பவள சங்கரி

சுட்டும்-விழி1-300x76

பெண்களுக்கான தனிப்பட்ட நீதி மன்றம்

பெண்ணை மயில் என்றோம் – அவள்
ஆட்டத்தை அடக்கி விட்டோம்!
அவளைக் குயில் என்றோம்
பாட்டை முடக்கி விட்டோம்!
அவளை நிலவென்றோம்…
பிறைகளை அபகரித்தோம்…
பாரதி
பெண்ணைப் பெண்ணென்றான்
அவள்
பிறப்புக்கு அர்த்தம் கண்டான்

ஈரோடு தமிழன்பன்

அரசாங்கத்தில் போடப்படுகிற பல திட்டங்கள் ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும், போகப்போக அதன் பயன்பாடுகள் சுருங்கிக்கொண்டே போய்விடுகின்றன. இதற்கு பெரும்பாலும் மக்களும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. எங்கு அநீதி நடந்தாலும், அது நமக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற மெத்தனமோ அன்றி நமக்கேன் தேவையற்ற வம்பு என்ற எண்ணமும் நம்மில் ஊறிப்போய் கிடக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்றால் அது பார்க்கப்படும் கண்ணோட்டமும் பல நேரங்களில் வேறுபட்டே இருக்கிறது. இன்றைய உலகில், சமூக சேவை, கல்வி, அறிவியல், சட்டம், பொருளாதாரம், நிர்வாகம், அரசியல் என பல்வேறுவிதமான துறைகளில் மின்னிக்கொண்டுதான் உள்ளனர். இவையனைத்தையும் மீறி பெண்களுக்கு பாதுகாப்பு என்று வரும்போது அது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து நம் அரசாங்கம் இன்னும் கடக்க வேண்டிய தொலைவும் அதிகம் உள்ளது. நம் நாடு வல்லரசாக வேண்டும் என்ற பெரும் இலட்சியம் ஒரு புறம் இருந்தாலும், நம்முடைய அடிப்படை பாதுகாப்புத் திட்டங்களையாவது உடனடியாக சரிவர நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. பொதுவாகவே நம் நீதித்துறை எந்த ஒரு வழக்கிற்கும், சூட்டோடு சூடாக தீர்ப்பு வழங்குதில்லை. குற்றவாளி தான் செய்த குற்றத்தையே மறந்துவிட்டு அடுத்த ஒன்றிற்கு ஆயத்தமாகும் நிலைக்கு வந்தாலும், அச்சட்டம் தம் கடமையை சரியான காலத்தில் நிறைவேற்றுவதில்லை. பெண்களுக்கென்று, பெண்களாலேயே நடத்தப்படும் வங்கி, காவல் நிலையங்கள் போன்றவைகள் செயல்பட்டாலும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உடனுக்குடன் விசாரித்து, தீர்ப்பு வழங்கும் வகையில் பெண்களுக்கான தனிப்பட்ட நீதி மன்றம் கட்டாயம் அவசியமாகிறது. பல ஆண்டுகள், பல்லாயிரம் செலவு செய்து நடையாய் நடந்த பின்னும் அதற்கான தீர்ப்பு என்பது பலப்பல வாய்தாக்களுக்குப் பிறகு விவாதத்திற்கு வந்து சலித்துப்போன நிலையில் வருகிறது. அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் சிக்கல் மேலும் அதிகமாகிறதே தவிர வேறு எந்த பயனும் வருவதில்லை. இதனாலேயே பல வழக்குகள் நீதி மன்றம் வராமலே முடக்கப்படுகின்றன. குற்றவாளிகள் சுதந்திரமாக அடுத்த குற்றத்திற்கு தயாராகிவிடுகிறார்கள். அநீதி இழைக்கப்பட்ட பெண்ணே மேலும் துன்பத்திற்கு ஆளாகிறாள்.

சமீபத்தில் இப்படியொரு மோசமான நிலை ஒரு 20 வயது இளம் பெண்ணிற்கு, அதுவும் மாற்றுத் திறனாளி பெண்ணிற்கு ஏற்பட்டிருப்பது நம் நாடு வெட்கித் தலை குனிய வேண்டிய நிகழ்வாக இருக்கிறது. அரூர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்ற வியாழக்கிழமை (07-05-2015) இப்படி ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறது. மன நலமும், உடல் நலமும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணை தூரத்து உறவினனான ஒரு காமுகன் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியிருப்பதாக பாவப்பட்ட அந்த பெண்ணின் தாய் புகார் அளித்திருக்கிறார். பரிதாபமான நிலையில் இருக்கும் அப்பெண்ணை ஈவு இரக்கம் இல்லாமல், துண்டால் கட்டி பின்புறம் ஒரு தனிமையான இடத்திற்கு தூக்கிச் சென்று இந்தக் கொடுமையைச் செய்திருக்கிறான் கயவன். சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்தில், அப்பெண்ணின் தாயார் அருகிலிருந்த கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அவர்கள் அந்தத் தாயை அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ளார்கள். “ஓரு நாள் முழுவதும் வெளியில் காத்துக்கிடந்தும் புகார் அளிக்க உள்ளே செல்ல அனுமதி அளிக்கவில்லை. மீண்டும் கடத்தூர் காவல் நிலையத்திற்கே திரும்பிச் செல்லும்படி கூறிவிட்டனர்” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர். செவ்வாய்க்கிழமையன்று குற்றவாளியின் சார்பில் ஊர்க்காரர்கள் காவல் நிலையத்தை சூழ்ந்துகொண்டு சமரசத்திற்கு வலியுறுத்தியிருக்கின்றனர். கடத்தூர் காவல் நிலைய அதிகாரி சமரசம் செய்துகொள்வதாக கடிதம் எழுதிக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதன் பிறகு காற்று வாக்கில் செய்தி எட்டி, TARATDAC மாவட்டச் செயலாளர் பி.சரவணன் , காவல்துறை கண்காளிப்பாளர் திரு லோகநாதன் அவர்கள் உதவியுடன் அப்பெண்ணை புதன் கிழமையன்று ADSP மையத்திற்கு அனுப்பியுள்ளார். பின் வியாழக்கிழமையன்று, ஐ.பி.சி. பிரிவு 376 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குள் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை சமரசத்திற்கு ஒப்புக்கொள்ளும்படி அடித்து மிரட்டியிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்கவே இத்தனை சிரமம் என்றால், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து, இன்னும் அங்கும் விலை பேசப்பட்டு, தீர்ப்பு என்று, எப்படி வரும் என்பது குற்றவாளியின் தரப்பு நிதி வசதியைப் பொறுத்ததுதான்.

திருப்பூரில், திலகவதி என்ற பெண் கடந்த 4 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர் கோட்டை ஈஸ்வரன் கோயிலில், தற்காலிக இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்திருக்கிறார். மேலதிகாரியின் பாலியல் அவதூறு பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அப்பெண்ணின் கணவர் ஸ்ரீதர் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர்களுக்கு நிவேதா என்ற 6 வயது குழந்தை உள்ளது. திலகவதியை சக ஊழியர் ஒருவரோடு இணைத்து, மற்றொரு ஊழியர் அவதூறு பரப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இதோடு திலகவதி மீது முதல்வரின் தனிப்பிரிவுக்கு யாரோ ஒருவர் புகாரும் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து, முதல்வர் தனிப்பிரிவிலிருந்து, இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலிலும் இருந்த திலகவதி வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கிற்கான நீதி என்று கிடைக்கும் என்பதும் ஆண்டவனுக்கே வெளிச்சம்.

புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்த வீராசாமி என்பவரின் மனைவி புவனேசுவரி. 25 வயதான இவர் தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன் என்பவரின் தொடர்ந்த பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான புவனேசுவரி, கடந்த 7ம் தேதி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொது மக்கள் நேற்று காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தையும் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து எஸ்பி உமா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருள்முருகன் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர். இனி இந்த வழக்கிற்கு நியாயம் கிடைக்கும் வரை மன உளைச்சல் தொடர்ந்தவண்ணம் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் இருக்க வேண்டியதுதான்..

திருப்பூரில் வரதட்சிணை கேட்டு மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய கணவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், மடத்துக்குளம் அருகிலுள்ள தளி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி உமாமகேசுவரி. நான்கு ஆண்டுகளாக திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இப்படி அன்றாடம் எண்ணற்ற புகார்கள் காவல்துறையை நோக்கி படையெடுத்துக்கொண்டுதான் உள்ளன. பெரும்பாலோனோர் நீதி மன்ற இழுபறிக்கு அஞ்சி மனம் நொந்து புகாரை திரும்பப் பெறவும் செய்கின்றனர். சிலர் காவல் நிலையம் செல்லவே துணிவதில்லை. இது போன்ற நிலைகள் குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிடுகின்றன. இதற்கான தீர்வை விரைவில் நிறைவேற்ற வேண்டியது சட்டத்தின் கடமையாகிறது. அந்த வகையில் மகளிருக்கான தனி நீதிமன்றம் அமைத்து இது போன்ற வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து, விரைவில் தீர்ப்பு வழங்க ஆவண செய்ய வேண்டியது அரசின் உடனடி தேவையாக உள்ளது. தவறு செய்பவர்களின் எண்ணிக்கை இதனால் குறையும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.