வேண்டியிருந்தது. இறுதியில் வெற்றியும் பெற்று இந்தியா திரும்பினார். 1920ம் ஆண்டு, ஒத்துழையாமை இயக்கம் மூலம், அன்னிய பொருட்களை புறக்கணித்தல், மதுபானக்கடைகள் முன் மறியல் செய்தல் போன்றவற்றில் பெண்களும் பங்கெடுத்தனர். இராட்டை வைத்து நூல் நூற்று கதர் துணி நெய்தலிலும் ஈடுபட்டனர். இதனால் இந்திய மக்கள் பொருளாதார முன்னேற்றம் பெறவும் வழிவகுத்தார். ஆங்கிலேய அரசிற்கு நட்டமேற்படவும் வழிவகுத்தது.

    இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து 1921ம் ஆண்டு அதன் தலைமைப் பதவியையும் ஏற்றார். ரவீந்திரநாத் தாகூர், கோகலே போன்றோரின் நட்பும் கிடைத்தது. சுதேசி கொள்கை மற்றும் சத்தியாகிரக கொள்கைகள் மூலமாக் இந்திய தேசிய காங்கிரசில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். அது மாபெரும் விடுதலை இயக்கமாக உருப்பெற்றது. இந்தியர்களால், இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்பிற்கு இங்கிலாந்து அரசு உரிமை கொண்டாடி, அதை வேறு யாரும் விற்கக்கூடாது என்று தடை உத்திரவு போட்டது. இதை எதிர்த்து 1930ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி, அண்ணல் காந்தியடிகள் 78 சத்தியாகிரகப் போராளிகளுடன், அகமதாபாத்திலிருந்து 240 மைல் 23 நாட்கள் நடைப்பயணமாக தண்டி கடற்கரை நோக்கி வந்தனர். அங்கு அவர்களுடன் சேர்ந்து உப்பு காய்ச்சி அதை பொது மக்களுக்கு விநியோகம் செய்ததோடு, தொடர்ந்து அது போலவே தயாரிக்கவும் மக்களை ஊக்குவித்தார். இந்தியாவில் பல இடங்களில் இதற்காக பலர் சிறையிலடைக்கப்படனர். நம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இது ஒரு மைல்கல் எனலாம். இறுதியில் ஆங்கில அரசு உப்பின் மீது போட்ட வரியை விலக்கிக் கொண்டது.

    1932ம் ஆண்டில் வைசிராய் வெலிங்டன் மூலமாக அண்ணல் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொதித்தெழுந்தது. கடையடைப்பு, வேலை நிறுத்தம் என்று மக்கள் ஈடுபட்டதால் அடக்கு முறை செய்யப்பட்டது. பல முகியமான பெருந்தலைவர்களும் கைது செய்யப்பட்டதோடு காங்கிரசு குழுவும் கலைக்கப்பட்டது.

     அதற்குப் பிறகு இடைவிடாமல் பல போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திலும் அண்ணலின் பங்கு பெருமளவில் இருந்தது. இதன் முக்கிய அம்சம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் நள்ளிரவில் நம் இந்திய நாடு முழு சுதந்திரம் பெற்றபோதும், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை அண்ணலை துக்கம் கொள்ளச் செய்தது. பகவத் கீதை மற்றும் சமண சமயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்களால் கவரப்பட்டிருந்தார்.

    1902ம் ஆண்டிற்குப் பிறகு பிரம்மச்சரிய விரதம், வாரத்தில் ஒரு நாள் மௌன விரதம், உணவுக் கட்டுப்பாடு, அசைவ உணவை முழுதும் தவிர்த்தல், சத்தியம், அகிம்சை போன்ற பல கொள்கைகளை தம் வாழ்நாள் இறுதிவரை கடைபிடித்தார். 1948, ஜனவரி 30ம் நாள், புது தில்லியில் நாதுராம் கோட்சே என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்ணல் காந்தியடிகள் ’சத்திய சோதனை’ என்ற தம் சுயசரிதையை தமது தாய் மொழியான குஜராத்தி மொழியில் எழுதியுள்ளார். பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில், ரா.வேங்கடராஜூலு என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    தம்முடைய சத்திய சோதனைகள் தேடித்தந்திருக்கும் ‘மகாத்மா’ என்ற பட்டத்தை தான் மதிக்கவில்லை என்றும் அப்பட்டம் தனக்கு மன வேதனையைத்தான் அளித்துள்ளது என்பதையும் தம் சுயசரிதையின் முதல் அத்தியாயத்திலேயே கூறுகிறார். கடவுளை நேரில் காண வேண்டும் என்றும், மோட்சம் அடைய வேண்டும் என்பதையே முக்கியமான இலட்சியமாகக் கொண்டிருந்தார். கடவுளைக் காண வேண்டும் என்ற தீவிர வேட்கையில் தம் உயிரையும் தியாகம் செய்ய சித்தமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். சத்தியத்தை நாடிச் செல்பவர்கள் தம்மை தூசியைவிட கீழாக எண்ண வேண்டும் என்கிறார். அந்த அளவிற்கு பணிவுள்ளவராக தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்.

    ”இளைஞர்கள் அனைவரும் அழகிய கையெழுத்து அவசியம் வேண்டும் என்பதை உணர வேண்டும். குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி அளிக்கும் முன் ஓவியப் பயிற்சி  அளிக்கப்பட வேண்டும். ஓவியம் வரைய பயிற்சி இருந்தால் கையெழுத்தும் அழகாக வரும்.”

    “வாய்மையாக இருக்க நினைப்பவன் கவனமானவனாகவும் இருக்க வேண்டும் ”

    ” ஏழை எளியோரும் இது நம் நாடு என்று எண்ணக்கூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினருக்கும் சமமான வாழ்வு இருக்கும். தீண்டாமை சாபமும். மதுப்பழக்கமும் ஒழிந்திருக்கும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர். மற்ற உலகத்தினரோடு நாமும் அமைதியான வாழ்க்கையைப் பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.”

    Share