இந்த வார வல்லமையாளர்!

மே 11, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள்

 

RajaRajeswari profile

 

சென்னை நகரின் ஆழ்வார்பேட்டையில், ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்து பரதநாட்டியம் குச்சுப்புடி நடனங்களை கண்ணாகக் கருதி பயிற்சி பெற்று வளர்ந்த தமிழ்ப் பெண்மணி ராஜ ராஜேஸ்வரி, தற்பொழுது அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்று உள்ளார். சென்ற மாதம் நியூ யார்க் நகரின் நகராட்சித் தலைவர் ‘பில் டி பிளேசியோ’ (New York City – Mayor, Bill de Blasio) அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தபொழுது, நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் மக்கள் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர், தனது பன்மொழித் திறமையையும், கலாச்சாரப் பின்புலம் அளித்த அனுபவத்தையும் செவ்வனே பயன்படுத்தி நீதித்துறைக்கு பெருமை சேர்த்தவர் எனப் பாராட்டுரையும் வழங்கியுள்ளார். நியூ யார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தெற்காசிய பெண் நீதிபதி என்ற புகழை தமிழகத்திற்குத் தேடித்தந்த நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

நீதிபதி ராஜ ராஜேஸ்வரி முன்னர் ரிச்மாண்ட் கவுண்டி (மாவட்டம்) அரசுத் தரப்பு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்தவர். அப்பணியில் குற்றவியல், போதைப்பொருள் தடுப்பு, உச்சநீதிமன்ற வழக்குகள், பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை வழக்குகள் என நீதித்துறையின் பல பிரிவுகளிலும் பணிபுரிந்தவர் என்ற சிறப்பினைக் கொண்டவர்.

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாகப் பேசுகிற ஆற்றல் வாய்ந்தவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. அயல்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயரும் குடும்பங்களில், குறிப்பாக தெற்காசிய நாடுகளான இந்தியா, இலங்கையில் இருந்து குடிபெயர்ந்தோர் குடும்பங்களில் குடும்ப வன்முறைகளும், சிறுவர்கள் மேல் வன்முறையும் அதிகம் நிகழ்வதையும், அவை அக்குடும்பப் பெண்களால், குடும்பத்தின் நலன் என்ற நோக்கில் வெளிவராது மறைக்கப்படுவதையும் தனது பணிக்காலத்தில் கண்டுணர்ந்தவர்.

பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவது கண்டு மிகவும் வருந்தும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி, குடிபெயர்ந்தோர் குடும்பங்களுக்கும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நீதிகிடைப்பதில் தன்னால் உதவமுடியும் என்று கருதுகிறார். பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பது முக்கியத்துவம் கொண்டது, அதற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்று பதவியேற்ற பின்னர் பத்திரிக்கைகளுக்குக் கொடுத்த நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார்.

அநீதியாக, செய்யாத குற்றத்திற்காக ஒருவர் தண்டனை பெற்று, பின்னர் உண்மை தெரிந்து அவர் விடுவிக்கப்படும் செய்திகள் தெரியும் பொழுதெல்லாம் அது குறித்து மிகுந்த வேதனை அடைவேன் என்று கூறும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி, அமெரிக்காவின் நீதித்துறை மிகச்சிறப்பானது என்று கூறவியலாது சிற்சில குற்றங்குறைகள் இருப்பினும், விரைவில் வழக்குகள் கையாளப்பட்டு நீதி வழங்கப்படுவது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று என்கிறார். ஒருவரது இனம், மதம், மொழி அடிப்படையில் யாரும் புறக்கணிக்கப்படாது நீதிபெறவேண்டும் என்று எடுக்கப்படும் முயற்சிகளால் உலகில் மிகச்சிறந்த நீதித்துறையைக் கொண்டது அமெரிக்கா என்பது இவர் கருத்து. குடிபுகும் அயல்நாட்டினருக்கு அமெரிக்கா ஒரு சிறந்தநாடு, முயன்று உழைத்து, தொடர்ந்து தங்கள் திறமையை வளர்த்துக் கொள்பவர்களுக்கு முன்னேறும் வாய்ப்பு இங்கு மறுக்கப்படுவதில்லை.

டெல்லியில் நடந்த வன்புணர்வு போன்ற நிகழ்வுகள் நமது இந்தியச் சமுதாயத்தில் ஊறிப்போய்விட்ட பெண்களுக்கு எதிரான அநீதிகள், இவற்றை நாம் தடுக்காவிட்டால் நமது திறமைகள் முழுவதும் இந்த அநீதியின் காரணமாக வெளிவராது போகும். இது போன்ற கொடூரமான உயிரிழப்பு என்று ஒன்று நடக்காதவரை பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பற்றி யாரும் அக்கறை கொள்வதுமில்லை. பெண்களோ குழந்தைகளோ தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை அடுத்தவர் கவனத்திற்குக் கொண்டுவரவும் தயக்கம் காட்டுவார்கள், அவர்கள் சொல்வதை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை என்பதுடன் சொன்னால் சமூகத்தில் இகழ்ச்சியுடன் தாம் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதுமே அவர்களது நிலை என்கிறார் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. தனது அன்னை தமக்கு நாட்டியத்தில் ஆர்வத்தை ஊட்டுவித்தது போலவே, ஒரே ஒருவராவது அக்கறையுடன் முயற்சி எடுத்தால் நாம் வாழும் உலகம் மேலும் சிறந்த இடமாக மாறும் என்ற நம்பிக்கையையும் எனக்குக் கொடுத்துள்ளார் என்கிறார் இவர்.

நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த பத்மா, கிருஷ்ணன் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. அவரது இளமைப் பருவம் செல்வச் செழிப்புடன் இல்லாவிட்டாலும் இனிமையான அமைதி நிறைந்த கலைக்குடும்ப வாழ்க்கையாக அமைந்ததில் மனநிறைவு உள்ளவர். நாட்டிய ஆசிரியையான  தனது தாயைப் போல நடனத்தில் சிறந்து விளங்கி, பத்து வயதிலேயே பிறருக்கும் கற்பிக்கும் திறனையும் கொண்டிருந்தார் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. நிதி திரட்ட உதவியாகப் பல நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர். கலாஷேத்திராவின் மாணவியான இவர் தனது தாயுடன் உலகின் பலநாடுகளுக்கும் சென்று நாட்டிய நிகழ்ச்சிகளை செய்து வந்தவர்.

அமெரிக்காவில் நாட்டிய நிகழ்ச்சிக்காக 1988ம் ஆண்டு வந்தவரை அமெரிக்காவில், பெண்களை பேதமுடன் பார்க்கும் மனப்பான்மை குறைவாக இருக்கும் நாகரிகம் இவரை மிகவும் கவர்ந்தது. அறிவாற்றல் மிக்க தனது தோழியர் சிலர் இளவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் திறமை புறக்கணிக்கப்பட்டதை எதிர்கொண்டவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. தனது 16 வயதில் அமெரிக்காவிற்கு வந்தவர் சட்டம் பயின்று, அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பணிபுரிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு நியூ யார்க் நகரின் குற்றவியல் நீதிபதி பொறுப்பேற்கும் வகையில் உயர்ந்துள்ளார்.

இன்றும்,  தனது 43 வயதிலும், இந்திய சமூக நிகழ்ச்சிகளிலும், கோவில் நிகழ்ச்சிகளிலும் தனது குழுவினருடன் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி தனது நடனக் குழுவிற்கு தமது 18 வயதில் விபத்து ஒன்றிற்குப் பறிகொடுத்த தனது அன்னையின் நினைவாக “பத்மாலயா நாட்டியப் பள்ளி” என்ற பெயர் சூட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய்க்குப் பலியான தனது தந்தைக்குக் கொடுத்த வாக்கின்படி, தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது நீதிபதியாகவும் பொறுப்பேற்றுள்ளார்.

RajaRajeswari2

பதவியேற்புரையாக நகராட்சி தலைவரிடம் நன்றி நவின்ற பொழுது, இப்பதவி எனது அமெரிக்கக் கனவு நிறைவு பெற்றதை மட்டும் காட்டவில்லை, தொலைதூர நாடுகளில் வசிக்கும், வாழ்க்கையில் முன்னிலையை அடைய விரும்பும் இளம்பெண்களுக்கு, தானும் முயன்றால் தனது சமூகத்தில் ஒரு சிறப்பிடத்தைப் பெறலாம் என நம்பிக்கையளிக்கும் ஒரு முன்மாதிரியாக நான் விளங்க வாய்ப்பளித்துள்ளது என்று கூறினார். இந்தியாவில் இருந்து வந்தவர் என்ற முறையில் இந்தப் பெருமை கிடைத்ததற்குத் தான் மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும், நீதிபதியாக நியமிக்கப்பட்டது அவருக்கு பெருமையும் பணிவையும் ஒருங்கே வழங்கியது என்றும், தான் கற்பனையும் செய்யத் துணியாத பெருமை தனக்குக் கிடைத்தது ஒரு கனவினைப் போன்றிருப்பதாகவும் கூறினார்.

தனது விடாமுயற்சியால் மிக உயர்ந்த பதவியைப்பெற்று, பாதிக்கப்பட்டோருக்கு தனது பணியின் மூலம் நீதிகிடைக்க வழி செய்வதிலும், அயல்நாட்டில் வாழும் மற்ற இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும், பெண்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட விரும்பும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களை மேலும் வெற்றிகள் பல அடைய வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் ([email protected]) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

 

 

குறிப்பு:
தகவல்களும் படங்களும் பல இணையதளங்கள் வழங்கிய பதிவுகளின் தொகுப்பு. தகவல்களும் படங்களும் தந்துதவிய  தளங்களுக்கு நன்றி.

About தேமொழி

One comment

 1. ருத்ரா இ.பரமசிவன்

  இவ்வார வல்லமையாளர்
  வல்லமைமிகு நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களே.
  எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்.

  அந்த அட்லாண்டிக் கடலோரம்
  சீறும் அலைகள் கூட‌
  “சுதந்திர தேவி”யின் 
  கையில் உள்ள புத்தகம் கண்டு
  கை கட்டி நிற்கும்.
  ஏன்?
  மானுட நீதியே சுதந்திரத்தின் உயிர்
  என்ற ஒளியே அங்கு சுடர்கின்றது.
  அந்த சுடரேந்தியாய்
  நீங்களும் உயர்ந்தது கண்டு
  ந‌ம் “தமிழ்ப்பெருமிதத்தை”
  மகிழ்ச்சியோடு
  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்!

  அன்புடன் ருத்ரா

   

   

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க