குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்! (2012)
பவள சங்கரி
மலரும் மொட்டுகளுக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
உலகிலேயே மிக அதிகமான குழந்தை மக்கள் தொகை உடைய நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று. குழந்தைகள் மீது அதீதமான அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர், நம்முடைய சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லார் நேரு. இவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாளான நவம்பர் மாதம் 14ம் தேதியன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 1925ம் ஆண்டு, ஜெனீவாவில் குழந்தைகள் நலவாழ்வு என்பதன் அடிப்படையில் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்தியிருக்கிறர்கள். 1954ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் தினத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. சர்வசேத குழந்தைகள் தினம் நவம்பர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகள்தான் ஒவ்வொரு நாட்டின் வருங்காலத் தூண்கள் மற்றும் அந்நாட்டின் எதிர்காலம்ர்ர் அவர்கள்தான் என்று பல பெரியோர்களால் போற்றப்பட்டாலும், அவர்களை நல்வழியில் செலுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசியர்களுக்கு உண்டு.
உலகளவில் கோடிக்கணக்கானக் குழந்தைகள் இன்று ஊட்டச்சத்து குறைபாடு, பாலியல் வன்முறைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் போன்று பலவிதமான பிரச்சனைக்களுள்ளாவதையும் கருத்தில் கொண்டு அதற்கான தீர்வு காண வேண்டிய காலமிது. சரியான உணவும், நல்ல உடைகளும், சுகாதாரமான தங்குமிடங்களும் இல்லாமல் எண்ணிலடங்காத குழந்தைகள் இன்று அல்லலுறுவதைக் காண மனம் வேதனை கொள்ளுகிறது. குழந்தைகள் தினக் கொண்டாட்டங்கள் இது போன்ற பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகளின் நலவாழ்வு குறித்து பல்வேறு திட்டங்களும், தீர்மானங்களும் நிறைவேற்றியிருந்தாலும் அவை யாவும் இன்று நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. அனைத்தும் பேச்சளவிலேயே நின்று கொண்டிருப்பதே நிதர்சனம். இந்த பிரச்சனைகளெல்லாம் களையப்பட்டு குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாகச் சிறகடிக்கும் காலமே அவர்களின் வசந்த காலம். அடுத்த ஆண்டின் குழந்தைகள் தினமாவது அப்படி ஒரு தினமாக அமைய வேண்டும் என்று மனமார வாழ்த்துவோம்!
தளிரே, எம் இளந்தளிரே
அரும்பாய் நீ மலர்ந்திடவே
கனிவாய் நீ கற்றிடுவாயே
உவகையும் ஊட்டமும் ஊறட்டும்
ஈகையும் எளிமையும் இருக்கட்டும்
நம்பிக்கையும் ஊக்கமும் பெருகட்டும்
சிறகு விரித்து பரவசமாய்
வானில் மிதந்து களிப்பாய்
கடமையுணர்ந்து கருத்தாய்
காலம் கடந்து ஞானம் நிறைந்து
வாழையடி வாழையாய் வாழ்கவே!
படங்களுக்கு நன்றி :
http://www.desicomments.com/childrens-day/