பல்லழகன் – பகுதி – 22
திவாகர்
மறுபடியும் கந்தசாமியின் வீடு.
“இதுதான் சார் நடந்தது. இதுதான் உண்மை.. நான் அப்படித்தான் பேசினேன்.. ஆனா துப்பாக்கில சுடப்பட்டு இறந்தார்னவுடனே எனக்கு ஒண்ணும் தோணலே.. ஒருபக்கம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்ததுன்னு நினைச்சு சந்தோஷப்படறதா இல்லே இப்படி எல்லாம் நம்ம வாழ்க்கைல நடந்ததுன்னு வருத்தப்படறதான்னு தெரியலே. ஆனா எங்கம்மா மேல சத்தியமா இதுதான் நடந்தது.”
இன்ஸ்பெக்டர் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தார்.
“சரி, இப்போ அந்த மொபைலை நீங்க வெச்சிருக்கீங்களா?”
“ஸார்.. அது ஆசிரமத்துல வெச்சிருக்கேன். என்னோட அக்கவுண்ட் டேபிள் ஒண்ணு இருக்கு.. அங்கதான் வெச்சேன்.”
சட்டென கோம்டி தன் கைப்பையிலிருந்து ஒரு மொபைல் ஃபோனை மேலே வைத்தாள். இன்ஸ்பெக்டர் அதை எடுத்துக் கொண்டார். சுந்தர் கத்தினான்.
“இதுதான்,, ஓ! இது எப்படி உங்க கைக்கு?.. ஆசிரமத்தை சோதனை போட்டீங்களா?”
“அது இருக்கட்டும். இப்போ இந்த கேஸை எப்படி முடிக்கலாம் கோம்டி?”
“ஸார்.. சம்பவம் நடந்த நேரம் சரியா நாலேமுக்காலேர்ந்து அஞ்சு மணிக்குள்ளே.. சுந்தர் ஃபோனை வெச்சவுடனே கந்தசாமி கவலைக்குள்ளாயிருக்கணும்தான். அடுத்த நாள் பொழுதுவிடிஞ்சா கல்யாண் வந்துடுவார்.. இந்த முரளி வெறி பிடிச்சு எல்லா விஷயத்தையும் அவருக்கு சொல்லிடலாம். கல்யாணுக்கு விஷயம் தெரிஞ்சா ரொம்ப அசிங்கமாகும்.. அதுவும் இவங்க எல்லாரும் சேர்ந்து போலீஸ்னு போனா அதை விட அவமானம் இருக்கவே இருக்காதுன்னு கந்தசாமி நினைச்சிருக்கலாம்தான்.”
கோம்டியை இடை மறித்தார் இன்ஸ்பெக்டர் மோகன்.
“நினைச்சிருக்கலாம் என்ன? அதுதான்னு நான் தீர்மானமா சொல்லமுடியும். கல்யாண், இந்த மூணு பேர் விஷயத்திலேயும் சம்பந்தப்படலேங்கிற விஷயம் ஒண்ணு. கல்யாண் தன்னோட பெரியப்பாவை ஏதோ மிகப் பெரிய இடத்துல மரியாதையா வெச்சதெல்லாம் ஒரேயடியா இழந்துடுவோமேன்ற பயம். இன்னொண்ணு. இதோ நீங்க கொடுத்த சுமதிக்கான நாமினேஷன் டாக்குமெண்ட்.. பேங்க்குக்கும் அதை ஏற்கனவே கொடுத்திருக்கார்னும் சொல்லறீங்க.. அப்போ அவரோட தற்கொலைக்கான முடிவை அப்பவே எடுத்திட்டாருன்னுதான் சொல்ல முடியும். அந்தக் கடைசி நேரத்துல சுந்தர் அவர்கிட்டே பயமுறுத்தி தற்கொலை வேண்டுமானாலும் பண்ணிக்கோ.. கல்யாண்கிட்ட எல்லா விஷயமும் சொல்லிடப் போறேன்னு சொன்னவுடனே அந்த தற்கொலைதான் ஒரே வழின்னு அவருக்குத் தெரிஞ்சுடுச்சு.. அவர் தற்கொலைதான் பண்ணியிருக்கவேணும்..”
“ஸார்.. அந்த முடிவை உங்ககிட்டே விடறேன் சார்.. நான் விசாரிக்கறவரைக்கும் விசாரிச்சாச்சு.. எனக்கு மிஸ்டர் கல்யாண் கொடுத்த வேலையை நான் பண்ணியாச்சு. போலீஸ் என்ன பண்ணனுமோ அதை தாராளமா பண்ணலாம்.”
“இதுல போலீஸ் என்ன பண்ணமுடியும்? எங்ககிட்ட இருக்கற டாக்குமெண்ட்ஸ், பிரேதப் பரிசோதனை ரிபோர்ட், இப்போ ரிகார்ட் பண்ணியிருக்கற ஒப்புதல் எல்லாமே ஒரே முடிவுக்குதானே போகறது.. ஒருமுறை துப்பாக்கியை சாய்வா வெச்சு மார்புல சுட்டுருக்கார்.. மார்புல அதுவும் வலது மார்புல பட்டும் படாம ஓரமா சுட்டதாலே கீழே விழுந்திருக்கார். மயக்கம் கூட வந்திருக்கணும்.. கொஞ்ச நேரத்துல நினைவு வந்து அது சரியா சுடலேன்னு தெரிஞ்சு அடுத்த அரை மணிக்குள்ளே தன் நெத்திப் பொட்டுல சுட்டுண்டு இருக்கார். அவ்வளவுதான்.. ஏன் முதல்லயே நெத்திப் பொட்டுல சுட்டுக்கலேன்னா என்ன பதில் சொல்லமுடியும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பிரகாரம் இது ரெண்டாவது தடவையில அதுவும் அரை மணி நேரம் கேப் வெச்சு சுட்டுருக்கார்.. அவர் என்ன ப்ரொஃபெஷனலா சுடர்றவரா என்ன? முதல்தடவை சுடறவங்க நிறைய தடவை இப்படித்தான் தப்பும் ஒப்புமா சுட்டுப்பாங்க.. எங்கிட்டே நிறைய ரிகார்ட்ஸ் இருக்கு. இப்படி முதல் தடவை தப்பா சுட்டுண்டு தப்பிச்சவங்க ரிகார்ட்ஸ் கூட நிறைய இருக்கு.”
கோம்டி குறுக்கிட்டாள்
“சார்! அப்போ அந்த பீரோ ஹேண்டில்ல அப்பறம் தரையிலே தெரிந்த ரத்தக்கறை இது எப்படி வந்தது?”
“அதுல என்னம்மா.. ஒரு பொருளை பீரோவிலேர்ந்து எடுத்தவுடனே நம்ம கைன்னு இல்லே யாரோட கையுமே பீரோவை மூடத்தான் செய்யும். நம்மளை அப்படியே நம்மைப் பழக்கிண்டோம். கந்தசாமி கூட துப்பாக்கியை பீரோவிலேர்ந்து துப்பாக்கி எடுத்தவர் தன்னை முதல்ல மார்புல சுட்டுண்ட உடன் ரத்தம் குபுகுபுன்னு வந்திருக்கலாம். ரத்தம் பட்ட கையோட பீரோ ஹாண்டிலைப் பிடிச்சு மூடியிருக்கணூம். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், டாக்டர் ரிப்போர்ட் ரெண்டும் கூட இடது கைரேகை பீரோ ஹேண்டில்ல பதிஞ்சிருக்குன்னு சொல்லுது. வலது கையில துப்பாக்கி இருந்துதுல அந்தக் கையில ரத்தக் கறை இல்லே. அவரு சுட்ட உடனே பீரோவை மூடினாலும் அதுக்கும் மேலே தாங்கமுடியாம தள்ளாடி கொஞ்ச ஸ்டெப் நடந்து விழுந்து மயக்கமாயிருக்கணும். அப்படி நடக்கறச்சே ரத்தக் கறை தரைல பறதும் சகஜம். ரத்தக்கறை கூட ஸ்டெப் ஸ்டெப்பா அஞ்சாறு இடத்துல விழுந்திருக்கு. முதல் குண்டு மார்புல தெளிவா பாயலேங்கிறது அவருக்கு மயக்கம் தெளிஞ்சு புரிஞ்சிருக்கு. அதனாலே இந்த முறை நெத்தி பொட்டுல சரியா வெச்சு சுட்டுண்டிருக்கார். அது பட்டவுடனே மரணம் சம்பவிச்சிருக்கு. விரல்ல துப்பாக்கி டிரிக்கர் மாட்டினது கூட அப்படியே பதிஞ்சிருக்கு. இதை பி.எம் ரிப்போர்ட் கூட உறுதி செய்யுதும்மா. ஸோ.. இது தற்கொலைதான்னு எனக்கு ரிப்போர்ட் வந்த அன்னிக்கே கல்யாண்கிட்டே சொன்னேன். சில தற்கொலை கேசுங்க இந்த மாதிரி ஏற்கனவே ரிகார்ட் ஆகியிருக்கு. அதனால எனக்கு ஒண்ணும் பெர்சா தோணலே.”
இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டு சுந்தரைப் பார்த்தார்.
மிஸ்டர் சுந்தர்.. உங்க ஃபைனல் ஸ்டேட்மென்ட் இதுல ரிகார்ட் ஆனாலும் உங்க பேச்சு அவரது தற்கொலைக்குத் தூண்டுதலா இருக்கு. இதுவும் பெரிய குற்றம்தான். ஆனா நீங்க கல்யாண்க்காக வெயிட் பண்ணறீங்க.. அவர் வந்தவுடனே அவரும் நீங்களும் சேர்ந்து போலீஸ்கிட்ட போகப் போறிங்கன்னு நீங்க சொன்னது எப்படியும் கந்தசாமியைப் போலீசுல ஒப்படைக்கவேண்டும்னுதான் உங்க எண்ணம் போனதாலே உங்களை நான் இப்போ விடறேன். ஆனா இந்த கேஸ்ல அவரோட மரண சம்பவத்துல இன்னும் கண்ணால நேரா பார்த்துச் சொல்லறவங்க யாரும் இல்லேங்கிறதும் கந்தசாமி தற்கொலை முடிவுக்கு ஒரு சாட்சியா இருக்கு… மிஸ் கோம.. சாரி, கோம்டி நீங்க இதுதான் ஃபைனல்னு சொல்ல வர்ரீங்களா?”
“ஸார்.. முடிவு எப்பவுமே உங்க கையிலதான்.. நான் பிராபரா விசாரிச்சுக் கொடுக்கதான் முடியும்.. ஐ திங்க்.. நான் சரியாதான் விசாரிச்சுருக்கேன்னு நினைக்கிறேன்…”
இன்ஸ்பெக்டர் புன்னகைத்தார்.
“அதுல என்னம்மா சந்தேகம். கல்யாண் உங்களை இந்தக் கேஸுல இன்வெஸ்டிகேஷன் பண்ணச் சொன்ன முடிவு ரொம்ப சரியான முடிவு. இத்தனை கோர்வையா எங்க டிபார்ட்மெண்ட்ல யாரும் பண்ணியிருக்க மாட்டாங்க. ஹேட்ஸ் ஆஃப் டு யூ. கோம்டி!”
“தாங்க்யூ சார். மிஸ்டர் கல்யாண்.. என் வேலை முடிஞ்சுது.. எனக்குக் கொடுக்கவேண்டிய ஃபீஸ் ரெடியா வையுங்க.. இல்லேன்னாலும் எதிர்வீட்லதானே என் க்லினிக்.. அங்க வந்து கொடுத்துடுங்க. நான் கிளம்பறேன்.. சுமதி.. ஆல் தி பெஸ்ட்.. உன் வாழ்க்கையிலே இனிமே துன்பம்ங்க்கிற வார்த்தையே வரக் கூடாது.. ரவி உன்னை ஜாக்கிரதையா அப்படி பார்த்துப்பான்.
ரவி நெளிந்தான். “இதெல்லாம் வெளியெ சொல்லத்தான் வேணுமா கோம்டி!.. எனக்கும் சுமதின்னா ரொம்பப் பிடிக்கும்னு ஏற்கனவே அவளோட அண்ணன் கல்யாணுக்கும் தெரியும்.. ஸோ டோண்ட் வொர்ரி.
கோம்டி முரளியைப் பார்த்தாள். “மிஸ்டர் முரளி உங்க வாழ்க்கையில பிரியா கூட இனிமே சந்தோஷத்தை மட்டுமே பாருங்க.. கடந்த காலத்தையெல்லாம் பார்க்காதீங்க.. மிஸ்டர் சுந்தர்.. உங்களுக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலே.. அனாதை ஆசிரமத்தை நல்லபடியா கவனிக்கறீங்க.. உங்களுக்கு இரக்ககுணம் இருக்குன்னு தெரியுது.. ஆனா நீங்க அதைப் ப்ரூவ் பண்ணிக் காமிக்கணும்னா விஜயாவை உங்க சொந்த தங்கச்சியா வளர்த்து நல்லா படிக்க வெச்சு அவளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குங்க.. அப்போதான் என்னால் உங்களைப் பாராட்டமுடியும். இன்ஸ்பெக்டர்.. நீங்க என்னை நம்பி என்னை சுதந்திரமா விட்டு இந்த கேஸு எங்கிட்டே கொடுத்ததுக்கு தேங்க்ஸ். நான் வரட்டுமா?”
இன்ஸ்பெக்டர் சிரிக்கிறார். “இந்த கேஸ் ஒரு முடிவுக்கு வந்துடுச்சு. ஆனா இது இங்கே ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாடமா எடுத்துண்டு வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கிறது எப்படின்னு கத்துக்குங்க.
இரவு நேரம், கிலினிக்கில் உட்கார்ந்துகொண்டு கோம்டி ஃபோனில் சாந்தியிடம் பேசுகிறாள்.
“சாந்தி இந்தக் கேஸைப் பத்தி இனிமே எதுவும் கேட்காதே.. எல்லாம் முடிஞ்சுடுத்துதான்.. ஆனா ஒரு மனுஷன் என்னவெல்லாம் குரூரமா செய்யமுடியும்னு கந்தசாமி ப்ரூவ் பண்ணியிருக்கான். என்ன.. நம்ம சுமதிக்குதான் ஒரு நல்ல வாழ்வு வந்துதுன்னு சொல்லலாம்.”
“யூ எஸ் டிக்கெட் புக் பண்ணனும்டி.. அங்க கிலினிக் இடம்லாம் பார்த்தாச்சு.. நாம ஓகேன்னா அவங்களும் அங்கே ஓகேதான்..”
“சரிடி,, நான் இன்னும் அம்மாகிட்டே பேசலேடி.. ராத்திரியே பேசறேன்..”
“இருந்தாலும் இந்த ‘ஆபரேஷன் கந்தசாமி’ல ஒரு விஷயத்துல மாத்திரம் நாம ரெண்டு பேருமே ஃபெயில்தாண்டி..”
“என்னடி சொல்லறே.. ஆபரேஷன் கந்தசாமி’ல நாம எங்கே ஃபெயிலானோம்?”..
“நீ உன் இன்வெஸ்டிகேஷன் கேஸுக்காக ஒரு க்ளையண்ட் பிடிச்ச.. ஆனா உன் க்லினிக்ல அந்த பல்லழகனோட எத்துப் பல்லை மட்டும் நம்மளாலே ஒண்ணும் தொடமுடியலையேடி..”
அவள் சிரிக்கிறாள். “ஏண்டி.. நாம ரெண்டு பேருமே அவன் தெத்துப்பல்லைத்தான் நம்ம காலேஜ்ல, க்ளாஸ்லயே தொட்டுப் பார்த்தோமேடி,, மறந்துட்டியா?”
கதவு தட்டப்படும் சப்தம் கேட்கிறது. மெதுவான குரலில் கோம்டி பேசுகிறாள். “ஏய்.. எப்ப நீ அவன் பேரை எடுத்தியோ அவன் வர்றான் போல.. பணம் கொண்டு வர்றான் போல..”
சாந்தி உடனே ஃபோனில் கத்துகிறாள்.
“எதுக்கும் அவனையே அந்த விஷயமும் கேட்டுடுடி”
“கேட்கிறேன்.. கேட்கிறேன்.. அவ்வளோ சீக்கிரம் அவனை விட்டுடுவேனா.. கேட்டுட்டு உனக்கும் நாளைக்குச் சொல்லறேன்.”.
அவள் எதிர்ப்பார்த்தபடியே கல்யாண் வருகிறான். கூடவே ரவி.. அவள் எதிரே உட்காருகிறார்கள். அவன் கையில் அவள் எதிர்ப்பார்த்த செக் இருக்கிறது.. அவளிடம் கொடுக்கவும் செய்கிறான்.
கோம்டி அந்தச் செக்கைக் கையில் வைத்தபடி அவனைப் பார்க்கிறாள். அவள் அவனையே பார்க்கும் பார்வை அவனை ஒரு மாதிரி நெளிய வைத்தது.
“எதுக்குங்க என்னையே பாக்கறீங்க?”
கையில் உள்ள செக்கைக் காண்பித்துப் பேசுகிறாள்.
“இல்லே.. இந்த செக்கைப் பார்த்தேன்,, அதான் உங்களைப் பார்த்தேன்..”
“ஏங்க.. அமௌண்ட் குறைச்சலா இருக்கா?”
“சேச்சே.. நான் என்னிக்குமே காசுக்காக இந்த உத்யோகம் பண்றதில்லே.. எனக்கு இன்வெஸ்டிகேடிவ் ஒரு ரொம்ப ரொம்ப விருப்பமான வேலை.. ஹாபி.. எனக்கு மெயின் ப்ரொஃபெஷன் இந்த பல் கிலினிக்.. பல்லைப் பிடுங்கிப் பணத்தைப் பிடுங்குற வேலைதான். அதுக்குதான் என்னைப் படிக்க வெச்சாங்க.. அவங்க ஆசைப்படி நல்லா படிச்சேன். காலேஜ்லயே ஃபர்ஸ்ட்டா வந்தேன்”.
மறுபடியும் அவனையே உற்றுப் பார்த்தாள். அவன் தலை தாழ்ந்து கொண்டான்,
“கல்யாண்.. நீங்க இங்கே வர்றப்போ இந்தக் கதவை உள்பக்கம் சாத்தினீங்களா.. ரவி! இல்லேன்னா கொஞ்சம் சாத்திட்டு வாயேன்.”
“சாத்தினேங்க..” கல்யாண் சொன்னான்.
“அப்போ இங்கே நாம மூவரையும் தவிர யாருமில்லன்னு நம்பறீங்களா?”
“ஏன் கேக்கறீங்க?”
“எங்கம்மா அப்பாவும் கூட உள் ரூம்ல அதாவது உள்ளே இருக்கற பெட்ரூம்லதான் டிவி சீரியல் பாத்துண்டுருக்காங்க.. ரெண்டு பேருமே கொஞ்சம் சௌண்ட் பார்ட்டிங்க.. காது கேக்காது அதாவது அவங்க ஒத்தருக்கு ஒத்தர் ரகசியம் பேசணும்னா கூட பக்கத்து வீட்டுக்கும் கேக்கறா மாதிரி கொஞ்சம் சப்தம் போட்டுதான் பேசுவாங்க.”
“எனக்கு எதுக்குங்க இதெல்லாம் சொல்லறீங்க..?”
“ஸோ நாம் இங்கே இருக்கறதோ.. பேசறதோ எதுவும் அவங்களுக்குக் கேட்காது.. அதனால”
“அதனால?”
“சொல்லுங்க..”
“எதைச் சொல்லணும்?”
“கல்யாண்..” என்றபடியே அவனை மறுபடியும் உற்றுப் பார்த்தாள்
“என்னங்க அப்படிப் பாக்கறிங்க? .. எதைச் சொல்லணும்? ஓ.. இந்த சுமதியை ரவி எப்போலேர்ந்து லவ் பண்றான்னுதானே கேக்கறீங்க… அது ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி வைசாக்ல..’
‘ரவி இருக்கட்டும் கல்யாண்.. அவன் நம்ம ரெண்டு பேருக்குமே நெருங்கினவன்.. அவன் சுமதியைக் கல்யாணம் பண்ணினா நாம போய் நல்லா சாப்ட்டுட்டு வாழ்த்தும் சொல்லிட்டு வரலாம். ஆனா’
ரவி சிரித்தான்..’கோம்டி! நீ என்ன சொல்லவர்றே!’
‘நான் எதுவுமே சொல்லப் போறதில்லே.. கல்யாண்தான் சொல்லணும்..’
ரவி முறைத்தான்.. ‘என்ன சொல்லணும்?’
மறுபடியும் நிதானித்தாள் அவள். பிறகு அதே நிதானத்துடன் பேசினாள்.
“அவர் பெரியப்பாவை அவர் கொலை செய்த விவரங்களை..”
அதிர்ச்சியாகிப் போனான் கல்யாண்.. “அது அது..” என்று தடுமாறினான். ரவி ஏதோ சொல்ல வந்தான். கோம்டி அனனைத் தடுத்து நிறுத்தி கல்யாணைப் பார்த்துப் பேசினாள்.
தொடரும்
