பெண் காவலர்கள் படும் பாடு!
-சேஷாத்ரி பாஸ்கர்
சென்ற வாரம் நாரத கான சபாவில் காபி குடிக்கும் போது திடீரென நான்கு பெண் காவலர்கள் வேகமாக வந்து காபி வேண்டும் எனச் சொல்லி அதனை வேகமாகத் தரச் சொன்னார்கள்.
அவர்கள் அனைவரும் பந்தோபஸ்து வேலைக்காக வந்தவர்கள். ஆளுநர் அந்தப் பக்கம் வருவதாக அறிந்தேன். நடுவில் ஒருவர் அந்தக் காபிக்கு பணமும் கொடுத்துவிட்டார். ஒரு சின்ன பேச்சும் ஒரு குட்டி இளைப்பாறலும் கிடைத்த சந்தோஷம் அவர்கள் முகத்தில்.
அவர்கள் குடித்துக்கொண்டுடிருந்த போதே திடீரென அவர்கள் மேலதிகாரியின் விசில் சத்தம் கேட்டு எல்லோரும் கடகடவென எழுந்து எதிர்த்திசைக்குப் போய்விட்டார்கள். அந்தச் சின்ன ஓய்வும் போய்விட்டது. அதுவும் பெண் காவலர்கள் பாடு மிகக் கஷ்டம். சிறுநீர் கழிக்கக் கூட அவர்கள் ஒரு அலுவலகமோ, உணவு விடுதியோ தேட வேண்டிய நிலை.
குறைந்த பட்சம் அவர்கள் நிற்கும் அந்த இடத்தில் பாதை ஓரத்தில் ஒரு சின்ன பெஞ்ச் போல ஒரு சிமெண்ட் பலகை செய்து கொடுத்தால் அவர்கள் மேலும் சிறப்பாக பணியாற்றலாம். வெரிகோஸ் ஒரு பெரும் தொல்லை. இந்தக் கஷ்டப் பணியில் அவர்கள் சலிப்பு அடையாமல் இருக்கச் சில சலுகைகள் தேவை தான்.
இதை எல்லாம் தாண்டி அவர்கள் பொது மக்களிடம் கனிவுடன் இருப்பது சாதாரண செயல் அல்ல. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அவர்கள் அந்த குடித்த நான்கு காபிக்கும் காசு கொடுத்தவர்கள். இனாமாக அதைப் பெறவில்லை. இங்கு பெண்ணாய் பிறக்க மட்டும் இல்லை வாழவும் மாதவம் செய்ய வேண்டும்.