Category: சிறுகதைகள்

கதைகள்

  • மார்த்தா (சிறுகதை)

    மார்த்தா (சிறுகதை)

    ஜெயா
    சின்ன காஞ்சிபுரம் 

    மதுரையின் அந்தப் பழமையான ஓட்டு வீட்டில், காலை நேரத்துப் பரபரப்பு நிறைந்திருந்தது. தெருவில் ஒலிக்கும் பால் வண்டி மணியின் சத்தமும், காய்கறிக்காரரின் கூவலும் அந்த நாளின் தொடக்கத்தை அறிவித்தன.

    அறையின் ஒரு ஓரத்தில், பழைய மர முக்காலியில் அமர்ந்து பித்தளைத் தம்பாளத்தில் கத்தரிக்காய் நறுக்கிக் கொண்டிருந்தார் லட்சுமி பாட்டி. அருவாமனையின் ‘கீச் கீச்’ சத்தமும், நறுக்கிய காய்கள் தண்ணீரில் விழும் ‘சொப் சொப்’ சத்தமும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தன.

    திடீரென வாசல் கதவு படாடீரெனத் திறந்தது. முதுகில் கனமான பள்ளிப் பையைத் தொங்கவிட்டபடி, முகம் முழுக்கக் கடுப்புடன் உள்ளே நுழைந்தான் 16 வயது மார்த்தாண்டம் (எ) மார்த்தா. சாக்ஸை உருவி வீசிவிட்டு, ஒரு பெருமூச்சோடு பாட்டியின் அருகில் பொத்தெனத் தரையில் உட்கார்ந்தான்.

    “ஹப்பா… இந்த வீட்ல யாருக்குமே என் கஷ்டம் புரியல பாட்டி! உங்க பையன் ஏன் எனக்கு எப்போதுமே ‘ஃபேவரா’வே இருக்க மாட்டேங்குறாரு?” என்று ஆத்திரத்துடன் புலம்பினான்.

    பாட்டி அருவாமனையிலிருந்து பார்வையை எடுக்காமல், மெல்லச் சிரித்தபடி, “என்னாச்சுடா மகராசா? காலையிலேயே சூரியன் உதிக்குறதுக்கு முன்னாடி கோபம் உச்சிக்கு போயிருச்சு?” என்றார்.

    “பின்ன என்ன பாட்டி? ஸ்கூல்ல இருந்து அடுத்த வாரம் கடலூர், பாண்டிச்சேரின்னு ‘சோஷியல் சர்வீஸ்’ டூர் கூட்டிட்டு போறாங்க. புயல்ல பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பண்றது, விழிப்புணர்வு முகாம் நடத்துறதுன்னு எவ்வளவு பெரிய விஷயம்! டூர் ஃபீஸ் கட்டணும்னு சொல்லி ஒரு வாரமாச்சு. ‘நாளைக்கு தர்றேன், நாளை மறுநாள் தர்றேன்’னு சொல்லி உங்க அருமைப் பையன் என்னை அலைய விடுறாரு. இன்னைக்கு ஈவினிங் தான் கடைசி நாள். கிளாஸ்ல ரக்ஷன் என்னை எல்லார் முன்னாடியும் கிண்டல் பண்றான். ‘நோ மணி, ஒன்லி டிப்ரஷன்!’ உண்மையிலேயே அப்பா வேஸ்ட் பாட்டி!”

    ‘வேஸ்ட்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் பாட்டி கையில் இருந்த அருவாமணையை அப்படியே தள்ளிவைத்தார். சேலைத் தலைப்பால் கைகளைத் துடைத்துக்கொண்டு, கண்ணாடியைச் சரிசெய்து மார்த்தாவை நிமிர்ந்து பார்த்தார்.

    “ஏய்… வாய மூடுடா! அப்பாவை பத்தி வார்த்தையை அளந்து பேசு. ‘வேஸ்ட்’கீஸ்ட்னு சொன்னே… அப்புறம் எனக்குக் கோபம் வந்துரும். உனக்கு உன் கஷ்டம் பெருசுடா கண்ணா… ஆனா, குடும்பத்தை நடத்துறவனுக்குத்தானே தெரியும் அவனோட கஷ்டம் என்னன்னு? உன் கஷ்டம் உனக்கு, அவன் கஷ்டம் அவனுக்கு! ஒரு குடும்பத் தலைவனா மாசம் பொறந்தா வீட்டு வாடகை, பால் பில்லு, கரண்ட் பில்லு, உன்னோட ஸ்கூல் ஃபீஸ்னு எல்லாத்தையும் தலையில சுமந்துகிட்டு ஓடுறான்ல… அவன் உனக்குத் தர மாட்டேன்னு சொல்லலையேடா… சூழ்நிலை அப்படி இருக்கு.”

    மார்த்தா சற்றே அமைதியானான். ஆனால், அவனது அவசரம் இன்னும் தீரவில்லை.

    “சரிடா, இப்ப எதுக்கு மூஞ்சியை பூசணிக்காய் மாதிரி வச்சுக்கிட்டு இருக்க? உங்க அப்பா ‘மீனாட்சி டெக்ஸ்டைல்ஸ்’ ஷோரூமுக்கு வேலைக்கு போயிருக்காரு. நீ இப்படியே ஸ்கூலுக்குக் கிளம்பு… வழியில இருக்குற அந்த ஷோரூமுக்கு போ. அப்பா கிட்ட போய் நிதானமா, ‘ப்பா, இன்னைக்குதான் டூர் ஃபீஸுக்கு கடைசி நாள்’னு நியாபகப்படுத்து. அவர் கண்டிப்பா வழி பண்ணுவாரு,” என்று யோசனை கூறினார் பாட்டி.

    மார்த்தா தன் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, “சரி பாட்டி, நீங்க சொல்றீங்கனு போறேன்!” என்று சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பினான்.

    நெரிசல் மிகுந்த மதுரை மேல மாசி வீதியில், ‘கலக் கலக்’ என்ற சத்தத்துடன் மார்த்தாவின் பழைய சைக்கிள் அசைந்து அசைந்து விரைந்தது. மாலை நேரத்து வெயில், வைகை ஆற்றின் ஈரக்காற்றோடு கலந்து மதுரை நகரின் மீது பொன்னிறமாய் படிந்திருந்தது.

    மார்த்தாவின் கால்கள் பெடலை வேகமாக மிதித்துக் கொண்டிருந்தாலும், அவனது மனம் முழுவதும் வகுப்பறையிலேயே லயித்திருந்தது.

    “ஏய் மார்த்தா! உங்க அப்பன் கடையில சுருட்டுற நாலணா காசை வச்சா கடலூருக்கும் பாண்டிச்சேரிக்கும் டூர் போகப்போற? ஒழுங்கா வீட்ல உக்காந்து பழைய சோத்தை தின்னுட்டு போப்பா!” என்ற ரக்ஷனின் ஏளனச் சிரிப்பு அவனது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

    “டேய் ரக்ஷன்… உனக்கு இருக்குடா ஆப்பு! என் அப்பா கண்டிப்பா காசு தருவாரு. டூர் போயி போட்டோ எடுத்து உன் மூஞ்சில அடிக்கல… என் பேரு மார்த்தாண்டம் இல்லடா!” என்று மனதுக்குள் சபதம் எடுத்துக்கொண்டான்.

    சைக்கிள் ‘மீனாட்சி பட்டு விழுதுகள்’ என்ற பெரிய ஜவுளிக்கடையின் முன் வந்து நின்றது. பலகட்ட கண்ணாடி கதவுகளும், உள்ளே வீசும் ஏசி காற்றும், ‘வாங்க அம்மா… வாங்க ஐயா…’ என்று கூவி அழைக்கும் விற்பனையாளர்களின் சத்தமும் அந்த வீதியைச் சூழ்ந்திருந்தன.

    கடையின் பிரம்மாண்டம் அவனைச் சற்று தயங்க வைத்தாலும், ரக்ஷனின் முகம் நினைவுக்கு வர, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

    தரைத் தளத்தில் இருந்து தளம் தளமாகத் தேடி, மூன்றாம் தளத்தின் ‘காஞ்சிபுரம் பட்டு’ பிரிவை அடைந்தான். அங்கே அவனது தந்தை வேம்பு (மாணிக்கம்) நின்றுகொண்டிருந்தார். 50 வயதைக் கடந்த அவரது முகம் வேர்வையிலும் சோர்விலும் குழைந்துபோயிருந்தது.

    மார்த்தா மெதுவாக அவர் அருகில் சென்று, “அப்பா…” என்று அழைத்தான்.

    வேம்பு திடுக்கிட்டுத் திரும்பி, “மார்த்தா! நீ எதுக்குடா இந்த நேரத்துல இங்க வந்த? வீட்ல எதுவும் பிரச்சனையாடா?” என்று பதற்றத்துடன் கேட்டார்.

    “இல்லப்பா… நீங்க கடலூர், பாண்டிச்சேரி டூருக்குப் பணம் தரேன்னு சொல்லி ஒரு வாரம் ஆயிடுச்சுப்பா… அதான் உங்களைப் பாத்து பணம் வாங்கிக்கிட்டு போகலாம்னு…” என்று தயங்கியபடியே சொல்லி முடிப்பதற்குள்…

    “ஏய் வேம்பு! இங்க என்னடா மேய்ச்சல்? அங்கே நாலாவது கவுண்டர்ல கஸ்டமர் வந்து பத்து நிமிஷம் ஆச்சு! வந்து சேலையை எடுத்துப் பிரிச்சுக் காட்டுடா சோம்பேறி!” என்று இடிமுழக்கமாய் ஒரு குரல் கேட்டது.

    அது சூப்பர்வைசர் சுந்தரத்தின் குரல். வேம்பு பதறிப்போய், “இதோ வர்றேன் சார்…” என்று சொல்லிவிட்டு, மகனிடம் “இரண்டு நிமிஷம் நில்லுடா” எனக் கூறிவிட்டு ஓடினார்.

    மார்த்தா ஒரு தூணின் மறைவில் நின்று கவனித்தான்.

    அங்கே ஒரு பணக்காரக் குடும்பம் அமர்ந்திருந்தது. “ஏப்பா! நல்ல பட்டுப் புடவையா எடுத்துப் போடு. என்ன பிராண்ட் வச்சிருக்கீங்க? எதைக் காட்டுனாலும் பழசா இருக்கு!” என்று அலட்சியமாக வீசியடித்தார் அந்தப் பெண்மணி.

    வேம்பு மிகத் தாழ்மையுடன் தன் தளர்ந்த உடலை வளைத்து சேலையைப் பிரித்துக் காட்டினார். “சீ! இந்த கலர் எனக்குப் பிடிக்கல! அஞ்சாவது ஃப்ளோர்ல இருந்து அந்த மெரூன் சேலையைக் கொண்டு வா!” என்று அவர் விரட்ட, வேம்பு படிகளில் ஐந்தாம் தளத்திற்கு ஓடினார். மீண்டும் இறங்கிவந்து காட்ட, “இதுவும் நல்லா இல்லை, மூணாவது ஃப்ளோர்ல இருக்குற பிங்க் சேலையைக் கொண்டு வா!” என்று மீண்டும் அலையவிட்டனர்.

    வேம்புவின் நெற்றி வேர்வை சேலையில் விழுந்துவிடக் கூடாது என்று துண்டால் துடைத்தபடியே ஓடினார். முழங்கால் வலி தாங்க முடியாமல் தூணைப் பிடித்து மூச்சு வாங்கியபோது, சூப்பர்வைசர் சுந்தரம் பாய்ந்துவந்து கத்தினார்.

    “ஏய் பரதேசி நாயே! உனக்கு வயசான காலத்துல எதுக்குடா இந்த வேலை? ஒழுங்கா ஓடிப்போய் புடவையை எடுத்துட்டு வரத் தெரியாதா? கடைக்கு வர்ற கஸ்டமரை காக்க வச்சுக்கிட்டு என்னடா பண்ற? உனக்கெல்லாம் சம்பளம் ஒரு கேடா? நாயே… கழுதைப் பயலே… ஒழுங்கா ஓடுடா!”

    வாடிக்கையாளர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சிரித்தனர். வேம்புவோ, “மன்னிச்சுடுங்க சார்…” என்று தன் சுயமரியாதையை அடகுவைத்துவிட்டு மீண்டும் ஓடினார்.

    தூணின் பின்னால் நின்ற மார்த்தாண்டத்தின் இதயம் சுக்குநூறாக உடைந்தது.

    தன் பள்ளிச் சுற்றுலாவுக்காகவும், ரக்ஷனுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற சின்னத்தனமான ஆசைக்காகவும் தன் தந்தை தினமும் இப்படிப்பட்ட நரகத்தில் அல்லல்படுகிறாரா?

    சுற்றுலா, கடலூர், பாண்டிச்சேரி, ரக்ஷனின் ஏளனச் சிரிப்பு… இவை அனைத்துமே அவனது கண்ணெதிரே அற்பமாக மாறின. தந்தையின் மானத்தையும் வேர்வையையும் விட இந்த உலகில் எதுவுமே பெரிதில்லை என்று அவன் உணர்ந்தான்.

    கண்களில் கண்ணீர் வழிந்தோட, கடையை விட்டு வெளியே ஓடி வந்தான். சைக்கிளை எடுத்துக்கொண்டு, “இனிமேல் நான் அப்பாக்கிட்ட ஒரு பைசா கூட கேட்க மாட்டேன்! என் அப்பாவோட இந்த அவமானத்துக்கு நான் காரணமா இருக்க மாட்டேன்!” என்று கதறியபடி வீட்டை நோக்கி மிதித்தான்.

    இரவு 9:00 மணி. வீட்டின் முன் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் மார்த்தா. சமையலறையில் காமாட்சி தோசை சுட்டுக்கொண்டிருக்க, லட்சுமி பாட்டி திண்ணையில் அமர்ந்திருந்தார்.

    “என்னடா மார்த்தா… கடையில அப்பாவைப் பாத்தியா? டூருக்குப் பணம் தர்றேன்னு சொன்னாரா?” என்று பாட்டி ஆசையோடு கேட்டார்.

    மார்த்தா குரல் தழுதழுக்க, “பாட்டி… இனிமே இந்த டூரைப் பத்தியோ, பணத்தைப் பத்தியோ என்கிட்ட பேசாதீங்க. எனக்கு டூரும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்,” என்றான்.

    “என்னடா சொல்ற? சாயந்தரம் வரைக்கும் ஒத்தக்காலுல நின்ன?”

    “ஆமா பாட்டி… அந்தப் பணத்துக்காக அப்பா படுற கஷ்டத்தையும், கடையில் அவரை நடத்துற விதத்தையும் பாத்த அப்புறம் எனக்கு அந்த டூர் தேவையில்லை. என் சின்னத்தனமான ஆசைக்காக, யாரோ ஒருத்தன் அவரை ‘நாயே பேயே’னு திட்டுறதை என்னால சகிச்சுக்க முடியாது. என் டூருக்காக என் அப்பா தன் சுயமரியாதையை இழக்கக் கூடாது!”

    அப்போது வீட்டின் கதவு மெதுவாகத் திறந்தது. உடம்பெல்லாம் வேர்வையோடு மாணிக்கம் உள்ளே நுழைந்தார். மகனைக் கண்டதும் ஒருவிதக் குற்ற உணர்ச்சியுடன், “மார்த்தா… கடையில அந்தச் சூப்பர்வைசர் கத்துனதுல உன்னைக் கவனிக்க முடியலடா. மன்னிச்சுருடா… உனக்கு டூருக்கு உண்டான பணத்தை நாளைக்கு எப்படியாவது வாங்கித் தர்றேன்டா…” என்றார்.

    தந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மார்த்தாவால் தாங்க முடியவில்லை. ஓடிச்சென்று தந்தையைக் கட்டியணைத்துக்கொண்டான்.

    “வேண்டாம்ப்பா! எனக்கு ஒரு ரூபா கூட வேண்டாம்ப்பா! நான் கடையில எல்லாத்தையும் பாத்துட்டேன். அந்த ஆளு உங்களை அசிங்கமா திட்டுனதை என் கண்ணால பாத்தேன். என் டூருக்காக நீங்க யார்கிட்டயும் கையேந்த வேண்டாம்ப்பா!”

    மாணிக்கம் திகைத்துப்போய் தன் மகனைப் பார்த்தார்.

    மார்த்தா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உறுதியான குரலில் சொன்னான்: “அப்பா! நான் நல்லா படிப்பேன். உங்களை இந்த மாதிரி வேலைக்கு அனுப்பாம, ஒரு நல்ல நிலமையில வச்சு காப்பாத்துவேன். அந்த ரக்ஷன் முன்னாடி நான் பணத்தால ஜெயிக்கலைனாலும், என் படிப்பாலயும் சுயமரியாதையாலயும் ஜெயிச்சுக் காட்டுவேன்ப்பா!”

    அந்தச் சிறிய ஓட்டு வீட்டிற்குள், வறுமையின் இருளை விட மார்த்தாண்டத்தின் புதிய லட்சிய ஒளி பிரகாசமாக வீசியது.

    எழுத்தாளர் குறிப்பு
    • எழுத்தாளர் புனைபெயர்: ஜெயா
    • இயற்பெயர்: வீரபத்திரன், ஒரு பன்முகத் திறமை கொண்ட கலைஞர். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவு மற்றும் ஆவணப்படத் தயாரிப்புத் துறையில் தடம் பதித்து வருகிறார். தற்போது காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு பணியாற்றி வரும் வீரபத்திரன், ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆவணப்படங்களை உருவாக்கி, சமூகப் பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள கலாச்சாரம், மற்றும் மனிதர்களின் வாழ்க்கையைத் தன் லென்ஸ் வழியாகக் காட்சிப்படுத்தி வருகிறார்.

    கதைச் சுருக்கம்: பதின்ம பருவத்து உணர்ச்சிவேகத்தில் தன் விருப்பமே பெரிதென நினைக்கும் ஒரு சராசரி பள்ளி மாணவன், தந்தையின் உழைப்பையும் அவமானத்தையும் நேரில் காணும்போது அடையும் முதிர்ச்சியையும், சுயமரியாதையை உணரும் தருணத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இச்சிறுகதை.

    Share
  • தெய்வச்செயல் (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    கத்தார் நாட்டு தலைநகரான தோஹாவில் ஐம்பது வயது அக்கவுண்டன்ட் அப்துல்லா வழக்கம்போல் அன்று அலுவலகம் நுழைந்தார்.

    லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கேரளாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மனித வெள்ளத்தின் ஒரு துளியாக, வருடக்கணக்கில் குடும்பம் மறந்து தியாக வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்துல்லா ஒரே ஒரு நிமிடத்தில் அன்று லட்சக்கணக்கில் கடனாளியாவோம் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

    குடும்பத்தைப் பார்ப்பதற்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தரப்படும் ஒரு மாத விடுமுறைக்காக, முதலாளியின் அனுமதி கடைசி நாளில் கிடைத்து, அவசர கதியில் ஏர்போர்ட் வந்து, “டியூட்டி ஃப்ரீ”யில் சாக்லேட், பெர்ஃப்யூம், நெருங்கிய சினேகிதர்களுக்கு ஒரு “ரெட் லேபிள் ஜானி வாக்கர்” வாங்கிக்கொண்டு ஒரு சராசரி மலையாளியாக பட்டணம்திட்டா வந்து குடும்பத்துடன் ஒரு மாத தேனிலவு லௌகீக வாழ்க்கையை வாழ்ந்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து அயலக வாழ்க்கையை ஆரம்பிக்கும் அப்பாவி மனிதர் அப்துல்லா.

    இன்றிரவு கேரளா செல்ல வேண்டும் என்பதால் காலையிலிருந்தே அரக்கப் பரக்க அலைந்து கொண்டிருந்தார் அப்துல்லா. விடுமுறையில் அவருடைய பணியை செய்யப் போகும் பிஜூவையும் பாங்க்கிற்கு அழைத்து சென்றார்.

    அன்று அனைத்து நிறுவனப் பிரிவுகளின் ஊழியர்க்கு சம்பள நாள்.

    ரியால் வெள்ளம்.

    பாங்க் அருகே பார்க்கிங் கிடைக்காததால் பின்புறத்தெருவில் காரை நிறுத்திவிட்டு பாங்க்கில் மூன்று லட்சம் ரியால்களை (இந்திய மதிப்பில் அறுபது லட்சம் ரூபாய்) கட்டுக் கட்டாகப் பெற்றுக்கொண்டு சூட்கேஸ்சில் நேர்த்தியாக அடுக்கிக் கொண்டு சர்வ ஜாக்கிரதையாக இருவரும் காரின் பின்பக்கக் கதவைத் திறந்து சூட்கேஸ்சை வைத்து கதவை சாத்திவிட்டு திருப்தியுடன் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தனர்.

    பாங்க்கிலிருந்து வந்த பத்தான் உடையணிந்த ஒருவர் அப்துல்லாவைப் பார்த்து, “ஜீ! பாங்க் மானேஜர் உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்; ஏதோ “செக்”ல பிரச்சனையாம் ” என்று ஹிந்தியில் சொல்லிக்கொண்டே தன் கார் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தார்.

    “நல்லபடியாக ஊர் செல்லவேண்டும்” என்று நினைத்துக்கொண்டே அப்துல்லா காரைப் பூட்டி விட்டு பிஜுவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வங்கிக்கு விரைந்தார்.

    சில நிமிடம் கழித்து வங்கியிலிருந்து வந்த மற்றொரு பத்தான் ஆசாமி, பிஜுவைப் பார்த்து ”யாரோ ஒரு மல்பாரி “டை-வாலா” (டை அணிந்த மனிதன்) பாங்க்கில் மயங்கி விழுந்து விட்டார்; போய்ப் பாருங்கள்; ஹார்ட் அட்டாக் போலிருக்கிறது என்று அனுதாபத்துடன் ஹிந்தியில் சொல்லிக்கொண்டே சென்றார்.

    அப்துல்லா “டை” அணிபவர் என்பதாலும், அவருக்கு “ஹார்ட்” பிரச்சனை உள்ளது என்பதாலும் பூட்டப்பட்ட காரின் சாவி அப்துல்லாவிடம் உள்ளது என்பதாலும் வேலைக்கு புதிது என்பதாலும் “ஒருக்கால் அவர் மயங்கி விழுந்திருந்தால் அவருக்கு உதவி செய்யலாமே” என்ற பதைபதைப்பாலும் படபடப்புடன் பாங்க் விரைந்தார் பிஜு.

    அப்துல்லா பாங்க் மேனேஜருடன் உரையாடிவிட்டு வெளியே வருவதைப் பார்த்துவிட்டு அப்துல்லாவிற்கு ஒன்றுமில்லை என்று அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் பிஜு.

    “நீ ஏன் இங்கு வந்தாய்?’ என்று அப்துல்லா திடுக்கிட்டு வினவ, வந்த காரணத்தை பிஜு சொல்லிக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர். “அப்படி யாரும் பாங்க்கில் மயங்கி விழவில்லையே” என்று துணுக்குற்று பதிலுரைத்த அப்துல்லா மனதில் எங்கோ அபாயமணி அடித்தது.

    “என்னை பாங்க் மேனேஜர் கூப்பிடவேயில்லை” என்று பிஜூவிடம் சொல்லிக்கொண்டே வந்தவர் அதிர்ந்து உறைந்து நின்றார்.

    காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு மூன்று லட்சம் ரியால் சூட்கேஸ் களவாடப் பட்டிருந்தது.

    இந்த ஜன்மத்தில் இனிமேல் குடும்பத்தைப் பார்க்கப் போவதில்லை என்ற மின்னல் அப்துல்லாவை வெட்ட கார் பக்கவாட்டில் சரிந்தார்.

    அக்கம்பக்க அனுதாபங்கள், வயிற்றைக் கலக்கும் சைரனுடன் “லாண்ட் க்ரூய்ஸ்சர்” காரில் போலீஸ் வருகை, அவர்களின் அதிகார தோரணை, அரபி மொழி விசாரணை என்று உச்சக்கட்ட யுத்தக்கள களேபரம் அரங்கேறியது அங்கே.

    “இருபத்தி ஐந்து வருட அர்ப்பணிப்பு, உழைப்பு, எல்லாம் இரண்டே நிமிடங்களில் மண்ணோடு மண்ணாயிற்றே” என்று அப்துல்லா கூக்குரலிட்டு குமுறியது முதலாளி “ஷேக்”கையே ஒருகணம் நெகிழச் செய்தது.

    “கம்பெனி சார்பில் இரண்டு பேர் சென்றும் பணம் பறிபோயிற்றே” என்று மன உளைச்சல் அடைந்த ஷேக் சில கணங்களில் தன்னை மீட்டுக் கொண்டார்.

    அப்துல்லாவின் நேர்மையான உழைப்பின் முன்னால் அது பெரிய இழப்பு இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும் அவருக்கு தன் நாட்டு காவல் துறையின் மீது அபார நம்பிக்கை, எப்படியும் பணத்தை மீட்டு விடுவார்களென்று.

    அப்துல்லாவை நோக்கி “ நீ ஊர் சென்று வா! அதற்குள் நம் பணம் கிடைத்து விடும்” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

    இந்தப் பிறவியில் நாம் இந்தியா திரும்பப் போவதில்லை என்று நினைத்திருந்த அப்துல்லா, ஷேக்கின் பெருந்ததன்மையை நினைத்து கண்ணீர் மல்க நன்றி கூறி ஏர்போர்ட் வந்தடைந்தார்.

    தன் அலுவலக மொபைல் ஃபோனை பிஜூவிடம் ஒப்படைத்துவிட்டு “செக் இன்” செய்ய “புறப்பாடு” உள்ளே நுழைந்தார்.

    அவ்வளவு மன உளைச்சலிலும் தான் வழக்கம்போல் செய்யும் ஒரு காரியத்தை செய்து விட்டு விமானம் ஏறினார்.

    வீடு சேர்ந்த கணவனிடத்தில் இயல்பான உற்சாகம் மிஸ்ஸிங், மாறாக எதையோ பறி கொடுத்தது போல் இருக்கிறாரே என்பதை அறிந்த மனைவி கேள்விகளால் துளைக்க, மனைவியிடம் மெள்ள விஷயத்தை சொல்ல அது இடியாக இறங்கியது அவள் தலையில்.

    கணவனின் தலைக்குள் இருக்கும் சுமையை படுக்கை அறையில் நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள் பெண்கள். அதுவும் ஒரு வருடமாக தனித்திருந்த, பசித்திருந்த அப்துல்லாவின் ஆக்ரோஷம் கலந்த அபரிமிதமான தாம்பத்திய தாகத்தை வருடா வருடம் அந்த ஒரு மாத தேனிலவு வாழ்க்கையின்போது தணித்துக் கொண்டவள்தானே அவள்.

    “இனி தோஹா போக வேண்டாம்; போனால் அவ்வளவுதான், திரும்ப மாட்டீர்கள்; வேலை போனால் போகிறது, மளிகைக் கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம்” என்ற மனைவியின் புலம்பலால் அப்துல்லாவின் மனம் அலைக்கழிந்தது.

    சில நாட்கள் கழித்து, அப்துல்லாவின் கத்தார் மொபைல் ஃபோனிலிருந்து பிஜூவின் குரல் உற்சாக வெள்ளத்தில் ஒலித்தது.

    “சாரே! “டியூட்டி ஃப்ரீ”யில் நீங்கள் வாங்கின லாட்டரி சீட்டிற்கு பத்து லட்சம் ரியால் “ஃபர்ஸ்ட் ப்ரைஸ்” என்றார் பிஜு கும்மாளத்துடன்.

    அப்துல்லாவால் நம்பவே முடியவில்லை.

    “ஒருக்கால் பொய்யோ,” “தன்னை திரும்பவும் கத்தார் கொண்டு வருவதற்கு ஒரு சதியோ” என்று சந்தேகித்த அப்துல்லாவை, தோஹா நண்பர்கள் தொலைப்பேச்சு, “கல்ஃப் டைம்ஸ்” நாளிதழ் செய்தி. ”டியூட்டி ஃப்ரீ அதாரிட்டி”யின் கடிதம், அனைத்தும் பரிசுச் செய்தியை உறுதி செய்தன.

    நாட்கள் பரபரப்புடன் பறந்தன. இந்த இக்கட்டிலிருந்து மீண்டு வரவேண்டும், மீண்டும் கணவர் வீடு திரும்ப வேண்டும் என்று கண் கலங்கிய மனைவியைத் தேற்றிவிட்டு விமானம் ஏறி தோஹா வந்து “டியூட்டி ஃப்ரீ” அலுவலகத்தில் தன் பரிசு சீட்டைக் காண்பித்து அவர்கள் கேட்ட அனைத்து தரவுகளையும் சமர்ப்பித்து பத்து லட்சம் ரியால் பரிசுத் தொகை செக்”கை நடுங்கும் கரங்களில் பெற்றுக் கொண்டார்.

    முதல் வேலையாக ஷேக் ஆபீஸ் சென்று சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொண்டு அவரிடம் “ஷேக்! அல்லாவின் கருணைக்கு அளவில்லை! மீதி இருக்கும் ஏழு லட்சம் ரியால் (ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்) எனக்கு போதும்” என்று சொல்லி மூன்று லட்சம் ரியாலுக்கு ஒரு செக்கை எழுதி அவரிடம் கொடுத்தார்.

    அப்துல்லாவை ஷேக் பாராட்டிவிட்டு “என் பணம் போனது போனதுதான்! அதை அல்லா எனக்கு எப்படியும் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

    அப்துல்லாவை நோக்கி “இது உன் பணம்! உனக்கு அல்லா அளித்தது; பணத்தை இழந்தபோது எந்த அளவிற்கு நரக வேதனை அனுபவித்திருப்பாய் என்பதெல்லாம், இறைவனுக்குத்தான் தெரியும்;” என்று கூறி மூன்று லட்சம் ரியால் செக்கை அப்துல்லாவிடமே திருப்பிக் கொடுத்தார்.

    இப்படிப்பட்ட மனிதரிடம் நாம் வேலை செய்ய எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று எண்ணிய அப்துல்லாவின் “பணியில் தொடர்கிறேன்” என்ற முடிவு அனைவர்க்கும் ஆச்சரியம் அளித்தது.

    நாட்கள் நகர்ந்தன.

    திருட்டு வழக்கில் தீவிரம் காட்டிய போலீஸ் முதற்கண், அனைத்து “மனி எக்ஸ்சேஞ்ச்” எனப்படும் அந்நியச் செலாவணி நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பி கண்காணிக்க ஆணையிட்டனர்.

    ஒருவரின் மொபைல் எண், “பதாக்கா” எண் போன்ற அத்தியாவசிய தரவுகள் சிறு பணப்பரிவர்த்தனைக்கும்கூட அவசியம் என்பதாலும், ஒரு மனிதனின் அனைத்து பணப்பரிவர்த்தனையும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு விட்டதாலும் ஒற்றர்களின் ஒத்துழைப்பாலும் போலீசின் மதிநுட்பத்தாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு பெருமளவு பணம் மீட்கப்பட்டு ஷேக்கிடம் ஒப்படைக்கபட்டது.

    அனைத்தும் முடிந்த பின்னரே செய்தி குற்றவாளிகளின் கண்கள் மறைக்கப்பட்ட படங்களுடன் ஊடகங்களில் வெளியாயின.

    செய்தி அறிந்த அப்துல்லா, “ஷேக்! மிக்க மகிழ்ச்சி; இப்போதுதான் என் இதயபாரம் இறங்கியது; “நான் வேலையை ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

    அதை எதிர்பார்த்த ஷேக் “உனக்கும் வயதாகிறது! இனிமேலாவது வாழ்க்கையை குடும்பத்துடன் அனுபவி” என்று நன்றிப் பெருக்குடன் விடை கொடுத்தார்.

    ஏர்போர்ட்டில் “டியூட்டி ஃப்ரீ”யில் தேவையானதை வாங்கிக்கொண்டு விமானம் ஏறினார்.

    இறுதியாக. ஆனால் இந்த முறை அவர் லாட்டரி டிக்கெட் வாங்கவில்லை.

    Share
  • புரிதல் (சிறுகதை)

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்-613 010.

    சந்திரன் தனது ஆசிரியரின் வீட்டின்முன் சாலையோரத்தில் தனது மிதிவண்டியை நிறுத்தினான்.  நுழைவாயில் கதவின் வழியே எட்டிப்பார்த்தான்.  வீட்டுத் திண்ணையில் முன் அறையைப் பார்த்தபடி தமது வகுப்பு மாணவர்கள் முருகனும், இராமனும் நின்றிருந்தனர்.  சந்திரன் சுற்றுச்சுவர் வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தான்.

    “டேய் முருகா, இராமா ரெண்டுபேரும் ஏன் வெளியயே நிக்கிறீங்க…….. உள்ளே போவோம்”? என்றபடி வீட்டினுள் சந்திரன் நுழைந்தான்.  முன் அறையில் இருந்த மேஜையில் பரிசுப் பொருள்களும், சால்வைகளும் நிறைந்திருந்தன.  ஆசிரியர் பணியாற்றிய பள்ளியின் ஆறாம்வகுப்பு மாணவர்கள் அறையில் நிறைந்திருந்தனர்.  அன்று பணி ஓய்வு பெற்றிருந்த அவர்களின் வகுப்பாசிரியர் புண்ணியகோடி நாற்காலியில் அமர்ந்தபடி மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.  அப்பொழுது உள்ளே நுழைந்த சந்திரன் சுவரில் ஒரு கையை வைத்தபடி நின்றான்.  ஆசிரியர், “சந்திரா விலகி அந்தபக்கமா நில்லுடா     கையைக் கொண்டுபோய் சுவிட்ச் போர்டு மேல வச்சிருக்க…. கரண்ட் புடிச்சுக்கப் போகுது….” என்று அதட்டினார்.  வேகமாகக் கையை எடுத்தபடி சற்று தள்ளி நின்றான்.  ஆசிரியர் சுற்றிலும் பார்த்துவிட்டு, உன் கூட்டாளிங்க எங்க என்றார்.

    சந்திரன் மெதுவாக வாசலைப் பார்த்து,  “உள்ள வரலியா? எல்லோரும் இங்கதான் இருக்கிறோம்” என்றான்.  இராமன் உள்ளே வந்தான்.  அனைவருக்கும் தேநீர் வழங்க தொடங்கினார்  ஆசிரியரின் மனைவி.  அனைவரும் தேநீர் அருந்தி கொண்டிருக்கும்போது சுவர்க்கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது.

    “சார்  மணி ஐந்து ஆகிடிச்சு.. நாங்க கிளம்புறோம்.  உங்க ஓய்வுக்காலம் நல்லா இருக்கனும் சார்..”  என்று சந்திரன் சொன்னதை அனைத்து மாணவர்களும் ஆமோதித்ததோடு, அன்று ஓய்வு பெற்றிருந்த ஆசிரியரோடு பள்ளியில் இருந்து வீடுவரை வந்த மாணவர்கள் வீடுதிரும்பத்தொடங்கினார்கள்.  ஒருமாணவன் மனதுக்குள் இருந்து வந்த பிரிவுத்துன்பத்தில் கண்கலங்கி விம்மத் தொடங்கினான்.  பிற மாணவர்கள் கண்களும் கலங்கின.

    “ஸ்கூலுக்கு எதுத்தாப்புல தான வீடு இருக்கு.  நினைக்கிற போது நீங்க வந்திடலாமே.  நானும் வருவேன், எல்லோரும் நல்லா படிக்கணும்.   நல்லா வரணும்”    என்றார் ஆசிரியர்.  தொடர்ந்து பேசினால் குரல் உடைந்து நா தழுதழுக்கும் போலிருந்தது.  அடக்கியபடி புன்னகையுடன் நின்றார்.

    “வாரோம் சார்” என்றபடி செல்லத்தொடங்கிய மாணவர்களை நோக்கி கைகளை அசைத்து விடைகொடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்.   மாணவர்கள் அனைவரும் சென்றிவிட்டநிலையில் திண்ணையில் தூணில் சாய்ந்து ஒதுங்கி நின்றுகொண்டிருந்த இராமன் கண்ணில் பட்டான்.

    “இராமா என்னடா இங்க நிக்குற….” என்றார் புண்ணியகோடி.

    “இல்ல சார் முருகனும் இங்கதான் நின்னுகிட்டு இருந்தான்.  இப்பதான் போனான்”.

    “அவன் உள்ள வந்தானா …. கண்ணுல படலயே….”

    “இண்ணைக்குக் காலையில முருகன் பாக்கெட்ல இருந்து பான்மசாலா பாக்கெட் விழுந்தத பார்த்திட்டு நீங்க திட்டி தீர்த்ததோட அடிச்சிங்கல சார் … அதுதான் தயங்கி நின்னுட்டான். நீங்க அடிச்சது அவன்மேல உள்ள அக்கறையிலதான்கிறத சொல்லி  அவனைத் தேத்திக்கிட்டு இருந்தேன்.  நீங்க வெளியே வர்த பார்த்ததும் உங்ககிட்ட முகத்தக்காட்டக்கூட தயங்கி ஓடிப்போயிட்டாள்…. இத தெரியப்படுத்ததான் நிக்கிறேன் சார்…” என்றான் இராமன்.

    இதனைக் கேட்டதும் ஆசிரியரின் மனம் வலித்தது.  “எனக்குத் தெரியாதா என்ன…. முருகனுக்கு அந்தப் பழக்கம் கிடையாதுன்னு     ஆனா  அந்த பாக்கெட்ட வெளியில தூய்மைப் பணியாளர்கள் குப்பைப்கு வைத்திருந்த நெருப்புல போட சொல்லியும் போடாம நின்னுகிட்டிருந்தானே  அதாண்டா கோபம்”  என்றார் குற்ற உணர்வோடு.

    “அந்த பாக்கெட்ட அவன் நிக்கர்பாக்கெட்ல பின்பண்ணி விட்டதோட இன்றைக்கு முழுவதும் அப்படியே இருக்கணும்னு சொன்னதுல ரொம்பவே நொந்துட்டான் சார்….”

    “அப்படியே தான் வைத்திருந்தானா”?

    “ஆமா சார்.  இப்பதான் ஓடிப்போகும்போது பின்ன கழட்டிட்டு பாக்கெட்டுக்குள்ள வைத்தான்”.

    “என்னடா சொல்ற….. ”

    “முருகன் ரெம்ப நல்லபையன் சார்.  பத்தாம் வகுப்பு படிக்கிற கோகுல்தான் காலையில் பிரேயர் முடிஞ்சு வரும்போது அவன்கிட்ட இருந்தா மாட்டிகிடுவோம்னு இவன் பாக்கெட்ல போட்டுட்டான்.  பத்தாம் கிளாஸ் டீச்சர் அவங்க பசங்கள செக் பண்றதா சொல்லியிருந்தாகளாம் சார்…. அதனாலதான்…..”

    “இந்த பையன் உண்மைய சொல்லியருக்கலாம்ல…”

    “பயம் சார். கோகுல் அண்ணா சாயங்காலம் கேட்கும் போது கொடுக்கணும்னு மிரட்டிட்டுவேற போனான் சார்….”

    “அட பாவமே….. நாளைக்குக் காலையிலயே முருகன அவன் வீட்ல போயி பார்க்கிறேன்.  அப்பதான் என் மனது ஆறும்.  நீ பத்திரமா போயிட்டு வாடா….” என்று சிரித்தபடி வழியனுப்பினார்.  ஆனால் அவர் மனம் கனத்திருந்தது.  தனது மொத்த பணிக்காலத்தில் எந்த ஒரு மாணவனையும் இப்படி தண்டிக்காதவர், தமது கடைசி பணிநாளில் தவறிழைத்துவிட்டோமே என கண் கலங்கினார்.

    ••••

    மறுநாள் கலையில் மழைபெய்து கொண்டிருந்தது.  மழை நிற்பது போல் தெரியவில்லை. வீட்டுத்திண்ணையில் நின்றபடி எப்பொழுது மாணவன் முருகனைப் பார்க்கலாம் என துடித்துக் கொண்டிருந்த புண்ணியகோடி மனைவியிடம்   “ரெயின் கோட்ட எடுத்திட்டு வா…  பக்கத்து ஊருவர போயிட்டு வந்திடுறேன்”, என்றார்.

    வீட்டினுள் இருந்து வெளியே வந்த அவர்  மனைவி,   “இன்னயில இருந்து ஓய்வா இருப்பீங்கணு பார்த்தா….. மழையில எங்கபோறீங்க….  உங்க மழைக்கால பொக்கிசம் ரெயின் கோட்ட பிடிங்க…” என்றபடி கொடுத்தார்.

    அதனை மாட்டிக்கொண்டு,  “வந்து விசயத்தைச் சொல்கிறேன்…” என்றபடி இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார்.

    ••••

    வீட்டு மாடியில் இருந்து கொட்டிய மழை நீருக்கு அடியில் முருகன் மகிழ்ச்சியாகக் குளித்துக்கொண்டு இருந்தான்.  வாசலில் நின்று மகனைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது தந்தை கதிர்,  “இயற்கை கொடுத்த  ஃபீரீ ஷவர்ல  ஃபிரீயா குளியல்….. செருப்பு இல்ல, துணி இல்ல இயற்கையோட இயற்கையா நீ  ஃபிரீயா ஆட்டம் போடுறத பார்க்கும்போதுதான்  தெரியுது சந்தோசத்திற்கு எதுவுமே தேவையில்லைன்னு…”     என்றார்.

    எந்த கவலையுமின்றி ஆட்டம் போட்டவனுக்குத் தந்தையின் கிண்டல் பேச்சைக் கேட்டதும் வெட்கம் மேலிட்டது.  உதடுகளின் ஓரத்தில்  அரும்பிய சிரிப்பை அடக்க முடியன்றான்.  கன்னத்தில் விழுந்த சிறுகுழி அவனின் வெட்கத்தை வெளிப்படுத்தியது.  உடம்பைக் கூச்சத்தால் குலுக்கிக் கொண்டு   “அப்பா ஒரு ஐஞ்சு நிமிசம்பா”  என்றான்.

    கதிர் மகனின் மகிழிச்சியான முகத்தைப் பார்த்தார். அதை கெடுக்க மனமில்லாமல்  “சரி சரி சீக்கிரமா”? என்றபடி நிமிர்ந்தார்.  வெளியே தெருமுனையில் முருகனின் ஆசிரியர் வண்டியில் வருவதைக் கண்டதும், வாசலில் உட்புறமாக இருந்த குடையினை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்.  மதில்சுவர் தாண்டி தெருவிற்கு வந்தார்.  ஆசிரியரை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

    ஆசிரியர்  புண்ணியகோடி முருகனின் வீட்டருகில் வந்துவிட்டார்.  கதிரைக் கண்டதும் தெருவோரத்தில் வண்டியை வைத்துவிட்டு,   “வணக்கம் சார்”   என்றார்.

    “வணக்கம் சார்    நேற்று பணி ஓய்வு பெற்றுவிட்டதா கேள்விப்பட்டேன்.  ஓய்வுக்காலம் சந்தோசமா அமையட்டும் சார் .  கொட்டுற மழையில இந்த பக்கமா….. ஏதாவது விசயமா சார்”?

    “இல்ல முருகன பார்க்கணும்னுதான் வந்திட்டு இருந்தேன்.   நேற்று என்னோட கடைசி வேலைநாள்ல பார்த்து….. செய்யாத தப்புக்கு முருகனை தண்டிச்சிட்டேன்.  அதான்…”

    வெளியே அப்பா யாருடனோ பேசுவதைக் கேட்டான் முருகன்.  அது புண்ணியகோடி சாருடைய குரல்.  வேகமாக நகர்ந்து சுவர் அருகே வந்தான்.  அப்பாவிடம் ஆசிரியர் பான்மசாலா கதையை விளக்கும் சம்பவம் தொடர்ந்தது.

    “என்னாச்சு சார்… பெரிய அசம்பாவிதம் நடந்தமாதிரி முகத்த வச்சிருக்கீங்க…”

    “நம்ம ஸ்கூல்ல பத்தாம் வகுப்பு படிக்குற ஒருத்தனுக்கு பான்மசாலா பயன்படுத்துற கெட்ட பழக்கம் இருக்கு சார்.  நேற்று கிளாஸ்ல திடீர் செக்கிங் நடக்கபோகுதுனு தெரிந்சதும, தான் மாட்டிக்கிடக்கூடாதுன்னு அவங்கிட்ட இருந்த பான்மசாலா பாக்கெட்ட முருகனோட நிக்கர் பாக்கெட்டுக்குள்ள நைசா சொருகிவெச்சிருக்கான்.  அது தெரியாம முருகன நாலு சாத்து சாத்திட்டேன்…” என்றார் ஆசிரியர் கவலையுடன்.

    கதிர் உண்மையான ஆனந்தத்தோடு, “நிஜமாவா சார். எனக்கு நின்றுபோன இதயத்துடிப்பே வந்தது போலிருக்கு”.

    “என்ன சொல்றீங்க…”

    “நேற்று ஆபீஸ்ல இருந்து லேட்டத்தான் வந்தேன்.  வந்ததும் முருகன பார்க்கலாம்னு போனேன்.  அவன் கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு இருந்தான்.  யூனிஃபாம்  சட்டய கூட கழட்டல.  ஆனா நிக்கர கழற்றி கையில் பிடித்தபடி தூங்கினான்.  ஒழுங்கா படுக்க வைக்கறதுக்காக நிக்கர பிடித்து இழுத்தேன்.  டொப்னு உள்ள இருந்து பான்மசாலா பாக்கெட் விழுந்தது.  எனக்கு என்னென்னமோ தோணுச்சி.  இந்தப்பழக்கம் எப்படி வந்திருக்கும்.  எப்படி திருத்தப்போறோம்னு யோசிச்சி யோசிச்சி இரத்த அழுத்தமே  ஏறிடுச்சி சார்.  அன்பாலதான் திருத்தணும்.  இத பெரிசாக்கிடக்கூடாதுங்குற பயத்துல அவங்க அம்மாகிட்டகூட சொல்லல சார்…. முருகனுக்கும் தெரியாது, இப்பதான் நிம்மதியா இருக்கு சார்.  ரொம்ப நன்றிங்க சார்…”

    மழையின் வேகம் அதிகரித்தது.  முருகனின் அப்பா முகமெல்லாம் புன்னகையோடு ஆசிரியரை உள்ளே அழைத்தார்.

    “வாங்க சார்… வீட்டுக்குள்ள வாங்க … சூடா ஒரு காஃபி சாப்பிடலாம்.  மழை நின்னுதுக்கப்புறம் போய்க்கலாம்”.

    “பரவாயில்ல சார்.  நான் வந்த வேலையைச் சரியா முடிச்சிட்டு கிளம்புறேன்.  முதல்ல உங்க பையன் முருகன பார்க்கணும்”.

    “வாங்க சார்…. கொட்டுற மழையில முருகன் குளிச்சிட்டு இருக்கான்…” இதனைக் கேட்டதும் மீண்டும் முருகன் மாடியில் இருந்து விழும் மழைநீரில் பெரும்வெட்கத்தோடு குளியலைத் தொடர்ந்தான்.

    கதிரும், ஆசிரியரும் பேசிக்கொண்டே வீட்டின் முற்றத்திற்கு வந்தனர்.  முருகன் ஆசிரியரைப் பார்த்ததும் நாணினான்.  அவரிடம்,

    “நீங்க அப்பாகிட்ட பேசுனதைக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன் சார்…. என்னய புரிஞ்சுகிட்டதே போதும்சார்…” என்றபோது ஆசிரியர் புரிந்து கொண்டாரே என்ற நிம்மதியும், நன்றியும், சிறுவனுக்கே உரிய வெட்கமும் ததும்பி வழிந்தன.

    கதிர் முருகனிடம், “இப்பதான் முழுமையா தெரிஞ்சுகிட்டார் சார்…” என்றபடி சிரித்தார்.

    “உங்க அப்பா சொன்னது உன் நல்ல மனச மட்டும் இல்ல…. இந்த மழை குளியல்ல உன்னோட மொத்த லட்சணத்தையும் பார்த்ததுதான்”, என்ற ஆசிரியரின் கேலிப் பேச்சைக் கேட்டதும் அவன் இதழ்களில் அரும்பிய சிறுபிள்ளைத்தமான புன்னகை, சூழலை அழகாக மாற்றியது.

    மேலிருந்து கொட்டும் மழைநீரின் குளிரும், ஆசிரியரின் கேலிப்பேச்சும் சேர்ந்து முருகனுக்கு உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. அவனது சிலிர்ப்பு குளிரால் வந்ததா, தம்மை முழுமையாகத் தெரிந்துகொண்டார்கள் என்ற மகிழ்வால் வந்ததா, அல்லது சட்டென ஏற்பட்ட வெட்கத்தால் வந்ததா என சொல்லமுடியாதபடி குறுநகையோடு நின்றான் முருகன்.

    Share
  • கூடா நட்பு (பள்ளி நாடகம்)

     

    காட்சி அறிமுகம்

    அனைவருக்கும் வணக்கம்.

    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்.

    என்பது கூடா நட்பு அதிகாரத்தின் 824வது குறட்பா.

    இதன் பொருள், முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

    ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். நண்பர்களுடன் பேசும்போது நம்முடைய மனம் நேர்மறை சிந்தனைகளில் அல்லாமல் எதிர்மறை சிந்தனைகளில் வளர்கிறதெனில் அந்த நட்பு தவறானது என்பதைக் கண்டு கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் தான் முடியும் .

    “உன் நண்பனைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன்”, என்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யக் கூடாது. அதன் வலி தாங்கமுடியாதது என்பதையும் உணரச் செய்யும் காட்சிகளைத்தான் காண இருக்கிறோம். வாருங்கள் நிகழ்ச்சிக்குள் போகலாமா…

    காட்சி – 1  பள்ளி வகுப்பறை

    ஆசிரியர் : வணக்கம் குழந்தைகளே! ஒரு நல்ல செய்தி. இந்த ஆண்டும் வழக்கம்போல் ஆண்டு விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கப் போகின்றன. கண்மணி, தமிழ்ச்செல்வி தவிர வேறு யாரெல்லாம் பெயர் கொடுக்கப் போகிறீர்கள்?

    மாணவர்கள் ஒன்றாக டீச்சர் ஏன் அவர்களைத் தவிர என்கிறீர்கள்? என்ற கூச்சல்.

    ஆசிரியர்: ஆமாம் அவர்கள் எப்போதும் கலந்து கொள்பவர்கள்தானே. அதான் நானே அவர்களுடைய பெயர்களை எழுதிக்கொண்டேன்..

    ஓ …..

    ஆசிரியர்: சரி, விரைவில் மற்றவர்களும் பெயர்களைக் கொடுங்கள். இப்போது பாடத்திற்குச் செல்லலாம்.

     

    காட்சி – 2

    கண்மணி : “தமிழ், எப்படியும் இந்த முறையும் நீதான் சுழற்கோப்பையை தக்க வைத்துக்கொள்ளப் போகிறாய். அப்படித்தானே?”

    தமிழ்ச்செல்வி : அதெல்லாம் இல்லைப்பா. எனக்குப் போட்டியாத்தான் எப்பவும் நீ இருக்கிறாயே? அப்புறம் எப்படி ?

    (தமிழ்ச்செல்வி அந்த இடத்தை விட்டு அகன்றாள்)

    மணிமொழி : “ஏய் கண்மணி எப்படியும் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல நீதான் வெற்றி பெறப் போகிறாய்”

    கண்மணி : “அதெல்லாம் இல்லப்பா விளையாட்டுப் போட்டி என்று வந்தால் தமிழ்ச்செல்வியை யாரும் முந்திச் செல்ல முடியாது”

    மணிமொழி : “அப்படியெல்லாம் இல்லைப்பா. நீதான் இந்த முறை கோப்பையை வாங்கப் போகிறாய் என்று நான் பந்தயம் கட்டியுள்ளேன்”

    மற்ற 3 மணவிகள் : ஆமாம் .. ஆமாம். மணிமொழி சொல்வது சரிதான். நீதான் இந்த முறை கோப்பையை வெல்லப் போகிறாய்.

    “கண்மணி இந்தப் போட்டியில் கட்டாயம் முதல் பரிசு உனக்குத்தான். அதற்கு நாங்கள் பொறுப்பு. நீ மட்டும் நாங்கள் சொன்னபடி கேட்டால் போதும். சுழற்கோப்பை இந்த முறை உனக்குத்தான்”

    கண்மணிக்கு மெல்ல சபலம் தட்ட ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பிக்கிறாள். “எப்படியும் சுழற்கோப்பையை அடைந்தே தீரவேண்டும்” என்று தனக்குத்தானே சபதம் மேற்கொள்கிறாள்.

    (புதிய நண்பர்களின் பேச்சை முழுமையாக நம்ப ஆரம்பித்தாள் கண்மணி. கண்மணியிடம் ஒரு பெரிய திட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். எப்படியாவது இருவரையும் தோற்கச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டிருந்தனர்).

    “கண்மணி ஓட்டப் பந்தயத்தில் நீ வெற்றி பெற வேண்டுமானால் நாங்கள் சொல்வதுபோல் நீ செய்ய வேண்டும்”

    கண்மணி : “என்ன அது..  இதனால் வேறு பிரச்சனைகள் வராது அல்லவா?”

    தோழிகள் : “அதெல்லாம் ஒன்றும் வராது. எப்படியும் நீங்கள் இருவரும்தான் முன்னிலையில் ஓடி வந்து கொண்டிருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் நாங்கள் சைகை காட்டுவோம். அப்போது மெதுவாக ஒரு கல்லை வழியில் உருட்டி விடுவோம். நீ அந்த நேரம் பார்த்து தமிழ்ச்செல்வியின் காலை இடறச் செய்துவிட்டால் போதும். அவள் கீழே விழுந்து விடுவாள். நீ முன்னால் ஓடிச் சென்று பரிசை தட்டிச் செல்லலாம்” .

    கண்மணி : (மனதிற்குள்)  மனசு என்னமோ உறுத்திக் கொண்டே இருக்கிறதே. இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அன்புத் தோழி தமிழ்ச்செல்வியை இக்கட்டில் மாட்டி விட்டுவிடுவோமா? சே..சே.. அப்படியெல்லாம் ஆகாது. பார்த்துக்கலாம் …

     

    காட்சி – 3

    அன்று போட்டி நாள். எப்போதும் உற்சாகமாகக் கிளம்பும் கண்மணி அன்று ஒரு பதட்டத்திலேயே கிளம்பிக் கொண்டிருந்தாள். இதை கவனித்த அவளுடைய அம்மா,

    அம்மா :  “கண்மணி இன்று ஏன் இப்படி உற்சாகமே இல்லாமல் இருக்கிறாய். இத்தனை முறை காரணம் கேட்டும் சொல்லவும் மறுக்கிறாய். இந்த மனநிலையில் போனால் எப்படி போட்டியில் வெற்றி கிடைக்கும். ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்”.

    கண்மணி : “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா”

    அம்மா மனதிற்குள் .. : ஏதோ பிரச்சனை இருக்கிறது. என்னமோ அசம்பாவிதம் நடக்கப் போவதாகத் தோன்றுகிறதே. பேசாமல் போட்டி நடக்கும் மைதானத்திற்கு போய்விடலாம்”.

    போட்டி ஆரம்பித்தது. மூன்றாவது விசிலும் ஊதப்பட்டது. எல்லோரும் பந்தயத்திற்கு தயாராகி விட்டனர். கண்மணியின் மனதில் மட்டும் ஒரு சலனம். தேவையற்ற இந்த மனக்குழப்பம் அவளுடைய வெற்றிப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாகவும் நின்றது.

    சில மாணவிகள் வந்து கண்மணியிடம் இரகசியம் பேசிச் செல்கிறார்கள்.

    அம்மா மனதிற்குள் : “போட்டி நடக்கும்போது அந்தப் பிள்ளைகள் ஏதோ செய்யப் போகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும்”.

     

    குறிப்பிட்ட அந்த இடம் வந்தவுடன் கண்மணியின் அம்மா கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மணிமொழி குழுவினர் மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். கண்மணியும் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவளையறியாமல் கால்கள் அச்சத்தில் பின்னிக் கொண்டன. வேகம் குறைய ஆரம்பித்தது. கீழே விழப் போனவளை ஒரு நொடியில் அணைத்து காப்பாற்றி விட்டு முன்னேறிச் சென்ற தமிழ்ச் செல்வியைப் பார்த்து கூனிக்குருகி நின்றாள்.

    “தமிழ்ச்செல்வி முதல் இடத்தைப் பிடித்து விட்டாள்” என்ற அறிவிப்பு வருகிறது.

    கண்மணிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

    கண்மணி மனதிற்குள் : நல்ல வேளை. கூடா நட்பினால் நல்ல தோழியை இழக்க நேர்ந்த விபத்திலிருந்து தப்பி விட்டோம்”

    அம்மாவும் அதைப் புரிந்து கொண்டு அவள் முதுகில் அன்பாக தட்டிக் கொடுத்தார்.

    இறுதிக் காட்சி

    “நண்பர்களே, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து கொண்ட கண்மணி அதைத் தன் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டாள். நமக்கும் இது ஒரு பாடம்தானே?

    நன்றி, வணக்கம்.”

     

     

    Share
  • ஞானிகளின் பரிசு (மொழிபெயர்ப்பு  சிறுகதை)

    ஞானிகளின் பரிசு (மொழிபெயர்ப்பு சிறுகதை)

    மொழிபெயர்ப்பாளர்: முனைவர் ப. செல்வி,
    இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத்தலைவர்,
    ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர்  கலை அறிவியல் கல்லூரி,
    கோவை – 641044

    O. Henry எழுதிய “The Gift of the Magi”.

    Henry (1862–1910) என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர். இவரின் இயற்பெயர் William Sydney Porter (வில்லியம் சிட்னி போர்டர்) ஆகும்.


    ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு சென்ட்கள்.

    அவ்வளவுதான் இருந்தது. இறைச்சி மற்றும் பிற உணவுப் பொருட்களை வாங்கும்போதெல்லாம், ஒவ்வொரு சென்ட்டாக அவள் கவனமாகச் சேமித்து வைத்திருந்த தொகை அது. டெல்லா அதை மூன்று முறை எண்ணிப் பார்த்தாள். ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு சென்ட்கள். அடுத்த நாள் கிறிஸ்துமஸ்.

    படுக்கையில் விழுந்து அழுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே டெல்லா அதைச் செய்தாள்.

    வீட்டுத் தலைவி மெல்ல அமைதியாகும் வேளையில், நாம் அந்த வீட்டைப் பார்க்கலாம். வாரத்திற்கு 8 டாலர் வாடகையில் அமைந்திருந்த அந்த அறைகள் அவை. அதைப் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.

    கீழே இருந்த ஹாலில், ஒரு கடிதத்தைக் கூட உள்ளே வைக்க முடியாத அளவுக்குச் சிறிய ஒரு தபால் பெட்டி இருந்தது. அங்கே ஒரு மின்சார மணி இருந்தது, ஆனால் அதிலிருந்து சத்தம் வரவில்லை. மேலும் கதவின் அருகே ஒரு பெயர் பலகை இருந்தது: “திரு. ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங்.”

    அந்தப் பெயர் அங்கே வைக்கப்பட்டபோது, ​​திரு. ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் வாரத்திற்கு 30 டாலர் சம்பாதித்துக் கொண்டிருந்தார். இப்போது, ​​வாரத்திற்கு 20 டாலர் மட்டுமே சம்பாதிக்கும் நிலையில், அந்தப் பெயர் மிகவும் நீளமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தோன்றியது. ஒருவேளை அது “திரு. ஜேம்ஸ் டி. யங்” என்று இருந்திருக்கலாம். ஆனால் திரு. ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் அந்த அறைக்குள் நுழையும்போது, ​​அவரது பெயர் மிகவும் சுருங்கிவிடுவது வழக்கம். திருமதி ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் அவரை அன்புடன் அணைத்துக்கொண்டு “ஜிம்” என்று அழைப்பார். அவரை நீங்கள் ஏற்கனவே சந்தித்திருக்கிறீர்கள். அவள்தான் டெல்லா.

    டெல்லா தன் அழுகையை நிறுத்தி, முகத்தில் இருந்த கண்ணீர் தடங்களைச் சுத்தம் செய்துகொண்டாள். அவள் ஜன்னல் அருகே நின்று, எந்த ஆர்வமும் இல்லாமல் வெளியே பார்த்தாள். நாளை கிறிஸ்துமஸ் தினம்; ஜிம்முக்கு ஒரு பரிசு வாங்க அவளிடம் இருந்தது வெறும் 1.87 டாலர் மட்டுமே. பல மாதங்களாகத் தன்னால் முடிந்தவரை பணத்தைச் சேமித்து வைத்திருந்தாள், ஆனால் இறுதியில் கிடைத்த தொகை இதுதான். வாரத்திற்கு இருபது டாலர் என்பது பெரிய தொகை அல்ல. எல்லாவற்றிற்கும் அவள் எதிர்பார்த்ததை விட அதிக செலவானது. எப்போதும் அப்படித்தான் நடக்கும்.

    ஜிம்முக்கு ஒரு பரிசு வாங்க வெறும் 1.87 டாலர் மட்டுமே. அவளுடைய ஜிம். அவனுக்காக ஒரு நல்ல பரிசைத் திட்டமிடுவதில் அவள் பல மகிழ்ச்சியான நேரங்களைச் செலவிட்டிருந்தாள். அவனுக்குப் பொருத்தமான, அவனுக்குச் சொந்தமாவதற்குத் தகுதியான ஒரு சிறப்பான பரிசு அதுவாக இருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்.

    அறையின் ஜன்னல்களுக்கு இடையே ஒரு கண்ணாடி இருந்தது. 8 டாலர் வாடகை கொண்ட அறைகளில் காணப்படும் கண்ணாடியை நீங்கள் ஒருவேளை பார்த்திருக்கலாம். அது மிகவும் குறுகலாக இருக்கும்; ஒரு நபர் தன்னைத்தானே ஒரு நேரத்தில் சிறிதளவே அதில் பார்க்க முடியும். இருப்பினும், ஒருவர் மிகவும் மெலிந்த உடலமைப்பைக் கொண்டிருந்து, மிக வேகமாக நகர்ந்தால், தன்னை முழுமையாகப் பார்த்துக்கொள்ள முடியும். மிகவும் மெலிந்த உடலமைப்பைக் கொண்ட டெல்லா, இந்தக் கலையில் கைதேர்ந்தவளாக இருந்தாள்.

    திடீரென்று அவள் ஜன்னலிலிருந்து திரும்பி அந்தக் கண்ணாடிக்கு முன் நின்றாள். அவளது கண்கள் பிரகாசமாக மின்னின, ஆனால் முகம் வெளிறிப்போயிருந்தது. அவள் விரைவாகத் தன் தலைமுடியை அவிழ்த்து, அதன் முழு நீளத்திற்கும் கீழே விழவிட்டாள்.

    ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான இரண்டு விஷயங்களை நினைத்து மிகவும் பெருமைப்பட்டனர். ஒன்று ஜிம்மிடம் இருந்த தங்கக் கடிகாரம். அது ஒரு காலத்தில் அவனது தந்தைக்குச் சொந்தமானது; அதற்கு முன்பு அவனது தாத்தாவுக்குச் சொந்தமானது. மற்றொன்று டெல்லாவின் தலைமுடி.

    அவர்களுக்கு அருகிலுள்ள அறைகளில் ஒரு ராணி வசித்திருந்தால், அந்த ராணி பார்க்கும் வகையிலேயே டெல்லா தன் தலைமுடியைக் கழுவி உலர்த்தியிருப்பாள். எந்தவொரு ராணியின் நகைகள் மற்றும் பரிசுகளை விடவும் தன் தலைமுடி மிகவும் அழகானது என்று டெல்லாவுக்குத் தெரியும்.

    அதே வீட்டில் ஒரு ராஜா வசித்திருந்தால், அவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் சரி, அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் ஜிம் தன் கடிகாரத்தைப் பார்த்திருப்பான். எந்தவொரு ராஜாவிடமும்

    அவ்வளவு மதிப்புமிக்க ஒரு பொருள் இல்லை என்பது ஜிம்முக்குத் தெரியும்.

    இப்போது டெல்லாவின் அழகான தலைமுடி, பழுப்பு நிற நீர்வீழ்ச்சியைப் போல மின்னிக்கொண்டு அவளைச் சுற்றி விழுந்து கிடந்தது. அது அவளது முழங்காலுக்குக் கீழே வரை நீண்டிருந்தது. அது அவளுக்கு ஒரு ஆடையைப் போலவே அமைந்திருந்தது.

    பிறகு அவள் பதற்றத்துடனும் வேகத்துடனும் அதை மீண்டும் தன் தலையில் சுருட்டி வைத்துக்கொண்டாள். ஒரு கட்டத்தில் அவள் சிறிது நேரம் அப்படியே நின்றாள்; அப்போது ஒன்று அல்லது இரண்டு கண்ணீர்த்துளிகள் அவள் முகத்தில் வழிந்தோடின.

    அவள் தன் பழைய பழுப்பு நிற கோட் மற்றும் தொப்பியை அணிந்துகொண்டாள். கண்களில் பிரகாசமான ஒளியுடன், அவள் விரைவாக வெளியேறி தெருவுக்குச் சென்றாள்.

    அவள் நின்ற இடத்தில் இருந்த பலகையில், “திருமதி சோஃப்ரோனி. அனைத்து வகையான தலைமுடி சார்ந்த பொருட்களும் கிடைக்கும்” என்று எழுதப்பட்டிருந்தது.

    டெல்லா இரண்டாவது மாடிக்கு ஓடினாள், மூச்சிரைக்க அங்கேயே நின்றாள். பருமனான உடலமைப்பும், மிக வெளுத்த நிறமும், உணர்ச்சியற்ற பார்வையும் கொண்ட திருமதி சோஃப்ரோனி அவளைப் பார்த்தார்.

    “என் தலைமுடியை நீங்கள் வாங்குவீர்களா?” என்று டெல்லா கேட்டாள்.

    “நான் தலைமுடியை வாங்குவேன்,” என்று திருமதி சோஃப்ரோனி கூறினார். “உன் தொப்பியைக் கழற்று, நான் அதைப் பார்க்கிறேன்.” பழுப்பு நிறக் கூந்தல் அருவியெனக் கீழே சரிந்து விழுந்தது.

    “இருபது டாலர்கள்,” என்று கூறியவாறே, திருமதி சோஃப்ரோனி அந்தக் கூந்தலின் எடையை அறிய அதைத் தூக்கிப் பார்த்தார்.

    “அதை எனக்கு உடனே கொடுத்துவிடுங்கள்,” என்று டெல்லா கூறினாள்.

    அடுத்த இரண்டு மணி நேரங்கள் மிக வேகமாக ஓடின. ஜிம்முக்கான ஒரு பரிசைத் தேடி அவள் ஒரு கடையிலிருந்து மற்றொரு கடைக்குச் சென்றுகொண்டிருந்தாள்.

    இறுதியில் அவள் அதைக் கண்டுபிடித்தாள். அது ஜிம்முக்காகவே பிரத்யேகமாகச் செய்யப்பட்டது போல இருந்தது. நகரத்திலுள்ள எல்லா கடைகளையும் அவள் தேடிப் பார்த்திருந்தாள்; ஆனால், அது போன்ற வேறொன்றும் எந்தக் கடையிலும் இல்லை.

    அது மிகவும் எளிமையான வடிவமைப்பைக் கொண்ட ஒரு தங்கக் கடிகாரச் சங்கிலி. அதன் மதிப்பு, அது செய்யப்பட்டிருந்த உயர்தரமான மற்றும் தூய உலோகத்தில்தான் இருந்தது. அது மிகவும் எளிமையாகவும் ஆடம்பரமின்றியும் இருந்ததாலேயே, அது மிகுந்த மதிப்புமிக்கது என்பதை உணர முடிந்தது. சிறந்த பொருட்கள் அனைத்தும் அப்படித்தான் இருக்கும்.

    அது ‘அந்தக் கடிகாரத்திற்கு’ மிகவும் பொருத்தமானதாக இருந்தது.

    அதைப் பார்த்தவுடனேயே, அது ஜிம்முக்குத்தான் சொந்தமாக இருக்க வேண்டும் என்று அவள் உணர்ந்தாள். அது அவனது இயல்புக்கு ஏற்றதாக இருந்தது. அமைதி மற்றும் மதிப்பு — ஜிம் மற்றும் அந்தச் சங்கிலி ஆகிய இரண்டிலுமே அமைதியும் மதிப்பும் ஒருங்கே இருந்தன. அதற்காக அவள் இருபத்தியொரு டாலர்களைச் செலுத்தினாள். பின்னர், அந்தச் சங்கிலியையும் மீதமிருந்த எண்பத்தேழு சென்ட்டுகளையும் எடுத்துக்கொண்டு அவள் அவசரமாக வீடு திரும்பினாள்.

    கடிகாரத்தில் அந்தச் சங்கிலி இருந்ததால், ஜிம் தான் எங்கு இருந்தாலும் நேரத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. அந்தக் கடிகாரம் மிகச் சிறந்ததாக இருந்தபோதிலும், அதற்கு இதுவரை ஒரு நல்ல சங்கிலி அமைந்திருக்கவில்லை. யாரும் பார்க்காத நேரத்தில்தான் அவர் அதை வெளியே எடுத்துப் பார்ப்பார்.

    டெல்லா வீட்டிற்கு வந்ததும், அவளது மனம் சற்று அமைதியடைந்தது. அவள் நிதானமாகச் சிந்திக்கத் தொடங்கினாள். தான் செய்த காரியத்தின் சோகமான அடையாளங்களை மறைக்க முயன்றாள். அன்பும் தாராள மனதுடன் கூடிய கொடையும் இணையும்போது, ​​அவை ஆழமான அடையாளங்களை விட்டுச் செல்கின்றன. அந்த அடையாளங்களை மறைப்பது எளிதல்ல, அன்பான நண்பர்களே—ஒருபோதும் எளிதல்ல.

    நாற்பது நிமிடங்களுக்குள் அவளது தலைமுடி ஓரளவு நன்றாகத் தெரிந்தது. குட்டையான முடியுடன், அவள் பார்ப்பதற்கு ஒரு பள்ளிச் சிறுவனைப் போல அழகாக இருந்தாள். அவள் நீண்ட நேரம் கண்ணாடியின் முன் நின்றாள்.

    “ஜிம் என்னைக் கொன்றுவிடாவிட்டால்,” என்று அவள் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள், “அவன் என்னைத் திரும்பப் பார்க்கும்போது, ​​பணத்திற்காகப் பாடி ஆடும் ஒரு பெண்ணைப் போல நான் இருப்பதாகச் சொல்வான். ஆனால் நான் என்ன செய்ய முடியும்—ஓ! ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு சென்ட் பணத்தை வைத்துக்கொண்டு நான் என்னதான் செய்ய முடியும்?”

    ஏழு மணிக்கு, ஜிம்முக்கான இரவு உணவு தயாராக இருந்தது.

    ஜிம் ஒருபோதும் தாமதமாக வந்ததில்லை. டெல்லா கடிகாரச் சங்கிலியைத் தன் கையில் பிடித்துக்கொண்டு, அவர் வழக்கமாக நுழையும் கதவுக்கு அருகில் அமர்ந்திருந்தாள். அப்போது ஹாலில் அவரது காலடிச் சத்தம் கேட்டது; ஒரு கணம் அவளது முகத்தில் இருந்த நிறம் மாறியது. அன்றாடச் சாதாரண விஷயங்களுக்காக அவள் அடிக்கடி மெதுவாகச் சிறிய பிரார்த்தனைகளைச் செய்வதுண்டு. இப்போது அவள் இப்படி வேண்டினாள்: “கடவுளே, நான் இன்னும் அழகாக இருக்கிறேன் என்று அவர் நினைக்கும்படி செய்.”

    கதவு திறந்தது, ஜிம் உள்ளே நுழைந்தார். அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டார், முகத்தில் புன்னகை இல்லை. பாவம், அவருக்கு வயது இருபத்திரண்டுதான்—அதற்குள்ளேயே ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு! அவருக்கு ஒரு புதிய கோட் தேவைப்பட்டது; குளிரில் நடுங்கும் கைகளை மறைக்க அவரிடம் எதுவும் இல்லை.

    ஜிம் கதவுக்குள்ளேயே நின்றார். ஒரு பறவைக்கு அருகில் இருக்கும் வேட்டை நாயைப் போல அவர் அமைதியாக இருந்தார். அவரது கண்கள் டெல்லாவை விசித்திரமாகப் பார்த்தன; அவற்றில் அவளால் புரிந்துகொள்ள முடியாத ஒரு பாவனை இருந்தது. அது அவளுக்குள் பயத்தை ஏற்படுத்தியது. அது கோபமோ, ஆச்சரியமோ அல்லது அவள் எதிர்பார்த்த வேறெதுவோ அல்ல. அவர் வெறுமனே அந்த விசித்திரமான பாவனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    டெல்லா அவரை நோக்கிச் சென்றாள். “ஜிம், அன்பே,” என்று அவள் கூவினாள், “என்னை அப்படிப் பார்க்காதே. நான் என் தலைமுடியை வெட்டி விற்றுவிட்டேன். உனக்கு ஒரு பரிசு கொடுக்காமல் என்னால் கிறிஸ்துமஸைக் கழிக்க முடியவில்லை. என் தலைமுடி மீண்டும் வளர்ந்துவிடும். அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டாய் அல்லவா? என் தலைமுடி மிக வேகமாக வளரும். இது கிறிஸ்துமஸ் காலம், ஜிம். நாம் மகிழ்ச்சியாக இருப்போம். உனக்காக நான் எவ்வளவு அருமையான—எவ்வளவு அழகான பரிசை வாங்கியிருக்கிறேன் என்று உனக்குத் தெரியாது.”

    “நீ உன் தலைமுடியை வெட்டிவிட்டாயா?” என்று ஜிம் மெதுவாகக் கேட்டான். என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள அவன் சிரமப்படுவது போல் தோன்றியது; அவனுக்கு அது முழுமையாகப் புரியவில்லை என்றே தோன்றியது.

    “வெட்டி விற்றுவிட்டேன்,” என்று டெல்லா கூறினாள். “இப்போது நான் உனக்குப் பிடிக்கவில்லையா? நான் அதே டெல்லாதான், ஜிம். தலைமுடி இல்லாவிட்டாலும் நான் அதே ஆள்தான்.”

    ஜிம் அறையைச் சுற்றிப் பார்த்தான்.

    “உன் தலைமுடி போய்விட்டது என்கிறாயா?” என்று அவன் கேட்டான்.

    “நீ அதைத் தேட வேண்டியதில்லை,” என்று டெல்லா சொன்னாள். “அது விற்கப்பட்டுவிட்டது என்று சொல்கிறேன்—விற்கப்பட்டுப் போய்விட்டது. இது கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு, அன்பே. என்னிடம் அன்பாக இரு, ஏனென்றால் உனக்காகத்தான் நான் அதை விற்றேன். என் தலையில் உள்ள முடிகளை ஒருவேளை எண்ணிவிடலாம்,” என்று அவள் சொன்னாள், “ஆனால் உன் மீதான என் அன்பை யாராலும் ஒருபோதும் எண்ணிவிட முடியாது. நாம் இரவு உணவு சாப்பிடலாமா, ஜிம்?”

    ஜிம் தன் கைகளால் டெல்லாவை அணைத்துக்கொண்டான். பத்து வினாடிகளுக்கு நாம் வேறு பக்கம் பார்ப்போம். வாரத்திற்கு எட்டு டாலர்களா அல்லது வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர்களா—அவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? யாராவது உங்களுக்குப் பதில் சொல்லலாம், ஆனால் அது தவறாகத்தான் இருக்கும். ‘மகி’ (Magi) எனப்படும் ஞானிகள் மதிப்புமிக்க பரிசுகளைக் கொண்டு வந்தார்கள், ஆனால் அந்தப் பரிசுகளுக்குள் இது இருக்கவில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது விரைவில் விளங்கும்.

    தன் கோட் உள்ளிருந்து, காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு பொருளை ஜிம் எடுத்தான். அதை அவன் மேஜையின் மீது போட்டான்.

    “நான் சொல்வதை நீ புரிந்துகொள்ள வேண்டும், டெல்ல்,” என்று அவன் சொன்னான். “தலைமுடி வெட்டுவது போன்ற எந்த விஷயமும் உன் மீதான என் அன்பைக் குறைத்துவிடாது. ஆனால் அதை நீ திறந்து பார்த்தால், நான் உள்ளே வந்தபோது என்ன உணர்ந்தேன் என்பது உனக்குத் தெரியும்.”

    வெள்ளையான விரல்கள் காகிதத்தை அகற்றின. பிறகு ஒரு மகிழ்ச்சிக் கூச்சல்; அதைத் தொடர்ந்து கண்ணீர்.

    ஏனென்றால் அங்கே அந்தச் சீப்புகள் இருந்தன—டெல்லா ஒரு கடையின் ஜன்னலில் பார்த்து நீண்ட நாட்களாக விரும்பிய சீப்புகள் அவை. அழகான சீப்புகள், ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டவை, அவளுடைய அழகான தலைமுடிக்கு மிகவும் பொருத்தமானவை. அவற்றை வாங்குவதற்குத் தன்னிடம் போதிய பணம் இல்லை என்பது அவளுக்குத் தெரியும். அவற்றைச் சொந்தமாக்கிக்கொள்ளும் எந்த நம்பிக்கையும் இல்லாமல்தான் அவள் அவற்றைப் பார்த்திருந்தாள். ஆனால் இப்போது அவை அவளுடையவை; ஆனால் அவளுடைய கூந்தலோ போய்விட்டது.

    இருப்பினும், அவள் அவற்றை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்; இறுதியில் நிமிர்ந்து பார்த்து, “ஜிம், என் முடி மிக வேகமாக வளருமே!” என்று கூறினாள்.

    பிறகு அவள் உற்சாகத்தில் துள்ளி எழுந்து, “ஓ, ஓ!” என்று கூவினாள்.

    ஜிம் இன்னும் அவளுடைய அந்த அழகான பரிசைப் பார்க்கவில்லை. அவள் அதைத் தன் திறந்த உள்ளங்கையில் வைத்து அவனிடம் நீட்டினாள். அவளுடைய அன்பும் பாசமும் கலந்த மனதின் ஒளியைப் போலவே, அந்தத் தங்கமும் மென்மையாக ஜொலிப்பது போல் தோன்றியது.

    “இது மிகச் சரியாக இல்லையா, ஜிம்? இதைத் தேடி நான் நகரம் முழுவதும் அலைந்தேன். இனி நீ ஒரு நாளைக்கு நூறு முறையாவது உன் கடிகாரத்தைப் பார்க்க வேண்டியிருக்கும். உன் கடிகாரத்தை என்னிடம் கொடு; அவை இரண்டும் ஒன்றாக எப்படி இருக்கின்றன என்று நான் பார்க்க வேண்டும்.”

    ஜிம் அமர்ந்து புன்னகைத்தான்.

    “டெல்லா,” என்று அவன் சொன்னான், “நமது கிறிஸ்துமஸ் பரிசுகளை இப்போதைக்கு எடுத்து வைத்துவிடுவோம்; சிறிது காலம் அப்படியே இருக்கட்டும். இப்போது பயன்படுத்துவதற்கு அவை மிகவும் அருமையானவை. அந்தச் சீப்புகளை வாங்குவதற்கான பணத்தைப் பெற நான் என் கடிகாரத்தை விற்றுவிட்டேன். இப்போது நாம் இரவு உணவைச் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன்.”

    ‘மேகி’ (Magi) என்பவர்கள், உங்களுக்குத் தெரிந்தபடி, ஞானிகள்—மிகவும் சிறந்த ஞானிகள்—அவர்கள் பிறந்த குழந்தையான கிறிஸ்துவுக்குப் பரிசுகளைக் கொண்டு வந்தவர்கள். கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கிய முதல் நபர்கள் அவர்களே. ஞானிகளாக இருந்ததால், அவர்கள் வழங்கிய பரிசுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி ஞானம் நிறைந்தவையாகவே இருந்தன. ஆனால் இங்கே நான் உங்களுக்கு ஞானம் இல்லாத இருவரின் கதையைச் சொல்லியிருக்கிறேன். ஒருவருக்கொருவர் பரிசுகளை வாங்குவதற்காக, அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான மிக மதிப்புமிக்க பொருளை விற்றுவிட்டனர். ஆனால் இன்றைய காலத்து ஞானிகளுக்கு நான் ஒரு கடைசி வார்த்தையைச் சொல்ல விரும்புகிறேன்: பரிசுகளை வழங்குபவர்கள் அனைவரிலும், இவர்களே மிகவும் ஞானம் மிக்கவர்கள். பரிசுகளை வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் அனைவரிலும்…

    Share
  • காதலிக்க நேரமுண்டு – 2

    காதலிக்க நேரமுண்டு – 2

    செ. கோட்டாளம்

    ஒவ்வோராண்டும் நாங்களும் எங்கள் சித்திமக்களும் மாமாமார்மக்களும் யாராவது ஒருவரின் வீட்டில் ஒன்றாகச்சேர்ந்து கும்மாளமிட்டு கோடையை உல்லாசமாக கழிப்பது வழக்கம். இந்த ஆண்டு என் இளைய மாமாவின் வீட்டுக்கு செல்லும் முறையானது. ஆனால் என் தங்கை இனி போகவேண்டாம் என்று அம்மா தடுத்துவிட்டார். எனவே நான் மட்டும் கிளம்பி மாமாவீட்டுக்கு சென்றேன். நான் வண்டியிலிருந்து இறங்கியதும் வாசலில் கோலமிட்டுக்கொண்டிருந்த என் மாமன்மகள் என்னை வரவேற்றாள். முகநிறைந்த மகிழ்ச்சியுடனும் வாய்நிறைந்த புன்னகையுடனும் ‘வாருங்கள், அத்தான்’ என்று அவள் சொன்னது என்னையும் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

    அவளிடம் ஏதோ ஒரு மாற்றம் இருந்ததாக உணர்ந்தேன். அவளை சில ஆண்டுகளாக நான் பார்த்ததில்லை என்பது அப்போதே என் நினைவுக்கு வந்தது. சென்ற ஆண்டு என் சித்திவீட்டுக்கு எல்லாரும் வந்திருந்தபோது அவள் வரவில்லை. ஓ, என் தங்கையை இப்போது அம்மா தடுத்துவிட்டதுபோல் என் அத்தையும் இவளை போகவேண்டாம் என்று சொல்லியிருப்பார்.

    உள்ளே ஓடிச்சென்று தன் அம்மாவிடம் நான் வந்திருப்பதை சொன்னாள். அவள் துள்ளிக்குதித்து ஓடிய விதம் என்னை என்னவோ செய்தது. அதன்பிறகே எனக்கு உறைத்தது. அவள் தாவணி போட்டிருந்தாள். அதுவரை பாவாடைச்சட்டையில் சிறுமியாகவே பார்த்த நான் அப்போதே அவளை ஒரு இளம்பெண்ணாக கண்டேன். அவள் ஓடியபோது தாவணியின் முந்தானை காற்றில் படபடத்த விதமே என்னை அவ்வாறு அலைக்கழித்தது. அந்தக்கணத்திலே நான் முந்தானைதாசனாகிவிட்டதை அப்போது உணரவில்லை.

    எல்லாரும் வந்துவிட்டபின்னும் எனக்கு மாமன்மகளுடன் பேசுவதும் அவளுடன் விளையாடுவதுமே அதிக ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் அளித்ததை உணர்ந்தேன். அவளுக்கு பலவிதங்களில் வேடிக்கைகாட்டி சிரிக்கவைத்தேன். அவளும் என்னுருகில் இருப்பதை விரும்பியதாக தோன்றியது. தனிமையில் அவளுடன் பேச வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கினேன். அவள் உடலழகை தொலைவிலிருந்து பார்த்து மகிழ்ந்தேன். அருகிலிருக்கும்போது தொட்டுப்பேச முயன்றேன். ஆனால் நான் அவளுடன் நெருக்கமானபோதெல்லாம் அத்தை ஏதாவது சாக்கை வைத்து அவளை அழைத்து ஏதாவது வேலைகொடுத்துவிடுவது வழக்கமானது. முறைப்பெண்ணையும் முறைப்பையனையும் நெருங்கவிடுவது ஆபத்தாக முடியலாம் என்று அவர் எண்ணுவது தெளிவாகவே எனக்கு புரிந்தது. ஆனால் அப்படி நெருங்கவே எனக்கு மிகவும் ஆசையாயிருந்தது!

    எந்தப்பெண்ணாலும் கவரப்படாத நான் இவள்மீது எப்படி கவர்ச்சியுற்றேன் என்பது எனக்கு விளங்கவில்லை. இவ்வாறிருந்தபோது ஒருநாள் திகில்பாட்டி மாமாவீட்டுக்கு வந்தது. திகில்பாட்டி என்பது என் அம்மாவின் சித்தி. பணக்கார தாத்தாவுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டது. ஒரு பையன் பிறந்தபின் சில ஆண்டுகளில் தாத்தா இறந்துவிட்டார். அந்த பையன் ஆளாகி தாத்தாவின் வியாபார மேலாண்மையையும் சொத்துப்பராமரிப்பையும் பாட்டியிடமிருந்து பெற்றுக்கொண்டபின் பாட்டி உல்லாசமாக ஊர்சுற்றிக்கொண்டிருந்தது. முன்னறிவிப்பில்லாமல் திடீரென்று யார்வீட்டிலாவது காரில் வந்து இறங்கும். தடால்புடாலென்று பேசி எல்லாரையும் அதட்டிவிட்டு வந்ததுபோலவே திடீரென்று சென்றுவிடும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாருக்கும் அஞ்சாமல் தன் மனத்திலுள்ளதை அப்படியே போட்டு உடைத்துவிடும். பிள்ளைகளுக்கு ஏனோ இவரைப்பற்றி கொஞ்சம் அச்சம். அதனாலே நாங்கள் திகில்பாட்டி என்று பெயர்வைத்திருக்கிறோம். ஆனால் பெரியவர்கள் அது வந்தவுடனே தாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலை எதுவாயினும் அப்படியே போட்டுவிட்டு திகில்பாட்டிக்கு சேவைசெய்ய போய்விடுவார்கள். திகில்பாட்டி வீட்டிலிருக்கும்போது அதனுடன் பேசுவதைத்தவிர, அதாவது அது பேசுவதை கேட்பதைத்தவிர, வேறு எந்த வேலையும் நடக்காது.

    மாமாவீட்டுக்கு திகில்பாட்டி வந்தபோது நானும் சில தம்பிமாரும் தெருவில் மட்டையாடிக்கொண்டிருந்தோம். அது காரிலிருந்து இறங்கியதும் நாங்களெல்லாம் ‘ஐ…யா, பாட்டி!’ என்று (பொய்யான) மகிழ்ச்சியுடன் சென்று வணக்கமிட்டோம். மட்டையாட்டத்துக்கு முற்றுப்புள்ளி. பாட்டி ஒவ்வொருவரையும் விசாரித்துக்கொண்டு சிலருக்கு பாராட்டுகளையும் சிலரின் அம்மாவையோ அப்பாவையோ பற்றிய ஏதாவது குறைகளையும் வாரிவழங்கிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தது. நாங்களும் பின்தொடர்ந்தோம். பாட்டி வந்திருக்கும்போது விளையாடிக்கொண்டிருந்தால் எங்கள் பெற்றோரிடமிருந்து எங்களுக்கு வசவு கிடைக்கும்.

    அத்தை பாட்டியை மிகவும் ஆர்ப்பாட்டமாக வரவேற்று அமரச்சொன்னார். மாமாவை வயலிலிருந்து விரைவாக வரும்படி அலைபேசியில் சொல்லிவிட்டு பால்வாங்கிவர ஒரு பொடியனை விரட்டினார். சமையலறையிலிருந்த மகளை அழைத்து பாட்டிக்கு வணங்கஞ்செய்யவைத்தார். அவளைப்பார்த்த பாட்டி ‘அட, பெரியவளாக வளர்ந்துவிட்டாளே! அப்படியே அவள்பெரியத்தையை உரித்துவைத்திருக்கிறாள்’ என்றது. நான் சற்றே அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தேன். அவளுக்கு பெரியத்தை என் அம்மா! அப்போதே எனக்கு பல உண்மைகள் உறைத்தன. என் மாமன்மகள் என் அம்மைவைப்போலவே இருந்தாள். இந்த உருவ ஒற்றுமை என் உள்ளுணர்வுகளில் பட்டதாலே இவள்மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறுவயதில் என் அம்மா இவளது இப்போதைய தோற்றத்திலே இருந்திருக்கவேண்டும்.

    இதை உணர்ந்ததும் எனக்கு அவள்மீதிருந்த ஆசை காதலாகவே மலரத்தொடங்கியது. சிறுவயதுள்ள அம்மாவுடன் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையெல்லாம் இப்போது நனவாகத்தொடங்கியது. இவளுடன் சிரித்துப்பேசுவதை என் அம்மா சிறுவயதினராயிருந்தபோது அவருடன் பேசுவதைப்போலவே எண்ணிக்கொண்டேன். அவளும் என்னுடன் பேசுவதை மிகவும் விரும்புவதாக தோன்றியது.

    அவளுடன் தனிமையில் பேசும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கினேன். அவ்வாறான வாய்ப்பை உண்டாக்க அவளது செயல்களை கவனித்தேன். அவள் மொட்டைமாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்கவரும் நேரம்பார்த்து நான் மாடிப்படியில் அமர்ந்து  ஒரு செய்தித்தாளை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் பாசாங்குசெய்தேன். அவள் வரும் கொலுசொலி கேட்டபோதே மகிழ்ந்தேன். ஆனால், ‘விரைவில் வாடி. மாவாட்டவேண்டும்’ என்ற அத்தையின் குரல் என் ஆசையில் நீரூற்றியது. அவள் அமைதியாக என்மீது ஒரு குறும்புப்புன்னகையை வீசிவிட்டு சென்றாள்.

    இந்த அத்தையையாவது சமாளிக்கலாம். ஆனால் என் மச்சான் இருக்கிறானே! என் எண்ணம் அவனுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்திருந்தது. நான் அவளை எங்காவது ஓரங்கட்டினால் இவன் வந்து இடையில் அமர்ந்துகொண்டான். மாமன்மகளுடன் நெருங்கி அமர தயங்கி சற்று இடைவெளிவிட்டே நான் அமர்வது வழக்கம். இவன் அந்த இடைவெளியில் இருவரையும் உரசிக்கொண்டு அமர்ந்துகொள்வான். எனக்கு அவன்மீது எரிச்சலாக வந்தது. ‘இரு, இரு. உனக்கு இருக்குடா! என்றைக்காவது ஒருநாள் நான் இவளையே கட்டிக்கொள்வேன். அன்றைக்கு உன்னை வெளித்தள்ளி இவளை உள்வைத்து கதவை தாழிட்டுக்கொள்கிறேன்’ என்று மனத்துள் கருவிக்கொண்டேன்.

    Share
  • கன்னித்தாய் (சிறுகதை)

    சந்திரன்

    அடையாளம் தெரியாத ஏதோ ஒன்று வந்து கொத்துக்கொத்தாய் மக்களை வாரிச்சென்ற வடுகூட இன்னும் மறையவில்லை. அதற்குள் அந்த ஊரிலிருந்த மக்களின் கண்களைக் குறிவைத்து வேகமாகப் பரவியது அந்நோய். கண்ணைக் குறிவைத்துத் தாக்கியதால் அதற்குக் கண்ணோய் என்ற பெயரே நிலைபெற்று விட்டது. வெயில் வேறு நூறு  டிகிரியைத் தாண்டியே வாரக்கணக்கில் தொடர்ந்தது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய மக்களில் ஒரு பகுதியினர் புன்னை மரத்தடியே கதியென்று இருந்தனர்.

    அப்படிப் புன்னை மரநிழலில் அடைக்கலம் புகுந்தவர்கள் “சும்மா ஏன் இருக்க வேண்டும்” என்று தீவிர ஆலோசனையில் மூழ்கினர்.

    விளைவு: ஆளாளுக்குக் கதைசொல்லிகளாக மாறினர்.

    இப்படி ஒரு வழியாகக் கதைசொல்லுவது என்ற முடிவிற்கு அந்த ஊர் மக்கள் வந்தாலும் அங்கு மேலும் ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. “எல்லோரும் ஒரே நேரத்தில் கதைசொல்ல ஆரம்பித்துவிட்டால் யார்தான் கதை கேட்பது?” என்று.

    விளைவு: “எல்லோரும் கதைவிடமுடியாது அல்லவா? அதனால் கதை சொல்ல விருப்பம் இருப்பவர்களின் பெயர்களை எழுதிப்போடுவோம். அவற்றில் குழந்தையை விட்டு தெரிவுசெய்து எடுத்து அந்த வரிசைப்படி கதைசொல்ல அனுமதிப்போம்” என முடிவெடுத்தார் அந்த ஊர் நாட்டாண்மை.

    அவரது அந்த முடிவு அப்போது எல்லோராலும் ஏற்கப்பட்டாலும் பின்னாளில் “ஏன் அப்படிச் செய்யவேண்டும்? எல்லோரும் ஒரே நேரத்தில் கதை செல்லுவோம். யார் யாருடைய கதை யார் யாருக்குப் பிடிக்கிறதோ அவங்கவங்க அவங்கவங்க கதையைக் கேட்கட்டும்” என்று மெதுவாகச் சொன்னான் ஒரு சிறுவன்.

    அவனது வார்த்தைகளுக்கு அப்போது பெரியளவில் மதிப்பில்லாமல் போனது. காரணம் அப்போது அந்த ஊரில் வழக்கமாக நடக்கும் தெருக்கூத்து நடத்துவதற்கான நாள்வேற நெருங்கிக்கொண்டிருந்தது. அதை எப்படி நடத்துவது என்ற ஆலோசனையில் மக்களின் கவனம் இருந்ததால் அச்சிறுவனின் குரல் அவனுடைய காதிற்கே கேட்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

    “உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி” என்ற தலைப்புச் செய்தியைத் தாங்கி வந்தன அன்றைய நாளேடுகள். வசதியானவன் ஏழை என்ற பாகுபாடின்றி எல்லோரையும் அந்த அடைமழை பாதிக்கத்தான் செய்தது. ஆனால், “இதைவிடப் பெரிய அளவிலான மழையை எல்லாம் நம்ம ஊர் இதற்கு முன்னர் பலமுறை சந்தித்திருக்கிறது. அதனால் இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை” என்ற ஒரு குரலும் அந்த ஊரில் ஒருபுறம் கேட்கத்தான் செய்தது. ஆனால் அதை யாரும் சட்டைசெய்யவில்லை.

    அரபிக்கடலில் இருந்து மெல்ல எழுந்த சூரியனின் கதிர்கள் பிரகாசிக்கத் தொடங்கின.  அதன் வெப்பத்தில் மழையைப் பற்றிய பேச்சை மறந்து மரநிழல் கிடைக்குமா? என்று மீண்டும் ஏங்கத் தொடங்கினர்.

    வெயிலில் இருந்து தப்பிக்கக் குடையுடன் நடக்கவேண்டிய கட்டாயம் கூட ஏற்பட்டது. சாலையோரங்களில் கறுப்புநிற கண்ணாடிகளின் விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. இப்படியே போனால் மக்களின் நிலைமை என்னாவது என்ற முணுமுணுப்பு காற்றில் பரவிக்கொண்டிருந்து. என்னைப் போல் எல்லோரும் கண்ணாடி அணிந்துகொள்ளுங்கள் என்றவனின் பின்னால் அந்த ஊர் மக்கள் செல்ல முடிவெடுத்தார்கள். அப்போது அவர்களுக்கு வேறு வழிதெரியாத காரணத்தால் அந்த முடிவெடுக்க அவர்கள் முன்வந்தார்கள். அவர்களுடைய முடிவினால் கொஞ்ச காலத்தில் அந்த ஊரில் பெரிய மாற்றம் வரப்போவதற்கான அறிகுறிகள் தென்படத்தான் செய்தன.

    கிழக்கும் மேற்குமாக இருந்த பிரதான சலைகள் மட்டுமன்றி குருக்கும் நெடுக்குமான சிறியசிறிய சாலைகளும் சந்திக்கும் நான்கு ரோட்டில் ஒரு வழியாக தன்னுடைய உறவினர் மூலம் வந்து சேர்ந்தாள் லில்லி. ஒல்லியான அவளுடைய தேகத்தைப் பார்த்த அந்த ஊர் மக்கள் மயங்கிப் போனதில் வியப்பதற்கு இல்லை. மயக்கம் அவர்களின் குருதியில் தோய்ந்த ஒன்றுதானே!.

    மழையின் தாக்கத்தில் சொல்ல  வந்ததைச் சொல்லாமல் உங்களுடன் சேர்ந்து நானும்  மறந்து போய்விட்டேன். மன்னிக்கனும்.

    கதைசொல்லுதல் பற்றியல்லவா நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்?.

    அப்போது புதுப் புதுக்கதைகளை மக்கள் சொல்ல ஆரம்பித்திருந்தனர். கதைசொல்லும் போது பாட்டும் நடனமும்  இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்ற யோசனையை வெற்றிகரமாக்கினான்  மூக்கன். அதனால் அவன் பின்னால் மக்கள் ஓடத்தொடங்கினர்.

    அவன் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது அடிக்கடி கறுப்புக் கண்ணாடியைக் கழட்டிவிட்டு மூக்கைச் சொறிந்துகொள்ளுவான். அப்படி அவன் அடிக்கடி செய்தால் அவனுடைய அம்மா அவனுக்கு ஆசையாக வைத்த பெயர் அவனுக்கே மறந்து போனது. பாவம் மக்கள் எப்படி நினைவில் வைத்திருப்பார்கள்.

    ஆனால் அவனுடைய பெயர் மூக்கன் அன்று. மூப்பன் என்பதை மக்கள் தவறாக மூக்கன் என்று என்று உச்சரிப்பதாக இலக்கண ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்த அதிசயமும் ஒரு புறம் நடக்கத்தான் செய்தது.

    பட்டனமா பட்டினமா என்ற விவாதம் மக்களிடம் நடந்துகொண்டிருந்த போது லில்லி ஆயிரம் விளக்குகள் வரிசையாக ஓயாமல் ஒளிர்ந்து கொண்டிருந்த பகுதியில் சத்தமின்றி குடிபுகுந்திருந்தாள். வாழைத்தண்டு போன்ற அவளுடைய அழகிய இரண்டு கால்களும் ஆக்டோபஸ்ஸின் கரங்கள் போல் கிளைத்தவை என்பதை இரவின் ஒளியில் கண்டுபிடித்தவன்தான் அவளை அங்கு குடியமர்த்தியிருந்தான்.

    தனக்கு மட்டும் தெரிந்த இரகசியம் வேறு யாருக்கும் தெரியாது என்றுதான் அவன் நினைத்திருந்தான். இரகசியம் என்று அவன் நினைத்ததைப் பலர் அந்த ஊரில் தெரிந்து வைத்திருந்தனர் என்பது உண்மை. அவனது இறப்பிப்பிற்குப் பின்னர்தான் அந்த விசயம் வெளிப்பட ஆரம்பித்தது என்பது வேறு செய்தி. அதனால் ஆத்திரமடைந்த லில்லி “இரகசியத்தை அறிந்தவர்கள் ஒன்று கொல்லப்படவேண்டும் அல்லது தன்னுடைய காலடியில் கிடக்கவேண்டும்” என்று விரும்பினாள்.

    காலவெள்ளத்தில்….  அவளது விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறுவது போல் அவள் அடிக்கடி கனவு கண்டாள்.

    அதை நினைத்துப் பார்த்தாள்.

    மகிழ்ந்தாள்.

    தான் அவ்வாறு மகிழ்ச்சியடையும் போது முகம் எவ்வாறு இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

    விளைவு: அவளது வீட்டில் பெரிய நிலைக் கண்ணாடி ஒன்று புதிதாய் சுவரில்  முளைத்தது.

    எப்போதெல்லாம் தன்னுடைய மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றுகின்றதோ அப்போதெல்லாம் அவள் அதன்முன் நிற்பாள்.

    விளைவு:நாள்தோறும் ஓரிரு முறைகளாவது அவ்வாறு நிற்கவேண்டும் என்ற நோய் அவளைப் பிடித்துக்கொண்டது.

    இதற்கிடையில் கதைசொல்லுதலில் புதிய பரிணாமங்கள் பல ஏற்பட்டிருந்தன.

    அவற்றில் ஒன்றுதான் வாந்தியெடுத்தல்.

    அதுதான் அப்பேதைய நியூ டிரண்ட் .

    அதை மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர். “வாந்தியெடுப்பதில் கில்லாடியானவர்கள் இவர்கள்” என்ற பட்டியலில் தன்னுடைய பெயர் எப்போது வரும் என்று பலர் காத்திருந்தனர். ஒருபுறம் தன்னைப் போல் யாராலும் இப்படி வாந்தியெடுக்க முடியாது. நான்தான் வாந்தியெடுப்பதில் கில்லாடி என்ற பெயரைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தான் மூக்கன். அவனை முந்திச்செல்ல பலர் முயன்றாலும் அவனுக்கு நிகர் அவன்தான் என்ற பேச்சுதான் காற்றில் அடர்த்தியாக எங்கும் பரவியது.

    “மூக்கனைவிட நான் நன்றாக வாந்தியெடுப்பேன்” என்று மூக்கனுக்குப் போட்டியாக வாந்தியெடுப்பதில் தொடர்ந்து கில்லியாக இருந்த லட்சியபுருடன் லில்லியின் கனவில் கண்டது போல் பாதியில் பரலோகம் போய்விட்டான்.

    இனி தனக்கு நிகராக யாராலும் வாந்தியெடுக்க முடியாது” என்று இருமாப்பிலிருந்த மூக்கனின் ஆணவம் லில்லியிடம் மன்னைக் கவ்வியது.

    கொஞ்சநாள் வாந்தியெடுத்தவள் அதன் பிறகு புது வகையான கதை சொல்ல ஆரம்பித்தாள். அவள் தொடங்கிய கதை ஒரு தொடர்கதை. அந்த கதைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தன்னுடைய மூலையைப் போட்டுப் பிசைந்துகொண்டிருந்தபோது அவளுக்கு டக்கென்று ஒரு யோசனை முளைத்தது.

    நீயா நானா.

    இதுதான் தலைப்பு என்று பகிரங்கமாக அறிவித்தாள்.

    நான் x நாம் நீ x நீங்கள் என்ற பதங்களின் சாரம் நீயா x நானா என்று சுருக்கம் அடைந்தது.

    இது ஒரு புதிய இலக்கண விதி. இப்படியும் சொல்லைப் பயன்படுத்தலாம் என்று நம்முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் என்று அதற்குச் சில மேதாவிகள் விளக்கங்கள்கூட அளித்தார்கள். இனி இதுதான் கடைசி இனிமேல் புதிய கதைகளைக் கேட்கக்கூடாது என்று கடுமையான வேண்டுகோள் மக்களிடம் வைக்கப்பட்டது. அந்தக் கதை ஒரு தொடர்கதை. அதனால்தானோ என்னவோ அது தொடர்ந்தது. இன்றும் தொடர்கிறது…

    அந்தக் கதை கூறும் போது தனக்கு ஏற்படும் மகிழ்ச்சி எப்படி இருக்கிறது என்று உடனுக்குடன் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள் கன்னித்தாயாக உருமாறிய லில்லி. அதற்குத் தன்னுடைய அறைக்குச் செல்லவேண்டும். ஒவ்வொரு முறையும் தன்னுடைய மகிழ்ச்சியைப் பார்க்க ஏன் அறைக்குச் செல்லவேண்டும். தன்னுடனே ஒரு கண்ணாடியை ஏன் ஏற்பாடு செய்துகொள்ளக் கூடாது என்று அவளுக்குத் தோன்றியது.

    வழக்கம் போல் நிலைக் கண்ணாடிமுன் நின்றிருந்தபோதுதான் அவளுக்கு அந்த யோசனை தோன்றியது.

    அப்போது அவளது முகம் மிகவும் பிரகாசமாகத் தோன்றியது. அதற்குக் காரணம் புடவையில் இருந்தாள். கழுத்து நிறைய அணிகலன்கள் வேறு இருந்தன. புடைவையின் நிறத்திற்கு ஏற்ப அணிகலன்கள் அணிவிக்க பணிப்பெண் ஒருத்தியும் இருந்தாள்.

    அதனால் அவள் ஒரு முடிவெடுத்தாள் இனி எப்போதும் தன்னுடனே ஒரு கண்ணாடியை உடன் வைத்துக்கொள்வதென்று. எப்போதெல்லாம் தன்னுடைய மகிழ்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றதோ அப்போதெல்லாம் பார்த்துக் கொள்ளாம் இல்லையா. ஒவ்வொரு முறையும் நிலைக்கண்ணாடி இருக்கும் இடத்திற்குச் செல்லும் வரை தன்னுடைய ஆசையைத் தள்ளிப்போட வேண்டிய தேவை இருக்காது என்ற சுயநலமும் அதில் அடக்கம்.

    விளைவு : நடப்பதற்கும் முடியாத அளவிற்குப் பூதாகரமான தோற்றத்திற்கு மாறினாள். புடைவைகள் பாரமாயின. அணிகலன்களை வீசியெறியவேண்டிய வந்தது. மருத்துவர் சொல்லிவிட்டார் “நீங்க இனி தினமும் காலை இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிடக் கூடாதென்று”.

    படுக்கை அறையிலிருந்த நிலைக்கண்ணாடி நோக்கித் தயங்கியபடி மெல்ல அடிமேல் அடிவைத்து நடந்தாள். கண்ணாடியில் தோன்றிய பூதாகரமான ஓர் உருவம் அவளை மிரட்டியது. அந்த உருவத்திற்குள் லில்லி என்ற பெயருடன் ஒல்லியான அவளுடைய தேகமும் ஒருசேர உருக்குலைந்து போயிருந்தன. அவ்வாறு தெரிவது தன்னுடைய உருவம்தான் என்பதை ஏற்கக் கொஞ்சம் அதிகமான கால அவகாசத்தை  எடுத்துக்கொண்டதாக அவள் உணர ஆரம்பித்தாள். எல்லாம் முடிந்தபிறகு என்ன செய்யமுடியும்.

    லில்லி என்ற தன்னுடைய இளைய வயது அடையாளத்தை அறை முழுக்கத்தேடினாள். களைப்புதான் அவளுக்குப் பரிசாக மிஞ்சியது.

    அப்படியே படுக்கையில் சரிந்தாள்.

    சூரியனைக் கண்டு மலரும் பூ காந்தள் மலரா?  தாமரை மலரா? என்பதுதன் அன்றைய தொலைக்காட்சிகளில் பிரபலமான விவாதப் பொருளாக மாறியிருந்தது. சிலர் “கொண்டையில் தாழம்பூ பாடலில் அந்த பூ இடம்பெறவில்லை” என்றனர். இன்னும் சிலர் “தமிழர் அக இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் கூட அந்த பூ குறிப்பிடப்படவில்லை” என்றனர். இந்த விவாதம் முடிந்த கையோடு விளம்பர இடைவேளைக்குப் பின்னர் நடைபெற்ற தசரதனின் பாசமா? கைகேயியின் வேசமா? என்ற விவாதத்தைக் கேட்டவாறே உறங்கினாள்.

    “நாளை மழை பெய்யும்” என்று வானிலை அறிக்கையில் கூறப்பட்டதற்கு ஏற்ப வழக்கமாக அந்த ஊரில் வெயில் அதி தீவிரமாகவே இருந்தது. பொம்மைகளால் கட்டப்பட்ட பெரிய மாளிகையின் முன் போடப்பட்ட பெரிய பந்தலில் பலர் மேடையில் ஆடம்பரமாக அமர்ந்திருந்தனர். அந்த விழாவின் போதுதான் முதன் முதலில் லில்லி தாயானது அறிவிக்கப் பட்டது.

    “கன்னித்தாயே! என்று பாரதியின் முறுக்கு மீசையைப் போன்ற தன்னுடைய மீசை மண்ணில் முத்தமிட்டவாறு அந்த அறிவிப்பை முழங்கினான் அரங்கன். அச்செய்தியை அறிவிக்கும்போது அவன் பலமுறை வாந்தியெடுத்தான். வாந்தியெடுத்து வாந்தியெடுத்து கன்னித்தாயின் காலடியில் தொப்பென்று விழுந்தான். ஆனால் அந்த நிகழ்விற்குப் பத்தாண்டுகள் கழித்து அவளுக்கு  அடுத்தடுத்து வரிசையாகக் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தன.

    இனி அவளுக்குக் குழந்தை பிறக்கவே பிறக்காது என்ற கிசுகிசு  மறைந்து கன்னியான அவளுக்கு எப்படி குழந்தைகள் பிறக்கின்றன என்ற வதந்தி காற்றில் பரவ ஆரம்பித்தது.

    குழந்தைகள் அம்மா! அம்மா! என்று அழைத்தாலும், அவை எல்லாம் தன்னுடைய பிள்ளைகள் அல்லர். தனக்குப்  புத்திர பாக்கியம் இல்லை என்று அவள் தனிமையில் புலம்பிக் கொண்டிருந்தாள். அத்துடன் தனக்குப் புத்திரபாக்கியமே கிடையாது என்று திடமாகவே நம்ப ஆரம்பித்திருந்தாள். தனக்குக் குழந்தை பேறு இல்லாமல் போனதற்குக் கனவு தான் காரணம் என்றும் சில நேரம் நினைத்து வருந்தினாள்.

    “குழந்தை இல்லாதவர்களை மலடி என்று சிறப்பித்து அழைப்பது” அந்த ஊரில் உள்ள ஒரு வழக்கம். அதன்படி லில்லி அழைக்கப்படலாம் என்று சந்தேகப் படக்கூடாதென்று நினைத்த அவரது வீசுவாசிகள் அவளைத் தாயாக்கினர் என்றும் அந்த ஊரின் ஒதுக்குப் புறங்களில் வாழ்ந்த பழங்குடி மக்களால் பேசப்பட்டன. ஆனால் எது எப்படியோ அவள் தாயானாள்.

    அதுவும் கன்னித்தாய்.

    கன்னித்தாயின் எதிர்வீட்டில் குடியிருந்த மூக்கனின் மூன்று மனைவிகளும் ஏழுபிள்ளைகளும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். மூக்கனுக்குப் பின் இந்த சண்டை தீவிரம் அடையும் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்தது. பேசப் புதுக்கதை வேண்டும் அல்லவா? வெறும் வாயை எவ்வளவு நாளுக்குத் தான் மெல்லுவது. ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு பலிக்குமா அல்லது வேறு புதிய கதைகள் சொல்ல யாராவது வருவார்களா என்று எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை.

    தன்னுடைய பூத உடலைச் சுமக்க முடியாமல் கட்டிலின் கால்கள் தள்ளாட்டம் போட்டன. பிரத்தேகமான புதிய கட்டில் பெரிய அளவில் செய்து அதன் மேல் படுக்கவைக்கப்பட்டாள். அவளது காலை இருவர் சமமாகப் பங்குப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தனர்.

    அவளது கண்கள் அவர்களைப் பார்த்தன. அப்போது அவள் நிலைக்கண்ணாடி முன்நின்றிருந்தாள் பழைய லில்லியாக.

    அவளுடைய கன்னித்தாய் பட்டமும் பூதாகாரமான உடலும் ஒரு சேர காணாமல் போயின.  அவள் அதை நம்ப மறுத்தாள். ஏனெனில் அவளது கனவில் அக்காட்சி இல்லை. அவள் அப்படிப்பட்ட ஒரு காட்சியைக் கற்பனையிலும் கூட பார்க்கவும் இல்லை.

    இப்போது அந்த ஊரில் புதுக்கதைகள் பல உலா வருகின்றன.

    வானமா x பூமியா? மேடா x  பள்ளமா?  வடக்கா x  தெற்கா? லெப்படா  x ரைட்டா …….. இன்னும் …… இப்படி…. எத்தனையோ??….இடையிடையே கன்னித் தாயான லில்லியும் இடையே வந்துபோனாள்…

    Share
  • காதலிக்க நேரமுண்டு (சிறுகதை)

    காதலிக்க நேரமுண்டு (சிறுகதை)

    செ. கோட்டாளம்

    பேருந்து வந்தது. ஏறிக்கொண்டோம். அவன் நேராக ஒரு அழகான பெண்ணருகில் போய் நின்றுகொண்டான். பேருந்து நகர நகர அவள்மீது சரிந்து உரசத்தொடங்கினான். அவள் திரும்பிப்பார்த்து முறைத்தாலும் அவன் கவலைப்படவில்லை. அவள் இறங்கியதும் வேறொருத்தியின் அருகில் நின்று தன் வேலையை தொடர்ந்தான்.

    எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. நான் அவனுக்கு நண்பன் என்று காட்டிக்கொள்ளவே எனக்கு வெட்கமாயிருந்தது. சற்று விலகி வேறெங்கோ பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். இருக்கை கிடைத்ததும் அமர்ந்தேன். அவனருகில் இருக்கை கிடைத்தாலும் வேறு யாரையோ அமரவிட்டு அவன் அவளருகிலே நின்றுகொண்டான்.

    பேருந்திலிருந்து நாங்கள் இறங்கியதும், ‘என்னடா, இப்படி மோசமாக நடந்துகொள்கிறாய்? அவள் வைதாளே, அதுவும் உனக்கு உறைக்கவில்லையா?’ என்றேன்.

    அவன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்னை கேலிசெய்தான். ’நீ என்ன ஆண்பிள்ளை? உனக்கு ஏன் இந்த ஆசைகளெல்லாம் வரவில்லை?’ என்றான்.

    அவன் இப்படிக்கேட்டதும் நான் வாயடைத்துப்போனேன். ஆம், மற்ற இளம்பையன்களுக்கு பெண்கள்மீது ஆசை ஏற்படுவதுபோல் எனக்கு வரவில்லை. சொல்லவியலாத ஒரு சிக்கல் என் மனத்தில் இருந்து வாட்டியது. நண்பனுக்கு ஏதோ விடையளித்து சமாளித்துவிட்டேன். எனினும் என் மனம் அலைபாய்ந்தது.

    நல்லவேளை நான் வந்தபோது அப்பா வீட்டில் இல்லை. என்னைப்பற்றி குறைசொல்வதற்கும் கேள்விகேட்பதற்கும் திட்டுவதற்கும் ஏதாவது காரணம் அவருக்கு எப்போதும் இருக்கும். முகங்கழுவி சமையலறைக்கு சென்று அம்மாவிடம் சற்று கொஞ்சி காப்பியை வாங்கி குடித்தேன். அம்மாவுக்கு நான் எப்போதும் செல்லப்பிள்ளையே. அம்மா மட்டும் இல்லாவிட்டால் அப்பா என்னை எப்போதோ கொன்று தின்றிருப்பார்.

    என் தங்கை வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தாள். அருகில் சென்று பார்த்து தவறுகளை சுட்டியும் திட்டியும் அண்ணனின் ஆதிக்கத்தை நிலைநாட்டினேன். எனக்கு சிறுவயதில் அம்மாவே பாடஞ்சொல்லிக்கொடுப்பதுண்டு. அன்னையின் மடியில் அமர்ந்து ஆனா ஆவன்னா வாசித்ததும் கூட்டல், கழித்தல், இன்ன பிற கணக்குகளை போட்டதும் என்றுமே இனிக்கும் நினைவுகள். அதனாலே எனக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

    உயர்நிலைப்பள்ளியிலும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை வாங்கியபோது அம்மாவிடமே காட்டி மகிழ்ந்ததுண்டு. அம்மாவிடமிருந்து பாராட்டை பெறுவதில் எப்போதுமே ஒரு தனி இன்பம். அம்மா அன்புடன் உச்சந்தலையில் முத்தமிடுவதற்கு உலகில் எதுவுமே ஈடாகாது. அம்மாவை மகிழ்விப்பதற்காகவே நான் எதையும் செய்தேன். இது எல்லாருக்கும் இயல்பானதாயிருக்கலாம். எனினும் எனக்குக்கிடைத்த அம்மா ஒரு தனித்துவமான அம்மா என்பதில் எனக்கு ஐயமேயில்லை. என் அம்மாவுக்கு உலகில் யாருமே ஈடாகவியலாது.

    அம்மா எல்லாரிடமும் அன்பாக இருப்பார். என்னையும் அப்பாவையும் தங்கையையும் மிகவும் பரிவுடன் பார்த்துக்கொள்வார். சில நேரங்களில் அம்மா அப்பாவுடனும் தங்கையுடனும் சிரிப்பும் கும்மாளமுமாக பேசுவது எனக்கு பொறாமையாயிருக்கும். அம்மா எனக்கு மட்டுமே வேண்டும் என்ற ஆசை எழும். சின்னஞ்சிறு வயதில் அம்மாவை கட்டிப்பிடித்து அணைத்தது என் மனத்தில் பசுமையாக நினைவிருக்கிறது. இப்போதெல்லாம் நான் பெரியவனாகிவிட்டேனென்று அம்மா தடுத்துவிட்டார்.

    இப்போதும் காப்பி குடித்துக்கொண்டே அம்மாவை மறைமுகமாக பார்த்துக்கொண்டிருந்தேன். பல ஆண்டுகளாகவே எனக்கு இந்த பழக்கம் இருந்துவருகிறது. அதாவது அம்மாவே எனக்கு மிகவும் கவர்ச்சியாக தோன்றினார். வேறு எந்தப்பெண்ணும் அழகாகத்தோன்றவில்லை.

    அதே நேரத்தில் எனக்குள் ஒரு குற்றவுணர்வும் தோன்றி என் கண்களை வேறுபக்கம் திருப்பச்செய்தது. எண்ணங்களையும் திசைதிருப்ப முயன்றேன். எனக்குள் பல ஆண்டுகளாக ஒரு மனப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது. என் மனத்தில் கீழ்த்தரமான எண்ணங்கள் எழுவதாக உணர்ந்தேன். ஆனால் அவற்றை மாற்ற இயலாமல் தவித்தேன்.

    சிறுவயதில் அம்மாவின் அன்புப்பேச்சும் அணைப்புமே என் மனத்துக்கு இனிமையூட்டின. பிறகு தனிமையாயிருந்தபோது அவற்றை எண்ணி மனத்துக்குள்ளே திளைத்திருப்பது வழக்கமாயிற்று. நான் வளர வளர அம்மாவின் உடலழகையும் கண்டு களிக்கத்தொடங்கினேன்.

    அம்மாவுடன் பேச்சுக்கொடுத்தபடியே காப்பியை மெதுவாக குடித்துக்கொண்டிருந்தேன். அம்மா இரவுணவுக்காக சமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நான் பின்பக்கமிருந்து வெட்கமில்லாமல் பார்த்தேன். வெட்கமில்லாவிட்டாலும் அம்மாவை அப்படி பார்ப்பதும் எண்ணுவதும் தவறு என்ற ஒரு குறுகுறுப்பு மனத்துள் இருந்துகொண்டேயிருந்தது.

    அந்த வயதில் அம்மா அவ்வளவு அழகாகவும் அன்பாகவும் கவர்ச்சியாகவும் இருந்தால் தன் இளம் வயதில் எப்படியிருந்திருப்பார் என்று எண்ணிப்பார்த்தேன். உடனே காப்பிக்குவளையை வைத்துவிட்டு நான் படிக்கப்போகிறேன் என்றும் யாரும் தொல்லை தரக்கூடாது என்றும் அறிவித்துவிட்டு என் அறைக்குள் வந்து தாழிட்டுக்கொண்டேன்.

    எனக்கு ஏன் மற்றப்பெண்களின்மீது ஆசை வராமல் அம்மாவையே திருட்டுத்தனமாக மனத்துள் எண்ணும் ஆசை வருகிறது என்பது விளங்கவில்லை. யாருக்கும் தெரிந்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்! அம்மாவுக்கு தெரிந்தால்? ஐயோ, வேண்டாம். அம்மாவின் முன்னிலையில் மிகவும் நல்ல பிள்ளையாக நடித்துவந்தேன். ஒன்றுமறியாத சிறுபிள்ளையாகவே அம்மா என்னை எண்ணிக்கொண்டிருக்கிறார். மற்றப்பையன்களைப்போல் பெண்களின்பின் நான் அலைவதில்லை என்பதில் அம்மாவுக்கு பெருமை.

    எனக்கு இருக்கும் உணர்வுகள் மற்றவர்களுக்கும் இருக்குமா, எனக்கு மட்டுந்தானா? எனக்கு மட்டுமாயிருந்தால் இது ஒரு மனநோயன்றோ! ஆம், நான் இயல்பானவன் அல்லேன். என்னில் ஏதோ தவறு இருக்கிறது. நான் மற்றவர்களைப்போல் இல்லை. எனக்கு ஏதோ மனக்கோளாறே. இதை யாரிடம் போய் சொல்வேன்! எங்கிருந்து உதவி பெறுவேன்! யாரிடமும் சொன்னால் வெட்கக்கேடு! கூகிளாண்டவரிடம் முறையிடுவதன்றி வேறு வழியில்லை.

    அம்மாமீது ஆசை வருவதுபற்றி கூகிளிட்டு தேடினேன். என்ன வியப்பு! கூகிளாண்டவரிடம் எல்லாவற்றுக்கும் விடை இருப்பதை நான் முன்பே அறிவேன். ஆனால் எனக்கு இருப்பது ஒரு தனிப்பட்ட நிலைமை என்று எண்ணியிருந்தேன். இது மருத்துவர்கள் நனகறிந்த ஒரு நிலைமை என்று கூகிளாண்டவர் சொன்னார். இதற்குப்பெயர் தாயீர்ப்புணர்தொகுப்பு[1] என்பதாம். அப்படியெனில் இது மற்றவர்களுக்கும் இருந்திருக்கிறது என்பதை அறிந்து சற்று நிம்மதியடைந்தேன். இதன் அறிகுறிகள் ஓரளவுக்கு எல்லாருக்கும் இருப்பது இயல்பேயாம்.

    என் நிலையிலிருக்கும் ஒரு பையன் கேட்ட கேள்விக்கு உளவிய வல்லுநரின் விடை[2]யை கண்டு சற்று ஆறுதலைடைந்தேன். உண்மையில் இந்தப்பையன் என்னைவிட மோசமான நிலையிலிருந்தான். அவன் சுவரில் ஓட்டைபோட்டு அம்மா குளிக்கும்போது பார்ப்பானாம். சீ, இப்படியும் இருக்கிறார்களே! இந்தப்பையனுக்கு உளவியலர் சொன்ன மறுமொழியின் ஒரு பகுதி: “பல பையன்கள் சிறுவயதில் தம் அம்மாமாரிடம் கவரப்படுகிறார்கள். பலர் இந்த ஈர்ப்பை அமுக்கிவிடுகிறார்கள். பருவமடைந்தபின் இது மறைந்துவிடுகிறது. சிலருக்கு வளர்ந்தபின் அம்மாவை காமக்கோணத்தில் எண்ணிப்பார்ப்பது பிடிக்காமல் போய்விடும். ஆனால் ஒரு சிலருக்கு வளர்ந்தபின்னும் இது தொடர்வது காம ஈர்ப்பின் ஒரு இயல்பான வடிவமே. அம்மாமீது காம ஈர்ப்பு ஏற்படுவது இயல்பற்றதுமன்று, எங்கும் கேள்விப்படாததுமன்று. ஆனால் தக்க நேரத்தில் இதை எதிர்கொள்ளாமல் விட்டுவிட்டால், எதிர்காலத்தில் நிலைப்பற்ற மணவுறவுகள், இப்போதைய உங்கள் நடத்தையைப்பற்றிய குற்றவுணர்வுகள் போன்ற கடும் பின்விளைவுகள் ஏற்படலாம். ஈர்ப்பு ஏற்கக்கூடியதெனினும் உங்கள் நடத்தை ஏற்கக்கூடியதன்று,” என்பது. இவ்வாறு சொல்லி சுவரின் ஓட்டையை மூடிவிடும்படி அறிவுரையையும் வழங்குகிறார். நல்லவேளை! என் எண்ணங்களெல்லாம் மனத்தில் மட்டுமே. நான் இவனைப்போல் செயலில் இறங்கவில்லை.

    கூகிளாண்டவர் மேலும் தாயீர்ப்புணர்தொகுப்பு[3] என்ற மனநோயைப்பற்றிய ஆங்கில விக்கிப்பீடியாவின் கட்டுரையையும் காட்டியருளினார். தாயீர்ப்பு கடுமையான மனநோயாகவும் வளரக்கூடுமாம். மேலும் தாயை தன் காதலியாகவும் தந்தையை காதலுக்கு போட்டியாகவும் எண்ணுவதால் தந்தைமீது வெறுப்பும் அச்சமும் ஏற்பட்டு அவரை கொல்ல விரும்புமளவுக்கு செல்லலாமாம். இதையெல்லாம் படித்தபோது எனக்கு சிரிப்பாக வந்தது. உலகில் எவ்வளவு விந்தையான மக்கள் இருக்கிறார்கள்!

    அதேநேரத்தில் என் தந்தைமீது என்னையறியாமல் எனக்கு ஏற்பட்ட வெறுப்புக்கும் அச்சத்துக்குமான காரணத்தை புரிந்துகொண்டேன். இதை உணர்ந்ததும் அவர் என்மீது வைத்திருந்த உண்மையான அன்பு நினைவுக்கு வந்தது. என்னையுமறியாமல் அவர்மனம் புண்படும்படி நடந்துகொண்டேனோ என்று சிந்தித்தேன். பரவாயில்லை; அப்படியே நடந்திருந்தாலும் அது அவரை பாதிக்காது. அவர் பெரியவர்; மனவலிமையுடைவர். குஞ்சு மிதித்து கோழி சேதமடையாது என்று ஒருமுறை அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

    எப்படியாயினும் எனக்கு அம்மாமீது இருந்த ஈர்ப்பு ஓரளவுக்கு இயல்பானது என்பதையும் விரைவில் மறைந்துவிடும் என்பதையும் புரிந்துகொண்டேன். அப்பாமீதுள்ள அச்சமும் சற்று தணிந்தது. அறியாமையே பல தொல்லைகளுக்கு காரணம் என்று எங்கோ படித்ததை நினைவுகொண்டேன். நம் உணர்ச்சிகளின் காரணங்களையும் இயல்புகளையும் புரிந்துகொள்வதே பல சிக்கல்களை தவிர்க்கிறது.

    [1] Oedipus complex
    [2] https://timesofindia.indiatimes.com/life-style/relationships/ask-the-expert/i-am-sexually-attracted-towards-my-mother/articleshow/65165181.cms, 21 திச, 2019 மீட்பெற்றது
    [3] https://en.wikipedia.org/wiki/Oedipus_complex, 21 திச, 2019 மீட்பெற்றது

    Share
  • இரகசியத்தை வெளிப்படுத்திய இதயம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    இரகசியத்தை வெளிப்படுத்திய இதயம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    கதையாசிரியர்: எட்கர் ஆலன் போ (Edgar Allan Poe [1809 – 1849]), அமெரிக்கா.

    மொழிபெயர்ப்பாளர்
    முனைவர் ப. செல்வி,
    இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர்  கலை அறிவியல் கல்லூரி,
    கோவை – 641044

    இது உண்மைதான்! ஆம், நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன், மிகவும் மோசமாகவே பாதிக்கப்பட்டிருந்தேன். ஆனால் ஏன் என் மனதின் மீதான கட்டுப்பாட்டை நான் இழந்துவிட்டதாகச் சொல்கிறீர்கள்? நான் பைத்தியம் என்று ஏன் கூறுகிறீர்கள்? என் மனதின் மீது எனக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லையா?

    நான் பைத்தியம் இல்லை என்பது தெளிவாகத் தெரியவில்லையா? உண்மையில், அந்த நோய் என் மனதையும், உணர்வுகளையும், புலன்களையும் இன்னும் வலிமையாகவும் ஆற்றல்மிக்கதாகவும் மாற்றியது. குறிப்பாக, என் கேட்கும் திறன் மிகவும் கூர்மையடைந்தது.

    முன்னெப்போதும் கேட்டிராத ஒலிகளை என்னால் கேட்க முடிந்தது.

    சொர்க்கத்திலிருந்து வந்த ஒலிகளையும் என்னால் கேட்க முடிந்தது.

    நரகத்திலிருந்து வந்த ஒலிகளையும் நான் கேட்டேன்! கேளுங்கள்! கவனியுங்கள், அது எப்படி நடந்தது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். என் மனம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள், கேட்பீர்கள். அந்த எண்ணம் முதலில் என் தலைக்குள் எப்படி நுழைந்தது என்று சொல்வது சாத்தியமற்றது. நான் செய்ததற்கு எந்தக் காரணமும் இல்லை. அந்த முதியவர் மீது எனக்கு வெறுப்பு ஏதுமில்லை; சொல்லப்போனால், நான் அவரை நேசித்தேன். அவர் எனக்கு ஒருபோதும் தீங்கு இழைத்ததில்லை. அவருடைய பணம் எனக்குத் தேவையில்லை. அது அவருடைய கண்ணால் வந்த பிரச்சனை என்று நினைக்கிறேன். அவருடைய கண் ஒரு கழுகின் கண்ணைப் போல இருந்தது; அதாவது, ஒரு விலங்கு இறக்கும் வரை காத்திருந்து, பின்னர் அதன் உடலின் மீது பாய்ந்து, அதைத் துண்டு துண்டாகக் கிழித்துச் சாப்பிடும் அந்தப் பயங்கரமான பறவைகளில் ஒன்றின் கண்ணைப் போல இருந்தது. அந்த முதியவர் தனது கழுகு போன்ற கண்களால் என்னைப் பார்க்கும்போது, ​​என் முதுகெலும்பில் ஒருவிதக் குளிரான உணர்வு ஊர்ந்து சென்றது; என் ரத்தமே குளிர்ந்து போனது போல இருந்தது. எனவே, அந்த முதியவரைக் கொன்று, அந்தக் கண்ணை என்றென்றைக்குமாக மூடிவிட வேண்டும் என்று நான் இறுதியாக முடிவு செய்தேன்! ஆக, நான் பைத்தியம் என்று நினைக்கிறீர்களா? ஒரு பைத்தியத்தால் திட்டமிட முடியாது. ஆனால் நீங்கள் என்னைப் பார்த்திருக்க வேண்டும். அந்த வாரம் முழுவதும் நான் அந்த முதியவரிடம் மிகவும் நட்பாகவும், அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொண்டேன்.

    ஒவ்வொரு இரவும் சுமார் பன்னிரண்டு மணிக்கு நான் மெதுவாக அவருடைய கதவைத் திறப்பேன். கதவு போதுமான அளவு திறக்கப்பட்டதும், நான் என் கையை உள்ளே விடுவேன், அதன்பிறகு என் தலையை உள்ளே நுழைப்பேன். வெளிச்சம் வெளியே தெரியாதவாறு ஒரு துணியால் மூடப்பட்ட விளக்கை நான் கையில் ஏந்தியிருந்தேன். நான் அமைதியாக அங்கே நின்றேன். பிறகு, மிகக் கவனமாக அந்தத் துணியைச் சற்று விலக்கினேன்; அதனால் ஒரு மெல்லிய ஒளிக்கீற்று மட்டும் அந்த கண்ணின் மீது விழுந்தது. ஏழு இரவுகள் — நீண்ட ஏழு இரவுகள் — ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் நான் இதைச் செய்தேன். எப்போதும் அந்தக் கண் மூடியே இருந்தது, அதனால் என் வேலையைச் செய்வது சாத்தியமில்லாமல் போனது. ஏனென்றால், நான் கொல்ல வேண்டியது அந்த முதியவரை அல்ல; அந்த கண்ணைத்தான் — அவருடைய தீய கண்ணைத்தான் — நான் அழிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு காலையிலும் நான் அவர் அறைக்குச் சென்று, கனிவான, நட்பான குரலில் அவர் எப்படித் தூங்கினார் என்று கேட்பேன். ஒவ்வொரு இரவும் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு, அவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது நான் அவரை எட்டிப் பார்ப்பதை அவரால் ஊகிக்கவே முடியவில்லை.

    எட்டாவது இரவில், கதவைத் திறக்கும்போது நான் வழக்கத்தை விட அதிக கவனத்துடன் இருந்தேன். கடிகார முட்கள் நகர்வதை விட மிக மெதுவாகவே என் கை நகர்ந்தது. முன்னெப்போதையும் விட என் சொந்த ஆற்றலை நான் அப்போது வலுவாக உணர்ந்தேன்; வெற்றி நிச்சயம் என்று எனக்குத் தோன்றியது.

    நான் அவர் கதவருகே இருப்பதை அறியாமலே அந்த முதியவர் படுத்திருந்தார். திடீரென்று அவர் படுக்கையில் அசைந்தார். நான் பயந்துவிட்டேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இல்லை. அவர் அறையில் இருள் அடர்த்தியாகவும் கும்மிருட்டாகவும் இருந்தது. கதவு திறக்கப்படுவதை அவரால் பார்க்க முடியாது என்பது எனக்குத் தெரியும். நான் மெதுவாகவும் நிதானமாகவும் கதவைத் தள்ளிக்கொண்டே இருந்தேன். என் தலையை உள்ளே நுழைத்தேன். துணியால் மூடப்பட்ட விளக்குடன் என் கையையும் உள்ளே விட்டேன். திடீரென்று அந்த முதியவர் படுக்கையில் சட்டென்று எழுந்து உட்கார்ந்து, “அங்கே யார் இருப்பது?” என்று கத்தினார்.

    நான் அப்படியே அசையாமல் நின்றேன். ஒரு மணி நேரம் முழுவதுமாக நான் நகரவே இல்லை. அவர் மீண்டும் படுக்கையில் படுக்கும் சத்தமும் எனக்குக் கேட்கவில்லை. அவர் அங்கேயே அமர்ந்து எதையோ கவனித்துக்கொண்டிருந்தார். பிறகு ஒரு சத்தம் கேட்டது — அந்த முதியவரிடமிருந்து வெளிப்பட்ட ஒரு மெல்லிய பயத்தின் அலறல் அது. இப்போது அவர் பயத்தில் உறைந்த நிலையில் படுக்கையில் அமர்ந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்தது; நான் அங்கே இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார் என்பதும் எனக்குப் புரிந்தது. அவர் என்னைப் பார்க்கவில்லை. என் சத்தத்தையும் அவர் கேட்கவில்லை. ஆனால் நான் அங்கே இருப்பதை அவர் உணர்ந்தார். மரணம் அங்கே நின்றுகொண்டிருக்கிறது என்பதை அவர் அப்போது உணர்ந்துகொண்டார். மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக நான் அந்தத் துணியை உயர்த்தினேன்; அதற்கடியிலிருந்து ஒரு மிகச்சிறிய ஒளிக்கீற்று வெளியேறி, அந்த கழுகின் கண்ணின் மீது விழுந்தது! அது திறந்திருந்தது — அகலமாகத் திறந்திருந்தது; அது என்னை நேராகப் பார்த்தபோது என் கோபம் அதிகரித்தது. அந்த முதியவரின் முகம் எனக்குத் தெரியவில்லை. அந்த ஒரு கண் மட்டுமே — அந்த உறுதியான நீல நிறக் கண் — தெரிந்தது; என் உடலிலிருந்த இரத்தம் பனிக்கட்டி போல உறைந்துபோனது.

    என் கேட்கும் திறன் வழக்கத்திற்கு மாறாகக் கூர்மையடைந்திருந்தது என்று நான் உங்களிடம் சொல்லவில்லையா? இப்போது என்னால் ஒரு விரைவான, மெல்லிய, அடக்கமான ஒலியைக் கேட்க முடிந்தது; சுவருக்கு அப்பால் கேட்கும் கடிகாரத்தின் ஓசையைப் போல அது இருந்தது. அது அந்த முதியவரின் இதயத் துடிப்பு. நான் அமைதியாக நிற்க முயன்றேன். ஆனால் அந்த ஒலி உரத்ததாக மாறியது. அந்த முதியவரின் பயம் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். அந்த ஒலி அதிகரிக்க அதிகரிக்க, என் கோபமும் அதிகரித்து, அது மிகுந்த வேதனையைத் தந்தது. ஆனால் அது வெறும் கோபத்தை விட மேலானதாக இருந்தது. அமைதியான இரவில், படுக்கையறையின் இருண்ட மௌனத்தில், என் கோபம் பயமாக மாறியது — ஏனெனில் இதயம் அவ்வளவு சத்தமாகத் துடித்துக்கொண்டிருந்தது, யாராவது அதைக் கேட்டுவிடுவார்களோ என்று நான் அஞ்சினேன். நேரம் வந்துவிட்டது! நான் அறைக்குள் பாய்ந்து சென்று, “சாகட்டும்! சாகட்டும்!” என்று கத்தினேன். நான் அவர் மீது பாய்ந்து, படுக்கை விரிப்புகளை அவர் தலைக்கு மேல் இறுக்கமாகப் பிடித்தபோது, ​​அந்த முதியவர் பயத்தில் உரக்கக் கத்தினார். அப்போதும் அவர் இதயம் துடித்துக்கொண்டிருந்தது; ஆனால் வெற்றி நெருங்கிவிட்டதை உணர்ந்த நான் புன்னகைத்தேன். பல நிமிடங்கள் அந்த இதயம் துடித்துக்கொண்டிருந்தது; ஆனால் இறுதியில் துடிப்பு நின்றது. அந்த முதியவர் இறந்துவிட்டார். நான் படுக்கை விரிப்புகளை அகற்றிவிட்டு, என் காதை அவர் இதயத்தின் மீது வைத்தேன். எந்தச் சத்தமும் இல்லை. ஆம். அவர் இறந்துவிட்டார்! கல்லைப் போல அசைவற்றுக் கிடந்தார். இனி அந்தக் கண் என்னை ஒருபோதும் தொந்தரவு செய்யாது!

    ஆக, நான் பைத்தியக்காரன் என்று சொல்கிறீர்களா? யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் அந்த உடலை மறைத்து வைப்பதில் நான் எவ்வளவு கவனமாக இருந்தேன் என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். முதலில் நான் தலையைத் துண்டித்தேன், பிறகு கைகளையும் கால்களையும் வெட்டினேன். தரையில் ஒரு துளி இரத்தம் கூட சிந்தாதவாறு நான் கவனமாக இருந்தேன். நான் தரையில் அமைத்திருந்த பலகைகளில் மூன்றை மேலே தூக்கி, உடலின் துண்டுகளை அங்கே வைத்தேன்.

    Share
  • அடையாத விழிகள் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    “எவ்வளவு முயற்சி செஞ்சும் இத மட்டும் பண்ணவே முடியல. நாசுவ மாரிமுத்துவ வரச்சொல்லியிருக்கோ. பார்க்கலா அவரு வந்து பூச செஞ்சு ஐஸ் பெட்டில படுக்க வெக்கும் போது அவருகிட்ட சொல்லலா. அவங்களுக்குத் தெரியும் எப்படி பண்ணனும்னு. செவ்வாக்கெழமை நைட்டு எறந்தது காலைலதா ஐஸ் பெட்டி கெடைக்கும்னு சொல்லிட்டாங்க கிட்டத்தட்ட ஒம்பது மணி நேரமாச்சு.  எழவு வீட்டுக்கு வர்ற ஒவ்வொருத்தரும் பொணம் இப்படி கண்ண தொறந்துட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லிக்கிட்டே தான் இருக்காங்க நாங்களும் ஏதேதோ செஞ்சிட்டு தா இருக்கோ. ஆனா முடிய மாட்டேங்குது. நேத்து எறந்ததும் கையை மடக்கிவெச்சு  வெள்ளத்துணி போடவே ரொம்ப சிரமமாதா இருந்துச்சு  கையெ மடக்கவே முடியல’.

    மாரிமுத்தண்ணன் காலைல ஆறு மணிக்கெல்லா ஐஸ்பெட்டியோட வந்துட்டாரு. வருண் ஓடிப்போய் பெட்டியை எறக்கினான்.  அந்த அண்ணந்தா எப்போதும் அப்பாவுக்கு முடிவெட்ட வீட்டுக்கு வருவாரு.  அதனால சின்ன வயசிலிருந்தே தெரியும்.

    “அண்ணா….. பாருங்க. அப்பா எறந்து இவ்வளவு நேரமாச்சு கண்ணு மட்டும் மூடவே மாட்டேங்குது நாங்களும் என்னெல்லாமோ செஞ்சு பார்த்துட்டோம். வாயும் பாருங்க  பல்ல கடிச்சுட்டு  இருக்காரு.  வாய மூடுறதும் சிரமமா இருக்கு.”

    “ சரி தம்பி நான் பாத்துக்குறேன். பூசைக்கு  தேங்காய் பழம் கொடுங்க.  எந்த எடத்தில பெட்டி வெக்கணும்.  வடக்கு தல வெச்சு  படுக்க வைக்கணும். அங்க கரண்ட் பாக்ஸ் இருக்கா ?”

    “இருக்குண்ணா”

    “ யாரு எறந்தாலும் வடக்குதா தல வெப்பாங்களா இல்ல வயசாகி எறந்ததால இப்படியாண்ணா”

    “இல்லப்பா பொணத்த வடக்கு தல வச்சுதா படுக்க வெப்பாங்க. வடக்கு தல வெச்சு  வாழ்ந்தவங்களுமில்ல. தெக்க தல வச்சு தேஞ்சவங்களுமில்லன்னு சொல்லுவாங்க. அதனாலதான் வீட்டுல படுக்கும் போது வடக்கு தல வெச்சுப் படுக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.”

    “ஓ….. அண்ணா இப்படி பொணம் கண்ணத்தொறந்து இருக்கக் கூடாதாமா”

    “இருப்பா”

    வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட தேகத்தை தலைப்பகுதியை மாரிமுத்துவும், கால் பகுதியை மகன் வருணும் பிடித்துத்தூக்கி ஐஸ் பெட்டியில் படுக்க வைத்தனர். ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டுவரச் சொல்லி தலையைத் தூக்கி வைத்து விட்டார். ஒரு வெள்ளை வேஷ்டி கேட்டார். ஒரு வேஷ்டியை நான்காகக் கிழித்து ஒருபகுதியைத்  தலையோடு சேர்த்து தாடைக்குக் கீழ் வழியாக இறுக்கமாகக் கட்டினார். பிறகு பொணத்தின் கண்களை மூடியபடி கொஞ்ச நேரம் கைகளால் அழுத்திப் பிடித்தார். தலைப்பகுதியை இழுத்துக்கட்டியதும் வாய் மூடியது.   கண்கள் மீது ஒரு சின்ன ஐஸ் கட்டியை  உடைத்து வைத்தார். ‘இப்போ மூடிரும் பாருப்பா’ என்று பெட்டியின் மூடியை எடுத்தார். ஐஸ் கரைந்ததும்  கண்கள் டப்பென்று  திறந்து கொண்டன, ஐஸ் கட்டியிலிருந்து வடிந்த நீர் கண்ணீர் விடுவது போல இருந்தன.

    “நான் எத்தனையோ பொணத்தப் பார்த்திருக்கே உங்க அப்பா யாரையோ ரொம்ப எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்தாரு போல அதனாலதா கண்கள் மூட மாட்டேங்கிறது. பாக்கலாம் ஐஸ் பெட்டியில வெச்சு கொஞ்ச நேரமானதும் சிலவேள கண்கள் தானா அடைஞ்சுடும். இல்ல அவரு யார ரொம்ப விரும்பி எதிர்பார்த்தாரோ அவங்க வந்துட்டாங்கனா  தானாக மூடிடு. ஒங்க அப்பாவுக்கு வீடு நெறய ஆளு இருக்கிறதுதானே ரொம்பப் புடிக்கும். உங்க அப்பாவும் நானு சின்ன வயசுல இருந்தே சிநேகிதம். அவரு மொதலாளி நானு சாதாரண நாசுவெங்கற மாதிரியெல்லா பழக மாட்டாரு. நா வந்தாலும் மொதல்ல எனக்கு வயிறு நெறைய சாப்பாடு போட்டு தா வேலயத்தொடங்கச் சொல்லுவாரு எந்த நேரத்தில யார் வந்தாலும் வயிறார சோறு போடுவாரு.”

    “உங்க அப்பச்சி சொல்லிக்கிட்டே இருப்பாங்க இவனுக்கு ராமகிருஷ்ணன்னு பேரு வச்சது தப்பா போச்சுன்னு. இராமர் குடும்பத்துக்காக பதினாலு வருசம் காட்டுக்குப் போய் கஷ்டப்பட்டது மாதிரி இவனும் குடும்பத்துக்காக கஷ்டப்படுறான். கிருஷ்ணன நம்பி மகாபாரத போர் நடந்த   மாதிரி  இவன நம்பி இவனுக்குக்கீழ ஆறு உடன்பொறந்தவங்கனு என்னெ பாக்கும்போதெல்லா  கரிசனப்படுவாங்க.”

    தங்கைங்க நாலு பேரும் அண்ணன் எறந்த சேதி கேட்டு அழுதுகொண்டே  வந்தனர். முந்தைய நாள் தான் கடைசி தங்கை வனிதாவின் இரண்டாவது பையன் கல்யாணம். மூத்த அண்ணன் இல்லாமல் நடந்த முதல் குடும்ப நிகழ்வு. அதற்கும் அவர் கலந்துகொள்ளத்தயாராகவே இருந்தார். உடல் ஒத்துழைக்கவில்லை படுக்கையை விட்டு எழவே முடியவில்லை புதிய வேஷ்டி எல்லாம் அதற்காக எடுத்து வைத்திருந்தார். திருமணத்திற்கு மொதநாள் மாப்பிள்ளை வீட்டில வீட்டு சாமி கும்பிடும்போது வனிதா கோயம்புத்தூர் வீட்டிலிருந்து வீடியோகால் பண்ணினா.  அனைவரும் அழுது விட்டனர் வீடியோகாலில் அவருடைய தேகத்தைப் பார்த்து. தினமும் சவரம் செய்து முகத்தை பளபளன்னு வைத்திருப்பவர். தாடியும் மீசையும் வளர்ந்து மீசை  வாயை மூடி கிடந்தது.  குழந்தை பெற்ற வயிறு பத்து மாதத்திற்குப் பிறகு எப்படி வெற்றிடமாகக் குழியாக இருக்குமோ அதேபோல வயிறு  குழியாக இருந்தது. விலா எலும்புகளை எண்ணிப் பார்க்கலாம். அப்படி எலும்புக்கூடாக இருந்தார். கம்பீரமாக குடும்பத்திற்கே பெரியமாமாவாக இருந்த ராமகிருஷ்ணன்  இப்போது பார்க்க முடியாத ஒரு சிதைந்த உருவமாக இருந்தார்.

    ஏன் பெரிய மாமா  என்று பெயர், தங்கைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் மனதில் எண்ணுவதற்குள் அங்கு நிற்பார். அதேபோல தங்கைகளின் பிள்ளைகளுக்கு வயசுக்கு வந்த சீரு செய்வது. கல்யாண சீருசெய்வது. நல்லது கெட்டதுக்கு பொறந்த வீட்டு சீரு செய்வதுனு எதுக்குமே சளைக்க மாட்டார். பாரபட்சம் பார்க்காம எல்லா தங்கைளுக்கும் ஒரே மாதிரி செய்வார்.  அவருக்கு படுத்த படுக்கையிலிருந்த போதும்  கவலை மாமஞ்சீருக்குத் தன்னால கலந்து கொள்ள முடியலயே என்பதுதான். மாமஞ்சீரு நல்லபடியா முடிஞ்சுதானு செய்கை மூலம் கேட்டார்.

    “நல்லபடியாக முடிஞ்சுது மாமா. ரிசப்ஷன் முடிஞ்சதும் நானே உங்கள வந்து பாக்கறே மாமா” மாப்பிள்ளை அனிருத் சொன்னார். அவர் உடனே வீடியோவை நிறுத்த சொல்லிட்டாரு. கல்யாண வீட்டில் அந்த சோக அமைதி கலையவே கொஞ்ச நேரம் ஆனது.

    நாலு தங்கச்சிக மூணு தம்பிங்க அவங்க  கொழந்தைங்க  என மகள்கள் பன்னிரெண்டு பேர் ஒவ்வொருத்தரு வீட்டிலயும் மாத்தி மாத்தி ஒவ்வொரு விசேஷம் வரும். அந்த காலத்தில சொத்து சுகம் சேர்த்த வழியில்லாம பெருசானா ஒருத்தருக்கு ஒருத்தரு ஒத்தாசயா இருக்குமேனு அப்பச்சியும் தாத்தாவும் யோசிச்சு ஏழு புள்ளகள பெத்துக்கிட்டாங்க. கரு உருவாகாமல் தடுக்க வைத்தியமெல்லா ஏது அந்த காலத்துல. ஏழு பேரும் கடைசி வரை ஒற்றுமையா இருக்கணும்ங்குறதுதா பெரிய அண்ணன் ராமகிருஷ்ணனோட ஆசையும். அம்மா அப்பா காலத்துல இருந்த ஒத்துமையும் பொருளாதாரத்தையும் நாம எதிர்பார்க்க முடியாது என்று ஏழு பேருமே இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு மேல பெற்றுக்கொள்ளவில்லை. அப்படியும் மொத்தம் பதினாலு பேர்.

    ராமகிருஷ்ணனுக்கு தனது தங்கைகளைப் பார்ப்பது அவ்வளவு புடிக்கும்.  தங்கைகளும் அதே பாசத்தோடு தான் இருப்பார்கள். அண்ணன் வந்து சபையில் நிற்பதே கௌரவமாக நினைப்பவர்கள். திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் இரண்டு மாதத்தில் படுத்த படுக்கையானது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் முக்கியத்துவமல்ல. குடும்பத்தில் யார் எதை சாதித்தாலும் பாராட்டக்கூடியவர். பாராட்டென்றால் வெறுமனே ஃபோன்ல பாராட்டறதோ நேர்ல பாராட்டுறதோ இல்ல. குடும்பமே பெருமைப்படும்படி மாதிரியான பாராட்டு. இரண்டாவது தங்கை கீதாவின் மகள் பி.எச்டி முடித்த போது குடும்ப சகிதமாக பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.   அன்றுதான் வனிதா வீட்டு கிரகப்பிரவேசம் அங்கேயே மதிய உணவிற்குப் பிறகு அனைவரும் ஒன்றாகக் கூடி கீதாவின் மகளுக்குப்  பொன்னாடை போர்த்தி கேடயம் கொடுத்து தன் குடும்பத்தில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவள் என பாராட்டினார். மற்றவர்களும்  அவரவருக்கு முடிந்த அளவிற்குப் பரிசுகள் கொடுத்தனர். குடும்பத்தினரின் வெற்றியைப் பாராட்டுவதற்கான பிள்ளையார் சுழியான நிகழ்வு அதுதான். அன்றிலிருந்து,  குடும்பத்தில் யார் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்தாலும் அவர்களுக்கு அனைவரும் பணம் திரட்டி  ஏதாவது ஒரு பரிசு பொருள் வாங்கி கொடுப்பது வழக்கமாகியது.  அதுபோக சித்தி பெரியம்மா பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து வரும்போது ஒன்றுகூடி gettogether வைத்து அனைவரும் அவரவர் வீட்டில் சமைத்ததை ஒன்றாக ஒரு வீட்டில் அமர்ந்து உண்பர். உறவுகளுக்குள் எந்த விரிசலையும் வளர விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். கடன் வாங்கியாவது முறைச் சீர்களைச் சரியாக செய்ய வேண்டும் என்பது அவரது கொள்கை. அதே போல அனைவரையும் ஒன்றாக வீட்டுக்கு அழைத்து ஒன்றாக சாப்பிட்டு தம்பி தங்கை குடும்பத்தார் நன்றாக அமர்ந்து சாப்பிடும் அழகைப் பார்க்க மிகவும் விரும்புவார். அப்பச்சியும் தாத்தாவும் இறந்து    பன்னிரெண்டு  வருடமாச்சு. ஒவ்வொரு வருடமும் அம்மாவின் இறந்த நாளன்று அனைவரையும் அழைத்து பூசை முடித்து சாப்பாடு போட்டுச் சாப்பிட வைத்து மகிழ்ந்து பிறகுதான் அவர் உண்பார்.  யார் எந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தாலும் வகை வகையாகச் சமைத்துப் போடுவதில் அவரது மனைவியும் சலிக்கவே மாட்டார். இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு கூட கீதா வந்தபோது, அவளுக்குப் பிடிக்குமே என்று இரால் வாங்கி சமைத்துச்  சாப்பிட வைத்து அனுப்பினார். வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிடாமல் போகக்கூடாது என்பது அவருடைய இலட்சியம் அவருடைய இந்த திடீர் மரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

    “எம்மகெ குடும்பப் பொறுப்பத் தோளில சுமக்க ஆரம்பிச்சுட்டா இனி எனக்கு எந்த கவலையும் இல்ல அவனோடக் கடைசி காலம் வரைக்கு அவெ தம்பி தங்கைகளைக் கைவிடமாட்டா. நா… நிம்மதியா கண்ண மூடிடுவே” என்று ராமகிருஷ்ணனோட அம்மா மகனப்பத்தி பெருமையா பேசுவாங்க .

    சிறிதுநேரம் கழித்து மாரிமுத்து மீண்டும் பெட்டியைத்  திறந்து கண்களை அடைக்க முயற்சித்தார். மூக்கு வழியாக இரத்தம் வரத் தொடங்கியது. அப்போதும் கண்கள் மூடவே இல்லை. மூன்று தங்கையும் ஒரு தம்பி குடும்பத்தாரும் வந்தனர். மற்றொரு தங்கை வந்து கொண்டிருக்கிறாள். மகள் இன்னும் வரவில்லை. எல்லோர் வாயும்  முணுமுணுத்தது.

    ‘ஒருவேள மகளப் பார்த்தா கண்கள் அடையுமோ? மகளை எதிர்பார்க்கிறாரோ என்னமோ’.

    கார் வந்து நின்றது.  காரிலிருந்து இறங்கியதும் ‘அப்பா…….. அப்பா……. என்று தெருவே கேட்கும்படி சத்தம் போட்டுக்கொண்டு வந்தாள் லட்சனா.  அவள் கதறியழுது ஓய்ந்த பிறகு அவளிடம் கூறினர் கண்களை மூடிவிட. அவளும் அழுது கொண்டே செய்தாள்.  ஒரு நிமிடம் கண்கள் மூடியபடி இருந்தன. மீண்டும் திறந்தன.  ஆனால் அவள் தொட்ட பிறகு வெளியில் நீட்டிக்கொண்டிருந்த இரண்டு பற்கள் நன்றாகத் தெரிந்தன. இது சிரிப்பா ? இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம்?

    உற்றார் உறவினர் என அனைவரும் வந்தனர். பொணம் எடுப்பதற்கான நேரம் நெருங்கியது.   நாலு மணிக்கு மயானம் செல்ல வேண்டும்.

    “சரி பொணம் எடுக்க நேரமாச்சு. மொறக்காரங்க தண்ணி எடுக்க வாங்க…” ஐந்து பேர் கிளம்பினர் ஈரத்துணியுடன் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. சுவிட்சை நிறுத்திவிட்டு ஐஸ் பெட்டியின்   மூடியைத் திறந்தார். கண்கள் அடையவே இல்லை. நன்றாக விழித்துக்கொண்டு படுத்திருப்பது போலிருந்தது.  நான்குபேர்  சேர்ந்து பொணத்தைத் தூக்கி வந்து வாசலில் போடப்பட்ட கட்டலில் குளிப்பாட்டுவதற்காகப் படுக்கவைத்தனர்.

    “அரப்பு வெக்கறவங்கல்லா வந்து வையுங்க…”

    ஒரு சின்ன பானையில் அரப்பும் இன்னொரு பானையில் தேங்காய் எண்ணெயும், ஒரு குண்டாவில் தண்ணியும் தலைமாட்டில் வைக்கப்பட்டன. ஒவ்வொருவராக வந்து இடது கையில் எண்ணெய் தொட்டு அரப்பைத்தொட்டு தலையில் வைத்து விட்டு அங்கேயே பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரில் கையை நனைத்துத் தொங்கவிடப்பட்டிருந்த துணியில் துடைத்து விட்டுச் சென்றனர்.

    “பெரியவரு கையில பணம் வெச்சு வாங்கறவங்கெல்லா வாங்குங்க…..” என்றுகூறிவிட்டு   மாரிமுத்து மேனியில் போர்த்தியிருந்த வெள்ளைத் துணியை அகற்றினார்.

    ‘சுடுகாட்டுக்கு எடுத்திட்டுப்போகும்போது கண்களை மூடிவிட்டு ஒடனே தூக்கிக்கலாம்னு மாரிமுத்து எண்ணினார். என்னமோ சொல்ல வந்து சொல்ல முடியாம போயிருப்பாரோ கண்கள் திறந்து இருக்கக்கூடாது.’

    கையில் பணம் வைத்து வாங்குவதற்காகக் கையை விரித்த போது வலது கை இறுக மூடியிருந்தது. மாரிமுத்து வருணை   அழைத்தார்.

     “இங்க பாருப்பா, அப்பா கையை இறுக்கமா மூடி இருக்காரு கையில் என்னமோ வச்சிருக்காரு.”

    விரல்களைப் பலவந்தமாக விரித்தார் ஒரு தினசரி கேலண்டர் பேப்பரை இறுக்கமாகப் பிடித்திருந்தார். வருண் அதை எடுத்து மெதுவாக விரித்துப்பார்த்தான்.  கைகள்  ஆடி ஆடி எழுதப்பட்டதுபோல எழுத்துகள் கோணல் மாணலாக இருந்தன. வருண் அக்கேலண்டர் பேப்பரை பெரிய அத்தையிடம் கொடுத்தான். பெரிய அத்தைக்குக் கண்கள் சரியாகத்தெரியாததால் அருகில் நின்றிருந்த இன்னொரு தங்கையும் எட்டிப்பார்த்தாள்.  இருவரும்  சேர்ந்து வாசித்துப் பார்த்தனர்.

    “சா….ப்பி…..ட்டு போ…ங்….க”

    என்று கிறுக்கப்பட்டிருந்தது.  வாசித்ததும் அனைவரின் அழுகை சத்தமும் அதிகமானது.

    ராமகிருஷ்ணனின் கண்கள்  மெதுவாகத் தானாகவே அடைந்தன.

    Share
  • ஆண்பார்க்க வந்தவள் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    அன்று பொது விடுமுறை. நண்பர்கள் இருவரும் வழக்கம்போல், ஒரு சினிமா தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுக்குப் பிடித்த நடிகர், கவர்ச்சியைக் காட்ட அஞ்சாத நடிகை. வேறென்ன வேண்டும்!

    “எப்போ இந்தப் பொண்ணுங்க பிரதம மந்திரி, ஜனாதிபதின்னு ஆக ஆரம்பிச்சாங்களோ, அப்பவே நமக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சுடுச்சு!”

    கலகலப்பாகவே பார்த்துப் பழகிய நண்பன் இப்படி அலுத்துக்கொள்வதைப் பார்த்த வாசுவுக்கு அதிசயமாக இருந்தது. எதுவும் பேசாது, கோபியையே பார்த்தான்.

    “எங்கம்மா காலத்திலே `கல்யாணம்’னா, பொண்ணுபாக்கறதில ஆரம்பிக்கும். இல்லியா?”

    “இப்போ மட்டும் என்னவாம்? என் தங்கைக்கும் அப்படித்தான் நடந்திச்சு. அவ குட்டைப்பின்னலை மறைக்க நீளமா ஒரு சவுரி வெச்சு.. ஏதேதோ பித்தலாட்டம்! `சாதாரணமா நட. ரொம்ப மெதுவா வேணாம். கால் நொண்டியான்னு பாப்பாங்க’, அப்படி, இப்படின்னு!”

    அவன் அங்கலாய்ப்பைக் காதில் வாங்கிக்கொள்ளாது, “எனக்குப் பாத்திருக்கிற பொண்ணு வெளிநாட்டில படிச்சு, அங்கேயே கொஞ்ச காலம் வேலையும் பாத்ததில நம்ப கலாசாரத்துக்கு ஒத்து வரமாட்டேங்குது!” என்று அங்கலாய்த்தான் கோபி.

    “மினிஸ்கர்ட்தான் போடுவாங்களா?”

    “அதில்லே. `இது என்ன கெட்ட வழக்கம், பொண்ணு பாக்கறதுன்னு? நான் என்ன, சந்தையில் விக்கற மாடா? நான் ஒத்துக்க மாட்டேன். நான் ஆண்பாக்கப்போறேன்’, அப்படின்னு வாய்க்கு வந்தபடி..,” என்று பொரிந்தான். “இவ ஆண்பாக்க நான்தான் மாட்டிக்கிட்டேன். அம்மாவோ, `நம்ப தகுதிக்கு இது பெரிய எடம்டா. நாம்பதான் கொஞ்சம் விட்டுக்குடுத்துப்போகணும்,’ அப்படின்னு எனக்கு வேப்பிலை அடிக்கறாங்க”.

    வாசு சிரிப்பை அடக்கிக்கொண்டான். “எப்படியோ, கல்யாணம் ஆனா சரி. நல்லா சம்பாதிக்கிற பொண்ணு. வாழ்க்கை ஈசியா இருக்கும். விட்டுடாதே!”

    “இப்போ நான் என்ன செய்யணும்? ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமான்னு கேட்டா?”

    “ஏதாவது மந்திரத்தைச் சொல்லு. `நான் என்ன, மைக்கல் ஜாக்சனா?’ அப்படின்னு நைசா நழுவிடு. பெண்டாட்டியைப்  பறிகுடுத்தவன்மாதிரி, இப்படி சவரம் பண்ணாம போய் நிக்காதே. பளிச்சுனு டிரெஸ் பண்ணிக்கிட்டு, குனிஞ்ச தலை நிமிராம..”.

    “ஒன்கிட்டப்போய் பேசறேனே!”

    அதற்குள் படம் ஆரம்பிக்கவே, இருவரும் தியேட்டருக்குள் நுழைந்தனர். இருட்டில் எவரெவர் காலையோ மிதிக்க, `குடிகாரனுங்க!’ என்ற வசவு கிடைத்தது.

    கோபியின் தாய் ஜானகி அவனை ஏற இறங்கப் பார்த்தாள். பட்டு குர்த்தாவில் ஜொலித்த இவனை எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காமல் போகும் என்று அவளது எண்ணம் போயிற்று.

    வாசலில் கார் நின்ற ஒலி. “வாங்க, வாங்க,” என்று கூவியபடி அவள் ஓட, கோபி எட்டிப்பார்த்தான்.

    ஜீன்ஸ் அணிந்த பெண். வயிறு தெரிய ஒரு குட்டைச்சட்டை.

    “அம்மா வரலியா?”

    “பொண்ணு பாக்கத்தான் அப்படி அக்கா, பெரியம்மா, மாமா, அத்தைன்னு பத்துப்பேர் பையன்கூட வருவாங்க. பாவம், அந்தப் பொண்ணு பயந்தேபோயிடும். ஒங்க மகனும் அப்படி பயந்துடக் கூடாது, பாருங்க! அதான் நான் மட்டும் வந்தேன்”.

    தான் ஒதுங்கிக்கொள்வதுதான் மரியாதை என்று முடிவெடுத்த ஜானகி, “கோபி! வடை, கேசரி எல்லாம் எடுத்துட்டு வாப்பா,” என்று அருமையாகக் குரல்கொடுத்தாள்.

    உள்ளேயிருந்து வந்தவன், “மேசைமேலதானே இருக்கு. அவங்களே எடுத்துச் சாப்பிடட்டுமே!  கையிலே கொண்டு குடுக்க நான் என்ன, ஹோட்டல் சர்வரா?” என்று இரைந்தான்.

    அவன் சொற்களைவிட தோற்றம் தாயை இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பளபளப்பான குர்த்தா இருந்த இடத்தில் இப்போது கசங்கிய டி-ஷர்ட்!

    “கலிகாலம்! மாடர்ன்ங்கிற பேர்ல எப்படி எப்படியோ நடக்கிறாங்க! நாம்ப ஏதாவது சொல்லப்போனா, `பழங்காலம்’னு கேலி!” என்று முணுமுணுத்தபடி உள்ளே விரைந்தாள்.

    “என் பேர் விஜ்லா (VIZLA),” என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள் அப்பெண். “நீங்க எப்போ பட்டம் வாங்கினீங்க?” என்று நேரிடையாக விஷயத்துக்கு வந்தாள்.

    “அதுவா? அது வந்து..,  நான் நாலாவது படிக்கிறப்போ வாங்கினேன். நீலக்கலர். ஜோரா பறக்கும்”.

    அவள் சிரித்தாள். “நகைச்சுவையா பேசறீங்க. எனக்குப் பிடிச்சிருக்கு”.

    “எதைப் பிடிச்சிருக்கு? என்னையா, என் பேச்சையா?”

    அவள் முகம் சிவந்தது.

    ஹை! இவளுக்கு வெட்கப்படக்கூடத் தெரியுமா? தேவலியே!

    “நான் எதுக்கு ஒங்களை ஆண்பாக்க வந்தேன், தெரியுமா?”

    “சொன்னாத்தானே தெரியும்?”

    “பொண்பாக்க வரப்போ, ஒரு பொண்ணை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தறீங்க! `இப்படி நடக்கணும், இப்படி உடுத்தணும்’னு எல்லா சொந்தக்காரப் பொண்ணுங்களும் அவளைப் பாடுபடுத்திடுவாங்க. `ரொம்பப் பேசிடாதே. வாயாடின்னு நினைச்சுக்கப்போறாங்க’ன்னு அவ வாய்க்குவேற பூட்டு. ஆம்பளைங்களுக்கும் எங்க கஷ்டம் புரிய வேணாமா? அதான் இந்த ஐடியா எடுத்தேன்”.

    அவளே தொடர்ந்தாள். “நீங்க பரவாயில்ல. ரொம்ப அலட்டிக்காம, நீங்க நீங்களாவே இருந்துட்டீங்க. இந்த டி_ஷர்ட்!” விழிகள் விரிய, அவள் சிரித்தாள்.

    அவளிடம் அவனுக்கு ஒன்றுதான் புரியவில்லை. “இது என்ன பேரு, விஜ்லான்னு?”

    “கல்யாணப் பத்திரிகையிலே போடுவாங்க. அப்போ பாத்துக்குங்க,” என்றாள் விசாலாட்சி.

    Share
  • மன்னித்து ஏற்பதா! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    மதிய இடைவேளை. அலவலக காண்டீனில் சாப்பிட்டுத் தொலைக்க வேண்டும் என்று நினைக்கும்போதே சுயபரிதாபம் பொங்கி  எழுந்தது வேலுவுக்கு.

    பின் என்ன, அவனவன் மனைவி அருமையாகச் சமைத்துக்கொடுத்ததை அவளே அருகில் இருப்பதுபோல் அனுபவித்துச் சாப்பிட, இவன் மட்டும் உப்பு அதிகமாக, அரைகுறையாக வெந்ததை அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டும். சமையலறைப்பக்கமே தலைவைத்துப் படுக்காதவனெல்லாம் அயல்நாட்டுக்கு வந்து சமையல் செய்கிறான், பாவி!

    வேலுவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளவே வந்தவன்போல் அருகில் வந்தான் சாமி.

    “இன்னும் மாமியார் வீட்டிலதான் இருக்காங்களா?” என்று அக்கறையாக விசாரித்தான்.

    அவனை ஒருமுறை சோகமாகப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டான் நம் கதாநாயகன். `தெரிந்துகொண்டே கிளறுகிறான் தடியன்!’ என்று மனதிற்குள் வைதான்.

    சாமியோ எளிதாக அந்த இடத்தைவிட்டுப் போவதாக இல்லை. “அப்படி என்னதான் சண்டை ஒங்களுக்குள்ளே?” என்று துருவினான்.

    ஒரு பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தான் வேலு. “நம்ப ஆபிசில எல்லாரும் சேர்ந்து மூணு நாள் கெண்டிங் ஹைலாந்துக்கு பிக்னிக் போனோம், இல்லியா? அப்போ..”என்றவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, “எனக்கு குளிர் தாங்கல,” என்று ஏதோ சொல்ல, நண்பன் புரிந்துகொண்டு தலையாட்டினான். “குளிருக்கு அடக்கமா மிஸ் வாங்குடன் ஒண்ணா, ஒரே ரூமில இருந்தியாக்கும்! அதுக்கு எப்பவுமே ஒன்மேல ஒரு கண்ணு!”

    “சேச்சே! போரடிக்குதுன்னு அவதான் என் ரூமுக்குள்ள வந்தா. சும்மா பேசிட்டு இருந்தோம். அவ்வளவுதான்!”

    கேலிச்சிரிப்புடன், “நம்பறேன்,” என்ற நண்பன் சற்று யோசித்து, “எவன் வத்திவெச்சானோ! இதுக்குத்தான் உள்ளூரில மாமியார் வீடு இல்லாத பொண்ணாப்பாத்து கட்டியிருக்கணும்,” என்று காலங்கடந்து முணுமுணுத்தான்.

    “ஆகிற வழியைச் சொல்லுவியா!”

    “நீ போய் கூப்பிடேன்!”

    “ஒடனே வந்துடுவாளா?”

    “லேடீஸ் அவ்வளவு சீக்கிரம் மசியமாட்டாங்க.` நீ இல்லாம வீடு வெறிச்சுனு இருக்கு. சாப்பாடே இறங்க மாட்டேங்குது’ன்னு ஏதாவது வசனம் எடுத்துவிடு”.

    “இதெல்லாம் போன தடவையே சொல்லியாச்சு”.

    “இப்படிச் சொல்லிப்பாரேன். ‘ஒன்னோட சேர்ந்து வாழ ஆரம்பிச்சப்போதான் நான் முழுமையா ஆனமாதிரி இருக்கு’, இப்படி ஒரு இளிச்சவாயன் சொன்னா எந்த மனைவிக்கும் கண் கலங்கிடும்”.

    “நம்பறமாதிரி ஏதாவது ஐடியா குடுப்பா”.

    “அட, சொல்றேன், நம்பமாட்டேங்கிறியே! ஒரு படத்தில இப்படித்தான் மனைவியை வழிக்குக் கொண்டுவர்றான் கதாநாயகன்”. அடித்துச்சொன்னான் சாமி.

    அறிவுரை பலத்தது. “அதோட, ‘ஸாரி, ஸாரி’ன்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்.  தலையைக் கலைச்சு விட்டுக்கிட்டு, மூஞ்சியைச் சோகமா வெச்சுக்க. ரெண்டு மூணு நாள் சவரம் வேண்டாம்”.

    நண்பன் சொன்னதையெல்லாம் ஒத்திகை பார்த்துக்கொண்டு, மாமியார் வீட்டுக்குப் போனான் வேலு.

    “எங்கே வந்தீங்க?”

    மனைவியின் கட்டைக்குரலும் மிரட்டலும் புதிதல்ல என்றாலும் சற்று பயம் ஏற்பட்டது. பெரிதாக ஒரு மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டான்.  “நீ இல்லாம..,” என்று ஏதோ ஆரம்பித்தான். மற்றதெல்லாம் மறந்துபோயிற்று.

    பேச்சு சப்தம் கேட்டு வெளியே வந்த மாமியார், “உள்ளே வா!” என்று மகளை ரகசியக் குரலில் அழைத்துப்போனாள்.

    “எத்தனை நாள் இங்கேயே தங்கப்போறே? போய், அவர் காலிலே விழுந்து, `என்னை மன்னிச்சு ஏத்துக்குங்க’ன்னு கெஞ்சலாச் சொல்லு”. இணையத்தில் பலரும் பார்த்ததை மாமியாரும் பார்த்திருந்தாள்.

    “யார், யாரை மன்னிக்கிறது? நானா தப்பு பண்ணினேன்?” குரல் கத்தலாக வெளிப்பட்டது. “நானா வீட்டில பெண்டாட்டியை விட்டுட்டு, கண்டவளோட வெளியூரில  ரும் போட்டுத் தங்கினேன்?”

    “என்ன இருந்தாலும், நீ  ஒரு பொண்ணு. விட்டுக்குடுக்கறதுதான் வாழ்க்கை”. மாமியார் தத்துவத்தில் இறங்கினாள். “இந்தமாதிரி சமாசாரத்துக்கெல்லாம் அப்பாவை நான் பிரிஞ்சிருந்தா, நீ பிறந்திருக்கவே முடியாது. ஒங்கப்பா ஆடாத ஆட்டமா!”

    சற்றுநேரம் அங்கே  மௌனம் நிலவியது. ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த வேலு மனைவியின் பதில் என்னவாக இருக்கும் என்று காதைத் தீட்டிக்கொண்டான்.

    “சரிம்மா. நீ இவ்வளவு சொல்றதால போறேன். ஆனா, செய்யாத தப்புக்காக மன்னிப்பெல்லாம் கேக்கமாட்டேன்”.

    தான் ஸாரி சொல்லவேண்டிய அவசியமே இல்லாமல் செய்துவிட்ட மாமியார்மேல் அன்பு சுரந்தது வேலுவுக்கு.

    “நீங்களும் எங்ககூட வாங்களேன், அத்தை!” என்றான் உபசாரமாக. மகளைவிட அனுபவம் அதிகம் இருந்ததால் அவளுடைய சமையல் இன்னும் ருசியாக இருக்கும் என்று சப்புக்கொட்டியது அவன் நாக்கு.

    Share
  • ஆண்களை விட அறிவார்ந்த சிறுமிகள் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    ஆண்களை விட அறிவார்ந்த சிறுமிகள் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மொழி பெயர்ப்பாளர்
    முனைவர் ப. செல்வி,
    இணைப்பேராசிரியர்
    ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் 
    கலை அறிவியல் கல்லூரி,
    கோவை.

    லியோ டால்ஸ்டயின் மொழிபெயர்ப்பு சிறுகதை

    அது ஒரு முன்கூட்டியே வந்த ஈஸ்டர் பண்டிகைக் காலம். பனிச்சறுக்கு விளையாட்டுகள் அப்போதுதான் முடிவடைந்திருந்தன; வீடுகளின் முற்றங்களில் பனி இன்னும் உறைந்திருந்தது; கிராமத்துத் தெருக்களில் நீர் ஓடைகளாகப் பெருகி ஓடிக்கொண்டிருந்தது.

    வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், இரண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட ஒரு சந்தில் தற்செயலாகச் சந்தித்தனர். அந்த இடத்தில், பண்ணை முற்றங்கள் வழியாக ஓடிவந்த அழுக்கு நீர் தேங்கி, ஒரு பெரிய குட்டையை உருவாக்கியிருந்தது. அச்சிறுமிகளில் ஒருத்தி மிகவும் சிறியவள்; மற்றவள் அவளைவிடச் சற்றுப் பெரியவள்.

    அவர்களின் தாய்மார்கள் அவர்கள் இருவருக்கும் புதிய கவுன்களை அணிவித்திருந்தார்கள். சிறியவள் நீல நிற ஆடையையும், பெரியவள் மஞ்சள் நிற அச்சுப் பதித்த ஆடையையும் அணிந்திருந்தனர்; இருவர் தலையிலும் சிவப்பு நிறத் துண்டுகள் கட்டப்பட்டிருந்தன. அவர்கள் இருவரும் தேவாலயத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் சந்தித்தனர். முதலில் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் புதிய ஆடைகளின் அழகைக் காட்டிக்கொண்டனர்; பின்னர் விளையாடத் தொடங்கினர். சிறிது நேரத்தில், அந்தக் குட்டை நீரில் இறங்கி விளையாட அவர்களுக்கு ஆசை ஏற்பட்டது. சிறியவள் தன் காலணிகள் மற்றும் காலுறைகளுடனேயே குட்டைக்குள் இறங்க முயன்றபோது, ​​அவளைவிடப் பெரியவள் அவளைத் தடுத்து நிறுத்தினாள்:

    “இப்படி உள்ளே செல்லாதே, மலாஷா,” என்று அவள் கூறினாள். “உன் அம்மா உன்னைக் கண்டிப்பார். நான் என் காலணிகளையும் காலுறைகளையும் கழற்றிவிடுகிறேன்; நீயும் உன் காலணிகளைக் கழற்றிவிடு.”

    அவர்கள் அவ்வாறே செய்தனர். பின்னர், தங்கள் ஆடைகளைச் சற்று மேலே தூக்கிப் பிடித்துக்கொண்டு, அந்தக் குட்டை நீர் வழியாக ஒருவரை நோக்கி ஒருவர் நடக்கத் தொடங்கினர். நீர் மலாஷாவின் கணுக்கால் வரை உயர்ந்தது; உடனே அவள்,

    “நீர் ஆழமாக இருக்கிறது, அகூல்யா! எனக்குப் பயமாக இருக்கிறது!” என்று கூறினாள்.

    “வா,” என்று மற்றவள் பதிலளித்தாள். “பயப்படாதே. நீர் இதைவிட ஆழமாகாது.” அவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வந்தபோது, ​​அகூல்யா,

    “ஜாக்கிரதை, மலாஷா! நீரைத் தெறிக்கவிட்டுவிடாதே. கவனமாக நடந்து வா!” என்று கூறினாள்.

    அவள் அவ்வாறு சொல்லி முடிப்பதற்குள், மலாஷா தன் காலை ‘தொப்’பென்று நீரில் ஊன்றினாள்; அதனால் நீர் தெறித்து நேராக அகூல்யாவின் ஆடையின் மீது விழுந்தது. அகூல்யாவின் ஆடை மட்டுமல்லாமல், அவளுடைய கண்களிலும் மூக்கிலும் கூட நீர் தெறித்தது. தன் ஆடையின் மீது படிந்த கறைகளைக் கண்டதும், அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது; அவள் மலாஷாவை அடிப்பதற்காக அவளைத் துரத்தி ஓடினாள். மலாஷா பயந்துபோனாள்; தான் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டதை உணர்ந்த அவள், அவசரம் அவசரமாகக் குட்டையிலிருந்து வெளியேறி, வீட்டுக்கு ஓடிச் செல்லத் தயாரானாள். சரியாக அந்த நேரத்தில், அகுல்யாவின் தாய் அவ்வழியே சென்றுகொண்டிருந்தார். தன் மகளின் பாவாடையில் சேறு தெறித்திருப்பதையும், அவளது சட்டையின் கைகள் அழுக்கடைந்திருப்பதையும் கண்ட அவர்,

    “ஏ சேட்டைக்காரி, அழுக்குப்பிடித்த பெண்ணே! நீ என்னதான் செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்டார். “மலாஷா வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தாள்,” என்று அப்பெண் பதிலளித்தாள்.

    இதைக் கேட்டதும், அகுல்யாவின் தாய் மலாஷாவைப் பிடித்து, அவளது கழுத்தின் பின்பக்கத்தில் ஓங்கி அடித்தார். மலாஷா தெருவின் மறுமுனை வரை கேட்கும் அளவுக்கு உரக்கக் கதறி அழத் தொடங்கினாள். உடனே அவளது தாயார் வெளியே ஓடிவந்தார்.

    “என் பெண்ணை எதற்காக அடிக்கிறாய்?” என்று கேட்ட அவர், தன் அண்டை வீட்டுக்காரப் பெண்ணை வசைபாடத் தொடங்கினார். ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தைக்கு இட்டுச்செல்ல, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. ஆண்களும் வெளியே வர, தெருவில் ஒரு கூட்டம் திரண்டது; அனைவரும் கூச்சலிட்டனரே தவிர, ஒருவர் பேச்சை மற்றொருவர் காதுகொடுத்துக் கேட்கவில்லை. அவர்கள் அனைவரும் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர்; ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரைத் தள்ளிவிட, சண்டை கைகலப்பாக மாறும் நிலைக்கு மிக நெருக்கமாக வந்தது. அப்போது அகுல்யாவின் வயதான பாட்டி, அவர்கள் கூட்டத்திற்குள் நுழைந்து, அவர்களை அமைதிப்படுத்த முயன்றார்.

    “நண்பர்களே, நீங்கள் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? இப்படி நடந்துகொள்வது நியாயமா? அதுவும் இப்படிப்பட்ட ஒரு நாளில்! இது கொண்டாடி மகிழவேண்டிய நேரம்; இது போன்ற மடத்தனமான செயல்களுக்கு உரிய நேரமல்ல.”

    அவர்கள் அந்த மூதாட்டியின் பேச்சைக் கேட்கவில்லை; சொல்லப்போனால், அவளைத் தள்ளிவிட்டுத் தடுமாறவும் செய்துவிட்டார்கள். அக்குல்யாவும் மலாஷாவும் தாமே முன்வந்திருக்காவிட்டால், அந்த மூதாட்டியால் கூட்டத்தை அமைதிப்படுத்தியிருக்கவே முடியாது. பெண்கள் ஒருவரையொருவர் கடுமையாகத் திட்டிக்கொண்டிருந்த வேளையில், அக்குல்யா தன் ஆடையிலிருந்த சேற்றைத் துடைத்துவிட்டு, மீண்டும் அந்தச் சேற்றுக்குட்டைக்குச் சென்றாள். அவள் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு, சேற்றுக்குட்டையின் முன்புறமிருந்த மண்ணைக் கீறி அகற்றி, நீர் வெளியேறித் தெருவில் பாய்வதற்கான ஒரு வாய்க்காலை உருவாக்கத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் மலாஷாவும் அவளுடன் சேர்ந்துகொண்டாள்; ஒரு மரச்சில்லின் உதவியுடன் அந்த வாய்க்காலைத் தோண்ட அவளுக்கு உதவினாள். ஆண்கள் சண்டையிடத் தொடங்கிய அதே வேளையில், அந்தச் சிறுமிகள் உருவாக்கிய வாய்க்கால் வழியாக நீர் பெருக்கெடுத்து ஓடி, அந்த மூதாட்டி ஆண்களை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்த இடத்தையே நோக்கிப் பாய்ந்தது. அந்தச் சிறுமிகள் நீரைப் பின்தொடர்ந்து ஓடினார்கள்; அந்தச் சிறிய நீரோடையின் இருபுறமும் ஆளுக்கொருத்தியாக ஓடினார்கள்.

    “அதைப் பிடி, மலாஷா! அதைப் பிடி!” என்று அக்குல்யா உற்சாகமாகக் கூவினாள்; மலாஷாவோ சிரிப்புப் பொறாமையால் பேசவே முடியாமல் போனாள்.

    மிகுந்த மகிழ்ச்சியுடனும், தங்கள் நீரோடையில் மிதந்து சென்ற அந்த மரச்சில்லைக் கவனித்துக்கொண்டும், அந்தச் சிறுமிகள் நேராக ஆண்கள் கூட்டத்திற்குள்ளேயே ஓடிச் சென்றார்கள். அவர்களைக் கண்ட அந்த மூதாட்டி, ஆண்களைப் பார்த்து இவ்வாறு கூறினாள்:

    “உங்களுக்குச் சற்றும் வெட்கமாக இல்லையா? இந்தச் சிறுமிகள் தாங்கள் சண்டையிட்டதை முற்றிலுமாக மறந்துவிட்டு, இப்போது மகிழ்ச்சியாக ஒன்றிணைந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது, ​​நீங்கள் மட்டும் இவர்களைக் காரணமாக வைத்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டிருக்கிறீர்களே! எத்துணை அன்பான பிஞ்சு உள்ளங்கள்! இவர்கள் உங்களைவிட அதிக ஞானம் படைத்தவர்கள்!”

    அந்த ஆண்கள் அந்தச் சிறுமிகளைப் பார்த்தார்கள்; தங்கள் செயலுக்காக வெட்கித் தலைகுனிந்தார்கள். பின்னர், தங்கள் மடத்தனத்தை நினைத்துத் தாங்களே சிரித்துக்கொண்டே, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

    “நீங்கள் மனம் மாறி, சிறுபிள்ளைகளைப் போல ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்திற்குள் ஒருபோதும் பிரவேசிக்கவே முடியாது.”

    Share
  • விதி

     

    காலை நேரத்தில் மட்டும் இன்னும் இரண்டு கைகள் சேர்த்து முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    சாந்தாம்மா வேலைக்கு வருவதற்குள் பரபரவென, காலை சிறுதானிய கஞ்சி, கருவேப்பிலைத் தொகையல், மதிய உணவிற்கு சாம்பார், காய், கீரை என அனைத்தையும் சமைத்து முடித்தாக வேண்டும். இதற்கிடையில் பால்காரர் வந்தால் பால் வாங்கவும், காய்காரம்மா வந்தால் வாங்குவதும், கணவர்,  “கங்கா அதெங்கே, இதெங்கே” என்று கேள்விக் கணைகள் தொடுத்தால் அதற்கு விடை சொல்லவும்  வேண்டும். பால் காய்ச்சி காபி தயாராகணும். இதற்கு நான்கு கைகளே போதாதென்றாலும் இரண்டு கைகளுடன் வேகமாகச் செய்து பழகிக் கொண்டாகிவிட்டதற்கு என்னையே பாராட்டிக் கொள்ளத்தான் வேண்டும். ஆகா இந்த நேரத்தில் போன் வேறு அடித்துக் கொண்டிருக்கிறதே. யாராக இருக்கும்?

    இந்த நேரத்தில் என் அன்பு மகள் இனியாதான் கூப்பிடுவாள். மகப்பேறியல் மருத்துவத்தில் உயர் கல்வியான எம்.டி. டி,ஜி.ஒ படித்துவிட்டு அரசு மருத்துவமனையில் ராஜஸ்தானில் பணிபுரிகிறாள். ஆனாலும் இன்று வெள்ளிக்கிழமை, அவளுக்கு போர்ட் மீட்டிங் இருக்குமே, மாலையில்தானே பேசுவாள். பால் பொங்கும் நிலையில் ரொம்ப நேரமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. பார்த்துக் கொண்டேயிருந்தால் இப்படித்தான் அப்படியே அசங்காமல் இருக்கும், சற்று நகர்ந்தால் போதும் புசுபுசுவென்று பொங்கிவிடும். போன் அடித்து ஓய்ந்துவிட்டது. பாலை இறக்கிவிட்டுப் போய் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன் அமைதியாக நின்று கொண்டேன்.

    இனியாதான் கூப்பிட்டிருக்கிறாள். கார் ஓட்டும்போது கூப்பிட்டிருப்பாள்போல. எப்போதும் கண்மூடித்தனமாக வேகமாக ஓட்டுபவள் என்பதால் கார் ஓட்டும்போது போன் பேசக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறேன்.  ஆனாலும் ஏதாவது முக்கியமான விசயமாக இருக்குமோ? சரி போன் செய்து பார்க்கலாம் என்று டயல் செய்தேன்.  போன் முழுவதும் அடித்து ஓய்ந்துவிட்டது. மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்திருப்பாள். மீட்டிங் ஆரம்பித்திருக்கும். ஓய்வு நேரத்தில் அவளே கூப்பிடும் வரை காத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

    வேலையெல்லாம் முடித்துவிட்டு ஓய்வாக வந்து உட்கார்ந்த மறுநொடி மகளின் நினைவுதான் வந்தது. கொஞ்ச நாட்களாக அவள் ஏதோவொரு குழப்பத்திலேயே இருக்கிறாள். அழகான பெண் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டோடு நல்ல ஆளும் அமைந்துவிட்ட பின்புதான் அவளை ராஜஸ்தானில் விட்டுவிட்டு மதுரைக்குத் திரும்பினேன். மருமகன், கதிரவன் இந்திய இராணுவத்தில் உயர் பதவியில் இருப்பவர். மரியாதைக்குரிய பணி, வீட்டில் பாதுகாப்பு, எல்லா வேலைக்கும் கூப்பிட்ட குரலுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். தன் மகளையும், மனைவியையும் பொக்கிசமாக வைத்துப் பார்த்துக்கொள்கிறார். ஆனால் மாப்பிள்ளை அடிக்கடி காம்ப் என்று சென்றுவிட்டால் திரும்புவதற்கு வாரக்கணக்காகவோ அல்லது பல நேரங்களில் மாதக்கணக்காகக் கூட ஆகலாம். மற்றபடி வேறு எந்தக் குறையும் இல்லை அவளுக்கு.

    என்றாலும் சில நாட்களாக அவளுக்கு அந்தக்  கனவு அடிக்கடி வந்து அவளைக்  குழப்பிக்கொண்டிருக்கிறது. ஒருமாதம் முன்னால் ஒருநாள் காலையில் ஏழு மணிக்கே போனில் அழைத்தவள் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள். பதறிப்போய் விட்டேன் நான்.

    “அம்மா, இன்று விடிகாலையில் அப்படியொரு கெட்ட கனவு கண்டேன்மா. விடியற்காலை கனவு பலிக்கும்னு நீதானே சொல்லுவே. அதான் ஒரே டென்சனா இருக்கு”

    “அப்படி என்னம்மா கனவு அது. நீதான் அதெல்லாம் மூட நம்பிக்கைன்னு சொல்லுவியே. இப்ப என்னாச்சு”

    “இல்லம்மா, இது கனவு மாதிரியே இல்லம்மா. எதோ நேரில் பார்த்த காட்சி போலவே தெளிவா இருந்துச்சி. விடியற்காலம் அப்பவே முழிச்சிக்கிட்டேன். ஒரு வேலையும் ஓடல. பயமா இருக்குமா”

    “என்னடா இது. டாக்டருக்குப் படிச்ச பொண்ணு ஒரு கனவுக்கா  இப்படி பயந்துடுவே. அப்படி என்னதான் கனவு அது?”

    “அம்மா, வீட்டில் ஒரே கூட்டமா இருக்கு. ஹால்ல ஒரு பெரிய பெட்டி வந்து இறங்குது. எல்லோரும் கூச்சல் போடுறாங்க. நான் மட்டும் அழாமல் அப்படியே நிற்கிறேன். கதிரோட அலுவலகத்திலிருந்து நிறைய பேர் வந்திருக்காங்க. அந்தப் பெட்டியில் என்ன இருக்குன்னு பார்க்க முயற்சி செய்தேன். கடைசிவரை பார்க்கவே முடியல”

    “அடடா, என்னம்மா இது. இப்ப இந்தியா – பாகிஸ்தான் போர் நடக்குதில்ல. அதையே நினைச்சுக்கிட்டு படுத்திருப்பே. மாப்பிள்ளையும் பிசியா இருக்கிறதாலே நீ எதையோ நினைத்து குழம்பிட்ட போல. அதெல்லாம் ஒன்னும் இருக்காதும்மா. நிம்மதியா இருடா” என்று சொல்லிவிட்டாலும் பெற்ற தாயான என் மனதிலும் மகளின் இந்தக் கனவு பாரமாக அழுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

    இருப்பது ஒரே பெண், இராணுவ மாப்பிள்ளை வேண்டாம், அதுவும் ராஜஸ்தானில்  என்றுதான் கூறிக்கொண்டிருந்தேன். அவ்வளவு தொலைவு சென்று மகளை அடிக்கடிப் பார்க்க முடியாதே என்ற வருத்தம்.  அப்பா போலவே தன் கணவனும் இராணுவத்தில் பணியாற்றுவதில் அவ்வளவு பெருமை இனியாவிற்கு. அம்மாவானாலும் என் பேச்சு எடுபடாமல் போய்விட்டது. மாப்பிள்ளையின் குணம் சொக்கத்தங்கம் என்று அப்பாவும், மகளும் சேர்ந்துகொண்டு ஒரே பிடிவாதமாக அதே மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து விட்டார்கள்.

    மாப்பிள்ளை கதிரவனின் சுறுசுறுப்பான, கம்பீரமான தோற்றம்  அழகு தேவதையான என் மகளுக்குப் பொருத்தமாக இருப்பதால் எனக்கும்  பிடித்துவிட்டது. மாப்பிள்ளையின் குடும்பத்தில் எல்லா ஆண்களும்  பரம்பரையாக இராணுவத்தில் உயர் பதவி வகிப்பவர்கள். மாப்பிள்ளையும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதாவது தனது 22 வயதிலேயே ‘பரம் வீர் சக்ரா’ விருது பெற்றிருந்தார். அவ்விருதைப் பெற்றவர்களில் மிகவும் இளையவர்  இவர்தான். இந்தியா, பாகிஸ்தான் போரில் இவர் செயல்பட்ட விதத்தைப் போற்றும் வகையில் இந்த விருது கதிரவனுக்கு வழங்கப்பட்டது. எனவே அப்படிப்பட்ட மாப்பிள்ளையை யார் வேண்டாம் என்று சொல்ல முடியும்?

    திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் கதிரவன் எல்லைப் பாதுகாப்பில் இருந்தபோது, எதிரிகளுடன் ஏற்பட்ட மோதலால் பதுங்கு குழியில் இருந்தவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்பதில் துடிதுடித்துப் போய் விட்டாள். அரசு வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று அவளுடன் தங்கியிருந்த என்னால் அவளை சமாதானப்படுத்தவே முடியவில்லை. தந்தை உடனிருந்து தைரியம் சொன்னதால் அமைதியானாள். நல்ல வேளையாக ஒரு சில நாட்களிலேயே கதிரவன் திரும்பி வந்து வயிற்றில் பாலை வார்த்தார்.

    ***

    ராஜஸ்தான் செல்வதற்கு விமானத்தில் அடுத்த நான்கு நாட்களில் டிக்கெட் போட்ட பின்புதான் மனம் ஆறுதலடைந்தது.  அப்பாவும் மகளைப் பார்க்க உடன் வருவார் என்றுதான் பார்த்தேன். ஆனாலும் அவர் பணி ஓய்வு பெற்ற பின்பும் எப்போதும் ஏதோவொரு சமூகச் சேவையில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதன் நிவாரணப் பணிகளில் ஒத்தாசையாக இருப்பதற்காகச் சென்று கொண்டிருக்கிறார். எப்போதும் சுறுசுறுப்பாக அவர் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கவே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அப்பாவைப் பார்த்தால் இனியா மகிழ்ச்சியாக இருப்பாள் என்றுதான் கூப்பிட்டும் பார்த்துவிட்டேன். 10 நாட்களுக்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார். இனியாவிடம் சொன்னேன். அவள் குரலில் மகிழ்ச்சி இருந்தாலும், அதில்  ஒரு சலிப்பும் இருந்தது. மாப்பிள்ளை கேம்ப்பிலிருந்து திரும்புவதற்குப் பதினைந்து நாட்கள் ஆகும் என்றாள். அதற்குள் நான் சென்று அவளுடன் சில நாட்கள் இருந்தால் அவள் இயல்பு நிலைக்கு வந்துவிடலாம் என்று நம்பினேன்.

    இதோ, இனியாவுக்கும் பேத்தி அனன்யாவுக்கும் பிடித்த பலகாரங்கள் மற்றும் சட்டை துணிமணிகள் தயார். என் கணவருக்கும் தொக்கு, ஊறுகாய் என்று போட்டு வைத்தாகிவிட்டது. மறுநாள் மகளையும், பேத்தியையும் காணப்போகும் மகிழ்ச்சியில் மனம் துள்ளிக் குதித்தது.

    இந்த நேரம் பார்த்தா இப்படியொரு செய்தி வரவேண்டும்? என் அம்மா குளியலறையில் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் உடனே கிராமத்திற்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. தம்பியும், மனைவியுடன் மகளைப் பார்க்க அமெரிக்கா சென்றுவிட்டதால் அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேறு யாரும் இல்லாததால் தவிர்க்க முடியவில்லை. மகளுக்குத் தகவல் சொல்லக்கூட நேரம் இல்லாமல் கணவனிடம் சொல்லி இனியாவிற்கு போன் செய்யச் சொல்லிவிட்டு கிளம்ப வேண்டியதாகிவிட்டது. காரில் போகும் வழியெல்லாம் அம்மாவின் நினைவு ஒருபுறம் இருந்தாலும் மகளுக்கு மிகவும் ஏமாற்றமாகியிருக்குமோ என்றும் கவலையாக இருந்தது.

    அடுத்த ஒரு வாரம் அம்மாவுடன் மருத்துவமனையில் இருந்துவிட்டு பின்னர் வீட்டில் கொண்டுவந்து விட்டு நல்ல கேர்டேக்கர் கிடைக்கும்வரை உடன் தங்க வேண்டியதாகிவிட்டது. பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. இடையில் மகளிடம் ஒரு சில முறைகள் பேசியபோதும் அவளிடம் பழைய உற்சாகம் இல்லை.

    நான் ராஜஸ்தான் கிளம்புவதற்கு விமான பயணச் சீட்டு ஏற்பாடு செய்தாகிவிட்டது. இன்னும் மூன்று நாட்கள்தான். நேரில் பார்த்து ஆறுதலாகப் பேசி அவள் மனதில் உள்ளதை அறிந்துகொண்டால் பின் மெல்ல சமாதானம் செய்துவிடலாம். முடிந்தால் அவளை ஊருக்குச் கூட்டிவந்து ஒருமாதமாவது வைத்திருந்து அனுப்ப வேண்டும் என்று மனது கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது.

    காலை ஒன்பது மணிக்கு விமான நிலையம் செல்லவேண்டும். இரவெல்லாம் சரியான உறக்கமில்லை. விடியற்காலையில்  என்னையறியாமல் கண்ணயர்ந்துவிட்டேன்.

    அருகில் யாரோ தோளைத்தட்டி அம்மா .. அம்மா என்று அழைக்கிறார்கள்.

    “அட இனியா செல்லம், நீயே இங்கே வந்திட்டியா. அம்மாவுக்காக காத்திருந்து விட்டு நீயே நேரில் வந்துவிட்டாயா கண்மணி. நல்ல வேளை. நம்ம வீட்டிற்கு வந்திட்ட இல்லையா. இனிமேல் பாரேன், எல்லாமே சரியாகிவிடும். குட்டிப் பாப்பா எங்கே காணோம். தூங்கிட்டாளா. என்ன ஆச்சு, சொல்லாம கொள்ளாம திடீர்ன்னு வந்துட்ட. சரி, சரி பரவாயில்லை. மாப்பிள்ளை வரும்வரை நீ இங்கேயேதான் இருக்கணும். சரியா” என்று படபடவென கொட்டித் தீர்த்தபோது, இனியா ஒன்றும் பேசாமல் அமைதியாக பார்த்துக்கொண்டே நிற்கிறாள். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது.

    “என்னம்மா .. என்னம்மா .. என்னாச்சுடா தங்கம். ஏன் இப்படி …..” என்று சத்தமாக நான்  படபடக்கவும் அருகில் இருந்த கணவர் திடுக்கிட்டு விழித்தார்.

    “கங்கா என்னாச்சுமா?  ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் இப்படிப்  புலம்பற. போய் மகளோட சந்தோசமா தானே  இருக்கப் போற?  அதுக்குள்ள என்ன ஆச்சு உனக்கு. கிளம்பு நேரத்தோட” என்றார்.

    நான் அவர் கைகளை விலக்கினேன். “இல்லைங்க. இனியா இங்க வந்துட்டாளே.. இதோ என் பக்கத்தில் இருந்தாளே.. இதோ இப்பதான் என்னைத் தொட்டு அம்மா.. அம்மான்னு கூப்பிட்டாளே. எங்கே போனாள்?  கண்ணம்மா விளையாடாதே . எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாய். வெளியே வாடா கண்ணு” என்று கட்டிலை விட்டு இறங்கிப்  பரபரவென வீடு முழுக்கத் தேட ஆரம்பித்தேன்.

    ஆனால் அவர், “ஏய் என்ன பைத்தியமா உனக்கு. நான் சொல்லிட்டே இருக்கேன். நீ என்னமோ இனியா வந்தாள்னு உளறிக்கிட்டிருக்கே. போய்ப் பார்.  கதவு பூட்டியிருக்கு. அப்படின்னா அவ என்ன மாயாவியா, அப்படியே உள்ளே நுழைந்து வருவதற்கு” என்று சொல்லிச் சிரிக்க, எனக்கு மட்டும் ஏனோ சிரிப்பே வரவில்லை.

    இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. வீட்டிற்குள் எங்கோதான் என் இனியாக் குட்டி இருக்கிறாள் என்றே தோன்றுகிறது…

    மெல்ல இயல்பு நிலைக்கு நான் வர முயன்றபோது, போன் அடித்தது. அப்போது விடியற்காலை ஐந்து மணி. இந்த வேளையில் யாராக இருக்கும்? கடவுளே அம்மாவுக்கு ஏதும் ஆகியிருக்கக் கூடாதே என்ற படபடப்புடன் போனை எடுத்தேன்.

    புதிய எண்ணிலிருந்து வந்த அழைப்பு. ஒன்றும் புரியாமல் “ஹலோ, யாருங்க” என்றேன்.

    போனில் வந்த செய்தி தலையில் இடியென இறங்கியது. “என்னது. என்னது, என்ன சொல்றீங்க.. நீங்க யாரு. ஏதோ தப்பான நம்பருக்கு கூப்பிட்டிருக்கீங்க. இல்லை .. இல்லை” என்றவாறு மயங்கிச் சரியப் போனேன். சட்டென்று கைபேசியைப் பிடுங்கிய என் கணவர், பொறுமையாகக் கேட்டுவிட்டு “ஐயோ இனியா, என் தங்கம்..” என்று அலற ஆரம்பித்துவிட்டார்.

    இரவுப் பணி முடிந்து வீடு திரும்பும்போது இனியாவின் கார் மலைப்பகுதியில் ஒரு வளைவில் கட்டுப்பாடில்லாமல் உருண்டு விழுந்துவிட்டதாம். அந்த இடத்திலேயே அவள் உயிர் பிரிந்து விட்டதாம்.

    என்னென்னவோ நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு,  தன்னுடைய முடிவைத்தான் காட்சியாகக் கனவில் பார்த்திருக்கிறோம் என்று தெரியாமலே போயிருக்கிறது. விதியின் விளையாட்டை யாரால்தான் கணிக்க முடிகின்றது?

    மாப்பிள்ளையின் நிலைதான் மிகவும் பரிதாபமாக இருந்தது. அவருடைய பெற்றோர் அவரைச் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள். குழந்தையை அங்கு விட்டுவிட்டு வர மனம் இடங்கொடுக்கவில்லை. இதைப்பற்றி விவாதிக்கும் மன நிலையிலும் அவர்கள் இல்லை. குழந்தையை எடுத்துக்கொண்டு நாங்கள் கிளம்பத் தயாரானபோதுதான் சுயநினைவு வந்தவராக மாப்பிள்ளை ஓவென்று கதற ஆரம்பித்துவிட்டார். எத்தனையோ மரணங்களை நேரில் சந்தித்தவர். தனக்கென்று ஒரு இழப்பு வரும்போது அதெல்லாம் மறந்து ஒரு சாதாரண மனிதனைப்போல மாறிவிடுவதுதானே மனித இயல்பு. கிடைத்தற்கரிய ஒரு பொக்கிசத்தை இழந்துவிட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர இயலாமல் தவிப்பதைக் காணும்போது ஈரக்குலையெல்லாம் நடுங்கத்தான் செய்கிறது. ஆனாலும் வேறு என்னதான் செய்ய முடியும்?

    சம்பந்தி வீட்டாரிடம் ஒருவழியாகச் சமாளித்து குழந்தையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டோம். அவர்களும் சில நாட்களுக்குப் பிறகு நேரில் வந்து மற்ற விசயங்களைப் பேசிக்கொள்ளலாம் என்றிருக்கிறார்கள். அடுத்து நடக்கப்போவதை இறைவன்தான் முடிவு செய்ய வேண்டும்.

    இன்று அந்த இரண்டு வயதுக் குழந்தை அனன்யாவைக் கையில் வைத்துக்கொண்டு இதயத்தில் பெரும் பாராங்கல்லைச் சுமந்தபடி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மகளை இழந்த துக்கத்தை எங்கள் பேத்தியான குட்டி இனியாதான் இனித்  தீர்த்து வைக்கவேண்டும். விதி வலியது, என்றாலும் நம்பிக்கைகள்தானே நம்மைப் பிழைக்க வைத்திருக்கிறது!

    ***

     

    Share
  • சார்லஸ் டிக்கன்ஸ்  – ஒரு துணைச்சித்திரம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மொழி பெயர்ப்பாளர்

    முனைவர் ப. செல்வி,
    இணைப்பேராசரியர்
    ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் 
    கலை அறிவியல் கல்லூரி,
    கோவை.

    “சிட்னி,” என்று அதே இரவில்—அல்லது விடியற்காலையில்—திரு. ஸ்ட்ரைவர் தன் உதவியாளனிடம் கூறினார்; “இன்னொரு கிண்ணம் ‘பஞ்ச்’ (punch) பானம் கல; நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்.” அந்த இரவிலும், அதற்கு முந்தைய இரவிலும், அதற்கு முந்தைய இரவிலும்—இப்படித் தொடர்ந்து பல இரவுகளாக—சிட்னி இரவும் பகலும் பாராமல் கடுமையாக உழைத்திருந்தான்; நீண்ட விடுமுறைக்காலம் தொடங்குவதற்கு முன், திரு. ஸ்ட்ரைவரின் அலுவலக ஆவணக் குவியல்களை முழுமையாகச் சீர்செய்து முடிப்பதே அவனது பணியாக இருந்தது. அந்தச் சீரமைப்புப் பணி இறுதியாக முடிவடைந்தது; ஸ்ட்ரைவரின் நிலுவைப் பணிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக முடிக்கப்பட்டன; நவம்பர் மாதம் வரும்வரை—அதன் வளிமண்டலப் பனிமூட்டங்களையும், சட்டரீதியான சிக்கல்களையும் சுமந்து வந்து, மீண்டும் வருமானத்தை ஈட்டித் தரும்வரை—அனைத்துப் பணிகளும் முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிட்டன. இவ்வளவு தீவிரமாக உழைத்ததனால் சிட்னிக்கு உற்சாகம் ஏதும் கூடிவிடவில்லை; அதே சமயம், அவனது போதையும் குறைந்துவிடவில்லை. அந்த இரவை எப்படியோ கடந்துவர, அவன் தன் தலையில் ஈரத் துண்டால் ஒத்தடம் கொடுக்கும் கூடுதல் முயற்சி தேவைப்பட்டது; அந்த ஒத்தடத்திற்கு முன்னதாகவே, அதற்குச் சமமான கூடுதல் அளவு மதுவை அவன் அருந்தியிருந்தான். இப்போது அவன் தன் தலைப்பாகையை உருவி, கடந்த ஆறு மணி நேரமாக அவ்வப்போது நனைத்துக்கொண்டிருந்த நீர் நிறைந்த பாத்திரத்திற்குள் வீசியெறிந்தபோது, ​​அவன் மிகவும் நலிவுற்ற நிலையிலேயே காணப்பட்டான். “அந்த இன்னொரு கிண்ணம் ‘பஞ்ச்’ பானத்தைக் கலந்துகொண்டிருக்கிறாயா?” என்று, தன் கைகளை இடுப்புப் பட்டையில் செருகிக்கொண்டு, தான் மல்லாந்து படுத்திருந்த சோஃபாவிலிருந்து சுற்றிலும் நோக்கியவாறு, பருத்த உடலமைப்பு கொண்ட ஸ்ட்ரைவர் கேட்டார். “கலந்துகொண்டிருக்கிறேன்.” “இப்போது, ​​இதைக் கேள்! உனக்குச் சற்று வியப்பை அளிக்கக்கூடிய—மேலும், வழக்கமாக நீ என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பதைப் போல நான் அவ்வளவு புத்திசாலித்தனமானவன் அல்ல என்று உன்னை நினைக்க வைக்கக்கூடிய—ஒரு விஷயத்தை நான் உன்னிடம் சொல்லப்போகிறேன். நான் திருமணம் செய்துகொள்ள உத்தேசித்துள்ளேன்.” “அப்படியா?” “ஆம். அதுவும் பணத்திற்காக அல்ல. இப்போது நீ என்ன சொல்கிறாய்?” “நான் அதிகம் பேசுவதற்குத் தயாராக இல்லை. அவள் யார்?” “ஊகித்துச் சொல்.” “எனக்கு அவளைத் தெரியுமா?” “ஊகித்துச் சொல்.” “விடியற்காலை ஐந்து மணிக்கு, என் மண்டைக்குள் மூளை வெந்து பொரிந்துகொண்டிருக்கும் இந்த நிலையில் என்னால் எதையும் ஊகித்துச் சொல்ல முடியாது. நான் ஊகித்துச் சொல்ல வேண்டும் என்று நீ விரும்பினால், என்னை இரவு விருந்துக்கு அழைக்க வேண்டும்.” “சரி, அப்படியென்றால் நானே உன்னிடம் சொல்கிறேன்,” என்று கூறியவாறே, ஸ்ட்ரைவர் மெதுவாக எழுந்து அமர்ந்தார். “சிட்னி, நான் சொல்வதை உனக்குப் புரியவைக்க முடியுமா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது; ஏனென்றால், நீ ஒரு உணர்ச்சியற்ற முரட்டுப் பிராணி.” “அப்படியென்றால் நீயோ,” என்று ‘பஞ்ச்’ பானத்தைக் கலப்பதில் மும்முரமாக இருந்த சிட்னி பதிலளித்தான், “மிகவும் உணர்ச்சிமிக்க, கவித்துவமான ஆன்மாவைக் கொண்டவர் போலும்—” “போதும் நிறுத்து!” ஸ்ட்ரைவர் பெருமையுடன் சிரித்தவாறே மறுமொழி கூறினார்: “நான் காதல் உணர்வின் வடிவமாகத் திகழ்வதாக எந்த உரிமையையும் கோரவில்லை என்றாலும் (ஏனெனில், எனக்கு அதைவிடச் சிறந்த புரிதல் இருப்பதாக நம்புகிறேன்), நான் உன்னைவிட மென்மையான இயல்புடைய ஒருவன்.” “நீ அதிர்ஷ்டசாலி என்று சொல்ல வருகிறாயா?” “நான் அதைச் சொல்லவில்லை. நான் என்ன சொல்ல வருகிறேனென்றால், நான் இன்னும் அதிக… அதிக…” “நீ சொல்ல வந்ததைச் சொல்லிவிடு—‘வீராவேசம்’ என்றே வைத்துக்கொள்,” என்று கார்டன் இடைமறித்துச் சொன்னார். “சரி! நான் ‘வீராவேசம்’ என்றே வைத்துக்கொள்கிறேன். என் கருத்து என்னவென்றால்,” என்று ஸ்ட்ரைவர் தன் நண்பரைப் பார்த்து மார்பை நிமிர்த்திக்கொண்டே கூறினார், “பெண்களின் மத்தியில், உன்னைவிட நான் மிகவும் இணக்கமானவனாக நடந்துகொள்ள விரும்புகிறேன்; அதற்காக அதிக முயற்சி எடுக்கிறேன்; எப்படி இணக்கமாக நடந்துகொள்வது என்பதையும் உன்னைவிடச் சிறப்பாக அறிந்திருக்கிறேன்.” “தொடர்ந்து பேசு,” என்று சிட்னி கார்டன் கூறினார். “இல்லை; ஆனால் நான் தொடர்ந்து பேசுவதற்கு முன்,” என்று ஸ்ட்ரைவர் தன் வழக்கமான மிரட்டும் பாணியில் தலையை ஆட்டியவாறே கூறினார், “நான் உன்னிடம் இதைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். டாக்டர் மனெட்டின் வீட்டிற்கு நீயும் என்னைப் போலவே, அல்லது என்னைவிடவே அதிகமாகச் சென்றிருக்கிறாய். ஏன், அங்கே நீ நடந்துகொண்ட அந்த முகச்சுளிப்பு மிகுந்த போக்கைக் கண்டு நான் வெட்கப்பட்டிருக்கிறேன்! உன் நடத்தை மிகவும் அமைதியாகவும், கடுகடுப்பாகவும், ஏதோ தவறு செய்தவனைப் போலவும் இருந்தது; என் உயிரின் மீதும் ஆன்மாவின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன், சிட்னி—உன்னைக் கண்டு நான் மிகவும் வெட்கப்பட்டேன்!” “வழக்கறிஞர் தொழிலில் இருக்கும் உன்னைப் போன்ற ஒருவனுக்கு, எதையாவது நினைத்து வெட்கப்படுவது மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும்,” என்று சிட்னி பதிலளித்தார்; “அதற்காக நீ எனக்கு மிகவும் கடமைப்பட்டிருக்க வேண்டும்.”

    “நீ அவ்வளவு எளிதாகத் தப்பித்துவிட முடியாது,” என்று ஸ்ட்ரைவர் பதிலளித்தார்; அந்தப் பதிலைத் தன் தோளில் சுமந்து கொண்டு, சற்றே ஆக்ரோஷமாக அவர் சிட்னியை நோக்கினார். “இல்லை சிட்னி, உனக்குச் சொல்வது என் கடமை—அதுவும் உனக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதற்காகவே உன் முகத்திற்கு நேராகச் சொல்கிறேன்—அந்த வகையான சமூகச் சூழலில் நீ மிகவும் முரட்டுத்தனமான, பொருத்தமற்ற ஒரு ஆளாக இருக்கிறாய். நீ ஒரு விரும்பத்தகாத நபர்.” சிட்னி தான் தயாரித்திருந்த ‘பஞ்ச்’ பானத்தை ஒரு முழு கோப்பை அளவு குடித்துவிட்டுச் சிரித்தான். “என்னைப்பார்!” என்று கூறிய ஸ்ட்ரைவர், தன் உடலை நிமிர்த்தி கம்பீரமாக நின்றார். “பொருளாதார ரீதியாக நான் அதிக சுதந்திரத்துடன் இருப்பதால், உன்னைப் போல மற்றவர்களுக்குப் பிடித்தமானவனாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்குக் குறைவுதான். அப்படியிருந்தும் நான் ஏன் அதைச் செய்கிறேன்?” “நீ அப்படிச் செய்வதை நான் இதுவரை பார்த்ததே இல்லை,” என்று கார்டன் முணுமுணுத்தான். “நான் அதைச் செய்வது ஒரு ராஜதந்திரம் என்பதால்தான்; ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே நான் அதைச் செய்கிறேன். அதோ என்னைப் பார்! நான் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.” “உன் திருமணத் திட்டங்களைப் பற்றிய பேச்சில் மட்டும் நீ முன்னேறவே இல்லை,” என்று கார்டன் சற்றும் கவலையற்ற பாவனையில் பதிலளித்தான். “நீ அந்த விஷயத்திலேயே கவனம் செலுத்துமாறு நான் விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை—நான் திருத்தவே முடியாத ஒருவன் என்பதை நீ ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டாயா?” அவன் அந்தக் கேள்வியை ஒருவித இகழ்ச்சி கலந்த பாவனையுடன் கேட்டான். “நீ திருத்தவே முடியாதவனாக இருப்பதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை,” என்று அவனது நண்பன் பதிலளித்தான்; அந்தப் பதில் சற்றும் இதமான தொனியில் அமையவில்லை. “நான் எதற்காகவும் இருக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது,” என்று சிட்னி கார்டன் கூறினான். “அந்தப் பெண்மணி யார்?” “இப்போது, ​​நான் அந்தப் பெயரைக் குறிப்பிடும்போது நீ சங்கடப்படக் கூடாது சிட்னி,” என்று திரு. ஸ்ட்ரைவர் கூறினார்; தான் வெளியிடவிருக்கும் அந்தத் தகவலுக்கு அவனைத் தயார்படுத்தும் விதமாக, அவர் செயற்கையானதொரு நட்புறவை வெளிப்படுத்தினார். “ஏனென்றால், நீ வாயால் சொல்வதில் பாதி விஷயங்களை நீ மனதார விரும்புவதில்லை என்பது எனக்குத் தெரியும்; அப்படியே நீ சொன்ன அனைத்தையும் மனதார விரும்பியிருந்தாலும், அதனால் எந்த முக்கியத்துவமும் இருக்கப்போவதில்லை. நான் இந்தச் சிறிய முன்னுரையைச் சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், ஒருமுறை நீ அந்த இளம் பெண்மணியைப் பற்றி என்னிடம் இகழ்ச்சியான சொற்களால் குறிப்பிட்டிருந்தாய்.” “நானா?” “நிச்சயமாக; அதுவும் இதே அறையில்தான்.” சிட்னி கார்டன் தன் கையில் இருந்த ‘பஞ்ச்’ பானத்தைப் பார்த்தான்; பிறகு தன் சுயதிருப்தியுடன் அமர்ந்திருந்த நண்பனைப் பார்த்தான். அவன் அந்தப் பானத்தைக் குடித்தான்; மீண்டும் தன் நண்பனைப் பார்த்தான். “அந்த இளம் பெண்ணை நீ ஒரு ‘பொன்னிறக் கூந்தல் பொம்மை’ என்று குறிப்பிட்டாய். அந்த இளம் பெண் தான் மிஸ் மனெட். சிட்னி, உனக்கு அந்த விஷயத்தில் ஏதேனும் உணர்வுநுட்பமோ அல்லது மென்மையான மனப்பாங்கோ இருந்திருந்தால், நீ அத்தகைய அடைமொழியைப் பயன்படுத்தியதற்காக நான் சற்று வருத்தப்பட்டிருப்பேன்; ஆனால் உன்னிடம் அது இல்லை. அந்த உணர்வே உன்னிடம் அறவே இல்லை; எனவே, அந்தச் சொற்றொடரைப் பற்றி நான் நினைக்கும்போது எனக்குச் சிறிதும் எரிச்சல் ஏற்படுவதில்லை. ஓவிய ரசனை இல்லாத ஒருவன் என் ஓவியத்தைப் பற்றித் தெரிவிக்கும் கருத்தையோ, அல்லது இசை ஞானம் இல்லாத ஒருவன் என் இசையைப் பற்றிச் சொல்லும் அபிப்பிராயத்தையோ கேட்டு நான் எப்படி எரிச்சலடைய மாட்டேனோ, அதேபோலத்தான் இதுவும்.” சிட்னி கார்டன் மிக வேகமாக அந்தப் பஞ்ச் பானத்தைப் பருகினான்; தன் நண்பனையே உற்றுநோக்கியவாறு, கோப்பைகளை நிரப்பி நிரப்பி மடமடவென்று குடித்தான். “இப்போது உனக்கு எல்லா விவரங்களும் தெரிந்துவிட்டது, சிட்,” என்றார் திரு. ஸ்ட்ரைவர். “எனக்குப் பணத்தைப் பற்றிய கவலையில்லை; அவள் மிகவும் வசீகரமான ஒரு பெண். என் மனதிற்குப் பிடித்ததைச் செய்துகொள்ள நான் முடிவு செய்துவிட்டேன்; மொத்தத்தில், என் விருப்பப்படி நடந்துகொள்ளும் அளவுக்கு என்னிடம் வசதி இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அவளுக்குக் கணவனாகக் கிடைக்கப்போகும் நான், ஏற்கனவே நல்ல வசதியுடன் இருப்பவன்; மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் ஒருவன்; சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தைப் பெற்றிருப்பவன். இது அவளுக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பே என்றாலும், அத்தகைய நல்வாய்ப்பைப் பெறுவதற்கு அவள் முழுத் தகுதி வாய்ந்தவள். உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?” பஞ்ச் பானத்தைத் தொடர்ந்து பருகிக்கொண்டே கார்டன் பதிலளித்தான்: “நான் ஏன் ஆச்சரியப்பட வேண்டும்?” “நீ இதை அங்கீகரிக்கிறாயா?” பஞ்ச் பானத்தைத் தொடர்ந்து பருகிக்கொண்டே கார்டன் மீண்டும் பதிலளித்தான்: “நான் ஏன் இதை அங்கீகரிக்காமல் இருக்க வேண்டும்?” “சரி!” என்றார் அவருடைய நண்பர் ஸ்ட்ரைவர். “நான் எதிர்பார்த்ததைவிட நீ இதை மிகவும் இயல்பாக எடுத்துக்கொள்கிறாய்; என் விஷயத்தில் நீ இவ்வளவு பணத்தாசை இல்லாமல் நடந்துகொள்வாய் என்று நான் நினைக்கவில்லை. என்றாலும், உன் பழைய நண்பன் மிகவும் உறுதியான மன உறுதி கொண்டவன் என்பது உனக்கு இந்நேரம் நன்றாகவே தெரிந்திருக்கும். ஆம், சிட்னி, ஒரே மாதிரியான இந்த வாழ்க்கை முறையே எனக்குப் போதும் என்றாகிவிட்டது; இதிலிருந்து மாறுபட்டுச் செல்ல எனக்கு வேறு வழியும் இல்லை. ஒருவனுக்குத் தன் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எழும்போது, ​​அவனுக்குச் சொந்தமாக ஒரு வீடு இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்று நான் உணர்கிறேன் (அவனுக்கு விருப்பம் இல்லாதபோது, ​​அவன் வீட்டிற்குச் செல்லாமல் வெளியிலேயே இருந்துவிடலாம் அல்லவா?). மேலும், மிஸ் மனெட் எந்தச் சூழலிலும், எந்த அந்தஸ்திலும் மிகச் சிறப்பாகப் பொருந்திப்போவாள் என்றும், எப்போதும் எனக்குப் பெருமை சேர்ப்பவளாகவே திகழ்வாள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.”

    ஆக, நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இப்போது, சிட்னி, நண்பா, உன் எதிர்காலத்தைப் பற்றி உன்னிடம் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். நீ ஒரு மோசமான நிலையில் இருக்கிறாய், உனக்குத் தெரியுமல்லவா; நீ உண்மையிலேயே ஒரு மோசமான நிலையில் இருக்கிறாய். உனக்குப் பணத்தின் மதிப்பு தெரியாது, நீ ஆடம்பரமாக வாழ்கிறாய், என்றாவது ஒரு நாள் நீ நோய்வாய்ப்பட்டு ஏழையாகி விடுவாய்; நீ கண்டிப்பாக ஒரு செவிலியரைப் பற்றி யோசிக்க வேண்டும்.” அவன் அதைச் சொன்ன அந்த மிதமிஞ்சிய ஆதரவு தொனி, அவனை இருந்ததை விட இரண்டு மடங்கு பெரியவனாகவும், நான்கு மடங்கு வெறுக்கத்தக்கவனாகவும் காட்டியது. “இப்போது, நான் உனக்கு ஒரு யோசனை சொல்கிறேன்,” என்று ஸ்ட்ரைவர் தொடர்ந்தான், “இதை நேருக்கு நேர் பார். நான் இதை என் வேறு வழியில் நேருக்கு நேர் பார்த்திருக்கிறேன்; நீயும், உன் வேறு வழியில் இதை நேருக்கு நேர் பார். திருமணம் செய்துகொள். உன்னைக் கவனித்துக்கொள்ள ஒருவரை ஏற்பாடு செய். உனக்குப் பெண்கள் சமூகத்தில் எந்த அனுபவமும் இல்லை, அதைப் பற்றிய புரிதலும் இல்லை, அதற்கான சாமர்த்தியமும் இல்லை என்பதைப் பற்றிக் கவலைப்படாதே. யாரையாவது கண்டுபிடி. கொஞ்சம் சொத்து உள்ள ஒரு மரியாதைக்குரிய பெண்ணைக் கண்டுபிடி—வீட்டு உரிமையாளர் அல்லது தங்கும் விடுதி நடத்துபவர் போன்ற ஒருவரை—வருங்காலத்திற்காக அவளைத் திருமணம் செய்துகொள்.” உனக்கு இது மாதிரிதான். இப்போது யோசித்துப் பார், சிட்னி.” “யோசிக்கிறேன்,” என்றான் சிட்னி.

    Share