படக்கவிதைப் போட்டி (12)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
அன்புள்ள பவளசங்கரி,
இம்மாதிரி அப்பாவி மாற்றுத் திறனாளி படங்களைக் காட்டி கவிதை எழுதச் சொல்லாதீர்கள்.
சி. ஜெயபாரதன்
அன்புள்ள பவளசங்கரி,
இப்படத்தில் உள்ள ஏழை மாந்தர்கள் இன்னும் கௌரவமோடு உயிரோடன் இருக்கலாம். அவருக்கும் “பிரைவசி” உள்ளது. நமது உற்றார், உறவினர், நண்பர் பெற்றோர் இதுபோல் அங்கயீனமாக இருந்தால், இப்படிப் படமெடுத்துப் பாட்டெழுத வல்லமைப் பொது வலையில் போட அனுமதிப்போமா ?
இப்படத்தை உடனே நீக்கி வேறொன்றைப் போட வேண்டுகிறேன்.
நன்றி,
சி. ஜெயபாரதன்
அன்பின் திருமிகு ஜெயபாரதன்,
தங்களுடைய கருத்து சிந்திக்கத் தக்கதே. இருப்பினும் மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு மேலும் தன்னம்பிக்கையூட்டும் வகையில் கவிதைகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் இதை வெளியிட்டிருக்கிறோம். இருப்பினும் தங்களுடைய மேலான கருத்தை ஃபிளிக்கர் குழும பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் அவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம் என்று நினைக்கிறேன். தங்கள் மடலை அவருக்கு அனுப்புகிறேன். நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
எல்லாப் படங்களிலும் யாரோ ஒருவரின் பிரைவஸி இருக்கவே செய்யும்; ஒவ்வொருவரிடமும் அனுமதி பெற்றுப் படம் எடுப்பது, இயல்பாக இராது. அதை வெளியிடுகையில், தொடர்புடையவர் அனைவரிடமும் அனுமதி பெறுவதும் நடைமுறையில் கடினம். பல நேரங்களில் அவர் யார் இன்னார் என்றே படம் எடுத்தவருக்குத் தெரியாது. ஒன்றுக்கு மேற்பட்டவர் இருப்பின், அத்தனை பேரிடமும் அனுமதி பெறுவது மிகக் கடினம். இந்தப் படத்தில் ஊனமுற்றவர் மட்டுமின்றி, பலூன் பிடித்த இளையோரும் உள்ளார். வயலும் வானமும் கூட உள்ளது. உலகின் பன்முகத் தன்மையை இதில் காண முடியும். நாம் மறந்துவிட்ட பலரை இத்தகைய படங்களே நினைவூட்டுகின்றன. இதில் எதைப் பற்றி, எந்தக் கோணத்தில், இவர்களை எப்படித் தொடர்புப்படுத்தி எழுதலாம் என்பது, படைப்பாளிகளின் சுதந்திரம். மேலும், இதற்கு எழுத வேண்டாம் என நினைப்பவர்களை யாரும் வற்புறுத்தப் போவதில்லை. உங்கள் கருத்துரிமையை மதிக்கிறோம். எழுதுவதும் எழுதாததும் என்ன எழுதுவது என்பதும் படைப்பாளிகளின் உரிமைகள். இந்தப் படத்தை நீக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து.
அண்ணா கண்ணன் ஒரு வழக்கறிஞர் அல்லர். விடுதலை நாட்டில் வலைகளில் பிறரது பிரைவசியை நாம் மதிக்கத் தேவையில்லை என்று சொல்வது பொறுப்பற்றது.
சி. ஜெயபாரதன்
காற்றடைத்த பலூனே
உயரப் பறக்கும் போது
உயிரடைத்த உடம்பு
விழுந்தா விடும்
மண்ணில்?
எழுந்து நிற்க
கால்கள் வேண்டாம்
தூக்கி நிறுத்த
துணைகள் வேண்டாம்
இதயம் போதும்!
மிரள வேண்டாம் நண்பா
என் கவிதைக்குள் உன்னைக்
காட்சியாக்கி
ஊருக்குள் உன் உரத்தை
உரக்கச் சொல்வேன்…
துணிந்து வா நண்பா
-கனவு திறவோன்
அண்ணா கண்ணன் அவர்களின் கருத்தை நானும் ஒரு ஒளிப்படக்கலைஞர் மற்றும் கவிதாயினி என்ற முறையில் நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
ஒளிப்படக்கலை என்பதே நம்மைச்சுற்றியிருக்கும் வாழ்வியலை உள்ளது உள்ளபடி ஆவணப்படுத்துவதுதான். சிறு தோல்விகளுக்கும் மனம் முடங்கி விடும் மனிதர்கள் மத்தியில் ஊன்றுகோல் உதவியுடனாவது தன் காலில் நிற்கும் அவரது தன்னம்பிக்கையை இப்படத்தில் நான் காண்கிறேன். மேலும் இப்படத்தில் அவரது ப்ரைவசி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்டவரின் அனுமதியுடனேயே படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் ஒளிப்படப்போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஒளிப்படக்கலைஞருக்கும் மிகுந்த மகிழ்ச்சிதான். இப்படத்தில் இடம்பெற்றிருப்பவர்களின் கவுரவத்திற்குப் பங்கம் வரும் வகையில் நாம் உபயோகப்படுத்தவும் இல்லை.
தங்களின் கருத்துக்கு நன்றி.
இசையால் மட்டுமல்ல கவிதைகளாலும் நிரம்பியது இவ்வுலகு. நானே எடுத்த படங்களுக்கு நான் எழுதிய கவிதைகள் என் கவிதை வலைப்பூவில் நிறைய உள்ளன. மாதிரிக்கு ஒன்றிரண்டு.(எல்லாம் ஒரு விளம்பரம்தான் :-D)
http://amaithichaaral.blogspot.com
ஒரு மாற்றுதிறனாளியை ஊக்கப் படுவதற்காக எழுதுகின்றேன்
பயிருக்கு காவலாய் அன்றாடம் வந்து நிற்கின்றேன்
குத்தகைக்கு கொடுத்து விட்டு பையிரிடமுடியாமல் தவிக்கின்றேன்
இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நினைக்கமுடியவில்லை
என் குடும்பத்தின் நிலை கண்டு அவர்களின் பசி தீர்க்கமுடியவில்லை!
பயிர் செய்யவும் வழி தெரியவில்லை, உடம்பும் ஒத்துழைக்கவில்லை
நான் ஒற்றைக் கால் நொண்டியானாலும் எனது நம்பிக்கை முடமாகாது,
என் குடும்பத்தை தவிக்கவிட மனமில்லை, வாழா வழி செய்வேன்
ஒருவனை பலூன் விற்கவும், துணைக்கு ஒரு பிள்ளையும் இருக்கிறதே !
என்னைப் போன்ற மாற்று திறனாளிக்கு மனதில் பலமுண்டு
வாழ்க்கையில் முன்னேற எனக்கு என்றும் திறன்னுண்டு
வாழ்க்கையில் ஏமாற்ற பலரும், சிலரே உதவி செய்வதுண்டு
எங்கே சென்றிடும் காலம்! அது என்னையும் வாழவைக்கும் !
திருமதி சாந்தி மாரியப்பன் வலைப் பூங்காவில் முகத்துடன் முழுவடிவம் தெரியும் மாற்றுத் திறனாளி படம் ஒன்று கூட இல்லையே. இருக்கும் ஒளிப் படங்களில் ஆடவர் பெண்டிர் முகம் தெரியும் படம் ஒன்று கூடக் கிடையாது.
மாற்றுத் திறனாளி முழுப்படங்களை, முகத்துடன் அவரது அனுமதியின்றி வல்லமையில் போட்டு பாட்டெழுதச் சொல்வது மனித நேயமற்ற செயல்.
சி. ஜெயபாரதன்
/// நானே எடுத்த படங்களுக்கு நான் எழுதிய கவிதைகள் என் கவிதை வலைப்பூவில் நிறைய உள்ளன. மாதிரிக்கு ஒன்றிரண்டு.(எல்லாம் ஒரு விளம்பரம்தான் :-D)
யாருக்கு விளம்பரம் ? ஒளிப்படத்தில் இருப்பவருக்கா ? இல்லை, ஒளிப்படம் எடுத்தவருக்கா ? ஒளிப்படம் தேர்ந்தெடுத்தவருக்கா ? அல்லது படக்கவிதைப் பாடல் எழுதிய ஆசிரியருக்கா ?
ஒளிப்படக் கவிதையின் குறிக்கோள் விளம்பரமா ? மாற்றுத் திறனாளி படம் காட்டப் படுவது விளம்பரத்துக்கா ?
சி. ஜெயபாரதன்
இனி எல்லாம் கனவில் தான்
———————————————
பள்ளிக்கூடம் போகலாம்
பாடம் படிக்கலாம்
ஓடி ஆடி விளையாடலாம்
பலூன் உடைத்து விளையாடலாம்
கோவில் கொடையன்று
பலூன் பொம்மைகள் வாங்கலாம்
இனி எல்லாம் கனவில்தான்.
முன்பெல்லாம்
வியாபாரம் முடித்து
மாலையில் தேன் மிட்டாய்
வாங்கிக் கொண்டு வரும் அப்பாவுக்குக்
காத்திருப்போம்…
தெருக் கோடியில்
அப்பாவின் சைக்கிள் சத்தம்
கம்பில் பறக்கும் பலூன்கள் படபடப்பு
காணாமல் போன ஜவ்வு மிட்டாய்
தரும் ஆயிரம் உணர்ச்சிக் குவியல்
இனி எல்லாம் கனவில் தான்.
அம்மா காத்திருப்பாள்
சந்தையில் வாங்கி வரும்
சமையல் சாமான்களுக்காகவும்
பத்திரமாய்க் கூட்டி வரும்
அப்பாவுக்காகவும்.
சீக்கிரம் போட்டோ எடுங்க அண்ணே
வீட்டுக்குப் போகணும்.
-கனவு திறவோன்
பச்சை பசுமைகளில் ! பே ரப்பிள்லைகள் !ஊன மாக இருந்தாலும் !உண்மையாக உழைத்திடுவோம் !இன்பமாக வாழ்ந்திடவே ! விற்றிடுவோம் வண்ண பலுன்கள் !ஒற்றுமையை இருந்தால்தான் ,கோடிநன்மை அடைந்திடலாம்! அறிந்திடுங்கள் மானிடரே ! நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்களே !
\\\ஒளிப்படக்கலை என்பதே நம்மைச்சுற்றியிருக்கும் வாழ்வியலை உள்ளது உள்ளபடி ஆவணப்படுத்துவதுதான். சிறு தோல்விகளுக்கும் மனம் முடங்கி விடும் மனிதர்கள் மத்தியில் ஊன்றுகோல் உதவியுடனாவது தன் காலில் நிற்கும் அவரது தன்னம்பிக்கையை இப்படத்தில் நான் காண்கிறேன். மேலும் இப்படத்தில் அவரது ப்ரைவசி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. ///
வலை இதழ் வெளியீட்டுக்கும் வலைநெறிகள் எழுதப்படாத வலைவிதிகள் உள்ளன. ஒளிப்படக் கலைக்குக் கட்டுப்பாடு உள்ளது. ஒளிப்படக்கலை என்பதே உள்ளதை உள்ளபடி சொல்வது என்று பிறருக்குக் கூறும் சுதந்திரம் சிந்தித்தால் தன்னிலைக்கு ஒவ்வாது. உங்கள் வீட்டிலுள்ள ஊனமுற்றவர் படத்தை உங்கள் அனுமதியோடு அடுத்தவன் வலையில் படக்கவிதைக்கு இடப் பொறுப்பீர்களா ?
1. ஊனமுற்றோர் படத்தை முதலில் வலையில் வெளியிட்ட போதே அவரது பிரைவசி போச்சு.
2. அதற்குப் படக்கவிதை எழுதுங்கள் என்று சொல்லும்போது மேலும் பிரைவசி போச்சு.
3. சொல்லியும் ஒளிப்படத்தை நீக்க மாட்டேன் என்பது பிரைவசியைச் சிலுவையில் அடித்தாயிற்று.
சி. ஜெயபாரதன்
*திரு ஜெயபாரதன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.*
நமக்குத் தெரிந்தவர்களின் படத்தையோ நம் உறவினரின் படத்தையோ நம் படத்தையோ இணையத்தில் போடுவது நம் எல்லாருக்கும் சம்மதம் என்ற பொருளைத் தருகிறது. ஆனால் பிறர் படத்தைப் போடுவது அப்படியில்லை. இணையத்தில் அந்தப்படம் வரப்போகிறது என்று அவர்களுக்குத் தெரியுமா? அல்லது, எந்தக் காரணத்துக்காக அந்தப் படம் இணையத்தில் வரப்போகிறது என்று அவர்களுக்குப் புரியுமா? என்றெல்லாம் நமக்குத் தெரியாது.
*திரு ஜெயபாரதன் குறிப்பிட்ட அதே கோணம்தான் என்னுடையதும்* — அதாவது படத்தில் உள்ளவர்களோ அவர்களின் உறவினர்களோ இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கலாம். அவர்களுடைய மனநிலையும் உலகைப் பார்க்கும் கோணமும் படம் எடுத்த காலத்தைவிட இப்போது மாறியிருக்கலாம். இப்போது அந்தப் படம் இணையத்தில் வருவது அவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். இப்படி எவ்வளவோ காரணங்கள் இருக்கு.
++++++
இந்தக்கோணத்தில் நான் பார்த்ததால்தான் சில காலத்துக்குமுன் மின்தமிழ்க் குழுமத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள் என்னை மிகவும் வருத்தமடையச் செய்தன. அப்போது திரைப்பட நடிகைகளின் பெயர் சொல்லிப் பல பதிவுகள் வந்தன. அந்த நடிகைகளின் உறவினர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று வருந்தினேன். பதிவு போட்டவர்கள் தங்கள் சொந்த மகள்/மருமகள்/பேத்தி படங்களைப் போட்டு அவர்களைப் பற்றிக் “கிளுகிளு”ப்பாகப் பேசுவதில்லை! ஆனால், தாராளமாக அடுத்த வீட்டுப் பெண்களைப் பற்றிப் பூடகமாகவும் வெளிப்படையாகவும் பேசத்தயங்கவில்லை. அந்த நிலையே எனக்கு அந்தக்குழுமத்தைப் பற்றிய ஒரு திகிலைக் கொடுத்துவிட்டது. இன்னும் எனக்குத் தயக்கம்தான். என்னைப் பற்றி, என் தனிவாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொண்டவர்கள் எவ்வளவு பூடகமாக என்னென்ன தலைப்புகளில் என்னைப்பற்றிய தனிக்குறிப்புகளைப் புகுத்தி எழுதிக்கொண்டிருக்கிறார்களோ என்ற திகில் இருக்கத்தான் செய்கிறது.
++++++
இணையம் என்பது ‘கருத்து வெளிப்பாடு’ என்ற உரிமையோடு பிறரைப் பகடி செய்து தான் மகிழுவது என்ற இழிநிலையையும் கொடுத்திருக்கிறது. இந்த இழிநிலைக்கு வழுக்குபவர்களும் இணையத்தில் உண்டு.
கருத்துடன்,
ராஜம்
http://letsgrammar.org
http://mytamil-rasikai.blogspot.com
http://viruntu.blogspot.com
மூங்கில் எலும்புகள்
முட்டு கொடுத்தது
இந்த உலகத்தின்
மொத்த கனத்தையும்.
துணிக்கட்டு
துணிச்சலில் நெய்த துணியில்.
இன்னும்
கனவு பாக்கியிருக்கிறது.
சோறும் வீடும் கூட
ஒற்றைக்காலில் நிழல் விழும்போது
நம்பிக்கையாய் படரும்.
சுற்றியும் கல் இதயங்கள்
கல்லில் கண்ணீர் வடித்தாலும் போதும்
என் இதயத்துக்கும் துடிக்கும்.
சொர்க்கத்தையும்
கடவுள்களையும்
அதோ பார்க்கிறேன்
வண்ண வண்ணப் பலூன்களாய்.
எங்களைக்கொல்ல
உங்களுக்கு துப்பாக்கி குண்டுகள்
தேவையில்லை.
“த்சோ த்சோ”…போதும்
அந்த காலின் மிச்சத்தையா தேடுகிறீர்கள்.
அதை நான்
அவன் சற்று வலியில் ஓய்ந்தால்
எடுத்துக்கொள்ளட்டுமே
என்று இரவல் கொடுத்திருக்கிறேன்
ஒலிம்பிக் வீரன்
“பீலே”வுக்கு.
==========================================================ருத்ரா
இக்கவிதை நாயகருக்கு முகம் இல்லை.அடையாளம் வேண்டாமே.
ப்ரைவசி பற்றி பண்பாளர் திரு ஜெயபாரதன் அவர்கள் கருத்தை நான்
ஆதரிக்கிறேன்.
வானம் திறந்திருக்கு.
இனிக்கின்ற செங்கரும்பு தோட்டமாய்
இலை கொடுத்து இருக்கின்றன
இரு புதல்வர் உயிரரும்பு கூட்டமாய்
தலையெடுத்து ஜொலிக்கின்றன
வளர்ச்சிக்கு ஏதுவாக
வானவெளி பெருத்த ஒன்று
உணர்ச்சிக்கு தோணவில்லை
ஊனமிது வருத்தமென்று
பலூன் விற்றோ,வடை விற்றோ
வாழ விழியிருக்கு
கங்கில் தெறித்த களம்மீண்ட எந்தனது
நெஞ்சில் உரமிருக்கு நீ எதற்கு கலங்குகிறாய்
அஞ்சி நடுங்குவதால்
ஆனபலன் என்ன கண்டாய்
மூங்கில் பிடிக்குள்
முறுவலிப்பாய் இருக்கின்றேன்
தேங்கி அடங்கிடாமல்
தேடலுக்காய் நடக்கின்றேன்.
ரோஷான் ஏ.ஜிப்ரி.
படம் பார்த்த உடனும் நானும் முடிவெடுத்து விட்டேன்
எழுதுவது இல்லையென்று.
மசண்டப் பொழுது சாய – போதயில
மல்லாக்க நானுஞ் சாய…
என்னப்போல ஏத்திவந்த – ஒரு
எளந்தாரி லாரிக்காரன்..
காங்கிரீட்டு பாலத்தோட
கழட்டிப் போனாங் எங்கால…..
ஊனக்கால மூணுகாலா
உத்தவுக பழிச்சிப் பாட..
காரச்செவரு..சாணித்திண்ண
கழனி தோட்டம் எல்லாம் போக..
கப்பிரோடுக் கால்நடையா
கருவேலஞ் செடி தெளிநெழலு….
நாந்திணிச்ச நாறக்காத்து- எந்
நாஞ்சிவிட்ட மூச்சுக்காத்து
ரப்பரு மூட்டைக்குள்ள ரம்மியமா
சிரிச்சியாட….
நாம்பெத்த புள்ள ரெண்டும்
நடுவீதி வந்திருச்சே…..
காத்து குடிச்ச பலூனுக்கு
கரணம் போடத் தெம்பிருக்கு…
காத்தடஞ்ச வயித்துக்குள்ள
இருட்டத் தவிர என்னருக்கு…..?
கழனியில உழுத சனம் – நாங்க
கைநீட்ட மனசு வல்ல…
கண்ணீரப் பந்திவச்சி – புள்ளைக
கஞ்சிகுடிக்கத் தேவயில்ல….
மூச்சுக் காத்த முடிஞ்சிவச்சி
முழுமனசா ஊணிநிக்கோம்…
மூணுவயிறு ஒருதட்டுக்கு – எம்
மூச்சுவெல…. மூணு ரூவா….
நானும் இந்தப் படத்துக்கு எழுதப் போவதில்லை. திரு. ஜெயபாரதன் அவர்களது கருத்தை மதிக்கிறேன்.
If you are blind or crippled, would you like your picture to be displayed in Vallamai in the picture-poem competition ?
S. Jayabarathan
மாற்றுத் திறனாளி என்பதை இவ்வளவு எதிர்மறையாகக் கருதி, விவாதிக்க வேண்டியதில்லை. அத்தகைய ஒருவரின் வாழ்வை, சிரமங்களை, அவர்களின் முயற்சிகளை… இன்னும் எவ்வளவோ விஷயங்களை எழுதலாமே. இதை நான் விரிவாகக் குறிப்பிடுவது, படைப்பாளியின் கற்பனையில் குறுக்கிடுவது ஆகும். எனவே இத்துடன் நிறுத்துகிறேன்.
வல்லமையின் ஃபிளிக்கர் படக் குழுமத்தில் பகிரப்படும் படங்களிலிருந்து, படக் கவிதைப் போட்டிக்குப் படங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. படம் எடுத்தவரின் முழு அனுமதி பெற்றே இவற்றை வெளியிடுகிறோம். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, படத்துக்குள் இடம் பெற்றவரின் அனுமதியையும் பிரேம்குமார் சச்சிதானந்தம் பெற்றுள்ளார் எனச் சாந்தி மாரியப்பன் தெரிவித்துள்ளார். அவரது பிரைவஸி இதில் மீறப்படவில்லை. இதை வெளியிடக் கூடாது எனப் படத்தில் இடம் பெற்ற எவரும் தெரிவித்தால், இதை நீக்குவது குறித்துப் பரிசீலிக்கலாம்.
இந்தப் படத்தை நாம் தவறாக ஏதும் பயன்படுத்தவில்லை. கவிதை எழுதத்தான் அழைத்துள்ளோம். எழுதுவதும் எழுதாததும் அவரவர் விருப்பம். கவிதை எந்தக் கோணத்தில் அமையலாம் என்பது படைப்பாளியின் முடிவு. இதில், எவரும் தம் கருத்தை அடுத்தவர் மேல் திணிக்க முடியாது.
சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களின் வலிகளையும் வாழ்வையும் அவர்களின் உலகையும் அதில் உள்ள நம்பிக்கையையும் அவர்களின் தேவைகளையும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அதன் ஒரு சிறு படியே இது.
படத்துக்குள் இடம் பெற்றவரின் அனுமதிக்கூற்றைப் பற்றிப் படிக்க ஆர்வமுடையேன்.
குறிப்பாக … அவருக்கு என்ன சொல்லப்பட்டது? இணையத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? அவர் என்ன சொன்னார்? என்பதெல்லாம் தெரிந்துகொள்ள ஆவல்.
போலி உலகமே
********************
வாழும் காலத்திலே நானும்
நல் அங்கங்களுடன் வாழ்ந்தவனே…..
ஊணமானதும் இவ் உலகு
என்னை தூற்றுமோ….!
மண்ணிலே பிறக்கயிலே
அழகான ஒர் மனதை
எல்லோர்க்கும் வாழ்விலே
படைத்துவிட்டான் இறைவன்…!
மனித வளர்ச்சியிலே அவன்
அறிவு வளர்ந்ததோ இல்லையோ
அவன் எண்ணம் மட்டும்
குறுகிப்போனதேனோ…???
குழந்தைக்கு இருக்கும்
கள்ளமில்லா அன்பு உள்ளம்
படித்தவர்க்கு பாரிலே
இல்லாது போனதேன்..???
உதறிவிட்ட உறவுகளால் நான்
தெருவோரம் நின்றாலும்
அன்பு காட்ட மறுக்கவில்லை
மாசில்லா மழலைகள்…!
வாழுகின்ற காலத்தில்
பிறர் வாழ்விற்கு வாசனை
சேர்க்க முடியாவிடினும்,
பிறர் வாழ்வின் வாசனையை
போக்காது காப்போமே…!
“மண்ணிலே பிறந்ததெல்லாம்
மண்ணுக்கே சொந்தமாம்”
இதையுணர்ந்து ,
வாழும் சில நொடிகளை
மகிழ்வுடன் வாழ்வோமே.!!!
துஷ்யந்தி
படத்தில் காணும் ஊனமுற்றவர் அனுமதியை வல்லமை பெற்றுள்ளதா ? முதலில் படமெடுப்பின் பயன் என்ன ? இரண்டாவது வல்லமையில் படம் இட்டதின் பயன் என்ன ?
எல்லாம் “விளம்பரம்தான்”, என்று திருமதி சாந்தி மாரிப்பன் ஒரு வார்த்தையில் சொல்வது வருந்தற்குரியது.
படத்துக்கு எழுதப்படும் கவிதைகளும், கருத்துகளும் ஊனமுற்றவருக்கு யார் அனுப்பி விளக்குவார் ? ஊனமுற்றோர் அவற்றால் என்ன பயன் அடைவார் ? அவரது பிரச்சனைகள் தீருமா ? வேடிக்கையாக கவிதை எழுதி பொழுது போக்கவா ஊனமுற்றவர் படம் வல்லமையில் வந்துள்ளது ? இந்தக் கவிதைகள் ஊனமுற்றவருக்கு என்ன பலன் அளிக்கும் ?
படக்கவிதைப் போட்டிக்கு வரும் படங்களில் ஏதாவது கலைத்துவம் இருக்க வேண்டும். இப்படி வேதனையில் இருக்கும் ஊனமடைந்தவர் காட்சி தருவது மனதை வருத்துகிறது.
ஊனமுற்றோரைக் காட்சிப் பொருளாய்க் காட்டும் இந்தப் போட்டிப் படம் உடனே நீக்கப் பட வேண்டும்.
சி. ஜெயபாரதன்
///சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களின் வலிகளையும் வாழ்வையும் அவர்களின் உலகையும் அதில் உள்ள நம்பிக்கையையும் அவர்களின் தேவைகளையும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அதன் ஒரு சிறு படியே இது.///
இந்த மன்றத்துப் பதிவுகளால் … அந்த மாதிரிப் புறக்கணிக்கப்பட்டவர்களின் நோவு எந்த வகையில் குறைந்தது அத்ற்கு எந்த வகையில் உதவியிருக்கிறீரகள் என்ற கணக்கையும் நீங்கள் தெரிவிப்பது நல்லது.
மக்களின் இன்னல் என்பது சும்மா பொதுமக்களின், அதுவும் சொகுசாக வாழும் கணினிப் பொழுதுபோக்காளர்களின் வாய்க்குக் கிடைக்கும் அவல் அன்று.
ஒவ்வோர் உயிருக்கும் உணர்வுண்டு. அதை உணர உமக்கு இயலவில்லையென்றால் …
இவண்,
ராஜம்
//எல்லாம் “விளம்பரம்தான்”, என்று திருமதி சாந்தி மாரிப்பன் ஒரு வார்த்தையில் சொல்வது வருந்தற்குரியது./
//நான் எழுதிய கவிதைகள் என் கவிதை வலைப்பூவில் நிறைய உள்ளன. மாதிரிக்கு ஒன்றிரண்டு.(எல்லாம் ஒரு விளம்பரம்தான் :-D)
http://amaithichaaral.blogspot.com//
அன்பின் ஜெயபாரதன் ஐயா,
எனது வலைப்பூவின் முகவரியை இங்கே தந்ததற்கும் என்னுடைய கவிதைகளைப்பற்றி இங்கே குறிப்பிட்டதற்கும்தான் “விளம்பரம்” என்ற வார்த்தையைப்பயன்படுத்தினேன். வேறு எதையும் குறிப்பிட அல்ல என்பதைத் தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
படக்கவிதைப் போட்டி குறித்த பலவிதமான விவாதங்களைப் பார்க்கிறேன். இது ஒரு படம்.. இதற்கான தங்களது படைப்புகளை எண்ணங்களை படைப்பாளிகள் வெளிப்படுத்துவதும் எழுதாமலிருப்பதும் அவரவர் விருப்பம். இந்தப் படத்திற்காக எழுதாதவர்கள் இன்னும் பன்னாட்டு வணிகக் கடைகளில் பொருள் வாங்கிக் கொண்டும் இருக்கலாம். எழுதிப் பதிவிட்டவர்கள் சில்லறை வணிகக் கடைகளில் பொருள் வாங்கிக் கொண்டும் இருக்கலாம். அல்லது மேற்சொன்ன இரு நிலைகளும் இடம்மாறியும் இருக்கலாம்.. அதையெல்லாம் விடுத்து…. இந்தப் படத்தை நீக்கக் கோருவது எவ்விதத்திலும் சரியல்ல என்பது என்கருத்தாக இருக்கிறது. படைப்பாளிகளின் அனுமதி பெற்றே படக் கவிதைப் போட்டிகளுக்கு படங்கள் தெரிவு செய்யப்படுமேயானால் இங்கு எந்தப் படங்களையும் பதிவேற்ற முடியாது. சில படைப்பாளிகளுக்கு பிடிக்கவில்லையெனில் பங்கு பெறாமல் இருக்கலாம். அவ்வளவே…
கேயாஸின் வண்ணத்துப்பூச்சி தத்துவத்தை இங்கே நினைவுகூர்கிறேன்.
http://en.wikipedia.org/wiki/Butterfly_effect
இங்கு நாம் மேற்கொள்ளும் சிறிய முயற்சிகளும் பெரிய விளைவை ஏற்படுத்த வல்லவை என்பதை நான் நம்புகிறேன்.
படம் எடுத்தவரின் அனுமதியைப் பெற்றே படக் கவிதைப் போட்டிக்குப் படங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இங்கே பொதுவாகச் சில கருத்துகளை முன்வைக்கிறேன்.
படத்தில் இடம் பெறுபவரின் அனுமதியை முன்கூட்டியே பெற்றுப் படம் எடுத்தால், படம் இயல்பாக இராது. அதுவே ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்துவிட்டால், இன்னும் கடினம். பொது இடங்களில், சுற்றுலாத் தலங்களில் யார், இன்னார் என்றே தெரியாமல் பொத்தாம் பொதுவாகப் படம் எடுப்பவர் உண்டு. அவர்கள் எல்லோரிடமும் அனுமதி கோருவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. புகைப்படக் கலையில் Street Photography என்றே ஒரு பிரிவு உண்டு.
தெருப் புகைப்படங்கள், ஒருவரின் அந்தரங்கத்தை மீறுகிறதா என்பது பற்றிய ஒரு பதிவு இங்கே – http://blog.davidksutton.com/594/is-street-photography-a-violation-of-privacy-or-ethics/
நண்பர் அண்ணா கண்ணன்,
//// http://en.wikipedia.org/wiki/Butterfly_effect /////
/// In chaos theory, the butterfly effect is the sensitive dependence on initial conditions in which a small change in one state of a deterministic nonlinear system can result in large differences in a later state. ///
இந்த கொந்தளிப்பு நியதி [பட்டுப்பூச்சி விளைவு] ஹர்ரிக்கேன் புயல் போன்ற சூறாவளிக்கு எழுதப்பட்டது ! இவ்விதி எப்படி ஊனமுற்றோர் பிரச்சனைகள் தீர வல்லமைப் படக் கவிதைகள் உதவும் என்று எனக்குப் புரியவில்லை.
சி. ஜெயபாரதன்,
நீலவானம் பச்சைப்
பூமியென விரிந்த
பூவுலகே வண்ண மாயம் ..!
வாழ்வாதாரத் தேடலில்
கடக்கும் வாசலிலே
வண்ணமே மொத்த வியாபாரம்..!
மண்ணில் போட்ட
பயறும் பொன்னாகும்
பிளாஸ்டிக் ஆகுமோ உரம்?
கோயில் திருவிழாவில்
உண்டியல் வழியும்
தின்றுபோட்ட குப்பைகளாய்
வீதியும் நிறையும்..!
வண்ணத்துப் பூச்சியோடும்
வண்ண பலூனோடும்
விளையாடத்தான்
ஆசை இவர்களுக்கும் ..!
விதியெனும் விபத்தில்
விளையாடிய எமனும்
துணைவியோடு பறித்துச்
சென்றான் என்காலையும் ..!
நம்பிக்கை தந்த கால்கள்
மூன்றுறெனக்கு இன்று
பாசம் மட்டுமே
அறிந்த மனது பட்டினி
அறிந்ததும் மாறியது தடம் ..!
பட்டத்தோடும் பந்தோடும்
கட்டிப்புரண்ட கண்மணிகள்
யார் கண் பட்டதோ
பலூன் விற்கும் விதி..!
திருவிழாக் கோயிலில்
காற்றுப்பலூன் விற்க
வந்தோம் வயிற்றுப்பசி
மட்டுமே ஜெயிக்க
நிற்கிறோம் கால்கடுக்க..!
உச்சி வெய்யிலிலே
வாடிப்போகுது பிஞ்சுமனம்
நெஞ்சில் ஈரம்
இருப்பவர் வாங்குங்க
அண்ணாச்சி ஒண்ணாச்சும் …!
கோயிலுக்குள் கூட்டம்
பக்திக்குக் குறைவில்லை
இரும்பு உண்டியல்
நிறைந்தாலும் நிறையும்
ஏழைகள் வயிறு
ஒருநாளும் நிறையாதே
பக்தர்கள் கண்களில்
சிலைக்கு மட்டுமே இடம்
சிலையாக நிற்கும்
எங்கள் பக்கமும்
திரும்பட்டுமே மனம்..!
முடிந்தால் கல்லுச்சாமி
நீ எங்கிருக்கே
எங்களுக்கும் காமி…!
ஜெயஸ்ரீ ஷங்கர்.
நண்பர் அண்ணா கண்ணன்,
///படத்தில் இடம் பெறுபவரின் அனுமதியை முன்கூட்டியே பெற்றுப் படம் எடுத்தால், படம் இயல்பாக இராது. அதுவே ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்துவிட்டால், இன்னும் கடினம். பொது இடங்களில், சுற்றுலாத் தலங்களில் யார், இன்னார் என்றே தெரியாமல் பொத்தாம் பொதுவாகப் படம் எடுப்பவர் உண்டு. அவர்கள் எல்லோரிடமும் அனுமதி கோருவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. ///
இது சுய வசதிக் கோட்பாடு அனுமானம். அப்படி எடுத்த ஒளிப்படங்களை வலையில் போடும் போது பலத்த எதிர்ப்புகள் / சட்ட வழக்குகள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
சி. ஜெயபாரதன்.
நண்பர் ஜெயபாரதன்,
வண்ணத்துப்பூச்சி விளைவு, எந்தச் செயலுக்கும் பொருந்தும்.
//”ஆரம்பத்தில் உருவாக்கப்படும் மிகச் சிறிய ஒரு செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், நாம் எதிர்பார்க்கவே முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம”..//
இது பற்றி விரிவாக இங்கே படிக்கலாம்: http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4879
இங்கே மாற்றுத் திறனாளர் நலன் குறித்து நாம் சிந்திப்பது, படிப்படியாக வளர்ச்சி பெற்று, சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு.
ராஜம் அம்மாவின் கருத்துக்கும் இந்தப் பதில் பொருந்தும்.
நண்பர் அண்ணா கண்ணன்,
பெரிய விஞ்ஞான நியதிகளை மாற்றுத் திறனாளிகள் மேம்பாடுகளுக்குப் பின்னிப் பார்ப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
///இங்கே மாற்றுத் திறனாளர் நலன் குறித்து நாம் சிந்திப்பது, படிப்படியாக வளர்ச்சி பெற்று, சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு.
கொந்தளிப்பு நியதி, டாமினோ விளைவு இவையெல்லாம் ஹர்ரிக்கேன், சூறாவளிப் பேய்மழை போல் நேரும் பௌதிக விஞ்ஞானத் தொடர் நிகழ்ச்சிகள். சமூக / இனம் சம்பந்தப்பட்ட மன மாறுதல்கள் அவ்விதம் நேர்பவை அல்ல. மாற்றுத் திறனாளிகள் பிரச்சனை தீர்வு முறைகள் படக்கவிதைகளால் நேரப் போவதில்லை.
சி. ஜெயபாரதன்.
ஊன்றுகோல் என்றே உவமானம் சொல்லாதீர்
மூன்றுகால் என்றே முடிவெடுங்கள் –தோன்றும்
நிலைபார்க்கும் நீங்கள் நினைக்கும் வகைஎன்
அலையில்லை வாழ்க்கை அமிழ்து
பேரக் குழந்தைகள் பேருதவி யால்நெஞ்சு
ஈர வயலாய் எழில்பூத்து – சாரல்
மழைபோல் மனம்நனைக்கும் மட்டில்லா அன்பால்
தழைத்திருக்க்கும் வாழ்க்கை வயல்.
முறிந்திருக்கும் காலோடு முன்னேற்றப் பாதை
அறிந்தெடுத்து வைக்கும் அடியால் – நெறிவழுவா
நேர்வழி செல்லும் நிஜங்கள் உருக்கியே
வார்த்ததென் நம்பிக்கைத் தூண்
வகையற்று வாடும் வரலாற்று சோக
புகைப்பட மல்ல இதுவே –முகைபோல்
விரிந்த மனசின் வெளிச்சத்தைக் காட்ட
தெரிந்த உணர்வின் திறம்.
பரிதாபம் கொண்டு பரிபாஷை இன்றி
அரிதாரம் இன்றி அரங்கில் –விரிவான
நாடக வேஷம் தரித்து நடிக்கின்ற
சாடல்கள் வேண்டா மெமக்கு.
ஊன விழியால் உணர்வுகளைத் துண்டாடும்
ஈன குணமென்னும் இல்லாத – ஞானத்தால்
வானத்தை தாண்ட முயற்சிக்கும் வாழ்க்கைக்கு
ஊனத்தை காட்டல் உவர்ப்பு.
மனஊனம் கொண்டு மணவாழ்வில் நொண்டும்
சனம்கோடி உண்டு. இருந்தும் –தினமூன
மென்றே விழிகாண நேர்கின்ற எங்களில்
நின்று வருத்தல் நிறுத்து.
நாங்களும் நானிலத்தில் நல்ல பிரஜைகள்
தீங்கிலா தெங்கள் திறமைகள் – மூங்கிளுள்
காற்று நுழைந்து முனகுகின்ற பாடலாய்
மாற்றங்கள் காணும் மகிழ்ந்து.
*மெய்யன் நடராஜ்
அனுதாபம்
மன ஊனத்தைவிட
உடல் ஊனம்பெரிதல்ல
உடல் ஊனம்மாற்ற முடியாதது
கை இல்லாமல்
கால்களால் கார் ஓட்டுகிறார்
கண் பார்வை இல்லாதவர்கள்
இருளையே துணையாககொண்டுசெய்யும்
காரியங்கள் அற்புதம்
பீதோவன்செவிடாகிருந்த
நிலையில்தான்
சாகாவரம் பெற்ற ராகங்களை
உருவாக்கினார்
கவிஞர் மில்டன்
பார்வையற்ற நிலையில்தான்
சொர்க்கம் இழக்கப்படல்
என்கின்றகாவியம் எழுதினார்
ஜூஇல்யஸ்சீசர்
காக்கா வலிப்பு நோய்
இருந்தபோதும் மாவீரனாய்
திகழ்ந்தார்
இவர்கள்யாரும் யாரிடமும்
அனுதாபத்தை
எதிர்பார்க்கவில்லை
தங்க ள் குறைபாடுகளை ஈடுசெய்ய
மிக உயர்ந்த கோட்பாடுகளை
உருவாக்கிக் கொண்டவர்கள்
இதோஇந்த மனிதனும் அப்படியே
தன் மகன்களின்
சந்தோஷத்தில் மகிழ்ச்சி/கொள்ளும்
மன உறுதி கொள்கின்றார்
வாழ்க்கையில் எந்தவித
குறைபாடும் இல்லாதவர்கள்
வாழ்க்கையைப்பற்றி
குறை கூறிக்கொண்டீருக்கும்
நாம்தான் வெட்கி தலை
குனிய வேண்டும் அவ்ர்கள்
வாழ்க்கையைப்பார்த்து
வீணான அனுதாபமும்
அணுசரணையும் அவர்களை
வீழ்த்துமே தவிர உயர்த்தாது
சரஸ்வதி ராசேந்திரன்
தகுந்த ஊன்றுகோலின்றி படிப்பறிவும்,ஊழியமும், உணவும், ஆதரவும் இல்லாமல் வறுமையில் வாடும், ஓர் மாற்றுத் திறனாளிக்கு ஏசி மாளிகையில் வாழ்வோர் பீதோவனையும், மில்டனையும், ஜூலியஸ் சீஸரையும் உதாரணம் காட்டி, நீயும் அவர்போல் உயர்ந்து விடுவாய் என்று படக்கவிதை எழுதுவது, ஊனமுற்றவரைக் கேலி செய்வதாக நான் கருதுகிறேன்.
ஊனமுற்று ஒதுக்கப்பட்டோர் பிரச்சனைகள் என்ன வென்று சொல்லாமல், அவற்றைத் தீர்ப்பது எப்படி என்று விளக்காமல், சொர்க்க வாசலைக் காட்டுவது வெறும் பயனற்ற உபதேசம்.
இது படக்கவிதைக் கருவன்று.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதாவது.
சி. ஜெயபாரதன்.
ஒற்றைக்கால் இல்லையென
****ஒருநாளும் சோர்ந்ததில்லை
அற்றைக்கிரை தேடுதற்கு
****அதிகாலைக் கிளம்பிவிட்டேன் !
பெற்றமகன் துணையிருக்க
****பெருமகிழ்வு கூடிடுதே
விற்றிடுவேன் பலூனூதி
****விரட்டிடுவேன் வறுமைதனை !
உற்றதுணை யாயெனக்கு
****உதவுமிரு ஊன்றுகோலே
பற்றற்ற வாழ்க்கையிதே
****பழக்கமாக ஆயிற்றே !
கற்காத காரணத்தால்
****கவலையென்னை வாட்டுவதால்
கற்பிப்பேன் பிள்ளைக்கு
****கடமையது எந்தனுக்கு !
குற்றுயிராய்க் கிடந்தாலும்
****குனிவுவர விடமாட்டேன்
நற்பேரும் நானெடுப்பேன்
****நன்மைகளும் செய்திடுவேன் !
சுற்றியுள்ள பசும்வயலும்
****சுவர்க்கம்தான் எங்களுக்கு
வற்றாத வரமாக
****வசமாகும் வானமுமே ….!!
மாசிலா அன்புடன் ஊன்றுகோல்களாய்
கடந்து போனது யுத்தம் மட்டுமா……..
நடந்து போன அவன் கால்களும் தான்!
போரின் வக்கிரங்கள் கொண்டு போயின
வீரியமிக்க காளையின் காலையும் தான்!
ஊன்று கோல்கள் ஆகிய மூங்கில்
ஈன்றது அவன் தைரியத்தை மீண்டும்!
இயற்கை அன்னையின் மூங்கில் கொடை
செயற்கையால் விளைந்த அழிவுக்குதவிற்று …..
ஊன்றுகோல்களாய் உதவிற்று காலூன்ற!
உழைத்த கரங்கள் மண்ணில் மீண்டும்
விதைத்த முளைகள் பயிர் கொண்டு பசுமை!
பசுமை வயலில் மட்டுமா விளைந்தது
தேசுடன் அவன் மனதிலும் தான்!
பாசமாய் அவன் பெற்ற செல்வங்கள்
மாசிலா அன்புடன் ஊன்றுகோல்களாய் அவனைச் சூழ்ந்திட
லேசாகிக் கரைந்து மறைந்தன அவன் மனதின் ஊனங்கள்!
வீசும் தென்றலின் இங்கிதம் போன்றே ….
நீலவானில் நீந்தும் காற்றாடி ஆன அவன் இதயம்!
சீலமாய் உரைத்தது பகிரங்கமாக …ஒரு பழமொழி
“முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்றே
பச்சை வயல்களும் நீலவானமும் சாட்சியமாக …
புனிதா கணேசன்
15.10.2015
இந்தப் படத்தையிட்டு இங்கு பதிவேறி இருக்கின்ற கருத்துக்களைப் பார்க்கும் பொழுது என்னுள் தொனித்தது என்னவென்றால் – சிலர் இன்னும் மாற்றுத் திறனாளிகளை ஊனமாகக் கொள்பவர்களாக இருப்பது தான் ! தங்களுக்குள் போட்டுக் கொள்ளும் மனத்திரையை நீக்கி சற்று சுதந்திரமாக சிந்திக்கும் திறனை இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் – இப் படத்தைப் பிரசுரிப்பதால் எவ்வித பங்கமும் படத்தில் உள்ளவர்களுக்கு நேரிடப் போவதில்லை ! படத்தில் உள்ளவரிடம் இருக்கும் மனத் தைரியத்தில் நூறில் ஒன்றாவது பங்கு உங்களுக்குத் தோன்ற வேண்டும் -இப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் …
பின்னோட்டம் எழுதுவோர் பின்னோட்டம் இட்டவருக்கு அறிவுரை கூறுவது சற்றும் ஒவ்வாது. தனிமனிதர் தாக்குதலும் தவறு.
சி. ஜெயபாரதன்.
ஒவ்வொருவரின் கருத்துச் சுதந்திரத்தையும் வல்லமை மதிக்கிறது. அதே நேரம், அது தனி மனிதத் தாக்குதலாக மாறிவிடாமல் காக்கும் பொறுப்பையும் அன்புடன் நினைவூட்டுகிறோம்.
பெயர் குறிப்பிட்டமைக்கு மன்னிப்புக் கோருகிறேன்
திரு அண்ணா கண்ணன் அவர்களிடமும் திரு ஜெய பாரதன் அவர்களிடமும்
ஜெயரதரதன் சொல்வது முற்றிலும் சரிதான் ஏற்கெனவே ஊனமுற்று இருப்பவர்கள் மனதளவிலும் நொந்து விடாமல் இருப்பதற்கான ஆறுதல் மொழிகளை கூறுவதற்குத்தான் இந்த உதாரணங்கள் மற்றபடி அவர்களுடைய முன்னேற்றத்திற்கும் மற்றவர்களைப்போல் வாழ்வதற்கும் ஏற்பாடுகளைஇந்த சமூகம்கண்டிப்பாகா செய்துதான் ஆகவேண்டும் ஏசி மாளிகைகளில்பிறந்தாலும் ,ஏழைக்குடிசைகளில் வாழ்ந்தால்ம் ஊனம் என்பது மாறப்போவதில்லை அதற்கான கஷ்டங்கள் அவர்களுக்குத்தான் தெரியும்—-சரஸ்வதிரசேந்திரன்
இவர்களைப் பார்க்கும்போது தான் வல்லமை புரிகிறது எதை இழந்தாலும் புதிய கரம் மறைமுகமாய்த் தூக்கி விடுகிறது. இழப்பு உடலில் இருக்கலாம். உயிர்ப்பு மனதில் இருந்தால் ஊனம் எல்லாம் ஒரு பலூன் போலத்தான்.
கணபதிராமன்
காற்றை நிரப்பிக் கணமாக்கி நூலால்வான்
ஏற்றும் இறைவனவர் எங்களுக்கு – சோற்றுக்காய்
பாதை அவரேற்றார், பாவம் பயணமதில்
பாதை படாத பதம்