Category: குழவி மருங்கினும் கிழவதாகும்

  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 24

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 24

    மீனாட்சி பாலகணேஷ்

    (பந்தாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்குழந்தைகளின் விளையாட்டுகளென இன்னும் பல உள்ளன. பிள்ளைத்தமிழ் நூல்கள் விரித்துரைப்பதென்பன சிலவே! அவற்றுள் கடைசியாக நாம் காணப்போவது பந்தாடல் பருவம்.

    பத்துப்பருவங்களுக்குள் பிள்ளைப்பருவ நிகழ்வுகளைப் பாடும் வழக்கினின்று வழுவாது பாடவேண்டி, அனைத்து விளையாட்டுகளையும் ஒரு பாடலிலேயே அம்மானைப் பருவத்தில் கூறிவிடுவதும் உண்டு! பக்தி, கலைநயம், கற்பனை அனைத்தும் கலந்தோடும் பிள்ளைத்தமிழ்ப் பருவப் பாடல்கள் இலக்கியச்சுவையிலும் மிகச் சிறந்தவையாகும்.

    பாடல்களைக் காணுமுன் பந்தாடுதல் பற்றிய மற்ற இலக்கியக் குறிப்புகளைக் கண்டு மகிழலாமே!

    பந்தாடுவது பெண்களுக்கு ஒரு இன்பமான பொழுதுபோக்கு; அருமையான விளையாட்டு! சங்ககாலத்திலிருந்தே  ‘பந்தாடுதல்’ பெண்களுடன் மட்டுமே இணைத்துப் பேசப்பட்டு வந்துள்ளது.

    மதுரை மாநகரின் கோட்டைவாயிலில் மன்னர்கள் பெண்கள் விளையாடும் பந்தையும் பாவையையும் கட்டித் தொங்கும்படிச் செய்திருந்தார்களாம். இதன்பொருள், ‘எம்மை வெல்லும் ஆண்மையாளர் எவரும் இல்லை! பகைவர்களை நாங்கள் பந்தும் பாவையும் விளையாடும் பெண்களைப் போன்று எண்ணுகிறோம். வீரம் மிகுந்தோர் யாராவது இருந்தால் இவற்றை வந்து அறுக்கலாம்,’ என்பதாகும் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது!

                ‘வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
             பொருநர்த் தோய்த்த போரருவாயில்1‘ என்பன பாடல் வரிகள்.

    நெட்டி, பஞ்சு, பட்டுநூல், மயில்பீலி, மயிர் இவற்றால் பின்னி பந்துகளைச்செய்து சோலைகளிலும் மாடங்களிலும் விளையாடிக் களித்தனர். இவர்கள் விரைந்து பந்துவிளையாடும்போது குதிரையின் குளம்படிச் சத்தம்போல ஒலியெழுந்ததாம்; சிலம்பும் மேகலையும் கைவளைகளும் ஒலிக்கப் பெண்கள் பந்தாடினார்களாம்! எத்துணை பாடல்கள்! வருணனைகள் – சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும்!

    சீவகசிந்தாமணியின் விமலையார் இலம்பகப்பாடல் ஒன்று பந்தடிக்கும் லயத்துடன் ஒத்திருப்பதைப் படித்து ரசிக்கலாமா?

    இராசமாபுரத்து வீதிகளின் அழகைக்காணச் சீவகன் சென்று கொண்டிருக்கிறான்; விமலை எனும் அழகியபெண் பந்தாடிக்கொண்டிருந்தாள். அவள் எவ்வாறு பந்தடித்து விளையாடினாள் எனச் சீவக சிந்தாமணி விளக்கும் விளையாட்டின் வழிமுறைகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன!

    விமலை தனது உள்ளங்கையில் பொருந்தும்படி ஐந்து பந்துகளை வைத்துக்கொண்டு மேலே வீசியாடுகிறாள். ஒரு மலர்மாலையைச் சுற்றிமொய்க்கும் வண்டுகளைப்போல் அவை அவளைச்சுற்றிக் கீழேவந்து உடனே அவள் கைகளால் அடிக்கப்பட்டு மேலெழும்பிச் செல்லுகின்றனவாம். திரும்பக் கீழே விழுவதில்லை! பந்துகளின் போக்கையே பார்த்துக் கொண்டிருக்கும்அவளுடைய கண்களில் அழகான பிம்பமாகத் திரிகின்றனவாம்!

             அங்கையந்த லத்தகத்த ஐந்துபந்த மர்ந்தவை
             மங்கையாட மாலைசூழும் வண்டுபோல வந்துடன்
             பொங்கிமீதெ ழுந்துபோய்ப்பி றழ்ந்துபாய்தல் இன்றியே
             செங்கயற்கண் புருவம்தம் முளுருவம்செய்யத் திரியுமே2!

    மேலே அடிக்கப்பட்ட பந்துகள் சில அவளுடைய முல்லைமாலையில் மறைந்தன; பின்பு அவள் கையை வந்தடைந்தன.  கருங்கூந்தலைத் தாண்டிப்பறந்த பந்துகள் முகத்தருகே வந்தனவாம்; தலையில் மறைந்தவை மார்பில் மாலையருகே வந்துசேர்ந்தன. சில கைவிரலில் அமர்ந்தன. இவ்வாறு பந்துகள் எங்கே என்று காண்பவர் வியக்கும்படி அவற்றை வீசியும், அடித்தும் வேகமாக ஆடினாள் விமலை. இப்படியெல்லாம் ஆடினால் என்னவாகும்? மார்பில் பூசிய குங்குமமும் பொற்சுண்ணமும் நெற்றிச்சந்தனமும் வியர்வையில் கரைந்து கொங்கைகளிடையே வழிந்தோடியது வானவில் போன்று இருந்ததாம். ஆடியாடி அவளும் சிறிது தளர்ச்சி அடைந்துவிட்டாள் போல இருக்கிறதே! அவள் கையிலிருந்து ஒருபந்து நழுவி, மார்பிலணிந்த முல்லைமாலையைத் தொட்டுக்கொண்டு வீதியில் வந்துகொண்டிருந்த சீவகன்முன்பு போய் விழுந்ததாம். பின்பு என்னவாயிற்று? கண்ணோடு கண்ணிணை கலந்து திருமணத்தில் முடிந்தது என்கிறது சீவக சிந்தாமணி! இங்கு இதைச் சொன்னது விமலையார் பந்தாடும் அழகை விவரிக்க மட்டுமே!!
    —————————
    அம்பிகையும், மற்றப்பெண்களைப்போல் பந்தாடுவதில் விருப்பமுள்ளவள் என்பது தேவாரத்தில் காணும் வர்ணனைகளால் விளங்குகிறது. ‘பந்தணை விரலி’ எனச் சம்பந்தப்பெருமான் அம்பிகையைப் பற்றிக் கூறியுள்ளார். சுந்தரரும் கூட, ‘பந்தும் கிளியும் ஆகியனவற்றை எப்போதும் கரங்களில் வைத்திருப்பவளான அம்பிகையின் சிந்தைகவர்ந்த நாதனாகிய இறைவன் வாழும் ஒற்றியூர்,’ என ஈசனையும் அவன் வாழும் ஊரையும் சிறப்பிக்கிறார்.

             பந்தும் கிளியும் பயிலும் பாவை
             சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
             எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
             உந்தும் திரைவாய் ஒற்றி யூரே3 (சுந்தரர் தேவாரம்- திருவொற்றியூர்)

    கைலாயத்திலிருந்த பார்வதிதேவிக்கு ஒரு சமயம் பந்துவிளையாடும் ஆசை ஏற்பட்டது; உற்சாகமாக அவளும் தோழியருடன் நீண்டநேரம் பந்து விளையாடுகிறாள். நேரம் சென்றதே தெரியவில்லை. இவள் விளையாடுவதற்காக சூரியனும் மறையாமல் வெளிச்சம் தருகிறான். மறைந்தால் விளையாட்டு தடைப்பட்டுவிடுமே; அதனால் அம்பிகை தன்னிடம் கோபித்துக்கொண்டால் என்னசெய்வது என்று ஒருபுறம் பயம்வேறு! இதனால் மாலை மயங்காது போயிற்று; முனிவர்கள் எல்லாரும் சந்தியாவந்தனம் செய்யமுடியாமல் திண்டாடினார்கள்.

    சிவபிரானிடம் சென்று அவர்கள் முறையிட, அவர், சூரியனைக் கடிந்துகொண்டு, நேரம்காலம் கருதாமல் விளையாட்டில் ஈடுபட்ட அம்பிகையைப் பசுவாகும்படி சபித்தார். மனம்வருந்திய பார்வதி சாபவிமோசனத்தை வேண்டுகிறாள். சிவன் பந்தினைக் காலால் எற்ற அது பூமியில் ஒரு சரக்கொன்றை மரத்தடியே விழுகின்றது. அந்த மரத்தினடியே உள்ள சிவலிங்கத்திற்குப் பசுவான அம்பிகை பால்சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்கிறார் பெருமான். ‘பந்து அணைந்த தலம்’ ஆதலால் ‘பந்தணைநல்லூர்’ என இத்தலம் வழங்கப்படுகிறது. காலப்போக்கில் ‘பந்தநல்லூரு’ம் ஆகிவிட்டது! அப்பந்தும் அச்சிவலிங்கத்தின் சடையில் விழுந்து கலந்தது.

    திருமால் பசுவான தன் தங்கையைக் காக்க இடையனாக பூமிக்கு வருகிறார். நாள்தோறும் பசுக்களை மேய்த்து வருகிறார். ஒருநாள் பார்வதியான அப்பசு புற்றிலிருந்த சிவலிங்கத்தைக் கண்டு பாலை முழுவதும் அதன்மீது சொரிந்து வழிபடுகிறது. அப்பூசையால் மகிழ்ந்த சிவபிரான் அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதிக்குக் காட்சிதந்து அவளை அணைத்துக் கொள்கிறார். பசுவடிவு நீங்கிய அவளும் மேலும் வடக்குநோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டாள். தவத்தால் மகிழ்ந்த சிவபிரான், முனிவர்கள் – தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பராசக்தியைத் திருமணம் செய்து கொண்டார். கல்யாணசுந்தரர், பசுபதீஸ்வரர் (பசுவின் பதியாக வந்தவர்) எனும் பெயரையும் பெற்றார். அச்சிவனது சிரசில் பந்தணைந்த அடையாளம் இன்றும் காணப்படுகின்றது.

    இது அம்பிகையின் பந்தாடும் ஆசைபற்றிய அருமையான ஒரு புராணக்கதை. சீவகசிந்தாமணியில் பெண்கள் பந்து விளையாடும் முறையைப் பார்த்தோம். ஆகவே இது மிகவும் நுட்பமாக, கைவேகத்தையும், கண்- கை- கால் ஆகியவற்றின் இணைந்த செயல்பாட்டையும் விவேகத்தையும் கொண்டு விளையாடப்படும் ஆட்டம் என அறியலாம். நாள்தோறும் நன்கு பயிற்சி செய்யவும் வேண்டும்.

                ____________________________

    இத்தனை அழகும் நயமும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த விளையாட்டிற்கு மற்றவற்றைப்போல் பாடல்கள் இல்லையோ என எண்ணவேண்டா. சிலப்பதிகாரத்தில் பெண்கள் பாடியாடுவதாக சில பாடல்களைக் காணலாம். கண்ணகிக்குக் கோவிலெடுத்து வழிபடும்போது பெண்கள் மூவேந்தர்களின் புகழையும் பாடி ஆடிக் களிக்கிறார்கள். பந்திற்குக் ‘கந்துகம்’ எனவொரு அழகான பெயருமுண்டு. பெண்கள் பந்தடிக்கும்போது பாண்டியமன்னர்களின் புகழைக்கூறி ‘கந்துகவரி’யைப் பாடுகிறார்கள்.

    “பொற்கொடி போன்றபெண்ணே! நமது அழகான பொன்மாலைகளும் மின்னல்போல ஒளிவீசும் மேகலைகளும் அசைந்தாடும்படி, ‘எங்கள் பாண்டியமன்னன் நீடூழி வாழ்க! தேவர்களின் ஆரத்தை மார்பிலணிந்தவன் வாழ்க!’ எனக்கூறிப் பந்தடிப்போமாக!” என்று ஒருத்தி பாடுகிறாளாம்.

    “விரைந்து வரும் இப்பந்து நமது கையில் இருந்ததும் இல்லை! நீண்ட நிலத்திலிருந்து அந்தரத்தே எழுந்ததும் இல்லை பாராய்! என்று உலகத்தோர் கூறும்வண்ணம் பாண்டியமன்னன் வாழ்க எனப்பாடிப் பந்தடிப்போம்!” என இன்னொருத்தி பாடுகிறாள்.

    துன்னிவந்து கைத்தலத்து இருந்ததில்லை நீணிலம்
    தன்னினின்றும் அந்தரத்து எழுந்ததில்லை தானெனத்
    தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே
    தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே4.

    இது அவர்கள் வெகு விரைவாக இப்பந்தாட்டத்தை ஆடுவதனைக் குறிக்கின்றது. பந்தைத் தூக்கி எறிந்து பிடித்து விளையாடும் விளையாட்டல்ல இப்பந்தாட்டம்! பந்தடித்தல் என்று ஒருத்தியே  பந்துகளை மேலே வீசி அவை கீழேவிழுமுன் ஓடியோடிப்பிடித்து உயரப்பந்தடித்து விளையாடும் விறுவிறுப்பான பந்தாட்டம் இதுவாகும்! நல்ல உடற்பயிற்சியும் கூட!

                _____________________________

    கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை எனும் காப்பியம் உதயணன் எனும் மன்னனின் பிரதாபங்களைக் கூறுவது.

    இதில் ‘பந்தடி கண்டது’ எனும் காதையில் பந்துகளைச் செய்யும் முறை விரிவாக விளக்கப்படுகிறது.

    தொழில் நுணுக்கம் அறிவோரால் செய்யப்பட்ட பந்துகள் நெட்டியும் பஞ்சும் இடையிடையே வரிந்து கட்டிய  உலண்டு நூலும் சேர்த்து அழுத்தி அவையிவற்றை அமைவாக உருட்டிக்கட்டி, மேலே மயிற்பீலியும் மயிருங்கொண்டு நன்றாகப் பின்னி, அவற்றின்மேல் நூலாலும் கயிற்றாலும் நுண்ணியதாகச் சுற்றி அழகாகக் கையிற்கொண்டு அழுத்தி, அதன்மேல் பாம்புத்தோல் போலவும் மயில் தோகையின் கண் போலவும் அழகிய நீர் நுரை போலவும் தோன்றும்படி தைத்துப் பிடித்த மென்மையினையுடையனவும் பல்வேறு தொழில் திறம் அமைந்தனவுமாகிய பந்துகளை வைத்து (விளையாடினர்).

                       கிடையும் பூளையு மிடைவரி யுலண்டும்
                                அடையப் பிடித்தவை யமைதியிற் றிரட்டிப்
                                பீலியு மயிரும் வாலிதின் வலந்து
                      நூலினுங் கயிற்றினு நுண்ணிதிற் சுற்றிக்
                                கோல மாகக் கொண்டனர் பிடித்துப்
                                பாம்பின் றோலும் பீலிக் கண்ணும்
                        பூம்புன னுரையும் புரையக் குத்திப்
                                பற்றிய நொய்ம்மையிற் பல்வினைப் பந்துகள்5.

    பெருங்கதையின் வத்தவ காண்டத்தில் பந்தடி கண்ட காதையில் வாசவதத்தையும் பதுமாவதியும் தங்கள் தோழியரின் பந்துவிளையாடும் போட்டியைக் காண்கின்றனர். வயந்தகனும் உதயணனும் மறைந்து நின்று பந்தடி காணுகின்றனர். தோழியர்கள் இராசனை, காஞ்சனமாலை, அயிராபதி, விச்சுவலேகை, ஆரியை ஆகியோரின் ஒப்பற்ற பந்தாட்டம் விளக்கமாகக் கூறப்படுதலைக் காணலாம். இத்தகைய விரிவான வேகமான, வியக்கவைக்கும் ஆட்டமிதுவா என பிரமிக்க வைக்கும் விளக்கங்களைக் கண்டு மகிழலாம்.

    இனி பிள்ளைத்தமிழைக் காணச் செல்லலாமா? முன்பே கூறியதுபோல, நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ளதில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஒன்றே பெண்குழந்தையின் பந்தாடல் பருவத்தைப் பத்துப்பாடல்களில் அழகுற விவரிக்கின்றது.

    சிவகாமசுந்தரி அன்னை  வெள்ளிமலையாகிய கைலாயத்தில் பிரம்மாண்டமான மலைகளாகிய பந்துகளைக் கையில் எடுத்து விறுவிறுப்பாகப் பந்தாடி மகிழ்கிறாள். அப்போது அவளுடைய சிவந்த தாமரை மலரடிகளின் குதிகால் பந்துகள் அசைந்தாடுகின்றன; பந்தினையொத்த திருமுழந்தாள் அசைந்தாடுகிறது. பந்துபோன்ற வடிவில் முடியப்பட்ட உச்சிக்கொண்டை உடன் ஆடுகின்றது. குங்குமம் பூசிய கொங்கைகள் பந்தாடுகின்றன; இருவிழிகளும் பந்துகள் செல்லும் பாதையையே நோக்குவதனால் அவையும் அதே வேகத்தில் சுழன்றாடுகின்றனவாம்.

    நமது உள்ளங்களையும் உவகையில் பந்தாடச் செய்கின்ற பாடல்!

                செந்தாமரைப் பதம் பந்து அசைந்தாட
                       வரும் திருமுழந்தாள் பந்துமே
             திண்புவி பதிந்தாட இனிய பந்துக்
                       கொண்டை சென்றுடன் பந்தாடவே
             நந்தாத குங்குமக் கொங்கை
                       பந்தாட இருநயனங்கள் ஆடவே
             ……………………………………………..
             பந்தாட வேதண்ட மூதண்ட கூட
                       நற்பந்து விளையாடி அருளே!
             பங்கயச் சிவகாம சுந்தரி என்
                       அம்மையே! பந்து விளையாடி அருளே6!     

    அன்னை பராசக்தி தனது ஆணைப்படி இவ்வுலகில் அனைத்தையும் நடத்துவிக்கிறாள் எனப் பெரியோர் கூறுவர்! பிள்ளைத்தமிழ் நூல்களில் அன்னை பராசக்தி சிறுவீடுகட்டி விளையாடுவதெனக் கூறுவது, அன்னையானவள் இந்த உலகங்களைப் படைப்பதனையும், அம்மானை, பந்து, கழங்கு முதலியன விளையாடுவது அவற்றைத் தனது ஆணைப்படி காத்து இயக்குவதனையும், சிவனெனும் பித்தன் அச்சிற்றிலை அழிப்பது, உலகங்களை அழிப்பதனையும், இச்செயல்கள் தொடர்ந்து இடைவிடாது சுழற்சியாக நடந்துகொண்டே இருப்பதையும் உட்பொருளாக விளக்கும்.

    இப்பருவத்தின் பத்துப்பாடல்களும் ஒவ்வொரு நயத்தை விளக்கும். மூன்றாம்பாடல் பலவிதமான விதங்களில் தோன்றும் உயிரினங்களான முட்டையினின்று விளைபவை, கருப்பையினின்று பிறப்பவை, வியர்வையினின்று தோன்றுவன எனும் தத்துவன (நுண்ணுயிரிகள்!), ஊர்வன, பறப்பன, நடப்பன, கிடப்பன, இருப்பன ஆகிய வெவ்வேறு உயிர்களைப் படைத்தும், அடுத்தடுத்த பிறவிகளில் வெவ்வேறாக மாறிமாறிப் பிறப்பதற்கும் ஆகிய நிலைமையுடைய உயிர்க்கூட்டங்களை பந்தென அடித்து விளையாடுபவளான உமையம்மையே!

                ………………………………………………
             தத்துவன ஊர்வன தவழ்ந்திடுவ நிற்பன
                       தனித்தனி பறப்பனவுமே
             ………………………………………..
             பத்திபெறு பல்லுயிர்ப் பந்தடித்து ஆடும்
                       உமைபந்து விளையாடியருளே7‘ என வேண்டுவதாக அமைந்த பாடல்.
    வேறொரு பாடலில் இசை சங்கீதத்துடன் பந்தடித்தருளுக என்பார்.

    மற்றொன்றில், அணிந்துள்ள அணிமணிகள் செய்யும் தாளத்துடன் இணைந்து பந்தடித்தருளுக என வேண்டுவார்.

    வேறொன்றில் எங்கள் பந்தபாசங்கள் தீரும்வண்ணம் பந்தடித்தருளுக என்பார்.

    ஆக, இறைவியின் பந்தாடும் செயலானது உயிர்களின் பந்தபாசத்தை நீக்குவதும், ஐந்தொழில் புரிவதும் ஆகியவற்றினை அவள் எளிதாகக் காலந்தோறும் பந்தாடும் விளையாட்டாகவே செய்துவருவதனை உணர்த்துகின்றது.

    இந்தப் பந்தாட்டத்தில்தான் என்னவெல்லாம் கற்பனைகள். கருத்துக்கினிய புனைகதைகள், காட்சிகள்! காலங்கள்தோறும் பலவகைப்பட்ட விளையாடல்களின் உள்ளங்கவர் காட்சிகளைப் பிள்ளைத்தமிழ் எனும் ஒப்பரும் ஒரு பிரபந்தத்தின் இனிய பாடல்களாக்கி அளித்த அருமைத் தமிழின் பெருமை தனித்துவமானது அன்றோ?

    இத்துணை நாட்கள் பிள்ளைத்தமிழின் நயமான பருவங்களையும் அவை தொடர்பான பாடல்களையும் கண்டுகளித்தோம்.

    விரைவில் இதுபோன்ற வேறொரு தொடருடன் சந்திப்போம்.

    வணக்கம்.

    (நிறைந்தது).

                            ________________________________

     பார்வை நூல்கள்:

    1. நக்கீரர் – திருமுருகாற்றுப்படை.
    2. திருத்தக்க தேவர்- சீவக சிந்தாமணி – விமலையார் இலம்பகம்.
    3. சுந்தரமூர்த்தி நாயனார் – திருவொற்றியூர் தேவாரம்.
    4. இளங்கோவடிகள்- சிலப்பதிகாரம் – கந்துக வரி.
    5. கொங்குவேளிர் – பெருங்கதை – வத்தவகாண்டம்- பந்தடி கண்டது.
    6. 7. நல்லதுக்குடி கிருட்டிணையர் – தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்.
    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 23

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 23

    மீனாட்சி பாலகணேஷ்

    (கழங்காடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு இனிய பருவம் கழங்காடற் பருவமாகும். இதனைப் பெதும்பை எனும் (எட்டுமுதல் பதினோரு ஆண்டு வயதுவரை உள்ள) பெண்மக்கள் விரும்பி விளையாடுவதாகக் கூறுவர்.

    கழங்காடல் அனைத்து வயது மகளிரும் விளையாடும் விளையாட்டுகளுள் ஒன்றாகும். ஆயினும் இது பெதும்பைப்பருவப்பெண்களின் விளையாட்டென்று உலா இலக்கியங்கள் கூறும். விளையாடும் முறைகளையும் விளக்கும். ஏழுகாய்களைக் கொண்டு விளையாடப்படுவது கழங்கு. இது அம்மானை ஆட்டத்தினின்றும், பந்தாட்டத்தினின்றும்  மிகவும் வேறுபட்டதாகும்.

    பந்தாடிக் களைத்த சங்ககால மகளிர் ஆற்றங்கரை மணலில் கழங்காடினர் என்பதனை,

              ‘கைபுனை குறுந்தொடி தத்த, பைபய,
             முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்
       பட்டின மருங்கின் அசையின்1…,’ எனும் பெரும்பாணாற்றுப்படை வரிகளால் அறியலாம். அதாவது, ‘கையிலணிந்த வளையல்கள் குலுங்க, மென்மையான சிறுமுத்துக்களையொத்த பொடிமணலில் பொன்னாலான கழங்குகளைக் கொண்டு விளையாடும் பட்டினத்தின் ஒரு பக்கம்…..’ எனப்பொருள் கொள்ளவேண்டும்.

    பெருத்த முத்துக்கள், மரக்கட்டையில் கடைந்தெடுத்த  உருண்டைகள், பொன்னால் செய்யப்பட்ட பொற்கழங்குகள் முதலானவை கழங்காடப் பயன்படுத்தப்பட்டன. செடியிலிருந்து கிடைக்கும் கழற்சிக்காய் என்பதும் பயன்படுத்தப்பட்டது.

    இன்றும் கிராமிய விளையாட்டாக, அச்சாங்கல் (ஐந்து காய்களை வைத்து விளையாடுவது) ஏழாங்கல் (ஏழு காய்களைக் கொண்டு ஆடுவது), சுங்கரக்காய் (பல காய்களைக்கொண்டு ஆடுவது) என கூழாங்கற்கள் அல்லது கருங்கற்களைக்கொண்டு இவ்விளையாட்டு விளையாடப்படுகின்றது.

    அம்மானை, கழங்கு ஆகிய விளையாட்டுகள் ஆயமொடு (தங்கள் தோழிமார், விளையாட்டுக் குழுக்களுடன்) ஆடப்பெறும் என்பதனை சங்க இலக்கியங்களிலிருந்து அறியலாம்.

                ‘இனந்துணை ஆயமொடு கழங்குடன் ஆடினும்2,’

                ‘கழங்கா டாயத் தன்றுநம் மருளிய3,’ எனும் பாடலடிகள் இதனை விளக்கும்.

                ‘கூறை நன்மனைக் குறுந்தொடி மகளிர்
             மணலாடு கழங்கின் அறைமின்சத் தாஅம்4,’

    எனும் பாடலடிகள் மகளிர் மாடத்து முற்றங்களில் மணலைப்பரப்பிக் கழங்காடினர் என விளக்கும். விளையாடும் முறையாவது தரையில் பொடிமணலைப்பரப்பி, அதன்மீது கழங்குகளை வைத்து, கையாலெடுத்துத் தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடுவதாகும்.

    கழங்காடும் பொழுது ஏழு காய்களையும் தரையில் பரப்பி வைத்துப் பின் ஒவ்வொரு காயாக எடுத்து மேலெறிந்து, அடுத்து இரண்டிரண்டு காய்களாக எடுத்து மேலெறிந்தும் இவ்வாறு ஏழு வரை மேலெறிந்து, மேலேசென்ற காய் கீழே விழுவதற்குள் மற்றொரு பகுதியை மேலெறிந்துவிட்டுக் கீழேவரும் காய்களைக் கையில் பிடித்து ஆடினால், ஆடினவரே தொடர்ந்து ஆடலாம். கீழேவரும் காய் தரையில் விழுந்துவிட்டால் ஆட்டம் மற்றவர்களுக்கு உரித்தாகிவிடும். இவ்வாறு ஆடும்பொழுது, ஒன்றொன்றாகக் கழங்குகளை மேலே எறிகையில் ஒன்றுமுதல் ஏழுவரை உள்ள பொருட்களைப் பாடிக்கொண்டே ஆடுவார்கள். அவையே ஏழு கண்ணிகளில் உலா இலக்கியங்களில் காணப்படும்.

    பெண்மக்களைப் பருவவகையால் பிரிப்பதனையும், அவர்களின் பருவத்துக்கேற்ற செயல்களையும் நாம் உலா இலக்கியங்களில் காணலாம். கழங்காடும் பெதும்பை எனும் பெண் பாதி பேதைக்குணமும் பாதி மங்கைக்குணமும் கலந்தவள் என்கிறது உலா இலக்கியம். இது எட்டு முதல் பதினோரு ஆண்டு நிரம்பிய சிறுமி என்பதற்குப் பொருத்தாமாயுள்ளது. (கடம்பர்கோயில் உலா) ஆடும் கழங்குகளின் நிறமும் பெருமையும் விளக்கப்படுகின்றன:

    பத்து வயது நிரம்பிய சிறுபெண்ணொருத்தி கைகளில் ஏழுவிதமான கழற்சிக்காய்களை எடுத்துக்கொண்டு கழங்காடுகிறாள். அக்காய்களை வெகு லாவகமாக மேலே வீசுகிறாள்! மேகத்தின் கருநீல நிறத்தையொத்த நீலக்கழங்கொன்று; களங்கமற்ற சந்திரன் போலும் வெளேரென்ற முத்தாலான கழங்கொன்று; எந்தை சிவபிரானின் பாதியுடலைக் கொண்ட பார்வதியைப் போலும் பச்சைநிறம் பொருந்திய மரகதத்தாலான கழங்கு ஒன்று; மறுபாதியான ஐயனின் தகதகக்கும் செம்பவள நிற உடல்போன்ற மாணிக்கத்தாலான கழங்கு இன்னொன்று; மலர்ந்த கொன்றைப் பூக்களின் தேன்போன்ற நிறங்கொண்ட கோமேதகக் கழங்கொன்று; பொருந்திய கங்கைநீர்போல் பளபளக்கும் வயிரக் கழங்கொன்று; மன்றுள் நின்றாடும் எம்பிரானின் சிவந்த சடைபோன்ற மென்மையான செம்பவழக் கழங்கொன்று என ஏழுவிதக் கழங்குகளைக் கையிலெடுத்து ஆடுகிறாள் இப்பெதும்பை எனப்படும் சிறுமி.

                ‘கந்தரம்போல் நீலக் கழங்குங் களங்கமில்லாச்
             சந்திரன்போல் முத்தின் தனிக்கழங்கும்–எந்தையுடற்
             பாதியன்ன பச்சைப் பசுங்கழங்கும் பாதியெழிற்
             சோதிமா ணிக்கச் சுடர்க்கழங்கும்–தாதலரும்
             கொன்றையந்தே னன்னநிறக்கோமே தகக்கழங்கும்
             துன்றுகங்கை போல்வயிரச் சொற்கழங்கும்–மன்றுடையான்
             வேணியன்ன செம்பவழ மென்கழங்கும் பங்கையப்பூம்
             பாணி யதனில் பரிந்தெடுத்து5..’

    ஒவ்வொரு கழங்கை மேலே வீசும்போதும் பாகைப் பழிக்கும் தீங்குரலில் ஒன்றிலிருந்து ஏழுவரை அமைந்த இறைவனின் திருத்தலங்களைப் பற்றிப் பாடுகிறாள் இப்பெண். என்னெவெல்லாம் கூறுகிறாள் எனச் சிறிதே கேட்போமா?

    ஒன்றை எடுத்தவள்  ஏகம் (ஒன்று, அனைத்தும் ஒன்று) எனும் ஏகாம்பரத்தைப் பற்றிப் பாடுகிறாள். கச்சி ஏகாம்பரநாதரைப் பற்றிப்பாடுகிறாள்.

                ……………………………………… ‘நீணிலத்துப்
             பாகாங் குதலைமொழிப் பாவைகுறித் தொன்றையெடுத்
             தேகாம் பரத்தினிசைபாடி5  ………. ‘

    பிறகு இரண்டு கழங்குகளை எடுத்துக்கொண்டு அன்றொருநாள், பிரமன், திருமால் ஆகிய இருவர் சிவபிரானின் அடியும் முடியும் தேடிக் கொண்டாடிய அண்ணாமலையைப் பாடிப் போற்றுகிறாள்.

                ………………………………………  வாகாகக்
             கூடு மிரண்டெடுத்துக் கொண்டாடி யன்றிருவர்
             தேடு மலையின் செயல்பாடி5 ……………..’

    மூன்று கழங்குகளை எடுத்து, புகழ்வாய்ந்த திரிசிராப்பள்ளி எனும் தலத்தைப் பாடுகிறாள். இது திரிசிரன் எனும் மூன்றுதலை அரக்கன் சிவபிரானைப் பூசித்து வழிபட்ட தலமாம்.

                ……………………………  ‘நாடரிய
             வள்ளிதழி மூன்றெடுத்து மன்னு திரிசிராப்
             பள்ளியெனுந்தலத் தைப்பாடி5 ………….’

    விளையாட்டில் உள்ளம் மிக்க மகிழ்ச்சியில் திளைப்பதனால் நான்குகாய்களை எடுத்துக் கொண்டு நான்மாடக்கூடலான மதுரையம்பதியின் வளத்தைப் பாடியாடுகிறாளாம்.

                …………………………… ‘உள்ளமகிழ்
             வாடலா னாலென் றடுத்தெடுத்து நான்மாடக்
             கூடல்வளம் பாடிமிகக்கொண்டாடி5 …………’

    இதழ்கள் மலர்ந்தவிழும் சிவந்த மலர்போலும் வாய் கொண்ட கிளியின் மொழி பேசும் அப்பெண் ஐந்து காய்களைக் கையில் எடுத்துக்கொண்டு பஞ்சநதித்தலமான திருவையாற்றின் பெருமைகளைப் பாடிக் கழங்காடுகிறாள்.

                …………………………………………….. ‘தோடவிழும்
             கிஞ்சுகப்பூஞ் செவ்வாய்க் கிளிமொழியா ளைந்தெடுத்துப்
             பஞ்சநதி மான்மியத்தைப் பாடியே5 ………………’

    காய்களுடன் கண்களும் மேலும் கீழும் சென்றுவர, அவ்வண்ணமே ஆறு காய்களைக் கையில் எடுத்தவள், அன்றொருநாள் ஆறுபெண்கள் அட்டமாசித்திகள் பெற்ற மெய்த்தலமான பட்டமங்கையின் பெருமைகளைப் பாடுகிறாளாம்.

                …………………………………… ‘கஞ்சவிழி
             அத்திறத்தால் ஆறெடுத்து அன்று ஆறு மின்னார் அட்டமா
             சித்திபெற்ற மெய்த்தலத்தின் சீர்பாடி5…………’

    இதனைப் பாடி மகிழ்ந்த பெண்ணரசி, அடுத்து ஏழு கழங்குகளைக் கையிலெடுத்துக் கொண்டு, ஏழு உலகங்களிலும் எம்பெருமானாகிய சிவபிரான் இசைந்து உறையும் இடங்களைப் பற்றிப் பாடியாடுகிறாளம்.

                …………………………….. ‘கைத்தலத்தில்
             ஏழெடுத்துப் பாரிடத்தி லித்தலங்களாதியா
             ஏழுலகத் தெம்மா னிசைதலங்கள்5‘

    இவ்வாறு ஆடுபவள் தன் பாடலில், “இத்தகைய தலங்களில் கிட்டும் பேறுகளெல்லாம் எம்மான் உறையும் இந்தக் கடம்பநகரை அடைந்தோர்க்குக் கிடைக்கும்,” என்றுகூறி எல்லாக் கழங்குகளையும் சேர்த்தெடுத்து மேலே வீசியெறிந்து பிடிக்கிறாள். அவ்வாறு செய்யும்போது, அவளுடைய மூக்குத்தி அசைந்தாடுகிறது; கழுத்திலணிந்த முத்து வடம் சரிந்தாடுகிறது; கண்கள் இரண்டும் மேலும் கீழுமாகக் கழங்குகளோடு ஓடியாடுகின்றன. அவளுடைய கொடியிடையும் உடனாடுகின்றது.

                                            ‘-சல்லாப
             மூக்குத்தி முத்தாட முத்து வடமாட
             நோக்கிரண்டு மாட நுசுப்பாட–ஆக்கமகள்
             கொண்டாட மாதுசெங்கை கொண்டாடும் போதிலே5‘

    எனக் கைகளில் கழங்கினை எடுத்து ஆடுகிறாள் அவள்.

    இக்காட்சி கடம்பர்கோயில் உலாவில் காணப்படுவது. பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் ஏழு கழங்குகளுக்கும் பாட்டுடைத்தலைவனாம் சிவபிரானின் ஏழுதலங்களின் சிறப்புகளைப் பாடியுள்ள அழகான உத்தி படித்து ரசிப்பதற்கு சிறப்பாக உள்ளது.

    இவ்வாறு சில உலாப் பிரபந்தங்களில் கழங்காடுதல் பற்றிய அருமையான பாடல்களைக் கண்டு மகிழலாம். காளமேகப்புலவர் பாடிய திரு ஆனைக்கா உலா6 எனும் பிரபந்தம் சிறப்பாகப் பெதும்பை ஆடும் ஏழு கழங்குகளுக்குமாக ஈசனின் செயல்களை அழகுற விவரிக்கின்றது.

    சேறைக்கவிராச பிள்ளையும் தாமியற்றியுள்ள வாட்போக்கியுலா7 எனும் நூலில் கழங்காடும் முறையினை நன்கு விளக்கியுள்ளார். இங்கு தலங்கள் இல்லாது ஒன்றுமுதல் ஏழுவரையிலான இறைவனின் பெருமைகளைக்கூறிப் பெதும்பை கழங்காடுகிறாள் எனப்பாடியுள்ளார்.

    கழங்காட்டம் பற்றிய இத்துணை விரிவான விளக்கத்தின்பின்பு, பிள்ளைத்தமிழ் நூல்களுக்குச் செல்லலாமா?

    சிவயோகநாயகி பிள்ளைத்தமிழ் நூல் பத்துப்பருவங்களையே கொண்டதாயினும் சிறிது வேறுபட்டு கழங்கு, அம்மானை ஆடுதல் இரண்டினையும் முறையே எட்டாவது ஒன்பதாவது பருவங்களாகக் கொண்டுள்ளது. இதிலிருந்தும் கழங்காடுவதென்பது அம்மானையாடும் விளையாட்டிலிருந்து வேறுபட்டதென அறிகிறோம். இந்த பிள்ளைத்தமிழ் நூலில் அம்மை கழங்காடுவது மிகவும் நயமான விதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

    மேலெறியும் ஒவ்வொரு கழங்கிற்கும் உண்டான எண்ணிக்கையில் பாடுவார்கள் என அறிந்தோமல்லவா? அதுபோன்றே அம்மையின் ஒவ்வொரு கழங்குக்கும் புலவர் அருமையான விளக்கம் தருகிறார்.

    உனக்குரிய நினது மணாளன்மீது நீ வைத்துள்ள பக்தி (அன்பு) என ஒரு கழங்கை மேலெறிகின்றனை!

    நீ, உனது தலைவனாகிய ஈசன் என நீவிர் இருவரும் உறைகின்ற உடல்கள் சிவம் சக்தி என இருவகைப்படும் எனக்கூறும் விதமாக இரு கழங்குகளை வீசுகின்றனை!

    மேலுலகு, இவ்வுலகு, பாதாள உலகங்கள் என மூன்று உலகங்களைப் படைத்து அவற்றைக்க் காத்தருளும் திருப்பாதங்கள் முறையே இரண்டு உன்னுடையனவும் இரண்டு ஐயனுடையனவாகவும் நான்காகும் எனும்படி மூன்று, நான்கு எனக் கழங்குகளை வீசுகின்றனை!

    நீ செய்யும் தொழில்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) எனக்கூறி ஐந்து கழங்குகளையும், உலக உயிர்களுக்கு உள்ள குணங்களான காமம், குரோதம், மதம், மோகம், உலோபம், மாற்சர்யம் இவை ஆறெனவும், சீவித்து வாழும் உயிர்களுக்கெல்லாம் உண்டாகும் பிறப்பு ஏழுவகை என்று உணர்த்தும் வகையாக ஏழு கழங்குகளையும்  வரிசைமுறையில் வைத்துப் பாடியாடி அருளுவாயாக!

    உனது திருவருள் விளங்குமாறு பசியநிற மேனியை உடைய நீ, உனது சிவந்தகையினில் ஏந்தியுள்ள நீலமணிக் கழங்கானது குளிர்ச்சியான பொய்கையின்கண் அலர்ந்த செந்தாமரைமீது கரியநிறம் படைத்த வண்டானது ஆடுவதுபோல உள்ளது. பெருந்துறைச் சிவயோகவல்லியே! நீ கழங்காடியருளுகவே!’ என வேண்டும் பாடலிது.

                உரியநின் கேள்வர்மேல் வைத்திடும் பத்தியொன்
                                றுறைகின்ற மேனி களிரண்டு
                       …………………………………………………
                                சீவிக்கு மாவிக்கெலாந்
                       தேகங்கொடுத்த குறியொரே ழெனக் கொண்டு
                                சீர்வைத் துடன்பாடியே
             ……………………………………………
             கரியவண்டாடுமா போலவே நீலக்கழங் கெடுத்
                                தாடி யருளே
                       கவுரீ பெருந்துறைச் சிவயோக வல்லி
                                கழங்குநீ யாடியருளே8.

    என்பன பாடல்வரிகள்.

    ‘ஒருகாயை மேலெறிந்து ஆறினைக் கீழ்வைத்து, இரண்டினை எறிந்து ஐந்தினை வைத்து (உய்த்து) மூன்றினை எறிந்து நான்கினை வைத்து, நான்கினை எறிந்து மூன்றினை வீசி, ஐந்தினை வீசி இரண்டினை வைத்து, இரண்டினை எறிந்து ஒன்றினை வைத்து  ஏழினையும் வீசிப்பிடித்து,’ எனக்கூறுபவர், இன்னும் வெவ்வேறுவிதமான எண்ணிக்கைகளில் வீசியும் வைத்தும் கைகள் சிவக்குமாறு தாயே நீ கழங்கு ஆடியருளே,’ என வேண்டிப்பாடியுள்ள பாடல் நயம் கருத்தைக் கவருவதாகும்.

                ‘ஒன்றெறிந் தாறுவைத் துய்த்திரண் டைந்துவைத்
                                துய்த்துமூன் றிட்டுநான்
                       குய்த்துநான் கிட்டுமூன் றுய்த்தைந்
                                ……………………………
             ஒன்றொடா வேழுமேத்தர முழங்கைப் பெறும் கைத்தலம்
             …………………………………………
                 கவுரீ பெருந்துறைச் சிவயோக வல்லி
                       கழங்குநீ யாடியருளே9,’ என்பன பாடல்வரிகள்.

    இதில் விளையாடும் முறைமையை விளக்கியுள்ளார் புலவர். இங்ஙனம் அமைந்துள்ள பத்துப்பாடல்களும் நயக்கத் தக்கவையாகும்.

    அடுத்து நாம் காண்பது தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ். இதில் நமக்குக் கிடைத்துள்ளன இரண்டே பாடல்கள்தாம். இரண்டுமே அரிய முத்துக்களாலான கழங்குகள்தான்!

    சிவகாமி அன்னையாகிய பெதும்பை ஆடும் கழங்காட்டம் எதையெல்லாம் ஒத்துள்ளது எனச் சுவைபட விவரிக்கிறார்.

    கழங்கு விளையாடும் சிறுமியர் கண்ணிமைக்கும்பொழுதில் ஒன்று, இரண்டு, மூன்று எனக் கழங்குகளை எடுத்தெடுத்து வீசியாடுவர். பார்ப்போர் கண்களுக்கு இவை பல்வகையாகத் தோற்றமளிக்கின்றனவாம்.

    அந்நாளில் தம்மை நாடிவரும் பாணர்களுக்கு அரசர்கள் பொன்னால் செய்யப்பட்ட தாமரைமலரைப் பரிசிலளிப்பர். சில சமயம் அம்மலரின் இதழ்களில் சிகப்பு நாகமாணிக்க மணிகள்  பதிக்கப்பெற்றும் தண்டில் மரகதமணிகளும் பதிக்கப் பட்டிருக்கும். இவற்றிலிருந்து பொங்கும் ஒளி ஒன்றையொன்று தாக்கி எதிரொளித்தால் எவ்வாறு இருக்கும்? கண்ணைப் பறிக்காதா?

    மாவின் இளம்பிஞ்சுகள் (மாவடுக்கள்) காற்றிலசைந்து மாந்தளிரின்மீது மோதியாடினால் எப்படி இருக்கும்?

    இளம்மகளிரின் வேல்விழிகள் பல நவரத்தினங்கள் பதித்த காதணிகளில் (கொப்பில்) பட்டுத் திரும்பினால் எவ்வாறு இருக்கும்?

    நறுமணம் கலந்து சந்தனம் மணக்கும் அம்மையுனது இளங்கொங்கைகள்மீது உன் கணவராகிய சிவபிரானின் கண்கள் தாவி விளையாடுவது எவ்வாறு இருக்கும்?

    அழகான கருவண்டுகள் தேன் உண்ணுவதற்காகச் செங்காந்தள் மலரை இடைவிடாது மொய்ப்பது கண்கொள்ளாக் காட்சியன்றோ?

    இந்திரநீலக் கற்களைக்கொண்டு வடிவமைக்கப்பெற்ற கழங்குகளைக்கொண்டு அன்னை கழங்காடுவது இவையனைத்தையும் போலுள்ளது எனப் பூரிக்கின்றனர் அடியவர்கள்.

               பாந்தள் மாணிக்கமணி பொற்பூவின்
                       மரகதம்பத்தி பாய்ந்தாடல் எனவும்
             ………………………………………………..
             மழை மதரரிக் கண்கள் பன்மணிக்
                       கொப்பில் மறிந்து விளையாடல் எனவும்
             ………………………………………
             தண்டாது வரிவண்டு செங்காந்தள்
                       மலர்மீது தண்தாது நுகர்வது எனவும்
             ……………………………………………
             …………………………………. இந்திர
                       நறுநீலக் கழங்கு விளையாடி அருளே!
             கனக சிற்சபையில் வாழ் சிவகாம
                       சுந்தரி கழங்கு விளையாடி அருளே10!

    மிக அழகான உவமைகள் நிறைந்ததொரு பாடல் இது. இயற்கையின் செயல்கள் அனைத்திலும் அன்னையின் கழங்காட்டத்தைக் கண்டு உருகும் அடியவர் இப்பெரும்புலவர்.

    இரண்டாம் பாடல் அன்னை விளையாடும் பலவிதமான ஆடல்களையும் தொகுத்துக் கூறுகிறது. கழங்கு விளையாடவேண்டிக் கொள்வதுடன் நிறைவுறுகின்றது.

    சொற்கள் பழகும் இளங்கிளியோடு சில பொழுது கொஞ்சி மகிழ்கிறாள் இப்பெண்!

    பொற்கூண்டில் வளரும் பூவைப்பறவைக்கு மென்மையான சொற்களைப் பயிற்றுவிக்கிறாள்.

    ரத்தினங்கள் பதித்த சிறு பாவைகளுக்கு (பொம்மைகளுக்கு) குழமணம் மொழிந்தும், சிறுவீடு கட்டியும், நறுமணப்பொடிகளைத் தோழியர்மீது வீசி எறிந்தும், யாழினைமீட்டி, இனியகுரலில் இன்னிசைப் பாடல்களைப் பாடியும், மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை வைத்து விளையாடியும், இனிய தோழிமாருடன் நீரில் திளைத்து விளையாடியும், அப்போது நறுமணப்பொடி கலந்த நீரினை இறைத்துக் களித்தும், நீலமயில்மீது     ஏறியமர்ந்து விளையாடியும் மகிழும் பெண்ணே!

    சங்கத்தமிழில் முத்தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கழங்கு ஆடிடுக! என வேண்டும் பாடலிது.

                பழகுசொல் பச்சிளம் கிள்ளையொடு
                       கொஞ்சியும் பஞ்சரம் வளர் ……
             ……………………………………………….
             குழமணப் பிள்ளைகொடு வண்டல்
                       விளையாடியும்……………………
             கொடுங்கையாழ் குரலிசை நரம்பினொடு
                       ……………………………………
             கழகு முத்தமிழ் பாடும் இகுளையரொடும்
                       பொற்கழங்கு விளையாடி அருளே11!

    என்பன பாடல் வரிகள்.

    இளமகளிரின் ஆடல் பாடல்களைச் சித்தரிப்பதில் உலா இலக்கியங்களும் பிள்ளைத்தமிழ் பிரபந்தங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது மிகையேயல்ல எனலாம்.

    (தொடரும்)

     பார்வை நூல்கள்:

    1. பெரும்பாணாற்றுப்படை
    2. அகநானூறு. பா. 17. வரி.2
    3. அகநானூறு, பா.66. வரி.24
    4. நற்றிணை, பா.79, வரி-2-3.
    5. கடம்பர் கோயில் உலா
    6. காளமேகப்புலவர்- திரு ஆனைக்கா உலா
    7. சேறைக் கவிராச பிள்ளை- வாட்போக்கியுலா.

           8, 9. சிவயோகநாயகி பிள்ளைத்தமிழ்

    10, 11. நல்லதுக்குடி கிருட்டிணையர்- தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 22

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 22

    மீனாட்சி பாலகணேஷ்

    (குதலைமொழியாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு பருவமான குதலைமொழியாடல் எனும் இப்பருவம் பொருளற்ற மழலைகூறும் பருவமன்று; ஐந்தாறுவயதுப் பெண்குழந்தை பேசும் அழகான பேச்சுகளாகக் கொள்ளப்பட வேண்டும். அதற்கேற்ப தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் இப்பருவத்தைப் பாடியுள்ள ஒரேயொரு புலவரான கிருட்டிணையர் இதனைப் பொன்னூசல் பருவத்திற்குப் பின்னும் நீராடற்பருவத்தின் முன்பும் வருமாறு அமைத்துள்ளார். இதன் கருத்தை கா. நாகராசு அவர்கள் இப்பிள்ளைத்தமிழுக்கான தமது உரைநூலில் விளக்கியுள்ளார்.

    ‘குதலைமொழி என்பதற்கு மழலைமொழி எனப் பொருள்கொள்வதைக் காட்டிலும் இனியமொழி எனப் பொருள் கொள்வதே பொருத்தமெனப்படுகிறது. ஏனெனில் இப்பருவம் ஊசல் பருவத்துக்கும் நீராடற்பருவத்துக்கும் இடையில் வருகிறது. இவ்விரு பருவங்களும் குழந்தையின் ஐந்தாம் ஆண்டுமுதல் ஒன்பதாம் ஆண்டுவரை நடைபெறும் நிகழ்வுகளைப் பாடுவது. குதலைமொழியாடல் பருவம் பற்றியோ அது குழந்தையின் எவ்வாண்டுக்குரியது என்பது குறித்தோ நூல்களில் சொல்லப்படவில்லை. எனவே இதையும் ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுவரை நடைபெறும் நிகழ்வுகளுள் ஒன்றாகவே கருதலாம். ஐந்தாம் ஆண்டிலிருந்து குழந்தை நன்றாகப் பேசத்தொடங்கிவிடும். எனவே அதை மழலை என்று கொள்ளாமல் இனியமொழி எனவே கொள்ளலாம்1,’ என்கிறார்.

    குதலைமொழியாடல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாயினும் பெண்பால் பிள்ளைத்தமிழில் மட்டுமே சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆண்பால் பிள்ளைத்தமிழான கதிர்காமப் பிள்ளைத்தமிழில் ‘மொழிபயிலல்’ என ஒரு பருவத்தைக் கண்டோம். இதுவும் அதுபோன்றே புலவரின் விருப்பத்தின்படி இயற்றப்பட்டதெனக் கொள்ளலாம்.

    இப்பருவத்தில் இரண்டு பாடல்களே உள்ளன. இவையிரண்டுமே பொருள் செறிந்த அருமையான பாடல்கள். பாடல்களைக் காணப்புகுமுன் தொடர்பான சில கருத்துக்களைக் கண்டு மகிழலாம்.

    சொல், அது என்னவாக வேண்டுமாயினும் இருக்கலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கென்றேயான தனிப்பட்ட ஒரு பொருளுண்டு. அடியார்களின் பார்வை இத்தகைய கருத்தினுள் ஒரு அதியற்புதமான வடிவைக் காண்கின்றது.

                ‘சொல்லும் பொருளும் எனநட மாடும் துணைவருடன்
             புல்லும் பரிமளப் பூங்கொடியே2….’ என அபிராமி அன்னையைப் போற்றுகிறார் அபிராமி பட்டர்.

    சொல் என்பது பேசப்படுவது; கேட்கப்படுவது – ஆகவே அது சக்தியின் அம்சமாக விளங்குவது; பொருள் ஆனது மனதால் மட்டுமே உணரக் கூடியது – ஆதலால் அது சிவபிரானின் அம்சமாவது. சொல்லின்றிப் பொருளில்லை! பொருளற்ற சொல்லுமில்லை! அவை ஒன்றினையொன்று இணைபிரியாதவை; பிரிய இயலாதவை! அதனால்தான் அன்னையும் ஐயனுமாக, சொல்லும் பொருளுமாக எனப் பிணைந்துள்ள சிவசக்தி ஐக்கிய வடிவத்தினை இப்பாடல் அழகுற விளக்கியருளுகின்றது.

    மகாகவி காளிதாசரும் தமது இரகுவம்ச மகாகாவியத்தின் முதல் ஸ்லோகமாக இக்கருத்தையே முன்வைக்கிறார்.

                வாகர்த்தாவிவ சம்ப்ரக்தௌ வாகர்த்தா ப்ரதிபத்தயே
             ஜகத பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ3

    ‘இந்தப் பிரபஞ்சத்தின் தாய்தந்தையரான பார்வதி, பரமேஸ்வரர்களை நான் வணங்குகிறேன். அவர்கள் சொல்லும் பொருளும் என இணைந்திருப்பவர்கள்,’ என்பது எளிமையான விளக்கம்.

    சொற்களின் பிறப்பு, அமைப்பு, பொருள் அனைத்துமே அறிவியல் நோக்கிலும் அதற்கும் அப்பாற்பட்டதொரு தத்துவ வேதாந்த முறையிலும் உணரப்படுவனவாகும்.

    சொல்லின் தோற்றத்தைத் தமிழின் பழம்பெரும் முதன்மைநூலான தொல்காப்பியமானது விளக்கியுள்ளது. சொல்லின் அடிப்படையான எழுத்துக்களும் அவற்றுக்கான ஓசையும் உந்தியிலிருந்து எழும் காற்றானது தலை, தொண்டை, மார்பு ஆகிய இடங்களில் தங்கி பல், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய இடங்களில் படுவதனால் பிறக்கின்றன. இதற்கென மாத்திரைகள் (கால அளவைகள்) உண்டு. இது தவிர்த்து உறுப்புகளில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக்காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் மறைநூல்களில் மட்டுமே காணப்படும் என்கிறார் தொல்காப்பியர்.

    இது எவ்வாறு? நான்குவிதமான சொற்கள் (வாக்குகள்) உண்டென தொல்காப்பியரின் குருவான அகத்தியர் கூறுகிறார். அவை

                ‘………. பைசந்தி மத்திமை வைகரியுஞ்
             சூக்குமையும் நாலுமிது வாக்கேயாகும்4,’ என்கிறார்.

    பரா (சூக்குமை), பச்யந்தி (பைசந்தி), மத்யமா (மத்திமை), வைகரீ,  என்பன வாக்கு எனும் சொல்லின் பலவிதத் தோற்ற வடிவங்களாகும்.

    இதனை லலிதா சஹஸ்ரநாமத்திலும் காணலாம்.

                ‘பரா ப்ரத்யக் சிதீரூபா பச்யந்தீ பரதேவதா
             மத்யமா வைகரீ ரூபா5,’ என்பன அன்னையின் மீதான நாமாவளிகளில் 366, 368, 370, 371 ஆகும். பராசக்தியான லலிதாதேவியே இந்த நான்குவிதமான சொல்வடிவங்களில் விளங்குகிறாள்.

    இவற்றுள் மிக நுண்ணிய நிலையானது பரா அல்லது சூக்குமை எனப்படும்; இது ஞானிகள் தமது சிந்தையில் உய்த்துணரும் ஒலிவடிவமாகும். வெளிப்படையாகக் கேட்கவியலாதது; ஒலிவடிவமற்றது. மூலாதாரத்தில் விளங்குவது.

    பைசந்தி எனப்படுவது உள்ளத்தினுள் தோன்றும் ஒலிவடிவம். சொல்லின் ஆரம்பகாலத்துக் கலங்கிய நிலை எனலாம். மூலாதாரத்தில் கிளம்பி நாபிக்கு வருவது பச்யந்தீ ஆகும்.

    மத்திமையாவது சொல்லின் இடைப்பட்ட நிலை. மனதால் மட்டுமே உணரக்கூடியது. பச்யந்தி நிலையிலிருந்து இருதயத்திற்கு வரும் நாதம் மத்திமை.

    வைகரி என்பது தெளிவாகச் செவிக்குக்கேட்கும் அட்சர வடிவான ஒலியாகும். மத்யமா ஆனது கழுத்திற்கு வந்தால் பீஜம் அல்லது அட்சரம் ஆகின்றது.

    பரா எனும் சூக்குமையான வாக்கினை மேலான முனிவர்களால் மட்டுமே உணரவும் கிரகித்துக்கொள்ளவும் இயலும். இவையே வேத மந்திரங்களின் அடிப்படை ஆகும். அவை உச்சரிப்பிற்கேற்ற மந்திரங்களாக ‘வைகரி’ ரூபத்தில் வெளிப்படுமுன்பு பைசந்தி, மத்திமை எனும் இடைப்பட்ட நிலைகளில் உருப்பெற்று வளரும். இதனையே தொல்காப்பியர், ‘அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே6,’ என்றார்.

    இந்த வைகரியே உந்தி, மார்பு, கழுத்து, உச்சி, மூக்கு இவற்றுள் இடையறாது சென்றுவரும் மூச்சுக்காற்றில் கலந்து பல், அண்ணம், நாக்கு, இதழ் இவைகளில் பட்டு பற்பல சொல்வடிவாகி உருப்பெறும். இதனையே பெற்றோர் தம் சிறுகுழந்தைகள் எழுப்பும் இனிய ஓசைகளிலும், பேசும் பொருளற்ற மழலையிலும், குதலை மொழியாகவும் உணர்கின்றனர். கேட்டும் மகிழ்கின்றனர்.

    இன்னும் எளிதாகக் கூற வேண்டுமெனில், ‘அம்மா’ எனும் ஒரு சொல்லைக் கூற முற்படும்போது முதலில் அந்த ஒலியின் வடிவம் மனக்கண்ணில் சூக்குமையாக, நுட்பமாகத் தோன்றுகிறது. அடுத்து அதற்கு மட்டுமேயான அந்த அம்மாவின் உருவம் ஒலிவடிவமாக உள்ளத்தில் எழுகின்றது. இதுவே பைசந்தி அல்லது பச்யந்தி. பின்பு அது சொல்லாக ஒலியோடு நமது வாயிலிருந்து வெளிப்படும் முன்பு அதன் ஒலிவடிவு மனதில் தோன்றி  மத்திமை என உணரப்படுகின்றது. பின்பு ஒலியுடன் கூடிய அழுத்தமான சொல்லாக (வைகரி) வெளிப்படுகின்றது. இது செவிக்குத் தெளிவாகக் கேட்கும் அட்சர வடிவான ஒலி.

    நாதமாக (ஓசையாக) உயிரோடு கூடியிருப்பது மொழித்தன்மை; மொழிக்கு இன்றியமையாதன சொற்கள் எனும் வாக்கு; அவை விந்து தத்துவமாகும் என்பன சித்தாந்த சாத்திரக் கருத்துக்களாகும். இதனையே சிவஞான சித்தியார்,

    ‘சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்7‘ என்கின்றது.

    நாம் எண்ணும் எண்ணங்களும் அவை ஒலிவடிவம் பெற்று நம்மால் பேசப்படுதலும் சிவசத்தியின் அம்சங்களே, தத்துவங்களே எனும் பேருண்மை இதனால் புலனாகும்.

    உண்மைக்காதலின் உயர்வைப் போற்றிப் பாடியுள்ள ‘பாயுமொளி நீயெனக்கு,’ எனும் பாடலில் பாரதியார், ‘பேசுபொருள் நீயெனக்கு, பேணுமொழி நானுக்கு8,’ என்று சொல்-பொருளின் தொடர்பினைப் பாடியுள்ளார்.

    சிவசக்தி வடிவமான பிரணவத்தின் – ஓங்காரத்தின் – முழுமுதற்பொருளாக, அதன் தூல வடிவமாகவே விளங்கும் விநாயகப்பெருமானே அனைத்து எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும் முழுமுதற் பொருளாவான். இக்கருத்தினை அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று அருமையாக விளக்குகிறது.

    வேதவிநாயகப்பெருமான் நமது புத்திக்கு (புந்தி) எட்டாத புண்ணியவெளியில் திகழ்ந்து அருளுபவன். நாபியை இடமாகக் கொண்டு நாதம் எனப்படும் அறிவே வடிவாக இருக்கும் சூக்குமை, உந்தியில் உற்பத்தியாகி பிராணவாயுவை வடிவாகக் கொண்ட பைசந்தி, நெஞ்சையும் கண்டத்தையும் இடமாகக் கொண்டு அட்சர வடிவினை ஒழுங்குபட நிறுத்தி, செவிக்குக் கேளாமல் உள்ளறிவாக நிற்கும் மத்திமை, நாக்கினடியிலிருந்து பிறந்து ஒலிவடிவம் பெறும் வைகரி எனச் சொற்கள் நான்குவகைப்படும்.

    ‘இந்த நாலுவிதமான எழுத்துக்களுக்கும், மிகுதியான நூல்களிலுள்ள எழுத்துக்களுக்கும், பழமையான நான்கு வேதங்களில் உள்ள எழுத்துக்களுக்கும், குற்றமற்ற சமஸ்கிருத மொழியில் உள்ள எழுத்துக்களுடன் பதினெட்டுவகை நிலங்களில் வழக்கிலுள்ள அத்துணை எழுத்துக்களுக்கும் மேற்பட்டு விளங்கி ஓங்காரப்பொருளாகவும் அவற்றின் தலைவனாக அவற்றை ஆள்பவனாகவும் விளங்கி, மேலான ஞானத்தின் மூல ஆதாரம் எனும் இடத்தில் நமது புத்திக்கு எட்டவியலாத ஒரு புண்ணியவெளியில் அடைவதற்கு அரிய பரம்பொருளாக இருக்கும் விநாயகப் பெருமானே!

    ‘குற்றமற்ற புகழைக் கொண்டவனே! வெற்றி அளிப்பவனே! செங்கீரை ஆடியருளுக!’ என அடியார் வேண்டுவதாக அமைந்த பொருள்செறிந்த பாடல் இது.

                ‘நாதத் தலத்திலெழு பறையினொடு பைசந்தி
                       நல்லமத் திமைவைகரி
                 நாலெழுத் துக்கும்வெகு நூலெழுத் துக்குமுது
                       நான்மறை எழுத்தினுக்கும்
             ……………………………………..
             போதத்தின் மூலவா தாரத் தலத்திலே
                      புந்திக்கும் எட்டாததோர்
                 புண்ணிய வெளிக்குளே ………..
             தீதற்ற விசைகொளும் அரும்பாத்தை புரிமுதல்வ
                       செங்கீரை ஆடியருளே9
             ………………………………………..’

    எல்லாம்வல்ல சிவப்பரம்பொருளிடமிருந்து முதலாவதாக உண்டாகிய படைப்பு ஓம் எனும் பிரணவ நாதமாகும். அந்த ஓம் எனும் ஒலியின் வரிவடிவமே விநாயகரின் திருவுருவம். ஆகவே இவர் ஓங்கார ரூபன் எனவும் பிரணவ கணபதி எனவும் அறியப்படுகிறார்.

    எழுத்து, ஓலி, ஓசை, சொற்கள் ஆகியவற்றின் பிறப்பினை இவ்வாறாக அறிந்துகொண்டு சிவகாமியம்மை பிள்ளைத்தமிழின் பாடல்களைக் காணப்புகலாம்.

    மூன்று பிள்ளைத்தமிழ் நூல்கள் சிவகாமியம்மைமீது இயற்றப்பட்டுள்ளதெனக் கூறுவர். அவற்றினை இயற்றியோர்:

    1. நல்லதுக்குடி கிருட்டிணையர்.
    2. ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார்.
    3. மு. ரா. அருணாசலக் கவிராயர்.

    இருப்பினும் ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவைகளில் திகழ்கின்றன என்பது மறுக்க முடியாததாகும்.

    நாம் இங்கு காணப்போவது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றிய நூலின் பாடல்களைத்தாம். ஏனெனில் முன்பே கூறியதுபோல, இவர் மட்டுமே குதலைமொழியாடல் பருவத்தைப் பாடியுள்ளார். மற்றதில், இரண்டாவது நூல் வழக்கமான பெண்பால் பிள்ளைத்தமிழுக்கான பத்துப் பருவங்களையே கொண்டமைந்துள்ளது. மூன்றாவது காணக் கிடைக்கவில்லை.

    முதல்பாடல் சிவகாமி அன்னையிடம் புலவரின் வினாக்களாகவே அமைந்துள்ளது:

    ‘தாயே! முழுநிலவு பொழியும் இனிய அமுதக்கிரணங்களும், தெள்ளிய அலைகளைக்கொண்ட பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் முன்பொருகாலம் கடைந்தபோழ்து அதிலிருந்து கிடைத்த தேவாமிர்தமும் முத்தியைத்தர வல்லனவோ?

    ‘அவ்வமுதத்திற்கு நிகரானவை எனக்கூறப்படும் மா, பலா, வாழை எனும் முக்கனிகளொடு சர்க்கரையும் பசுந்தேனும் சேர்த்தாலும் அவை இருவினைகளாலும் வரும் துன்பங்களை நீக்கி இன்பத்தைத் தருமோ?

    ‘காமதேனுவின் பாற்சுவையும் கிளியானது கொஞ்சிப்பேசும் மொழியும் பாசம் எனும் ஆணவமலமாகிய இருளை நீக்கிவிடுமோ?

    ‘ஆனால், (நீ பேசிடும் குதலைமொழியானது),

    ‘தவறுகளைத் திருத்தும்; இம்மைக்கும் மறுமைக்கும் முத்திதரும். இனிச்சொல்ல வேறென்ன உள்ளது? ‘தம் குழந்தைகள் பேசும் இனிய சொற்களைக்கேட்பது செவிக்கு இன்பம் எனும் உண்மை பொய்யாகுமோ? (ஆகாது; அதுவே உண்மை!)

    ‘குழலிசையும் யாழிசையும் இனியதன்று; இவற்றிலும் சிறந்த உனது பவளவாயினின்றும் பெருகும் குதலைமொழியைப் பேசியருள்வாயாக!

    ‘குழகன் எனப்படும் சிவபிரான் மனம்கிழும் சிவகாமசுந்தரியே உன்னுடைய மழலைவாயால் குதலைமொழி பேசியருளுக.”

              முழுமதியின் அமுதமும் தெண்டிரைப்
                       பாற்கடலில் முன்கடைந்திடும் அமுதமும்
             முத்திதருமோ? அதனையொப்பென உரைத்திடினும்
                       முக்கனி சருக்கரையொடும்
             …………………………………………………..
             வழுவகலும் இம்மைக்கும் மறுமைக்கும்
                       முத்திதரும் மற்றினி உரைப்பது
             ………………………………………………….
             குழலினிது யாழினிதுமன்று நின்பவளவாய்க்
                       குதலைமொழி ஆடியருளே10!
             ………………………………………………

    மக்கட்பேறு எனும் திருக்குறள் அதிகாரத்தின் கருத்துக்கள் மிகப்பொருத்தமாகப் பாடலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

                ‘……….. ……….. …………… மற்றவர்
             சொற்கேட்டல் இன்பம் செவிக்கு11.’
    ‘குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
             மழலைச் சொல்கே ளாதவர்12.’

    கருத்தினுள் வாங்கிக்கொண்டு சிந்தித்து இன்புற வேண்டிய பாடல் இதுவாகும்.

    அடுத்த பாடல் மொழி பிறக்கும் விதத்தினை விளக்கிக் கூறுகிறது.

    ‘சொல்லின் நுண்ணிய நிலையான சூக்குமையாக முதலில் இருந்து, பின் பைசந்தி எனப்படும் கலங்கிய தெளிவற்ற நிலையிலெழுந்து, மத்திமை எனும் இடைப்பட்ட நிலைச்சொல்லாகி, இறுதியில் தெளிவான வைகரியாகி ஒலிக்கும் வாக்கானது, கொப்பூழ், மார்பு, கழுத்து, உச்சி, மூச்சுக்காற்று எப்போதும் சென்றுவரும் நாசித்துவாரங்கள் ஆகியவற்றில் கலந்து, பல், அண்ணம், உதடுகள், நாக்கு என்பவற்றுடன் கலந்து, வாயினில் ஒலிவடிவான சொற்களாக உருப்பெற்று ஒலிக்கும்.

    ‘இத்தகைய மழலைச் சொல்லினை தம் குழந்தைகள் பேசுவதனைக்கேட்டு, கண்டும், அனுபவித்தும், பார்த்தும், அன்னை தந்தையர் பேரின்பம் எய்துவர்.’

    இவ்வாறு பேசும் மழலையர் பெற்றோரின் தெய்வங்களே அன்றோ? அதனையே அடுத்துக் கூறிப் போற்றுகிறார்.

    ‘எனக்கு வரம்தர வந்த தாயும் தந்தையும் நீ! நான் போற்றி வழிபடும் தெய்வமும் நீயே! குறைவில்லாத எனது உயிரும் நீ! பருவுடலும் நீ! உடலில் உறைந்துள்ள ஐம்புலன்களும் நீ! இனிமையாகக் கூவிடும் குரல்படைத்த கிளியும் நாணிடும் உனது குதலைமொழியைப் பேசியருளுகவே! குழகன் எனப்படும் சிவபிரான் மனம்கிழும் சிவகாமசுந்தரியே உன்னுடைய மழலைவாயால் குதலைமொழி பேசியருளுக.’ எனும்  பாடல்.

    சூக்குமை விளங்கும் பைசந்தி மத்திமையொரு
                       துலங்கும் வைகரி ஆகியே
             சொல்லரும் இலஞ்சி யுரனொடு கண்டம்
                       உச்சி ஒலிதொடர் நாசியொடு கலந்தே
             வாக்கினில் எழுந்துபல் அண்ணம் இதழ்
                       நாவினில் வழங்கும் மழலைச் சொல்லுமேல்
             …………………………………………………..
                       உடலினில் படரும் ஐம்புலனும் நீயே!
             …………………………………
             குழகன் மகிழ்சிவ காமசுந் தரிநின்
                       மழலைவாய்க் குதலை மொழியாடி அருளே13!

    நம் தமிழகத்தில் ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே,’ எனும் வழக்குண்டு. இங்கு தெய்வத்தையே குழந்தையாக்கிப் போற்றி, அக்குழந்தை வடிவிலும் தெய்வத்தை உணரும் அடியாரின் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது.

    மேலும் உரையாசிரியர் நாகராசு அவர்களின் கருத்துப்படி, தனது பாடல்களான மழலைச் சொற்களைத் தாயும் தந்தையுமாக விளங்கும் இறைவி ஏற்று மகிழ வேண்டுமெனும் விருப்பத்தையும் புலவர் குறிப்பாக உணர்த்தியுள்ளார்.

    (தொடரும்)

    ___________________________________

    பார்வை நூல்கள்:

    1. கா. நாகராசு, 2015. நல்லதுக்குடி கிருட்டிணையர் பாடிய தில்லைச் வகாமியம்மை பிள்ளைத்தமிழ்- மூலமும் உரையும்.

    2. அபிராமி பட்டர்- அபிராமி அந்தாதி.

    3. காளிதாசர்- இரகுவம்சம்

    4. அகத்தியர்

    5. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.

    6. தொல்காப்பியர் – தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்.

    7. அருணந்தி சிவாச்சாரியார்- சிவஞான சித்தியார்

    8. பாரதியார்- கவிதைகள்.

    9. அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்

    10, 13. நல்லதுக்குடி கிருட்டிணையர்- தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-குதலைமொழியாடல் பருவம்.

    11, 12. திருவள்ளுவர்- திருக்குறள்.

     

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 21

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 21

    மீனாட்சி பாலகணேஷ்

    (பாவை விளையாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பாவைகளை வைத்து, அவற்றைத் தமது குழந்தைகளாகப் பாவித்து அவற்றிற்குப் பாலருத்துவித்தும், நீராட்டியும், உணவூட்டியும், உறங்கவைத்தும் சிறுமியர் விளையாடுவது வழக்கம். இவையனத்தும் உளவியல் தொடர்பான நிகழ்வுகள். சிறுமியின் உடலுடன் உள்ளமும் வளர்ந்து வருங்காலை, அன்பான குடும்பங்களில் தாய்மார் செய்வதுபோன்றே, சிறுகுழந்தைகளை அவள் சீராட்டுவது போன்றும், தனது விளையாட்டுப்பாவைகளை சிறுகுழந்தையாகப் பாவித்து ஏழெட்டு வயதுச்சிறுமி விளையாடுவாள். அவளுடைய அன்றாட வாழ்வின் இன்றியமையாத செயல்கள் இவை! வளர்ந்து, ஆடிக்களித்து, பருவமங்கையாகி, களவும் கடிமணமும் புரிந்து வாழப்போகும் பெண்மையின் உணர்வுகள் விழித்தெழுந்து உள்ளத்தில் வேரூன்றும் சிறுபருவம். தங்கமதலையரை ஈன்றெடுத்து அமுதூட்டி நன்மக்களாக வளர்க்கப் போவதன் முன்னோட்டம் இதுவல்லவா?

    இதனைக் ‘குழமணம் மொழிதல்’ என்ற ஒருசெயலை மட்டுமே வைத்து ஒரு பருவமாகக் கூறியுள்ளது பிங்கலநிகண்டு. அதாவது, தமது பாவைகளுக்கு மணம்பேசி முடித்து, அதனை நிகழ்த்தி, விருந்துண்டு மகிழ்வது எனும் பிள்ளை விளையாட்டே இதுவாகும். மேற்கூறிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய செய்திகளாதலின் இதனுள் அடங்கும் என நாம் கொள்ள வேண்டும். ‘உலா’ எனும் சிற்றிலக்கிய இலக்கணப்படி, 4-8 வயது சிறுமி பேதை எனப்படுவாள். ‘அவளுக்குரியதே சிற்றில் விளையாட்டும் அதன் பல அங்கங்களும்,’ என்பது தமிழ்த்தாத்தா உ. வே. சா. அவர்கள் கூற்று1.

    பாவைகள் பலவகைப்படும். பாவைநோன்புக்கான பாவைகள் ஆற்றுமணலினால் செய்யப்படும் என அறிகிறோம். ஆனால் இது பாவை விளையாட்டு. சிறுமியர் தம் கையாலெடுத்துச் சீராட்டிப் பாலூட்டி, உறங்கவைக்க பாவைகள் உறுதியாக இருக்க வேண்டுமன்றோ? இவை சிவந்த சந்தனமரத்தினால் செய்யப்படும். ‘மரப்பாச்சி’ என்று கூறுவர். இவற்றிற்குச் சிறுமியர் ஆடைகள் உடுத்தி, தாம் வேண்டும்விதம் அழகுசெய்து விளையாடுவர். இன்றும் இப்பொம்மைகள் புழக்கத்தில் உள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இவை இல்லாதபோது, பாவைகள் பழந்துணிகளாலும் தென்னோலையாலும் செய்யப்படுவதும் உண்டு.

    ‘பாவைவிளையாடல்’ என்பதனை ஒரு பருவமாக மூன்று பாடல்களுடன் நாம் காண்பது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ள தில்லைச்சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே ஆகும். ஆயினும் பாவை விளையாடலின் தொடர்பான கூற்றுக்களை மற்றுமுள்ள பல பிள்ளைத்தமிழ் நூல்களில் பல பருவங்களில் குறிப்பிடக் காண்கிறோம். சிலவற்றை இங்கு நினைவுகூர்தல் நன்மை பயக்கும்.

    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் தமது சிற்றிலை அழிக்க முற்படும் சிறுவனான குமரப்பெருமானிடம் அச்சிற்றிலை இழைத்த சிறுமியர் வேண்டுவதாக அமைந்ததொரு பாடல்:

    “நாங்கள் உலைப்பெய்து சமைத்த உணவு, அதனை வைத்த பெரும் சிப்பிகள் (நந்தின் கடம்), அடுப்பென எரியும் மாதுளைமலர்கள் ஆகியன அழிந்துபடுமே!

    “நாங்கள் திருமணம் என்று கூறிக் கொண்டுவந்த சிறுவிருந்தும் வீணாகிப் போகாதோ?”

    ஆண்பாற் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் நாம் கண்டதொரு காட்சியின்படி (இத்தொடரின் பாகம் 8.1) இவர்கள் உலையேற்றிச் சமைப்பது ஒரு பாவனை விளையாட்டே. பாவைத் திருமண விருந்திற்கு அவரவர்கள் இல்லங்களிலிருந்து தாய்மார்களிடமிருந்து உண்மையான சுவையூறும் தின்பண்டங்களை முறைவைத்துக்கொண்டு பெற்று வருவர்; பகிர்ந்துண்ணுவர் என அறிகிறோம். (எம் தலைமுறையைச் சேர்ந்த பெண்மணிகள் தம் பிள்ளைப்பருவத்தில் இவ்விளையாட்டை விளையாடியிருப்பதனால் அறிவர்!!)

                 நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
                       நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
             ………………………………………………………………….. அடியேம் வதுவையெனச்
                       சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ2

    அடுத்த வரிகள் பெண்குழந்தையின் கவனிக்கும், உய்த்துணரும் திறனை நமக்கு உணர்த்துகின்றன. தம் தாய்மார்கள் பச்சிளம் குழவியர்க்கு முலைப்பால் அருத்துவிப்பதனைக் கண்டிருக்கும் இவர்கள் தாமும் தம் பாவைகளுக்கு அவ்வாறு செய்ய முற்படுகின்றனர். முகைப்புண்டரிகம் எனும் தாமரைமொட்டுக்களை இன்னும் வளர்ச்சியடையாத தம் மார்பில் கட்டிக்கொண்டு (உரம் பிணித்து), அதனை முலை என்று பாவித்துக்கொண்டு பாவைகளுக்குப் பாவனையாக முலைப்பால் கொடுக்கின்றனர். ஐந்தாறு வயதுச் சிறுமியரின் உய்த்துணரும் திறன் வியக்கத்தக்கதாம். ‘சிற்றிலைச் சிதைத்தால் இவ்வாறு பால்கொடுத்துப் பின் உறங்கவைத்த அக்குழவி கண்விழித்தெழுந்து அழாதோ?’ எனவும் கேட்கின்றனர்.

                முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
                       மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
             திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
                       சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே2.

    திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் சிற்றிற்பருவப்பாடல் இன்னொரு நயத்தை விரிக்கின்றது. திருமணம் என்பது ‘ஆயிரங்காலத்துப் பயிர்’ எனப் பெரியோர் கூறுவதனைக் கேட்டுள்ள சிறுமியர், தாமியற்றும் பாவை மணமும் ‘பலவாறு முயன்று அலைந்து திரிந்து’ நடத்தும் மணவினை என்பதாகக் கூறுவது வியப்பையும் நகையையும் ஒருசேரக்கூட்டுகின்றது.

    “உன் தந்தையான சிவபிரான் முன்பு புத்தூரைச் சேர்ந்த பாவை ஒருத்தியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய காரணத்தால் பின்னொருநாள் இருகால்களும் நோகும்படி, திருவாரூர் வீதியெங்கும் இரவில் பலமுறை நடந்தலைந்ததனை நீ அறியாயோ?”

    புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் மகளுடனான சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து, அவரைத் தன்னடிமையாக்கி ஆட்கொண்டான் சிவபிரான். பின்பு அந்த சுந்தரருக்காகவே, அவரிடம் பிணக்கு கொண்ட அவருடைய மனைவியாகிய பரவை நாச்சியாரிடம் பலமுறை திருவாரூர் வீதிகளில் திரிந்தலைந்து தூது சென்றான் அவ்வீசன். இதனைச் சிறுமிகள், ‘அவன் முதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய பாவத்திற்காகத்தான் இங்ஙனம் திரிந்தலைந்தான்,’ என்று கூறுகின்றதாகப் புலவர் அமைத்துள்ள நயம் வியக்கத்தக்கதாம்.

    “அதுபோன்று நீயும் எம் பாவையின் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவையாயின், உன் மலர்ப்பாதங்கள் நோகும்வண்ணம் எத்துணை பெண்களிடம் தூதாக நடக்க வேண்டிவருமோ?” எனவும் இகழ்ச்சியாகக் கூறுகின்றனர்.

                ‘உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒருகால்முன்
                       ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
             முந்தை யிருளில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
                       முயன்று பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
             வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்க்கால் சிவக்க எத்தனைகால்
                       மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ3?’ என்பது பாடல்.

    மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்து இனிய பாடலொன்று பாவைவிளையாட்டின் மற்றுமொரு சுவையான காட்சியைக் கண்முன் விரிக்கின்றது.

    தமது சிற்றிலை அழிக்க ஓடோடிவரும் சிறுவனான தென்பேரைநாதனிடம் சிறுமியர் கைகூப்பி வேண்டுகின்றனர்: “அன்பாக அணைத்து, முலைப்பால் ஊட்டி, புனலில் நீராட்டி, அருமையாகக் கண்களுக்கு மையிட்டு அலங்கரித்து, ஆரங்களை அணிவித்து, பட்டாடை உடுத்தி வைத்துள்ள என் மகவுக்கு (பாவைக்கு) உனது திருப்பெயரையே சூட்டுவேன். தயவுசெய்து எமது அழகான சிற்றிலை அழிக்கவேண்டாம்,” என்கின்றனர்.

                அன்போடணைத்து முலைகொடுத்தின்
                      னமுதூற்றறிருக்கும் புனலாட்டி
             அருங்கட் கடைக்கஞ் சனமெழுதி
                       ஆரந் திருத்திப் பட்டுடுத்தி
             உன்பே ரிடுவே னென் குழவிக்கு4
                       …………………………….

    வீட்டுப் பெரியவர்கள் பெயரையோ தெய்வங்களின் பெயரையோ சிறுகுழந்தைகளுக்கு இடும் வழக்காற்றை இச்சிறுமிகள் கண்டு உணர்ந்துள்ளனர் என்பது இதனாற் புலனாகின்றது அல்லவோ?

    பெண்குழந்தைகளின் விளையாட்டை ஊன்றி நோக்கிய புலவர் பெருமக்களால்தான் இவ்வாறு சுவைபடப் பாடவியலும்!

    இதுபோன்று பலவிதமான நயமிகுந்த பாடல்கள் இவ்விலக்கியம்தோறும் விரவிக் கிடப்பதனைக் காணலாம்.

    இனி பாவைவிளையாடல் எனும் பருவத்தில் உள்ள பாடல்களைக் கண்டு களிப்போமா?

    தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழினை இயற்றியவர் ஒரு சக்தி உபாசகர். அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான அவருக்கு அன்னை சிறுமியாய் விளையாடும் விளையாட்டுக்கள் அனைத்துமே அகக்கண்ணில் அவளுடைய திருவிளையாடல்களாகக் காண்கின்றன.

    தெய்வங்களின் பாவைகள், மானிடர் வடிவங்கள், விலங்குகள், கடலில்வாழும் உயிர்கள் இவற்றின் பாவைகள், பறவைகளின் பாவைகள், தரையில் ஊர்ந்துசெல்லும் புழுபூச்சிகளின் பாவைகள், மரம், செடி, கொடி எனும் அனைத்துப் பாவைகள் என ஓரறிவு உயிர்முதல் ஐந்தறிவு, ஆறறிவு படைத்த உயிர்கள்வரை அனைத்துமே பராசக்தி தன் விளையாட்டிற்காக உருவாக்கி வைத்துள்ள பாவைகளாம். இந்தப்பாவைகளை எல்லாம் எண்பத்து நான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களில் இவளே செய்கிறாளாம்.

              “வல்ல தெய்வப் பாவை மானிடப்
                       பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
             மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
                       மருவு பறவைப் பாவையும்
             ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும் (ஒல்லை- விரைவு)
                       பாவையும் உறும் தாவரப் பாவையும்
              ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப் (ஒருபொறி- ஓரறிவு)
             பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்5
    …………………………………………” என்பன பாடல் வரிகள்.

    இப்பாடலில் உட்கருத்தாகப் பரிணாம வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் பொதிந்துள்ளதனைக் காணலாம். ஓரறிவு படைத்த உயிர்களான புல், மரம் ஆகிய தாவரப் பாவைகள், ஈரறிவுயிர்களான சிப்பி, கிளிஞ்சல் ஆகிய கடல்வாழ் உயிரினங்கள், மூவறிவு படைத்த உயிர்களான ஊர்ந்து செல்லும் எறும்புகள் முதலியனவும், நான்கறிவு கொண்டவையான நெளிந்து ஊர்ந்து செல்லும் சிலவகைப் புழுபூச்சியினங்களும், ஐந்தறிவு கொண்ட உயிர்களான பறவை இனங்களும், பஞ்சபூதங்களாலான உடல்களில் ஒன்றன்பின் ஒன்றாகப் படைக்கப் பட்டிருப்பதனை பாடல் வரிசைக்கிரமமாக விளக்குகிறது. மானிடர் ஆறறிவு படைத்த உயிர்களாகக் கருதப்படுவர்.

    இவற்றை அன்னையின் விளையாட்டாகக் கொள்வது அடியார்களின் நோக்கு. ‘இயற்கை நிகழ்வு’ என நாம் பல காலங்களாகப் பயின்றுவரும் பரிணாம வளர்ச்சி எனும் அறிவியல் சிந்தனை, அவ்வியற்கையையும் இயக்கும் இறைத்தத்துவமாக அடியார்கள் சிந்தையில் பதிந்துள்ளது என்பதனை நாம் கண்டு சிந்திக்கத்தக்கதாகும்.

    அடுத்துக்காணும் பாடலில் அன்னையை இளம் சிறுமியாகக் கண்டு மகிழ்வார் புலவர். சிறுமியர் விளையாடும் சிற்றில் எனும் சிறுவீடமைத்தல், சிறுசோறடும் விளையாட்டு, பாவைவிளையாட்டு ஆகியன அழகிய இப்பாடலில் ஒருசேரக் கூறப்பட்டுள்ளன.

    மணமாகாத இளமைப்பருவத்தில் சிறுமியர் சிலபொழுது தமக்குள் ஒருவரையொருவர் மணப்பெண் – மணவாளன் என்று முறைப்படுத்திக்கொண்டு மணமாலை சூட்டி திருமணச் சடங்கு செய்து விளையாடுவர். பின்பு தோழியர் புது மணப்பெண்ணுக்குச் சட்டுவம் பிடித்துச் சமையல்செய்யப் பழக்கித் தருவர்! பின்பு, ஒரு சிறுமகவைப் பிள்ளையாக்கி வைத்து அழும் அப்பிள்ளையின் அழுகையை நிறுத்தி, சேலையால் கட்டிய தூளியில் (ஏணையில்) இட்டுத் தாலாட்டவும், ‘நீ அழவேண்டா’ என்று கையிலெடுத்துப் ‘பால் உண்ணுக’ என்று முத்தமிட்டும், பிறர்காணாதபடி மறைவாக மார்பிலணைத்து முலைப்பால் கொடுத்தும் (கொடுப்பதுபோல் நடித்தும்), அதற்காக நாணங்கொண்டு தலைகவிழ்ந்தும் நிற்கும்வண்ணம் நீ பொற்பாவைகளைவைத்து விளையாடுக! என வேண்டும் பாடல்.

                கன்னியில் மணற்சிற்றில் விளையாடும்போது
                       முக்கண்ணி நீ தேவியெனவும்
             கடவுள் மணவாளனென மணமாலை
                       சூட்டவும்……………………..
             …………………………………………..
             ……………………………… ஊறுபால்
                       உண்ணுக என மணிவாயில் முத்தமிட்டு
             மார்பத்து எடுத்து அனைத்தும் பால்
                      கொடுத்து அயலின் மற்று நாணிக் கவிழ்த்தும்
             ………………………………………
             பரம சிவகாம சுந்தரி அம்மை
                      இனிய பொற்பாவை விளையாடி அருளே6!

    இதில் பொய்தல் விளையாட்டின் அனைத்துச் செயல்களையும் அழகுற விவரித்துள்ளதனைக் காணலாம்.

    இம்மூன்று பாடல்களில் ஒன்று பரிணாம வளர்ச்சி தொடர்பான இறைத் தத்துவத்தினையும், இன்னொன்று சிறுமியர் விளையாட்டைப் பூரணமாக அதன் சிறுநிகழ்வுகளுடன் சுவைபடவும் விவரிக்கின்றது. மூன்றாம் பாடலில் புலவரின் கவிதைத் திறனையும் அது பொதிந்துதரும் பல இனிய செய்திகளையும் கண்டு களிக்கலாம்.

    பாவை எனும் சொல்லை இப்பாடலில் திரும்பத்திரும்ப ஒன்பதுமுறை பயன்படுத்தி வெவ்வேறு கருத்துக்களைக் கூறுகின்றார்.

    உலகிற்குத் தலைவியாக விளங்கும் அம்மையான இவள் பாம்புகளாலான அணிகளையும், செம்பொன் நவமணிகளால் இழைத்த மாலைகளையும் அணிந்து விளங்கும் பாவை!

    உலகங்கள் அனைத்தையும் ஒருசேர ஆளவந்த பாவை!

    கிட்டுவதற்கே அரிதான குடிலை எனப்படும் பிரணவ மந்திரம் உலகத்தோருக்குக் கிடைக்கும்படி அருள் செய்யவந்த பாவை!

    உலக அதிசயம் எனக் கூறப்படும் கொல்லிப் பாவையும் இவளே!

    (கொல்லிப்பாவை என்பது அதிசயமானதொரு செய்தி! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் உறையும் இக்கொல்லிப்பாவை ஒரு பெருநிலையான தெய்வமாவள். கொல்லிமலைக் குடவரையில் விளங்கும் இப்பாவைபற்றி கொங்குமண்டல சதகம் எனும் நூலில் சுவையானதொரு விளக்கம் காணலாம்).

    வணங்கிப் போற்றத்தக்கதொரு தெய்வப்பாவை!

    பல உயிர்களுக்கும் வீடுபேற்றை அருளக்கூடிய தாயாகிய சித்திரப்பாவை!

    விந்து, மோகினி, மான் எனக் கூறப்படும் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி எனப்படும் மாயைகள் ஊழிக்காலத்தில் தன்னுள் அடங்கிவிடும் ஆதாரமான பாவை.

    மெய்ப்பொருளான தெய்வத்தைப் பரவி வழிபடுபவர்களும், பாடுவோரும்  அடைகின்ற சித்தி, முத்தி ஆகியவற்றின் வடிவான பொற்பாவை!

    ‘சிவகாமசுந்தரி அம்மையே, நீ பலவகையான பொற்பாவைகளை வைத்து விளையாடியருளுக!’ என வேண்டும் பாடலிது.

                  ‘நாடரும் சருப்பப்பூண் அணி செம்பொன்
                       மாலையுடன் நவமணி அணிந்த பாவை
             …………………………………………………….
                       …… குவலயத்து அதிசயம் எனாக்
             கொல்லியம் பாவையும் கும்பிடும் பசும்
                       பாவை குலவு பல்லுயிர்கட்கு எல்லாம்
             வீடருள் நற்றாய் எனும் சித்திரப்பாவையும்
                       ………………………………………..
             பாடவந்தவர் சித்தி முத்தி வடிவான
                       பொற்பாவை விளையாடி அருளே7!
             ……………………………………………………’ என்பது பாடல்.

    இவ்வாறு பொய்தல் விளையாட்டின் பல கூறுகளும் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களாகப் படைக்கப்பட்டது தமிழின் தனிச் சிறப்பன்றோ?

    இனித் தொடர்ந்துவரும் பகுதிகளில் பெண்குழந்தைகளின் மற்ற விளையாட்டுகளைக் காணலாம்.

    (தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1. சேறைக் கவிராச பிள்ளை- வாட்போக்கியுலா- முன்னுரை

    2. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்

    3. நடேச கவுண்டர்- திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்

    4. மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்

    5, 6, 7. நல்லதுக்குடி கிருட்டிணையர் – தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-பாவை விளையாடல் பருவம்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 20

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 20

     மீனாட்சி பாலகணேஷ்

               (காமநோன்புப் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    அரிதாகப் பாடப்பட்டுள்ள பெண்பால் பிள்ளைத்தமிழின் அழகிய பருவங்களுள் ஒன்றே காமநோன்புப் பருவமாகும். இதுவும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் ஒன்றில்மட்டுமே காணப்படுகிறது. முழுமையான பருவமாகப் பத்துப்பாடல்களால் பாடப்பட்டுள்ளது. திருமாலின் இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவற்றின் ஒப்பற்ற தொன்மங்களையும், ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியின் அழகமைந்த கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டு தனிப்பெருமை வாய்ந்து விளங்குகிறது இக்காமநோன்புப் பருவம்.

    ஆண்டாள், தான் காமநோன்பு மேற்கொண்டதனை, ‘தையொரு திங்கள்’ எனும் பாசுரத்தில் அழகுறப் பாடியுள்ளாள். ஆகவே இப்பிள்ளைத்தமிழை இயற்றிய புலவரும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்பப் பெண்பாற் பிள்ளைத்தமிழில் வரக்கூடும் ‘ஐங்கிணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றல்’ எனும் பருவத்தையே, சிறுமியர் ஆற்றில் நீராடி, பாவைகளைச் செய்து, ஐங்கணைக்கிழவனாகிய மலர் அம்பு வீசும் காமதேவனாகிய மன்மதனுக்கு சூடிக்கொடுத்த் சுடர்க்கொடியாள் ஆர்வமுடன் நோற்கும் நோன்பான ‘காமநோன்புப்பருவமாகப் பாடி மகிழ்ந்துள்ளார் எனலாம்.

    நூலில் இப்பருவம் பொன்னூசற்பருவத்தின் பின் கடைசிப்பருவமாக வைக்கப்பட்டுள்ளது. ஐந்து முதல் ஒன்பது வயதுள்ள சிறுமியரால் மட்டுமே செய்யப்படுவது காமநோன்பாகும். இது விளையாட்டன்றி, நல்லதொரு மணாளனை அடைய இளம்பெண்கள் நோற்கும் நோன்பாகும். இது வடநாட்டில் ‘காத்யாயனி நோன்பு’ என அறியப்படும். காத்யாயனி எனப்படும் அன்னை பார்வதியின் சகோதரனான கிருஷ்ணனை மணாளனாகப் பெற இளம்பெண்கள் நோற்ற நோன்பே இது. இது பற்றிய விளக்கங்களை ஸ்ரீமத் பாகவதத்தில் காணலாம்.

    ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழில் இப்பருவத்திலுள்ள பத்துப்பாடல்களும் ‘காமநோன்பது தவிர்கவே!’ எனும் சொற்களுடன் முடிவடைகின்றன. பாடல்களின் உட்பொருளை ஆழ்ந்து நோக்கினால், “பெண்ணே! நீ உன் செயல்களால், நீ நோற்ற நோன்பினால் அவ்விறைவனை அடைந்து விட்டாய்! இனிக் காமநோன்பு நோற்பதெதற்கு? அதனைத் தவிர்த்துவிடு,” எனக் கூறுவதனைக் காணலாம்.

    பிள்ளைத்தமிழ்ப் பாடல்களைக் காணப்புகுமுன் ஆண்டாள் எவ்வாறு காமநோன்பு நோற்றாள் என அவளே தனது திருமொழிகளில் பதிவு செய்துள்ளதனை அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?

    ஆண்டாளின் பாசுரங்கள் இந்நோன்பு நோற்கும் வகைமுறையை நன்கு விளக்குகின்றன. மார்கழிமாதம் முழுமையும் திருப்பாவை பாடி, பாவைநோன்பு நோற்றபின், தைமாதம் முழுவதும் தரையை நன்கு சுத்தப்படுத்தி, சம்பிரதாயமான கோலங்களை இட்டு வழிபாடு செய்யும் அவ்விடத்தை நன்கு அலங்கரிக்கிறாள் ஆண்டாள்.

    ‘தையொரு திங்களும் தரைவிளக்கித்
    தண்மண் டலமிட்டு1….‘ காமதேவனையும் அவன் தம்பி சாமனையும் வழிபடுகிறாள்.

    பின்பு கண்ணபிரான் வரும்வழியை நுண்ணிய வெண்மணலால் அலங்கரித்துவைத்து, கீழ்வானம் வெளுக்குமுன்பு எழுந்து நீராடி, காலை, பகல், மாலை ஆகிய மூன்றுபொழுதுகளிலும் பலவிதமான நன்மலர்களைச் சாற்றிக் காமனை வழிபடுகிறாள்.

    ‘காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்
    கட்டியரிசி அவலமைத்து2,’ அவற்றை ஒன்றுசேர்த்து, அக்கார அடிசிலாக்கிச் சமைத்தும், காமநூலில் தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் மந்திரம் ஓத, சுவரில் காமனின் பெயரை எழுதிவைத்து, அவனுடைய கொடி, குதிரைகள், கரும்புவில் ஆகியவற்றையும் எழுதிக்கொண்டும் காமனிடம் தன்னைக் கண்ணபிரானிடம் சேர்த்துவைக்க வேண்டிப் பூசிக்கிறாள். இவ்வாறெல்லாம் செய்தவள்,

    ‘மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
    வாழகில் லேன்கண்டாய் மன்மதனே3!’ என்றும் அவனிடம் தனது உறுதியையும் மொழிகிறாள்.

    இவ்வாறெல்லாம் நோன்புநோற்றதனால்தான்

    ‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
    முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
    மத்துனன் நம்பி மதுசூதனன் வந்து தன்னைக்
    கைத்தலம் பற்றக் கனாக்கண்டு4‘ பின் அக்கண்ணனையே மணாளனாகவும் பெற்றனள் அல்லவோ? ஆகவே அவள் இன்னும் எதற்காகக் காமநோன்பு நோற்றல்வேண்டும்? ‘அதனைத் தவிர்ப்பாயாக!’ என்று வேண்டும் பாடல்கள் சுவையானவை.

    ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் சிலவற்றை நோக்கலாமா?

    புலவர் கூறுவார்: ‘தமிழால் ஆன பாமாலைகளே தனக்கு விருப்பமானவை என்றும்,  கையால் தொடுத்துப் பூமாலை அணிவித்துத் தொண்டுசெய்யும் அன்பர்களே தனக்கு விருப்பமான தொண்டர்கள் என்றும் கொண்டு ஒப்பற்ற ஒளிவடிவாகிய திருமால் திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன் ஆகியோர் பின் சென்றான்.

    அத்திருமாலானவன் தான் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடலை விட்டு நீங்கி, திருமாலிருஞ்சோலைமலை, வேங்கடமலை ஆகிய இருமலைகளின் மீது இருவடிவங்கள் தரித்து உன்னைப் பெறுவதற்காகத் தவம் செய்து நிற்கின்றனனே!

    பொன்னி நதியான காவேரியின் நடுவில் (திருவரங்கத்தில்) பள்ளிகொண்டுள்ள அவன் தன் மதிமுகத்தினைத் தெற்குநோக்கி வைத்தவண்ணம் துயில்கின்றான். அவனுக்கு இரு தேவியர் காவல் உள்ளனர். இருப்பினும் தேவாமுதத்தினையும் சிறந்த செல்வத்தையும் அடைய காவல்களை மீறிச்செல்ல யார்தான் தயங்கமாட்டார்கள்? அமுதம்போன்ற உன்னையடைய அவன் இக்கட்டுக்காவல்களால் தயங்கிநிற்பானோ எனும் பொருள் தொக்கிநிற்கின்றது.

    புதுவை அந்தணர்களில் சிறந்தவரான ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வாரின் புதல்வியே! இதனால் நீ காமநோன்பினைத் தவிர்த்தல் வேண்டும்,’ எனும் கருத்துச் செறிந்த பாடல்.

    ‘சொல்தமிழ்ப் பாமாலை நாட்டியும் பூமாலை
               சூட்டியும் தொண்டுபுரிவார்
    தொண்டர்தம் தொண்டரென்று அவர்கள்பின் தொடரும்…
                 ………………………………….
    உம்பரமு தும்திருவும் எய்துதற்கு எவர்களே
                உலகத்தில் எதிர்கொண்டிடார்?
    கற்றவர் புகழ்ந்ததென் புதுவைஅந் தணர்புதல்வி!
                காமநோன் பதுதவிர்கவே5!’ என்பன பாடல்வரிகள்.

    ‘உன்னையடைய அவ்வேங்கடவன் தவமியற்றுகிறான், நீ எதற்காக நோன்பியற்றுகிறாய்?’ என்றுகூறிக் காமநோன்பினை அவள் தவிர்க்க வேண்டியதனை வலியுறுத்தும் சுவையான பாடலிது.

    மற்றொரு பாடல் இன்னும் கற்பனைவளம் சுரக்க அமைந்துள்ளது. புலவர் கூறுவார்:

    ‘அண்ணல் அவன் சுந்தரத்தோள் அழகன் என உலகம் கூறுவது என்னவோ உண்மைதான். ஆனால் மறைகளோ அது பொய் என்பதுபோல, அவனை ‘ஆண் அல்லன், பெண் அல்லன், அலி அல்லன்’ என்றும், (குள்ள)வாமன வடிவங்கொண்டவன் என்றும் தூற்றுவது போலப் போற்றும்!

    ‘முன்பு வெண்ணெய் திருடி உண்ட குற்றம் ஒன்று மட்டுமின்றி, வேறுபல குற்றங்களும் செய்தவன் அவன்! மாடுகளை மேய்ப்பவன்! ஆயர் குலத்தவன்; வில்விசயனுக்குத் தேர்ப்பாகனாக ஏவல் செய்திருந்தவன்.

    ‘மண்ணாசை கொண்ட பாண்டவர்களுக்காக ஓலையைத் தூக்கிக்கொண்டு தூதனாக அலைந்தவன். இவன்மீது அடுக்கிக்கூற வேறு என்னவெல்லாம் குற்றங்களைச் செய்துள்ளானோ? அவனிடம் நீ வலிந்து  ஆசைகொண்டது ஏனோ? (உன்னை மணக்க அவனிடம் என்ன தகுதி இருக்கின்றது?) உன் காமநோன்பைத் தவிர்க!’ என் வேண்டுவதாக அமைந்த பாடல்.

    அண்ணலார் சுந்தரத் தோளழக ரெனுமுலகம்
               அஃதுண்மை யன்றிமறைதான்
    ஆணலன் பெண்ணல்ல னலியல்ல னென்பதுடன்
               அரியகுற ளுருவனென்றும்
     ……………………………………………………………..
    மற்றுமெக் குற்றமென் றெண்ணுவே னவனைநீ
    வலியவேட் கின்றதென்னோ
             கண்ணகன் புத்தூர் விளங்கவரு கோதையே
    காமநோன் பதுதவிர்கவே!6
             ……………………………………………………….’

     ஈண்டு,

    ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
    கானலும் ஆகான்; உளனல்லன்; இல்லையல்லன்
    பேணுங்கால் பேணு முருவாகும்; அல்லனுமாம்
    கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே!7 எனும் ஆழ்வார் பாடல் நினைவுகூரத்தக்கதாம்.

    திருமாலின் பெருமைகளை, அவற்றை மாற்றி இழிசெயல்களாகக் கூறுவது போலக்கூறி (தூற்றுமறைத் துதியாக) அத்தகைய ஒருவனை மணக்கவா இக்காமநோன்பு? அதனைத் தவிர்ப்பாயாக என்கிறார் புலவர்! வளமான, சுவையான, இனிமையான கற்பனை!

    மேலுமொரு பாடலில் காமனையும் ஆண்டாளையும் ஒப்பிடுகிறார் புலவர்.

    ‘காமனிடமுள்ளது ஒரு கரும்புவில்; இளங்குமரி உன்னிடமோ இரு கரிய புருவங்களெனும் வில் உள்ளது. காமன் பொருத்தமான தேன்சிந்தும் கருங்குவளை மலரம்பினை வண்டெனும் நாணைப்பூட்டிச் செலுத்துவான்; நீயோ, உன் கண்மலர்களாகிய அம்புகளை அழகாக அவை புகவேண்டிய இடத்தில் (அரங்கன் நெஞ்சினில்) கருணை எனும் நாண்கொண்டு செலுத்தி அவனுடைய நிறையெனும் அறிவைத் திறைகொள்ளும் பார்வையையுடையவள்.

    ‘ஒருகரும்பு ருவவிற் குமரனவ னிருகரும்
                 புருவவிற் குமரியாநீ
     ஒன்றுகட் காவியம் பாணத்தை யளியநா
                ணுறநின் றுடக்குமவன்8,’        

    ‘இருளையே தன்னிடமாகக் கொண்ட இரவே காமனுக்கு யானையாகும். நீயோ தாபத்தினால் பெருமூச்சு எழுவதனால், ஈரம் வற்றாத கத்தூரியை அணிந்ததும், அணியப்பட்ட கச்சுடன் நிமிர்ந்து விளங்குவதுமான முலைகளை இருயானைகளாகக் கொண்டவள்.

    ‘கரியமுகில் போன்ற அழகரைக் காதலில் வெற்றிகொள்ள இத்துணை தகுதிகள் உனக்கிருக்க, நீ உருவமற்ற காமனை ஏன் வேண்டி நிற்கிறாய்? உன் அழகிய திருவுருவே போதுமே! காமநோன்பினைத் தவிர்த்து விடுக!’ எனக் கூறும் பாடல்.

    கருமுகிற் குழகரழ கரைவெல்ல வுருவிலாக்
                 காமனேன் வில்லிப்புத்தூர்க்
    கன்னியே! நினதுதிரு வுருவொன்று மமையுமே
                 காமநோன் பதுதவிர்கவே8.

    இதுபோன்றே அடுத்தடுத்த பாடல்களில் ‘வாரணமாயிரம்,‘ எனும் நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கனாக்கண்டதாக விவரிக்கும் வரிகளை நினைவுகூரவைத்துப் பாடல்களை இயற்றியுள்ளமை மிக்க நயமானதாகும்.

    ஐங்கணைக்கிழவனான காமவேளை ஆர்வமுடன் சிறுபெண்கள் வழிபடுவது என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். இதற்குப் பாவைநோன்பும், ஆண்டாள் திருப்பாசுரங்களும் சான்றுகளாக உள்ளன.

    பிள்ளைத்தமிழ் இலக்கண நூல்கள் வகுத்த இலக்கணத்திற்குப் பொருந்த சிற்சில பிள்ளைத்தமிழ் நூல்களிலேயே அவ்வருமையான பருவங்களைப் புலவர்கள் பாடிப் பதிவு செய்து வைத்துள்ளதனைக் காண்கிறோம். ஆகவே இவை படித்துப் போற்றி மகிழத்தக்கனவாக விளங்குகின்றன.

    இனி அடுத்த பகுதியில் பொய்தல் விளையாட்டின் மற்றொரு பருவத்தைக் கண்டு களிப்போம்.

     பார்வை நூல்கள்:

    1, 2, 3. ஸ்ரீ ஆண்டாள்- நாச்சியார் திருமொழி “தையொரு திங்கள்”

    4. ஸ்ரீ ஆண்டாள் – நாச்சியார் திருமொழி “வாரணமாயிரம்”

    5, 6. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.

    7. ஆழ்வார் பாடல் – திவ்வியப்பிரபந்தம்.

    8. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.

    (தொடரும்)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)

    சேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    இயற்பகை   முனிவா   ஓலம்;  ஈண்டுநீ   வருவாய்  ஓலம்!
    அயர்ப்பிலா   தானே   ஓலம்!    அன்பனே   ஓலம்,  ஓலம்!
    செயற்கரும்  செய்கை  செய்த  தீரனே  ஓலம்!   என்றான்
    மயக்கறும்    மறைஓ   லிட்டு   மாலயன்  தேட  நின்றான்!

    தம்மிடம்  மனைவியாரை   ஊரறிய  ஒப்படைத்து  விட்டுத்  திரும்பிப் பார்க்காமல் தம்மூர் நோக்கிச் சென்ற இயற்பகையாரை, சிவவேதியராக வந்த இறைவன் ஓங்கிய குரலெடுத்து அழைக்கலுற்றார்; ஊர் அறிய ஒப்படைத்த  அடியாரை ஊர் அறிய  அழைத்தார்.

    என்றும் தெளிவுடைய நான்மறைகள் பன்முறையும் தம்மை நோக்கி அழைத்த போதும் வெளிப்படாதவர் சிவபெருமான்; அதுமட்டுமல்ல பிரமனும் திருமாலும் தேடிய போதும் அவர்களுக்கு அகப்படாமல் ஓங்கியுயர்ந்து நின்றவர்  சிவபிரான்; அவரே  இப்போது,  “இயற்பகை முனிவனே ஓலம்!; இங்கே நீ வருவாய் ஓலம்!; எப்போதும் எமது சிந்தனை மறவாதவனே ஓலம்!; அன்புடையவனே ஓலம்! ஓலம்!; பிறர் எவரும் செய்தற்கரிய செய்கை செய்த தீரமுடையானே ஓலம்!” என்று தான் பன்முறையும் ஓலமிட்டு அழைத்தான்.

    இப்பாடலில் ‘இயற்பகை முனிவா!’ என்ற தொடர் இயற்பகையார்,  முனிவர் நிலையை அடைந்த சிறப்பை  விளக்குகிறது. தம் மனைவி பால் காமம் காட்டாமல், காமனை முனிந்தவர் முனிவர் ஆனார்  உலகப் பற்றுக்களை யெலாம் அறவே முனிந்து ஒதுக்கியவராதலின் முனிவர் என்றார். அவரது முனிவராகும்  தன்மையை மூவுலகும் அறியக்  காட்டிய செயல் நிறைவெய்திய இடம் இது!  அதனை நிறுவியமையால்  இவர் முனிவரா யினார் என்று முடித்துக் காட்டியபடியாம்.

    இவ்வாறு அவர் முனிவரான செயலை  இறைவனோடு ஓ[பிட்டு  சேக்கிழார் விளக்குகிறார். பின்னர் இதே நூலில்  “முனிவர்“ – (408); “மாதவன்“ – (412); மறைமுனி – (419); நற்றவர் – (422); முனிவர் (429); தவமுனி – (430) என முன்னர் முனித் தன்மை யாலே குறிக்கப்பெற்ற இறைவன்,

    “துரியங் கடந்தசுடர்த் தோகையுட னென்றும்
    பிரியாதே நிற்கின்ற பெம்மான் – றுரியத்தைச்
    சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுந் தன்மைகளும்
    ஆக்குவிப்ப னன்பர்க் கவன்”.

    என்று திருக்களிற்றுப்படியார் காட்டிய படி,  தமது தன்மையே தமது அன்பர்க்கும் ஆயினமையை  இங்குக் குறித்துக் காட்டினார்!  முனிவரால் முனிவர் எனப் போற்றப் பெற்றமையால் இவர்  பெரு முனிவர் ஆனார்!

    அடுத்து இப்பாடலின்  ‘’ஈண்டு நீ வருவாய் ‘’ என்ற தொடர்,’’ நீ புகுமிடம் நீ இப்போது திரும்பிச் செல்லும் நகரமன்று. நாம் இருக்கும் இந்த இடமே’ என்பதைக்க குறித்தது. இத்தொடரை, ‘’மீண்டு நீ வருவாய்’’, என்றும்  கூறலாம் .  பிறரால் எளிதின்  மீளக்கூடாத இவ்வுலகத்திலிருந்து மீண்டு எமது நலமிகும்  உலகத்திற்கு மீண்டு வா’ என்ற குறிப்பும் விளங்குகிறது.

    இப்பாடலின்  ‘’அயர்ப்பிலாதானே’’  என்ற தொடர்,  ‘’எந்தக் காலத்தும் எவ்விடத்திலும் சிவனையும் அவனடியாரையும் மறவாமல் நின்று, அடியாருக்கு  இல்லை என்னாத விரதங் காத்தவனே!’’,  என்று பொருள் படும். அயர்ப்பு என்பது மறதியைக்  குறிக்கும்.

    “அங்கொருநாள்  அருளாலே யயர்த்து உண்ணப் புகுகின்றார்
    எங்கள்பிரான் தனையறியாது  அயர்த்தேன் யானென“

    சாக்கியநாயனார் புராணத்திலும் இதனைச் சேக்கிழார் கூறுவார். மேலும், ‘’அன்பனே ஓலம் ஓலம்’’ என்ற பகுதியில் இருமுறை ஓலம் என்று கூறி அழைத்தமையால், இறைவனிடத்தும் அடியாரிடத்தும் அன்பு நிறைந்தவனே. என்ற இருவகை அழைப்பைக்  காட்டுகிறது! அன்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் காரணமான சிறப்புடையதாதலின் ஏனைய இடத்து ஓலம் என்று ஒரு முறை அறைகூவியவர் அன்பனே ஓலம் ஓலம் என இங்கு இருமுறை அடுக்கிக் கூவினார்.

    இறைவன் தம்மையே ஒப்புவிக்கும் பொருள் அடியாரின் அன்பு ஒன்றுதானே! இதனை, “பத்திவலையிற் படுவோன் காண்க“ என்ற  திருவாசகத்திலும், “பத்திரனடிமை யென்றான்“ எனத் திருவிளையாடலில், இறைவன் பாணபத்திரருக்குத் தம்மை அடிமையாக்கிக் கொண்டபகுதியிலும் காண்க. “அன்பே சிவமாவ தாரு மறிகிலர்“ என்பது திருமந்திரம். அன்பிலே கலந்துகொண்டு இரண்டற நிற்பவர் ஆதலின் அன்பனுக்கு இருமுறை ஓலமிட்டனர்!

    அடுத்து, ‘’செயற்கருஞ் செய்கை செய்த தீரனே!’’ என்ற தொடரால், மேற்பாட்டில் ஆசிரியர் தம் வாக்கினால் நாயனாரது அரிய செய்கையைப் பாராட்டியதையும், இங்கு இறைவனும் அவ்வாறு பாராட்டியதையும்  தெரிவிக்கின்றார்.

    அடுத்து,  ‘’மயக்கறும் மறை ஓலிட்டு’’ என்ற தொடரில், மயக்கம் என்பது மோகத்தைக் குறித்தது.  உயிர்களுக்கு உள்ள மயக்கம் போக்கி உண்மை உணர்த்துவது வேதம். மயக்கறும் மறை, மயக்கம்  அறுதற்குக் காரணமான மறையைக் குறித்தது. ஓலமிட்டு என்பது ஒலிட்டு என நின்றது.  ஓலிடவும், தேடவும் நின்றான் என்றுவிரித்துரைக்க. மறை ஓலிடுதலாவது எல்லா  வகையானும் சொல்லியும் இறைவன் தன்மை தன்னளவுட் படாமல் இளைத்து நின்று விடுதல். இதனை,

    ‘’வேதங்கள்  ஐயா  என ஓங்கி  ஆழ்ந்தகன்ற  நுண்ணியனே!’’

    என்ற திருவாசகம் விளக்கும்.  இகலி நின்ற பிரமவிட்டுணுக்களினிடையே நான்கும் வேதங்களும் வெளிப்பட்டடு நீவிர் இருவரில் ஒருவரும் பரமல்லர் இறைவனே பரம்பொருள் என்பதை ஆதாரங்கள் காட்டி, முறையிடவும் என, உரைத்தலும் ஆகும்! நாதரூபமாகிய மறை, நாதாந்த ரூபனாகிய இறைவனை ஓலமிட்டு அழைத்தல் இயல்பாம்.

    மறை ஓலிட்டு, என்பதை மறைச் சொற்களால் ஒலமிட்டு, மாலயன் தேட என்று இவ்விரண்டினையும் ஒன்று கூட்டி உரைக்கலாம். மறை ஓலிடவும் நின்ற  இறைவன், நாயனார் பெயரைக்  கூவி ஓலமிட்டான் என அடியாரது பெருமையை விளக்கினார்!

    மறைவழி நின்ற முனிவர் பெரியர்; அவரிலும் அவர்களால் வழிபடப் பெற்ற வேதம் பெரிது; அவற்றினும், அவ்வேதத்தால் வழிபடப்பெற்றவனும் அதைச் சொன்னவனுமாகிய இறைவன் பெரியன்; அவனும் ஓலமிட நின்ற மிகப் பெரியார் இந்நாயனார்! என இவரது உயர்வைக்  குறித்தார். இதனையே, முன்னர் முனிவர் என்றபோது,  ஐந்தவித்த முனிவனாகிய கௌதமனினும் அங்ஙனம் அவியாது நின்றே உலகச்சார்பை விட்டு அறுத்த நாயனார் ஆற்றல் மிகப் பெரிதென்பதை உணர்த்தினார்.

    இயற்பகையார், முனிவராதலே வருவாய் என்றழைக்கக் காரணம்; அவர் அயராமையே முனிவராதற்குக் காரணம்; அன்பு அதற்கு அடிப்படை; அதுவே செயற்கரிய செய்கை செய்வித்தது எனத் தொடர்புபடுத்திக் கொள்க.

    அறுபகையும் செற்றவர் நாயனாராதலின் இறைவன் கூவிய ஓலங்களும்  அறுவகைப்பட்டன!

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 19

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 19

    மீனாட்சி பாலகணேஷ்

    (சிறுசோற்றுப் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்மக்களின் வளர்ச்சியில் ‘பொய்தல் விளையாட்டு’ பெரும்பங்கு வகிக்கிறது. பெண் குழந்தைகள் உடல், உள, மன வகையாக வளர்ந்து தமது குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாராவது இவ்விளையாட்டுகளால்தான்.

    இவை சிற்றில் இழைத்தல், சிறுசோறு சமைத்தல், பாவை விளையாடுதல், குழமணம் மொழிதல் எனப் பல சிறு விளையாட்டுகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. பெண்குழந்தைகள் சிற்றில் இழைத்தலைப் பற்றிய விளக்கங்களை இத்தொடரின் 18.1 & 18.2 ஆகிய பகுதிகளில் கண்டோம். ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்திலும் பெண்குழந்தைகள் இழைக்கும் பலவிதமான சிற்றில்கள், அவர்கள் சமைக்கும் சிறுசோறு ஆகியன பற்றிய அழகான விளக்கங்களைக் காணலாம் (இத்தொடரின் பகுதிகள்11.1 & 11.2). மிகச்சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் மட்டுமே சிற்றில் பருவம் பாடப்பட்டுள்ளது. சிறுசோறு அடுதல்/சமைத்தல் என்பது இதில் ஒரு செயலாகவே அடங்கிவிட்டதனையும் காணலாம். ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே இதனை ஒரு தனிப்பருவமாகவே இதனை இயற்றிய புலவர் (பெயர் தெரியவில்லை) பாடிவைத்துள்ளார்.

    பதிப்பு ஆண்டை நோக்கினால், இப்பிள்ளைத்தமிழ் ஆண்டாள் வாழ்ந்த காலத்திற்கு நீண்டநாட்களுக்குப்பின் பாடப்பட்டது. ஆண்டாளின் காலம் கி. பி. 8-ஆம் நூற்றாண்டாக இருக்கும் என்பது சரித்திர, ஆன்மீகவாதிகள் கூற்று. இப்பிள்ளைத்தமிழோ கி. பி. 18-ஆம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ் நூல்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் பின்னரே எழுதப்பட்டன. அனைத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கும் முன்னோடியாகக் கருதப்படும் பெரியாழ்வாரின் (இவரே ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையுமாவார்) கண்ணன் மீதான திருவாய்மொழியும் இக்காலத்திலேயே படைக்கப்பெற்றது.

    ஆண்டாள் எனும் தெய்வத் திருமகள் ஒருவளே மார்கழி, தைந்நீராடலையும், காமநோன்பு நோற்பதனையும், அவற்றினூடே சிற்றிலிழைத்தல், சிறுசோறு சமைத்தல் ஆகியனவற்றையும் பெண்மக்களின் விளையாட்டாக மட்டுமின்றி, நாடும் வீடும் நலம்பெற வைக்கும் ஒரு வழிபாடாகவும் காட்டி அழகுறத் தனது பாசுரங்களில் பாடிவைத்துள்ளமை வியத்தற்குரியதாகும். இதனால்தானோ என்னவோ புலவரின் கற்பனையும் கவித்திறனும் அவளிழைக்கும் சிற்றிலையும் சமைக்கும் சிறுசோற்றினையும்  இரு இனிய பருவங்களாக்கி ஒவ்வொன்றினையும் பத்துப் பாடல்களால் பாட வாய்ப்பினையும் அளித்தது எனலாம்.

    ‘மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!1′ எனும் திருப்பாவையில் ஆண்டாள் எவ்வாறு சிறுபெண்களாகிய தாங்கள் அக்கார அடிசிலைச் செய்து அதில் நெய்பெய்து முழங்கையில் வழியுமாறு அனைவருடனும் சேர்ந்து உண்போம் எனப் பாடுகிறாள்.

    இதுபோன்று குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழின் வருகைப் பருவத்துப் பாடலொன்றில் மிகவும் நயமாக  அன்னை பார்வதி ‘ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு’ முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி ‘விளையாடிக் கொண்டி’ருப்பதனைக் கூறுவதனைக் காண்கிறோம்.

    ‘லீலா க்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா2‘ என லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமம் பார்வதிதேவி அன்னைக்கு உண்டு. விளையாட்டாகவே இவ்வுலகங்கள் அனைத்தையும் படைப்பவள் என்பதுதான் அதன் பொருள். பேரண்டமாகிய இந்த உலகினையே சிற்றில் இழைப்பதாக அவள் பாவனை செய்துகொண்டு இழைத்து, மிக அருமையாக, ஆசையாக, விதம்விதமாக, அழகாகப் படைக்கின்றாள்; பின் படைத்த உலகங்களில் வாழும் உயிர்களுக்கு உணவளிக்கச் சிறுசோறாக்குகிறாள்.

    இருவினைப் பயன்களே சிறுசோறெனச் சமைக்கப்படுகின்றன! சிறுமியாகிய நம் அன்னை இவ்வுலகில் உள்ள எண்பத்துநாலாயிரம் கோடிவகை உயிர்களையும் தான்விளையாட உயிருள்ள பாவைகளாகச் செய்விக்கிறாள். அவற்றை மலங்கள் எனப்படும் கருமவினைப் பயன்கள் நாள்தோறும் வருத்தித் துன்பத்தில் ஆழ்த்தியவண்ணம் உள்ளன. ஆகவே அவள் சமைத்து வைத்துள்ள இருவினைப் பயன்களெனும் சிறுசோற்றினை அந்தப் பாவைகளுக்கு உண்ணக் கொடுத்து அவற்றின் பசியைப் போக்கி அருளுகிறாள் அவள். ஒருநாளல்ல, இரு நாட்களல்ல, பொறுமையாகச் சலிப்பின்றி, கற்பகோடி காலங்களாகப் பாராசக்தி அன்னை எனும் சிறுமி செய்து வரும் விளையாட்டு இதுவாகும். இவ்வாறு செய்யும் பராசக்தி எனும் சிறுமி விளையாடுமிடம் பரமானந்தப் பெருவீடு எனப்படும் உயர்ந்த ஞானப் பெருவெளியாகும். அதாவது அவளை உணர்ந்து கொண்டவர்களுக்கே அவளுடைய இவ்விளையாடலையும் இக்கண்ணோட்டத்தில் உணர்ந்து போற்றவியலும் என்பதே பாடலின் உட்பொருள்.

            ‘கடிகொண் டலரு நறுங்கடுக்கைக்
                       கடவுண் மகிழப் பேரண்ட
             கடாகப் பரப்பே சிற்றிலெனக்
                       கருமப் பகுப்பே சிறுசோறாம்,
             படிகொண் டுயிராம் பாவைகட்குப்
                       பைதன் மலநோய்ப் பசியிரியப்
             பல்கா லயிற்றி விளையாடிப்
                       பரமா னந்தப் பெருவீட்டிற்
             குடிகொண் டிருக்குந் தீங்கொம்பே3

     …………..’ என்பன இப்பாடலின் அழகிய பொருள்செறிந்த வரிகளாகும்.

    இதனால் பெண்மக்கள் சிற்றிலிழைப்பதும் சிறுசோறு சமைப்பதும் பல பிள்ளைத்தமிழ் நூல்களிலும் தனியாகப் பாடப்படாவிடினும், அந்நூல்களின் மற்ற பருவங்களில் அவை ஒரு அழகான செய்தியாக அற்புதமான உவமைகளுடன் கூறப்படுகின்றன என அறியலாம்.

    இனி ஆண்டாள் பிள்ளைத்தமிழிலிருந்து சில பாடல்களைக் கண்டு மகிழலாம். இயற்றப்பட்ட பத்துப்பாடல்களில் கிடைத்தவை ஆறு பாடல்களேயாம்.

    முதற்பாடல் தேவர் முதலானோர் கூறுவதாக உள்ளது. அவர்கள், “திரிசூலமேந்திய சிவபெருமான் தொட்டுண்ட மிச்சத்தினை நாம் இங்கு உண்ண இயலாது; அவன் இருக்குமிடமோ சுடுகாடு; அவன் மாலையாக அணிந்துள்ளவை எலும்புகள்; அவன் மண்டையோட்டில் உண்ணுதற்காகப் பலியினை ஏற்பவன்; ஒரு அன்னையிடம் பிள்ளையை அறுத்துச் சமைத்து உணவிடக் கூறியுண்டவன்; (ஈண்டு சிறுத்தொண்ட நாயனார் கதை உள்ளடக்கமாகக் கூறப்பட்டது); இது எமக்குச் சரிப்படாது; ஆதலால் பிரமன் முதலானவர்கள் அவனை விட்டுவிட்டு உன்னிடம் வந்து நீ அமலனான எம்பெருமானுக்கு ஊட்டி உண்ணுகின்ற உணவின் சேடத்தை (மிச்சத்தை) உண்பதே உசிதம் என்று எதிர்பார்த்து நிற்கின்றனர். புதுவை எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர்ப் பிராட்டியே! நீ சிறுசோறு இழைத்தருளுக!

    தென்னரங்கத்துப் பெருமான், திருமாலிருஞ்சோலைப் பெருமாள், திருமலைப்பிரான், திருத்தண்கா அப்பன், ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ரசாயி ஆகிய ஐவரும் விருந்துண்ணுமாறு சிறுசோறு சமைத்தருளுக,” என வேண்டுகிறார் புலவர்.

             ஊனறாச் சுடர்முத் தலைக்குல பாணிதொட்
                       டுண்டதீங் கொருவ ருண்ணா
             ……………………………………………………..
             தானமுஞ் சுடுகாடு தமமென் பூனுடைத்
                       தலையிலிடு பலியை யுண்பான்
             ……………………………………………………
             ஆனதா லவனைவிட் டிங்குவந் தன்னைநீ
                       யமலனுக் கூட்டி யுண்ணு
             மச்சேட முண்பதே யுசிதமென் றயனைமுத
                       லவர்களெதிர் கொண்டு நின்றார்
             ………………………………………………
             தென்னரங் கேசன்முத லைவரும் விருந்துணச்
                       சிறுசோ றிழைத்தருள்கவே 4.

    மேற்காணும் பாடலில் ஆண்டாள் அரங்கப்பெருமானுக்கு ஆக்கும் சிறுசோற்றின்பெருமை விளம்பப்பட்டது. மற்றொரு பாடலில் உலகத்து உயிர்கட்கெலாம் சிறுசோறு இழைக்குமாறு ஆண்டாளை வேண்டும் நயம் மிகவும் அருமையாக உள்ளது.

    உயிர்களையெல்லாம் படைத்து, அவற்றிற்கு உரிய வீடுகள் எனப்படும் உடல்களில் குடியேற்றி, அவை உயிர்வாழத் தேவையான உணவெனும் இருவினைப் பயன்களையும் ஊட்டுபவள் அன்னை தெய்வம் எனும்  ஆழ்ந்த கருத்து இதனால் பெறப்படுகின்றது.

    மேலும் ஆண்பாற்பிள்ளைத்தமிழின் சிற்றில் பருவத்துப் பாடல்கள் பெரும்பாலும் பெண்குழந்தைகளின் வேண்டுதல்களாகவே அமைவதனையும் முன்பே இத்தொடரின் பகுதி-11.1 & 11.2-இல் கண்டோம். இவற்றில் தாமிழைக்கும் சிற்றிலை அழிக்க வேண்டாம் என்றும், சமைக்கும் பாண்டங்களை உடைக்க வேண்டாம் என்றும், அடுப்புத்தீயை அவிக்க வேண்டாமெனவும், பாவைத்திருமண விருந்தினை வீணாக்க வேண்டம் எனவும் பலவாறாக வேண்டும் சிறுமியர் கூற்றுகள் மிகவும் நயமானவை; சுவைமிகுந்தவை.

            ‘நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
                                நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
             தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
                               சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
             முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
                               மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
             திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
              சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே5,’ என்பது சேயூர் முருகன் பிள்ளைத்தமிழின் இனிய பாடல். பலமுறை கேட்டாலும் தெவிட்டாத கவியமுதம்.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும்6 குமரகுருபரனார், திரும்பத் திரும்பப் புதியதாக உலகங்களைப் படைத்து, கலங்களைத் திரும்பவும் கழுவி அவற்றில் புதுக்கூழ் சமைத்து சலியாது  உயிர்களுக்கு ஊட்டும் சிறுபெண்ணாக மீனாட்சியம்மையைச் செங்கீரைப் பருவப் பாடலொன்றில் அழகுபட உரைக்கின்றார். இதனைப் பகுதி 11.2-இல் காணவும்.

    ஆண்டாள் பிள்ளைத்தமிழ் சிறுசோற்றுப் பருவத்தின் மற்றொரு இனிய பாடலைக் காண்போம்:

    பறவைகள், விலங்குகள், மீன்வகைகள், ஊர்வன, தாவர வகைகள் என்பன ஆண், பெண், அலி எனும் முப்பாற்பட்டன. இவை தவிர, எண்ணிக்கையில் இன்னும் மேற்பட்ட மக்கள், தேவர் என்பவர்களுடனெல்லாம் சேர்த்து, எண்பத்துநான்கு நூறாயிரம்வகை உயிர்களும் குடிபுகுந்து வாழும்வண்ணம் அவற்றிற்குத் தேவையான வெவ்வேறு வகைப்பட்ட உணவினைப் பெருஞ்சோறு என ஆக்கி அருள்புரிபவள் அன்னை ஆண்டாள் என்கிறார் புலவர்.

    நறவு எனும் தேன், தயிர், நெய், கன்னல் எனும் கரும்பு, பாலாழி, கறிசோறு என இவையனைத்தையும் செய்விப்பதாகக் கடலில் விளையும் முத்துகளைச் சோறாக்கி, மலையைப் பானையாக்கி, புனல்நீரை உலைநீராகப் பெய்து, இவற்றைச் சமைக்க சூரியனை அடுப்பின் நெருப்பாகவும் கொண்டு புதுவைப்பிராட்டியே, சிறுசோறு இழைத்தருளுக என வேண்டுவதாக அமைந்த பாடல். இழைத்தலுக்கு, ஆக்குதல் எனவும் ஒரு பொருளுண்டு.

             பறவைமா மீனமூர் வனதாப ரங்கண்முப்
                       பானுடன் …………………..
             …………………………………….
             முறவுகொண் டெண்பத்து நான்குநூ றாயிரம்
                       யோனியிற் குடிபுக்கவா
             முயிர்கட்கு வேறுவே றுணர்வொடு பெருஞ்சோறு
                       முற்றிழைத் தருள்புரியுநீ
             நறவுதயிர் நெய்கன்னல் பாலாழி கறிசோறு
                       நரலையுட் டரளமுலைநீர்
             நன்புனற் கடனேமி வரைமிடா வுலைமுக
                       நயந்ததழல் ஞாயிறாகச்
             சிறகர்வண் டிமிழ்பொழிற் புதுவைப் பிராட்டியே
                       சிறுசோ றிழைத்தருள்கவே7
                …………………………………….

    இவ்வாறு நயம் மிகுந்த கருத்துக் செறிவான பாடல்களைக் கொண்டு இப்பருவத்தைப் பாடிவைத்துள்ளார் இப்புலவர் பெருமான்.

    அடுத்த பகுதியில் பொய்தல் விளையாட்டின் மற்றொரு அங்கத்தைக் கண்டு களிக்கலாம்.

    (தொடரும்)

    பார்வை நூல்கள்

    1. ஸ்ரீ ஆண்டாள் – திருப்பாவை
    2. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம சுலோகம்
    3. சிவஞான சுவாமிகள்- குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
    4, 7 ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
    5. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    6. குமரகுருபரர்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 18.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 18.2

    மீனாட்சி பாலகணேஷ்

     (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    இத்தொடரில் பெண்பால் சிற்றில் பருவத்தில் அடுத்து நாம் காணப்போகும் நூல் தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஆகும். இதில் இப்பருவம் மிகவும் சிறப்பாக, அழகிய நயங்களுடன் பத்துப் பாடல்களால் பாடப்பட்டுள்ளது.

    உலகுக்கே அன்னையான சிவகாமி எனும் உமையவள் அண்டகோடிகளை, பிரம்மாண்டங்களைத் தோற்றுவிப்பதனை, சிறுவீடுகட்டி அவள் விளையாடுவதாக நயம்பட உரைக்கிறார். காஞ்சிப்பதியில் சிவபிரான் அம்மைக்கு இருநாழி நெல் அளித்ததனையும் அம்மை அதனைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி உலகங்களைப் புரந்ததாகவும் காஞ்சிப்புராணத்தில் காண்பதற்கியைய, இங்கும் அக்கருத்தை எடுத்தோம்புகிறார்.

                ‘…………………………………………..
             அட்டதிக்கும் கால்கள்நட்டு நெடுமேரு
                       நடுவு அசையாததூண் நிறுத்தி
             …………………………………………….
                       விளை பச்சைநெல் இருநாழியில்
             பல்லுயிரும் உண்டு தேக்கிட்டிடும்
                       ……………………………………..
             திடமருவு பெருவீடு கட்டி விளையாடும்
                       உமை சிறுவீடு கட்டியருளே!’1

    ‘ஆ ப்ரஹ்ம கீட ஜனனீ’ என லலிதா சகஸ்ரநாமம் அன்னையை ஏத்துகின்றது. பிரம்மன் முதல் புழு வரை அவளால் படைக்கப்படுகின்றன என்பது இதன் பொருள்; படைப்புக்கடவுளான பிரம்மனையுமே அவள்தான் படைக்கிறாளாம். படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் நடைபெறும் இந்தப் பிரபஞ்சப்பெருவிளையாட்டினை சிவபிரானின் பாதியாகிய அன்னை சிவகாமசுந்தரியே நிகழ்த்துவதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் கிருட்டிணையர். பராசக்தியாகிய சிவகாமசுந்தரி சிற்றில் இழைக்கும் விளையாட்டு பெரிய தத்துவத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது.

    பின்னொரு பாடலில் அன்னை கட்டிடும் சிறுவீட்டின் அமைப்பினை விளக்கியுள்ளமை, உடற்கூற்றியலில் விளக்கப்பட்டுள்ள மனித உடலின் அமைப்பை ஒத்துள்ளது வியக்கத்தக்கதாகும். தசை எனப்படும் மண்ணினை வைத்தும் தூண்களாகிய கால்களை வைத்தும், உடல் எனப்படும் சுவரை அமைத்தும், வீட்டினைத் தாங்கக் கைம்மரங்கள் என்னும் இரு கரங்களை வைத்தும் அமைக்கிறாள்; உடலில் உள்ள ஒன்பது துளைகளை ஒன்பது வாயில்களாக அமைக்கிறாள்; கூரை மரங்களை நரம்புகளால் முறையாகக் கட்டுகிறாள்; அதன்மீது மண்பூசுவது போன்று தோலைப் போர்த்து, மயிர்க்கற்றைகளால் கூரையையும் வைக்கிறாள். வாழ்வின் இன்பதுன்பங்களைப் பகுத்து அனுபவிக்க கண்களை விளக்குகளாக ஏற்றுகிறாள். இவ்வாறு அனைத்துயிர்களும் வாழும்பொருட்டு எண்பத்துநான்கு இலட்சம் வகைப்பட்ட வலிமைமிக்க பலவீடுகளை, அதாவது பற்பல உயிர்களுக்காக அவை வாழும் உடலெனும் வீடுகளைத் தோற்றுவித்தும், அழித்தும், பின்னும் தோற்றுவித்தும் இடையறாது அருள்விளையாட்டுப் புரிகிறாள். உயிரினங்களின் வகை எண்பத்து நான்கு இலட்சம் எனப் புராணங்கள் விளக்குகின்றன. அனைத்தையும் அவற்றிற்குரிய வீடுகளாகிய உயிர்க்கூடுகளில் வகைவகையாகப் படைக்கிறாள் என அதியற்புதமாக இப்பாடல் விளக்குகின்றது.

                ‘மண்வைத்துக் கால்வைத்துத் தூணினால்
                       சுவர்வைத்து வலியகைம் மரமும்வைத்து
             வாசல் ஒன்பதுவிட்டு மோட்டுவளை
                       பக்கத்துவளை வரிச்சலும் நரம்பால்
             பண்புற்றிடக் கட்டிமேலே லாம்தோலுடன்
                       பலமயிர்க் கற்றை இட்டு
             …………………………………………….
             எண்பத்து நான்குநூறா யிரம்பேதமாய்
                       இனிய சிறுவீடு தோறும்
             ………………………………………….
    திண்பெற்ற பலவீடு கட்டிவிளை யாடும்
             உமை சிறுவீடு கட்டியருளே2!’

    இழைக்கப்படும் சிறுவீடானது, மனித உடலின் கைகள், கால், தோல், மயிர் போன்ற பல பாகங்களுக்கும் தொடர்புபடுத்தி விளக்கப்பட்டிருப்பது மிக்க அருமை. உடற்கூற்றியல் எனும் அறிவியல் பகுப்பு இதில் முழுமையாக ஒரேபாடலில் அருமையாக விளக்கப் பெற்றுள்ளது தமிழுக்குப் பெருமை!

    சிற்றிலிழைத்து விளையாடும் இச்சிறு பெண்பிள்ளை, அச்சிறுவீட்டினுள்ளே பலவிதமான பாவைகளைக் குடிவைத்து விளையாடுகின்றாள். அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான புலவர் அன்னை சிறுபெண்ணாய் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தினையுமே பராசக்தியின் ஆடல்களாகக் கண்டு வாழ்த்துகிறார். மிக எளிமையாக இதற்குப் பொருளுணர வேண்டுமாயின் பின்வருமாறு பொருள்கொள்ளலாம்:

    ஆற்றல்வாய்ந்த தெய்வங்களின் பாவைகள், பூவுலகில் வாழும் ஆடு, மாடு, யானை முதலான விலங்குகளின் பாவைகள், கடலில் வாழும் ஜீவராசிகளின் பாவைகள், பலவிதமான பறவைகளின் பாவைகள், விரைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் புழு, பூச்சிகள், மரவட்டை, பாம்பு ஆகியனவற்றின் பாவைகள், செடி, கொடி, மரங்கள் ஆகியனவற்றின் பாவைகள் என ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களின் பாவைகளை எல்லாம் எண்பத்துநான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களால் இவளே அப்பாவைகளைச் செய்கிறாளாம். அன்னை பராசக்தி இவ்வுயிர்களை பஞ்சபூதங்களால் விளையாட்டாகவே உண்டுபண்ணுகிறாள். அது மட்டுமா? அவற்றைக் கனவு, நினைவு / விழிப்பு, உறக்கம் ஆகிய நிலைகளில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி வைத்து தினமும் விளையாடுகிறாள்.

    எல்லா உயிர்களுக்கும் பராசக்தி அன்னை திரும்பத்திரும்பப் படைத்து அளிக்கும் பலவிதமான வடிவங்கள் இப்பாடலில் நயம்படக் கூறப்படுகின்றன.

                வல்ல தெய்வப் பாவை மானிடப்
                       பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
             மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
                       மருவு பறவைப் பாவையும்
             ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும்
                       பாவையும் உறும் தாவரப் பாவையும்
             ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப்
                       பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்
             எல்லவே சாக்கிரம் கனவொடு
                       சுழுத்தியுடன் எழும் பூதாசார வடிவாய்
             …………………………………………………….
             பரம சிவகாம சுந்தரி அம்மை இனிய
                       பொற்பாவை விளையாடி அருளே3!

    (பாவை- பொம்மை; பொறி- அறிவு; சாக்கிரம்- விழிப்பு; சுழுத்தி- உறக்கம்)

    சிவகாமி அன்னையைச் சிறுவீடு கட்டியருள வேண்டிடும் புலவர் பெருமகனார், தில்லையில் உள்ள பொன்மன்றின் அமைப்பினை விளக்கி அவ்வண்ணமே ஒரு சிறுவீட்டினைக் கட்டியருள சிவகாமியம்மையை வேண்டுகிறார்.

    சிதம்பரம் கோயிலின் அமைப்பு, மனித உடலும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்4‘ என்பது திருமூலர் வாக்கு. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து கோசங்களைக் (Layers) கொண்டமைந்துள்ளது. அதே போன்று சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள்  உள்ளன. மனித இதயம் இடப்புறம் அமைந்திருப்பதுபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லாது இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை  மூச்சுவிடுகிறான். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21,600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72,000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் உள்ள ஓடுகளை 72,000 ஆணிகள் இணைக்கின்றன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்படுகிறது.

    இப்பிள்ளைத்தமிழினை இயற்றிய நல்லதுக்குடி கிருட்டிணையர் பொன்மன்றின் அமைப்பினை இன்னுமே விரிவாக விளக்கி அதனைச் சிவகாமியம்மை எவ்வாறு கட்டுகிறாள் என விளக்குகிறார். இது அன்னை மனித உயிர்களைப் படைக்கும் பாங்கினை அழகுற விளக்குகிறது.

    பொன்மன்றில் விளங்கும் பிரமபீடத்திற்கு ஆறு சாத்திரங்களையும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைப் பெரிய தூண்களாகவும் அமைக்கிறாள். இருபத்தெட்டு சிவாகமங்கள், ஐம்பெரும் பூதங்கள், பதினெண் புராணங்கள் ஆகியவை சிறிய தூண்களாகவும் உத்திரங்களாகவும் வைக்கப்படுகின்றன. ஆயகலைகள் அறுபத்துநான்கும் அழகிய வரிச்சல்களுடன் பொருந்திய கைம்மரங்களாக பொருத்தப்பட்டு, அவைமீது ஒளிவீசும் தங்க ஓடுகள் 21,600 வைத்து அவற்றை 72,000 ஆணிகளால் பொருத்தி இணைத்து, மேலும் இருநூற்றுஇருபத்துநான்கு புவனங்களையும் தாமரைமலரின் வடிவில் ஆக்கிய தட்டுக்களாகவும் சைவசித்தாந்தத் தத்துவங்களான தொண்ணூற்றாறு தத்துவங்களையும் பலகணிகளாக ஆக்கி, ஒன்பது கலசங்களை மனித உடலின் ஒன்பது வாயில்களாக அமைத்து சிற்றம்பலம் எனும் உறுதியான வீட்டினைக் கட்டுகிறாள் அன்னை. பின்னர் அங்கு தானே இறைவனுடன் குடிகொள்கிறாள்.

    இவ்வாறு அரியதான எம்மை, எமது மனித உடலைப் படைத்தருளுமுகமாக சிறுவீடு கட்டியருளுக என வேண்டுவதாக அமைந்த பாடலிது.

                ஆறு சாத்திரம் நாலுவேதம் அதிதூண்
                       ஆகமங்கள்………………….
             ……………………………………………………
                       மரம்நாட்டி எழுபத்து இரண்டாயிரம்
             ………………………………………
             கூறு தொண்ணூற்றாறு தத்துவம் பலகணிகள்
                       கும்பம் ஒன்பது வாசலும்
             …………………………………………………..
                       விமலையே! சிறுவீடு கட்டியருளே5!

    பிள்ளைத்தமிழ் பிரபந்தத்தின் அமைப்பில் ஒவ்வொரு பருவத்திற்குமான பத்துப்பாடல்களில், தொன்மச் செய்திகள், அழகியல், சந்தநயம், அணிநயங்கள் மட்டுமின்றி, சைவசித்தாந்த, தத்துவ, சமய விளக்கங்களையும் கூட்டிப் பாடல்களை அமைப்பதே நல்லிசைப்புலவோரின் வழக்காகும் எனப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் கூறுகிறார். இன்னும் இப்பிள்ளைத்தமிழ் நூலின் பல பாடல்களும் பல சமயக் கருத்துக்களையும் விளக்கங்களையும் உள்ளடக்கிக் கொண்டு பொலிகின்றன.

    மற்றும் ஒரு பெண்பால் பிள்ளைத்தமிழான ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ், சிறுமியரின் சிற்றில் பருவத்தை அழகுறப் பாடிப் பதிவு செய்து வைத்துள்ளது. இதன் ஆசிரியர் (பெயர் தெரியக் கிடைக்கவில்லை) ஆண்டாளைத் திருமகளாகவே கொண்டு அக்கருத்துக்களிலேயே பாடல்களைப் பாடியுள்ளார்.

    சிற்றில் பருவத்துப் பத்துப்பாடல்களில் ஆறு மட்டுமே கிடைத்துள்ளன. ஆயினும் கருத்து நயமும் உவமை உருவகங்களும் வைணவத்தின் பொருண்மைகளும் செறிந்த பாடல்கள் இவை. சமயத் தத்துவங்களை அழகுறப் பொதிந்துகொண்டு விளங்குகின்றன.

    மேருமலையை ஆதாரமாகக் கொண்டும், மற்ற மலைகளை இடைத்தூண்களாக வைத்தும் செய்விக்கப்பட்ட மணிமண்டபம் உனது கொலுமண்டபம். மேலும், காவல் நிறைந்த  புறமனைகள் ஏழும் கடலால் சூழப்பட்ட ஏழுதீவுகள் ஆகியனவும் பள்ளியறை முதலான அமைப்புகளாவன. இவை பூமியாகிய நிலாமுற்றத்திற்கு அரணாகின்றன. சுடரும் கதிரவன் விளக்காகிறான். அண்டச்சுவரும், கடலையே அகழியாகவும் கொண்டு, பொன்னுலகம் ஐந்தினையும் உப்பரிகைகளாகக் கொண்டு விளங்கும் அருமையான வீட்டைக் காக்கும் பெண்ணரசியே! உலகிற்கு அன்னையான புதுவை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) வாழ் திருமகளே! தென்னரங்கேசன் முதலான ஐந்து பேரும் குடிபுகுவதற்காக நினது சிற்றிலை இழைப்பாயாக! என வேண்டும் பாடல்.

    இவ்வைந்து பேரும் திருமாலின் ஐந்து வடிவங்களே! தென்னரங்கேசன்- ஸ்ரீரங்கத்து அரங்கன், திருமலையில் குடிகொண்ட திருவேங்கடவன், திருமாலிருஞ்சோலையில் அமர்ந்த பிரான், திருத்தண்கா அப்பன், வடபத்ரசாயி எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர்ப் பெருமாள் ஆகியோராவர்.

                ஆதார மேருபூ தரநள் ளிடைத்தூண
                       மருவரைக ளெண்டிசைக்கா
             …………………………………………..
             பூதாதி வழிவந்த வண்டபித் தியுமாப்
                      பொரும்புறக் கடலகழியாப்
             பொன்னுலக முதலைந்தும் உப்பரிக் கையதாப்
                       …………………………………….
             சீதார விந்தமலர் வளவயற் புதுவையுட்
                       சிற்றிலை யிழைத்தருள்கவே
             தென்னரங் கேசன்முத லைவருங் குடிபுகச்
                       சிற்றிலை யிழைத்தருள்கவே6

    இப்பருவத்துப் பாடல்கள் அனைத்தும் பெண்மகவு இழைக்கும் சிறுவீடானது எவ்வாறு மனித உடலை ஒத்துள்ளது எனவும், பராசக்தி எனும் அன்னை எங்ஙனம் நம்மைப் படைத்துப் புரந்தளிக்கிறாள் என்றும் பலவித நயங்களில் கூறியுள்ளமை மிக உயர்வாக உள்ளன.

                                                                                                                          (தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1, 2, 3, 5. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்- நல்லதுக்குடி கிருட்டிணையர்.
    4. திருமந்திரம்- திருமூலர்
    6. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 18.1

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 18.1

    மீனாட்சி பாலகணேஷ்

     (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பத்துப்பருவங்களுக்கும் மிகுதியான விளையாட்டுப் பருவங்களும் நிகழ்வுகளும்தான் பிள்ளைப்பருவத்தை இனிமையுடையதாகச் செய்கின்றன. பிள்ளைத்தமிழுக்கென இலக்கணம் வகுத்த நூல்களும் அதிகப்படியான பருவங்களைப் பாட வாய்ப்புள்ளதனை நன்கு விளக்குகின்றன. இனி இத்தொடரில் அவையனைத்தையும், அவை அமைந்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்களிலிருந்து ஒவ்வொன்றாகக் கண்டு இன்புறலாம்.

    பிங்கல நிகண்டு பெண்பால் பிள்ளைத்தமிழுக்குப் பத்தொன்பது பருவங்களை விவரிக்கின்றது. இப்பருவங்கள் காப்பு, செங்கீரை, சொல்வதைக்கற்றல், அமுதூட்டல், தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய இருபாலருக்கும் பொதுவான பருவங்களுடன், மூன்றாம் ஆண்டில் தான்விளையாடும் பாவைக்கு ‘மணம் பேசுதல்’ (குழமணம் மொழிதல்), ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுவரை மன்மதனையொத்த கணவனைப்பெறக் ‘காமநோன்பு நோற்றல்’, குளிர்ந்த நீராடல், பதுமைகளை (பாவைகளை) வைத்து ‘பாவைவிளையாடல்’, அம்மானையாடல், கழங்காடல், பந்தடித்தல், சிறுசோறு அடுதல், சிற்றில் இழைத்தல், ஊசலாடல் எனும் பருவங்களுள் சிலவற்றையோ பலவற்றையோ கொண்டு அமையும். இவையே பத்தொன்பது பருவங்களாகும்.

    ‘பேணும் சிறப்பிற் பெண்மக வாயின்
    மூன்றா மாண்டிற் குழமண மொழிதலு
    ஐந்தின் முதலா யொன்பதின் காறு
    மைங்கணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
    பனிநீர் தோய்தலும் பாவை யாடலும்
    அம்மனை கழங்கு பந்தடித் தாடலுஞ்
    சிறுசோ றடுதலுஞ் சிற்றி லிழைத்தலும்
    ஊச லாடலும் மென்றிவை யுள்ளிட்டுப்
    பேசிய பெண்பாற் பிள்ளைப் பாட்டே,’1 என பிங்கல நிகண்டு கூறுகின்றது.

    திவாகர நிகண்டு இதிலிருந்து சிறிது வேறுபட்டு இருபால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான காப்பு, செங்கீரை, தால், அமுதூட்டல், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களையும், பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கான குழமணம் மொழிதல், ஐங்கணைக்கிழவனை ஆர்வமொடு நோற்றல், பனிநீர் தோய்தல், பாவையாடல், சிறுசோறடுதல், சிற்றிலிழைத்தல், ஊசலாடல் ஆகிய பதினான்கு பருவங்களைக் கூறுகிறது.

    உலகவழக்கில் பெண்குழந்தைகளான சிறுமியருக்கென்று சில இனிய விளையாடல்கள் அமைந்துள்ளன. அவை தமது தாய்மார், வயதில் பெரிய பெண்களான அக்காள்மார் மற்றும் உறவினப்பெண்டிர் இவர்கள்  மனையில் குழந்தை வளர்த்தல், சமையல் செய்தல், குடும்பநலன் பேணுதல், தம் மக்களுக்கு மணம்பேசி முடித்தல் ஆகிய வாழ்வியல் தொடர்பான செயல்களைக் கண்டு, தாமும் அவ்வாறு செய்ய ஆசைகொண்டு, சிறு பெண்குழந்தைகளால் பாவனையாக, பொய்யாக விளையாடப்படும். இதுவே ‘பொய்தல் விளையாட்டு’ என வழங்கப்பட்டது. தமக்கென மணலாலும் தழைகளாலும் ஒரு சிறுவீட்டினைக் கட்டிக்கொண்டும், பாவைகளைக் குழந்தைகளாகக் கருதிக்கொண்டு கருத்தோடு பேணியும், சமையல் முதலானவற்றைச் செய்வதுபோல பாவனை செய்து கணவன் முதலானோருக்கு உணவளித்தும், தம் மக்களுக்குத் திருமணம் செய்வது போலப் பாவைகளுக்கு மணம்பேசி முடித்தும் சிறுமிகள் விளையாடுவர். இந்தப் ‘பொய்தல் விளையாட்டி’னுள் பாவை விளையாடல், குழமணம் மொழிதல், சிற்றிலிழைத்தல், சிறுசோறு அடுதல் ஆகிய நான்குமே அழகுறக் கலந்து விரவி அமைந்துள்ளதனைக் காணலாம்.

    இவற்றுள் குழமணம் மொழிதல் எனும் பருவம் மட்டுமே எந்தப் பிள்ளைத்தமிழிலும் தனிப்பட எடுத்துப் பாடப்படவில்லை.

    சிற்றில் இழைத்தல் பருவம், சிறுமியர் வண்டல் மணலினால் ஆற்றங்கரையில் சிறிய வீடுகளைக் கட்டி விளையாடுவதனை விளக்கும். இதே பெயர்கொண்ட சிற்றிற்பருவம் ஆண்பாற் பிள்ளைத்தமிழில், சிறுமியர் இழைத்த சிற்றிலை சிறுவர்கள் அழிப்பதாகவும், சிறுமியர் அவ்வாறு செய்யவேண்டா என அவர்களை வேண்டுவதாகவும் அமையும். இதனைப் பெண்பால் பிள்ளைத்தமிழில் ‘சிற்றில் பருவம்’ அல்லது ‘சிறுவீட்டுப் பருவம்’ எனவும் கூறுவர். இதுவன்றி, ‘சிறுசோற்றுப் பருவம்’ எனும் ஒரு பருவமும் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழில் காணப்படுகின்றது. இவை அனைத்தையுமே சிறுமியர் விளையாடும் பாவனை விளையாட்டான ‘பொய்தல் விளையாட்டி’ன்  அங்கங்கள் என சங்க இலக்கியங்கள் கூறும்.

    ‘மணம்கமழ் மனைதொறும் பொய்தல் அயர2,’ என மதுரைக்காஞ்சியும்

    ‘ஆடுவார் பொய்தல் அணிவண்டு இமிர் மணல்3,’ எனப் பரிபாடலும் கூறுகின்றன.

    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் (ஆண்பாற்) சிற்றிற்பருவத்துப் பாடலொன்று சிறுபெண்கள் ‘பாவனை’யாக, பொய்யாக விளையாடும் விளையாட்டினை நயமுற விளக்குகிறது.

    தாம் பாடுபட்டு இழைத்த சிற்றிலை உதைத்து அழிக்க ஓடோடிவரும் சிறுவன் முருகனிடம் சிறுமியர், நயமாகவும், கெஞ்சியும், சாமர்த்தியமாகவும், ‘ஒளி பொருந்திய குளிர்ந்த முத்துக்களாலான அரிசியும், அதற்கு உலைபெய்த நறுந்தேனும் கவிழ்ந்து சிதறாதோ? சமைக்கும் பாண்டமான நந்தின் கடமான சங்கு உடைந்து போய்விடாதோ? மாதுளைமலர்களைப் பெய்து நாம் அமைத்த உலைத்தீ அவிந்து விடாதோ? பவளக்கொடிகளால் எம் சிறுவீட்டிற்கு நாம் ஆசையாக இட்டுள்ள விளக்கு அணைந்துவிடாதோ? நாங்கள் (பாவைத்) திருமணம் எனக்கூறிச் செய்துவைத்துள்ள விருந்து வீணாகப் போகாதோ? (பாவனையாக) முலைப்பாலருந்துவித்து உறங்க வைத்துள்ள எமது மகவு (பாவை) தாமரை போன்ற தனது கண்களை விழித்தெழுந்து தேம்பி அழும் அல்லவோ? ஆகவே எமது சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்,’ என வேண்டுவதாக அமைந்த பாடல்.

    ‘நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே
                னுளையுங் கவிழாதோ
    நந்தின் கடமு முடையாதோ நளிமா
                 துளைத்தீ யவியாதோ..
     ………………………………………
                அடியேம் வதுவையெனச்
    சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா
                விருந்தும்4………………………..,‘ என்பன பாடல் வரிகள்.

    தமது தாய்மார்கள் செய்வதுபோல, வீட்டை சுத்தம் செய்வதும், அடுப்பில் உலையேற்றிச் சமைப்பதும், குழந்தையை நீராட்டி, அதற்குப் பால்கொடுத்து, உறங்க வைப்பதும் இவர்களுடைய விளையாட்டு. எதிர்காலத்தில் தாம் ஆற்றவேண்டிய கடமைகளுக்காக இப்போதே தயாராகிறார்கள் போலுள்ளது! இதுவே சின்னஞ்சிறுமிகளின் மனோபாவம்! பொங்கிப்பெருகும் தாய்மை உணர்வை இச்சிறு பிராயத்திலிருந்தே வெளிப்படுத்தும் குழந்தைத்தனம் நிறைந்த அழகு இதுவே! இது ஆண்பாற் பிள்ளைத்தமிழானதனால் சிறுவீடு கட்டுவதும், சிறுசோறு சமைப்பதும், பாவை விளையாடலும் அதனுள் ஒரு அங்கமாகக் குழமணம் மொழிதலும் ஒருங்கே கூறப்பட்டுள்ளன. பொய்தல் விளையாட்டின் ஒரு  அங்கமான ‘குழமணம் பேசுதல்’ இப்பாடல் ஒன்றில் மட்டுமே சுட்டப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் “மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே5,” எனும் பாடல், “ஆற்றோரம் மணலெடுத்து, அழகழகாய் வீடுகட்டி6,” எனும் பாடல் ஆகியன இக்கருத்தின் அடிப்படையிலேயே எழுந்ததெனலாம். இன்றளவும் சின்னஞ்சிறுமியர் பொம்மைகளைக்கொண்டு பலவிதமான விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வதனையும் காணலாம்.

    இவை தொடர்பான நிகழ்வுகளே பெண்பால் பிள்ளைத்தமிழில் பாவை விளையாடல், சிற்றிலிழைத்தல், சிறுசோறு அடுதல் என்ற மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுப் புலவர்களின் கற்பனைக்கேற்பப் பாடப்பட்டுள்ளன. குழமணம் மொழிதலின் விரிவான விளக்கங்களை எப்பிள்ளைத்தமிழிலும் காணக் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே!

    ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் மட்டுமே காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி ஆகிய முதல் ஏழு பருவங்களுடன், சிற்றில் பருவம், சிறுசோற்றுப் பருவம், காமநோன்புப் பருவம் என சில புதுமையான பருவங்களுடன் மொத்தம் பதினோரு பருவங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

    சிற்றில் பருவமானது பெண்பால் பிள்ளைத்தமிழில் வழக்கமாகப் பாடப்பெறாது இருப்பினும், அது சிறுவீடு கட்டுதல், சிறுசோறு சமைத்தல் எனும் இரு செயல்களைக் கொண்டமைந்துள்ளமையால் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் இதனை இரு பருவங்களாக்கியுள்ளார் எனக் கருதலாம். சிறுமியர் விளையாட்டும் இத்தகைமைத்தே என்பதனைக் கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் சிற்றிற்பருவத்துப் பாடலொன்றின் கருத்திலிருந்து காணலாம். அதில் சிற்றிலிழைத்த சிறுமியர், சிறுசோறாக உண்ண சிறுவன் கணேசன் கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களுக்காகக் காத்திருப்பதனைக் காணலாம். பொய்யாக, மணலையும், சிறுமுத்துக்களையும் அரிசி எனக்கூறிப் பெய்து சிறுசோறு சமைத்த சிறுமியர், மற்ற சிறார்கள் தமது மனைகளிலிருந்து கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வர் என்பது கண்கூடு. சிறுவர்களும் இவர்களுடன் சேர்ந்து விளையாட்டிலும், விருந்திலும் பங்கேற்று மகிழ்வர் என அறியலாம்.

    ‘பெருத்தவயிறு தயங்க மெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
    பெரும் பண்ணியமுமேந்தியேம்பாற் பேணிவருநின் கரவினைக்கண்டு
    அருத்தியொடு……,’7

    என்பன பாடல் வரிகள். இப்பாடலின் விரிவான விளக்கத்தை ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றில்பருவத்தில் காணலாம். இனி, பெண்பால் பிள்ளைத்தமிழின் நயங்களைக் காணலாமா?
    சிற்றில் பருவம் (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    மிகச்சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் மட்டுமே சிற்றில்பருவம் எனத் தனியாக ஒரு பருவத்தில், இறைவி சிறுமியாக சிற்றிலிழைக்கும் மேன்மையைப் போற்றி மிகவும் இரசித்தும், பக்தியிலாழ்ந்தும், பலநயங்களைப் புகுத்தியும் பாடியுள்ளதனைக் காணலாம்.

    வயிரவன்கோவில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் நூலில் ஒன்பதாம் பருவமாக, நீராடலுக்கு மாறாக சிற்றிலிழைத்தல் (சிற்றில் பருவம்) பத்துப்பாடல்களில் பாடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு உயிரும் இருந்து வாழும்படி அவையவற்றிற்கு உரிய வகையில் வடிவுடையம்மையாகிய பராசக்தி வீடுகளை அமைக்கும் சிறப்பை விளக்கும் பாடலொன்றைக் காணலாம். பாடலே இனிய எளிய நடையிலமைந்துள்ளமையால் விளக்கம் தேவையில்லை!

    மூவருறை யுயர்வீடு முத்தியின் பென்றோது
                  முழுநிதியம் வைக்கும் வீடு
     மோனஞா னானந்த சிவயோக நிலைகண்ட
                  முனிவர்கள் வசிக்கும் வீடும்
    …………………………………………………….

    பாவிய சிறப்புமலி வீடுமாழ் பாதலம்
                  பற்றிவாழ் நாகர் வீடும்
    பகுத்துத் தனித்தனி யியற்றிவிளை யாடுநீ
                       ………………………………………..
    தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
                 யள் சிறுவீடுகட்டி யருளே8 என்பது பாடல்.

    மேலும் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்களில் காண்பதுபோல் இதுவும் அம்மை சிறுவீடமைப்பதனை உருவகமாக சிறுவர்களின் விளையாட்டான ‘பொய்தலாட்டயர்வ’தாகக் குறிப்பிடுகின்றது. எடுத்துக்காட்டாக ஒருபாடல் அவள் ஈரேழு உலகைப் படைத்தும் அதற்கு முத்தொழில் புரியும் அதிகாரிகளாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை நியமித்தும், சன்மார்க்க துன்மார்க்கங்களில் உயிர்களைச் செலுத்தியும், அதனைக் கண்காணித்தும் ஆகியன செய்வதனைப் பொய்தல் விளையாட்டு எனக் கூறுவதில் உள்ள கருத்தொற்றுமை வியக்கத் தக்கதாம்.

    ‘அண்டமென் றோதுபெரு வெளியிலீ ரேழுநகர்
                       ………………………………….
     பிண்டத் தினுந்தந்து பொய்தலாட் டயரும்
                     பெருந்தகைச் சிறிய விடையாய்
             ………………………………
    திண்டடஞ் சோவடுக நாதபுர மேவுபரை
                    சிறுவீடு கட்டி யருளே9,’ என்பன பாடல் வரிகள்.

    பின்னும் இதில் அன்னை உயிர்களுக்குத் தகுதியான உடல்களை எழுவகைத்தாதுக்கள் எனப்படும் இரத்தம், சுக்கிலம், மூளை, தசை, எலும்பு, நரம்பு, தோல் இவற்றோடு ஐந்துவகை பௌதிகப் பொருட்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியனவற்றைப் பொருத்தி இணைத்து எழுபத்திரண்டாயிரம் எண்ணிக்கையிலான நரம்புகளையும் அதனூடே இழைத்தும், மூன்றரைக்கோடி மயிர்களை வேய்ந்தும், ஒன்பது வாயில்களை அமைத்தும், இன்னபிற செய்வித்தும் பலவிதமான வீடுகளை உயிரினங்களுக்குச் சிற்றில் அமைப்பதுபோன்று படைக்கிறாள். அவை பழுதுபடின் வேறு வீடுகளை அமைத்துக் கொடுக்கிறாள். இவ்வாறு பிறப்பு, இறப்பு, பாவ புண்ணியங்களுக்கேற்ற மறுபிறப்பு ஆகியனவற்றை அருமையாக எடுத்தியம்பும் பாடலிது.

     ‘எழுவகைத் தாதுவினோ டைவகைப் பௌதிகமு
                  மேய்வித்து நீடி மல்கு
     மெழுபத் திரண்டா யிரத்தொகை நரம்பினையு
                       ………………………
     பழகுற வமைத்துமன் பதைகட்கு வாழ்வீடு
                  பற்பல விழைத்திட் டவை
     பழுதுபடின் வேறுமவ் வாறுபுரி யம்மையே
                       …………………………..
     தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
                  யள்சிறுவீடு கட்டி யருளே10,’ என்பது பாடல்.

    நுட்பமான கருத்துக்களாக உடலின் அமைப்பை விளக்கி அவற்றைச் சிறுமிகள் இழைக்கும் சிறுவீட்டின் அமைப்போடு ஒப்புநோக்குதல் வியக்கத்தக்கதாம். இதுபோலும் பொருளும் நயமும் மிக்க பத்துப்பாடல்கள் உள்ளன.

                                                              ****

    புதுவை திரிபுரசுந்தரியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப்பருவத்தைத் தவிர்த்து சிற்றிலிழைத்தல் பருவம்  எட்டாம் பருவமாக வைக்கப்பட்டு பத்துப்பாடல்களால் சிறப்புற பாடப்பெற்றுள்ளது. இவற்றுள் முதலைந்து பாடல்கள் அன்னை எவ்வெவற்றைக்கொண்டு சிறுவீடு கட்டுவது போன்று ஈரேழு உலகங்களையும் படைத்தருளுகிறாள் என விளக்குகிறது.

    ‘பொன்புற மிலங்குநெ டுவட்டவா ளக்குன்று
                   புரிசையா கத்திகாந்துப்
    புறக்கடற் கோட்டை சூழகழி யாத்திசைகள்11
                       ……………………………..’

    எனச் சிறுவீட்டின் அமைப்பையும், அதில் வாழும் உயிர்களைக் காக்க அவள் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்குப் பதவியளித்ததனையும் கூறுகிறது.

    ‘முத்தலைச் சூலமேந் திப்பொடி யணிந்தோங்கு
    மூரிவெள் விடையவர்க்கு
    முந்நீர் நிறங்கொண் டுமண்ணுண் டுவிண்ணீண்ட
    முண்டகக் கண்ணருக்கும்12‘…. என்பன பாடல் வரிகள்.

    இத்தகைய அருமையான கருத்துக்களைக் கொண்டமைந்ததால் இப்பருவத்தின் பாடல்கள் பெண்பால் பிள்ளைத்தமிழில்  சிறப்பாக விளங்குகின்றன.

                                                                                      (தொடரும்)

    பார்வை நூல்கள்

    1. பிங்கல முனிவர்- பிங்கல நிகண்டு
    2. மதுரைக்காஞ்சி, வரி 589.
    3. பரிபாடல், 20, வரி 23.
    4. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    5. தஞ்சை ராமையா தாஸ்- ‘காவேரியின் கணவன்’ திரைப்படப் பாடல், 1959
    6. கண்ணதாசன்- ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ திரைப்படப்பாடல், 1964
    7. சிவஞான முனிவர்- கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
    8, 9, 10. சேந்தன்குடி வி. நடராசக்கவிராயர்- வயிரவன் கோயில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
    11, 12. புதுவை முத்துக்குமாரன்-  திரிபுரசுந்தரியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்-17

    குழவி மருங்கினும் கிழவதாகும்-17

    மீனாட்சி பாலகணேஷ்

    (உடைவாள் செறித்தல்)

    அரிதாகப் பாடப்பட்ட பிள்ளைப்பருவங்களின் வரிசையில் அடுத்து வரும் ஆண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவம் ‘உடைவாள் செறித்தல்’ என்னும் பருவமாகும். இப்பருவத்தைப் பற்றிப் பாடியுள்ள ஒரே நூலான கதிர்காம பிள்ளைத்தமிழில் இது  கடைசிப்பருவமாக வைக்கப்பட்டுள்ளது.

                ‘………………….. பன்னீ ராண்டினிற்
             கச்சொடு சுரிகை காமுறப் புனைதல்1‘ என்று இதனை பிங்கல நிகண்டு எடுத்தியம்பும்.

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள் குழந்தை சிறுவனாகிப் பின் அரசுகட்டில் ஏறும்வரை வகைப்படுத்திப் பாடப்பெறும். அரசுகட்டில் ஏறுவதற்கு முந்தைய பருவமே ‘கச்சொடு சுரிகை காமுறப் புனைதல்’ என்பதாகும் எனக்கொள்ள இடமிருக்கின்றது. இது ‘உடைவாளினைக் காண்போர் விருப்பங்கொள்ளும்வண்ணம்  இடைக்கச்சில் அணிந்து கொள்ளுதல்’ எனப் பொருள்படும். அரசனாகப் போகும் இளம்சிறுவன், வாள், வில் வித்தைகளில் தேர்ச்சிபெற்று விளங்க வேண்டும். தனது வீரத்தை இவ்வித்தைகளைக் கொண்டு போர்களில் வீரச்செயல்கள் செய்து வெற்றி பெறுவதன் மூலம் வெளிப்படுத்தல் வேண்டும் என்பது அவனது நாட்டுக் குடிமக்களின் எதிர்பார்ப்பு. கிடைக்கப்பெற்ற மூன்று பாடல்களின் சிறப்பையும் நயத்தையும் காணலாம்.

    கொடியதொரு வேடன், மானைக்கொன்று அவ்விறைச்சியை வேலனுக்குப் படைத்து வழிபாடு செய்த தலமே வலவையாற்றங்கரையினில் அமைந்துள்ள கதிர்காமம் எனும் பதியாகும்.

    ஒருகாலத்தில் தாரகாசுரன் முதலான அசுரர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் குமரனின் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளில் வீழ்ந்து உளறிப்புலம்பி தம்மைக் காக்குமாறு முறையீடு செய்தனராம்; சிவபிரான் அவர்களிடம், “உமது தலைவனாகிய முருகன் இன்னும் சிறியவன்; மழலைச்சொல் பேசுபவன்; ஆதலால் இப்போது போருக்குச் செல்ல இயலாது. ஆகவே நான்கைந்து ஆண்டுகள் சென்றபின் நீவிர் வருக; இப்போது செல்க!” என்றான்.

    “அவ்வாறு கூறியவன் கொடியதான போருக்குச் சென்றுவரத் தன் மகனாகிய உன்னை (முருகனை) அனுப்ப முனைபவன் போன்று, உனக்குக் கச்சினில் உடைவாளைச் செறித்து அணிவித்துப் ‘போர்க்கலையைப் பழகுவாயாக’ என்று கூறினான். நீயும் அங்ஙனம் செய்வதனைப் பருவமங்கையர் தம் வாள்போலும் கண்களாற்கண்டு காமுறும்வண்ணம் உடைவாளை இடையில் செருகிப் பயிலுவாயாக!” எனக் கூறும் பாடலிது.

    ‘கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்’ எனும் இலக்கணக் கூற்றிற்கேற்ப இப்பாடல் மிகப் பொருத்தமாக அமைக்கப்பட்டதனைக் கண்டு வியந்து களிக்காமல் இருக்கவியலுமா?

                ஊன்குன்ற மாமசுரர் ………… ……………
                                உம்பரர் நுந்தையடிவீழ்ந்
                       துளறிப்பு லம்பிமுறை யிட்டனர் …..
                                உந்தையஞ் சற்கவென்று        
             …………………… நும் தலைவனின் னுஞ்சிறிஞன்
                                மழலையுநி ரம்பிற்றிலன்
                       வருகநா லைந்தாண்டி னிப்போக …………….
                                ………….. கடிதுபோர்க்குத்
             தான்சென்று வரவிடுப் பான்போலு நின்னைவாள்
                                சாலுடைசெ றித்தல்பயிலே
                       தகுமிளம் பருவமங் கையர்பிறழ்கண் வாளோடு
                                …………………… பயிலே2!

    இப்பாடலின் ஆசிரியர் ஒரு கம்பராமாயணக் கருத்தைத் தன் பாடலில் கொணர்ந்துள்ள அருமையையும் கண்டு இரசிக்கலாம்.

    விசுவாமித்திர முனிவன் தனது வேள்விக்கு இடையூறு செய்துவந்த அரக்கர்களை அழிக்கும்பொருட்டு இராமனை அனுப்பித்தருமாறு தசரதனிடம் வேண்டுகோள் விடுக்கிறான். துணுக்குற்ற தசரதன், “என் மகன் இராமன் சிறியவன்; படைக்கலங்களில் தேர்ந்த பயிற்சி இல்லாதவன்; ஆகவே நானே வந்து உமக்கு உதவுகிறேன்,” எனக் கூறுகிறான்.

                ‘படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய்
                       பணி இதுவேல் 3………….,‘

    என்பன பாடல்வரிகள்.

    இவ்வாறு அரிதாகப் பாடப்பட்ட பருவங்கள் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்பட்டாலும் அவை புதுமையான நயங்களையும் கருத்துக்களையும் தொன்மங்களையும் கொண்டமைந்துள்ளன என நாம் உணர்ந்துகொள்ளலாம்.

    அடுத்த பாடலைக் காண்போம்:

    இது முருகனை உடைவாள் செறிக்க வேண்டுங்காலை, அவனது அருள்செய்யும் பெற்றியையும், அருளின் திறத்தையும் விளக்கும் பாடல்.

    எளியேங்களாகிய நம் புலன்களிற் பொருந்தும் ஆசையை ஒழித்த தன்மையானது ஐம்புலன்களையும் கேடுவராமல் காக்கின்றது; அதனால் அது ஓவியங்களமைத்து  நிரப்பிய  சட்டை அல்லது கவசம் எனும் மெய்யுறையாக உருவகிக்கப்படுகின்றது. முருகப்பெருமானே இந்த அவவாற்ற தன்மையை, ஆசைகளொழிந்த நிலையை நமது உள்ளத்திற் குடியிருந்து நமக்கு அளித்து அருள்பவன்.

    ‘ஆசை அறுமின்கள்! ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்4!’ என திருமந்திரம் கூறுவது இதனால்தான் என்னவோ! இத்தகைய கேடு விளைவிக்கும் ஆசை எனப்படும் பற்றானது இருவகைப்படும்; அகப்பற்று, புறப்பற்று என்பன அவை. அதாவது தம்மிடமுள்ள பொருளை விடாமல் பிடித்துக் கொள்ளுதலும், தமதல்லாதவற்றைத் தாமடைய விழைவதுமாகும். இந்த இருவகைப் பற்றையும் இல்லாமற் செய்து தனது பொன்னாலான (செருப்பணிந்த) திருவடிக் கழல்களில் நம்மைச் சேர்த்துக் கொள்கிறான் முருகப்பெருமான். அது மட்டுமின்றி, அருள்சுரந்து குறுமுறுவல் பூத்து உபசரிக்கிறான். அத்தகையவன் இந்த கதிர்காமப் பெருமான்!

    அவன், இந்த அழகன் முருகன், உடைவாளை அணிந்துகொள்ளும் முன்பு அரைக்கவசம் எனப்படும் வட்டுடையை அதனைக் கட்டுவதற்குரிய கயிற்றுடன் முழந்தாளிலிருந்து இடுப்புவரை புதுமையானதொரு முறையில் விளங்குமாறு அழகாக விரித்துச் சுருக்கி, குறுக்கிக் கட்டி, தொடையும் இடுப்பும் மறைய உடுத்தியுள்ளான்; அந்த ஆடையின் விளிம்பில் அதனை எடுப்பாகக் காண்பிக்கும் பச்சைநிற மரகதங்கள் வைத்துத் தைத்ததும் சுருண்ட பாம்பினை ஒத்ததுமான கச்சினை அணிந்துள்ளான். அதன்மீது கடற்சிப்பிகள் உமிழ்ந்த முத்துக்களாலான வாளின் உறையைக் கச்சிதமாகப் பொருத்தி அணிந்து அதனுள் வயிரங்கள் பதித்த உடைவாளைஅவன் செறித்தருள வேண்டும் எனப் புலவர் வேண்டுகிறார்.

                பொருந்து மெளியே மவவின்மைப்
                                பொதியோ வியமெய் யுறைபோர்க்க
             ………………………………………….
                       முந்து குறங்கில் வட்டுடைஞாண்
                                முழந்தா டொடங்கி நுசுப்புவரை
             …………………………………………
                       விளிம்பிற் பச்சை மணிநிரைத்த
                                வெருள்பாம் பன்ன கச்சினையார்த்
             ………………………………………..
                       யெண்செந் நிலைக்கைப் பிடிவயிர
                                வீர்வாண் ஞானஞ் செறித்தருளே5!

    இங்கு வட்டுடையும், கச்சும் கலையின் செல்வமான நிரம்பிய அறிவும், அதன் தொடர்பாக உண்டாகும் நல்லொழுக்கமும் என உருவகிக்கப்பட்டன. அதன்மீது சாந்தத்தையே கைப்பிடி எனக்கொண்ட வாளினை, உறுதியான வயிரம் போலும் வாள் எனும் ஞானத்தை,  வேதங்களாலான உறையினுள் (எம் அகத்தே, உள்ளத்தில்) செறித்தருள் என முருகப்பெருமானிடம் அடியார் வேண்டுவதாக அமைத்துள்ளார் புலவனார். வாள் எனும் ஞானம் வேதம் எனும் வாளுறையில் பொருந்துகிறது. இப்பாடலுள்ளும் மற்றப் பாடல்களைப் போலவே அருமையான தத்துவக் கருந்து பொதிந்துள்ளது.

    அடுத்த பாடலும் இவ்வண்ணமே அருமையான கருத்தை உள்ளடக்கிப் பொலிகின்றது.

    முருகனுக்கு முன் செல்லும் பூதப்படைகளே அவனது சுற்றமாக விளங்குகின்றன. அவை வெற்றிபெற்றதாகக் கருதி வெற்றிக்கூத்தாகிய குணலைக் கூத்தினை ஆடின. பெருமைவாய்ந்த தேவர்கள் யாழினையும் குழலினையும் இசைத்தும் முழவினை அடித்தும் பூக்களைச் சொரிந்தும் செல்ல, முருகப்பெருமானைத் தாங்கிச்செல்ல அம்புபோல விரைந்து செல்லும், குடைபோலத் தோகையை விரித்த மயிலாக இந்திரனே வந்தான். போர்க்களத்தே இந்திரனே மயிலாக வந்து முருகனைத் தாங்கினான் என்பர். இவ்வாறு முருகன் போருக்கு எழுந்தருளுங்காலை, தமிழ்பாடும் ஞானத்தொண்டராகிய அடியார்களின் படையாகிய குழாம் வாயினால் ஒலியெழுப்பி ஆரவாரம் செய்தனர். ‘ஆவலங் கொட்டுதல்’ என்பது வெற்றி முழக்கங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படும். சூரனுக்கு அடிமையாக தேவர்கள் வாழ்ந்த வாழ்வு தொலைந்தது. படையெழுந்ததால் மூவுலகிலும் தூசிப்பொடி எழுந்து பரவிப் பூசியது. அறங்கள் செழித்து வளரவும், பகைவர் அச்சமுற்று நாணி உன்னை வணங்கவும் ஆகும்படிக்கு நீ மாலையணிந்த வாளினை இடையாடையில் அணிந்தருளுக! எனப் புலவர் வேண்டுவதாக அமைந்த பாடலிதுவாகும்.

                கூளிச் சுற்றத் தூசிப் பஞிலங்
                                குணலைக் கூத்தியலும்
                       கொன்புத் தேளிர் யாழ்குழல், முழவிசை
                                குவிபூப் பொதுளுமரோ
             …………………………………………
             தூளிப் பொடிமூ வுலகும் பூசச்
                                சூரடி மைவாழ்வு
                       தொலைவுற …………………..
             …………………………………………….
                                தார்வா ளுடைசெறியே
                       தமியேங் கதிர்மலை யாண்டகை! வாழி
                                தார்வா ளுடைசெறியே6!

    உடைவாள் செறித்தல் எனும் பருவமான இது மிக அழகான பருவம். பாடல்களால் போற்றிக் களிக்க மிகவும் அருமையான இப்பருவத்தை ஏன் புலவர்கள் பாடவில்லை எனும் வினா நம்முள்ளத்தே எழுகின்றது.

    இத்துடன் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் நிறைவு பெறுகின்றன. இனி வரும் பகுதிகளில் அரிதாகப் பாடப்பெற்ற பெண்பாற் பிள்ளைத்தமிழின் அருமையான பருவங்களைக் காண்போம்.

    பார்வை நூல்கள்:

    1. பிங்கல நிகண்டு- பாடல் 267- பிங்கல முனிவர்
    2. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்
    3. கம்பராமாயணம்- கம்பர், பாலகாண்டம். கையடைப்படலம். பா.
    4. திருமந்திரம்- திருமூலர்
    5, 6. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்-16

    குழவி மருங்கினும் கிழவதாகும்-16

    மீனாட்சி பாலகணேஷ்

    (பூணணிதல்)

    அரிதாகப் பாடப்பட்ட பருவங்களின் வரிசையில் நாம் காணப்போகும் ஆண்பால் பிள்ளைத்தமிழின் அடுத்த பருவம் ‘பூணணிதல்’ என்னும் பருவமாகும். இப்பருவத்தைப் பற்றிப் பாடியுள்ள ஒரேயொரு நூலான கதிர்காம பிள்ளைத்தமிழில் இப்பருவமானது சிறுதேர்ப்பருவத்தின் பின்பு அமைத்து வைக்கப்பட்டுள்ளது.

    ‘பத்திற் பூணணி’1 என பிங்கல நிகண்டு கூறுகின்றது. இதனைப் பத்தாண்டு எனக்கொள்ளல் வேண்டும். ஏனெனில் அடுத்த பருவத்தைப் ‘பன்னீராண்டினில்’ என விவரிக்கின்றது இந்நிகண்டு. ஆகவே இது பத்துமாதத்தில் பூணணிதல் ஆகாது. பத்தாண்டில் அணிவதே. மேலும் இவ்வயதில்தான் குழந்தைகள் அழகான உடைகள், அணிமணிகள் அணிந்துகொள்ள ஆர்வம் காட்டுவர். ஆகவே நாம் காணப்போகும் பாடல்கள் கூறுவனவையும் பத்தாண்டுகள் நிரம்பிய மகவிற்கே பொருந்தும்.

    இவ்வயது மக்கள், அவர் ஆண்மக்களாயினும் அல்லது பெண்மக்களாயினும், அழகழகான அணிமணிகளை அணிந்துகொள்ள விரும்புவர். அதற்கேற்பத் தாய்மாரும் அணிமணிகளை அவர்களுக்கு அணிவித்து அழகுபார்க்கவும் விரும்புவர். குழந்தைப்பருவத்தின் ஒரு இனிய நிகழ்வு இதுவானமையால் இதனை ஒரு பருவமாகவே பாடினர் போலும்! ஆயினும் கதிர்காமப் பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே இப்பருவப் பாடல்களைக் காண்கிறோம்.

    பிள்ளைத்தமிழ் எனும் அருமையான பிரபந்தத் தொகுப்பில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட நூற்களில் மூன்றே மூன்று பாடல்கள் மட்டுமே இவ்வினிய பருவத்தைப் பாடிப்போற்றியுள்ளன.

    மற்ற பல தோத்திர நூல்களில் இத்தகைய பாடல்கள் பலவற்றைக் காணலாம். எடுத்துக்காட்டாக,

    ‘பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
                       பாடகம் தண்டை கொலுசும்
             பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட

    பாதச் சிலம்பினொளியும்2…..‘ என காமாட்சியன்னை துதிப்பாடல் ஒன்று அன்னை அணிந்துள்ள அணிமணிகளை வரிசைப்படுத்துகின்றது. இது குழந்தை மீதான பாடலன்று.

    ‘மணியே மணியினொளியே ஒளிரும் மணிபுனைந்த
                     அணியே அணியும் அணிக்கழகே3 ….’ என்று அபிராமி அந்தாதி ஏத்துகின்றது.

    ‘இருபதமு மென்குரற் கிண்கிணியு முறையிட்
                       டிரைந்திடு மரிச்சிலம்பும்
              இறுமிறு மருங்கென் றிரங்குமே கலையும்பொ
                       னெழுதும்செம் பட்டு வீக்குந்
             திருவிடையு முடைதார மும்மொட் டியாணமுஞ்
                       செங்கைப் பசுங்கிள்ளையுந்
              திருமுலைத் தரளவுத் தரியமும் மங்கலத்
                       திருநாணு மழகொழுக4….

    எனும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சிறுமியான அன்னை அணிந்துள்ள கிண்கிணி, சிலம்பு, மேகலை, உடைதாரம் எனப்படும் அரையில் அணியும் அணிகலன், ஒட்டியாணம், தரள உத்தரியம் எனும் முத்துக்கள் இழைத்த மேலாடை, மங்கலத்திருநாண் ஆகிய அணிகலன்களை கேசாதிபாதமாக அழகுற வருணிக்கின்றது; இது பொன்னூசற் பருவப்பாடல்! பூணணிதல் எனவோர் பருவமன்று.

    ‘பொன்னே வருக, பொன்னரைஞாண் பூட்டவருக, சிறுசதங்கை புனைய வருக,5‘ என்று பழனிப் பிள்ளைத்தமிழும் வருகைப்பருவத்திலேயே குழந்தையை விதம்விதமான அணிகலன்களைப் பூட்டி அழகுபார்க்க அழைப்பதாக அமைந்துள்ளது.

    இதனின்று பெறும் கருத்து, கடவுளர்க்கும், கடவுளர்களாக நாம் பார்க்கும் குழந்தைகளுக்கும், மேலும் குழந்தையாக்கி நாம் கொண்டாடிப் போற்றும் கடவுள்களுக்கும் விதம்விதமான பலவகை அணிகளைப் பூட்டிப்பார்த்து மகிழ்வது மானிடரின் உளவியல் வகையிலான இயல்பும் அவருள்ளத்துத் தோன்றும் அன்பும் என்பதாகும்.

    இனி கதிர்காமப் பிள்ளைத்தமிழின் முதற்பாடலைக் காண்போம்: முதலிரு அடிகளில் கதிர்காமம் எனும் தலத்தின் பெருமையைக்கூறிவிட்டுப் பின் அங்கு உறையும் முருகப்பெருமானுக்கு என்னவென்ன அணிகளைப் பூட்டி அழகு பார்ப்போம் எனக் கூறும்விதம் நயக்கத்தக்கதாம்.

    ‘வலிமைமிக்க இளைய குறவன் ஒருவன் நிலத்தை உழுகின்றான்; அவனுக்குப் பசிதீர வேண்டுமளவுமட்டும்  உண்பதற்காக நெய்யும் பாலும் சேர்த்து வட்டித்த வெப்பமுடைய தினைப்பொங்கற் சோற்றினை அவன் மனையாளான குறமகள் கொண்டு செல்கின்றனள். செல்லும்வழியில் முனிவரொருவர் கண்களைமூடி, தம் மனத்தை ஒடுக்கி இறைசிந்தனை வயப்பட்டு உணவும் கொள்ளாது பழமையானதொரு வேங்கைமரத்தடியே அமர்ந்துள்ளார். தாமே எடுத்து உண்ணவும் இயலாது உடல் தளர்ந்துபோன அம்முனிவருக்கு குறத்தியானவள் தான் எடுத்துச்செல்லும் உணவை வாயில் அருத்துவிக்கிறாள். இதனையறிந்த கணவனும் சினம்கொள்ளாமல் உள்ளம் மகிழ்கின்ற இயல்புடையவன். அத்தகையோர் வாழும் கதிர்காமத்தில் உறைபவனே!

    (இதன் உள்ளுறைபொருள் கருத்தில் கொள்ளத்தக்கது. இயலாமை நிறைந்தவர்களுக்கு- இங்கு தவத்தினால் மெலிந்து உடல் குறுகிப்போன முனிவருக்கு- பணிவிடை செய்து, உணவளித்தல் ஒரு நன்மை பயக்கும் ஒழுக்கம் மிகுந்த செயல் என்பதாகும்).

    ‘தேவர்களுக்குமில்லாத கட்டழகு வாய்ந்தவன் நீ! உன்னழகிற்கு ஒப்பார் ஒருவருமில்லை. இருப்பினும் உனக்கு மேலும் அழகுசெய்து பார்க்க எண்ணும் ஆசையும், பேதைமைக்குணமும் இல்லாத மானிடருமுளரோ?

    ‘ஆதலால், இவ்வுலகத்தார் பெரிதெனக்கருதும் சிறு கைக்கடிகாரம் (பொழுதறிபொறி)- அதனைப் பொன்னாலாகிய தொடர் சங்கிலி பொருத்திய காப்பில் உன் கையினில் பூட்டிக்கொள்வாயாக! கமுகுபோன்ற கழுத்திற்கு இசைந்த முத்தாரத்தையும் விட்டுவிட்டு ஒளிசெய்யும் பொன்னாரத்துடன் பூட்டிக் கொள்வாயாக!’ என்று தனக்கே உரிய அன்புடன் தாய் வேண்டுகிறாள்.

                செம்புலமு ழாநிற்கு மைந்துமலி புனவன்றெ
                                விட்டக்கொ டிச்சிகொடுபோந்
                தினையினது வெய்துநெய்ப் பாற்பொங்க னெறியிடைத்
                                திறவாது கண்முகைத்துத்
             ……………………………………………..

             உம்பரொரு வர்க்குமில் கட்டழகு னக்குண்டு
                                கப்பிதற் கழகுமுண்டோ?
                       …………………………………………….

             இம்பரது பொழுதறிபொ றிப்பூட்டு கைப்பூட்டி
                                ணைப்பொலந் தொடிபூண்கவே
             யிறைவ!கமு கங்கமுத் தியையுமுத் தாரமொடி
                                மைப்பொலங் கொடிபூண்கவே6!

    கைக்கடிகாரம் தற்காலத்திய கண்டுபிடிப்பு. இதனையும் இப்பாடலில் அழகுறச் சேர்த்துக் கூறியுள்ளார் புலவனார். அழகுக்காக மனிதர்கள் பொன்னாரம் அமைத்த கடிகாரத்தை அணிவது உண்டு.

    வயிரங்களால் இழைக்கப்பட்ட ஒலிசெய்யும் வளைவுபொருந்திய காற்சிலம்பு, அதனையணிந்த முருகனின் திருவடிகளில் சிந்தையைப் பதித்து நிற்கும் அடியார்களின் உள்ளத்தைத் தம்பால் வளைத்து இழுத்துக் கொள்கின்றதாம். முருகப்பிரானின் திருமார்பிற் சேரும் வள்ளியம்மை, அவ்வமயம், அத்திருமார்பில் விளங்குவதனால் மிகுந்த அழகுபெற்று விளங்கும் பதக்கத்தில் பதித்த தனது நோக்கினை மீட்க இயலாதவளாகி நின்றனள். மேலும் இந்திரன் (முகிலூர்தி) அளித்த மூன்றுவித மணிகளாலான மாலை, பிரமன் அளித்த நான்மணிமாலை, முருகனது இளவல்களான வீரவாகு தேவர் முதலான ஒன்பதுவீரர்கள் விளங்கும் ஒன்பது இரத்தினங்களின் மணிமாலை, தயிரைத் திருடித்தின்ற மாமனான திருமால் கொடுத்த அசையும் பன்மணிமாலை, ஆண்வடிவான சிவபிரானும், பெண்வடிவான உமையன்னையும் சார்த்துகின்ற புன்னகைமாலை, ஆகியனவற்றை உயிர்கள் அனைத்தும் இன்புற்று இருக்குமாறு நீ, அவையவற்றின் உணர்வினைக் களவாடிக்கொண்டு மகிழ்விக்குமாறு புனைந்துகொண்டு அருளுவாயாக! உலகினையே நீ தாங்கி நிற்கும் தன்மையை உணர்ந்த ஆன்றோர் உன் வடிவினைத்தம் உள்ளதிற்கிருத்தி உருகுமாறு இவ்வணிகளைப் புனைந்து அருளுவாயாக!

                வயிரம் பதித்துத் தெருளுள்ளம்
                                வளையவ ளைக்கு நரன்ஞெகிழம்
                       வள்ளிக் கொடிகண் மணிபதிக்கு
                                மார்பிற்ப தக்க முகிலூர்தி
             ………………………………………………

             தயிருண் டோடிய நல்லம்மான்
                                தந்த துயல்பன் மணிமாலை
                       ……………………………………….

             உயிரின் புறுகதிர் மலைக்குமரா!
                                உணர்வு திருடப் புனைந்தருளே!
             உலகினை யணியும் நின்வடிவ
                                முரவோர் வருடப் புனைந்தருளே7!

    மேலான கருத்துக்களையும் வேதாந்தச் சித்தாந்தத் தொன்மங்களையும் தன்னுள் அடக்கிய பாடலிதுவாகும். ஏனெனில் ஒவ்வொரு அணியும், அணியின் உயர்வுக்கும் அழகுக்கும் மட்டுமேயின்றி, அது பொருந்தியுள்ள இடத்தின் பெருமையைக் கூறுகிறது. எடுத்துக்காட்டாக, காற்சிலம்பு அழகானதே. அதனை நோக்குபவர் கருத்தும் சிந்தையும் வளைந்து அதனையணிந்துள்ள அண்ணலின் திருவடிகளில் தங்குகின்றன எனும் கருத்தினைப் பெறலாம்.

    தொடரும் மூன்றாம் பாடல் புலவர் வாக்காகின்றது. உலகியலில் எதற்கெல்லாம் எவை அணி எனக்கூறுகிறார்:

                ‘கண்ணிற்கு அணியானது கருணைநோக்கு உடைத்தல்;

                (குறள்: கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
                                    புண்ணென்று உணரப் படும்8)

    கல்விக்கு அணி கற்றதனைக் குற்றமற மொழிதல்; எண்ணுவதற்குள் அணியானது அருட்தன்மையே! இந்த மண்ணிற்கு அணி கதிர்காமக் கோட்டமாம்; நூல்களுக்கு அணிசெய்வன உவமங்களாகும்; பெருமைசேர்ந்த அணி பொறுமை; மனையறத்தின் மாட்சிக்கு அணியாவது மகவே!

                (குறள்: மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
                                     நன்கலம் நன்மக்கட் பேறு9).

    நாணுடைமை என்பது நிறைமொழி மாந்தர்க்கட்கு அணி; இளைஞர்கட்கு அணி பணிவு; எமது கண்களுக்கு நின் திருவடியே மெய்யான அணியாகும்! உனக்கு அடியார்களாகிய யாம் பொற்பணி அணிவித்தோம்,’ என்கிறார்.

                ‘கண்ணிற் கணிகண் ணோடுதன் மாந்தர்
                       காண்டக விரைவினவுங்
                 கல்விக் கணிபொருள் கசடற, மொழிதல்
                       கருதற் கணியருளே
             ……………………………………………..

             ………………………………..மனையற
                       மாட்சிக் கணிமகவே
             விண்ணிற் கணிநீ நின்திரு மெய்க்கணி
                       வினையேம் பொற்பணியே
                 வேசறு மடியார் விழிவாய் பருகவி
                       துத்தனர் பொற்பணியே.’10

    என்பன இப்பாடல் வரிகளாகும். மிக்க பொருள்செறிந்த கருத்துக்களை முன்வைக்கும் பாடலிதுவாம். திருக்குறள் கருத்துக்கள் பலவற்றை  இவை தெரிவிப்பதனைக் காணலாம்.

    இப்பருவத்துப் பாடல்கள் மூன்றேயாகினும் கருத்துச் செறிவில் மிக உயர்ந்து பல உள்ளார்ந்த சிறப்பான கருத்துக்களைக் கூறுகின்றன. இவற்றை ஆன்றோர் வாயிலாகக் கேட்டுப் பொருளுணர்வது சாலச் சிறந்ததாகும்.

                                                                                                                                                                                                           (தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1. பிங்கல நிகண்டு- பிங்கல முனிவர்
    2. காமாட்சியன்னை துதி
    3. அபிராமி அந்தாதி- அபிராமி பட்டர்
    4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    5. பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்
    6,7,10. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்
    8, 9. திருக்குறள்- திருவள்ளுவர்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்-15

    குழவி மருங்கினும் கிழவதாகும்-15

    மீனாட்சி பாலகணேஷ்

    (உணவூட்டல்)

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் அடுத்த பருவம் உணவூட்டல் பருவம் ஆகின்றது.

    ‘ஏழாந் திங்களி னின்னமு தூட்டலும்,1‘ என்பது பிங்கல நிகண்டுவின் பாடல்வரி. அரிதாகப் பாடப்பட்டுள்ள பருவங்களில் ஒன்றான இதுவும் கதிர்காமப்பிள்ளைத்தமிழில் மட்டுமே நயமுறப் பாடிப் பதியப்பட்டுள்ளதனைக் கண்டு மகிழலாம்.

    உணவூட்டல் எனும் செய்கையைப் பொருளாகக்கொண்ட இப்பருவம் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானதும் குழந்தை வளர இன்றியமையாததுமாகும். பெரியாழ்வார் கிருஷ்ணனைப் பற்றிப் பாடிப்பரவிய திருமொழிப்பாசுரங்களில் ‘அன்னை முலையுண்ண அழைத்தல்’ எனத் தனியாகப் பாசுரங்களைப் பாடியுள்ளார். இருப்பினும் எந்தப் பிள்ளைத்தமிழிலும் இதுவோ, உணவூட்டல் எனும் நிகழ்வோ தனிப்பருவமாக எடுத்துப் பாடப்படவில்லை என்பது வியப்பிற்குரியது. குழந்தை நல்ல அறிவாற்றலுடன், நற்குணங்களுடன் வளர சத்தான உணவைத் தாயும் செவிலியரும் தேர்ந்தெடுத்து ஊட்டிடல் வேண்டும். தானே உண்ணவியலாத பருவமாதலால், உணவைக் குழந்தைக்கு ஊட்டிவிடவும் வேண்டும். உணவு உண்ணாது சில குழந்தைகள் மறுத்துவிடும். அப்போது நிலவைக் காட்டியும், காக்கை, குருவி, நாய் ஆகியனவற்றைக் காட்டியும், தாய் உணவினை ஊட்டுவாள். சிலபொழுதுகளில் நல்ல கதைகளைக் கூறியும் உணவூட்டிடுவாள்.

    பாடல்களைக் காணலாம்:

    முதல்பாடல்: ஏறு எனப்படும் விடையிலேறி வரும் சிவபிரான் அருமையாகச் சீராட்டிடும் எங்கள் ஏறு (சிங்கம்) போலும் மகவே! இதில் ஏறு எனும் சொல்லை விடை, சிங்கம் எனும் இரு பொருட்களில் பயன்படுத்தியுள்ள நயத்தைக் காணலாம். குகைக்குள் சிங்கமானது நினது நடையினைக்கண்டு நாணமுற்று வருந்திக் கிடக்கின்றது.

    கதிர்காமத்திலுள்ள அழகிய மாணிக்ககங்கை எனப்படும் வடவையாற்றின்கண் உள்ள துறைகளில் ஆங்காங்கே நீராடும் தொண்டர்களுக்கு கடைக்கண்ணால் பார்த்து அருள் செய்யும் விடாத பெருமழை போல்பவனே! இதில் சுவையானதொரு தத்துவம் தொக்கி நிற்கிறது; முருகப்பெருமானுக்கு அடியாராகி விட்டவர்களை அவன் எப்போதுமே விடாது பெய்யும் கொடைமழைபோன்று அருள்பாலித்தவண்ணம் இருப்பவன் என்பதே அது.

    இனிக்கும் தீம்பாகினில் தோய்த்தெடுத்த கரும்பினின்றும் பெறப்பட்ட கற்கண்டுக் கட்டியே!

    ஆயர்கள் வைத்துள்ள தயிரினைக் கள்ளத்தனத்தால் உண்ட திருமாலின் மருமகனே! பாலருந்துங்கால் நகத்தாற் கீறிய முலையின் இன்னமுதினைப் பருகும் கோமான் நீ! இன்று அக்கொங்கைகளுக்கு ஒப்பான பொற்கிண்ணத்தில் படைக்கப்பட்டுள்ளதும் உள்ளன்பு எனும் நெய்யினைப் பெய்தமையால் அது சிவமணம் கமழ்வதாயும் உள்ளதாகச் சமைத்த அமுதனைய சோற்றினை, நீ உண்ணவேண்டும். இங்கு இறைவனுக்குப் படைக்கப்படும் அமுது எதுவாயினும் உண்மை அன்பு எனும் நெய்யினைப் பெய்து படைத்தால் அது சிவமணம் கமழும் அமுதாகிவிடும் எனும் செய்தி தொக்கி நிற்கின்றது. ஆயர்களின் தயிரைக் கண்ணபிரான் களவாடி உண்டமையால் அவர்கள் பெரும்பேறு பெற்றனர் எனும் கருத்தையும் காணலாம்.

    பொய்மையற்ற நின்னடியாரின் உள்ளங்களைக் கவர்ந்து உண்பதேபோன்று நான்தரும் இச்சோற்றினையும் உண்டருள வேண்டும் எனத்தாய் வேண்டுவதாக அமைந்த பாடல்.

             ஏறூரு மவனினிது கோதாட்ட வருமெங்க
                       ளேறே!மு ழைக்குள்யாளி
                  …………………………………………..
             கிண்ணத்து நறுமணஞ் சிவமணம் போன்மன்பு
                       கெழுனெய்ய ளாய்ச்சமைத்த
             சோறமுது மாயர்தயிர் தொட்டுண்ட கள்வன்மகிழ்
                       சூழ்மருக! உண்டருள்கவே!
              சொற்றொழும் பாளரது ளங்கவர்ந் துண்டல்போற்
                       சோறமுது முண்டருள்கவே.2

    குழந்தையின் இனிய செயல்களும், அக்குழந்தை முருகப்பிரானாகியமையால் அவனுடைய தெய்வத்தன்மையும் விளங்கித்தோன்றுமாறு பாடப்பெற்ற அருமையான பாடல்கள் இவையாகும்.

    சிறுகுழந்தை உணவுண்ண அவ்வளவு எளிதாக இயைவதில்லை. அதற்காக வெவ்வேறு விதமான நயமான சொற்களைக்கூறித்தான் தாய் உணவூட்ட வேண்டும். அவ்வாறே அடுத்த பாடல் அமைந்துள்ளதனைக் காணலாம்.

    இவ்வுலகிலேயே உனக்கு அளிக்கப்படும் இவ்வுணவுதான் மிக்க உயர்வானது எனத்தாய் கூறுகிறாள். இது குமரப்பெருமானுக்கு மிக நயமாகப் பொருந்துகின்றது. ‘பாற்கடல் எனும் ஆழியைக் கடைந்து குடத்தில் அள்ளி எடுத்த அமுதமும் இதற்கு நிகரன்று குழந்தாய்! அந்தணர்கள் தாமியற்றும் வேள்விகளில் நெருப்பில் அவி எனச் சொரியும் எவையும் இதற்கு நிகரன்று.

    ‘திருத்தமான செந்தமிழின் உலகவழக்கு, செய்யுள் வழக்கு ஆகியனவும் இதற்கு இணையல்ல அப்பா! வள்ளியம்மை நின்னிடம் ஊடல்கொண்டபோதினில் செய்யும் தருக்கம் செறிந்த சொற்களே இதற்கு நிகராகும் என்போம்.

    ‘மேலும் சீர்காழியில் உமையம்மையின் ஞானப்பால் உண்டமையால் சிவஞானம் பெற்றுக் கூறிய பாடல்களும் (கலை) இதற்கு நிகராகும். கதிர்காமத்திற்கு வரும் நின் அன்பர்கள் பலரும் கனிந்து குழைந்து நின்னைத் துதிக்கும் சொற்களும் இதற்கிணையாகும்.

    ‘கூவும் சேவலைக் கொடியினிற்கொண்ட கோவே! இவ்வுணவைச் சிறிது உண்பாயாக’! என்று தாய்ப்பாசம் மீதூர, ‘உனது அருள்வடிவாகிய உடல் கொழுத்து நீ உயரமாக வளருவதற்காகவும் இதனைச் சிறிதே உண்பாயாக!’ என வேண்டுவதாக அமைந்த அழகிய பாடல்.

            ஆழி கடைந்து குடம்நிறைத்த
                       அமுது மிதற்கு நிகரல்ல
            அந்தண் வேள்வி அவிசொரியும்
                       அதுவு மிதற்கு நிகரல்ல
             …………………………………..
             காழி ஞானப் பால்குழைத்த
                       கலையு மிதற்கு நிகராகும்
             கதிர் காமத் தன்பர்பலர்
                       கனிவும் குழைத்த திதுவாகும்
             …………………………………
             குறித்த அருண்மெய் கொழுத்துயரக்
                       கோவே சிறிதே யுண்டருளே!3

    இதற்கும் மேல் நயமான சொற்களைக்கூறி தெய்வக் குழந்தையை உணவருந்த வேண்ட இயலுமோ?

    இயலும் என்பதனை அடுத்த இனிமையான பாடல் நமக்கு உணர்த்துகிறது!

    “ஆடியவாறே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களையும் செய்யும் ஐயன் உயிர்களுக்குத் தன்னையடையும் பக்குவத்தை இந்த ஐவகைத் தொழில்களால் உண்டுபண்ணுகிறான். அதுபோன்றும் ஆரிய முனிவராகிய துர்வாச முனிவரின் வயிறு நிறையுமாறு கண்ணன் உண்டது போலும் நீயுண்ண வேண்டும்.

    இதிலொரு அழகான தொன்மத்தை நயமாக இணைத்துள்ளார் புலவர். வனவாசத்தில் பஞ்சபாண்டவர்கள் இருந்தபோது சினத்திற்குப் பெயர்பெற்ற துர்வாச முனிவர் உரியபொழுது கழிந்தபின் தமது பெரும் குழுவினருடன் விருந்தினராகச் சென்றார். திரௌபதியிடமிருந்த அட்சயபாத்திரத்தில், அவள் எல்லாருக்குமளித்துத் தானும் உண்டுமுடித்தபின் அன்றைய தினத்திற்கு வேறு உணவைப் பெற இயலாது. அவர் உணவில்லாமையால் சினம்கொண்டு பாண்டவர்களை வைதிடாவண்ணம் கண்ணபிரான் திரௌபதிக்கு அருள்செய்தான். எவ்வாறெனில் அவள் கழுவிக் கவிழ்த்திய சோற்றுப்பானையில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சோற்றுப்பருக்கையை அவன் உண்டமையால் நீராடச் சென்ற முனிவரும் அவர் குழுவினரும் வயிறுநிரம்பப் பெற்றோராகி, வேறு உணவினை ஏற்காமல், பாண்டவரையும் திரௌபதியையும் வாழ்த்திச் சென்றார் என்பது புராணம். அதுவே இங்கு கூறப்பட்டது. முருகன் உண்பதனால் உலகமே உண்ணும் எனும் பொருளில் இக்கருத்து இங்கே கூறப்பட்டது.

    இளம் கன்னிப்பெண்கள் காடுகளில் விளையாடுகின்றனர். அவர்கள் விளையாடும்போதெழும் ஓசை காடுகளில் ஒலிக்கின்றது. அவர்கள் விளையாட்டாகக் கூவி அதன் எதிரொலியை மலைகள் முழங்கக் கேட்டு மகிழ்கின்றனர். முருகன் மிகுதியான அருள் செய்வதும் அதுபோன்றதே.

    மானிடரைப் படைத்தும், நின்னடியாராகிய அவர்கள் உனது பேரருளைப் போற்றிக் கொண்டாடிடவும், பயிர்களுக்கு மேகங்கள் பொழியும் மழைபோன்றும் இருப்பவனே!

    வறுமையால் வாடும் தமிழ்ப்புலவர்கள் வயிறு நிறையுமாறு நீ ஒருவாய்ச்சோறாவது உண்பாயாக! நீயுண்ணும் இச்சோறு வள்ளியம்மை தரும் தினைமாவிற்கு இணையானது எனக்கொண்டு அதனை நீ உண்பாயாக!

                       ஆடுமி ருட்டிர ளயரப் பெரியோ
                                னாடியி ளைப்பதுபோ
                        லாரிய முனிவர ருந்தக்கண்ணன
                                ருந்திய முறையேபோற்
                       ……………………………………
                       வாடுத மிழ்ப்புல வோர்வயி றார
                                வாய்ச்சோ றார்குகவே
                        வள்ளித ருந்தேந் தினைமா வெனவே
                                வாய்ச்சோ றார்குகவே.4

    இவ்வாறெல்லாம் பலவித நயமான கருத்துக்களைக்கூறி குழந்தை முருகனை உணவருந்த வேண்டும் பகுதி சுவைமிகுந்ததாகும்.

    பார்வை நூல்கள்:

    1.பிங்கல நிகண்டு
    2, 3, 4. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

         (தொடரும்)

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்-14

    குழவி மருங்கினும் கிழவதாகும்-14

    மீனாட்சி பாலகணேஷ்

    (மொழி பயிலல்)

    பிள்ளைப்பருவத்தின் ஆடல்களும் செயல்களும் நிகழ்வுகளும் இலக்கணத்தால் வரையறுக்கப்பட்ட பத்துப்பருவங்களுக்கு மட்டுமே உட்பட்டனவன்று. எண்ணற்ற விளையாட்டுகளும், தாய்தந்தையரும், குடும்பத்தினரும் குழந்தையின் நலன்கருதிச் செய்யும் கண்ணேறு கழித்தல், காது குத்துதல் ஆகிய சில சடங்குகளும் இன்னபிறவும் குழந்தைப் பருவத்திற்கு மட்டுமே உரியனவாம். இவற்றுள் பல அரிதாகப் பாடப்பட்டும் பல பாடப்படாமலேயும் உள்ளன.

    இப்பருவங்களுள் பல ஆண்பால், பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் தனித்தனியாகப் பாடப்பட்டுள்ளன. சிற்றில் பருவம் ஒன்றே இருபாலருக்கும் பொதுவாக அமைந்துள்ளது. ஆண்மக்களின் வளர்ச்சிப் பருவத்தில் நிகழும் சில நிகழ்ச்சிகளும் சடங்குகளும் பிங்கலந்தை நிகண்டுவில் இலக்கணமாக வரையறுக்கப்பட்டுள்ளதனைக் காணலாம்.

           ‘ஆறாந் திங்களிற் கூறுதற் கற்றலோ
             டேழாந் திங்களி னின்னமு தூட்டலும்
             ………………………………………….
             பத்திற் பூணணி பன்னீ ராண்டினிற்
             கச்சொடு சுரிகை காமுறப் புனைதலென்
             றின்னிவை1 ……………………….,‘ என்பன பாடல்வரிகள்.

    இருப்பினும் பிங்கல நிகண்டு குறிப்பிடும் இப்பருவங்கள் கதிர்காமப்பிள்ளைத்தமிழ் எனும் ஒரேயொரு பிள்ளைத்தமிழ் நூலில் மட்டுமே பாடப்பட்டுள்ளது வியப்பிற்குரியதாகும்.

    சிவங். கருணாலய பாண்டியப்புலவர் இயற்றிய இந்நூல் இலங்கையிலுள்ள கதிர்காமம் எனும் பதியில் உறையும் முருகப்பிரானைப் பற்றியதாம். பதினான்கு பருவங்களைக் கொண்டமைந்த இந்நூலின் பருவங்கள் ஒவ்வொன்றும் மூன்று பாடல்களைக் கொண்டே அமைந்தவையாகும் என்பதும் இதன் இன்னொரு சிறப்பாகும். காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, நிலாவழைத்தல், சிறுபறை முழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேர் உருட்டல், ஆகிய பத்துப்பருவங்களுடன் மொழிபயிலல், உணவூட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் ஆகிய நான்கு பருவங்களும் சேர்த்து மொத்தம் பதினான்கு பருவங்களால் கவினுறப் பாடப்பட்டுள்ளது.

    மொழிபயிலல் பருவமானது இப்பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவத்திற்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ளது. மகவு, தன் தாய், சுற்றியுள்ளோர் ஆகியோர் பேசுவதனைக் கண்டு தானும் தனது தாய்மொழியின் வழக்குகளை அறிந்து பேசக் கற்றுக்கொள்ளுதல் எனப் பொருள் கொள்ளலாம். குழந்தையின் வளர்ச்சியில் இதுவும் மிக இன்றியமையாததொரு பருவமாகும். மொழியினைத் தன் தாயிடமிருந்தே அவள் தனக்குத் தாலாட்டுப் பாடும்போது கேட்டுக் குழந்தை கற்றறிகிறது. உறவுமுறைகள், உணர்வுகள், உணவு பற்றிய சொற்கள், காகம், நாய், பூனை முதலான விளையாட்டுத் தோழர்கள் ஆகியனவற்றைத் தாய் இப்பருவத்தில் குழந்தைக்குச் சிறுசொற்களாலும் சொற்றொடர்களாலும் அறிமுகப்படுத்துகிறாள்.

    இது ஆண், பெண் ஆகிய இருபருவத்துக் குழந்தைகளுக்கும் பொருந்துமாயினும் ஆண்பால் பிள்ளைப்பருவமாக ஒரேயொரு பிள்ளைத்தமிழில் மட்டுமே பாடப்பட்டுள்ளது. ‘ஆறாம் திங்களில் கூறுதற்கற்றல்’ என பிங்கல நிகண்டு இதனைக் குறிப்பிடுகிறது. இப்பருவத்திற்கான பாடல்கள் மூன்றே மூன்று ஆனவையாதலால் அனைத்தின்  சிறப்பையுமே நோக்கலாம்.

    முதற்பாடலின் மூலம் தமிழின் சிறப்பையும் அதைப் பயிலும் குழந்தை முருகனையும் புலவர் ஏத்துகின்றார். அங்கயற்கண்ணியம்மையின் மகனாகித் தமிழைப் பயிலும் மகனே! எமது குலத்தோரின் குடியினை ஆளவந்து மகவாய் உதித்து விளையாடல்களைப் புரிந்த இன்பவெள்ளமே!

    துரியாவத்தைக்கு மேலான துரியாதீதாவத்தை, கேவலாவத்தை, சகலாவத்தை, சுத்தாவத்தை ஆகியவை தொடராது பேசாமல் வாளவிருந்தவன் நீ ஆவாய்! நீ வெண்குன்றமெனப்படும் கயிலாயத்தில் பகல்பொழுது இரவுப்பொழுதென விளங்கும் பச்சை நிறங்கொண்ட பார்வதியம்மை இடப்புறமிருக்க, வெண்மைநிறங்கொண்ட சிவபெருமானும் வலப்புறமிருக்க, இவர்களுக்கிடையே சிவந்த செக்கர்வானம்போல விளங்கும் முருகப்பிரானாகிய குழவியே! (இவ்வரிகள் சோமாஸ்கந்த வடிவினை நமக்கு நினைவுபடுத்தி மகிழ்விக்கின்றன).

    முருகப்பெருமானே! அன்று நீ அன்னை, அத்தன் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு பேசும் ‘அம்மா, அப்பா, எனும் இனிய சொற்களை அடியேம் யாம் கேட்க ஆவலாக உள்ளோம்,’ எனும் கருத்திலமைந்த பாடலிதுவாகும். அம்மையே அப்பா எனும் சொற்களே அருமறையாகும் என உலகிற்கு உணர்த்தியவன் முருகப்பெருமான் என உட்பொருளாகக் கொள்ளலாம்.

      இகலுமிணை அங்கயற் கண்ணிமக வாய்த்தமிழி
             யன்றுபயி லஞ்ஞைசெம்மால்!
        எம்மனோர் குடியாள வந்துமக வாய்க்கூத்தி
             யற்றின்ப வெள்ளமே!
        …………………………………………………………………..
      பகலிரவு மாறப்ப சுந்தபச் சைக்குமறு
             பாலின்வெள் ளைக்குநடுவட்
        படர்செக்கர் வானன்ன செம்மையே யன்றவர்ப்
             பகர்மொழிப கர்ந்தவாற்றை
        ……………………………………………………………………………….
         வம்ம! வப்பாவென்னு மருமறைப் பாயிரம
             கத்தலர வாய்மலர்கவே2!

    மொழிபயிலல் பருவத்தின் இரண்டாவது பாடல்:

    ‘குறுகிய மதக்கொள்கையுடையோர் அறம் என எமக்கு உரைத்த பொருந்தாச் சொற்களைக் கேட்டதனாலும், ஈயாதார் இரப்போரைக் கடிந்துரைத்த கொடுஞ்சொற்களைக் கேட்டும், சிறுமை மிகுந்த குடியில் பிறந்த செல்வர் வறிய புலவர்களைச் செருக்கினால் இழித்துப் பேசக்கேட்டதனாலும் நல்ல அமிழ்தம் போலும் தமிழில் கேடுவிளைவிக்கும் வேறுசொற்களைச் சேர்த்துக் கூறுவதனைப் பலகாறும் கேட்டதனாலும் சீழ்வடியுமாறு உண்டான செவிப்புண் அழிந்து மறையுமாறு, கதிரமலையழகனே! அமிழ்தம் பொழிவாயாக! ‘அம்மா! அப்பா! எனும் சொல்லமிழ்தம் பொழிகவே!’ எனத் தாய்தந்தையர் வேண்டும் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.

                ‘குறிய மதத்த ரறமெம்பாற்
                       கூறக் கேட்ட செவிப்புண்ணும்
                  ………………. கதிரமலை
                       யழகே! யமிழ்தம் பொழிகவே!
                 யம்மா! வப்பா! வென்னுஞ்சொல்
                       லமிழ்தம் பொழிக பொழிகவே3!’

    என்பன பாடல்வரிகள்.

    அம்மா அப்பா எனத் தாய்தந்தையரை அழைக்க அன்னை பயிற்றுவிக்கும் பருவம் இது எனவும் காண்கிறோம். கருத்திலும் கற்பனையிலும் வேறுபட்டு விளங்கும் இப்பாடல் தமிழின் பெருமையையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லியல்புகளையும் இணைத்தும் கூறுகிறது.

    மூன்றாவதாகக் காணும் இப்பருவத்தின் கடைசிப்பாடலானது தமிழின் உயர்வைப் போற்றுகிறது. அதனை முருகன் பேசும் மழலையினோடு இணைத்தும் பாடுகின்றதனைக் கண்டு மகிழலாம். தாமரைமலரிலமர்ந்த பிரமன் மறைகளை ஓதவும், கல்லால மரத்தின் நிழலிலமர்ந்த தட்சிணாமூர்த்தியாகிய சிவபிரான் (தெற்குநோக்கியமர்ந்ததனால் இவனைத் தென்னன் என்கிறார்) உண்மைப்பொருளை சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கும் ஓதுகின்றான். இவர்கள் இவ்வாறு ஓதிட இவர்களுக்கு முன்பு அதனை உரைத்த பேராசிரியனே! (பிரமனுக்கும், தந்தை சிவபிரானுக்கும் மறைப்பொருளை உணர்த்தியவன் முருகன் எனும் தொன்மத்தை இதில் காணலாம்)

    புலர்காலைப்பொழுதினில் தேவர்கள் (தேவர்கள் கண்ணிமைக்காதவர்களாதலால் இமையோர் என்று குறிப்பிட்டார்) தொழுதிடும் கதிர்காமனே! நீ சொல்லிப்பழக வேண்டிய சொற்களை நாங்கள் உனக்குச் சொல்லிக்கொடுக்கவில்லை; (காலையில் துயிலெழுந்து படித்தால், கற்றால், அது உள்ளத்தில் பசுமரத்தாணி போற்பதியுமென்பது ஆன்றோர் வாக்காகும் அதனையே இங்கு கூறியுள்ளார் புலவனார்) நீ கூறி நாங்கள் கேட்டு இன்புற வேண்டியவற்றைக் கேட்கக் காத்துள்ளோம், ஊமைப்பிள்ளையே, என முருகனை விளிக்கிறார். இதுவும் ஒரு தொன்மத்தின்பாற்பட்டதே! (உப்பூரிகுடிகிழான் மகன் உருத்திரசன்மனெனும் ஊமைப்பிள்ளையாகி முருகன் வந்ததனைக் குறிப்பிடுகிறார்).

    உலகினில் மற்ற உயிர்கள் மெய்ப்புளகம் அடையுமாறு உரலினிடைக் கட்டப்பட்டவனாகிய கண்ணன் ஊதும் குழலிசையும் யாழிசையும் கசந்துபோகவும், உலர்ந்த மரங்களும் உயிருள்ளவை போன்று குழைந்திடவும் நீ மொழி பேசிட வேண்டும். நாவரசரான அப்பர் பெருமானை நீ ‘அப்பா’ என (ஆளுடைப் பிள்ளையாராகி) அழைத்ததெவ்வாறு? தம்மை அணுகிய பேயம்மையாகிய காரைக்காலம்மையாரை உன் தந்தை சிவபிரான் ‘அம்மையே’ என அழைத்தது எங்ஙனம் என விளக்கியருளுவாயாக என வேண்டுகிறார்.

            மலரவ னான்மறை யோதக் கல்லான்
                       மரநிழ லமர்தென்னன்
                 வாய்மையை நால்வர்க் கோத……
             ……………………………………………………………….
             உலகினி லேனைய வுயிர்மெய் யுயிர்ப்ப
                       உரலிடை யாப்புண்டோ
                 னூதுங் குழலிசை யாழிசை கைப்ப
                       உலர்மர முங்குழைய
             வலரன செந்நா வரசைய ழைத்தா
                       யஃதெங் கனமருளே4
    ………………………………………………………………..

    மொழிபயிலக் கற்ற சிறுமுருகன் ‘அம்மா, அப்பா’ எனப் பெற்றோரை அழைப்பதனைப் பலவிதமான உவமைகளால் மூன்று பாடல்களிலும் விளக்கியுள்ள நயம் போற்றத்தக்கது. மொழியில் அமையும் உரையாடல்களுக்குத் தொடர்புடைய கருத்துக்களையும் தொன்மங்களையும் கூறியுள்ளமையும் அழகாக அமைந்து சிந்தையைக் கொள்ளை கொள்கின்றது.
                                                                                                                                                                                                                      (வளரும்)

     பார்வை நூல்கள்:

    1. பிங்கல நிகண்டு
    2, 3, 4. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2

      மீனாட்சி பாலகணேஷ்
    
    

    (சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்)

    பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியத்தின் பல பருவப்பாடல்களும் பலவிதமான சுவைகளைத் தம்முள் கொண்டு பொலிவன. தமிழ் நயம், எதுகை, மோனை அமைப்பு, வண்ணம், தொன்மங்கள், தலபுராணக் கதைகள் எனப் பலவிதமான நயங்களையும் நாம் இவற்றில் கண்டு இன்புறலாம்.

    சிறுதேரை உருட்டி விளையாடும் முருகனைப் பற்றி எண்ணுங்கால், ஒரு புலவரின் கற்பனை தேரில் பல செயல்களைச் செய்தவர்களைப் பற்றி விரிகிறது. தேரினைப் பற்றியே கருத்துக்கள் குவிகின்றன.

    ஒரு தேரின் அச்சு முறித்தவன் விநாயகப் பெருமான். முப்புரங்களையும் அழிக்கும் போருக்குச் சிவபிரான் புறப்பட்டகாலை முதலில் விக்கினங்களை அழிக்கும் விநாயகரை வணங்கிச் செல்லாததனால் அவர் சினம்கொண்டு சிவபிரானுடைய தேரின் அச்சினை முறியுமாறு செய்தார். பின்பு விநாயகப்பெருமானை வணங்கினார் சிவபிரான். தேரும் சரியானது; தேரின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கடவுள் அமர்ந்து திரிபுரசங்காரத்திற்குத் தம் பங்கை அளிக்க, அந்தத் தேரினைச் செலுத்தும் சாரதியாக பிரம்மன் அமைந்தான். சிவபிரானோ அத்தேரில் நின்று நகைத்தான்; நகைப்பினாலேயே புரங்களை எரித்தழித்தான்.

     இது இவ்வண்ணம் இருக்க, திருமால் என்ன செய்தான் எனக் காணலாமா? அவன் கிருஷ்ணனாக அவதாரம் செய்த காலத்து, பாரதப்போரில் அருச்சுனனின் தேருக்குச் சாரதியாய் அமைந்தான். பிரம்மாஸ்திரம் அருச்சுனனை அழிக்க வந்தக்கால், அதனின்று அவனைத் தப்புவிக்க, தேரினைத் தனது காலால் ஒரு அழுத்து அழுத்தினான். அருச்சுனன் தலையைக் குறிவைத்து விடப்பட்ட பிரம்மாஸ்திரம் பயனின்றிப் போயிற்று. இது தேரில் திருமால் செய்த செயல்.

    இவ்வாறெல்லாம் செயல்கள் செய்தோரான விநாயகப்பெருமான், சிவபிரான், திருமால் ஆகியோர் போற்றுமாறு சித்தர்கிரி முருகா, நீ தேரினை உருட்டுவாய்! என வேண்டும் பாடலிதுவாம்!

                                 தேரின் அச்சு முறித்தானும் தேரைக் கடவ அமைந்தானும்

                                 தேரில் நின்று நகைத்தானும் தேரை அழுத்திக் காத்தானும்

                                  ……………………………………………………………….

                                  …………………. சித்தர்கிரிக் கந்தா சிறுதேர் உருட்டுகவே1

    சித்தர்கிரி முருகன் பிள்ளைத்தமிழில் இந்த இனிய பாடலைக் காண்கிறோம்.

    ***

    வேறொரு அடியாருக்கு இந்தக் கடல்சூழ் உலகமே முருகன் உருட்டி விளையாடும் தேராகக் காட்சியளிக்கின்றது.

    ‘பூவுலகினைச் சூழ்ந்துள்ள கடல்களையே தேரின் சக்கரங்களாக அமைத்தும், புவியினை உட்காரும் இடமாகிய அடித்தட்டாகக் கொண்டும், பனிபடர்ந்த இமயமலை முதலான மலைகளைத் தேர்க்கால்களாக்கியும், ஏழு மேலுலகங்களையும் மேல்தட்டுகள் என அமைத்து அத்தேரினை அழகுசெய்யும் கொடுங்கைகளாக எட்டுத் திசைகளையும் வைத்தும், மேலே மூடுதுணி எனப்படும் அகலமான விதானமாக சுவர்க்கத்தை வைத்தும், தேரின் உச்சிமேல் சிகரமாக தொன்மறைகளை வைத்தும் பிரமனை அத்தேரின் பாகனாகக் கொண்டும், உலகு எனும் ஒரு தேரினைச் செய்து விளையாடும் செல்வனே, நீ உனது சிறுதேரினையும் உருட்டியருளுக!’ என முருகனை எல்லாம் வல்ல இறையாகக் கண்டு குழந்தையாகவும் கொண்டு அமைக்கப்பட்ட அழகிய பாடலிதுவாகும்.

                                             தாரணியைச் சூழ்ந்தலை சாகரங்கள் தம்மையே

                                                       சக்கரங்க ளெனவ மைத்துத்

                                             தடமாரும் புவிதனைத் தங்குமிட மாமடித்

                                                       தட்டெனவே கொண்டு …………….

                                                       ……………………………………………………

                                              சீரணியுந் தேரெனச் செய்துவிளை யாடிடுஞ்

                                                        செல்வதே ருருட்டி யருளே

                                                …………………………………………………2

    ***

    முருகன் உருட்டும் சிறுதேர் உருள உருள, வேறு என்னவெல்லாம் உருளுகின்றது என அடியாரின் அன்பு உள்ளத்தில் எண்ணங்களும் உருண்டு விரிகின்றது. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சென்னை மாநகர்க் கந்தசுவாமிபேரில் பாடிய பிள்ளைக்கவி இதுவாகும்.

    மனவலிமை படைத்தவர்களின் உள்ளத்தில் ஒழுக்கம் நிறைந்துள்ளது (உருளுகிறது). அவர்கள் வாக்கில்  ‘சரவணபவ’  எனும் இருமூன்றெழுத்தாகிய ஆறெழுத்துச் சொல் புரள்கிறது (உருளுகிறது). கரத்தில் இறைவனின் பெயரை உச்சரிக்கும்தோறும் படிகமணிமாலைகள் உருளுகின்றன. வானில் நிலவானது உருண்டு வலம் வருகின்றது.

    பொல்லா அரக்கரின் உடலங்கள் போர்க்களத்தில் மடிந்து உருளுகின்றன; புலவர்களின் வறுமைநோய் தீருகின்றது- (புறத்து உருளுகிறது); தேவர்களின் துயரங்கள் அனைத்தும் அரக்கர்களின் உடல்கள் இறந்து உருளும்போது தீர்ந்துவிடுகின்றன (புரத்து உருள).

    கல்வியறிவற்ற கயவர்களின் கொடும் கண்ணீர் அருவி தாம் படும் அல்லல்களால் ஆற்றாமையில் திரண்டு வழிகின்றது (உருள்கிறது). விருப்பத்துடன் திருநீற்றினை அணிந்த உன் அடியார்களின் களிக்கும் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் முத்துக்கள்போன்று உருள்கின்றது.

    சென்னைக் கந்தகோட்டத் தலைவனே! நீயும் உனது சிறுதேரினை உருட்டுக என வேண்டும் பாடல்.

                                                  வல்லா ருளத்தில் குறியுருள

                                                            வாக்கில் இருமூன் றெழுத்துருள

                                                  மலர்மென் கரத்தில் மணியுருள

                                                            ………………………………………..

                                                  கல்லா மனத்துக் கயவர்கொடும்

                                                            கண்ணீர் அருவி கரைந்துருளக்

                                                  ……………………………….

                                                            ……… பொழிற்சென் னையிற்றலைவா

                                                  சிறுதே ருருட்டி அருள்வாயே

                                                             ………………………………………3

    ‘உருள’ எனும் சொல்லினை ஒவ்வொரு வரியின் ஈற்றடியாகவும் வெவ்வேறு தொடர்புகளில் அமைத்துப் பாடப்பட்ட அருமையான சுவைமிகு பாடலிது.

    (சென்னை மாநகர்க் கந்தசுவாமிபேரில் பிள்ளைக்கவி- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

                                                                                                       ***

    திருமால் மீதான சில பிள்ளைத்தமிழ் நூல்களின் நயத்தையும் காணலாமா?

    பத்திராசல இராமச்சந்திரன் பிள்ளைத்தமிழின் சிறுதேர்ப்பருவப் பாடலொன்று சந்தநயம் செறிந்தும் பொருள்நயம் செழித்தும் அழகான தொன்மங்களை விளக்கியும் அமைந்துள்ளது கருத்தினைக் கவரும். ‘உருட்டிய’ எனும் சொல்லைப் பல கருத்துக்களில் அமைத்துக் கொண்டு கவிதையைச் சுவையாக்கித் தந்துள்ளார் புலவனார்.

    ‘ஓசைமிகுந்த அலைகளைக்கொண்ட கடல் எனும் சேலையை உடுத்திக்கொண்டிருப்பவள் நிலமடந்தை; அவளுடைய திலகமணிந்த முகங்களாக விளங்கும் எட்டுத்திசைகளிலும் பாதாளத்திலும் மேகங்கள் உலவுகின்ற மேலுலகமாகிய சுவர்க்கத்தின்மீதும் எனும் பத்து திசைகளிலும் வேகமாகத் தனது தேரினை ஓட்டியதால் தசரதன் எனப் பெயர் படைத்த மன்னனின் அருமை மனைவி கைகேயி ஆவாள். அவன் ஒரு போரில் தேர் செலுத்தியபோது அதன் அச்சு முறிந்ததனால், அவள் வளையல்களணிந்த தனது கையையே தேரின் இசை அச்சில் பொருத்தி அதனை சரியாக ஓடச் செய்தாள். அவளுடைய புதல்வனான இராமனே! பத்திரகிரி இறைவனே! சிறுதேர் உருட்டுக,’ என வேண்டுவதாக அமையும் பாடல். உருட்டிய எனும் சொல்லைப் பலவிதங்களில் கையாண்டுள்ளது சுவைபட அமைந்துள்ளது.

                                            நீர் உருட்டிய தெழிப்பார் முரிதரங்கத்தின்

                                                      நிரைகடல் கலைஉடுத்த

                                            நிலமகள் மணித்திலக முகமான எண்திசையும்

                                                       …………………………………

                                            கார் உருட்டிய ஒலிப்பொன் உலக மீதினும்

                                                       கடிது சென்றிடு திறத்தால்

                                            …………………………………………………

                                                      ஏர் உருட்டிய கேகயன்…………………………..

                                            இன்பமெய்ப் புதல்வி ஆகி

                                                       இசை அச்சு……………………………….

                                           தேர் உருட்டினள் புதல்வ! பத்திரகிரிக்கு இறைவ!

                                                       சிறுதேர் உருட்டியருளே!

                                            ………………………………………………4

    ***

    வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழின் பாடலொன்று, தேருருட்டும் சிறுகுட்டனான வைகுந்தநாதன் இராமனின் கதையையே அருமையாக உள்ளடக்கிக் கொண்டு திகழ்கிறது. இதிலுள்ள பத்துப் பாடல்களுமே ஒவ்வொரு இராமாயண நிகழ்வையும் சுவைபட உட்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.

    விண்ணிலுறையும் தேவர்கள், மறையோராகிய முனிவர்கள், தவம்செய்வோர் ஆகிய அனைவரையும் காக்க எண்ணங்கொண்டு  மனுவின் குலத்தில் அவதரித்தவன் இராமபிரான். இதனால் இராமாவதாரம் கூறப்பட்டது; அவன் குரங்குகளின் படையைக்கொண்டு ஒரு அணையைக்கட்டி உவரிக்கடலைக் கடந்து அப்புறம் சென்று காவல்மிகுந்த மதில்களைக்கொண்ட இலங்கைநகரில் உறைகின்ற அரக்கர்களைக் கொன்றான். பின்பு மிதிலைநகரின் மடமானாகிய சீதையுடன் புட்பக விமானத்தில் ஏறி தனக்கு உரிமையுள்ள நாட்டை (அயோத்தி) வந்தடைந்தான்; பின்பு அரசுரிமையை ஏற்றுக்கொண்டான் என்று முழுமையான இராமாயண காதையும் இதில் இரத்தினச் சுருக்கமாகக் கூறப்பட்டது.

    அவன், திருமகளுக்கும் புவிமகளுக்கும் கணவனகிய திருமாலே, சிறுதேரை உருட்டுயருளுக எனும் பாடலிது.

                                                 மாகத் தமரும் புத்தெளிர்

                                                             மறையோர் தவத்தர் தமைக்காத்து

                                                  …………………………………….

                                                             மனுவின் குலத்தி லவதரித்தே

                                                  யூகப் படைகொண் டணைதிருத்தி

                                                             யுவரிக் கடலப் புறமெய்தி

                                                ……………………………………………

                                                             வேக முடன்புட் பகமெய்து  

                                                  மிதிலை மடமான் தன்னுடனே

                                                             மேவிப் பதிவந் தரசுரிமை

                                                  விருப்புற் றளிக்கும் காகுத்தன்

                                                             ………………………………..

                                                 கொழுநன் தடந்தே ருருட்டுகவே5

    வித்தாரகவிஞர்களாகிய புலவர்பெருமக்கள் பலவித அழகிய உத்திகளைக் கொண்டு பாடல்களைப் படைத்துள்ள நயம் சிந்தைக்கு விருந்தாகிறது.

                                                                                               ***

    திருமாலின் அடியார்கள் இராமாயணக் காதைகளின் சிறப்பான கதைகளைத் தாமியற்றியுள்ள பிள்ளைத்தமிழ் நூல்களில் அழகுபடப் புகுத்தியுள்ளமை நயக்கத்தக்கதாகும்.

    ‘எனக்கு மன்னன் தசரதன் இருவரங்களைத் தந்துள்ளான்; குறையாத வளம்பொருந்திய கோசலநாட்டினை ஒருகோலோச்சி பரதனே நாடாளுவன் என்பது ஒன்று; இராமனாகிய நீ சென்று காடாளச்செல்லவேண்டும் என்பது மற்றொன்றாகும்,’ எனச் சிற்றன்னையாகிய கைகேயி கூறியதன்படி, மலர்களைச் சூடிய கூந்தலாள் சானகியுடனும் கூடப்பிறந்த இளவலாகிய இலக்குவனுடனும் கொதிக்கும் பரல்கற்களையுடைய கொடும் கானகத்தை அடைந்தபோதும் செந்தாமரைபோல் மலர்ந்த திருமுகம் படைத்த செல்வனே உனது சிறுதேரினை உருட்டுக!

                                               தந்தா னெனக்கு வரமிரண்டும்

                                                          தலைநாளுரைத்த சொற்படிக்குன்

                                              தகப்பன் புரன் முறை தருமந்

                                                          தழைப்பஒரு கோலோச்சியெங்கும்

                                              நந்தா வளமைப் பரதனிந்

                                                          நாடாளுவன் நீகாடாள

                                              நடவென்று ரைக்க சிற்றவைசொல்

                                                         ……………………………………………..

                                              கொந்தார் குழவி சனகியொடுங்

                                                        கூடப்பிறந்த இளவலொடுங்

                                                ………………………………………………………….

                                             செந்தா மரைப்போற் றிருமுகத்துச்

                                                        செல்வா …………………………………………

                                             தென் பேரையில் நங்குலநாதன்

                                                        ……………………………… தேருருட்டுகவே6.

    இந்நூலாசிரியர் கம்பனின் இராமகாதையால் கவரப்பட்டவர் என உய்த்தறியலாம். ஏனெனில் இராமனின் திருமுகம், கைகேயியின் இச்சொற்களைக் கேட்டும் அன்றலர்ந்த தாமரையினை ஒத்து மலர்ந்தவண்ணமே இருந்தது என்பது கம்பனின் கற்பனையே! (ஸ்ரீ குழைக்காதர் பிள்ளைத்தமிழ்)

                                                 இப்பொழுது எம்மனோரால்

                                                        …………………………..

                                                 செப்பரும் குணத்து இராமன்

                                                        திருமுகச் செவ்வி நோக்கில்

                                                         ………………………………

                                                 அப்பொழுது அலர்ந்த செந்தா

                                                        மரையினை வென்றதம்மா7!

    ***

    கவி காளருத்திரர் இயற்றியுள்ள அழகர் பிள்ளைத்தமிழ் இன்னொரு இராமாயண நிகழ்வைக் கண்முன் விரிக்கின்றது.

    இராம இராவண யுத்தத்தில் இந்திரன் தனது தேரினையும் அத்தேரை திறம்படச்செலுத்தும் தேரோட்டியான மாதலியையும் இராமனுக்குத் தேரோட்ட அனுப்பி வைக்கிறான். அத்தேர் விரைந்து போர்க்களத்திடை சென்றபோது:

    கடலின் அலைகள் மிகுதியாகப் பொங்கி இருகரைகளிலும் நீரை வீசின; கடலிலுள்ள சுறாமீன்கள் கதறலாயின; இராமனின் அம்புகளின் விசையினால் உண்டான தீயில் புனல் வறண்டு வற்றிப்போனது. நீண்ட கடலில் ஆழித்தேர் நெருப்பினைப்போல் புகுந்து அழிவை உண்டுபண்ணியது; இராமனின் வெற்றியினால், இத்துணை நாட்களாக அணுகவும் அஞ்சியிருந்த இலங்கைநகரினுள் ஆதவனின் தேர் புகுந்து சென்றது; கொலை அரக்கப்படைகளின் உடல்கள் வெம்மைபொருந்திய மலைகளாகக் கிடக்க, அவ்வுடல்களிலிருந்து வெளிப்போந்த உயிர்கள் அழகான பொற்றேர்களில் உயர எழும்பின; சிவந்த குங்குமக் குழம்பினை மார்பிலணிந்த தேவமாதர்கள் மகிழ்ச்சியால் புளகம் அடைந்தனர்; இராமனின் வெற்றியால் எங்கும் அனைவரும் விழா எடுத்துக் களித்தனர்; மாரவேள் ஆகிய மன்மதன் தென்றலெனும் தேரில் ஊர்ந்து வந்தான்.

    இவையனைத்தும் தனது வெற்றி பொருந்திய வில்லைக்கொண்ட இராமன், குதிரைகளைக்கொண்ட மணித்தேரினை மாதலி நடாத்திட, இராவணனுடன் போர்புரிந்து வெற்றிகண்டபோது நிகழ்ந்தன எனப் புலவரின் கற்பனையும் வருணனைகளுமாகும்.

                                    அலையெடுத் திருகரை நெரித்துச் சுறாக்கதற

                                                வறைபுனல் வறண்டுநெட்டை

                                    ஆழியிற் கானலந் தேர்புக விலங்கைக்கு

                                                ளாதவன் றேர்கடாவக்

                                            …………………………………………………………

                                     ………………………………. வா னவமாதர்

                                                 குங்குமச் சேதகத்து

                                     மலையெடுக் கும்புளகம் விளையவா வெங்கணும்

                                                             ……………………………………..

                                     மாரவே டென்றலந் தேரூர மாதலி

                                                மணித்தேர் நடாத்திவெற்றிச்

                                     சிலையெடுக் குங்கொண்டல் பரிமா தொடக்குபொற்

                                                சிறுதே ருருட்டியருளே

                                     சிலைவிசயன் விடுபெருந் தேர்கடவு மழகனே

                                                சிறுதே ருருட்டியருளே8.

    இவ்வாறு குதிரைகள் பொருத்திய சிறுதேரைச் செலுத்தியருளுக. அருச்சுனனுக்குத் தேர் செலுத்திய அழகனே! உனது சிறுதேரினை உருட்டி அருளுக என வேண்டுகிறார்.

    இவை கம்பனின் இராமகாதையின் யுத்தகாண்டத்து நிகழ்வுகளைத் தம்முள் அடக்கிக்கொண்டு பொலிகின்றன என்றால் மிகையாகாது.

    இவ்வாறு பற்பல பிள்ளைத்தமிழ் நூல்களிலும் பலபாடல்கள்; பல நயங்கள்; பல அழகுகள்; படித்துமகிழவும் பற்பல கற்பனைகள்.

    இதுகாறும் ஆண்பால் பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் வழக்கமாக அமையும் பத்துப்பருவங்களின் நயங்களைக் கண்டு மகிழ்ந்தோம். இனி வரும் அடுத்தடுத்த பாகங்களில் பிள்ளைத்தமிழின் இலக்கணத்திற்குட்பட்டு அரிதாகப் பாடப்பட்ட பருவங்கள் பற்றிய செய்திகளைக் கண்டு மகிழலாம்.

                                                                                                                                                                           (வளரும்)

     

    பார்வை நூல்கள்:

    1. கம்பபாதசேகரன்- சித்தர்கிரி முருகன் பிள்ளைத்தமிழ்
    2. தி. சு. ஆறுமுகதாசன் – குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்
    3. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்- சென்னைமாநகர்க் கந்தசுவாமி பேரில் பிள்ளைக்கவி
    4. தவத்திரு கந்தசுவாமி சுவாமிகள்- பத்திராசலம் இராமச்சந்திரன் பிள்ளைத்தமிழ்
    5. கோவிந்தன் – வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ்
    6. ஸ்ரீ குழைக்காதர் பிள்ளைத்தமிழ்
    7. கம்பன் – இராமாயணம்- அயோத்தியா காண்டம்- கைகேயி சூழ்வினைப்படலம்
    8. கவி காளருத்திரர்- அழகர் பிள்ளைத்தமிழ்
    
    
    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1

    மீனாட்சி பாலகணேஷ்   

       (சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்)

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாம் பருவமாக சிறுதேர்ப் பருவம் அமையும். சிறுதேர் உருட்டுதலானது சிறுகுழந்தை நன்கு நடை பழகுவதற்காகவும், ஓடியாடி விளையாடவும் வகைசெய்யும் விதத்தில் ஊக்குவிக்கப்படும் விளையாட்டாகும். தற்காலத்திலும் குழந்தைகளுக்கு நடைவண்டி என நடை பழகுவதற்காக மரத்தாலான மூன்றுகால் சக்கரவண்டி ஒன்றினைக் கொடுப்பதனைக் கிராமப்புறங்களில் காணலாம். நகரத்துக் குழந்தைகள், நான்கு சக்கர ஊர்தி பொம்மைகளையும், நாய்க்குட்டி பொம்மைகளையும் கயிற்றால்கட்டி இழுத்தவண்ணம் நடப்பதனைக் காணலாம்.

                ‘பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்

             முக்காற் சிறுதேர்1,’ என்று பட்டினப்பாலை, இச்சிறுதேரினை, சிறு குழந்தைகள் புரவியில்லாது உருட்டி விளையாடும் மூன்றுகால்களாலான சிறுதேர் எனக் கூறும்.

    ஐங்குறுநூறு, தலைவனின் உள்ளம் தன்மகன் புன்னகை புரிந்தவாறு தளர்நடை நடந்து சிறுதேர் உருட்டும் அழகினைக்கண்டு தலைவியைவிடப் புதல்வனிடத்தில் அன்புமிகுதியால் ஈடுபட்டதனைக் கூறுகிறது.

    ‘புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்

             ……………………………………………………………………

             சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே2,’ என்பன பாடல்வரிகள்.

    பிள்ளைத்தமிழின் ஒவ்வொரு பருவத்திலும் பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவியின் சிறப்புகள் கூறப்படும்; சப்பாணி, அம்மானை, சிறுபறை ஆகிய பருவங்கள் கைகளைப் பாடுபொருளாகக் கொண்டமையும்; வருகை, சிற்றில் (ஆண்பால்) ஆகியன கால்களைப் பாடுபொருளாகக் கொண்டு அவற்றின் சிறப்பைப் பேசும். தளர்நடை நடக்கும் ஆண்மகவு இழுத்துச் செல்லும் சிறுதேரைப்பேசும் சிறுதேர்ப்பருவம், தலைவன் செலுத்தும் தேர் தொடர்பான பல செய்திகளைத் தெரிவிக்கும்.

    இவையே பிள்ளைத்தமிழின் தனிச்சிறப்பாகும்.

    தளர்நடைபயிலும் சிறு ஆண்மகவு நடக்கக் கற்றுக்கொண்டு விட்டதனால் அவனுடைய தாய் அவனுக்கு விளையாட தச்சனிடம் செய்து வாங்கிய ஒரு அழகான சிறுதேரினைக் கொடுத்திருக்கிறாள். இலேசான, கனமற்ற மரத்தால் குழந்தை விளையாடுவதற்காகவே செய்யப்பட்டு, குழந்தை கையிலோ காலிலோ குத்திக் காயம் பண்ணிக்கொள்ளாமலிருக்க முன்னெச்சரிக்கையாக கூர்மையான முனைகள் எல்லாம் தேய்த்து மழுங்கவைக்கப்பட்டு செய்விக்கப்பட்ட விளையாட்டுத்தேர்! சிவப்பு, பச்சை, மஞ்சள் எனக் கண்ணைக்கவரும் வண்ணங்கள் பூசப்பட்டு, சில பட்டுத்துணித்துண்டுகளால் கொடிகளும் பறக்கும்படி அமைந்து மிக அழகாக இருக்கிறது. தாய் தனது ஆசைப்படி அதில் ஒரு அழகான அன்றலர்ந்த தாமரைப்பூவினையும் செருகிவைத்திருக்கிறாள்.

    இந்தத்தேரை அழகான ஒரு மணிக்கயிற்றினால் கட்டி, குழந்தை அதனை இழுத்து உருட்டும்போது ஒலியெழும்படியாகச் சில மணிகளையும் அங்கங்கே இணைத்துள்ளான் அதனைச் செய்த தச்சன். மிக்க மகிழ்ச்சியுடன் சிறுகுழந்தை தேரை இழுத்துக்கொண்டு செல்கிறான். தேர்ச்சக்கரங்கள் உருளும்போது மணிகள் இனிமையாக ஒலிக்க அதனை இழுத்து உருட்டும் தன் மகனைக்கண்டு தாயின் மனம் ஆனந்தத்தில் பூரிக்கின்றது. குழந்தையும் புது விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்டுத் தெருவெங்கும் தேரினை இழுத்தவண்ணம் நடந்து செல்கிறான்.

    இந்தக்குழந்தை நம்மையெல்லாம் காக்கும் செந்தில்வாழ் கந்தன்; சேவற்கொடி கொண்ட குமரன். பக்தியிலும் தாயன்பிலும் திளைக்கும் புலவர் பகழிக்கூத்தர் தாமியற்றியருளிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் குமரன் சிறுதேர் உருட்டுவதனை பரவசமாக வருணிக்கிறார்: குமரன் தேருருட்டுங்காலை மற்றும் பலரும் பலவிதமான தேர்களை உருட்டுகின்றனர் எனக்கூறும் நயம் வியக்கத்தக்கது.

    ‘தேவர்களுக்கரசன் இந்திரன்; மணம்மிகுந்ததும் தேன்சொரிவதுமான மாலைகளை அணிந்தவன்; ஆயிரம் யாகங்களைச் செய்து இந்திரபதவி பெற்று தக்கதருணத்தில் அரியாசனத்தில் அமர்ந்தவன்; அவனுடைய அழகிய தேரினை ஓட்டுபவன் (தேரினை உருட்டுபவன்) மாதலி எனும் பெருமைமிக்க தேர்ப்பாகன். உலகின் நிலைப்பாடு அழிந்துபட்டதென்று குபேரன் எனும் தேவன் தானும் ஒரு தேரை உருட்டுகிறான். அது என்ன? பழங்காலம்தொட்டே பகைமைகொண்ட அரக்கர்கள் அச்சமடையும்படி,  வடவரையாகிய இமயத்தினைப்பொரும் புஷ்பகவிமானத்தினை அவன் செலுத்துகிறான் (புட்பகத்தேரை உருட்டுகிறான்). வெற்றிமிகும்படி உதித்தெழுகின்ற ஆயிரம்கதிர்களைக் கொண்ட கதிரவன் ஆகாயத்தில் ஒளிபரப்பியவண்ணம் கோலம் நிறைந்த அழகான ஒளிவட்டத்தைப் பரிவட்டமாகக் கொண்டு சுடர் வீசுகின்றான்: உலகினைத்தன் ஒளியால் துலக்கி விளக்கமுறச் செய்கின்றான். சூரியனின் தேரோட்டியான அருணன்  முட்கோல் எனப்படும் தேரோட்டுபவனின் கைக்கோலை (சாட்டைக்கோலை) எடுத்துக்கொண்டு வலிமைமிகுந்த தேரினை உருட்டிவருகிறான். ஆகவே, செந்தில்பதியில் வாழும் கந்தனே! நீயும் உனது சிறுதேரினை உருட்டி வருவாயாக!’ எனப் பகழிக்கூத்தர் வேண்டுகிறார்.

                தண்டே னுடைந்தொழுகு மருமாலை நீள்முடி

                       தரிக்குஞ் சதக்கிருதுசெந்

             தருணமணி ஆசனத் தேறமா தலிசெழுந்

                       தமனியத் தேருருட்டப்

             ………………………………………………………………………………

             கொண்டே உதித்தசெங் கதிரா யிரக்கடவுள்

                       குண்டலந் திருவில்வீசக்

             ……………………………………………………………………………….

             திண்டே ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே

                       சிறுதேர் உருட்டி யருளே

             சேவற் பதாகைக் குமாரகம் பீரனே

                        சிறுதேர் உருட்டி யருளே3.

    புலவரின் ஆவல் இத்துடன் நிறைவுபெறவில்லை! இன்னும் யார்யார் என்னவெல்லாம் உருட்டினார்கள் எனக் குறிப்பிடுவதிலேயே முனைப்பாக இருக்கிறார். இதுவுமொரு அழகிய சொல்நயமும் தமிழ்நயமும் செறிந்த பாடல்!

    வாரணிந்த இளமுலைகளைக் கொண்ட இடைச்சியர்கள் (பொதுவியர்) தங்கள் ஆடை மோரினாலும் தயிரினாலும் முடைநாற்றம் வீசும் தகைமையர். தயிரினைக் கடைந்து வெண்ணையையும் உருண்டைகளாக உருட்டி, வெண்தயிரையும் உறிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய வீடுகளுக்குள் கள்வனைப்போல் மெல்லப்புகுந்து அந்தத் தயிரினை உண்கிறான் ஒருவன்; பின் குடைத்தை உருட்டித்தள்ளி அதிலிருந்து வெண்ணையையும் அள்ளிவாரி (உருட்டி வாயில் இட்டுக்கொள்ளக்கூட அவகாசமின்றி) யாரும் காணும்முன்பு திருட்டுத்தனமாக மிக அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு உண்டுவிடுகிறான்; அதன்பின்பு தனது செங்கனி வாயினையும் துடைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதவன் போலச் செல்பவன், ஒரு பருத்த பெரிய சகடத்தைச் சிலம்பணிந்த தனது சிறுகாலால் எட்டியுதைத்து உருட்டி விளையாடிச் சிதைக்கிறான்! யாரிவன்? சகடாசுரனைக் கொன்ற கிருஷ்ணபெருமானே இவன். ‘அந்தப் பச்சைமாலின் மருகனே’ என முருகனைப் புலவர் விளிக்கிறார்: இவ்வாறு மாமனின் ‘சிறப்பைக்’கூறி விளித்த மருகனாகிய முருகனிடம், “உன்னிடம் தீராத பெரும்பக்தி கொண்ட அடியவர்களின் பழவினைகளாகிய கொடுமைகள் தீருமாறு நீ அத்தீமைகளைப் புறந்தள்ளி (உருட்டிவிட்டு) அனுக்கிரகம் செய்கிறாய் முருகா! மேலும் அத்துணை உலகங்களிலும், அண்டபகிரண்டங்களிலும் உனது  ஆணை (கட்டளை, அதிகாரம்) எனும் ஆக்ஞாசக்கரத்தை (ஆழியை) உருட்டிக் காக்கிறாய். இவ்வாறு செய்து, உனதடியைச்சேராத/வணங்காத அசுரர்களின் தலைகளாகிய குவடுகளை (மலைகளை) உருட்டுகின்றனை! நீ இந்தச் சிறுதேரையும் உருட்டியருளுக,” என வேண்டுவதாக இப்பாடல் அழகுற அமைகிறது.

    ‘சேவற்பதாகைக் குமாரகம்பீரனே,’ என ஆசையாக விளிக்கிறார். சேவல்கொடியைக்கொண்டு கம்பீரமாக விளங்குபவனே எனும் இப்பிரயோகம் தனித்துவம்கொண்டு விளங்குகிறது.

                   வாராரும் இளமுலை முடைத்துகிற் பொதுவியர்

                                 மனைக்குட் புகுந்து மெல்ல

                   வைத்தவெண் தயிருண்டு குடமுருட் டிப்பெருக

                                வாரிவெண் ணெயை யுருட்டிப்

                   பாராமல் உண்டுசெங் கனிவாய் துடைத்துப்

                                பருஞ்சகடு தன்னையன்று

                   பரிபுரத் தாளால் உருட்டிவிளை யாடுமொரு

                               பச்சைமால் மருக ……………………..

                    ……………………………………………………..

                  அண்டபகி ரண்டமும் அனைத்துலக முஞ்செல்லும்

                               ஆணையா ழியையு ருட்டிச்

                  சேராநி சாசரர் சிரக்குவ டுருட்டநீ

                                சிறுதேர் உருட்டி யருளே4

    முருகன் உருட்டும் சிறுதேரானது ஒவ்வொரு அடியாரின் உள்ளத்திலும் விதம்விதமான கற்பனைகளை உண்டுபண்ணுகின்றது.

                திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் சிதம்பர அடிகளார் மனித உடலையே முருகன் எனும் தெய்வக்குழந்தை படைத்து உருட்டும் அற்புதமான தேராக உருவகிக்கிறார். பாதங்களே தேரின் சக்கரங்களாகவும், எலும்பே பெரிய பலகையாகவும், சொல்லும் நாடியே அச்சாணியாகவும், பருத்தமார்பு தேரின் தட்டாகவும், காற்றாடியைப்போல அலமலந்து சுழலும் வஞ்சம் நெருங்கிய ஐம்பொறிகள் சிறப்பான தேர்க்கொடிஞ்சியாகவும் உள்ளன; விருப்பம் பொருந்திய சிகையே தேர்க்கொடிஞ்சியாக அமைய, பேசும் சொற்களே பல வாத்தியங்களின் தொகுக்கப்பட்ட ஒலியாக அமைகின்றது; இவ்வாறு பெரிய வேகம் மிகுந்த பலவகை மாறுபாடுகளையும் கொண்ட உடல் எனக் கூறப்படும் தேரின்மீது பெறுதற்கரிய உயிர் எனப்படும் ஒரு சிறுவனை அமரச் செய்துள்ளாய்! மனம் எனும் குதிரைகளை இருவினைகள் எனும் கயிற்றினால் பூட்டி, உனது திருவருளே பாகனாக இருக்குமாறு அமைத்து குற்றமற நடத்தச் செய்தருளும் குமரேசனே! நீ உனது சிறுதேரினை உருட்டியருளுக, என வேண்டுகிறார் புலவர்.

                             பாததிகி ரியுமெலும் புப்பெரும் பலகையும்

                                         பகர்நாடி யுருவாணியும்

                             பரியமரு மத்தட்டும் ………………

                                         ……………………………………

                            காதல்தரு குஞ்சிக்கோ டிஞ்சியும் பலமொழி

                                        கலித்தபல் லியராசியும்

                                   …………………………………………………

                         பேதமுறு தேர்கள்மீ தாருயிர்ப் பிளையைப்

                                       பிறங்கிட விருத்திவெற்றிப்

                         பேசரு மனப்புரவி கட்டிவினை வடவழிப்

                                       ………………………………

                         தீதற நடத்திடச் செய்தகும ரேசனே

                                      சிறுதே ருருட்டியருளே5

    அழகான உருவகங்களைக் கொண்டமைந்த பாடலிதுவாகும். முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் நாம் செய்த வினைகளின்படிதான் ஆன்மாக்கள் அடுத்தடுத்த பிறவிகளில் உடல் பெறுகின்றன. இதனையே, “கணமொடு மலிந்த உடலென உரைதரும் பெரிய கடுவேகம் உடைய நானாபேதமுறு தேர்கண்மீது,” எனப் பொருத்தமாகக் கூறுகிறார். அவ்வினைப் போகங்களை அனுபவிப்பதற்கு அந்தவந்த உடல்களில் உயிர்களைப் பொருத்திக் கூட்டிவைப்பதனால், “ஆருயிர்ப் பிள்ளையைப் பிறங்கிட இருத்தி,” எனும் தத்துவமும் விளக்கப் பட்டுள்ளது.

    இத்தகைய பெரும் வேதாந்த தத்துவத்தை உள்ளடக்கிய பாடல்கள் பிள்ளைத்தமிழ் நூல்களில் பலவாகும்.

                                                                                      ***

    வேறொரு அடியாரின் சிந்தையில் உலகில் இயற்கை நியதிக்கேற்ப நடைபெறும் பலவிதமான செயல்களும் முருகனின் சிறுதேரோட்டத்திற்கு  இணையாகக் கூறப்படுகின்றன.

    சந்திரன் வானில் பலவேறு நட்சத்திரக் கூட்டங்கள் புடைசூழத் தன் விமானத்தில் உலாவருகிறான்;

    ஒளி (சவி) வாய்ந்த இரவி எனும் சூரியன் ஏழு புரவிகளைப்பூட்டித் தனது அழகான தேரில் உலாவருகிறான்;

    அரன் எனப்படும் சிவபிரான் தனது விடை வாகனத்தைச் செலுத்தி வர, மாயவனாகிய திருமால் தனது கருடவாகனத்தில் வலம் வருகிறான்; தாமரை மலரில் உறையும் பிரம்மன் தனது அன்னவாகனத்தில் வலம் வருகிறான்;

    முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்திடவும், இந்திரனுடைய அழகான தேவமங்கையர் இருபுறமும் கவரிகளைக்கொண்டு வீசிடவும், இளமையான நிலவு வட்டமான வெண்குடையை ஏந்திடவும், இருகொம்புகளையுடைய மலைபோலும் யானைகள் மரங்கள் நிறைந்த மலைகளைச் சுறி வலம்வரவும், நீ உன் சிறுதேரினை உருட்டுக என வேண்டுகிறார் புலவர்.

                           சந்திரன் பலவேறு தாராக ணங்கள்சூழ்

                                     தரவிமா னத்து லாவச்

                           சவிபெற்ற ரவிபுரவி யேழ்பூட்டி யேநெடும்

                                     தமனியத் தேர்சே லுத்த 

                                    …………………………………….

                           முளரிப் பொகுட்டயன் புள்ளூர முப்பத்து

                                    முக்கோடி தேவர் வாழ்த்த

                                    ………………………………………

                              …….. ஈரிருமருப் புப்பொ ருப்பு

                          சிந்துரம் கற்பகா டவிகடவி வலம்வரச்

                                     …………………………….

                          தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா

                                       சிறுதே ருருட்டி யருளே6.

     இது மயிலம் முருகன் பிள்ளைத்தமிழில் நாம் காணும் அழகான பாடல்.

    உலகில் அனைத்தும்  இலயம் தவறாது   இயங்கிடவேண்டுமாயின் இறைவனின் அருளாணை வேண்டும். இதனையே முருகன் உருட்டும் சிறுதேராகக் காண்பார் இவ்வடியார்.

                                                                                                                                                                     – (வளரும்)

     

    பார்வை நூல்கள்:

    1. பட்டினப்பாலை
    2. ஐங்குறுநூறு
    3. பகழிக்கூத்தர்- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
    4. பகழிக்கூத்தர்- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
    5. சிதம்பர அடிகளார்- திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    6. திருவாரூர் வைத்தியநாத தேசிகர் – மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்

     

     

    Share