(Peer Reviewed) தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும்

0

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.                                                                                             
மின்னஞ்சல் முகவரி egowrisss@gmail.com

முன்னுரை

தமிழின் தலையிலக்கணமாகிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களையும் அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களையும் கொண்டு விளங்குகிறது. மொழியின் எழுத்திலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல் அமையும் பாங்கினைச் சொல்லதிகாரத்திலும் விளக்கிக் காட்டிய தொல்காப்பியம், சொற்களால் அமையும் இலக்கியம் பற்றிய கருத்துக்களைப் பொருளதிகாரத்தில் ஆராய்கிறது. இப்பொருளதிகாரத்தைத் தமிழர்தம் வாழ்வியலோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கும் அறிஞர்களும் உளர். இலக்கணமாயினும் இலக்கியமாயினும் தாம் தோன்றுகின்ற சமுதாயத்தின் தாக்கம் இல்லாது அமைதல் அரிது என்பது உண்மையாயினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைக் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலின் ‘கவிதையியல்’(Poetics) என்னும் நூலோடு ஒப்புவைத்து ஆராய்வதே பொருத்தமானதாகும்.

பொருளதிகார அமைப்பு

தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் ஒன்பது இயல்களைத் தனது உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் அமையும் உவமப்பாங்கை ஆராய்வதே உவமவியல் என்னும் கருதுகோள் ஏற்கப்படின், அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், உவமவியல் ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியும், புறத்திணையியல் புறம் பற்றியும் ஏனைய மூன்றும்  இருதிணைக்கண் செய்யுள் முறைமை பற்றியும் ஆராய்வதாகக் கொள்ள முடியும். அகத்திணைக்கண் சுட்டப்பட்டுள்ள முதற்பொருள், கருப்பொருள் ஆகியன பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

அகத்திணை உள்ளடக்கம்

பொருளதிகாரத்தின் முதல் இயலான அகத்திணையியல் அகத்திணைகள் ஏழு என்னும் வரையறையோடு தொடங்குகிறது. அகவொழுக்க மரபும், தாயர், தோழி, கண்டோர், தலைவன் முதலியோர்தம் கூற்றுப்பகுதிகளும் நடுவண் ஐந்திணைகளின் உரிப்பொருள் அமைதியும் கூறப்படுகின்றன. உள்ளுறை உவமம், ஏனை உவமம், தமக்கென நிலம், பொழுது இல்லாத கைக்கிளை, பெருந்திணை முதலியவற்றின் இயல்புகளும் சுட்டப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அகப்பொருள் இலக்கியங்கள் கலிப்பா, பரிபாடல் ஆகிய இருவகைப்பாக்களில் மட்டும் பாடப்பெறும் என்பதும் கூறப்படுகிறது. அகத்துறைப் பாடல்களில் தலைமக்களின் இயற்பெயர் சுட்டுவது மரபன்று என்னும் உயரிய இலக்கியக் கொள்கை வற்புறுத்தப்படுகிறது. இத்தனைச் சிறப்புக்களும் கொண்ட இந்த அகத்திணையியல், தலைவியின் கூற்றுப்பகுதியைக் கூறாதது சிந்தனைக்குரியது.

திணைக்குத் துணையாகும் முதலும், கருவும்

‘திணை’என்னும் சொல் முதற்கண் ஒழுக்கத்தைக் குறித்துப் பின் ஆகுபெயராய் அவ்வொழுக்கம் நிகழும் நிலத்தினைக் குறித்தது. ‘நெய்தற்கண் குறிஞ்சி மயங்கியது’என்பதில் ‘குறிஞ்சி’என்பது ஒழுக்கம். ‘காட்டுக்கோழி குறிஞ்சிக்குரியது’ என்பதில் ‘குறிஞ்சி’என்பது நிலம். திணையாகிய ஒழுக்கத்தைப் பாடுவதே புலனெறி வழக்கம். இப்புலனெறி வழக்கம் சிறக்க வேண்டுமாயின் முதற்பொருளின் பின்புல அமைதி மிகவும் வேண்டப்படுவதாகும். அப்பின்புலம் முதற்பொருளாலும் கருப்பொருளாலும் அமையும். சான்றாகப், பாலையாகிய பிரிவைப் பாடும் ஒருசூழலில், அப்பிரிவொழுக்கத்தின் பின்புலம் மனத்துன்பத்தை மிகுவிப்பதாக இருத்தல் வேண்டும். காலையிலோ, மாலையிலோ, இரவிலோ பாடுவதாக அமைந்தால் அப்பாடல் சிறக்காது., மேலும் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் வேதனையை அருவி, சாரல், மயில், குயில் என்னும் பின்புலத்திலும் விளக்க முடியாது., விளக்கினால் செய்யுள் சிறக்காது. பட்டமரம்,, சுடுமணல், பறக்கும் பருந்து என்னும் பின்புலத்தில் நண்பகல் பொழுதில் விளக்கினால் பாட்டின் சிறப்பும், தலைவிபடும் பிரிவுத்துன்பமும் கற்பார் உள்ளத்தில் ஆழப்பதியும். எனவே முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த ‘அமைப்பு’(Settings) என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும். இன்றைய திரைப்படம் வரை இந்த மரபு பின்பற்றப்படுகிறது என்பதும் ஈண்டுச் சுட்டத்தகுந்தது.

முதற்பொருள் அமைப்பில் தொல்காப்பியத்தின் அறிவியல் பார்வை

இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய உலகத்துப் பொருள்கள் தோன்றுவதற்குக் காரணமும் அவற்றிற்கு ஆதாரமுமாக விளங்குவது புவியும் அப்புவியின் சுழற்சியால் நிகழும் கூறுபாடுகளுமாகும். புவியின் இயற்கையமைப்பை ஒட்டி மலை சார்ந்த நிலம், காடு சார்ந்த நிலம், ஆறுகள் பரந்து செல்லும் சமநிலம், கடற்கரையைச் சார்ந்த மணற் பரப்புடைய நிலம் எனப் பிரித்து நிலத்தை நானிலம் என வழங்குவர். இதனைத் தொல்காப்பியம் ‘காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம்’ என வழங்கும். புவி ஞாயிற்றினின்றும் தோன்றியது. அப்புவி கதிரவனின் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டு, அதன் ஒளியையும் ஏனைய நாள்மீன்களின் ஒளியையும் பெற்றுச் சுழன்று வருவதுடன், தனக்குத் தானே சுழன்று வரும் இயல்பினை உடையது. புவியின் இருவேறு சுழற்சிகளால் ஏற்படுவனவே பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஆகும். பெரும்பொழுதினை வழக்கில் ‘பருவம்’என்பர். இவ்வாறு ஞாயிற்றினால் அமைந்த புவியையும் அப்புவியின் சுழற்சியினால் தோன்றும் இருவகைப் பொழுதுகளையும்  ‘முதற்பொருள்’எனச் சுட்டுவது நேரியதே ஆகும்.

“முதல் எனப்படுவ நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” 1

என்பது தொல்காப்பியம்.

ஐந்திணைகளும் முதற்பொருள்களும்

கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுதியாகச் சொல்லப்பட்ட அகத்திணைகள் ஏழனுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளுக்கு நிலம் வகுக்க வேண்டிய தொல்காப்பியம் பாலை தவிர்த்த ஏனைய நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலத்தை வரையறை செய்திருக்கிறது.  முதற்பொருள்கள் இரண்டனுள் தலையாயதான நிலத்தினை,

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம்,நெய்தல்எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”2

என்னும் நூற்பாவில் சுட்டிச்செல்கிறார் தொல்காப்பியர். ‘காடுறை உலகம்’ முல்லை எனவும், ‘மைவரை உலகம்’குறிஞ்சி எனவும், ‘தீம்புனல் உலகம்’மருதம் எனவும், ‘பெருமணல் உலகம்’நெய்தல் எனவும் பெயர்பெறும். இந்நூற்பாவில் அகன் ஐந்திணைகளில் ஒன்றாகிய பாலைக்குத் தனித்த நிலம் ஒதுக்கப்படவில்லை. தட்பவெப்பநிலை காரணமாக அமையும் நானிலங்களின் திரிபே பாலையாகும் என்பதே இதற்குக் காரணம்.

ஐந்திணைப் பிரிவும் இருவகைப் பொழுதுகளும்

ஏனைய கோள்களைப் புவி சுற்றுவதாலும், புவி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதாலும் உண்டாகும் பருவ மாறுதல்களும் பொழுது மாறுதல்களும் முறையே பெரும்பொழுது, சிறுபொழுது எனத் தொல்காப்பியத்தால் வகுத்துரைக்கப்படுகின்றன. இதில் ஆண்டின் உட்பகுதியைப் பெரும்பொழுது என்றும் நாளின் உட்பகுதியைச் சிறுபொழுது என்றும் கூறலாம்.முல்லையாகிய இருத்தல் ஒழுக்கத்திற்குக் கார்காலமாகிய பெரும்பொழுதையும் அக்கார்காலத்துள் மாலையைச் சிறுபொழுதாகவும் தொல்காப்பியம் உரித்தாக்குகிறது.  இதனைக்,

“காரும் மாலையும் முல்லை”3

என்னும் நூற்பாவில் கூறும் தொல்காப்பியம், குறிஞ்சியாகிய புணர்தல் ஒழுக்கத்திற்குப் பெரும்பொழுதில் கார்காலமும் முன்பனிக்காலமும், சிறுபொழுதில் மாலைக்காலமும் உரித்தாகக் கூறுகிறது. இதனைக்,

“குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்”4

“பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப”5

என்னும் நூற்பாவில் சுட்டுகிறார்.

“வைகறை விடியல் மருதம்”6

என்னும் நூற்பாவினால், மருதமாகிய ஊடல் ஒழுக்கத்திற்கு ஆறு பெரும்பொழுதுகளையும் குறிப்பாக உரிமையாக்கி,, அப்பெரும்பொழுதுகளில் அமையும் வைகறை, விடியல் ஆகிய இருவகைச் சிறுபொழுதுகளையும் உரிமையாக்கினார். நெய்தல் திணைக்கு,

“எற்பாடு நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்”7

என விதி செய்த தொல்காப்பியர், மருதத்தைப் போலவே அறுவகைப் பெரும்பொழுதுகளையும் நெய்தலுக்கு உரிமையாக்கிச்,  சிறுபொழுதுகளில்  ‘எற்பாடு’என்பதையும் உரிமையாக்கினார்.

நடுவுநிலைத் திணையும் முதற்பொருள் அமைதியும்

பாலையை ‘நடுவுநிலைத் திணை’ என்பார் தொல்காப்பியர். நடுவுநிலைத் திணை என்றால் ‘ஏனைய திணைகளுக்கு நடுவே இருக்கும் திணை’என்பது பொருளன்று. ஏனைய திணைகளின் நிலங்கள் திரிந்த நிலையையே தனக்கு நிலமாகப் பயன்படுத்திக் கொள்வதாலும், ஏனைய நால்வகை ஒழுக்கங்களுக்கிடையே தனக்குரிய பிரிவை நிகழ்த்திக் கொள்வதுமாகிய சிறப்பு நிலையே ‘நடுவுநிலை’எனப்படும். எதனையும் சாராது இருப்பது பற்றற்ற நிலை. எல்லாவற்றோடும் சார்ந்திருப்பதே நடுவு நிலை. எனவே தான் தொல்காப்பியம் ‘நடுத்திணை’என்னாது ‘நடுவுநிலைத் திணை’எனச் சுட்டுகிறது. நான்கு திணைகளோடும் பிரிவால் உறவு பாராட்டுவது பாலைத் திணையாதலின் அது நடுவுநிலைத் திணையே. நிலமாகிய முதற்பொருள் இல்லையாயினும் பாலைக்கென பிரிவாகிய உரிப்பொருள் உண்டு. அப்பிரிவொழுக்கம் நிகழ வேண்டுமாயின் பொழுது கூறியே ஆதல் வேண்டும். எனவேதான் தொல்காப்பியம்,

“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலோடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”8

“பின்பனி தானும் உரித்தென மொழிப”9

என்னும் நூற்பாக்களினால் பெரும்பொழுதுகளில் இளவேனில், முதுவேனில் ஆகிய இருவகை வேனிற்காலத்தையும், பின்பனிக் காலத்தையும், சிறுபொழுதுகளில் நண்பகலையும் அதற்கு உரிமையாக்குகிறது. பாலையொழுக்கம் ஏனைய நான்கு திணைகளுள் நிகழ்ந்தாலும், அவ்வொழுக்கம் பாடுபொருளாகிற பொழுது, பாலையின் பின்புலத்தையே கொண்டிருக்க வேண்டும் என்பதே இந்நூற்பாவின் சாரமாகும். குறிஞ்சியில் நிகழும் பாலையொழுக்கத்தைக் குறிஞ்சிப் பின்புலம் கொண்டு அமைத்தல் கூடாது என்பது கருத்து.

இருபொழுதும் மயங்கினால் தான் திணையா?

திணைகளுக்குரிய பொழுதுகளை வரையறுக்கும் பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய இரண்டனையும் இணைத்தே தொல்காப்பியம் கூறுவதைக் காணலாம். ‘காரும் மாலையும் முல்லைக்குரிய’என்பது போலத் திணை பற்றிய புலனெறி வழக்கத்தில் இவ்விருபொழுதுகளும் இவ்வாறு இணைந்துதான் கூறப்பட வேண்டுமா? என்னும் ஐயம் நிகழ்கிறது. ஏதேனும் ஒருபொழுது மட்டும் இருந்தால் வழுவாய் விடுமோ? என்னும் ஐயத்தைத் தொல்காப்பியம் பின்வரும் நூற்பாவினால் அகற்றுகிறது.

“இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்
உரிய தாகும் என்மனார் புலவர்”10

என்பது தொல்காப்பியம். இதில், ‘இருவகைப் பொழுதும் தோன்றலும் உரியதாகும்’என்பதனால் ‘தோன்றாமையும் உண்டு’என்பது பெறப்படும். ‘தோன்றலும்’என்பதில் உம்மை எதிர்மறைப் பொருளதாகும்.

அகத்திணை மயக்கம்

குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட ஒழுக்கந்தான் நிகழும் என்பது நடைமுறையாகாது. குறிஞ்சியில் புணர்தல் மட்டுமே நிகழும் என்பது பொருத்தமாகாது., நெய்தலில் இரங்கலைத் தவிர ஏனைய ஒழுக்கங்கங்கள் நிகழாது என்பது கற்பனை. எல்லா ஒழுக்கங்களும் எல்லா நிலத்திலும் நிகழும். அதாவது ஒருநிலத்துக்கென்று ஓதப்பட்ட ஒழுக்கம் மற்றொரு நிலத்திலும் நிகழ வாய்ப்புண்டு. இதனைத் தான் ‘மயக்கம்’என்னும் சொல்லால் பொருளதிகாரம் குறிக்கிறது. சொல்லதிகாரத்தில் சுட்டப்படும் வேற்றுமை மயக்கம் போன்றது இது. தொல்காப்பியம்,

“திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப
புலன்நன்கு உணர்ந்த புலமை யோரே”11

என்னும் நூற்பாவில் இது பற்றி ஆராய்கிறது. ஒருநிலத்துக்குரிய ஒழுக்கம் மற்றொரு நிலத்தில் மயங்குவது உண்டு., அவ்வாறு மயங்குதல் கூடாது என்னும் வரையறை இல்லை., ஆனால் ஒருநிலம் இன்னொரு நிலத்தில் மயங்குதல் கூடாது. ‘ஒருநிலத்திற்குரிய மாந்தர் மற்றொரு நிலத்துக்குச் செல்லுங்கால், தத்தமக்குரிய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் ஒழுக்கமாகிய திணை மயங்கலாம் எனவும், ஒருநிலம் அசைந்து மற்றொரு நிலத்துக்குள் செல்லாதாதலால் நிலம் மயக்கம் ஏற்படையது அன்று’எனவும் தொல்காப்பியம் கூறியிருப்பது நுண்ணிய சிந்தனையாகும். நிலம், பொழுது, அவற்றின் மயக்கம் என்னும் முதற்பொருள் பற்றிய கருத்துக்களை அகத்திணையியலில் பதினெட்டு நூற்பாக்களில் விரித்துரைத்த தொல்காப்பியம்,’ முதலெனப் படுவது ஆயிரு வகைத்தே’என மீண்டும் எடுத்துரைத்து முதற்பொருள் ‘நிலம், பொழுது என இரண்டே’என வரையறுப்பதையும் ஈண்டுச் சுட்டலாம்.

ஐந்திணைகளும் கருப்பொருள்களும்

முதல், கரு, உரி என்பதே முறையாயினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இந்த நெறி பின்பற்றப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதல், உரி, கரு என்றே அது இலக்கணம் கூறிச் செல்கிறது. அந்த வகையில் கருப்பொருள் என்பது ஒருதிணைக்குரிய தெய்வம், திணைமக்களுக்குரிய உணவு, அந்நிலத்தில் திரியும் விலங்கு, அந்நிலத்தில் விளையும் மரம், பறக்கின்ற பறவை, மக்களுடைய தொழில், அந்நில மக்கள் அடிக்கின்ற பறை, இசைக்கின்ற யாழ் இவற்றின் விரிவு ஆகியவற்றைக் குறிக்கும் என விளக்குகிறது.

“தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப”12

என்பது கருப்பொருள் பற்றிய தொல்காப்பிய நூற்பாவாகும். இந்த நூற்பாவில் ‘பிற’என்னும் பயன்பாட்டால், ஒருநிலத்துக்குரிய பூவும், ஊரும், நீரும் கருப்பொருளாகத் தழுவிக் கொள்ளப்படும். கருப்பொருள்களில் ஒன்றாகிய தெய்வத்தோடு சேர்த்தே தொல்காப்பியம் முதற்பொருளாகிய நிலத்தை அறிமுகம் செய்கிறது என்பதும் பொதுவாக இன்னின்னவை கருப்பொருள் என்றுதான் இந்நூற்பா உரைக்கிறதேயன்றி, இந்த நிலத்துக்கு இன்னவை கருப்பொருள் என விதந்தோதவில்லை என்பதும் அவை சான்றோர் நெறியும் மரபும் பற்றிக் கொள்ளப்படும் என்பதும் ஈண்டுச் சுட்டப்படுகின்றன.

திணைகளும் கருப்பொருள்களும்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுக்கப்பட்ட நிலங்களும் அவற்றிற்குரிய கருப்பொருள்களும் சான்றோர் நெறி பற்றிப் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.

குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்

தெய்வம்                            –              சேயோன் (முருகன்)
உயர்ந்தோர்                       –              சிலம்பன்
தாழ்ந்தோர்                   –              குறவன்
பூ                                            –              குறிஞ்சிப்பூ
மரம்                                     –              வேங்கை
பறவை                                               –              மயில்
விலங்கு                             –              புலி, யானை
உணவு                                –              மூங்கில் அரிசி
பறை                                    –              தொண்டகப் பறை
யாழ்                                     –              குறிஞ்சி யாழ்
பண்                                      –              குறிஞ்சிப் பண்
ஊர்                                  –              சிறுகுடி
நீர்                                   –              அருவிநீர், சுனைநீர்
தொழில்                             –              வேட்டையாடுதல்

முல்லைத் திணையின் கருப்பொருள்கள்

தெய்வம்                     –              மாயோன் (திருமால்)
உயர்ந்தோர்                       –              நாடன்
தாழ்ந்தோர்                   –              இடையர்
பூ                                            –              முல்லைப்பூ
மரம்                                     –              பிடவம்
பறவை                                               –              காட்டுக்கோழி
விலங்கு                             –              முயல்
உணவு                                 –              சாமை
பறை                                    –              ஏறுகோட்பறை
யாழ்                                     –              முல்லை யாழ்
பண்                                      –              முல்லைப் பண்
ஊர்                                        –              பாடி
நீர்                                   –              காட்டாறு
தொழில்                             –              ஆனிரை மேய்த்தல்

மருதத் திணையின் கருப்பொருள்கள்

தெய்வம்                            –              வேந்தன்
உயர்ந்தோர்                       –              ஊரன்
தாழ்ந்தோர்                   –              உழவன்
பூ                                    –              தாமரைப்பூ
மரம்                                     –              மருதமரம்
பறவை                                               –              அன்னம்
விலங்கு                             –              எருமை
உணவு                                –              செந்நெல்
பறை                                    –              மணமுழவு
யாழ்                                     –              மருத யாழ்
பண்                                      –              மருதப் பண்
ஊர்                                        –              ஊர்
நீர்                                          –              ஆற்றுநீர்
தொழில்                             –              விதைத்தல்

நெய்தல் திணையின் கருப்பொருள்கள்

தெய்வம்                            –              வருணன்
உயர்ந்தோர்                       –              புலம்பன்
தாழ்ந்தோர்                        –              பரதவர்
பூ                                    –              தாழம்பூ
மரம்                                     –              விளரியாழ்
பறவை                                               –              அன்றில்
விலங்கு                             –              பகடு, சுறா
உணவு                                –              மீன்
பறை                                    –              மீன்கோட்பறை
யாழ்                                     –              நெய்தல் யாழ்
பண்                                      –              நெய்தற் பண்
ஊர்                                        –              பாக்கம்
நீர்                                   –              கடல்நீர்
தொழில்                             –              உப்பு விளைத்தல்

பாலைத் திணையின் கருப்பொருள்கள்

தெய்வம்                            –              கொற்றவை
உயர்ந்தோர்                       –              விடலை
தாழ்ந்தோர்                        –              எயினர்
பூ                                            –              குராஅம்பூ
மரம்                                     –              ஓமை
பறவை                                               –              கழுகு, பருந்து
விலங்கு                             –              வலியிழந்த யானை
உணவு                                –              கொள்ளையடிப்பன
பறை                                    –              சூறைகோட்பறை
யாழ்                                     –              பாலை யாழ்
பண்                                      –              பாலைப் பண்
ஊர்                                        –              பறந்தலை
நீர்                                   –              அறுநீர்க் கூவல்
தொழில்                             –              கொள்ளையடிப்பன

முடிவுரை

மேற்கண்ட கட்டுரைப் பகுதியில் இதுகாறும் சுட்டப்பட்டிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில், தொல்காப்பியத்தின் முதற்பொருள் பாகுபாடு அறிவியலுக்கு இசைந்ததே என்பதும், ஒருதிணைக்குரிய நிலமும் அந்நிலத்திற்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் முதற்பொருள் என்பதும், பாலைக்கெனத் தனித்த நிலத்தைத் தொல்காப்பியம் சுட்டவில்லை என்பதும் ஆனால் பாலைத்திணையாகிய ஒழுக்கத்திற்குரிய இருவகைப் பொழுதுகளையும் தொல்காப்பியம் சுட்டத் தவறவில்லை என்பதும் புலனெறி வழக்கத்தில் இருவகைப் பொழுதுகளுள் ஒன்றிருந்தாலும் இழுக்கில்லை என்பதும், திணையாகிய ஒழுக்கம் மயங்கலாம் என்பதும், எந்நிலையிலும் நிலங்கள் இரண்டு தம்முள் மயங்கல் கூடா என்பதும், கருப்பொருளாகிய தெய்வத்தை முன்னிறுத்தியே முதற்பொருளாகிய நிலத்தைத் தொல்காப்பியம் அறிமுகம் செய்கிறது என்பதும் பொதுவாகக் கருப்பொருள்களைச் சுட்டிச்செல்கிறதேயன்றிக் குறிப்பிட்டு இன்ன திணைக்கு இன்னின்னவை கருப்பொருள் எனக் கூறவில்லை என்பதும் கருப்பொருள்கள் மரபுவழியாகவே கூறப்பட்டு வருகின்றன என்பதும் ஓரளவு விளக்கப்பட்டன.

சான்றெண் விளக்கம்

  1. தொல்காப்பியர் தொல்காப்பியம் (பொருள்)   நூற்பா எண். 4
  2. மேலது                                                நூற்பா எண். 5
  3. மேலது நூற்பா எண். 6
  4. மேலது நூற்பா எண். 7
  5. மேலது நூற்பா எண். 8
  6. மேலது நூற்பா எண். 9
  7. மேலது நூற்பா எண். 10
  8. மேலது நூற்பா எண். 11
  9. மேலது நூற்பா எண். 12
  10. மேலது நூற்பா எண். 13
  11. மேலது நூற்பா எண். 14
  12. மேலது நூற்பா எண். 20

துணை நூற்பட்டியல்

தொல்காப்பியர், தொல்காப்பியம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940


ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும் என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

  1. பொருளுணர் அச்சம் பொறுமையின்மை முதலியன காரணமாக  இன்றைக்கும் பெறவேண்டிய கவனத்தைப் பெறாமல் இருக்கும் நமது தமிழின் தலைச்செல்வம் தொல்காப்பியத்தை மீளாய்வு செய்து அறிமுகக் கட்டுரை செய்திருக்கும் கட்டுரையாளருக்குப் பாராட்டு!
  1. கட்டுரையின் உள்ளடக்கத்தை முன்னுரையில் அளவாகவும் செறிவாகவும் கூறியிருப்பது ஆய்வாளரின் கட்டுரை வன்மையைக் காட்டுகிறது. .
  1. அகத்திணை உள்ளடக்கத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்திருக்கும் ஆய்வாளர். இத்தனைச் சிறப்புக்களும் கொண்ட இந்த அகத்திணையியல், தலைவியின் கூற்றுப்பகுதியைக் கூறாதது சிந்தனைக்குரியது.’ என துணிந்து கூறுவது அவர்தம் ஆய்வில் அவர் கொண்டிருக்கும் உறுதியையும் நம்பிக்கையையும்  பறைசாற்றுகிறது.
  1. “முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த‘அமைப்பு’(Settings) என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.” என்னும் கருத்தியல் தொல்காப்பியத்தை இலக்கியத்திற்கான இலக்கண நூல் என்பதை உரக்கச் சொல்கிறது.
  1. நிலம் பொழுதாகிய இரண்டின் பகுப்பிலும் அறிவியல் உணர்வு மேலோங்கி நிற்கிறது என்பதை ஆய்வாளர் தகுந்த சான்றுகளுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் தந்திருப்பது போற்றுதற்குரிய்து.
  1. பாலையை நடுவுநிலைத் திணை என்பதற்கான காரணத்தை விளக்க வந்த கட்டுரையாளர் எதனையும் சாராது இருப்பது பற்றற்ற நிலை. எல்லாவற்றோடும் சார்ந்திருப்பதே நடுவு நிலை. என வரையறை செய்து எல்லாத் திணைகளிலும் தனது பிரிவொழுக்கத்தை நிகழ்த்திக் ;கொள்ளும் பேராற்றல் வாய்ந்த திணை பாலைத்திணை என்பதை அழகுற விளக்கியிருக்கிறார்.
  1. ‘குறிஞ்சியில் நிகழும் பாலையொழுக்கத்தைக் குறிஞ்சிப் பின்புலம் கொண்டு அமைத்தல் கூடாது’ என்றும் பாலைநிலப் பின்புலத்தைக் கொண்டே அமைக்க வேண்டும் என்றும் கட்டுரையாளர் எச்சரிப்பது தொல்காப்பியத்தைச் சரியான தளத்தில் வைத்துப் புரிந்து கொண்டிருக்கும் அவர்தம் புலமைச் சதுரப்பாட்டை உணர்த்துகிறது.
  1. இருபொழுதும் அமைந்தால்தான் திணையா? ஒரு பொழுது மட்டும் சுட்டினால் திணையாகாதா? என்னும் சிந்தனையை முன்னெடுக்கும் ஆய்வாளர்  “இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும் உரிய தாகும் என்மனார் புலவர்”10 என்னும் நூற்பாவில் அமைந்த உம்மையை எதிர்மறை உம்மையாக் கொள்ளும் நச்சினார்க்கினியர் கருத்தினை வழிமொழிந்து தனது கருத்துக்கு வலிமையூட்டுவது பொருத்தமான ஆய்வு நெறியே!
  1. முதற்பொருள் கருப்பொருள் பட்டியலைத் தந்திருக்கும் கட்டுரையாளர், முன்னுரை மற்றும் முடிவுரை ஆகியவற்றை மாட்டேற்றாக அமைத்து ஒரு சிறிய அரிய ஆய்வுக் கட்டுரையையும் செம்மையாக வடிவமைக்க இயலும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.