பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11180014_822542801133254_1503319428_n

11165882_822562841131250_1322121287_nதிரு வெங்கட் சிவா (நிழற்படம்) எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.04.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

45 thoughts on “படக்கவிதைப் போட்டி (9)

  1. ஆயிரக் கணக்கில் எல்லாம் 
    செறிந்திருந்தன.. 
    நானூறுகளென அழகியல்பாடித் 
    திரிந்தோம்… 
    வாழ்ந்தோம் பெருமைகளை 
    வழித்து வீசி… வாழ்ந்து 
    கெட்டிருகிறோமென உணர்…… 

    அலைவழி மிதந்தேறிய 
    ஆங்கிலமூலம் ….?. வணிகம்…!! 

    ஆமைத்தடம் தொடர்ந்திட்டு 
    ஆழித்தீவில் பொருள்விற்ற 
    மரபணுக்களில் பாசி துடை…. 

    இங்கிலாந்து தெருக்களில் 
    இட்டிலிக்கடை நிர்மாணி..மல்லித் துவையல் 
    மகத்துவப் பாட்டோடு.. 

    ஏர்க்கலப்பை கிளறவேண்டும் 
    ஏதென்சுப் பொதிமணலை…. 
    சுகப்பட்ட இடைவெளியில் 
    சோளக்கஞ்சி.. சுக்குத் தண்ணி … 

    அறிவியலின் அபூர்வங்கள் 
    தமிழ்பேசி இயங்க வேண்டும்.. 

    ஆலையதில் இயந்திரங்கள் 
    தமிழ்பாடி உழைக்க வேண்டும்… 

    இறக்குமதிச் சந்தைகள் 
    தமிழ் கடந்தே இறங்க வேண்டும்… 

    ஏற்றுமதிப் பொருளெல்லாம் 
    தமிழ் சுமந்து பறக்க வேண்டும்…. 

    இப்படியான ஒரு காலை … 
    விடியலில் 
    எதிர்காலத் தமிழின் நாளை….!! 

  2. குடி மன்னர் 

    துள்ளித் திரியும் காலத்தில்
    துடுக்கடக்கிப்
    பள்ளிக்கு வைக்க வில்லை
    பாலகன் என்னை !
    மரத்தடியில் தினம் சீட்டாடி
    தெருச்சுற்றிப் பணம்
    திருடி 
    அப்பனுக்கு மாலையில்
    கப்பம் கட்டுவேன் !
    நள்ளிரவில்
    குடித்து விட்டு 
    அப்பன்
    அடித்துப் போடுவான்
    அம்மாவை !
    குடி வாழ்வைக் கெடுத்தது !
    இன்னும்
    விடுதலை விடியாமல் 
    போனதற்கு
    பிள்ளை காரணமா ? 
    பெற்ற தந்தையா ?
    குடியரசு 
    முடி மன்னரா ?

    சி. ஜெயபாரதன்.

  3. எச்சில் குவளைகள் 
    இரண்டைத் தவறவிட்டிருந்த பொழுதில் 
    அப்படித்தான் அழைத்தார் 
    அன்றைய நாளின் 
    முதலாளியாகியிருந்த அவர்…

    நேற்றைய இலைக்கட்டுகள் 
    சுமந்திருந்த போது.. சரிந்து விட்டிருந்த 
    நான்கு நுனிஇலைகளுக்காகவும் 
    அதே விளிகளைத்தான் 
    கடந்துவர வேண்டியதாகியிருந்தது….

    நாளைய மதுக்குப்பிகளின் 
    சேர்க்கை இத்தனையாக வேண்டுமென 
    கண்டிப்பாகச்  சொன்னவருக்கும் 
    அது இயல்பாகவே 
    ஒட்டிக்கொண்டு வந்திருந்தது….

    குப்பைகள் கிளறுகையில்
    ஆள்காட்டி நடுவிரல்களுக்கிடையே 
    சிக்கியிருந்த ஆணுறை 
    அவர்களைப் போல என்னைத் 
    திட்டியிருக்காது…

    அவர்களாகவோ… அவர்களல்லாத யாரோ 
    பீய்ச்சியிருந்த 
    திரவணுக்களாக அதனுள் நான் 
    ஊடுருவியதன் முதற்தொடுகை
    பரிவுகளாயிருக்கலாம்….

    குப்பிச் சாக்குகளோடு 
    தெருமுனை கடக்க…
    யார் பெற்ற பிள்ளையோ என 
    உச்சுக் கொட்டியவனிடம் 
    கத்திச் சொல்லத் தோன்றியது….

    உனக்காகவும் இருக்கலாம்…
    தெரியவில்லை….
    உறுதியாக நான் தொழிலுக்குப் பிறந்தவன்….

  4. பாட்டி இல்லாத உலகம்

    எங்கு தின்பண்டம் 
    கிடைத்தாலும் 
    சுருட்டி மடியில் 
    கொண்டு வரும் 
    பாட்டிகளின் 
    கதைகளில் 
    பசியாறிக் கொண்டே 
    இருக்கிறார்கள்
    பேரன்கள்
    மீண்டும் விளையாட…..

    கவிஜி 

  5. சமூகம் தான் நான்..

    நடுவினில் 
    நின்றிருக்கின்றேன் 
    எப்படி வேண்டுமானாலும் 
    தெரியும் நீங்கள் என்னை 
    தேர்ந்தெடுங்கள், 
    கத்தியாகவோ…
    புத்தகமாகவோ….

    கவிஜி 

  6. என்ன பிழை செய்தேன்
    எவனோ ஒருவன் கருவாக்க
    எவளோ ஒருத்தி எனைத்தாங்கி
    எறிந்தெனைச் சாலையில் செல்ல?

    அருந்தவம் செய்து 
    ஆற்றாத் துயர்கொண்டு
    இறைவா என வேண்டி
    ஈட்டுத்தாய் பெற்று
    உற்ற கருவாக்கி
    ஊரார் மெச்ச
    என் பிள்ளையென
    ஏந்திப் பிடித்தே
    ‘ஐ’ யென மகிழ்ந்திருக்க!

    ஒரு துணையுமின்றி நான் மட்டும்
    ஓடுகாலிகளின்
    ஔரதனாய் 
    ஃதே வாழ்தற்கு?

    வீசி எறிந்த எனை
    வீதியில் பொறுக்கி வந்து
    விடுதிக் கைதியாக்கி
    வீணே அடிப்பதன்றி

    வேளை அவன் உண்ண
    வேலைக் காரனாக்கி
    வீழும் வாழ்க்கைக்கு
    விழுதாய் ஆக்கிவிட்டான்!

    நம்பிக்கையாய் இருக்கிறேன்
    நாளும் வரவேண்டி
    நாளை வாழ்க்கைக்கு
    நானிலக் கயவர்களை

    தோலுரித்துக் காட்டி
    தோள் நிமிர்த்தி வாழ்வதற்கே!

    குறிப்பு: ஔரதன் – மகன் என்ற பொருளில் கையாளப்பட்டிருக்கிறது
                    ஈட்டுத்தாய் – வாடகைத்தாய்

    அன்புடன்
    சுரேஜமீ                 

  7. என்ன பிழை செய்தேன்
    எவனோ ஒருவன் கருவாக்க
    எவளோ ஒருத்தி எனைத்தாங்கி
    எறிந்தெனைச் சாலையில் செல்ல?

    அருந்தவம் செய்து 
    ஆற்றாத் துயர்கொண்டு
    இறைவா என வேண்டி
    ஈட்டுத்தாய் பெற்று
    உற்ற கருவாக்கி
    ஊரார் மெச்ச
    என் பிள்ளையென
    ஏந்திப் பிடித்தே
    ‘ஐ’ யெனப் பலர் மகிழ்ந்திருக்க!

    ஒரு துணையுமின்றி நான் மட்டும்
    ஓடுகாலிகளின்
    ஔரதனாய் 
    ஃதே வாழ்தற்கு?

    வீசி எறிந்த எனை
    வீதியில் பொறுக்கி வந்து
    விடுதிக் கைதியாக்கி
    வீணே அடிப்பதன்றி

    வேளை அவன் உண்ண
    வேலைக் காரனாக்கி
    வீழும் வாழ்க்கைக்கு
    விழுதாய் ஆக்கிவிட்டான்!

    நம்பிக்கையாய் இருக்கிறேன்
    நாளும் வரவேண்டி
    நாளை வாழ்க்கைக்கு
    நானிலக் கயவர்களை

    தோலுரித்துக் காட்டி
    தோள் நிமிர்த்தி வாழ்வதற்கே!

    குறிப்பு: ஔரதன் – மகன் என்ற பொருளில் கையாளப்பட்டிருக்கிறது
                    ஈட்டுத்தாய் – வாடகைத்தாய்

    அன்புடன்
    சுரேஜமீ     

  8. காளையுமல்ல
    பொதிசுமக்கும்
    கழுதையுமல்ல
    நான்….
    பிஞ்சுமனம் முழுதும்
    ஏகாந்தமாய்
    சுமந்த கனவுகள்
    காற்றில் தெறித்துச்
    சிதறும் தீப்பொறியாக
    எனக்குள்
    உள்ளம் முழுதும்
    உயிர்வலி..!

    ஏடு பிடித்திடாத
    இந்தச் சிறுகரங்கள்
    இயந்திரம் பிடிக்க
    அநீதியின் கைதியாய்
    மனவலியின்
    அத்தனை அழுத்தமும்
    கண்களில்
    கனலாய் தெறிக்க
    போதையில் தடுமாறித்
    திரியும் தந்தைக்கோ
    தான் பெற்ற
    எந்தன் முகமும்
    நினைவிலில்லை..!

    அன்னையவள்
    ஈன்றெடுக்கும் இயந்திரமா..?
    தான் பெற்ற
    பிள்ளைகளே குடும்பத்தைத்
    தாங்கும் சுமைதாங்கியா?
    மேடை நாடகமுமல்லயிது
    திரையரங்கக் காட்சியுமல்லயிது
    பாதையோரப் பாடசாலை இது.
    பசிக்கும் வயிற்றுக்கும்
    துடிக்கும் மனத்துக்கும்
    இடையே போராடும்
    ஒரு போராளியாய்
    நானொரு
    குழந்தைத் தொழிலாளி..!

    முன் செய்த
    பாவ வினையா?
    மூத்தோர் இட்ட
    பழிதீர்க்கும் சாபமா?
    புகையிலைக்கும்
    மது தரும்
    மயக்கத்துக்கும்
    நிலை தடுமாறி
    நித்தம் புயல்
    காணும் குடும்பமிது.!
    நித்தம் தள்ளாடுது.

    எனக்கு இந்த
    உலகம் வெறுக்குது
    வாழ்வும் கசக்குது
    பாசம் மறையுது
    பகையும் வளருது
    இந்த நிகழ்காலமும்
    இந்த எனது கோலமும்
    மாற வேண்டும்
    மறைய வேண்டும்
    என்னோடு
    முடிய வேண்டும்..!

    நெஞ்சுரம்
    கடிகார முள்ளாக
    நகர்ந்து அடித்துக்
    கொண்டே இருக்குது..
    கூண்டோடு கொள்ளி
    வைக்க மனம்
    தவிக்குது
    திமிறுது
    குரோதம் கண்களில்
    கொப்பளிக்குது
    இயலாமை தான்
    என்றாலும்
    முயலாமல் இருக்கலாமா?
    கூடுங்கள் தோழர்களே
    குனிந்த முதுகின்
    முதுகெலும்பே
    எதிர்க்கும்
    ஆயுதங்களாகட்டும்..!

  9. பொல்லாதவன் !

    கூழுக்கு வழி
    இல்லாதவன் நான் !
    சத்திரம் இல்லை
    சுற்றும் அனாதை
    எனக்கு !
    கும்பி கொதித்து ஆவிபோய்
    வெம்பியன் நான் !
    நெஞ்செலும்பை
    நீங்கள் எண்ணி விடலாம் !
    தெருவில் திரிந்தாலும்
    திருட வில்லை !
    விடுதலை நாட்டில்
    கூலி குறைந்த
    வேலை கிடைத்தது
    கல்லுடைத்தேன் !
    கார் துடைத்தேன் !
    பொதி சுமந்தேன் !
    பொல்லாதன் என்றென்னை
    தள்ளினார் 
    கம்பி எண்ண !
    விடுதலை நாட்டில்
    தனி ஒருவனாய்
    பல நாட்கள்,
    பட்டினி கிடந்தேன் !
    ஜெகத்தினை எரித்திடப் 
    பாரதி வரவில்லை !
    ஆயினும் பிச்சை
    எடுக்கப்
    போக வில்லை !

    சி. ஜெயபாரதன்

  10. அரசாங்க சலுகையாம்
    எல்லாமே
    இலவசமாம்
    வாய் ஓயாது
    சொன்னார்கள்
    வாய் பிளந்து
    கனவு கண்டார்கள்
    ஏழ்மைக்கு இந்த
    இலவசங்கள்
    கடவுள் தந்த
    வரப் பிரசாதமாம்
    இங்கே
    இவர்களுக்கு
    நானும் தான்
    இறைவன் தந்த
    இலவசம்
    இருந்தும் ஏனோ
    அதனால் தானோ
    பெற்றவருக்குக்
    கருணையில்லை
    இலவசம்
    இவர் வசம்
    சம்பாதிக்கும்
    எந்திரமாச்சு
    சாட்டையடி
    வார்த்தைகள்
    நெஞ்சோடு
    தழும்புகளாச்சு
    இலவசத்தை
    விற்றே பழகிப்
    போன மனங்கள்
    பேரம் பேசிப்
    போனதைக் கேட்டதும்
    அடிமைச் சங்கிலியை
    அறுத்தெறிய
    வைராக்கிய மனம்
    முண்டியடித்தது
    நாளை வருவானாம்
    இலவசத்தைப்
    பெட்டிப் பணம்
    கொடுத்துக் எடுத்துச்
    செல்வதற்கு –
    அவனோடு சேர்ந்து
    நானும்…இலவச
    இணைப்பாம்..!
    யாரைப் பார்த்து
    கல்லெறிவது
    காத்திருக்கிறேன்…!

  11.      யார் பையன் என்று கேட்காதிர் 
         பெற்றவளோ இங்கு இல்லை 
         என் தந்தைக்கு என்னைப்பற்றி கவலை இல்லை.
         என் பசியினை போக்க யாரும்மில்லை !

        பிழைப்புக்காக  காகிதம் கோணியில் 
         எடுப்பேன்   கம்பி  நுனியில் 
         சேர்ப்பேன்  மாலை முழுதும் 
         அதனை விற்பேன் என் பசி போக்க !

         இந்த சமுதாயம்  என்ன செய்தது 
         நான் முறைத்துப் பார்த்தால் 
         உங்களால் என்ன செய்ய முடியும்,
         என் வறுமையினை தீர்க்க முடியும்மா !

        என் பிழைப்பே  தெருவோரம் 
        என்ன வழி  என் வாழ்கைக்கு 
         சற்றே எங்களை நினைத்திடுவிர்  
         எங்களுக்காக உதவிகரம் நீட்டிடுவிர் !   

       ரா.பார்த்தசாரதி 

  12. கோணிப்பை
    நிறைய குப்பை..!
    இந்திய மண்ணில்
    அதற்கு எங்கும்
    பஞ்சமில்லை
    தெருவோரத் தொட்டி
    தான் அள்ள அள்ள
    அட்சய பாத்திரம்..!
    குப்பைத் தொட்டி
    வழிய வழிய
    குப்பையை மட்டுமே
    கண்டவன் நான்
    காலைக் கனவுக்குள்
    சோறு கண்டு
    கண் விழித்தேன்
    குடல் அமிலம்
    பற்றி எரிய
    என் தேவையெல்லாம்
    இப்போது
    கொதிக்கும்
    அமிலப் பானையை
    அடக்க ஒரு
    பிடி சோறு..!

  13.                   சிறப்புறும் வாழ்வு …..!!!
                        ““““““““““““““““““`
    பார்வையிலே காட்டமேன் பாலகனே சொல்லடா 
    சோர்ந்தாயோ நீயும் சுமைதூக்கி – நேர்வழியில் 
    சென்றால் பயமில்லை செல்வா ! கலங்காதே 
    நன்றாய் சிறப்புறும் வாழ்வு 

  14. பாதை காட்டுவீர்

    நேர்வழி மீறி, நெறிதவறி வீழ்ந்தவன்;
    கூரறிவு உண்டு குணமுடன் – சீரறிவு 
    நான்பெற காட்டுவீர் நற்பாதை சோதரரே ! 
    மேன்மை யுறவேண்டும் மீண்டு.

    சி. ஜெயபாரதன்

  15.        படக்கவிதைப்போட்டி. எம். ஜெயராமசர்மா … மெல்பேண்

            ஆர்கொடுத்து விட்டார் !
         ————————————

        விபரம் அறியாப் பருவத்தில்
        வெறித்து நிற்கும் பார்வை
        அவனுடய வாழ்வில் 
        ஆர்கொடுத்து விட்டார் 

  16.        படக்கவிதைப்போட்டி.   எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண்

          சூடேறும் பிள்ளை !
       ——————————
      பெற்றுநிற்பார் பிள்ளையை
      பேணிநிற்க நினையார்கள்
      சுற்றிநிற்கும் சூழ்நிலையால்
      சூடேறும் அப்பிள்ளை !

  17.    படக்கவிதைப்போட்டி  எம். ஜெயராமசர்மா … மெல்பேண்

          மன்னன்மகன் !
      ————————-
        எல்லோரும் இந்நாட்டு 
        மன்னர் என்றால்
        இப்பிள்ளை அப்பாவும் 
        மன்னர் அன்றோ 
        மன்னன் மகன்
         நடுவீதி நிற்பானானால்
        மக்கள்நிலை என்னாகும்
        சிந்திப் போமா ?

  18.       படக்கவிதைப்போட்டி எம். ஜெயராமசர்மா … மெல்பேண்

           வீதிநிற்க !
          ————–
        பேணீநிற்க முடியாதார்
        பிள்ளைபெறல் முறையாமா 
        பெற்றபிள்ளை வீதிநிற்க
        பெற்றவரே எங்குசென்றீர் !

  19.       படக்கவிதைப்போட்டி எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்
     
            ஒதுக்காதீர் !
           ——————
        கூழைத்தான் குடித்தாலும்
        குழந்தைகளை ஒதுக்காதீர்
        குழந்தைகளின் வாழ்வுதனை
        குழிதோண்டிப் புதைக்காதீர் !

  20.          அக்னிகுஞ்சு
    ————————-
    பிறந்துவிட்டானய்யா
    ஒரு ஆண்பிள்ளை…
    அவன் கண்ணைப்பார்
    அதில் அச்சமில்லை!
    அவன் வாழைமரமல்ல
    வெட்டித்தள்ள…
    வாழுமிடம் காக்கப்பிறந்த
    சட்டாம்பிள்ளை!

    உற்றுப்பார்த்தால்
    அவன் சின்னப்புள்ள…
    அவன் உற்றுப்பார்ப்பதைப் பார்த்தால்
    சிறுத்தப்புள்ள!

    பொறி  பறக்குது பார்
    அந்த
    முட்டத்துடிக்கும் பார்வையிலே…
    இந்த புலி பிறக்கும் வரையில்
    அதை பார்த்ததில்லை யாரும் ஊரிலே!

    இந்த கடுகுக்குள் இருப்பது
    காரமல்ல…
    வெடிக்கும் எரிமலை என்றால்
    அது மிகையுமல்ல!

    சண்டியராய் வளர்ந்தாலும்
    கவலையில்லை…
    அவன் சாதிசனம் மீது
    கையைவத்தால்
    எவருக்கும் 
    உயிர் சொந்தமல்ல!

    ஒதுங்கச்சொல்லி
    காறித்துப்ப
    அவன் எச்சமல்ல…
    பதுங்கி கில்லி
    ஏறியடித்தால்
    உயிர் பிழைப்பார்
     அங்கு எவருமல்ல!

    அதட்டி மிரட்டி
    அடக்கி வைக்க
    அவன் தொட்டாசினுங்கியல்ல…
    குண்டா தடியா
    கேட்டுக்கொள்
    அவன் துளைக்கும் தோட்டா
    தெரியுமல்ல!

    விட்டுப்போங்கடா
    ஒதுக்கிவச்சி
    அவன் வளரும்பிள்ளை…
    உரசவேண்டாம்
    அவன் தீக்குச்சி
    எமன் வருவான்
    உங்களை அள்ள!

    தா தா
    என்று மாமுல் கேட்டால்
    என்ன செய்வான்
    வளரும்பிள்ளை…
    தாதாவாக
    வளர்வதன்றி
    வேறு வழியிமில்லை!

  21. இறுதிப்பாராவில் ஒரு சிறுதிருத்தம்.

    தா தா 
    என்று மாமுல் கேட்டால்
    என்ன செய்வான்
    உழைக்கும்பிள்ளை…
    தாதாவாக
    வளர்வதன்றி
    வேறு வழியுமில்லை!

  22.                                                உறுத்தல்

                                           கிழிந்த சட்டையுடன்
                                            மழிக்காதமுடியுடன்
                                             குப்பை அள்ளும்
                                              சிறார்களையும்
                                               டீக் கடையில்
                                                கிளாஸ்கழுவும்
                                                 சிறார்களையும்
                                                  கையில் ஸ்பானருடன்
                                                    சைக்கிள் கடையில்
                                                     வேலை பார்க்கும்
                                                       சிறார்களையும்
                                                        பார்க்கும்போது
                                                         காரில் பள்ளிப்
                                                          போகும் மகன்
                                                          நிழலாடி உறுத்தல்தருகிறது 

                                    சரஸ்வதி ராசேந்திரன்
                                                               

                                                

  23. கைதூக்கி விடு

    நேர்வழி மாறி நெறிதவறி வீழ்ந்தோர்க்கு
    கூர்மதி உண்டு, குணமுண்டு – பார்மீதில்
    கல்லுடைத்துக் காய்ந்திடும் காளையரும் மேல்வர 
    இல்லையோ எங்களுக்கு வாய்ப்பு ?

    சி. ஜெயபாரதன்

  24. இளங்கன்று  

    பயம் அறியாதாம் இளங்கன்று !
    பழமொழி அது ! 
    பையனுக்குத் தெரியுது பயம்
    பார்வையிலே !
    பட்டினிப் பேய் முடக்குது
    எட்டு நாளாய் !

    சி. ஜெயபாரதன் 

  25. யார் பையன் ?

    அடிக்காதே ஐயா ! நான் 
    படிக்காதவன் !
    விரட்டாதே ஐயா ! இது
    விடுதலை நாடு !
    துரத்தாதே ஐயா ! என்னால்
    தொல்லை இல்லை !

    சி. ஜெயபாரதன்

  26. தமிழகத்தின் ஒருமுகம்

    பரட்டைத் தலை மயிர் !
    மருட்சிப் பார்வை !
    அழுக்குச் சட்டை !
    அனாதை முத்திரை !
    பள்ளிக் கூடம் செல்லாமல்
    கல்லுடைக்கும்  
    சிறுவன் !
    மாதா, பிதா இருந்தும்,  
    நாதி யற்றவன் !

    சி. ஜெயபாரதன்

  27. பித்தளைக் குவளைக்கு ஈயமேத்திப் பளபளக்க
    கூலிக்கு மாரடிக்கும் குடும்பத் தொழிலிது
    வேகாத வெய்யிலில் வயிற்றோடு போராட்டம்
    இங்கென்ன வேடிக்கை உங்களுக்கு?

  28. சிறைவாசம் !

    தானாகக் கிடைக்க வில்லை
    வயிற்றுக்குச் சோறு !
    வீணாகப் போனதென் பொழுதுகள்
    வேலை யின்றி !
    நானாகத் துணிந்தேன் திருட !
    மாய விளக்கின்றி
    அதிர்ஷ்ட தேவதை பளிச்சென
    எதிர்நின்றாள் !
    கம்பி எண்ணப் போய் எனது
    கும்பி நிறைந்தது !

    சி. ஜெயபாரதன்

  29. குறும்புத்தனம் மின்னும் கண்களில்

    எண்ணிலடங்கா தேடல்கள் !

    சிவந்திருக்கும் உதட்டோரம்

    எட்டிப்பார்க்கும் நாவும்

    அழகாய் சொல்லுதே

    உந்தன் சுட்டித்தனங்களை!

    பரட்டையாய் காற்றில் அலைபாயும்

    உந்தன் கேசமும் அழுக்கேறிய ஆடையும்

    அப்பட்டமாய் சொல்கிறதே உந்தன் வறுமையை !

    வறுமையை உடைத்தெறிய

    கோடாரியும் மண்வெட்டியும்

    கையிலெடுத்தாயோ ?

    கல்விக்கண் திறந்த காமராசர்

    மீண்டும் பிறந்து வந்தாலன்றி

    கல்வி என்பது பணம் படைத்தோரின்

    சொத்தாகிப் போய்விடுமோ எனும் கவலை

    உனை ஆட்கொண்டு விட்டதோ – கல்வி

    எட்டாக்கனியாகிடுமோ என கவலைப்படுகிறாயோ ?

    எத்தனையோ இலவசங்கள்

    வரிசை கட்டி வந்தாலும் – உழைத்தாலன்றி

    அடுத்த வேளை உணவென்பது

    கேள்விக்குறியான போது -நானும்

    இங்கே குழந்தை தொழிலாளி ஆனதில்
    பிழை என்ன இருக்கிறதென்று கேட்கிறாயோ ?

  30. கிடைத்த வரம் கல்வியா செல்வமா?

    சிட்டாக வேபறந்தேன் கோயிலுக்கு அங்கு 
           சிலையாக நின்றிருந்த கடவுளிடம்
    திட்டாமல் தேம்பாமல் வேண்டினேன் பொங்கித்
           தவிக்கின்ற மனமுருகக் கெஞ்சினேன்
    பட்டாசு கம்பெனியில் என்குடும்பம் பட்டம் 
           படிக்கின்ற ஆசையில் நானொருவன்
    எட்டாத ஓர்கனவாய் ஆகிடுமோ என்றும்
           ஏழையாய் என்வாழ்வும் மாறிடுமோ

    கட்டாயம் எனக்குபதில் சொல்லிவிடு நீயும் 
           கடவுளென்றால் நல்லவழி காட்டிவிடு
    தட்டாமல் அக்கடவுள் என்கனவில் வந்தார் 
           தக்கதொரு தீர்வுதனை சொல்லி(ச்)சென்றார்
    திட்டாக கோணியொன்றில் மூடியதை நீயும் 
           திறந்திட்டால் அங்கிருக்கும் உன்வாழ்க்கை
    கட்டாக புத்தகம்கு விந்திருந்தால் கல்வி
           கனமான எந்திரம்என் றால்செல்வம் 
    கட்டாயம் ஏற்படும்வ ரம்அளித்தேன் என்றார் 
           கவிஞர்காள் சொல்லுங்கள் என்னவரம்?

  31.     படக்கவிதைப்போட்டி.   எம். ஜெயராமசர்மா … மெல்பேண்

          எப்படித் தெரியும் !
       —————————–
    என்னவோ சொல்ல
    எண்ணுது மனம்
    எதிர்பினைச் சந்திக்க
    இருக்குது திறம்
    என்பதைக் காட்டிடும்
    இவனது முகம்
    இவனது பின்னணி
    எப்படித் தெரியும் !

  32.      படக்கவிதைப்போட்டி எம். ஜெயராமசர்மா … மெல்பேண்
     
           முறையாமோ !
        ———————–

        மாடிகளும் எழுந்திடலாம்
        கோடிகளும் வந்திடலாம்
        மனமதிலே வக்கிரங்கள்
        வந்திடுதல் முறையாமோ

         மானமற்ற மனமுடையார்
         வாழ்ந்திருந்தும் என்னபயன்
         வாழநிற்கும் பிஞ்சுகளை
         வதைத்துநிற்றல் முறையாமோ !
       

  33.      படக்கவிதைப்போட்டி எம். ஜெயராமசர்மா … மெல்பேண்

          பார்க்கிறது !
       ——————–
      பெற்றவரும் விட்டுவிட்டார்
     பிஞ்சுமனம் தவிக்கிறது
     நாளைசெய்வ தென்னவென்று
     நாலுபக்கம் பார்க்கிறது

      ஆசைகொண்டு பிள்ளைபெற்றோர்
     அரவணைக்க மறுத்ததனால்
      ஆதரவு தேடியது
      அனைவரையும் பார்க்கிறது !

  34.  அஞ்சான்

    அஞ்சவில்லை  நான்  என்றும்
        அடுத்தவரை அண்டவில்லை
    கெஞ்சி   வாழ  மாட்டேன் என்றும்
         கெடுதல்   செய்ய மாட்டேன்
    கிஞ்சிற்றும்பிறர்கை நோக்கேன்
           கிளர்ந்தெழுவேன் உயர்வேன்
    பஞ்சமும்  இல்லை என் வாழ்வில்
              பார்தனில் உயர்ந்திவேன்
    நெஞ்சம் நிறையும் நேர்மை உழைப்பில்
               நல்லவன் வாழ்வான் நம்பு
    தஞ்சம் அளிப்பாள்  படைத்தவளே 
              தன்னம்பிக்கை  சிறுவன் நான்

    சரஸ்வதிராசேந்திரன்
         

  35. நல்வழி…

    பார்வையில் கோபம் வேண்டாமே
         பாவப் பட்ட பாலகனே,
    தீர்வு வராதே வன்முறையில்
         திருந்தி வாழ்ந்திடு நல்வழியில்,
    வேர்வை சிந்தி உழைத்திடுவாய்
         வெல்லும் வழிதான் வந்திடுமே,
    நேர்மை என்றும் வழியாகும்
         நிலைத்த வாழ்வை நீபெறவே…!

    -செண்பக ஜெகதீசன்…

  36. கொடுஞ்சமர் தகர்த்த எந்தன் 
    ==குடும்பமோ சேதாரம் 
    கடுந்துயர் கொண்டே  நித்தம் 
    ==கரைசேர போராடும் 
     நடுத்தெரு வாழ்வில் இரவில் 
    ==நானொன்றும் கூடாரம் 
    படுத்திடும் பாடு அதற்கு 
    ==படைத்தவனே ஆதாரம்! 

    மெய்யன் நடராஜ் 

  37. Padak kavithai..09வஞ்சக உலகமே!
    **********************

    என்பிறப்பை இழிவென்று
    மலர்ந்தன்றே என் அன்னை
    வீசிச்சென்றாள் மறைவாக
    நானின்னும் மறக்கவில்லை..!

    பெயருக்கு அர்த்தமொன்றை
    தரவேண்டிய தந்தையோ,
    தவிக்கவிட்டுப் போனதாலே
    அவள் நிலை அன்றதுவாம்..!

    பெற்றோர் தெரியாத பிள்ளை
    இவ்வுலகுக்குத் தேவையில்லை என
    மற்றோர் என்னை தூற்ற
    என்நிலை  காரணமானது..!

    ஓடிவிளையாடிடும் வயதினிலே
    எல்லோர்க்கும் இருக்கும் துள்ளலோ
    எண்ணிப்பார்க்க முடியாத
    எட்டாத கானலானது…!

    “பள்ளிப் பருவம் எதற்குனக்கு
    தள்ளி நில்லு நீ” என்று
    துளி கூட உள்ளமில்லா
    மனங்கள் என்னை தூற்றின…!

    போலி உலகை கண்டு ஓய்ந்து
    கல்லாய் மாறின உள்ளமதில்
    இனி கருணைக்கு இடமில்லை
    இனி உறங்கப் போவதில்லை…!

    வாழவிடாது தூற்றிய
    உலகுக்குப் பாடம் கற்பிப்பேன்….
    வறுமைக் கோட்டைக் கடக்க
    மனதில் உறுதி கொள்வேன்..!

    வஞ்சக உலகம் வேண்டாம்
    வெறுக்கின்றேன் நான் உன்னை….
    வஞ்சக உலகம் வேண்டாம்
    வெறுக்கின்றேன் நான் உன்னை…!!!!

    துஷ்யந்தி.

  38. சீரோடுயருவேனொரு நாள்!

    மூளை வளர்ச்சி முடிவுறும் காலத்தில்
    மூதுரை படிக்கும் மூதறிவாளரும் அதிர
    மூர்க்கமாய் குத்தும் வாழ்வின் முரண்பாடு
    மூழ்கிடேன்! விடாது முயல்வேன்! முயல்வேன்!
    என்னைப் போல் எத்தனையாயிரம் சிறுவர்
    சின்னா பின்னமாகும் வாழ்வுடன் சீரழிகிறார்
    சீர்தூக்க வராது எம்மைப் புகைப்படமா!
    சீவிதத்தில் சீரோடு உயருவேன் பாருங்கள்!

    பா ஆக்கம் 
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    24-4-2015

  39. காத்திருப்பேன் காலத்திற்காய்

    வண்ணம் பூசி வரைந்து பல
    எண்ணக் கனவுகளோடு வாழ்ந்தோம் அன்று
    கண்ணிறைந்த வாழ்வு சிதறி இன்று
    உண்ண உணவிற்கே திண்டாடும் நிலை
    உதட்டில் மட்டும் காயம் எம்
    உயிர் தப்பியது அபூர்வம்! ஒரு
    ஊர்க் கோடியில் கோணித் திரையுள்
    அகதி வாழ்வு இது கொடுமை!

    கூனிக் குறுகி ஒடுங்கிய வாழ்வு!
    ஏனிந்த நிலையிது நீதியே இல்லை!
    காரணகர்த்தாக்களை உருத் தெரியாது அழிக்க
    கருவெடுக்கிறது கொலை வெறி நெஞ்சில்.
    அகதி நான் எனது நாட்டிலேயே!
    தகுதியற்ற நிலையிது காத்திருப்பேன் காலத்திற்காய்.
    காட்சிப் பொருளாக நாமின்று படத்தில்.
    ஆட்சி, அரண்மனைக்கு அடிபடுகிறாரின்று பலர்!

    பா ஆக்கம்
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    24-4-2015

  40. பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் பேசுமே.                                                      பேசும் வார்த்தை நல்லவை என நினைத்தோம். ஆனால்                                                   பேசியதோ அல்லவை என கண்டோம்.  தம்பி அவன்                                                         சேரியிலிருந்து வந்தவனோ சேராத இடத்தில் சேர்ந்தவனோ.                                       கல்வியை கற்றுவிட்டால் சேருமிடம் நன்றே.  ஐயன்மீர்                                                    யாராகிலும் சேர்த்தணைத்துக் கொள்வீர்.  சேர்த்த புண்ணியம்                                   யாதாகிலும்,  உடன் புகழ் பெறுவீரே.                                                                                            (மன்னிக்கவும், இது என் கன்னி முயற்சி)

  41.  எல்லா கவிதைகளுமே நன்றாக உள்ளன. குறிப்பாக, சுரேஜமி மற்றும் ஜெயராஜ சர்மா அவர்களின் கவிதை அற்புதம்

  42. யார் மீது கோபம்

    சுட் டெரிக்கும் பார்வை
    சூரியனை கருக்கும் கூர்மை
    யார் மீது கோபம் உனக்கு

    மற்ற சிறுவருக்கெல்லாம்
    செல்வத்தோடு சீருடையும் தந்து
    பள்ளிச் செல்ல வைத்துவிட்டு
    பாதையோரப் பறவையாய் 
    உன்னை மட்டும் படைத்தானே
    அந்த பரமன்  மீதா?

    எத்தனைதான் உழைத்தாலும்
    ஏற்றம் எதுவும் காண இயலாது
    சிந்தையது கலங்கி சீரழிக்கும்
    குடிக்குள் குடிமூழ்கிப் போனானே
    அந்த தந்தை மீதா

    சிறுவாட்டு பணத்தையெல்லாம்
    சீட்டு கம்பெனியில் தொலைத்து
    சீரழிந்து  சிதறிப் போனாளே
    செல்ல அம்மா அவள் மீதா

    அந்நியர்கள் இங்கிருந்து அகன்று
    அறுபதாண்டுகள் ஆகியும் கூட 
    சொந்த மைந்தர்களை தினம்
    சோற்றுக்கு அலைய வைக்கும்
    சுதந்திர நாட்டின் மீதா

    சின்னஞ் சிறுவரெல்லாம்
    சிதைக்கப்பட்ட சிற்பங்களாய்
    எங்கும் அலைவது கண்டும்
    சங்கடப்படாத சமூகத்தின் மீதா

    வாழவழி தெரியாத உனக்கு
    ஏதும் செய்ய இயலாது
    புகைப்பட மெடுத்தவர் மீதா
    கவிபாட வந்த எங்கள் மீதா

    யார் மீது கோபமாயினும்
    நாளையது நிச்சயம் மாறும்
    விடியல் உன் இருள் மீது  
    வேண்டிய வெளிச்சம் பாய்ச்சும்
    நம்பிக்கையோடிரு 
    நாளைய உலகம்
    உனக்காகவே சுழலும்!

  43. கண்மணி தீரம் கொள்க
    விழிகள் நிறைக்கும் ஏக்கம்
    மொழி சொல்வதோ துயரம்…..
    எழுத்தாணி இருந்திருக்கும்
    பழுதில்லாப் பிஞ்சுக் கைகளோ
    சாந்தகப்பை (சாந்து+ அகப்பை) ஏந்தி…….
    கோலம் கொடுத்த கொடுமைச் சமுதாயம் !
    ஏலம் போனதோ மனிதாபிமானம்? –அவன்
    நெஞ்சின் உறுதி நீங்கு முன்னே
    துஞ்சல் நீக்கும் வழி சொல்வோம்!
    கல்விக் கண்கள் திறந்திடவும்
    இல்லாமைப் பேய் ஒழிந்திடவும்!
    சின்ன வயிறு நிறைந்திடவும்
    அன்னமிட்டு உதவிடுவோம்!
    சேற்றிலும் செந்தாமரைகள்
    வீற்றிருக்கும் திடமாய் நம்புவோம்!
    நல்லதோர் எதிர்காலம்
    வெல்வான் இவன் !
    கண்களின் ஈரம் நீங்கும்
    கண்மணி தீரம் கொள்க!
    இன்று போல் நாளை அல்ல
    நன்றொரு மாற்றம் காண்பாய்
    வென்றிடு உன் கனாக்கள்
    என்றென்றும் தளர்ந்திடாது …

    புனிதா கணேசன் (இங்கிலாந்து) 24.04.2015

  44.    படக்கவிதைப்போட்டி. எம். ஜெயராமசர்மா … மெல்பேண்
                  பிஞ்சுமனம் !
                ——————-
         பெற்றவரைக் காணாத பிஞ்சுமனம்
         சுற்றுமுற்றும் பார்க்கிறது துணைநாடி
         அற்பதனம் மிக்கவந்த பெற்றோரோ
         சொற்பசுகம் பெற்றுவிட்டுச் சென்றுவிட்டார் !

  45. தூண்டிலொன்றால் நாளைத் தொடங்குகிறேன்; காகிதத்தை
    நோண்டியன்றோ வாழ்வைநான் நூற்கின்றேன் – ஆண்டவன்றன்
    தாள்வேண்டி மாந்தர் தமதின்னல் தீர்க்குங்கால்
    தாள்வேண்டி வாழ்கின்றேன் நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.