Category: சுட்டும் விழிச்சுடர்!

  • வாழ்க்கை ஒரு வட்டம்  

     

    வாழ்க்கை முழுவதும் பணம், பதவி, செல்வாக்கு என்று நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த ஒருவருக்கு ஒரு தருணத்தில் சற்று நின்று மூச்சுவிட நேரம் கிடைத்தபோது அவர் மனதில் மிகப்பெரிய வினா ஒன்று எழுந்தது. என்னதான் நேர்மையாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் தம் இறுதிக்காலம் எப்படியிருக்குமோ என்ற அச்சம் எவருக்கும் இருப்பது இயல்புதானே? அப்படித்தான் அவருக்கும் அப்படியொரு ஐயம் எழுந்துவிட்டது. அதாவது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள ஒருவருக்கு எதிலெல்லாம் அதிகம் ஈடுபாடு இருக்கும்? சொத்து, குடும்பம், ஆரோக்கியம் அல்லது சமுதாயம் – இவற்றில் எதன் மீது அதிக நேசம் ஏற்படும் என்ற ஐயம் ஏற்பட்டுவிடுகிறது. யாரிடம் போய் இதைத் தெளிவுபடுத்திக்கொள்வது என்று வெகு நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்தார்.

    அன்று தம் ஊருக்கு ஒரு மகான் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சென்று சந்திக்கிறார். தன்னுடைய ஐயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள அந்த மகானிடம் சென்று தன்னுடைய வினாவை முன்வைக்கிறார்.

    அந்த மகானும் புன்னகையுடன், “உனக்கு குழந்தை இருக்கிறதல்லவா? அந்தக் குழந்தைக்கு என்னென்ன தேவைன்னு சொல் பார்க்கலாம் ” என்று அவரையே திருப்பிக் கேள்வி கேட்டார்.

    சற்று யோசித்தவர், வயிற்றுக்கு உணவு, பாதுகாப்பான தாயின் மடி அல்லது தந்தையின் தோள், அன்பு, பாசம், விளையாட்டு போன்றவையைத் தவிர பெரிதாக வேறு ஒன்றுமிருக்காதே என்றார்.

    உடனே அந்த மகான், வாழ்க்கை என்ற இந்த வட்டத்தில் முதலும், முடிவும் ஒன்றுதான். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலும் அந்த ஆரம்பக்கட்டத் தேவைகளைத் தவிர வேறு தேவைகள் ஏதுமிருக்காது. உணவு, தண்ணீர், மருந்துகள், வசதி, அன்பானவர்களின் பாசமும் அவர்களின் அருகாமையும் மட்டும்தான் அவர்களின் தேவையாக இருக்கும். ஆடம்பரம், பகட்டு, செல்வம், சொத்துபத்துகள், வங்கி இருப்பு, நகைகள், ஈகோ, ஆசைகள், சமூகம் போன்ற வெறும் மாயையாக இருந்த அனைத்தும் எண்ணங்களிலிருந்து மறைந்துவிடும் என்றார்.

    அப்படியானால் பிறந்த குழந்தைக்கும் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவருக்கும் எந்த வேறுபாடுமே இல்லையா சாமி’ என்று மீண்டும் கேட்டதற்கு அவர்,

    ‘புதிதாகப் பிறந்த குழந்தைக்கும், தனது வாழ்க்கையை நிறைவு செய்யப்போகும் ஒருவருக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்ன தெரியுமா?

    அதுவரை தாம் வாழ்ந்த வாழ்க்கையில் தாம் பெற்ற அமைதியும், மன நிறைவும் தரும் ஒரு சில நேசத்துக்குரிய நினைவுகள் மட்டுமே பிறந்த குழந்தைக்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளவருக்குமான வேறுபாடு’ என்றார்.

    அந்த மகான் சொன்னதைக் கேட்டவரின் மனதில் ஏதோ பொறிதட்ட ஊர், உலகம் ஆயிரம் சொல்லலாம், பெற்ற மனம் பித்தானாலும், பிள்ளை மனம் கல்லாகாது. தெளிவுபடுத்திய மகானுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பியவர், தன் வாழ்க்கை வட்டத்தின் அடுத்த கட்டத்தை எண்ணியபடியே நகர்ந்தார்.

     

    Share
  • சர்வதேச மகளிர் தினம் (2017)

    பவள சங்கரி

    IWD

    ஆதி மனிதம் உருவானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்றாலும் குரங்கிலிருந்து முதன் முதலில் தோன்றியது மூதாய் என்று நம் அறிவியல் அருதியிட்டுக்கூறும் பெண் தான் அவள். ஆதியில் பெண்ணே தலைமை வகிப்பவளாகவும், வேட்டையாடி உணவைக் கொண்டுவருபவளாகவும், சமுதாயத்தை வழிநடாத்துபவளாகவும் இருந்தாள். நாகரிகம் வளர ஆரம்பித்தவுடன் பொதுவுடமைக் கொள்கைகளில் மாற்றம் காண ஆரம்பிக்கவும், தனியுடைமைக் கொள்கை, அரசியல், மத நிறுவனங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக ஆரம்பித்தன. மெல்ல மெல்ல ஆண் தலைமைப் பொறுப்பை ஏற்க ஆரம்பித்தான். முதல் விஞ்ஞானி, முதல் விவசாயி, முதல் ஞானி என அனைத்திலும் பெண்களே முன்னிலை வகித்திருந்தனர். ஆனாலும் சட்டங்கள், கருத்தாக்கங்கள், சமூக அமைப்புகள் என அனைத்திலும் பெண் ஓரங்கட்டப்பட்டு ஆண் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டான். மெல்ல மெல்ல அவள் வீட்டிற்குள் முடக்கப்பட்டு, குறுகிய எல்லைகளை வகுத்து, இறுதியாக இரண்டாந்தர குடிமக்களாகவும் ஆக்கப்பட்டாள். 15ஆம் நூற்றாண்டின் பிறகு ஐரோப்பிய நாடுகள் பெரும் அரசியல் மாற்றங்களைச் சந்தித்த பிறகு மனித உரிமைச் சிந்தைகள் எழுச்சியுற்றன.

    சமுதாயத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட பெண் வீறு கொண்டு எழுந்தது இன்று நேற்று முதல் அல்ல. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தம் உரிமையை மீட்க போர்க்கொடி தூக்கியவள்தான். கி.பி.1789இல், லூயி மன்னரின் அரசாட்சியையே முடிவுக்குக் கொண்டு வந்த, சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற உரிமை முழக்கங்களுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், வெர்செயில்ஸ் ஆகிய நகரங்களில் பெண்கள் கிளர்ச்சியில் இறங்கி போராட்டம் நடத்தினர். 1759-1797 காலகட்டங்களில் மேரி வோல்ஸ்டன் கிராப்ட் என்பவர் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமைப் போராளி. இவர் எழுதிய The Vindication Of the Rights of Women என்னும் புத்தகம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. இதன்பின் அமெரிக்கா, பிரஷ்யா, இத்தாலி, கிரீஸ், ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற பல நாடுகளிலும் பெண்ணுரிமைப் போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்பாக லூயி மன்னன் 1848ஆம் ஆண்டில் மார்ச் 19ஆம் நாள் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதாகவும், அரசவை ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தருவதாகவும் உறுதியளித்தாலும் அவை நிறைவேற்றப்படவில்லை.

    இறைவன் படைப்பில் ஆணும், பெண்ணும் சமம் என்று 1848இல் நியூயார்க்கில் உள்ள செனீகா ஃபால்ஸ் என்னும் ஊரில் நடந்த மாநாட்டில், பெண்ணுரிமைப் போராட்டங்களின் ஓர் மைல்கல்லாக கருதப்படும், பெண்ணுரிமைப் போராளிகள் வெகுண்டெழுந்து பெண்களின் உரிமைப் பிரகடனத்தை (Declaration of the Rights of Women) வெளியிட்டனர்.

    இந்தப் போராட்டங்களின் சாரமாக பெண்ணின் வாழ்வெல்லைகள் விரிவாக்கப்படவும், ஓட்டுரிமை பெறவும், சம உரிமையும், பொறுப்புகளும் உள்ளதையும் அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. வெற்றி என்பது ஆணும் பெண்ணும் இணைந்து உழைத்துப் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

    1857ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் பெண்கள் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டிருந்தது. பருத்தி நூற்பாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், ஆடை உற்பத்தியகங்கள் போன்றவற்றில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், குறைவான கூலி, அதீதமான ஒடுக்குமுறை, மோசமான பணிச் சூழல் போன்றவற்றை எதிர்த்துப் போராடினர். ஆனால் இப்போராட்டத்தை அரசாங்கம் கடுமையாகத் தடை செய்தது. ஆனால் அமெரிக்க நாட்டில் 1908இல் வாக்குரிமையும், கூலி உயர்வும் வேண்டி நடந்த மாபெரும் போராட்டம் உலகளவில் பெண்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. இதன் பயனாக, 1910இல் செருமனியின் சமூக சனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவின் தலைவரான கிளாரா ஜெட்கின் என்பவரின் தலைமையில், டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் பெண்கள் மாநாடு கூட்டப்பட்டதோடு சர்வதேச மகளிர் அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டது. இதன் விளைவாக 1911இல் மார்ச் 19ஆம் நாளில் டென்மார்க், செருமனி, ஆசுத்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1913ஆம் ஆண்டில் உருசியாவிலும் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் பின்னர் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி, பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் வகையில், தேச எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் மகளிர் தினம் தினம் (International Women’s Day) கடைபிடிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மகளிர் பிரதிநிதிகள் தீர்மானித்தனர். பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டது.

    1917ஆம் ஆண்டில் 90,000 பெண்கள் தங்கள் வாழ்வாதாரங்களான உணவு, வாக்குரிமை போன்றவற்றிற்காக உருசிய மன்னன் ஜார்ஜ்க்கு எதிராக முன்னெடுத்து வெற்றிகொண்ட போராட்டமே 8 மாதங்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற உருசியப் புரட்சியின் வித்தாக அமைந்தது. புதிதாக மலர்ந்த சோசலிச சோவியத் கூட்டமைப்பில் பெண்களுக்கு முழுமையான வாக்குரிமையும், அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகு பல அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் படிப்படியாக பெண்களுக்கு வாக்குரிமைகள் வழங்கப்பட்டன. 1920ஆம் ஆண்டு சோவியத் உருசியாவில் செயின்ட் பீட்டர்சு நகரில் நடந்த மகளிரின் போராட்டத்தில் உருசியாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா கலந்து கொண்டு ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். அதன்படி 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

    1960களில் எழுச்சி பெற்ற தீவிர பெண்ணிய சிந்தனைகளின் விளைவால் 1975ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்துள்ளது.

    ராஜாராம் மோகன் ராய், மகாதேவ கோவிந்த ரானடே, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், கேசவ சந்திர சென், பண்டித ரமாபாய், மகாத்மா பூலே முத்துலட்சுமி ரெட்டி, காந்தியடிகள் போன்ற பல சிந்தனையாளர்களும் நம் இந்திய சமூகத்தில் பெரும் விழிப்புணர்வை எற்படுத்தினர். இந்திய பெண்களின் விடுதலைக்கு வித்திட்டனர். அண்ணல் அம்பேத்கர் இந்தியப் பெண்கள் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளின் சட்டரீதியான அங்கீகாரத்துக்காகப் போராடினார் . தந்தை பெரியாரின் சிந்தனைகளும் போராட்டங்களும் முழுமையான பெண் விடுதலைக்கு வழிகாட்டியாக இருக்கின்றன.

    இன்றைய இந்தியாவில் மகளிர் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர்களாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த லாவண்யா தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய பட்டமளிப்பு விழாவில் 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூங்கோதை சிறந்த விவசாயிக்கான தேசிய விருது பெற்றார். மக்காச்சோள உற்பத்தியில் இவர் படைத்த சாதனைக்காக ‘கிரிஷிகர்மான்’ என்ற தனிநபர் சாதனையாளர் விருதை பிரதமர் கையால் பெற்றார்.

    நெல் விளைச்சலில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளவர் மதுரை திருப்பாலை கிராமத்தை சேர்ந்த பிரசன்னா என்பவர். இயற்பியல் பட்டதாரியான இவர், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

    இந்த நவீன காலத்தில் பெண்களுக்கான சுதந்திரமும் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதையும் காணமுடிகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் (United Nations Population Fund) புள்ளி விவரப்படி நம் நாட்டில் ஒரு ஆண்டுக்கு சுமார் 2,45,000 மணமாகாத இளம் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது.

    இந்தியாவில் பெண்கள், சிறுமியர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.

    “இந்தியாவில் பெண்கள், சிறுமியர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதேபோல், குழந்தைகளைப் புறக்கணிக்கும் நடைமுறையும் அதிகமாக உள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக சமுதாயத்தினர் இருப்பதில்லை. இந்நிலை, சமீபகாலமாக உச்சத்தை அடைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்கும் உயரிய பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது. பொதுவான சட்டங்கள் இருந்தபோதிலும் அவை சரியானபடி நிறைவேற்றப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும்” என்று ஐ.நா.குழந்தைகள் உரிமைக் குழுத் துணைத் தலைவர், பென்யாம் மெஜ்முர் கூறியிருப்பது கருத்தில் கொள்ளவேண்டியது.

    மத்திய அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் குழந்தைகள் மீதான அத்துமீறல் பற்றிய ஆய்வு 2007 என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், சிறு குழந்தைகள், குறிப்பாக 5 முதல் 12 வயதிற்குட்பட்டோர் அதிகளவில் குழந்தைகள் மீதான அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், டெல்லி ஆகிய மாநிலங்களில் ஆண், பெண் குழந்தைகளிடையே அதிகளவு பாலியல் வன்முறை கண்டறியப்பட்டுள்ளது.

    பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53 விழுக்காடு குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9 சதவீத குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 லட்சம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றார்கள். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் 15 விழுக்காட்டினர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42 விழுக்காட்டினர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழகத்திலும் பெண்களுக்கு எதிராக கடந்த 2008-இல் 573 பாலியல் குற்றங்களும், 1160 கடத்தலும், 1548 குடும்ப வன்கொடுமைகளும் பதிவாகியுள்ளன. 2009-இல் 596 பாலியல் குற்றங்களும், 2010-இல் 686 பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும் பதிவாகியுள்ளன. இந்த ஜூன் மாதம் மாத்திரம் தக்கலையில் 13 வயது சிறுமி, பொள்ளாச்சியில் ஆதரவற்றோர் விடுதியில் தங்கிப் படித்த இரண்டு சிறுமிகள், மற்றும் கரூர், மதுரை, சாத்தூர் சென்னை என 12 பாலியல் வன்கொடுமைகள் பதிவாகியுள்ளன. இதில் 8 வழக்குகள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளாகும். 2011-ஆம் ஆண்டு 677 பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும், 2012ஆ-ம் ஆண்டு 528 குற்றங்களும் 2013-இல் 1019 பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும் பதிவாகியுள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக தேசிய குற்றப்பிரிவு புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

    2005இல், பெண்களைப் பாதுகாக்க குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் வந்தது. 2006 நவம்பர் முதல் 2007 சூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 7913 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2008 மே மாதம் வரை வந்த 712 புகார்களில் தீர்வு காணப்பட்டவை 179 என்கிறது தமிழக புள்ளிவிவரம்.

    சராசரியாக 50 கோடி பெண்கள் வாழும் நம் இந்தியாவில், கல்வியிலும், திறமையிலும் ஆணுக்கு நிகராகவே சாதித்துக்கொண்டிருப்பவர்கள் பெண்கள். 2003ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அந்த 50 கோடி பெண்களில் 48.3% பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்பதும், அதில் 28% பேர் வேலையில் இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தின் சராசரியான 7 கோடி சனத்தொகையிலும் பெண்களுக்குச் சரி பாதியிடம் உள்ளது. இங்கு கல்வி பெற்றவர்கள் எண்ணிக்கை மட்டும் இரண்டு கோடி பேர் என்பதும் பெண்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது.

    “பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” என்ற தந்தை பெரியாரின் வாக்கை நினைவில்கொண்டு பெண்களின் மீதான ஒடுக்குமுறையைக் களைந்து, சுய மரியாதை, சமூக மதிப்புடன் கூடிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றுடன் மென்மேலும் சாதனை புரிய வழிவகுக்கும் வகையில் பெண்கள் வாழ்வு மலரவேண்டும் என்பதே இந்த சர்வதேச மகளிர் தினத்தின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.

    Share
  • சுட்டும் விழிச்சுடர்! – கொடிது .. கொடிது…

    பவள சங்கரி

    dsc_0340-collage
    நேற்று காலை செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தபோது பக்கத்தில் ஏதோ படபடவென மெல்லிய சிறகசைக்கும் ஓசை கேட்டது. சற்றே திரும்பிப்பார்த்தபோது, அழகிய அந்த அடர்நீல வண்ண பட்டாம்பூச்சி என்னருகில் சன்னல் விளிம்பில் தம் சிறகை மெல்ல ஆட்டியபடி அழகு காட்டிக்கொண்டிருந்தது. புதிய 2000 உரூபாய் நோட்டின் சுவையான செய்தியைக்கூடத் தொடரத் தோன்றாமல் அதன் அழகிலேயே இலயித்திருந்த அந்த சுகமான தருணத்தில்தான் திடீரென ஒரு இராட்சசன் பல்லி உருவத்தில் வந்து கப்பென அதன் மென்சிறகைக் கவ்வியே விட்டது. என்ன செய்வது என்று அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அது அந்த சிற்றுயிரை மேலும் தன் வயமாக்கிக்கொள்ள யத்தனித்தது. சட்டென்று சுயநினைவு வந்தவளாக அந்த இராட்சசனை விரட்டிவிட்டாலும் அடுத்த சில மணித்துளிகள் அது துடிதுடித்ததைக் காணச்சகிக்கவில்லை. எப்படியும் பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில், செய்வதேதும் அறியாமலே உயிர் நீர் ஊற்றுவதாக எண்ணிக்கொண்டு என் விருப்ப தெய்வங்கள் அத்தனையையும் வேண்டிக்கொண்டு துளித்துளியாக நீர் தெளித்தும் பார்த்தும் ஒன்றும் பலனில்லை. இன்னும் மறக்க முடியாமல் மனபாரம் ஏற்படுத்தும் காட்சியது.. மனிதர்களின் வாழ்க்கைகூட இப்படித்தானே. எந்த நேரத்தில் வாழ்க்கை எப்படி மாறும் என்று தெரியாமலேதானே நம் விருப்பம்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

    நிலைமாறும் உலகில் நிலையில்லா வாழ்க்கையிது என்று தெரிந்தும் நம்மை நம்மால் நம் இயல்புகளிலிருந்து பல நேரங்களில் அது மோசமானது என்று அறிந்தும் மாற்றிக்கொள்ள முடியாமலே போய்விடுகிறது. அதற்கு நொண்டிச்சாக்கு சொல்லவும் தயாராகவே இருக்கிறோம். சமீபத்தில் என் தோழி ஒருவர் என்னிடம் மிகவும் வருந்தி சொன்ன சம்பவம் இது.

    ஒரே மகனைப் பெற்று அத்தனை அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்த்த மகன் தன் குடும்பம், மனைவி, குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று தன் இரத்த உறவுகளுடன் கூடிக்களித்திருக்க ஆரம்பித்தவுடன் தாய் பாரமாகி விட்டாள். தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். அதற்கு, தங்கள் சந்தோசத்திற்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் அவருடனேயே பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், தனியாக விட்டுவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்று அழிச்சாட்டியம் செய்வதாகவும் பல காரணங்கள் சொல்கிறாராம். இவையனைத்திற்கும் மேலாக “எங்க அம்மா அவங்க மாமியாரை அதான் எங்க ஆத்தாவை இப்படித்தானே முதியோர் இல்லத்தில் சேர்த்தாங்க. எங்க ஆத்தாவுக்கு அவங்க பணம் கூட ஒழுங்கா கொடுக்காம, மாத்திரை மருந்துகூட சரியாக்கிடைக்காம, வேதனைப்பட்டு அனாதை மாதிரி செத்துப்போச்சு எங்க ஆத்தா. அத்தனை அதிகாரத்தோட, சொத்தோட இருந்த எங்க ஆத்தாவுக்கே கடைசீல அந்த நிலைமைதான். ஆனா நான் அப்படியா அனாதையா விடப்போறேன். நல்ல ஹோம்ல, ரூ.25,000 டெபாசிட் கட்டி சேர்க்கறேன்னுதான் சொல்றேன். அவிங்களுக்கும் அவிங்க வயசுக்குத் தகுந்த தோழிகள் (?) கிடைப்பாங்கல்ல.. நேரத்துக்கு சாப்பாடு போடுவாய்ங்க. பெரிசா வேலையெல்லாம் ஏதும் செய்ய வேணாம். அப்புறம் வேற என்ன பிரச்சனை. நேர நேரத்துக்கு டி.வி சீரியலும் அங்க போடுவாய்ங்களாம். அது போதாதா? நாங்களும் நிம்மதியா இருக்கிறோம், அவிங்களும் சந்தோசமா இருக்க வேண்டியதுதானே. அதுக்கும் போகமாட்டேன்னு அடம் பிடிச்சாக்க என்ன செய்யிறது. இங்கேயே இருந்து உயிரை வாங்குது” என்று பஞ்சாயத்து வைத்திருக்கிறான்.

    சுவற்றில் அடித்த பந்து திரும்பி வந்ததுபோல, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதற்கிணங்க, வயசு காலத்தில், தனக்கு இப்படியொரு நிலை வரவே வாய்ப்பில்லை என்ற கற்பனையில் தன் மாமியாருக்குச் செய்த அதே கொடுமை இன்று தனக்கே திரும்பி வந்ததை ஏற்கவே முடியவில்லை அத்தாயினால். இப்படியொரு நிலை வரும் என்று அன்றே தெரிந்திருந்தால் ஒருவேளை அந்தத் தவறை செய்யாமல் இருந்திருப்பாரோ என்னவோ. சரி அப்படியே இருந்தாலும் இன்று தன் குடும்பத்தாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தாயை முதியோர் இல்லம் அனுப்பினால் மீண்டும் இதே நிலை தனக்கோ, தன் மனைவிக்கோ வராது என்பதற்கு என்ன உத்திரவாதம். தன் அம்மாவிற்கு செய்யும் இந்த துரோகத்தை சரியென்றுதானே தன் மகனும் நம்புவான் என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். வழிவழியாக முதியோர் எல்லோரும் முதியோர் இல்லத்திலேயே வாழும் வழக்கத்தை இக்குடும்பத்தினர் ஏற்படுத்திக்கொள்வார்களா? அதுதானே நிதர்சனமாகப்போகிறது.

    முதுமை எவ்வளவு கொடிது என்று நாம் அறியாததல்ல. எத்தனை சுற்றம் அருகிலிருந்தாலும், எவ்வளவு பெரிய மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலும் முதுமையின் இரணங்களை சுற்றி இருக்கும் எவரும் பகிர்ந்து கொள்வது சாத்தியமே இல்லை. ஆறுதலான, அன்பான வார்த்தைகள் மட்டுமே ஓரளவிற்கு அமைதியை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட நேரத்தில் அந்த அன்பும், பேரக்குழந்தைகளின் பாசமும் கூட கிடைக்காமல் தனியாக ஒரு இல்லத்தில் துரத்தி விடுவது என்பது கொடுமையிலும் கொடுமை இல்லையா?

    முதுமை நிலையில் தனிமை என்பது மிகவும் கொடிய செயல். அதுவும் வெளி உலகமே அறியாமல், குடும்பமே கோவில், குழந்தைகளே வாழ்க்கை என்று இருக்கும் சூழலில் வாழும் பெண்களுக்கு இப்படி ஒரு நிலை என்றால் அவர்களால் எப்படி சகித்துக்கொள்ள இயலும். உணவும், உடையும், உறையுளும் போதாதா என்ற கேள்வியே சித்திரவதையானது அல்லவா. அந்தத்தாய் தன்னுடைய தேவை என்ன என்பதை என்ன சொல்லி புரிய வைப்பாள். மீதமிருக்கும் சொற்ப காலங்களை, உழைத்து, உழைத்து ஓடாய் தேய்ந்துபோன உடலை சுமக்க முடியாமல் சுமப்பதோடல்லாமல், மலையாக நம்பியிருந்த தம் சொந்த இரத்தமே தன்னைப் புரிந்து கொள்ளாத வேதனையை, மன பாரத்தையும் சேர்த்து சுமப்பதென்றால் அந்த உயிர் என்ன பாடுபடும்? இப்படியொரு மகன் இருப்பதற்கு அவள், தான் குழந்தையே பெறாத மலடியாகக்கூட இருந்திருக்கலாம் என்று சொல்வதில் எவ்வளவு ஆதங்கம் அடங்கியிருக்க வேண்டும். ஆனாலும் எந்தத் தாயும் அப்படி எண்ணிக்கூட பார்க்கமாட்டாள். தாம் பெற்ற குழந்தைகள் தம் கண் முன்னால் எந்த ஒரு சிறு துன்பத்தையும் அனுபவிப்பதை தாங்கிக்கொள்ள மாட்டாள்.

    ஒரு தாய் தம் குழந்தைகளை பாசத்தைக்கொட்டி வளர்ப்பது பிற்காலத்தில் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற சுயநலம் கருதி அல்ல. தாய்மை என்பதன் அர்த்தம் அதுவல்ல. ஆனாலும் இறுதிக் காலங்களில் குழந்தைகளின் அன்பையும், அரவணைப்பையும் தவிர அந்த முதுமை வேறு எதை எதிர்பார்க்கப்போகிறது? அந்த மகன் இதை உணர்ந்து அந்த அன்பையும், பாசத்தையும் காட்டினால் தம் குழந்தைகளும் நல்ல முறையில் வாழ்க்கையை எதிர்கொள்வார்கள், பிற்காலத்தில் தங்களுக்கும் இப்படியொரு நிலை வராது என்று புரிந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் …

    இந்தியாவில் 60 அகவையைக் கடந்தவர்கள் 9.5 கோடி பேர் உள்ளார்கள். 2025 இல் 8.5 கோடி பேர் மேலும் இதில் இணைவார்கள். 80 அகவையைக் கடந்தவர்கள் 80 இலட்சம் பேர் இருக்கிறார்கள். மாறிவரும் குடும்ப அமைப்பு முறைகள், பொருளாதார நிர்ப்பந்தம் போன்ற சில காரணங்களால் முதியவர்களின் நிலை குடும்பத்தை விட்டு விலகியிருக்க வேண்டிய வேதனையில் தள்ளிவிடுகிறது. மன அழுத்தம், தனிமை, ஆரோக்கியக்கேடு போன்ற பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். உலகெங்கும் முதியவர்களின் பராமரிப்பு என்பது பெரும் பொருளாதார சுமையாகவே பார்க்கப்படுகிறது. சப்பான் போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் முதியவர்களை ஆக்கப்பூர்வமான வழிகளின் பயன்படுத்துவதன் மூலம் அவர்களால் ஏற்படக்கூடிய பொருளாதார சுமையைக் குறைக்க முடியும் என்பதையும் சில நிறுவனங்களும், சமூகங்களும் செயலில் செய்து காட்டிவருகின்றன. நம் நாட்டிலும் இது போன்று ஏதேனும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும். முதியோர்களின் அனுபவ அறிவு இளம் தலைமுறையினருக்கு உதவும் வகையில் வழிமுறைப்படுத்துவது நலம் பயக்கும்.

    வயது காலத்தில் தனக்கென்று, தன்னுடைய முதுமைக் காலத்தில் பயன்படும் என்று சேமித்து வைத்துக் கொள்ளாமல், வயதான காலத்தில் பிள்ளைகள் தம்மைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் இருந்துவிடுவது அறிவீனம் என்பதையும் உணரவேண்டும்.

    முதுமையை பாதிக்கக்கூடியவைகள், உடற்காரணிகள், உளக்காரணிகள் ஆகிய இருவகை. மூளையின் செயற்பாட்டின் நிலை குறைவடைதல், மூட்டுக்களில் தசைகளில் பலவீனம் ஏற்பட்டு மூட்டுக்களில் தேய்வு ஏற்படுதல், நரம்புகளில் தளர்ச்சி ஏற்படுதல், தசைகள் மெலிவடைதல், தோல்கள் சுருங்குதல், மயிர்கள் உதிர்தல், நரை ஏற்படுதல், புலனுறுப்புகளில் குறைபாடுகள் ஏற்படுதல், நோய் எதிர்ப்புச் சக்திகள் குறைவதால் தொற்று நோய்கள் ஏற்படுதல் போன்றவை உடற்காரணிகள்.

    உளக்காரணிகளைப் பொறுத்தவரையில், உடற்காரணிகளை விடவும் மீப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவைகளாகவே இருக்கும். பொதுவாக மனதளவில் பாதிப்படையக் கூடியவர்கள் அதிலிருந்து விடுபடுவது மிகவும் கடினமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், முக்கியமாக இடம்பெயர்வு ஏற்படுகின்ற போது முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். பிறந்து, வளர்ந்த பூமியை விட்டும் , ஆடி விளையாடிய மண்ணை விட்டும், பழகிய உறவுகளை விட்டும், அறிமுகமற்ற இடத்திற்குச் செல்லும்போது பெருந்துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
    பெற்றோர் முதுமையில் எத்தகைய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களது பிரச்சினைகளையும் மனோ நிலைகளையும் அறிந்து அவர்களை அன்புடன் நடத்த வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளது என்பதை இளமையிலேயே அவர்களுக்கு ஊட்டி வளர்க்க வேண்டியதும் அவசியமாகிறது .

    Share
  • சுட்டும் விழிச்சுடர்! – மூட நம்பிக்கை

    பவள சங்கரி

    சமீபத்தில் ஆன்மீகம் – தெய்வ நம்பிக்கை என்ற பெயரில் ஒரு இளம் பெண்ணை மூளைச்சலவை செய்து பட்டினி போட்டு கொன்ற சம்பவம் சமூகவியலாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    father

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் உயிர் நீத்துள்ளார். சமண சமயத்தைச் சேர்ந்த சிறுமி ஆராதனா சம்தரியா. சமயக் கடமை என்ற பெயரில் தண்ணீர் மட்டுமே குடித்து 68 நாட்கள் தொடர் விரதம் இருந்து வந்துள்ளார். விரதம் முடிந்ததைக் குறிக்கும் வகையில் ஆராதனாவின் பெற்றோர் அவரைத் தேரில் ஊர்வலமாக அழைத்துச்சென்று ‘பாரானா’ என்ற பெயரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதில், தெலுங்கானா மாநில அமைச்சர் பத்மராவ் கவுட், தலைமை விருந்தினராக பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆராதனா, சென்ற ஆண்டிலும் இதேபோன்று 68 நாள் விரதம் மேற்கொண்டதை சிறார் உரிமை அமைப்பு மூலம் அறியமுடிகிறது. செகந்திராபாத்தில் நகைக்கடை உரிமையாளரின் மகளான, எட்டாம் வகுப்பு பயிலும் ஆராதனா என்ற சிறுமி பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் இப்படிப்பட்ட ஒரு விரதத்தை மேற்கொண்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. விரதம் முடிந்து உடல் பலகீனமாக இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அக்டோபர் 3ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார்.

    இந்திய மக்கள் தொகையின் 0.4 விழுக்காடு உள்ள சமணர்கள் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள். சமணர்களின் முதன்மையான வழிபடு தெய்வங்கள் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் ஆவர். தீர்த்தங்கரர் என்பவர் ‘அருகபதவி’ அதாவது பேரின்ப நிலையை அடைந்தவர். தீர்த்தங்கரரை அருகர் என்று அழைக்கிறார்கள். அருகரை வணங்குபவர் ஆருகதர் என்று அழைக்கப்பட்டனர். 24ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் , மற்றும் இந்திரன், யக்ஷி, ஜ்வாலாமாலினி, சாஸ்தா போன்ற சிறு தெய்வங்களையும் சமணர்கள் வழிபடுகின்றனர். தீர்த்தங்கரர்கள் மனிதர்களாகப் பிறந்து, வாழ்ந்து உயர்நிலையை அடைந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜினகாஞ்சி,வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள அரந்தை, திறக்கோல், திருப்பாண்மலை, ஈரோடு அருகில் விசயபுரி போன்ற இடங்களில் 60க்கும் மேற்பட்ட பழைமையான சமணக் கோயில்கள் உள்ளன.

    jain11

    தீர்த்தங்கரர் என்றால் புலன்களையும் கர்மங்களையும் வென்றவர்கள் என்று பொருள். மனிதர்கள் முக்தி அடைவதற்கான வழியைக் காட்டியவர்கள் தீர்த்தங்கரர்கள். கடவுள் நிலை ஒன்றே என்றாலும் கடவுளர்கள் பலர். மனிதர்கள் அனைவருமே கடவுள் நிலையை அடைய தகுதி உடையவர்களே என்கிறது சமணம். இதற்கு நல்லொழுக்கம், நல்ஞானம், நற்காட்சி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என ரிஷப தீர்த்தங்கரர் வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

    நன்றி - செல்வன்
     சிகாகோ சமணர் ஆலயம்  – வடக்கிருந்து உயிர் துறந்தவர் –  நன்றி : செல்வன்

     

    சமணக் கோயில்களின் அமைப்பு முறை சைவ, வைணவக்கோயில்களின் அமைப்பு முறையைப் பெரிதும் ஒத்துள்ளது. அதாவது சைவ,வைணவக் கோயில்களில் உள்ளது போலவே மூலவர், உற்சவமூர்த்தி ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள சமணர்கள் திகம்பரர் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இக்கோயில்களில் உள்ள திருவுருவங்கள் ஆடையில்லாமல் அமைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. கோமதேசுவரர் இவ்வகையைச் சார்ந்தவர். சைவ, வைணவக் கோயில்களைப் போலவே சமணக் கோவில்களிலும் திருவிழாக்களும், இறைவன் திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதுமட்டுமன்றி, தீபாவளி, சிவராத்திரி போன்ற சில பண்டிகைகள், விழா கொண்டாடும் முறைகள், நாட்கள் என அனைத்தும் ஒன்றுபோல் அமைந்திருப்பதையும் அறிய முடிகிறது. முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் என்கிற ஆதிநாதர் வீடுபேறு அடைந்த நாளையே சமணர்கள் சிவராத்திரியாகக் கொண்டாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சமணம்: காவல் தெய்வங்கள் விஜி சக்கரவர்த்தி
    சமணம்: காவல் தெய்வங்கள்
    விஜி சக்கரவர்த்தி

    “சமணர்கள் இல்லாதிருந்திருந்தால் தமிழுக்கு இலக்கண இலக்கியங்கள் செம்மையாக அமைந்திருக்குமா என்றே ஐயம் எழுகிறது. தொல்காப்பியம், அதன் உரையாசிரியர் இளம்பூரணவடிகள், நன்னூல், குறள், நாலடி, சிலம்பு, அதன் உரையாசிரியர் அடியார்க்குநல்லார், சிந்தாமணி (சிந்தாமணியை கொங்குநாட்டு நூல் என்கிறார் உவேசா அவர்கள்), நிகண்டுகள் (பிங்கலந்தை பொள்ளாச்சி சிவன்பிள்ளை அச்சாக்கினார்கள்), நன்னூல் ஆசிரியர் போலவே அதன் உரைகாரர் மயிலைநாதர் கொங்கு நாட்டினர் என்ப. மயிலைநாதர் உரையைப் பின்பற்றிச் சைவபரமான உரைகள் பின்னாளில் எழுந்துள்ளன” – மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள், (பக். 554-555)

    இவைதான் சமண மதத்தினரின் அடிப்படை ஆன்மீகக் கொள்கைகள். இதன் அடிப்படையிலேயே ஒரு 13 வயது சிறுமியை வற்புறுத்தி, தெய்வ நிலை என்ற பெயரில் பட்டினிச்சாவு ஏற்படுத்தியுள்ளது மிகவும் கொடுமையான விசயம். சிறுமி ஆராதனாவின் இறுதி ஊர்வலத்தில், சமண மதத்தைச் சேர்ந்த, 600க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்துள்ளார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அப்பெண்ணின் இறப்பையும் தெய்வச் செயலாகக் கருதியதோடு, தவ வலிமை பெற்ற பால யோகி என்ற முறையில் அந்த மரணத்தையும் ‘ஷோபா யாத்திரை’ என்று கொண்டாடியிருக்கிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.

    சித்தர்கள், முதுபெருமக்கள் போன்றோர் உணவு, நீரின்றி கடும் தவத்தில் ஈடுபடுவது நாம் அறிந்திருக்கிறோம். அதுவும் பெரும்பாலும் பல காலங்களுக்கு முன்பு நடந்த விசயங்கள் இவை. 13 வயதே ஆன சிறுமியை வற்புறுத்தி உண்ணாவிரதம் இருக்கவைத்து மரணம் ஏற்படுத்தியதை கொலை என்றே கொள்ள முடிகிறது. சாப்பாட்டிற்கே வசதியில்லாதவர்கள்கூட செய்யத் துணியாத இப்படியொரு காரியத்தை ஆன்மீகம் என்ற பெயரில் செல்வந்தரான இவர்கள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    ஆன்மீகம் என்பது கட்டுப்பாடுள்ள அறிவியல்தானேயொழிய அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கை அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். ஆன்மீக ஞானிகளின் சித்தாந்தங்கள், வேதங்கள் என அனைத்தும் பெரும்பாலும் அறிவியலின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதே நிதர்சனம். அதாவது அறிவியல் சார்ந்த ஆன்மீகம் மட்டுமே மனிதர்களுக்கு அமைதியையும், வெற்றியையும் அருளக்கூடியவை என்பதை உணர்ந்தால் மட்டுமே ஆன்மீகம் என்பதன் முழு பலனையும் அனுபவிக்க முடியும் என்பதே சத்தியம். தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தின் இயக்கங்களையும், அதன் தொடர்புடைய தம் வாழ்க்கை விதிகளையும் அறிந்துகொள்ள வேண்டியே மனிதன் ஆரம்ப காலம் முதலே ஆழ்ந்த தேடல் கொண்டிருக்கிறான். இந்தத் தேடல்களின் ஒரு பகுதியே அறிவியலாகவும், மற்றொரு பகுதி ஆன்மீகமாகவும் உருவெடுத்துள்ளன. ஒரு வகையில் ஆன்மீகமும், அறிவியலும் நெருங்கிய தொடர்புடையவையே எனலாம். அறிவியலைப் பொருத்தவரை தமது வாழ்க்கைத் தேவைகளுக்கேற்றவாறு தன்னைச் சுற்றியுள்ள இப்பிரபஞ்சத்தை வளைக்க முற்படுகிறது. ஆன்மீகத்தைப் பொருத்தவரை தாம் வாழும் உலகிற்கேற்றவாறு தம்மை அனுசரித்துக்கொள்ளும் போக்கு. மனிதர் அறிவியல் சார்ந்த ஆன்மீகம் கடைபிடிப்பதே சிறந்த வாழ்வியல் நெறி. உதாரணமாக இயற்கைப் பேரழிவுகளின் சேதாரங்களை ஆன்மீக நம்பிக்கையுடன் அறிவியல்பூர்வமாக அணுகி தீர்வு காண்பது போன்றது. அதாவது ஆன்மீகம் என்பது வழிபாடுகளில் மட்டும் அடங்கிவிடுவதில் அல்ல, அதையும் மீறி சிறந்த முறையில் வாழ்ந்து காட்டுவதில் உள்ளது என்பதே சத்தியம்.

    மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பை தெளிவுற விளங்குதல் அவசியம். அறிவியலுடன், ஆன்மீகமும் மனித வாழ்க்கைக்கு பெரிதும் தேவைப்பட்டாலும், ஆன்மீகத்தை குறிப்பிட்டதொரு வரையறைக்குள் வைத்து பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் வாழும் சூழல் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு சிலபல கோட்பாடுகளை ஏற்படுத்தி அதன்படி வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சில நேரங்களில் பல மதத் தலைவர்களும் முக்கியமான கோட்பாடுகளை ஒதுக்கிவிட்டு, சில கட்டுக் கதைகளை பரப்பிக்கொண்டிருப்பதன் விளைவே இது போன்று மூட நம்பிக்கைகளையும், உயிர் பலியையும் ஏற்படச்செய்துள்ளன.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எப்படியாவது வாழ்க்கையின் உச்சத்தை அடையவேண்டும் என்ற வேட்கை புதைந்துள்ளது. ஆன்மாவை உணர்ந்து அமைதியான பாதையில் அடுத்தவருக்கு துன்பம் விளைவிக்காமல் வாழ்வதே ஆன்மீகம். இந்த ஆன்மாவை உணரும்பொருட்டு பல ஆன்மிக வழிகளை நம் முன்னோர் உருவாக்கினர். அவையாவும் நற்செயல்களை புண்ணியமாகவும், தீயச்செயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியுள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தாம் வாழுவதற்காக, தம் சுயநலத்திற்காக எத்தகைய பாவச்செயலையும் செய்யத் துணியும் மனிதரையே பரவலாகக் காணமுடிகிறது. அந்த வகையில், இந்த இளம் பெண்ணின் தந்தையின் நகைக்கடையை பிரபலப்படுத்தவே இந்த உண்ணாவிரதம் கடைபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

    புதுமணப் பெண்ணைப்போல் அலங்கரித்து தங்க முலாம் பூசப்பட்ட ரதத்தில் அமர்ந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட ஆராதனாவின் ‘சந்த்தாரா’ எனப்படும் இந்த உண்ணாவிரதச் சடங்கு பத்தாவது வாரத்தை நெருங்கியபோது உள்ளூர் ஊடகங்களில் ஏராளமான விளம்பரங்கள் வந்துள்ளன. அத்தோடு பலர் அந்த பாலயோகியுடன் தம்படம் எடுத்துக்கொள்ளவும் முனைந்துள்ளனர் என்பதும் ஆதாரமாக உள்ளது.

    இனிமேலும் இதுபோன்று ஒரு குற்றம் நடக்காமல் இருக்க வேண்டுமானால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்.

    Share
  • சுட்டும் விழிச்சுடர்!

    பவள சங்கரி

    ‘மரணம் என்பது காலதேவனின் தண்டனை அல்ல. அது காலதேவனின் பரிசு’ என்பது கீதையில் கண்ணன் வாக்கு . இப்பூவுலகில் மனிதராய்ப் பிறந்த எவரும் ஓர்நாள் தம் உயிரை நீத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அது எப்படி, எந்தச் சூழலில் நிகழ்கிறது என்பதைப்பொறுத்தே அதன் தன்மை உள்ளது. தவிர்க்க வேண்டிய சூழலை தவிர்க்க மன ஆற்றலும், புத்திக் கூர்மையும், உள்ளத் தெளிவும், விழிப்புணர்வும் தேவை. இது தேவையான அந்த குறிப்பிட்ட சூழலில் புதிதாக முளைத்தெழுவது அல்ல. இளமை முதலே இரத்தம் ஊறும்போதே நம்முள் ஊறத்தொடங்கும் எண்ணவோட்டம் இது. அதனை மேலும் வலிமையூட்டுவது மட்டுமே நம் பணி. தம்மைத் தாமே வலிமையூட்டிக்கொள்ளும் பக்குவமும், வல்லமையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் இது கிடைத்தற்கரிய வரம். ஆனால் அந்த வரம் பெற்றவர் மட்டுமே வாழ்த்தகுதியானவரா என்றால் நிச்சயம் இல்லை. இந்த இடத்தில்தான் குருமார்கள், ஆசிரியர்கள், ஆன்றோர், சான்றோர், மூத்தோர் போன்றோரின் கடமைகள் இந்த சமுதாயத்தின் முக்கியத் தேவைகளாகிப்போகின்றன. ஆம் நம் சக மனிதர்கள் படும் துயரைக் கண்டு உள்ளம் பொங்கும் மனிதம் நிறைந்த எவரும் அதிலிருந்து அவர்கள் மீண்டுவர தம்மால் இயன்றதைச் செய்யத் துடிப்பதும் நிதர்சனம். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள். அப்படி ஆடும்போது தம் கண்முன் நடக்கும் அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்த மனம் துடிக்கும்.

    தெருவில் நம்மைக் கடக்கும்போதோ, உணவு விடுதியில் சுவையான உணவை சுவைத்துக் கொண்டிருக்கும்போதோ, அன்புக் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கும்போதோ, அல்லது இன்பமாக பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தாலும், எப்படிப்பட்ட சூழலாக இருப்பினும் திடீரென ஆம்புலன்சு ஊர்தியின் அலறல் ஏதேனும் காதில் விழுந்தால் மனிதம் உள்ள எவருக்கும் அந்தச் சில நொடிகள் தம்மையறியாமல் உடல் செயலிழந்து உள்ளம் மட்டும் விழித்தெழுந்து உணர்வு பொங்க ஏதோவொரு வேதனையில் அவசரமாக உயிருக்குப் போராடியபடி மருத்துவமனை ஓடும் முகந்தெரியாத அந்த உயிருக்காக பிரார்த்தனை செய்வதோ அல்லது மனமார வாழ்த்தவோ செய்யாமல் இருக்கமுடியாது. இதுதான் உண்மையான மனிதம். சக மனிதர்களின் வேதனை தம்மையும் பாதிக்கத்தான் செய்யும். சம்பந்தமில்லாத யாரோ ஒருவருக்கே இந்த எண்ணம் தோன்றும்போது மேற்சொன்ன முக்கியமான சமுதாய அங்கங்களான, குருமார்கள், ஆசிரியர்கள், ஆன்றோர், சான்றோர், மூத்தோர் போன்றோரின் பங்கு எவ்வளவு இன்றியமையாதது என்று சிந்திக்க வேண்டும். அப்படி ஏதும் பொறுப்புணர்வு இவர்களிடம் முழுமையாக இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் வெளிப்படையாகச் சொல்ல முடிகிறது.

    தொழில்நுட்பமும், பொருளாதாரமும், பெண் கல்வியும், பொதுவான வாழ்க்கை முறைமைகள் என அனைத்திலும் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கும் இந்தக் காலகட்டங்களில்தான் அறியாமையைக் கட்டியங்கூறும் இதுபோன்ற அசம்பாவிதங்களும் நம் நாட்டில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

    சென்ற வெள்ளியன்று (25/03/16) சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள தவத்தாரேந்தல் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம்தான் நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது. இந்த நவீன காலங்களில் இது போன்ற சம்பவம் நடப்பது நம் கிராமங்கள் இன்னும் இருட்டிலேயே வாழ்ந்துகொண்டிருப்பதைத்தான் காட்டுகின்றது. விவசாயி புயல் என்ற வெள்ளைகண்டான் (58) என்பவரது மகன் அழகுராஜா. மகள் மீனா 17 வயது நிரம்பிய பிளஸ் 2 படிக்கும் மாணவி. அழகுராஜாவின் மனைவி லட்சுமி என்பவர் நேற்று மாலை வீட்டில் மின்சார மாவு அரைக்கும் இயந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருந்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் வெளியே அமர்ந்திருந்த வெள்ளைகண்டான் உள்ளே சென்று, மருமகளைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, மீனா, அழகுராஜாவின் மகள் பிரியதர்சினி என்கிற 9 மாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடியவர், தந்தையையும், அண்ணியையும் காப்பாற்ற முயன்றபோது மீனா, குழந்தை பிரியதர்சினி ஆகியோர் மீதும் மின்சாரம் பாய்ந்து, 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
    26-1458965599-dead--600

    பொதுவாக மின்கசிவு ஏற்படுவது பார்வைக்குத் தெரியாது என்றாலும், மிகப் பழைய மின்சார சாதனங்களை எப்பொழுதாவது ஒரு முறையேனும் மின்கசிவு சோதனை செய்து பார்ப்பது நல்லது என்றாலும் கிராமங்களிலும், சாதாரண குடும்பங்களிலும் இது சாத்தியமாவதில்லை. அதற்கான விழிப்புணர்வு பெரும்பாலும் இல்லவே இல்லை என்றே சொல்ல முடிகிறது. முதலில் மருமகள் கருகிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் பெரியவருக்கு பதட்டத்தில் என்ன, ஏது என்று புரியாமல் அவரும் அதே இயந்திரத்தைத் தொட்டோ அல்லது மின்சாரம் தாக்கிய மருமகளைத் தொட்டோ தானும் அதற்குப் பலியாகிவிட்டார். அதாவது மின்சாரம் தாக்கியவரைத் தொட்டால் தன்னையும் அது இழுத்துவிடும் என்ற அடிப்படை உணர்வே இல்லாமல் இருந்திருக்கிறார் அந்தப் பெரியவர். இதைவிடக் கொடுமை பள்ளியிறுதி வகுப்பு பயிலும் ஒரு மாணவிக்கும் துளியும் விழிப்புணர்வு இல்லாமல் ஒரு சிறு குழந்தையையும் துக்கிக்கொண்டுபோய் மின்கசிவிற்கு பலியானதுதான்.

    பள்ளிகளில் என்னதான் கற்றுக்கொடுக்கிறார்கள். தற்போதைய கல்வி முறையில் வாழ்க்கைக் கல்வி என்பதே இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம். அறிவியலும், கணக்கும், வரலாறும் கற்பிக்கும்போது இடையிடையே வாழ்க்கைக் கல்விக்கும் அதாவது இது போன்ற அடிப்படை அறிவையாவது ஊட்ட வேண்டியது பள்ளி ஆசிரியர்களின் கடமை. குறிப்பாக கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பிருக்கிறது. நாங்கள் பள்ளியில் படித்த காலங்களில் வாரம் ஒரு முறை நீதி போதனை வகுப்பு என்று ஒன்று இருக்கும். அதில் பெரும்பாலும் வாழ்க்கைக் கல்விதான் போதிக்கப்படும். இது முற்றிலும் அந்த ஆசிரியரின் ஆர்வத்திலேயே நடக்கும். ஒவ்வொரு கதைகளை உதாரணமாகக் கூறி அதன் மூலம் பல போதனைகள் அளிப்பார்கள். பெண்கள் நலம், பாதுகாப்பு, அடிப்படை ஆரோக்கியம், சுத்தம், சுகாதாரம் என பல விசயங்கள் போதிக்கப்படும். இன்று அப்படி ஒரு வகுப்பு நடப்பதாகவேத் தெரியவில்லை. இது மட்டுமல்லாமல் சாரணர் வகுப்பு, முதலுதவி பயிற்சி, செஞ்சிலுவைச் சங்க பயிற்சி வகுப்பு என்று இப்படி அவ்வப்போது நடக்கும். அதில் இது போன்ற அடிப்படை விசயங்களைக் கற்றுக் கொடுப்பார்கள்.

    தெருக்கூத்து, மேடை நாடகம், சர்க்கசு, நகைச்சுவை நிகழ்ச்சிகள் என எது நடந்தாலும் இடையிடையே வேடிக்கையுடன் இது போன்ற சமுதாய விழிப்புணர்வு செய்திகளின் பரிமாற்றமும் நடைபெறும். ஆனால் இன்று மொத்தமாக இதெல்லாம் மறைந்துவிட்டது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமே முக்கிய இடம் பெறுகின்றன. விளம்பரங்களும், கேளிக்கைகளுமே பெரும் பகுதியை கைப்பற்றுகின்றன.

    இருபதாம் நூற்றாண்டுகளின் ஆரம்பங்களில் பெண்களின் கல்லாமையும், அறியாமையும் அதிகமாகி, கற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. கல்வியறிவற்ற நிலையில் ஒரு பெண் தம் பத்து அல்லது பனிரெண்டு அகவையில் மணமுடிக்கும்போது இயல்பாகவே அவளுக்கு கணவனைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு கூட இல்லாமல் இருந்தாள். ஆனால் இந்த 21ம் நூற்றாண்டில் அனைத்துமே முன்னேறியிருக்கிறது என்று ஆய்வுகளும், கணக்கெடுப்புகளும் கூறிக்கொண்டிருந்தாலும் இன்னும் நம் கிராமங்கள் இருட்டில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறதா என்ற ஐயத்தையே உறுதிப்படுத்துகிறது….

    Share
  • மனிதன் சூழ்நிலைக் கைதியா? (சுட்டும் விழிச்சுடர்)

    பவள சங்கரி

    காட்டிலோ, நாட்டிலோ ஒரு கொடிய மிருகத்தின் பிடியில் தனியாக அகப்பட்டுக்கொண்ட மனிதனின் நிலை என்ன? துணிச்சலும், சமயோசிதமும் தப்பிக்கவும், தற்காத்து உயிர் பிழைக்கவும் வழியமைக்குமா?

    tiger_attack

    பல மாதங்களுக்கு முன் தில்லி உயிரியல் பூங்காவில் +2 படிக்கும் மாணவர் ஒருவரை பூங்காவின் வளர்ப்பு மிருகமான வெள்ளைப் புலி ஒன்று அடித்துக் கொன்றது நினைவிருக்கலாம். இன்றைய நவீன உலகில் எதுவும் சாத்தியம் என்பதற்கிணங்க தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அந்தப் புலி அம்மாணவனின் சதையைக் கிழித்து உயிரைக் குடிக்கும் கொடூரமான காட்சியை ஒருவன் நிதானமாகப் படம் பிடித்துள்ளான். பிரம்மாண்டமாக தம் எதிரில் கோரப் பற்கள் காட்டி நிற்கும் புலியை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், அதை அறியும் வல்லமையும் இன்றி செய்வதறியாது சுவருடன் சுவராக ஒடுங்கி, கையை ஆட்டி நெருங்காதே நெருங்காதே என்று கெஞ்சிக் கேட்கும் ஒரு பரிதாபமான சீவனை, தன் கண் முன்னால் ஒரு அப்பாவி இளைஞன் கடித்துக் குதறப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு காப்பாற்ற முயற்சி எடுக்க எவருக்கும் தோன்றவில்லை என்பதோடு கல் மனதின் உச்சமாக ஒருவர் அதை காணொலிக் காட்சியாகப் பதிவு செய்து உலகம் முழுவதும் பரவவிடுகிறார். மனிதாபிமானம் என்பதன் சுவடே அறியாத ஒரு கொடூர மனம் படைத்தவனாகத்தான் அந்த மனிதனைக் காண முடிகிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும் நவீனத்துவங்களும் மனித நேயத்தை முற்றிலும் அழித்துவிடுமோ என்று அஞ்சவும் தோன்றுகிறது.

    images

    சென்ற ஆண்டு 2015, ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் ஒரு பூங்காவில் நீண்ட நடைப் பயணம் மேற்கொண்ட கலைஞர் கிரா கோபெஸ்டோன்ஸ்கி என்பவருக்கு நேர்ந்த மற்றொரு அனுபவத்தைப் பார்க்கலாம். பல முறை இது போன்று தனிமையில் நீண்ட பயணம் செல்லும் வழமையுடையவர் என்றாலும் இவர் ஒருபோதும் காட்டு மிருகங்களை நேருக்கு நேர் கண்டவரில்லை. அன்று நடந்து கொண்டிருந்தவரின் பின்புறம் ஏதோ விநோதமான சத்தம் கேட்டதைத் தொடர்ந்து தன்னிச்சையாகத் திரும்பியவர் கண்களில்பட்டது மூன்று, நான்கு மீட்டர் இடைவெளியில் நெடிதுயர்ந்த ஒரு உருவம். அவ்வளவு நெருக்கத்தில் அத்தனை உயரமான ஒரு மலைச் சிங்கத்தை முதன் முதலில் கண்டவரின் கால்கள் பின்னிக்கொண்டதென்னவோ உண்மைதான். என்றாலும் அவர் தம்மை திடப்படுத்திக்கொண்டு சட்டென்று ஓடாமல், மெதுவாக பின்புறம் நகர ஆரம்பித்தார். அந்த சிங்கமும் மெல்ல முன்னேறுகிறது. கிரா நின்றுவிடுகிறார்; அந்தச் சிங்கமோ பதுங்குகிறது… (பாய்வதற்கோ?) உடனே கியாரா தன்னை ஒரு பெரிய வேட்டைக்காரர் போலக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையை வளைத்துப் பிடித்துக்கொண்டு நிற்கிறார். ஆனால் அந்த காட்டு ராசா அதற்கெல்லாம் மசியவில்லை. அடங்காமல் நிற்கிறது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கிராவின் எந்த விதமான அசைவுகளையும் சட்டை செய்யாமல் மெல்ல முன்னேறுகிறார் அரசர். இன்னும் சில அடிகளே இடைவெளி! கிராவிற்கு எப்படியும் அந்த கொடிய மிருகத்தின் தாக்குதலிலிருந்து தப்பிவிட வேண்டும் என்ற மன உறுதி மட்டும் இருந்தது. ஆனால் அதன் கண்களில் இருந்த வெறியும், அதன் பிரம்மாண்ட உருவமும் தப்பிப்பது சாத்தியமா என்ற ஐயத்தையும் கொடுக்காமல் இல்லை. அடுத்து இன்னும் தீவிரமாக முயற்சி எடுக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டார். சுரப்பிகள் எல்லாம் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. அடுத்து அவர் எடுத்த விவேகமான ஒரு முடிவுதான் அவரை காப்பாற்றியதோ?

    ஆம், கிராவின் அடுத்த நடவடிக்கை தம் பலம் முழுவதும் திரட்டி உச்சக் குரலில் ஓபராவின் பாடலைப் பாடியதுதான்! இசைக்கேட்டால் புவியே அசைந்தாடுமே! ஆச்சரியம், ஆனால் உண்மை. சிங்க ராசா மெல்ல பின் வாங்கினாராம். தம் காதுகளை தரையோடு வைத்தவர் பார்வையை உயர்த்தி கிராவை உற்று நோக்கியவாறு மெல்ல பின் வாங்கியவர் பின் திரும்பிப் போயேவிட்டார்! முயற்சி திருவினையாக்கிவிட்டது. பின் அவர் தம் தோழர்களை அழைத்து நடந்ததைக் கூறி அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.

    அந்த கொடிய காட்டு விலங்கிடமிருந்து தப்பித்தது குறித்து உயிரியலாளர் அமி ரோட்ரிக்ஸ், விலங்குகள் உலகில், ஓடிக்கொண்டிருப்பவையெல்லாம் உணவுகள் என்பது எழுதப்படாத சட்டம். தரையில் அழுத்தமாக நின்றுகொண்டு, பலமாக ஒலியெழுப்பிக்கொண்டிருந்ததால் அந்தச் சிங்கம் அது தனக்கான உணவு இல்லை என்பதை உணர்ந்துகொண்டு திரும்பிச் சென்றுவிட்டது என்றார். ஆக அந்த சிங்கம் கிராவின் பாட்டில் பயந்து ஓடிவிட்டதுபோலும்!

    காட்டு விலங்கிடமிருந்து தப்பிக்க ஒரு உபாயம் இருப்பது போன்று நாட்டு விலங்குகளிடமிருந்தும் தப்பிக்க வழியா இல்லை. தேவையானவையெல்லாம் சற்று நிதானமும், தெளிவான சிந்தனையும்தான். தேவையற்ற அச்சமும், படபடப்பும்தான் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கிவிடக்கூடியது. பிரச்சனையை சமயோசிதமாக சமாளித்த சாமர்த்தியமான மங்கையிவள்!

    அமெரிக்காவில் காவல்துறை அவசர அழைப்பு எண் 911. ஒரு அமெரிக்க இளம் பெண் ஒரு குடிகார ஆண் நண்பனிடம் தனியாக மாட்டிக்கொண்டவள் மீண்டு வருவதற்கு ஒரு உபாயமும் கண்டுபிடித்தாள். தாம் குடிகாரனிடம் மாட்டிக் கொண்டிருப்பதை காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டிய சூழலில், அவனும் அதே அறையில் இருந்ததால் நேரடியாக புகார் அளிக்க முடியாத நிலை. அவள் காவல் துறை எண்ணான 911 என்பதற்கு அழைப்பு விடுத்து பீசா கடைக்குப் பேசுவது போல பேசுகிறாள். எதிர் முனையில் காவல் துறையினர் இது காவல் நிலைய அவசர உதவி, பீசா கடை அல்ல என்று சொன்னபோதும் அப்பெண் மீண்டும், மீண்டும் பீசா தேவை என்றும், அவசரம் என்றும் குறிப்பால் உணர்த்த, காவல் துறையினரும் சூழ்நிலையை ஒருவாறாக புரிந்துகொண்டவர்கள் மேலும் அது பற்றிய கேள்விகளைக் கேட்டு புரிந்து கொண்டதோடு விரைவில் வந்து அப்பெண்ணை காப்பாற்றியும்விட்டனர். மனம் இருந்தால் மார்கமுண்டு என்பதை உணர்ந்த அந்தப் பெண் சமயோசிதமாக தன்னைக் காத்துக்கொண்டாள்.

    பிரச்சனைகள் எவ்வளவுதான் பூதாகரமாக, உயிர் குடிக்கும் நிலையில் இருந்தால்கூட, தெளிந்த சிந்தனையுடன் அணுகும்போது மீண்டு வரும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை மேற்கண்ட சம்பவங்கள் உணர வைக்கின்றன அல்லவா…

    தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு திசம்பர் 16-ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கும், குற்றவாளிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகி சில நாட்களுக்குப் பின் மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயாவை மறக்கவும் முடியுமா.. இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தூக்கிலிட்டுக்கொண்டான். மற்ற நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில், நிர்பயாவை உடல்ரீதியாக அதிகம் துன்புறுத்தி காயப்படுத்தியதில் 17 வயதேயான ஒரு சிறார் குற்றவாளிதான் முக்கிய நபர். குற்றம் நிகழ்ந்தபோது அவருக்கு 17 வயதுதான் ஆனது என்ற காரணத்திற்காக சுமார் 3 ஆண்டுகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது 20 வயது நிரம்பியுள்ள நிலையில், விடுதலையாகி வெளியுலகுக்குச் செல்லும் அந்த சிறார் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. தில்லி மகளிர் ஆணையம் சார்பில் சனிக்கிழமை இரவு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்பதாகக் கூறி விட்டது. நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு இரவு 2 மணிக்கு இந்த மனுவை விசாரித்து, பிறகு ஒத்திவைத்தது. இந் நிலையில் 21.12.2015 அன்று மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. சிறார் தண்டனை சட்டத்தில் கட்டாயம் திருத்தம் கொண்டு வரவேண்டிய நிலையில் அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நிர்பயாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் தில்லியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நிர்பயாவிற்கு ஆதரவு தெரிவித்து கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். நம் நாட்டில் திருத்தப்பட வேண்டிய பழம்பெரும் சட்டங்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாக முடங்கித்தான் போக வேண்டுமோ என்னவோ. காலம்தான் பதில் சொல்லக்கூடும்.

    இது தொடர்பான மற்றொரு முக்கியமான விசயம் இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் சிறார் மேம்பாடு துறை மந்திரி மேனகா காந்தி கூறியுள்ள செய்திதான். அதாவது  மைனர் குற்றவாளியின் தண்டனை நீட்டிக்க முடியாத நிலை உள்ளதால், விடுதலைக்குப் பின் அந்த குற்றவாளி வேறொரு குற்றம் செய்யும் வரை ஒன்றும் செய்ய முடியாது. நீதியை சட்டத்துடன் இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது. மைனர் குற்றவாளி சிறார் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று சட்டம் தான் சொன்னது. சட்டப்படி தண்டனை முடிந்து மைனர் குற்றவாளி தற்போது விடுதலை ஆகிறார். விடுதலைக்குப் பின் அவர் வேறொரு குற்றம் செய்யும் வரை ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான்.  மத்திய மந்திரியாக உள்ள மேனகா காந்தி, இந்த வழக்கில் போதிய நீதி வழங்கப்படவில்லை என்று நேரடியாகக் கூறியுள்ளது சட்டத்தின் மீதான விமர்சனமாகத்தான் கருதப்படவேண்டியுள்ளது.

    Share
  • சுட்டும் விழிச்சுடர்!

    பவள சங்கரி

    545543_362907083797923_2088759971_n

    நெஞ்சுரமும், நேர்மைத் திறமும்!

    Take-My-Hands-Image2

    வாழ்க்கையில் ஒருவருக்கு எந்த நேரமும் துன்பங்களும், துயரங்களும், அபாயங்களும் நேரலாம். இதில் ஆண் என்ன பெண் என்ன… இதற்கெல்லாம் நாம் எப்போதும் தயாராக இருக்க முடியாது என்றாலும், நம் குழந்தைகளுக்கு இளம் வயது முதலே அதற்கான துணிவையும், மன உறுதியையும் ஊட்டி வளர்க்க வேண்டியது ஒரு பெற்றோரின் கடமையாகிறது. எங்கு பார்த்தாலும், வன்முறைகள் கொடி பிடித்து ஆட்டம் காட்டும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற தெளிவை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது! ஆனாலும் ஒரு பெண் என்றால் இரும்பைப் போன்ற நெஞ்சுரமும், எதையும் தாங்கும் இதயமும், கடுமையான உழைப்பும், அன்பான குணமும், விடாமுயற்சியும் சற்று அதிகமாகவே இருப்பது இயல்பு. அதற்கான தேவையும், சமயமும், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும்போது அதை அவள் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. இதற்கான அருமையான ஒரு உதாரணம்தான் மாரிசெல் அபாதன் என்ற இந்தப் பெண். அவளுடைய கதையைக் கேட்டால் நமக்குள்ளும் ஒரு உத்வேகம் பிறப்பது நிச்சயம்! வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தம் இரண்டு கைகளும், பத்து விரல்களுமே மூலதனம் என்பார்கள். ஆனால் இச்சிறு தேவதைக்கு இரண்டு கரங்களும், அந்தப் பத்து விரல்களும் கூட இல்லை! ஆனாலும் உறுதியை இழக்கவில்லை அவள். மருத்துவர்கள் பொதுவாகச் சொல்கிற ஒரு விசயம், மருந்து மற்றும் மருத்துவத்தின் பங்கு 50 சதவிகிதம் என்றால் ஒரு நோயாளியின்  நம்பிக்கையும், பிழைக்க வேண்டும் என்ற மன உறுதியும், மீதம் 50 சதவிகிதம் இருந்தால்தான் அவர் பிழைக்க முடியும் என்பார்கள். அதற்கும் ஒரு எடுத்துக்காட்டு இச்சிறுமி.

    2000 வது ஆண்டு, செப்டம்பர் மாதம் 25ம் நாள், சாம்போயங்கா (பிலிப்பைன்சு – Zamboanga) எனும் இடத்தில், மாரிசெல் அபாதன் என்ற ஒரு பதினொரு வயது சிறுமி தன் தந்தையுடன், தண்ணீர் எடுத்து வருவதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாள். திடீரென்று வழியில் நான்கு தடியன்கள் நீண்ட கத்தியுடன் அவர்களை மடக்கி, அப்பெண்ணின் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். அதிர்ச்சியில் உறைந்துபோன மாரிசெல், அச்சத்தில் கண்மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தாள். இத்தனைக்கும் அவர்கள் அவளுடைய அண்டை வீட்டுக்காரர்கள்தான். எப்படியும் தப்பித்து விடவேண்டும் என்று வேகமாக ஓடியவள், “என்னை கொன்று விடாதீர்கள், கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்கள்” என்று நடுக்கத்துடன் கதறினாள். ஆனால் ஈவு இரக்கமற்ற அந்த மிருகங்கள் அச்சிறுமியையும் கழுத்தில் வெட்டினர். மாரிசெல் மயங்கிச் சரிந்தாள். அந்த கொலைகாரப் பாவிகள் என நினைத்தார்களோ அத்தோடு விட்டுவிட்டு ஓடி விட்டனர். மயக்கம் தெளிந்தவுடன், மாரிசெல் தம் பலம் அனைத்தையும் திரட்டி மெல்ல எழுந்து தம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தாள். ஆனால் வழியில் செல்லும்போதே தமது இரு முன்கரங்களும் விழுவதை உணர்ந்தாள். கைகளும் வெட்டுப்பட்டிருப்பதை அப்போதுதான் அறிகிறாள்.

    கத்திக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கிறாள். வழியில் சில முறைகள் மயங்கியும் விழுகிறாள். மீண்டும் சமாளித்து எழுந்து ஓடுகிறாள். வீட்டினருகில் வந்தவுடன் சத்தம் போட்டு தாயை அழைக்கிறாள். இரத்தத்தில் நனைந்து வந்திருக்கும் மகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனவர், அவசர அவசரமாக துணியைச் சுற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார். புறநகர் பகுதியில் இருக்கும் அவர்கள் வீட்டிலிருந்து மருத்துவமனை செல்வதற்கு 12 கி.மீ. நடந்தே செல்ல வேண்டும். மருத்துவமனையில் அச்சிறுமியைக் கண்ட மருத்துவர்கள், அவள் பிழைப்பது அரிது என்று தெரிவித்தும் விட்டனர். ஆனால் 5 மணி நேர அறுவை சிகிச்சை, 25 தையல்கள் என அனைத்தும் முடிந்து மாரிசெல் பிழைத்துவிட்டாள். ஆம், அவள் உள்ள உறுதி அவளை பிழைக்க வைத்தது என்றுதான் சொல்லவேண்டும்! ஆனால் அவளுடைய இரு கைகளையும் இழக்க வேண்டிவந்தது. அடுத்த நாள் தன்னுடைய 12 வது வயதில் அடி எடுத்து வைக்கப்போகும் அச்சிறுமிக்கு இரு முன்னங்கைகளும் இழந்து வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. ஆனால் அதோடு அவள் துன்பம் முடியவில்லை. வீட்டிற்கு திரும்பி வந்த தாய், மகளுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவர்கள் வீடு சூறையாடப்பட்டு, தீயினால் எரிக்கவும்பட்டிருந்தது. மிகவும் ஏழ்மையில் இருந்த மாரிசெல் குடும்பம் மருத்துவமனைச் செலவைக்கூட ஏற்க முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு அவர்களுடைய உறவினர்கள் பரிதாபப்பட்டு மருத்துவமனை செலவை ஏற்றதோடு, குற்றவாளிகளை நீதி மன்றத்தில் நிறுத்தவும் உதவி செய்தனர்.

    Maricel-apatan-chef-graduation

    maricel-apatan

    Maricel-apatan2

    Maricel-apatan4

    ஆனால் இவையனைத்தையும்விட அதிசயம், மாரிசெல் அதற்குப் பிறகு வீட்டில் முடங்கிப்போய்விடவில்லை. வாழ்க்கையை எதிர்த்து ஓட ஆரம்பித்தாள். முன் கைகள் இரண்டும் வெட்டுண்டதால் எதுவுமே செய்ய முடியாதே என்று துவண்டு விடவில்லை மாரிசெல். அவள் தற்பொழுது தன் மணிக்கட்டின் மூலம் பல வேலைகள் செய்யப் பழகிவிட்டாள். இன்று ஊனமுற்றவர் பள்ளியின் மிகச்சிறந்த சமர்த்துப் பெண்ணாகவும், கணினி வல்லுநராகவும், உலகமே பாராட்டும் வகையில் மரியாதைக்குரியவராகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 2008ம் ஆண்டில் சொகுசு விடுதி மற்றும் உணவக மேலாண்மைக் கல்வியில் பட்டம் பெற்றுவிட்டாள். அதோடு கலை மற்றும் கைவினைப் பொருட்கள் பயிற்சியில் தங்கப் பதக்கமும் பெற்று, 2011ம் ஆண்டில் தம் சமையல் பணி கல்வியையும் (செஃப்) முடித்து பட்டம் பெற்றார். எந்தத் தடையும் இச்சிறுமியின் கனவை கலைக்க முடியவில்லை. இன்று தம் சுய கால்களில் நிற்கிறாள் மாரிசெல்! விதியையே ஓட ஓட விரட்டியவள் இந்த புதுமைப்பெண்!

    Maricel-apatan7Maricel-apatan8

     

    படங்களுக்கு நன்றி : இணையம்

    Share
  • சுட்டும் விழிச்சுடர்!

    பவள சங்கரி

    உள்ளத்தில் உண்மையும், மனதில் தெளிவும், விடா முயற்சியும் இருந்தால் எந்த தீய சக்தியும் அணுகாமல் தம் இலட்சியம் நிறைவேற மன உறுதியே துணை நிற்கும் என்று நிரூபித்து உள்ளார் சிங்கால்!

    மனதில் உறுதி வேண்டும்!

    545543_362907083797923_2088759971_n

    ‘மன உறுதி’ என்பது ஆண், பெண் என இரு சாராருக்கும் பொதுவான விசயம். காரணம் ‘மனம்’ என்பதற்கு மனம் என்பது ஆன்மாவின் தொடர்புடையது என்பதே நம் ஆன்மீகம் நமக்கு உணர்த்தும் நெறி. இந்த மனத்தில் தோன்றும் எண்ணங்கள்தான் ஒருவரின் குணநலன்களையும், அதன் தொடர்பான வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது என்று எடுத்துக்கொண்டால் அந்த எண்ணம் தோன்றுவது எப்படி? ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட எண்ணங்கள் தோன்றுவது எப்படி? ஒருவருக்குள்ளேயே பலவிதமான கோணங்களில் பல்வேறு எண்ணங்கள் தோன்றுவது எங்கனம்? இவையெல்லாம் புரியாத புதிராக இருந்தாலும், இந்த மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்து தாம் எடுக்கும் காரியங்களை தடையேதும் இன்றி நிறைவேறும் பொருட்டு, அதனை அலைபாய விடாமல், உறுதியுடன் நின்று சாதித்துக் காட்டியவர் பலர். அவர்கள் வரலாற்றுப் பட்டியலில் நீங்கா இடம் பெறக்கூடிய வாய்ப்பும் பெறுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சாதனையாளர்தான் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ள டெல்லியைச் சேர்ந்த மாற்று திறனாளி பெண்ணான இரா சிங்கால். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் ஆகிய உயர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நாடெங்கிலும் மொத்தம் 1,236 பேர் பணி ஒதுக்கீட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் அவர்களில் டெல்லியைச் சேர்ந்த இரா சிங்கால் முதலிடம் பெற்றுள்ளார். இந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் நான்கு இடங்களை பெண்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டைக்காட்டிலும், நம் தமிழகத்தில் அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த, 2012ல், 97 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், 2014ல், 118 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    050715_disabled

    இரா சிங்கால் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற இந்திய வருவாய்துறை பணி தேர்வில் வெற்றி பெற்று தற்போது ஐதராபாத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 31 வயதான, இரா சிங்கால் ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றபோது அவரது ஊனம் அதிகமாக இருப்பதாகக் கூறி பணி இடம் வழங்க மத்திய பணியாளர் நலத்துறை மறுப்புத் தெரிவித்தது. ஆனால் மனம் தளராத சிங்கால் நான்கு ஆண்டுகள் கடுமையாக சட்டத்துடன் போராடி பின் கடந்த டிசம்பர் மாதம்தான் இவருக்கு பணி இடம் ஒதுக்கப்பட்டது. முதுகுத் தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளைந்து, உயரம் குறைவாகக் காணப்படும் இவர் அதனால் மனம் தளராமல் ஐ.ஏ.எஸ் தேர்வில் நல்ல ரேங்கில் வெற்றி பெற வேண்டும் என்கிற தனது கனவை தற்போது நனவாக்கியுள்ளவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தீவிர மன உறுதியே தனது வெற்றிக்கு முக்கியக் காரணம் எனக் கூறும் சிங்கால் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.

    தன்னுடைய உடற்குறையை பெரிதுபடுத்தாமல், தான் கொண்ட இலட்சியமே பெரிதென சாதித்துக்காட்டியிருக்கிறார் சிங்கால். தன் புறத்தோற்றமோ அல்லது உடற்குறையோ தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவிடாமல், இதனால் எந்த விதமான தாழ்வு மனப்பான்மையோ அல்லது தம் சக தோழியருடன் ஒப்பீடு செய்து அதனால் தம் மன நிலை பாதிக்கப்பட்டு மன உறுதியை இழந்துவிடாமல், தம் இலட்சியத்திற்கு இந்த ஊனமோ அல்லது மற்ற எதுவும் தன்னை அண்டாது என்ற நம்பிக்கையே அவரை சாதனைப் பெண்மணியாக்கியிருக்கிறது.

    இந்தத் தாழ்வு மனப்பான்மையானது, ஆண்,பெண் என்ற இரு சாராரையும் விட்டு வைப்பதில்லை. என்றாலும் பெண்கள் சீக்கிரம் மனச்சிக்கல்களுக்குச் சிறைப்பட்டு விடுகிறார்கள் என்ற பெண்ணிய உடல் கோட்பாட்டை முறியடித்திருக்கிறார் இவர். அன்றாட வாழ்வில் பல விதமான துன்பங்களுக்கு ஆட்படும் ஒரு குறைபாடுடன், இத்தனை பெரிய சாதனை புரிந்தாலும், தற்போதும் ஐஏஎஸ் பணி ஒதுக்கீடு செய்வதிலும் அரசு தயக்கம் காட்டுமோ எனஅவரும் அவருடைய பெற்றோரும் கலக்கம் அடைந்துள்ளனர். ஐ.ஏ.எஸ். பணி என்பது மிகவும் சவாலான ஒரு பணிதான் என்றாலும், அவருடைய மனவலிமையை கருத்தில்கொண்டு, அதற்குரிய வகையில், அவருக்குரிய பணியை வழங்குவதே நியாயமான செயல். நான்கு முறை முயன்று தம் தரத்தை உயர்த்திக்கொண்டு பெரும் பாடுபட்டு இந்நிலையை அடைந்திருக்கும் இவருடைய வல்லமையை நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்வதே முறையாகும்.

    பொதுவாக ஒரு பெண் புறத்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலேயே, சின்னச் சின்ன பாதிப்புகளுக்கும் விரைவிலேயே மனம் தளர்ந்து விடுவதோடு, தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு தன்னம்பிக்கைக் குறைவுக்கும் ஆரோக்கியக்கேடு என மிகப் பெரிய ஆபத்தாகவும் அமைந்து விடுகிறது. சமுதாயத்துடன் ஒன்றி செயல்படுவதற்கும் இது பெரும் சவாலாகிவிடுகிறது.

    நம்பிக்கைதான் வாழ்க்கை. அதற்கு மன உறுதியே வித்து. மனச்சிதைவிற்கு வழிவிடாமல், தம்மால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சாதித்துக் காட்டியிருக்கும் இரா சிங்கால், நம் நாட்டிற்கு தம் தன்னலமற்ற சேவையை வழங்குவார் என்ற நம்பிக்கையும் நம்முள் துளிர்விடுகிறது.

    சிங்கால் தாமே கூறியுள்ளபடி, “இதற்குப் பிறகு மக்கள் பெண்களை அதிகமாக மதிப்பார்கள். குறிப்பாக உடல் ஊனமுற்ற பெண்களை மிகவும் மதிப்பார்கள்” என்பது சத்தியமான வாக்கு. தற்போது இந்திய வருவாய் துறையில், அதிகாரியாக பணியாற்றி வரும் தாம் விரும்பியபடி எந்த தடையும் இல்லாமல் ஐ.ஏ.எஸ். பதவி கிடைத்து, நாட்டிற்கு நலம் பல செய்ய வேண்டும் என்று மனமார வாழ்த்துவோம்.

    Share
  • சுட்டும் விழிச்சுடர்! – சர்வதேச யோகாசன தினம்!

    பவள சங்கரி

    27-suryanamaskar

    யோகம் என்பது ….

    சுட்டும்-விழி2-300x76

    வியத்தகு ஆற்றல் பெற்ற உடலும், மனமும் இணைந்து, இசைந்து, இயங்கும் கலைதான் யோகாசனம். நம் அன்றாட வாழ்வியலில், நம்மை உற்சாகமாக கடமையாற்ற வழியமைத்து, ஆரோக்கியத்தையும், உள்ளத் தெளிவையும் ஒருசேர பேணிக்காக்கக்கூடியது. நம் வாழ்க்கை புறப்பட்ட இடம் எது என்ற தெளிவு இருக்கும் ஒருவருக்கே தாம் இறுதியில் போய்ச் சேரப்போகும் இடம் பற்றிய விழிப்புணர்வும் இருக்கும். இந்தத் தெளிவே நம்முடைய இடைப்பட்ட காலத்தில் நாம் வாழும் முறையை நிர்ணயிக்கிறது. நம் வாழ்க்கைப் பயணம் இடறின்றி அமைய சிறு தூண்டுகோலாக செயல்படுவதும் யோகாசனம் என்றும் சொல்லலாம். கீதையில் கண்ணன், சத்துவ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என மூன்றாகப் பிரிக்கிறார். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த மூன்றின் ஒரு நிலையில் நின்றுதான் நம் பயணம் செல்கிறது. சத்துவ குணம் எதையும் புன்னகையோடு அலட்சியப்படுத்தும். ரஜோ குணம் பழி தீர்க்க நினைக்கும். தமோ குணம் நடந்ததை நினைத்து அழுது, கவலை கொள்ளும். இதில் ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என அந்த பின்னிரண்டு குணங்கள்தான் நம்மை அலைக்கழித்து, நம் உடல் நிலையையும் பாதிக்கச் செய்கிறது. ஆக, புலன்களை அடக்கி, ஒருமுகப்படுத்தி, பகை உணர்ச்சி என்பதே துளியும் அணுகாமல் நிதானம் காப்பது, நம் உடல்நிலை ஒரே சீராக இயங்குவதற்கு அத்தியாவசியமாகிறது. மனித மனம் உணர்ச்சியின் வேகத்தில் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி சூழ்நிலைகளுக்கேற்றவாறு மாற்றமடைகிறது. இந்த நிலையிலேயே துன்பங்களைப் பெருக்கும் பழிச் செயல்களும் பதிவுகளும் ஏற்படுகின்றன. இதை அறிவின் மயக்க நிலை, என்றும், மாயை என்றும் அழைக்கிறோம். இதிலிருந்து விடுபடவே நாம் எண்ணினாலும் சூழ்நிலைகள் மீண்டும், மீண்டும் நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறது. இந்த மனித இயல்பை, இயற்கை நிலையை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சிறந்த சாதானமாக இந்த யோகாசனத்தைக் கூறலாம். உடற்பயிற்சியுடன், மனப்பயிற்சியும் (தியானம்) இணைந்து தெளிவான சிந்தையை அன்றாடம் ஊக்குவிக்கக்கூடிய கலை என்றே சொல்லலாம்.

    ‘யோகா’ என்ற சொல் ‘யுஜ்’ என்ற சமசுகிருத சொல்லிலிருந்து வந்துள்ளது. இதன் பொருள் தனிப்பட்ட மற்றும் பிரபஞ்ச உணர்வுகளின் கூட்டமைப்பு என்பதே. யோகாசனம் என்பது மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தக்கூடிய, நம் பழமையான வேத இலக்கியங்களின் ஊற்று. ரிக் வேதம் என்பது மனித வரலாற்றில் மிகப் பழமையானதும், புனிதமானதுமான, எட்டாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது.

    சர்வதேச அளவில் இன்று மிகப்பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள யோகாசனம், கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பதஞ்சலி முனிவரால் எடுத்தாளப்பட்ட அற்புதமானதொரு கலை என்பதில் நாம் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய விசயம். பதஞ்சலி முனிவர் யோகாசனத்தின் எட்டு அங்கங்களை தெளிவாக்கியிருக்கிறார். அவைகளாவன: யாமா என்கிற சமூகப் பண்பாட்டுக் கூறுகள், நியமம் என்கிற தனிப்பட்ட நன்னெறி, ஆசனம் என்கிற பயிற்சி முறைகள், பிரணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி, பிரத்யாகாரம் என்கிற புலன்களை உள்முகமாக மாற்றும் முறை, தர்ணா என்கிற ஒருமுனைப்படுத்துதல், தியானம் மற்றும் சமாதி நிலை ஆகியவை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு அதனை ஒவ்வொரு மையங்களும் தங்களுக்குரிய பாணியில் ஆய்வு செய்து பயிற்சியளித்து வருகின்றனர்.

    “மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலையூன்றி
    சினமெனும் சரக்கை ஏற்றி செறிகடல் ஓடும்போது
    மனனெனும் பாறை தாக்கி மரியும்போதறியவொண்ணா
    ஒற்றியூர் உடைய கோவே “

    என்பது அப்பர் சுவாமிகளின் அருமையான தேவாரப் பாடல். அதாவது, “மனம் எனும் தோணியில் அறிவு எனப்படும் கோலை நாட்டி, சினம் எனும் சரக்கை ஏற்றி உறவுகளுடன் பயணம் செல்லும்போது, மதம் எனப்படும் தீவினை தாக்கி நிலைகுலைந்து இறுதிக் காலத்திற்கு செல்லுவது உறுதி. இதனையெல்லாம் அறியாத நான் என் உணர்விலே, உன்னை எப்போதும் உறுதியுடன் நினைத்து வாழ அருள் செய்வாய் திருவொற்றியூர் பெருமானே’ என்கிறார்.

    ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கைக் கடலை கடப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் செய்தும், பலப்பல தடைக்கற்களைத் தாண்டியும் வரும்போது அதற்கான பின் விளைவுகளாக பல்வேறு விதமான நோய்களுக்கு ஆட்படுகிறோம். இதிலிருந்து மீள்வதற்கு பலவிதமான மருத்துவமும் மேற்கொள்கிறோம். அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும், தலைவலி போய் திருகுவலி வந்ததுபோல் அனுபவிக்கிறோம். இவையனைத்திற்கும் தீர்வு என்பது நம் முன்னோர்கள் வழிவழியாகக் கடைபிடித்து வந்த யோகாசனப் பயிற்சி முறைகள் என்றால் அது மிகையல்ல. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை அமைவது எவருக்குமே சாத்தியம் இல்லை என்றாலும், அந்தப் பிரச்சனைகளை அணுகும் முறையிலும், அதனைக் கையாளும் முறையிலும் ஒரு தனிப்பட்ட சக்தியை வழங்குவது யோகாசனப் பயிற்சிகள். அன்றையப் பணிகளை உற்சாகமாகத் தொடங்கவும், மனதை இலகுவாக வைத்துக்கொள்ளவும் இப்பயிற்சிகள் துணை புரிகின்றன.

    ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு, ‘வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்’ என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு செயல்படும், திருமிகு யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மன்றத்தின் யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டேன். எளிய உடற்பயிற்சிகளுடன் மன வளமும் ஏற்பட வழியமைந்தது அங்குதான். அகத்தாய்வுப் பயிற்சிகள் மூலம் அன்றாடப் பணிகளை அல்லல் இன்றி நிறைவேற்றும் வல்லமையும் பெற முடிந்தது.

    தற்சோதனை

    1547023501Copy-of-Scan10003

    நிறைவு செய்யமுடியாத நூறு ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக்கொண்டு திணறுவதில் யாருக்கு என்ன லாபம்; மன அமைதி முதலில் போயிற்று, மனதின் பலம் போயிற்று; செயல் திறன் போயிற்று, உடல் நலம் போயிற்று, நற்குணங்கள் போயின; எரிச்சலும் கோபமும் அடிக்கடி வந்தன. முகத்தில் தெளிவுபோய் சோகம் படிந்தது. நமது “மனவளக்கலை” பயிற்சியில் மனம் தன் திறமையையும், உறுதியையும், வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சி தான் “அகத்தவ பயிற்சி” முறையாகும். தன்னைப்பற்றி, தன் தேவையைப் பற்றி, தன் செயலின் விளைவைப் பற்றி, தன் தகுதியைப் பற்றி, தன் மதிப்பைப் பற்றி ஆராய்வது தான் “தற்சோதனை” என்கிற தன்னை ஆராயும் பயிற்சியாகும். இந்தத் தற்சோதனை வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. மனதில் தைரியம் வந்துவிடுகிறது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து விடுகிறது. மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்து விட்டதால் பொறுமை, அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. கடமை உணர்ந்து பொறுப்புணர்ந்து எண்ணத்தில் தூய்மையோடு காரியங்களை ஆற்றுவதால் எடுத்த காரியத்தில் வெற்றியும் கிடைக்கிறது.
    – தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

    கீழகண்ட ஒன்பது தவங்களும் இங்கு பயிற்சியளிக்கப்பட்டன.

    மனவளக்கலை : ஒன்பது வகை தவங்கள்

    1. ஆக்கினை :
    மூலாதாரத்திலிருந்து உயிரை எழுப்பி புருவமத்திக்குக் கொண்டு வந்து உயிரை உணர்வது . பிட்யூட்டரி சுரப்பி நல்ல முறையில் வேலை செய்யும் .

    2. சாந்தி:
    மேலே புருவமத்திக்கு சென்ற உயிர் மையத்தைத் திரும்பவும் மூலாதாரத்திற்கு கொண்டு வருவது….

    3. துரியம்:
    உயிர் மையத்தைத் தலை உச்சிக்குக் கொண்டு வருவது. பீனியல் சுரப்பி நல்ல முறையில் செயல் புரியும் .

    4.துரியாதீதம் :
    உடலிலிருந்து வெளியே வந்து பிரபஞ்சம் வரை விரிந்து மேலும் பிரபஞ்சத்திற்கு அப்பாலுள்ள சுத்தவெளி என்ற இறைநிலையோடு கலக்க விடுவது.

    5. பஞ்சேந்திரியம்:
    மெய் ,வாய்,மூக்கு,கண், காது என்ற ஐம்புலன்களின் மூலம்தான் சீவகாந்தம் வெளியேறி உலகில் இன்ப துன்பங்களை அனுபோகிக்கின்றோம். ஐம்புலன்களுக்கும் ஆற்றலை கூட்டி அளவுமுறை காக்க உதவுகிறது.

    6.பஞ்சபூத நவகிரகம் :
    நாம் பூமி மீது வாழ்கின்றோம் . நிலம் , நீர்,நெருப்பு, காற்று ,விண் என்ற ஐந்து பெளதிகப் பிரிவுகளான பொருள்களிலிருந்து வரும் காந்த அலைகளுடன் இனிமை காப்போம். சூரியன் ,புதன், வெள்ளி, சந்திரன், வியாழன் , சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோள்களிலிருந்து வரும் காந்த அலைகளுடன் இணக்கம் கொள்கிறோம்.

    7.ஒன்பது மையம் :
    மூலாதாரம், சுவாதிஷ்டானம் மணிப்பூரகம், அநாகதம் , விசுத்தி, ஆக்கினை, துரியம், என்று உடலுக்குள் உள்ள ஏழு இயக்க மையங்களிலும் பிரபஞ்சம், சுத்தவெளி போன்றவற்றில் மனம் வைத்து தவம் செய்வது .

    8. நித்தியானந்தம்:
    உடல் முழுவதும் சீவகாந்த ஆற்றலை நன்கு பரவ செய்வது.உடலும் , மனமும் நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க உதவும்.

    9.இறைநிலை தவம்:
    இறைநிலையிலிருந்து மனிதன் வந்த வரலாற்றை உணர்ந்து மனதை இறைநிலையோடு கலக்க விடுவது.

    இந்த ஒன்பது வகை தவங்கள் மனவளக்கலை மூலமாக கற்றுக்கொடுக்கப் படுகின்றன. இவற்றை பயின்று வாழ்வில் எல்லா துறைகளிலும் வெற்றியும், மகிழ்ச்சியும் , மனநிறைவும் பெறுவதற்கு குருவருளும், திருவருளும் துணை புரியட்டும்.

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் …

    மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு, திருமிகு. சிரீ சிரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை யோகாசனப் பயிற்சி மேற்கொண்டேன். இதில் ‘சுதர்சன் கிரியா’ என்ற தன் நிலை உணரும் தவம், அற்புதமான பயிற்சி. ‘ஒரு பரவச நிலை’ என்பதன் பொருள் விளங்கும் தவம் என்றால் அது மிகையாகாது. மனதுக்கும்,உடலுக்கும் இணைப்பாக மூச்சு செயல்படுவதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்றபடி தனிப்பட்ட விதத்தில் நமது மூச்சின் தன்மை மாறுவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

    srisrionsky1

    சுதர்சன் கிரியா, உடல், மனம், புத்தி, மற்றும் உணர்வுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் தன்மையுடைய, இயற்கையாய் அமைந்த, மூச்சின் தாள ஒழுங்கைக் கொண்டது. இந்த தனிச்சிறப்புவாய்ந்த மூச்சுப்பயிற்சி நம்மிடமுள்ள மன இறுக்கம்,விரக்தி, மற்றும் எதிர்மறையான உணர்வுகளான கோபம்,சோர்வு,வருத்தம் ஆகியவற்றை வெளியேற்றி நம்மை அமைதியுடன் கூடிய உற்சாகத்துடனும், கவனத்துடன் கூடிய ஓய்வுடனும் வைக்கிறது.

    சுதர்சன் கிரியாவின் மூலமாக, நாம் மூச்சை திறமையாகப் பயன்படுத்தி, நமது உணர்ச்சிகளைக் கையாளமுடியும், மன இறுக்கத்துக்குக் காரணமான எதிர்மறை உணர்வுகளான கோபம், பதட்டம், சோர்வு, பயம் ஆகியவற்றை வெளியேற்றி மனதை அமைதியாக, ஆனந்தமாக, துடிப்புடன் வைத்துக்கொள்ள முடியும்.

    சுதர்சன் கிரியா, நமது முழு உடல், மன அமைப்பில் உள்ள மாசுகளையும் சேர்ந்துள்ள இறுக்கத்தையும் வெளியேற்றி அதை ஒழுங்குபடுத்துகிறது. நமது ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான புரோலாக்டின் ஹார்மோனின் அளவு முதல் முதலாக சுதர்ஸன் கிரியா பயிலும் போதே அதிகரிப்பதை ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

    ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை அருகில் உள்ள ஈஷா யோகா மையம் சென்றிருந்தோம். பிரம்மாண்டமான சிவலிங்கத் திருமேனியும், தியானம் செய்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குகைகளும், விஞ்ஞானப்பூர்வமாக ஏதோ சில மாற்றங்களை எனக்குள் ஏற்படுத்துவதை உணர முடிந்தது. தியானத்திற்கு ஏற்ற வகையில் நுட்பமான முறையில் இங்கு கட்டிட அமைப்புகள் உள்ளன.

    ஈஷா யோக மையம்

    dhy1-20061108_SHA_0326

    தென்னிந்தியாவின் எழில்மிகு இடங்களுள் ஒன்றாகிய வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. அடர்ந்த வனங்களும், மின்மினிப் பூச்சிகளும், வற்றாத நீர்வீழ்ச்சிகளும் வனவிலங்குகளின் உறைவிடங்களும் பின்னணியாகத் திகழும் இது, உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த இடமாக உள்ளது. 150 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் அதிகமாக விரிந்துள்ள இந்த மையம், தியானலிங்கத் திருக்கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்துணர்வு மையம், ஈஷா இல்லப் பள்ளி மற்றும் ஈஷா குடியிருப்புகளுடன், ஒருவர் தம் உள்நிலைப் பயணத்தை மேற்கொள்வதற்கு உறுதுணையான ஒரு சூழலை வழங்குகிறது.

    2065848021sadguruinisha-centre

    பாராட்டப்பட வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் இங்கு உள்ள குழந்தைகளுக்கான தங்கும் பள்ளி.

    ஈஷா ஹோம் ஸ்கூல்

    ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான தரமான கல்வியை, வீட்டுச் சூழலில் அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. உலகின் பல பகுதியைச் சார்ந்தவர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். குழந்தைகளுக்கு இயல்பாகவே உள்ள அறியும் மற்றும் கற்கும் ஆர்வம் தூண்டப்படும் வகையில் இதன் கற்கும் முறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தக வழிக் கல்வியை விட வாழ்க்கைத் திறன்கள் மற்றும் வாழ்வின் மதிப்பீடுகளை வளர்த்தெடுக்கும் விதமாக இதன் கல்விமுறை இருக்கிறது. இந்த முறையினால், கல்வி என்பது, இங்கு, ஒன்றை ஆராய்ந்து அறிவதாகவும் ஆனந்தத்தை தருவதாகவும் உள்ளது.

    சமீபத்தில் அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருந்த போது, கிளப் மெட்ரோ என்ற உடற்பயிற்சி மையத்தில் 30 நாட்கள் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். நம்முடைய ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரம்தான் அங்கு பயிற்சியின் ஆரம்பத்தில் தியானம் செய்யும்போது உச்சரிக்கப்படும் ஆரம்ப மந்திரம். உண்மையில் நம் இந்தியத் திருநாட்டின் பாரம்பரிய, மிகப் பழமையான யோகக்கலையை மேலை நாட்டவர் பய பக்தியுடன் பயிற்சி செய்வதைப் பார்ப்பதற்கு மிகவும் பெருமையாக இருந்தது. வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஜூம்பா நடனப் பயிற்சியும் கொடுக்கிறார்கள்.

    தவப்பயிற்சி

    நம் உடலிலுள்ள ஐம்பொறிகளையும் உள்ளத்தோடு ஒன்றும்படி செய்து, பின்னர் அந்த உள்ளமும் உயிரோடு ஒருமையடையப் பயிற்சி செய்வதே தவம். இப்பயிற்சியை முழுமையாக உணர்வுப்பூர்வமாக செய்யும்போது, உயிர் ஒளிமயமான இறையோடு கலந்து அமைதி பெற முடியும். இதையே தவப்பயன் என்பர் பெரியோர். இதன் பயனாக அன்றாட வாழ்வில் ஏற்படும் தொல்லைகள், துன்ப துயரங்களையும் பொருட்படுத்தாத மனத்திட்பம் பெற முடிகிறது. அதோடு பிற உயிர்களுக்கு எந்தவிதமான கேடும் நினையாமலிருக்கிற மனப்பண்பாட்டையும் பெற முடிகிறது. இதனையே வள்ளுவப் பெருந்தகை, தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் என்கிறார்.

    உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு.

    சுய விடுதலை

    உலகின் பந்த பாசம், ஆசை, சுகம், துக்கம், சினம், பொறாமை, வஞ்சம், புகழ், பணம், அற்ப சுகம் என நாம் அடிமைப்பட்டிருக்கும் இவை அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று நம்மை அமைதியாக வாழ வழியமைத்துக்கொடுக்கும் இந்த யோகக்கலை அமையப் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள் எனக்கொள்ளலாம். விடுதலை என்பது நமக்கு யாரும் தரக்கூடிய ஒன்றல்ல. அது நம் உள்ளம் என்னும் மையத்துக்குள் ஏற்படுகிற மறுமலர்ச்சி. உளவியல் ரீதியிலான இந்த அடிமைத் தளையை நம் முயற்சியால், நாம் மட்டுமே உடைத்தெறிய முடியும். அதற்கு ஒரு முக்கியமான கருவியாகச் செயல்படுவதுதான் யோகப்பயிற்சி! காற்றைப் போன்று கனமற்றும், வெளிச்சத்தைப்போல் வெளிப்படையாகவும் , தண்ணீரைப் போன்ற தடையில்லாத ஓட்டமும் அளிக்கவல்லது யோகப்பயிற்சி! அதுவே நம் சுய விடுதலையும் கூட. ஆக, யோகாசனப் பயிற்சியை அன்றாடம் முறையாக கடைபிடிப்பதன் மூலம் புற அழகோடு சேர்த்து அக அழகையும் பெற முடியும் என்பதே நிதர்சனம்! இத்தகைய அரிய கலையை நம் குழந்தைகளுக்கு பள்ளியில் பயிற்றுவிக்க வேண்டியதும் அவசியம். சில தனியார் பள்ளிகளில் யோகாசனப் பயிற்சி வகுப்பு இருந்தாலும், அரசுப் பள்ளிகளில் இல்லை. அரசாங்கம் உடனடியாக இதற்கான ஏற்பாட்டை செய்வது நலம். இதனால் நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடு  நிலைத்து நிற்கவும் ஏதுவாகும்.

    international yoga day 5656

    பி.கு. நான் யோகாசனப் பயிற்சியை தவறாமல் அத்தனை ஒழுங்காகக் கடைபிடிக்கிறேனா என்று கேட்டால், இல்லை என்றே வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. இனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம் என்று உறுதி கொள்வோம்! தவறாமல் யோகப் பயிற்சியை மேற்கொள்வோம் நண்பர்களே!

    Share
  • சுட்டும் விழிச் சுடர்!

    பவள சங்கரி

    சுட்டும்-விழி1-300x76

    பெண்களுக்கான தனிப்பட்ட நீதி மன்றம்

    பெண்ணை மயில் என்றோம் – அவள்
    ஆட்டத்தை அடக்கி விட்டோம்!
    அவளைக் குயில் என்றோம்
    பாட்டை முடக்கி விட்டோம்!
    அவளை நிலவென்றோம்…
    பிறைகளை அபகரித்தோம்…
    பாரதி
    பெண்ணைப் பெண்ணென்றான்
    அவள்
    பிறப்புக்கு அர்த்தம் கண்டான்

    ஈரோடு தமிழன்பன்

    அரசாங்கத்தில் போடப்படுகிற பல திட்டங்கள் ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும், போகப்போக அதன் பயன்பாடுகள் சுருங்கிக்கொண்டே போய்விடுகின்றன. இதற்கு பெரும்பாலும் மக்களும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. எங்கு அநீதி நடந்தாலும், அது நமக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற மெத்தனமோ அன்றி நமக்கேன் தேவையற்ற வம்பு என்ற எண்ணமும் நம்மில் ஊறிப்போய் கிடக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்றால் அது பார்க்கப்படும் கண்ணோட்டமும் பல நேரங்களில் வேறுபட்டே இருக்கிறது. இன்றைய உலகில், சமூக சேவை, கல்வி, அறிவியல், சட்டம், பொருளாதாரம், நிர்வாகம், அரசியல் என பல்வேறுவிதமான துறைகளில் மின்னிக்கொண்டுதான் உள்ளனர். இவையனைத்தையும் மீறி பெண்களுக்கு பாதுகாப்பு என்று வரும்போது அது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து நம் அரசாங்கம் இன்னும் கடக்க வேண்டிய தொலைவும் அதிகம் உள்ளது. நம் நாடு வல்லரசாக வேண்டும் என்ற பெரும் இலட்சியம் ஒரு புறம் இருந்தாலும், நம்முடைய அடிப்படை பாதுகாப்புத் திட்டங்களையாவது உடனடியாக சரிவர நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. பொதுவாகவே நம் நீதித்துறை எந்த ஒரு வழக்கிற்கும், சூட்டோடு சூடாக தீர்ப்பு வழங்குதில்லை. குற்றவாளி தான் செய்த குற்றத்தையே மறந்துவிட்டு அடுத்த ஒன்றிற்கு ஆயத்தமாகும் நிலைக்கு வந்தாலும், அச்சட்டம் தம் கடமையை சரியான காலத்தில் நிறைவேற்றுவதில்லை. பெண்களுக்கென்று, பெண்களாலேயே நடத்தப்படும் வங்கி, காவல் நிலையங்கள் போன்றவைகள் செயல்பட்டாலும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உடனுக்குடன் விசாரித்து, தீர்ப்பு வழங்கும் வகையில் பெண்களுக்கான தனிப்பட்ட நீதி மன்றம் கட்டாயம் அவசியமாகிறது. பல ஆண்டுகள், பல்லாயிரம் செலவு செய்து நடையாய் நடந்த பின்னும் அதற்கான தீர்ப்பு என்பது பலப்பல வாய்தாக்களுக்குப் பிறகு விவாதத்திற்கு வந்து சலித்துப்போன நிலையில் வருகிறது. அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் சிக்கல் மேலும் அதிகமாகிறதே தவிர வேறு எந்த பயனும் வருவதில்லை. இதனாலேயே பல வழக்குகள் நீதி மன்றம் வராமலே முடக்கப்படுகின்றன. குற்றவாளிகள் சுதந்திரமாக அடுத்த குற்றத்திற்கு தயாராகிவிடுகிறார்கள். அநீதி இழைக்கப்பட்ட பெண்ணே மேலும் துன்பத்திற்கு ஆளாகிறாள்.

    சமீபத்தில் இப்படியொரு மோசமான நிலை ஒரு 20 வயது இளம் பெண்ணிற்கு, அதுவும் மாற்றுத் திறனாளி பெண்ணிற்கு ஏற்பட்டிருப்பது நம் நாடு வெட்கித் தலை குனிய வேண்டிய நிகழ்வாக இருக்கிறது. அரூர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்ற வியாழக்கிழமை (07-05-2015) இப்படி ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறது. மன நலமும், உடல் நலமும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணை தூரத்து உறவினனான ஒரு காமுகன் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியிருப்பதாக பாவப்பட்ட அந்த பெண்ணின் தாய் புகார் அளித்திருக்கிறார். பரிதாபமான நிலையில் இருக்கும் அப்பெண்ணை ஈவு இரக்கம் இல்லாமல், துண்டால் கட்டி பின்புறம் ஒரு தனிமையான இடத்திற்கு தூக்கிச் சென்று இந்தக் கொடுமையைச் செய்திருக்கிறான் கயவன். சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்தில், அப்பெண்ணின் தாயார் அருகிலிருந்த கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அவர்கள் அந்தத் தாயை அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ளார்கள். “ஓரு நாள் முழுவதும் வெளியில் காத்துக்கிடந்தும் புகார் அளிக்க உள்ளே செல்ல அனுமதி அளிக்கவில்லை. மீண்டும் கடத்தூர் காவல் நிலையத்திற்கே திரும்பிச் செல்லும்படி கூறிவிட்டனர்” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர். செவ்வாய்க்கிழமையன்று குற்றவாளியின் சார்பில் ஊர்க்காரர்கள் காவல் நிலையத்தை சூழ்ந்துகொண்டு சமரசத்திற்கு வலியுறுத்தியிருக்கின்றனர். கடத்தூர் காவல் நிலைய அதிகாரி சமரசம் செய்துகொள்வதாக கடிதம் எழுதிக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதன் பிறகு காற்று வாக்கில் செய்தி எட்டி, TARATDAC மாவட்டச் செயலாளர் பி.சரவணன் , காவல்துறை கண்காளிப்பாளர் திரு லோகநாதன் அவர்கள் உதவியுடன் அப்பெண்ணை புதன் கிழமையன்று ADSP மையத்திற்கு அனுப்பியுள்ளார். பின் வியாழக்கிழமையன்று, ஐ.பி.சி. பிரிவு 376 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குள் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை சமரசத்திற்கு ஒப்புக்கொள்ளும்படி அடித்து மிரட்டியிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்கவே இத்தனை சிரமம் என்றால், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து, இன்னும் அங்கும் விலை பேசப்பட்டு, தீர்ப்பு என்று, எப்படி வரும் என்பது குற்றவாளியின் தரப்பு நிதி வசதியைப் பொறுத்ததுதான்.

    திருப்பூரில், திலகவதி என்ற பெண் கடந்த 4 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர் கோட்டை ஈஸ்வரன் கோயிலில், தற்காலிக இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்திருக்கிறார். மேலதிகாரியின் பாலியல் அவதூறு பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அப்பெண்ணின் கணவர் ஸ்ரீதர் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர்களுக்கு நிவேதா என்ற 6 வயது குழந்தை உள்ளது. திலகவதியை சக ஊழியர் ஒருவரோடு இணைத்து, மற்றொரு ஊழியர் அவதூறு பரப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இதோடு திலகவதி மீது முதல்வரின் தனிப்பிரிவுக்கு யாரோ ஒருவர் புகாரும் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து, முதல்வர் தனிப்பிரிவிலிருந்து, இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலிலும் இருந்த திலகவதி வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கிற்கான நீதி என்று கிடைக்கும் என்பதும் ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்த வீராசாமி என்பவரின் மனைவி புவனேசுவரி. 25 வயதான இவர் தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன் என்பவரின் தொடர்ந்த பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான புவனேசுவரி, கடந்த 7ம் தேதி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொது மக்கள் நேற்று காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தையும் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து எஸ்பி உமா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருள்முருகன் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர். இனி இந்த வழக்கிற்கு நியாயம் கிடைக்கும் வரை மன உளைச்சல் தொடர்ந்தவண்ணம் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் இருக்க வேண்டியதுதான்..

    திருப்பூரில் வரதட்சிணை கேட்டு மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய கணவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், மடத்துக்குளம் அருகிலுள்ள தளி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி உமாமகேசுவரி. நான்கு ஆண்டுகளாக திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    இப்படி அன்றாடம் எண்ணற்ற புகார்கள் காவல்துறையை நோக்கி படையெடுத்துக்கொண்டுதான் உள்ளன. பெரும்பாலோனோர் நீதி மன்ற இழுபறிக்கு அஞ்சி மனம் நொந்து புகாரை திரும்பப் பெறவும் செய்கின்றனர். சிலர் காவல் நிலையம் செல்லவே துணிவதில்லை. இது போன்ற நிலைகள் குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிடுகின்றன. இதற்கான தீர்வை விரைவில் நிறைவேற்ற வேண்டியது சட்டத்தின் கடமையாகிறது. அந்த வகையில் மகளிருக்கான தனி நீதிமன்றம் அமைத்து இது போன்ற வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து, விரைவில் தீர்ப்பு வழங்க ஆவண செய்ய வேண்டியது அரசின் உடனடி தேவையாக உள்ளது. தவறு செய்பவர்களின் எண்ணிக்கை இதனால் குறையும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்.

    Share
  • சர்வதேச மகளிர் தினம் – தடைக்கற்களும் படிக்கற்களே!

    008

     

    பவள சங்கரி

    சுட்டும் விழிச்சுடர்!

    womens-day5

    நாடு விடுதலை பெற்றது – பெண் விடுதலை பெற்றாளா? – பாரதி கண்ட புதுமைப் பெண் உருவாகியிருக்கிறாளா?

    சுட்டும் விழி

    p86இந்த வினாவிற்கான முழுமையான விடை இன்னும் நமக்குக் கிடைத்தபாடில்லை. சமுதாய மறுமலர்ச்சியின் ஊடே, பெரும் போராட்டங்களின் மத்தியில் தன்னை எப்பாடுபட்டேனும் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று துடிக்கும் மகளிர், இன்றுவரை அதற்கான எல்லையை அடைந்திருக்கிறார்களா என்பதே ஐயம்தான். பெண்ணை விளம்பரப் பொருளாக்கும் வியாபாரிகளும், விற்பனைப் பொருளாக்கும் பத்திரிக்கைகள், அழகுப் பதுமைகளாகக் காட்சிப்படுத்தும் படைப்பாளர்கள், கவர்ச்சிப் பதுமைகளாக்கும் ஊடகங்கள், எப்படியேனும் அடக்கியாண்டு, அடிமைப்படுத்தத் துடிக்கும் ஆண் வர்க்கம், இவையனைத்தையும் உணர்ந்தும், வெளிவர மனமில்லாமல் பொன் விலங்கில் புத்தொளி வீசுவதாக கற்பனையில் உழன்று அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணினம், இப்படி பட்டியல் இன்னும் நீண்டு கொண்டுதான் உள்ளது. கல்வியறிவு பெறுதல் மட்டுமே இந்த விலங்கை உடைக்கும் சம்மட்டியாக செயல்படும் என்பதை அழுத்தமாகப் பதிவிட்ட பாரதியின் கனவு, இன்று ஓரளவிற்கேனும் கல்வியறிவு பெற்ற மகளிரின் எண்ணிக்கை கூடிய பின்பும் நிறைவேறியுள்ளது என்று கூற முடியாத நிலையில்தானே உள்ளது. பெண்களின் முன்னேற்றத்தில் பங்கு கொள்ளாத ஆண்களின் போக்கும், பெண்களை பெண்களே தவறாகப் புரிந்துகொள்வது, ஒரு பெண்ணே பெண்ணிற்கு எதிரியாய் நிற்பது, காழ்ப்புணர்ச்சி கொள்வது என்பது போன்ற நிலைகளும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கத்தான் செய்கிறது. பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், பொது மேடைகளிலும், தம் எழுத்துக்கள் மூலமாகவும் மட்டம் தட்டிப்பேசும் ஆண்கள் என்று தடைக்கற்களின் மீதான போராட்டங்களே வாழ்க்கையாகும் நிலையே உள்ளது.

    ஒரு வேளை, 1897 ஆம் ஆண்டு, ஜூலை 29 இல் சுவாமி விவேகானந்தர் சகோதரி நிவேதிதா அவர்களுக்கு ஒரு கடிதத்தில் எழுதியதைப் போன்று இல்லாமல் இன்று சற்றே மாற்றம் இருக்கக்கூடும். “இந்தியா சிறந்த பெண்மணிகளை உருவாக்கும் நிலையில் இல்லை. மற்ற நாடுகளிலிருந்து கடன் பெறும் நிலையில்தான் உள்ளது. உங்கள் கல்வி, நேர்மை, தூய்மை, ஆழ்ந்த அன்பு, குறிக்கோள் மற்றும் அனைத்திற்கும் மேலாக துடிப்பான இரத்தம் போன்ற அனைத்தும் பெண்களுக்குத் தேவை” என்று கூறியபடி இன்று இல்லை என்பது வெள்ளிடைமலை. இன்று பல சகோதரிகள் பல்வேறு துறைகளில் தங்கள் வல்லமையைப் பறைசாற்றியவண்ணமே உள்ளனர்.

    இதற்காக தம் வாழ்வையே பணயம் வைத்து போராடியப் பெண்மணிகள் எண்ணற்றோர். அவர்பட்ட துயரங்களும் கொஞ்சமல்ல. நம் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பேறு பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள். ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று உறுதியுடன் இருந்த காலகட்டத்தில் ஒரு பெண் மருத்துவப்படிப்பு படிப்பதென்பது அத்தனை எளிதானதாக இருக்க வாய்ப்பில்லை. உடன் பயிலும் பல ஆண் மாணவர்களுடன் ஒரு பெண் படிப்பதால், அந்த மாணவர்களின் கவனம் சிதறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்ற காரணம்காட்டி அவரை மருத்துவக் கல்லூரியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நல்லெண்ணம் கொண்ட, அச்சமயத்தில் துறை முதல்வராக இருந்த ஐரோப்பியர் ஒருவர், வெகு நிதானமாக, ‘கவனம் சிதறக் கூடியவர்கள் படிக்க வரவேண்டியதில்லை, இந்த ஒரு மாணவி கற்றால் போதும்’ என்று உறுதியோடு சொல்லியிருக்கிறார். அந்த ஒரு பெண்ணின் மன உறுதி இன்று எத்தனையோ முத்துலட்சுமிகளை உருவாக்கியுள்ளது.

    பெண்ணை சக்தியின் அம்சமாகப் பார்க்கும் நம் மண்ணில்தான் அவள் போகப் பொருளாக மட்டும் பார்க்கப்படும் கொடுமையும் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு பெண்ணின் வழியாகத் தோன்றும் ஒரு ஆண், அப்பெண்ணை வெறும் உடலாக மட்டும் பார்க்கத் துணிவது மனிதமற்ற செயல். ஆயினும் தடைக்கற்கள் அனைத்தையும் படிக்கற்களாகக் கடந்து, வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருப்போரும் ஏராளம்.

    சில காலம் முன்பு வரை திருமணம் ஆன பெண்கள் பணிக்குச் செல்வது பல காரணங்களினால் அரிதாகவே இருந்தது. ஆனால் இன்றைய பொருளாதார நிலையில் திருமணமாகாத பெண்கள் மட்டும் பணிக்குச் சென்று கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. குடும்ப வளர்ச்சி, அடிப்படை வாழ்வாதாரங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களுக்காக திருமணமான பெண்களும் வேலைக்குப்போக வேண்டிய சூழல் உருவாகிறது. தங்கள் கல்வி, வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளும் பரவலாக இருக்கின்றன. சில பெண்கள் குழுமங்களாகச் சேர்ந்து அதற்கான வாய்ப்புகளைத் தாங்களே உருவாக்கும் வல்லமையும் பெற்றிருக்கிறார்கள். குடிசைத் தொழில் என்ற பெயரில் ஏற்றுமதிக்கு ஏற்றவாறு தரமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. அரசாங்கத் திட்டங்கள் மற்றும் வங்கியின் மூலம் கிடைக்கும் உதவிகள் போன்ற தேவையான பொது விசயங்களிலும் விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நம் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பெண்களில் பங்கு இன்று கணிசமாக உயர்ந்து வருவதைக் காண முடிகிறது.

    மேலைநாட்டுப் பெண்களைப் போன்று நம் இந்தியப் பெண்கள் உடற்பயிற்சிக்குத் தேவையான முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற கூற்றிலும் உண்மை இருக்கிறது. இதற்கான நல்ல ஆரம்பங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் வாய்க்கப் பெற்றாலும், பணி மற்றும் குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகள் கூடும்போது தன்னுடைய உடல் நலம் என்பதற்கு தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதும் உண்மை. ஆனாலும் பொதுவான ஆரோக்கியம், சுகாதாரம் போன்றவைகள் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது ஆறுதலான விசயம். பண்டை காலத்திலிருந்து, சென்ற நூற்றாண்டு வரை பெண்கள் புகையிலை, சுருட்டு போன்ற ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் பழக்கங்கள் கொண்டிருந்தது, இன்று மிக மிக அரிதாகியுள்ளது. சில பின் தங்கிய கிராமங்களில் மட்டும் இது விதி விலக்கு. மேலைநாட்டு நாகரீகங்களான புகை பிடிப்பது, ஆணும், பெண்ணும் கலந்து நடனம் ஆடுவது போன்ற பழக்கங்கள் சில நவநாகரீக வட்டாரத்தில் தவிர்த்து, ஏனைய பெண்களின் நிலையில் சுய கட்டுப்பாட்டில் உள்ளது என்றே சொல்ல முடிகிறது. ஒரு காலத்தில் தனித்து இயங்கவே முடியாத நிலையில் இருந்தவர்கள் இன்று கடைவீதிக்குச் செல்வது, மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்களுக்கும், தேவையான போது வெளியூர் பயணங்களும் செல்வதற்கும் தயக்கம் காட்டுவதில்லை. என்றாலும் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் பாலியல் வன்முறைகள் பெண்களை அச்சமூட்டத்தான் செய்கிறது. இதற்காக அரசாங்கம் இன்னும் முனைந்து திட்டங்கள் தீட்டவேண்டிய தேவையும் உள்ளது.

    நம் தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது எவ்வளவு அவசியமோ, அந்த அளவிற்கு, நம் வருங்காலச் சந்ததியினர் அதைத் தொடரும் வகையில் காலத்திற்கு ஏற்ற அர்த்தமுள்ள நவீனத்துவத்தையும் ஏற்றுக்கொண்டு உடன் பயணிக்கும் வல்லமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். காரணம் இன்றைய நாகரீக உலகில், சுத்தம், சுகாதாரம், என அனைத்தையும் பேண வேண்டியதற்கான முக்கியத்துவமும் அதிகமாகிறது. காலத்திற்கேற்ற சில மாற்றங்கள் மேற்கொள்ளவேண்டிய அவசியமும் ஏற்படத்தான் செய்கிறது. அதனை உணர்ந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதும் இன்றைய தேவை.

    ஈரோடு தந்தை பெரியார் அவர்கள், மறுமணம் என்கின்ற, விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய மிகப் பெரிய தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தினார். வெறும் உபதேசமாக மட்டும் இல்லாமல் தானே முன்னோடியாக இருந்து, தம் சிறு வயதிலேயே, தம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்ணிற்கு மறுமணம் செய்துவைத்து வழிகாட்டினார். திருமணத்திற்குப் பிறகும் அப்பெண்னிற்கு பெற்றோரின் அரவணைப்பு கிடைக்கும் வகையில், ஈரோடு தங்கவேலனார் போன்றோரின் முயற்சியால் கன்னிகாதான முறையும் ஒழிக்கப்பட்டது. அதன்பின் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியால், இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த கேப்டன் இலட்சுமி எனப்படும், இலட்சுமி சேகல் போன்ற ஒரு சிலர் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்களுடைய பங்களிப்பைக் கொண்டு வருகின்றனர்.

    par0_image

    par0-009aஒரு காலத்தில் அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடிக்கொண்டிருந்தது. ஆனால் இன்று ஒபாமா அமெரிக்காவின் தலைமைப் பதவியை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார். இதிலும் ஒரு பெண்ணின் பங்களிப்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா…. ஆம், அப்பெண் ‘ரோசா பார்க்ஸ்’ என்ற கருப்பினப் பெண். அந்நாட்களில் கருப்பினத்தவருக்கென்று பேருந்தில் கூட தனிப்பட்ட இருக்கைகளே ஒதுக்கப்பட்டு வந்தன. ஒரு முறை ரோசா பார்க்ஸ், பேருந்தில் கருப்பின மக்களுக்கான இருக்கைகள் காலியாக இல்லாததால், மற்ற இருக்கையில் சென்று அமர்ந்திருக்கிறார். ஓட்டுனரோ அவரை அந்த இருக்கையில் அமர அனுமதிக்காமல் தகராறு செய்திருக்கிறார். அப்பெண்ணும் பிடிவாதமாக இருந்ததால், ஓட்டுநர் பேருந்தை காவல் நிலையத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார். ரோசா சிறை வைக்கப்பட்டார். மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் தலைமையில் போராட்டம் வலுப்பெற்றது. முன்னூற்றி என்பத்தி இரண்டு நாட்கள் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. அந்நாட்கள் முழுவதும் கருப்பினத்தவர் பேருந்துகளை புறக்கணிக்கின்றனர். ஆனால், அதன் பிறகு பெரும் மாற்றம் ஏற்படுத்திய இப்போராட்டம், ஒபாமா அவர்களை தலைமைப் பொறுப்பேற்பதில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்த சம்பவம் இது. 1996இல் குடியரசுத் தலைவர் கிளிண்டனிடம், ஜனாதிபதியின் சுதந்திரப் பதக்கமும், 1999இல் காங்கிரசு தங்கப் பதக்கமும் பெற்றார். ஆயினும் தம் இறுதிக் காலங்களிலும் இனவெறி முழுமையாகத் தீரவில்லையே என்ற வேதனையிலேயே இருந்தார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மரியாதையான, தலைநகரில் இறுதி ஓய்விற்கான இட ஒதுக்கீடு பெற்ற, அமெரிக்க வரலாற்றின் ஒரே பெண் மற்றும் இரண்டாவது ஆப்பிரிக்க அமெரிக்கர் ரோசா பார்க்ஸ் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வாழ்வோ வாகனமோ சுமை அதிகமானால் சக்கரம் மண்ணில் புதையத்தான் செய்யும். சுமைகள் ஏறாமல் தம்மைத் தாமே தற்காத்துக்கொள்ளும் துணிவும் மகளிருக்கு அவசியமாகிறது. சில அற்ப விசயங்களுக்காகவும், அடுத்தவரின் அனாவசியமான விமர்சனங்களுக்கு செவிசாய்ப்பதன் மூலமாகவும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் அவலங்களும் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற சிறிய பின்னடைவுகளைத் தாண்டி வரும் கலையை பயில வேண்டும். நம்முடைய சின்னச் சின்ன சாதனைகளையும் பட்டியலிட்டு, அதை முன்னுதாரணமாகக்கொண்டு இன்னும் பெரிய சாதனைகளைச் செய்ய முனைய வேண்டும். நல்ல விசயங்கள் எவரிடம் இருந்தாலும் அதைக் கற்கத் தயங்கக்கூடாது. உலகில் அனைத்தும் அறிந்த மேதாவிகள் என்று எவரும் இலர் என்பதே நிதர்சனம் இல்லையா!

    படங்களுக்கு நன்றி.

    Share
  • சுட்டும் விழிச்சுடர்! – காதல் செய்வீர்!

    பவள சங்கரி

    09631e30b9747c5c35320934f18f522c

     

     

    சுட்டும் விழி

    காதல் செய்வீர்! இளந்தளிரே காதல் செய்வீர்!
    காவியுடன் மனக்காவியாய் திரியும்
    பாவிகளையும் சூரியாய் சூதும்
    வாயூறு கொண்டே கூவித்திரியும்
    அனல்கக்கும் பார்வைகள் பதித்துச்செல்லும்
    விடம்கக்கும் நாகங்களதன் உயிர்க்கூட்டில்
    மலிந்துகிடக்கின்றன மாபாதகமெனினும்
    மயிலிறகு மொழிகள் ஆதலினால் காதலினிது!
    பட்டாம்பூச்சியாய்த் திரியும் பருவத்தில் முளைக்கும்
    பாதையறியா பரவசங்களின் நீட்சிகள்தானது!

    பொன்னிற சிறகுகளை விரித்துச் செல்லும்
    சிறுபறவையின் படபடக்கும் விழியசைவில்
    மலிந்துகிடக்கும் பொன்னுலகக் கனவுகள்
    கனவு காணுங்கள் கனவு காணுங்கள்
    சொன்னவர் அப்துல்கலாம் காணச்சொன்னதோ
    சோர்விலா சூழ்வரங்கள்! வாழ்வியல்வேதங்கள்!
    மலிந்த சிறகுகளை உதிர்த்துப் பறந்திடுங்கள்
    பாரமனைத்தும் பரிதியைக்கண்ட பனியாகும்பாருங்கள்!
    விரியும் சிறகுகளனைத்தும் விண்ணும்
    மண்ணுமளக்கும் வாமனப்பாதங்களாக மின்னும்!
    நற்தானிய மணிகளனைத்தும் சேமித்து
    பொற்றாமரையாள் கமலப்பாதம் சேவித்து
    வீழ்ச்சியில்லா வாழ்விற்கு செங்கம்பளமாக்குங்கள்!

    காதல் செய்வீர்! இளந்தளிரே காதல் செய்வீர்!
    உயரும் உபாயம் நோக்கி சிறகுவிரிப்பீர்!
    உச்சங்களை எட்டச் சிந்திப்பீர்!
    பட்டங்கள் ஆள வடிவெடுப்பீர்!

    Share
  • சுட்டும் விழிச்சுடர்!

    பவள சங்கரி

    சுட்டும் விழி
    தாய்மையைக் கொண்டாடுவோம்!

    தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு வரம். ஒரு பெண்ணின் வாழ்க்கை பூரணத்துவம் பெறுவதே அவளுடைய தாய்மைக்குப் பிறகுதான். இன்றைய சூழலில் பெண்களுக்கு தாய்மைப் பேறு கிடைப்பதில் பல இடர்பாடுகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கின்றன. குழந்தை உருவானவுடன் அது நல்லபடியாகப் பிறக்க வேண்டுமே என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முதல் மூன்று மாதக் காலங்களிலிருந்தே தாயின் எண்ணங்கள் குழந்தைக்கும் செல்கிறது. தாய்மைக் காலத்தில் தாய் மன அழுத்தத்தில் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் அதன் பாதிப்பு இருக்கலாம் என்கிறது ஆய்வுகள். குழந்தை உருவானவுடன் தாய், தந்தை, குழந்தை என அம்மூவருக்குமான தொடர்பு ஏற்படுவதை நம்மால் மனப்பூர்வமாக உணர முடியும்.

    சமீபத்திய ஆய்வுகள், மகப்பேறு காலங்களில் பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றன. ஏழு நாடுகளில், பத்தொன்பது மையங்களில், ஆய்வு செய்ததில் 8,200 க்கும் அதிகமான பெண்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பிரசவ நேரத்தில், முன்சூல் வலிப்பு, கர்ப்பகால நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம் என்கின்றனர். 10 முதல் 20 சதவிகித தாய்மார்கள், மன அழுத்தம், பதட்டம், இறுமுனை கோளாறு ஆகியவைகள் பிரசவ காலத்திலும்,அதன் பிறகு ஓராண்டிற்கும், பலவிதமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் சரிவும் இதற்குக் காரணமாகலாம் என்கின்றனர் வல்லுநர்கள். பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கும் இந்த நோய்க்கான காரணமும் அதன் தீர்வும் குறித்து சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.

    அபிமன்யு, பிரகலாதன் கதைகள் நாம் அறிந்ததே.

    கண்ண பரமாத்மாவின் சகோதரி சுபத்திரையின் கர்பத்தில் உருவான குழந்தை அபிமன்யு. இத்தருணத்தில் தம் சகோதரனிடம், யுத்த தர்மங்கள் குறித்து அறிய விரும்பினாள் சுபத்திரை. அப்போது கண்ணன், போர்க்களத்தில், வீரர்களின் அணிவகுப்பை வகைப்படுத்தி வியூகமாக அமைத்து, எதிரியை வெல்லும் முறைகளைத் தெளிவாக விளக்குகிறார். குறிப்பாக, பத்ம வியூகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தவர், அதனை உடைத்து உள்ளே நுழையும் முறையையும் விவரித்துக் கொண்டிருந்தபோது, இடையில் சிறிது நிறுத்துகிறார். அப்போது, ‘உம்… அப்புறம்?’ என்ற குரல் எங்கிருந்தோ கேட்டது. அது சுபத்திரையின் கர்ப்ப வாசத்திலிருந்த அபிமன்யுவின் ஆர்வக் குரல் என்பது கண்ணனுக்குத் தெரியும். ஆனால் அதற்கு மேல் அவன் கதையைத் தொடரவில்லை. அதற்கான காரணமும் இருந்தது. தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே புகும் வழிமுறையைப் புரிந்துகொண்டதால், பிற்காலத்தில் தைரியமாகப் போர்க்களம் வந்துவிட்டான் அபிமன்யு. பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும் ரகசியம் மட்டும்தான் அபிமன்யுவுக்குத் தெரியும். அதிலிருந்து வெளியே வரும் உத்தி தெரியாது என்பதால், அவனைப் பாதுகாப்பாக வெளியே மீட்டுக் கொண்டுவருவதற்கு உதவியாக வந்திருந்தான் பீமன். ஆனால், போர்க்களத்தில் சயத்ரதன் செய்த மாய வேலைகளால், உள்ளே நுழைந்துவிட்ட அபிமன்யு, அங்கேயே சிக்கிக்கொண்டான். பீமனின் பக்கபலமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. இப்படிப் போகிறது பாரதப் போரின் 13 ஆம் நாளில், கௌரவர்களின் சேனாதிபதி துரோணர் அமைத்த பத்ம வியூகத்தை உடைத்தெறியும் நோக்கில் வீரதீரப் போர் புரிந்துகொண்டிருந்த அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் கதை….

    அதே போன்று இரணியன் என்னும் அசுரனின் மனைவி கருவுற்றிருந்த காலத்தில், முனிவரின் போதனைகளை, பக்திக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, கருக்குழந்தையான பிரகலாதன், பக்தப் பிரகலாதனாக, திருமாலடியானாக மாறிய கதையும் நாமறிவோம்.

    இவற்றையெல்லாம், பகுத்தறிவாளர்கள் பலவாறாக எள்ளி நகையாடினாலும், கர்ப்ப காலத்தில் தாயின் மன நிலையின் தொடர்பாகத்தான் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் அமைகிறது என்பது நாம் யதார்த்த வாழ்வில் காணும் நிலை. இன்று குழந்தைகளை அதிகமாக ஆட்டிப்படைக்கும், ஆட்டிசம் போன்ற கொடிய பிரச்சனைகளுக்கான காரணமாக தாயின் மன அழுத்தமாகவும் இருக்கலாம் என்பதைச் சில ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் கருவுற்றிருக்கும் ஒரு பெண் நல்ல அமைதியான சூழலில், நிம்மதியான மன நிலையில் இருக்கும்போது குழந்தை அதேபோன்று எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிறப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். ஆனால் கூட்டுக் குடும்பப் பாரம்பரியம் சிதைந்துவிட்ட இன்றைய சூழலில், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு குழந்தைப் பேறு ஒரு சவாலாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே பலர் குழந்தை பெற்றுக்கொள்வதை முடிந்த வரை தள்ளிப் போட்டுவிடுகின்றனர். இதனாலேயே பலருக்கு கரு உருவாகுவதில் பல பிரச்சனைகள் வந்துவிடுகிறது. கர்ப்ப காலத்தில் உடல் நலம் பேணுவதில் பெரும் சிரமமும் ஏற்படுகிறது.

    imagesமுதல் மூன்று மாதங்களில் இருக்கும் தாயின் சிந்தனை குழந்தைக்கும்செல்கிறது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே அந்தக் குழந்தையின் மீதான அன்பை சிந்தனையில் வெளிப்படுத்துதல் நலம் என்கின்றனர். முதல் மூன்று மாதத்தில் மசக்கையால், வாந்தி, மயக்கம், உணவு ஏற்றுக்கொள்ளாமை போன்றவைகள் பாடாய்ப்படுத்தும்போது, வீட்டில் பெரியவர்கள் உடனிருந்தால், வாய்க்குப் பிடித்த சத்தான உணவை சமைத்துக்கொடுப்பதோடு, ஓய்வெடுக்கவும் வழியமைத்துக்கொடுப்பார்கள். ஆனால் பணிக்குச் செல்லும் பெண்களோ, ஓய்வெடுக்கவும் வழியில்லாமல், சரியான உணவும் உட்கொள்ள இயலாமல் உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்துவிடுகிறார்கள். இது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கிறது. மென்மையான இசையையும், நல்ல சொற்பொழிவுகள் அல்லது கதைகள் போன்றவற்றைக் கேட்பதால் குழந்தைக்கும் அமைதியான மனோநிலை இயல்பாகிவிடுவதோடு, தீய பழக்கங்களுக்கும் அக்குழந்தை ஆட்படுவதில்லை. ஆனால் சதாசர்வமும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டு, மன அழுத்தத்திற்கும் ஆளாகும் பெண்களால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் சிரமங்கள் ஏற்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தான் விரும்பும் சூழலில் இருப்பதோடு, பிடித்த உணவு வகைகளை உண்பது என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதும் அவசியம். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் படபடப்பை இது போன்ற இதமான சூழல்களால் மட்டுமே சரிசெய்ய முடியும். ஏனைய புற விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து, குழந்தையைப் பற்றிய ஆக்கப்பூர்வமான சிந்தைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். ஆனால் சதாசர்வ காலமும் பணியைப் பற்றிய சிந்தையிலேயே ஊறிக்கிடக்க வேண்டிய சூழலில் இருக்கும் பெண்களுக்கு வெகு எளிதாகவே சலிப்பு தட்டி விடுகிறது.

    கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று அறியும் ஆவல் தவிர்க்கபட முடியாதது என்றாலும், அதுவே ஒரு மனப்பாரமாகிவிடாமல் பார்த்துக்கொள்வது நலம். பெற்றோர் பிரசவ நேரத்தில் வந்தால் போதும். குழந்தை பிறந்தவுடன், குழந்தையைப் பராமரிக்கத் தேவையாக இருக்கும் என்று எண்ணுபவர்கள் கர்ப்ப காலத்தில் உதவியின்றி சிரமம் மேற்கொள்கின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் காலையில் சீக்கிரம் உணவு உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமல் இருப்பதால் அடிக்கடி மயக்கம் வருவதும் கட்டுப்படும். அத்தோடு வீட்டில் தயாரிக்கப்படும் பழச்சாறு, முளை கட்டிய பயறுகள் போன்றவற்றை அன்றாடம் எடுத்துக்கொள்வதும் அவசியம். ஆனால் வீட்டில் தயாரிக்க நேரமின்மையால் பலர் இன்று கடையில் தயாரித்த, கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பொருட்கள் கலந்த பழச்சாறுகள் மற்றும் துரித உணவு வகைகளை உண்ணும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் ஆரோக்கியம் கெட்டுவிடுவதால், மன ரீதியான பிரச்சனைகளுக்கும் வழிவகுத்துவிடுவதோடு மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

    நம் இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களில் 15 விழுக்காட்டினர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பக்காலத்தில் இரத்தச் சோகை ஏற்பட்டால் குறைப்பிரசவம் நிகழவோ, குழந்தை நோய்வாய்ப்படவோ வாய்ப்பாகிவிடும். இரத்த சோகையால் இதயத் துடிப்பில் மாற்றம் மற்றும் எளிதில் சோர்வு, படபடப்பு போன்றவை ஏற்படும். சரியான ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிட்டால் இந்தப் பிரச்சனை சரியாகும்.

    ஒரு பெண்ணைத் தன் கர்ப்ப காலத்தில் தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பது நம் பாரம்பரிய வழக்கம். காரணம், அந்த நேரத்தில் அவளுக்கு தாயின் அரவணைப்பு கட்டாயம் தேவைப்படுவதால்தான். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் பணி நிமித்தம் தூர தேசங்களுக்கோ அல்லது வேற்று மாநிலங்களுக்கோச் சென்று தங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது, உடல் ஆரோக்கியம் இரண்டாம்பட்சமாகப் போக வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. இன்று பெரும்பாலானவர்கள் அதிகபட்சமாக இரண்டு அல்லது ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்கிறார்கள். அந்தக் குழந்தை ஆரோக்கியமாகவும், நல்ல சமுதாயத்தை உருவாக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டியது அவசியம். இதற்கான முழு பொறுப்பும் அக்குழந்தையின் பெற்றோரையேச் சாரும். அந்த வகையில் ஒரு தாய் தன் கர்ப்ப காலத்தில் அக்குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்காக எந்த விதமான ஒரு சில தியாகங்களையும் செய்யத் தயங்க வேண்டியதில்லை. மனமும், உடலும் முழு ஆரோக்கியமாக உள்ள நல்ல தாய்மார்களால் மட்டுமே நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும். நல்ல சமுதாயம் மலர வேண்டுமென்றால் அதற்கு தாய்மார்களின் பங்கு இன்றியமையாதது என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டியது அவசியம்! தாய்மையைக் கொண்டாடுவோம்!

    Share
  • சுட்டும் விழிச்சுடர்!

    சுட்டும் விழி

    திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பலவிதமான திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியது. எத்தனையோ கனவுகள், கற்பனைகள், பருவம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகள் என்று மண நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்

    இந்தியப் பெண்கள் பொதுவாகவே தங்கள் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்ற அனைத்தையும் தங்கள் மதம் சார்ந்தே கடைபிடிக்கிறார்கள். தங்கள் அன்றாட கடமைகள் அனைத்தையும் தங்கள் மதச் சடங்குகளைப் போலவே ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்பவர்கள். சென்ற தலைமுறையின் பெண்கள் கூட, வீட்டில் கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார் என்று அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு, அமைதியாக பூசை, வழிபாடுகள், துளசிச் செடியை வலம் வருதல், ஓரளவிற்குப் படித்தவர்கள் என்றால் வீட்டுக் கணக்குகள், கணவனுக்குச் சின்ன உதவிகள் செய்வது போன்றவற்றில் மட்டும் பங்கெடுத்துக்கொண்டு மிக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பழமைவாதத்தில் பாங்காக குடும்பத்திற்கு அடங்கிய மருமகளாக, குழந்தைகளின் பாசமிகு தாயாக, நல்ல கடவுள் பக்தையாக இப்படி ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையில் சுகம் கண்டவர்கள். ஆனால் உலகம் முழுவதும் இன்று கால மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. சென்ற தலைமுறையில் வாழ்ந்த நம் பெற்றோர் அனுபவித்த ஒரு அமைதியான வாழ்க்கை இன்று உள்ளதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்களிடம் பெரிய சொத்து வசதிகளோ, அதிக செல்வமோ இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய இயந்திர வாழ்க்கை அன்று இல்லை. இன்றுபோல் பொருளாதார பற்றாக்குறையும், சிக்கலும் அதனால் மனநிம்மதி கெட்டு, உடல் நலக் குறைவும் ஏற்படும் அவல நிலை அன்று இல்லை. உள்ளதைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழக் கற்றிருந்தார்கள் அவர்கள். நாகரீகம் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் உணவு முறைகள், வாழும் முறைகள் என அனைத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் விதவிதமான புதிய நோய்களையும் இலவச இணைப்புகளாக்கியுள்ளன. இதில் மிக முக்கியமானது ஆண்களைப் பாதிக்கும் ஆண்மைக் குறைவு. சுரப்பிகளின் குறைபாடு போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இன்றைய பெரும்பாலான விவாகரத்திற்கான காரணம் ஆண்மைக் குறைவு என்று கூறப்படுகின்றன. சமூகப் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்றான இந்த மணமுறிவு இன்று குறிப்பிடும் அளவிற்கு கனிசமாக அதிகரித்துள்ளது.

    images (5)

    வணிகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்ற, பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த அழகான இளம் பெண் அவள். இப்படித்தான் பல கனவுகளோடும், கற்பனைகளோடும் கண்ணிற்கு இலட்சணமான, நன்கு படித்து, ஆறு இலக்க சம்பளம் வாங்கும் நல்ல பணியில் உள்ள மணமகன் கிடைத்த பெருமையில் காத்திருக்கிறாள். ஊரே அதிசயிக்கும்படி விமரிசையாக திருமணமும் நடந்து, மற்ற சடங்கு, சம்பிரதாயங்களும் குறைவில்லாமல் முறைப்படி நடந்து, புகுந்த வீடு நோக்கி அடியெடுத்து வைத்த மணமகளுக்கு அடி மேல் அடி விழுந்து அறுபது நாட்களில் மீண்டும் பிறந்த வீட்டிற்கே திரும்பிவிட்டாள். புதுப்பெண்ணின் முகத்தில் இருக்க வேண்டிய பூரிப்பு ஏதும் இல்லாமல் மாறாக, சோகமாக இருக்கும் மகளின் நிலையைக் கண்டு சந்தேகம் கொண்டு துருவித் துருவி ஆராய்ந்ததில், பேரிடியாக கிடைத்த தகவல் மணமகனுக்கு ஆண்மை குறைபாடு என்பதுதான். அடுத்த அதிர்ச்சி இத்தனைப் பெரிய குறைபாடு உள்ளவன் தங்கள் மகன் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் அதை மறைத்து திருமணம் முடித்துள்ளார்கள். என்ன நடந்தாலும் பெண் வெளியில் சொல்ல மாட்டாள் என்ற குருட்டு தைரியத்தில் இந்த அநியாயத்தைச் செய்துள்ளனர். இதைவிட அநியாயம் இந்த விசயம் பெண் வீட்டாருக்குத் தெரிந்த பின்பும், “அதனாலென்ன, உங்கள் மகள் இனி எங்கள் மகளாக இருந்துவிட்டுப் போகட்டும், விசயம் வெளியில் தெரிந்தால் நம் இரு குடும்பத்திற்கும் அவமானமாகிவிடும்” என்று சொல்லியதுதான். எத்தனை சுயநலமிக்கக் கூட்டம் இது என்பதை நிரூபித்துள்ளது. பின்னாட்களில் குழந்தை இல்லை என்று யாராவது கேட்டால் அப்பெண் மலடி என்று காரணம் சொல்லி தப்பிக்கவும் தயங்கமாட்டார்கள் இவர்கள். இப்படி ஒரு பெண்ணை பலிகெடாவாக்கிவிட்டு எதுவுமே நடவாதது போல வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்று அவர்கள் போட்ட திட்டம் நிறைவேறாது போனாலும், இன்று அந்தப் பெண்ணின் நிலையும் மிகவும் பரிதாபமாக உள்ளது.

    சோதிடப் பொருத்தம், கல்வித் தகுதி, சொத்து மதிப்பு, வெளித்தோற்றம், குடும்பப் பாரம்பரியம் என்று அனைத்தையும் பார்த்தவர்கள் மணமகனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நினைத்தும் பார்க்கவில்லை. ‘சமூகத்துக்கு அஞ்சியும், குடும்பத்தில் மூத்தவர்களின் கட்டாயத்தின்பேரிலும், தகுதியின்மை, இயலாமையை மறைத்து திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்மைக் குறைபாடு உண்மையான காரணமாக இருந்தாலும் பலர், தங்களுக்கு வசதியாக வேறு காரணங்களைக் கூறி விவாகரத்துக் கோருவதும் அதிகரித்து வருகிறது’ – இதுதான் இன்றைய நிலையாக உள்ளது. திருமணத்திற்கு முன்பு கட்டாயமாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டால் அது பல திருமண முறிவுகளுக்கான தீர்வாக அமையக்கூடும். பிரச்சனை வந்த பின்பு அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறிபோய்விடும் என்பதற்காக வாய் மூடி மௌனம் காப்பதால் தவறிழைத்தவர்களை காப்பாற்றுவதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடுகிறது.

    பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் மணமகன்களின் ஆண்மையின்மை ஒரு காரணமாக சொல்லப்படுவதால் திருமணத்திற்கு ஆண்மை பரிசோதனை அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கருதுவதாக செய்திகள் வெளியாகின்றன. இந்தியாவில் 40 சதவீதம் ஆண்களுக்கு முழு அளவிலான ஆண்மை குறைவும், 60 சதவீதம் ஆண்களுக்கு ஒரளவிற்கு ஆண்மை குறைவும் (partial impotance) இருப்பதாக இந்திய செக்ஸாலஜி மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

    ‘திருச்சியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையேயான மணமுறிவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அவர்கள், அந்த வழக்குத் தொடர்பாக மட்டுமல்லாமல், வழக்குமன்றத்துக்குத் தொடர்ந்து வரும் இதே போன்ற பிரச்சினைகளுக்கும் சேர்த்து பயன்தரத்தக்க கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.’ – கட்டுரையை முழுமையாக வாசிக்க ; திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை?

    Share
  • சுட்டும் விழிச்சுடர்!

    பவள சங்கரி

    சுட்டும் விழிச்சுடர்! (1)

    சுட்டும் விழி

    நம் இந்தியாவைப் பொறுத்த வரையில் பெண் குழந்தைகளை பெரும் சுமையாக நினைப்பதாலேயே பெண் குழந்தை என்று தெரிந்தால் அதை கருவிலேயே அழிக்கும் சூழலும் காணப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், அதாவது 1990 – 2010 இடையே சுமார் ஒரு கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஆண் பெண் குழந்தைகள் விகிதம் கவலை தருவதாக உள்ளதென கருக்கலைப்புக்கு எதிரான அமைப்பு CAMPAIGN AGAINST SEX SELECTIVE ABORTION(CASSA) தெரிவிக்கிறது. தமிழ் நாட்டில் மாநில விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் என்பதாக இருக்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மதுரை, தர்மபுரி,சேலம்,விழுப்புரம், அரியலூர்,பெரம்பலூர்,கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 க்கும் குறைவான பெண் குழந்தைகளே இருப்பதாக தெரிவிக்கிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 900 க்கும் குறைவான பெண் குழந்தைகளே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள்தான் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை நகர்புறங்களில் 946 ஆகவும், கிராமப் புறங்களில் சுமார் 900 ஆகவும் தான் இருக்கிறது. அதே நேரத்தில் படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவில் ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் இருக்கிறார்கள். ஹரியானா மாநிலத்தில் மிகக் குறைவாக 861 பெண்கள்தான் இருக்கிறார்கள்.

    கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 6 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பாலின விகிதம் சென்னை மாவட்டத்தில் 21 புள்ளிகள் குறைந்து 950 ஆகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8 புள்ளிகள் குறைந்து 946 ஆகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 புள்ளிகள் குறைந்து 959 ஆகவும் உள்ளது. இந்த பாலின விகிதம் இயற்கையாக 985 ஆக இருக்க வேண்டும். ஆனால், மிகக் குறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    2012ம் ஆண்டு பிறப்பு விகிதம் குறித்து தகவல் ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 18 மாவட்டங்களில் மாநில சராசரி அளவை விட குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக 3 மாவட்டங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 900க்கும் குறைவாகவே உள்ளது. காஞ்சிபுரத்தில் 914, விழுப்புரத்தில் 889, மற்றும் கடலூரில் 896 ஆகவும் உள்ளது.

    கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறும் முறை, கிராமப்புற பெண்களைக் காட்டிலும், நகர்ப்புற பெண்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகவுள்ளது. இதன் விளைவாக, கடந்த, 50 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் அதிகளவில் குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைதான். பாலியல் வன்முறைகள், வரதட்சணை பிரச்சனைகள் போன்றவைகளே. பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பரவலாக இருந்தும், போராட்டமான வாழ்க்கைச் சூழலே பெண் குழந்தைகளின் பிறப்பையே பெற்றோர் அஞ்சும் அளவிற்குச் சென்று கொண்டிருப்பது வருங்காலத்திற்கு நல்லதல்ல.
    ஆனால் எழுத்தறிவில் முன்னிலை வகிக்கும் கேரளா, இதில் முன்னுதாரணமாக விளங்குகிறது. இம்மாநிலத்தில், கடந்த, 50 ஆண்டுகளாகவே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரியானா, இமாச்சல பிரதேசம், மிசோராம் போன்ற பல்வேறு மாநிலங்களிலும், தனிநபர் வருமானம் அதிகமுள்ள, “இந்தியாவின் உணவுக் களஞ்சியம்’ என வர்ணிக்கப்படும் பஞ்சாப் மாநிலத்திலும், பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் அளவில் மிகப் பெரியதும், அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டதுமான உத்தரப் பிரதேச மாநிலத்தில், பெண்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது வேதனைக்குரிய விசயம். அதேபோன்று, நம் நாட்டின் தலைநகராகவும், உயர்வகுப்பினர் அதிகமாக வசிக்கும் பகுதியாகவும் விளங்கும் தில்லி மாநிலத்திலும், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்கிறது கணக்கெடுப்புகள். மேலும் நாட்டிலேயே ஆண் – பெண் விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலமாக அரியானா பட்டியலிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    பெண்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள், குறைந்து வரும் ஆண், பெண் குழந்தைகள் விகிதத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவைகளைக் கருத்தில்கொண்டு, நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அரியானா மாநிலம் பானிபட் நகரில், ‘பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கும், கல்விக்கும் மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கான்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஒன்று சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 100 மீ. நீளமுள்ள கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இந்திய அஞ்சல் துறை சார்பில், “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற திட்டம் தொடர்பான சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனைக் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி 24ஆம் தேதி, ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ ( National Girl Child day ) கொண்டாடப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு சட்டப் பூர்வமாக பாதுகாப்பும் உள்ளது

    இப்படி ஆக்கப்பூர்வமான பல்வேறு திட்டங்கள் போடப்பட்டிருந்தாலும் நடந்துகொண்டிருக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கையில், இவை யாவும் செயல்படாமல் ஏட்டளவிலேயே இருக்கிறதோ என்ற எண்ணமே தோன்றுகிறது. எங்கோ ஓரிரு நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஒரு முடிவிற்கு வரலாமா என்ற ஐயம் எழலாம். ஆனால் ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதோடு, பிரச்சனைகள் மென்மேலும் அதிகரிக்காமல் இருக்கும் விழிப்புணர்வும் வேண்டியது அவசியம். வெளியில் தெரியாமல் எத்தனையோ குழந்தைகள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பிரச்சனை அதிகமாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வேளைகளில் மட்டுமே அவை வெடித்து வெளியே சிதறுகின்றன. அந்த வகையில் நாட்டில் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமாயின் அவர்களுக்கு அதற்குரிய விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் வேண்டியது அவசியமாகிறது. பெண் குழந்தைகள் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு சட்டப் பூர்வமாக பாதுகாப்பு உள்ளது என்பதை அவர்கள் அறிந்து வைத்துக் கொள்வதோடு அது பற்றிய சரியான புரிதலும் அவசியம்.

    அந்த வகையில் நாட்டில் அவ்வப்போது நடந்துகொண்டிருக்கும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்த சிறு அலசலே, ‘சுட்டும் விழிச்சுடர்’ எனும் இப்பகுதி. நாட்டு நலன் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொள்ளும் அனைவரும் இதில் பங்குகொண்டு தங்களுடைய வெளிப்படையான கருத்துகளை முன் வைக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

    0133

    முளையிலேயே கிள்ளி எறியப்பட்ட இளமொட்டு!

    படத்திற்கு நன்றி- தினகரன்
    படத்திற்கு நன்றி- தினகரன்

    நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே, காரைக்குறிச்சி புதூர் பகுதியை சேர்ந்த, கணவனை இழந்த, சாந்தி என்பவரின் மகள் அம்பிகா. பதினைந்து வயதான இச்சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சென்ற வெள்ளிக் கிழமை (ஜனவரி 24, 2015) வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அம்பிகா மதிய உணவு இடைவேளையின் போது, தன் வகுப்பு அறையிலேயே, தனது துப்பட்டாவின் மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து இறந்து விட்டார். காவல் துறை விசாரணையில், கடந்த மாதம் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில், அம்பிகா என்ற அந்தச் சிறுமி, குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் மனவேதனையில் இருந்ததாகவும், மதிப்பெண் குறைந்த விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    “மாணவியின் மரணத்துக்குச் சொல்லப்படும் காரணம் சரியானதா என்ற ஐயம் ஏற்படுகிறது. இப்படிச் சாதாரண காரணத்திற்காகத் தற்கொலை செய்துகொள்ளும் அளவிலா நம் பெண்களின் மன முதிர்ச்சி இருக்கிறது?” – இப்படியும் எண்ணம் தோன்றலாம். உண்மையில் நாட்டில் ஆங்காங்கு நடந்துகொண்டிருக்கும் சில நிகழ்வுகள் இதனை உறுதிபடுத்தத்தான் செய்கிறது. பள்ளி, வீடு தவிர வேறு வகையான வெளித்தொடர்போ அல்லது பொழுதுபோக்கோ இருக்க முடியாத, தகப்பனும் இல்லாத, ஏழ்மையின் பிடியில் இருக்கும் ஒரு சிறுமிக்கு இது சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. தம் சக மாணவர்களின் முன்னிலையில் ஏற்பட்ட அவமானம் இப்படி ஒரு முடிவைத்தேடும் அளவிற்கு தூண்டியிருக்கலாம்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: “விரைவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், மாணவ, மாணவியரை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறோம். அந்த வகையில், மாவட்டம் முழுவதும், முதல் திருப்புத் தேர்வு நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியில் நடந்த திருப்புத் தேர்வில், இந்த மாணவி பங்கேற்க, தலைமை ஆசிரியர் அறிவழகன், வகுப்பாசிரியர் ராஜ் ஆகியோர் அனுமதிக்கவில்லை. மற்ற மாணவியர் தேர்வெழுதிய நேரத்தில், இந்த மாணவி மட்டும் வகுப்பறையில் தனிமைப்படுத்தப்பட்டார். முதல் தளத்தில் வகுப்பறை இருந்தாலும், இரண்டாம் தளத்தில் உள்ள அறையில் தான் திருப்புத் தேர்வு நடந்தது. முதல் தள வகுப்பறையில், தனிமையில் இருந்த மாணவி, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக, மாணவியை திருப்புத்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எழுத அனுமதிக்கவில்லை. அந்த மாணவியிடம், ‘பொதுத் தேர்வு எழுதினால், நீ பெயிலாகி விடுவாய்; அதனால் எழுத வேண்டாம்’ என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சில ஆசிரியர்களின் அணுகுமுறை சரியில்லாததால், மொத்த கல்வித்துறைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது”.

    பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்று நாம் அனைவரும் உணர்ந்து அதற்கேற்றவாறு பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்ற முயற்சிக்கும் இவ்வேளையில் இது போன்ற பின்னடைவுகள் வேதனைக்குரியவை. பல செய்திகள் இது போன்று வந்த வண்ணமே உள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் தனியார் பள்ளிகளின் வரிசையில் தற்போது அரசு பள்ளியும் இணைந்திருப்பது அதிர்ச்சியான விசயம். ஆசிரியர்களின் அதிகப்படியான கெடுபிடியின் காரணமாக மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ‘சில ஆசிரியர்களின் அணுகுமுறை சரியில்லாதலால் மொத்த கல்வித்துறைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது’ என்று பட்டும்படாமல் பதில் சொல்லி தப்பிக்க முடியாது. மேற்கொண்டு மீண்டும் ஒருமுறை இது போன்ற அவலம் நடவாமல் காக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வளர் இளம் பருவத்தில், இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் மாணவர்களின் மன நிலையை அறிந்தவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு ஆசிரியப் பயிற்சியின்போது மனோதத்துவ முறையிலும் குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் முறையை பயிற்சியளிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பள்ளியிறுதித் தேர்வு சமயங்களில், இதைப்பற்றியெல்லாம் சிந்திப்பார் இருப்பதில்லை. 100 சதவீத தேர்ச்சி மட்டுமே இலக்கு என்ற வகையில், அதற்குத் தடையாக இருக்கும், படிக்க முடியாத குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்தி கற்கச் செய்வதை விடுத்து அவர்களை தேர்வு எழுத விடாமல் செய்வது எந்த விதத்தில் நியாயமாகும். இதனால் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் கடமை தவறியவர்களாகிறார்கள் என்பதே சத்தியம். தகப்பன் இல்லாத ஒரு பெண் குழந்தை, வசதி வாய்ப்பு இல்லாத, அரசு பள்ளியில் படிக்கும் ஒரு பெண் குழந்தையை எந்த அளவிற்கு அழுத்தம் ஏற்படுத்தியிருந்தால் அச்சிறுமி உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்குச் சென்றிருப்பார் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கல்வித் துறையும், அரசும் இனிமேலாவது விழித்துக்கொண்டு இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கி, இது போன்ற எண்ணம் இன்னொரு முறை மற்ற ஆசிரியருக்கு தோன்றாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்.

    இது குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன் நண்பர்களே. நன்றி.

    Share