படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 32 [ஆரூர் தமிழ்நாடன் கவிதைகள் – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை!]

0
2

முனைவர் ச. சுப்பிரமணியன்

முன்னுரை

இதழாசிரியர்கள் படைப்பாளர்களாகவும் அமைவது தமிழுக்குப் புதுமையான ஒன்றல்ல. பாரதி, திருவிக. கல்கி, ரா.கி.ரங்கராஜன், தமிழ்வாணன், அண்ணா, கலைஞர். கவிஞர் கண்ணதாசன், மணியன், வல்லமை அன்னா கண்ணன் உள்ளிட்ட பெருமக்கள் பலரும் இதழாசிரியர்களாக இருந்து கொண்டே படைப்பாளர்களாகவும் பரிணமித்தவர்கள். இந்த நிரலில் தற்காலத்தில் வாழுகின்ற ஆரூர் தமிழ்நாடன் ‘இனிய உதயம்’ இதழின் ஆசிரியர். கல்லூரி காலத்திலிருந்தே திராவிடச் சிந்தனையாளராக இருப்பினும் அழகியல் மீதூரும் கவிதைகளையும் சமுதாயச் சிக்கல்களைப் பாடுபொருளாக்கும் கவிதைப் படைப்புக்களையும் படைத்து வரும் பண்பாளரான இவர் புதிய வடிவங்களைக் கையாள்வதிலும் கைதேர்ந்தவர்!  முகநூலில் இவரது கவிதைகளை நான் பல்லாண்டுகளாகப் படித்து வருகிறேன். மரபு சார்நத கவிதைகளையும் புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ வடிவங்களையும் கையாளும் இவருடைய கவிநேரத்தியை “ஆரூர் தமிழ்நாடன் கவிதைகள் – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை” என்னுந் தலைப்பில்  இந்தக் கட்டுரை சில கருத்துககளை முன் வைக்க முயல்கிறது.

பாட்டாக நானிருந்தென்ன? பொருளாக நீ வரவேண்டும்!

புதிராகத் தொடங்கிப் புரியாமல் நடந்து புலப்படாமலே போவதுதான் காதல் என்று ஆனபிறகு, காதல் நிலையின் எல்லாத் தடுமாற்றங்களும் கவிதையாகத்தான் அமைந்து போகும். ஒரு கனியின் எல்லாப் பகுதிகளும் இனிப்பது போலவே காதலின் பன்முகப் பரிமாணங்களும் இனிக்கும். திணை ஐந்தனுள், கசக்கிற திணை என்று ஏதும் உண்டா என்ன?  எல்லாமே இனிப்புத்தான் இலக்கியங்களில்! காதலில் இனிப்பு கசப்பு இருக்கலாம். காதற் கவிதையில் இனிப்பு மட்டுமே!  கசப்பே கிடையாது. பிரிவையும் சுவைத்துச் சொன்னவன் தமிழன். அப்துல் ரகுமான் பாடுவார்

“காதல்
ஒரு வித்தியாசமான சிறை!
இங்கே
கைதியாவதற்குத்தான்
எல்லாரும் ஆசைப்படுகிறார்கள்!”

என்று என்ன ஒரு மென்மை? என்ன ஒரு ஆழம்?  “பூட்டிய இருப்புக் கூட்டின் சிறைக்கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா”  என்று ஒரு கவிஞன் பாடுகிறான். அது மொழியினப் போரில் சிறை சென்றவனுக்கு. இது மொத்தத்தையும் பறிகொடுப்பதற்கு! புறவாழ்வில் சமுதாய நலனுக்காகச் சிறைசென்று விடுதலையாவதில் மகிழ்ச்சி! அகவாழ்வில் சிறைசென்றவன் விடுதலையாகிவிடக்கூடாதே என்னும் கவலையே மகிழ்ச்சி! வாழ்க்கைச் சிக்கலில் கூட சிக்கலிலிருந்து விடுதலையாவதுதான் மகிழ்ச்சி. சிட்டுக் குருவி போலே விட்டு விடுதலையாகத்தான் பாரதி விரும்பினான். அந்தப் பாட்டில் விடுதலையை முன்னாலே சொல்லி உவமத்தைப் பின்னாலே சொல்லுவான்! விடுதலையில் உண்டாகும் மகிழ்ச்சி அப்படி;!

“விட்டுவிடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே”

“வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா” என்றும் பாடுவான். பாரதி உள்ளிட்ட அனைவரும் காதலில் சிறைசெல்லத்தான் விரும்பியிருக்கிறார்கள். எப்படியோ இணைந்தவர்களுக்கு ஏன் இணைந்தோம் என்பது விளங்கவில்லை. காதல் ஒரு விடுகதை  என்றோம். உண்மையில் அது விடுகதை இல்லை வினா விடை!. தலைவன் வினாவானால் தலைவி விடையாகிறாள். தலைவி வினாவானால் தலைவன் விடையாகிறான். தமிழ்நாடன் பாடுகிறார்! அடங்கிய காதலை ஒடுங்கிய மொழியால் சொல்லும் அவர் திறன் காணீர்!

“கேள்வி பதிலாய் நாம்
நம்மில்
கேள்வி யார் ?
பதில் யார்?
தெரியவில்லை
ஆனால் ஒன்று;
கேள்விக்காகத்தான் பதில்
பதிலுக்காகத்தான் கேள்வி.”

உண்டு என்பதை எவ்வளவு எளிமையான வெளிப்பாடு? ஆனால் அழகியலும்  ஆழமும் கொண்ட வரிகள். ‘உனக்காகத்தான் நான் எனக்காகத்தான் நீ” என்றால் உரைநடை! யாருக்கு யார் பதில் என்பதும் யாருக்கு யார் கேள்வி என்பதும் தெரியாத நிலை! இருந்தால் என்ன? கேள்விக்காகத்தான் பதில் பதிலுக்காகத்தான் கேள்வி என்ற உறுதிப்பாடு வந்தபிறகு, கேள்வியாக யார் இருந்தால் என்ன? பதிலாக யார் இருந்தால் என்ன? என்னதான் காதல் என்னும் கற்பனை உணர்வைப் பாடுவதாகக் கவிஞர்கள் சொன்னாலும் அவர்களின் தனிவாழ்க்கை ரகசியத்தைக் கவிதை வரிகள் அம்பலப்படுத்துகின்ற சூழல்களும் உண்டு என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. காரணம் காதலை அதனால் பாதிக்காத யாரும் அவ்வளவு சுத்தமான கற்பனையினால் வடிக்க முடியாது, வடித்தால் அதில் காதல் வழியாது. கேட்பவர்கள் காதில் சீழ்தான் வடியும்.

ஆரூர் தமிழ்நாடனின் மரபியல் தடம்

மரபு என்பது சிந்தனைத் தொடர்ச்சி. அறியாத பலர் இதனை யாப்பியல் தொடர்ச்சி என்று கருதிவிடுகிறார்கள். எனவேதான் யாப்பு சுத்தமாக எழுதுகிற கவிதைகளை மரபுக்கவிதைகள் என்று வெளிப்படுத்தித் தங்களை ஏமாற்றிக் கொண்டு அடுத்தவர்களைத் துன்பப்படுத்துகிறார்கள். திருவள்ளுவர் பாடுகிறார்.

“இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து”

“Her painted eyes have a double effect. One glance pain and other cures.” என்று இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இங்கே சில பேர் தங்கள் நூல் பிறமொழிகளில் பெயரத்தெழுவதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இங்கிலாந்து நாட்டுக்காரன் இந்த மொழிபெயர்ப்பைப் படித்தால் என்ன செய்வான்? என்ன கருதுவான்? திருவள்ளுவர் தமிழ்மரபியல் சிந்தனையான விழி பரப்பும் காதலை ஒரு அகநோயாகச் சித்திரித்துள்ளார். ஆனால் மொழிபெயர்ப்போ ‘MULTY SPECIALITY HOSPITAL’ ஆக மாற்றிவிடுகிறது. அதனை விட வேடிக்கை கண்ணுக்கு வண்ணம் பூசியதாக மாற்றியிருப்பது. இதனை மொழிபெயர்க்க இயலாது, இயன்றால் தமிழ்க்காதலின் சாரம் பிழியப்படாது, ‘சிறக்கணித்தாள் போன்று’ நகைசெய்ததால் நோய் வந்தது, அந்த நோய் நீங்க வேண்டுமானால் மற்றொரு கண்ணால் காணவேண்டும் என்னும் தலைவன் வேட்கை புலப்படுத்தப்பட்டது. இந்த மரபியல் சிந்தனையைத் தற்கால இளைஞன் ஒருவன் குறும்புத்தனத்தோடு இப்படிப் பாடுகிறான்

“நீ ஒரு முறை பாரத்தாய்
என் நெஞ்சில் முள் தைத்தது!
முள்ளை முள்ளால்தானே
எடுக்க வேண்டும்?
எங்கே இன்னொரு முறை பார்!
இதுதான் மரபுக்கவிதை! இந்த காதல் மரபை ஆரூர் தமிழ்நாடன் கவிதைகளில் பரக்கக் காணலாம்
“உன்னிடம் சறுக்கியதை
எண்ணும்போது
நெஞ்சம் முழுதும்
விரவுகிறது வெட்கம்!
இந்த வெட்கத்தை
விலக்க வேண்டும்
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்”

காதலில் ஆண் சறுக்குவதுதான் இயல்பு. தான் சறுக்கியதற்குப் பதிலாகத் தலைவியும் சறுக்கினால் காதல் கைகூடும். இல்லையெனில் அது கனவாய்ப் போகும். அதனால் தலைவன் சொல்கிறான். நான் உன்னிடம் தோற்ற வெட்கத்தை விலக்க வேண்டுமானால் நீ என்னிடம தோற்க வேண்டும்? இயலுமா? என்று வினவுகிறானாம். நுண்ணியமான காதல் என்பது இதுதான். சுழியத்தைச் சுழியத்தால் வகுத்தால் ஈவு ஒன்று என்பது போன்றது இது. இந்தக் காதல் வெளிப்பாட்டை அவரே இன்னும் சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.

“பேரிடரும் நீ!
நிவாரணமும் நீ!”

தமிழக வெகுமக்கள் அறிந்த இரண்டு சொற்கள் ‘பேரிடர்’ மற்றும் ‘நிவாரணம்’. பேரிடருக்கு ஆளானவனுக்குத்தான் நிவாரணம். நிவாரணத்தின் அருமை அப்போதுதான் அவனுக்குப் புரியும். வெள்ளப் பேரிடரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பன்னிரண்டாவது தளத்தில் இருந்தவனும் நிவாரணம் பெற்றால் அவனுக்கு நிவாரணத்தின் அருமை புரியாது. இங்கே பேரிடருக்கு ஆளானவன் தலைவன். அவன் தடுக்கி விழுந்ததற்கு அவள் காரணமில்லைதான்.  காதல் உள்ளிருந்தே கொல்லும் உயிர் நோய். இவனாகவே நோய்க்கு ஆளாகிக் காரணமில்லாமலேயே தொடர்பில்லாதவளிடத்தில் நிவாரணம் தேடுகிறான். தன்னைப் பார்க்காத தலைவியைத் தலைவன் பாரத்து நோய்கொண்டான் திருக்குறள் தலைவன். தன்னைப் பாரத்ததாக எண்ணிக் கொண்ட மீராவின் காதலன் இதயத்தில் முள் தைத்ததாகக் கதைவிடுகிறான். ஆரூர் தமிழ்நாடனின் தலைவனோ  இவனாகவே தோற்றுவிட்டு அதனை ‘வெட்கம்’ என்று நாணுகிறான். இன்னொரு தலைவன் “உன்னால்தான்  எனக்குத் பெருந்துன்பம்” என்று இயற்கையைச் சாடுவதுபோலத் தலைவியைச் சாடுகிறான். நிவாரணத்திற்கான  விண்ணப்பத்தை அவளுக்கே போடுகிறான்.

காதலுக்குக் கடன் இல்லை

காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். நான் சொல்கிறேன் காதலுக்குக் கண்ணிருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் கடன் கிடையாது. நீண்ட காலத் தவணையிலோ குறுகிய காலத் தவணையிலோ காதல் செய்ய முடியாது. அது உயிரின் ஓரங்க நாடகம். தற்காலத்தில் வெளிவரும் காதல் கவிதைகளை ஒரு முறை படித்தாலும் காதல் உணர்வே ஒரு கசப்பான உணர்வோ என்று எண்ணத் தோன்றுகிறது. தங்கள் அந்தரங்கத்து வக்கிர புத்திகளையெல்லாம் அந்தக்காலச் சான்றோர்கள் பாடியிருக்கிறார்கள் என்று பொய்சாட்சியோடு கவிதை புனைகிறார்கள். சங்க அக இலக்கியப் புனைவுகளைத் தொடர்ந்து திருவள்ளுவர் பேசிய ஆன்மீகக் காதலைக் கண்ணதாசன் எழுதினார்.  அப்துல் ரகுமான் பேசினார். மீரா எழுதினார். சில கவிதைகளில் மேத்தாவும் எழுதினார் தற்காலத்தில்  துரை வசந்தராசனும் ஆரூர் தமிழ்நாடனும்  வெளிப்படுத்தி வருகிறார்கள்

“யார் செய்த சிற்பம் நீ? ஏக்கக் கனவுதரும்
வேர்வை நிலலா உன்றன் விலாசமெது? பார்வைகளில்
வார்த்தையைப் பார்த்து வயமிழந்தேன்! மன்மதனின்
ஊர்வாழும் நீ யார் உறவு?

என்னும் அடிகள் ஒரு மெல்லிய இதயத்தின் காதல் முனகலை எடுத்துச் சொல்லும் கவிதை. ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ?” என ஐயுற்ற அந்தக் காலத் தலைமகனைப்போல்  ‘யார் செய்த சிற்பம் நீ? உன்றன் விலாசமெது? என்று வினவுதல் ஒரு புதுமைப் போக்கு!

“திருவிழா காணவந்த தேவதையே! உன்றன்
தெருவினிலே நானும் திரிந்தேன்! – ஒரு கோடிப்
பூச்சிறகு பூக்கப் புதுவானில் நீந்துகிறேன்!
ஆச்சரியம் தானுன் அழகு!”

தலைவியை நலம் புனைந்துரைக்கிறான் தலைவன்!. “உன்றன் தெருவினிலே நானும் திரிந்தேன்” என்பது அந்தக் கால இளைஞன் அறியாத ஒன்று. அவன் மடலேறுவான். இவனுக்கு அது தெரியாது. அதனால் திரிகிறான். ‘நீ தரையில்தான் நிற்கிறாய் நான்தான் பறக்கிறேன்’ என்பது தலைவனுக்குத் தெரியும்! நமக்குத் தெரியும். நமக்குத் தெரிய வேண்டுமென்றால் நாமும் காதலித்து மிதக்க வேண்டும்.

“மனசெல்லாம் உன்றன் மழைச்சாரல்! என்றன்
நினைவெல்லாம் காதல் நெருப்பு – கனவினிலும்
உன்முகமே வந்து உயிரை  வதைக்குதடி!
உன்னையே தாயேன் உவந்து”

மிக நுண்ணியமான உணர்வலைகளை மொழியால் சொல்லுகிற இந்தக் கவிதையில் காதலின் ஆழம் புரிகிறது. மனது கருவி. நினைவு பொருள். கருவியால் பொருள். தலைவியைப் பாரத்தவுடன் மனத்தில் மழைச்சாரல்! சரி! நினைவில் எப்படி நெருப்பு வரும்? வருகிறதே! அதுதான் காதல்! காதல் என்றால் பூவுக்குள் பூகம்பம் வரும்!

தற்காலக் கவிஞர்களுள் காதலை உணர்வு ரீதியாகப் பாடியிருப்பவர் ஆரூர் தமிழ்நாடன். இதழையும் இதழ் தரும் முத்தத்தையும் இடையையும் காதலின் எடையையும் கண்ணையும் காதையும் கவிதையாக்கிப் படிப்பவர்களை அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கின்றவர்கள் இடையில் ஒரு மரபு சார்ந்த மெல்லிய உணர்வுக்கு மொழிவடிவம் கொடுத்திருப்பதில் தமிழ்நாடன் முழுமையான வெற்றியடைந்திருக்கிறார். ‘உயிரைக் கொஞ்சம் உயிர்க்க வையடா” என்று இவரால் எழுதமுடிகிறது. ‘எனது நானே எப்படி யிருக்கிறாய்? உனது உடலும் உள்ளமும் நலமா? என்று வினவும் தலைவனைக் காட்டுகிறார். காதல் படித்து எழுதுவதன்று பட்டதை எழுதுவது தமிழ்நாடன் பட்டிருக்கலாம்!

தமிழ்நாடன் கவிதைகளில் மரபு

மரபியல் சிந்தனை என்பது வேருக்குள் நீர் போன்றது. வேரிலிருந்து அடிமரத்துக்குள் வந்து, கிளைகளுக்குள் பாய்ந்து, சினைகளுக்குள் சீராடி, இலைகளுக்குள் எழுச்சியடைந்து பூக்களில் பரிணமிப்பது. மரபு பற்றிய முழுமையான புரிதலும் பார்வையும் அற்றவர்கள் அதனை யாப்பு என மயங்கித் திரிகிறார்கள். தமிழ்க்கவிதைகளின் சாரமே பொதுவுடைமை. இதனை ஓர் ஆய்வுப் பொருண்மையாகவும் கொள்ள முடியும். தாமரை ஒரு மலர். அதனைப் பெரும்பாலும் இறைவனுடைய திருவடி மென்மைக்குப் பண்புவமை ஆக்கியே பழக்கப்பட்டவர்கள் நம்மவர்கள். அதற்கு முன்னாலே தலைவியின் முகத்திற்கு உவமம் சொன்னார்கள். இந்த இரண்டு வகையைத் தவிர அவர்கள மலர்களை வேறு எதற்காகவும எங்கும் பயன்படுததினார்களா என்பது அறியக் கூடவில்லை!. முதன் முதலாகப் பாவேநதர்தாம் அழகியலைச் சமுதாயச் சிந்தனைக்கு மடைமாற்றம் செய்து காட்டுகிறார்.

“சித்திரச் சோலைகளே உமை நன்கு
திருத்த இபபாரினிலே இங்கு
எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தரோ
உங்கள் வேரினிலே”

“அழகின் சிரிப்பில் சோலைகளைப பாடியவர்தான் பாவேந்தர். சோலையின் நடுவே சொக்குப்பச்சை படர்க்கொடி முல்லையின் சிரிப்பை ரசித்தவர்தான் பாவேந்தர். இந்த இடத்தில் அவரால் தொழிலாளிகளைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. பூவிற்குச் செம்மை வந்தது தொழிலாளியின் ரத்தத்தினால் என்பது அவரது தற்குறிப்பேற்றம். இந்தக் கருத்தினை உள்வாங்கிய தஞ்சை ராமையாதாஸ் ‘வணங்காமுடி’ என்னும்  திரைக்காவியத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

“மலையே! உன் நிலையே நீ பாராய்
கலைஞன் கை உளியாலே
காவியச் சிலையான
மலையே உன் நிலையே நீ பாராய்
தொழிலாளி உழைப்பாலே தோன்றிடும் சிலையே நீ!
உலகோரும் உனை நாடி உள்ளம் மகிழ்வாரே!”

பாறைகள் கிடக்கின்றன. அவை பாறைகளே! எதுவரைக்கும்? சிற்பியின் உளி படாத வரைக்கும்!. அவன் விரலுக்குத் தெரிந்திருக்கிறது எந்தப் பாறையில் திருவள்ளுவர் இருப்பார்? எந்தப் பாறையில் சிவபெருமான் இருப்பார்? எந்தப் பாறையில் பெரியார் இருப்பார்? எந்தப் பாறையில் பெருமாள் இருப்பார்? எந்தப் பாறையில் தேர் இருக்கும்? எந்தப் பாறையில் யானை இருக்கும்? எந்தப் பாறையில் பாண்டவர்கள் இருப்பார்கள்? எந்தப் பாறையில்  படைகள் இருக்கும்? என்றெல்லாம் அவன் விரல்களுக்குத் தெரிந்து கண்டறிகிறான். கடவுளை வணங்குகிறவன் கல்லை மறக்கிறான். திருவள்ளுவரை வணங்குகிறவன் பாறையை மறக்கிறான். ஆனால் சமுதாயச் சிந்தனையுடைய ஒரு கவிஞன் மூலத்தை மறப்பதில்லை. சிற்பியின் உழைப்பு இல்லாவிட்டால் பாறை பாதையோரத்துக் கல்லாகியிருக்கும் என்னும் கசப்பான உண்மை பாவலனுக்குத் தெரிந்திருக்கிறது, அதனால்தான் பாடுகிறான்.

“கலைஞன் கை உளியாலே காவியச் சிலையான மலையே!”

பாறை தானாகச் சிலையாகாது. சிற்பியின் கையுளி அதன் மேல் படவேண்டும். பக்தர்கள பகவானைத் தரிசிப்பார்கள். கல்லைப் ;பாடாத கவிஞன் சிலையைப் பாடுகிறான். எதில்? காவியத்தில்! பாவலன் சிற்பியைச் சிந்திக்கிறான். இந்த மரபியல் சிந்தனையை அப்படியே தமீழ்நாடன் வழிமொழிகிறார்!

“எல்லாச் சிற்பங்களிலும் தெரிகிறது!
வேர்வை ஒழுகும்
யாரோ ஒரு சிற்பியின்
சிந்தனை முகம்!”

“சிற்பம் என்பது கழித்தல் ஓவியம் என்பது கூட்டல்” என்று பாடினார் அப்துல் ரகுமான். சிதறி விழும் சில்லுகள்தான் சிற்பத்தைக் காட்டுகின்றன. கண்டெடுக்கின்றன. சில்லுகள் தங்களை இழந்துதான் சிற்பத்தைக் காட்டுகின்றன. சிற்பத்தைக் காட்டுவதற்காகத் தங்களை இழக்கின்றன. அந்தச் சிற்பத்தில் மானுட உருவங்களையும் பறவை உருவங்களையும் இறைவன் திருவுருங்களையும் மரபு வழியாகக் கண்டுவரும் கவிதை உலகில் பின்னாலே பாடிய கவிஞர்கள் வழியைப் பின்பற்றி ஒரு சிற்பியின் சாதாரண முகமல்ல “சிந்தனை முகத்தைக்” காணும் தமிழ்நாடனின் கவிதையில் உழைப்பின் உயர்வும் பெருமையும் தென்படுகிறதா இல்லையா?

மழைவேண்டும் தமிழ்நாடன்

பெரும்பாலும் மழைவேண்டித்தான் வழிபாடு நடக்கும். சங்க இலக்கியத்தைப் பொருத்தவரையில் மாரியைப் பாரியோடு ஒப்பிட்டுப் பாடிய புலமைத்திறன் அனைவருக்கும தெரியும். அது மழையின் வண்மை குறித்தது.  வள்ளுவப்பெருமான் திருக்குறள் பாயிரத்தில் வான் சிறபபு என்னும் இரண்டாவது அதிகாரத்தில் அதனை வைத்து அதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இருப்பினும் அவ்வதிகாரத்தில் உலகியல் இடையறாது நடப்பதற்கு அது செய்யும் உதவியையும் அறம் பொருள் இன்பங்களுக்குக் காரணமான அதன் பெருமையையும் உணர்த்தினாரேயன்றி  அந்த அதிகாரத்தின் ஏந்தப் பாடலிலும் மழையின் அழகியல் பாடப்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. அதன் அவசியமே பாடப்பெற்றது,

“ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்)
பாழிய் அம் தோளுடை(ப் ) பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் “

என்னும் திருப்பாவையில் பெருமாள் அருளின் தன்மையை உவம வழி விளக்குகிறார் ஆண்டாள். மழையின் பயணம், அதன் உருவம் நிறம், மின்னலின் தனிச்சிறப்பு இடிமுழக்கம் எனத் தொகுப்பாகப் பாடியருளினார் ஆண்டாள். உவமத்தின் பரிமாணத்தை எப்படி நோக்கிக் கவிதை எழுத வேண்டும் என்பதற்கு இந்தப் பாசுரம் ஒர் ;சிறந்த எடுத்துக்காட்டு, வெகுமக்கள் ஊடகமாகிய திரைப்படத்தில் மழை, காதலர்கள் நனைவதற்காகவே பெய்தது, கவிஞர் மருதகாசிதான் அந்தப் போக்கைக் கொஞ்சம் மாற்றி சமுதாயச் சிந்தனையோடு மழைப்பொழிவைக் காதல் பாட்டாகவே பாடிக் காட்டினார்.

“சொட்டு சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே மழை
கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே

கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெற்றி வேர்வை போலே -அவன்
கஞ்சிக்காகக் கலங்கி விடும்
கண்ணீர்த் துளியைப் போலே  “

முட்டாப் பயலே மூளை
இருக்கா என்று ஏழை மேலே…
துட்டு படைச்ச சீமான் அள்ளிக்
கொட்டுற வார்த்தை போலே

இதற்குப் பின்னால் பலர் மழை பற்றி எழுதியிருந்தாலும் “என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” என்னும் ஒரு மென்மையான ஏக்கக் குரல் வைரமுத்திடமிருந்து வந்தது. அதற்கு முன்போ பின்போ கவிஞர் வசந்தராசன் தனக்கேயுரிய சொற்சிலம்பங்களைக் கைக்கொண்டு மழைக்களம் கண்டார்.

“அணையுடைந்த மேகநதி மலையு ருட்டும்!
அருவியென ஆர்ப்பரித்து த்  தரைவி ரட்டும்!
பனைமரத்தில் பல்துலக்கிப் பசித ணிக்கப்
பாறைகளைக் கடித்துண்டு துப்பி வைக்கும்!
முனைமுறியா ஊசிகளின் காதுக் குள்ளே
முழுப்பகலும்  இரவோடு  முயங்கி நிற்கும்!
சினைமாட்டின்   மடிபோல  நீர்பெ ருக்கும்!
சிற்றூரைப்  பேரூரை  ஓரூ ராக்கும்!*

“பனைமரத்தில் பல்துலக்கும் மழை” எனக் கலிங்கத்துப் பரணியின் களத்தைக்  காட்டிய வசந்தராசன், சினைமாட்டின் மடிபோல நீர் பெருக்கும்! என்னும் நேர்முக வண்ணனையைப் பதிவு செய்திருக்கிறார். இங்கே நான் காட்டிய அத்தனையும் பல தளங்களில் கண்ட கவிதைகளே!. இந்தத் தளத்தில்தான் கவிதை தோன்றும் என்பதில்லை. எந்தத் தளத்திலும் கவிதை தோன்றலாம்.  இந்தப் பின்புலத்தில்தான் தமிழ்நாடனின் மழை பற்றிய  கவிதையை நோக்க வேண்டியதிருக்கிறது. மழையின் தீவிரத்தை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால் உண்டாகும் நடைமுறைச் சிக்கல்களையும் நீண்ட கால இழப்புக்களையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். பெருமழையின் பாதிப்பை உணர்ந்து பாடுகிறார். அதன் விளைவுகளை விருத்தத்தில் வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.

“புன்னகையைத் தொலைத்ததுபோல்  தாவ ரங்கள்
பொலிவிழந்து நிற்பதெலாம்  உன்னால் தானே?
தன்கிளையின் காய், கனிகள்  உதிர்த்த தோடு
தவமரங்கள் வீழ்ந்ததுவும்  உன்னால் தானே?*
தென்றலுக்கே அதிர்கின்ற  சிற்று யிர்கள்
திணறியதும் பதறியதும்  உன்னால் தானே?
இன்புறுத்தும் பறவையெலாம்  சிறகொ டுங்கி
எங்கெங்கோ பறந்ததெலாம்  உன்னால் தானே?

கொட்டகையில் கட்டிவைத்த  ஆடும் மாடும்
குலைநடுங்கித் தவித்ததுவும் உன்னால் தானே?
கட்டளைக்குக் காத்திராமல் பஞ்சா  ரத்துக்
கவின்கோழி தப்பியதும்  உன்னால் தானே?
*நட்டுவைத்த வாழையெலாம் குடிகா ரர்போல்
நலமின்றிச் சரிந்ததும் உன்னால் தானே?
பட்டணத்து மாமனவன்  சொல்லிச் சென்ற
பயணமது நின்றதுவும்  உன்னால் தானே?

பாதையெல்லாம் தொலைந்ததுவும்  உன்னால் தானே?
பயம்வந்து கவ்வியதும்  உன்னால் தானே?
வாதையெலாம் பெருகியதும்  உன்னால் தானே?
வாழ்வியலின் நெருக்கடியும்  உன்னால் தானே?
கூதல்தரும் வேதனையும்  உன்னால் தானே?
குறுகுறுக்கும் ஆசைகளும்  உன்னால் தானே?
ஆதலினால் மழையேவுன்  ஈரம் எங்கே?
அடுத்தமுறை அறம்பயின்று  வரவேண் டும் நீ!

இந்த விருத்தங்களில் தொடர்ந்தாளப்பட்டிருக்கும் ‘உன்னால்தானே’ என்பது உலகியல் வழக்கு. “எல்லாம் ஒன்னால வந்த வினை” என்பதைப் பலரும் கேட்டிருக்கலாம். கவிதையைக் கவிஞன் மொழியில் செவிமடுக்க வேண்டும். அவன் சொல்வதுபோல் நாம் பாவனை செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரம் பேசினால் அந்தப் பாத்திரமாக வாசகன் மாற வேண்டும். பாத்திரம் பேசுவதையெல்லாம் நூலாசிரியன் கருத்து என மயங்கக் கூடாது. அப்போதுதான் படைப்பாளியின் அனுபவம் வாசகனுக்குக் கிட்டும். மிக நுண்ணிய அழகியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை இது,  பாட்டில் துன்பங்களையல்லவா பட்டியலிடுகிறார்? இதில் அழகியல் எப்படி வரும் எனச் சிலர் வினவக்கூடும்.  துன்பம் மக்களுக்கு, கவிதைக்கு அல்ல. கவிதைக்கு அது பாடுபொருள்.

  1. தாவ ரங்கள் பொலிவிழந்து நிற்பது
  2. தன்கிளையின் காய், கனிகள் உதிர்த்தது
  3. தவமரங்கள் வீழ்ந்தது
  4. சிற்று யிர்கள் திணறியது பதறியது
  5. பறவையெலாம் சிறகொ டுங்கி எங்கெங்கோ பறந்தது
  6. ஆடும் மாடும் குலைநடுங்கித் தவித்தது
  7. பஞ்சா ரத்துக்  கவின்கோழி தப்பியது
  8. *நட்டுவைத்த வாழை நலமின்றிச் சரிந்ததும்
  9. மாமன் பயணமது நின்றது
  10. பாதையெல்லாம் தொலைந்தது
  11. பயம்வந்து கவ்வியதும்
  12. வாதையெலாம் பெருகியது
  13. வாழ்வியலின் நெருக்கடி
  14. கூதல்தரும் வேதனையும்
  15. குறுகுறுக்கும் ஆசைகள்

என்று நிரல் படுத்திப் படித்தால் பாட்டின் பொருளுணரலாம். இதற்குள்ளேதான் அடங்கிக் கிடக்கிறது கவிதை. அந்தக் கவிதையின் பொலிவினைப்

  1. புன்னகையைத் தொலைத்தது போல் தாவரங்கள்
  2. *நட்டுவைத்த வாழையெலாம் குடிகா ரர்போல் நலமின்றிச் சரிந்ததும்

என்னும் உவமங்கள் மேலும் பொலிவாக்குகின்றன. சங்க இலக்கியத்தின் தலைசிறந்த மாண்பே அடைச்சொற்கள்தாம். அடையில்லாப் பெயர்ச்சொற்களைச் சங்க இலக்கியத்தின் எந்தப் பகுதியிலும் காண முடியாது. அந்த நீண்ட நெடிய மரபு தமிழ்நாடன் கவிதைகளில் இயற்கையிலேயே அமைந்திருக்கிறது, பெயர்ச்சொற்களுக்கு அடைச்சொற்கள் என்பது நெற்றிக்குத் திலகம் போல!

“ஆதலினால் மழையேவுன்  ஈரம் எங்கே?
அடுத்தமுறை அறம்பயின்று  வரவேண் டும் நீ! “

கெடுப்பதும் மழை என்று பாடிய வள்ளுவர் எடுப்பதும் மழை என்றும் பாடி வேண்டினார். அந்த வேண்டுதலைத்தான் தமிழ்நாடன் முன்னெடுக்கிறார். “மழையே!  உனக்கு இரக்கம் இல்லையா என்றால் அவன் அரசியல் வாதி! மழையே உனக்கு ஈரம் இல்லையா என்றால் அவன் கவிஞன்.  தமிழ்நாடன் கவிஞன் என்பதற்கு இந்தச் சொலலாட்சி போதும்!

உள்ளூர் பார்வை

ஒரு ஐம்பதாண்டுகளுக்கு முன்பாகப் பொங்கல் மலருக்குப் பாட்டு  எழுதியவர்களெல்லாம் கவிஞர்கள் எனப்பட்டார்கள். திருமண அழைப்பிதழ் எழுதிக் கொடுத்தவர்களெலலாம் வரலாற்றாசிரியர் ஆனார்கள். தற்போதும் நிலைமை அப்படியேதான் ;இருக்கிறது. என்ன ஒரு மாற்றம்? கவிதையில் தங்களுக்குப் பிடித்தமான தலைவர்களைப் பாடித் தீர்க்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும் செய்த செயல்களைச் சாதனைகளாகக் காட்டி, அவற்றை அப்படியே பல்லாங்குழிக்குள் வைத்த சோழிகளைப் போல, யாப்புக்குள் திணித்து நோபல் பரிசுக்கு அனுப்பிவிடுகிறார்கள். அப்படியானால் தனிமனிதனைப் பாடுவது கவிதையாகாதா என்றால் ஆகும். அது கவிதையாக இருக்க வேண்டும். இது வரை நானறிந்த வரை மகாகவி பாரதிக்குப் பாரதிதாசன் எழுதிய பாராட்டினைப் போல் வேறு யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. அதற்கு அடுத்தபடியாக உ.வே.சாவுக்கு மகாகவியும் அறிஞர் வ.சுப மாணிக்கமும் எழுதிய பாராட்டுக்கள் அற்புதமானவை.

“தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்”

என்னென்பேன்?” என வியந்து போற்றிய அந்த உணர்ச்சிப் பாராட்டு இன்றைக்கு இல்லை. காரணம் பொருளைப் பாடுவதற்கான காரணங்கள் உண்மையானவையாக இல்லை.  கவிஞனாகவும் இல்லை. பாடுகிற தலைவனிடமிருந்து எதனையாவது எதிர்பார்த்து எழுதினால் அது பாராட்டாக இருக்கலாமே தவிர, கவிதையாக இருக்காது. எதனையும் எதிர்பார்க்காமல் எழுதுகிறவன் கவிஞனாக இல்லாமல் வாய்பாட்டு வணிகனாக இருந்தால் தளையிலேயே சிக்கித் திணறுவான். எனவே இரண்டும் சரியாக இருக்க வேண்டும்.  தமிழ்நாடன்; இரண்டும் சம அளவில் கலந்த கலவை. அதனால்தான் அவர் யாரைப் பாடினாலும்  கலைஞரைப பாடியதுபோல அமையவில்லை. அவரும் இவரும் திருவாரூரைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடனின் தந்தையார் கலைஞரின் அருமையுணர்ந்து அவருக்கு நெருக்கமானவர். கவிஞர் பிறர் கலைஞரைப் பாடுவதற்கும் தமிழ்நாடனை ஒத்தவர் கலைஞரைப் பாடுவதற்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. கவிதை மணங்கமழும் கவிதைகளால் கலைஞரை அவர் பாடியிருப்பன  கவிதைச் சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன .

நீயெழுதும் போதோ நெருப்பெரியும்! உன்கையால்
நீயெடுக்கும் பூவும் நிறம்மாறும் – நீயெழுப்பும்
போர்முழக்கச் சொல்லில் புயல்வீசும்! செந்தமிழின்
வேர்நீ விழுதுகளும் நீ!

ஒரு நேரிசை வெண்பா எப்படி அமைந்தால் கற்பார் உள்ளத்தைக் கவரும் என்னும் வித்தை தெரிந்தவர் தமிழ்நாடன். அந்த வெண்பாவில் முரண் அமைப்பைக் கையாளும் கலை கற்றவர் அவர். சொல் முரண் பொருள் முரண் என்னும் வகைபாடுகளை நன்கு அறிந்தவர்.அதனால் அந்த முரண்களை மிக இலாவகமாகக் கையாண்டு சில வெண்பாக்களைக் கலைஞருக்குப் பாடியிருக்கிறார் இன்னொரு வெண்பா இப்ப்டி அமைந்திருக்கிறது

“உன்னிதழ்கள் என்ன ஒளித்தமிழின் தாய்வீடா?
பொன்சிறகுச் சொற்களெல்லாம் பூக்கிறதே! உன் பேச்சால்
தேன்பூச்சினுள்ளும் திராவகம் ஊறுவதை
நான் பார்த்தேன் அன்றொரு நாள்!”

அரசியல் களம் தமிழிலக்கியக் களம் என்னும் முரண்பட்ட இரு களங்களீலும் மாபெரும் வெற்றிகண்ட கலைஞரை முரண் தொடையினாலேயே பாடியிருப்பது சிலாகிக்கத தகுந்தது. தேர்தலில் கட்சி முழுமையாகத் தோற்றாலும் சிரித்துக் கொண்டே இருக்கும் தலைவர் கலைஞர்! காரணம் இலக்கியம்! “நீ என்ன தேனும் பாதரசமும் கலந்த கலவையா?” என்று வைரமுத்து ஒரு முறை கலைஞரைப் பாடியிருந்தார். கலைஞரின் இந்த முரண் தமிழ்நாடனை மட்டுமன்று எந்தக் கவிஞனையும் கவரும்! இந்த முரண்களின் தொகுப்பை இப்படி அமைத்துப் பாரக்கலாம்!

  1. கருவியாக இருக்க வேண்டிய நெருப்பே எரிகிறது
  2. பூக்களுக்குப் பதிலாகச் சொற்கள் பூக்கின்றன.
  3. தமிழ்ச்சொற்கள் கலைஞர்வழி பூக்களாகக் கொட்டுகின்றன
  4. மென்மையான சொற்கள் அனல் வீசும் சொற்களாக மாறுகின்றன
  5. பூக்களில் தேனுக்குப் பதிலாகத் திராவகம் சொட்டுகிறது
  6. தமிழிலிருந்து வந்த கலைஞர் தமிழைத் தாங்குகிற விழுதாகவும் இருக்கிறார்.

எட்டு அடிகள் கொண்ட இரு நேரிசை வெண்பாக்களில் கலைஞரின் சொற்களின் இருவகை முரண்களைக் கவிதையாக்கியிருக்கிறார் தமிழ்நாடன்! பாடாண் திணைக்குள் கையறு நிலை அடங்காது.  ஆனால் கையறு நிலையில் பாடாண் திணை அடக்கம்! அந்த வகையில் கலைஞருக்குப் பாடிய கையறு நிலைப் பாடல பாடாண் திணைப் பொருண்மைகளை உள்ளடக்கிக் கவித்துவமாகப் பாடியிருக்கும் தமிழ்நாடனின் கவியாளுமை இதனால் புலப்படக் கூடும்.

உலகப்பார்வை

உரைநடைக்கும் கவிதைக்கும் எத்தகைய வேறுபாடுகள் உள்ளனவோ அத்தகைய வேறுபாடுகளே சாதாரண மனிதர்களுக்கும் கவிஞர்களுக்கும் உள்ளன. சாதாரண மனிதன் நிகழ்வியலைப் பேசுகிறான். கவிஞன் கற்பனையில் மிதக்கிறான். சாதாரண மனிதன் தரையில் நடக்கிறான். .கவிஞன் வானத்தில் பறக்கிறான்.  சாதாரண மனிதன் மனிதர்களிடத்தில் மட்டும் பேசுகிறன். கவிஞனோ மரம், செடி, கொடி என அனைத்து உயிரினங்களோடும் உறவாடுகிறான். சாதாரண மனிதன் உரையாடலில் புனைவுகளே இல்லை. ஆனால் கவிஞன் புனைவுகள் இன்றி எழுதவே முடியாது, சாதாரண மனிதன் அக்கம்பக்கத்து வீட்டாரையும் பகைத்துக் கொள்கிறான். கவிஞனோ மானுடச்சமுதாயம் அத்தனையையும் தன் பார்வையால் தழுவிக் கொள்ளுகிறான். அடுத்த வீட்டுச் சுவற்றையே சாதாரண மனிதன் பார்த்துக் கொண்டிருக்கிறான். சீனப் பெருஞ்சுவரையும் தாண்டியும் கவிஞன் சிந்திக்கிறான். உள்ளூர் தகராறு கூட ஒரு சாதாரண மனிதனுக்குத் தெரிவதில்லை!. ஆனால் ஈராக் ஈரான் போரிலிருந்து இஸ்ரேல் போர் வரை கவிஞனுக்குத் தெரிந்திருக்கிறது, அவனுடைய மானுடப் பார்வை விசாலமானது. அதனால்தான் சங்கச் சான்றோர்களும் அவர்வழி வந்த புலவர் பெருமக்களும் தங்கள் இலக்கியங்களை ‘வையம்’ என்றோ ‘உலகம்’ என்றோ தொடங்கினார்கள்.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ!
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ!

வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ!
வெறும் காட்சிப் பிழைதானோ!

போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ!
இந்த ஞாலமும் பொய்தானோ!

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ!
அங்குக் குணங்களும் பொய்களோ!

காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ!

என்று மகாகவி பாடுகிறார் என்றால் தன் வாழ்க்கைத் துயரத்தை மறந்து வறுமையைத் துறந்து பாடுகிறார் என்பதை அறிதல் வேண்டும். அசையும் பொருள் அசையாப்பொருள் ஆகியவற்றைத் தனக்கு உறவாக்கிக் கொள்ளும் ஒரு தனித்திறன் மகாகவிக்கு இருந்திருக்கிறது! அவரைத் தொடர்ந்து வந்த பாரதிதாசன்,

அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நான் என்று கூவு!
பிரிவிலை எங்கும் பேத மில்லை!
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன், உடைமை மக்களுக்குப் பொது!
புவியை நடத்து! பொதுவில் நடத்து!

உலகு முன்னால் தனிமனிதன் பின்னால் என்னும் சமுதாய நோக்கத்தை முன்னெடுக்கிறார். பாரதிதாசனுடைய கவிதைகள்  தமிழ், தமிழர் என்று தொடங்கித், திராவிடம் பாடி, தேசியம் பாடி, உலகப் பொதுமைபாடி, மானிடத்தின் மகத்துவம் பாடி விசாலப் பார்வையால் விரிந்து  விரிந்து செல்லும் இயல்புடையன.இந்த இயல்பு அவர் ஒரு கவிஞர் என்பதால் வந்த இயற்கையமைதி! ஒரு தனிமனிதனிடத்தில் இத்தகைய பரந்துபட்ட விசாலமான மனத்தை அவ்வளவு எளிதாகக் கண்டு விட முடியாது.

இந்த நீண்ட நெடிய மரபில் வந்தவர்தான் ஆரூர் தமிழ்நாடன். காதலைப் பற்றி எழுதுவது, கண்ணீரைப் பற்றி எழுதுவது, வாழ்வியல் சிக்கலைப் பற்றி எழுதுவது என அவர் பயணம் செய்திருக்கிற களங்கள் பலவாயினும்

என் கனவென்பது பசியறு உலகம்!
என் சுகம் என்பது சூதறு மனிதம்!
என்னிசை என்பது இயற்கையின் பாடல்!
என் தவம் என்பது வேர்வையின் வெகுமதி!
என்னூர் என்பது உலகப் பெருவெளி!
என்னுற வென்பது மானுடக் கூட்ட்ம்!!
என் மகிழ்வென்பது உலகின் மகிழ்வு!
என் துயர் என்பது பிறர் படும் துயரம்!!

என்னுந் தன்னிலை விளக்கம் ஒரு கொள்கைப் பிரகடனமாகவே ஒலிப்பதைக் காணலாம். ‘யாதும் ஊரே யாவரும கேளிர்’ என்று தொடங்கிய இந்த மரபின் நீட்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருக்க வேண்டும். மரபியல் சிந்தனைகள் என்பன இவையே. மரபுக்கவிதைகள் என்பனவும் இவையே. மனிதனே ஒரு சமுதாய விலங்கு! அவன் கவிஞன் ஆனால் மானுட நேசிப்பே அவன் பிறவி நோக்கமாகிவிடுகிறது. சமுதாயத்திற்காகத் தலைவர்கள் பாடுபடலாம். உண்மைக்கவிஞனோ சமுதாயத்திற்கே தன்னை ஒப்படைத்து விடுகிறான். அப்படி ஒப்படைத்த ஒரு சிலருள் தமிழ்நாடனும் ஒருவர்!

கவிதையில் புதிய வடிவங்கள்

பொருளுக்கேற்ற வடிவம் என்பதே தமிழ்க்கவிதைகளின் வடிவக் கோட்பாடு. இது பற்றிய என் ஆய்வு பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகியிருக்கிறது. சிலப்பதிகாரத்தை விருத்தத்தில் எழுதியிருந்தாலும் கம்பராமாயணத்தை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தாலும் இரண்டும்; படுதோல்வி அடைந்திருக்கும். இங்கே தொட்டதற்கெல்லாம் “தாக்கம்! தாக்கம்” என்னும் ;கடுமையான பதப்பிரயோகத்தைப் பயன்படுத்தி புதிய வடிவங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது பற்றிக் கவலைப் பட ஏதுமில்லை. ஜப்பான் நாட்டுக்காரன் சிதைந்துபோன தன் நாட்டை மறுசீரமைப்பு செய்துவிட்டுப் புதுவாழ்வை நோக்கி எழுச்சி நடை போட்டுக்கொண்டிருக்கிறான். இவர்கள் ஜப்பான் மொழி தெரியாமலேயே ஹைக்கூ என்பது ஜப்பானிய தாக்கத்தால் வந்நது என்பார்கள். பாரதிபோல யாரோ ஒருவர் மிகுந்த சிரமப்பட்டுத் தன் பன்மொழிப் புலமையால் அதனையோ அது போன்றவற்றையோ அறிமுகப்படுத்தியிருக்கலாம்.  திரு அப்துல் ரகுமான் அத்தகைய பன்மொழி வித்தகர். மரபு சாராத கவிதைகளைப் பற்றிய அவருடைய கருத்துக்கள ;மிகவும் ஆழமானவை. அவருடைய முனைவர்ப் பட்ட ஆய்வேடே “புதுக்கவிதைகளில் குறியீடு” என்பதாகும். இவர்கள் சிரமப்படாமலேயே அந்த வடிவத்தைத் தம் சிந்தனைகளுக்கு வடிவமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். புதுக்கவிதை அதுபோல்தான் கலீல் ;ஜிப்ரான் என்பார்கள். பாப்லோ நெருடா என்பார்கள். எஸ்ராபவுண்டு என்பார்கள். டி.எஸ்.எலியட் என்பார்கள். இவர்களுக்கு உள்ளூரில் எந்தத் தாக்கமும் இருக்காது. வெளிநாட்டு இறக்குமதியால்தான் இவர்கள் தாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நமக்கு இதுபோன்ற எது பற்றியும் கவலையில்லை. இந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக், பழமொன்ரியூ என்றெல்லாம் கவிதைச் சந்தையில் பல பொருள் வணிகம் செய்யப்படுகிறது, இந்த வணிகம் ஒருவகையில் இந்த மண்ணில் நிலை கொண்டிருந்த மரபுக்கவிதையின் பேரழிவுக்குப் பெருங்காரணமாகவும் அமைந்தது. இத்தகைய வடிவங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நோக்கினால் சிலவற்றில் கவிதைகள் இல்லாமல் இல்லை. இந்த வடிவங்கள் தமிழுக்குப் புதியன என்பதில் எத்தகைய ஐயமோ இவை வரவேற்கப்படவேண்டியவை என்பதில் தயக்கமோ எனக்கு இருந்ததில்லை ஆனால் தள்ளுவண்டி தக்காளியைப போல வணிகத்திற்குப் பயன்படும் போதுதான் கொஞ்சம் நெளிய வேண்டியதிருக்கிறது.

தமிழ்நாடன் ஒரு ஆற்றல் வாய்ந்த படைப்பாளர். கவிதைப் படைப்பாளர். இயல்பிலேயே கவிஞர். மரபுக்கவிதைகளைச் சரளமாக எழுதும் அவர், புதிய கவிதை வடிவங்களை உள்வாங்குவதற்கு எந்தச் சிரமத்தையும் கொள்வதில்லை. காரணம் கவிஞனுக்கு அதுபோன்ற சிரமங்கள் ஏதும் வராது. அவன் மனம் எப்போதும் கவிதையையே சிந்தித்துக் கொண்டிருப்பதால் வடிவங்கள் அவனை ஆட்கொள்ளுவதில்லை. மாறாக அவனே எல்லா வடிவங்களையும் ஆட்கொள்கிறான். உலகம் யாவையும் தாமுளவாக்கவும் நிலைபெறுத்தலும் நீக்கலும் கொண்ட பரம்பொருளைப் போல கவிதையின் எந்த வடிவத்தையும் ஆக்கவும் நிலைபெறுத்தவும் நீக்கலும் செய்வதற்கான வல்லமையைப் பெற்றவர் தமிழ்நாடன். அவருடைய புதிய கவிதை வடிவங்களிலிருந்;து சில கவிதைகள் இப்படி அமைந்திருக்கின்றன. கவிஞர் சுரதா ஒரு ஊருக்குச் சென்றிருக்கிறார். இரவு நேரம். நாய் குரைக்கிறது. அடித்துத் துரத்துவதற்குச் சரளைக் கற்களைத் தேடுகிறார். அவை பூமியோடு ஒட்டிக் கொண்டு இவர் கைக்குக் கிட்டவில்லை. உடனே சொல்கிறார். “என்ன இது இந்த ஊரில்? நாயை அவிழ்த்துவீட்டுக் கல்லைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்?” பிறவியிலேயே கவிஞனாக இருந்தவனுக்குத்தான் இது மாதிரி கற்பனைகள் தோன்றும். நாயைக் கட்டிப் போடுவது எல்லாருக்கும் தெரிந்த வினைதான். ஆனால் மண்ணோடு ஒட்டிய சரளைக் கற்களைக் கட்டிப் போட்டிருப்பதாக எல்லாராலும் கற்பனை செய்துவிட முடியாது.

“என்ன அசதியோ
அசையாமல்
படுத்திருக்கிறது
இரவு;
நான்தான்
புரண்டபடியே இருக்கிறேன்.

மனிதன் அசையாமல் கிடப்பான். அசைந்தபடியும் கிடப்பான். இரவுக்கு அந்த வேறுபாடு கிடையாது. கவிஞனாகையால் உழைத்துக் களைத்த உடம்பல்லவா? இவன் தூக்கம் வராமல் அசைந்து புரண்டு கிடந்து வானத்து இருளை நோக்குகிறான். அந்த இருள் அசையாமல் கிடக்கிறது. இருள் எப்போதுமே அசைவதோ புரள்வதோ இல்லை. கவிஞன் புரண்டதால் வானம் புதிதாகப் புரளாமல் படுத்திருப்பதுபோல் தோன்றுகிறதாம்.

“ வீணை வாசிக்கிறாய் நீ!
கண்களால் ரசிக்கிறேன் நான்!”

கல்யாண அகதிகள் என்று ஒரு திரைப்படம் அதில் நாயகன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவன். அவன் காதலி தன் தோழிகளிடம் சொல்லுவாள் “நான் நியூஸ் பாக்கணும்! நான் நியூஸ் பாக்கணும்!” என்று தோழிகள் வியப்படைவார்கள். செய்திகள் செவிக்குரியன. ஆனால் தங்கள் தோழி ‘பாக்கணும்’ என்றல்லவா சொல்கிறாள் என்று. காதலுக்குக் கண்தான் தலைமையாசிரியர். மற்ற எந்த புலனும் குறிப்பாக மூளை பயன்படவே பயன்படாது, ‘நான் மூளைக்கு மூளையாக அவளைக் காதலித்தேன் என்று எவனும் கூற மாட்டான். நான் உயிருக்கு உயிராக அவளைக் காதலித்தேன் என்றுதான் கூறுவான். மூளை அறிவுப் புலன். இதயம் உணர்வுப் புலன்! அதனால்தான் கவிஞனாகக் காதலித்த தமிழ்நாடன் வீணையிசையைக்  கண்ணால் பார்த்து ரசித்திருக்கிறார். நான் அறிந்தவரையில் இசையைப் பாரத்து ரசித்தவர் இவராகத்தான் இருக்க முடியும்! கவிதையென்றால் இப்படித்தான் அமைய வேண்டும். ஆறே சொற்கள்! ஒரு பொருள் முரண்! அருமையான வெளிப்பாடு

“ஒரு சூறாவளியைப்
போலத்தான்
என்னை நீ கடந்திருக்கிறாய்;
சேதத்தின் மதிப்பில்
தெரிகிறது
உன் மதிப்பு.”

நம்முடைய நாட்டுத் தலைவர்கள் மழை பெய்து, வெள்ளம் வந்து, நடப்பியல் வாழ்க்கை சீரழிந்து ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிய பிறகுதான் வெள்ளச் சேதத்தை விமானத்திலிருந்து மதிப்பிடுவார்கள்  காதலும் அது போல்தான்! இந்தக் குறுங்கவிதை தலைவனுக்கும் பொருந்தும் தலைவிக்கும் பொருந்தும். காதலில் “சேதாரம் ஆணுக்கு” என்பது ‘பின் நவீனத்துவம்!”  வளையல் கழண்டு விழுவதும், மேனி பசப்பதும், தோள் துவளுவதும் விழிகள் பஞ்சடைவதும் பழந்தமிழ்க் கவிதைகளில் தலைவனுக்குச் சொல்லப்பட்டதாகத் தகவல் இல்லை. பின்னாலே வந்தவர்கள் இந்த மரபை மாற்றி காதலியைப் பிரிந்த தலைமகன் தாடி வளர்த்துக் கொள்வதுவரைப் பாடித் தீர்த்தார்கள். இழந்த பிறகுதான் இருப்பின் பெருமை புரியும். நம்முள் எததனைப் பேர் பெற்றோரை, மனைவியை. கணவனை வாழுங்காலத்தில் புரிந்து கொள்கிறோம்! காதலுக்கும் இது பொருந்தும்.  தன்னிலை மறந்த காதலில் ஏதும் தெரிவதில்லை. இழந்த பிறகுதான் இழந்தது எது என்பதே தெரிகிறது! புரிகிறது.  வடிவங்கள் எதுவாயினும் கவிதைகளை அவற்றில் வார்த்தெடுக்கும் வல்லமை கொண்டவர் ஆரூர் தமிழ்நாடன் என்பதற்கு இந்தக் கவிதைகள் ஒரு குறைந்த அளவு எடுத்துக் காட்டுக்களே! தன்னைப் பாதித்த அனைத்துப் பொருண்மைகள் பற்றியும் ஆரூர் தமிழ்நாடன் முகநூலில் பாடியிருப்பவனவற்றை என்னால் இயன்ற அளவு திறனாய்வு வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறேன். ஒரு அறியப்பட்ட கவிஞனுக்கு அறிமுகம் தேவையில்லை!

நிறைவுரை

கவிதையில் வாழ்வதே வாழ்வு என்பது திறனாய்வாளனாகிய என் வாழ்நாள் கொள்கை! நல்ல கவிதைகளையும் அவற்றை எழுதிய உண்மைக் கவிஞர்களையும் அறிமுகம் செய்வதை ஒரு கடனாகக் கொண்டிருக்கிறேன். அந்தக் கடமையை நான் ‘வல்லமை’ யோடு செய்து வருகிறேன். முகநூலில் நான் கண்ட உண்மைக் கவிஞர்கள் சிலருள் ஆரூர் தமிழ்நாடனும் ஒருவர். தமிழ்மணக்கும் தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர். அவருடைய கவிதைகளைப் பற்றிய இந்த என்னுடைய திறனாய்வு இன்னும் பல திறனாய்வுகளுக்கு வழித்தடமாக அமைய வேண்டும் என்பது என் ஆசை. எவ்வளவு சிறந்த கவிஞரானாலும் அவருடைய எல்லாக் கவிதைகளையும் நான் திறனாய்வு செய்வதுமில்லை. பிழைவேட்டையை நான் திறனாய்வாகக் கருதுவதுமில்லை. அரிய பிழைகள் சுட்டிக்காட்டப்படலாம். திறனாய்வில் பல வகை உண்டு. நடுநிலைத் திறனாய்வு (Standard Criticism), விருப்பு வெறுப்பின் எல்லையில் இருந்து திறனாய்வு செய்வது (accentric Criticism) வரலாற்று முறைத் திறனாய்வு (Historical Criticism). கவிஞனின் வாழ்வை ஓட்டி அமைகின்ற திறனாய்வு (Biographical Criticism) விதிகளின் அடிப்படையில் திறனாய்வு செய்வது (Dogmatic Criticsm) கவிஞனின் உணர்ச்சிவழி நின்று செய்கின்ற திறனாய்வு (impressionistic Criticism) எனப் பலவகைப்படும். அரூர் தமிழ்நாடன் பற்றிய கவிதைகளைப் பற்றிய இந்தத் திறனாய்வு ஒரு உணர்ச்சிவழித் திறனாய்வு. (impressionistic Criticism)  தமிழ்நாடன் ஒருமுறை  எழுதியது போல ‘ஆய்வென்று ஜால்ராவைத் தட்டுகின்றார்’ என்பது போன்றது அல்ல! இந்த எண்பது வயதில் நான் யாருக்கு ஜால்ரா தட்டப் போகிறேன்? ஆரூர் தமிழ்நாடனின் பன்முகப் பரிமாணங்களை உணர்ச்சிவழி நின்று கண்டறிய என்னுடைய மிகச் சிறிய முயற்சி இது.!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.