குழவி மருங்கினும் கிழவதாகும் – 21
மீனாட்சி பாலகணேஷ்
(பாவை விளையாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)
பாவைகளை வைத்து, அவற்றைத் தமது குழந்தைகளாகப் பாவித்து அவற்றிற்குப் பாலருத்துவித்தும், நீராட்டியும், உணவூட்டியும், உறங்கவைத்தும் சிறுமியர் விளையாடுவது வழக்கம். இவையனத்தும் உளவியல் தொடர்பான நிகழ்வுகள். சிறுமியின் உடலுடன் உள்ளமும் வளர்ந்து வருங்காலை, அன்பான குடும்பங்களில் தாய்மார் செய்வதுபோன்றே, சிறுகுழந்தைகளை அவள் சீராட்டுவது போன்றும், தனது விளையாட்டுப்பாவைகளை சிறுகுழந்தையாகப் பாவித்து ஏழெட்டு வயதுச்சிறுமி விளையாடுவாள். அவளுடைய அன்றாட வாழ்வின் இன்றியமையாத செயல்கள் இவை! வளர்ந்து, ஆடிக்களித்து, பருவமங்கையாகி, களவும் கடிமணமும் புரிந்து வாழப்போகும் பெண்மையின் உணர்வுகள் விழித்தெழுந்து உள்ளத்தில் வேரூன்றும் சிறுபருவம். தங்கமதலையரை ஈன்றெடுத்து அமுதூட்டி நன்மக்களாக வளர்க்கப் போவதன் முன்னோட்டம் இதுவல்லவா?
இதனைக் ‘குழமணம் மொழிதல்’ என்ற ஒருசெயலை மட்டுமே வைத்து ஒரு பருவமாகக் கூறியுள்ளது பிங்கலநிகண்டு. அதாவது, தமது பாவைகளுக்கு மணம்பேசி முடித்து, அதனை நிகழ்த்தி, விருந்துண்டு மகிழ்வது எனும் பிள்ளை விளையாட்டே இதுவாகும். மேற்கூறிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய செய்திகளாதலின் இதனுள் அடங்கும் என நாம் கொள்ள வேண்டும். ‘உலா’ எனும் சிற்றிலக்கிய இலக்கணப்படி, 4-8 வயது சிறுமி பேதை எனப்படுவாள். ‘அவளுக்குரியதே சிற்றில் விளையாட்டும் அதன் பல அங்கங்களும்,’ என்பது தமிழ்த்தாத்தா உ. வே. சா. அவர்கள் கூற்று1.
பாவைகள் பலவகைப்படும். பாவைநோன்புக்கான பாவைகள் ஆற்றுமணலினால் செய்யப்படும் என அறிகிறோம். ஆனால் இது பாவை விளையாட்டு. சிறுமியர் தம் கையாலெடுத்துச் சீராட்டிப் பாலூட்டி, உறங்கவைக்க பாவைகள் உறுதியாக இருக்க வேண்டுமன்றோ? இவை சிவந்த சந்தனமரத்தினால் செய்யப்படும். ‘மரப்பாச்சி’ என்று கூறுவர். இவற்றிற்குச் சிறுமியர் ஆடைகள் உடுத்தி, தாம் வேண்டும்விதம் அழகுசெய்து விளையாடுவர். இன்றும் இப்பொம்மைகள் புழக்கத்தில் உள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இவை இல்லாதபோது, பாவைகள் பழந்துணிகளாலும் தென்னோலையாலும் செய்யப்படுவதும் உண்டு.
‘பாவைவிளையாடல்’ என்பதனை ஒரு பருவமாக மூன்று பாடல்களுடன் நாம் காண்பது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ள தில்லைச்சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே ஆகும். ஆயினும் பாவை விளையாடலின் தொடர்பான கூற்றுக்களை மற்றுமுள்ள பல பிள்ளைத்தமிழ் நூல்களில் பல பருவங்களில் குறிப்பிடக் காண்கிறோம். சிலவற்றை இங்கு நினைவுகூர்தல் நன்மை பயக்கும்.
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் தமது சிற்றிலை அழிக்க முற்படும் சிறுவனான குமரப்பெருமானிடம் அச்சிற்றிலை இழைத்த சிறுமியர் வேண்டுவதாக அமைந்ததொரு பாடல்:
“நாங்கள் உலைப்பெய்து சமைத்த உணவு, அதனை வைத்த பெரும் சிப்பிகள் (நந்தின் கடம்), அடுப்பென எரியும் மாதுளைமலர்கள் ஆகியன அழிந்துபடுமே!
“நாங்கள் திருமணம் என்று கூறிக் கொண்டுவந்த சிறுவிருந்தும் வீணாகிப் போகாதோ?”
ஆண்பாற் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் நாம் கண்டதொரு காட்சியின்படி (இத்தொடரின் பாகம் 8.1) இவர்கள் உலையேற்றிச் சமைப்பது ஒரு பாவனை விளையாட்டே. பாவைத் திருமண விருந்திற்கு அவரவர்கள் இல்லங்களிலிருந்து தாய்மார்களிடமிருந்து உண்மையான சுவையூறும் தின்பண்டங்களை முறைவைத்துக்கொண்டு பெற்று வருவர்; பகிர்ந்துண்ணுவர் என அறிகிறோம். (எம் தலைமுறையைச் சேர்ந்த பெண்மணிகள் தம் பிள்ளைப்பருவத்தில் இவ்விளையாட்டை விளையாடியிருப்பதனால் அறிவர்!!)
நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
………………………………………………………………….. அடியேம் வதுவையெனச்
சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ2
அடுத்த வரிகள் பெண்குழந்தையின் கவனிக்கும், உய்த்துணரும் திறனை நமக்கு உணர்த்துகின்றன. தம் தாய்மார்கள் பச்சிளம் குழவியர்க்கு முலைப்பால் அருத்துவிப்பதனைக் கண்டிருக்கும் இவர்கள் தாமும் தம் பாவைகளுக்கு அவ்வாறு செய்ய முற்படுகின்றனர். முகைப்புண்டரிகம் எனும் தாமரைமொட்டுக்களை இன்னும் வளர்ச்சியடையாத தம் மார்பில் கட்டிக்கொண்டு (உரம் பிணித்து), அதனை முலை என்று பாவித்துக்கொண்டு பாவைகளுக்குப் பாவனையாக முலைப்பால் கொடுக்கின்றனர். ஐந்தாறு வயதுச் சிறுமியரின் உய்த்துணரும் திறன் வியக்கத்தக்கதாம். ‘சிற்றிலைச் சிதைத்தால் இவ்வாறு பால்கொடுத்துப் பின் உறங்கவைத்த அக்குழவி கண்விழித்தெழுந்து அழாதோ?’ எனவும் கேட்கின்றனர்.
முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே2.
திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் சிற்றிற்பருவப்பாடல் இன்னொரு நயத்தை விரிக்கின்றது. திருமணம் என்பது ‘ஆயிரங்காலத்துப் பயிர்’ எனப் பெரியோர் கூறுவதனைக் கேட்டுள்ள சிறுமியர், தாமியற்றும் பாவை மணமும் ‘பலவாறு முயன்று அலைந்து திரிந்து’ நடத்தும் மணவினை என்பதாகக் கூறுவது வியப்பையும் நகையையும் ஒருசேரக்கூட்டுகின்றது.
“உன் தந்தையான சிவபிரான் முன்பு புத்தூரைச் சேர்ந்த பாவை ஒருத்தியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய காரணத்தால் பின்னொருநாள் இருகால்களும் நோகும்படி, திருவாரூர் வீதியெங்கும் இரவில் பலமுறை நடந்தலைந்ததனை நீ அறியாயோ?”
புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் மகளுடனான சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து, அவரைத் தன்னடிமையாக்கி ஆட்கொண்டான் சிவபிரான். பின்பு அந்த சுந்தரருக்காகவே, அவரிடம் பிணக்கு கொண்ட அவருடைய மனைவியாகிய பரவை நாச்சியாரிடம் பலமுறை திருவாரூர் வீதிகளில் திரிந்தலைந்து தூது சென்றான் அவ்வீசன். இதனைச் சிறுமிகள், ‘அவன் முதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய பாவத்திற்காகத்தான் இங்ஙனம் திரிந்தலைந்தான்,’ என்று கூறுகின்றதாகப் புலவர் அமைத்துள்ள நயம் வியக்கத்தக்கதாம்.
“அதுபோன்று நீயும் எம் பாவையின் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவையாயின், உன் மலர்ப்பாதங்கள் நோகும்வண்ணம் எத்துணை பெண்களிடம் தூதாக நடக்க வேண்டிவருமோ?” எனவும் இகழ்ச்சியாகக் கூறுகின்றனர்.
‘உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒருகால்முன்
ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
முந்தை யிருளில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
முயன்று பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்க்கால் சிவக்க எத்தனைகால்
மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ3?’ என்பது பாடல்.
மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்து இனிய பாடலொன்று பாவைவிளையாட்டின் மற்றுமொரு சுவையான காட்சியைக் கண்முன் விரிக்கின்றது.
தமது சிற்றிலை அழிக்க ஓடோடிவரும் சிறுவனான தென்பேரைநாதனிடம் சிறுமியர் கைகூப்பி வேண்டுகின்றனர்: “அன்பாக அணைத்து, முலைப்பால் ஊட்டி, புனலில் நீராட்டி, அருமையாகக் கண்களுக்கு மையிட்டு அலங்கரித்து, ஆரங்களை அணிவித்து, பட்டாடை உடுத்தி வைத்துள்ள என் மகவுக்கு (பாவைக்கு) உனது திருப்பெயரையே சூட்டுவேன். தயவுசெய்து எமது அழகான சிற்றிலை அழிக்கவேண்டாம்,” என்கின்றனர்.
அன்போடணைத்து முலைகொடுத்தின்
னமுதூற்றறிருக்கும் புனலாட்டி
அருங்கட் கடைக்கஞ் சனமெழுதி
ஆரந் திருத்திப் பட்டுடுத்தி
உன்பே ரிடுவே னென் குழவிக்கு4
…………………………….
வீட்டுப் பெரியவர்கள் பெயரையோ தெய்வங்களின் பெயரையோ சிறுகுழந்தைகளுக்கு இடும் வழக்காற்றை இச்சிறுமிகள் கண்டு உணர்ந்துள்ளனர் என்பது இதனாற் புலனாகின்றது அல்லவோ?
பெண்குழந்தைகளின் விளையாட்டை ஊன்றி நோக்கிய புலவர் பெருமக்களால்தான் இவ்வாறு சுவைபடப் பாடவியலும்!
இதுபோன்று பலவிதமான நயமிகுந்த பாடல்கள் இவ்விலக்கியம்தோறும் விரவிக் கிடப்பதனைக் காணலாம்.
இனி பாவைவிளையாடல் எனும் பருவத்தில் உள்ள பாடல்களைக் கண்டு களிப்போமா?
தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழினை இயற்றியவர் ஒரு சக்தி உபாசகர். அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான அவருக்கு அன்னை சிறுமியாய் விளையாடும் விளையாட்டுக்கள் அனைத்துமே அகக்கண்ணில் அவளுடைய திருவிளையாடல்களாகக் காண்கின்றன.
தெய்வங்களின் பாவைகள், மானிடர் வடிவங்கள், விலங்குகள், கடலில்வாழும் உயிர்கள் இவற்றின் பாவைகள், பறவைகளின் பாவைகள், தரையில் ஊர்ந்துசெல்லும் புழுபூச்சிகளின் பாவைகள், மரம், செடி, கொடி எனும் அனைத்துப் பாவைகள் என ஓரறிவு உயிர்முதல் ஐந்தறிவு, ஆறறிவு படைத்த உயிர்கள்வரை அனைத்துமே பராசக்தி தன் விளையாட்டிற்காக உருவாக்கி வைத்துள்ள பாவைகளாம். இந்தப்பாவைகளை எல்லாம் எண்பத்து நான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களில் இவளே செய்கிறாளாம்.
“வல்ல தெய்வப் பாவை மானிடப்
பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
மருவு பறவைப் பாவையும்
ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும் (ஒல்லை- விரைவு)
பாவையும் உறும் தாவரப் பாவையும்
ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப் (ஒருபொறி- ஓரறிவு)
பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்5
…………………………………………” என்பன பாடல் வரிகள்.
இப்பாடலில் உட்கருத்தாகப் பரிணாம வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் பொதிந்துள்ளதனைக் காணலாம். ஓரறிவு படைத்த உயிர்களான புல், மரம் ஆகிய தாவரப் பாவைகள், ஈரறிவுயிர்களான சிப்பி, கிளிஞ்சல் ஆகிய கடல்வாழ் உயிரினங்கள், மூவறிவு படைத்த உயிர்களான ஊர்ந்து செல்லும் எறும்புகள் முதலியனவும், நான்கறிவு கொண்டவையான நெளிந்து ஊர்ந்து செல்லும் சிலவகைப் புழுபூச்சியினங்களும், ஐந்தறிவு கொண்ட உயிர்களான பறவை இனங்களும், பஞ்சபூதங்களாலான உடல்களில் ஒன்றன்பின் ஒன்றாகப் படைக்கப் பட்டிருப்பதனை பாடல் வரிசைக்கிரமமாக விளக்குகிறது. மானிடர் ஆறறிவு படைத்த உயிர்களாகக் கருதப்படுவர்.
இவற்றை அன்னையின் விளையாட்டாகக் கொள்வது அடியார்களின் நோக்கு. ‘இயற்கை நிகழ்வு’ என நாம் பல காலங்களாகப் பயின்றுவரும் பரிணாம வளர்ச்சி எனும் அறிவியல் சிந்தனை, அவ்வியற்கையையும் இயக்கும் இறைத்தத்துவமாக அடியார்கள் சிந்தையில் பதிந்துள்ளது என்பதனை நாம் கண்டு சிந்திக்கத்தக்கதாகும்.
அடுத்துக்காணும் பாடலில் அன்னையை இளம் சிறுமியாகக் கண்டு மகிழ்வார் புலவர். சிறுமியர் விளையாடும் சிற்றில் எனும் சிறுவீடமைத்தல், சிறுசோறடும் விளையாட்டு, பாவைவிளையாட்டு ஆகியன அழகிய இப்பாடலில் ஒருசேரக் கூறப்பட்டுள்ளன.
மணமாகாத இளமைப்பருவத்தில் சிறுமியர் சிலபொழுது தமக்குள் ஒருவரையொருவர் மணப்பெண் – மணவாளன் என்று முறைப்படுத்திக்கொண்டு மணமாலை சூட்டி திருமணச் சடங்கு செய்து விளையாடுவர். பின்பு தோழியர் புது மணப்பெண்ணுக்குச் சட்டுவம் பிடித்துச் சமையல்செய்யப் பழக்கித் தருவர்! பின்பு, ஒரு சிறுமகவைப் பிள்ளையாக்கி வைத்து அழும் அப்பிள்ளையின் அழுகையை நிறுத்தி, சேலையால் கட்டிய தூளியில் (ஏணையில்) இட்டுத் தாலாட்டவும், ‘நீ அழவேண்டா’ என்று கையிலெடுத்துப் ‘பால் உண்ணுக’ என்று முத்தமிட்டும், பிறர்காணாதபடி மறைவாக மார்பிலணைத்து முலைப்பால் கொடுத்தும் (கொடுப்பதுபோல் நடித்தும்), அதற்காக நாணங்கொண்டு தலைகவிழ்ந்தும் நிற்கும்வண்ணம் நீ பொற்பாவைகளைவைத்து விளையாடுக! என வேண்டும் பாடல்.
கன்னியில் மணற்சிற்றில் விளையாடும்போது
முக்கண்ணி நீ தேவியெனவும்
கடவுள் மணவாளனென மணமாலை
சூட்டவும்……………………..
…………………………………………..
……………………………… ஊறுபால்
உண்ணுக என மணிவாயில் முத்தமிட்டு
மார்பத்து எடுத்து அனைத்தும் பால்
கொடுத்து அயலின் மற்று நாணிக் கவிழ்த்தும்
………………………………………
பரம சிவகாம சுந்தரி அம்மை
இனிய பொற்பாவை விளையாடி அருளே6!
இதில் பொய்தல் விளையாட்டின் அனைத்துச் செயல்களையும் அழகுற விவரித்துள்ளதனைக் காணலாம்.
இம்மூன்று பாடல்களில் ஒன்று பரிணாம வளர்ச்சி தொடர்பான இறைத் தத்துவத்தினையும், இன்னொன்று சிறுமியர் விளையாட்டைப் பூரணமாக அதன் சிறுநிகழ்வுகளுடன் சுவைபடவும் விவரிக்கின்றது. மூன்றாம் பாடலில் புலவரின் கவிதைத் திறனையும் அது பொதிந்துதரும் பல இனிய செய்திகளையும் கண்டு களிக்கலாம்.
பாவை எனும் சொல்லை இப்பாடலில் திரும்பத்திரும்ப ஒன்பதுமுறை பயன்படுத்தி வெவ்வேறு கருத்துக்களைக் கூறுகின்றார்.
உலகிற்குத் தலைவியாக விளங்கும் அம்மையான இவள் பாம்புகளாலான அணிகளையும், செம்பொன் நவமணிகளால் இழைத்த மாலைகளையும் அணிந்து விளங்கும் பாவை!
உலகங்கள் அனைத்தையும் ஒருசேர ஆளவந்த பாவை!
கிட்டுவதற்கே அரிதான குடிலை எனப்படும் பிரணவ மந்திரம் உலகத்தோருக்குக் கிடைக்கும்படி அருள் செய்யவந்த பாவை!
உலக அதிசயம் எனக் கூறப்படும் கொல்லிப் பாவையும் இவளே!
(கொல்லிப்பாவை என்பது அதிசயமானதொரு செய்தி! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் உறையும் இக்கொல்லிப்பாவை ஒரு பெருநிலையான தெய்வமாவள். கொல்லிமலைக் குடவரையில் விளங்கும் இப்பாவைபற்றி கொங்குமண்டல சதகம் எனும் நூலில் சுவையானதொரு விளக்கம் காணலாம்).
வணங்கிப் போற்றத்தக்கதொரு தெய்வப்பாவை!
பல உயிர்களுக்கும் வீடுபேற்றை அருளக்கூடிய தாயாகிய சித்திரப்பாவை!
விந்து, மோகினி, மான் எனக் கூறப்படும் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி எனப்படும் மாயைகள் ஊழிக்காலத்தில் தன்னுள் அடங்கிவிடும் ஆதாரமான பாவை.
மெய்ப்பொருளான தெய்வத்தைப் பரவி வழிபடுபவர்களும், பாடுவோரும் அடைகின்ற சித்தி, முத்தி ஆகியவற்றின் வடிவான பொற்பாவை!
‘சிவகாமசுந்தரி அம்மையே, நீ பலவகையான பொற்பாவைகளை வைத்து விளையாடியருளுக!’ என வேண்டும் பாடலிது.
‘நாடரும் சருப்பப்பூண் அணி செம்பொன்
மாலையுடன் நவமணி அணிந்த பாவை
…………………………………………………….
…… குவலயத்து அதிசயம் எனாக்
கொல்லியம் பாவையும் கும்பிடும் பசும்
பாவை குலவு பல்லுயிர்கட்கு எல்லாம்
வீடருள் நற்றாய் எனும் சித்திரப்பாவையும்
………………………………………..
பாடவந்தவர் சித்தி முத்தி வடிவான
பொற்பாவை விளையாடி அருளே7!
……………………………………………………’ என்பது பாடல்.
இவ்வாறு பொய்தல் விளையாட்டின் பல கூறுகளும் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களாகப் படைக்கப்பட்டது தமிழின் தனிச் சிறப்பன்றோ?
இனித் தொடர்ந்துவரும் பகுதிகளில் பெண்குழந்தைகளின் மற்ற விளையாட்டுகளைக் காணலாம்.
(தொடரும்)
பார்வை நூல்கள்:
1. சேறைக் கவிராச பிள்ளை- வாட்போக்கியுலா- முன்னுரை
2. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்
3. நடேச கவுண்டர்- திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்
4. மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்
5, 6, 7. நல்லதுக்குடி கிருட்டிணையர் – தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-பாவை விளையாடல் பருவம்.