Animal Farm Pic

-மேகலா இராமமூர்த்தி

சனநாயகப் பொதுவுடைமைவாதி (Democratic Socialist), இங்கிலாந்தின் சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் (Member of Independent Labour Party), பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகங்கள் கொண்ட ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய ’விலங்குப் பண்ணை’ (Animal Farm) என்னும் புதினம், இரஷ்யச் சர்வாதிகாரத்தை (Soviet Totalitarianism) பற்றியது. 1917ஆம் ஆண்டு ஏற்பட்ட இரஷ்யப் புரட்சி, அதனைத் தொடர்ந்துவந்த தொழிலாளர் கட்சியின் (Bolshevik Party) ஆட்சி, குறிப்பாக ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தலைமையிலான ஆட்சிமுறை ஆகியவை குறித்த உருவகங்களை (allegories) உள்ளடக்கியது இப்புதினம். தாம் சொல்லவிரும்பியதை மனிதக் கதாபாத்திரங்கள் வாயிலாகச் சொல்லாமல் பண்ணை விலங்குகளை உருவகங்களாக்கிச் சுவையாகச் சொல்லியிருக்கின்றார் ஆர்வெல். 1923ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற சிறந்த 100 புதினங்களுள் ஒன்றாக டைம் இதழால் (Time Magazine) தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியது இப்புதினம்.

இனி விலங்குப் பண்ணை புதினத்தைச் சுருக்கமாக அறிந்துகொள்வோம்.

’மேனர்’ பண்ணையிலிருந்த (Manor Farm) விலங்குகளை அவற்றின் உரிமையாளரான திரு. ஜோன்ஸ் (Mr. Jones) மோசமாக நடத்துகின்றார். அதிகமான வேலை, குறைவான உணவு என்று அவை துன்புறுத்தப்படுகின்றன. அவற்றினிடையே வாழ்ந்துவருகின்ற, ’பழைய மேஜர்’ (Old Major) என்றழைக்கப்படும் புத்திசாலியான கிழப் பன்றியார், பண்ணையிலுள்ள விலங்குகள் அனைத்தும் மனித ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டுச் சமமாகவும் சுதந்திரமாகவும் வாழும் ஒரு சமூகத்தைப் படைக்கவேண்டும் எனக் கனவு காண்கின்றார். அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் பண்ணை விலங்குகளை ஈடுபடுத்த வேண்டும் எனும் விருப்பங்கொண்டு அவ்விலங்குகளை அழைத்து,

”தோழர்களே! மனிதன் மட்டுந்தான் எதனையும் உற்பத்தி செய்யாமல் அனைத்தையும் நுகரும் ஒரே படைப்பு. அவனால் பால்தர இயலாது; முட்டையிட முடியாது; காளைகளைப்போல ஏருழ இயலாது; விரைந்தோடி முயல்களைப் பிடிக்க முடியாது; இப்படி எந்தத் திறனும் இல்லாத அவன்தான் எல்லா விலங்குகளுக்கும் முதலாளியாக இருக்கின்றான். உழைப்பும் விளைச்சலும் நம்முடையது; ஆனால் அதன் பயனை ஜோன்ஸும் அவனைச் சார்ந்தோரும் அனுபவிக்கின்றனர். இந்தக் கடின உழைப்பால் நாம் நம் வாழ்க்கையை முழுமையாகக்கூட வாழமுடிவதில்லை. நமக்கு எல்லா மனிதர்களும் எதிரிகள்; எல்லா விலங்குகளும் தோழர்கள்” என்று கூறி அவற்றிடம் எழுச்சியூட்டுகிறார்.

வயது மூப்பின் காரணமாக வீர உரையாற்றிய ஒருசில நாள்களிலேயே பழைய மேஜர் மரித்துவிடுகிறார்; எனினும் அவர் ஊட்டிய சுதந்திர உணர்வு அனைத்து விலங்குகளிடத்திலும் கிளர்ந்தெழுகின்றது.

அப்பண்ணையில் மிகவும் சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் வாய்ந்தவையாகக் கருதப்படும் பன்றிகளான நெப்போலியன் (Nepolean), ஸ்னோபால் (Snowball), ஸ்க்வீலர் (Squealer) ஆகிய மூவரும் சேர்ந்து பழைய மேஜரின் கருத்துக்களை ஒன்றுதிரட்டி ஓர் முழுமையான சிந்தனைத் தொகுப்பாக்கி அதற்கு விலங்குவாதம் (Animalism) என்று பெயர்சூட்டினர்.

பண்ணை முதலாளி ஜோன்ஸ் குடிப்பழக்கம் உள்ளவன். ஓரிரவில் நன்றாகக் குடித்துவிட்டுப் பண்ணைக்கு வந்தவன், விலங்குகளுக்குத் தீனிபோட மறந்து அவற்றைப் பட்டினி போட்டுவிட்டான்; அதனால் சீற்றம்கொண்ட விலங்குகள் பண்ணையில் உணவு வைக்கப்பட்டிருக்கும் கிடங்கிற்குள் நுழைய முற்படுகின்றன; விலங்குகளை விரட்டுவதற்குப் பண்ணையாட்களுடன் ஜோன்ஸ் முனைய, ஏற்கனவே ஓல்டு மேஜரால் சுதந்திர உணர்ச்சிபெற்றிருந்த அவ்விலங்குகள் கிளர்ந்தெழுந்து, ஜோன்ஸையும் அவனது பண்ணையாட்களையும் பண்ணையைவிட்டே விரட்டிவிடுகின்றன.

ஜோன்ஸின் மேனர் பண்ணை இப்போது விலங்குகள் வசமாகிவிட்டது. ஜோன்ஸின் பிள்ளைகள் படித்துவிட்டுக் குப்பையில் தூக்கியெறிந்திருந்த ஆங்கில அரிச்சுவடிப் புத்தகத்தை எடுத்துப் படித்ததனால் ஏற்கனவே ஆங்கில எழுத்துக்களை அறிந்துகொண்டிருந்தனர் நெப்போலியனும் ஸ்னோபாலும்.

பண்ணையைவிட்டு ஜோன்ஸும் அவனது ஆட்களும் விரட்டப்பட்டுவிட்ட சூழலில் இப்போது பண்ணைக்குப் பெயர்மாற்றும் படலம் தொடங்குகின்றது. நெப்போலியன் கருப்பு வெள்ளைநிற வண்ணங்களைப் பானைகளில் எடுத்துக்கொண்டு வர, ஸ்னோபால் ’மேனர் பண்ணை’ எனும் பெயரை அழித்துவிட்டு ’விலங்குப் பண்ணை’ என்று எழுதுகின்றான். அத்தோடு விலங்குப் பண்ணையிலுள்ள விலங்குகள் பின்பற்றவேண்டிய ஏழு கட்டளைகளும் சுவரில் எழுதப்படுகின்றன. அவை:

  1. இரு கால்களில் நடக்கும் எதுவாக இருந்தாலும் அது நமக்கு எதிரி.
  2. நான்கு கால்களில் நடப்பது அல்லது சிறகுகள் கொண்டது நமக்கு நண்பன்.
  3. எந்த விலங்கும் ஆடை அணியக் கூடாது.
  4. எந்த விலங்கும் படுக்கையில் தூங்கக் கூடாது.
  5. எந்த விலங்கும் மது அருந்தக் கூடாது.
  6. எந்த விலங்கும் அடுத்த விலங்கைக் கொல்லக்கூடாது.
  7. எல்லா விலங்குகளும் சமமானவை.

விலங்குகள் கடினமாக உழைத்துத் தங்கள் உழைப்பின் பலனைத் தாங்களே அனுபவிக்கின்றன. நெப்போலியனும் ஸ்னோபாலும் தலைமைப் பொறுப்புகளை ஏற்கின்றனர்; ’பாக்சர்’ எனும் குதிரை கண்மூடித்தனமான விசுவாசத்தைத் தலைமைப் பொறுப்பிலிருக்கும் பன்றிகளிடம் காட்டுகின்றான். பண்ணையிலுள்ள ஆடுகள், ”நான்கு கால்களில் நடப்பது நமக்கு நண்பன்; நெப்போலியன் எதையும் சரியாகத்தான் செய்வார்” என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அனைத்து விலங்குகளுக்கும் கல்வி கற்பிக்கப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான விலங்குகள் கற்பதில் ஆர்வம் காட்டாது எழுத்தறிவற்றவையாகவே இருக்கின்றன.

பண்ணையின் பழைய முதலாளியான ஜோன்ஸும் வேறுசில பண்ணை முதலாளிகளும் சேர்ந்து மேனர் பண்ணையைக் கைப்பற்றுவதற்காக விலங்குகளோடு போரிடுகின்றனர்; மாட்டுக்கொட்டகையருகே நடைபெற்ற அப்போரில் (Battle of the Cowshed) நெப்போலியன், ஸ்னோபால் தலைமையில் போரிட்ட விலங்குகள் வெற்றிபெறுகின்றன. அதனால் நெப்போலியனும் ஸ்னோபாலும் நாயகர்களாகக் கொண்டாடப்படுகின்றனர்.

நெப்போலியன், ஸ்னோபாலிடையே யார் தலைமைப் பொறுப்பில் இருப்பது எனும் அதிகாரப்போட்டி உருவாகின்றது. ஸ்னோபால் பண்ணைக்கு அருகில் காற்றாலை (Windmill) கட்டவேண்டுமென ஆலோசனை கூறுகின்றான்; அதன்மூலம் மின்சாரத்தை உற்பத்திசெய்து எந்திரங்களை இயக்குவதன் வாயிலாக விலங்குகளின் உடலுழைப்பைக் குறைக்கலாம் என்பது அவனது அறிவார்ந்த – காலத்துக்கேற்ற திட்டம். ஆனால் ஸ்னோபாலின் அறிவும் திறனும் நெப்போலியனுக்குப் பிடிக்கவில்லை; ஸ்னோபால் உடனிருந்தால் தனக்குப் போட்டியாகவும் – தலைவலியாகவும் இருப்பான் என்றெண்ணித் தான் இரகசியமாக வளர்த்துவந்த நாய்களை ஏவி ஸ்னோபாலைப் பண்ணையைவிட்டுத் துரத்தச் செய்கிறான்; ஸ்னோபால் ஓடி மறைந்துவிடுகின்றான்; அதன்பின்னர் அவன் பண்ணைக்குத் திரும்பவில்லை.

நெப்போலியன் தனிப்பெரும் தலைவனாகின்றான். காற்றாலை கட்டவேண்டும் என்று இப்போது அவன் விலங்குகளுக்கு அறிவுறுத்திக் கட்டச்செய்கிறான். ”இரு கால்களில் நடக்கும் எதுவாக இருந்தாலும் அது நமக்கு எதிரி” எனும் விதியை மீறி நெப்போலியன் மனிதர்களுடன் இணைந்து வணிகம் செய்யத் தொடங்குகின்றான்.

நெப்போலியனும் பிற பன்றிகளும் நல்ல உணவுகளைத் தாம் அதிக அளவில் எடுத்துக்கொள்ள, மற்ற விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. நெப்போலியனுக்கு விசுவாசமான நாய்கள் மற்ற விலங்குகளின் கண்ணெதிரிலேயே பல சிறிய விலங்குகளைத் தாக்கிக் கொல்கின்றன.

நெப்போலியனின் வலக்கரமாக விளங்கிவருபவனும், பேச்சில் வல்லவனுமான ஸ்க்வீலர், ’நெப்போலியன் எது செய்தாலும் அது சரியாகவே இருக்கும்’ எனும் பரப்புரையை மற்ற விலங்குகளிடத்தில் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றான்.

நெப்போலியன் கடவுளைப் போல அனைத்து விலங்குகளாலும் வணங்கப்படும் நிலைக்கு உயர்கின்றான்; பன்றிகள், விலங்குகளுக்கென உருவாக்கப்பட்ட கட்டளைகளை வெளிப்படையாகவே மீறுகின்றன. பண்ணை மீண்டும் மனிதத் தாக்குதல்களை எதிர்கொள்கின்றது; எனினும் விலங்குகள் வெற்றிபெறுகின்றன; நெப்போலியனே தலைமைப் பொறுப்பில் நீடிக்கின்றான்.

நெப்போலியனின் விசுவாசியான ’பாக்சர்’ அதிக வேலைப்பளுவால் கழுத்து முறிந்து கீழேவிழுகின்றான்; அவனை நெப்போலியன் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புவதாகச் சொல்லிவிட்டு இறைச்சிக்காக விற்றுவிடுகிறான்; சில நாள்கள் கழித்து பாக்சர் மருத்துவமனையில் அமைதியாக இறந்ததாக நெப்போலியனின் பரப்புரையாளன் ஸ்க்வீலர் விலங்குகளிடம் பொய்யுரைக்கின்றான்.

அதிகாரமற்ற சாதாரண விலங்குகள் அதிக உழைப்பைத் தருமாறு வற்புறுத்தப்படுகின்றன; எனினும், ஜோன்ஸிடம் இருந்ததைவிட இப்போது தம் வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருப்பதாக ஸ்க்வீலரால் நம்பவைக்கப்படுகின்றன; நெப்போலியனும் அவனுக்குத் துதிபாடும் பன்றிகளும் கொண்டாட்டங்களில் திளைக்கின்றனர். பண்ணைகளில் விளைச்சல் சரியில்லாமல் போனாலோ – களை மண்டினாலோ – வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ பண்ணையின் விளைநிலங்களில் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக உலவும் ஸ்னோபாலின் சதிச்செயல்தான் அதற்குக் காரணம் என்று பரப்புரை செய்யப்படுகின்றது.

ஆண்டுகள் ஓடுகின்றன. விலங்குகளின் கருத்துச் சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டுவிடுகின்றது. நான்கு கால்களில் நடந்துகொண்டிருந்த பன்றிகள் இரண்டு கால்களில் நடக்கத் தொடங்குகின்றன (அதாவது மனிதர்களைப்போல் மாறிவிட்டன). விலங்குப் பண்ணையின் ஏழு கட்டளைகளும் அழிக்கப்பட்டு, “எல்லா விலங்குகளும் சமமானவை; ஆனால் சில விலங்குகள் மற்றவற்றைவிட அதிகச் சமமானவை” (எல்லா விலங்குகளும் சமமாகத் தோன்றலாம்; ஆனால் சமம் அல்ல என்பதே இதன் நுட்பமான உட்பொருள்) எனும் புதிய கட்டளை நடைமுறைக்கு வருகின்றது. பிற பண்ணை முதலாளிகளோடு இயல்பாகப் பழகத் தொடங்கும் நெப்போலியன், இறுதியில் விலங்குப் பண்ணையை’மேனர் பண்ணை’யாக மீண்டும் பெயர்மாற்றம் செய்துவிடுகிறான். மனித முதலாளிகளின் நடத்தையே விலங்குகளின் ஆட்சியிலும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதன் குறியீடு இது!

இக்கதையில் காணப்படும் பாத்திரங்களும் அவர்கள் உருவகப்படுத்தும் நிஜ மனிதர்களும்:

மேனர் பண்ணை – புரட்சிக்கு முந்தைய இரஷ்யா (Pre-revolutionary Russia)

மேனர் பண்ணை முதலாளி ஜோன்ஸ் – ஜார் நிக்கோலஸ் II (Tsar Nicholas II (Russian monarchy))

பழைய மேஜராக வரும் பன்றி – கார்ல் மார்க்ஸ் + விளாடிமிர் லெனின் (Karl Marx + Vladimir Lenin (ideas of communism))

கிளர்ச்சி – 1917ஆம் ஆண்டு நடந்த இரஷ்யப் புரட்சி (Russian Revolution)

விலங்குப் பண்ணை (Animal Farm) – சோவியத் யூனியன்

விலங்குவாதம் (Animalism) – கம்யூனிசம் (Communism)

ஏழு கட்டளைகள் (Seven Commandments) – கம்யூனிசச் சித்தாந்தம்

நெப்போலியன் – ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin)

ஸ்னோபால் – லியான் ட்ராட்ஸ்கி (Leon Trotsky)

மாட்டுக்கொட்டகைப் போர் – பண்ணையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமைப்போர்

ஸ்க்வீலர் – அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களின் பரப்புரை (Propaganda/state-controlled media)

ஸ்னோபால் வெளியேற்றப்படுதல் – ட்ராட்ஸ்கி நாடுகடத்தப்படுதல்

பாக்சர் – உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் (Working class)

நாய்கள் – ஸ்டாலின் அரசின் இரகசியக் காவல்துறையினர் (NKVD / KGB)

ஆடுகள் – சுயசிந்தனையற்ற மக்கள்கூட்டம் (Thoughtless humans)

காற்றாலை – தொழில்மயமாதல் (Industrialization)

கட்டளைகளை மாற்றுதல் – வரலாற்று மறுசீரமைப்புவாதம் (Historical Revisionism)

”மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தா ளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்”
என்று ஜார் மன்னன் வீழ்ந்ததையும் உருசியநாட்டில் தொழிலாளர் புரட்சி வென்றதையும் இந்தியாவிலிருந்தே கொண்டாடினார் மகாகவி பாரதி.

அப்புரட்சியைத் தொடர்ந்து, ”தொழிலாளர்களுக்குச் சமத்துவம், சம உரிமை அளிப்போம்” எனும் முழக்கத்தோடு விளாடிமிர் லெனின் (Vladimir Lenin) தலைமையில் ஆட்சிக்கு வந்தது தொழிலாளர் கட்சி (Bolshevik Party); தொழிலாளர் நலனில் லெனின் அக்கறை காட்டினார்; முதலாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொழிற்சாலைகள் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. ஆனால் அரசு நியமித்த மேலாளர்கள் தொழிலாளர்கள்மீது தங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினர். காலப்போக்கில் அதிக வேலைநேரம், எதிர்ப்போர்மீது அடக்குமுறை, தண்டனை போன்றவையும் நடைமுறைக்கு வந்தன. வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டுத் தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். லெனினுக்கு எதிரான கட்சிகள், செயற்பாடுகள், செய்தித்தாள்கள் முடக்கப்பட்டன.

தமக்கடுத்துக் கட்சியின் தலைவராகத் தொடரப்போவது யார் என்பதை லெனின் வெளிப்படையாக அறிவிக்கவில்லை; தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக (General Secretary) லெனின் இருந்தபோதே 1922இல் பொறுப்பேற்றவர் ஜோசப் ஸ்டாலின். ’செம்படை’ (Red Army) எனப்படும் தொழிலாளர் கட்சியின் இராணுவப்படையின் தளபதியாகச் செல்வாக்கோடு விளங்கியவர் லியான் ட்ராட்ஸ்கி (Leon Trotsky).

லெனினின் மறைவுக்குப்பின் கட்சிக்குள் தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி ட்ராட்ஸ்கியின் செல்வாக்கைக் குறைத்ததோடு, ”கடந்த காலத்தில் ட்ராட்ஸ்கி புரட்சிக்கு எதிரானவராக இருந்தார்; அவரைச் சோவியத் யூனியனில் இருக்க அனுமதித்தால் லெனினிசமே வீழ்ச்சியடையும்; நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும்” என்று தவறான பரப்புரைகளின்மூலம் 1927இல் தொழிலாளர் கட்சியிலிருந்து அவரை நீக்கினார் ஸ்டாலின்; அத்தோடு நில்லாமல் ட்ராட்ஸ்கி அரசாங்கத்திற்குத் துரோகம் செய்கிறார், சோசலிசத்தின் எதிரி என்று கூறி 1929இல் நாடு கடத்தினார். இச்செயல்களைத்தான் நெப்போலியன் ஸ்னோபாலின்மீது பழிகூறி விலங்குப் பண்ணையைவிட்டு வெளியேற்றுவதாக ஆர்வெல் படைத்துள்ளார்.

நாடுகடத்தப்பட்ட பின்பு பல்வேறு நாடுகளுக்கு மாறி மாறிச்சென்று வாழ்ந்துவந்தார் ட்ராட்ஸ்கி; அப்போதும் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களைத் துணிவோடு முன்வைக்க அவர் தயங்கவில்லை. இதனால் எரிச்சலடைந்த ஸ்டாலின், சோவியத்தின் இரகசியக் காவல்துறையைச் சேர்ந்தவனும் (Soviet secret police – NKVD) இசுப்பானியக் பொதுவுடைமைவாதியுமான ’இரமோன் மெர்கேடர்’ (Ramón Mercader) என்பவனை வைத்து 1940இல் ட்ராட்ஸ்கியைத் தீர்த்துக்கட்டினார்.

ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக ஏற்பட்ட இரஷ்யப் புரட்சியின் வெற்றி, சோசலிச ஆதரவாளர்களின் கையில் ஆட்சியைக் கொடுத்தது. ஆனால் அவர்களும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர், கெடுவாய்ப்பாக, சர்வாதிகாரத்தையே கையிலெடுத்து மக்களை ஒடுக்கினர்; தமக்கு எதிராகச் செயற்பட்டவர்களை அழித்தனர்.

எனவே ஆட்சியதிகாரம் என்பது அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் வன்செயல்களுக்குமே ஆட்சியாளர்களை அழைத்துச்சென்றிருக்கிறதேயொழியச் சமூகச் சமத்துவத்துக்கோ பொதுவுடைமைக்கோ அஃது  ஒருபோதும் அழைத்துச்செல்லவில்லை என்பதுதான் உலக வரலாறு நமக்குக் காட்டும் கசப்பான உண்மை!

இதனை எண்ணுகையில் ’மனிதனும் மாமனிதனும்’ (Man and Superman – 1905 Play by George Bernard Shaw) எனும் தம்முடைய நாடகத்தின் பின்னிணைப்பில் பெர்னார்டு ஷா எழுதிய வரிகள் என் நினைவுக்கு வருகின்றன: ”புரட்சிகள் ஒருபோதும் கொடுங்கோன்மையின் சுமையைக் குறைக்கவில்லை; மாறாக அவை அச்சுமையை இன்னொரு தோளுக்கு இடம் மாற்றி மட்டுமே வைத்துள்ளன.” [Revolutions have never lightened the burden of tyranny; they have only shifted it to another shoulder.” (Man and Superman, 1903)].

எத்தகைய தீர்க்க தரிசனம் இது!

*****

கட்டுரைக்கு உதவியவை:

  1. Animal Farm – George Orwell – published by Signet Classics, New York
  2. Man and Superman – George Bernard Shaw, Penguin Classics (Penguin Random House)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.