நீல வண்ண அரை நிஜார்
–சேஷாத்ரி பாஸ்கர்.
பள்ளிக் காலங்களில் எனக்குச் சீருடையைத் தாண்டி பெரிய துணிமணி ஏதுமில்லை. ஏதோ ஒன்றோ இரண்டோ தான். அதனைப் போஷிப்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் அந்த நீல வண்ண அரை நிஜாரை மறக்கவே முடியாது. அக்கறை இல்லாமல் தைக்கப்பட்ட ஒன்று. அது காஞ்சி பட்டு அல்ல. ஆனால் கஞ்சி பட்டு அதன் நிறம் வெண் நீலம் ஆயிற்று.
நல்ல முறுக்கேறிய பருத்தித் துணி. உடம்பு கீறும் அளவுக்கு அதன் மொரமொரப்பு. பணம் கொடுத்து (நாலணா) இஸ்திரி போட வசதி இல்லை. ஆனால் என் தந்தை மிகுந்த அக்கறை ஆனவர். வித்தியாசமாய் யோசிப்பவர். நல்ல டெக்னிகல் மூளை. ஒரு பெரிய டபராவை நன்றாய்ச் சுட வைத்து என் துணிக்கு இஸ்திரி போட்டு விடுவார். எப்படி அந்த சுடும் பாத்திரத்தைக் கையாண்டு அதைச் செய்தார் என்று இன்றளவும் எனக்கு ஆச்சரியம் .ஆனால் மனசால் செய்த காரியம். சுத்தமான அன்பு. எந்தப் பிரதி பலனையுன் பாராத குணம்.
இஸ்திரி போட்ட பின் அந்த கிரீஸ் மேல் நகத்தால் கோடு கிழித்து வேலை முடித்தாலும் திருப்தி வராது அவருக்கு. அவர் கலைஞர். அந்தத் துணியை அப்படியே எடுத்து ஒரு பேப்பர் மேல் போட்டு அதன் மேல் அழுத்தமாய் உட்கார்ந்து இருப்பார். அணியும் போது தான் தெரியும் அதன் அருமை. அந்த காலத்து வண்ணான் ஜெயராமன் கெட்டான். அப்படி ஒரு நேர்த்தி.
இன்று எவ்வளவு ஆடை அணிந்தாலும் எனக்கு அந்த நீல நிஜார் ஒரு காலமானி. இருக்கும் போது அவர் அருமை தெரியவில்லை. குடும்ப மயக்கம். இன்று மனசு கிடந்து அடித்து கொள்கிறது. கெட்ட பின்பு ஞானி….