Category: ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரைகள்

  • (Peer Reviewed) இயற்கை மொழி ஆய்விற்கான மொழியியல் குறிப்பகராதி

    (Peer Reviewed) இயற்கை மொழி ஆய்விற்கான மொழியியல் குறிப்பகராதி

    இயற்கை மொழி ஆய்விற்கான மொழியியல் குறிப்பகராதி

    (Linguistically Annotated Dictionary – LAD)

    முனைவர் ஆர். சண்முகம்
    செயல்பாட்டு மேலாளர், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (JPL)

    சுருக்கம்

    மொழி என்பது சமூக மற்றும் மொழியியல் சார்ந்த நிகழ்வாகும். கால மாற்றத்திற்கேற்ப அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ் மொழியின் இலக்கண வளர்ச்சியில் தொல்காப்பியர் ஆற்றிய பங்கு, ஆய்வாளர்களுக்குப் பெரும் ஆதாரமாகத் திகழ்கிறது.

    இன்றைய நவீன தமிழில் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, மொழித் தொழில்நுட்ப வளர்ச்சி புதிய ஆய்வுச் சாத்தியங்களையும் உருவாக்கியுள்ளது. இது கணினி மொழியியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக உள்ளது.

    இயற்கை மொழிச் செயலாக்கத்தின் முக்கிய அணுகுமுறைகளில் ஒன்று, விதிகள் அடிப்படையிலான அணுகுமுறை ஆகும். இந்த அணுகுமுறை மொழியின் ஆழமான அமைப்பை ஆராய உதவுகிறது. ஆனால், தமிழ் மொழியின் சிக்கலான அமைப்பினால் துல்லியமான பகுப்பாய்வை வழங்கக்கூடிய பின்தள அகராதி அவசியமாகிறது.

    பொதுவான அகராதிகள் ஒரு சொல் சரியானதா என்பதை மட்டும் தெரிவிக்கும். ஆனால், சொற்பொருள் வேறுபாடு கண்டறிதல், தொடரியல் பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு போன்ற மேம்பட்ட இயற்கை மொழிச் செயலாக்கப் பயன்பாடுகளுக்குத் தேவையான பொருள், எதிர்ச்சொல், சொற்பிறப்பு, பயன்பாட்டுத் துறை போன்ற தகவல்களை அவை வழங்குவதில்லை.

    எனவே, மொழியியல் தகவல்களுடன் கூடிய அகராதி ஒன்றை உருவாக்குவது இன்றியமையாதது ஆகும்.இக்கட்டுரையின் நோக்கம், குறிப்பாகப் பெயர்ச்சொற்களை மையமாகக் கொண்டு, இயற்கை மொழிச் செயலாக்கத்திற்கான மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதியின் வடிவமைப்பை முன்வைப்பதாகும்

    முக்கியச் சொற்கள்

    • மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி, இயற்கை மொழிச் செயலாக்கம், விதிகள் அடிப்படையிலான அணுகுமுறை, தமிழ் அகராதி

    0. அறிமுகம்

    இயற்கை மொழிச் செயலாக்கம் என்பது மனிதனுக்கும் கணினிக்கும் இடையே இயல்பான மொழியின் மூலம் தொடர்பை ஏற்படுத்தும் கணினி அறிவியலின் ஒரு துறையாகும்.

    இதனைச் செயல்படுத்த இரண்டு முக்கிய வழிமுறைகள் பின்பற்றப்படலாம்:

    1. மொழித் தொழில்நுட்பம் – இயற்கை மொழி ஆய்வை நடைமுறைப்படுத்தும் தொழில்நுட்ப முறைகள்.

    2. கணினி மொழியியல் – மொழியின் இலக்கண விதிகளைக் கணினிக்குப் புரியும் வகையில் வடிவமைக்க உதவும் மொழிக்கூறுகளை ஆய்வு செய்கிற துறை.

    இயற்கை மொழி ஆய்வுகளில் பொதுவாக இரண்டு முக்கிய அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன:

    • விதிகள் அடிப்படையிலான அணுகுமுறை – இலக்கண விதிகளின் அடிப்படையில் வெளியீட்டை உருவாக்கும் முறை.

    • புள்ளியியல் அடிப்படையிலான அணுகுமுறை – தரவுகள், பயிற்சி மாதிரிகள் மற்றும் சில குறிப்பிட்ட விதிகளின் உதவியால் முடிவுகளை உருவாக்கும் முறை.

    மனிதர்கள் சொற்களின் பொருளைப் புரிந்துகொள்வதும், குழப்பமான அர்த்தங்களைத் தெளிவுபடுத்துவதும் அவர்களின் மனஅகராதி மூலம் நிகழ்கிறது.

    இந்தக் கட்டுரையின் நோக்கம், மனித மனஅகராதிக்கு நிகரான மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி ஒன்றின் வடிவமைப்பை முன்மொழிவதாகும். இது விதிமுறை அடிப்படையிலான இயற்கை மொழிச் செயலாக்க அமைப்புகளுக்குப் பின்தள அகராதியாகச் செயல்படும்.

    1. இயற்கை மொழி பகுப்பாய்வில் பொருளியல் சிக்கல்கள்

    இயற்கை மொழிச் செயலாக்கம் என்பது விரிவான ஆய்வுகளைத் உள்ளடக்கிய துறையாகும். இதன் அடிப்படை நிலைகள் ஒலியியல், உருபியல், தொடரியல், மற்றும் பொருளியல் ஆகிய மொழியியல் கூறுகளை உள்ளடக்குகின்றன.

    உருபியல் சார்ந்த அடிப்படைப் பகுப்பாய்வுகளுக்கு ஒரு சாதாரண மூலச்சொல் அகராதி போதுமானதாக இருக்கலாம். ஆனால், தொடரியல் மற்றும் பொருளியல் தாக்கங்களால் உருவாகும் சிக்கல்களைக் கையாள்வதற்கு அது போதுமானதல்ல.

    மேம்பட்ட பயன்பாடுகளான:

    • சொற்பொருள் வேறுபாடு கண்டறிதல்

    • இயந்திர மொழிபெயர்ப்பு

    • சந்திச் சரிபார்ப்பி

    • இலக்கணச் சரிபார்ப்பி

    போன்றவற்றிற்கு மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி மிகவும் இன்றியமையாதது.

    உதாரணமாக, “கடை + கள்” என்ற இணைவு “கடைகள்” என்ற பொருளை வழங்கும். ஆனால் சில சூழல்களில் “கடைக் கள்” என்ற வேறுபட்ட பொருண்மை வடிவில் அமையலாம். இத்தகைய பொருள் வேறுபாடுகளை ஒரு சாதாரண உருபனியல் உருவாக்கித் துல்லியமாகக் கையாள முடியாது. ஏனெனில், ஒரு சொல்லின் பலபொருள் தன்மை, அதற்கு அறியப்படாமல் இருக்கும்.

    அதேபோல், “கன்னிப் பெண்” என்ற சொல்லுக்கும் இரு வேறு பொருள்கள் உள்ளன திருமணமாகாத இளம்பெண், முதிர் கன்னி. அவற்றின் சரியான பொருள் மொழிச் சூழல் அல்லது வெளிச்சூழல் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும்.

    ஒரு சாதாரண மூலச்சொல் அகராதி, ஒரு சொல் எந்த வகையைச் சேர்ந்தது மற்றும் அது சரியான சொல்லா என்பதை மட்டும் குறிப்பிடும்.

    ஆனால், இந்தத் தகவல் மட்டும் சொற்பொருள் வேறுபாடு கண்டறிதல் அல்லது இயந்திர மொழிபெயர்ப்பு போன்ற மேம்பட்ட அமைப்புகளுக்குப் போதுமானதல்ல.

    ஒரு சொல்லின் சரியான பொருளைத் தீர்மானிக்க, கூடுதல் மொழியியல் மற்றும் பொருளியல் தகவல்கள் தேவைப்படுகின்றன. இத்தகவல்கள் அனைத்தும் மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதியில் பதிவு செய்யப்பட வேண்டும்.

    இதன் மூலம் பின்வரும் தகவல்களைப் பெறலாம்:

    • சொற்களின் பல்வேறு பொருள்கள்

    • சந்தி விதிகள்

    • சூழ்நிலை சார்ந்த பொருள்

    • சொற்பொருள் விரிவாக்கம்

    எனவே, ஒவ்வொரு சொல்லிற்குமான அனைத்துப் பொருள்களையும் அகராதியில் பராமரிப்பது அவசியமாகிறது.

    இத்தகைய அகராதியுடன் இணைக்கப்பட்ட உருபனியல் உருவாக்கி, பலபொருள் கொண்ட சொற்களுக்கு மாறுபட்ட வெளியீடுகளை உருவாக்குவதில் சிரமப்படாது.

    மேலும், பின்வரும் பொருளியல் பண்புகள், பொருள் வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன:

    • நேரடிப் பொருள்

    • மறைபொருள்

    • பயன்பாட்டுத் துறை

    2.0 மொழியியல் குறிப்பகராதி

    ஒரு சொல் என்பது வெறும் ஒலியோ எழுத்துத் தொகுப்போ அல்ல; அதன் பின்னணியில் சொற்பிறப்பு, இலக்கண அமைப்பு, பொருள், பயன்பாடு, மற்றும் சூழல் போன்ற பல அடுக்குகள் உள்ளன.

    மனிதர்களுக்கான அகராதி ஒன்றை உருவாக்குவது ஒரு வகை நோக்கம்; இயற்கை மொழிச் செயலாக்கத்திற்கான அகராதியை உருவாக்குவது வேறு நோக்கம். முன்னர் விளக்கப்பட்டபடி, ஒரு சாதாரண மூலச்சொல் அகராதி மட்டும் மேம்பட்ட பயன்பாடுகளில் தோன்றும் பலபொருள் சிக்கல்களைத் தீர்க்க முடியாது.

    மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி என்பது இலக்கணத் தகவல்களையும் பொருளியல் தகவல்களையும் ஒருங்கிணைத்து, ஒரு சொல்லின் அனைத்துப் பொருள்களையும் பதிவு செய்யும் விரிவான தரவமைப்பாகும்.

    இதில் இடம்பெற வேண்டியவை:

    • நேரடிப் பொருள்

    • மறைபொருள்

    • துறைவாரியான பொருள்

    இவ்வகராதி, இயற்கை மொழிச் செயலாக்க அமைப்புகளுக்குப் பின்தள அறிவகமாகச் செயல்பட்டு, அவற்றின் துல்லியத்தையும் தரத்தையும் உயர்த்தும்.

    இக்கட்டுரை தற்போது பெயர்ச்சொற்கள் குறித்து மட்டும் விவரிக்கிறது. இருப்பினும், இதே மாதிரியான அமைப்பு கொண்ட வினைச்சொற்கள் உள்ளிட்ட அனைத்துச் சொல்வகைகளுக்கும் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக வினைச்சொற்கள் வாக்கிய அமைப்பின் முதுகெலும்பாக இருப்பதால், அவற்றிற்கும் விரிவான மொழியியல் குறிப்புகள் அவசியம்.

    2.1 மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதியின் கட்டமைப்பு

    இவ்வகை அகராதியின் கட்டமைப்பே மொழித் தொழில்நுட்பக் கருவியின் துல்லியத்தையும் செயல்திறனையும் தீர்மானிக்கிறது.

    அகராதியில் இடம்பெறும் ஒவ்வொரு தலைச்சொல்லும் அதன் இலக்கண மற்றும் பொருளியல் தகவல்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.

    ஒவ்வொரு சொல்லிற்கும் பின்வரும் தகவல்கள் இடம்பெற வேண்டும்.

    பொருளியல் தகவல்கள்

    • நேரடிப் பொருள்

    • மறைபொருள்

    • இணைச்சொற்கள்

    • எதிர்ச்சொற்கள்

    • மரபுத்தொடர்கள்

    • பழமொழிகள்

    • பயன்பாட்டுத் துறைகள்

    தொடரியல் மற்றும் இலக்கணத் தகவல்கள்

    • இணைநிகழ்வு

    • சொல்வகை

    • துணைவகைப்படுத்தல்

    உதாரணமாக:

    • பொதுப் பெயர் / சிறப்புப் பெயர்

    • எண்ணிக்கைக்கு உட்படும் / எண்ணிக்கைக்கு உட்படாத

    • உயிருள்ள / உயிரற்ற

    • உருவமான / அருவமான

    • பாலினம்

    • ஒலிப்பு முறை (IPA)

    மேலும், பின்வரும் கூறுகளும் சேர்க்கப்பட வேண்டும்:

    இவை உரையை ஒலியாக மாற்றும் அமைப்புகளில் ஒலியியல் மற்றும் இசைநடைத் தகவல்களைத் துல்லியமாக உருவாக்க உதவுகின்றன.

    ஒரு சொல்லின் வெவ்வேறு பொருள் பரிமாணங்களும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

    3.0 LAD உருவாக்கம்

    LAD-ஐ உருவாக்குவது என்பது வெறும் சொற்களின் பட்டியலைத் தயாரிப்பது அல்ல. மாறாக, ஒவ்வொரு சொல்லிற்குமான இலக்கண, பொருளியல், மற்றும் பயன்பாட்டு தகவல்களை ஒருங்கிணைத்து முழுமையான மொழியியல் தரவமைப்பை உருவாக்குவதாகும்.

    இத்தகைய தகவல்கள் சாதாரண மூலச்சொல் அகராதிகளில் பொதுவாகக் கிடைப்பதில்லை.

    LAD-ஐ XML போன்ற கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் உருவாக்குவது பொருத்தமானதாகும்.

    ஒரு சொல்லின் அனைத்து பொருளியல் தகவல்களையும் முழுமையாகப் பதிவு செய்வது கடினமான பணியாக இருந்தாலும், இக்கட்டுரை அவற்றில் முக்கியக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு வடிவமைப்பை முன்வைக்கிறது.

    மனிதர்களின் மனஅகராதி பலவகையான இலக்கண மற்றும் பொருளியல் தகவல்களைக் கொண்டிருப்பதால், அவர்கள் சொற்களின் பொருளை எளிதில் புரிந்து கொள்கிறார்கள். அதேபோல், இயற்கை மொழிச் செயலாக்க அமைப்புகளும் திறம்படச் செயல்பட வேண்டுமெனில் இவ்வகை விரிவான அகராதி அவசியமாகிறது.

    3.1 LAD-இன் மாதிரி அமைப்பு

    புலம்

    விளக்கம்

    மூலச்சொல்

    அகராதியின் தலைச்சொல்

    சொல்வகை

    பெயர்ச்சொல், வினைச்சொல் போன்ற வகைப்பாடு

    சொற்பிறப்பு

    சொல்லின் தோற்றம் மற்றும் வரலாறு

    துணைவகை

    பொதுப் பெயர், சிறப்புப் பெயர், உருவம், அருவம், எண்ணிக்கைக்கு உட்படும், உயிருள்ளது போன்ற வகைப்பாடுகள்

    IPA / ஒலிப்பு

    சர்வதேச ஒலிப்பியல் குறியீடு மற்றும் உச்சரிப்பு

    நேரடிப் பொருள்

    சொல்லின் அடிப்படை அகராதிப் பொருள்

    மறைபொருள்

    சமூக, பண்பாட்டு அல்லது உணர்வுசார் பொருள்

    பயன்பாட்டுத் துறை

    மருத்துவம், வணிகம், இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் பெறும் பொருள்

    மரபுத்தொடர்கள் / பழமொழிகள்

    அந்தச் சொல் இடம்பெறும் நிலையான தொடர்கள்

    இணைச்சொற்கள்

    ஒத்த பொருள் தரும் சொற்கள்

    எதிர்ச்சொற்கள்

    எதிர்ப்பொருள் தரும் சொற்கள்

    இணைநிகழ்வு

    பொதுவாக இணைந்து வரும் சொற்கள்

    கூட்டுச்சொல் வடிவம்

    கூட்டுச்சொற்கள் உருவாகும் அடிப்படை வடிவம்

    குறிப்பு:
    ஒரு சொல்லின் முதன்மைப் பொருளுக்காக வழங்கப்பட்டுள்ள துணைவகைப்படுத்தல், அதன் பிற பொருள் விரிவாக்கங்களுக்கும் தனித்தனியாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

    ஒரே சொல் வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் போது அதன் சொல்வகை கூட மாறக்கூடும். எனவே, அத்தகைய மாற்றங்களும் அகராதியில் பதிவு செய்யப்பட வேண்டும்.

    மேலே வழங்கப்பட்ட அட்டவணை LAD உருவாக்கத்திற்கான மாதிரி வடிவமைப்பு மட்டுமே. தேவைக்கேற்ப இதில் மேலும் பல கூறுகளைச் சேர்த்து விரிவுபடுத்தலாம்.

    3.2 நேரடிப் பொருள் மற்றும் மறைபொருள்

    நேரடிப் பொருள் என்பது ஒரு சொல்லின் வெளிப்படையான அல்லது அகராதியில் தரப்படும் அடிப்படைப் பொருளாகும்.

    உதாரணமாக, “சுனாமி” என்ற சொல்லின் நேரடிப் பொருள் கடல் அல்லது பெரிய நீர்நிலைகளில் ஏற்பட்ட இடப்பெயர்ச்சியால் உருவாகும் பேரலைத் தொடர் ஆகும்.

    ஆனால், அதே சொல்லின் மறைபொருள் நிலைமையில் அழிவு, ஆபத்து, துயரம் போன்ற சமூக மற்றும் உணர்வுசார் கருத்துகளும் இணைந்திருக்கலாம்.

    அதாவது, ஒரு சொல்லின் மறைபொருள் அதன் சமூகப் பயன்பாடு மற்றும் மனித அனுபவங்களின் வழியாக உருவாகிறது.

    3.3 பயன்பாட்டுத் துறை

    ஒரு சொல்லின் பொருள் அதன் நேரடிப் பொருள் அல்லது மறைபொருள் மட்டும் சார்ந்ததல்ல; அது பயன்படுத்தப்படும் துறை அல்லது சூழலின் அடிப்படையிலும் மாறுபடும்.

    உதாரணமாக, “சீட்டு” என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம்.

    • வணிகம் / பொருளாதாரத் துறையில் அது ரசீது எனப் பொருள்படும்.

    • போக்குவரத்து துறையில் பயணச்சீட்டு என்பது பயண அனுமதிச் சீட்டை குறிக்கும்.

    • விளையாட்டு துறையில் அது விளையாட்டுச் சீட்டு எனப் பொருள்படும்.

    இதுபோல, ஒரே சொல்லுக்கு பயன்பாட்டுத் துறையைப் பொறுத்து பல்வேறு பொருள்கள் அமையும்.

    எனவே, ஒவ்வொரு சொல்லிற்குமான துறைவாரியான பொருளை LAD-இல் பதிவு செய்வது, அதன் பொருள் விரிவாக்கங்களைச் சரியாகக் கையாளவும், முழுமையான பொருளியல் சுயவிவரத்தை உருவாக்கவும் உதவுகிறது.

    3.4 இணைநிகழ்வுகள், மரபுத்தொடர்கள் மற்றும் பழமொழிகள்

    மரபுத்தொடர்களும் பழமொழிகளும் நிலையான மொழித்தொடர்கள் ஆகும். இவை இயற்கை மொழி ஆய்வில் குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்குகின்றன.

    ஏனெனில், இத்தகைய தொடர்களில் இடம்பெறும் ஒவ்வொரு சொல்லின் தனிப்பொருளை மட்டும் கொண்டு முழுப் பொருளை அறிய முடியாது. மாறாக, முழுத் தொடரே தனித்துவமான பொருளை வழங்குகிறது.

    இந்தச் சிக்கல், குறிப்பாக இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்புகளில் தெளிவாகக் காணப்படுகிறது.

    நேரடி மொழிபெயர்ப்பு முறையைப் பின்பற்றும் அமைப்புகள், மரபுத்தொடர்கள் மற்றும் பழமொழிகளின் உண்மையான பொருளைத் துல்லியமாக வெளிப்படுத்துவதில் பெரும்பாலும் தோல்வியடைகின்றன.

    உதாரணமாக, “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்ற பழமொழி வெளிப்படையாகப் பார்க்கும்போது ஒளிரும் அனைத்தும் பொன்னாக இருக்காது என்பதைக் குறிக்கிறது.

    ஆனால், அதன் உள்ளார்ந்த பொருள், வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து எதையும் மதிப்பிடக் கூடாது என்பதாகும்.

    எனவே, இத்தகைய மொழிப் பயன்பாடுகளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்புகளுக்கு மொழியியல் அறிவுடன் உலக அறிவும் தேவைப்படுகிறது.

    4. இயற்கை மொழி ஆய்வில் LAD-இன் பயன்பாடு

    படைப்பாற்றல் என்பது மொழியின் அடிப்படை பண்புகளில் ஒன்றாகும். மொழி அதன் பயன்பாட்டின் காரணமாக தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த இயல்பான மாற்றமே இயற்கை மொழிச் செயலாக்கத்திற்குப் பெரிய சவாலாக அமைகிறது.

    இந்தச் சவால்களை சமாளிக்க பொருள் வேறுபாடு கண்டறியும் அமைப்பு அவசியமாகிறது. குறிப்பாக இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்புகளில், ஒரு வாக்கியத்தின் சரியான பொருளைத் தீர்மானிக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது.

    சொல் மட்டத்திலான குழப்பங்களை சில இலக்கண விதிகளின் உதவியால் தீர்க்க முடியும். ஆனால், வாக்கிய அமைப்பு சார்ந்த குழப்பங்களைத் தீர்க்க உயர்தரத் தொடரியல் பகுப்பாய்வி தேவைப்படுகிறது.

    ஒரு திறமையான தொடரியல் பகுப்பாய்வியை உருவாக்க, அதற்கு அடிப்படையாக மிகத் துல்லியமான உருபனியல் பகுப்பாய்வி இருக்க வேண்டும். அத்தகைய பகுப்பாய்வி, சொற்களின் பல்வேறு பொருள் வேறுபாடுகளையும் கையாள முடியும்.

    பொதுவாக, பகுப்பாய்விகளுக்கு இணைநிகழ்வுகள் பற்றிய போதுமான அறிவு இல்லாததால், சரியான சொல் இணைப்புகளை அடையாளம் காண இயலாமல் போகிறது. ஆனால், LAD-இல் ஒவ்வொரு சொல்லிற்குமான இணைநிகழ்வு தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், பகுப்பாய்வி அவற்றைப் பயன்படுத்தி பொருளைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்.

    இதன் மூலம் சூழலுக்கேற்ற பொருள் கண்டறிதல் சாத்தியமாகி, வாக்கியத்தின் உண்மையான பொருளை இயற்கை மொழிச் செயலாக்க அமைப்பு சரியாகப் புரிந்துகொள்ளும்.

    முடிவுரை

    மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி (Linguistically Annotated Dictionary – LAD) என்பது, ஒரு சொல்லின் இலக்கண, பொருளியல், மற்றும் பயன்பாட்டியல் பண்புகளை ஒருங்கிணைத்து பதிவுசெய்யும் விரிவான மொழியியல் தரவமைப்பாகும். இவ்வகராதி, சொல்லின் அடிப்படைப் பொருள், பொருள் விரிவாக்கம், பயன்பாட்டுச் சூழல், மற்றும் இலக்கண இயல்புகள் ஆகியவற்றை முறையாகச் சுட்டிக்காட்டுவதன் மூலம் இயற்கை மொழிச் செயலாக்க அமைப்புகளுக்கான அடித்தள அறிவகமாக விளங்குகிறது.

    References

    1. CREA – Modern Tamil dictionary for Tamil-Tamil-English – by CREA 2009.

    2. Chomsky, Noam. Logical syntax and Semantics – Their linguistic Relevance– Language Volume 31. No.1 (Jan-Mar 1995).

    3. Cook, Vivian – Mark Newson. Chomsky’s Universal grammar– Blackwell Publications

    4.Kothandaraman-.Pon. A grammar of contemporary literary Tamil. IITS -1997.

    5 Kothandaraman-.Pon. Tamil studies selected papers. Ambuli Publication-2001.

    6. Krishnamoorthy, Badriraju. The Dravidian Languages. Cambridge University Press -2003

    7. Moravcsik JME. Sub-categorization and abstract terms-in Foundations of Language Vol.6 No.4 1970.

    8. Verma S.K, N. Krishanaswami. Modern Linguistics -An Introduction– Oxford University Press – 1989

    9. en.wikipedia.org/wiki

    ============================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் இயந்திர மொழிபெயர்ப்பும் செயற்கை நுண்ணறிவும் பெருகி வரும் இந்நாளில், நம் செயல்கள் எளிதாவதற்குப் பதிலாகக் கடினமாகின்றன. இதற்குக் காரணம், இவற்றில் பிழைகள் மலிந்துள்ளன. உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதிலும் அதை மொழிபெயர்ப்பதிலும் பெரும் சவால்கள் உள்ளன. வேகமாகச் செய்யும் நோக்கில், நம் கருவிகள் சரியாகச் செய்வதில்லை. அசலை ஒத்து, போலச் செய்து, அந்தப் போலியையும் அசலாகவே முன்வைக்கின்றன. இவற்றிலிருந்து சரி எது என்பதைக் கண்டறிவது, பெரும் பணியாக இருக்கிறது. இதனால் இவற்றின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாய் ஆகியுள்ளது. இந்நிலையில், மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி என்ற பரிந்துரை, தமிழுக்குப் பயனளிக்கக் கூடியது.

    ஆய்வாளர் முன்மொழிந்துள்ள அகராதி வடிவம், தொடக்க நிலைக்கானது. ஒவ்வொரு துறையிலும் இன்னும் கூர்மையான பார்வையுடன் நுணுக்கமான விவரங்களைச் சேர்க்க வேண்டும். சேர்த்த விவரங்களைப் பல கோணங்களில் சரிபார்க்க வேண்டும். ஏட்டு நிலையிலிருந்து செயலாக்க நிலையில் இவற்றின் பயனைச் சோதிக்க வேண்டும். நேரடிப் பயனர்களின் கருத்துகளையும் சேர்க்க வேண்டும். வட்டார வழக்கில் ஏற்படக் கூடிய எழுத்து மாற்றங்களையும் உச்சரிப்பு மாற்றங்களையும் சேர்க்க வேண்டும். ஒரே எழுத்துக்கூட்டல் / உச்சரிப்பு ஆகியவற்றைக் கொண்ட சொற்களின் வெவ்வேறு பொருள்களைச் சேர்க்க வேண்டும். ஒரே சொல்லுக்கு ஒவ்வொரு காலத்திலும் இருக்கக்கூடிய பொருள்களையும் சேர்க்க வேண்டும். மொழிபெயர்க்கும்போது ஏற்படக் கூடிய சவால்களையும் மொழிபெயர்க்கும்போது இழக்கக்கூடிய ஓசை, சந்தம், இசை ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும். இதர மொழிகளின் மொழியியல் அகராதிகளுடன் ஒப்புநோக்க வேண்டும்.

    பெரும் உழைப்பினைக் கோரக்கூடிய பணியாக இருந்தாலும் செய்ய வேண்டிய பணி. இப்போதே தாமதம் தான் என்றாலும் விரைந்து செய்ய வேண்டிய பணி. தமிழ், அறிவியல் மொழியாக வளர்வதற்கு இத்தகைய கண்ணோட்டம் உள்ள ஆய்வுகள் தேவை. ஆய்வாளருக்குப் பாராட்டு.

    Linguistically Annotated Dictionary – LAD என்றால் என்ன என்பது குறித்த முன்னுரையை வழங்கிய பிறகு அது குறித்து விளக்கியிருக்கலாம். LAD உருவாக்கம், LAD-இன் மாதிரி அமைப்பு என்பது போல, ஆங்கில எழுத்துச் சுருக்கத்தை அப்படியே தமிழில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி என்பதை மொ.கு.அ. என்று சுருக்கி எழுதலாம்.

    ============================================================

    Share
  • (Peer Reviewed) செம்மொழியாம் தமிழ்மொழி

    (Peer Reviewed) செம்மொழியாம் தமிழ்மொழி

    முனைவர் பீ. பெரியசாமி,
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
    டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி,
    ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் – 632317,
    தமிழ்நாடு, இந்தியா,
    மின்னஞ்சல்: periyaswamydeva@gmail.com,
    கைபேசி: 9345315385,

    ORCID ID –  https://orcid.org/0000-0002-7395-9699


    1. முன்னுரை

    மொழி என்பது ஒருவர் தன் உணர்வுகளைப் பிறருக்கு அறிவிக்கப் பயன்படும் ஒரு தொடர்புக் கருவியாகும். இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களில் மிகப் பழமையானது திராவிட மொழிக்குடும்பமாகும். அத்திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் மொழியாக விளங்குவது தமிழ் மொழியாகும். அத்தமிழ் மொழியின் தொன்மையையும் அம்மொழி பெற்றிருக்கும் செம்மொழிக்குரிய தகுதிகளையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அதனடிப்படையில் மொழியின் அடிப்படை, இந்திய மொழிக்குடும்பங்கள், திராவிட மொழி, திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி, திராவிட மொழிகளின் எண்ணிக்கை அவற்றின் பகுப்புமுறை, தமிழ் மொழிக்கும் பிற மொழிகளுக்குமானத் தொடர்பு, தமிழ்மொழி, வெளிநாட்டார் குறிப்புகள், நூல்கள், கல்வெட்டுகள், தமிழரின் தொன்மை, சிறப்பு, தோற்றம், செம்மொழியே தமிழ்மொழி எனும் தலைப்புகளினூடாக இவ்வாய்வுக்கட்டுரை பயணித்து தமிழ்மொழியில் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகளை ஆராய்கின்றது.

    2. மொழி

    மொழி என்பது, மனிதர்கள் தங்களது உணர்வுகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்கான ஒரு முறையான வழிமுறையாகும். இது, பேச்சு மொழி, எழுத்து மொழி என இரண்டாகப் பகுப்பர். ஆரம்பத்தில் பேச்சுமொழி சைகைகளாகவும், எழுத்து மொழி குறிகள், அடையாளங்களாகவும் இருந்தன. இதனை,

    குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி, பிறப்பிலிருந்தே தொடங்கி பல ஆண்டுகள் நீடிக்கும்.மொழியின் பிறவடிவம், செயல்முறை ஆகிய இரண்டையும் உள்ளத்தில் கொண்டு மொழியை விளக்கிய அறிஞர்கள் பொருளைக் குறிக்க மரபாக ஏற்பட்ட குறியீடுகளின் ஒழுங்குபட்ட அமைப்பே மொழி என்றனர். (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ப.2)

    எனவும்,

    ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுக் குழுவினர் புரிந்து கொள்ளும் வரையறுக்கப்பட்ட ஒலிகளின் இணைப்பே மொழி என்றனர். (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, பக்.2-3)

    ஜான்சாமுவேல் கூறியுள்ளார். குறியீடும்,  ஒலிகளும் மொழிகளின் தோற்றத்தின் அடிப்படை என்பது இதிலிருந்து அறியமுடிகின்றது.

    மொழியே ஒரு இனத்தின் முக்கிய அடையாளம்.மொழி என்பது சொல்வளம், இலக்கியம், இலக்கணம், ஆகியவற்றையே கொண்டிருத்தல் சிறப்பு. மொழியானது பிறரிடம் தொடர்பு கொள்ளவும், தன் உணர்வுகளை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது. இதனை,

    மொழி மனித சமுதாயத்தோடு தோன்றி, நின்று, அழியும் என்பது தெளிவு. மொழி நாகரிகத்தின் வித்து; எண்ணத்தின் வடிவம்; ஒருவரோடு ஒருவரை பிணைக்கும் இணைப்பு; காலத்தைக் கடந்து நிலையாக நிற்கின்ற கருத்தோவியம்; மற்ற உயிரினங்களுக்கிடையே காணப்படாத பெருஞ்சிறப்பு; பழக்கம் என்ற விளைநிலத்தின் பயிராக்கப்பட்ட பயிர். (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ப.3)

    என ஜான்சாமுவேல் கூறியுள்ளார். எனவே மனிதன் சமூகமாகக் கூடிவாழத் தலைப்பட்ட காலத்திலே மொழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்பதை உய்த்துணர முடிகின்றது.

    3. இந்திய மொழிக் குடும்பங்கள்

    இந்தியாவில் ஆஸ்ட்ரிக் குடும்பம், இந்தோ – ஆரிய மொழிக் குடும்பம், திபத்தோ –  சீன மொழிக் குடும்பம்,  திராவிட மொழிக் குடும்பம் என்ற நான்கு மொழிக் குடும்பங்கள் உள்ளன.

    4. திராவிட மொழி

    திராவிட மொழி என்பது மொழியல்ல. அது மொழிக் குடும்பத்தின் பெயர். தமிழிலிருந்து தோன்றிய பல மொழிகளின் கூட்டே திராவிட மொழி என்பது. இதனை முதலில் ஆய்ந்த டாக்டர் கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளையே ஆய்வுக்கு உட்படுத்தினார் பின்னர் ஏற்பட்ட மொழியியல் ஆய்வின் வளர்ச்சியின் காரணமாக வட இந்தியாவிலும், பிற இடங்களிலும் திராவிடம் மொழிகள் கண்டறியப்பட்டன. தமிழில் திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குமரிலபட்டரே பயன்படுத்தியுள்ளார். அவர்,

    திராவிட மொழிகளை ஆந்திர, திராவிட பாஷா(திராவிட மொழிகள்,(தொகுதி-2), ப.79)

    என்க கூறியுள்ளார். பழங்காலத்தில்,

    தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளை‘Tamilian’அல்லது ‘Tamulic’ ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.21)

    என்றே  அழைத்துள்ளனர்.

    ‘தமிழ்’ என்ற சொல்லிலிருந்து தான் ‘திராவிட’ என்ற சொல் உருவாயிற்று என்பதை ஸ்டென்கனொவ் எனும் ஆய்வாளர்,

    ‘திராவிட’ என்ற சொல்லை விட ‘திரமிள’ என்ற சொல் தான் பழமையாக உள்ளது என்றும் அது ‘தமிழ்’ என்ற சொல்லிலிருந்து உருவானது ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.26)

    என்று கூறியுள்ளார். இந்தியாவின் பழைமையான நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை,

    இந்திய நாட்டை பொறுத்தமட்டில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே சிறந்ததொரு நாகரிகம் இந்திய மண்ணில் உருவாகி வளர்ந்திருந்தது என்பதும் அந்நாகரிகம் பல கோணங்களில் பண்பட்டுச் சிறந்து இருந்தது என்பதும் இன்றைய ஆராய்ச்சியாளர்களின் முடிபாகும். ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.31)

    என்றும்,

    திராவிட மொழிகள் மிகப் பழமையான மொழிகள் என்பதும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய நாட்டில் வழக்கிலிருந்து வந்துள்ளன என்பதும் இன்றைய மொழியியலாளர்களின் கொள்கை. (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.35)

    என்றும் ச. அகத்திய லிங்கம் கூறியுள்ளார். இவற்றின்வழி திராவிட நாகரிகம் இந்தியாவின் பண்பட்ட நாகரிகம் என்பதும் பழைமையான நாகரிகம் என்பதும் அறியமுடிகின்றது. மேலும், இதற்கு வலுசேர்க்கும் விதமாக,

    திராவிடர்கள் பற்றிப் பொதுவாக இரண்டு வன்மையான கருத்துக்கள் உள்ளன. ஒன்று அவர்கள் இந்நாட்டுப் பழங்குடியினர், இந்நாட்டுக்கே சொந்தமானவர்கள். (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.95)

    எனக் கூறியதிலிருந்து திராவிடர்களே இந்தியாவின் மூத்த குடிமக்கள் என்பது நிறுவப்படுகின்றது.

    சமஸ்கிருத மொழியிலிருந்து தான் இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளும் தோன்றின என கால்டுவெல் எனும் அறிஞரின் ஆய்வுநூலான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளிவரும்வரை சமஸ்கிருத மொழியாளர்களாலும் அதற்குத் துணை போன சில மொழியியல் ஆய்வாளர்களாலும் நம்பவைக்கப்பட்டிருந்தன. ஆனால்,

    திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழியிலிருந்து பிரிந்தவை அல்ல என்றும் இவை தனி ஒரு இனம் ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.40)

    என்று விளக்கியுள்ளார்  கால்டுவெல்.

    5. திராவிட மொழிகளின் எண்ணிக்கை

    திராவிட மொழிகளின் எண்ணிக்கையில் ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்து மாறுபாடுகள் உள்ளன. அவற்றுள் டாக்டர் கால்டுவெல் திராவிட மொழிகள் பன்னிரண்டு என்கிறார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளி ஆகிய ஐந்து மொழிகளையும் பண்பட்ட மொழிகளாகவும் தோடா, கோடா, கோண்டு, கூ என்ற நான்கையும் பண்படாத மொழிகளாகவும் கருதினார். பிராகூயி, மால்டோ போன்ற மொழிகளைச் சுட்டிச் சென்றார் தவிர அவற்றைப் பற்றிய சிறப்பாராய்ச்சியினை அவர் மேற்கொள்ளவில்லை. (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ப.18)

    மேலும், கிரியர்ஸன் எனும் மொழியியல் ஆய்வாளர்,

    கொலாமி, நாயக்கி ஆகிய இரு மொழிகளையும் கால்டுவெல் கூறியதோடு இணைத்து திராவிட மொழிகள் 14 எனக் குறிப்பிட்டுள்ளார். திராவிட மொழிகளைத் தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என்று பிரித்தும் ஆராய்ந்துள்ளனர்.

    பர்ரோதன் ஆய்வில்,

    1950 இல் பெங்கோ, பர்ஜி ஆகியன திராவிட மொழிகளின் கிளை மொழிகள் எனக் கண்டார்.

    ஆனால், தற்போது திராவிட மொழிகளின் எண்ணிக்கை முப்பதுக்கும் மேலாகப் பெருகி உள்ளன.

    6. திராவிட மொழிகளின் பகுப்பாய்வு

    திராவிட மொழிகளைத் தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்று பிரிவுகளாகப் பகுப்பர். அவற்றுள், தமிழ், மலையாளம், கொடகு, கோடா, தோடா, கன்னடம், படகா, துளி ஆகிய ஒன்பது மொழிகளும் தென் திராவிட மொழிகள்.நடு திராவிட மொழிகளைத் தெலுங்கு – குவி கிளை என்றும்,  கொலாமி –  நாயக்கி கிளை என்றும் மொழி நூலால் இரு கூறுபடுத்துவர்.தெலுங்கு – குவி கிளையில் – தெலுங்கு, கோண்டி, குவி, குவி, பெங்கோ, மண்டா ஆகிய ஏழு மொழிகளும் கோலாமி – நாயக்கி கிளையில் – கோலாமி, நாயக்கி,  பர்ஜி, கடப்பா ஒல்லாரி,  கடப்பா சில்லூர் ஆகிய ஐந்து மொழிகளும் உள்ளன.வட திராவிட மொழிகள் – பிராகுயி, மால்டோ, குருக் ஆகிய மூன்று மொழிகள்.

    7. திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி

    திராவிட மொழிகளில் பல்வேறு வகையிலும் தொன்மை வாய்ந்ததும் மற்ற மொழிச் சொற்களுக்கு எல்லாம் வேர்ச்டசொற்களைத் தந்ததும் தமிழ் மொழியே ஆகும். தமிழில் தான் திராவிட மொழி நூல்களுக்கு எல்லாம் காலத்தால் முந்திய தொல்காப்பியம் எனும் நூல் தோன்றியுள்ளது. இதனை,

    திராவிட மொழிகளில் காணப்படும் மிகவும் பழமையான நூல்களில் முதன்மையானது தொல்காப்பியம். ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.150)

    என்று ச. அகத்திய லிங்கம் கூறியுள்ளார். மேலும், ஏனைய திராவிட மொழிகளைக் காட்டிலும் பழமையான இலக்கண இலக்கியங்கள் தமிழில் உள்ளன என்பதை,

    திராவிட மொழிகளின் பழமையான இலக்கியங்களையும் இலக்கணங்களையும் கொண்டுள்ளது தமிழ்மொழி. ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.106)

    என்றும் கூறப்பட்டுள்ளது. டாக்டர் ஜார்ஜ் ஆலுவர் சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றத்திற்கு அடிப்படை காரணமாக இருந்தவர்கள் திராவிட மக்களே எனத்  தெளிவுபடுத்தி உள்ளார். இதன்வழி தமிழ்மொழி திராவிட மொழிகளின் தாய் என்பதை அறியலாம்.

    8. தமிழ்மொழி

    தமிழின் பழமைக்குச் சான்றாய் விளங்கும் கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டே தமிழ்மொழி, இலக்கியம், இலக்கணம் பற்றிய ஆதாரங்கள் ஆரம்பமாகின்றன. கிறிஸ்துக்கு முன்பே தமிழில் சிறந்த படைப்புகள் இருந்தன என்பதை,

    திராவிட மொழிகளுக்குள்ளே கிறிஸ்துவ சகாப்தத்தின் துவக்கத்திலிருந்தே சிறப்புமிக்க இலக்கியங்களைக் கொண்டு சிறந்த மொழி தமிழேயாம். (தமிழும் பிற பண்பாடும், ப.15)

    என்று தெ. பொ. மீனாட்சி சுந்தரம் கூறுவதிலிருந்து அறியலாம். மேலும்,

    தமிழ் மொழியின் வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளுக்கு இலக்கியங்களையே முதன்மையாகக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இலக்கியம் என்று குறிப்பிடுகின்ற பொழுது இலக்கியத்தரம் வாய்ந்த நூல்கள் என்ற வரையறைக்கு உட்படுத்தாது எல்லா பொருள்களையும் பற்றிய உரைநடை அல்லது செய்யுள் வடிவில் உள்ள எல்லாத் தமிழ் நூல்களையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். (தமிழ் மொழி வரலாறு, பக். 41- 42)

    என்றும் கூறியுள்ளார். எனவே, தமிழ் மொழியின் பழமையான நூல்களைத் தேடி ஆய்வதிலிருந்தே தமிழரின் தமிழ்மொழியின் முழுமையான வரலாற்றை அறிய முடியும் என்பதை உணரமுடிகின்றது.

    9. வெளிநாட்டாரின் பார்வையில் தமிழ்மொழி

    வெளிநாட்டார் சில  தமிழ் மொழியினைக் குறித்த நூல்களை இயற்றியுள்ளனர். அவைகளும் நமக்குத் தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பையும் அறிய உதவுகின்றன. அவற்றுள், பால்தே இயற்றிய இந்திய மொழிகள் பற்றிய நூலொன்று எழுதியுள்ளார். 1680இல் கோஸ்டா தமிழ் இலக்கணத்தை இலத்தின் மொழியில் இயற்றியுள்ளார். 1685 இல் புருனோ தமிழ் இலக்கண நூல் ஒன்று எழுதியுள்ளார். பெஸ்கி (வீரமாமுனிவர்) பேச்சுத்தமிழ் இலக்கணம் ஒன்றை எழுதியுள்ளார். வீரமாமுனிவர் போர்த்துகீசிய மொழியிலும் தமிழிலும் அகராதிகளை இயற்றியுள்ளார். இவையெல்லாம் குறிப்பித்தகுந்தவைகள்.

    10. தமிழ் மொழியின் தொடர்பு

    தமிழ்மொழி ஆரிய மொழி, கிரேக்கம், கொரிய மொழி, ஜப்பானிய மொழி ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையனவாக விளங்குகின்றன. இதனால் பிற மொழிகளில் தமிழ் மொழிச் சொற்களும் தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களும் கலந்து போயின. இதனை,

    பன்னெடுங்காலமாகப் பிறமொழி பேசும் மக்களோடு ஏற்பட்ட தொடர்பினாலே பல பல சொற்கள் தமிழிலே புகுந்து இன்றைய வழக்கிலும் நிலைபெற்று விட்டன. இதுபோலவே தமிழ்ச் சொற்களும் பிற மொழிகளில் புகுந்தன. (தமிழும் பிற பண்பாடும், ப.13)

    என்பதன் வழி அறியலாம். மேலும்,

    1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமைக் கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும், இலக்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுகளாலும் அறியப்படும் உண்மைகளாகும். இதனால், தமிழ் மொழியானது அக்காலத்திலேயே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரிந்தும் ஒரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கிறது எனத் தெரிய வருகிறது. (தமிழின் சிறப்பு, ப.28)

    படையெடுப்புகளாலும் தமிழ்மொழி வெளிநாடுகளில் பரவியது என்பதை இதன்வழி அறியமுடிகின்றது.

    11. தமிழ்மொழிக்கும் ஏனைய திராவிட மொழிகளுக்குமான உறவு

    தமிழ் மொழிக்கும் ஏனைய திராவிட மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இதனை,

    கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வரருசியும் (Vararuchi), கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பூஞ்சலையும்(Patanjali) குறிப்பிடும் சில தென்னிந்தியச் சொற்களுடன் இதைத் தொடங்கலாம். இதற்குப் பின்னர் பாலி, சமஸ்கிருதம், பிராகிருதம்  ஆகிய மொழிகளின் இலக்கியங்களிலும், குமரிலபட்டரின் (Kumarila Bhatta), ‘தந்திர வாத்திகா’ (Tantra Varttika) போன்ற நூல்களிலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட குடும்ப மொழிகளிலும் குறிப்புக்கள் வருகின்றன. கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘லீலா திலகம்’ (Lila Tilakam) எனும் மலையாள நூல் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் நிலவிய சில வழக்காறுகளையும் உச்சரிப்புகளையும் குறிக்கின்றது. இதற்கு முற்பட்ட இராம சரிதம் போன்ற மலையாள நூல்கள், தமிழ் நூல்களே என்க கூறப்படுவதுமுண்டு. (தமிழ் மொழி வரலாறு, பக். 49-50)

    என்பவற்றிலிருந்து அறிய முடிகின்றது.

    • கல்வெட்டுகள்

    தமிழ் மொழியின் தொன்மையை அறிந்து கொள்ளக் கல்வெட்டுகள், பட்டயங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், வெளிநாட்டார் குறிப்புகள், வெளிநாட்டார் நூல்கள், மொழியியல் ஆய்வுகள் எனப் பல இருந்தாலும், கல்வெட்டுச் சான்றுகள் என்பவை முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில்,

    தமிழகம் கல்வெட்டுகளுக்குப் பெயர் போனது. ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கல்வெட்டுகளைக் கண்டுள்ளது தமிழகம். (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.142)

    என்பதன் வழி ஏனைய மொழிக் கல்வெட்டுகளைக் காட்டிலும் தமிழ் மொழியில் உள்ள கல்வெட்டுகள் காலத்தால் முந்தியவை என்பதை அறியமுடிகின்றது. மேலும்,

    இன்று கிடைக்கும் கல்வெட்டுகளில் பழமையானவை பிராமி எழுத்துக்களால் ஆனவை. இவற்றைக் கீழ் வளைவு, மறுகால் தலை, ஆனைமலை, அழகர் மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தனை வாசல், திருவாதவூர்,  விக்கிரமங்கலம் போன்ற இடங்களில் காணலாம். இவற்றைப் பற்றிய செய்திகள் கிபி 1903 முதலே நமக்குக் கிடைக்கின்றன. (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.142)

    என்பதன் வழி தமிழகத்தில் கல்வெட்டுகள் கிடைக்கப்பட இடங்களை அறியமுடிகின்றது. அவ்வாறு கிடைக்கும் கல்வெட்டுகள், தமிழ், கிரந்தம், வட்டு எழுத்து ஆகிய மூன்று வகை எழுத்துக்களால்  பொறிக்கப்பட்டுள்ளன. மேலும்,

    தமிழகத்தின் தென் மாவட்டங்களிலுள்ள குகைகளில் பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்ட சிறிய கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. இவை பிராமி வரிவடிவத்தில் தெற்கத்திய முறையில் எழுதப்பட்டவையாகும். கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தொல் எழுத்தியல் (Paleography) ஆராய்ச்சி அடிப்படையில் இவற்றின் காலத்தைக் கிறிஸ்துக்கு முந்திய மூன்றாம் இரண்டாம் நூற்றாண்டுகள் என மதிப்பிடுகின்றனர். (தமிழ் மொழி வரலாறு, ப.46)

    எனவே கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் தமிழில் கல்வெட்டுகள் எழுதப்பட்டுள்ளன என்பது அறியப்படுகின்றது. இதுவே பழமை என்றல்ல மேலும் பழமையானக் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. கிடைத்துக் கொண்டும் உள்ளன. சமீப காலமாகத் திருச்செந்தூர் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கல்வெட்டுகளும் முருகன் சிலைகளும் பாறைகளும் கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • வெளிநாட்டார் குறிப்புகள்

    வெளிநாட்டினர்களான மெகஸ்தனிஸ், பெரிபுளூஸின் ஆசிரியர், ப்ளினி, தாலமி, சீன யாத்திரிகர் யுவன் சுவாங், மார்கோபோலோ போன்றவர்கள் குறிப்புகள் குறிப்பிடத் தகுந்தன. இவர்களின் குறிப்புகள் தமிழ் மொழியினுடைய பழமைக்குக் குறிப்பிடத் தகுந்த சான்றுகளாகின்றன.

    12. தமிழ் மொழியின் சிறப்பு

    தமிழ் மொழியில் முதல் எழுத்துக்கள் மொத்தம் 30 தான். அவை உயிர்- 12, மெய்- 18, உயிர்மெய் – 216, ஆயுதம் -1 என மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன.  இம்மொழி எழுதவும் படிக்கவும் ஏனைய மொழிகளைக் காட்டிலும் எளிமையானது என்பதை,

    தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல படிக்கவும் எளிது. தமிழில் ஒரு எழுத்துக்கு ஒரே ஒலியானதால் எவரும் எளிதாக எதையும் படிக்க முடிகிறது. (தமிழின் சிறப்பு, ப.15)

    என்றும், அதனை எழுதும் முறை எளிமையானது என்பதை,

    சீன, சப்பானிய மொழிகளின் எழுத்துக்களைப் போல் மேலிருந்து கீழ்நோக்கி எழுதுகிற அல்லது உருது மொழி எழுத்துக்களைப் போல வலப்புறமிருந்து இடப்புறம் நோக்கி எழுதுகின்ற கடினமான முறை தமிழுக்கு இல்லை. இடதுபுறமிருந்து வலப்பக்கம் நோக்கி எளிதாக எழுதலாம். (தமிழின் சிறப்பு, ப.16)

    என்றும் கூறப்பட்டுள்ளது.

    13. தமிழ் மக்களின் தோற்றம்

    தமிழ் மக்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் என்பதை முன்னமே கண்டோம். அவர்களின் காலம் என்ன என்பதை இன்றளவும் நம்மால் ஆராய்ந்தறிய முடியாததாகவே உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளிலும், 2300 ஆண்டு பழமை வாய்ந்த பிராமிய கல்வெட்டுகளிலும் தமிழ்மொழி குறிப்புகள் காணப்படுகின்றன.  2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோம் நாட்டை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழர்கள் அந்நாட்டுடன் உறவு கொண்டிருந்தார்கள். 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தில் என்மானார் புலவர், என்ப எனத் தொல்காப்பியரே குறிப்பிட்டுள்ளார். மேலும்,

    தமிழகத்தில் 3 கடற்கோள்கள் அடுத்தடுத்தும் தோன்றிக் கடல்நீர் நாட்டில் புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும்,  இது நடந்த காலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது. (தமிழின் சிறப்பு, ப.30)

    என்பதன் வழி ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இங்குத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறியமுடிகின்றது. அதுமட்டுமன்றி,

    காவிரிபூம்பட்டினத்தில் நிலைத்து நின்று வாழும் தமிழ் மக்களைப் “பதியெழு அறியாப் பழங்குடியினர்” என இளங்கோவடிகள் கூறுகின்றார். இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார், “படைப்புக் காலந் தொட்டே வாழுங்குடியினர்” எனக் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது, “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றி மூத்த குடியினர்” என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். (தமிழின் சிறப்பு, ப.26)

    என்கின்றனர். இவற்றின்வழி, தமிழ்மொழியின் தொடக்கக் காலம் என்பது அறுதியிட்டுக் கூற இயலாத வகையில் நீண்டு செல்கிறது என்பதை அறியமுடிகின்றது.

    14. தமிழ்மொழி செம்மொழி

    தமிழ் செம்மொழித் தகுதிக்குத் தொன்மை ஒரு முக்கியமான கூறுபாடாகக் கருதப்படுகிறது. தமிழின் தொன்மை உலகளாவிய ஒன்று. என்பதை,. “Apart from literature written in classical (Indo-Aryan) Sanskrit, Tamil is the oldest literature in India” (Encyclopedia Britannica. Vol.II.P.350) என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழையும், சமஸ்கிருதத்தையும் தொன்மையான இந்திய மொழிகள், செம்மொழிகள் எனக் கூறியிருக்கிறது.உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளைச் செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர்.

    15. செம்மொழித் தகுதி

    ஒரு மொழிக்குச் செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கின்றன. அவைகள், இலக்கியப் படைப்புகள், கலைப் படைப்புகள் இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப்படுகின்றன. அந்தவகையில், 2004-ம் ஆண்டுச் செப்டம்பர் 17-ம் நாள் நடைபெற்ற இந்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழைச் செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணை, 2004 அக்டோபர் 12-ம் நாள் வெளியிடப்பட்டது.

    • இலக்கியப் படைப்புகள்

    ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது.

    • கலைப் படைப்புகள்

    ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டடக் கலை, சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்.

    16. உலகச் செம்மொழிகள்

    16.1. தொல் பழமை

    சுமேரிய மொழி, எகிப்திய மொழி, பண்டைய பாபிலோனியம், மத்திய அசீரியம், வேத சமசுகிருதம், பண்டைய எபிரேயம், பண்டைய பாரசீகம், பண்டைய சீனம், பண்டைய கிரேக்கம், பண்டைய சமசுகிருதம், பண்டைய தமிழ், பண்டைய பாளி, பண்டைய இலத்தீன், பண்டைய மண்டேயம், பண்டைய சீரியாம், மத்திய பாரசீகம், பண்டைய கொப்டிக்

    16.2. திராவிட மொழிகள்

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

    16.3. இந்தோ-ஐரோப்பிய மொழிகள்

    கிரேக்க மொழி, சமசுகிருதம், இலத்தீன், பாரசீக மொழி

    16.4. ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள்

    அரபு மொழி, எபிரேயம்

    16.5. சீனோ-திபெத்திய மொழிகள்:

    சீன மொழி

    17. பழமை வாய்ந்த தமிழ்மொழி

    இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்குத் திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் மேற்பட்ட இலக்கிய பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ளக் கிரேக்கம், இலத்தீன் மொழிகள் போல் தற்போதைய இந்திய வரலாற்றை அன்றைய சேர, சோழ, பாண்டியர்கள், போன்ற வரலாற்றை அறியத் தமிழ், மொழி தேவையாக உள்ளது.

    18. செம்மொழிக்கான தகுதிகள்

    தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு, பிற மொழித் தாக்கமில்லா தன்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக் கோட்பாடு

    18.1. தொன்மை

    செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஓராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.

    18.2. தனித் தன்மை

    பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

    18.3. பொதுமைப் பண்பு

    உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

    18.4. நடு நிலைமை

    தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

    18.5. தாய்மைத் தன்மை

    தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விடச் சிறப்பானது.

    18.6. பண்பாட்டுக் கல்வியறிவு பட்டறிவின் வெளிப்பாடு

    தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கல்வியறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

    18.7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

    உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன. வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களைத் தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது. காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனைப் பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனித்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

    18.8. இலக்கிய வளம்

    தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாகத் தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும். சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

    தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாகப் புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்குக் கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமை மிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

    பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிறிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இன்புறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டைத் தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.

    தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது.

    இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

    தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இன்புறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.

    18.9. உயர் சிந்தனை

    இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கினும் மக்கள் சமூகத்திற்குப் பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையறப் பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

    18.10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

    தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

    ஏழைப்புலவரான சத்திமுத்தப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.

    “நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
    நீயு நின் மனைவியும் தென்திசை குமரியாடி
    வட திசைக்கு ஏகி விராயின்
    எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் டங்கி
    நனைசுவர்க் கூறைகளைக் குரற் பல்லி
    பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
    எங்கோ மாறன் வழுதி கூடலில்
    ஆடையின்றி வாடையின் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்திக்
    காலது கொண்டு மேலே தழீஇப்
    பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனும் எனுமே” (தனிப்பாடல் – சத்திமுத்தப்புலவர்)

    என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரைப் பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

    தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களைப் பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறியப் பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

    ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வைக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

    18.11. மொழிக்கோட்பாடு

    உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம்மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும் பண்புகள் தமிழுக்குண்டு.

    மொழியியலாளர் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களைத் திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர். ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தைத் தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன. எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறி பிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பைப் பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது. அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்றுத் தனித்தன்மை மாறாமல் தூய தமிழ்ச் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

    இந்த பதினோர் தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாம் என்பதுதான் தனிச் சிறப்பு சமஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு

    19. தமிழ்ச் செவ்வியல் நூல்கள்

    தமிழ் மொழி இலக்கியங்கள் ஐரோப்பியச் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சீனம், ஹீப்ரு, பாரசீகம், அரேபியம் ஆகியவற்றைக் காட்டிலும்  செறிவு மிக்கவை.  கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு அக்காலப்பகுதியில் தோன்றிய நூல்களைச் செவ்வியல் அவைகள்,

    19.1.இலக்கணம்

    தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள்

    19.2.சங்க இலக்கியம் – எட்டுத்தொகை

    நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

    19.3.பத்துப்பாட்டு

    திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்

    19.4.பதினெண் கீழ்க்கணக்கு

    நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது , இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணைஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழிஐம்பது, திணைமாலைநூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை

    19.5.காப்பியம்

    சிலப்பதிகாரம், மணிமேகலை,

    19.6. முத்தொள்ளாயிரம்

    ஆகியனவாகும்.

    20. முடிவுரை

    தமிழ்மொழி இந்திய மொழிகளில் பழமையானது என்பதும், தமிழர்களே இந்நாட்டின் பழங்குடிகள் என்பதும், சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களுடையதே என்பதும் இக்கட்டுரையின்வழி அறியப்படுகின்றது. அதுமட்டுமல்லாது சமஸ்கிருதம் உள்ளிட்ட எம்மொழியிலிருந்தும் தோன்றியதல்ல தமிழ்மொழி . அது சுயம்புவாக தானே தோன்றி மற்ற மொழிகளுக்கு தாயாக விளங்கக் கூடியது. இம்மொழியின் தோற்றத்தையோ இம்மொழி பேசும் மக்களின் தோற்றத்தையோ எக்கால எல்லைக்குள்ளும் அடக்க இயலாது. உயிர்கள் தோன்றிய காலத்தில் தோன்றிய மனித இனம் தமிழினம். இம்மொழி வணிகத்தாலும், படையெடுப்புகளாலும் பல்வேறு நாடுகளுக்குச் செல்லலாயிற்று. அதுமட்டுமன்றி இம்மொழியில் பல்வேறு மொழிச் சொற்களும் புகுந்துக் கொண்டது. இருந்தாலும் தன் தன்மை மாறாமல் இன்றளவும் நிலைத்து வருகின்றது. அது மட்டுமன்றி செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளையும் தன்னக்தே கொண்டு செம்மொழியாம் தமிழ்மொழி எனச் சீரிய நடைபயின்று வருகின்றது என்பது இவ்வாய்வுக்கட்டுரையின் வழி அறியப்பட்டது.

    துணைநூற்பட்டியல்

    1. அகத்தியலிங்கம், ச. திராவிட மொழிகள், (தொகுதி-1), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002.
    2. அகத்தியலிங்கம், ச. திராவிட மொழிகள், (தொகுதி-2), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002.
    3. மீனாட்சி சுந்தரனார், தெ. பொ. தமிழ் மொழி வரலாறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2022.
    4. மீனாட்சி சுந்தரனார், தெ.பொ. தமிழும் பிற பண்பாடும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1998.
    5. விசுவநாதன், கி.ஆ.பெ. தமிழின் சிறப்பு, பாரி நிலையம், சென்னை, 1993.
    6. ஜான் சாமுவேல், ஜி. திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஆசியவியல் நிறுவனம், சென்னை, 2001.
    7. Encyclopedia Britannica. Vol.II.
    8. https://www.tamilvu.org/courses/hg300/hg304/html/hg304tso.htm

    மதிப்பாய்வறிஞரின் கருத்துரை

    Ø தனது மொழிச் செல்வப் பெருமையையும் பண்பாட்டு விழுமியத்தையும் கருத்திற் கொள்ளாமல் நடப்பியல் சார்ந்த, பயனற்ற ஒரு அலங்கார வாழ்வுக்குத தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச சமுதாயத்திற்குக், குறிப்பாக இளைஞர் சமுதாயத்திற்குப் பயன்படும் ஒரு கட்டுரை இது.

    Ø திராவிட மொழிகள் பற்றி உலகந்தழுவிய அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கருத்துக்களை நிரலாகப் பயன்படுத்தியிருப்பதும் இந்திய மொழிக்குடும்பங்களைப் பற்றிய பகுப்பும் வரலாற்றுப் பின்புலமும் மொழியியல் ஆய்வு மாணவர்களுக்குப் பெருந்துணையாகலாம்.

    Ø “உயர்பதவியில் இருப்பதனாலேயே அனைத்தும் தெரிந்தவர்கள்” என எண்ணிக் கொள்ளும் போலிகள் வலம் வரும் காலத்தில், வலிமையான தரவுகளோடும், பொருத்தமான மேற்கோள்களோடும் கட்டுரை அமைந்திருப்ப்து ஒரளவு ஆறுதலைத் தருகிறது.

    Ø ஆய்வு நெறி முற்றாகப் பின்பற்றப்படவில்லை எனினும் அதற்குப் பங்கம் ஏற்படாத அளவுக்குக் கட்டுரை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Ø பத்தி பிரிப்புக்களிலும் அவற்றுக்கு எண் மற்றும் பகுப்பு எண் கொடுப்பதிலும் ஆய்வாளர் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சான்றாகச் செம்மொழிக்கான தகுதிகள் என்னும் பத்திக்கு எண் கொடுக்காமல், அதன் துணைப் பிரிவுகளுக்கு எண்கொடுத்திருப்பதைச் சுட்டலாம். செம்மொழிக்கான தகுதிகள் என்னும் பத்திக்கு எண் 11 என்றால் தொடர்ந்து வரும் உட்தலைப்புக்கள் 11.1. 11.2 11.3 11.4 என்று அமைந்திருக்க வேண்டும். அதுதான் ஆய்வு நெறி. இதுபோன்றே கட்டுரையின் அனைத்துப் பத்திகளுக்கும் உட்தலைப்புக்களுக்கும் எண் கொடுத்திருந்தால் கட்டுரை இன்னும் சிறந்திருக்கும்.

    Ø சராசரியாகப் பக்கத்திற்கு ஐந்தென நூற்றுக்கும் மேற்பட்ட ஒற்றுப்பிழைகள் நீக்கமற இலங்கும் இறைவனைப் போல் கட்டுரை எங்கும் பரந்து கிடக்கின்றன. “மொழி என்பது ஒருவர் தன் உணர்வுகளை (ப்) பிறருக்கு அறிவிக்கப் பயன்படும் ஓர் தொடர்பு (க்) கருவியாகும்.” என இரண்டு ஒற்றுப் பிழைகளோடுதான் கட்டுரையே தொடங்குகிறது. வல்லினம் மிகுதலும் மிகாமையும் செம்மொழியான தமிழின் தனிச்சிறப்பல்லவா?


     

    Share
  • (Peer Reviewed) உள்ளடக்கம் : யாத்வஷேம், ஆயிரம் சூரியப் பேரொளி

    (Peer Reviewed) உள்ளடக்கம் : யாத்வஷேம், ஆயிரம் சூரியப் பேரொளி

    முனைவர் செ.ர. கார்த்திக் குமரன்

    தொடக்கமாக

    சமகால நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகளில், மொழிபெயர்ப்புப் பிரதிகளானது, தொடர்ந்து சில பதிப்பகங்களால் வெளிவந்து கொண்டிருப்பதால்தான் தேசியம் மற்றும் உலகளாவிய நாடுகளில் நிகழ்ந்த/நிகழ்கின்ற சமூகப் பொருளாதார அரசியல் நிலைகளை அறிந்துகொள்ளவும் முடிகின்றன. இதன்வழி, வாசிப்புத் தளத்தின் பரப்பானது விரிவடைவதுடன், பல்வேறு விதமான மாற்றங்களுக்கும் சிந்தனைகளுக்கும் நம்மை இட்டுச்செல்கின்றன. இதனால் பல புதிய எழுத்தாளர்கள் வாசகர்களுக்கு அறிமுகமாவதோடு, அவர்களின் நிலம் சார்ந்த பிற படைப்பாளர்களின் படைப்புகளையும் வாசிக்க வேண்டிய தேவையையும் தூண்டுதலையும் ஏற்படுத்தி விடுகின்றன. தமிழில் எழுதப்படுகிற ஆழ்ந்த, மிகநுட்பமான கருத்தாக்கங்களை உள்ளடக்கங்களாகக் கொண்ட தரமிகு படைப்புகளை வாசிக்க நேரிடும்போது, அதன் உருவம், சூழல், இடம், காலம் போன்ற இலக்கண வரையறைகளை(புனைகதை) மீறியும் பாதிப்பினை உண்டாக்கியும் தனக்கான தனித்த இடத்தினை அப்பிரதி பெற்றுவிடுகிறது. இதேபோல மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய பிற மொழிகளிலுள்ள இலக்கியத் தரமான படைப்புகளைத் தேடி வாசிக்கவும் வழிவகுக்கிறது. மேலும், அந்தியமொழி சார்ந்த படைப்புகளும் தமிழில் வெளிவருவதன் பொருட்டு, அப்பிரதிகளையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே தோன்றிவிடுகின்றன.

    தமிழ்ப் புனைகதைப் படைப்புத் தளத்தில் பெரும்பங்காற்றிய படைப்பாளர்கள் பலர் இருப்பினும் அவர்களில் குறிப்பிட்டத்தக்கவர்களே தங்களின் படைப்புகளினூடாக மாற்று கருத்தாக்கத்தினை புதியதொரு நடையில் எழுத்துருவாக்கியுள்ளனர். இத்தன்மையானது பிராந்திய மற்றும் அந்திய மொழிகளிலுமே தங்களின் படைப்புகளின் ஊடாகக் காணமுடிகின்றன. இப்படிப்பட்ட பிரதிகள் காலந்தோறும் ஒரு சில படைப்பாளர்களால் படைக்கப்பட்டு, அது உலகம் தழுவிய அளவில் கவனமும் அதற்கான அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கப்பெறுகின்றன. இந்தியாவில் ஞானபீடம், சாகித்தி்ய அகாதெமியும் உலகயளவில் நோபல், புக்கர் போன்ற பரிசுகளும் படைப்புத் தடத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் ஒரு கௌரவமாகவும் பொருளாதார ரீதியில் அவர்களின் எழுத்துலக வாழ்க்கைக்கு சிறந்ததொரு பயனையும் தரவல்லதாக இருக்கின்றது. இத்துடன், இலக்கியம் குறித்த கவனத்தை, பொதுமக்களிடையேயும் கல்விசார் மக்களிடையேயும் ஏற்படச் செய்து, மற்ற படைப்பாளர்களை ஊக்குவிக்கவும் செய்கின்றது. இதனால், இப்படைப்புகள் மட்டுமே சிறந்தது என்று எண்ணுதலால் பயன்தராது. இப்பிரதிகளைப்போலவே அல்லது இதற்கும் மேம்பட்ட படைப்புகளைத் தேடியடைந்து வாசிக்கும் போதுதான் இலக்கியத் தரம் பற்றிய புரிதலை அறியமுடியும்.

    காலமாற்றித்திற்கேற்ற வகையில் இப்புனைகதை வடிவங்களும் மாற்றம்பெற்றே வந்துள்ளன என்பதை வாசிப்பினூடே உணர்ந்துகொள்ள முடியும். எனினும் கடந்தகாலத்தில் நிகழ்ந்த வரலாறுகளை, தற்காலச் சூழலோடு பொருத்திப் பார்க்கும் விதமாகவும் நிகழ்கால அரசியலின் தன்மைகளையும் அதன் தீவிரத்தினையும் எடுத்துரைக்கும் நடையிலும் படைப்புகள் படைக்கப்படுகின்றன. அந்தவகையில், கன்னட மொழிப் படைப்பான நேமிச்சந்த்ராவின் ‘யாத்வஷேம்’(yaad vashem) என்ற பிரதியும் ஆப்கான் எழுத்தாளரான காலித் ஹூசைனியின் ‘ஆயிரம் சூரியப் பேரொளி’(A Thousand Splendid Sons) ஆகிய இரு மொழிபெயர்ப்புப் படைப்புகளின் தனித்தன்மையை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளன. தங்களின் அரசியல் ஆளுகைக்கு கீழ் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளையும் அதனால் அந்நிலப்பகுதிசார் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை உள்ளடக்கங்களாகக் கொண்ட இவ்விரு படைப்புகளின் வழி காணலாகிறது. மேலும், இது சமகால பன்னாட்டு அரசியல் சார்ந்த செயல்பாடுகளின் நோக்கங்களையும் இதனால் இந்திய அரசியல் சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்களை அறிவதற்கும் இப்புனைவுகளை ஆராய்வது அவசியமாகின்றன.

    யாத்வஷேம் : நேமிச்சந்த்ரா

    கர்நாடக சாகித்ய அகாதமி விருதுபெற்ற ‘யாத்வஷேம்’ நேமிச்சந்த்ரா என்ற பெண் எழுத்தாளரால் படைக்கப்பட்டுள்ளது. இவருடைய ‘ஒளிக்கொரு கிரணம் மேரிக்யூரி’, ‘பெருவின் புனித பள்ளதாக்கில்’ ஆகிய நூல்களும் இந்த விருதினைப் பெற்றுள்ளது. பொறியியலாளரான இவர், இந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிடெட், பெங்களூரில் டிசைன் எஞ்சினீயராகவும், ஜெனரல் மேனஜராகவும் பணியாற்றியவர். இலக்கியம், அறிவியல், பெண்களைப் பற்றிய ஆய்வு, பயணம் ஆகியவற்றில் முக்கிய விருப்பங்கள் கொண்ட இவர், முப்பது நூல்களை கன்னடத்தில் எழுதியுள்ளார். ‘தான சிந்தாமணி அத்திமப்பே’ விருது, ‘சிவராமகாரந்த’ விருது, ‘மாஸ்தி வெங்கடேச ஐய்யங்கார்’ விருது, ‘கிருஷ்ணானந்த காமத்’ விருது என இலக்கியத்திற்காக பல விருதுகளைப் பெற்றவர். இத்துடன், ‘சொசைட்டி ஆஃப் இண்டியன் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி அண்ட் இண்டஸ்ட்ரீஸ்’ அளித்த ‘விமன் அச்சிவர் இன் ஏரோஸ்பேஸ்’ விருதும் கிடைத்துள்ளது.

    கே. நல்லதம்பி என்பவரால் இந்நாவலானது, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அக்டோபர் 2020இல் எதிர் வெளியீடாக வந்துள்ளதோடு, 2022ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது. உலகம் முழுமைக்கும் தன் ஆளுகைக்குள் கொண்டு வர நினைத்த ஜெர்மனியின் அதிபரான ஹிட்லர் பற்றிய வரலாற்றினை இப்பிரதி எடுத்துரைக்கிறது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் வசித்துவரும் ஒரு யூத குடும்பம் ஹிட்லரின் ஆட்சியினால் அம்மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து காந்தியின் மண்ணிற்கு(பம்பாய்) வந்த குட்டி யூதச் சிறுமியின்(ஹ்யானா-அனிதா) கதைதான் யாத்வஷேம். யூதர்களின் உலகை திறந்துகாட்டும் விதமாக பன்னிரண்டு ஆண்டுகால உழைப்பின் உருவானது. ஜெர்மனி, நியூயார்க், இஸ்ரேல் ஆகிய நாடுகளில், ஹிட்லரால் வதைமுகாம்களில் கொல்லப்பட்ட யூதர்களின் பெயர்ப்பட்டியலோடு கூடிய அருங்காட்சியங்கள் பற்றிய தகவல்களையும் இன்னபிறவற்றையும் அகற்றமுடியாத வலியோடு இப்பிரதி புலப்படுத்தியுள்ளன.

    ஹிட்லர் தனது ஆட்சி அதிகாரத்தினூடாக அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள், மருத்துவர்கள் ஆகியவர்களின் துணைகொண்டு, ஆஷ்விட்ச் மற்றும் ஆர்ம்ஸ்டர்டாம் என்ற இரு வதைமுகாம்களை உருவாக்கினார். இதன் வழி யூதர்களை (ஆறு மில்லியன்) பேரழிவிற்குள்ளாக்கி, உலகிலுள்ள ஒட்டுமொத்த மனிதசமூகத்திற்கும் அச்சத்தை விளைவித்ததோடு, உலகையே தன்வசப்படுத்த நினைத்தார்.  அதனால் அன்று பற்றி எரிந்தது ஜெர்மனி; நின்று பார்த்தது உலகம். ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்ட (மக்களின்) தேசிய அடையாள அட்டையின் தரவுகளால்தான் யூதர் என்ற இனமே தம்சொந்த மண்ணில் வாழமுடியாமல், பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழநேர்ந்தது. இப்பிரதியும் ஒரு குடும்பத்தின் சீர்குலைவையும் அதில் உயிரோடிருக்கும் பெண்ணின் நினைவுத்தடமும் தேடலுமே இதன் உருவம்.

    பல சாதி, சமய, இனங்களையும் பன்முகப்பட்ட கலாச்சாரங்களையும் கொண்ட இந்தியாவில் பம்பாய்க்கு வரும் ஹ்யானா என்ற அனிதாவும் அவளுடைய தந்தையாரும் இங்கு காணநேரும் ஓர்மையுள்ள வாழ்வியலையும் தன்னுடைய நாட்டிற்குமான நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இத்துடன், அவர்கள் நம்பவேமுடியாத அளவிற்கு, ஆயிரம் சாதிகளுக்கு நடுவிலும் வாழக்கூடிய இந்தியாவின் ரகசியத்தை இம்மண்ணிலுள்ள குடும்பங்களின் வழி  கண்டுணர்கின்றனர். தன்னுடைய தந்தை, தாய், அக்கா(ரெபேக்கா), குட்டிதம்பி(ஐசாக்) ஆகியோருடன் ஹ்யானா இன்பமான வாழ்வியலை மேற்கொண்டார். 1933இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிற்பாடு, தன் குடும்பமே சிதைவுறுகிறது. தந்தையும் ஹ்யானாவும் தப்பித்து, நாட்டை விட்டு வெளியேற, மற்ற மூவரும் நாஜி காவலர்களால் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களின் நிலையை அறியவேண்டும் என்ற எண்ணம் ஹ்யானாவிற்குள் சதாகாலமும் எழுகிறது. அவள் விவேக்கை திருமணம் செய்து கொள்கிறாள். விசு என்ற ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள்.

    தன் சொந்த மண்ணை விட்டு வந்து, ஏறத்தாழ 55வருடங்களை கடந்த பின்னும் தன் குடும்ப நபர்களைத் தேடி ஆர்ம்ஸ்டர்டாம், டகாவ், நியூயார்க், வாஷிங்டன் டி.சி., டெல் அவிவ், ஜெரூசலம் ஆகிய நகரங்களுக்குச் செல்கிறாள். இதன்வழி அவள் அடைந்த உணர்வுகளையும் அத்தேடலினூடாக ரெபேக்காவை கண்டைந்ததையும் இப்பிரதி விவரிக்கிறது. இத்துடன், நாஜி ஹிட்லர் வதைமுகாம்களிலும் ஜெர்மனியில் உள்ள மக்களின் மீதும் செய்த கொடூரத்தினை, அவலங்களை ரெபேக்காவின் வழி உலகிற்கு எடுத்துரைத்துள்ளார் நேமிச்சந்த்ரா.

    “மனது எங்கோ ஓடியது. யார் மீதமிருக்கலாம், என் வம்சத்தில், அப்பாவின் இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கை, அம்மாவின் மூன்று தம்பிகள், அம்மா, அக்கா, சின்னத் தம்பி – என் இரத்தத்தைப் பகிர்ந்துகொண்ட யார் மீதமிருக்கலாம்? உயிருடன் இருப்பார்களா? தேடலாமா? என் வாழ்க்கையில் என்றாவது ஐரோப்பாவிற்குப் போவேனா. ஒவ்வொரு  கதவாகத் தட்டி இமா இருக்கியா? ரெபேக்கா எங்கே இருக்கே? ஐசாக், என் குட்டிக் கண்ணா எங்கே இருக்க? தேடமுடியுமா. என்றாவது தெரியவருமா, என்னவர்கள் என்ன ஆனார்கள் என்று, என் வம்சத்திக் கதை? என் பிள்ளைகளுக்கு, பேரக்குழந்தைகளுக்கு என் அத்தையைப் போலவே நானும் என் வம்சத்தின் கதைகளைச் சொல்லமுடியுமா?

    என்னவென்று சொல்வேன், பெர்லின் பால்யத்தின் இனிமையான நினைவுகளை இரத்தம் பொதிந்த இரவுகள் துரத்திக்கொண்டு வருகின்றன.”1 என்ற பதற்றமான, மனதிலிருந்து ஆறாத வலியுடன்கூடிய வாழ்வையே யூதர்கள் பெற்றுள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது. சர்வதிகாரியின் ஆட்சியில் ஆயிரம் ஆயிரம் யூதர்கள், தங்களின் பூர்விகத்தை விட்டு, அவரச, அவசியமாக வெளியேறி, உயிரைத் தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கெதிராக யாரும் செயல்பட முடியாத சூழலையும் நாஜிகள் ஏற்படுத்தியிருந்தனர்.

    “அறுபது லட்சம் யூதர்களையும், கணக்கில்லாத கம்யூனிஸ்ட்களையும், உடல் ஊனமுற்றோரையும் கொடூரமாகக் கொன்று குவித்த போதிலும், நாஜி ஜெர்மனியில் ஹிட்லருக்கு எதிரான குரல் கேட்கவில்லை விவேக். மக்கள் வீதியில் இறங்கி மற்றொரு கூட்டத்து மக்களின் மீது நடக்கும் மனிதத்தன்மையற்ற சுரண்டலை எதிர்க்கவில்லை. வரலாற்றின் இரத்தம் தோய்ந்த பக்கங்கள் அன்றே முடிந்துவிட்டன என்று எனக்குத் தோன்றவில்லை விவேக். இது ஒரு ஹிட்லரின் மதி இழந்த நீதியால் நடந்த வரலாற்றுச் சோகச் சம்பவம் அல்ல. நன்கு யோசித்துத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் அவை…”2 என்கின்ற தன்மையில் ஹிட்லர், தான் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் செய்த கொடூரங்களானவை, முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு, அதை நடைமுறைப்படுத்தியதே. 1935இல் ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டமானது,  முக்கியமாக யூதர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது. யூதர்களின் நாகரிகம், சமுதாய, உத்தியோக உரிமைகளை முடக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. ஆரியர்கள் அல்லாத இனத்தவருக்கு அது அச்சுறுத்தலாக இருந்தது. அச்சட்டம் பலருக்கு வரும் துன்பவெள்ளத்திற்கான  முன் அறிவிப்பை தந்தது. இதனால், யூதர்கள் ஜெர்மனியை விட்டு வெளியேறும் வழிகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். பல தலைமுறைகளாக வேர்விட்டு வளர்ந்த யூதர்களின் நிலத்தை திருடி, அவர்களை வேரோடு பெயர்த்துவிடும் பயங்கரத் திட்டமாக இருந்தது. இதன் விளைவே பின்னாட்களில் வதைமுகாம்களை உருவாக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தார் என்பதை வேதனையுடன் அறியமுடிகிறது.

    தான் விரும்பியது எதையும் சாதிக்கமுடியாத சிறுவன் ஆடோல்ஃப். பள்ளியில் தேறாத, திருமணம் ஆகாதவர்களுக்குப் பிறந்தவன். தோல்வியின் யதார்த்தில் துவண்ட அவன் மனது, சகிப்பின்மை, கோபம், வெறுப்புக்களை மட்டுமே கொண்டு வளர்ந்துள்ளான். இதனால்தான் மரணமுகாம்களை எழுப்பி, தமக்குள் இருக்கும் இருள் நிறைந்த இரகசிய பாகத்தின் வழி, மற்றொருவரின் சாவை இத்தனை அமைதியாகச் செய்தான் போலும். எனினும் ஹிட்லர் மனித வரலாற்றில் தன்னந்தனியாக தோன்றியவன் இல்லை. மனித வாழ்க்கையில், பன்முகப்பட்ட எதிர்பாராக் கொடூரங்களைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதற்கு ஒரு உதாரணம்தான் ஆடோல்ஃப் ஹிட்லர். இக்குணம் சமகாலத்தில் வாழும் மக்களின் உள்ளுணர்வுகளிலும் அதிகாரம் செய்வோரிடத்தும் மறைமுகமான தன்மையில் இருந்துகொண்டேதான் உள்ளன என்பதனையும் நேமிச்சந்த்ரா இப்படைப்பினூடாக எடுத்தியம்புகிறார்.

    ஆயிரம் சூரியப் பேரொளி : காலித் ஹூசைனி

    ஆப்கானிஸ்தான் எழுத்தாளரான காலித் ஹூசைனி எழுதிய நாவல்தான் ஆயிரம் சூரியப் பேரொளி(A Thousand Splendid Sons). தமிழில் ஷஜிதா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு, ஜனவரி 2020இல் (எதிர் வெளியீடு) இந்நாவல் வெளிவந்தது. 1965இல் காபூலில் பிறந்த காலித் ஹூசைனி, 1978இல் அங்கு உருவான மக்கட் புரட்சியைத் தொடர்ந்து நிகழ்ந்த ரஷ்யர்களின் ஊடுருவலுக்குப் பிறகு 1980இல் அவருடைய குடும்பத்தினர் அங்கிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். 32 வருடங்களாக உலக அளவில் அதிகமான அகதிகளை உண்டாக்கும் நாடாக, ஆப்கானிஸ்தான் அறியப்பட்டிருக்கிறது. 2006இல், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகமைக்கு அமெரிக்காவின் நல்லிணக்கத் தூதுவராக அவர் நியமிக்கப்பட்டார்.  தன்னுடைய தாய்நாட்டிற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பவும் எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபடவும் தாயகம் திரும்பும் மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் தன் மருத்துவப்பணியையே கைவிட்டிருக்கிறார்.

    ஆப்கானில் தொடர்ச்சியான அந்தியப் படையெடுப்புகள், ஆட்சிக் கவிழ்ப்புகள் ஆகியவற்றால் அலைவுகளுக்குட்பட்ட நாட்டில் பல நூற்றாண்டுகளாக இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்திருந்த அந்நாட்டின் பெண்களுக்கு, முஜாஹிதீன்கள் மற்றும் தாலிபன்கள் மதத்தின் பெயரால் நிகழ்த்திய வன்முறைகளைப் பதிவுசெய்யும் விதமாகவே இந்நாவல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் வெளிவந்த ‘பட்ட விரட்டி’ (The Kite Runner) என்ற நாவலும் ஆப்கானில் நிகழ்ந்த கொடூரங்களையும், இனவெறி, மதவெறி மற்றும் ஆதிக்கவுணர்வினால் ஏற்படும் சிக்கல்களையும் அமீர், ஹசன் என்ற இரு கதாபாத்திரங்களின் ஊடாக எழுத்துருவாக்கியுள்ளார். இத்துடன், ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, சோவியத் படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம் மற்றும் தாலிபன் ஆட்சியின் காலகட்டங்களை புலப்படுத்தும் விதமாக இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இவருடைய நாவல்கள் உலகெங்கிலும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கோடிக்களுக்கு மேல் விற்பனையாகியும் சிறந்த கதைசொல்லியாகவும் திகழ்கிறார். உலகில் உள்ள சிறந்த பத்திரிக்கைகள் இவருடைய கதை சொல்லும் திறனையும் நடை மற்றும் பாணியையும் நாவலுக்கான எல்லா நுணுக்களையும் தன் எழுத்தில் கொண்டிருப்பதாக கருத்துரைக்கின்றனர்.

    மரியம் மற்றும் லைலா என்ற இரு பெண் கதாபாத்திரங்களின் வழி தாலிபன்களின் கொடுங்கோலாட்சியில் பெண்கள் அனுபவித்த அல்லல்களை, நீக்கவொண்ணா துயரங்களை உலகிற்கு தன் ஆற்றல்மிக்க எழுத்தினால் வெளிப்படுத்தியுள்ளார். ஹெராத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குல்-தமானில் மரியம் ஹராமில்(முறைகேடாகப் பிறந்தவர்) பிறந்தவள். ஹெராத்தில் செல்வசெழிப்புடன் வசிக்கும் ஜலீல் தான் அவளுடைய தந்தை. மரியத்தை நாணா பிரசவித்த 1959இல் வசந்தத்தின் ஈரப்பதமான மழைநாளில், ராஜா ஜாஹிர் ஷாவின் மகாமோசமான 40 ஆண்டுகால ஆட்சியின் 26 ஆவது வருடத்தில் நிகழ்ந்தது. வலிப்புநோயின் காரணமாக நாணா இறந்துவிட மரியத்தை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் ஜலீல். இதனைப் பொறுத்துகொள்ள முடியாத கதீஜா(ஜலீலின் முதல் மனைவி) மற்றும் அவருடைய குடும்பத்தினர் 15 வயதான மரியாவுக்கு, 45 வயதிலிருக்கும் ரஷீதை திருமணம் செய்வித்து, காபூலுக்கு அனுப்பப்படுகிறாள்.

    லைலா தன் பெற்றோர்களான ஹக்கீம், ஃபர்பீனுடனும் சகோதரர்களான அஹமத், நூருடன் காபூலில் வாழ்ந்து வருகிறாள். இராணுவத்தில் சேர்ந்த அவளுடைய சகோதரர்கள் போரில் இறந்துவிட, அதன் காரணமாக பெஷாவருக்கு செல்ல நினைக்கின்றனர். பயணத்திற்கு தயாராகும் நிலையில்,

    “லைலா புத்தகங்களைத் தன் பாதங்களின் கீழே போட்டாள். கண்களின் மீது ஒரு கையால் அரண் அமைத்தாள். மேலே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தாள்.

    பிறகு, ஒரு ராட்சத உறுமல் கேட்டது.

    அவளுக்குப் பின்னால், வெண்ணொளிச் சிதறல் ஒன்று எழுந்தது.

    அவளுடைய பாதங்களுக்குக் கீழே பூமி நழுவியது.

    சூடான, சக்திமிக்க எதுவோ ஒன்று, பின்னாலிருந்து பாய்ந்து அவளுக்குள் மோதியது. அவளுடைய செருப்புக்களை, அவளுடைய பாதங்களில் இருந்து அது உதறச்செய்தது. அவளை உயரே தூக்கியது. இதோ அவள் பறக்கிறாள், விண்ணில் சுற்றிச் சுழல்கிறாள், வானத்தைப் பார்க்கிறாள், பிறகு பூமியை, வானத்தை, பிறகு பூமியை. எரிந்துகொண்டிருந்த மரத்துண்டு ஒன்று அவளை உராய்ந்துகொண்டு பறந்தது. ஆயிரக்கணக்கான கண்ணாடிச்சில்லுகளும் அப்படியே பறந்ததில் அவளைச் சுற்றிப்பறந்த ஒவ்வொரு தனிச் சில்லையும் லைலா பார்த்தாள். மெல்லச் சுழன்று பறந்த அவற்றின் மீது சூரிய ஒளி பாய்ந்தது. சிறிய அழகான வானவில்கள் ஒளிர்ந்தன.

    பிறகு, லைலா சுவரில் மோதினாள், நொறுங்கித்தரையில் வீழ்ந்தாள், அவளுடைய முகத்திலும், கைகளிலும், மண்ணும், கண்ணாடிச்சில்லும், கற்களும் குவித்தன. கடைசியாக அவள் உணர்ந்தது அவளுக்கு அருகில், மண்ணில், சப்தத்துடன் ஏதோ விழுந்ததை. ரத்தக்களரியான ஏதோ ஒன்று. அதன் மீது, சிவப்பு பாலத்தின் முனை, கனத்த பனிக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தது தெரிந்தது.

    அவளைச்சுற்றி உருவங்கள் நகர்ந்தன. மேற்கூரையிலிருந்து மஞ்சள் விளக்கொன்று எரிகிறது. ஒரு பெண்ணின் முகம் தோன்றுகிறது. அவளிடம் குனிகிறது.

    லைலா மீண்டும் இருளுக்குள் கரைந்தாள்.”3  திடீரென நிகழ்ந்த ஏவுகணை தாக்குதலினால், தன் பெற்றோர்கள் இறக்க, மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பித்து, மரியத்திடம் உதவியைப் பெறுகிறாள். ரஷீத் அவளிடம் உறவுகொண்டு, அஸீஸைப் பெற்றெடுக்கிறாள். பிறகு, அவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல், இருவரும் பெஷாவருக்கு செல்ல திட்டமிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு நிகழும் பிரச்சினைகளையும் தாலிபன்களால் ஆப்கானில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் சொல்வதாக கதை நகர்கிறது.

    ஆப்கானிஸ்தான் நிலத்தில் துப்பாக்கி குண்டுகள், ஏவுகணைத் தாக்குதல்கள், ரஷ்ய இராணுவம், தாலிபன்கள், அமெரிக்கா துருப்புகள் மற்றும் CIA, அரசு நடவடிக்கைகள், அரசியல் பூசல்கள், அல்கொய்தா போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கையே(நொடிக்குநொடி) பெரும் இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆளாவதை இப்பிரதி முழுமைக்கும் காலித் பதிவுசெய்துள்ளார். 1959ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை ஏறத்தாழ 52 வருடங்களில் ஆப்கானிய மண்ணில் நிகழ்ந்த அரசியல் வரலாற்றினை உலகிற்கு எடுத்துரைத்துள்ளார். இத்துடன், இந்நிலத்தை தங்களுக்கு ஏதுவான முறையில் பயன்படுத்திக்கொண்ட வல்லரசு நாடுகளின் சூழ்ச்சியினையும் இதனால் தங்கள் நாட்டிற்குள் நிகழ்ந்த வன்முறைகளை, இழப்புகளை (World Trade Center, New York, The Pentagon – Sep 11, 2011)  இந்நாவலினூடாக அறியநேர்கிறது.

    “ஏப்ரல் 27 அன்று மரியத்தின் கேள்விக்கு, பலத்த வெடிச்சதப்தமும், திடீரென்றெழுந்த கடுமையான முழங்கோசைகளும் பதிலாக வந்தன. வெறுங்கால்களோடு வரவேற்பறைக்கு ஓடியவள், ஏற்கனவே அங்கே கலைந்த தலையும், பனியனுமாக, சன்னல் கண்ணாடியில் உள்ளங்கைகளைப் பதித்துக்கொண்டு ரஷீத் நின்றிருப்பதைக் கண்டாள். அவனுக்கு அடுத்திருந்த சன்னலுக்கு அவள் ஓடினாள். வானத்தில் ராணுவ விமானங்கள் வடக்கு நோக்கியும் கிழக்குப்புறமாகவும் சீறிக்கொண்டு பறப்பதைப் பார்த்தாள். செவிடாக்கக்கூடிய அவற்றின் அலறல் அவளுடைய காதுகளை நோகச் செய்தது. தொலைதூரத்தில் பலத்த வெடியோசைகள் எதிரொலிக்க, திடீர் புகை மண்டலங்கள் கிளம்பி விண்ணுக்கு உயர்ந்தன.

    “என்ன நடக்கிறது ரஷீத்? என்ன இது?” அவள் கேட்டாள்.

    “இறைவனுக்குத்தான் தெரியும்.” அவன் முணுமுணுத்தான்.”4 யாரும் எதிர்பாராத சமயத்தில் நிகழும் ஏவுகணை தாக்குதல்களாலும் குண்டுவெடிப்புகளாலும் உயிர்கள் பலியாவதும் உடல் பாகங்கள் சேதமடைந்து ஊனமாவதும் தொடர்ந்து ஏற்படுகின்றன. தங்களுடைய வாழ்வே எவ்வித பிடிமானம் அற்று, எந்நேரமும் பதைபதைப்புடன்கூடிய சூழ்நிலை இருப்பதால்தான், அம்மக்கள் பெஷாவர், ஈரான், கனடா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். பாகிஸ்தானில் மட்டும் ஏறத்தாழ 2 மில்லியன் ஆப்கானிய மக்கள் அகதிகளான வந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்கப்பெறாமல், ஒரு பகுதி மக்கள் நாடோடிகளாக இருக்கும் நிலையில், உலகத்திலுள்ள பிறர் சகலவிதமான வசதி வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இதனை உலகம் தழுவிய பிரச்சினையாக அல்லாமல் தங்கள் தங்கள் நாடுகளுக்குரிய அரசியல் சார்ந்த பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. இதன் விளைவே தீவிரவாதம் உருவாவதற்கு ஒரு முக்கியக் காரணியாக அமைந்துவிடுகிறது.

    “சோவியத் யூனியன், திகைப்பூட்டும் விதத்தில் படுவேகமாக நொறுங்கியது. சில வாரங்களுக்கொருமுறை, முறையே, லித்துவேனியா, எஸ்டோனியா, உக்ரைன் போன்ற குடியரசுகளுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட, பாபி வீடு திரும்பும் போதெல்லாம் இப்படியான செய்திகளோட வருவதாக லைலா நினைத்தாள். க்ரெம்ளினின் மீது சோவியத்தின் கொடி தாழப்பறந்தது. ரஷ்யக் குடியரசு பிறந்தது. … 1978 இலிருந்து 1992 வரை பெண்கள் அனுபவித்துவந்த சுதந்திரமும் வாய்ப்புகளும் இப்போது மறந்துபோன விஷயங்களாகிவிட்டன. ஆஃப்கானிஸ்தானின் பெண்களுக்கு  இது ஒரு நல்ல காலம் லைலா என்று பாபி சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. 1992 ஏப்ரலில், முஜாஹிதீன்களின் கைகளுக்கு ஆட்சி மாறியது முதல், ஆஃப்கானிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு என்று வழங்கப்பட்டது. … அவர்கள் கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தின் விதிமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, பெண்களை, முழுவதுமாக மூடிக்கொள்ளச் சொல்லும், உறவினரான ஒரு ஆணின் துணையில்லாமல் அவர்கள் பயணம் செய்வதைத் தடுக்கும், முறையற்ற தொடர்புகளுக்கு கல்லால் அடித்துக்கொலை செய்யும் தண்டனையை அளிக்கும், ஷரியத் மற்றும் கண்டிப்பான இஸ்லாமியச் சட்டங்களை இயற்றத்துவங்கினார்கள்.”5 உலக வல்லரசுகள் செய்த சூழ்ச்சியால், சோவியத் யூனியன் 1992இல் நொறுங்கியது. அதனைச் சார்ந்த பிற நாடுகள் சோவியத்துடனான தொடர்பை இழந்தன. இவ்வல்லரசுகளை எதிர்க்கும் விதமாகவும் தன்னுடான நாட்டை இணைக்க முயற்சிக்கும் போக்கிலேயே இன்றைய உக்ரைனூடான போரை ரஷ்யா தொடுத்துள்ளது எனலாம்.

    ஆஃப்கானில் பெண்களுக்கு முழுசுதந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது. உயர்கல்வி வரையிலும் அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் பணிபுரிந்தார்கள். இதனைத்தான் காலித் ஹூசைனி தன் எழுத்துகளில் பதிவுசெய்கிறார். ஆனால், தற்போது(30.12.2022-பிபிசி) பெண்கள் கல்விகற்கும் உயர்கல்வி நிறுவனங்களில், தாலிபன்கள் உட்புகுந்து, கல்விகற்பதற்குத் தடையை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு, உலகெங்கிலும் படைக்கப்படும் புனைகதை எழுத்துகளூடாக கடந்தகால மற்றும் சமகால பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிகின்றன.

    “இப்போது தொலைக்காட்சி பிபிசி அலைவரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது. திரையில் ஒரு கட்டிடம், ஒரு கோபுரம் தெரிகிறது, அதன் உச்சி மாடிகளிலிருந்து புகை அலைபோல் எழுகிறது. தாரிக் சயீதிடம் ஏதோ சொல்ல, சயீத் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே திரையின் மூலையிலிருந்து ஒரு விமானம் தோன்றுகிறது. அடுத்திருக்கும் கோபுரத்தில் அது மோதி, லைலா அதுவரை பார்த்திருந்த அத்தனை நெருப்புப்பந்துகளையும் ஒன்றுமில்லாமல் செய்யும் நெருப்புக்குழம்பாக அது வெடிக்கிறது. …

    இரண்டு மணி நேரங்களுக்குள்ளாக இரண்டு கோபுரங்களுமே சிதிலமாயின.

    சிறிது நேரத்திலேயே எல்லாத் தொலைக்காட்சி நிலையங்களும் ஆஃப்கானிஸ்தானைப் பற்றியும், தாலிபானைப் பற்றியும், ஓசாமா பின் லேடனைப் பற்றியும் பேசலாயின.

    “பின் லேடனைப் பற்றி தாலிபன் சொன்னதைக் கேட்டாயா?” தாரிக் கேட்கிறான். …

    “கேட்டேன்” என்கிறாள்.

    பின் லேடன் ஆஃப்கானிஸ்தானில் அடைக்கலமாகியிருக்கும் ஒரு மெஹ்மான், விருந்தினன் என்றும் பாஷ்டூன்களின் சம்பிரதாயப்படி விருந்தினர்களைக் கைவிடக்கூடாதென்றும் தாலிபான் அநிவித்திருக்கிறார்கள்.”6 கடந்த 2011ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்த பதிவும் அதற்கு சார்பாகச் செயல்பட்ட தாலிபன்களின் நிலையையும் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. உலகநாடுகளில் நிகழ்த்தப்படுகிற கொடூரமானத் தீவிரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் அரசியல் காரண, காரியங்களால் ஏற்படுகின்றது. இதன்வழி, அந்நாடு சில சாதக, பாதகங்களைச் சந்திக்க நேர்வதோடு, உலக அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வழிவகைகளையும் ஆராய்கிறது.

    21ஆம் நூற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியினூடாக, இதுபோன்ற எழுத்துருவாக்கப் படைப்புகளை வாசிப்பதன் மூலமாக உலகளாவிய நாடுகளின் இயங்கியல் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகின்றது. கடந்தகாலத்தில் ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் சர்வதிகார ஆட்சிக்கும் தற்போது தத்தம் நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் அரசியல் ஆட்சிக்கும் இடையேயான இரட்டை எதிர்மறையை நேமிச்சந்த்ரா மற்றும் காலித் ஹூசைனியின் சாரமான எழுத்துகள் சிந்திக்கச் வைக்கின்றன. “அரசியலற்ற இலக்கியத்தைப் படைப்பவர்கள் கடமை தவறியவர்களாக, துரோகிகளாகக் கருதப்படுவதோடு, அவர்கள் ஆக்கிய கவிதையும் நாவலும் நாடகமும் புறக்கணிப்பு அபாயத்துக்கு ஆளாகின்றன. ஒரு கலைஞனாக, வெறும் கலைஞனாக மட்டுமே இருப்பது எங்கள் நாடுகளில் ஒரு அநியாயமான குற்றமாக, அரசியல் பாவமாகக் கருதப்படுவதுண்டு”7 என லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான ‘மரியோ வர்காஸ் யோசா’ கூறியிருப்பது, இக்காலகட்டத்தில் படைக்கப்படும் சில படைப்புகளுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியது. இதனை அடியொற்றியே ‘யாத்வஷேம்’, ‘ஆயிரம் சூரியப் பேரொளி’ என்ற இரு படைப்புகளும் தன்னளவிலும் உலகம்சார் அளவிலும் தனக்கான இடத்தைப் பெறுகின்றன.

    மேற்கோள் விளக்கக் குறிப்புகள்

    1. நேமிச்சந்த்ரா, ‘யாத்வஷேம்’, ப.109.
    2. மேலது., ப.127.
    3. காலித் ஹூசைனி, ஆயிரம் சூரியப் பேரொளி, பக். 232-233.
    4. மேலது., பக். 123-124.
    5. மேலது., பக். 191, 311.
    6. மேலது., பக். 459-460.
    7. மேலது., ப. 7.

     விளக்கப் படங்கள்

    Holocaust Museum  – New York

    Auschwitz Crematorium – Germany

    Holocaust Museum  – Israel

    Inside of Holocaust Museum   – Israel

    Their memorial is modeled after Berlin’s iconic Memorial to the Murdered Jews of Europe, which consists of 2,711 concrete slabs.

    Kabul – Afganistan

    Taliban fire in air to scatter hundreds of protesters in Kabul


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    முனைவர் செ.ர. கார்த்திக்குமரன் ஆய்வு ரீதியாக இந்தக் கட்டுரையை அளித்துள்ளார். ஆய்வுக் கட்டுரைகள் கொஞ்சம் உலர் தன்மையுடன் இருக்கும். ஆனால், இவரின் இந்தக் கட்டுரை உயிர்ப்புடன் உள்ளது. இரு படைப்புகள், அதிலும் மொழிபெயர்ப்பு, தமிழாக்கப் படைப்புகள், அவற்றைத் தனித்தனியான கட்டுரையாகவே அளிக்கலாம். அதைச் செய்யாமல், இரண்டையும் ஒப்பிட்டு மிக அழகாக அளித்துள்ளார். அந்த இடங்களின் அரசியல், சமூக, உளவியல், வரலாறு, வன்முறை எனப் பல்வேறு பிரச்சினைகளைக் குறித்துப் பேசும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஒப்பிட்டும் எழுதியமையால் இது முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரையாக உள்ளது. மேலும், இரு படைப்புகளிலிருந்தும் சில பகுதிகளை, உரையாடல்களைப் பொருத்தமாக மேற்கோள் அளித்துக் கொடுத்திருக்கிறார். ஷஹிதா பெயர்  ஷஜிதா என்று கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த இரு புத்தகங்களை இதுவரையில் வாசிக்காத வாசகருக்கும், இந்தக் கட்டுரையின் மூலமாக, வாசிக்கும் ஆர்வத்தை அளிக்கிறது. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.


     

    Share
  • (Peer Reviewed) தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடனாருரையின் உரைப்போக்கும் உரைநலனும்

    (Peer Reviewed) தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடனாருரையின் உரைப்போக்கும் உரைநலனும்

    டாக்டர். வே. விக்னேசு,
    தமிழ்  உதவிப்பேராசிரியர்,
    பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் – 641014.
    vignesh@psgcas.ac.in
    9597203214.

    தோற்றுவாய் :

    தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குப் பழையவுரைகளென  இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார், பெயரறியப்படாத பழையவுரைகாரர் ஒருவர் ஆகிய அறுவருரைகளே கிட்டியுள. ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம். இவ்வுரையாசிரியப் பெருமக்களுள் சொல்லதிகாரத்திற்கு விருத்தியுரைகண்ட கல்லாடனார்தம் உரைப்போக்கு, அவர் மேற்கொண்ட உரைமரபுகள், அவருரையின் தனிச்சிறப்புக்கள் என்றின்னவற்றை ஆய்தலே இக்கட்டுரை ஆராயக்கொண்ட ஆய்பொருளாம்.

    சொல்லுரைகண்ட கல்லாடனார் :

    தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குக் கிட்டியுள்ள உரைகளுள் கல்லாடனார் விருத்தியுரையும் ஒன்றாம்.  அவ்வுரையும் இடையியல் பத்தாம் நூற்பா வரையிலேயே கிட்டியுளது.

    பேராசிரியர் ஆபிரகாம் அருளப்பன், பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம் ஆகிய இருவரும் இணைந்து தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உள்ள உரைகளையெல்லாம் தொகுத்து, ’தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – உரைக்கோவை’ என்னும் பெயரில் வெளியிட்ட சொல்லதிகார உரைவளப் பதிப்பில் இவ்வுரை முதன்முதலில் வெளிப்போந்தது. இவ்வுரைவளப் பதிப்பிலும் கிளவியாக்கம் முதலாக விளிமரபு ஈறாக நான்கு இயல்களைக் கொண்ட முதற்பாகம் மட்டுமே வெளிவந்துள்ளதாகலின், இவ்வுரையும் அந்நான்கு இயல்கள் மட்டுமே கொண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

    அடுத்து, இவ்வுரை பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1964 -ஆம் ஆண்டில் கழகவழி வெளிவந்தது. பின்னர், குருதேவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் பதிப்பித்துத் தமிழ்நாடு அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலக வெளியீடாகத் ’தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – கல்லாடனார் விருத்தி’ என்னுந் தலைப்பில் இவ்வுரை 1971 -இல் வெளிவந்தது. இந்நூல் தெ.பொ. மீ. அவர்களின் விரிவான ஆராய்ச்சி முன்னுரையுடன் கூடியதாம்.

    உரைப்போக்கு :

    கல்லாடனார் உரை ’விருத்தியுரை’ என்று வழங்கப்படுகிறது. இவருரை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச் செல்வதாகும். எனினும், அவ்விருவர் உரைகளிலும் சேனாவரையர் உரையிலும் காணப்படாதனவாகிய  பல அரிய கருத்துக்கள் இவருரையில் காணலாகின்றன. இயல்களின் முறைவைப்பினை இவர் விரிவாக ஆராய்கின்றார். அங்ஙனமே, இவர்தம் நடை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர்தம் நடையை ஒட்டிச் செல்கின்றது. அன்றியும், விருத்தியுரை என்பதற்கு ஏற்ப பல புதிய விளக்கங்கள் இவருரையில் காணப்படுகின்றன.

    உரைநலன் :

              இவர்தம் உரைநலத்திற்குச் சான்றுகள் சிலவற்றைக் காட்டுதும் :-

    • சொல்லதிகார அதிகார விளக்கம் நுவலுங்கால், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரினுஞ் சற்று விரிவாகக் கல்லாடனார், ”இவ்வதிகாரம் என்னுதலி எடுத்துக்கொள்ளப்பட்டதோவெனின், அதிகாரம் நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயர் உரைப்பவே விளங்கும். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின், சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. அஃது இடுகுறியோ காரணக்குறியோ எனின், காரணக்குறி. என்னை காரணம் எனின், சொல் உணர்த்தினமை காரணத்தின் என்பது. என்னை? கிளவியாக்கம் எழுவாயாக எச்சவியல் இறுதியாகக் கிடந்த ஒன்பது ஓத்துக்களுள்ளும் சொல்லின்கண் கிடந்த விகற்பம் எல்லாம் ஆராய்ந்தான் எனக் கொள்க” (சொல். கல். நூ.1) என்று விரிவான விளக்கந் தருகின்றார். மாணாக்கர் நன்கு உளங்கொண்டு விளங்குதற் பொருட்டே இவர் இங்ஙனம் விரித்துரைக்கிறார்.
    • சொல் என்பதற்குப் பொருள் ஓசை எனக்கொள்ளும் கல்லாடனார், ஓசை என்று கூறியதால் கடலொலியும், காரொலியும், சங்கொலியும், விண்ணொலியும் சொல்லாகுமா? என்ற வினாவை எழுப்பிக் கொண்டு, ”ஓசையெனினும், அரவம் எனினும், இசையெனினும், ஒலியெனினும் எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்து அல் ஓசைக்கும் பொது. கிளவியெனினும், மாற்றம் எனினும் மொழியெனினும் இவையெல்லாம் எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் ஓசைமேல் நிற்கும்” (சொல். கல். நூ. 1) என்று விடை கூறுகின்றார். அங்ஙனமே, எழுத்தொடு புணராது பொருளறிவுறுக்கும் ஓசையும் உளவோ வெனின்? என வினவிக்கொண்டு, ”உள. அவை முற்கும் வீளையும், இலதையும், அணுகரணமும் என்றித் தொடக்கத்தன. அவை சொல் எனப்படா. பொருளறிவுறுக்கும் எழுத்தொடு புணராவோசை மேலதன்றாராச்சி” (சொல். கல். நூ. 1) என விடையிறுக்கும் இவர், “எழுத்தல் ஓசையும், எழுத்தொடு புணராது பொருளையறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்து பொருளையறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்தே பொருளையறிவுறுத்தாது இறிஞி, மிறிஞி என்றாற்போல் வரும் ஓசையும்” (சொல். கல். நூ. 1) என ஓசையை நான்கு வகைப்படுத்தி, இந்நான்கனுள்ளும் பின்னின்ற இரண்டும் இவ்வதிகாரத்து ஆராயப்படுகின்றன என விரிவான விளக்கந்தருகின்றார். அன்றியும், ஏனைய ஓசைகள் சொல்லாகா என்று நச்சினார்க்கினியர் கூறியதனை உட்கொண்டே இவர் இங்ஙனம் விரிவாக உரைத்துள்ளார்.
    • ‘வினைப்பெயர் இடமாகத் தோன்றும் பாலறிவிக்கும் சொற்களும் ஏனைய பொருட் பெயரிடமாகத் தோன்றும் பாலறிவிக்கும் சொற்களும் ஒன்றனொடு ஒன்று தொடரும்பொழுது மயங்குதல் கூடாது; அவை தத்தம் இலக்கணத்தவேயாம்’ என்னுங் கருத்துடைய,

    “வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்
    பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்
    மயங்கல் கூடா தம்மரபினவே” (சொல். கிளவி. நூ. 11)

    எனவரும் நூற்பாவிற்கு உரைபகரும் இவர், எழுவகை வழுக்களுடைய பெயரும் முறையும் தொகையும் தனிமுறையில் ஆசிரியர் எச்சூத்திரத்திலும் கூறவில்லை; உரைகளிலேயே கூறப்பட்டுள்ளன என்றுரைத்து, ”எழுவகை வினாவிற்கும் இஃதோர் பொது விதி கூறியது” எனவும், ”சிறப்பு விதி வேறு வேறு கூறிற்று” எனவும் உரைத்து, ”ஏனைய வழுக்களும் அவ்வவ்சூத்திரத்திற்குரிய இடங்களில் விளக்கம் பெறுகின்றன” என்றும் கூறி, ”ஒழிந்த திணைபால் இடங்கட்கு விதி ’னஃகான் ஒற்று’ முதலிய சூத்திரங்களால் கூறிற்றெனவுணர்க. இவ்வாறு நூல் நயமாதல் இச்சூத்திரத்துரையிட் கண்டுகொள்க” (சொல். கல். நூ. 11) என்பதனால் தொல்காப்பிய நூன் நயத்தைத் தெளிவிக்கின்றார்.

    • ”முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே” (சொல். கிளவி. நூ. 39)

    என்ற நூற்பா, ’சுட்டுப்பெயரை முற்படக் கூறுதல் செய்யுளுள் உரித்தாகும்’ என, மேற்சூத்திரத்தில் கூறிய விதிக்குப் பிறிதொரு விதி வகுக்கிறது. இந்நூற்பாவிற்கு, ”அவனணங்கு நோய் செய்தான் ஆயிழாய்! வேலன்” எனத் தொடங்கும் பாடலொன்றை உரையாளர் யாவரும் மேற்கோளாகக்காட்டி, இதனுள் ’சேந்தன்’ என்பது இயற்பெயர்; அவன் என்பது சுட்டு என்பதால் இயற்பெயருக்கு முன் விரவுப்பெயர் கூறப்படினும் இது செய்யுளென்பதால் ஏற்கப்படும் என்று உரையாளர் யாவரும் ஒருமுகமாக உரைக்கின்றனர். கல்லாடனார் மட்டும் ”முன்கூறல்…நேர்ந்தவாறு ஆயிற்று…” (சொல். கல். நூ. 39) என்பதால் முற்படக் கூறலாகாது எனப்பட்ட சுட்டுப்பெயர் செய்யுளில் முற்படக்  கூறப்படினும் மொழிமாற்றிப் பொருள் கொள்ளப்படும். ஆகலின், செய்யுளில் முற்படக்கூறல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சிறப்புப் பொருள் உரைத்துள்ளமை ஈண்டுக் குறிக்கத்தக்கது.

    • கிளவியாக்கத்திற்குப் பின் வேற்றுமையியல் வைக்கப்பட்டதற்கான முறைவைப்பைக் கூறுங்கால், இளம்பூரணர் கருத்தைத் தழுவி இவ்வியலின் இயைபு கூறும் கல்லாடனார், மேலோத்தினோடு இவ்வோத்து இயைபு என்னையோவெனின் என வினவிக்கொண்டு, “மேல் ஓத்தினுள் நான்கு வகைப்பட்ட சொற்களையும் பொருள்கண்மேலாமாறு சொல்லிப் போந்தார். அவற்றுள் முதலாவது பெயர்ச்சொல் அதற்கிலக்கணம் உணர்த்திய எடுத்துக்கொண்டார் என்பது. யாங்ஙனம் உணர்த்தினாரோவெனின், எல்லாப் பெயர்களும் எழுவாயாகியப் பயனிலை கோடலும், ஒருவழி எழுவாயாகாது வேறோர் நிலைமையவாய் நிற்றலும், காலந்தோன்றாமை நிற்றலும், ஒருவழித் தொழிற்பொருளொடு கூறியக்கால் காலந்தோன்றி நிற்றலும், விளியேற்று நிற்றலும், சிலபெயர் விளியேலாது நிற்றலும் இன்னோரன்ன பிறவும் பெயரது இலக்கணம் எனவுணர்த்தினாரென்பது” (சொல். கல். நூ. 63) எனப் பெயரின் இலக்கணம் ஆசிரியரான் உணர்த்தப்பட்ட பான்மையை நன்கு தெளிவித்ததுடன் “பொது இலக்கணமேயன்றி உருபிலக்கணம் உணர்த்தினாரால் எனின், அவ்வாராய்ச்சியும் பெயரது இலக்கணமாய் விடுதலுடைமையின் அமையுமென்பது” என்று நுண்ணிதின் விளக்கியுள்ளமை ஏனையுரையாளரினும் வேறுபட்டதாம்.
    • ’வேற்றுமை மயங்கியல்’ என அவ்வியல் பெயர் பெற்றதற்குக் கல்லாடனார் கூறும் காரண விளக்கம் சிறப்புடையதாம். அவர் கூறுவதைக் கேண்மின் :-

    ”இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின் உருபும் பொருளும் உடன் மயங்குதலும், ஒருவழி யுருபே மயங்குதலும், ஒன்றற்குரியதனோடு ஒன்று மயங்குதலும், இரண்டும் ஒத்து மயங்குதலும், ஒரு பொருண்மை ஒன்றற்கே யுரியதாகாது பலவற்றோடு மயங்குதலும், ஓர் உருபு பலவுருபோடு மயங்குதலும், ஒன்றனது ஒரு  பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றனது பல பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றற்குரிமை பூண்டு எடுத்தோதின பொருள்வழி மயங்குதலும், ஓதாத பொருள்வழி மயங்குதலும், ஒன்றதன் மரபாய் மயங்குதலும், இலக்கண வழிக்குள்வழி மயங்குதலும், இலக்கண மல்வழி மயங்குதலும், மயக்க வகையான் மயங்குதலும், சொல்லுதல் வகையான் மயங்குதலும், ஒன்றனோடு பொருள் முடிந்து தொடர்ந்தடுக்கி மயங்குதலும், ஒன்றனோடு பொருள் முடியாது தொடர்ந்தடுக்கி மயங்குதலும், தொகையுள் மயங்குதலும், தொகையில் மயங்குதலும், உருபு வேற்றுமையால் மயங்குதலும், உருபும் உருபும் மயங்குதலும் என்று இன்னோரன்ன பல மயக்கங்கள் கூறலின் வேற்றுமை மயங்கிய லென்னும் பெயர்த்தாயிற்று” (சொல். கல். நூ. 86) என்பது இவர் கூறும் விரிவான விளக்கமாகும்.

    • இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் என்பவற்றைக் ’கள்’ விகுதி சேர்த்துப் பன்மையாற் கூறல் வேண்டும். ஆயின், தொல்காப்பியனார் ஒருமையாற் கூறியது என்னை? என்பதை விளக்கும் கல்லாடனார், ”இயற்பெயர் முதலாக முறைப்பெயர் ஈறாக ஓதினவெல்லாம் பலவெனினும் ஞாபக வகையான் ஒன்றெனப்பட்டன” (சொல்.  கல். நூ.177) என்பதனான், ஞாபகப்படுத்தல் என்னும் உத்தியால் ஒருமையிற் கூறினார் என அமைதி காட்டி ஆசிரியர் கருத்தே வலியுடைத்து என நிறுவும் பகுதி ஏனைய உரைகளிற் காணாத்தாம்.
    • ’அகரமும் ஆகாரமும் வகர உயிர்மெய்யுமாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்று சொல்லும் அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினையாம்’ என்பதனை விளக்கும்,

    ”அ ஆ வவென  வரூஉ மிறுதி
    அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை” (சொல். வினை. நூ. 18)

    எனவரும் சூத்திரத்திற்கு உரைபகரும் கல்லாடனார், அஃறிணை வினைதான் ஒருமைவினையும் பன்மைவினையும் என இருவகைத்து; அவற்றுள் பன்மை வினையை இந்நூற்பாவான் உணர்த்துகிறார் ஆசிரியர் எனக் கூறி, ஒருமையே முன்னையது. எனில், அஃறிணைப் பன்மை வினைமுற்று ஒருமை வினைமுற்றின் முன் கூறப்பட்டதன் ஏது என்னை? என்பதனை விளக்கும் வகையில், ”யாண்டும் ஒருமையை முன்கூறின் அதற்கோர் சிறப்புண்டுகொல் என்பது படும் என்று முந்து மொழிந்ததன் தலை தடுமாற்று என்பதோர் தந்திரவுத்தியும் உண்டாதலான் இவ்வாறு கூறினான் என்க” (சொல். கல். நூ.218) எனக் காரணங்கூறுகிறார். அஃதாவது, ஒருமையையே யாண்டும் முற்கூறுவதனால் அதற்குத் தனிச்சிறப்புண்டு  எனக் கருதப்படுமாகலான் அஃறிணைப் பன்மை வினைமுற்று முற்கூறப்பட்டது என்பதாம். அங்ஙனமே, இதனை, இவர் ”முந்து மொழிந்ததன் தலை தடுமாற்று” என்னுந் தந்திரவுத்தியுளடக்குகின்றார் இவர் என்பதும் சுட்டத்தக்கதாம்.

    • ”இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்

    நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே” (சொல். இடை. நூ. 1)

    எனவரும் நூற்பாவிற்குக் கல்லாடனார் வழங்கிய சிறப்புரை ஈண்டு நோக்கத்தக்கதாம். அவ்வுரை வருமாறு :

    ”இச்சூத்திரத்தின் பொருண்மையும் இலேசின் பொருண்மையும் ’இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்’ என்ற சூத்திரத்துள்ளும் அதன் இலேசினுள்ளும் அடங்குமால் எனின், அது நிரல் நிறை வாய்பாட்டதாக பாற் பெயரெனப்பட்டு வரும் என்றும் வினையொடு உரிவரும் என்றும் கொள்ளக் கிடந்தமையின், இடையும் இரண்டொடும் வரும் என்றற்குக் கூறினார் என்பது” (சொல். கல். நூ.251) மேலுங்கூறுவாராய், ”இனி அவ்விலேசு நிரனிறைச் சூத்திரத்த தாகலாற் புறத்து வழி வருதல் இடைச்சொற்காகவும் உள்வழி வருதல் உரிச்சொற்காகவும் கொள்ளக் கிடக்கும் என்பது கருதி, ஈண்டும் இருவகையானும் இடைவரும் என்பதற்கு இலேசு கூறினார் போலும்” என நன்கு துணிதற்கியலாது ஐயுற்றுரைக்கின்றார்.

    போலும் வாய்பாடு :

    முன்னைய உரையாளர்கள் குறிப்பிடாத பல ஆய்வுகளை ஆராய்தற்கு எடுத்துக்கொண்ட இவர், அங்ஙனம் ஆராயுங்கால் உறுதியாக இன்னது என்று துணிதற்கியலாதவற்றை; ஐயப்பாடுடையனவற்றைப் ’போலும்’ என்னும் வாய்பாட்டால் குறிப்பிடுகின்றார். இங்ஙனம், இவர் துணிதற்கியலாது கூறிய இடங்களாக இவருரையில் ஏறத்தாழ 40 இடங்கள் உள. இப்பகுதிகளான் இவர்தம் சால்பு ஒருவாற்றான் வெளிப்படுகின்றது.
    இன்னும், இவர் இரு கருத்துக்களைக் கூறி, ’இரண்டனுள் நல்லது தெரிந்து உரைக்க’ (சொல். 210) என்றும், தமக்கு உறுதியாகத் தெரிந்த காரணத்தை மட்டும் உரைத்துப் ’பிறிதுகாரணம் உண்டாயினும் அறிந்திலம்’ (சொல். 222) என்றும் அருகி உரைத்தலும் உண்டு என்பதும் ஈங்குக் குறிப்பிடற்பாலதாம்.

    முடிபுகள் :

              இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

    • தொல்காப்பியத் தொண்டர்கள் எனத்தகும் உரையாசிரியர்கள், ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்குறிப்பை உய்த்துணர்ந்து தெளிய அறிவிக்கும் நுண்ணறிவுடையோர்.
    • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாளர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்
    • தொல்காப்பியத்தின் மூன்றதிகாரங்களுள் சொல்லதிகாரம் ஒன்றே அறுபெறும் உரையாளர்களின் உரைகளைக் கொண்டது; இது சொல்லதிகாரத்திற்கே வாய்த்த பேறாகும்
    • இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச் செல்வதாய் கல்லாடனாருரை தோன்றிடினும் அவ்விருவர் உரைகளிலும் சேனாவரையர் உரையிலும் காணப்படாதனவாகிய பல அரிய கருத்துக்கள் இவருரையில் காணலாகின்றன.
    • விருத்தியுரை என்பதற்கு ஏற்ப பல புதிய விளக்கங்களை இவ்வுரை கொண்டுள்ளது.
    • தாம் ஆராயப்புக்க இடங்களிற் நன்கு துணிதற்கியலாதனவற்றை ’போலும்’ என்னும் வாய்பாட்டால் இவர் குறிப்பிடுமாற்றான் இவர்தம் சால்பு ஒருவாற்றான் வெளிப்படுகின்றது.
    • இவருரையால் முன்னைய உரையாளர்களின் கருத்துக்கள் நன்கு தெளிவுறுகின்றனவாம்.
    • அன்றியும், இடையியல் பத்தாம் நூற்பாவிற்குப் பின்னுள்ள பகுதிகட்கு இவ்வுரைதானும் கிட்டாமற் போயினமை தொல்காப்பிய ஆய்வுலகிற்குப் பேரிழப்பேயாம்.

    என்னும் முடிபுகள் இக்கட்டுரையான் பெறலாகின்றன எனக்கூறி நிறைவு செய்வாம்.

    துணை நின்ற நூல்கள்:

    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1973.

    2. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1970.

    3. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், முதற்பதிப்பு – 1981.

    4. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, முதற்பதிப்பு – 1978.

    5. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு – 1997.

    6. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1962.

    7. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு – 2010.

    8. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு – 1963.

    9. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் விளக்கவுரை 38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி. முதற்பதிப்பு – 1930.

    10. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – உரைக்கொத்து (தொகுதி-1), தி.வே. கோபாலையர். (ப.ஆ.) சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்,  முதற் பதிப்பு – 2007.

    11. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் -ஆராய்ச்சிக் காண்டிகையுரை, ச. பாலசுந்தரம். (உ.ஆ.), பெரியார் பல்கலைக்கழகம், சேலம், முதற்பதிப்பு – 2012.

    12. மாணிக்கம். வ.சுப., தொல்காப்பியக்கடல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 1987.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    “தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடனாருரையின் உரைப்போக்கும் உரைநலனும்’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

    • ஆசிரியர் கல்லாடனார் உரைச்சிறப்புப் பற்றிய இவ்வாய்வுக் கட்டுரை முழுமையாக ஆய்வுப் பொருளை உள்வாங்கி ஆய்வுநெறிப்படி அமைக்கப்பட்டுள்ளது.
    • சொல்லதிகார முதல் நான்கு இயல்களுக்கே அன்னார் உரை கிட்டியிருப்பதால் ஆய்வுத் திறனை நன்கு வெளிப்படுத்தற்கு ஏதுவாக ஆய்வுக்களத்தைச் சுருக்கமாகவும் ஆழமாகும் அமைத்துக் கொள்கிறார்.
    • வேற்றுமை மயக்கம் என்பதற்கு உரையாசிரியர் தரும் மயக்கங்களை உள்ளவாறே நிரல்படுத்திக் காட்டியிருப்பது கட்டுரையைக் கற்பாருக்கு ஓர் இலக்கியச் சுவையை நல்குவதாக அமைந்திருக்கிறது.
    • இடைச்சொல் இலக்கணத்தை நூற்பா ஒன்றின் இலேசினால் பெறவிருக்க, பின்னும் கூறியதற்கு உரையாசிரியர் கூறும் காரணமும், பன்மையை ஆசிரியர் தொல்காப்பியர் முன்னெடுத்ததற்கு உரையாசிரியர் கூறும் காரணமும் கட்டுரையாசிரியரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
    • ”முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே” என்னும் நூற்பாவிற்கு ஏனைய உரையாசிரியர்களிடமிருந்து தாம்  மாறுபடுவதற்கான சூழலைக் கல்லாடனார் விளக்கியுரைத்ததை நயம்பட எடுத்துக் கூறுகிறார்.
    • ‘ஓசை’ என்பதற்கான நால்வகை விளக்கங்களையும் தானும் புரிந்து, பிறரையும் புரிந்துகொள்ள வைக்கும் கட்டுரையாசிரியரின் தனித்திறன் போற்றுதற்குரியது.
    • ‘ஆய்தலே இக்கட்டுரை ஆராயக்கொண்ட ஆய்பொருளாம்.’ என்னும் தொடரில் ஆய்தல் என்னும் தொழிற்பெயர், பொருளாம் என்னும் பெயரோடு இயையாமை நோக்குதற்குரியது.
    • ‘எழுவாயாகியப் பயனிலை கோடலும், “ஏனைய உரைகளிற் காணாத்தாம்’ எனத் தொடர்களில் அமைந்துள்ள அச்சுப் பிழைகள் நீக்குதற்குரியன. கணிப்பொறி காலத்தில் தட்டச்சுப்பிழை ‘தலைப்பிழை’ என்பதை உணர்தல் வேண்டும். ஆய்வில் சகித்துக்கொள்ள முடியாதது எழுத்துப்பிழை.
    • ”இயற்பெயர் முதலாக முறைப்பெயர் ஈறாக ஓதினவெல்லாம் பலவெனினும் ஞாபக வகையான் ஒன்றெனப்பட்டன” என்னும் பகுதியில் ‘ஞாபகம்’ என்னும் உத்தி எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டிருக்க வேண்டும்.
    • உரைப்போக்கும் உரைநலனும் என்பதே கட்டுரையின் மையப்பொருளாயினும் ஒப்பீட்டு முறைத் திறனாய்வே இத்தகைய கட்டுரைகளின் பொருள் விளக்கத்திற்கு ஏற்றது என்பதை அறிதல் வேண்டும். பொதுவாக ‘மாறுபடுகிறார்’ என்பதனின் குறிப்பிட்டுச் சொல்வது கட்டுரைக்கு வலுச்சேர்க்கக் கூடும்.
    • “இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச் செல்வதாகும். எனினும், அவ்விருவர் உரைகளிலும் சேனாவரையர் உரையிலும் காணப்படாதனவாகிய  பல அரிய கருத்துகள் இவருரையில் காணலாகின்றன. என்பதற்கு எடுத்துக்காட்டுகள் வேண்டாமா?
    • விளக்கப்படும் நூற்பாக்களின் பொருண்மைக்கேற்ப கட்டுரையில்  துணைத்தலைப்புகள் இடம் பெற்றிருந்தால்  ஆய்வுப் பொருண்மையும் அளவும் இன்னும் தெளிவாகியிருக்கக்கூடும்.
    • இலக்கிய ஆய்வு என்றால் நாளேடுகளின் மொழிநடை’ என்றும் ‘கிழமை இதழ்களின் நான்கு வரிக் கவிதைகள்’ என்றும் ஆகிவிட்ட தமிழாய்வு பெரும்பரப்பில் இத்தகைய கட்டுரைகள் பெரிதும் போற்றுதற்குரியன. இவை கட்டுரையாசிரியரின் தனிப்போக்கு என்பதும் தனிச்சிந்தனை என்பதும் தெளிவாகத் தெரிகின்றன. .
    • ‘என்வழி தனிவழி’ எனத் தற்காலத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் செவ்வியல் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் தடம் பதிக்க முயல்கிறார் என்பது இக்கட்டுரையால் தெளிவாகிறது. வாழ்த்துகள்!

    Share
  • (Peer Reviewed) சூர்யகாந்தனின் முள் மலர் வேலி – புதினத்தில் பழமையும் நம்பிக்கையும்

    (Peer Reviewed) சூர்யகாந்தனின் முள் மலர் வேலி – புதினத்தில் பழமையும் நம்பிக்கையும்

    முனைவர் ச. சங்கர்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ கல்லூரி (தன்னாட்சி) 
    மன்னன்பந்தல்.

    முன்னுரை

    கிராமங்கள் இன்று நகரமயமாக்களுக்கும், நவீன கால மாற்றத்திற்கும் ஆட்பட்டு தனக்குரிய அடையாளச் சின்னங்களை இழந்து வருகின்றன. இத்தாக்கத்தால் வேளாண் தொழிலும் அதனைச் சார்ந்தப் பிற தொழில்களும் மறைந்து வருவதுடன் அதனோடு இணைந்த வாழ்வும், பண்பாடும், கலாச்சாரமும், கலைச்சொற்களும் என இவைகளும் மங்கிப்போதல் வருத்தமான உண்மையும் கூட. ஒரு கிராமத்திற்கு அடையாளமாகத் திகழும் அவர்கள் மேற்கொண்ட தொழில்களோடு பழமையான நம்பிக்கைகளும், பழங்கதைகளும், பழமொழிகளும், பாரம்பரிய பழக்கவழக்கங்களும் என இவைகள் இக்கால இளையப் தலைமுறையினர்க்கு எட்டாக் கனியாக இருந்து வருதலை அறிய முடிகிறது.  இவ்வாறான பண்பாட்டு விழுமியங்களை இலக்கியப் படைபாளர்கள் சிலர் தம் படைப்புகளில் பதிவு செய்து வருதலைக் காணமுடிகிறது.  அவ்வகையில் சூர்யகாந்தன் அவர்கள் ‘முள் மலர் வேலி’ எனும் நாவலில் குறிப்பிட்டுள்ள பழமையான சில  நடைமுறைகளையும் நம்பிக்கைகளையும் வருங்கால சந்ததியினர்க்கு நினைகூறும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

    ஒர் அழகான கிராமத்திற்குரிய அமைப்பினை ஒவியம் போல் வரைந்து செல்வதுடன் அங்கு வாழும் மனிதர்களின் உறவுகள் தொழில்கள் எனவும் களைப்புத்தீர சாராயம் குடிக்கும் தொழிலாளர்கள்  இவர்களுக்கு இடையேயான உறவு நிலைகள் – தாழ்ந்த ஜாதியினர்க்கு கிராமங்கிடையே அளிக்கப்படும் பாகுபாட்டு நிலை – கிராமிய உணவுமுறை வைத்தியமுறை எனக் கிராமங்களுக்குரிய வாழ்கை முறை அருகில் இருக்கும் நகரங்களின் வளர்ச்சியால் அடையும் மாறுதல்  என்னவென்பதை கோடிட்டுச் செல்கிறது இப்புதினம். ரியல் எஸ்டேட்டின் வரவாக சாலையோர வேளாண் விளைநிலங்கள் புதுப்புது  கடைகளாக மாறும் நிலை – பாரம்பரிய தொழில் பாதிப்பிற்குள்ளானதால் வருமானத்திற்காகப் புதிய தொழில்களை நாடும் கிராம மக்கள் மாற்றுத் தொழிலை ஏற்காத சிலர் குறுக்குவழிதனில் தவறான தொழில் மேற்கொண்டு நாடும் கிராம மக்கள் மாற்றுத் தொழிலை ஏற்காத சிலர் குறுக்குவழிதனில் தவறான  தொழில் மேற்கொண்டு கைதாகிப் பின் திருத்தி புதிய தொழில்கள் தொடங்குதல் தொடர்ந்து ஜாதி ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் அடுத்தடுத்த சந்ததியினர்க்கு  ஏற்படும் வருமான இழப்பு – இளைய தலைமுறையினர்  இதிலிருந்து விடுபட்டு கல்வி பயின்று காலமாற்றத்திற்கேற்ப புதிய தொழில் செய்தல் – அறிவியலோடு இணைந்து வேளாண்தொழில் மேற்கொள்ளுதல் முதல் படி நிலைதனை இந்நாவல் பதிவு செய்திருப்பதை உணராலாம்.

    பழமைகள்

    உணவு உடை பழக்கவழக்கம் பண்பாடு எனக் காலமாற்றத்திற்கேற்ப மாறினும் சிலர் இன்றும் பழமை விரும்பிகளாக இருத்தலை அறியலாம். “ழுடன ளை புழடன” என்றும் கூறும் இவர்கள் பழமைவாதிகள் அல்ல. பழமையின் சிறப்பினை உணர்த்த  இன்று எவ்வளவோ ஆங்கில மருத்துவ முறைகள் வந்தும் டெங்கு காய்ச்சலுக்குப் பயன் அளிப்பது நிலவேம்பு கசாயமும் பப்பாளி இலைச்சாறும் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.  பழமையின் பெருமைதனை அறியாது சிலர் ஊடகங்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து போகிறார்கள் உதாரணமாக எத்தனையோ பற்பசை விளம்பரங்கள் மருத்துவர்களே பரிந்துரைப்பது போல் வருகின்றன. அவற்றை உண்மையென நம்பி பயன்படுத்துவோர்க்குப் பல்லில் உபாதை ஏற்படாமல் இல்லை அவர்கள் பல் மருத்துவரை நாடும்போது புதிதாக ஒரு பற்பசையை அவர் எழுதி தருகிறார். அப்படியெனில் பல்லுக்கு உறுதியளிக்கும் பற்பசைதான் எது? நம் முப்பாட்டனுக்கும் முப்பாட்டன் சொன்ன  “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பதைப் பின்பற்றின் இந்த இடர்பாடுகள் வர வாய்ப்பில்லை. (இதனைக் கடைப் பிடிப்பது தற்போது சாத்தியக் குறைவே)

    பெண்கள் முகத்துக்குப் பூசும் எத்தனையோ முகக்கீரிம் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அழகு  நிலையங்களும் அதிகரித்துதான் வருகின்றன. இதனைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் அழகுதான் கூடியுள்ளதா? பக்க விளைவு ஏற்பட்டு பின் மருத்துவரைத் தானே பெரும்பாலானோர் நாடுகின்றனர். அக்காலம் தனில் பாட்டி அம்மா என நம்மவர்கள் முகத்திற்கு கஸ்தூரி மஞ்சளும் தலைக்கு அரப்புறம்(இலுப்பை புண்ணாக்கு) மேனிக்கு பயறு மாவும் கடலைமாவும் என இயற்கையாகப் பயன்படுத்தி ஆரோக்கியமாகத் தானே வாழ்ந்தனர். பல நாள்  தலை குளிக்காமல் சிக்கு விழுந்திருந்தால் களிமண்ணைப்பூசி சிறிது நேரம் கழித்து நீராடினால் போதும் முடி பஞ்சு போல் ஆகும். ஆனால் இன்று பல ஷாம்புகள் பயன்படுத்தி முடிகொட்டுதலே மிச்சம். மேனிக்கு பல சோப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வாமை அலர்ஜி என மருத்துவரை நாடுவதேன்? இவ்வாறான நிலைதனில் இயற்கையான அழகினைப் பெறுவதற்கு பழைய வழிமுறைதனை நினைவுறுத்தும் விதமாக இப்புதினம் ஆசிரியர் “ரஞ்சிதம்” எனும் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது.

    “நாம நம்மோட மொக அழகை மட்டுமில்லாமல் உடம்போட நலத்தையும் நல்லபடியாக வெச்சுக்கிறதுக்கு சாப்பிடுற சாப்பாட்டு விசயத்துலயும் கவனம் இருக்கனும்  காரத்தையும் புளியையும் கொறச்சலாக உணவுல   சேர்த்துட்டாலே போதும். புளிக்குப் பதிலாக தக்காளியைச் சேர்த்துக்கப் பழகிக்கனும்;. தக்காளிப் பழச்சாறு ஆரஞ்சிப் பழச்சாறு  இதுகளெ அன்னாடம் ஒன்னு அல்லது அரை டம்பளர் அளவுல குடிச்சிட்டு வரோனும். இது ஒடம்புக்கு நலத்தைக் குடுக்கறதோட மொகத்துல இளமையின் பொலிவு மாறாமக் காப்பாத்தும். எலுமிச்சம் பழத்தை மொகத்தில் தேய்ச்சுக் கொஞ்ச நேரம் இருந்து அப்புறம் குளிச்சால் மொகம் பளபளப்பாக ஆகும். எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறது. மொகத்துக்கும் ஒடம்புக்கும் ரொம்ப நல்லது. தோல் பாதுகாப்புக்கு இது முக்கியம்.  தோல்ங்றது சுருக்கம் வுழுகாமலும் மினுமினுப்புக் கொறையாமலும் இருக்கப்பண்ணும்”

    “குளிக்கிறதுக்கு சோப்பை உபயோகிக்காமல் இருக்கிறது எவ்வளவோ நல்லது. நம்மபாட்டி, கொள்ளுப் பாட்டி காலந்தொட்டு இப்ப நம்ம அம்மாமாருக வரையிலுமே மொகத்துக்கு மஞ்சள் பூசிக் குளிக்கிற பழக்கத்தை மறக்காமல் கடைப்பிடிச்சிட்டு வந்தாங்க! காலப் போக்குல அதை நடைமுறையில வுட்டுட்டாப்ல ஆயிடுச்சி. மஞ்சள் நம்ம மொகத்தோட தோலுக்கு அழகான நெறத்தைக்; குடுக்கிறது மட்டுமல்லாம் கிருமிகளெக் கொல்றதும், தொத்து நோவுகளெத் தடுக்கிறதும் செய்யுது. மூக்குக்கும் கீழ் ரோமக்கால்கள் அரும்புகட்டுனாப்ல சிலருக்கு இருக்கும்! லேசா மீச மொளச்சாப்ல! அதைப் பார்க்கிறவிகளுக்குத் தெரியும்! மஞ்சள் பூசிக் குளிக்கிறவிகளுக்கு இது நீங்கிவிடும். குறிப்பா எலுமிச்சம்பழம் எண்ணெய் பயித்தம் பருப்புப் பொடி அப்புறம் இந்த மஞ்சள் இதுகளெ மட்டுமே உபயோகிச்சு மொகத்தோட அழகு கெடாத வகையில் பாதுகாப்புச் செஞ்சுக்கலாம்” எனத் தன்னைச் சார்ந்தப் பெண்களிடம் ரஞ்சிதம் ஆலோசனைக் கூறவதையும்;;

    மேலும்.“நல்லெண்ணெய் கொஞ்சம் போதும் அதுல ரெண்டு மூணு சொட்டு தண்ணியெ விட்டு நல்லா சூடு ஏற்படறாப்ல  உள்ளங்கையில் கொழைச்சம்னா நெய்போல ஆகும். அதெ மொகத்துல தேய்ச்சுக்கணும். தேங்கா எண்ணெய் உள்ளங்கையில் தடவி அதையே மொகத்துல தேய்சுக்கலாம். இது பளபளப்புக்கு ஒதவும் பாலாடையை எடுத்து  அதிலெ நீங்க சொன்ன எலுமிச்சம் பழச்சாரைக்; கலந்து  மொகத்துல தேய்ச்சுட்டு வந்தாலும் பத்துப் பன்னெண்டு நாள்ல மொகம் நல்லா சுத்தமா பளபளப்புக் கூடி வர்றது வெளங்கும். இது பருக்கள் வராமயும் சுருக்கங்க வராமயும் பாதுகாக்கும்” (பக்கம் 30-33 ) என இயற்கை அழகைப் பெறுவதற்குப் பழம் முறையினை பெரியோர்கள் கூறியுள்ளதைக் காணமுடிகிறது.

    “உள்ளங்கையி ஒப்பனைக்கு மருதாணித் தழை போதும்! செவந்த நெறத்தையும் குளிர்ச்சியையும் கைக்கும் குடுக்கும். எந்தக் கெடுதலும் வராது! நம்பிக்கையாச் செய்யலாம்! முதிர்ச்சி அடையாத இலைகளாக  பசுந்தழைகளாகப் பார்த்துச் சேகரிக்கவேணும். அதுகளோட களிபாக்குகளெயும் நாலஞ்சை சேர்த்தி நல்லா வெண்ணெய் பதத்துக்கு அரைச்சு கிண்ணத்தில் எடுத்துக்க வேணும். அப்புறம் கடுக்காயெ பொடி செய்து தண்ணீர்ல போட்டு கொஞ்ச நேரம் ஊறவெச்சு பொறகு அதை வடிகட்டி எடுத்துக்கணும். அந்தக் கடுக்காய்த் தண்ணியை விட்டு மருதாணித் தழைகளை அரச்சாலும் ரத்தமாட்டச் செவப்பு நெறம் கெடைக்கும். இந்த மருதாணிச் சாந்தை உள்ளங்கையில் வட்டமாப் பூசிக்கலாம். என்று ரஞ்சிதத்திடம் பயிற்சி பெற்ற கோகிலா. உள்ளங்கையின் ஒப்பனைக்கு மருதாணி பயன்படும் விதத்தினைக் கூறுவதுடன்  எளிமையானது மருத்துவ குணம் கொண்டது என்பதை இக்கதாபாத்திரத்தின் வழி அறியமுடிகிறது.

    நம்பிக்கைகள் 

    கிராமப்புற மக்கள் காலை எழுந்ததிலிருந்து உறங்கும் வரை “நிகழும் ஏன் இரவில் தூக்கத்தில் வரும் கனவு என ஒவ்வொன்றிலும் ஒரு நம்பிகை வைத்துள்ளனர். இவ்வாறு கிராமங்களில் உளவி வரும் பாம்பு குறித்த குறித்த நம்பிகைகள் பல உண்டு. இரவு நேரத்தில் பாம்பு எனச் சொல்லக்கூடாது. சொன்னால் பாம்பு வரும் என்ற நம்பிகை – யாரையும் தீண்டாது வயது முதிர்ந்த பாம்பின் விசம் நாகமணியாக மாறும். அம்மணியை இரவில் கக்கிவைத்தே பாம்பு இரைதேடும்- அதை எடுத்தால் அதிஸ்டம் நல்ல பாம்பு முட்டையிட்டு அடைகாக்கும் போது அவ்விடம் உ;ந்து வறுக்கும் மணம் வீசும். அப்பகுதிக்குச் செல்லக்கூடாது. செல்வோரைக்கடிக்கும்  நல்லபாம்பினை அடித்துக் கொன்றால் பால்  ஊற்றி காசு போட்டுப் புதைக்க வேண்டும் என்பன போன்ற நம்பிகைகள்  இந்நாவலில் பாம்பு குறித்த நம்பிகைகளை இடம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

    ராக்கி எனும் கதை மாந்தர் தான் பார்த்த காட்சிதனை எண்ணெய்க் காரியிடம்“இந்தக் கோயில்கிட்டெ வந்தாலே எப்பவும் கொஞ்மா நெதானிச்சுத்தா வருவேன். இப்படித்தா ஒரு நா நல்ல நெலா வெளிச்சம். சைக்கிள்ல வந்துட்டு இருந்தவன் எதுக்காலெ என்னமோ சல்லைக் குச்சிக நிக்கிறாப்ல தெரிய வண்டிய பிரேக்போட்டு நிறுத்துனேன். மின்னால பாத்தா களமாட்டம் கெடக்குற அந்த வாசல்ல பாம்புக பொணயல் போட்டுட்டு அப்பிடி வெளையாடிட்டு இருக்குதுக”.

    “நாகப்பாம்பும் சாரப்பாம்பும்; நெலா வெளிச்சத்துல அப்பிடிச் சந்தோசமா இருக்குதுங்கிறதைத் தெரிஞ்சுட்டு சத்தமில்லாம ஒதுங்கிப்போய் வேலிக்கிட்டெ நின்னுட்டேன். துளியூண்டு சலசலப்புக் கேட்டுச்சுன்னாலும் போச்சு….! அதுகளுக்குத் தொந்தரவு ஆயிடுச்சுங்குற கோபத்துல ரெண்டும் பரிஞ்சு வந்து தொரத்தித் தொரத்தி கொத்திப் போடும்னு பெரியவுக சொன்னது மனசுக்குள்ளே கேவகம்! நல்லா சூரிக்கயித்தே ஒண்ணாட ஒண்ணா முறுக்கிப் போட்டா எப்படி ஒரே கணக்காக் கெடக்குமோ அப்படிப் பொரண்டு பொரண்டு வெளையாடுதுக! நெலத்துல வால் பாகத்தை ஊனி கரும்புச் சல்லையாட்டம் எந்திரிச்சு ஆறடி ஒசரத்துக்கு நிக்குதுகுக” எனத் தொடர்ந்து செல்வதுடன் மேலும்

    “அப்படிப் பொணயல் போட்டுட்டு பாம்புக ஜோடியாகப் பொரள்ற எடத்துல அதுகளுக்குத் தெரியாம வெள்ளைத் துணி ஒண்ணெக் கொண்டு போயி விரிச்சுட்டுப் போட்டு வந்துரோனுமாம்! அதுக உருண்ட்டே வந்து அந்தத்துணி மேலயும் பொரண்டு ஆசைத்தீர வெள்ளையாடிப் போட்டு அப்புறமாய் பிரிஞ்சு அதுபாட்டுக்குப் போயிடுமாம்! நாம போயி அந்தத் துணியெ எடுத்துக் கொண்டாந்து வூட்ல பொட்டியிலயோஇ போழையிலயோ வெச்சுட்டோமுன்னா செல்வமும் சுகபோகமும் பொங்கிப் பெருகுமாம்” எனக் கூறிச்செல்லும் ராக்கியிடம்

    “இப்படி பாம்புக ரெண்டும் பொணையல் போட்டுட்டு ஆனந்தமா இருக்கும்கிறதை மத்தவிக சொல்ல நானும் கேட்டுருக்கிறேன்!  சாரைப்பாம்பு ஆண் அப்பிடின்னும் நாகப்பாம்பு பொண்ணு அப்பிடின்னும்; பெரியவிக சொல்லுவாங்க” என்கிறாள் எண்ணெய்காரி. இவ்வாறு பாம்பு குறித்த நம்பிகைகள் கிராமங்களில் இருத்தலை இவ்விரு கதைமாந்தர்கள் உரையாடல் மூலம் இப்புதின ஆசிரியர் பதிவு செய்திருத்தலை உணரலாம். (பக்கம் : 73-76)

    கீரிப்பிள்ளைகள் இருக்கும் இடங்களில் பாம்புகள் அண்டாது பாம்பினை கொள்ளும். பின்னர் வி~ முறிவிற்காக “பெரியாநங்கை” செடிதனை நாடி அதனைத தின்று பிழைத்துக் கொள்ளும். என்ற நம்பிக்கைகள் உண்டு. இதனை உறுதி செய்யும் விதமாகப் பச்சியம்மாஇ வையாபுரி உரையாடல் அமைகிறது (பக்கம் : 80-81) மாடுகள் காளைக்கு (சினைக்கு) கத்தும் போது தீனிதிங்காது மாட்டுமேல் ஆள் மேல் ஏறிவிழும் காளைக்கு ஒட்டிப் போகும் போது முதல் மாடாக போக வேண்டும். பின்னர் மாட்டுக்கு தண்ணீர் காட்டக் கூடாது- தூக்கியே கட்ட வேண்டும்  அப்போது தான் பலன் பிடிக்கும் என்ற பல நம்பிகைகள் இன்றும் மக்கள் மனதில் இருந்து வருகிறது. மேலும் வையாபூரி மூலமாக“மாட்டுக்கு நசியமும் செரியா இருக்குற தருணத்தில் கொண்டு போனம்னாத்தா பலன் புடிக்கும். அதுதா வெட்ட வெடியால மொதல் மாடா இருக்குட்டும்னு புடிச்சுட்டுப் போனம் பாருங்க.இந்த நாலஞ்சு நாளாவே கட்டுத்தரைல கத்தீட்டு மேவும் திங்க மாட்டீங்குது. பக்கத்துல போனா ஆளெ மோந்து மோந்து பாத்துட்டு எடக்குப் பண்ணுச்சு”(பக்கம்: 34-40) எனச் சூர்யகாந்தன் அவர்கள் பேசியிருப்பது நோக்கத்தக்கது.

    “உணவே மருந்து என்பர். அதற்கேற்ப உடல் உபாதைகளுக்கும் சைவம், அசைவம் என உணவினையே மருந்தாக எடுத்துக்கொண்டு குணமடைவர். அந்நிலையில் இங்கு, எலும்புகள் முட்டுமுட்டாக முழங்கால் முழங்கைப் பகுதிகளில் விட்டுவிட்டு வலிக்கும் “சரவாங்கி” எனும் நோய்க்கு கீரியின் கறி…துப்பினால் சீழ் போல் வடியும் தீராத சளிக்கும் “கக்குவாய்”இருமலுக்கும் நத்தையின் கறி…. உட்காரக்கூட விடாமல் துன்புறுத்தும் மூலவியாதிக்குப் பன்றி மாமிசம்….”(பக்கம் : 106)  எனக்கூறிச் செல்வது கிராமபுற மக்கள் அசைவ உணவின் மீது கொண்டுள்ள மருத்துவ நம்பிக்கைதனைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.

    முடிவுரை:

    இன்றைய சமுதாய மக்கள் நாகரிகம் என்ற வட்டத்துக்குள் இருந்துகொண்டு பழமையையும், நம்பிகைகளையும் மறந்துவிட்டனர். மூதாதையரின் அறிவுரைகளை அலட்சியப்படுத்துவதையும் இன்றைய தலைமுறையிடம் காணமுடிகிறது. மேலும்  கிராமங்களில் இன்று வேளாண் தொழில் சிறப்பிழந்து  வருதலை அறியமுடிகிறது. இவற்றால் வேளாண் தொழில் அல்லாது மக்களின் வாழ்கையோடு இயைந்த கிராமங்களில் பண்பாட்டு விழுமியங்களும் மறைந்து போகின்றன. சூர்யகாந்தன் போன்ற சில படைப்பாளர்கள் தம் படைப்புகளின் வழி கிராமப்புற மக்களின் பழமைதனையும் நம்பிக்கையும் பதிவு செய்து வருதல் சற்று ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது.

    அடிக்குறிப்பு

    1.சூர்யகாந்தன் –  முள் மலர் வேலி          பக் 14-15

    2. மேலது – மேலது                                         ப-42

    3. மேலது – மேலது                                         ப- 62

    4. மேலது – மேலது                                         பக்- 33-34

    5. மேலது – மேலது                                         பக்- 73-76

    நாவல் – முள் மலர் வேலி
    ஆசிரியர் – சூர்யகாந்தன்
    முதற்பதிப்பு – டிசம்பர் 2010
    பதிப்பகம் – பாவை ப்பளிகேஷன்ஸ் 142, ஜானி
    ஜான் கான் சாலை சென்னை 600 014

    Share
  • (Peer Reviewed) தமிழ்த் திரையிசைப்பாடல்களில் அந்தாதி  – ஓர் ஆய்வுப் பார்வை

    (Peer Reviewed) தமிழ்த் திரையிசைப்பாடல்களில் அந்தாதி – ஓர் ஆய்வுப் பார்வை

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்                                                                                                                         
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
    மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

    முன்னுரை

    மரபு என்பது மாறாதது. மாற்றம் என்பதும் மாறாதது. அப்படியானால் மரபு மாறுமா? அல்லது மாறுவது மரபாகுமா? என்றால் உறுதியாக இல்லை. மரபு மாறாதது என்பது மட்டுமன்று; மாறுவது மரபாகாது. மாற்றமடைவது மரபின் பூக்களே! அடிமரமாகிய மரபு என்றைக்கும் மாறாது. அப்படி மாறினால் அது மரபாகாது. மாறினால் என்னாகும்? பிறிது பிறிதாகும். கட்டமைப்பு சிதறிவிடும். என்னதான் தமிழில் புதுக்கவிதை,  ஹைக்கூ, சென்ட்ரியூ, லிமரைக், பழமென்ரியு எனக் கவிதைப்பூக்கள் புதுமையாகப் பூத்தாலும் அவற்றைத் தாங்குவது மரபின் வேர்களே! அல்லது மரபாகிய வேரே! இந்தப் பின்புலத்தில் மரபார்ந்த யாப்புக் கூறுகளில் ஒன்றாகிய அந்தாதியில் அமைந்த திரையிசைப்பாடல்கள் சிலவற்றைப் பற்றிய ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    கட்டுரைக் கட்டுமானம்

    ‘அந்தாதி’ என்னும் மரபியல் சார்ந்த யாப்பு நெறி, மெட்டுக்களுக்கு எழுதப்படும் திரையிசைப் பாடல்களில் அமைந்துள்ள பாங்கினை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களில் வந்த ஒருசில பாடல்களையே தனக்குத் தரவுகளாகக் கொள்கிறது. விதிவருமுறையில் அமைந்த இக்கட்டுரை, விளக்கவியல் திறனாய்வு நெறிப்படி கட்டமைக்கப்படுகிறது. மரபும் புதுமையும் இணைந்து இழையும் இத்தகைய பாடல்கள் ஆழமான மேலாய்வுக்குரியது என்னும் நோக்கத்தை முன்னிறுத்துகிறது. திரைப்படப் பாடல்கள் பற்றிய சுவையுணர்வின் அடர்த்தி இன்னும் கூடுதலாக அமைவதோடு, மரபின் நிழலை அடையாளம் காணும் முயற்சியும் கூடும் என்பனவற்றைப் பயனாகக் கொள்கிறது.

    அந்தாதியின் இலக்கிய நிலை

    அந்தாதித் தொடைத் துளிகளைக் கொண்ட பாடல்களிலிருந்து அந்தாதி என்பது தனியொரு இலக்கியமாக உருவெடுத்தது கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் என்பது ஆய்வறிஞர் கருத்தாகும். காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதியே அந்தாதி இலக்கியத்தின் தலையிலக்கியமாகும். காரைக்கால் அம்மையாருக்குப் பின் சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்தடிகள், பரணதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி முதலியோர் அந்தாதி இலக்கியத்தை வளர்த்த சான்றோர்கள் ஆவர். ஆனால் இதற்கு முன் தோன்றிய திருமந்திரத்தின் நான்காம் மந்திரம் முழுமையும் அந்தாதித் தொடையால் அமைக்கப்பட்டது. தேவாரப் பகுதிகளும் திருவாசகத்தின் திருச்சதகமும் அந்தாதித் தொடையால் அமைக்கப்பட்டவையே. அந்தாதி தனி இலக்கியமாக உருப்பெற்ற காலத்திற்குப் பின்னும் அதன் தொடையழகில் கவிஞர்கள் மயங்கியது உண்மை என்பது இதனால் புலனாகிறது.

    அந்தாதி இலக்கியக் கூறுகளுக்கும் அந்தாதி இலக்கியத்திற்குமான ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. அந்தாதிக் கூறுகள் பாட்டின் இடையில் வருவன. ஒரு பாட்டுக்கும் அடுத்த பாட்டுக்குமான இயைபு. ஆனால் அந்தாதி இலக்கியம் மாறுபட்டது. அந்தாதி இலக்கியத்தின் முதற்சீரும் ஈற்றுச்சீரும் ஒன்றாகவே அமைய வேண்டும். பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி என்னும் நூல் ‘உதிக்கின்ற’ எனத் தொடங்கி ‘உதிக்கின்றவே’ என நிறைவடைவது காணலாம். ‘மெய்தான்’’ எனத் தொடங்கி ‘மெய்யனே’ என்று முடிவது திருச்சதகம். ‘பூவான்’ எனத் தொடங்கிப் ‘பூவே என்று முடிவது சிவப்பிரகாசர் எழுதிய ‘நான்மணிமாலை’. கவிக்கோ துரை.வசந்தராசன் எழுதியுள்ள ‘வேல் வேல்! வேல்!’ என்னும் குறளந்தாதி வேலில் தொடங்கி வேலிலேயே நிறைவடைகிறது.

    அந்தாதித் தொடையில் பாரதி எழுதிய இலக்கியங்களான பாரதமாதா நவரத்தினமாலை, திருத்தசாங்கம், விநாயகர் நான்மணி மாலை முதலியன முதற்சீரும் ஈற்றுச்சீரும் பொருந்துமாறு அமையவில்லை.

    சிற்றிலக்கியங்களுக்கு வரையறை கிடையாது எனினும் அந்தாதி இலக்கியம் அவற்றுள் ஒன்றாகவே கருதப்படுகிறது. வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, ஒலியந்தாதி, கலியந்தாதி, சிலேடையந்தாதி, திரிபந்தாதி, யமக அந்தாதி, நீரோட்ட யமக அந்தாதி எனப் பலவாறு அமைவதுண்டு.

    ‘அந்தாதி’ என்னும் பெயர் தாங்கித்தான் அந்தாதி இலக்கியம் அமைய வேண்டுமென்பதில்லை. இரட்டை மணிமாலை, மும்மணி மாலை, ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது, அலங்காரப் பஞ்சகம் முதலான பல்வேறு சிற்றிலக்கியங்களும் அந்தாதித் தொடையிலேயே அமைந்தவை என்பது நோக்கத்தக்கது. அந்தாதி ரசிப்பதற்குரியது. இந்த ரசனை சங்கக் காலத்திலேயே தொடங்கிவிடுகிறது.

    “மண்திணிந்த நிலனும்
    நிலனேந்திய விசும்பும்
    விசும்பு தைவரு வளியும்
    வளித் தலைஇய தீயும்
    தீ முரணிய நிலனும் என்றாங்கு
    ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”

    என்னும் புறநானூற்று வரிகளில் அடியின் முடிவு தொடக்கமாகி அமைந்துள்ள பாங்கினை அறியலாம்.

    “மால்வரை ஒழுகிய வாழை
    வாழை பூவெனப் பொலிந்த ஓதி”

    என்னும் சிறுபாணாற்றுப்படையிலும், அந்தாதித் தொடை அழகுற அமைந்துள்ளது. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்து பாடியவரான காப்பியாற்றுக் காப்பியனார் அப்பத்து முழுமையும் அந்தாதித் தொடையில் அமைத்துப் பாடியுள்ளார். புறப்பாடல் மட்டுமன்றி அகப்பாடல்களிலும் அந்தாதி அமைந்த காலம் உண்டு.

    “மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்ட கொல்
    வண்டின் மான்குணம் மகிழ்நன் கொண்டான் கொல்?”

    என்னும் ஐங்குறுநூற்றிலும்,

    “குன்றகத்ததுவே கொழுமிளைச் சீறூர்
    சீறூரோளே நாறுமயிர்க் கொடிச்சி
    கொடிச்சி கையகத்ததுவே”

    என்னும் நற்றிணையிலும் அந்தாதித் தொடைகள் ஆங்காங்கே அழகுகாட்டி அமைந்திருக்கின்றன.

    “திங்கள் மாலை வெண்குடையான்
    சென்னி செங்கோல் அதுவோச்சி
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாய் வாழி காவேரி
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவா தொழிதல் கயற்கண்ணாய்
    மங்கை மாதர் பெருங்கற்பென்று
    அறிந்தேன் வாழி காவேரி”

    என்னும் சிலப்பதிகார வரிகளில் இரண்டு அடிகளே அந்தாதியாக வந்திருக்கின்றன என்பதும் நோக்கத்தக்கது.

    படைப்பிலக்கியத்தை விஞ்சும் திரையிசைப்பாடல்கள்

    பெரும்பாலும் மெட்டுக்கு எழுதப்படுபவையே திரையிசைப்பாடல்கள். உண்மையில் கவித்துவத்திற்கான உரைகல்லும் திரையிசைப்பாடல்களுக்குமான உரைகல்லும் வெவ்வேறானவை. கவிதை நூல்களுக்கும் மேடைக்கவியரங்கத்திற்குமான வேறுபாடாகக் கொள்ள முடியும். கவிதை நூல்கள் காலங்கடந்து நிற்பன. நிற்பதற்கு உரியன. நிற்க வேண்டியன. எல்லா கவிதை நூல்களுக்கும் இது பொருந்தாது. பாரதிதாசன் எழுதிய எல்லாக் கவிதை நூல்களும் வெற்றியடையவில்லை என்பது இங்குக் கருதத்தக்கது. திரையிசைப்பாடல்களின் வெற்றி பெரும்பாலும் அமைக்கப்படும் இசையைச் சார்ந்துள்ளது என்பது உண்மையேயாயினும் அவற்றுள்ளும் எழுதப்படும் வரிகளுக்காகக் கொண்டாடப்படுவன பல உண்டு. அவை குறைந்த விழுக்காடாயினும் சிறந்த வரிகளாக நின்று சிந்தையைக் கொள்ளை கொள்ளுகின்றன என்பதில் ஐயமில்லை. ஒருசில நேர்வுகளில் பண்பட்ட இலக்கியக் கூறுகளையும் விஞ்சி நிற்கக் கூடிய கற்பனை வளம் வடிவ அழகு, உணர்ச்சியோட்டம் முதலானவற்றைத் திரையிசைப்பாடல்களில் காண முடியும். ‘மங்கையர் திலகம்’ என்ற ஒரு திரைப்படம். அதில் மருதகாசி எழுதிய ஒரு தாலாட்டுப் பாடலில் வரும் கற்பனை தமிழ்க்கவிதைகளின் அத்தனைக் கற்பனைகளையும் விஞ்சி நிற்பதாக உள்ளது. தாய் தாலாட்டுகிறாள். வாடைக்காற்று குழந்தைக்கு ஆகாது. வாடைக்காற்றை நோக்கித் தாய் பாடுகிறாள்.

    ‘நடுங்கச் செய்யும் வாடைக்காற்றே!
    நியாயமல்ல உந்தன் செய்கை!
    தடைசெய்வேன் தாழைப் போட்டு!
    முடிந்தால் உன் திறமை காட்டு!’

    ‘சன்னலின் கதவை மூடிவிட்டால் உன்னால் என்ன செய்ய முடியும்? என் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்க முடியுமா உன்னால்? உன் வேகத்தால் சன்னலைத் துளைத்துக் கொண்டு வர முடியுமா? முடியாதே!’ என்று அந்தப் பாசத்தாய் வாடைக்குச் சவால் விடுகிறாளாம். நந்திக் கலம்பகம், கம்பராமாயணம் போன்ற செவ்விலக்கியங்களில் மட்டுமே காண்பதற்குரிய அரிய அழகிய கற்பனையை ஒரு திரையிசைப்பாடலில் காணமுடிகிறதல்லவா?

    திரையிசைப்பாடல்களில் அந்தாதித் தொடை

    பல்வேறு உத்திகளில் இசையைத் தழுவி அமைக்கப்படுவன திரையிசைப்பாடல்கள். அத்தகைய திரையிசைப்பாடல்களில் அந்தாதித் தொடை பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன் வெற்றியும் பெற்றிருக்கிறது.

    ஆத்மநாதனும் அந்தாதியும்

    எம்.கே.ஆத்மநாதன் ‘‘நாலுவேலி நிலம்’ என்ற படத்தில் அந்தாதித் தொடையில் நாட்டுப்புறச் சாயலில் ஒரு பாட்டை எழுதியிருக்கிறார்.

    “ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
    நல்ல பாம்பு வேடங்கொண்டு நான் வருவேன் சாமத்திலே
    நல்ல பாம்பு வேடங்கொண்டு நடுசாமம் வந்தாயானால் 
    ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தில் பறந்திடுவேன்
    ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தில் பறந்தாயானால்
    செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்!
    செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
    பூமியைக் கீறியல்லோ புல்லாய் நான் மொளைச்சிடுவேன்!
    பூமியைக் கீறியல்லோ புல்லாய் நீ முளைத்தாய் ஆனால்
    காராம்பசு வேடங்கொண்டு கடித்திடுவேன் அந்தப் புல்லை
    காராம்பசு நீயானால் கழுத்து மணி நானாவேன்
    ஆலா மரத்தடியில் அரளிச் செடி நானாவேன்!
    அத்தியிலே மரமுமாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்!
    நத்திவரும் அத்தானுக்கு முத்துச்சரம் நானாவேன்!’’

    அந்தாதி படிப்பதற்கும் பாடுவதற்கும் எளிது. ஆனால் படைப்பதற்கு அரிது. காரணம் அந்தம் ஆதியாக இணைக்கப்படும் அசை, சீர், அடி முதலியவை சொற்பொருள் இணைப்பாக இருக்க வேண்டும். கவிதை வல்லாளர்கள் அமைப்பார்கள். மற்றவர்கள் கதைப்பார்கள். யாப்பின் உறுப்புக்களுள் தொடை என்பதும் ஒன்று. கட்டுதற்குப் பயன்படும் உறுப்புக்கள் வேறு. கட்டிய பின் பார்த்து ரசிக்கின்ற பாங்கு வேறு. பின்னது நோக்குவாரின் பார்வையில் உள்ளது. அதனால்தான் அந்தாதி என்பது யாப்பின் கூறுகளுள் ஒன்றாகக் கொள்ளாமல் தொடைவிகற்பங்களுள் ஒன்றாகக் கொண்டார்கள். ஆத்மநாதனின் பாடலில் காதலர்கள் தங்களுக்குள் கண்ட கனவைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அந்தக் கனவுப் பரிமாற்றம் ஊடலின் பரிணாமமாக ஒளிர்கிறது. அதுவும் அந்தாதியில் அமைகிறதுபோது ‘காதலி முதலானால் காதலன் முடிவாகிறான் காதலன் முதலானால் காதலி முடிவாகிறாள்’ என்னும் அரிய தத்துவத்தை விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது.

    கண்ணதாசனும் அந்தாதியும்

    ‘கவலையில்லாத மனிதன்’ என்று கவிஞர் கண்ணதாசனே எழுதித் தயாரித்த படம். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ எனத் தொடங்கும் பாடலில் அந்தாதியைக் கையாண்டிருக்கிறார்.

    “பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்! வந்தாரே
    பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்!
    கண்பட்டமோகமோ? கைபட்ட வேகமோ?
    புண்பட்ட நெஞ்சிலும் புதுமைகள் தோன்றுமோ?
    எண்ணங்கள் மாறியும் மாறாத சொந்தமோ?
    பெண்மையின் நீதியில் பண்பட்ட பந்தமோ?

    வெண்முல்லைச் சோலையில் பொன்வண்டு பாடுமோ?
    பொன்வண்டு பாடினால் பூந்தென்றல் வீசுமோ?
    பூந்தென்றல் வீசினால் பருவங்கள் பேசுமோ?
    பருவங்கள் பேசினால் பலனின்றிப் போகுமோ?
    மண்பெற்ற பிள்ளைகள் எண்ணற்ற கோடியே!
    எண்ணற்ற கோடியில் பெண்மக்கள் பாதியே!
    பெண்மக்கள் காதலை ஆண்மக்கள் நாடியே
    மணமாலை சூடிடும் மணமேடை தேடியே!
    பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார் வந்தாரே
    பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்!”

    ஒரு அடியின் ஈற்றுச் சீரையே அடுத்த அடியின் முதற்சீராக வைத்து  எழுதிய கண்ணதாசன் ஒரு கண்ணியின் ஈற்றுச்சீரை அடுத்த கண்ணியின் முதற்சீராக வைத்துப் புனைந்த பாடல் இப்படி அமைந்திருக்கிறது.

    “ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்!
    கோடி இன்பம் நாடிவந்தேன் காவிரியின் ஓரம்!
    ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம்!
    ஓசையின்றிப் பேசுவது ஆசை என்னும் வேதம்!
    வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும்!
    மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்!
    நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்!
    ராகந்தன்னை மூடிவைத்த வீணை அவள் சின்னம்
    சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச் சிலைக் கோலம்;!
    என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம்!
    காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்!
    கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில கூடும்!”

    என்ற பாடல் எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழக இளைஞர்களின் உதடுகளை நனைத்த பாடல். இன்னொரு பாடல் இதயத்தையே நனைத்தது. அந்தப் பாடலும் அந்தாதித் தொடையால் அமைந்ததுதான்.

    “வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்!
    நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்!
    நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்!
    கனவலைகள் வளர்வதற்குக் காமனவன் மலர்க்கணைகள்!
    மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்!
    பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைகள்!
    தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்!
    புதுக்கலைகள் பெறுவதற்குள் பூமாலை மணவினைகள்!
    மணவினைகள் யாருடனோ? மாயவனின் விதிவழியோ!
    விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்!”

    வசந்தத்தில் தொடங்கி வசந்தத்தில் முடித்திருக்கும் கண்ணதாசனின் அரிய திரையிசைப்பாடல் இது. இந்தப் பாடலும் ஒரு அடியின் ஈற்றுச்சீரைத் தொடரடியின் முதற்சீராக வைத்து எழுதிய அரிய பாடல். இவ்வாறு அமைத்து எழுதுவதில் இவர் முன்னோடியாக இருக்கக்கூடும்.

    வாலியும் அந்தாதியும்

    கண்ணதாசனும் வாலியும் திரையிசைப் பாடலாசிரியர்கள் என்றே அறியப்பட்டுள்ளனர். ஆனால் தமிழிலக்கியக் கவிதை வரலாற்றில் கண்ணதாசனின் இடத்தைத் திரைப்படப்பாடலாசிரியர் என்னும் வரையறைக்குள் அடக்கிவிட இயலாது. இதற்கு அவருடைய கவிதைத் தொகுதிகளே சான்று. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் பெருமக்களில் கண்ணதாசன் இரண்டு பொருண்மைகளுக்காக நினைக்கப்படலாம். ஒன்று, தனிமனித அனுபவத்தையே மிகச்சிறந்த கவிதைகளாக்கியது. இரண்டு, இழுத்த இழுப்புக்கு மொழியைக் கையாளும் இலாவகம். திரைப்பட உலகில் கலைஞர் மற்றும் கண்ணதாசன் ஆகியோரைப் போல மரபியல் வீச்சும் ஆழமும் கொண்ட பிறரைக் காண்பது அரிது. வாலி முழுமையான திரையிசைப் பாடலாசிரியர். கண்ணதாசனைவிட மெட்டுக்குப் பொருத்தமாக எழுதுவதில் வாலி விஞ்சி நிற்பார். ஆனால் கண்ணதாசனின் திரையிசைப்பாடல்களில் அடைந்த இலக்கிய வெற்றியை வாலி இறுதிவரை தொடவே முடியவில்லை. பலராலும் பாராட்டப்படும் பாண்டவர் பூமி, அவதார புருஷன் முதலிய படைப்புக்களின் இலக்கியத் தரமும் சிந்தனைக்குரியது. மேடைக் கவியரங்கத்தில் வாலியின் வெற்றி அளவிட முடியாதது. அது அவருடைய சொற்சேர்க்கைகளாலும் சிலேடைகளாலும் பெற்றவை. இவற்றை ஓர் அறிமுகமாகக் கொள்ளலாமே தவிர ஒப்பீடாகக் கொள்ளக் கூடாது. அது பெரியதொரு ஆய்வுக்குரியது. வாலி முதன் முதலாக எழுதிய ‘கற்பகம்’ என்னும் திரைப்படத்திலேயே அந்தாதித் தொடையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

    “பக்கத்து வீட்டுப் பருவமச்சான் பார்வையிலே படம் புடிச்சான்!
    பார்வையிலே படம்புடிச்சு பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்!
    மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்!
    மருக்கொழுந்து வாசத்திலே மாந்தோப்பில் வழி மறிச்சான்!
    மாந்தோப்பில் வழிமறிச்சு மயக்கத்தையே வரவழைச்சான்!

    தைமாதம் தாலிகட்ட மார்கழியில் கைய புடிச்சான்!
    வைகையிலே வெள்ளமில்லை விடியும் வரை கதைபடிச்சான்!
    விடியும் வரை கதை படிச்சு முடியாமல் முடிச்சு வச்சான்!

    ஊரெல்லாம் உறங்காது உள்ளமட்டும் அடங்கிவிடும்
    ஓசையெல்லாம் அடங்கிவிடும் ஆசை மட்டும் அடங்காது!
    ஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நெனச்சிருப்பேன்

    இந்தப் பாடல் படத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவரின் மகள் பாடுவதாக வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் மகளுக்குக் காதல் வரக்கூடாத ஒன்று என்பதன்று. அந்த வெளிப்பாடு இப்படித்தான் அமைய வேண்டுமா என்பது பொருளுள்ள வினாவே! ஒரு அறிக்கை போல அமைந்த இந்தப் பாடலில் தொடையழகு என்று தனித்து இல்லை. ஆனால் அந்தாதி அங்கங்கே தலைகாட்டுகிறது. ஓர் அடியின் ஈற்று இரண்டு சீர்களை அடுத்த அடியின் தொடக்கமாக வைத்துப் புனையப்பட்ட பாடல் இது.

    வாலியின் புதிய முயற்சி

    அந்தாதிக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுக்க முயன்றவர் வாலி. ஓரடியின் அல்லது ஒரு பாட்டின் இறுதிச்சீர், அசை என்பவற்றுள் ஒன்று அடுத்த அடியின் தொடக்கமாக அமைவதுதான் அந்தாதி. ‘அந்தம் முதலாத் தொடுப்பது அந்தாதி’ என்பது காரிகை. வாலியோ பொருளோடு கூடிய தொடரையே அந்தாதியாக்கிப் பாடுகிறார். அந்தத் தொடர் முந்தைய வரியின் ஈற்றாகவன்றி, நடுவே அமைந்திருக்கிறது.

    “என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்துப் போனவன் போனான்டி
    தன்னைக் கொடுத்து என்னையடைய வந்தாலும் வருவாண்டி”

    என்ற ஒரு கண்ணியில் முதற்கண்ணியின் நடுவில் இருக்கிற ‘தன்னைக் கொடுத்து’ என்ற தொடரை அப்படியே எடுத்து அடுத்த வரியின் தொடக்கமாக அமைத்துக் காட்டுகிறார். இதே நெறியில் பின்வரும் கண்ணிகளையும் எழுதியிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.

    “இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்துப் போனவன் போனான்டி
    ஏக்கத்தைத் தீர்க்க ஏனென்று கேட்க வந்தாலும் வருவான்டி”

    “நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்துப் போனவன் போனான்டி
    நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவான்டி”

    “ஆசை மனசுக்கு வாசலை வைத்துப் போனவன் போனான்டி
    வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடி வந்தாலும் வருவான்டி”

    அந்நாள் வரை வந்த அந்தாதியில் இது ஒரு மாறுபட்ட நிலை!. போற்றத்தக்க நிலை!. வடிவத்தில் மாற்றம் என்பதும் இதுதான். மரபில் மாற்றம் என்பதும் இதுதான்.!

    நிறைவுரை

    கவிதையை எப்படி வேண்டுமானாலும் சுவைக்கலாம். பெண்ணைக் கனியென்பது இலக்கிய மரபு. எல்லாப் பக்கமும் கனி இனிக்கும் என்பது நடப்பியல் உண்மை. ‘செவி நுகர் கனிகள்’ என்பது கம்பன் வாக்கு. கற்பனை, உணர்ச்சி, கருத்து, வடிவம் என்னும் கவிதைக் கூறுகளுள் அந்தாதி என்பது வடிவத்தோடு தொடர்புடையது. எழுத்து, அசை, சீர், தளை என்பன கவிதையின் அகக்கட்டுமானக் கூறுகள் என்றால் புறத்துப் பொலிவைக் காட்டுவன தொடை விகற்பங்கள். கட்டிடத்தின் அகமும் புறமும் போல! அவ்விகற்பங்களுள் அந்தாதி கவிதையை ஈர்க்கும் காரணிகளில் தலையாயது. சிறந்தது. இந்தக் காரணி தமிழின் தங்ககாலமான சங்கக் காலம் முதல் கணினி காலமாகிய தற்காலம் வரைத் திரையிசைப்பாடல்கள் உட்பட எழுதப்படும் கவிதைகளில் மாறாமல் நின்று நிலவுகிறது என்பதை இக்கட்டுரை ஓரளவு விளக்கியிருக்கலாம்.

    உதவிய நூல்கள்

    1. சங்க இலக்கியங்கள் — மர்ரே பதிப்பு
    2. சிலப்பதிகாரம் – கழகப் பதிப்பு
    3. பல்வேறு திரையிசைப் பாடல்கள்
    4. யாப்பருங்கலக்காரிகை – கழகப்பதிப்பு
    5. தமிழிலக்கிய வரலாறு – கா.சு.பிள்ளை

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘திரையிசைப் பாடல்களில் அந்தாதி – ஒரு ஆய்வுப் பார்வை’ என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பார்கள். இந்தக் கட்டுரை ‘பழைய மொந்தையில் புதிய கள்’ளாக இனிக்கிறது.
    2. மரபு சார்ந்தே சிந்தித்துப் பழகிய பேராசிரியர்களின் இத்தகைய கட்டுரைகள் புதுமையின் அடர்த்தியைக் கூட்டும் என்பதில் ஐயமில்லை.
    3. அந்தாதியைத் தொடைவிகற்பத்துள் ஒன்றாக முன்னோர்கள் காட்டியிருப்பது அதன் அழகு நோக்கி என்னும் கட்டுரையாளர் கருத்து அருமை!
    4. அந்தாதி இலக்கியத்தின் இடைப்பகுதி மட்டுமன்று தொடக்கமும் முடிவும் கூட ஒரே சொல்லால் நிறைவு பெற வேண்டும் என்பதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டுக்களைத் தருவது பாராட்டுக்குரியது.
    5. ‘திரையிசைப்பாடல்களில் அந்தாதியின் வரலாறு’ என்ற தனித்த ஆய்வுக்கு இக்கட்டுரை வழிகோலக் கூடும்.
    6. கவிஞர் திரு ஆத்மநாதனில் தொடங்கி வாலிவரை தரவுகளைக் தேடிக் கொடுத்திருக்கும் ஆய்வாளரின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.
    7. விரிவும் ஆழமும் கொண்ட அந்தாதி பற்றிய முற்பகுதி விளக்கவுரை  கட்டுரையாளரின் சங்க இலக்கியப் புலமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
    8. என்னதான் புதுமை என்றாலும் மரபின் வேர்களிலிருந்துதான் பூக்க முடியும் என்பதை உறுதி செய்யும் தெளிவான கட்டுரையாக இது மதிக்கப்படலாம்.


    Share
  • (Peer Reviewed) மெய்யுரைகண்ட தெய்வச்சிலையாரின் உரைமரபுகள்

    (Peer Reviewed) மெய்யுரைகண்ட தெய்வச்சிலையாரின் உரைமரபுகள்

    டாக்டர்.  வே.விக்னேசு
    தமிழ்  உதவிப்பேராசிரியர்,
    பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் – 641014.
    vignesh@psgcas.ac.in
    9597203214.

    தோற்றுவாய் :

    உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழி இலக்கிய வளமும் இலக்கண வரம்பும் உடையதாம். தமிழ்மொழிக்கு இலக்கண வரம்புரைக்கும் நூல்களுள்ளும் தலைமைசான்றது தொல்காப்பியமேயாம். எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றதிகாரப் பகுப்பொடு தொல்காப்பியரால் இயற்றப்பெற்ற இவ்வரிய நூலின் இடையதிகாரமாம் சொல்லதிகாரத்திற்கு உரைகண்ட உரையாசிரியர் பலராவர். அவருள்ளும் இற்றைக்கு அச்சிற்பதிப்பிக்கப்பட்ட பழையவுரைகளென இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார், பெயரறியப்படாத பழையவுரைகாரர் ஒருவர் ஆகிய அறுவருரைகளே கிட்டியுள. அவ்வகையில், உரையெழுதுதல் வழியாக மூலநூலைப் போற்றிக்காத்த இவ்வுரையாசிரியப் பெருமக்களுள் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரைகண்ட தெய்வச்சிலையாரின் உரைப்போக்கையும் உரைமரபுகளையும் இக்கட்டுரை சுருங்க விளக்க முற்படுகின்றது.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் :

    தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குக் கிட்டிய பழையவுரைகளுள் இளம்பூரணருரையே பழமையானது; நூல் முழுமைக்கும் கிடைத்துளது. நச்சினார்க்கினியருரை எழுத்து, சொல், பொருளில் முன்னுள்ள அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் என்னும் ஐந்தியல்களுக்கு மட்டுமே கிடைத்துளது. எஞ்சிய பொருட் பகுதியாகிய மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் நான்கியல்கட்குப் பேராசிரியருரையே கிடைத்துளது. மற்றைய பகுதிகட்குப் பேராசிரியருரை கிடைத்திலது. அன்றியும், நச்சினார்க்கினியருரையும், பேராசிரியருரையும் இயைந்து ஒருவருரையாகத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் அமைந்துள்ளது. அங்ஙனமே, நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு முன் சுட்டிய அறுவருரைகள் கிடைத்துள.

    தமிழிலக்கிய இலக்கணங்களுள் உரை பலவாக வாய்க்கப்பெற்ற நூல்களுள் தொல்காப்பியமும் ஒன்றாம். தொல்காப்பியரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். இவ்வகையில், ’தொல்காப்பியமும் சங்க நூல்களும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் கல்வியுலகிற் பரவாதிருந்தன’ என்றும், ’கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தொல்காப்பிய இயக்கமும் சங்கவிலக்கிய மறுமலர்ச்சியும் தோன்றின’ என்றும் உரைக்கும் வ. சுப. மாணிக்கனார், தொல்காப்பிய இயக்கம் பற்றியும், தொல்காப்பியக் கல்வி பரவியமை பற்றியும் கூறும் கருத்துக்கள் இவண் நோக்கத்தக்கனவாம். அவர் கூறுமாறு:

    ”இவ்வியக்கத்தின் தலைவர் இளம்பூரணர்; உரையாசிரியர் என்ற கீர்த்தியைத் தமக்கே உரிமை கொண்டவர். நேராப் புகழ்மைப் பேராசிரியரும், ஆனாப் பெருமைச் சேனாவரையரும், மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரும், உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியரும், சொல்லுரைகண்ட கல்லாடனாரும் இவ்வியக்கத்தின் படையாளர்கள். இப்பேரியக்கம் மூன்று நான்கு நூற்றாண்டுகள் தொல்காப்பியக் கல்வியைக் கற்றாரிடைப் பரப்பியது” (தொல்காப்பியக்கடல், ப. 264) என்பது அவர் கருத்தாம்.

    இன்னவகையில், தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.

    சொல்லதிகாரத்திற்கு வாய்த்த பேறு :

    எழுத்து, சொல், பொருள் என நிற்கும் தொல்காப்பியத்தில் நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு மட்டும் பழையவுரைகளென மேற்சுட்டிய அறுவருரைகள் உள. அஃதேல், எழுத்து, பொருள் என்பவற்றினும் இடையதிகாரமாம் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரைகள் பல தோன்றியது என்னை? என்ற வினா எழுகின்றது. எழுத்ததிகாரத்தினும், பொருளதிகாரத்தினும் விட இலக்கணங் கற்போர்க்குச் சொல்லதிகாரம் இன்றியமையாதது ஆதலானும், அதற்கு விரிவான விளக்கமும் வேண்டப்பட்டதாலும், ’சொல்’ பற்றிய கருத்து வேற்றுமை மிக்கிருத்தலானும் உரையாசிரியர் பலர் இச்சொல்லதிகாரத்திற்குத் தனித்தனியே உரை வரைந்தனர் எனல் தகும். இப்பேறு சொல்லதிகாரத்திற்கே வாய்த்த பேறாகும்.

    தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சி இடைக்காலத்துச் சிறப்புற்று விளங்கியமை போன்றே, பதினேழாம் நூற்றாண்டில் மீண்டும் அவ்வாராய்ச்சித் தொடங்கியது. இவ்வகையில், பின்னங்குடி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் சொல்லதிகாரப் பழையவுரையாசிரியர்களின்  உரைக்குறிப்புக்களையும் தம் ஆய்வு முடிபுகளையும் கொண்ட, ’தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு’ என்னும் பெயரிய நூலை 1930-இல் வெளியிட்டார். சொல்லதிகார மூலத்தையும் உரைகளையும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் பதிப்பித்தபொழுது, இளவழகனார், ஞா. தேவநேயப்பாவாணர், ஆ. பூவராகம்பிள்ளை, கு. சுந்தரமூர்த்தி போன்றோரின் குறிப்புரைகளுடனும் விளக்கவுரைகளுடனும் பதிப்பித்து வெளியிட்டனர்.

    தொல்காப்பியச் சொல்லதிகாரம் மேற்சுட்டிய அறுவருரைகளுடன் உரைவளப் பதிப்பு என்னும் முறையில் பல பதிப்புகள் வெளிவந்துள. ஆபிரகாம் அருளப்பன், வி.ஐ. சுப்பிரமணியம் ஆகிய இருவரும் இணைந்து பதிப்பித்தத் ‘தொல்காப்பியம்-சொல்லதிகாரம், உரைக்கோவை’ (1963) என்னும் நூல் இவ்வகையில் முன்னோடியாகும். இவ்வுரைக்கோவையிலும் கிளவியாக்கம் முதலாக விளிமரபு ஈறாக நான்கு இயல்களைக் கொண்ட முதற்பாகம் மட்டுமே வெளிவந்துளது. தொல்காப்பிய நூல் வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் சொல்லதிகார அறுவருரைகளையும் சேர்த்தும், ஆ. சிவலிங்கனாரின் ஆய்வுரையுடனும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ‘தொல்காப்பியம்-சொல்லதிகாரம் உரைவளமும்’ தி.வே. கோபாலையரின் விளக்கவுரையுடன் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தராலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தாராலும் வெளியிடப்பட்ட ’தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்து’ எனும் உரைவளப்பதிப்பும் இவ்வகையில் சுட்டத்தக்கதாம்.

    தொல்காப்பியச் சொல்லதிகாரத்தையும் நன்னூல் சொல்லதிகாரத்தையும் ஒப்பிட்டு, பல விளக்கங்களையும், குறிப்புக்களையும் சேர்த்து, ’தொல்காப்பியம்-நன்னூல்- சொல்லதிகாரம்’ (1971) என்ற தலைப்பில் க. வெள்ளைவாரணர் இயற்றிய நூலும் தொல்காப்பியம் முழுமைக்கும் ஆராய்ச்சிக்காண்டிகையுரை வரைந்து ச.பாலசுந்தரனார் வெளியிட்ட ’தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக்காண்டிகையுரை’ நூலும் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு அ.கு. ஆதித்தர் தெளிவுரையெழுதி வெளியிட்ட ’தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-ஆதித்யம்’ (1977) என்ற நூலும் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சியின் தொடர் பணிகளெனச் சுட்டத்தக்கனவாம். இவற்றையடுத்தும் பல எளிய உரைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன.

    இனித் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைபகன்ற தெய்வச்சிலையாரின் உரைப்போக்கும் உரைமரபுகளும் ஆய்ந்துரைக்கப் பெறுகின்றன.

    மெய்யுரைகண்ட தெய்வச்சிலையார் :

    தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைகண்ட சான்றோருள் ஒருவர் தெய்வச்சிலையாராவர். இவ்வுரையாசிரியர் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை செய்தவராவர்.  இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் இம்மூவர் காலத்திற்குப் பிற்பட்டவரிவர்.  பாண்டிநாட்டில் தோன்றியவர்.

    பதிப்பு வரலாறு :

    தொல்காப்பியச் சொல்லதிகாரத் தெய்வச்சிலையாருரை முதன்முதலாக, கரந்தைத் தமிழ்ச்சங்கத்துச் சார்பில், கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம்பிள்ளை அவர்களால் அரிதின் முயன்று பதிப்பிக்கப்பட்டு விரிவான பிற்சேர்க்கையுடன் 1929-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது.

    கரந்தைக் கவியரசு அவர்கட்கு முதலில் ஓர் ஏடு கிடைக்க, அவ்வேட்டின் இறுதியில் ’ஆத்திரேய கோத்’ என்னுஞ் சொற்கள் இருந்தன என்பதால் இது ’ஆத்திரேய கோத்திரத்துப் பேராசிரியர்’ உரையென்று பேரறிஞர் சிலர் எழுதியுளது பற்றி, முதலில் இந்நூலுக்குப் பேராசிரியர் உரையெனும் பெயர் தந்திட்டதுடன் அதுகொண்டே நூல் முழுவதும் பதிப்பித்து விட்டார்கள். பின், உ.வே. சாமிநாதையரவர்களிடம் இவ்வுரையேடொன்று இருப்பது அறிந்து அதனை வேண்டிப் பெற்று, அவ்வேட்டில் கண்ட வேறுபாடுகளையெல்லாம் பிற்சேர்க்கையாக இணைத்து, நூலின் பெயரையும் உ.வே. சாமிநாதையரவர்கள் தந்த ஏட்டின் முன்னும் பின்னும் கண்டாங்கு ’தெய்வச்சிலையார் உரை’ எனக் கொண்டு பதிப்பித்துள்ளார்கள். இவ்வுரையேடு அச்சிட்ட வரலாற்றினைக் கரந்தைக்கவியரசு அவர்கள் பதிப்புரையின்கண் விரிவாகக் கூறியுள்ளார்கள். அதனைக் கேண்மின்:-

    ”இதன்கண் பல்வகையான பிழைகளும் மலிந்திருத்தல் கூடுமென யான் உணரேனல்லேன்; உணர்ந்தஞ்சேனல்லேன்; அஞ்சி அஞ்சியும் அச்சிட்டது, ஒன்றே ஒன்றைக் கருதியதாகும். அஃதாவது, இதில் என் மனமாரச் செய்த ஆக்கல், அழித்தல், திரித்தல் முதலாய செய்கைகள் இலவாகலின், நாளும் நாளும் பழுது பட்டொழிந்துவரும் இவ்வேட்டின் ஒருநேர் பிரதியாக இது நின்று, பிற்காலத்து அச்சிடும் பெரியார்கட்கு ஒருவாறு உதவி செய்யும் என்று எண்ணியதொன்றேயாகும். ஒரு பெரிய நூலை அச்சிட்டதொரு பிழையினை இது பற்றியேனும் தமிழுலகம் பொறுத்திடுவதாக” (சொல். தெய். பதிப்புரை. ப.10) என்ற அரும் பண்பு நடையால் இந்நூலை அச்சிடுதற்கு அப்பெருமகனார் அஞ்சியதும் அறியலாகின்றது. அன்றியும், அவர் கூறியாங்கே, தெய்வச்சிலையாருரையைப் பிற்காலத்து அச்சிட்ட பெரியவர்கட்கு இப்பதிப்பே ஒருநேர் பிரதியாக நின்றுதவியது என்பதும் ஈங்குக் குறிப்பிடத்தக்கதாம்.

    பின்னர், இவ்வுரை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் கு. சுந்தரமூர்த்தி அவர்களின் விளக்கவுரையுடன் 1963-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது. பின்னர், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் தெய்வச்சிலையாருரை, நிழற்படப் பதிப்பாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தாரால் 1984-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்நூலின் மறு அச்சு 2010-இல் வெளிவந்துளது.

    உரைநலம் :

    தெய்வச்சிலையாருரை ஏனையுரைகளினும் பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வுரை சொல்லழகும் பொருளழகும் திட்ப நுட்பமும் வாய்ந்ததாம். பிறவுரைகளிற் காணப்படாத பல அருஞ் செய்திகள் இவ்வுரையில் காணலாகின்றன.

    கிளவியாக்கத்தின் தொடக்கத்தில் சொல்லதிகாரத்தின் ஒவ்வோர் இயலுக்குமுள்ள இயைபைக் கூறும் முறையாலும், ’தகுதியும் வழக்கும்’ (சொல். 17), ’உருபென மொழியினும்’ (சொல். 24), ’தன்மை சுட்டலும்’ (சொல். 25) என்பனபோன்ற நூற்பாக்களின் உரைகளானும், பத்துவகை எச்சங்களுக்கு இவர் வரைந்துள்ள உரையானும் இவ்வுரையாசிரியர் நுண்ணிய அறிவுடையவர் என்பது புலனாகின்றதாம்.

    எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி ஆகிய நூல்களிலிருந்து பல மேற்கோள்களை இவர் எடுத்துக்காட்டுவதனின்று,  இந்நூல்களில் இவருக்கிருந்த இலக்கியப்புலமை நன்கறியலாகின்றது. சேனாவரையரையொப்ப இவ்வுரையாசிரியரும் வடமொழி இலக்கியங்களிலும் வல்லவரென்பது சொல் 66, 68, 81, 87, 106, 408, 410 ஆகிய நூற்பாக்களுக்கு இவர் வரைந்துள்ள உரைகளான் தெளிவாகின்றது.

    சமயச் சார்பான எடுத்துக்காட்டுகளைத் தருதல் :

    இவ்வுரையாசிரியர், ’மன்னாப் பொருளும் அன்ன இயற்றே’ (சொல். 34) என்னும் நூற்பாவிற்கு எடுத்துக்காட்டு வழங்குங்கால், ”வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து உலகும் உயிரும் பரமும் அனாதி; பதியும் பசுவும் பாசமும் அனாதி எனவரும் உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும், பாசமும் பதியும் இவற்றொடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க” என்று குறிப்பிடுகின்றார். இதனான் இவரின் சைவசித்தாந்தச் சாத்திர அறிவு புலனாகின்றது.

    அங்ஙனமே, ’பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும்’ (சொல். 438) எனவரும் நூற்பாவில் ’மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும்’ என்ற பகுதிக்கு எடுத்துக்காட்டாக, ”மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன்தானும், எண்ணிய வரகாலி மூன்றும், இரண்டு மரமும், ஓர்யாறும் திண்ணம் அறிய வல்லார்க்குச் சிவகதியதனைப் பெறலாமே” என்ற திருவைந்தெழுத்தைப் பொருண்மையாக உடைய பாடலைக் காட்டி, ”இதனுள் மண்ணைச் சுமந்தவன் – ந, வரதராசன் மகன் – ம, வரகாலிமூன்று – சி, இரண்டு மரம் – வா, ஓர்யாறு – ய எனக் கூற நமச்சிவாய எனப் பொருளாயிற்று” என்று விளக்கியுள்ளார். இஃது, சிவபெருமான்பால் இவர் கொண்ட பற்றினை விளக்குவதாம்.

    உரைப்போக்கு :

    இளம்பூரணர் முதலானோர் உரைப்போக்கினின்றும் தெய்வச்சிலையார் உரைப்போக்கு வேறானதாம். இவருரை அதிகார விளக்கம், இயல்விளக்கம், இயல் இயைபு, கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கம் என்னும் அமைப்பினது. இவர் அதிகார விளக்கங் கூறுங்கால் தனியே கூறினாரல்லர்; கிளவியாக்க முதல் நூற்பாவினையடுத்தே கூறுகின்றார். ஒவ்வோரியலிற்கும் உள்ள இயைபினைப் புலப்படுத்துகின்றார். கருத்துரை வழங்குங்கால் இளம்பூரணரைப் போன்று ’இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்’ என வினா எழுப்பிக் கூறாமல், நூற்பா நுதலியதை மட்டும் கூறி ’நுதலிற்று’ என முடிக்கின்றார்.

    கிளவியாக்க முதல் நூற்பாவிற்குக் ’கடாவிடை யுள்ளுறுத்து’ உரைவிரிக்கும் இவர், அந்நூற்பா உரையின் நிறைவில், ”இனி இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றானும் கடாவிடை யுள்ளுறுத்து உரைப்பிற் பெருகும்” என அமைகின்றார். அங்ஙனமே, இவர் ஒவ்வோரியலின் நிறைவிலும் உரையினது அளவைக் கிரந்த வகையால் இவ்வளவு என்று கணக்கிட்டு உரைக்கின்றார்.

    மறுப்புநலம் :

    இவ்வுரையாசிரியர் எவர் பெயரையும் எவ்விடத்தும் கூறினாரல்லர். அங்ஙனமே, இவர் பெயரையும் பிறவுரையாளர்கள் குறிப்பிடவில்லை. இவர், தம் கொள்கையைக் கூறிச் செல்லும் இயல்பினரே அன்றிப் பிறர் கொள்கையைக் கூறி அவர்களைப் பெயர் சுட்டி மறுத்துரைக்கும் இயல்பினரல்லர். இவர் பிறரை மறுக்கும் இடங்கள் சொல். நூ. 1,32, 87, 100, 441, 62, 404 என்னும் ஏழிடங்களேயாம். இவற்றுள் முதல் இரு இடங்கள் இளம்பூரணரையும், அடுத்த மூவிடங்கள் இளம்பூரணரைத் தவிர ஏனையுரைகளை மறுத்துரைத்தனவாம். எஞ்சியுள்ள மறுப்புக்கள் இன்றுள்ள சொல்லதிகார உரைகள் எவற்றுக்கும் பொருந்துவனவாய் இல்லை. இங்ஙனமாக, பிறர் கொள்கையை மறுத்த இடங்களில் எவர் பெயரையும் குறிப்பிடாமல் இவர் மறுத்துச் செல்லும் மறுப்புநலம் இவரின் தனிச் சிறப்பாம்.

    நூற்பாக்களின் அமைப்பு :

    இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் கொண்ட நூற்பாக்களின் பாடம், அடிகள், முறைவைப்புக்கும் இவருரைக்கும் பலவிடங்களில் வேறுபாடுகள் காணலாகின்றன. அம்மூவரும் கொண்ட நூற்பா அமைப்பினையும் இவர் மாற்றியுள்ளார். அஃதாவது, நூற்பாக்களை ஒன்றாக்கல், பலவாக்கல், நூற்பாவினை இடம் மாற்றியமைத்தல் என்பனவாம். ஒரு நூற்பாவை இரண்டாக்கியும், சில நூற்பாக்களை இணைத்து ஒரே நூற்பாவாக்கியும் உரை செய்துள்ளார். இங்ஙனம் இணைத்தும் பகுத்தும் உரைகாண்பது மட்டுமன்றி,  சில நூற்பாக்களை இவர் இடமாற்றியும் அமைத்துள்ளார்.

    இவர் செய்த நூற்பா இடப்பெயர்வுகளுள் சிலவற்றைக் கூறுவல் :

    எச்சவியலிலுள்ள ’இறப்பின் நிகழ்வின்’ (எச்ச.31) ’எவ்வயின் வினையும்’ (எச்ச.32), ’அவைதாந், தத்தங்கிளவி’ (எச்ச.33) என்னும் மூன்று நூற்பாக்களும் முற்று வினைச் சொல்லின் இலக்கணம் கூறுபவை. ஆயின், இவற்றைத் தெய்வச்சிலையார் வினையிலக்கணமாதல் ஒப்புமை பற்றி வினையியலிறுதியில் 242, 243, 244 -ஆம் நூற்பாக்களாக வைத்து உரையெழுதியுள்ளார். இங்ஙனம் மாற்றியமைத்ததற்குத் தக்க காரணமும் 241-ஆம் நூற்பா உரையின் இறுதியில் கூறுகின்றார். அவ்வுரையுள், ”வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்ற தென்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற்றன்று” என்று இவர் உரைத்துள்ளமையும் கருதத்தக்கதாம்.

    இங்ஙனமே, எச்சவியலிலுள்ள ’இசைநிறை’ எனத் தொடங்கும் 15-ஆம் நூற்பாவை 26-ஆம் நூற்பாவாகவும், வேற்றுமை மயங்கியலில் ’அதுவென் வேற்றுமை’ எனத் தொடங்கும் 11-ஆம் நூற்பாவையும், ’ஆறன் மருங்கின்’ எனத் தொடங்கும் 15-ஆம் நூற்பாவையும் இடப்பெயர்வு செய்து ’அச்சக்கிளவிக்’ எனத் தொடங்கும் நூற்பாவினை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 15,16-ஆம் நூற்பாக்களாக வைத்து உரை செய்துள்ளார் என்பதும் இவண் சுட்டத்தக்கதாம்.

    முடிபுகள் :

               இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

    • தொல்காப்பியத் தொண்டர்கள் எனத்தகும் உரையாசிரியர்கள், ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்குறிப்பை உய்த்துணர்ந்து தெளிய அறிவிக்கும் நுண்ணறிவுடையோர்.
    • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாளர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்
    • தொல்காப்பியத்தின் மூன்றதிகாரங்களுள் சொல்லதிகாரம் ஒன்றே அறுபெறும் உரையாளர்களின் உரைகளைக் கொண்டது; இஃது சொல்லதிகாரத்திற்கே வாய்த்த பேறாகும்
    • அன்றியும், தொல்காப்பியச் சொல்லதிகாரத் தெய்வச்சிலையாருரை ஏனையுரைகளினும் பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
    • இவ்வுரையாசிரியரின் பரந்துபட்ட இலக்கண இலக்கிய ஆராய்ச்சிநலமும் வடமொழிப்புலமையும் பிறவுரைகளிற் காணாதனவாய் இவர் வரைந்த சிறப்புரைகளான் தெள்ளிதிற் புலனாம்.
    • சமயச்சார்பான எடுத்துக்காட்டுக்களை இவர் காட்டியுள்ள பான்மையை நோக்குழி, இவர்தம் சமயப்பற்றும் வேண்டுழியெல்லாம் அதனை வெளிப்படுத்தும் நுண்மையும் நேரிதின் விளங்குகின்றதாம்.
    • பிறவுரைகளைப் பெயர்சுட்டி மறுக்காத அரும்பண்புடைய மறுப்புநலனும் ஆசிரியர் ஓதிய சூத்திரங்களைத் தான் இடப்பெயர்வு செய்தமைக்கு இவர் பகன்றுள்ள ஏதுக்கள்தாமும் பல்வேறு மேலாய்வுகளுக்கு இட்டுச் செல்வனவாம்.

    என்னும் முடிபுகள் இக்கட்டுரையான் பெறலாகின்றன எனக்கூறி நிறைவு செய்வாம்.

    துணை நின்ற நூல்கள் :

    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1973.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1970.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், முதற்பதிப்பு – 1981.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, முதற்பதிப்பு – 1978.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு – 1997.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1962.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு – 2010.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு – 1963.
    1. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் விளக்கவுரை 38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி. முதற்பதிப்பு – 1930.
    1. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – உரைக்கொத்து (தொகுதி-1),  தி.வே. கோபாலையர். (ப.ஆ.) சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்,  முதற் பதிப்பு – 2007.
    1. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் -ஆராய்ச்சிக் காண்டிகையுரை, ச. பாலசுந்தரம். (உ.ஆ.), பெரியார் பல்கலைக்கழகம், சேலம், முதற்பதிப்பு – 2012.
    1. மாணிக்கம். வ.சுப., தொல்காப்பியக்கடல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 1987.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரின் உரைமரபுகள்’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. தெய்வச்சிலையாரின் உரைச்சிறப்புப் பற்றிய இவ்வாய்வுக்கட்டுரை முழுமையாக ஆய்வுப் பொருளை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. 
    1. ‘உரைமரபுகள்’ என்பதே கட்டுரையின் மையப் பொருளாயினும் அது தொடர்பாக ஆய்வாளர் எடுத்து மொழிந்திருக்கும் ஏனைய உரையாசிரியர்கள், சொல்லதிகார உரைகள், அவற்றின் வரலாறு, சொல்லதிகார உரைப்பதிப்புகள் முதலியன கட்டுரைக்குக் கூடுதல் அடர்த்தியை அளிக்கின்றன. 
    1. பொருண்மைகளுக்குப் பொருத்தமாகக் கட்டுரையின் துணைத்தலைப்புக்கள் அமைந்திருப்பது ஆய்வுப் பொருளை  தெளிவாக அணுகத் துணைசெய்கிறது..
    1. பழந்தமிழ்த் தேட்டங்களைத் தேடியும் கண்டும் தொகுத்தும் வகுத்தும் பகுத்தும் செய்யும் ஆய்வுகள் அருகிய தற்காலத்தில் இத்தகைய கட்டுரைகள் பெரிதும் போற்றுதற்குரியன. 
    1. கட்டுரையில் குறிப்பிட வேண்டியது பொருண்மைக்கேற்ற மொழி நடை. எளிமை என்ற பெயரில் பொருண்மையை நீர்த்துப் போகச் செய்யும் மொழிநடை தவிர்த்து செப்பமான மொழிநடையைக் கடடுரையாசிரியர் பின்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
    1. ‘தெய்வச் சிலையாரின் உரைமரபுகள்’ என்பதே ஆய்வுப் பொருண்மையாயிருக்க, ‘மெய்யுரை கண்ட தெய்வச் சிலையார்’ என  அடைமொழி அளித்திருப்பது முடிவுக்குப் பின் ஆய்வோ என்னும் மயக்கத்தைத் தருகிறது. 
    1. தொல்காப்பியச் செய்யுளியலுக்கான ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை, கழகம் மற்றும் தமிழ்மண் பதிப்பகத்தில் அண்மையில் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு உள்ளது என்பது சுட்டப்படுகிறது. 
    1. ‘உரைமரபுகள் என்னும் தலைப்புக்கேற்ப ஒரு குறிப்பிட்ட நூற்பாவின் உரையைப் பெருமதிப்பு வாய்ந்த சேனாவரையர் உள்ளிட்ட உரையாசிரியர்தம் உரை மரபுகளோடும் உரைப்பகுதியோடும் ஒப்பிட்டு நோக்கியிருந்தால் கட்டுரை இன்னும் சிறந்திருக்கக் கூடும். 
    1. ‘பதிப்பித்தத் தொல்காப்பியம்’ ‘ஒப்பிட்டு பல’ என்னும் இடங்களில் உள்ள ஒற்றுப்பிழைகள் நீக்குதற்குரியன. பெயரெச்செங்களில் வல்லினம் மிகாது.

    தேவை, தெளிவு, சுருக்கம், அடர்த்தி, செம்மை ஆகிய பண்புகளைக் கொண்டு, ஆய்வு நெறிப்படி இந்தக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.


    Share
  • (Peer Reviewed) தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு

    (Peer Reviewed) தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்    
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
    மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

    முன்னுரை

    இலக்கியம் வெற்றி பெறுவது உத்திகளால். உத்தி பலவகைப்படும். வெளிப்பாட்டு உத்தி என்பது அவற்றுள் ஒன்று. கவிஞன் தன் உள்ளத்துக் கருத்துக்களையும் கற்பனைகளையும் பலவகையாக வெளிப்படுத்த முடியும். தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைத் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்பர். முன்னிலைப்பொருளை நோக்கி விளித்துச் சொல்கிற இலக்கியங்களும் உள. கவிதையைப் கேட்பதற்கான பொருள்களை அழைத்துப் பாடுவதும் தூது என்ற இலக்கிய வகையில் அடங்கும். ஒருவன் தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை, வழிப்போக்கர்களை நோக்கிச் சொல்வதும் அக்காலத்தில் ஒரு இலக்கிய வகையாகக் கருதப்பட்டிருக்கிறது. இங்கே வழிப்போக்கர்கள் என்பது வறுமை தீர்க்கும் இடம் நோக்கிச் செல்வாரைக் குறிக்கும். ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் பரந்த மனப்பான்மையின் பழந்தமிழ்ச் சான்றாகத் திகழ்கின்ற இந்தக் கவிதை உத்திக்கு ‘ஆற்றுப்படை’ என்று பெயரிட்டு வழங்கியமையை அறிய முடிகிறது. இது பற்றிய சில செய்திகளை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கட்டுரைக் கட்டமைப்பு

    இந்தக் கட்டுரை ஒரு இலக்கிய வகைமையின் உள்ளடக்கச் சுருக்கமாக  அமையாமல் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய வரலாற்றை ஆராய முயல்வதாக அமைகிறது. எனவே காலமுறைத் திறனாய்வு பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு கால இலக்கியத்திலும் இதன் தாக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றியும் புதுக்கவிதை, ஹைக்கூ, லிமரைக், சென்ட்ரியூ முதலியன வளர்ச்சியடைந்திருக்கும் தற்காலத்தில் மரபார்ந்த இலக்கியங்களின் இரங்கத்தக்கநிலை பற்றியும் சுட்டிக் காட்டுகிறது.

    ஆற்றுப்படை – ஒரு விளக்கம்

    ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது பிற்காலத்திய வழக்கு. அன்றைய ஆற்றுப்படையின் அடிப்படையே அதுதான். வழி தெரியாதவனுக்கு வழி சொல்லவே மறுக்கும் அல்லது தவறான வழிகாட்டும் தற்கால அவசர உலகத்தில் ஆற்றுப்படையின் ஊடிழையான மனிதநேய மாண்பினைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிமையானதன்று. குழு வாழ்க்கை நடத்திய முன்னோர்களின் வாழ்க்கைத் தடத்தில் ஆற்றுப்படுத்தல் கோடையிலே வீசிய குளிர் தென்றல்!. ‘எங்கிருந்து வருகிறாய்? என்று வறுமையாளன் கேட்கிறான். இன்னாரிடம் சென்றேன்! இவையிவை பெற்றேன்! அங்கிருந்து வருகிறேன்! அன்பனே! நீயும் செல்! அன்பனே அங்கே உனக்கு அன்பும் கிட்டும் ஆதரவும் கிடைக்கும் உனது வறுமை ஒழியும் வாழ்வு சிறக்கும்’ என்று ஒருவனை மற்றொருவன் வழிநடத்துவதே, (வழிகாட்டலே) ஆற்றுப்படையின் உள்ளடக்கமாகும்.

    தொல்காப்பியமும் ஆற்றுப்படையும்

    தொல்காப்பியப் பொருளதிகாரம் ‘கவிதையியல் பற்றிய இலக்கணம்’ என்னும் கருதுகோள் ஒப்புக்கொள்ளப்படுமானால், ‘ஆற்றுப்படை’என்பது இலக்கியத்தின் வெளிப்பாட்டு உத்திமுறைகளில் ஒன்று என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். ‘ஆற்றுப்படை’ இலக்கியம் அன்றைய சமுதாயத்தின் தனிமனித வறுமை நிலையையும் பிறர்நலம் பேணும் பெற்றியையும் ஒருசேரப் படம்பிடித்துக்காட்டும் இலக்கியத் தொழில்நுட்பமாகும்.

    “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
    ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
    பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
    சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கம்”

    என்பது தொல்காப்பியம் காட்டும் அக்கால ஆற்றுப்படை இலக்கணம். இதனுள் ‘பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு’என்னும் தொடர் ஆற்றுப்படுத்துவோர்  ஆற்றுப்படுத்தப்படுவோர் ஆகியோர்தம் பொருளாதார நிலையைக் குறிப்பாகச் சுட்டுகிறது.  தற்போது பெற்றவன் முன்பு பெறாதவனாகத்தான் இருந்தான் என்பது குறிப்பு. இத்துடன், பத்துப்பாட்டில் அமைந்துள்ள ‘திருமுருகாற்றுப்படை’ முருகப்பெருமானாகிய ஒருவனே ஆற்றுப்படுத்துவோனாகவும் ஆற்றுப்படுத்தப்படுவோனாகவும் என்னும் இருநிலைப் பாத்திரமாகத் தோன்றுவதையும் கருத்திற் கொள்ளலாம். இறைவன் ஆதலின் இது சாத்தியமாயிற்று என்பதும் ஒன்று. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துவது கூத்தராற்றுப் படை என்றால் பாணனை பாணன் ஆற்றுப்படுத்துவது பாணாற்றுப்படை என்றால், முருகனை முருகன் ஆற்றுப்படுத்துதல் அல்லவா முருகாற்றுப்படை என்றாகும்? இருப்பவன் ஒருவனே! இதற்கு எப்படிப் பொருளமைதி கூற வேண்டுமெனின் இறைவனுடைய கந்தழி பெற்றான் ஒருவன் முருகனாகவே மாறிவிடுகிறான். கந்தழி பெற்றவன் பெறாதவனை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்துகிறான். இதுபற்றிய விரிவான விளக்கத்தைப் பேராசிரியர் துரை.அரங்கசாமி தனது ‘அன்பு நெறியே தமிழர் நெறி’ என்னும் நூலில் ஆராய்ந்துள்ளார்.

    தொல்காப்பியர் காலச் செல்வாக்கு

    ஆற்றுப்படை இலக்கியம் தொல்காப்பியர் காலத்துக் கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை என நான்காக இருந்தது. இலக்கிய வகைமைகளை எடுத்துக் கூறும் தொல்காப்பியர் ஏனைய இலக்கிய வகைகளைக் காட்டிலும் இந்த ஆற்றுப்படை இலக்கியத்தை விதந்தோதுகிறார். எனவே அவர் காலத்துக்கு முன்பே இவ்வகை இலக்கியம் சிறந்திருந்திருக்கலாம் என்பதை ஓரளவு அனுமானிக்க முடியும்.

    இலக்கிய வரலாறு எழுத வேண்டிய முறை

    பொதுவாக இலக்கிய வரலாறு எழுதுகின்ற ‘பேராசிரியர்கள்’ இலக்கியம் ஒன்றின் நதிமூலத்தைக் கண்டறிவதில்லை. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை. இலக்கியத்தின் உள்ளடக்கத்தையே அவர்கள் வரலாறு என்று கருதிவிடுவதுதான் இதற்குக் காரணம். சான்றாகத் தூது இலக்கியத்தின் வளர்ச்சி என்றால் அதன் முளை  இராமாயணத்தில் அங்கதன் தூது, பாரதத்தில் கண்ணன் தூது என்றவிடத்திலிருந்து அல்லவா தொடங்க வேண்டும்? பிறகு வரலாற்றில் தூது என்பது தொண்டைமான் இளந்திரையனிடத்தில் அதியமானுக்காக ஔவையார் சென்ற தூதும்  பிரபந்தங்களில் காணப்படும் தூதுக் கூறுகளும் ஆராயப்படல் வேண்டும். இத்தகைய தொடராய்வுக்குப் பின்பே தூது எவ்வாறு தனித்த இலக்கியமாக உருப்பெற்றது என்பது ஆராயப்படல் வேண்டும். அதுவன்றித் தூது கலிவெண்பாவில் பாடப்பெற வேண்டும் என்பதும் அது அகப்பொருள் சார்ந்து அமைய வேண்டும் என்பதும் அதன் வகைகள் இன்னின்ன எனப் பட்டியலிடுவதும் இன்னின்ன பொருளைத் தூதாக விடுக்கலாம் என்பதும் சரியான வரலாறாகவோ வரலாற்றாய்வாகவோ அமையாது.

    ஆற்றுப்படை இலக்கியத்தின் தோற்றமும் கட்டமைப்பும்

    ஆற்றுப்படை இலக்கியத்தைக் கலைஞர்களின் இலக்கியமாகவும் கருதலாம். காரணம் இந்த நூல்களின் நாயகர்களாக அமைந்தவர்கள் கலைஞர்களே. மன்னன் பாட்டுடைத் தலைவனாக இருந்தாலும் அவனைப் பற்றிய அத்தனைச் செய்திகளையும் பரிசில் பெற்றுவரும் இரவலனே எடுத்துக் கூறுகிறான். அதாவது மன்னர்களின் திருவோலக்கத்தில் குழுவாக அமர்ந்து பாடப்பெற்ற மன்னன் பெருமை நாட்டின் சாதாரண வறுமை நீங்கப் பெற்ற இரவலனால் பாடப்பெற்றது. சுருங்கச் சொன்னால் புரவலன் பெருமையை இரவலன் பாடினான். இரவலர்கள் அனைவரும் இசை வல்லுநர்கள். ஆற்றுப்படை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு இவர்களே காரணம்.  மொழிக்கு முன்னே தோன்றியது இசை என்பதும் இசையிலிருந்தே மொழி தோன்றியிருக்க வேண்டும் என்பதும் மொழியியலார் கருத்து. எனவே மொழியும் மொழியில் தோன்றிய பாடல்களும் தொடக்கத்தில் இசையாகவே இருந்திருக்க வேண்டும். இசையாகவே பாடப்பெற்றவையாதலின் இவை நாட்டுப் பாடல்களைப்போலப் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியங்களாகத்தான் தோன்றியிருக்க வேண்டும்.

    பழுமரம் தேடும் பறவையினராய் எங்கோ ஒரு மன்னனிடம் சென்று அவனைப் புகழ்ந்து பாடிய இரவலர்கள் தாம் பரிசில் பெற்ற வரலாற்றின் வாய்மொழி வடிவமே ஆற்றுப்படை எனலாம்.

    அவ்வப்பொழுது மன்னன் முன்னிலையில் பாடப்பெற்ற பாடல்கள் தங்களைப் போன்றோரும் தம்மைப் போன்றே பரிசில் பெற வேண்டும் என்னும் வேட்கையின் வெளிப்பாடே இதன் அடுத்த நிலையாகக் கருதப்படலாம்.

    இதன் தொடர்ச்சியாகத் தான் பரிசில் பெற்ற மன்னனின் திருவோலக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறுவதாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

    பாணர்கள் கையிலிருந்துப் புலவர்களுக்கு மாறிய ஆற்றுப்படை

    ஒப்பாரிக்கு யாப்பிலக்கணம் கிடையாது. காரணம் அது மக்கள் வழக்கு. அவலத்தின் ஆற்றல் கூறுவது. அடர்த்தி வெளிப்படுவது. ஆனால் இந்த ஒப்பாரி திரைப்படத்தில் இடம்பெறுகிறபோது திரையிசைப் பாடலாசிரியர் கையில் வந்துவிடுகிறது. அந்த நிலையில் அது தனித்தன்மை பெறுகிறது. அந்தத் தனித்தன்மை முந்தைய பாமர வழக்கினின்றும் சிறந்துமிருக்கலாம். சிறவாமலும் அமையலாம். தூது இலக்கியமும் அவ்வாறே. கலிவெண்பாவில் பாடப்பெற வேண்டிய தூதிலக்கியம் தற்காலத்தில் எல்லா யாப்பு வகையிலும் பாடப்பெறுகிறது என்பதையும் திரையிசைப்பாடல்களில் இசையமைப்பாளரின் இசைக்கேற்ற வகையில் பாடப்பெறுகின்றன என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆற்றுப்படை இலக்கியமும் அதுபோன்றதுதான். தொழில்முறைப் பாணர்களிடமிருந்து அதாவது இசைக்கலைஞர்கள் கையில் தவழ்ந்த ஆற்றுப்படைப்பாட்டு தமிழ்ப் பாநெறி அறிந்த புலவர்கள் கையில் வந்தபோது பல மாற்றங்களை அடைந்தது. அவ்வாறு அடைந்த மாற்றங்களுள் ஆற்றுப்படைப் பாடப்படும் பாவகையும் முறையும் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.

    ஆசிரியப்பாவில் பாடப்பெறும் ஆற்றுப்படை

    இரவலர்கள் கையிலிருந்த ஆற்றுப்படை இலக்கியம் புலவர்கள் கையில் வந்தபோது அடைந்த மாற்றங்களில் பாவகை தலையாயது என்பது சென்ற பத்தியில் உணர்த்தப்பட்டது. பாணர்களுக்கு இசை தெரியும். புலவர்களுடைய பாடல்களில் பொருள் நயத்தை உணர முடியும். அந்தப் பாடல்களில் இசை பற்றிய குறிப்புக்கள் இருக்கலாமே தவிர இசையே பாடலாக அமையவில்லை. பெரும்பாலும் ஆசிரிய உரிச்சீர்கள் பயின்று வருவதால் ஆசிரியப்பா என்பாரும் உளர். உண்மையில் உரைநடைக்கு அடுத்த பாநிலையின் தொடக்கமாக அமைந்ததாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் பயன்படுத்தியதாலும் அதற்கு அப்பெயர் வந்திருக்கக் கூடும். ஆசிரியர் என்பதற்குப் புலவர் என்பதும் ஒரு வழக்கு. ‘ஆசிரியர் நக்கீரர்’ என்பது காண்க. இவ்வாறு இசைவாணர்களுக்கான ஆற்றுப்படை இலக்கியம் புலவர்கள் கைக்குத் தொல்காப்பியத்துக்கு முற்பட்ட நிலையிலேயே வந்திருக்க வேண்டும். பின்னாலே வந்த புலவர் பெருமக்கள் தாம் பாடிய ஆற்றுப்படைத் துறையில் தமக்கு முன்னோர்களாகிய பாணர்களை ஒரு பாத்திரமாக இடமளித்துப் பெருமைப்படுத்தினர் எனலாம். புலவர்களது கற்பனைத்திறன், வரலாற்றறிவு, இயற்கை ஈடுபாடு ஆகியனவற்றுக்கெல்லாம் ஆற்றுப்படை இலக்கியம் இலக்கியத் தளமானது,. களமானது என்றால் அது மிகையில்லை.

    சங்க இலக்கியங்களில் ஆற்றுப்படை

    ‘ஆற்றுப்படை’என்பது தமிழிலக்கியத்தின் புறத்துறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன.  புறநானூற்றில் ‘பாணாற்றுப்படை’என்ற வகையில் (68, 69, 70, 138, 141, 155, 180) சில பாடல்களும், ‘விறலியாற்றுப்படை’என்னும் வகையில் (64, 103, 105, 133) சில பாடல்களும் ‘புலவராற்றுப்படை’என்னும் வகையில் (48) ஒருபாடலும் கிடைத்துள்ளன. பதிற்றுப்பத்திலும் ‘பாணாற்றுப்படை’, ‘விறலியாற்றுப்படை’ என்னும் வகையில் பல ஆற்றுப்படைப் பகுதிகள் உண்டு. ‘தொல்காப்பியர் காலத்தில் நான்காக இருந்த ஆற்றுப்படை வகைகள் சங்கக்காலத்தில் ஐந்தாக வளரச்சியடைந்தது. கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் என்பாருடன் புலவர்களும் ஆற்றுப்படுத்தியதாகப் புறநானூற்றில் குறிப்பு உண்டு. புலவர்களும் பரிசிலராதலால் பரிசு பெறத்தக்க புலவர்களைத் தாம் பரிசில் பெற்ற மன்னர்களிடத்தில் ஆற்றுப்படுத்தியிருக்கலாம். பத்துப்பாட்டில் முதுற்பாட்டாக அமைந்த திருமுருகாற்றுப்படை ஏனைய ஆற்றுப்படை அமைப்பிலிருந்து சற்று வேறுபட்டு அமைந்திருப்பது முன்னரே சுட்டப்பெற்றது.

    இறைவனிடம் புலவர்களை ஆற்றுப்படுத்தியதாக அமைக்கப்பட்ட புது வண்ண ஆற்றுப்படைகளை அடியொட்டிப் பிற்கால இலக்கண நூல்கள் அவற்றுக்கு இலக்கணத்தை வரையறை செய்த முறையையும் வரலாற்றில் காணமுடிகிறது.

    “இருங்கண் வானத்து இமையோர் உழைப்
    பெரும்புலவன் ஆற்றுப்படுத்தன்று”

    எனப் புறப்பொருள் வெண்பா மாலையும்,

    “புலவ ராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே”

    எனப் பன்னிரு பாட்டியலும் இலக்கணம் வகுத்திருப்பதை அறிய முடிகிறது. பாணாற்றுப்படை என்னும் ‘ஒருபெயர்’ வழக்கே, சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை என ‘இருபெயர்’ வழக்காக வகைப்பட்டது. சீறியாழை வைத்திருப்பவன் சிறுபாணன் எனவும் பேரியாழை வைத்திருப்பவன் பெரும்பாணன் எனவும் பிரித்துணரப்பட்டனர்.

    பாணாற்றுப்படை ஒரு விளக்கம்

    பாணாற்றுப்படைகளில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை என்னும் இலக்கியம் பத்துப்பாட்டுள் ஒன்றாகக் கோக்கப்பட்டுள்ளது. இது நல்லியக்கோடனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் சான்றோரால் பாடப்பெற்றது. தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சான்றோரால் பாடப்பெற்ற பெரும்பாணாற்றுப்படையும் பத்துப் பாட்டுள் அமைந்துள்ளது.

    பொதுவாகப் பெரும்பாணாற்றுப்படைத் துறையில் புறநானூற்றில் முன்பே குறிப்பிட்டுள்ளபடி ஏழு பாடல்களும் பதிற்றுப்பத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளது.

    விறலியாற்றுப்படை என்னும் பெயரால் ஏனைய ஆற்றுப்படை நூல்களைப் போல் தனிநெடும் பாட்டு கிட்டவில்லையெனினும் தொகை நூல்களில் மிகுதியாகக் காணப்படுவன இத்துறை சார்ந்த பாடல்களே. புறநானூற்றில் நான்கும் பதிற்றுப்பத்தில் ஐந்துமாகக் கூடுதல் ஒன்பது பாடல்கள் இத்துறையில் கிட்டியுள்ளன.

    ஏனைய தொகுதிகளில் காணப்படாத பொருநராற்றுப்படையும் கூத்தராற்றுப்படையும் பத்துப்பாட்டில் மட்டுமே கோக்கப்பட்டுள்ளன. கூத்தராற்றுப்படைக்கு ‘மலைபடு கடாஅம்’ என்னும் பெயர் வழக்குமுண்டு. நன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பெருங்குன்றூர் கௌசிகனார் கூத்தராற்றுப்படையைப் பாட, பெண்பாற்புலவர் எனக் கருதப்படும் முடத்தாமக் கண்ணியார் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பொருநராற்றுப்படையைப் பாடியிருக்கிறார்.

    இவ்வாறு தனிப்பெருந்துறையாக ஆற்றுப்படைத் துறை விளங்கியிருக்கிறது. தொல்காப்பியம் வாழ்வியல் நூல் என்னும் கருத்தியலிலிருந்து விலகி மாபெரும் இலக்கியவியல் அல்லது பாவியல் நூல் என்பதற்கு இதுவும் ஒரு வலுவான சான்றாகும். தனிநெடும் பாடல்களாகப் பத்துப்பாட்டுள் அமைந்த இவ்வாற்றுப்படைத்துறை சிறுகுறு பாடல்களுக்கான துறையாகத் தொகை நூல்களில் அமைந்திருக்கின்றது என்பது நோக்கத்தக்கது.

    ஆற்றுப்படையின் பிற்கால வளர்ச்சி

    சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆற்றுப்படைப் பாடல்களை மையமாகக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய ‘பன்னிரு பாட்டியல்’ என்னும் இலக்கண நூல் ஆற்றுப்படைக்கு இலக்கணம் கூறியிருக்கிறது. தமிழைப் பொருத்தவரையில் இலக்கிய வளர்ச்சி என்பது மொழியின் எளிமையாகவே கருதப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத் தொகுப்புக்களின் மொழிநடையும் அவற்றைத் தொடர்ந்து இலக்கியங்களின் மொழிநடையும் இலக்கியத்தின் ஏனைய கூறுகளில் சிறந்து விளங்கினாலும் மொழிநடையைப் பொருத்தவரையில் எளிமையே அரசாண்டது. இது நீர்த்துப் போகும் அளவுக்கு இன்றைக்கு நிலைமை இருக்கிறது.

    ஆற்றுப்படை இலக்கியங்களின் வளர்ச்சிநிலையைப் பொருத்தவரையில் திருஞான சம்பந்தப் பெருமான் பாடிய கோடிக்கரை ஆற்றுப்படை குறிப்பிடத்தக்கது. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட திருத்தணிகையாற்றுப்படையும் ஆசிரியர் பெயர் தெரியாத திருப்பாணாற்றுப்படையும் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில பத்திகளுக்கு முன்னர் கூறியவாறு சங்க இலக்கியங்களில் காணப்படும் புலவராற்றுப்படை பதினேழாம் நூற்றாண்டுவரை தொடர்ந்துள்ளது. திருமேனி இரத்தினக் கவிராயர் என்பார் எழுதிய புலவராற்றுப்படை இந்த நிரலில் வரும். இடைக்கால இலக்கியங்களில் ஏகம்பவாணன் ஆற்றுப்படையும் அருணகிரிநாதர் எழுதிய மற்றொரு திருமுருகாற்றுப்படையும் சிந்திக்கத்தக்கன.

    ஆற்றுப்படை இலக்கியப் படைப்பில் இஸ்லாமியர்

    குலாம் காதிர் நாவலர் என்பாரால் எழுதப்பட்ட ‘புலவராற்றுப்படை’ கவனத்தைக் கவர்கின்றதொரு ஆற்றுப்படையாகும். இது மதுரைத் தமிழ்ச் சங்கத்தலைவர் பாண்டித்துரைத் தேவரிடம் புலவர் ஒருவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. பெரும்பாலான ஆற்றுப்படை நூல்களில் இரவலர்களும் புலவர்களும் நடந்து சென்று பாட்டுடைத் தலைவனைக் காண்பதைத்தான் கண்டிருக்கிறோம். இந்த ஆற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படுகிறவன் புகைவண்டியில் செல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசில் பொருளாகக் கைக்கடியாரத்தைப் பெற்றதாகவும் பாடப்பெற்றுள்ளது. சொற்பொழிவாற்றுப்படை, காதலியாற்றுப்படை, மாணாக்கர் ஆற்றுப்படை, ஆசானாற்றுப்படை, செந்தமிழ்ச் செல்வியாற்றுப்படை எனப் பல்வகையாக ஆற்றுப்படைகள் தோன்றியிருக்கின்றன.

    ஆற்றுப்படை ஒரு பண்பாட்டுக் கருவூலம்

    “பசித்தவனுக்கு உணவை வழங்குவதை விட, அதை உருவாக்கிக் கொள்ளும் வழியை அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதே சிறந்த அறம்” என்பது மேல்நாட்டுப் பொன்மொழி. இன்றைய நடப்பியலின் எதிர்மறைப் போக்கினைச் சிந்தித்தால் அன்றைய ஆற்றுப்படை இலக்கியம் ஒரு பண்பாட்டு இலக்கியம் என்பதை அறிந்து கொள்ள முடியும். தான் தேடிய செல்வத்தைத் தானே துய்ப்பதும் துய்க்க இயலாக் காலத்து மாண்டு போவதும் தேடிய செல்வம் வீணாவதும் நிகழ்கால நடப்பியல். ஆனால் தனக்குப் பரிசளித்தவனின் முழு முகவரியைக் கூறி அந்த முகவரிக்குச் செல்லும் தடத்தினைச் சிறிதும் வழுவில்லாமல் எடுத்துரைத்து ‘இன்ன பரிசில் யான்பெற்றேன் எனப் ‘பெற்ற பெருவளத்தை’ மறைக்காமல் காட்டி மற்றொருவனையும் வாழச்செய்யும்’ மனநிலையின் மொழிவழி வெளிப்பாடே ஆற்றுப்படை இலக்கியத்தின் சாரமாகும். சங்க காலத்துக் கலைஞர்களின் பண்பாட்டையும் வாழ்வையும், அவர்களை ஆதரித்துக் கலை வளர்த்த புரவலர்களின் ஈர உள்ளத்தையும், வீர நெஞ்சத்தையும் ஆற்றுப்படைகள் இலக்கிய ஓவியங்களாகக் காட்டி நிற்கின்றன. ‘கொடுப்பதூஉம் அழுக்கறுப்பார்கள்’ நிறைந்த உலகில் கொடுப்பவன் இருக்கும் இடத்திற்கு வழிகாட்டும் இரவலர்கள் புரவலர்களினும் உயர்ந்தவர்களாகவே கருதப்படுவர்.

    இருபதாம் நூற்றாண்டில் ஆற்றுப்படை இலக்கியம்

    தமிழிலக்கிய வரலாற்றில் சங்ககாலத்திற்குப் பின் ஏனைய இலக்கிய மரபுகள்  உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் தொடர்ந்து வந்திருப்பினும், ஆற்றுப்படை இலக்கியம் மட்டும் அத்தகைய தொடர்ச்சியைப் பெற்று வந்ததற்கான அடையாளத்தைக் காண இயலவில்லை. சங்க இலக்கியங்களுக்குப் பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவை இருபதாம் நூற்றாண்டில்தான் தோன்றினவோ என எண்ணுமாறே வரலாறு அமைந்துள்ளது.

    1. திருச்சியைச் சார்ந்த அமிர்தம் சுந்தரநாதபிள்ளை எழுதிய ‘புலவராற்றுப்படை’
    2. மேலூர் பி.கே. சீனிவாச ஆச்சார்யா எழுதிய ‘மன்பதை ஆற்றுப்படை’
    3. தஞ்சை பழநிவேல் பிள்ளை எழுதிய ‘வரமுருகாற்றுப்படை’
    4. திம்மப்ப அந்தணர் எழுதிய ‘ஞானியார் ஆற்றுப்படை’
    5. இராமகோவிந்தசாமிப் பிள்ளை எழுதிய ‘ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா ஆற்றுப்படை’
    6. பி.எம் வேணுகோபால் எழுதிய ‘வடஅரங்க ஆற்றுப்படை’
    7. டி.எஸ்.சீனிவாசஆச்சார்யா எழுதிய ‘நமசிவாய மூர்த்தி ஆற்றுப்படை’
    8. வே.ரா. தெய்வசிகாமணி எழுதிய ‘சென்னிமலை முருகன் ஆற்றுப்படை’

    முதலிய ஆற்றுப்படை நூல்கள் இந்த நூற்றாண்டில் தோன்றியவற்றுள் சிலவாகலாம்.

    ஆற்றுப்படை இலக்கியங்களும் அ.கி.பரந்தாமனாரும்

    தமிழில் ஆற்றுப்படை இலக்கிய வடிவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் ஆவார். அவரெழுதிய ஆற்றுப்படை நூல்கள்,

    1. 1926 இல் எழுதிய ‘தமிழ் மகள் ஆற்றுப்படை’ (189 வரிகள்)
    2. 1943 இல் எழுதிய ‘திருத்தொண்டர் ஆற்றுப்படை’ (297 வரிகள்)
    3. 1958 இல் எழுதிய ‘அன்னை இயற்கை ஆற்றுப்படை’ (303 வரிகள்)

    மேற்கண்ட ஆற்றுப்படைகளுள் ‘திருத்தொண்டர் ஆற்றுப்படை’ புதியதொரு சிந்தனையை உள்ளடக்கியது. ‘திருத்தொண்டர்’’ என்னும் திருநாமம் சைவ அடியவர்களுக்கே உரியது. அதனைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களுக்குரியதாக்கி, அவர்பால் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இது. திரு.வி.க.விடம் கல்வி பயின்றுப் பொதுவாழ்வு நெறியைக் கற்றுக் கொண்ட ஒருவர் மற்றொருவரை நோக்கி, அத்தகைய பண்புநலன்களைப் பெற்றுப் பொதுத்தொண்டு செய்யுமாறு ஆற்றுப்படுத்துவது  இதன் உள்ளடக்கமாகும்.

    இருபதாம் நூற்றாண்டு ஆற்றுப்படை இலக்கியங்களில் மரபும் புதுமையும் 

    இருபதாம் நூற்றாண்டு ஆற்றுப்படை நூல்கள் பெரும்பாலும் ‘யாப்புத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கைச் ‘செய்யுள் தளவாடங்களாகவே’ தோன்றுகின்றன. ‘கலம்பகம் பார்த்தொரு கலம்பகம்’, ‘அந்தாதி பார்த்தொரு அந்தாதி’என்னும் பாவேந்தரின் கூற்றை உறுதி செய்வனவாக அவை அமைந்துள்ளன. இருப்பினும், பத்துப்பாட்டுள் செம்பாதியாய் நின்று ‘உமாமகேசுவரராகத்’தோன்றும் இவ்வாற்றுப்படை இலக்கியங்களுள், உருவத்தால் மரபுசார்ந்தும் உணர்ச்சி — உள்ளடக்கம் ஆகியவற்றால் புதுமை சார்ந்தும் கற்பனை நயம் சார்ந்தும் கருத்துக்களின் பெட்டகமாகத் திகழ்கின்ற படைப்புக்களும் உண்டு.

    1. ‘மாணவர் ஆற்றுப்படை’என்பது பேராசிரியர் டாக்டர் சி. இலக்குவனார்அவர்களால் புதுக்கோட்டைக் கல்விச் செல்வரும் வள்ளலுமான பி.ஏ. சுப்பிரமணியபிள்ளை அவர்களைப் பற்றி, 1959ஆம் ஆண்டு 190 வரிகள்  கொண்டதொரு நூலாக எழுதப்பட்டது.
    1. கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை தன்னுடைய ஆசிரியரும் பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியருமான ஆ.சுப்பிரமணிய அய்யர் அவர்களிடம் தம் நெஞ்சை ஆற்றுப்படுத்துவதாகப் பாடியது ‘ஆசான் ஆற்றுப்படை’ நூலாகும்.

    ஆற்றுப்படைகளின் பாடுபொருள்கள் பல்வகையாக அமைந்திருப்பினும், மேற்சுட்டியனபோலக் கல்வி தொடர்பான ஆற்றுப்படைகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் தனித்தும் சிறந்தும் விளங்குகின்றன. அறியாமையாகிய இருட்டை விலக்குவதிலும் குருவணக்கத்திலும் கவிஞர்களுக்குள்ள ஆர்வத்தையும் மனப்பான்மையையும் இவை வெளிப்படுத்துவதாகக் கொள்ள முடியும். ‘மாணவர் ஆற்றுப்படை’ என்றும் ‘மாணாக்கர் ஆற்றுப்படை’ என்றும் ‘ஆசான் ஆற்றுப்படை’ என்றும் அவை தாங்கியுள்ள பெயர்களே அவற்றின் பொருண்மையை விளக்கப் போதுமானவையாக உள்ளன.

    கடவூர் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படையின் தனித்தன்மை

    மரபுசார்ந்த வடிவங்களோ, சொல்லாட்சிகளோ புதியன தோன்றுவதற்குத் தடையாக இருப்பதில்லை. உத்தியால் மரபுசார்ந்தும் பாடுபொருளாலும் கற்பனையாலும் புதுமை கூட்டியும் அமைந்துவிடுமானால் எந்தவொரு படைப்பிலக்கியத்திற்கும் தனித்தன்மை தானாகவே அமைந்துவிடும். பாவேந்தர் பாரதிதாசனின் பெரும்பாலான படைப்புக்கள் இவ்வாறு அமைந்தனவே. கவிஞர் கடவூர் மணிமாறன் படைத்திருக்கும் மாணாக்கர் ஆற்றுப்படையும் இதற்கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.  கல்வி சார்ந்த பொருண்மைகள் ஆற்றுப்படை நூல்களின் உள்ளடக்கமாக அமைந்ததற்குச் சமுதாய வரலாறு சார்ந்த மற்றொரு காரணமும் உள்ளது. பொதுவாக இந்தியாவில் சிறப்பாகத் தமிழகத்தில் கல்வியின் பெருமை உணரப்பட்டதும் அதற்கான உரிமை பெற்றதும் இருபதாம் நூற்றாண்டில்தான். அனைவருக்கும் கல்வி என்பதே இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அமைந்த எந்த அரசுக்கும் கொள்கையாக அமைந்தது. படைப்பாளர்களும் கவிஞர்களும் சமுதாயத்தின் இந்தத் தேவையைத் தங்கள் படைப்பாற்றல் மூலம் வெளிப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மையாகும்.

    பரிசில் பெற்ற ஒருவர் பெறாத ஒருவரைக் குறிப்பிட்டதொரு வள்ளலை நோக்கி ஆற்றுப்படுத்துவதே ஆற்றுப்படையின் பொதுவிலக்கணம். அதாவது அவ்விருவரும் ‘வளத்தைப் பெற்றதையும் பெறாததையும் தவிர’வேறு எல்லா வகையினும் ஒரே தன்மையினராய் இருப்பர். இவ்வடிப்படையில் நோக்கினால், ‘மாணாக்கர் ஆற்றுப்படை’ மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறின்றி, ஆசிரியர் ஒருவர் மாணவர்களை ஆற்றுப்படுத்துமாறு அமைத்துக் காட்டியது ஆற்றுப்படை இலக்கணப் பொருண்மையை இன்னும் விரிவுபடுத்தியதாகக் கருதமுடியும்.

    “ஆக்கம் நாடி அரும்பயன் தேடும்
    நோக்கம் மிகுந்தோர் ஒருங்கக் கூடுமின்!”

    என்னும் வரிகளால் மணிமாறனின் மாணாக்கார் ஆற்றுப்படையின் தனித்தன்மையைக் கீழ்க்கண்டவாறு வரையறுக்க முடிகிறது.

    1. ஆற்றுப்படுத்தும் ஆசிரியர் ஒருவராகவும் ஆற்றுப்படுத்தப்படும் மாணவர்கள் பலராகவும் இருப்பது
    2. ஆற்றுப்படுத்தப்படும் இடம், பாட்டுடைத்தலைவனின் திருவோலக்கத்திற்குப் பதிலாகக் கல்வி நல்கும் பள்ளியாக இருப்பது.
    3. கல்விக்காக வேற்றிடம் சென்று அல்லற்பட வேண்டாமென்று அறிவுறுத்துவது.

    மேற்கண்ட மூன்று கூறுகளால் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படை, ஏனைய ஆற்றுப்படைகளினின்றும் தனித்தும் சிறந்தும் விளங்குகிறது.

    பின்னத்தூராரின் ஒருவரும் மணிமாறனின் பலரும்

    இருபதாம் நூற்றாண்டின் முதல் ஆற்றுப்படை நூல் கும்பகோணம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் எழுதப்பட்டது. ‘மாணாக்கர் ஆற்றுப்படை’என்னும் பெயரால் 1900ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் 335 வரிகளைக் கொண்டுள்ளது. நகராட்சிப் பள்ளியில் படித்து நன்னிலையில் உள்ள ஒருவர் கற்பதற்கு வசதியற்ற ஒரு மாணவனை, அப்பள்ளிக்கு ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனுள் தனிமனிதரிடம் ஆற்றுப்படுத்தும் தொல்காப்பிய மரபு புதுவடிவம் பெற்று, ஒரு நிலையத்தை நோக்கி ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ள புதுமைப் போக்கு நோக்கத்தக்கது. பின்னத்தூராரின் ஆற்றுப்படை உட்பட, ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் ஒருவர் மற்றொருவரை ஆற்றுப்படுத்துவதாக அமைய, கடவூர் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படை, ஒருவர் பலரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கல்விப்பணியில் ஆசிரியர் ஒருவராகவும் மாணவர் பலராகவும் அமைந்துவிடுவது இயல்பாதலின், இத்தகைய அமைப்பு ஆற்றொழுக்கான உணர்ச்சி வெளிப்பாட்டுக்குத் துணையாகிவிடுவதைக் காணமுடிகிறது.

    திணைச்சிறப்பும் துறையமைதியும்

    புறத்திணைகளில் பாடாணும் காஞ்சியும் தனித்துவம் மிக்கன. நிலையாமையை எடுத்துக் கூறி அறத்தை முன்னிறுத்துவது காஞ்சியெனின், மனிதனின் விழுமியங்களை எடுத்துக்கூறி வீரத்தினும் அவை சிறந்தன என்னும் உண்மையை எடுத்துக் கூறுவது பாடாணாகும். அதாவது பாடாண் திணை என்பது மனிதனின் தலைமைப் பண்புகளாகிய அறிவு, ஆற்றல், தன்னலமறுப்பு, ஈகை, அன்பு, அருள் முதலிய பண்புகளைப் பாடுகின்ற திணை. மேற்கண்ட தனித்த இலக்கிய வரலாற்றை உள்ளடக்கிய ஆற்றுப்படை இலக்கியத்தின் கட்டமைப்பை ஓர் இலக்கியச் சான்று கொண்டு விளக்கி இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.

    பாடாண்திணை, புலவராற்றுப்படைத் துறையில் பொய்கையார் பாடியதாக ஒரு பாட்டு புறநானூற்றில் காணப்படுகிறது. இந்தப் பாட்டில் இன்னின்ன வளமுடையது எம்மூர். அவ்வூரை ஆள்கிறவன் இவன் எம் மன்னன். அவனிடம் சென்று பரிசு பெறுகிறபோது வழிகாட்டிய என்னை மறந்துவிடாதே’ எனச் சொல்வது போல் அமைத்திருக்கிறது. .

    நாட்டுவளத்தைக் குறிப்பாக வண்ணனைச் செய்கிறார் புலவர். வளமில்லாதவன் வள்ளலாகத் திகழ்வது இயலாது ஆதலின் அது முதலில் கூறப்படுகிறது. மலர்களை வைத்து வளத்தைக் கூறுகிறார் பொய்கையார். கோதையாகிய சேரனைக் கோதையாகிய பெண்கள் தழுவுகிறார்கள். அவ்வாறு தழுவுகிற பெண்களைக் கோதைகள் (மாலைகள்) தழுவுகின்றன.

    “கோதை மார்பிற் கோதை யானும்
    கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்”

    என்று கோதை என்ற சொல்லைச் சேரனுக்கும் மங்கையர்க்கும் மலர்களுக்கும் ஆக்கிப் பாடுகிறார். கரிய கழிகளில் பூத்த நெய்தல் மலர்களாலும் தேன் நாறுகின்ற தொண்டி என்பார்.

    “மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
    கள் நாறும்மே கானலந் தொண்டி”

    என்று பாடுகிறார். கோதை ஆள்கிற சிறப்பும், அவனைத் தழுவுகிற மாதர்ச் சிறப்பும், மாதரைத் தழுவுகிற மாலையின் சிறப்பும், கழியில் மலர்ந்த நெய்தல் சிறப்பும் வழிகாட்டுகிற பொய்கையாருக்குத் தற்போது சேய்மையாதலின் அந்த ஊர்தான் தன்னுடைய ஊர் என்று புலவரிடம் கூறுகிறாராம்.

    ‘அஃது எம் ஊரே!’

    என்பது புலவர் மொழி!. ‘அந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆளுகிற கோதை மார்பன் தன்னுடைய அரசன்’ என்பதை,

    ‘அவன் எம் இறைவன்!’

    எனப் பாடுகிறார். இந்த இடத்தில் மன்னன் என்னாது இறைவன் எனப் புலவர் சொல்லியதற்கு ஒரு காரணம் உண்டு. அரசநீதி செலுத்துகிற இடத்தில்தான் அவன் மன்னன் அல்லது அரசன். புரவலனாக மாறிப் புலவர்களுக்கு உதவுகிறபோது அவன் இறைவன் என்பது குறிப்பு. ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்பது நோக்குக.

    ‘அன்னோன் படர்தி’

    என்று முன்னிலையில் ஆற்றுப்படுத்துகிறான். ஒருவேளை இரவலனுக்கு விருப்பமில்லாவிடின், என்ன செய்வது? ‘படர்தியாயின்’ என்னும் ஐயக்கிளவியால் ‘சென்றால் பெறலாம்’ என்பதோடு நிறுத்திக் கொள்கிறான்.

    ‘எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல!
     அமர் மேம்படூஉங் காலை நின்
    புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனவே!”

    என்னும் இறுதி வரிகளில் “புலவரே! அவனைக் கண்டால் காணுமிடத்து போர்க்களத்தில் நீ அடைந்த மேம்பாட்டைப் பாடி நின் புகழை மேம்படுத்தியவனைக் கண்டேன்” என்று என்னையும் நினைப்பாயாக” என்று பொய்கையார் பாடுகிறார்.

    “கோதை மார்பிற் கோதை யானும்
    கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்
    மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
    கள் நாறும்மே கானலந் தொண்டி
    அஃது எம் ஊரே! அவன் எம் இறைவன்!
    அன்னோர் படர்தி யாயின் நீயும்
    எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல!
    அமர் மேம்படூஉங் காலை நின்
    புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனவே!” (புறம். 68)

    ஆற்றுப்படுத்தப்பட்ட மன்னனின் வரலாறு மருட்சியை ஏற்படுத்துகிறது.    கோதை மார்பன் என்பவன் சேர மன்னருள் ஒருவன். இவனுக்கும் மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்த பழையன்மாறன் என்பவனுக்கும் பகைமை இருந்தது. கிள்ளிவளவன் என்ற சோழ மன்னன் பழையன் மாறன் என்பவனைப் போரில் வென்றான். அதாவது சேரனுக்கும் பாண்டியனுக்கும் பகையாம். ஆனால் சோழன் பாண்டியனை வெல்கிறானாம். அதனால் சேரன் மகிழ்ந்தானாம்.

    “நெடுந் தேர்,
    இழை அணி யானைப் பழையன் மாறன்,
    மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
    வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
    கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
    கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
    ஏதில் மன்னர் ஊர் கொள,
    கோதை மார்பன் உவகையின் பெரிதே”. (அகநானூறு– 345)

    தமிழன் ஒற்றுமை எவ்வளவு உயர்ந்ததாகப் பாடப்படுகிறது பார்த்தீர்களா????? ‘‘பாண்டியன் ஏதில் மன்னராம்’!. அவ்வாறு மகிழ்ந்த சேரனிடத்துப் புலவர் பொய்கையார் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது இந்தப் பாடல். “தலைவனது ஊரையும் இயல்பையும் கூறி ‘முதுவாய் இரவல எம்மும் உள்ளெனத் தம் தலைமை தோன்றக் கூறினமையின் இது புலவராற்றுப்படை ஆயிற்று” என்னும் பாடலின் பின் குறிப்பு புலவர்களின் செம்மாந்த மனநிலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

    ஆற்றுப்படையை அறிந்தால் அனைத்தும் அறியலாம்.

    படித்துக் கெட்டவர்கள் யாருமிலர். படிக்காமல் கெட்டவர்கள் இருக்கக் கூடும். எனவே இலக்கியச் சுவையுணர் திறனும், இலக்கிய ஆய்வுத் திறனும் கைவரப் பெற்றவர்கள் ஒரு நூலைப்பற்றிய தோற்றத்தையும் வளர்ச்சியையும் அறிந்து கொண்டால் அவ்விலக்கியத்தை முற்றும் அறிந்ததாகக் கருதப்படுவர். இசை, கூத்து என்னும் நுண்கலைகள் எவ்வாறு பழந்தமிழகத்தில் போற்றப்பட்டன என்பதையும் கலைஞர்கள் எவ்வாறு ஆட்சியாளர்களால் மதிக்கப் பெற்றனர் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அழுக்காறு அறியா அக்காலக் கலைஞர்களின் அகவழகையும் மக்கள் வாழ்வியல் நுட்பங்களைக் கவிதையாக்கும் பழந்தமிழ்ப் புலவர் பெருமக்களின் புலமைத்திறத்தையும் அறிந்து கொள்ள முடியும். வாரி வழங்கும் மன்னர்கள் ஆண்ட திறத்தையும் அவர்தம் வள்ளன்மையைப் பாடிப் புகழ்ந்த இரவலர்கள் மற்றும் புலவர்களின் நன்றியுணர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம். சுருங்கச் சொன்னால் சங்கக் காலம் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கான சான்றுகளில் ஆற்றுப்படை இலக்கியச் சான்றுகள் தனித்துவம் மிக்கன.   

    நிறைவுரை

    இலக்கியக் கூறுகளில் காலத்திற்கேற்பக் கருத்துக்களும் பாடுபொருளும் வடிவமும் மாறுபடும். ஆனால் கற்பனையும் உணர்ச்சியும் மாறுபடாது. அவை புதுமையாகவும் அடர்த்தி வேறுபாட்டோடும் வெளிப்படும். தமிழ்க்கவிதைகளைப் பொருத்தவரை ஹைக்கூ, லிமரைக், சென்ட்ரியூ என ஜப்பானிய இறக்குமதிக் கவிதை வடிவங்களைப் பயன்படுத்திப் படைப்புத் தொழிலைச் செய்ய எத்தனிக்கிறோம். இந்த மண்ணின் மரபுக்கேற்ற இலக்கியங்களை அத்தகைய வடிவங்கள் முழுமையாக்குமா என்பது ஐயமே!  ஆற்றுப்படை ஓர் இலக்கிய வடிவம். இலக்கிய வடிவங்களைப் பொருத்தவரையில் தொல்காப்பியம் நெகிழ்ச்சியுடையது. அந்த அடிப்படையில் தற்காலத்திற்கேற்பத் திருத்தலங்களை நோக்கியோ, புகழ்மிகு கல்வி நிலையங்களை நோக்கியோ, அறிஞர்களின் இல்லம் நோக்கியோ கவிஞர்களின் இருக்கை நோக்கியோ ஆற்றுப்படை இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். நிலைமை அவ்வாறில்லை. பழைமையில் புதுமை தேக்குகின்ற முயற்சி பாரதி, பாரதிதாசனோடு முடிவடைந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறின்றி ‘இன்று ‘புதிதாய்ப் பிறந்தோம்” என்று இலக்கியங்களும் மகிழ வேண்டும் என்றால் ஆற்றுப்படை முதலிய பழந்தமிழ் வடிவங்கள் தற்காலக் கவிஞர்களின் சிந்தனையிலும் கணிப்பொறியிலும் எழுதுகோலிலும் நர்த்தனம் புரிதல் வேண்டும்.

    துணை செய்த நூல்கள்

    1. கடவூர் மணிமாறன் மாணாக்கர் ஆற்றுப்படை, விடியல் வெளியீட்டகம்,109, மேலத்தெரு, கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.

    2. ஒளவை துரைசாமிப்பிள்ளை புறநானூறு மூலமும் உரையும், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,  சென்னை. மறுபதிப்பு – 1967.

    3. துரை. அரங்கனார் கருவிலே திருவுடையான், மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக்கோபுரத் தெரு, மதுரை – 1, இரண்டாம் பதிப்பு – 1964.

    4. தொல்காப்பியர்    தொல்காப்பியம் – பொருளதிகாரம், கு.சுந்தரமூர்த்தி (ப.ஆ.), 14, தெற்குத் தெரு, திருப்பனந்தாள் அஞ்சல், தஞ்சை மாவட்டம், இரண்டாம் பதிப்பு – 1970

    5.    நக்கீரர் நெடுநல்வாடை, தி.தெ.இ.சை.சி.நூ.ப.கழகம் லிமிடெட், சென்னை, மூன்றாம் பதிப்பு – 1955

    6.   மர்ரே பதிப்பகம் 1955இல் வெளியிட்ட பாட்டும் தொகையுமாகிய தொகுப்பு நூல்கள்.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு’  என்னுந்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு 

    1. ‘வாய்மொழி இலக்கியங்கள் படைப்பிலக்கியங்களாகப் பரிணாமம் பெறும்’ என்னும் இலக்கிய வரலாற்றின் நுண்ணியத்தைச் சிறப்பாக அணுகியிருக்கும் கட்டுரையாசிரியர். ஆற்றுப்படை இலக்கியத்தைச் சரியான தளத்தில் வைத்து ஆராய முயன்றிருக்கிறார். 
    1. பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் எழுதும் இலக்கிய வரலாறு என்பது குறிப்பிட்ட நூலின் உள்ளடக்க அமைதியைப் பந்திவைப்பதாகவே அமைந்துள்ளதை அனைவரும் அறிவர். இவர் ‘வரல் ஆறு’ என்பதற்கேற்ப நூல் வந்த மூலத்தையும் நடந்த தடத்தையும் கண்டறிவதையே இலக்கிய வரலாறாகக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது நோக்கத்தக்கது. 
    1. பாடாண் திணை  மற்றும் ஆற்றுப்படைத் துறை முதலியன பற்றிய விளக்கத்தையும், சங்கக் காலத்திற்குப் பிறகு தவளைப் பாய்ச்சலாக ஆற்றுப்படை இலக்கியம் அமைந்து போனது என்பதையும் தக்க சான்றுகளுடன் நிறுவுகிறார். 
    1. ஏனைய ஆற்றுப்படைகளிலிருந்து திருமுருகாற்றுப்படை வேறுபடும் நுண்ணியத்தைப் பதிவிடும் ஆசிரியர் அதுபோன்றதொரு விளக்கத்தை ‘மாணாக்கர் ஆற்றுப்படைக்கும்’ தந்து சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல் இலக்கியத் தரநிர்ணயத்தைச் செய்வது .ஆய்வுக்குத் தேவையான நடுநிலைப் பண்பைப் புலப்படுத்துவதாக அமைகிறது. 
    1. வரலாற்றை முன்னே சொல்லி, புலவராற்றுப்படையில் அமைந்த ஒரு பாட்டைப் பின்னே சொல்லி விளக்கியிருப்பது ‘இலக்கணம் கண்டதற்கு இலக்கியமாக’ மாறுபட்டதொரு சுவையினைத் தருகிறது. 
    1. பல ஆற்றுப்படை நூல்களைப் பற்றிய விளக்கமும் பட்டியலும் கட்டுரையாசிரியரின் உழைப்பையும் பொறுப்புணர்வையும் உணர்த்துவதாக உள்ளது.


    Share
  • (Peer Reviewed) தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு

    (Peer Reviewed) தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்                                                                                                                            
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
    மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

    ஆய்வு முன்னுரை

    ஒரு குறிப்பிட்ட பண்போ பண்புகளின் தொகுப்புக்களோ ஓர் இனத்தை அடையாளம் காட்டும். சப்பானியர் அரை உடம்பைக் குனிந்து குறுக்கி வணங்குவது அவர்க்கே உரிய உயரிய பண்பாகும். இருகை கூப்பிக் ‘கரமலர் மொட்டித்து’ வணங்குவது பொதுவாக இந்தியர்களின் பண்பாடாகாவும் சிறப்பாகத் தமிழர்களின் பண்பாடாகவும் கருதப்படுகிறது. இது ஏதோ தற்புகழ்ச்சி என எண்ணுதல் நெறியன்று. உலக இனக்குழுக்களை ஆராய்ந்த ஆய்வறிஞர்கள் பண்பாட்டுக் கூறுகளை ஆராய்ந்து உலகிற்குச் சொன்ன ஒப்பற்ற உண்மை இது. இந்தப் பின்புலத்தில் ‘விருந்தோம்பல்’ என்னும் தமிழர்களுக்கே உரிய தனித்த அடையாளத்தைப் பற்றிய இலக்கியக் குறிப்புக்களின் தொகுப்பாய்வே இந்தக் கட்டுரையாகும்.

    கட்டுரைக் கட்டுமானம்

    ‘தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல்’ – ஒரு தொகுப்பாய்வு’  என்னுந் தலைப்பில் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. தமிழிலக்கியம் என்பது தமிழ்க்கவிதைகளேயாதலின் சங்க இலக்கியம் தொடங்கி இற்றை நாள் வரை உள்ள கவிதை இலக்கியங்களே ஆய்வுக்களமாகக் கொண்டு ஆய்வு நிகழ்த்தப்படுகிறது. தொகுப்பாய்வு முறையில் செய்யப்படும் இந்த ஆய்வு, ஆட்சி மாற்றங்கள், வரலாறுகள் மாறிச் சென்றாலும் விருந்தோம்பல் முதலிய உயர்பண்புகள் மக்கள் வாழ்வியல் நெறியிலிருந்து விலகிச் செல்வதில்லை என்னும் ஆழமான கருத்தியலை வலியுறுத்துவதாக அமைகிறது. முன்னோர்களின் பண்பாட்டு இருப்புக்களைத் தேடிக் கண்டறிவதும், கண்டு மகிழ்ச்சியடைவதும், ஒல்லும் வகையால் தொடர்ந்து பின்பற்றுவதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும். ஒரு நூலில் ஒரு கருத்து பற்றிய விளக்கமுறை ஆய்வைப் பகுப்பாய்வு என்பராதலின் ஒரு கருத்து பற்றிய பன்னூல்களின் கருத்துக்களின் தொகுப்புப் பற்றிய ஆய்வு தொகுப்பாய்வு எனக் கருதப்படலாம். முன்னுரை, உள்ளடக்கத் துணைத்தலைப்புக்கள், முடிவுரை என்னும் வடிவத்தில் அமைக்கப்படும் இந்தக் கட்டுரை, இப்பொருள் பற்றிய முந்தைய ஆய்வுகளின் தொடர்ச்சியாகவும் நினைவூட்டலாகவும் மீட்டுருவாக்கமாகவும் கருதப்படலாம்.

    விருந்து ஓர் இலக்கணப் பார்வை

    ‘விருந்து’ என்னும் சொல் விருந்தோம்பல், விருந்து புறந்தருதல், விருந்தயர்தல் என்னுமாறு பல்வகையான பின்னொட்டுக்களோடு இணைந்து பயன்படுத்தப்படுகிறது. ‘விருந்து’ என்ற சொல்லுக்குப் புதுமை என்று பொருள்.  பெண்களுக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்றாக விருந்தோம்பலைத் தொல்காப்பியம் குறிக்கிறது.

    ‘விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
    பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்” 1

    விருந்து பற்றிக் கிட்டும் தலையாய சான்று இதுவே எனக் கொள்ளுதற்கு இடமுண்டு. இலக்கியங்களைப் பற்றிப் பேசும் தொல்காப்பியம் புதுமைப் போக்கோடு வெளிவரும் இலக்கியங்களையும் இந்தச் சொல்லால் அரவணைத்துக் கொள்வதையும் காண முடிகிறது.

    “விருந்தே தானும்
    புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” 2

    தொல்காப்பியரை முக்காலமும் உணர்ந்த ஞானி என்பது பொருந்தாதாயினும் மொழி பற்றியும், அதன்கண் தோன்றி வளரும் இலக்கிய வளர்ச்சி மற்றும் நெறி பற்றியும் தெளிந்த ஞானம் பெற்றிருந்தார் என்பதற்குத் தொல்காப்பியமே சான்றாகும். தமிழின் இலக்கிய எதிர்காலத்தைச் சரியான தளத்தில் வைத்துக் கணிக்கின்ற நூற்பாவாக இது திகழ்கிறது எனலாம்.

    சங்க இலக்கியங்களில் விருந்தோம்பல்

    விருந்தயர்தல் இல்லறம். இல்லறம் கற்பியல். கற்பியல் அகம். ஆனால் இவ்வறத்தின் சிறப்பு நோக்கிய சங்கச் சான்றோர்கள் அகத்திலும் புறத்திலும் இவ்வறம் உள்ளிட்ட செய்திகள் கொண்ட பாக்களைக்  கோத்திருக்கிறார்கள். இது தனித்த விரிந்த ஆய்வுக்குரிய பொருளாகையால் ஒரு சில எடுத்துக்காட்டுக்களால் விளக்க முற்படலாம்.

    “தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை
    மாஅரை புதைத்த மணல்மலி முன்றில்
    வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
    தண்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர்
    இனிது மன்ற அம்மதானே!” 3

    என்னும் நற்றிணைப் பாடலில் தலைவன் வராதபோது தன் சிற்றூரும் இன்னாதிருந்தது என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்தும் தோழி தலைவனைப் பற்றி அறியாத போது இருந்த ஊர்ச்சிறப்பில் வைத்து விருந்தோம்பலைக் கூறுவதை அறிய முடிகிறது. வருவிருந்து அயரும் தண்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர் இனிது’ என்பது தற்போது இன்னாமையைக் குறித்தது என்க.

    ‘அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்             
    முல்லை சான்ற கற்பின்
    மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே” 4

    வினைமுடித்து மீளும் தலைவன் தலைவியை விரைந்து  காணும் அவாவுக்கான காரணங்களை அடுக்குகிறபோது அவளுடைய ஊர்ப்பெருமையைப் புகழ்வதன் வழி அவளுடைய விருந்தோம்பும் மாண்பை விதந்தோதுகிறான். அகத்திணைப் பாடலொன்றில் தலைவியின் பண்புநலன்களை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் கருத்து ஒரு பண்பாட்டுக் கருவூலமாகும். இளையான்குடி மாறனார் மழைக்கால இரவில் வந்த சிவனடியாரை உபசரித்த வரலாற்றுக்கு மூலமான முந்தைய சிந்தனை இது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடவந்த இடைக்காடனார், அவனுடைய விருந்தோம்பும் பண்பைக் குறிப்பிடுகிறார்.

    “பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்
    கீழ்மடை கொண்ட வாளையும்
    உழவர் படைமிளிர்ந்திட்ட யாமையும், அறைநர்
    கரும்பிற் கொண்ட தேனும்,பெருந்துறை
    நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
    வன்புலக் கேளிர்க்கு விருந்து அயரும்
    மென்புல வைப்பின நன்னாட்டுப் பொருந! 5

    கிள்ளிவளவன் விருந்தில் வாளும் ஆமையும் தேனும் மலரும் கைகோத்துள்ளன என்பது நோக்கத்தக்கது. ‘விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று’ என்னும் சிந்தனைக்கு மூலமான ‘இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் தமியர் உண்டலுமிலரே’6 என்னும் சிந்தனையும் புறநானூற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இங்குக் கூடுதல் குறிப்பாகக் குறிக்கப்படுகிறது.

    “கேளிர்போல கேள் கொளல் வேண்டி
    வேளாண் வாயில் வேட்பக் கூறி
    கண்ணில் காண நண்ணுவழி இரீஇ
    பருகு அன்ன அருகா நோக்கமொடு
    உருகு பாவைபோல் என்பு குளிர் கொளீஇ” 7

    பொருநர்களை உபசரித்தான் கரிகால்வளவன் என்னும் குறிப்பு அவன் உபசரித்த முறையினைப் பொருநராற்றுப்படை வழிக் காணமுடிகிறது.

    திருக்குறளில் விருந்தோம்பல்

    ‘நீதி’ என்பதற்கு வாழ்வியல் நெறி என்பது பொருத்தமாயின் திருக்குறளை ஒரு வாழ்வியல் நூல் எனல் பொருந்தும். தனிமனிதன் தொடங்கி அரசன் வரை உள்ள அனைவர்க்குமான வாழ்வியல் நெறியை அது நிரல்பட திறம்படக் கூறுகிறது. இந்தத் திருக்குறளில் விருந்தோம்பல் ஒரு தனித்த அதிகாரப் பொருண்மையாகக் கொள்ளப்பட்டுள்ளது என்பதே அதன் இன்றியமையாமையை ஓரளவு விளக்கக்கூடும். ‘தென்புலத்தார், தெய்வம், விருந்து ஒக்கல், தான்  என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”8 என்னும் குறட்பாவிற்குச் சிறப்புரை எழுதிய பரிமேலழகர் விருந்து பற்றிய தம் ஆய்வுக்கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.

    “விருந்து என்பது புதுமை. அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார் மேல் நின்றது. அவர் இருவகையர். பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும்,  அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல் சுற்றத்தார் எல்லா அறங்களும் தான் உளனாய் நின்றுசெய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று” 9

    இந்தக் கருத்தினாலும் இதனைத் தொடர்நது வருகின்ற இரண்டு குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரையாலும் இல்லறம் கடைபோவதே விருந்தோம்புதலினால்தான் என்பது தெளிவாகும்.

    “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது” 10

    என்னும் குறட்பா சிறப்புரையின் இறுதியில்  ‘இவை மூன்று பாட்டானும்  இல்நிலையின் நின்றான் அறம் செய்யும் ஆறு கூறப்பட்டது” என்று எழுதுகிறார் பரிமேலழகர். எனவே துறவறப்பயன் உயிர்களைப் பேணுதல் எனின் இல்லறப் பயன் விருந்தினரைப் பேணுதல் என்பது தெளிவாம்.

    காமத்துப்பாலில் ‘விருந்து’

    சங்க இலக்கியப் புறத்திணைப் பகுதியில் அமைந்துள்ள கொளுவும், அகத்திணைப் பாடல்களில் கொடுக்கப்பட்டுள்ள திணை, துறை விளக்கமும் திருக்குறளில் பரிமேலழகர் உரையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப் பொருண்மை விளக்கமும் பொருள் தொகுப்பு விளக்கமும் அவற்றைத் தெளிவுபட புரிந்து கொள்வதற்கு உதவும் பெருங்கருவிகள் ஆகும். அவற்றைப் பற்றிய புரிதலின்றி அவ்விலக்கியப் பாடல்களின் பொருளுணர்தல் அரிதாம்.

    “தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
    அம்மா அரிவை முயக்கு” 11

    களவியல் சார்ந்த இந்தக் குறட்பாவிற்குத் துறைவகுத்த பரிமேலழகர்,”

    “இவளை நீ வரைந்து கொண்டு உலகோர்தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தூடு படல் வேண்டும் என்ற தோழிக்கு (வரைவு மறுத்துத் தலைவன்  சொல்லியது)” 12

    என்றெழுதுகிறார். இல்லறத்துக்குட்படுத்த எண்ணும் தோழிக்கு அதன் பயனாகிய துறக்கச் செல்வம் தலைவியோடு கூடிய களவுப் புணர்ச்சியிலேயே கிட்டுமாதலின் தலைவன் மறுத்தான் என்பதாம். “இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும்” என்னும் தலைவன் கூற்றினால் இது புலப்படும். ‘தம்மில் இருந்து தமது பாத்து உண்டல்’ இல்லறப் பகுதியே என்பதை நினவூட்டப் பரிமேலழகர், ‘தென்புலத்தார்’ 13 எனத் தொடங்கும் குறட்பாவைத் தலைவன் உரையிலும் வைத்துக் கூறினார். இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு அடுத்தபடியாகத் திருக்குறள் காமத்துப்பாலில் இருவகை விருந்தின் சிறப்பும் போற்றப்பட்டுள்ளன என்பது இதனால் தெளிவாகும். தொல்காப்பியம் கற்பியலில் தலைமகள் பண்பாகக் கூறியதைத் திருவள்ளுவர் களவியலில் தோழி மற்றும் தலைவன் சிந்தனையில் வைத்துக் கூறும் நுண்ணியம் உணரத்தக்கது.

    வறுமைக்கிலக்கணம் வருவிருந்து ஓம்பாமை

    வறுமைக்கான பொருள் வரையறையை திருவள்ளுவர் இரண்டு பாக்களில் கூறியிருப்பதை அறிய முடிகிறது. அவற்றுள் ஒன்று விருந்தோம்பல் அதிகாரத்திலும் மற்றொன்று பொறையுடைமை அதிகாரத்திலும் காணப்படுகிறது.

    “உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு” 14

    (செல்வமிருந்தும் விருந்தோம்புதலைச் செய்யாதவர்கள்) பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மையாக்கலின்  மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையால் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம்.” 15

    என்னும் பரிமேலழகரின் உரை நுட்பத்தால் உடைமை எஞ்ஞான்றும் பயனோக்கியது என்பதும், செல்வத்துப் பயன் ஈதலாதலின் அது கடைபோகாவழி அது இன்மையாகுமேயன்றி உடைமையாகாது என்பதும் விருந்தோம்புதல் பண்பாட்டு விழுமியம் என்பதும் அதனைச்  செய்யாமை ‘பேதைமை’ என்பதும் பெறப்படும். இதே கருத்தினை வேறொரு வாய்பாட்டில் எதிர்மறையில் வைத்தும் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். இல்லறத்தில் விருந்தோம்பலின் இன்றியமையாமை அதன் சிறப்பு ஆகியவற்றை எதிர்மறைமுகத்தால் திருவள்ளுவர் கூறியிருப்பது இங்குச் சிந்தனைக்குரியது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை தேவையெனின் இவற்றின் இன்மையே வறுமை எனப்படல் வேண்டும். ஆனால் திருவள்ளுவர் இவை மூன்றும் இல்லாதிருந்தும் விருந்தினரைப் போற்ற வேண்டும் எனவும் போற்றாமையே வறுமை என்றும் வறுமைக்குப் புதுவெளிச்சம் பாய்ச்சுகிறார்.

    “இன்மையுள் இன்மை விருந்தொரால்., வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை” 16

    என்பது குறட்பா. அறனல்லாத விருந்தொரால் பொருளுடைமை ஆகாதவாறு போல என்னும் உவமத்தால் விளக்குகிறார். பொறையுடைமை உயர்ந்த பண்பே. அவ்வுயர்ந்த பண்பினை விளக்கப் பயன்படுத்தும் விருந்தோம்பல் அதனினும் உயர்ந்தது என்பது ஆற்றலால் பெற்ற பொருளெனக் கொள்க. ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை’ என்பது இலக்கணமாதலின்!

    விருந்தோம்புதலின் மூவகைப் பயன்கள்

    நல்லறம் செய்பவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் விருந்தோம்புவார்க்குப் பல்வகை நன்மைகள் கிட்டும் என விளக்குகிறார். இதனை இம்மைப் பயன், மறுமைப் பயன், இருமைக்கான பயன் என வகுத்துக் கொண்டு ஐந்து குறட்பாக்களில் கூறுகிறார்.

    “வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று” 17

    “அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்” 18

    “வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்” 19

    இம்மூன்று குறட்பாக்களும் பகுத்தறிவுக்கு முரணாக அமைந்திருப்பதாகச் சிலர் கருதக்கூடும். ‘பருவந்து பாழ்படுதலும்’, ‘அகனமர்ந்து செய்யாள் உறையும்’ என்பதும் ‘வித்தும் இடல் வேண்டும்’ என்பதும் அறிவுக்கு முரணாக அமைந்திருக்கின்றன என்பதைவிட உலகியல் நோக்கிக் கூறியனவாகக் கொள்ள வேண்டும். எதிர்பாராமல் உதவிசெய்தவனைத் ‘தெய்வமே நேரில் வந்து உதவிய”தாகக் கூறுவதில்லையா? அதுபோல என்க.

    “செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத்தவர்க்கு” 20

    “இனைத்துணைத்து என்பதொன்றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன்” 21

    என்னுங் குறட்பாக்களில் முறையே  மறுமைப் பயனையும் இருமைப் பயனையும் எடுத்துக் கூறுகிறார் திருவள்ளுவர். வேதம் ஓதுதல், யாகம் வளர்த்தல், விருந்தோம்புதல், தருப்பணம் செய்தல், பலியிடுதல் என்னும் வேள்வி ஐந்தனுள் ஒன்றுதான் விருந்தோம்புதல். ஒவ்வொரு வேள்விக்குமான பயன் வரையறுக்கப்பட்டுள்ளதெனினும் விருந்தோம்பலாகிய வேள்விக்கு அது செய்யும் அளவே அளவாக்கப்பட்டுள்ளது. ‘விருந்தின் துணை’ என்பதற்கு விருந்து செய்யும் அளவு என்பது பொருள். ‘சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று’ எனவும் ‘விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’ எனவும் இல்லறத்தின் தலையாய கடமையாகிய விருந்தோம்பலை வலியுறுத்திய திருவள்ளுவர் அதன் அனைத்து வகைப் பயன்களையும் நிரல்படக் கூறுவதை நோக்குக.

    சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பல்

    குடிமக்கள் காப்பியம் எனச் சிறப்பிக்கப்படும் சிலம்பில் விருந்தோம்பலின் சிறப்பினைச் சித்திரிக்க ஏற்ற இடமில்லாது அடிகள் அல்லற்பட்டிருப்பது நன்கு புரிகிறது. இதே நிலை கம்பனுக்கும் வந்திருக்கிறது. கோவலனோடு  கண்ணகியாவது சில ஆண்டுகள் இல்லறம் நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் இராமனுக்கும்  சீதைக்கும் அந்த வாய்ப்பும் இருந்ததாகத் தெரியவில்லை.

    மருந்தான் விருந்து

    தலைவியின் ஊடல் நீக்கும் வாயில்களுள் விருந்தும் ஒன்று. இதனைத் தொல்காப்பியம் பலபடப் பேசுகிறது. சிலப்பதிகாரத்தில் இரவு நேர வண்ணனைப் பகுதியில் தொல்காப்பிய இலக்கணம் நினைவு கூரப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. பரத்தையர்பால் பல்வரிக்கோலம் புனைந்துப் புணர்ச்சியின்பம்  அனுபவித்து வீடு திரும்பும் கணவன்மார்கள் தங்கள் மனைவியர் தங்களிடம் ஊடல் கொள்வார்கள் என எதிர்நோக்கி விருந்தைத் துணைக்கழைத்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் இல்லத்தரசியர் ஊடல் நீங்காமையை அவர்தம்  முகக்குறிப்பினைக் கண்டு பேதுறும் கணவன்மார்கள் ‘ஊடல் தீர்க்கும் மருந்து விருந்தினும் சிறந்தது உண்டோ?’ என நெஞ்சு நடுங்கியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    “விருந்தொடு புக்க பெருந்தோள கணவரோடு
    உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
    வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
    மாதர் வாள்முகத்து மணித்தோட்டுக் குவளைப்
    போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
    விருந்தின் தீர்ந்தில தாயின் யாவதும்
    மருந்தும் தருங்கொல் இம்மாநில வரைப்பெனக்
    கையற்று நடுங்கும் நல்விளை நடுநாள்” 22

    இதனால் விருந்தின் பயன்பரப்பு நடப்பியல் சார்ந்தது என்பதும்  இல்லறச் சிக்கலை மிக நுட்பமான முறையில் தீர்த்து வைக்கும் பேராற்றல் விருந்துக்கு உண்டு என்பதும் பெறப்படும்.  எல்லாரும் அறிந்த சிலம்பின் மற்றொரு காட்சி கொலைக்களக்காதையில் சித்திரிக்கப்பட்டுள்ளமையாகும். கணவனைக் குற்றவாளி எனச் சுமத்திய பழிக்காக மாமதுரையைத் தீக்கிரையாக்கிய கண்ணகி புகாரில் மாதவியோடு வாழ்ந்த காலத்து வந்த அவன் பிரிவைத் தனக்கேற்பட்ட இழப்பாகக் கருதவில்லை. இல்லறம் செய்ய தன் கணவன் உதவவில்லையே என்றுதான் வேதனைப்பட்டிருந்திருக்கிறாள். காப்பிய நிகழ்வுகளின் இறுதிக்காட்சியில் வைத்து இதனைக் காட்டுகிறார் அடிகள்.

    “அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
    துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”23

    தன் கணவன் மீது பழிபோடாத கண்ணகியை இங்கு நாம் காணலாம். ‘உன்னோடு இல்லறம் நடத்த நான் கொடுத்துவைக்கவில்லை’ என்பதே அவள் ஆதங்கமாக இருந்திருக்கிறது. அதனால்தான் ‘இழந்த என்னை’ எனத் தன்மீது தானே பழிபோட்டுக் கொள்கிறாள். இல்லறத்தில் இழக்கக்கூடாத ஒன்று எனக் கருதும் அளவுக்கு விருந்தோம்புதல் அரியதொரு அறமாகக் கருதப்பட்டுள்ளது என்பதைச் சிலம்பின் வழி அறியலாம். இந்தப் பகுதியில் வரும் ‘தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்’ என்னும் தொடரில் மனம் பறிகொடுத்த பாவேந்தர் தாம் எழுதிய குடும்ப விளக்கில் இதற்கான விரிவுரையைத் தந்திருக்கிறார்.

    “வீட்டுக்கு வந்த விருந்தோம்பு – நாட்டிலுறு
    நற்றமிழர் சேர்த்தபுகழ் ஞாலத்தில் என்னவெனில்
    உற்ற விருந்தை உயிரென்று – பெற்றுவத்தல்!
    “மோந்தால் குழையும் அனிச்சம்பூ முகமாற்றம்
    வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்று ஆய்ந்ததிரு
    வள்ளுவனார் சொன்னார் அதனைநீ எப்போதும்
    உள்ளத்து வைப்பாய் ஒருபோதும் – தள்ளாதே!
    ஆண்டு பலமுயன்றே ஆக்குசுவை ஊண்எனினும்
    ஈண்டு விருந்தினர்க்கும் இட்டுவத்தல் வேண்டுமன்றோ?
    வந்தாரின் தேவை வழக்கம் இவையறிய
    நந்தாவிளக்குன்றன் நல்லறிவே! செந்திருவே!
    இட்டுப்பார் உண்டவர்கள் இன்புற்று இருக்கையிலே
    தொட்டுப் பார் உன் நெஞ்சம் தோன்றுமின்பம்! – கட்டிக்
    கரும்பென்பார் பெண்ணை கவிஞரெலாம் வந்த
    விருந்தோம்பும் மேன்மையினால் அன்றோ?” 24

    திருக்குறளில் விருந்தோம்பல் என்னும் தனியதிகாரத்தைப் போலவே பாவேந்தரும் தமது குடும்பவிளக்கில் விருந்தோம்பலைத் தனியியலாகவே அமைத்திருப்பதன் மூலம் குடும்பத்தின் தலையாய அறம் விருந்தோம்புதலே என்பதில்  அவருடைய பார்வை தெளிவாக இருந்திருக்கிறது என்பது புலனாம்.

    பெரியபுராணத்தில் விருந்தோம்பல்

    நம்மை நாடி வரும் விருந்தினரை இன்சொல்லால் மகிழ்வித்தும் உள்ளம் கலந்து உறவாடியும், தங்குவதற்கேற்ற இடமளித்தும், ஆடை அணிகலன்கள் முதலியவற்றையும் அளித்தும் உபசரிக்க வேண்டும். இவ்வாறு விருந்தினரை உபசரிப்பவர்களைத் தேவர்கள் தம் விருந்தினராக ஏற்றுக் கொள்வார்கள் என, ஏலாதி பண்டையத் தமிழரின் விருந்தோம்பல் முறையைத் தெரிவித்து ‘நல்விருந்து வானத்தவர்க்கு’ என்னும் குறட்பாத் தொடரையும்  நினைவூட்டுகிறது.

    “இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண் யாவர்க்கும்
    வன்சொல் களைந்து வகுப்பானேல் – மென்சொல்
    முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்! நாளும்
    விருந்து ஏற்போர் விண்ணோர் விரைந்து” 25

    தமிழர்தம் இந்தப் பண்பாட்டு விழுமியத்தின் காப்பிய வடிவமே பெரியபுராணம். பெரிய புராணத்தின் சாரம் விருந்தோம்பலே. எந்தச் சூழ்நிலையிலும் எத்தகைய விருந்தோம்பலையும் மேற்கொள்ள வேண்டும் என்னும் அவ்வறத்தின் மேன்மையை முன்னெடுப்பதாக அமைந்திருப்பதுதான் இளையான்குடி மாறனார் புராணம்.

    “ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்னுந் தன்மையால்
    நேர வந்தவர் யாவராயினும் நித்தமாகிய பத்திமுன்
    கூர் வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவிப்புலத்து
    ஈரம் மென்மதுரப் பதம் பரிவெய்த முன்னுரை செய்தபின்“ 26

     “கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே
    மண்டு காதலின் ஆசனத்திடை வைத்து அருச்சனை செய்தபின்
    உண்டி நாலு விதத்தினில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பிலா
    அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துள்ளார்”  27

    “செல்வம் மேவிய நாளில்  இச்செயல் செய்வதன்றியும் மெய்யினால்
    அல்லல் நல்குரவானபோதினும் வள்ளல் என்று அறிவிக்கவே
    மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாடோறும் மாறிவந்து
    ஒல்லையில் வறுமைப் பதம்புக உன்னினார் தில்லை மன்னினார்.”  28

    “ஈரமேனியை நீக்கி இடம் கொடுத்து
    ஆர இன்னமுது ஊட்டுதுற்கு ஆசையால்
    தாரமாதரை நோக்கி, தபோதனர்
    தீரவே பசித்தார் செய்வதென்? என்று” 29

    என்னும் பாடல்கள் விருந்து உபசரிப்பார்க்குப் பரிமேலழகர் சொன்ன ‘நன்று ஆற்றல்’ என்னும் சொல்லுக்கு இலக்கியமாக அமைந்துள்ளதைக் காணலாம். பெரியபுராணத்துள் வருகின்ற விருந்தோம்பும் நிகழ்வுகளுள் இன்றியமையாது குறிக்கப்படுபவை மூன்று.

    1. சிறுத்தொண்டர் புராணம்.
    2. அப்பூதிநாயானார் புராணம்.
    3. இளையான்குடி மாறனார் புராணம்

    இவற்றுள் முந்தைய இரண்டும் (பிள்ளைக்கறி உண்டமையும், மாண்ட இளைய திருநாவுக்கரசு மீண்டதும்) மீயுயர் கற்பனை கலந்து அமைய இறுதியாக உள்ள இளையான் குடிமாறனார் புராணம் நடப்பியல் சார்ந்து அமைந்துள்ளது நோக்குதற்குரியது.

    கம்பராமாயணத்தில் விருந்தோம்பல்

    கம்பராமாயணத்தில் நேரடியான உபசரிப்பைக் கங்கைப் படலத்தில் காணமுடிகிறது. ‘ஆறுகொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி வேறுள குழுவையெல்லாம் வென்று’ மானுட அவதாரம் பெற்றுவந்த இராமனுக்கு நாவாய் வேட்டுவன் குகன் செய்த விருந்து அது. இராமனை உபசரிக்க எண்ணிய எல்லை நீத்த அருத்தியன் ஆகிய குகன்.

    “இருத்தி ஈண்டு‘ என்னலோடும்.
    இருந்திலன்., எல்லை நீத்த
    அருத்தியன், தேனும் மீனும்
    அமுதினுக்கு அமைவது ஆகத்
    திருத்தினென் கொணர்ந்தேன்
    என்கொல் திருவுளம் என்ன”. 30

    நெஞ்சினில் அன்பையும் கைகளில் தேன், மீன் முதலியவற்றையும் கொண்டு வந்தான் குகன். அவனுடைய ஆழமான அன்பை நோக்கிய இராமன், மூத்தவர்களாகிய முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டுக், “குகனே! நீ அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்த தேனும், மீனும் மிகவும் அருமையானவை. அமுதத்தைக் காட்டிலும் சிறந்தவை. இவையெல்லாம் எம்மைப் போன்றவர் ஏற்கத்தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான்.

    “அரியதாம் உவப்ப உள்ளத்து
    அன்பினால் அமைந்த காதல்
    தெரிதரக் கொணர்ந்த என்றால்
    அமிழ்தினும் சீர்த்த அன்றே
    பரிவினின் தழீஇய என்னின்
    பவித்திரம் எம்ம னோர்க்கும்
    உரியன இனிதின் நாமும்
    உண்டனெம் அன்றோ என்றான்” 31

    உள்ளத்து அன்பின் மிகுதியால் கொண்டு வந்த பொருள்கள் உண்ணத்தகாதன ஆயினும் சுமந்து வந்த அன்பு மிகுதியால் அவையும் உண்ணத்தகும் பயனைத் தரவல்லனவே என்னும் உயரிய கருத்தினைக் கவிச்சக்கரவர்த்தி இந்த இடத்தில் பதிவு செய்திருக்கிறார். கள்ளம் கபடமற்ற உள்ளமும் எளியவரை மதிக்கும் பெருந்தன்மையும் விருந்தோம்பல் அறத்தினை உயர்த்தும் என்னும் மாண்பினை இதனால் அறிந்து கொள்ளலாம்.

    உண்டபின் தாம்பூலம் தரிக்கும் வழக்கமுள்ளவன் இராமன்.  அதனை அவனுக்கு அன்பைக் குழைத்து மடித்துத் தரும் சீதை தற்போது அசோகவனத்தில். தான் இல்லாதபோது அவற்றையெண்ணி மருகுகின்றாள்.

    “அருந்து மெல்லடகு ஆரிட அருந்தும் என்று அழுங்கும்!
    விருந்து வந்தபோது என்னுறுமோ என விம்மும்!” 32

    கணவனுக்கு அடைகாய் மடித்துக் கொடுப்பதும் இல்லறத்தில் விருந்தோம்புதலும் இணைந்து செய்ய வேண்டிய கடமை. அறம். அவ்விரண்டனையும் செய்ய முடியாமல் தான் தனித்து இருப்பதாகச் சீதை வருந்தினாள் என்பதாம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன் கணவனிடம் நேராகவே கூறினாள். சீதை செய்ய வேண்டிய கடமையைச் செய்ய இயலவில்லையே என தனக்குத்தானே மருகினாள்.  ‘இழந்த என்னை’ என்பது கண்ணகி வாக்கு. ‘என விம்மும்’ என்பது சீதையின் மெய்ப்பாடு. இரண்டிடங்களிலும் புலவர் பெருமக்கள் தலைமகன்களின் குற்றத்தைக் கூறாமல் தலைமகள்களின் வருத்தத்தையே முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள் என்பது சிந்திக்கத்தக்கது.  

    விருந்தோம்பும் கலைமரபு

    வீடு தேடி வந்தார்க்குச் சோறு போட்டு அனுப்புவதன்று விருந்தோம்பல்.  இல்லறத்தின் தலையாய கடமையாக விருந்தோம்புதல் குறிக்கப்படினும் அதனை முறையாகச் செய்ய வேண்டும், செய்தார்கள் தமிழர்கள் என்பதிலேதான் பண்பாட்டு விழுமியம் அடங்கியிருக்கிறது.

    “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து’” 33

    என்னும் குறட்பாவில் மோப்ப மற்றும் நோக்க என்னும் இரண்டு சொற்களுக்குத் தம் நுண்ணிய உரையினால் விளக்கம் சொல்வார் பரிமேலழகர். இந்தக் குறளில் அமைந்துள்ளது வேற்றுமை அணி. உவம அணி அன்று.

    “சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அது பற்றி நண்ணிய வழி இன்சொல்லும் அதுபற்றி உடன்பட்ட வழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்.“ 34

    என்பது பரிமேலழகர் விளக்கம். அனிச்சப்பூ தீண்டுதலாகிய மூன்றாம் நிலையில்தான் வாடும். விருந்தினரோ நோக்குதலாகிய முதனிலையிலேயே வாடுவர் ஆதலின் அனிச்சப்பூவினும் மெல்லியர் என்பதாம். பரிமேலழகரின் இந்த உரை நுண்ணியம் அறிவு சார்ந்தது என்பதோடன்றிப் பண்பாடு சார்ந்தது எனல் பொருந்தும். திருக்குறள் உரைக்குப் பலகாலம் பின்னால் தோன்றிய விவேக சிந்தாமணி என்னும் நூலில் அழகர் சொன்ன மூன்று பண்புகள் ஒன்பதாக விரிவடைந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

    “விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
    வியத்தல், நல் மொழி இனிது உரைத்தல்,
    திருந்துற நோக்கல், வருகென உரைத்தல்,
    எழுதல், முன் மகிழ்வன செப்பல்,
    பொருந்து மற்றவன்தன் அருகுற இருத்தல்,
    போம் எனின் பின் செல்வ தாதல்,
    பரிந்துநல் முகமன் வழங்கல், இவ் வொன்பான்
    ஒழுக்கமும் வழிபடும் பண்பே” 35

    என்னும் பாடலின் வழி, வரும் விருந்தினரை மெச்சுதலும், அவரிடத்து இன்மொழி பேசுதலும், முகமலர்ச்சி கொண்டு நோக்குதலும், வருக என வரவேற்றலும், மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதும், அவன் மகிழும்படியான செய்திகளைக் கூறுதலும் வந்து சேர்ந்த அவனது அருகிலேயே அமர்வதும், விடை பெற்றுச்  செல்லும் போது நேசமுற்று பின் சென்று, மகிழ்வான முகத்துடன் அவனை வழியனுப்புதலுமாகிய  ஒன்பது வகையால் விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறது. விருந்தினர்கள் விடைபெற்றுச் செல்லும் போது, அவர்கள் பின்னே, ஏழடி நடந்து சென்று, தமிழரிடையே நிலவிய பண்டை மரபு ஆகும். இம்மரபைக், கரிகாலன், தன்னை நாடி வந்த பொருநர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் விடைபெறும் போது ஏழடி தூரம் நடந்து சென்று வழியனுப்பினான் என்பதைக்,

    “காவின் ஏழு அடிப் பின் சென்று” 36

    மேற்கண்ட பாடலடி விளக்குகிறது. மேற்கண்ட குறிப்புக்களிலிருந்து விருந்தோம்பல் என்பது தமிழ்மக்கள் வாழ்வியலின் ஒரு கூறாகவும் கலைமரபாகவும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது என்பதை அறியலாம். இதன் தொடர்ச்சியாக விருந்தயர்வாருக்கு இன்றியமையாத பண்பாக முகமலர்ச்சியே என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதையும் காணமுடிகிறது.

    “ஒப்புடன் முகம லர்ந்தே
    உபசரித் துண்மைப் பேசி
    உப்பில்லாக் கூழிட்டாலும்
    உண்பதே அமுத மாகும்
    முப்பழ மொடுபா லன்னம்
    முகங்கடுத் திடுவா ராயின்
    கப்பிய பசியி னோடு
    கடும்பசி ஆகுந் தானே” 37

    என்னும் பாடலடி உணர்த்துகிறது. விருந்தின் புண்ணியம், பொருளில் இல்லை. அயர்வாரின் உள்ளத்தில் இருக்கிறது. இல்லறத்தானின் உள்ளத்து இனிப்பு அவன் உபசரிக்கும் பொருளில் வந்து அமைகிறது. திண்ணனார் எச்சில்படுத்தியதில் உண்டான பாசம் இறைவனுக்கு இனித்தது போல! புளித்துப் போன குழம்பு, தவிடு, கூழ், புழுக்கள் பற்றிய மாவு, அரைக்கீரையின் வேர், கெட்டியாய் இல்லாத தயிர், பக்குவம் தவறிய சருக்கரைப் பாகு, கிளறிய களி, நன்றாகத் தீட்டப்படாத அரிசியில் பொங்கி இடப்பட்ட சோறு, உப்பு போடப்படாத நீராகாரம் ஆகிய இவையே ஆயினும், இவ்வுணவானது அன்புடன் பரிமாறப்பட்டதாயின் உண்பவன் மகிழ்வான். அவன் மகிழ்ச்சி உபசரித்தவனின் உள்ளத்தோடு கரைவதால்.

    “கெட்டசாறு தவிடு கஞ்சி
    கிருமி உண்ட மா அரைக்
    கீரை வேர்தெளித்த மோர்மு
    றிந்த பாகு கிண்டுமா
    இட்ட சோறு கொழியல் உப்பி
    டாத புற்கை ஆயினும்
    எங்கும் அன்ப தாக நுங்க
    இன்ப மாயி ருக்குமே” 38

    ஆனால் தேன்பாகு, பசுநெய், பருப்பு வகைகள், முப்பழ வர்க்கங்கள்,  பால் சாத வகைகள், தாளிக்கப்பட்ட கறி வகைகள், பல்வகை பலகாரங்கள்  சுண்டக் காய்ச்சப்பட்ட திரட்டுப் பால், சருக்கரைப் பொங்கல் முதலியவற்றுடன் உணவு படைத்தாலும், அன்போடு இடப்படாததாயின் அங்கே விருந்தறம் நிறைவு பெறுவதில்லை.

    “பட்ட பாத பசுவின் நெய்ப
    ருப்பு முக்க னிக்குழாம்
    பானி தங்கள் தாளி தங்கள்
    பண்ணி கார வகையுடன்
    அட்ட பாலகு ழம்பு கன்னல்
    அமுத மோடும் உதவினும்
    அன்பனோ டளித்தி டாத
    அசனம் என்ன அசனமே” 39

    என்னும் பாடலடி உணர்த்துகிறது. எனவே எத்தகைய உணவினை இட்டாலும் அதனை அன்பினோடு இடுதல் வேண்டும் என்பதே பழந்தமிழரின் விருந்தோம்பல் கொள்கையாகும். இன்முகம், இன்சொல், இனியவை ஆற்றல் என்பனவற்றின் தொகுப்பே விருந்தோம்பல் என்பதை மேற்காட்டிய சில எடுத்துக்காட்டுக்களால் அறிந்து கொள்ள இயலும்.

    நிறைவுரை

    தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்கள் பல. அவற்றுள் தலையாயது விருந்தோம்பல். இயற்கை வாழ்வினைப் புறந்தள்ளிச் செயற்கையில் சிந்தனைப் போக்கிய தற்காலத்தில் இது கனவாய்க் கற்பனையாய்ப் பொய்யாய்ப் புனைவாய் மெல்லப் புறப்பட்டு இல்லறத்தின் புறம் போயிருக்கலாம். அதன் சாரம் இன்னும் மணந்து கொண்டுதான் இருக்கிறது. தமழிலக்கியங்கள் முழுமையாகக் கிட்டாத காரணத்தால் இது பற்றிக் கிட்டும் செய்திகள் குறைவே. ஆனால் கிட்டியிருக்கிற அத்தனை இலக்கியங்களிலும் விருந்தோம்பல் பேசப்பட்டுள்ளது என்பதே உண்மை. விருந்தோம்பலைப் பெண் பின்பற்றியிருக்கிறாள். ஆண் நேசித்திருக்கிறான். ஆண்டவனுக்கு அடியவன் செய்திருக்கிறான். அடியவருக்கு சாமான்யன் செய்திருக்கிறான். அவதாரங்களுக்கும் விருந்தோம்பல் நிகழ்த்தப்பட்டுள்ளது.  மன்னர்கள் புலவர்களுக்குச் செய்திருக்கிறார்கள். புலவர்கள் தங்கள் மனைவியருக்கு இது பற்றிப் புகன்றிருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் தமிழிலக்கியப் பெரும்பரப்பில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஒளிவெள்ளமாய் ஊடுருவி நிற்பது விருந்தோம்பல் என்னும் பண்பே என்பதை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்புரிதலுக்கு இந்தக் கட்டுரை ஓர் அணிற்பங்காகக் கருதப்படலாம்.

    சான்றெண் விளக்கம்

    1. தொல்காப்பியர் தொல். கற்பியல்           நூ.எண். 11
    2. மேலது செய்யுளியல்                 நூ.எண். 231
    3. கதப்பிள்ளையார் நற்றிணை         பா.எண். 135 வரி.1-5
    4. இடைக்காடனார் நற்றிணை         பா.எண் 142 வரி 8-10
    5. இடைக்காடனார் புறநானூறு        பா.எண் 42 வரி. 12-18
    6. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி புறநானூறு பா.எண். 182
    7. முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படை.  வரி. 74-78
    8. திருவள்ளுவர் திருக்குறள்                      கு.எண். 43
    9. பரிமேலழகர் மேலது உரை
    10. திருவள்ளுவர் திருக்குறள்                        கு.எண். 45
    11. மேலது                                                                            கு.எண். 1007
    12. பரிமேலழகர் மேலது உரை
    13. திருவள்ளுவர் திருக்குறள்                         கு.எண். 43
    14. மேலது கு.எண். 89
    15. பரிமேலழகர் மேலது உரை
    16. திருவள்ளுவர் திருக்குறள்       கு.எண். 153
    17. மேலது                     கு.எண். 83.
    18. மேலது கு.எண். 84
    19. மேலது கு.எண்.  85
    20. மேலது கு.எண்.  86
    21. மேலது கு.எண்.  87
    22. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம்  இ.வி.எ.காதை          வரி. 227-234
    23. மேலது கொலைக்களக்காதை             வரி. 73-75
    24. பாரதிதாசன் குடும்பவிளக்கு    கண்ணிகள் – 34-40
    25. கணிமேதாவியார் ஏலாதி                  பா.எண். 7
    26. சேக்கிழார் பெரியபுராணம்     பா.எண். 442
    27. மேலது பா.எண். 443
    28. மேலது பா.எண். 445
    29. மேலது பா.எண். 449
    30. கம்பர் கம்பராமாயணம் கங்கைப்படலம்.          பா.எண்.41 வரி. 1-3
    31. மேலது பா.எண். 42
    32. மேலது காட்சிப்படலம்                                 பா.எண். 15
    33. திருவள்ளுவர் திருக்குறள்                    கு.எண். 90
    34. பரிமேலழகர் மேலது உரை
    35. விவேகசிந்தாமணி பா.எண். 33
    36. முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படை வ. 7
    37. விவேகசிந்தாமணி பா.எண். 4
    38. மேலது பா.எண். 57
    39. மேலது பா.எண். 58

    துணைநூற்பட்டியல்  

    1. ஆசிரியர்குழு (உரை) ஏலாதி, சாரதா பதிப்பகம், சென்னை. பதிப்பு – 2018.
    1. கேசிகன் புலியூர் (உ.ஆ.), நற்றிணை, பாரி நிலையம், சென்னை – 600108, நான்காம் பதிப்பு – 1967.
    1. சுப்பிரமணியன் ச.வே. (ப.ஆ.), தொல்காப்பியம், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, சென்ன – 600108. ஐந்தாம் பதிப்பு – 2003 .
    1. சேக்கிழார் பெரிய புராணம், திருப்பனந்தாள் மடம், திருத்திய பதிப்பு – 1967
    1. திருவள்ளுவர், திருக்குறள், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை -1975.
    1. துரைசாமிப்பிள்ளை ஒளவை புறநானூறு மூலமும் உரையும், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1967.
    1. துரை.அரங்கனார் கருவிலே திருவுடையான், மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக்கோபுரத் தெரு, மதுரை – 1, இரண்டாம் பதிப்பு – 1966.
    1. பரிமேலழகர் (உ.ஆ.) திருக்குறள் உரை, தெ.இ. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1975.
    1. பத்மநாயன்(உரை) விவேகசிந்தாமணி, கற்பகம் புத்தகாலயம், சென்னை. பதிப்பு – 2008.
    1. பாரதிதாசன் குடும்பவிளக்கு, பாரி நிலையம், சென்னை – 108. நான்காம் பதிப்பு – 1966.
    1. வேங்கடசாமி நாட்டார் ந.மு.(உ.ஆ.) சிலப்பதிகாரம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை. திருத்திய இரண்டாம் பதிப்பு – ஜுலை 1999

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு’ என்னுந்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. ஆய்வுப் பொருளின் பன்முகப் பயன்பாடு நோக்கிப், பழந்தமிழ்ப் பண்பாட்டுத் தேட்டங்களை நினைவூட்டுவதும் மீட்டுருவாக்கம் செய்வதும் அவற்றின் சிறப்புக்களை எடுத்து மொழிவதும் இன்றைய சூழலில் ஏற்றதே!
    1. ஒரே பொருண்மை பற்றித் தமிழிலக்கியப் பரப்பிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துருக்களின் ஆய்விற்குத் ‘தொகுப்பாய்வு’ எனப் பெயரிட்டிருப்பது பொருத்தமே!
    1. ‘தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்’ என்னுந் தொடர், ‘நற்றமிழர் ஞாலத்தில் சேர்த்த புகழ்’ என மரபு வழியாகப் பாவேந்தரிடம் அடைக்கலம் பெற்றிருப்பதைக் கட்டுரையாளர் சுட்டுவது அவர்தம் மரபுவழி ஆய்வுச் சிந்தனையை வெளிப்படுத்துவதாய் உள்ளது.
    1. கண்ணகிக்கும் சீதைக்கும் ஏற்பட்ட துன்பங்களுள் தலையாய துன்பமாக விருந்தோம்பாத் துயரமே என்பதை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கட்டுரையாளர் நிறுவுகிறார்.
    1. ‘அனிச்சப்பூவன்ன விருந்தினர்’ என்னும் உவமப் பொருளினும்  அனிச்சப்பூவினும் மென்மையானவர் விருந்தினர்’ என்னும் உறழ்ச்சிப் பொருளைப் பரிமேலழகர் உரைவழி எடுத்துக்காட்டி அது வேற்றுமையணி என நிறுவுவது கட்டுரையாளரின் இலக்கண வன்மையையும் ஆய்நெறிப் புலமையையும் ஒருசேரப் புலப்படுத்துகிறது.
    2. விருந்தோம்பும் நெறி மற்றும் உணவு வகைகள் முதலியவற்றை விவேகசிந்தாமணியிலிருந்து தொகுத்திருக்கும் கட்டுரையாளர், இளையான்குடி மாறனார் புராணத்தில் சித்தரிக்கப்படும் சிவனடியார் விருந்தோம்பலை அழகுற எடுத்தோதுகிறார்.
    3. பல இலக்கியங்களிலிருந்து தொகுத்த செய்தி மலர்களை  ‘விருந்தோம்பல்’ என்னும் மாலைக்குள் கண்ணியாக்கித் தரும் இந்த ஆய்வாளருக்குப் பாராட்டுக்கள்!

    Share
  • (Peer Reviewed) தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும்

    (Peer Reviewed) தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும்

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.                                                                                             
    மின்னஞ்சல் முகவரி–  egowrisss@gmail.com

    முன்னுரை

    தமிழின் தலையிலக்கணமாகிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களையும் அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களையும் கொண்டு விளங்குகிறது. மொழியின் எழுத்திலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல் அமையும் பாங்கினைச் சொல்லதிகாரத்திலும் விளக்கிக் காட்டிய தொல்காப்பியம், சொற்களால் அமையும் இலக்கியம் பற்றிய கருத்துக்களைப் பொருளதிகாரத்தில் ஆராய்கிறது. இப்பொருளதிகாரத்தைத் தமிழர்தம் வாழ்வியலோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கும் அறிஞர்களும் உளர். இலக்கணமாயினும் இலக்கியமாயினும் தாம் தோன்றுகின்ற சமுதாயத்தின் தாக்கம் இல்லாது அமைதல் அரிது என்பது உண்மையாயினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைக் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலின் ‘கவிதையியல்’(Poetics) என்னும் நூலோடு ஒப்புவைத்து ஆராய்வதே பொருத்தமானதாகும்.

    பொருளதிகார அமைப்பு

    தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் ஒன்பது இயல்களைத் தனது உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் அமையும் உவமப்பாங்கை ஆராய்வதே உவமவியல் என்னும் கருதுகோள் ஏற்கப்படின், அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், உவமவியல் ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியும், புறத்திணையியல் புறம் பற்றியும் ஏனைய மூன்றும்  இருதிணைக்கண் செய்யுள் முறைமை பற்றியும் ஆராய்வதாகக் கொள்ள முடியும். அகத்திணைக்கண் சுட்டப்பட்டுள்ள முதற்பொருள், கருப்பொருள் ஆகியன பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    அகத்திணை உள்ளடக்கம்

    பொருளதிகாரத்தின் முதல் இயலான அகத்திணையியல் அகத்திணைகள் ஏழு என்னும் வரையறையோடு தொடங்குகிறது. அகவொழுக்க மரபும், தாயர், தோழி, கண்டோர், தலைவன் முதலியோர்தம் கூற்றுப்பகுதிகளும் நடுவண் ஐந்திணைகளின் உரிப்பொருள் அமைதியும் கூறப்படுகின்றன. உள்ளுறை உவமம், ஏனை உவமம், தமக்கென நிலம், பொழுது இல்லாத கைக்கிளை, பெருந்திணை முதலியவற்றின் இயல்புகளும் சுட்டப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அகப்பொருள் இலக்கியங்கள் கலிப்பா, பரிபாடல் ஆகிய இருவகைப்பாக்களில் மட்டும் பாடப்பெறும் என்பதும் கூறப்படுகிறது. அகத்துறைப் பாடல்களில் தலைமக்களின் இயற்பெயர் சுட்டுவது மரபன்று என்னும் உயரிய இலக்கியக் கொள்கை வற்புறுத்தப்படுகிறது. இத்தனைச் சிறப்புக்களும் கொண்ட இந்த அகத்திணையியல், தலைவியின் கூற்றுப்பகுதியைக் கூறாதது சிந்தனைக்குரியது.

    திணைக்குத் துணையாகும் முதலும், கருவும்

    ‘திணை’என்னும் சொல் முதற்கண் ஒழுக்கத்தைக் குறித்துப் பின் ஆகுபெயராய் அவ்வொழுக்கம் நிகழும் நிலத்தினைக் குறித்தது. ‘நெய்தற்கண் குறிஞ்சி மயங்கியது’என்பதில் ‘குறிஞ்சி’என்பது ஒழுக்கம். ‘காட்டுக்கோழி குறிஞ்சிக்குரியது’ என்பதில் ‘குறிஞ்சி’என்பது நிலம். திணையாகிய ஒழுக்கத்தைப் பாடுவதே புலனெறி வழக்கம். இப்புலனெறி வழக்கம் சிறக்க வேண்டுமாயின் முதற்பொருளின் பின்புல அமைதி மிகவும் வேண்டப்படுவதாகும். அப்பின்புலம் முதற்பொருளாலும் கருப்பொருளாலும் அமையும். சான்றாகப், பாலையாகிய பிரிவைப் பாடும் ஒருசூழலில், அப்பிரிவொழுக்கத்தின் பின்புலம் மனத்துன்பத்தை மிகுவிப்பதாக இருத்தல் வேண்டும். காலையிலோ, மாலையிலோ, இரவிலோ பாடுவதாக அமைந்தால் அப்பாடல் சிறக்காது., மேலும் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் வேதனையை அருவி, சாரல், மயில், குயில் என்னும் பின்புலத்திலும் விளக்க முடியாது., விளக்கினால் செய்யுள் சிறக்காது. பட்டமரம்,, சுடுமணல், பறக்கும் பருந்து என்னும் பின்புலத்தில் நண்பகல் பொழுதில் விளக்கினால் பாட்டின் சிறப்பும், தலைவிபடும் பிரிவுத்துன்பமும் கற்பார் உள்ளத்தில் ஆழப்பதியும். எனவே முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த ‘அமைப்பு’(Settings) என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும். இன்றைய திரைப்படம் வரை இந்த மரபு பின்பற்றப்படுகிறது என்பதும் ஈண்டுச் சுட்டத்தகுந்தது.

    முதற்பொருள் அமைப்பில் தொல்காப்பியத்தின் அறிவியல் பார்வை

    இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய உலகத்துப் பொருள்கள் தோன்றுவதற்குக் காரணமும் அவற்றிற்கு ஆதாரமுமாக விளங்குவது புவியும் அப்புவியின் சுழற்சியால் நிகழும் கூறுபாடுகளுமாகும். புவியின் இயற்கையமைப்பை ஒட்டி மலை சார்ந்த நிலம், காடு சார்ந்த நிலம், ஆறுகள் பரந்து செல்லும் சமநிலம், கடற்கரையைச் சார்ந்த மணற் பரப்புடைய நிலம் எனப் பிரித்து நிலத்தை நானிலம் என வழங்குவர். இதனைத் தொல்காப்பியம் ‘காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம்’ என வழங்கும். புவி ஞாயிற்றினின்றும் தோன்றியது. அப்புவி கதிரவனின் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டு, அதன் ஒளியையும் ஏனைய நாள்மீன்களின் ஒளியையும் பெற்றுச் சுழன்று வருவதுடன், தனக்குத் தானே சுழன்று வரும் இயல்பினை உடையது. புவியின் இருவேறு சுழற்சிகளால் ஏற்படுவனவே பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஆகும். பெரும்பொழுதினை வழக்கில் ‘பருவம்’என்பர். இவ்வாறு ஞாயிற்றினால் அமைந்த புவியையும் அப்புவியின் சுழற்சியினால் தோன்றும் இருவகைப் பொழுதுகளையும்  ‘முதற்பொருள்’எனச் சுட்டுவது நேரியதே ஆகும்.

    “முதல் எனப்படுவ நிலம்பொழு திரண்டின்
    இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” 1

    என்பது தொல்காப்பியம்.

    ஐந்திணைகளும் முதற்பொருள்களும்

    கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுதியாகச் சொல்லப்பட்ட அகத்திணைகள் ஏழனுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளுக்கு நிலம் வகுக்க வேண்டிய தொல்காப்பியம் பாலை தவிர்த்த ஏனைய நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலத்தை வரையறை செய்திருக்கிறது.  முதற்பொருள்கள் இரண்டனுள் தலையாயதான நிலத்தினை,

    “மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை, குறிஞ்சி, மருதம்,நெய்தல்எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”2

    என்னும் நூற்பாவில் சுட்டிச்செல்கிறார் தொல்காப்பியர். ‘காடுறை உலகம்’ முல்லை எனவும், ‘மைவரை உலகம்’குறிஞ்சி எனவும், ‘தீம்புனல் உலகம்’மருதம் எனவும், ‘பெருமணல் உலகம்’நெய்தல் எனவும் பெயர்பெறும். இந்நூற்பாவில் அகன் ஐந்திணைகளில் ஒன்றாகிய பாலைக்குத் தனித்த நிலம் ஒதுக்கப்படவில்லை. தட்பவெப்பநிலை காரணமாக அமையும் நானிலங்களின் திரிபே பாலையாகும் என்பதே இதற்குக் காரணம்.

    ஐந்திணைப் பிரிவும் இருவகைப் பொழுதுகளும்

    ஏனைய கோள்களைப் புவி சுற்றுவதாலும், புவி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதாலும் உண்டாகும் பருவ மாறுதல்களும் பொழுது மாறுதல்களும் முறையே பெரும்பொழுது, சிறுபொழுது எனத் தொல்காப்பியத்தால் வகுத்துரைக்கப்படுகின்றன. இதில் ஆண்டின் உட்பகுதியைப் பெரும்பொழுது என்றும் நாளின் உட்பகுதியைச் சிறுபொழுது என்றும் கூறலாம்.முல்லையாகிய இருத்தல் ஒழுக்கத்திற்குக் கார்காலமாகிய பெரும்பொழுதையும் அக்கார்காலத்துள் மாலையைச் சிறுபொழுதாகவும் தொல்காப்பியம் உரித்தாக்குகிறது.  இதனைக்,

    “காரும் மாலையும் முல்லை”3

    என்னும் நூற்பாவில் கூறும் தொல்காப்பியம், குறிஞ்சியாகிய புணர்தல் ஒழுக்கத்திற்குப் பெரும்பொழுதில் கார்காலமும் முன்பனிக்காலமும், சிறுபொழுதில் மாலைக்காலமும் உரித்தாகக் கூறுகிறது. இதனைக்,

    “குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்”4

    “பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப”5

    என்னும் நூற்பாவில் சுட்டுகிறார்.

    “வைகறை விடியல் மருதம்”6

    என்னும் நூற்பாவினால், மருதமாகிய ஊடல் ஒழுக்கத்திற்கு ஆறு பெரும்பொழுதுகளையும் குறிப்பாக உரிமையாக்கி,, அப்பெரும்பொழுதுகளில் அமையும் வைகறை, விடியல் ஆகிய இருவகைச் சிறுபொழுதுகளையும் உரிமையாக்கினார். நெய்தல் திணைக்கு,

    “எற்பாடு நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்”7

    என விதி செய்த தொல்காப்பியர், மருதத்தைப் போலவே அறுவகைப் பெரும்பொழுதுகளையும் நெய்தலுக்கு உரிமையாக்கிச்,  சிறுபொழுதுகளில்  ‘எற்பாடு’என்பதையும் உரிமையாக்கினார்.

    ‘நடுவுநிலை’த் திணையும் முதற்பொருள் அமைதியும்

    பாலையை ‘நடுவுநிலைத் திணை’ என்பார் தொல்காப்பியர். நடுவுநிலைத் திணை என்றால் ‘ஏனைய திணைகளுக்கு நடுவே இருக்கும் திணை’என்பது பொருளன்று. ஏனைய திணைகளின் நிலங்கள் திரிந்த நிலையையே தனக்கு நிலமாகப் பயன்படுத்திக் கொள்வதாலும், ஏனைய நால்வகை ஒழுக்கங்களுக்கிடையே தனக்குரிய பிரிவை நிகழ்த்திக் கொள்வதுமாகிய சிறப்பு நிலையே ‘நடுவுநிலை’எனப்படும். எதனையும் சாராது இருப்பது பற்றற்ற நிலை. எல்லாவற்றோடும் சார்ந்திருப்பதே நடுவு நிலை. எனவே தான் தொல்காப்பியம் ‘நடுத்திணை’என்னாது ‘நடுவுநிலைத் திணை’எனச் சுட்டுகிறது. நான்கு திணைகளோடும் பிரிவால் உறவு பாராட்டுவது பாலைத் திணையாதலின் அது நடுவுநிலைத் திணையே. நிலமாகிய முதற்பொருள் இல்லையாயினும் பாலைக்கென பிரிவாகிய உரிப்பொருள் உண்டு. அப்பிரிவொழுக்கம் நிகழ வேண்டுமாயின் பொழுது கூறியே ஆதல் வேண்டும். எனவேதான் தொல்காப்பியம்,

    “நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலோடு
    முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”8

    “பின்பனி தானும் உரித்தென மொழிப”9

    என்னும் நூற்பாக்களினால் பெரும்பொழுதுகளில் இளவேனில், முதுவேனில் ஆகிய இருவகை வேனிற்காலத்தையும், பின்பனிக் காலத்தையும், சிறுபொழுதுகளில் நண்பகலையும் அதற்கு உரிமையாக்குகிறது. பாலையொழுக்கம் ஏனைய நான்கு திணைகளுள் நிகழ்ந்தாலும், அவ்வொழுக்கம் பாடுபொருளாகிற பொழுது, பாலையின் பின்புலத்தையே கொண்டிருக்க வேண்டும் என்பதே இந்நூற்பாவின் சாரமாகும். குறிஞ்சியில் நிகழும் பாலையொழுக்கத்தைக் குறிஞ்சிப் பின்புலம் கொண்டு அமைத்தல் கூடாது என்பது கருத்து.

    இருபொழுதும் மயங்கினால் தான் திணையா?

    திணைகளுக்குரிய பொழுதுகளை வரையறுக்கும் பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய இரண்டனையும் இணைத்தே தொல்காப்பியம் கூறுவதைக் காணலாம். ‘காரும் மாலையும் முல்லைக்குரிய’என்பது போலத் திணை பற்றிய புலனெறி வழக்கத்தில் இவ்விருபொழுதுகளும் இவ்வாறு இணைந்துதான் கூறப்பட வேண்டுமா? என்னும் ஐயம் நிகழ்கிறது. ஏதேனும் ஒருபொழுது மட்டும் இருந்தால் வழுவாய் விடுமோ? என்னும் ஐயத்தைத் தொல்காப்பியம் பின்வரும் நூற்பாவினால் அகற்றுகிறது.

    “இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்
    உரிய தாகும் என்மனார் புலவர்”10

    என்பது தொல்காப்பியம். இதில், ‘இருவகைப் பொழுதும் தோன்றலும் உரியதாகும்’என்பதனால் ‘தோன்றாமையும் உண்டு’என்பது பெறப்படும். ‘தோன்றலும்’என்பதில் உம்மை எதிர்மறைப் பொருளதாகும்.

    அகத்திணை மயக்கம்

    குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட ஒழுக்கந்தான் நிகழும் என்பது நடைமுறையாகாது. குறிஞ்சியில் புணர்தல் மட்டுமே நிகழும் என்பது பொருத்தமாகாது., நெய்தலில் இரங்கலைத் தவிர ஏனைய ஒழுக்கங்கங்கள் நிகழாது என்பது கற்பனை. எல்லா ஒழுக்கங்களும் எல்லா நிலத்திலும் நிகழும். அதாவது ஒருநிலத்துக்கென்று ஓதப்பட்ட ஒழுக்கம் மற்றொரு நிலத்திலும் நிகழ வாய்ப்புண்டு. இதனைத் தான் ‘மயக்கம்’என்னும் சொல்லால் பொருளதிகாரம் குறிக்கிறது. சொல்லதிகாரத்தில் சுட்டப்படும் வேற்றுமை மயக்கம் போன்றது இது. தொல்காப்பியம்,

    “திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
    நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப
    புலன்நன்கு உணர்ந்த புலமை யோரே”11

    என்னும் நூற்பாவில் இது பற்றி ஆராய்கிறது. ஒருநிலத்துக்குரிய ஒழுக்கம் மற்றொரு நிலத்தில் மயங்குவது உண்டு., அவ்வாறு மயங்குதல் கூடாது என்னும் வரையறை இல்லை., ஆனால் ஒருநிலம் இன்னொரு நிலத்தில் மயங்குதல் கூடாது. ‘ஒருநிலத்திற்குரிய மாந்தர் மற்றொரு நிலத்துக்குச் செல்லுங்கால், தத்தமக்குரிய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் ஒழுக்கமாகிய திணை மயங்கலாம் எனவும், ஒருநிலம் அசைந்து மற்றொரு நிலத்துக்குள் செல்லாதாதலால் நிலம் மயக்கம் ஏற்படையது அன்று’எனவும் தொல்காப்பியம் கூறியிருப்பது நுண்ணிய சிந்தனையாகும். நிலம், பொழுது, அவற்றின் மயக்கம் என்னும் முதற்பொருள் பற்றிய கருத்துக்களை அகத்திணையியலில் பதினெட்டு நூற்பாக்களில் விரித்துரைத்த தொல்காப்பியம்,’ முதலெனப் படுவது ஆயிரு வகைத்தே’என மீண்டும் எடுத்துரைத்து முதற்பொருள் ‘நிலம், பொழுது என இரண்டே’என வரையறுப்பதையும் ஈண்டுச் சுட்டலாம்.

    ஐந்திணைகளும் கருப்பொருள்களும்

    முதல், கரு, உரி என்பதே முறையாயினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இந்த நெறி பின்பற்றப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதல், உரி, கரு என்றே அது இலக்கணம் கூறிச் செல்கிறது. அந்த வகையில் கருப்பொருள் என்பது ஒருதிணைக்குரிய தெய்வம், திணைமக்களுக்குரிய உணவு, அந்நிலத்தில் திரியும் விலங்கு, அந்நிலத்தில் விளையும் மரம், பறக்கின்ற பறவை, மக்களுடைய தொழில், அந்நில மக்கள் அடிக்கின்ற பறை, இசைக்கின்ற யாழ் இவற்றின் விரிவு ஆகியவற்றைக் குறிக்கும் என விளக்குகிறது.

    “தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
    செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
    அவ்வகை பிறவும் கருவென மொழிப”12

    என்பது கருப்பொருள் பற்றிய தொல்காப்பிய நூற்பாவாகும். இந்த நூற்பாவில் ‘பிற’என்னும் பயன்பாட்டால், ஒருநிலத்துக்குரிய பூவும், ஊரும், நீரும் கருப்பொருளாகத் தழுவிக் கொள்ளப்படும். கருப்பொருள்களில் ஒன்றாகிய தெய்வத்தோடு சேர்த்தே தொல்காப்பியம் முதற்பொருளாகிய நிலத்தை அறிமுகம் செய்கிறது என்பதும் பொதுவாக இன்னின்னவை கருப்பொருள் என்றுதான் இந்நூற்பா உரைக்கிறதேயன்றி, இந்த நிலத்துக்கு இன்னவை கருப்பொருள் என விதந்தோதவில்லை என்பதும் அவை சான்றோர் நெறியும் மரபும் பற்றிக் கொள்ளப்படும் என்பதும் ஈண்டுச் சுட்டப்படுகின்றன.

    திணைகளும் கருப்பொருள்களும்

    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுக்கப்பட்ட நிலங்களும் அவற்றிற்குரிய கருப்பொருள்களும் சான்றோர் நெறி பற்றிப் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.

    குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              சேயோன் (முருகன்)
    உயர்ந்தோர்                       –              சிலம்பன்
    தாழ்ந்தோர்                   –              குறவன்
    பூ                                            –              குறிஞ்சிப்பூ
    மரம்                                     –              வேங்கை
    பறவை                                               –              மயில்
    விலங்கு                             –              புலி, யானை
    உணவு                                –              மூங்கில் அரிசி
    பறை                                    –              தொண்டகப் பறை
    யாழ்                                     –              குறிஞ்சி யாழ்
    பண்                                      –              குறிஞ்சிப் பண்
    ஊர்                                  –              சிறுகுடி
    நீர்                                   –              அருவிநீர், சுனைநீர்
    தொழில்                             –              வேட்டையாடுதல்

    முல்லைத் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                     –              மாயோன் (திருமால்)
    உயர்ந்தோர்                       –              நாடன்
    தாழ்ந்தோர்                   –              இடையர்
    பூ                                            –              முல்லைப்பூ
    மரம்                                     –              பிடவம்
    பறவை                                               –              காட்டுக்கோழி
    விலங்கு                             –              முயல்
    உணவு                                 –              சாமை
    பறை                                    –              ஏறுகோட்பறை
    யாழ்                                     –              முல்லை யாழ்
    பண்                                      –              முல்லைப் பண்
    ஊர்                                        –              பாடி
    நீர்                                   –              காட்டாறு
    தொழில்                             –              ஆனிரை மேய்த்தல்

    மருதத் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              வேந்தன்
    உயர்ந்தோர்                       –              ஊரன்
    தாழ்ந்தோர்                   –              உழவன்
    பூ                                    –              தாமரைப்பூ
    மரம்                                     –              மருதமரம்
    பறவை                                               –              அன்னம்
    விலங்கு                             –              எருமை
    உணவு                                –              செந்நெல்
    பறை                                    –              மணமுழவு
    யாழ்                                     –              மருத யாழ்
    பண்                                      –              மருதப் பண்
    ஊர்                                        –              ஊர்
    நீர்                                          –              ஆற்றுநீர்
    தொழில்                             –              விதைத்தல்

    நெய்தல் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              வருணன்
    உயர்ந்தோர்                       –              புலம்பன்
    தாழ்ந்தோர்                        –              பரதவர்
    பூ                                    –              தாழம்பூ
    மரம்                                     –              விளரியாழ்
    பறவை                                               –              அன்றில்
    விலங்கு                             –              பகடு, சுறா
    உணவு                                –              மீன்
    பறை                                    –              மீன்கோட்பறை
    யாழ்                                     –              நெய்தல் யாழ்
    பண்                                      –              நெய்தற் பண்
    ஊர்                                        –              பாக்கம்
    நீர்                                   –              கடல்நீர்
    தொழில்                             –              உப்பு விளைத்தல்

    பாலைத் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              கொற்றவை
    உயர்ந்தோர்                       –              விடலை
    தாழ்ந்தோர்                        –              எயினர்
    பூ                                            –              குராஅம்பூ
    மரம்                                     –              ஓமை
    பறவை                                               –              கழுகு, பருந்து
    விலங்கு                             –              வலியிழந்த யானை
    உணவு                                –              கொள்ளையடிப்பன
    பறை                                    –              சூறைகோட்பறை
    யாழ்                                     –              பாலை யாழ்
    பண்                                      –              பாலைப் பண்
    ஊர்                                        –              பறந்தலை
    நீர்                                   –              அறுநீர்க் கூவல்
    தொழில்                             –              கொள்ளையடிப்பன

    முடிவுரை

    மேற்கண்ட கட்டுரைப் பகுதியில் இதுகாறும் சுட்டப்பட்டிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில், தொல்காப்பியத்தின் முதற்பொருள் பாகுபாடு அறிவியலுக்கு இசைந்ததே என்பதும், ஒருதிணைக்குரிய நிலமும் அந்நிலத்திற்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் முதற்பொருள் என்பதும், பாலைக்கெனத் தனித்த நிலத்தைத் தொல்காப்பியம் சுட்டவில்லை என்பதும் ஆனால் பாலைத்திணையாகிய ஒழுக்கத்திற்குரிய இருவகைப் பொழுதுகளையும் தொல்காப்பியம் சுட்டத் தவறவில்லை என்பதும் புலனெறி வழக்கத்தில் இருவகைப் பொழுதுகளுள் ஒன்றிருந்தாலும் இழுக்கில்லை என்பதும், திணையாகிய ஒழுக்கம் மயங்கலாம் என்பதும், எந்நிலையிலும் நிலங்கள் இரண்டு தம்முள் மயங்கல் கூடா என்பதும், கருப்பொருளாகிய தெய்வத்தை முன்னிறுத்தியே முதற்பொருளாகிய நிலத்தைத் தொல்காப்பியம் அறிமுகம் செய்கிறது என்பதும் பொதுவாகக் கருப்பொருள்களைச் சுட்டிச்செல்கிறதேயன்றிக் குறிப்பிட்டு இன்ன திணைக்கு இன்னின்னவை கருப்பொருள் எனக் கூறவில்லை என்பதும் கருப்பொருள்கள் மரபுவழியாகவே கூறப்பட்டு வருகின்றன என்பதும் ஓரளவு விளக்கப்பட்டன.

    சான்றெண் விளக்கம்

    1. தொல்காப்பியர் தொல்காப்பியம் (பொருள்)   நூற்பா எண். 4
    2. மேலது                                                நூற்பா எண். 5
    3. மேலது நூற்பா எண். 6
    4. மேலது நூற்பா எண். 7
    5. மேலது நூற்பா எண். 8
    6. மேலது நூற்பா எண். 9
    7. மேலது நூற்பா எண். 10
    8. மேலது நூற்பா எண். 11
    9. மேலது நூற்பா எண். 12
    10. மேலது நூற்பா எண். 13
    11. மேலது நூற்பா எண். 14
    12. மேலது நூற்பா எண். 20

    துணை நூற்பட்டியல்

    தொல்காப்பியர், தொல்காப்பியம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும் என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. பொருளுணர் அச்சம் பொறுமையின்மை முதலியன காரணமாக  இன்றைக்கும் பெறவேண்டிய கவனத்தைப் பெறாமல் இருக்கும் நமது தமிழின் தலைச்செல்வம் தொல்காப்பியத்தை மீளாய்வு செய்து அறிமுகக் கட்டுரை செய்திருக்கும் கட்டுரையாளருக்குப் பாராட்டு!
    1. கட்டுரையின் உள்ளடக்கத்தை முன்னுரையில் அளவாகவும் செறிவாகவும் கூறியிருப்பது ஆய்வாளரின் கட்டுரை வன்மையைக் காட்டுகிறது. .
    1. அகத்திணை உள்ளடக்கத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்திருக்கும் ஆய்வாளர். இத்தனைச் சிறப்புக்களும் கொண்ட இந்த அகத்திணையியல், தலைவியின் கூற்றுப்பகுதியைக் கூறாதது சிந்தனைக்குரியது.’ என துணிந்து கூறுவது அவர்தம் ஆய்வில் அவர் கொண்டிருக்கும் உறுதியையும் நம்பிக்கையையும்  பறைசாற்றுகிறது.
    1. “முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த‘அமைப்பு’(Settings) என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.” என்னும் கருத்தியல் தொல்காப்பியத்தை இலக்கியத்திற்கான இலக்கண நூல் என்பதை உரக்கச் சொல்கிறது.
    1. நிலம் பொழுதாகிய இரண்டின் பகுப்பிலும் அறிவியல் உணர்வு மேலோங்கி நிற்கிறது என்பதை ஆய்வாளர் தகுந்த சான்றுகளுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் தந்திருப்பது போற்றுதற்குரிய்து.
    1. பாலையை நடுவுநிலைத் திணை என்பதற்கான காரணத்தை விளக்க வந்த கட்டுரையாளர் எதனையும் சாராது இருப்பது பற்றற்ற நிலை. எல்லாவற்றோடும் சார்ந்திருப்பதே நடுவு நிலை. என வரையறை செய்து எல்லாத் திணைகளிலும் தனது பிரிவொழுக்கத்தை நிகழ்த்திக் ;கொள்ளும் பேராற்றல் வாய்ந்த திணை பாலைத்திணை என்பதை அழகுற விளக்கியிருக்கிறார்.
    1. ‘குறிஞ்சியில் நிகழும் பாலையொழுக்கத்தைக் குறிஞ்சிப் பின்புலம் கொண்டு அமைத்தல் கூடாது’ என்றும் பாலைநிலப் பின்புலத்தைக் கொண்டே அமைக்க வேண்டும் என்றும் கட்டுரையாளர் எச்சரிப்பது தொல்காப்பியத்தைச் சரியான தளத்தில் வைத்துப் புரிந்து கொண்டிருக்கும் அவர்தம் புலமைச் சதுரப்பாட்டை உணர்த்துகிறது.
    1. இருபொழுதும் அமைந்தால்தான் திணையா? ஒரு பொழுது மட்டும் சுட்டினால் திணையாகாதா? என்னும் சிந்தனையை முன்னெடுக்கும் ஆய்வாளர்  “இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும் உரிய தாகும் என்மனார் புலவர்”10 என்னும் நூற்பாவில் அமைந்த உம்மையை எதிர்மறை உம்மையாக் கொள்ளும் நச்சினார்க்கினியர் கருத்தினை வழிமொழிந்து தனது கருத்துக்கு வலிமையூட்டுவது பொருத்தமான ஆய்வு நெறியே!
    1. முதற்பொருள் கருப்பொருள் பட்டியலைத் தந்திருக்கும் கட்டுரையாளர், முன்னுரை மற்றும் முடிவுரை ஆகியவற்றை மாட்டேற்றாக அமைத்து ஒரு சிறிய அரிய ஆய்வுக் கட்டுரையையும் செம்மையாக வடிவமைக்க இயலும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.


     

    Share
  • (Peer Reviewed) தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

    (Peer Reviewed) தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

    முன்னுரை

    கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என இலக்கிய வடிவங்கள் பல. இவற்றுள் கவிதைக்குரிய வடிவங்கள் பா, இனம் எனப் பல்கிப் பெருகும். பாக்களுள் வெண்பா தலையாயது.  எழுவகை வெண்பாக்களில் குறள் வெண்பா என்பதும் ஒன்று.  தமிழ்க்கவிதை வடிவங்களில் மிகக் குறுகிய வடிவம் இதுதான். ‘குறுகத்தரித்த குறள்’ என்பது ஆன்றோர் வாக்கு. குறள் என்பது யாப்புக்கான குறியீடு. அது திருக்குறளைக் குறிக்கிறபோது அடையடுத்த ஆகுபெயராய் நிற்கும். நுட்பமாக நோக்கினால் ‘குறள்’ என்னும் யாப்பே அடைபெற்று அழைக்கப்படுவது தெரியவரும். அதாவது ‘குறள்’ என்பது கருவியாகுபெயராய் நூலை உணர்த்திப் பின் அடைபுணர்த்து அழைக்கப்படுகிறது என்பதாம். திருக்குறளில் திருவள்ளுவர் தமது கருத்துக்களைக் குறள் வெண்பாவில் பதிவு செய்திருந்தாலும் அத்தனைக் குறட்பாக்களையும் ஒரே நெறியில் பதிவு செய்யவில்லை. தமது மெய்யறிவால் உணர்ந்த சிந்தனைகளைப் பல உத்திகளைக் கையாண்டு பதிவு செய்திருப்பதை  அறிய முடிகிறது. ‘தமிழ்க்கவிதைகளின் வெளிப்பாட்டு உத்திகள்’ என்னும் பேராய்வுக் களத்தில் ஒரு துளியாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    கட்டுரையின் கருதுகோள்

    ‘திருக்குறளில் வெளிப்பாட்டு உத்திகள்” என்பதையே இக்கட்டுரை தனக்குரிய கருதுகோளாகக் கொண்டு அமைகிறது.

    ஆய்வுக்களம் – எல்லை – நோக்கம் – பயன்

    முப்பால்களாக இயங்கும் திருக்குறளில் மூன்றாவது பகுப்பாகிய காமத்துப்பால் புலனெறிவழக்கப் புனைவாகத் தலைமக்கள் கூற்றுப் பகுதியென அமைந்துவிடுகிறது. ஆதலின் காமத்துப்பாலில் திருவள்ளுவர் நேரடிக் கூற்றாக எதனையும் பெற முடியாத நிலையில் ஏனைய அறம், பொருள் என்னும் இருபாலில் அமைந்துள்ள ஆயிரத்து எண்பது குறட்பாக்களே (1080) ஆய்வுக்களமாகவும் எல்லையாகவும் கொள்ளப்படுகிறது.

    வாழ்வியல் நெறிகளைப் பதிவு செய்ய திருவள்ளுவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட குறுகிய வடிவமான குறள் வெண்பாவில் அவர் கையாண்ட உத்திகளை ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.

    திருக்குறளில் அமைந்துள்ள வெளிப்பாட்டு உத்திகளை ஆராய்ந்து வடிவமைக்கப்படும் இக்கட்டுரையால் தமிழியல் ஆய்வுக்களப் பொருண்மை   விரிவும் ஆழமும் உடையதாகும் என்பதையும் இலக்கியச் சுவைஞர்கள் உத்திகளின் நோக்கத்தையும் திருவள்ளுவரின் படைப்பாளுமையையும் அவர்தம் பண்பாட்டுக் கூறுகளையும் ஒருசேர உணர்ந்து கொள்ள இயலும் என்பதையும் பயனாகக் கருதுகிறது.

    ஆய்வு அணுகுமுறையும் நெறிமுறையும்

    திருக்குறளில் விரவிக்கிடக்கும் பல்வகை வெளிப்பாட்டு உத்திகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்துவதற்கேற்ற வகையில் ‘அமைப்பியல்’ அணுகுமுறையும், திருக்குறளுக்குப் பிந்தைய பல்வகை இலக்கிய உத்திகளின் பயன்பாடு ஒப்பிட்டுக் காட்டப்படுதலின் ‘ஒப்பீட்டு முறைத் திறனாய்வு’ நெறியும் இக்கட்டுரையில் பின்பற்றப்பட்டுள்ளன.

    இலக்கியத்தில் உத்திகள்

    ஒரே பொருளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் வெளிப்படுத்தும் நெறிக்கு ‘உத்தி’ என்று பெயர். “இதனை வேற மாதிரிச் செய்யலாமா?” என்று கணித ஆசிரியர் கேட்பதைப் போன்றது இது. கணிதம் எல்லாருக்கும் இனிக்காது. இலக்கியம் பெரும்பாலும் இனிக்கும். இதனை எளிமையாக விளக்கலாம். தலைமக்கள் இருவருக்குமிடையில் காதல் வளர்கிறது. வளர்கின்ற காதல் ஊராருக்குத் தெரியவரும். இது உலகியல். இது இலைமறை காயாகத் தெரியும் போது அதனை ‘அம்பல்’ என்று இலக்கியங்கள் கூறும். ‘இன்னாருக்கு இன்னாரோடு தொடர்பு’ எனத் தெளிவாகத் தெரிகிறபோது அது அலர் என அடையாளப்படுத்தப்படும். இதனை ‘அலர் அறிவுறுத்தல்’ என அகத்துறையிலக்கணம் கூறும். தற்காலத் திரையிசைப்பாடலில் அலருக்கு ஆளான நான்கு உள்ளங்களை வெளிப்படுத்தும் பாடலுக்கான காட்சியைச் சித்திரிக்கும் இரண்டு பதிவுகளை இங்கே காணலாம்.

    “கண்ணா! ஜோடிக்குயில் மாலையிடுமா? இல்லை ஓடிவிடுமா? 1

    என்று தலைமகள் ஐயப்படுகிறாள்.

    ‘கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா? கங்கை வற்றி விடுமா?” 2

    என்று தலைமகன் ஆறுதல் கூறுகிறான். தன் அவசரத்திற்கான காரணத்தைத் தலைமகள் அங்கே பதற்றத்துடன் பதிவிடுகிறாள் இப்படி!

    “உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில்
    என்னென்னமோ பேச்சிருக்குது” 3

    இந்தப் பதற்றம் ஊராரின் அலர் தன்னைத் துரத்த தன்னை விரைந்து மணமுடித்துக் கொள்ள வேண்டும் எனத் தலைமகனை வற்புறுத்துவதாக அமைகிறது. “உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது!” 4 என்னும் தொடரே அலரைக் குறிப்பது. இதே அலர்தூற்றலை மற்றொரு பாடல் வேறு மாதிரியாகப் பதிவு செய்திருக்கிறது.

    “பழச  மறக்கலையே,
    பாவி மவ நெஞ்சு துடிக்குது!
    ஒன்னையும் என்னையும் வச்சு
    ஊரு சனம் கும்மியடிக்குது” 5

    “உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது’ என்னும் வெளிப்பாடு ஓர் உத்தி. ‘ஊரு சனம் கும்மியடிக்குது’ என்பது மற்றோர் உத்தி. பொருள் ஒன்றுதான். தொல்காப்பியம் தொடங்கி இன்றைய திரையிலக்கியம் வரை அலருக்கு அஞ்சுபவள் பெண்ணாகவே சித்திரிக்கப்படுகிறாள் என்பதும் நோக்கத்தக்கது. எளிய புரிதலுக்காகவே இந்தத் திரையிசைப்பாடல் எடுத்துக்காட்டாகக் கொள்ளப்பட்டது. (இத்தகைய திரைப்பதிவுகள் முழுமையான இலக்கியத் தகுதியினைப் பெறுவதற்கு உரியனவே என்பது கட்டுரையாளர் கருத்து)

    பழந்தமிழ் இலக்கியப் பொருண்மைகளும் உத்திகளும்

    குறட்பாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உத்திகள் பற்றிய ஆய்வே இதுவாயினும் கட்டுரைப்பொருள் விளக்கம் கருதி ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் இந்தப் பத்தியில் தரப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கியத்தின் பாடுபொருள் பற்றிய கொள்கை ‘அகம் புறம்’ என வரையறுக்கப்பட்டது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுவகைத் திணைகளாகவும் பகுக்கப்பட்டன. அதாவது அகம் என்பது பொருட்பாகுபாடு. முல்லை, குறிஞ்சி முதலியன திணைப்பாகுபாடு. புறம் என்பது பொருட்பாகுபாடு. ‘வெட்சி கரந்தை’ முதலியன திணைப்பாகுபாடு. ஒவ்வொரு பொருட்பகுதியின் உட்பிரிவுகளான திணையும் துறைகளுமே ‘பாடுதுறை’களாயின. இவற்றை மீறி எந்தப் பாடலையும் யாரும் பாடிவிட இயலாது. முடியாது. கூடாது. அகத்திணை முழுமையும் தலைமக்கள் கூற்றுப்பகுதிகளே! அதாவது தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், கண்டோர் முதலியோரின் கூற்றுப் பகுதிகளே கவிதைக் களங்களாகும். எந்தப் புலவனும் காதலைப் பற்றிய தனது கருத்தினை நேரடியாகப் பதிவு செய்ததாகக் குறிப்பில்லை. காதலைப் பற்றிய எந்தக் கருத்தும் அதனை வெளிப்படுத்திய பாத்திரங்களின் கருத்தாகவே நோக்கப்படும். இந்தப் புலனெறி வழக்கம் திருக்குறள் காமத்துப்பாலிலும் தொடர்ந்தது. வரையறைக்குட்பட்ட இந்தக் குறுகிய பொருட் பகுதிகளுக்குள்ளேயே இத்தனை இலக்கியங்கள் என்றால் அவற்றைக் ‘கூறியது கூறல்’ என ஒதுக்க இயலுமா? இயலாது. காரணம் ஒரு துறையைப் பற்றிப் புலவர் பலர் பாடியிருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை உத்தியினால் சிறந்து நிற்கிறது. ‘ஐங்குறுநூறு’ முதலிய இலக்கியங்களில் ஒரு துறைக்குப் பத்துப்பாடல்கள் எனப் பாடப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு பாடலும் தனித்தன்மையுடையன. புறத்திணைத்துறைகளும் அத்தகையனவே மருதன் இளநாகனார் பாடிய கையறுநிலையும் மாங்குடி  மருதனார் பாடிய கையறுநிலையும் ஒன்றாகாது. உத்திகளால் சிறந்திருந்தாலேயொழிய இத்தகைய இலக்கியங்கள் இவ்வளவு காலம் நிலைபெற்றிருக்க இயலாது. ‘அரைத்த மாவையே அரைத்திருந்தாலும்’ பலகாரச் செய்முறை மாறுபட்டிருப்பதால் சுவை வேறுபடுவதைப் போல இந்தக் கவிதைகளின் உத்திகள் மாறுபட்டிருப்பதால் காலத்தை வென்று நிற்கின்றன எனலாம்.

    மறையோன் புகழும் கோவலன்

    காப்பியத்தின் பாத்திரங்கள் படைப்பாளனால் உருவாக்கப்படுகின்றன. கவிதைச் சுவையும் கதைப்போக்கும் பின்னிப் பிணைந்த நிலையில் தேவையற்ற பதிவுகளைத் தவிர்த்துவிடுவது படைப்பாளனுடைய உரிமை. அந்த வகையில் குற்றமற்ற கோவலன் பாண்டியனால் கொலைக்கு ஆளாகத் தன் கணவன் குற்றமற்றவன் என்பதை உறுதி செய்யும் பொறுப்பில் கண்ணகி. இந்தக் கதையில் கோவலன் துன்பத்திற்கு என்ன காரணம் என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாது. காப்பியத்தைப் பொருத்தவரையில் அவன் காரணமின்றிக் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் சென்றுவிட்டான் என்பதைத் தவிர கொலைபடும் அளவுக்கு அவன் செய்த குற்றம் ஏதுமில்லை. தன்னைவிட்டுப் பிரிந்து இல்லறத்தில் சிக்கல் ஏற்படுத்திய கோவலனுக்காகப் பரிந்து மதுரையைக் கண்ணகி தீக்கிரையாக்குகிறாள் என்றால் அவனுடைய பிற செயல்கள் அவளைக் கவர்ந்திருக்க வேண்டும். சமுதாயத்தில் அங்கீகரிக்கப்படாத ஒருவனுக்காக ஒரு பத்தினிப்பெண் வேற்று நாட்டு அரசவையில் நீதி கேட்டு நிற்கிறாள் என்றால் அன்றைய சமுதாயம் கோவலனை நன்கு அறிந்திருக்க வேண்டும். குறைந்த அளவு புகாரில் அவனுடைய பெருமைகள் உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும். கோவலன், கண்ணகி மறைவு புகாரின் பேரவலத்திற்குக் காரணமானது என்பதை அறியமுடிகிறது. ஆனால் இந்தப் பெருமைக்கான செயல்களைக் காப்பியத்தில் எந்த இடத்திலும் பதிவு செய்ய இயலாது. செய்திருந்தால் காப்பியச் சுவை குன்றிவிடக் கூடும் என அடிகள் கருதியிருக்கலாம். அவன் மாதவியோடு வாழ்ந்த பதினாறு ஆண்டு காலத்தில் புகாரில் அவன் செய்த புகழுக்குரிய செயல்களை இளங்கோவடிகள் பதிவு செய்ய விரும்புகிறார். அடுத்த காதைகளில் கொலைபடும் கோவலன் மீது கற்பாருக்கு அனுதாபம் ஏற்பட வேண்டும் என அவர் உள்ளம் விரும்புகிறது. தக்கதொரு இடத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவருக்கு மாடலமறையோன்  கிடைத்துவிடுகிறான். மதுரை நோக்கிச் செல்லும் கோவலனையும் கண்ணகியையும் நோக்கி அவன் கோவலன் செய்த அறச்செயல்களையெல்லாம் பட்டியலிடுகிறான். மணிமேகலை பிறந்தநாள் விழாவில் அந்தணனைப் புடைத்தழிக்க முயன்ற மதங்கொண்ட யானையின் மீதேறி அடக்கிய செய்தியைப்

    “பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
    கடக்களிறு அடக்கிய கருணை மறவ!” 6

    என்று கூறிப் பாராட்டுகிறான் மாடலமறையோன். கீரிப்பிள்ளையைக் கொன்று மனைவி செய்த பாவத்துக்காக அவளைப் பிரிந்த கணவனைக் கண்டு அவன் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைத்த வரலாற்றைத்,

    “தானம் செய்தவள் தன் துயர் நீக்கிக்
    கானம் போன கணவனைக் கூட்டி
    ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து
    நல்வழிப்படுத்த செல்லாச் செல்வ!”7

    என்னும் வரிகள் காட்டுகின்றன. வெளியூர் சென்று திரும்பி வந்த கணவனுக்கு அவன் மனைவி பற்றிய தவறான தகவலைத் தந்தவனைச் சதுக்கப்பூதம் அடித்துக் கொல்ல எத்தனிக்க, அவன் தாய் பதற, பொய்க்கரி புகன்ற அவனைக் காப்பாற்ற முயல்கிறான் கோவலன். மறுத்த பூதம் பொய்க்கரி கூறியவனைக் கொல்ல அவனுடைய தாயோடு சுற்றத்தாரையும் கோவலன் காப்பாற்றினான்.

    “பத்தினி ஒருத்தி படிற்றுரை எய்த
    மற்றவள் கணவற்கு அறியோன் ஒருவன்
    அறியாக் கரிபொய்த்து அறைந்துணும் பூதத்து
    கறைகெழு பாசத்துக் கையகப்படலும்
    பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு
    கட்டிய பாசத்துக் கடிது சென்றெய்தி
    என்னுயிர் கொண்டு ஈங்கு இவனுயிர் தாவென
    நன்னெடும் பூதம் நல்கா தாகி
    நரகனுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
    பரகதி இழக்கும் பண்பு ஈங்கில்லை
    ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப
    அழிதரும் உள்ளத்து அவளொடும் போந்து அவள்
    சுற்றத்தோர்க்கும் தொடர்புறும் கிளைஞர்க்கும்
    பற்றிய கிளைஞரின் பசிப்பிணியறுத்துப்
    பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” 8

    மறையோனின் இந்தப் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாளே தவிர மறுமொழி சொன்னாள் அல்லள். மகிழ்ந்தாளும் அல்லள். வருந்தினாளும் அல்லள். ‘இத்தகைய நல்லவனா கோவலன்?” என்னும் நல்லெண்ணத்தைக் கற்பார் மனத்தில் வரவழைப்பதற்காக அடிகள் செய்திருக்கும் காப்பிய உத்தி இது.

    இராமனைக் காப்பாற்றும் கம்பன் உத்தி

    பரம்பொருளாகிய பெருமாளை மனிதனாக்கிக் காப்பியம் படைத்த கம்பன் சில நேர்வுகளில் பிழைசெய் இராமனைக் காப்பாற்றும் நிலைக்கும் வரவேண்டியிருப்பதையும் காண முடிகிறது. வேறு வகையாகச் சொன்னால் தான் படைத்த பாத்திரத்தின்வழித் தானே செல்ல வேண்டிய நிலை வருகிறபோது சற்று நிதானிக்க வேண்டியிருக்கிறது என்பதாம். சுக்ரீவன் வாலியிடையே நடந்த போருக்கும் இராமனுக்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை. வாலிக்கும் இராமனுக்கும் நேரடிப் பகையென்பதே இல்லை. தன்னைக் கொல்ல இராமன் வந்திருக்கிறான் என்று தன் மனைவி தாரை கூறியபோது அந்த நொடிவரை,

    “உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது
    அழைத்து அயல் உலகினுக்கு அறத்தின் ஆறெலாம்
    இழைத்தவர்க்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய்?
    பிழைத்தனை பாவி! நின் பெண்மையால் என்றான்” 9

    என்று நம்பி, மனைவியைக் கண்டித்தவன் வாலி. இராமன் மீது அவன் கொண்டிருந்த அளவற்ற பக்தியும் நம்பிக்கையும் இந்தப் பாடலில் வெளிப்படுவதைக் காணலாம். இராமன் வாலியை மறைந்திருந்து கொன்ற செயல் அந்த நம்பிக்கைக்குக் கேடாக முடிந்துவிடுகிறது. இராமனுடைய அம்பினால் வீழ்த்தப்பட்டுக் கிடந்த வாலி இராமனை ஏசுகிறான். இருவருக்குமிடையே நடந்த உரையாடல் முடிவில் வாலி “தன்னை மறைந்திருந்து கொல்ல வேண்டிய அவசியம் என்ன?” என விடையிறுக்க இயலாத வினாவைக் கேட்கிறான். கம்பன் இங்கே தடுமாறுகிறான். இராமனைப் பேசவைப்பதா? பேசவைத்தால் என்ன விடை கூற வைப்பது? தன் கவியுரிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் கவியரசர், இராமனைப் பேச வைக்காது இலக்குவனைப் பேச வைக்கிறார். ஒரு பாட்டால் ஒரு பாத்திரத்தைக் காப்பாற்றி விட்டதாகக் கம்பன் எண்ணுகிறான்.

    “………. மாண்ட
    செவ்வியோய்! அனையது ஆக! செருக்களத்து உருத்து எய்யாதே
    வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால்
    எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான்”10

    ஒருவன் எழுத வேண்டிய தேர்வை வேறொருவன் எழுதினால் இன்றைய நிலையில் அது தண்டனைக்குரிய குற்றம். வகுப்பில் வினவப்பட்ட மாணவனைத் தவிர்த்து வேறொரு மாணவன் விடையிறுத்தால் இறுக்கப்படும் விடை சரியாகவே இருந்தாலும் ஆசிரியர் சினங்கொள்வாரேயன்றிச் சிரித்து ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆனால் இராமன் என்னும் தலைமகனின் பிம்பம் அல்லது பரிமாணம் சேதாரமடைந்து விடக்கூடாது என்பதற்காகக் கவிஞன் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி இராமனைக் காப்பாற்றுகிறான்.

    “முன்பு நின்தம்பி வந்து சரண்புக, “முறையிலோயைத்
    தென்புலத்து உய்ப்பென் என்று செப்பினன். செருவில் நீயும்
    அன்பினை உயரிருக்கு ஆகி “அடைக்கலம் யானும் என்றி
    என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்ததென்றான்”.11

    “கவிக்குலத்தரசும் அன்ன கட்டுரை கருத்திற்கொண்டான்” என்றெழுதும் கம்பன் இலக்குவன் சொன்னது இதயத்துச் சொற்களல்ல அவை ‘இட்டுக்கட்டியன’ என்பதைப் புரிந்து கொள்கிறான். இங்கே அறிந்து கொள்ள வேண்டியது காப்பியத் தலைமைப் பாத்திரத்தின் பெருமையைக் காப்பாற்றவே தம்பியை விடையிறுக்கும் உத்தியைக் கம்பன் கடைப்பிடித்திருக்கிறான் என்பதேயாகும்.

    மேற்கண்ட சான்றுகள் படைப்பாளன் தன் உள்ளக்கருத்தினைப் பதிவிடுவதற்குரிய வெளிப்பாட்டு முறையே உத்தி என்பதைக் காட்டுகின்றன. ‘கம்பன் கண்ட இலக்கிய உத்திகள்’ என்னும் தமது ஆய்வு நூலில் ஆராய்ச்சிப் பேரறிஞர் ச.வே.சுப்பிரமணியனார் இது பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார் என்பது தகவலுக்காக இங்கே பதிவு செய்யப்படுகிறது.

    ஆடூஉ முன்னிலை – மகடூஉ முன்னிலை

    கீழ்க்கணக்கில் அமைந்துள்ள நீதிநூல்கள் சிலவற்றில் சில பாடல்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் முறையில் ஒரு தனித்த நெறி பின்பற்றப்பட்டு வந்துள்ளது. புலவர் தனது கருத்தினை ஆசிரியர் கூற்றாக அமைக்காமல் ஆண்மகன் ஒருவனைப் பார்த்துக் கூறுவது போலவோ பெண்மகள் ஒருத்தியைப் பார்த்துக் கூறுவது போலவோ அமைக்கப்பட்டுள்ளது. முன்னதற்கு ‘ஆடூஉ முன்னிலை’ என்றும் பின்னதற்கு ‘மகடூஉ முன்னிலை’ என்றும் பெயர். இந்த நெறி திருக்குறளில் அறவே இல்லை. அங்கே அனைத்தும் ஆசிரியர் கூற்றே. வெளிப்பாட்டு உத்தியில் நிலவும் இந்த மாற்றம் சிந்திப்பதற்குரியது. இன்னொரு நுட்பமும் இந்நூல்களில் பதிவாகியிருக்கிறது. தலைமக்கள் கூற்றுப் பகுதியாகவே பதிவு செய்யப்பட்டு வந்த அகப்பொருள் செய்திகளையும் மகடூஉ முன்னிலையில் பதிவு செய்திருக்கும் புதுமை கீழ்க்கணக்கு நூல்களில் காணக்கிடக்கின்றது.

    அகப்பொருள் பதிவு

    திருக்குறள் கீழ்க்கணக்கு நூல்களில் வைத்து எண்ணப்படினும் ஏனைய பதினேழு நூல்களுக்கும் அதற்கும் நிலவும் வேறுபாடுகள் பல. பொருண்மையிலும் வெளிப்பாட்டு உத்தியிலும் கட்டமைப்பு உட்பட ஏனைய கூறுகளிலும் திருக்குறளின் தனித்தன்மையை மற்ற நூல்களால் பெற இயலவில்லை. இதனால் ஏனைய நூல்களைக் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணுதல் ஆகாது. அந்தந்த நூல்களின் தரமதிப்பீடு மற்றொரு நூலின் தர மதிப்பீட்டைப் பாதித்துவிடக் கூடாது என்பதே கருத்து. இந்த நூல்களில்தாம் அவ்விரு முன்னிலை உத்திகளும் கையளாப்பட்டுள்ளன.

    “முயங்காக்கால் பாயும் பசலை மற்று ஊடி
    உயங்காக்கால் உப்பின்றாம் காமம்! – வயங்கோதம்
    நில்லாத் திரையலைக்கும் நீள் கழித் தண்சேர்ப்ப!
    புல்லாப் புலப்பதோர் ஆறு” 12

    என்பது “தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகள் புலவி நீங்கச் சொல்லியது” என்னும் துறையின் கீழ் அமைந்துள்ள நாலடியார் பாடல். துறைப்பொருளை அல்லது பொருளாகிய கூற்றினைப் பாத்திரத்தை நோக்கித்தான் கூறவேண்டுமே தவிர பாத்திரத்தோடு தொடர்பில்லாத முன்னிலை போலக் கருதி விளித்துக் கூறுதல் கீழ்க்கணக்கு நூல்களில் காணும் புதுமையாகும். இதுமாதிரியான துறைகளுக்கு அமைந்த பாடல்கள் அகத்திணை மாந்தர்களை நோக்கியே அமைந்திருக்குமேயன்றி இவ்வாறு உருவாக்கிய முன்னிலையை நோக்கி அல்லது முன்னிலைக்குரிய நபரை நோக்கி அமைந்ததற்குச் சான்றுகள் இல்லை!. “தலைமகள் பிரிவாற்றாமையைத் தோழிக்குச் சொல்லியது” என்னும் துறையில்,

    “கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
    என் ஈன்ற தாயும் பிழைத்ததென்? – பொன்னீன்ற
    கோங்கரும்பு அன்ன முலையாய்!  பொருள்வயின்
    பாங்கனார் சென்ற நெறி” 13

    என்று அமைந்திருக்கிறது. இந்தப் பாடலில் தலைமகள் தோழியை நோக்கிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் தோழியை மகடூஉ முன்னிலையாக்கி உரைப்பது காண்க!

    “பிறங்கருவி நல் நாட!” 14

    “இலங்கருவி நல் நாட!” 15

    “விறல் மலை நல் நாட!” 16

    என வருதல் காண்க. “இருநோக்கு இவள் உண்கண் உள்ளது” 17 என்று தலைவியை நோக்கிப் படர்க்கையில் தனக்குத்தானே பேசிக்கொள்வானேயன்றித் தலைவியை முன்னிலைப்படுத்திக் கூறமாட்டான்.

    “யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
    தானோக்கி மெல்ல நகும்” 18

    எனத் தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். “நன்னீரை வாழி அனிச்சமே!”19 என்றும் “மலர்காணின் மையாத்தி நெஞ்சே!”20 “கருமணியிற் பாவாய் நீ!”21 எனப் பாத்திரமல்லாதவற்றை முன்னிலையாக்குவாரேயன்றிக் கீழ்க்கணக்கின் ஏனைய நூல்களைப் போல முன்னிலையை உருவாக்கிக் கூறுதல் குறளில் காண இயலாத நெறியாம். இதுகாறும் எடுத்துக்காட்டிய சான்றுகள் சிலவற்றால் படைப்பாளன் தான் கருதியது முடித்தற்குத் தானே உருவாக்கிக் கொள்ளும் இலக்கிய வெளிப்பாட்டு நெறிக்கே உத்தி என்பதும் இது இலக்கணத்திற்காகக் கூறப்படும் முப்பத்திரண்டு உத்திகளின் வேறானது என்பதும் பெறப்படும். அவை இலக்கண நூற்பாக்களைப் பற்றியன. இவை இலக்கியத்தின் கருத்து வெளிப்பாடு பற்றியன.

    திருக்குறளும் உத்தியும்

    தமது கருத்துக்களை மிகக் குறுகிய கவிதைக் கட்டுமானமான குறள் வெண்பா யாப்பில் எழுதுவது என்பது திருவள்ளுவர் எடுத்த முடிவு. அந்தக் குறள் வெண்பாவில் கருத்துக்களை ஒரே மாதிரியாக அவர் வெளிப்படுத்தவில்லை என்பதுதான் இக்கட்டுரை உணர்த்த விரும்பும் கருத்து. 1330 குறட்பாக்களும் செய்திகளே! ஒவ்வொரு தத்துவங்களே! ஒவ்வெரு அனுபவங்களே! ஆனால் இவற்றைப் பல முறைகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பல உத்திகளைக் கையாண்டிருக்கிறார். ஒரு கருத்தினை நிரல்படச் சொல்லுவார். ஒன்றினை வினா வடிவில் பதிவு செய்வார் வேறொன்றினை வியங்கோளால் அமைத்துக் காட்டுவார். சிலவற்றைத் தொழிற்பெயர்களால் கூட்டியுரைப்பார். வேறு சிலவற்றை முன்னிலை ஏவலால் ஆணையிடுவார். சிலவற்றைத் தன்மைப் பன்மையால் விளக்கிக் காட்டுவார். இன்னும் பல உத்திகளையும் கையாண்டு விளக்கியிருப்பார்.

    வெளிப்பாட்டில் வெளிப்படும் வினா

    கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்திகளில் திருவள்ளுவரைப் பெரிதும் கவர்ந்திருப்பது வினா உத்தியே!. அவ்வுத்தியில் அமைந்த குறட்பாக்களை நோக்கினால் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம். சமுதாயத்தின் மீதும் தனிமனிதன் மீதும் சலிப்பு வந்த நிலையில் அவருடைய இந்த வெளிப்பாடு அமைந்திருக்கக் கூடும். ‘என்னத்த படிச்சு என்னத்த செய்யறது?” என்னும் வழக்கு நோக்குக. “பணம் இருந்து என்னங்க செய்யறது?” என்னும் வழக்கையும் நோக்குக. இந்த வழக்கைத்தான் வள்ளுவர் உத்தியாகக் கடைப்பிடித்திருக்கிறார் எனக் கருதலாம்.

    • ஞானத்தின் வடிவமான இறைவனை வழிபடுவதே நூல்களைக் கற்பதன் பயன் என்னும் ஒரு கருத்தினைக் ‘கற்றதனால் ஆய பயன் என்?’ என வினவுவார்.22
    • அறிவின் மற்றொரு பயன் உயிர்கள் மீது அன்பு காட்டுவது. இதனை ‘அறிவினான் ஆகுவது உண்டோ’ என வினவி அதற்கான விடையினைத் தொடர்ந்து பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை’ என்று சுட்டுவார்.23
    • அந்த அன்பைக் கட்டுப்படுத்த இயலாது என்பதை ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? என வினவுவார்.24
    • எதிர்மறை விளைவு ஏற்படுகின்ற இடத்தில்தான் சினத்தை அடக்குதல் வேண்டும். இதனை ‘அல்லிடத்துக் காக்கின் என்? காவாக்கால் என்?’ எனச் சாடுவார்.25
    • கருவியால் ஆராய்ந்து காலத்தால் செய்தால் அருவினை இல்லை என்பதை ‘அருவினை என்ப உளவோ?’ என்பார். 26
    • பிறவி யொழித்தவனுக்கு உடம்பும் மிகை என்பதை ‘மற்றும் தொடர்ப்பாடு எவன் கொல்?’ என்பார். 27

    என்றெல்லாம் அறம் மற்றும் பொருள் பற்றிய கருத்துக்களை வினா உத்தியினால் வெளிப்படுத்திக் காட்டிய வள்ளுவ நாயனார் தலைமக்களின் கூற்றுப் பகுதியாகப் படைத்துக்காட்டிய காமத்துப்பாலிலும் அப்பாத்திரங்களுக்குள் நுழைந்து வினவுவதும் வியப்பாக இருக்கிறது.

    • “ஒன்று கலந்த நெஞ்சத்தாரோடு ஊடுதலே உண்மையான இன்பம்” என்னும் கருத்தினைத் தலைமகன் வாயிலாக “புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ?’ 28 என்று பதிவு செய்திருக்கிறார்.
    • ‘தன்னைப் பிரிந்து துன்புறும் தலைவியாகிய என்னை எண்ணுகிற தலைவனை நான் பெறாத போது நான் மட்டும் வருந்தி என்ன பயன்’ என்னும் தலைவியின் துயரத்தை “நோதல் எவன் மற்று?” 29 எனப் பதிவிடுகிறார்.
    • தலைவியின் துன்பம் அதுவானால் தனிமைத் துயரத்தில் தவிக்கும் தலைவன் கூற்றாகத் தலைவியை அன்றித் “துன்பத்திற்கு யாரே துணையாவார்?” 30 எனப் பதிவிடுகிறார்.
    • தன் தலைவன் வந்துவிடின் “புலப்பேன் கொல்? புல்லுவேன் கொல்லோ? கலப்பேன் கொல்?” 31 என்று தன் எதிர்கால விதும்பல்களை முன்கூட்டியே தனக்குத்தானே வினவும் தலைவியைக் காட்சிப்படுத்துகிறார்.

    இவ்வாறு தன் கருத்துக்களை வினா வடிவத்தில் பதிவு செய்திருக்கும் குறட்பாவின் தாக்கம் பின்வந்த கவிஞர் பெருமக்களை எவ்வாறு ஆட்கொண்டிருக்கிறது என்பதையும் சுருக்கமாகக் காணலாம்.

    வாழையடி வாழையென வந்த வினா உத்தி

    கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்குத் திருவள்ளுவரால் கையாளப்பட்ட இந்த வினாவுத்தி தொடர்ந்து தமிழ்க்கவிதைப் பரப்பில் பேரளவாக இடம் பெற்று வந்துள்ளமையை அறியலாம்.

    “கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்?
    கொங்கு தண் குமரித்துறை ஆடிலென்?
    ஓங்கு மாகடல் ஓதம் நீராடிலென்
    எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே” 32

    “புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டால் பொல்லாதோ?
    எத்தோ நின்அன்புடைமை எல்லோம் அறியோமோ?
    சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?”33

    என்றெல்லாம் வழிவழியாக இந்த வினாமரபு, “செருப்புக்குத் தோல்வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை?” 34 என்று பரதியார் வினவுகின்ற அளவும் தொடர்ந்தது. ‘சுதந்திரப் பெருமை’35 சுதந்திரப் பயிர்’36 என்னும் இரண்டு பாடல்களயும் முற்றவும் வினாவுத்தியினாலேயே பாரதியார் வடிவமைத்திருப்பது இங்குச் சுட்டத்தகுந்தது. “காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?” 37 என்பார் பாரதிதாசன். “இன்பந்  தருந் தமிழில் அன்பு பிறந்ததுண்டு துன்பம் இனியுமுண்டோ?” 38 என்ற வினாவும் அவருக்குரியது. “சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?”39 என்பார் கண்ணதாசன். “எரிமலை எப்படிப் பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?” 40 எனக் கொதிப்பார் வைரமுத்து.

    “இற்றைக் குமுகம் எழுந்திருக்க வேண்டாமோ?
    முற்றும் முடங்கியே மூழ்குவதோ? – வெற்றுரையால்
    பீடும் மறைவதோ? பேரெழுச்சி வாராதோ?
    நாடுமொழி காப்பீர் நயந்து” 41

    “ஒப்பனை வெல்லுமோ? உண்மை உறங்குமோ?
    முப்பாலுக் கீடோ பிறநூல்கள் – செப்பரிய
    தொண்டால் உழைப்பால் துணிவால் பெருவெற்றி
    உண்டாகும் என்றே உணர்! 42

    என்பன கடவூர் மணிமாறனின் வினாக்கள். இவரின் இந்த வினாக்களைத் தொடர்ந்து வேறு சிலரின் வினாக்களையும் கேட்கமுடிகிறது. உழைத்து ஓடாகிப் போன ஏழைகளின் புலம்பல்கள் வினாக்களாக வெடிக்கின்றன.

    “ஓய்வின்றி உழைப்பவர்க்கா பஞ்சம்? – நாங்கள்
    ஒன்றுபட்டால் இங்கென்ன மிஞ்சும்?
    நாய்படாத பாடெல்லாம் எமக்கா? நாட்டில்
    நல்லின்ப வாழ்வெல்லாம் உமக்கா?
    வேலையின்றி உண்பதுமோர் பிழைப்பா? – இந்த
    வேதனையை மாய்க்க வந்தால் மலைப்பா?
    சாலைகள்தான் எங்களுக்கு வீடா – இது
    சமவுடைமை உண்டாக்கும் நாடா?” 43

    என்னும் கருவூர் கன்னல் எழுப்பும் வினாக்கள் கற்பாரையும் கொதிக்க வைக்கின்றன. இயல்பான தொடரால் அமைக்கப்படுவதைவிட மேற்காட்டியவாறு  வினாக்களால் அமைக்கப்படும்போது கற்பார் உள்ளத்தில் எளிதாக பதியும் வாய்ப்பு அதிகம் என்பதே இவ்வுத்தியின் பயன் எனலாம். திருவள்ளுவர் பின்பற்றிய இந்த வினாவுத்தி தமிழ்க்கவிதையுலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்வதற்கே மேலே சில சான்றுகள் தரப்பட்டன.

    முன்னிலை ஏவல் ஒருமையும் வியங்கோளும்

    ‘யான்’ என்னும் அகப்பற்றையும் ‘எனது’ என்னும் புறப்பற்றையும் விட்டாலேயொழிய உயிர் வீடு பெறாது என்னும் கொள்கையுடையவர் திருவள்ளுவர். அதனால்தானோ என்னவோ அவருடைய குறட்பாவில் முன்னிலை ஏவல் ஒருமையில் அமைந்த ஒரு குறட்பாவைக்கூட காண இயலவில்லை. அந்தக் குறையைப் பாரதி இப்படி ஈடு செய்கிறார்.

    “ஓடி விளையாடு பாப்பா” 44

    “கூடி விளையாடு பாப்பா” 45

    “மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா” 46

    “திடங்கொண்டு போராடு பாப்பா” 47

    என்றெல்லாம் முன்னிலையில் பாடுகிறார் பாரதியார். தொடர்ச்சியாக வந்த பாவேந்தர்,

    “இன்பம் தருந்தமிழில் அன்பு பிறந்ததுண்டு
    துன்பம் இனியுமுண்டோ?
    சொல்! சொல்! சொல்! பகையே!” 48

    எனப் பகையை நேரடியாக விளித்தே பேசுவதைக் காணமுடிகிறது. இந்த நிலை இற்றைநாள் வரை தொடர்கிறது.

    “தாழ்வை அகற்றித் தலைநிமிர்வாய்! போற்றுமுயர்
    வாழ்வில் சிறப்பாய் வளம்காண்பாய் – ஏழ்மையை
    ஓடவே செய்வாய்! ஒரு பயனும் நல்காத
    மூடப் பழக்கம் விலக்கு!” 49

    “மூலையில் நீயும் முடங்கிக் கிடக்காமல்
    வேலையில் நாளும் விழிபதிப்பாய் – காளை நீ!
    வேழமாய் வீறுசால் வெம்புலியாய் சிங்கமாய்
    வாழ வழிவகுக்க வா” 50

    வள்ளுவர் காலத்து இல்லாத அல்லது தேவைப்படாத மொழி, இன, நாட்டுணர்வு இன்றைக்குப் பெரிதும் தேவைப்படுதலின் இந்த வாய்பாட்டிலும் மணிமாறன் கவிதை செய்தார் எனக் கருதலாம். திருக்குறளின் உத்தி பற்றிய ஆய்வில் அவர் கையாளாது பிறர் கையாண்ட முன்னிலை பற்றிய இந்தப் பகுதி எதிர்கால ஆய்வு நோக்கியதாகக் கொள்ளலாம்.

    வியங்கோள்

    ஏவலின் முதிர்ச்சியே வியங்கோள். ‘வாழ்’ என்றால் ஏவல். ‘வாழ்க’ என்றால் வியங்கோள். கட்டளைப் பொருளில் வரும் ஏவல் வினைகளைக் காட்டிலும் வியங்கோளில் வரும் வினைகள் பண்பாட்டினை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவை. நீதியுரைத்தலிலும் பண்பாடு காக்கும் திருவள்ளுவரின் பேராளுமை அவர் பயன்படுத்தியிருக்கும் வியங்கோள்களில் விளங்கக் காண்கிறது.

    “செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃகுஅதனிற் கூரியது இல்” 51

    “மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்
    ஒருவுக ஒப்பிலார் நட்பு” 52

    “உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
    அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு” 53

    பொருளைச் ‘செய்’ என்னாது ‘செய்க’ என்று கூறியவர், ‘மருவு’, ‘கொள்’ என்றெல்லாம் ஏவலிருந்தும் வியங்கோளைப் பயன்படுத்துவார்.   எதிர்மறையிலும் ‘கொள்ளற்க’, ‘உள்ளற்க’ என்பார். இத்தகைய வெளிப்பாடுகளுக்குக் காரணம் ஞானம். அந்த வெளிப்பாடுதான் இன்றைக்கும் வள்ளுவத்தைத் தூக்கி நிறுத்துகிறது. பின்னாலே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் இந்த நெறி பரவலாகப் பயன்பட்டு வந்துள்ளதை அறியலாம்.

    “பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க!” 54

    “முடியும் திறத்தால் முயல்க!” 55

    “பழியின்மை மக்களால் காண்க! ஒருவன்
    கெழி யின்மை கேட்டால் அறிக – பொருளின்
    நிகழ்ச்சியான் ஆக்கம் அறிக!” 56

    என்னுமாறு அமைந்த கீழக்கணக்குப் பதிவுகள் வியங்கோள் ஆளுமையை விளக்கக் கூடும். இந்த வியங்கோள் நெறியை வள்ளற் பெருமான்,

    “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!
    அருள் நிறைந்த சன்மார்க்கர் ஆள்க – தெருள் நயந்த
    நல்லோர் நினைத்த நலம்பெறுக! நன்றுநினைந்து
    எல்லோரும் வாழ்க இசைந்து” 57

    என்னும் வெண்பாவில் தனது வேதனையைப் பதிவு செய்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக பாரதியாரும்,

    “ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்!
    ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!” 58

    என்று பாடுகிறார். அவருடைய நண்பராகிய பாவேந்தர்,

    “தமிழ்மொழியைத் தாய் என்னும்
    தமிழர் வாழ்கவே!
    தமிழ்மொழிக்குத் தாழ்வுரைக்கும்
    தக்கை வீழ்கவே!
    தமிழ்வாழத் தாம் வாழும்
    தமிழர் வாழ்கவே!
    தமிழ்வீழத் தாம் தாழும்
    சழக்கர் வீழ்கவே!”59

    மொழியினம் நாடு பாடும் நம் மணிமாறன் வெண்பாக்களில் இத்தகைய வியங்கோள் வினை உத்திகள் வேண்டிய மட்டும் பரவிக் கிடப்பதைக் காண முடிகிறது.

    “நல்லனவே எண்ணுக! நன்மை விளைத்திடுக!
    இல்லார்க் கிரங்கி உதவிடுக! – சொல்லினில்
    இன்பம் பெருக்கி இடரகற்றி எப்போதும்
    அன்பில் திளைக்க அறிந்து” 60

    “கண்ணும் கருத்துமாய் கடமையை ஆற்றுக!
    புண் மொழி பேசிப் புலம்பற்க! – மண்ணிலே
    நல்லவன் என்னும் நறும்புகழ் எய்துக!
    எல்லாம் அறிக! இசைந்து” 61

    உடன்பாடும் எதிர்மறையுமாக அமைந்த முன்னிலை வியங்கோள் வினைமுற்றுக்களால் சமுதாயத்தோடு தனக்குள்ள தொடர்பினை வெண்பா மூலம் புதுப்பித்துக் கொள்கிறார் மணிமாறன். ஒரு கருத்தினை வியங்கோளாக வெளிப்படுத்துவது என்பது மரபுசார்ந்த கவிதை வெளிப்பாடு என்பதை அறியவும்! சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதை காண்க.

    திருக்குறளில் தொழிற்பெயர்த் தொடரி

    திருவள்ளுவர் அறுவகைப் பெயர்ச் சொற்களையும் கையாண்டு கவிதை செய்த பெருந்தகை. அவற்றுள் தொழிற்பெயர்களைத் தொகுத்துத் தொடரியாக்கிறார். அந்தத் தொழிற்பெயர்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்டு இணைந்து காணப்படுவது கூடுதல் சிறப்பு.

    “உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற்கு உரு” 62

    “ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
    எண்ணின் தவத்தான் வரும்” 63

    “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்லது அரசு” 64

    மேற்கண்ட குறட்பாக்களில் உள்ள தொழிற்பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையில் தொடர்ந்து அமைந்திருப்பதைக் காணலாம். இந்த நெறியும் பின்னாளில் தொடர்ந்து வந்திருப்பதை அறியமுடிகிறது.

    “இன்னறுங்கனி சோலைகள் செய்தல்,
    இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
    ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
    பின்னருள்ள தருமங்கள் யாவினும்
    பெயர்விளங்கி ஒளிற நிறுத்தல்,
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” 65

    இவ்வாறு அனைத்தும் தொழிற்பெயர்களாக அடுக்கியுரைப்பதனை, வெற்று வாய்மொழிகளாக இருப்பதனால் பயனில்லை செயல்வடிவம் பெற வேண்டும் என்பதைக் குறிப்பால் பெற வைக்கும் உத்தியாகவும் கருதலாம்.

    “கொள்ளை யடித்தல் குறுக்குவழி நாடுதல்
    கொள்கை மறந்தே குழப்புதல் – விள்ளரிய
    கேட்டை விளைத்திடுமிக் கீழோர் செயலெல்லாம்
    நாட்டைக் கெடுத்திடும் நஞ்சு” 66

    “மானம் இழத்தல் மதுவருந்தல் மற்றவர்க்கே
    ஆனவரை தீங்கிழைத்தல் அன்றாடம் – ஊனம்செய்
    கேட்டை விளைத்தல் கெடுமதியோர் நட்பெல்லாம்
    நாட்டைக் கெடுத்திடும் நஞ்சு” 67

    என்னும் கடவூர் மணிமாறன் பாடல்களில் தொழிற்பெயர்கள் தொடர்ந்து வருவதைக் காணலாம்.

    திருக்குறளில் படர்க்கைப் பதிவுகள்

    தனிமனித நெறியுரைத்த திருவள்ளுவர் பெரும்பாலும் படர்க்கை நிலையையே தமது வெளிப்பாட்டு உத்தியாகக் கொண்டிருக்கிறார் என்பதைக் குறட்பாக்களின் கட்டமைப்பால் அறியலாம்.

    “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு” 68

    “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்” 69

    “ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றும் துணையும் புகழ்” 70

    “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத்தூறும் அறிவு” 71

    “மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
    எல்லாப் புகழும் தரும்” 72

    என்றெல்லாம் அறம் மற்றும் பொருட்பாலில் எண்பது விழுக்காடு வெண்பாக்களைப் படர்க்கையில் அமைத்துக் காட்டியவர் திருவள்ளுவர்.  படர்க்கை என்பது இலக்கணத்தில் மூன்றாவது நிலையாக இருக்கலாம். வாழ்க்கைப் பட்டறிவில் முதனிலை. அதனால்தான் தமிழின் அத்தனை நீதி நூல்களும் பெரும்பாலும் படர்க்கையைத் தேர்ந்தெடுத்தன. படர்க்கையில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் இலக்கியச் சுவையோடு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே ஆடூஉ முன்னலை மற்றும் மகடூஉ முன்னிலைகள் இடம்பெற்றன. இப்பொருண்மை தனி ஆய்வுக்கு உரியது. விரிந்த மனத்தால் எதனையும் எவரையும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் வாழ்த்தவும் வையவும் படர்க்கை பயன்படும். ஆசிரியர் கூற்று என்பதும் அது.

    தமிழ் மறையில் தன்மைப் பன்மை

    தம் கருத்துக்களை முன்னிலையிலும் வியங்கோளிலும் குறள் வெண்பாவில் பதிவு செய்திருக்கும் திருவள்ளுவர் மூன்று குறட்பாக்களில் மட்டும்  தன்மைப் பன்மையில் பதிவு செய்திருப்பதை அறிய முடிகிறது.

    “பெருமவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற” 73

    “யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற” 74

    “மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பார் யாம்கண்ட தில்” 75

    என்பன காண்க. “யாம் அறிவதில்லை”, “யாம் கண்டவற்றுள்”, “யாம் கண்டதில்” என்பனவெல்லாம் இலக்கண அடிப்படையில் தன்மைப் பன்மைத் தொடர்கள். முதிர்ச்சியோடு கூடிய பதிவுகள். தன்மைப் பன்மையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்குறட்பாக்களில் இரண்டு (61,1071) அதிகாரத் தொடக்கமாகவும் ஒன்று (300) அதிகார இறுதியாகவும் அமைக்கப்பட்டிருப்பதும் சிந்தனைக்குரியது. இத்தகைய உத்திகளின் பயன்பாட்டிற்குரிய நோக்கம் தனி ஆய்வுக்கு உரியது. இந்த நெறியால் ஈர்க்கப்பட்ட அப்பர் பெருமான்,

    “நாமார்க்கும் குடியல்லோம் நமனைஅஞ்சோம்
    நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்!
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
    இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” 76

    என்று பாடியிருக்கிறார். ‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’77 என்பதும் “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு”78 என்பதும் பாரதி முழக்கங்கள்.

    “நாமறிவோம் உலகத்தில் நம் பண்பாடு — தமிழா
    நாம் தமிழர்! நம் திறத்துக்கெவர் ஈடு?
    தீமை இனிப் பொறுக்காது நம் தமிழ்நாடு! – நாம்
    தீர்த்துக் கொண்டோம் அவர் கணக்கை இன்றோடு!” 79

    இது பாவேந்தர் பாரதிதாசனின் தன்மைப் பன்மை உத்தி. அவருடைய பரம்பரைக் கவிஞர் நிரலில் வரும் நாடறிந்த நற்றமிழ்ப் பாவலர் கடவூர் மணிமாறன்,

    “கன்னல் தமிழ் காப்போம்! காழ்ப்பால் துயரிழைக்கும்
    புன்மையர் வீழப் பொருதிடுவோம் – நன்னெறியால்
    சூழும் பகைவெல்வோம்! சுற்றம் தழுவியே
    வாழும் வகையறிவோம் வா!” 80

    “நன்மை விளைத்திடுவோம்! நாடுமொழி நம்மினத்தை
    என்றுமே காப்போம்! இனியன – நன்றாற்றி
    மாற்றம் விளைப்போம்! மனத்தைப் புதுக்கிடுவோம்!
    ஏற்றமே காண்போம் இனிது” 81

    உளப்பாட்டுத் தன்மைப் பன்மையால் நேரிசை வெண்பா யாப்பில் தனது உயிர்மூச்சான கொள்கைகளைப் பதிவு செய்திருக்கும் இந்தப் பேராற்றல் பெரிதும் பாராட்டுக்குரியது. “பாதகம் செய்பவரைக் கண்டால் ‘நீ’ பயங்கொள்ளலாகாது” என்னாது ‘நாம் பயங்கொள்ளலாகாது’ எனப் பாரதி குழந்தையை அரவணைத்துப் பாடியது போலச் சமுதாய முன்னேற்றத்திற்குச் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து பாடுபடும் மணிமாறனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவதாம்.

    தன்னை அடையாளம் காட்டிய திருவள்ளுவர்

    ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் திருவள்ளுவர் தான் சொல்லுவதாக அதாவது தன்மை ஒருமையில் வரித்துக் கொண்டு சொன்ன கருத்துப் பதிவு ஒன்றே ஒன்றுதான். அது,

    “இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
    ‘கரப்பார் இரவன்மின்’ என்று” 82

    பெரும்பாலும் அறியப்படாத இந்தப் பாட்டின் கண்ணழிப்பு (நானாகிய திருவள்ளுவன் “இரப்பாரையெல்லாம் இரப்பின் கரப்பார் (ஐ) இரவன்மின் என்று இரப்பன்). இந்தப் பாட்டுக்கு என்ன பொருள் என்றால் பொருளிருந்தும் கரந்தொழிக்கும் கயவரிடத்தில் இரக்கின்றவர்களைப் பார்த்து,

    “ஐயா! வைத்துக் கொண்டே இல்லை என்று மறுதலிக்கும் கயவர்களிடத்தில் இரக்காதீர்கள்” என்று நான் இரந்தேன்”

    என்பதாம். இந்த ஒரு திருக்குறளில்தான் திருவள்ளுவர் தன்மை ஒருமையில் பதிவிடுகிறார். இதற்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்பது கட்டுரையாளரின் அனுமானம். தன்மை ஒருமை பெரும்பாலும் முனைப்பின் அடையாளம். யான், எனது என்பனவற்றுள் அது ‘யான்’ என்னும் அகப்பற்று. அது எனது என்னும் புறப்பற்றினைக் காட்டிலும் கேடுதருவது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் அவர். எனவே அத்தகைய உத்தியினை அவர் தவிர்த்திருக்கக் கூடும். பின்னாலே வந்த கவிதை படைப்பாளர் பலரும் திருவள்ளுவர் அரிதாகப் பயன்படுத்திய உத்தியினை மிக எளிதாகவும் பேரளவிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். உருக்கும் திருவாசகத்தில்,

    “யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனக்கு என் கடவேன்?
    வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்!
    தேனேயும் மலர்க்கொன்றை சிவனே எம் பெருமான் எம்
    மானே உன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே!” 83

    என்று தன்மை ஒருமையில் வைத்துப் பாடியிருக்கிறார். திருவாசகம் முற்றிலும் சன்மார்க்கத்தையொட்டி எழுந்த நூலாதலின் குருவை வழிபடுதலுக்குச் சீடனாகிய தன்னை முன்னிலைப்படுத்துவது பொருத்தம் என்று அவர் கருதியிருக்கலாம். வள்ளற்பெருமான் தனது சமரச சன்மார்க்கக் கொள்கைகளை வலியுறுத்திப் பாடும் பொழுது,

    “புனைந்துரையேன்! பொய்புகலேன்! சத்தியம் சொல்கின்றேன்!
    பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே!” 84

    என்று பன்னியுரைக்கின்றார். மகாகவி பாரதி,

    “விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
    வேண்டியபடிசெலும் உடல் கேட்டேன்!
    நசையறு மனம்கேட்டேன்! நித்தம்
    நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்!
    தசையினைத் தீச்சுடினும் – சிவ
    சக்தியைப் பாடும் நல் அகம்கேட்டேன்!” 85

    எனத் தன் வேண்டுதலைப் பதிவு செய்திருக்கிறார். அவர் காட்டிய புதுத்தடத்தில் கவிப்பயணம் தொடங்கிய பாவேந்தர்,

    “ஆன என் தமிழ் ஆட்சியை நிறுவ
    அல்லல்கள் வரின் ஏற்பேன்!
    ஊனுடன் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
    உவப்புடன் நான் சேர்ப்பேன்!” 86

    என்று முழக்கமிடுகிறார். ஒவ்வொரு தமிழனும் மொழிக்கும் இனத்திற்கும் ஆற்ற வேண்டிய பணியினை ஆற்ற வேண்டும் என்னும் குறிப்பு இந்தத் தன்மைப் பதிவில் இருப்பதாகக் கருதலாம்.

    நிறைவுரை

    மூலப்பொருள் ஒன்றேயெனினும் கைத்திறப் பக்குவத்தால் படைப்புக்களின் தன்மைகள் மாறுபடுகின்றன. இந்த மாற்றம் ஒருவரே எழுதும் பல படைப்புக்களிலும் அமையும். பலர் எழுதும் பல படைப்புக்களிலும் அமையும். அந்தக் கையாளும் திறமைகளில் ஒன்றுதான் உத்தி என்பது. கவிதை உத்தியால் சிறக்கிறது. திருவள்ளுவர் தாம் படைத்த திருக்குறளில் தமது சிந்தனைகளைப் படர்க்கையில் கூறுகிறார். வியங்கோளில் கூறுகிறார். தன்மைப் பன்மையில் கூறுகிறார்.  தொழிற்பெயர்களை அடுக்கிக் கூறுகிறார். இவ்வளவு பொருளையும் இத்தனை உத்திகளில் கூறிய தெய்வப்புலவர் ஒரே ஒரு குறட்பாவில் மட்டும் தன்மை ஒருமையில் கூறியிருக்கிறார். வாழையடி வாழையென வந்த இத்த வெளிப்பாட்டு உத்தி ஓர் தொடர் மரபாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ளது எனத் தெரிகிறது. கவிதைகளின் புறக்கட்டுமானங்களை நோக்குவார்க்கு இத்தகைய உத்தி மாறுபாடுகள் கண்ணிற்படாமல் போகாது. அவ்வாறு கண்ணிற்பட்டதன் விளைவே இக்கட்டுரை. கவிதைப் பதிவுகளை உத்திகளின் அடிப்படையில் சுவைப்பதற்கும் ஆராய்வதற்குமான ஆய்வுத் தொடரியில் இக்கட்டுரையும் ஒரு கண்ணியாக அமையக்கூடும் என்னும் நம்பிக்கையோடு நிறைவுறுகிறது.

    சான்றெண் விளக்கம்

    1. கங்கை அமரன் ‘இங்கேயும் ஒரு கங்கை’       திரையிசைப்பாடல்
    2. மேலது
    3. மேலது
    4. மேலது
    5. வைரமுத்து ‘முதல்மரியாதை’              திரையிசைப்பாடல்
    6. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் அடைக்கலக்காதை      வரி. 2382-2383
    7. மேலது       வரி. 2403-2406
    8. மேலது       வரி. 2407-2430
    9. கம்பர்                 கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் பா.எண்.3965
    10. மேலது பா.எண் 4059
    11. மேலது பா எண்.4060.
    12. சமண முனிவர்கள் நாலடியார் காமம் நுதலியல்    பா.எண். 40-1
    13. மேலது                         பா.எண். 40.10
    14. மேலது                      கீழ்மை                 பா.எண். 35–3
    15. மேலது கீழ்மை                 பா.எண். 35– 4
    16. மேலது கீழ்மை                 பா.எண். 35 –8
    17. திருவள்ளுவர்       திருக்குறள்              கு.எண். 1091
    18. மேலது கு.எண். 1094
    19. மேலது கு.எண். 1111
    20. மேலது                              கு.எண். 1112
    21. மேலது கு.எண். 1123
    22. மேலது கு.எண். 02
    23. மேலது கு.எண். 315
    24. மேலது கு.எண். 71
    25. மேலது கு.எண். 301
    26. மேலது கு.எண். 483
    27. மேலது கு.எண். 345
    28. மேலது கு.எண். 1323
    29. மேலது கு.எண். 1308
    30. மேலது கு.எண். 1299
    31. மேலது கு.எண். 1267
    1. அப்பர் தேவாரம் 5ஆம் திருமுறை           பா.எண். 99
    2. மணிவாசகர் திருவெம்பாவை                     பா.எண். 3
    3. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்          ப 404
    4. மேலது ப 66
    5. மேலது ப 67
    6. பாரதிதாசன் பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1    ப 22
    7. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1               ப 42
    8. கண்ணதாசன்       பாகப்பிரிவினை         திரையிசைப்பாடல்
    9. வைரமுத்து       சிவப்புமல்லி            திரையிசைப்பாடல்
    10. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 52
    11. மேலது                                                    ப 129
    12. கன்னல் கருவூர்        புயலைத் தாக்கும பூக்கள்             ப 81
    13. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்                ப 221
    14. மேலது
    15. மேலது
    16. மேலது
    17. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1               ப 42
    18. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 27
    19. மேலது                                          ப 76
    20. திருவள்ளுவர்       திருக்குறள்                          கு.எண். 759
    21. மேலது             கு.எண். 800
    22. மேலது             கு.எண். 798
    23. சமணமுனிவர் நாலடியார்                           பா.எண். 2
    24. முன்றுரையரையனார் பழமொழி                           பா.எண். 49
    25. விளம்பி நாகனார் நான்மணிக்கடிகை                    பா.எண். 61
    26. வள்ளலார்       திருவருட்பா – சமரசநிலை            பா.எண். 74-5
    27. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்                ப 36
    28. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி (தொகுப்பு நூல்) ப 6
    29. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 33
    30. மேலது       ப 50
    1. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 261
    2. மேலது கு.எண். 264
    3. மேலது கு.எண். 385
    4. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்    ப 173
    5. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை      ப 28
    6. மேலது
    7. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 72
    8. மேலது கு.எண். 50
    9. மேலது கு.எண். 156
    10. மேலது கு.எண். 396
    11. மேலது கு.எண். 457
    12. மேலது கு.எண். 61
    13. மேலது கு.எண். 300
    14. மேலது கு.எண். 1071
    15. அப்பர் தேவாரம் மறுமாற்றம் திருத்தாண்டகம் பா.எண். 1
    16. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள் ப 26
    17. மேலது ப 23
    18. பாரதிதாசன் பாரதிதாசன் கவிதைகள் ப 521
    19. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை      ப 27
    20. மேலது ப 32
    21. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 1067
    22. மணிவாசகர் திருவாசகம் திருச்சதகம் பா.எண். 12
    23. வள்ளலார் திருவருட்பா – ஞானசரியை     பா.எண். 110 -1
    24. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்    ப 122
    25. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி ப 5

    துணைநூற்பட்டியல்

    1. அப்பர் தேவாரம் (தலமுறை), திருப்பனந்தாள் ஆதீனம் (காசிமடம்) ஜனவரி -1966
    1. கம்பர் கம்பராமாயணம் கங்கை புத்தக நிலையம், 13, தீன தயாளன் தெரு, தி.நகர், சென்னை – 600017
    1. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள், பூம்புகார் பிரசுரம், பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை – 600 108, நான்காம் பதிப்பு – 1991
    1. திருவள்ளுவர் திருக்குறள், வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பு, உமா பதிப்பகம், சென்னை – 600 001, முதற்பதிப்பு – 2009
    1. மணிவாசகர் திருவாசகம், அப்பர் புத்தக நிலையம், 1621, தெற்கு ராச வீதி, தஞ்சாவூர். முதற்பதிப்பு – 1963
    1. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி தொகுப்பு நூல், மணிவாசகர் நூலகம், 12 – பி, மேல சன்னதி, சிதம்பரம் – 608101, முதற்பதிப்பு – ஜுலை 1993
    1. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1, பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை – 600 001
    1. கடவூர் மணிமாறன் வெண்பாச் சோலை, விடியல் வெளியீட்டகம், 1—53, பெரியார் நகர், குளித்தலை, கரூர் மாவட்டம், முதற்பதிப்பு – சூலை 2020
    1. கருவூர் கன்னல் புயலைத் தாக்கும் பூக்கள், தமிழ்ப்பாசறை, 79, தெற்கு நரசிம்மபுரம், கருவூர் – 639001, முதற்பதிப்பு – டிசம்பர் 1998
    1. பதினெண்கீழ்க்கணக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், (மர்ரே பதிப்பு) அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை – 600 098, இரண்டாம் பதிப்பு – 1981
    1. வள்ளலார் திருவருட்பா, சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு, 7—99, அம்மன் கோவில் தெரு, கிருஷ்ணாகுளம் அருகில் சென்னை, முதற்பதிப்பு – அக்டோபர் 1942

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    ‘தமிழ்க் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள்  (திருக்குறள்)  என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. திருக்குறளில் உத்தி பற்றிய இந்த ஆய்வு, ஆய்வு நெறிப்ப்டி கருதுகோள், வலிமையான தரவுகள், அகச்சான்றுகள், புறச்சான்றுகள், தரவுகள் மற்றும் சான்றுகள் பற்றிய விளக்கம், மேற்கோள்கள், சான்றெண் விளக்கம், துணை நூற்பட்டியல் ஆகிய உறுப்புகளைக் கொண்டு செவ்வையாகவும் பொறுப்புணர்வுடனும் நிகழத்தப்பட்டிருக்கிறது.
    1. தமிழ்க்கவிதைகளில் உத்தி என்னும் பொதுத்தலைப்பில் திருக்குறளில் உத்தி என்னும் பொருண்மை சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருப்பினும் ஒரு பரந்து பட்ட தமிழ்க்கவிதை களத்தையே   ஆய்வாளர் தம் ஆய்வுப்பார்வையால் காட்சிப்படுத்தியிருக்கிறார். .
    1. திருக்குறளை முன்னிறுத்திய இந்த ஆய்வுக் கட்டுரையில் கம்பன் முதல் கரூர் கன்னல் வரை இடம் பெறுகிறார்கள். வள்ளலார் முதல் வைரமுத்து வரை வந்து போகிறார்கள். காப்பியம் தந்த இளங்கோ முதல் கடவூர் மணிமாறன் வரை காட்சி தருகிறார்கள்.
    1. “ஒரே பொருளை  ஒன்றுக்கும் மேற்பட்ட  முறைகளில் வெளிப்படுத்தும் நெறிக்கு உத்தி என்று பெயர்” என வரையறைத்துச் செய்திருக்கிற  தொடக்கம்  ஆய்வு நெறியில் ஆய்வாளரின் தோய்நத புலமையைக் காடடுகிறது.
    1. “திருவள்ளுவர் பல உத்திகளைக் கையாண்டிருக்கிறார். ஒரு கருத்தினை நிரல்படச் சொல்லுவார். ஒன்றினை வினா வடிவில் பதிவு செய்வார் வேறொன்றினை வியங்கோளால் அமைத்துக் காட்டுவார். சிலவற்றைத் தொழிற்பெயர்களால் கூட்டியுரைப்பார். வேறு சிலவற்றை முன்னிலை ஏவலால் ஆணையிடுவார். சிலவற்றைத் தன்மைப் பன்மையால் விளக்கிக் காட்டுவார். இன்னும் பல உத்திகளையும் கையாண்டு விளக்கியிருப்பார்”. என்னும் திருக்குறளில் விரவியுள்ள உத்தி பற்றிய பன்முக விளக்கம் ஆய்வாளரின் திருக்குறள் புலமையைக் காட்டுவதுடன் எதனையும் ஆய்வு நோக்கில் காணும் அன்னாருடைய இயல்பினையும் புலப்படுத்துவதாக உள்ளது.
    1. “யாம் அறிவதில்லை” “யாம் கண்டவற்றுள்” “யாம் கண்டதில் என்பனவெல்லாம்” என்னும் இலக்கண அடிப்படையில் தன்மைப் பன்மைத் தொடர்கள். முதிர்ச்சியோடு கூடிய பதிவுகள். தன்மைப் பன்மையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்குறட்பாக்களில் இரண்டு (61,1071) அதிகாரத் தொடக்கமாகவும் ஒன்று (300) அதிகார இறுதியாகவும் அமைக்கப்பட்டிருப்பதும் சிந்தனைக்குரியது.   என்னும் தன்மைப் பன்மை பற்றிய பயன்பாட்டு வரையறையும் அதனையொட்டிப் பின்வந்த சான்றோர்களின் படைப்புகளைக் காட்டி அவ்வுத்தியின் தாக்கத்தைக் காட்சிப்படுத்தும் ஆய்வாளர், திருக்குறளில் கையாளப்பட்டிருக்கும் ஒவ்வொரு உத்தியும் பின்வந்த சான்றோர்களாலும் நோக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆய்வுநெறிப்படி விளக்கியிருக்கிறார்.
    1. திருவள்ளுவர் “இரப்பன் இரப்பாரை எலலாம் இரப்பின் ‘கரப்பார் இரவன்மின்’ (1067) என்று ”ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தன்மை ஒருமையில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது ஆய்வாளரின் உழைப்பையும் ஆய்வின துல்லியத்தையும்  காட்டுகின்றன.

    ஆய்வு நெறிப்ப்டி கடும் உழைப்புடனும் ஒரு தேடல் பார்வையுடனும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆய்வுக் கட்டுரை பகுப்பாய்வாக இருப்பினும் ஒவ்வொரு பத்தியிலும் ஆய்வு மணம் கமழ்வதை உணர முடிகிறது. ஆய்வாளருக்கு அறிவு இயற்பொருளாகவும் ஆற்றல் துணைப்பொருளாகவும் அமைந்திருப்பதைக் கட்டுரை வெளிப்படுத்துவதாக உள்ளது.


     

    Share
  • (Peer Reviewed) கழுகுமலைச் சமணப்பள்ளியில் பெண்கல்வியும் இருபாலர்  கல்விமுறையும்

    (Peer Reviewed) கழுகுமலைச் சமணப்பள்ளியில் பெண்கல்வியும் இருபாலர் கல்விமுறையும்

    முனைவர் இரா.இலக்குவன்
    உதவிப் பேராசிரியர்
    வெ.ப.சு. தமிழியல் ஆய்வு மையம்
    ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி.

    இந்தியாவின் பழமையான மதங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது சமணசமயம் ஆகும். அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் பரவியிருந்ததுஎன்பதற்குப் பல்வேறு கல்வெட்டுச்சான்றுகள் துணைநிற்கின்றன. (1983))

    மேலும் சமணம்  தமிழ்நாடு முழுமையும் குறிப்பாக  பாண்டிநாடு, தொண்டை நாடுகளில் வலுவாகப் பலநூற்றாண்டுக்காலம் கோலோச்சியிருந்ததை அறியமுடிகிறது. தமிழ்நாடு முழுமையும் பரவியிருந்த சமணஆலயங்கள் (ஜினாலயங்கள்) என்றும் பள்ளிகள் என்றும் சமணத்துறவிகள் தங்கியிருந்த இடங்கள் பள்ளி பாழி அதிட்டானம் தேவாரம் பஸ்தி என்றும் அழைக்கப்பட்டன. (2005,ப.14  )

    கல்வெட்டுகள் பெரும்பான்மையும் சமணத்துறவிகள்  இருப்பிடங்களையும் கோயில்களையும் பள்ளி என்றே குறிப்பிடுகிறது.

    ஜினகிரிபெரும்பளளி –ஆனந்தமங்கலம்
    சிறுவாக்கம் – ஸ்ரீஹரணபெரும்பள்ளி
    குன்னத்தூர் –பெரியநாட்டுப்பெரும்பள்ளி
    தொண்டூர் – வழுவாமொழிபெரும்பள்ளி
    திருநறும்கொண்டை – நாற்பத்தெண்ணாயிரம்பெரும்பள்ளி
    வீரசேகரபெரும்பள்ளி – சளுக்கி
    பெருமண்டூர் – ரவிகுலசுந்தரபெரும்பள்ளி
    பள்ளிச்சந்தல் – வாலையூர்நாட்டுப்பெரும்பள்ளி
    அன்பில் – அமுதமொழிபெரும்பள்ளி
    மருத்துவக்குடி – சேதிகுலமாணிக்கம்பெரும்பள்ளி, கங்கருளசுந்தரபெரும்பள்ளி
    இருப்பைகுடி – பெரும்பள்ளி
    பெருங்குளம் – நிகராகரப்பெரும்பள்ளி) (1954,ப.104-200)

    மதுரையில் சமணப்பள்ளிகள் இருந்ததை “அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளி என்று (15:107) சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் பள்ளி என்ற பெயரே பெருவழக்காக இருந்துள்ளது.

    பண்டைகாலத்திலே சாதிபேதம் பாராட்டாத தமிழ்நாட்டிலே, சாதிபேதம் பாராட்டாத சமணசமயம் பரவியதில் வியப்பில்லை. மேலும், உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள்.இந்த நான்கினையும் அன்னதானம், அபயதானம், ஔடததானம், சாத்திரதானம் என்று கூறுவர். (1954,ப.41)

    சமணர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுக்கல்வி வழங்கிய அவர்கள் வாழும் இடமான பள்ளி என்பதால்தான் இன்று கல்விக்கூடங்களுக்குப் பள்ளிக்கூடம் என்று பெயர் வந்தது என்று மயிலை.சீனி.வேங்கடசாமி, தொ.பரமசிவன் உள்ளிட்ட அறிஞர்கள் அரிதியிட்டு உரைக்கின்றனர். சமணர்கள் சமணக்கோயிலான பள்ளிகளிலும் சமண முனிவர்கள் தங்கியிருக்கும் பள்ளிகளிலும் ஆண், பெண் இருபாலருக்கும் கல்வி கற்பித்தனர். சமண மதம் தமிழகத்திற்குப் புறத்தே இருந்து வந்த மதமெனினும் அவர்கள் தமிழ்மொழிக்கு முதலிடம் கொடுத்தனர். அவர்களது நூல்கள் அனைத்தையும் தமிழில் எழுதினர், தமிழ் இலக்கண நூலாம் தொல்காப்பியத்தைப் பழுதறக் கற்று உரை வரைந்தனர். மேலும் தமிழில் பல இலக்கண நூல்களையும் எழுதினர். அவ்விலக்கண நூல்கள் சமணப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன. மேலும் பற்பல இலக்கியங்களும் படைக்கப்பட்டு சமணப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன. எனவே சமணப்பள்ளிகள் சமணத் தத்துவநூல்களை மட்டும் கற்பிக்கும் இடமாக அல்லாமல் அடிப்படை மொழி வகுப்புகளை நடத்தும் இடமாகவும் தமிழில் புலமைபெற்று யாப்பியற்றும் பட்டறையாகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களை உரைகளோடு விவாதிக்கும் களனாகவும் இருந்தன என்பதை அறிய முடிகிறது. சான்றாக சமணரான இளம்பூரணது தொல்காப்பிய உரை ஆசிரியர் மாணாக்கர் ஐயங்களுக்கு விடையிறுக்கும் வகையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெருவழக்காக சமணசமய இடங்கள் கல்விக்கூடங்களாக இருந்ததால் பள்ளி என்ற பெயர் தற்காலப்பள்ளிக்கூடங்களுக்கும் ஆகிவந்த பெயராக வழங்குகிறது. சமணர்கள் தமிழ்நாடு முழுவதும் ஔடத தானமாகிய கல்வியை மக்களுக்கு தமது இடங்களில் வழங்கிய வழக்கம் பலநூற்றாண்டு காலம் தொடர்ந்திருப்பதால் மக்கள் பிற்கால திண்ணைப்பள்ளி முதலான பொதுக்கல்வி அளிக்கப்படும் இடங்களையும் பள்ளி என்ற சொல்லால் நினைவுகூர்ந்தனர் என அறியமுடிகிறது.

    சமணர்களிடம் சாத்திரதானம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை.செல்வம் படைத்த சமணர்கள், தம் இல்லங்களில் நடைபெறும் திருமண நாட்களிலும் இறந்தோருக்குச்செய்யும் இறுதிக்கடன் நாட்களிலும் தம் சமயநூல்களைப் பலபிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தக்கவர்க்குத் தானம் செய்தார்கள். அச்சுப்புத்தகம் இல்லாத அந்தகாலத்தில் பனை ஏடுகளில் நூல்களை எழுதி வந்தார்கள். ஒரு சுவடி எழுதுவதற்குப் பலநாட்கள் செல்லும். பொருட்செலவும் (எழுத்துக்கூலி) அதிகம்..ஆகவே, பொருள் உடையவர் மட்டும் புத்தகம் பெறுவது முடியாது. ஆகவே, செல்வம் படைத்த சமணர் தமது சமயநூலைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தானம் செய்தார்கள் (1954, ப.44) என்பதையும் அறியமுடிகிறது. சமணர்கள் தமிழ்நாடு முழுமையும் சமணப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நிகழ்ந்தாலும் கழுகுமலையில் பல்கலைக்கழகம் எனும் அளவில் நடந்தது என்பதை சி.சிவராமமூர்த்தி (1983) கு.அருணாசல கவுண்டர் (2005, ப.122), செ.மா.கணபதி (2007) போன்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்கு இருபாலரும் மாணவர்களாகவும் இருபால் ஆசிரியர்களும் பேரளவில் இருந்ததாகவும் கல்வெட்டுகள் சிற்பங்கள் மூலம் தெரிய வருகிறது.

    கழுகுமலை பற்றிய கட்டுரையில் ராவ்சாகிப் கு. அருணாசலக்கவுண்டர் (2005,ப.124)

    “சமணத்துறவிகளிடையே ஆண் பெண் இருபாலர் சேர்ந்து கல்வி பயில்வது என்ற கூட்டுக்கல்விமுறை இருந்ததா? இருந்தது என்று சொல்வதற்கில்லை என்ற முடிவுக்கு வருகிறார். இக்கட்டுரை கழுகுமலையில் இருபாலர் கல்வி இருந்ததா என்பதையும் சமணப்பள்ளிகளில் பெண்கள் பங்கு பற்றியும் ஆய்வு செய்கிறது.

    இரு பாலர் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு ஆசிரியரிடம் கற்கும் கல்விமுறையை இரு பாலர் கல்வி என்று அழைக்கலாம்.

    கலப்பு–பாலினகல்வி , இணைகல்வி அல்லது கூட்டுறவு (கோ–எட் என்றும் அழைக்கப்படுகிறது, இதுஆண்களும்பெண்களும்ஒன்றாக கல்வி கற்கும்கல்விமுறையாகும். (https://mimirbook.com/ta/33cfb8b4fc2)

    இந்தியாவில் பெண் கல்வி இடைக்காலங்களில் இல்லாமல் இருந்தது. ஆனால் வேத காலத்திலும் தமிழகத்தில் சங்ககாலத்திலும் பெண் கல்வி வழக்கில் இருந்தது என்றும் பிற்காலங்களில் அது தேய்வழக்கானது என்றும் சிலர் வலியுறுத்துவார்கள்.எனினும் பெண்களும் ஆண்களும் சேர்ந்து ஒரே இடத்தில் கல்வி பயின்றதற்கு நமக்கு வலிமையான சான்றுகள் கிடைக்கவில்லை.  பிற்காலத்தில் தமிழகத்தில் இருந்த பல வைதிக மதம் சார்ந்த மடங்கள் ஆண்களுக்கு மட்டுமே கல்வி அளித்தன.  அவை பெரும்பாலும் அங்கு பெண்கள் நுழைவதற்கே அனுமதிக்கவில்லை.

    தென்தமிழகத்தில்தூத்துக்குடிமாவட்டம்கோவில்பட்டிவட்டத்தில்கோவில்பட்டி – சங்கரன்கோவில் சாலையில் கழுகுமலைஎன்ற ஊர் உள்ளது. இவ்வூரிலுள்ள குன்றுஎன்றஅளவில்உள்ளஒருசிறுமலையின் வடபகுதியில் நூற்றுக்கணக்கான சமணத் தீர்த்தங்கரர்கள், சமண தெய்வங்களின் சிலைகளும் அதன்அடிப்பகுதியில் வட்டெழுத்துக்கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இங்கு சமண முனிவர்கள் தங்கியிருந்து சமணச்சித்தாங்களைக் கற்பித்துவந்தனர். கி.பி 8,9, 10ஆம் நூற்றாண்டுகளில் சமண சமயம் இவ்வூரில் செழிப்புற்று விளங்கியது. (1961) இவ்வூர் பண்டைகாலத்தில் நெற்சுரம் என்றும் இவ்வூரின் பகுதிகள் இளநெற்சுரம், பெருநெற்சுரம், குழுவாணை நல்லூர் என்றும் வழங்கப்பட்டன. (2007,ப 107)

    புத்தமதக் கொள்கையைப் பரப்புவதற்காக வடக்கேயிருந்து தெற்கு நோக்கி வந்த கௌதமபுத்தர் இலங்கைக்குச் செல்லும் வழியில் கழுகுமலைக்கும் வந்து சென்றதாக தொல்லியல் அறிஞர் டி.ஏ.கோபிநாதராவ் குறிப்பிடுகிறார். இதேபோல இலங்கைக்குப் பௌத்த சமயததைப் பரப்பச் சென்ற வழியில் சங்கமித்திரை கழுகுமலை வந்து சென்றதாகவும் ஒரு செவிவழிச் செய்தி பேசப்பட்டுவருகிறது. (2005,ப.17)

    கழுகுமலைக் கல்வெட்டுகளில் காணப்படும் ஆசிரிய மாணாக்கர் பரம்பரை விளக்கம்

    கனகநந்திப் பட்டாரகர் மாணாக்கர் ஆதித்த படாரர் (SIIV No 341) குணசாகரப்படார் சீடன் பேரெயிற்குடிச்சாத்தன்தேவன் (SIIV No 310)
    குணசாகரப்படாரர் சட்டன் பேரெயிற்குடிச்சாத்தன்தேவன் (SIIV No 347)
    குணசாகரப்படாரர் மாணாக்கி (SIIV No 334}
    குறண்டி தீர்த்தபடார் மாணாக்கர் கனகநந்திப் பெரியார் (SIIV No.345)
    குறண்டி தீர்த்தபடாரர் மாணாக்கிகள் இளநெற்சுரத்துக் குரத்திகள்(SIIV No.369)
    குறண்டி கனகநந்திப்படாரர் மாணாக்கன் பூர்ணசந்திரன் (SIIV No.359)
    குறண்டி…. தோரிபடாரர் மாணாக்கர் சிறு படாரர் (SIIV No.323)
    நல்கூர் அலநேமிப்படார் மாணாக்கிகள் நால்கூர்க்குரத்திகள் (SIVN6356)
    பட்டினிப்படாரர் மாணாக்கிகள் திருப்பருத்திக்குரத்திகள் (SiIV No. 372)
    படிக்கமணப்படாரர் மாணாக்கர் பவணந்திப் பெரியார் (SIIV No.381)
    திருமலையர் மோனிபடாரர் மாணாக்கர் தயாபாலப் பெரியார்
    புட்பநந்திப்படாரர் மாணாக்கர் பேறாநந்திப்படாரர் (SIIV No.391)
    திருமலை அரட்ட நேமிப்படாரர் மாணாக்கர்…. படாரர் (SIIV No.397)
    வேளற்குடி மூத்த அரட்டநேமிப்படாரர் மாணாக்கர் குணநந்திப் பெரியார் (SIIV No.398)
    சேந்தன் கி… காடன் திருபடாரர் மாணாக்கர் சீமாங்கிக் குரவடிகள் (SIIV No.399)
    திருநறுங்கொண்டை பலதேவக்குரவடிகள் மாணாக்கர் கனகவீரஅடிகள்(SIIV No.317)
    திருக்கோட்டாற்று விமள சந்திரக்குரவடிகள் மாணாக்கர் சாந்திசேன அடிகள் (SIIV No.333-390)
    திருநாட்டூர் விமள சந்திரக் குரவடிகள் மாணாக்கர் குண்ணூர் யோகியார் (SIIV No.384)

    பெருங்காடி…. தேவர் குரவடிகள் மாணாக்கர்….
    ஆணனூர் சிங்கநந்திக் குரவடிகள் மாணாக்கர், நாகநந்திக் குரவடிகள்

    உத்தநந்திக்குரவிகள் மாணாக்கர் சாந்திதேசனப் பெரியார் (SIIV No.316) பழயிறைக் காணிக்குரத்தி மாணாக்கியார் சிரிகுரத்தியார் (SIIV No.320)
    மிழலூர்க் குரத்தியார் மாணாக்கியார் திருச்சாரணுத்துப்பட்டாரிகள் (SIIV No.321)
    வெண்பைக்குடி தச்சன் சங்கக்குரத்திகள் (யார்) மாணாக்கியார்
    ஸ்ரீ(சிரி) விசயக்குரத்தியார் (SiIIV No.332 )
    நால்கூர்க்குரத்திகள் மாணாக்கி நாட்டிகப்படாரர் (SIIV No.355)
    பேரூர்க்குரத்தியார் மாணாக்கியார் மிழலூர்க் குரத்திகள் (SIIV No.394)
    சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்ட பதின்மர் வயிராக்கியர் (SIVNo.405)
    சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்ட ஐவர் வயிராக்கியர் (SIV No.406)
    திருமலைக்குரத்திகள் மாணாக்கன் ஏனாதிக் கூத்தன் (SIIV No.370) மம்மைக்குரத்திகள் மாணாக்கிகள் அட்டநேமிக்குரத்திகள் (SIIV No.371) (2007,ப.170)

    இக்கல்வெட்டுகளில் ஒவ்வொரு ஆசிரியரையும் குறிக்கும்போது அவரது ஆசிரியர் பெயரையும் இணைத்துக்குறிப்பிடும் மரபு இருப்பதை அறியமுடிகிறது. இன்று அந்த மரபு வழக்கொழிந்துவிட்டது எனினும் தற்போது சிலம்பம், வளரி போன்ற போர்க்கலைகளைக் கற்போர் தமது மரபை ஆசிரியர்களுடன் தொடர்புப்படுத்தும்போக்கு காணப்படுகிறது.

    கல்வெட்டுகளில் காணப்படும் ஆண்பால் ஆசிரியர்கள்

    1. கனகநந்திப் பட்டாரகர்
    2. குணசாகரப்படார்
    3. குறண்டி தீர்த்தபடார்
    4. குறண்டி கனகநந்திப்படாரர்
    5. குறண்டி தீர்த்தபடாரர்
    6. நல்கூர் அலநேமிப்படார்
    7. பட்டினிப்படாரர்
    8. படிக்கமணப்படாரர்
    9. திருமலையர் மோனிபடாரர்
    10. புட்பநந்திப்படாரர்
    11. திருமலை அரட்ட நேமிப்படாரர்
    12. சேந்தன் கி… காடன் திருபடாரர்
    13. திருநறுங்கொண்டை பலதேவக்குரவடிகள்
    14. திருக்கோட்டாற்று விமள சந்திரக்குரவடிகள்
    15. திருநாட்டூர் விமள சந்திரக் குரவடிகள்
    16. பெருங்காடி…. தேவர் குரவடிகள்
    17. ஆணனூர் சிங்கநந்திக் குரவடிகள்
    18. வேளற்குடி மூத்த அரட்டநேமிப்படாரர்

    பெண்பால் ஆசிரியர்கள்

    குரவர் என்பது சமண சமய ஆசிரியர்களையும் குரத்தி என்பது ஆசிரியைகளையும் குறிக்கப்பயன்படுகிறது. சில கல்வெட்டுகளில் குரவி என்ற பெண்பால் பெயரும் சமண சமயத்துறவிகளைக்குறிக்க வழங்குகிறது. உழவன் என்பதற்குப் பெண்பால் பெயர் உழத்தி ஆகும். நெல்லை வட்டார வழக்கில் உழத்தி, உழவி என இருபெயர்களும் வழங்கப்படுகிறது. குறவன் என்ற சொல்லின் பெண்பாலாக குறவி என்ற சொல்லையும் தமிழ்ப்பேரகராதி குறிப்பிடுகிறது. அதுபோல குரத்தி, குரவி என இரு பெண்பால் பெயர்கள் கல்வெட்டில் வருகின்றன.

    சமண சமயப்பெண்பால் துறவிகளைச் சமணர் இயக்கியர் (யட்சி) என்றும் ஆர்யாங்கனை என்றும் கந்தியார் என்றும் கூறுவர். கந்தியார் என்பது கவுந்தி என்றும் வழங்கப்படும் என்கிறார் மயிலை. குரத்தி, பட்டாரி, பட்டாரர், சாரணி, ஆரியை ஆகிய பெயர்களும் பெண்பால் துறவிகளை அழைக்கின்றனர்

    1. உத்தநந்திக்குரவிகள்
    2. பழயிறைக் காணிக்குரத்தி
    3. மிழலூர்க் குரத்தியார்
    4. வெண்பைக்குடி தச்சன் சங்கக்குரத்திகள்
    5. ஸ்ரீ(சிரி) விசயக்குரத்தியார்
    6. நால்கூர்க்குரத்திகள்
    7. பேரூர்க்குரத்தியார்
    8. திருமலைக்குரத்திகள்
    9. மம்மைக்குரத்திகள்

    குழுவாணை நல்லூர் என்று அழைக்கப்பட்ட கழுகுமலை சமணப்பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் பதினெழுவர் பெயர்களும் பெண் ஆசிரியர்கள் ஒன்பது பேர் பெயர்களும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகின்றன. இனி மாணவ மாணவியர் பற்றிக்காண்போம்.

    மாணவர்கள்.

    1. பேரெயிற்குடிச்சாத்தன்தேவன்
    2. ஆதித்த படாரர்
    3. கனகநந்திப் பெரியார்
    4. பூர்ணசந்திரன்
    5. சிறு படாரர்
    6. பவணந்திப் பெரியார்
    7. தயாபாலப் பெரியார்
    8. பேறாநந்திப்படாரர்
    9. குணநந்திப் பெரியார்
    10. சீமாங்கிக் குரவடிகள்
    11. கனகவீரஅடிகள்
    12. சாந்திசேன அடிகள்
    13. குண்ணூர் யோகியார்
    14. நாகநந்திக் குரவடிகள்
    15. சாந்திதேசனப் பெரியார்
    16. ஏனாதிக் கூத்தன்

    மாணவிகள்

    1. இளநெற்சுரத்துக் குரத்திகள்
    2. நால்கூர்க்குரத்திகள்
    3. திருப்பருத்திக்குரத்திகள்
    4. சிரிகுரத்தியார்
    5. திருச்சாரணுத்துப்பட்டாரிகள்
    6. ஸ்ரீ(சிரி) விசயக்குரத்தியார்
    7. மிழலூர்க் குரத்திகள்
    8. அட்டநேமிக்குரத்திகள்
    9. நாட்டிகப்படாரர்

    கழுகுமலைக்கல்வெட்டுகள் மூலமாக 16 மாணவர்கள் பெயர்களும் 9 மாணவிகளின் பெயர்களும் அறியவருகின்றன. மேலும் இதில் மாணவர்கள் பலர் பெண்பால் ஆசிரியர்களிடம் பயின்றதையும் மாணவிகள் ஆண்பால் துறவிகளிடம் பாடம் பயின்றதையும் கல்வெட்டு வழி அறியமுடிகிறது. இங்கு பல துறைகளில் வல்ல இருபால் ஆசிரியர்களிடம் மாணவர்களும் மாணவிகளும் ஒரே கூரையின் கீழ் கல்வி பயின்றுள்ளனர். வெளிப்பகுதிகளில் இருந்து வந்து பாடம் எடுத்துச் செல்லும் ஆசிரியர்களும் வெளியூர்களில் இருந்து கழுகுமலைக்கு வந்து தங்கி குறிப்பிட்ட பாடங்களைப் பயிலும் மாணவர்களும் இருந்துள்ளனர்.

    திருச்சாரணத்து மலையிலுள்ள வரகுண மன்னனது கல்வெட்டு பேரெயக்குடியை (கழுகுமலை)ச் சார்ந்த அரட்டநேமிபட்டாரகரின் சிஷ்யை குணந்தாங்கி குரத்தியைக் குறிப்பிடுகிறது. (2005,ப.116) அரட்டநேமிப்பட்டாரகர் ஆண் பால் முனிவரிடம் பெண்பால் துறவி பாடம் பயின்றிருப்பதை அறியமுடிகிறது.

    கழுகுமலைச் சமணச்சிற்பங்களில் உள்ள அச்சநந்தி பெயர் ஏர்வாடிக் கல்வெட்டிலும் இடம்பெறுகிறது. நாகர்கோவில் அருகிலுள்ள கோட்டாறு, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருநறுங்கொன்றை,திருமலை, குமரி மாவட்டத்தில் உள்ள திருச்சாரணத்து மலை, நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்ணூர்  தென்பாண்டி நாட்டுப்பகுதிகளான கோட்டூர்,களக்குடி, வேளற்குடி, வெண்பைக்குடி முதுகுடி நாடு ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆசிரியர்களும் மாணவர்களும் கழுகுமலைச் சமணப்பல்க்லைக்கழகத்திற்கு வந்து கற்றல் கற்பித்தல செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. கழுகுமலையில் உள்ள குழுவாணைநல்லூர் என்ற சமண சர்வகலாசாலையை நிறுவியவர் யாப்பருங்கலக்காரிகை என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதிய குணசாகரர் என்ற சமணத்துறவி ஆவார் (2007,ப.123) எனவே இங்கு சமண மத சித்தாந்தங்கள், நூல்கள் மட்டுமல்லாது தமிழ் இலக்கண இலக்கியங்களும் கற்பிக்கப்பட்டன என உய்த்துணர இயலுகிறது. இங்கு கணிதமும் வானியலும் கற்பிக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது. (2007,ப172-175) குழுவாணைநல்லூர் என அழைக்கப்படும் சமணப்பள்ளிக்கு ஏரி, அணைக்கட்டு, விளைநிலங்கள் இருந்தன என்பதும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. (2007,ப.176) கழுகுமலை சமணப்பல்கலைக்கழகம் என்ற அளவில் விளங்கிய பல் துறைகளில் வல்ல இருபால் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்ட சமணப்பள்ளியில் ஆண்களும் பெண்களும் சம அளவில் மாணாக்கர்களாக கல்வி கற்றனர் என்பதும் இத்தலம் மாணவர்களும் மாணவிகளும் தங்கியிருந்து பயிலும் உண்டு உறை கல்விக்கூடமாகவும் இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.

    சான்றாதாரங்கள்.

    1. வேங்கடசாமி,மயிலை.சீனி.,(1954). சமணமும் தமிழும். சென்னை:கழக வெளியீடு.
    2. Sivaramamurthy,C., (1961). Kalugumalai and Early Pandyan Rock-cut shirnes. Bombay: N.M.Tripathi Private Ltd.
    3. Sivaramamurthy,C., (1983) Panorama of Jain Art-South India. New Delhi : The Times of India
    4. காசிநாதன்,நடன.,சந்திரமூர்த்தி,மா.,(ப.ஆ). (2005) சமணத்தடயம். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
    5. கணபதி,செ.மா., (2005).கழுகுமலை வெட்டுவான்கோயில். திருநெல்வேலி : சங்கத்தமிழ்ப்பதிப்பகம்.
    6. கணபதி,செ.மா., (2007).கழுகுமலையும் சமணமும். கழுகுமலை : சங்கத்தமிழ்ப்பதிப்பகம்.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    கட்டுரை நன்று. கட்டுரையில் வேடல் என்ற சமண பெண்டிர்க்கான பல்கலைக்கழகம் பற்றிய குறிப்பைச் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


    Share
  • (Peer Reviewed) க.நா.சுவின் ‘அசுரகணம்’ – பித்தேறி அலையும் அடர் காமம்

    (Peer Reviewed) க.நா.சுவின் ‘அசுரகணம்’ – பித்தேறி அலையும் அடர் காமம்

    ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    முதுகலைத் தமிழாய்வுத்துறை
    ஜமால் முகமது கல்லூரி
    திருச்சி – 20.
    george.joshe@gmail.com
    +91 9788784958

    க.நா.சு தினமும் நாற்பது பக்கங்களுக்கு குறையாமல் எழுதிக் குவித்தார் என்று சொல்வர். அத்தனை பக்கங்கள் எழுதியிருக்க மாட்டார் எனப் ப்ரமிள் விமர்சித்ததும் ஊரறிந்தது. அவர் அப்படி எழுதினார் என்று எடுத்துக் கொண்டால், இந்நாவலை மூன்று நாட்களில் எழுதி முடித்திருக்கலாம். ஆனால், இதைத் திருப்திகரமாக எழுதி முடிக்க, பதினைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன் என முன்னுரையில் குறிப்பிடுகிறார் க.நா.சு. மேலும் இத்தனை காலம் நாவலின் தத்துவப் போக்கைப் கனப்படுத்த பயன்பட்டது என்று குறிப்பிடுகிறார். அவரது வார்த்தையிலிருந்தே, இது அவருக்கு எத்தனை முக்கியமான பிரதி என்பதை உணரலாம்.

    தாயைச் சிறுவயதிலே இழந்த இளைஞன் வாலிபம் மீதூறும் காலத்தில் தாயொத்த வயதுடைய பெண்ணின்மேல் உண்டாகும் காமத்தை, அடக்கியாளத் துன்பப்படும் நிலையே நாவலின் களம்.

    ஃப்ராய்டியம், இடிபஸ் உளச்சிக்கல் என நவீன உளவியல் கூறுகளின் புனைவாக்கமே அசுரகணம் என எடுத்துக் கொண்டு கடந்துவிடாதபடி செய்கிறது, இதன் ராமாயணத் தொன்மத்தின் மீளுருவாக்கப் பிறழ்ச் சித்திரிப்புகள்.

    அவதூதர், பொய்த்தேவு போன்ற நாவல்களில் ஞானத்தை அடைந்த, நிம்மதியை அடைய எண்ணித் துறவு பூண்ட கதாப்பாத்திரங்கள், இடம்பெற்றிருக்கும். அந்நாவல்களை விடவும் க.நா.சுவின் இருத்தலியல்சார் கேள்விகள், விசாரணை எய்தி வெளிப்பாட்டை நோக்கி நகரும் நாவல், அசுரகணம்.

    “ நாதசுர சப்தம் கேட்டால் யாருக்காவது சாவு நினைவுகளாக வருமோ?
    எனக்கு  வருதே என்ன செய்ய?”

    என்றுதான் நாவல் ஆரம்பிக்கின்றது.

    மங்களம் எனக் குறிப்பிட்ட நாதத்தை அமங்களமாக உணரும் இளைஞன் எனத் தொடக்கத்திலே நாவலின் போக்கை உணரத் தருகிறார், ஆசிரியர். தன்னுடைய வித்தியாசமான பார்வையினாலே ராமன் ’செமி (பைத்தியம்)’ என்று வகுப்பு மாணவர்களாலும் பேராசிரியர்களாலும் சுட்டப்படுகிறான். படிப்பில் முதலிடம் என்றாலும் பொது காரியங்களில் ராமனுக்கு அறிவு போதாது என்கிற விவரணைகள் ராமனைச் சிந்தனையாளனாக, தனித்து நிற்கும் புத்தி ஜீவியாக முன்வைக்கிறது.

    இடிபஸ் உளச்சிக்கல் என்பது எந்த இளைஞனுக்கும் இருக்கலாம். ஆனால், அதை ஓர் புத்திஜீவியான இளைஞன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதில்தான் பிரதியின் கனம் கட்டமைகிறது.

    ராமனின் அதிகப்படியான சிந்தனைப் போக்கிற்குத் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் முக்கியக் காரணமாக அமைகிறது. நடைப் பயணத்தில் அலாதியின்பம் காணும் ராமன், எங்கு சென்றாலும் நடந்தே செல்கிறான். அந்த நடைப் பழக்கமே அவனது சிந்தனைப் பெருக்கத்திற்கு உதவியும் புரிகிறது. மனிதர்களின் பலத்தரப்பட்ட முகவமைப்புகள் பற்றி வியக்கும் பார்வைகளுக்கு மத்தியில் க.நா.சு ராமனை, ஒவ்வொருவரின் தனித்துவமான கழுத்துகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் உறுப்புகளில் கூட மனிதர்களிடமுள்ள மாற்றங்களை எண்ணி வியக்கவும் வைக்கிறார்.

    நூல்கள், தங்கை என இரண்டைத் தவிர அவனுடன் உரையாடுவதற்கு யாரும் இல்லை. அவன் அதை உருவாக்கிக் கொள்ளவுமில்லை. தாயைச் சிறுவயதிலே இழந்த பாரதி, தந்தையுடன் ஒருமித்து வாழ முடியாதது போலத்தான் ராமனும் வாழ்கிறான். தான் தன் தந்தையைப் போல் இருந்துவிடக் கூடாதென்ற தவிப்புகள், அவனைத் துண்டாடுகிறது. தன்னியல்பாக நடந்து கொள்ளும் வேளையில் அவனை யாராவது தந்தையைப் போல் நடந்து கொள்கிறாய் என்று சொல்லிவிட்டால் சமநிலை குலைந்துவிடுகிறான்.

    சமநிலை அறுபடுவது, கற்பனையின் பிடியில் அவனைச் சமர்ப்பிக்கிறது. தன்னை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படும் வேளைகளில், அவனைப் ஆட்கொள்ளும் கற்பனை நிஜம் போலவே தோற்றம் கொண்டு ஆளுகை செய்கிறது.

    தன்னிலையின் இயல்பிலிருந்து பிறரைக் காண்பதிலுள்ள சிக்கல், அவர்களும் தன்னைப் போன்றே எல்லாக் காரியங்களையும் சிந்திப்பதாக மயக்கம் கொள்வது. ஆனால் ராமனின் தன்னிலையிலிருந்து எழும் சிந்தனை பிறர் தன்னைப் போல் எதையும் சிந்திக்கவோ அணுகவோ மாட்டார்கள் என்று மயங்குவதாக உள்ளது. தன்னுடைய போக்கை நியாயப்படுத்தும் சுயபச்சபாத உணர்வின், முழுத் தொகுப்பாகவே ராமன் எழுதப்பட்டிருக்கிறான்.

    சாதாரண காரியத்திற்காகச் சென்ற ஓரிடத்தில் கண்டடையும் அசாதாரணத்திலிருந்து மீட்சிக் கொள்ள வழியுண்டா? என அலைகிறது ராமனின் மனம். தன் வகுப்புத் தோழியின் தாயாக இருக்கும் மத்திய வயதுடைய பெண்ணின் அழகு ராமனைக் கொதிப்படையச் செய்கிறது. அவனுலகில் அவளது ரூபம், இயல்விதி கடந்து எங்கும் வியாபித்தலைகிறது. பெருந்தாபம் கனலாகிக் கருத்தில் வெற்றி கொள்ள முனகும் உடலின் கொந்தளிப்பை, பூர்வ கவியின் கற்பனை மாந்தர்களைக் கொண்டு அணைத்துவிட நினைக்கிறார், க.நா.சு.

    ராமன் அவளைச் சூர்ப்பணகையாகவே பார்க்கிறான். தனது இன்ப ஒடுக்கத்தைக் களவாடும் ரவிவர்மனின் மோகினியாகவே கண்டு கலங்குகிறான். இளமையை உடல் களையும் பருவத்தில், மீண்டுமாய் ருதுவெய்திய காலத்து பரிபூர்ண அழகு மேலெழுந்து மெருகேறுவதைக் கண்டு அல்லல் படுகிறான்.

    அவனது மீட்புச் சுயமாய் நிகழமுடியும் என நம்பமுடியாத நிலைக்குப் போய்விடுகிறான். சூர்ப்பணகையின் மூக்கறுக்க லட்சுமணன் வேண்டுமெனத் தேடுகிறான். இல்லாத லட்சுமணனைத் தெரிந்தே வரவழைக்கத் துடிக்கிறான். தாபத்தை மேலும் எரியூட்டி வளர்ப்பதாக உள்ளது, ஹேமாவின் வருகை. ஹேமா அச்சூர்ப்பணகையின் மகள். அவளைத் தான் விரும்புவதாகச் சிந்திப்பதன் பின்னாலும் அவளது தாயே உள்ளதைக் கண்டடைவதோடு நாவல் முடிகிறது. மகளைக் கைப்பிடித்ததால் தாயின்மேல் நாட்டம் விலகியதாகச் சொல்லும் ராமன், ஹேமாவைத் தாயாகப் பார்க்கும் நிலையிலிருந்து தன்னுடைய நிரந்தர போராட்டத்தைத் தொடக்கிவிடுகிறான். தாய் நிலையை மனைவிக்கு வழங்குவதில் மீண்டும் குடிகொண்டுவிடுகிறது ஃப்ராய்டின் தத்துவம்.

    இங்கே கேள்வி, அத்தாய்மைக் கருத்துரு இருவரில் யாருடைய தாயாக உருக்கொள்கிறது என்பதில் மீண்டும் முடிச்சு கிளைவிடுகிறது. நாவல் மறுவாசிப்பிற்கும், புதுதிறப்பிற்கும் கண்டடைதலுக்கும் அழைத்துச் செல்லும் பகுதி, இக்கேள்வியிலிருந்துதான் துளிர்க்கிறது.

    இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பிராமணச் சமூகத்தில் பெரும்பாலான பெண்களுக்குத் தனது முதல் மகளை, மணம் முடித்து வைக்கும்போது வயது, நாற்பதிற்குள் தானிருக்கும். பண்பாட்டு ரீதியாக மணவயது பொருட்படுத்தப்படாத காலத்தில் இளவயதிலே பெண்கள் பேரப்பிள்ளைகளை எடுத்துவிடுவார்கள். இன்றும்கூட சொற்ப அளவில் பெண்கள் இளவயதிலே தன் இரண்டாம் தலைமுறையைக் காண்பதைப் பார்க்கிறோம். அப்படியான இளவயதுடைய தன்னுடைய வகுப்புத் தோழியின் தாயாக இருப்பதும் அவள் கவர்ச்சிகரமாக இருப்பதுமே ராமனைத் திக்குமுக்காட வைத்ததன், பின்னணி.

    ராமன் என்கிற பெயருக்கு, பதிவிரதன் என்னும் பொருள் சூட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. அந்தத் தேய்வழக்குச் சிந்தனைப் போக்கை (Stereotype mentality) கூறுபோடுவது போல க.நா.சு, ராமனை நாலரை ரூபாய் கொடுத்து விலைமாதுவிடம் காதல் பயின்றதாகக் காட்சிப்படுத்துகிறார்.

    தன் தந்தையை நகல் செய்து வாழக்கூடாதென ராமன் நினைக்கிறான். தந்தையை வெல்லவேண்டுமென்பதே அவனுடைய ஏக்கமாக இருக்கிறது. இங்கு தந்தையை வெல்லுதல் என்பது தந்தையின் குணாம்சத்தை, தான் அறிந்தும் அறியாமலும் சுவீகரித்துக் கொண்டு தளைப்பட்டுவிடக்கூடாது என்பதாகும். ராமனுடைய தந்தை இதிகாசத்தின்படி தசரதன் தானே. தசரதனின் போக இயல்பைத் தானும் பின் தொடர்ந்து யாருக்கும் தளைப்பட்டு (தசரதன் கையேயிடன் தளைப்பட்டதைப் போல்) விடக்கூடாதென்று ராமன் நினைக்கிறான்.

    தசரதனின் போகந்துய்க்கும் பண்பு, நாவலின் தசரதனாகிய நாராயணனிடம் உள்ளதைச் சுட்டிக் காட்டுமிடம் நுட்பமானது. தான் காதல் பாடம் பயின்ற இடத்திற்குத் தந்தையும் அடிக்கடிச் சென்று வருபவர் என்பதால் அவருக்குத் தான் போய் வந்தது தெரிந்திருக்கும் என்கிறான் ராமன்.

    அதற்கு முன்னும் பின்னும் நாராயணின் அச்செயலைப் பற்றி எவ்வித அறவியல் தீர்மானமும் (Moral correctness) ராமனிடமிருந்து வெளிப்படவில்லை. ராமனே அத்தீர்மானப் போக்கிற்கு எதிரான மனநிலை உள்ளவனாகவே தன்னைக் குறிப்பிடுகிறான். இவையாவும் நேரடி கூற்றாகவோ நனவோடையாகவோ இடம்பெறாமல் நுண்வாசிப்பில் வெளிப்படுவது, இந்நாவலின் சிறப்பு. க.நா.சுவின் மறைபிரதி என்று அசுரகணத்தைக் குறிப்பிடுவது சாலத் தகும்.

    அந்தரங்கங்களிலிருந்து தப்பலாம் ஆனால் அந்தரங்கக் கதைகளிலிருந்து தப்புவது என்பது ஞானமடைந்ததாகத் திரிபுற்று சாக்கடைக் குழியில் சவமாகி மிதக்கும் சோமு பண்டாரத்தின் நிலைதான்.

    மானுட வாழ்வுள்ளவரை அவனுக்கு ஒழுக்கவியல் சிந்தனையும் போதிக்கப்பட்ட அறவியலை மீறுவதால் உண்டாகும் குற்றவுணர்வும் உள்ளவரை, அசுரகணங்களை அவன் எதிர்க்கொண்டுத்தான் ஆக வேண்டும். அதை நுட்பமாகவும் எக்காலத்திற்கும் பொருந்துவதாகவும் பிரதியாக்கிய க.நா.சு, இந்நாவலுக்காக என்றும் நினைக்கப்படுவார்.

    க.நா.சுவின் அசுர வார்த்தைகளாலே இக்குறுங்கட்டுரையை நிறைவுச் செய்கிறேன்:

    ”சிறை (புலன்) வாழ்வென்பது சுவடு தேய்ந்த பாதையிலே வளைய வருவதாகும்”.

    முதன்மை நூல்:

    1. க.நா.சு, அசுரகணம், எழுத்து பிரசுரம், சென்னை – 40, முதற்பதிப்பு – 2020.

    துணைமை நூல்:

    1. ஜெயமோகன், நவீனத்தமிழிலக்கியஅறிமுகம் கிழக்கு பதிப்பகம், சென்னை – 14, முதற்பதிப்பு – 2011.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review): 

    கட்டுரையாளர் அசுரகணம் நாவலைப் படித்துத் தெளிவாக உள்வாங்கி இருக்கிறார். தமிழ் இலக்கிய மரபில் வரும் பெருந்திணை சார்ந்த கதையாடல் இந்நாவலில் வந்திருப்பதை உளவியல் கண்ணோட்டத்தில் இடிபஸ் சிக்கலாக எடுத்துக் கூறுவது சிறப்பு. ராமனுக்கும் அவனது தந்தையாகிய நாராயணனுக்கும் இடையே இருக்கும் குணம் சார்ந்த தலைமுறைப் போக்கிலிருந்து விடுபட என்னும் ராமனின் முயற்சிகளைக் கட்டுரையாளர் மிகவும் கவனத்துடன் உற்று நோக்கி இருக்கிறார். ஒவ்வொரு மகனும் தனது தந்தையின் சாயலில் இருந்து விடுபட்டுத் தனக்கான அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற, போராடுகின்ற மனநிலை இங்குச் சிந்திக்கத்தக்கது. ராமனின் அப்பா பெண் சார்ந்த ஈடுபாட்டில் மயங்கி திரிவதில் இருந்து தான் மீண்டு வர வேண்டும் என்று எண்ணுகின்ற இயக்கப் போக்கு நாவலின் உட்சரடாக இருப்பதை இக்கட்டுரையாளர் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். க.நா.சுவின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பாங்கில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.


    Share
  • (Peer Reviewed) முனைவா் வெ. இறையன்புவின் சிறுகதைகளில் வாழ்வியல் விழுமியங்கள்

    (Peer Reviewed) முனைவா் வெ. இறையன்புவின் சிறுகதைகளில் வாழ்வியல் விழுமியங்கள்

    முனைவா் அரங்கன். மணிமாறன்.
    முதுகலை தமிழாசிரியா்
    அரசு மேனிலைப் பள்ளி
    பரமனந்தல் செங்கம் வட்டம்
    திருவண்ணாமலை மாவட்டம்.
    பேசி: 99430-67963.
    Mail: maranvmctamil@gmail.com.

    முன்னுரை:

    இலக்கியங்கள் மனித வாழ்வியலின் நகல்கள். அலங்கரிக்கப்பட்ட முகபாவங்கள். கற்பனையில் முகிழ்ப்பவை என்றாலும் அடிநாதமாக ஓங்கி ஒலிக்கும் மனித வாழ்வியல் தத்துவங்கள் நூற்றாண்டுகளின் வாழ்வியல் பிழிவுகள்.

    மனித வா்க்கம் முயன்று தவறி கற்ற நற்பண்புகள், வாழ்வியல் விழுமியங்களாய் நிலைக்கின்றன.உண்மை, உழைப்பு, தியாகம், விட்டுக்கொடுத்தல், அன்பு, கருணை, மானம், வீரம், மரபார்ந்த பெருமை ஆகிய இவையெல்லாம் அவ்விழுமியங்களின் அடையாளங்கள்.

    மனித வாழ்வியலின் சாரமாய் விளங்கும் விழுமியங்கள் முனைவா் வெ. இறையன்புவின் சிறுகதைகளில் வெளிப்படுமாற்றை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.

    முனைவா் வெ. இறையன்பு:

    “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

    இகல்வெல்லல் யார்க்கும் அரிது”1

    எனும் குறளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முனைவா் வெ. இறையன்பு அவா்கள் எளிய குடும்பத்தில் பிறந்தாலும் இடையறா தன் முயற்சியாலும் உழைப்பாலும் உயர்ந்த ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றி பெற்றவா்.உழைப்பும் மனித நேசிப்பும் அவா்தம் வாழ்வில் உயர இடையறாத பாடுபடுதலுமே தம்பணியின் அழகாய்க் கண்டவா்.

    சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் கீழ்நிலையில் உள்ள மனிதா்களோடு வாழ்ந்து அவா்களோடு பழகி அவா்களின் முன்னேற்றத்திற்கான தடைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவா்தம் வாழ்வில் ஒளிவிளக்கேற்றியவா். நொடிதோறும் மானுடம் வாழச் சிந்தனை செய்தவா். எதிரெதிரான அரசியல் சூழல்களிலும் நோ்மையும் தூய்மையும் நடுவுநிலையும் கொண்டு உயா்ந்தவா்.பல்வேறு துறைகளில் பணியாற்றி பல்லாயிரம் மனித முகவரிகளை அறிந்த அனுபவம் மிக்கவா். கண்டு கேட்டு படித்து உய்த்துணா்ந்த அனுபவங்களை சிறுகதை, புதினம், தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள் என எழுதிக் குவித்துச் சாதனை புரிந்துள்ளவா். பேச்சாலும் எழுத்தாலும் பணிகளாலும் உயா்ந்து தற்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளராக விளங்குகிறார்.  கற்பனையும் கவித்திறனும் நடை அழகும் கூட்டி இலக்கியங்கள் விரைந்து படைத்து படைப்பாளா்கள் பந்தயத்தில் வென்று விருதுகளும் வெற்றிகளையும் பெறுவதொன்றே நோக்கமாகக் கொண்டு எழுதுபவா் அல்லா் இவா். மக்களின் வாழ்வை அறிந்து அறிவுறுத்தி சீா்படுத்தி செம்மையுறுத்தி மனிதம் எனும் மகத்தான விளைச்சலைக் காண பாடுபடும் எழுத்துழவன் இவா். ஊக்கப்படுத்தலும் உயா்வழிக்காட்டலும் முன்னேற்றுதலும் இவா் எழுத்தின் குறிக்கோள்களாக உள்ளன.

    முனைவா் வெ.இறையன்பு படைப்புலகம்:

    சிறுகதை உலகில் வ.வே.சு ஐயா், புதுமைப்பித்தன், கு.பா.ரா, கல்கி,  அண்ணா, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், லக்ஷ்மி, திலகவதி போன்றோர் ஒரு மரபான பாரம்பரியத்தை உருவாக்கினா்.சிறுகதைகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் சிறந்து விளங்கி வருகின்றன.இம்மரபின் வழி வரும் முனைவா் வெ.இறையன்பு அவா்கள் அனுபவ வழி ஞானத்தை பலவகை படைப்புகளாக்கித் தருவதில் வல்லவராக விளங்குகிறார். கற்ற கல்வியறிவு, பெற்ற உலகியல் அறிவு, சிந்தனைத் திறன், மனிதம் செழிக்க வேண்டும் என்ற அக்கறை ஆகிய தனிச்சிறப்புகள் அவரது படைப்புகளில் வெளிப்படுவதை அறிய முடிகிறது.

    வாய்க்கால் மீன்கள், வைகை மீன்கள்,பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் சாகாவரம், அவ்வுலகம், ஆத்தங்கரை ஓரம் ஆகிய புதினங்களும், படிப்பது சுகமே, இலக்கியத்தில் மேலாண்மை, போர்த்தொழில் பழகு, பத்தாயிரம் மைல் பயணம், வையத்தலைமைகொள், ஏழாம் அறிவு(மூன்று பாகங்கள்), ஓடும் நதியின் ஓசை என சிறியதும் பெரியதுமாகிய கட்டுரை நூல்கள் என மொத்தமாக 102 நூல்களைப் படைத்துள்ளார். தொலைக்காட்சிகளிலும் இலக்கிய மேடைகளிலும் பட்டிமன்றங்களிலும் இவரது வலிமையான கருத்துகள் மென்மையான இதமான பேச்சாக மலர்ந்துள்ளன.இறையன்பு அவ்வப்போது எழுதிய சிறுகதைகள் அரிதாரம்,(2005), அழகோ அழகு(2009), நரிப்பல்(2009), பூனாத்தி(2012), நின்னினும் நல்லன்(2014) என ஐந்து தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.அவை மனிதர்கள் எத்தகைய நெருக்கடிகள் சிக்கல்கள் எதிர்கொண்டாலும் எங்கும் கசப்பும் துயரமும் பொங்கி வழிந்தாலும் மேன்மையான அம்சத்திற்கு முக்கியத்துவம் தருவதைச் சித்திரித்துள்ளன. இறையன்பு முன்னேறத் துடிக்கும் இளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். “இறையன்புவின் பெரும்பாலான கதைகள் வாழ்வின் விழுமியங்களை முன்னிலைப்படுத்தி வெளியெங்கும் அலைகின்றன. ஆணவம், அதிகாரம், வன்முறை போன்றன கட்டமைக்கிற வாழ்தல் முறையைப் படைப்புகளின் வழியாகத் தகர்த்து, மனித இருப்பின் உயர்வு குறித்து அக்கறைகொள்வது என்பது இறையன்புவிடம் இயற்கையாகவே இருக்கிறது.பண்டையத் தமிழிலக்கியத்தின் தொடர்ச்சியாக அறச்சீற்றமும், சிறுமை கண்டு பொங்குகிற மனதின் ஆவேசமும் அவருடைய புனைவுகளின் வழியாக வெளிப்படுகின்றன” 2 என்று ந.முருகேச பாண்டியன் தனது தொகுப்புரையில் விளக்குகிறார்.மனிதர்களுக்குள்ளிருக்கும் தெய்வீக உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்வதே என் படைப்புகளின் நோக்கம் என்று தனது படைப்புகளுக்கு விளக்கம் காட்டும் வெ.இறையன்பு அவா்கள் பெரிய அலை வந்து என்னை குலுக்குகிற போதெல்லாம் என் வாசிப்பும் எழுத்தும் நான் நிலைகுலைந்துவிடாதபடி பார்த்துக்கொள்கின்றன என்று தன் எழுத்தின் பலத்தை சுயஅறிமுகம் செய்கிறார்.வாழ்வியல் உணர்வுகளான பசி, ஏழ்மை, கல்வி, வேலைவாய்ப்பின்மை,பெண்ணடிமைத்தனம் ஆகிய தீமைகள் நீங்க வேண்டும். நாடு பலவகையிலும் முன்னேற வேண்டும் என்ற இலட்சியத்தோடு கதைகளைப் படைக்கிறார். நடைமுறை வாழ்க்கையிலுள்ள உணா்வுகளும் சாதாரணமாகக் காணும் காட்சிகள் சம்பவங்கள் ஆகியவற்றையும் நடப்பு வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைக் கதைகளாக்கிக் காட்டுகிறார். இவா் எழுத்தின் வலிமைகளாக எளிமை, அறிவுறுத்துதல், பண்படுத்துதல், இளைஞர்களை இலட்சிய பாதைக்கு அழைத்தல் முற்போக்கான வளர்ச்சி பாதையில் நாட்டை உருவாக்குதல் ஆகிய சிறப்பியல்களைக் கொண்டிலங்குவதை அறியமுடிகிறது. இத்தகு சிறப்புகளையுடைய வெ.இறையன்பு அவா்களின் சிறுகதைகளைக் கொண்டு வாழ்வியல் விழுமிய சிந்தனைகளை ஆய்ந்தறிவோம்.

    ஒற்றுமையே பலம்:

    “ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே-நம்மில்
    ஒற்றுமை நீங்கி லனைவா்க்கும் தாழ்வே
    நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
    ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்?” 3

    என்று மனிதர்களாகிய நமக்குள் இனம், மொழி, மதம் என பலவகையிலும் வேற்றுமைகள் ஏற்பட்டால் அது பகைவா்களுக்கு நல்வாய்ப்பாகி விடும். நம்மின் வேற்றுமைகள் அவா்தம் மேன்மைக்கு வழி வகுத்துவிடும் எனவே நம்மில் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளைக் களைந்து வாழ்தல் நம் வாழ்வுக்குக்கும் வளர்ச்சிக்கும் வழியாகும் என்பதை அரிதாரம் கதை மூலம் உணர்த்தியுள்ளார் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவா்கள்.

    அரிதாரம் கதையில் அந்த கிராமத்திற்கு புதிதாக வந்த வளா்ப்பு நாயின் தோற்றத்தையும் போஷாக்கையும் கண்ட அந்த ஊர் தெரு நாய்கள் அதற்கு பயந்து அடிமையாகி வாழ்கின்றன. தன் உணவு, சுதந்திரம் அனைத்தையும் இழந்து கிட்டதட்ட அடிமைகளாக வாழவேண்டிய நிலைக்கு ஆளாயின.அவற்றுள் சில கூடி தங்களின் அவல நிலையை உணர்ந்து ஒன்றுகூடி சீமை நாயை விரட்டிட போராட வேண்டும் என திட்டம் தீட்டின. இதை அறிந்த சீமை நாய் மடங்கிய காது நாய்களுக்கும் நிமிர்ந்த காது நாய்களுக்குமிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கி பிரித்தாளும் சூழ்ச்சியைக்  கையாள்கிறது.

    ‘மடங்கிய காது நாய்கள் தாங்கள்தான் உசத்தி என்று சொன்னதாய் விஷயம்          பரவியபொழுது நிமிர்ந்த காதுகளுக்கு எக்கச்சக்கமான கோபம் ஏற்பட்டது.’ 4

    பின்னா் இதுவும் சீமை நாயின் சூழ்ச்சி என உணா்ந்த நாய்கள் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டதை அறிந்து இந்த கிராமத்தை நீங்களே நிர்வகித்துக்கொள்ளுங்கள் இது உங்களுடையதுதான் என விட்டுச் செல்கிறது.

    அதன் பின்னா் அந்த ஊர் நாய்களுக்கிடையிலேயே தங்கள் பரம்பரை வகையடிப்படையில் பிரிவு ஏற்படுகிறது. சில நாய்கள் சீமை நாயே நம்மை ஆண்டிருக்கலாம். சுதந்திரம் பெற்று என்ன பயன் என்று அவை கேட்கின்றன. அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் விரும்பி அவை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

    மேம்போக்காக கேலியாகத் தோன்றினாலும் கசப்பான அரசியல் சூழலைச் சுட்டி ஒன்றுபட்டு வாழ வேண்டும். ஒற்றுமையே வாழ்வுக்கும் வளா்ச்சிக்கும் வழியாகும் என்ற விழுமியத்தை வெளிக்காட்டியுள்ளார் ஆசிரியா்.

    பொய்மையும் வாய்மை:

    பொதுவாக சிலரை நல்லவா் என்று நம்புவோம். ஆனால் அவா்கள் பொய்யானவா்களாக போலிகளாக இருப்பதை காலம் கடந்து தெரிந்துக்கொள்ளும்போது மனம் வருத்தம் கொள்ளும். மனிதா்கள் மீதான நம்பிக்கையை தகர்த்து எதையும் எவரையும் சந்தேகப்படு என்பதை நிலைநிறுத்திவிடும்.

    நரிப்பல் கதையில் மாவட்ட ஆட்சித்தலைவரை அடிக்கடி தேடிவரும் பழநி ஒரு நரிக்குறவா் எனும் பழங்குடியினா் என அறிந்து அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்கிறார். அவா்கள் வங்கியில் வாங்கும் கடன் தவணைகளைச் சரியாகத் திருப்பிச் செலுத்துபவா்கள் என்றறிந்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்.பழநி தங்கள் கிராமத்திற்கு ஆட்சியா் வரவேண்டும் என பலமுறை வலியுறுத்துகிறார். நரிப்பல் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கிறார். ஆனால் நேர்மையான ஆட்சியா் அதை ஏற்க மறுத்துவிடுகிறார்.

    பழநியின் பலநாள் கோரிக்கையை ஏற்று அடுத்த வாரம் அவருடைய கிராமத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார். அவா்களுக்கு பல திட்டங்களையும் கடனுதவிகளையும் தர திட்டமிடுகிறார். ஆனால் வங்கி அதிகாரிகள் அவா்களின் கடன்திருப்புதல் சரியாக இல்லை. மேலும் கடனுதவி செய்ய தயக்கம் காட்டுகின்றனா். ஆனால் ஆட்சியா் அவா்கள் சரியாக திருப்பிக் கட்டுவதாக அறிந்திருந்தார். தற்போதைய தகவல் அவருக்கு ஏமாற்றமாகிறது.

    ‘நான் என்னென்னமோ பிளான் வச்சிருந்தேன்.தொகுப்பு வீடு கட்டித்தரணும். முதியோர் கல்வி வகுப்புகள் நடத்தணும். ஆடு கோழி வளா்க்க லோன் ஏற்பாடு பண்ணணும். அவா்கள் வாழ்க்கைய குறும்படமா எடுத்து மத்திய தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பட்டியல்ல சேக்கணும்.. இப்படி ஏகப்பட்ட ஆசை எனக்கு இருந்திச்சி…’5

    பின்னா் பழநி அடிக்கடி ஆட்சியா் சென்று வரும் செல்வாக்கைப் பயன்படுத்தி நரிக்குறவா்களிமிருந்து வங்கி கடன் கட்டுவதாய்ப் பணத்தைப் பெற்று கட்டாமல் கண்டபடி செலவு செய்ததை அறிந்து வருத்தம் அடைகிறார். மனிதர்கள் மீதான நம்பிக்கை பொய்த்துப் போன போது அவா் மனம் கனத்துப் போகிறது.

    அவனை இனிமேல் உள்ளே விடவேண்டாம் என எச்சரிக்கிறார். அவா் அந்த ஊருக்குச் செல்வதாய் இருந்த நாளில் பழநியும் அவனது மனைவியும் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறார். ஊராருக்கு தன் கள்ளம் தெரிந்துவிட்டதால் பழநி எடுத்த முடிவை எண்ணி துயரமுறுகிறார்.

    பழநி அடிப்படையில் ரொம்ப நல்லவன். அவன் இழப்பு அவா்தம் இனத்தாரிடம் கசப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிந்தபின் அவனது அண்ணன் மகன் பாபு பழநி ஆட்சியரிடம் தரச்சொல்லியதாக ஒரு பொட்டலத்தைத் தருகிறான். அதில் அந்த நரிப்பல் இருந்ததை பெறுகிறார்.

    நம்பிக்கையானவன் அந்த நம்பிக்கை இழக்கும்படியான செயலைச் செய்தாலும் மனிதத்தின் மீதான நம்பிக்கையை  இழக்க செய்யாமல் காத்த ஆட்சியரின் விழுமியம்

        “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவா்நாண
    நன்னயம் செய்துவிடல்” 6

    என்ற மனித விழுமியச் சிந்தனை இச்சிறுகதையில் வெளிப்படுகிறது.

    விருது சிறுகதையில் சாதாரண கிராமத்தில் ஏழைக்குடிசையில் பிறந்த டிக்காராம் கடுமையான முயற்சியாலும் பயிற்சியாலும் போலீஸ் அதிகாரி ஆகிறான். அவனுக்கு கொடுமையான கொள்ளையா்களை பிடிக்கும் சவாலான பணி வழங்கப்படுகிறது. அதை மிகுந்த சிரமங்களுக்குள் செய்து கொள்ளைக் கூட்டத் தலைவனை சுட்டுப்பிடிக்கிறான். அந்த கிராமத்தையே கொள்ளைக் கூட்டத்தினமிருந்து காத்து நிம்மதி ஏற்படுத்துகிறான்.

    கொல்லப்பட்ட கொள்ளையா்களின் தலைவன் டாகூ ராம்சிங்கின் புகைப்படங்களை வைத்து ஆவணங்களை ஆய்ந்தபோது பிற்கால ஆவணங்களில் அவனது பெயா் விடுபட்டிருந்தது. இதைப்பற்றி அறிய முயல முன்னாள் டி.ஜி.பி மகேஷ்சிங்கை தொலைபேசியில் தொடா்புகொள்ளக் கூறுகின்றனா். அவா் இந்த தகவலை யாரிடமும் கூற வேண்டாம் என்கிறார். இதேப்போன்று முன்பு நடந்த யுத்தத்தில் ஒரு கொள்ளையனைக் கொன்றோம். அவன் முகம் சிதைந்திருந்ததால் அது ராம்சிங்தான் எனக்கூறிவிட்டோம்.

    ‘நான் ராம்சிங்கைச் சுட்டுக்கொன்றதாக அரசுக்கு அனுப்பிவிட்டேன். எனக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்துவிட்டது.இப்போது வேறுவிதமாக அறிக்கை அனுப்பினால் அரசு என்னைப் பணியிலிருந்து நீக்கிவிடும்’.7

    எனக் கெஞ்ச டிக்கா கவலைப்படவேண்டாம் என தேற்றி அறிக்கையை மாற்றி அடையாளம் தெரியாத தலைவன் சுடப்பட்டான் என செய்தியைத் தருகிறார்.

    முன்னா் நடந்துவிட்ட தவறுக்காக தான் புரிந்த வீரதீரமான சாதனையையும் மறைத்து சக அதிகாரியைக் காப்பாற்றும் டிக்காராமின் செயல் பொய்மையும் வாய்மையிடத்த என்ற திருக்குறளின் விழுமியத்தைக் காட்டி நிற்கிறது.

    இளமையில் இலட்சிய வாழ்வு:

    இளமைப் பருவம் என்பது எதையும் செய்து முடிக்கும் வலிமையும் அறிவுத்திறனும் துடிதுடிப்பும் மிக்க பருவம். இப்பருவத்தில் யாரொருவன் தன்னை பலவகையிலும் வாழ்வில் நிலைநிறுத்திக் கொள்ளும் வழிகளில் ஈடுபடுத்திக்கொள்கிறானோ அவன் முன்னேற்றம் காண்கிறான்.

    இளமைக்காலத்தை பிரம்மச்சரியம் எனும் பருவமாகக் குறித்தனா் நம் முன்னோர்.கல்வி, அறிவு, பணிவு, எதிர்கால வாழ்வுக்கான இலட்சிய பாதையினை உருவாக்குதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட ஏற்ற பருவமாக இது அமைகிறது.

    முற்காலங்களில் குருகுலவாசம் எனும் கல்வி முறையில் தூய்மை, துறவு, சேவை, பணிவு ஆகிய நற்குணங்கள் வளா்த்தெடுக்கப்பட்டன. ஆனால் இன்றைய சுதந்திர நிலை கற்றலில் அறங்கள் நிறைந்த இளமைப்பருவம் காணாமல் போய்விட்டதை உணர்கிறோம்.

    கல்லூரிக் காதல் சிறுகதையில் கதைநாயகன் சேதுபதி எனும் வயதில் மூத்த நண்பனைச் சந்திக்கிறான். அவனது பண்பும் பாசமும் நாயகனுக்குப் பிடித்துப்போகிறது. பேச்சை விட அமைதி சிறந்தது. விடுதியில் தங்கி படிப்பதால் நிறைய நேரம் கிடைக்கும். நிறைய படிக்கவேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறுகிறார்.

    நாயகனின் உடன்படிக்கும் இளைஞா்கள் கேளிக்கை, ஊர்ச்சுற்றுதல், திரைப்படம், பெண்களைப்பற்றிய நினைப்பு ஆகியவற்றில் மூழ்கியிருக்கின்றனா். ஆனால் நாயகன் தன்னை பலவகையிலும் மேம்படுத்துக்கொள்ளும் முயற்சியில் நிற்கின்றான்.

    மற்ற ஆடவா்களெல்லாம் பழக விரும்பும் அழகியான மலா்மல்லிகை இவனை விரும்புகிறாள். சுற்றிச்சுற்றி வருகிறாள். அவனை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகிறாள். ஆனால் நாயகன் தான் இன்னும் அதற்கெல்லாம் தயாராகவில்லை எனவும் படிக்கவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகலாம் எனவும் கூறி மறுத்துவிடுகிறான்.

    “வாழ்வு நதியாக ஓடிக் கொண்டிருப்பது பனியாக இறுகிக் கொண்டிருப்பது அல்ல. அந்தக் காலகட்டத்தில் என்னைக் காட்டிலும் அறிவுள்ள அழகுள்ள என்னிடம் அன்பு காட்டுகின்ற மனிதன் கிடைத்தால் அவன் தோள்கள் என் தோள்களைக் காட்டிலும் பரந்ததாகத் தோன்றலாம். எந்த ஒப்பந்தமும் மீறக்கூடியதே!” 8

    என்று பக்குவமான இளைஞனாக எடுத்துக்கூறுகிறான். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழும் இளைஞா்களுக்கு இடையில் இவ்வாறான கல்வி, இலட்சியம், குறிக்கோள் கொண்ட இளைஞனைப் படைத்து எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய இளைஞா்களுக்கு வழிகாட்டுகிறார்.

    தன்னை வேட்டல்:

    பொதுவாக நாட்டின் நன்மைக்காக பொது அமைதிக்காக தான் துன்பமுற்றாலும் தன்னால் நன்மைக் கிடைக்கிறதென்றால் அதற்காக தன் உயிரையும் தரும் மனமுடைய மக்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் அழியாதிருக்கிறது.

        “புகழ்எனில் உயிரும் கொடுக்குவா் பழிஎனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலா் அயா்வுஇலா்
    அன்னமாட்சி அனையராகி
    தமக்கென முயலா நோன்றாள்
    பிறா்க்கென முயலுநா் உண்மை யானே” 9

    என்ற புறநானூற்று பாடல் இங்குப் பொருந்துகிறது.

    துறந்தான் மறந்தான் சிறுகதையில் மகத நாட்டில் வரலாறு காணாத வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. மக்கள் செத்து மடிகின்றனா். எல்லாத் திசைகளிலிருந்தும் துன்பமான செய்திகளே செவிக்கெட்டுகிறது. மன்னன் சந்திர குப்த மௌரியன் துறவி பத்திரபாகுவை சந்தித்து இத்துன்ப நிலையை மாற்றிட உபாயம் வேண்டுகிறான்.

    ‘அப்பாவி மக்கள் இவ்வாறு அலைகழிக்கப்படுகிறார்கள் என்றால் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் யாரோ பாவம் செய்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.அதற்கான பிராயச்சித்தமே இந்த நாட்டைக் காப்பாற்றும்’.10

    என்று கூறுகிறார்.

    இதனை அறிந்து மன்னன் நாட்டில் நிலவும் வறுமையும் துன்பமும் தீர தான் இளவரசனுக்கு பட்டம் சூட்டிவிட்டு துறவு மேற்கொள்வதாக உறுதியேற்று செயல்படுத்துகிறான்.

    ‘மகத்தான இந்த மகத சாம்ராஜ்யத்தில் அந்த உயிர்த் தியாகத்தால் அனைவரும் சுபிட்சமாக இருக்க வேண்டும்.சந்திரகுப்த மௌரியன் பதவிக்கு ஆசைப்பட்டவனல்ல என்பதை சரித்திரம் எப்போதும் உணரவேண்டும்’. 11.

    என்று நாட்டின் நன்மைக்காக தன் பதவியைத்துறந்து துறவியாகி உயிர்த்துறக்கவும் தயாராக இருக்கும் மன்னனின் தியாக மனநிலையை எடுத்துக்காட்டுவதன் வழி பொதுநலனுக்காய் தியாகம் செய்யவும் முன்வரவேண்டும் என்ற வாழ்வியல் விழுமியம் வெளிப்படுவதை அறிகிறோம்.

    நேர்மை குணம்:

    நேர்மை குணம் கொண்ட மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னமும் நிலைபெற்றிருக்கிறது. இன்னமும் உலகில் மழைப் பொழிகிறது.ஊழிக்காற்றிலும் யுகமுடிவிலும் ஆழிப்பேரலைகளாலும் கடும் பஞ்சத்தாலும் பெருமழையினாலும் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் எல்லாத் துன்பங்களை தாண்டியும் உலகம் தன்னை மீண்டும் நிலைநிறுத்துக் கொண்டு நீடிக்கிறது.

    நோ்மைக்கு சோதனை அதிகம். சோதனைகளை தாங்கும் உள்ளமே நோ்மையில் சிறந்து விளங்கும்.

    நாய்ப்பிழைப்பு சிறுகதையில் ஜோசப் என்பவா் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது பயணப்படி சம்பளப்பட்டியல் கேள்விக்குரியாகிறது. தினவனந்தபுரத்திற்கு மூன்று முறை சென்று வந்ததற்கான பயணப்படி அது. ஆனால் நிதி அலுவலா் கணேசன்  அந்த ஊரில் கம்பெனியின் கிளை இல்லாதபோது அங்கு பணிநிமித்தமாக சென்றுவந்ததேன் என கேட்டு நிறுத்துகிறார். அது கம்பெனி எம்.டி யின் பீகில் வகை நாய்க்கான மேட் தேடிச்சென்ற விடயமாகத்தான் என்று கூற, அதற்கெல்லாம் பயணப்படி தரமுடியாது என்கிறார். ஜோசப்பும் என் சொந்த செலவில் சென்று வந்ததாகவே இருக்கட்டும் என பயணப்படி பட்டியலை திரும்பப் பெறுகிறார். ஆனால் கம்பெனி எம்.டி காக தான் பட்ட நாய்படாதபாட்டையும் அதற்கான பயணப்படி கிடைக்காதபோதும் தன் செலவாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என  எடுத்துக்கொள்ளும் பக்குவமும் உணா்த்தப்பட்டிருக்கிறது.

    நோ்மை சிறுகதையில் குப்பன் என்ற அரசு அலுவலா் இறந்துவிடுகிறார். அவரது மரணத்திற்குப்பிறகு கிடைக்கவேண்டிய பணம் அவரது முதல் மனைவி தங்கத்துக்குத்தான் கிடைக்கவேண்டும் என்கிறார்.கோபாலன். அவா் எதையும் விதிமுறைப்படியே செய்பவா். ஆனால் சுப்ரமணியன் மனித நேயத்தையே பெரிதாக மதிப்பவா். குப்பன் இரண்டாவது மனைவி  செண்பகத்திற்கும் அவா்களது நான்குப் பிள்ளைகளுக்கும்தான் கிடைக்கவேண்டும் என்கிறார். தங்கம் சில காலங்களிலேயே குப்பனை பிரிந்து வேறு திருமணம் செய்து வாழ்கிறாள்.ஆனால் சட்டபடி குப்பனது வாரிசாக குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

    செண்பகம் குப்பனோடு வாழ்ந்தாலும் பிள்ளைகளை பெற்றிருந்தும் சட்டப்படியான வாரிசாக இல்லை. இதனைத் தீர்க்க தங்கத்தைத் தேடி பேசிப்பார்க்கின்றனா். வேறு வழியின்றி அவளிடமே மொத்த பணப்பலன்களையும் தருகின்றனா். ஆனால் அவள் தான் அவருடன் வாழ்ந்தது கொஞ்ச காலமே. தற்போது இரண்டாம் திருமணம் செய்த கணவரும் இறந்திருந்தாலும் குப்பனது பணப்பலனுக்கு உரியவள் செண்பகமே. அவளே அவரோடு வாழ்ந்தாள் சுகதுக்கங்களில் பங்கேற்றாள். வாரிசு பெற்றாள். எனவே அவளுக்கு மொத்த பணமும் சேரவேண்டியது என கொடுத்து விடுகிறாள்.

    ‘சாமி! இந்தப் பணத்துல நயா பைசாவக்கூட நான் தொட மாட்டேன். இதுல ஒரு டீ வாங்கிச் சாப்பிடக்கூட எனக்கு உரிமை இல்ல. அந்த மனுசனோட குடும்பம் நடத்தி பொங்கிப்போட்டு புள்ளைங்களைப் பெத்துக்கிட்ட இந்தப் பொம்பளைக்குத்தான் அத்தனை பணமும் சேரணும்’.12

    இங்கே சட்டத்தால் சிக்கல் நோ்ந்தாலும் நோ்மையும் மனிதநேயமுமே வெல்கிறது. சிக்கல் எளிதாக தீர்கிறது. பிறா்க்கு நியாயமாக கிடைக்கவேண்டியதை சட்டப்படியாக இருந்தாலும் தாம் ஏழ்மையில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளாத தங்கம் பெயரளவில் மட்டுமல்ல உண்மையிலும் தங்கம்தான் என முடிக்கிறார்.

    இன்றும் எங்கோ தொலைத்துவிடும் நகைகளையும் ரொக்க பணத்தையும் நோ்மையாக ஒப்படைத்துவிடும் மனிதர்கள் சிலரை காணும்போது மனிதம் கெட்டுப்போகாமல் சுழலும் உலகை நினைக்க பெருமையாகத்தான் உள்ளது. வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது.

    நின்னினும் நல்லன் சிறுகதையில் கருப்பச்சாமியிடம் பொன்னுமுத்து கடன்வாங்குகிறார். சொன்ன தேதியில் கடனைத்திருப்ப இயலவில்லை. இதனால் இருவரிடையே வாக்குவாதம் நடைபெறும்போது பேராசிரியா் முகமது ஷா தலையிட்டு அவரது நிலத்தை விற்று பணம் தர மூன்று மாத கால அவகாசம் கேட்கிறார்.ஆனால் பொன்னுமுத்துவால் மூன்று மாதம் கழித்தும் நிலத்தை விற்று கடனை அடைக்க முடியவில்லை. காரணம் அவசரத்திற்கு விற்காததால் யாரும் சரியான விலை கேட்கவில்லை. விற்க முடியவில்லை. அதனால் முகமது ஷா தனது வருங்கால வைப்பு கணக்கிலிருந்து பெற்ற கடன்தொகையை கருப்பசாமியிடம் கொடுத்து சொல்லைக் காப்பாற்றிக் கொள்கிறார். பொன்னுமுத்து இதை கேள்வியுற்று தன் நிலத்தை பணத்திற்குப் பதிலாக கிரையம் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். ஆனால் ஷா அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். இறுதியாக ஷா பெயரில் அந்த நிலம் பத்திரப் பதிவாகிறது. பயன்படாத அதிக விலைபோகாத அந்த நிலத்தில் தென்னங்கன்றுகளை வைக்கிறார் ஷா. கால மாற்றத்தில் அந்த நிலத்தை கம்பெனிகாரா்கள் அதிக விலைக்குக் கேட்கின்றனா் மூன்று இலட்சத்திற்கு வாங்கிய நிலம் ஒரு கோடிக்கு விலைக்குக் கேட்கின்றனா். ஷா பொன்னுமுத்துவிடம் நிலத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கேட்கிறார். ஆனால் பொன்னுமுத்து

    ‘நல்லா சொன்னீங்கய்யா. நீங்க மட்டும்தான் சோத்துல உப்பு போட்டு சாப்புடுறீங்களா? எங்களுக்கும் மானம் ரோசம் இருக்கு. கொடுத்ததைத் திருப்பி வாங்கற புத்தி எந்தக் கஷ்டத்திலேயேயும் எங்களுக்கு இருந்ததில்லை’. 13

    என்று கொடுத்த நிலம் கொடுத்ததுதான் என மறுத்துவிடுகிறார்.

    தான் என்னதான் பணக்கஷ்டத்திற்காக வாங்கியிருந்தாலும் தக்க நேரத்தில் உதவியிருந்தாலும் பல மடங்கு பொறுமான நிலத்தையும் அதன் விலை மதிப்பையும் பொன்னுமுத்துவிற்கே தந்துவிட நினைக்கும் முகமது ஷாவும் தற்போது என்ன விலையாக உயா்ந்திருந்தாலும் விற்றுவிட்ட நிலத்தின் மதிப்பு தனக்குத் தேவையில்லை என மறுக்கும் பொன்னுமுத்துவும் மரித்துவிடாத நேர்மையும் நாணயமும் உலகில் நிலைப்பதற்கான மனித சாட்சிகள். இவா்களால்தான் உலகம் சுழல்கிறது.

    முடிபுகள்:

    1. மனிதர்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு வாழவேண்டும். இல்லையெனில் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாகிவிடும்.ஒற்றுமையே பலம் என்று உணரவேண்டும். அடிமை வாழ்க்கையை விரும்பக்கூடாது.
    2. குற்றம்பார்க்கில் சுற்றம் இல்லை.மனிதர்களில் சில குற்றம் குறைகள் இருந்தாலும் அதனை பெரிதுப்படுத்தி மனிதத்தை காயப்படுத்திவிடக்கூடாது. சில சூழல்களில் அடுத்தவா் நலனுக்காக தன் சாதனைகளையும் மறைத்துக் கொள்ளும் மனித நேயா்களும் உள்ளனா்.
    3. இளமைப் பருவத்தில் மனதை சுகங்களில் திளைக்கவிடாமல் திறன்களை பெறுவதற்கான பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். இலட்சிய நோக்குள்ள இளைஞா்களையே நாடு எதிர்நோக்குகிறது.
    4. பொதுநலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் நீதிகளை நிலைநாட்டவும் தன்னையே தந்த தியாகச் செம்மல்கள் வாழ்ந்த நாடு இது. அவா்களின் தியாக மனப்பான்மையிலிருந்து இன்றைய இளைஞா்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
    5. மானம் பெரிதென வாழ்ந்த கவரி மான் பரம்பரையினா் நம் தமிழா். அடுத்தவா் பொருளையும் புகழையும் குறுக்கு வழிகளில் தாம் பெறக் கருதக்கூடாது. அது நம் மானத்திற்கு இழுக்கு.
    6. சொல் திறம்பாமை மனிதா்களின் உயா்குணம். எந்த நிலையிலும் அந்நற்குணத்திலிருந்து மாறிவிடக்கூடாது.அடுத்தவா் உழைப்பையும் அடுத்தவா் சொத்தையும் விரும்பாத நோ்மைத் திறம் மாறா மனிதர்கள் மனித விழுமியத்தின் ஆணிவோ்கள். நல்லோர் கெடுவதில்லை.
    7. உண்மை, நோ்மை, தியாகம், பற்றின்மை, பொதுநலம், தொண்டு மனப்பான்மை, மனிதமே புனிதமாய் வாழும் தூய்மை ஆகிய இவையே வெ.இறையன்புவின் சிறுகதைகளின் முடிபான வாழ்வியல் விழுமியங்களாக விளங்குவதை ஆய்ந்தறியப்பட்டன.

    சான்றெண் விளக்கம்:

    1. திருக்குறள்- திருவள்ளுவா்- பொருட்பால்-சொல்வன்மை அதிகாரம் குறள் எண் 647 ஜி.யு போப் ஆங்கில மொழியாக்கம் நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட் 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை-98 மூன்றாம் பதிப்பு செப்டம்பா் 2012 ப.133
    2. ந.முருகேச பாண்டியன்- தேர்வு மற்றும் தொகுப்பு- தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைககள்- நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட் 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை-98 மூன்றாம் பதிப்பு-2019.
    3. மகாகவி சுப்ரமணிய பாரதி-பாரதியார் கவிதைகள் தேசிய கீதங்கள்- வந்தே மாதரம் பாடல்- ப.124-பதிப்பு முனைவா் ச. மெய்யப்பன் –தென்றல் நிலையம் சிதம்பரம்-608001 முதல்பதிப்பு-2000
    4. தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்- தேர்வும் தொகுப்பும் ந.முருகேச பாண்டியன்-அரிதாரம் சிறுகதை ப.5 நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட் 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை-98 மூன்றாம் பதிப்பு-2019.
    5. மேற்குறிப்பிட்ட நூல் நரிப்பல் சிறுகதை ப.13
    6. திருக்குறள்- திருவள்ளுவா்- அறத்துப்பால்- இன்னா செய்யாமை அதிகாரம் குறள் எண்: 314 ஜி.யு போப் ஆங்கில மொழியாக்கம் நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட் 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை-98 மூன்றாம் பதிப்பு செப்டம்பா் 2012 ப.65
    7. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்- விருது சிறுகதை ப.99
    8. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்- கல்லூரிக் காதல் சிறுகதை ப.57
    9. புறநானூறு கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடல் எண் 182- ப.256 ஞா.மாணிக்கவாசகன் உரை- உமா பதிப்பகம் 18 பவளக்காரத் தெரு மண்ணடி சென்னை-600001 நான்காம் பதிப்பு-பிப்ரவரி
    10. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்-துறந்தான் மறந்தான் சிறுகதை ப.67
    11. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்- துறந்தான் மறந்தான் சிறுகதை ப.70
    12. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்-நேர்மை சிறுகதை பக்.78-79
    13. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்- நின்னினும் நல்லன் சிறுகதை ப.114

    துணைநூற் பட்டியல்:

    முதன்மை நூல்:

    1. தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள், (தேர்வும் தொகுப்பும் ந.முருகேச பாண்டியன்), நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்- சென்னை-98 மூன்றாம் பதிப்பு-2019.

    துணைமை ஆதார நூல்கள்:

    1. திருக்குறள்- தமிழ்- ஆங்கிலம், ஜி.யு+ போப் ஆங்கில மொழியாக்கம், நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர் சென்னை-98, மூன்றாம் பதிப்பு-செப்டம்பா் 2012.

    2. பாரதியார் கவிதைகள், பதிப்பு முனைவா் ச. மெய்யப்பன், தென்றல் நிலையம் சிதம்பரம்-608001, முதல்பதிப்பு-2000.

    3. புறநானூறு, ஞா.மாணிக்கவாசகன் உரை, உமா பதிப்பகம், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி சென்னை-600001, நான்காம் பதிப்பு-பிப்ரவரி 2010.


    ஆய்வறிஞர் கருத்துரை: (Peer Review)

    தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதை, புதினம், சிந்தனை வெளிப்பாடுகள் மூலம் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் வெ. இறையன்பு (இ.ஆ.ப.). அவருடைய சிறுகதைகள் சமூகச் சிக்கல்களை முன்வைத்து அதற்குத் தீர்வு காணும் நோக்கில் எழுந்தவை. அத்தகைய சிறுகதைகளில் காணப்படும் வாழ்வியல் விழுமியங்களைக் கட்டுரையாசிரியர் திறம்படத் தொகுத்துக் கூறியுள்ளார். அயலக இலக்கிய வடிவமான சிறுகதையைத் தமிழ் மொழி ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உள்வாங்கிக் கொண்டது என்றாலும், அதனுடைய உச்சம் தொடுவதற்கும் சில ஆளுமைகளின் படைப்புகள் உதவின. அந்த ஆளுமைகளின் வரிசையில் தற்காலத்தில் நம்மிடையே திகழ்பவர் வெ. இறையன்பு. சமூக ஒழுங்கு, சமநீதி, மானுட மாண்பு, அறமும் அன்பும் பிணைந்து கொள்ளுகிற தருணங்கள், அரசியல், சட்டச் சிக்கல்கள் ஏற்படுத்தும் வாழ்வியல் முடிச்சுகள், இன்னும் தீர்ந்து விடாத மானுட அழுக்குகள் என பல தளங்களில் பரக்கப் பேசும் இவருடைய சிறுகதைகள் காலங்கடந்தும் நிலைபெற்றுத் திகழக் கூடியவை. இதனைக் கட்டுரையாசிரியர் பிழிவாக எடுத்துக் காட்டியுள்ளார். சிறுகதைகளுக்குள் ஊடுபாவாகச் சங்கத் தெறிப்புகளும், வள்ளுவத்தின் முத்துகளும் பரவிக் கிடப்பதையும் கட்டுரையாசிரியர் புலப்படுத்த முயன்றிருப்பது பாராட்டுக்குரியது.

    Share
  • (Peer Reviewed) தன் சீர் தனது ஒன்றின் தன் தளையாம்

    (Peer Reviewed) தன் சீர் தனது ஒன்றின் தன் தளையாம்

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    (தமிழ் யாப்பியல் மரபில் சீர் மற்றும் தளை பற்றிய ஓர் ஆய்வு)

    ஆய்வு அறிமுகம்

    மரபுக்கவிதை, புதுக்கவிதை எனத் தமிழ்க் கவிதைகள் இரு வகைபாட்டுக்குள் அடங்கலாம். பொதுவாக யாப்பிலக்கண அடிப்படையில் எழுதப்படும் கவிதைகளை மரபுக்கவிதைகள் என்பது பெருவழக்கு. உண்மையில் ‘மரபுக்கவிதை’ என்னும் சொல்லுக்கான பொருளடர்த்தி இன்னும் ஆழமாயினும் ‘யாப்பில்லாதவையெல்லாம்’ புதுக்கவிதையாகக் கொள்ளப்படுதலின் ‘யாப்பு உள்ளவையெல்லாம்’ மரபுக்கவிதை எனக் கருதப்பட்டிருக்கலாம். இரண்டிலும் ‘கவிதை’ என்பது தனி., எழுத்து மரபு, சொல் மரபு, பொருள் மரபு, கூற்று மரபு, வழக்கு மரபு என மரபு என்பது பல பரிமாணங்களையும் உடையது. இந்த அடிப்படையில் அமைந்த கவிதைகள் மிகச் சிலவே. யாப்பமை கவிதைகளுக்கான வடிவக் கோட்பாடு ‘யாப்பிலக்கணம்’ என்ற பொருண்மையில் அமைந்துள்ளது. இந்த யாப்பு, செய்யுள் உறுப்புக்களைத் தமது உள்ளடக்கமாகக் கொண்டது. அவ்வுள்ளடக்கம் தொல்காப்பியச் செய்யுளியலில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தாலும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் என்னும் எட்டு உறுப்புக்களைக் கொண்டது என்பது யாப்பருங்கலக்காரிகை என்னும் யாப்பிலக்கண நூலின் கருத்து. ‘எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொடை, பா, இனம் கூறுவன்’ என்பது காரிகை.  இவ்வெட்டு உறுப்புக்களுள் ‘தளை’ என்னும் உறுப்புப் பற்றிய ஓர் ஆய்வாக இந்தக் கட்டுரை அமைகிறது. ‘யாப்பருங்கலக் காரிகை’ என்னும் நூல், அதற்குக் குணசாகரர் என்னும் சான்றோர் எழுதிய உரை ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது.

    கட்டுரைத் தலைப்பு

    ‘தண்சீர் தனதொன்றின் தன் தளையாம்’ என்னுந் தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது

    ஆய்வுக் கருதுகோள்

    தமிழ் யாப்பியல் மரபில் அமைந்த எழுவகைத் தளைகளுக்கான பெயர் மற்றும் பொருளமைதியில் (‘நின்ற சீருக்கே தளை’ என்னும் கருத்தமைவில்) ஒத்திசைவு இருக்கிறதா? என்பதையே இக்கட்டுரை தனக்கான கருதுகோளாகக் கொள்கிறது. சீர் பற்றிய ஆய்வினையும் இணைத்து முன்னெடுக்கிறது.

    ஆய்வு நெறி

    இவ்வாய்வு இலக்கண வரலாற்றியல் அணுகுமுறையில் விளக்கவியல் திறனாய்வு முறையை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.

    முதன்மை மற்றும் துணைமைச் சான்றாதாரம்

    யாப்பியல் மரபு மற்றும் இலக்கணம் பற்றிய நூல்கள் பலவாயினும் அமிதசாகரர் எழுதிய ‘யாப்பருங்கலக்காரிகை’ என்னும் நூலையே தனக்கு அடிப்படையாகக் கொள்கிறது.

    முதனிலைச் சான்று

    அந்நூலில் அமைந்துள்ள,

    “ஈரசை நாற்சீர் அகவற்குரிய! வெண்பாவினமாம்
    நேரசையால் இற்ற மூவசைச்சீர்! நிரையால் இறுப
    வாரசை மென் முலை மாதே! வகுத்த வஞ்சிக்குரிச்சீர்!
    ஓரசையே நின்றும் சீராம்! பொதுவொரு நாலசையே!”

    “தேமா புளிமா கருவிளம் கூவிளம் சீர் அகவற்கு
    ஆம்! ஆங்கு கடை காய் அடையின் வெண்பாவிற்கு! அந்தம் கனியா
    வாமாண் கலையல்குல் மாதே! வகுத்த வஞ்சிக்குரிச்சீர்!
    நாமாண்பு உரைத்த அசைச்சீர்க்கு உதாரணம் நாள்மலரே!”

    “‘தண்சீர் தனதொன்றின் தன் தளையாம்’ தணவாத வஞ்சி
    வண்சீர் விகற்பமும் வஞ்சிக்குரித்து வல்லோர் வகுத்த
    வெண்சீர் விகற்பம் கலித்தளையாய்விடும்! வெண்டளையாம்
    ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் ஒண்ணுதலே!”

    என்னும் மூன்று காரிகைகளை மட்டும் தனக்கான முதனிலைச் சான்றுகளாகக் கொண்டு அமைகிறது.

    ஆய்வுத் தேவை

    தமிழ் யாப்பியல் மரபில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய இலக்கணக் கூறுகள் பல.  அவற்றுள் தற்கால மரபுக்கவிதைகளில் அமைந்திருப்பதாகச் சொல்லப்படும் தளைமயக்கமும் ஒன்று. அதனைக் களைய முயல்வதையே இவ்வாய்வு தனது நோக்கமாகக் கொள்கிறது.

    ஆய்வுப் பயன்

    தளையைப் பொருத்தவரையில் விதிவிலக்குகளை அடிப்படையாகக் கொண்டே தற்கால யாப்பியல் கவிதைகள் எழுதப்படுகின்றன என்னும் உண்மையைப் படைப்பாளரும் படிப்பாளரும் உணரச் செய்வதையே இக்கட்டுரை தனது பயனாகக் கொள்கிறது.

    தளை வந்த வழி

    ‘நின்ற சீருக்குத்தான் தளை’ என்பது பலருடைய கருத்தாக நிலவுகிறது. அதாவது தளைக்குப் பெயரிடுகிறபோது நின்ற சீரின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்பதாம். நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் (அது எதுவாயினும்) முதலசையும் ஒன்றுவதும் ஒன்றாததுமே தளையின் தோற்றக் காரணம். இது பொதுவான கருத்து. இந்த அடிப்படையில்,

    1. ஈரசைச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, ஒன்றாதது.
    2. நேரீற்று மூவசைச்சீர்கள் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, ஒன்றாதது.
    3. நிரையீற்று மூவசைச்சீர்கள் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, ஒன்றாதது.

    எனத் தளை எழுவகைப்படும். நேர் ஒன்று ஆசிரியத்தளை, நிரை ஒன்று ஆசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்னும் அதன் விரிவை அடுத்த பத்தியில் காணலாம்.

    தளைப் பெயர்கள் ஒரு குறிப்பு

    தளைகளுக்கான பெயர்களையும் அவை உருவாகும் முறையினையும் அவற்றின் பெயர்களில் நிலவும் மாறுபாடு அல்லது முரண்பாடுகளையும் ஆராய்வதாக இந்தப் பத்தி அமைகிறது.

    1. நேரொன்று ஆசிரியத்தளை: ஈரசைச்சீர்கள் நான்கனுள் தேமா, புளிமா என்னும் வாய்பாட்டில் அமையும் (நேர் ஈற்று ஈரசைச்சீர்கள்) சீர்கள் நிற்க, வரும் சீர் முதலசை நேரசையாக இருந்தால் (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) அது நேர் ஒன்று ஆசிரியத்தளை எனப்படும்.
    1. நிரையொன்று ஆசிரியத்தளை: ஈரசைச்சீர்கள் நான்கனுள் கூவிளம், கருவிளம் என்னும் வாய்பாட்டில் அமையும் (நிரையீற்று ஈரசைச் சீர்கள்) சீர்கள் நிற்க வரும் சீர் முதலசை நிரையசையாக இருந்தால் (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) அது நிரை  ஒன்று ஆசிரியத்தளை எனப்படும்.
    1. இயற்சீர் வெண்டளை: ஈரசைச்சீர்கள் நான்கனுள் தேமா, புளிமா நின்று வரும் சீர் முதலசையோடு (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) ஒன்றாததும் ஈரசைச் சீர்கள் நான்கனுள் கூவிளம், கருவிளம் நின்று வரும் சீர் முதலசையோடு (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) ஒன்றாததும் இயற்சீர் வெண்டளை எனப்படும்.
    1. வெண்சீர் வெண்டளை: நேரீற்று மூவசைச்சீர்கள் பெரும்பாலும் வெண்பாவிற்குள் பயின்று வருவதால் அவை வெண்சீர்கள் என அழைக்கப்படும். அச்சீர்கள் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாகக் கருதப்படும்.
    1. கலித்தளை: மேற்சொன்ன நேரீற்று மூவசைச்சீர்கள் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றாதது கலித்தளையாகக் கருதப்படும்.
    1. ஒன்றிய வஞ்சித்தளை: நிரையீற்று மூவசைச்சீர்களாகிய (தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி) பெரும்பாலும் வஞ்சிப்பாக்களில் வருவதால் இவை வஞ்சியுரிச்சீர் எனப்படும். அச்சீர்கள் நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றினால் அது ஒன்றிய வஞ்சித்தளை என வழங்கப்படும்.
    1. ஒன்றாத வஞ்சித்தளை: மேற்சொன்ன நிரையீற்று மூவசைச்சீர்களாகிய (தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி) நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளை எனப்படும்.

    பெயர்ச்சிக்கல் – ஒரு பார்வை

    எழுவகைத் தளைகளையும் (தற்காலத்தில் பயன்படுத்துகிற முறைமையை ஏற்றுக் கொண்ட அடிப்படையில்) அவற்றிற்கான பெயர்களை ஆராய்ந்தால் தளைப்பெயர்களில் ஒரு ஒருங்கிணைப்பு அல்லது ஒத்திசைவு  காணப்படுவதாகத் தெரியவில்லை. இதனைப் பின்வரும் பதிவுகளால் உணரமுடியும்.

    1. நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றுவதற்குப் பெயரிட வேண்டுமானால் அதில் ஒரு ஒழுங்கமைவு (UNIFORMITY) இருத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கிறதா என்றால் உறுதியாக இல்லை. சான்றாக இயற்சீரின் ஈற்றசை நேரசையாக இருந்து வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ‘நேர் ஒன்று ஆசிரியத்தளை.’ இதுபோல இயற்சீரின் ஈற்றசை நிரையசையாக இருந்து வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது நிரையொன்று ஆசிரியத்தளை. இதே நெறிதான் வஞ்சித்தளைக்கும் பின்பற்றப்படுகிறது. அங்கே நிரையீற்று மூவசைச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளை. ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளை. அதாவது ஈரசைச்சீர்கள் நின்று ஒன்றுவதும் கனிச்சீர்கள் நின்று ஒன்றுவதும் ஒன்றாததும் நின்றசீரின் பெயர்களையே பெறுகின்றன. (நேர் ஒன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை)
    1. இந்த நெறி இயற்சீருக்கும் நேரீற்று மூவசைச்சீருக்கும் பின்பற்றப்படவில்லை. இயற்சீர் நின்று, வரும் சீர் முதலசையோடு ஒன்றாவிட்டால் இயற்சீர் வெண்டளை என்று அழைக்கப்படுகிறது. நேரீற்று மூவசைச்சீர் அதாவது காய்ச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றினால் ‘வெண்சீர் வெண்டளை’ எனப் புதுநாமம் கொடுப்பது ஏன் என்று புரியவில்லை. சீர் வெண்சீராக இருப்பதால் ‘நேர் ஒன்று வெண்டளை’ என்றுதானே பெயர் பெற்றிருக்க வேண்டும்? ‘நேர் ஒன்று ஆசிரியத்தளை’ என்றால் ‘நேர் ஒன்று வெண்டளை’ என்பதுதானே பொருந்தும்?
    1. ‘வெண்பாவிற்கான சிறப்புச்சீர் வெண்சீராகிய காய்ச்சீர்கள். எனவேதான் அது வெண்சீர் வெண்டளை ஆயிற்று’ எனச் சிலர் கூறலாம். வாதத்திற்காக அதனை ஏற்றுக் கொண்டால் காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாத தளைகளை ஒன்றாத வெண்டளை என்னாது ‘கலித்தளை’ என்பானேன்? கலித்தளை என்னும் சொல் வருகின்ற காலம் வரை ‘கலி’ என்ற சொல்லையே யாப்பு அறியவில்லையே? இலக்கிய நயத்தோடு கூறவேண்டுமானால் வெண்சீருக்குப் பிறந்த மாற்றுத் திறனாளியா கலித்தளை?
    1. இனி ஒன்றாததை எடுத்துக்கொண்டால் ஈரசைச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது நேர் ஒன்றாத ஆசிரியத்தளை என்றுதான் பெயர் பெற்றிருக்க வேண்டும். மாமுன் நிரையும் விளம் முன் நேரும் இத்தகைய பெயர் பெறாது ‘இயற்சீர் வெண்டளை’ என்று பெயர் பெறுவது ஏன்? வெண்சீருக்கு உரியதுதான் வெண்டளை என்றால் இயற்சீர் முரணுக்கும் வெண்டளை என்பது எப்படிப் பெயராக அமைய முடியும்?
    1. இதனால் தளைப்பெயர்களில் ஆசிரியத்தளையிலும் வஞ்சித்தளையிலும் ஒரு நெறியும் வெண்டளையில் வேறொரு நெறியும் பின்பற்றப்பட்டுள்ளதை அறியலாம்.

    வெண்டளை விடைகாண முடியாத சிக்கல் 

    1. ஒன்றுவதும் வெண்டளை –ஒன்றாததும் வெண்டளையா? இது ஒரு நுட்பமான வினா. அதாவது வெண்டளை என்பது வெண்பாவிற்கு உரியது. இயற்சீர்களின் ஈற்றசை முரணும் வெண்பாவிற்குள் வர அனுமதி உண்டென்பதால் அவையும் வெண்டளை என்றே அழைக்கப்படுகின்றன என்பர். ஆனால் சிக்கல் என்னவென்றால் காய்ச்சீரின் ஈற்றசையோடு வருஞ்சீர் முதலசை ஒன்றுவதற்கும் ‘வெண்டளை’ என்று பெயர் வைத்து, இயற்சீரின் ஈற்றசையோடு வருஞ்சீர் முதலசை ஒன்றாததற்கும் ‘வெண்டளை’ என்று பெயர் வைத்திருப்பது சிந்திக்க வைக்கிறது. ஒன்றுவதும் வெண்டளை? ஒன்றாததும் வெண்டளையா?
    2. எழு தளைகளில் மற்றவைகளின் முன்னொட்டுக்கள் சீர்களின் பெயர்ப்பகுதியைத் தாங்கி நிற்க (ஆசிரியத்தளை, வெண்டளை, வஞ்சித்தளை) ‘கலித்தளை’ என்பது அவ்வாறு அமையவில்லை என்பதை அறியலாம். அதாவது ‘கலிச்சீர்’ என்று ஒன்று இல்லாமலேயே  தளை மட்டும் அப்பெயரால் வழங்கப்படுகிறது. அதாவது கலிச்சீர் இல்லை ஆனால் கலித்தளை இருக்கிறது! எப்படி?

    சீர்கள் மற்றும் தளைகளின் திருநாமங்கள்

    எழுவகைத் தளைகளைப் பற்றிய மேற்படி காரிகையையும் அதற்கு முன்பாக அமைந்துள்ள சீர் பற்றிய ‘தண்ணிழல் தண்பூ தந்து உறழ்ந்தால் எண்ணிரு நாலசைச்சீர் வந்து அருகும்’ என்னும் காரிகை உட்பட பிற காரிகைகளையும் அவற்றிற்குக் குணசாகரர் எழுதிய உரைப்பகுதியையும் உற்றுநோக்கினால் பின்வரும் சில உண்மைகள் புலப்படுகின்றன.

    1. நேரீற்று ஈரசைச்சீர் என்றும் நேரீற்று மூவசைச்சீர் என்றும் நிரையீற்று ஈரசைச்சீர் என்றும் நிரையீற்று மூவசைச்சீர் என்றும் சீர்கள், அவற்றின் ஈற்றசை கொண்டு பெயர் பெற்றிருக்கின்றன.
    2. அகவற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வெண்பா உரிச்சீர், வஞ்சி உரிச்சீர் எனப் பெரும்பான்மை இடம்பெறும் பாக்களின் அடிப்படையிலும் பெயர் பெற்றிருக்கின்றன.
    3. மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர், பூச்சீர், நிழற்சீர் என வாய்பாடுகளின் அடிப்படையிலும் பெயர்பெற்றிருக்கின்றன.
    4. தளைகளைப் பொருத்தவரையில் நேர் ஒன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை என்னும் நேர்முக இணைப்பில் பெயர் பெற்றிருக்கின்றன.
    5. ஒன்றிய ஆசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை என்னும் பெயர்கள் வழங்கியிருந்த வேளையிலேயே அவ்வாறு ஒன்றும் மற்றொரு தளைக்கு வெண்சீர் வெண்டளை என்னும் திருநாமமும் வைக்கப்பெற்றிருக்கிறது. முன்னவற்றோடு ஒப்புமையாக்கம் என்ற வகையில் அமைத்திருந்தால் இவை ‘ஒன்றிய காய்த்தளை’ அல்லது ‘ஒன்றிய வெண்பாத் தளை’ என்றல்லவா பெயர் பெற்றிருக்க வேண்டும்?
    6. ஒன்றாத வஞ்சித்தளை என்கிறார்கள். ஆனால் காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசை ஒன்றாததை ஒன்றாத காய்த்தளை அல்லது ஒன்றாத வெண்டளை என்னாது ‘கலித்தளை’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். (இதற்குச் சில யாப்பியல் மேதைகள் ‘கலித்து’ வருவதால் கலித்தளை எனத் தம் புலமை மீதூர பொருளுரைத்து மகிழ்வர். வெண்பா உரிச்சீரின் முரண்கள் கலிப்பாவிற்குள் பெரும்பான்மையும் வருவதால் அது கலித்தளை அதாவது கலிப்பாவிற்குரிய தளை என்பது அடிப்படை அறிவு)
    7. அதுபோலவே ஒன்றாத ஆசிரியத் தளைகளை ஒன்றாத ஆசிரியத்தளைகள் என்னாது ‘இயற்சீர் வெண்டளை’ என்கிறார்கள்.

    எனவே சீர், தளை இவற்றின் பெயர்களைப் பற்றிய மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் சில ஆய்வு உண்மைகளை நிரல்படுத்த  முடியும்.

    1. சீர்களுக்குப் பெயர் சூட்டுவதில் அசைகளின் எண்ணிக்கை, வாய்பாடுகள், அவை இடம்பெறும் பாடல்களின் பெயர்கள் ஆகியவை கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன.
    2. தளைகளுக்குப் பெயர் வைப்பதில் ஒவ்வொரு தொகுப்புச் சீர்களுக்கும் ஒவ்வொரு நெறிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. ஓர் தெளிவான ஒழுங்கமைதி இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றுவதற்கும் ஒன்றாததற்குமான நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட குறியீட்டால் குறிக்க இயலவில்லை.

    எந்தச் சீரும் வரலாமா? இந்தச் சீர்தான் வரவேண்டுமா?

    பொதுவாகப் பாக்களில் தளைவரம்பு பின்பற்றப்படுவதில்லை. அங்கே சீர்களும் அடி வரையறையுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. காரிகைக்குப் பின்னாலே மட்டுமன்று திருக்குறள் மற்றும் பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலியவற்றில் காணப்படும் வெண்பாக்களில் கூட இயற்சீர் வெண்டளை அல்லது வெண்சீர் வெண்டளை என்பது நின்ற சீருக்கு மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. அதாவது நின்ற சீர் ஆசிரிய உரிச்சீராக இருந்து வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது இயற்சீர் வெண்டளை எனப்பட்டது. இந்தச் சூழலில் வரும் சீர் ஆசிரிய உரிச்சீராக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆய்வின் உயிர்நாடியே இதுதான். நின்ற சீரும் வருஞ்சீரும் ஒரே வகைச் சீராக இருந்து அவற்றின் ஈற்றசையும் முதலசையும் ஒன்ற வேண்டும் அல்லது முரண்பட வேண்டும். இதனைத்தான் காரிகை உரையாசிரியர் குணசாகரர் தமது உரையில் விளக்குகிறார்.

    நேரொன்று ஆசிரியத்தளை

    ‘வந்தான் போனான்’ என்பன தேமா வாய்பாட்டில் அமைந்த ஈரசைச்சீர்கள்.  நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றுகிறது. ஒரே சீர் ஒன்றுகிறது. எனவே இதுதான் நேர் ஒன்று ஆசிரியத்தளை. இவ்வாறின்றி ‘வந்தான் போவானா?’ என்றெழுதி இதுவும் நேர் ஒன்று ஆசிரியத்தளை என்றால், நின்ற சீர் ஒன்றாகவும் வரும் சீர் பிறிதொன்றாக அதாவது காய்ச்சீராக அமைந்திருப்பதும் காண்க.  இவ்வாறு அமைவது பற்றிக் குணசாகரர் எழுதுகிறார்.

    “ஆசிரிய உரிச்சீர் நின்று, தன் வரும் சீர் முதலசையோடு நேராய் ஒன்றுவது நேரொன்று ஆசிரியத்தளை”. “தணவாத என்று மிகுத்துச் சொல்லியவதனால் தன்சீர் நின்று பிறிதாகி வரும் சீர் முதலசையோடு ஒன்றுவதும் தன்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    (இந்த விளக்கத்தை நேரொன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை ஆகிய அனைத்திற்குமாகப் பொருத்திக் கொள்ளவேண்டும்)

    நிரையொன்று ஆசிரியத்தளை

    ‘கனிதரு மரமென’ என்பன கருவிளம் வாய்பாட்டில் அமைந்த ஈரசைச்சீர்கள்.  நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றுகிறது. ஒரே தன்மையான சீர் ஒன்றுகிறது. எனவே இதுதான் நிரையொன்று ஆசிரியத்தளை. இவ்வாறின்றிக் ‘கனிதரு புளியமரம்’  என்றெழுதி இதுவும் நிரையொன்று ஆசிரியத்தளை என்றால் நின்ற சீர் ஒன்றாக இருக்க வரும் சீர் பிறிதொன்றாக அதாவது காய்ச்சீராக அமைந்திருப்பது காண்க.  இவ்வாறு அமைவது பற்றிக் குணசாகரர் எழுதுகிறார்.

    “ஆசிரிய உரிச்சீர் நின்று, தன் வரும் சீர் முதலசையோடு நிரையாய் ஒன்றுவது நிரையொன்று ஆசிரியத்தளை” “தணவாத என்று மிகுத்துச் சொல்லியவதனால் தன்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றுவதும் தன்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    இயற்சீர் வெண்டளை

    ‘அகர முதல’ என்பதில் இரண்டு சீர்களும் இயற்சீர்கள். நின்ற சீரும் இயற்சீர். வரும் சீரும் இயற்சீர். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றாததால் இது இயற்சீர் வெண்டளை. இதுதான் இயற்சீர் வெண்டளை என்பது காரிகை கருத்து. ஆனால் ‘முதல எழுத்தெல்லாம்’ என்பதும் இயற்சீர் வெண்டளை எனக் கொள்ளப்படுகிறது. இதில் என்ன சிக்கல் என்றால் நின்ற சீர் இயற்சீர். வரும் சீரோ புளிமாங்காய் என்னும் காய்ச்சீர்! இவ்வாறு அமைவது பற்றி, ‘ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் வெண்டளையாம்’ என்னும் தொடருக்குத் தாம் எழுதும் உரைப்பகுதியில் ,

    “ஒண்சீர்’ என்று சிறப்பித்தவதனால் ஆசிரிய உரிச்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றாததும்  இயற்சீர் வெண்டளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    என்று அது சிறப்பற்றது என்று குறித்திருப்பதைக் காணலாம்.

    வெண்சீர் வெண்டளை

    ‘யாதானும் நாடாமால்’ என்பது தேமாங்காய், தேமாங்காய் என்னும் வாய்பாட்டில் அமைவது. நின்ற சீரும் வரும் சீரும் வெண்பா உரிச்சீர்கள். ஒரே வகை. இவ்வாறு அமைவதுதான் வெண்சீர் வெண்டளை. ஆனால் ‘வையைக்கோன் கண்டான்’ எனத் தேமாங்காய் நின்று தேமாவின் முதலசையோடு ஒன்றுவதையும் வெண்சீர் வெண்டளை என்பது நடப்பியல். இது தவறு என்பது கருத்தன்று. இவ்வாறு அமைவது சிறப்பன்று என்றுதான் குணசாகரர் கூறுகிறார்.  தன்சீர் தனது ஒன்றின் தன் தளையாம் என்பது இதுதான். இது அமிதசாகரர் கருத்தாகக் குணசாகரர் கருதுவது. தன்னுடைய சீர் நின்று தன்னுடைய சீரோடு இணைவதே தனது தளையாகும் என்பது உரை.

    “வெண்பா உரிச்சீர் நின்று தன் வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது  வெண்டளையாம்”

    என்று உரையெழுதுகிறார் குணசாகரர். தொடர்ந்துத்,

    “தணவாத’ என்று மிகுத்துச் சொல்லியவதனால் தன்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றுவதும் தன்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    என எழுதுகிறார். மிகத் தெளிவாக அவர் எழுதுகிறார் அது சிறப்பற்றது என்று.

    கலித்தளை

    தளைகளிலேயே மிகவும் சிக்கலான ஆய்வுக்குரியது. மற்ற தளைகளுக்குச் சீர்கள் உண்டு. இந்தக் கலித்தளைக்குச் சீர்கள் இல்லை. அதாவது ஆசிரிய உரிச்சீர், வெண்பா உரிச்சீர், வஞ்சியுரிச்சீர் என்றெல்லாம் பாடலுக்கான சீர்கள் உண்டு. ஆனால் கலிப்பாவுக்காகத் தனித்த சீர்கள் இல்லாதபோதும் ‘கலித்தளை’ என்பது ஒன்று உண்டு. இது வியப்பிற்கும் ஆய்விற்கும் உரியது, வெண்பா உரிச்சீராகிய காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளை எனப்படும். வெண்பா உரிச்சீர் கலித்தளைக்குக் காரணமாகுமா என்பது பற்றியே ஓர் ஆய்வு தேவைப்படும் சூழலில் மற்ற தளைகளைப் போலவே வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளை என்பது பொருந்தாது. நின்ற சீர் வெண்பா உரிச்சீராக இருக்க வரும் சீரும் வெண்பா உரிச்சீராகவே இருக்க வேண்டும். சான்றாக  ‘எல்லாரும் வருவாரோ? தேமாங்காய் நின்று புளிமாங்காய் வர, முதலசை ஒன்றாததுவே கலித்தளை.  இருப்பினும்,

    “வல்லோர் வகுத்த என்று மிகுத்துச் சொல்லியவதனால் வெண்பா உரிச்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றாததும் கலித்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    என்று குணசாகரர் தரும் விளக்கத்தால் தற்போது பயன்பட்டுவரும் கலித்தளை என்பது உண்மையான கலித்தளைக்கான விதிவிலக்கே என்பது பெறப்படும்.

    ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும்

    தளைகளிலேயே மிகத் தெளிவாக அமைந்திருக்கும் இரண்டு தளைகள் இவை. நின்ற சீர் வஞ்சியுரிச்சீராக இருந்து வரும் சீரும் வஞ்சியுரிச்சீராக அமைய அவற்றுள் ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளை என்ற அளவில் குழப்பமில்லாத ஒரு நிலை இத்தளைகளுக்கு உண்டு. அதாவது ‘கனிச்சீர்’ நின்று வரும் சீர் ‘புளிமாங்கனி, கருவிளங்கனி’ என ஒன்றினால் அது ஒன்றிய வஞ்சித்தளை. கனிச்சீர் நின்று வரும் சீர் தேமாங்கனி, புளிமாங்கனி என ஒன்றாவிடின் அது ஒன்றாத வஞ்சித்தளை. இந்த உண்மையைத் தெளிவுபடுத்துவதற்காகவே, ஒன்றிய வஞ்சித்தளைக்கு, ‘வெண்சாமரை புடைபெயர்தர’ எனத் ‘தேமாங்கனி மற்றும் கருவிளங்கனி’ என்னும் வாய்பாடுகள் அடங்கிய எடுத்துக்காட்டுக்களை அமிதசாகரர் தந்திருக்கிறார்.

    ‘ஒன்றாத வஞ்சித்தளைக்குச் ‘செந்தாமரை நாண்மலர்மிசை’ எனக் கூவிளங்கனி மற்றும் கூவிளங்கனி என்னும் வாய்பாடு அடங்கிய எடுத்துக்காட்டுக்களை அமிதசாகரர் தந்திருக்கிறார்.

    இந்த உதாரண முதல் நினைப்புக்காரிகை ஆசிரியர் அமிதசாகரருடையது. அதனால்தான் அவருடைய கருத்தினை நன்கு உள்வாங்கிக் கொண்டு காரிகைக்கு உரை காண்கிறார் குணசாகரர்.

    இத்தளைகளை இவ்வாறின்றி நின்ற சீர் மட்டும் வஞ்சியுரிச்சீராக இருந்து வரும் சீர் எதுவாயினும் அவற்றின் முதலசையோடு ஒன்றுவதும் ஒன்றாததும் அவற்றிற்கான பெயர்களால் அழைக்கப்பெறலாம் என்னும் விதிவிலக்கை,

    “வண்சீர் என்று சிறப்பித்தவதனால் வஞ்சி உரிச்சீர் நின்று பிறிதாகி வரும் சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் வஞ்சித்தளையே சிறப்பின்றாயினும் எனக் கொள்க”

    என்று உரைழுதி விளக்குகிறார்.

    ஆய்வில் கண்டறியப்பட்ட மெய்ம்மைகள்

    மேலே பல பத்திகளில் வலிமையான தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ஆய்விலிருந்து பெறப்படும் உண்மைகள் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.

    1. ஈரசைச்சீர் நான்கு, நேரீற்று மூவசைச்சீர் நான்கு, நிரையீற்று மூவசைச்சீர் நான்கு என்னும் பன்னிரண்டு சீர்களுக்குப பெயர் சூட்டுவதில் அவ்வளவாக இசைவு இல்லை.
    1. அசைகளின் எண்ணிக்கை, ஈற்றசைகளின் இயல்பு, வாய்பாடுகள், சீர்கள் இடம் பெறும் பாடல்கள் என்னும் இவற்றின் அடிப்படையில் பலவாறு அமைந்திருப்பது சிந்தனைக்குரியது. மேலும் இவ்வெல்லாச் சீர்களும் எல்லாப் பாக்களுள்ளும் மயங்கி வருவதால் பெயரிடுவதன் நோக்கம் முழுமையான வெற்றியடைந்தது எனக் கருதுவதற்கில்லை.
    1. தளைகளைப் பொருத்தவரையில் நின்ற சீரும் வரும் சீரும் ஒரே தன்மையனவாக இருந்தாலேயொழிய தளைகளின்  பெயர்கள் பொருத்தமற்றவையாகிவிடும். இதனால் தற்காலத்தில் கவிஞர்களால் கருத்திற் கொள்ளப்படும் தளைகள் ‘சிறப்பில’ என்னும் ஒரு தொடருக்குள் அடங்கிவிடுகின்றன.
    1. யாப்பறி புலவர்கள் தாங்கள் பயன்படுத்திவரும் தளை விகற்பங்கள் எல்லாம் விதிவிலக்கே என்பதைப் புரிந்து கொள்வது இக்கட்டுரையின் பயனாகக் கருதப்படலாம்.

    நிறைவுரை

    தரவுகளிலிருந்து கருதுகோளை உருவாக்குவதும், அதனை உறுதியாக்கும் மேற்கோள்களின் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதும் ஒரு தற்காலிகத் தீர்வினை எட்டுவதுமே ஆய்வு என்பதாகக் கருதப்படும். தரவுகளையே சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருதுகோளை உருவாக்கிக் கொள்வது பெரிதும் குழப்பத்திற்கும் சிக்கலுக்கும் வழிவகுக்கும். இந்தக் கட்டுரை தரவுகளைச் சரியான நெறியில் புரிய வைக்க முயலுகிறது. சிக்கலை அடையாளம் காண்பதே ஆய்வின் முதற்படி. தொடர்ந்து அச்சிக்கலின் தன்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விரண்டையும் இவ்வாய்வுக்கட்டுரை தன்னால் இயன்ற அளவுக்கு முன்னெடுத்திருக்கிறது.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘தன்சீர் தனதொன்றின் தன் தளையாம்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் பரிந்துரை!

    இடையீடற்ற கற்றல் இயல்பாகவும் எடுத்தியம்பும் ஆற்றல் முயற்சியினாலும் அமைந்த ஆய்வாளர்களுக்கு  ஆய்வுக்கான கருதுகோள் எளிதாகக் கிட்டிவிடும். அத்தகைய சிறப்புக்குரியது இக்கட்டுரை.

    காரிகையாசிரியர் அமிதசாகரர் கூறும் தளை பற்றிய இலக்கணம் குணசாகரர் உரையால் விரிவு பெற்று நிறைவடைகிறது. நூலாசிரியர் விதிகளைக் கூறுகிறார். உரையாசிரியர் விதப்புக்கிளவிகளையும் அடைசொற்களையும் கொண்டு சிறப்பற்ற ஆனால் நடைமுறையில் உள்ள விதிவிலக்குகளைக் கூறுகிறார். இதனையே இந்தக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

    ‘சிறப்பில’ என்னும் ஒற்றைச் சொல்லால் அத்தனைப் படைப்புகளையும் மதிப்பீடு செய்துவிடுகிறார் குணசாகரர். அந்த மதிப்பீட்டினை மிக வலிமையான, தெளிவான தரவுகள் மூலம் ஆய்வாளர் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

    எழுவகைத் தளை பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரையில் சீர்களின் திருநாமம் பற்றியும் ஆராய்ந்திருப்பது துணைவலி சேர்க்கும் ஆய்வு நுண்ணியமாகும்.

    தளை வரையறை என்பது நின்ற சீருக்கும் வரும் சீரின் முதலசைக்குமான ஒட்டுறவன்று, ஒரே  தன்மையனவாக அமைந்த இரண்டு முழுமையான சீர்களுக்கிடையே நிலவும் நல்லுறவு மற்றும் வல்லுறவு என்பதைக் காரிகை மற்றும் உரையாசிரியரின் விளக்கம் ஆகிய அகச்சான்றுகளைக் கொண்டு நிறுவியிருக்கும் இந்தக் கட்டுரையில் ஆய்வு நெறியை முழுமையாகப் பின்பற்றியிருப்பது போற்றுதற்குரிது.

    Share