Category: நறுக்..துணுக்…

  • “லிட்டில் பாய்” – சுடோமு யமகுச்சி

    TOKYO, Japan – Photo shows the late Tsutomu Yamaguchi speaking in Nagasaki in June 2009 about his experience of surviving the 1945 atomic bombings of Hiroshima and Nagasaki. The Japanese Embassy in London has sent a written protest against the BBC for introducing him as ”The Unluckiest Man in the World” in its TV program that aired on Dec. 17, 2010, with the show’s personalities and the audience laughing. A producer of the show has apologized via e-mail. (Photo by Kyodo News Stills via Getty Images)

    1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, இதே நாளில் அமெரிக்கா, ஹிரோஷிமா மீது வீசிய லிட்டில் பாய் என்பதுதான் உலகின் முதல் குண்டு வீச்சு. அதன் கதிர்வீச்சின் தாக்கத்தால் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்த, இரண்டையும் நேரடியாகக் கண்ட ஒரே சாட்சி சுடோமு யமகுச்சி. இரண்டு குண்டு வீச்சுகளிலிருந்தும் யமகுச்சி உயிர் தப்பியவர் 2010-ல் தனது 93 வயதுவரை உயிர் வாழ்ந்த மன உறுதியை என்ன சொல்வது.

    தனிமனித வளர்ச்சியே ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி. சமுதாயத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி. ஹிரோஷிமா நாகசாகி என்ற பெயரைக் கேட்டாலே சிறுவர்கள் கூட ஒரு முறை உடல் சிலிர்த்து அதிர்ந்துவிடுவார்கள். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, அமெரிக்கா ஹிரோஷிமா மீது வீசிய லிட்டில் பாய் என்பதுதான் உலகின் முதல் குண்டு வீச்சு. 12-15 ஆயிரம் டன் டிஎன்டி வெடிபொருள் சக்தியைக் கொண்ட அந்த அணுகுண்டு 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை சுடுகாடாக்கியது. குண்டு விழுந்த ஐநூறு அடி சுற்றளவில் இருந்த அனைவரும் நொடியில் எரிந்து சாம்பலானார்கள். 70% கட்டிடங்கள் அழிந்து மண்ணோடு மண்ணாயின. அங்கு வசித்த 3,50,000 மக்களில் 1,50,000 பேர் கொல்லப்பட்டனர்.

    குண்டுவெடித்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கறுப்பாக அமில மழை பெய்தது. விண்ணை முட்டும் மரண ஓலமும், கை, கால், தலையில்லாத குழந்தைகளின் பெற்றோரின் கதறல் என அல்லோகல்லோலப்பட்டது ஹிரோஷிமா.

    அடுத்த மூன்று நாட்களில், நாகசாகி நகரத்தின் மீது, குண்டு மனிதர் (ஃபேட் மேன்) என்ற குண்டு மீண்டும் வீசப்பட்டது. 6.4 கிலோ புளுட்டோனியம் உள்ளிட்ட இதன் எடை 4,670 கிலோ. ‘குட்டிப் பைய’னைவிட திறன்மிகுந்த இதனால் 74,000 பேர் கொல்லப்பட்டனர். 1945 ஆக்ஸட் 8-ம் தேதியன்று ஜப்பான் மீது சோவியத் ரஷ்யா போர்ப் பிரகடனம் செய்ததும் ஜப்பான் வேறு வழியில்லாமல் அதே மாதம் 14-ம் தேதி நேச நாடுகளிடம் சரணடைந்ததும் என தொடர்ந்த பேரிடர்களைச் சந்தித்து வந்தது. நான்கு நாட்களுக்குள் இரண்டு அணுகுண்டு வீச்சினால் நடுங்கிப்போனது ஜப்பான். இச்சம்பவங்கள் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக, கை,கால், கண், மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி குழந்தைகள் பிறக்கின்றன. அணுகுண்டின் தாக்கத்தால் மாதக்கணக்காக, வருடக்கணக்காக குற்றுயிரும் குலையுயிருமாகப் பரிதவித்து கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தவர் பலர். வேதனையில் துடிப்பவர்களுக்கு
    சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் மருத்துவர்களும், செவிலியர்களும்கூட மிஞ்சவில்லை. அடுத்தடுத்து மேலும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் தாக்கத்தால் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்த, இரண்டையும் நேரடியாகக் கண்ட ஒரே சாட்சி சுடோமு யமகுச்சி, ஜப்பானியக் கப்பல் பொறியாளர். இரண்டு குண்டு வீச்சுகளிலிருந்தும் யமகுச்சி உயிர் தப்பியவர் 2010-ல் தனது 93 வயதுவரை உயிர் வாழ்ந்த மன உறுதியை என்ன சொல்வது. தீயில் கருகி சாம்பலான பீனிக்ஸ் பறவை மீண்டும் மீண்டும் எழுந்து வருவதுபோல் உறுதியான சிந்தை கொண்டவர்களே வாழ்க்கையின் எத்தகைய பேரிடரையும் கடந்து வென்று வருபவர்கள். தன் மூலதன பங்குகளில் சுமார் 40% அழிந்துபட்ட நிலையிலும் 1960களின் பிற்பகுதியில், வியக்கத்தக்க வகையில் ஜப்பானிய பொருளாதாரம் வெகு விரைவில் மீண்டதோடு, தொடர்ந்து இலாபங்களைக் குவித்ததுதான் ஆச்சரியமான செய்தி. மேற்கத்திய நாடுகளின் சவால்களை எதிர்கொண்ட ஜப்பானியர்கள் செல்வந்தர்களாக மாறியவர்கள், அவர்களுடைய சமூக, பொருளாதார, கல்வி முறைகளுக்கு ஈடாக, போராடி தங்களை தயார்படுத்திக்கொண்டனர். ஜப்பானை உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றிய மக்களின் கடின உழைப்பும் தியாகமும் அதிசயிக்கத்தக்கது. இரண்டாம் உலகப் போரின் பேரழிவிற்குப் பின்னர் 20-ம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ள ஜப்பான் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தில் அதன் பங்கு கணிசமானது. மக்களின் கடுமையான உழைப்பினால் தொழில்துறை உற்பத்தி 1951-ல் மீண்டுவர ஆரம்பித்து 1960-ல் 350 சதவிகிதத்தை எட்டி உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தது. அரசாங்கத்தின் வெற்றிகரமான பொருளாதார சீர்திருத்தம் ஒரு காரணம் என்றாலும் மக்கள் எஃகு, நிலக்கரி, பருத்தி உள்ளிட்ட மூலப்பொருட்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, ஜவுளி உற்பத்தியிலும் முன்னிலை வகித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

    #ஹிரோஷிமா #நாகசாகி #லிட்டில்பாய் #ஜப்பான் #உழைப்பு #அனுகுண்டு #அழிவு #hiroshima #nagasaki #japan #Japanhardwork #TsutomuYamaguchi #சுடோமுயமகுச்சி

    Share
  • தொல்காப்பியம்

    தொல்காப்பியம் யாருடைய அவையில் யார் முன் அரங்கேறியது?

    தொன்மைமிக்க நூலான தொல் காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூலாகும். எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள தொல்காப்பிய நூலில் 1600 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. 1847-ல் தொல்காப்பியத்தை ஓலைச் சுவடி வடிவில் இருந்து அச்சு வடிவுக்கு முதன்முதலில் மாற்றியவர் மழவை மகாலிங்க ஐயர்.

    “நிலந்தரு திருவிற் பாண்டியன்” என்ற மன்னனது அவையில், ‘அதங்கோட்டாசான்‘ என்பவர் முன்னிலையில் அரங்கேறியதாக பாயிரம் கூறுகிறது. தொல்காப்பியர் பற்றி பனம்பரனார்,  ‘ஐந்திரம்’ என்ற நூலை நன்கு கற்ற புலவர் என்றும், பல்புகழ் நிறைத்த படிமையாளர் என்றும் புகழ்கிறார்.

    Share
  • எண்வழி ஆத்திசூடி

    எண்வழி ஆத்திசூடி

    அண்ணாகண்ணன்
    ஒன்றுபடு
    இருளிலும் பார்
    மூச்சைச் சீராக்கு
    நான் தவிர்
    ஐயம் தெளி
    அறு சோம்பல்
    எழு துணிந்து
    எட்டு இலக்கை
    நவமெனச் சுடர்
    பத்தியம் இரு
    Share
  • நீல வண்ண அரை நிஜார்

    –சேஷாத்ரி பாஸ்கர்.

    பள்ளிக்  காலங்களில் எனக்குச் சீருடையைத் தாண்டி பெரிய துணிமணி ஏதுமில்லை. ஏதோ ஒன்றோ  இரண்டோ தான். அதனைப் போஷிப்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் அந்த நீல வண்ண அரை நிஜாரை மறக்கவே முடியாது. அக்கறை இல்லாமல் தைக்கப்பட்ட ஒன்று. அது காஞ்சி பட்டு அல்ல. ஆனால் கஞ்சி பட்டு அதன் நிறம் வெண் நீலம் ஆயிற்று.

    நல்ல முறுக்கேறிய பருத்தித் துணி. உடம்பு கீறும் அளவுக்கு அதன் மொரமொரப்பு. பணம் கொடுத்து (நாலணா) இஸ்திரி போட வசதி இல்லை. ஆனால் என் தந்தை மிகுந்த அக்கறை ஆனவர். வித்தியாசமாய் யோசிப்பவர். நல்ல டெக்னிகல் மூளை. ஒரு பெரிய டபராவை நன்றாய்ச் சுட வைத்து என் துணிக்கு இஸ்திரி போட்டு விடுவார். எப்படி அந்த சுடும் பாத்திரத்தைக் கையாண்டு அதைச் செய்தார் என்று இன்றளவும் எனக்கு ஆச்சரியம் .ஆனால் மனசால் செய்த காரியம். சுத்தமான அன்பு. எந்தப் பிரதி பலனையுன் பாராத குணம்.

    இஸ்திரி போட்ட பின் அந்த கிரீஸ் மேல் நகத்தால் கோடு கிழித்து வேலை முடித்தாலும் திருப்தி வராது அவருக்கு. அவர் கலைஞர். அந்தத் துணியை அப்படியே எடுத்து ஒரு பேப்பர் மேல் போட்டு அதன் மேல் அழுத்தமாய் உட்கார்ந்து இருப்பார். அணியும் போது தான் தெரியும் அதன் அருமை. அந்த காலத்து வண்ணான் ஜெயராமன் கெட்டான். அப்படி ஒரு நேர்த்தி.

    இன்று எவ்வளவு ஆடை அணிந்தாலும் எனக்கு அந்த நீல நிஜார் ஒரு காலமானி. இருக்கும் போது அவர் அருமை தெரியவில்லை. குடும்ப மயக்கம். இன்று மனசு கிடந்து அடித்து கொள்கிறது. கெட்ட பின்பு ஞானி….

    Share
  • பெண் காவலர்கள் படும் பாடு!

    -சேஷாத்ரி பாஸ்கர்

    சென்ற வாரம் நாரத கான சபாவில் காபி குடிக்கும் போது திடீரென நான்கு பெண் காவலர்கள் வேகமாக வந்து காபி வேண்டும் எனச் சொல்லி அதனை வேகமாகத் தரச் சொன்னார்கள்.

    அவர்கள் அனைவரும் பந்தோபஸ்து வேலைக்காக வந்தவர்கள். ஆளுநர் அந்தப் பக்கம் வருவதாக அறிந்தேன். நடுவில் ஒருவர் அந்தக் காபிக்கு பணமும் கொடுத்துவிட்டார். ஒரு சின்ன பேச்சும் ஒரு குட்டி இளைப்பாறலும் கிடைத்த சந்தோஷம் அவர்கள் முகத்தில்.

    அவர்கள் குடித்துக்கொண்டுடிருந்த போதே திடீரென அவர்கள் மேலதிகாரியின் விசில் சத்தம் கேட்டு எல்லோரும் கடகடவென எழுந்து எதிர்த்திசைக்குப் போய்விட்டார்கள். அந்தச் சின்ன ஓய்வும் போய்விட்டது. அதுவும் பெண் காவலர்கள் பாடு மிகக் கஷ்டம். சிறுநீர் கழிக்கக் கூட அவர்கள் ஒரு அலுவலகமோ,  உணவு விடுதியோ தேட வேண்டிய நிலை.

    குறைந்த பட்சம் அவர்கள் நிற்கும் அந்த இடத்தில் பாதை ஓரத்தில் ஒரு சின்ன பெஞ்ச் போல ஒரு சிமெண்ட் பலகை செய்து கொடுத்தால் அவர்கள் மேலும் சிறப்பாக பணியாற்றலாம். வெரிகோஸ் ஒரு பெரும் தொல்லை. இந்தக் கஷ்டப் பணியில் அவர்கள் சலிப்பு அடையாமல் இருக்கச் சில சலுகைகள் தேவை தான்.

    இதை எல்லாம் தாண்டி அவர்கள் பொது மக்களிடம் கனிவுடன் இருப்பது சாதாரண செயல் அல்ல. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அவர்கள் அந்த குடித்த நான்கு காபிக்கும் காசு கொடுத்தவர்கள். இனாமாக அதைப் பெறவில்லை. இங்கு பெண்ணாய் பிறக்க மட்டும் இல்லை வாழவும் மாதவம் செய்ய வேண்டும்.

    Share
  • புவிசார் விஞ்ஞானிகளின் எச்சரிக்கை!

    பவள சங்கரி

    இமாலயப் பிரதேசத்தில் 8.5 ரிக்டர் அளவிலும், அதற்கு மேலும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர். இதன் பாதிப்பு தெற்கு நேபாளம், வடக்கு இமாலயப் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று பங்களூரு நேரு புவியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளனர். நமது இசுரோ விண்வெளி ஆய்வுக்கோள் அனுப்பியுள்ள புகைப்படங்களிலிருந்து ஆய்வு செய்து இதனை அறிவித்துள்ளனர். சுமார் 600/700 ஆண்டுகளாக இதுவரை எந்தவிதமான பாதிப்புகளும் இந்தப்பகுதிகளில் ஏற்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பிரச்சனை இது என்றும் இதன் பாதிப்பு வெகு விரைவில் தெரியும் என்றும் இந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இதன் பின் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டும். இதன் பாதிப்புகள் சத்தீசுகர்,பீகார், தில்லி, இமாச்சலப் பிரதேசம்,நேபால்,மேற்கு வங்கம் வரை பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள்.

    Share
  • உலகின் முதல் பெண் பொறியியலாளர்!

    உலகின் முதல் பெண் பொறியியலாளர் எலிசா லியோனிடா சம்பிரியசுவிற்கு இன்று 131 ஆம் பிறந்த நாளைக்கொண்டாடுகிறது கூகிள். யார் இவர்? எலிசா லியோனிடா, உரோமானியரான, 1887 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி பிறந்த இவர் உலகின் முதல் பெண் பொறியியலாளர்களில் ஒருவராக வரலாற்றை உருவாக்கியுள்ளவர்.

    தனது 86 வருட வாழ்க்கையில், ஆண் ஆதிக்கத்தினால் பெண் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்ட காலகட்டத்தில், புவியியல் ஆய்வகங்களின் தலைமை பொறுப்போடு, உரோமானிய கனிம வளங்களைப் பற்றியும் ஆய்ந்தறிந்தார்.

    இவர் இந்த அளவிற்கு மதிக்கப்படுவதற்கான காரணங்கள் உள்ளன:

    பெண் கல்விக்கு எதிரான காரணத்தால் ஆரம்பப் பள்ளிக் கல்வியிலிருந்தே நிராகரிக்கப்பட்டவர் இவர். 10 உடன்பிறப்புகளுடன் வளர்ந்த இவர் போராடி, உயர்நிலைப் பள்ளி பட்டம் பெற்றபின்னரும் பாலினம் காரணமாக உயர் கல்வியை தாம் விரும்பிய School of Bridges and Roads in Bucharest இல் பயில நிராகரிக்கப்பட்டார்.

    சற்றும் மனம் தளறாதவர், பெர்லினின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் சார்லட்டன்பர்க், ராயல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் கல்வி பயின்று, 1912 இல் பட்டமும் பெற்றார். ஐரோப்பாவிலேயே முதல் பெண் பொறியியலாளர்களில் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றார்.

    எலிசா லியோனிடா, உரோமானிய மற்றும் செருமனிக்கு இடையே 1917 இல் உரோமானியப் படையில் நடந்த முதலாம் உலகப் போரின் இறுதிப் போரின்போது செஞ்சிலுவைச் சங்கத்தில் சிறிய நகரமான மாரெயிஸ்டி என்னும் இடத்தின் மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றினார்.

    காலையிலிருந்து மாலை வரை ஓய்வில்லாமல் முழுநேரமும் பணிபுரிந்த ஒரு தனித்தன்மை மிக்க, நவீன சிந்தனைகள் கொண்டவராக, தமது ஆய்வகத்தின் தலைவராக, புதிய வழிமுறைகளையும் புதிய பகுப்பாய்வு நுட்பங்களையும் கொண்டு தண்ணீர், நிலக்கரி மற்றும் எண்ணெய் போன்ற கனிமங்களையும், பொருட்களையும் ஆய்வு செய்ய உதவியுள்ளார். தமது 75 அகவை வரை ஓய்வின்றி உழைத்தவர்.

    அனைத்திற்கும் மேலாக, அணு ஆயுத அச்சுறுத்தலை மையமாகக் கொண்ட இலண்டன் லான்காஸ்டர் இல்லத்தில் நடைபெற்ற ஆயுதக் குழுவில் இதுபற்றி புகார் அளித்ததோடு, சர்வதேச ஆயுதக்குறைப்பிற்கான ஒரு வழக்கறிஞராகவும் வாதாடியுள்ளார்..

     

    Share
  • மொழிப்புலமை!

    பவள சங்கரி

     

    நம் இந்தியாவில், 20 முதல் 24 வயதில் உள்ள, நகரங்களில் வாழும் 52% இளைஞர்கள் 2 மொழிகளில் வல்லமை பெற்றிருக்கின்றனர். 18% பேர் 3 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்கள் என்றும் நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய 50 முதல் 69 வயதுடையவர்கள் சரளமாக 3 மொழிகள் பேசக்கூடியவர்களாக இருப்பதாகவும் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களில் 22% பேர் 2 மொழிகளிலும், 5% பேர் 3 மொழிகளிலும் புலமை உடையவர்களாக உள்ளதாக தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இளைய சமுதாயத்தில் ஆண், பெண் என்ற பெரிய வேறுபாடு இல்லை என்றாலும் முதியோர் சமூகத்தில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கிறது என்பதும் முக்கிய செய்தி … கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்களிடமும் ஆண், பெண் என்ற வேறுபாடு 10 முதல் 14 வயதிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. இதன் காரணம் கிராமப்புறங்களில் இன்றளவிலும் பெண் குழந்தைகள் அதிகமாக பள்ளிக்கு அனுப்பப்படாததால், கல்வி கற்பதில்லை என்பதால் அவர்கள் தங்கள் தாய்மொழி மட்டுமே அறிந்துள்ளனர். …

    Share
  • குணாதிசயங்கள்!

    பவள சங்கரி

    ஒருவரின் பலதரப்பட்ட குணநலன்கள் ஒன்றையொன்று தாமே தூக்கிச் சாப்பிட்டுவிடுகின்றன. கலைவாணர் என்.எசு. கிருட்டிணன் மிகச்சிறந்த நகைச்சுவையாளர் மட்டுமல்ல. ஆகச்சிறந்த சீர்த்திருத்தவாதியும் கூட. அவர்தம் கருத்துகளை வாயளவில் பேசித் திரிபவராக மட்டும் இல்லை. அப்படியே வாழ்ந்தும் காட்டிய நல்லார்.

    ஒரு முறை இவர்தம் நகைச்சுவை கலையுணர்வில் மயங்கிய மகாராசா ஒருவர் அவரை அழைத்து விருந்துபச்சாரம் செய்து மகிழ்வித்ததோடு அவர்தம் திறன்களில் உச்சி குளிர்ந்து அதற்கு வெகுமதியாக, தம்முடைய மாளிகைகளில் ஒன்றை பரிசாகக் கொடுத்திருக்கிறார். கலைவாணர் சர்வ சாதாரணமாக அதை மறுத்திருக்கிறார். மகாராசர் பல முறை கட்டாயப்படுத்திய பின்பும் இந்த மனிதர் மறுத்துவிட்டதோடு அதற்காக அவர் சொன்ன காரணம்தான் உச்சம்… ஆம், அவர் சொன்னது, “என் வருங்காலச் சந்ததியினர் இத்தனை பெரிய சொத்தை வைத்துக்கொண்டு உழைக்காமல் உட்கார்ந்து உண்ணும் சோம்பேறி நிலைக்குத் தள்ளப்பட்டு விடக்கூடும். அதனால் இவ்வளவு பெரிய சொத்தெல்லாம் என் சந்ததியினருக்குத் தேவையில்லை. அவர்கள் உழைத்து வாழவேண்டும். தனக்கானதைத் தானே உழைத்து பெறட்டும்” என்றிருக்கிறார். ஆனால் இத்தகைய சீர்திருத்தவாதி நம் மனங்களில் அதிகபட்சம் ஒரு நகைச்சுவையாளராக மட்டுமே நிலைத்திருக்கிறார் என்பதே உண்மை!

    Share
  • மெய்யியல் ஞானம்!

    பவள சங்கரி

    சைவத் திருமுறை நூல்கள் மொத்தம் 12. அதில் பத்தாம் திருமுறையாக வருவது திருமூலர் எழுதிய திருமந்திரம். 3000 பாடல்களைக் கொண்டது திருமந்திரம். அத்துணையும் நம் வாழ்வியலுக்குத் தேவையான முத்து முத்தான பாடல்கள்! பக்திப்பனுவல் என்ற வகையில் சேர்க்க இயலாத மெய்யியல் ஞானம் அருளும் பதிகங்கள் அனைத்தும். உண்மை நெறியைக் கண்டறியும் தவம் என்றே கூறலாம்!

    இதோ ஒரு பானை சோற்றின் ஒரு பருக்கை ……

    நெறியைப் படைத்தான்; நெருஞ்சில் படைத்தான்!
    நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
    நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
    நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)

     

    இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று கொள்கை வகுத்துக்கொண்ட பின்னால் அதில் தொய்வில்லாமல் பயணம் நடத்திவிடு அப்போதுதான் உன் வெற்றி உன்னைச் சேரும் என்ற அறிவியல் தத்துவம் பொருத்தமான ஒன்றுதானே?

    ஆனால் செல்லும் பாதையில் தடை இல்லாமல், சிரமம் ஏற்படுத்தாமல் பாதையோரங்களில் மட்டும் விரவிக்கிடந்த அந்த நெருஞ்சில் முட்கள் உன் பாதையிலேயே படரத் தொடங்கி உன் பயணத்திற்குத் தடை விதித்தால் நீ என்ன செய்ய முடியும்? ஒன்று உன் வழியில் விரவிக்கிடக்கும் அந்த முட்புதர்களை நீக்கிவிட்டுக் கொண்டே பண்படுத்தப்பட்ட அந்த பாதையில் உன் பயணத்தைத் தொடர வேண்டும் அல்லது ஒருவேளை பண்படுத்தவே இயலாத பாதை என்று உன் அறிவு உன்னை இடித்துக்கூறினால் இனி பயன்படாத அந்தப் பாதையில் கால விரயம் செய்வதைவிட நெருஞ்சி முட்களால் ஏற்படும் தடைகள் களைய அப்பாதையை விட்டு விலகுவதுதானே அறிவார்ந்த செயல்? இப்படித்தான் நம் முன்னோர்கள், ஆன்றோர்கள், சித்தர் பெருமக்கள் ஆன்மீக அறிவியலை அதீதமாக புகட்டிச் சென்றுள்ளார்கள்! இந்த விதைகளை சரியாக நமக்குள் ஊன்ற முடிந்தால் நம் வாழ்வு பட்டொளி வீசும் என்பதில் ஐயமேது?

    Share
  • நல்ல நெறி!

    பவள சங்கரி

    கொம்புஉளதற்கு ஐந்து ; குதிரைக்குப் பத்துமுழம் ;
    வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே ; வம்புசெறி
    தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
    நீங்குவதே நல்ல நெறி

    (நீதிவெண்பா)

    (வெம்புகரி = மதயானை
    வம்புநெறி = தொல்லைமிக்க)

    கொம்பு உள்ள விலங்குகளை விட்டு ஐந்துமுழம் தூரமும், குதிரையை விட்டுப் பத்து முழம் தூரமும், மதம் மிகுந்த யானையை விட்டு ஆயிரம் முழம் தூரமும் விலகியிருக்க வேண்டும். ஆனால் தீயவர்களின் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நீங்கி நிற்பதே நல்லதாகும் என்பது இதன் பொருள்.

    Share
  • நடுவண் அரசின் சிறப்பான நடவடிக்கை!

    பவள சங்கரி

    மத்திய அரசு மக்கள் நலனுக்காக எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைக்கு பாராட்டுகள்! இதுவரை தங்கம், வெள்ளி போன்ற பொருட்களுக்கு மட்டும் இருந்த தரக்கட்டுப்பாடு சென்ற வெள்ளிக்கிழமை முதல் சேவைத்துறைக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தரக்கட்டுப்பாடு தங்கத்திலிருந்து, குடிக்கும் நீர் வரை, தொலைத்தொடர்புத் துறையிலிருந்து, விமானச்சேவை, இணையம் மூலமான வர்த்தகம், மருத்துவ சேவை போன்ற 12 வகையான சேவைகளும் தரக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சுற்றுலா, தங்கும் விடுதி, உணவு விடுதி, போக்குவரத்து, நிதி நிறுவனச் சேவை மற்றும் வழக்கறிஞர் சேவை போன்ற அனைத்தும் இதற்குள் அடங்கும்!

    Share
  • ராஜஸ்தானின் கலைநுட்பம் அமெரிக்காவில்!

    பவள சங்கரி

     

    இந்திய கலைநுட்பம் அமெரிக்காவில் மிகச்சிறப்பாக பாராட்டைப் பெறும் வகையில் இத்தாலிய மற்றும் ராஜஸ்தான் பளிங்குக் கற்கள் மூலம், அதி அற்புத கலை வேலைப்பாடுகளுடன், நியூஜெர்சி, ராபின்ஸ்வில்லில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சுவாமி நாராயண ஆலயம், இந்திய அமெரிக்க நட்புறவிற்கு ஒரு சிறந்த பாலமாக அமைந்திருக்கிறது. பல நாட்டவர்களும், குறிப்பாக அமெரிக்கர்களும் மிக ஆர்வமாக வந்து இந்த கலைக்கோவிலை இரசிப்பதுடன் அமைதியாக தியானம் செய்வதும் வரவேற்புக்குரியது!

    Share
  • நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி!

    பவள சங்கரி

     
    இதுவரை இலஞ்சம் வாங்கினால் மட்டும் தண்டனை என்று இருந்தது, இனி இலஞ்சம் கொடுப்பவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று பாராளுமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    அதெல்லாம் சரிதான் … இதே சட்டம் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு இலஞ்சமாகக் கொடுப்பதற்கும் பொருந்துமா? அப்படியென்றால் அந்தப் பணம், பரிசுப் பொருள் என எந்த வகையில் பெற்றாலும் அந்த வாக்காளர்களும் தண்டனைக்குரியவர்கள்தானே?
    Share
  • வாழ்வியல் ஞானி!

    பவள சங்கரி

    சீனப் பயணி யுவான் சுவாங் நம் இந்தியாவிற்கு வந்த போது, நாட்டு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு, இயற்கை சீற்றம், வழியில் சாப்பாடு கூட கிடைக்காமல் துவண்ட நிலை இப்படி எத்தனையோ கடும் இன்னல்களைக் கடந்துதான் இந்தியா வந்தார். அப்படி வரும் வழியில் ஒரு முறை சில கொள்ளையர் அவரை சிறை பிடித்தனர். அவர்களுக்கு கொள்ளையில் அதிகமான வருமானம் கிடைத்துவிட்டால், துர்கா தேவிக்கு ஒரு ஆண் மகனை பலி கொடுக்கும் வழமை இருந்திருக்கிறது. அன்று அப்படி அவர்கள் பலி கொடுக்க வேண்டிய தருணத்தில் இளந்துறவியான யுவான் சுவாங்கைக் கண்டிருக்கிறார்கள். அவருடைய அழகையும், அறிவையும், இளமையையும் வைத்து அவர்தான் தங்கள் துர்காதேவிக்கான சிறந்த படையலாக இருக்க முடியும் என்று முடிவு செய்து அவரை இழுத்துச் செல்கிறார்கள். அப்போது அவ்வூர் மக்கள் அவரை விட்டுவிடும்படியும் தங்களில் யாராவது ஒருவரை பலி கொடுத்துக் கொள்ளட்டும் என்று மன்றாடியும் அந்தக் கொள்ளையர் செவி சாய்க்கவில்லை. அவர்கள் யுவான் சுவாங்கை பலி பீடத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவரோ, எந்த விதமான அதிர்ச்சியோ, அச்சமோ, சலனமோ இல்லாமல் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தாராம். அதைக் கண்ட கொள்ளையர்களுக்கு அவரக் கொலை செய்ய மனம் வராமல் விட்டுவிட்டார்களாம்.. துறவு கொடுத்த அந்த அமைதியும், கருணையும், ஆழ்ந்த ஞானமும் அவரை அந்த அளவிற்குப் பக்குவப்படுத்தி வைத்திருந்ததாம். இப்படித்தான் நம் ஊரிலும், பல துறவிகள் மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள பல பெண்களும் கர்ம யோகிகளாக மிகுந்த பக்குவமான மனம் பெற்றவர்களாகவே உள்ளனர். இந்த விதத்தில் பெரும்பாலான பெண்கள், ஆண்களைக் காட்டிலும் மற்றுமொரு படி உயர்ந்தவராகவே இருப்பது கண்கூடு. அதனாலேயே நம் நாட்டில் இன்றளவிலும் கூட்டுக் குடும்ப முறைகள் கூட சிறந்து விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.

    Share