Presentation1

முனைவர் நா. தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி
கோவை- 49

“அண்ணா இன்னக்கி சட்னி ரொம்ப நல்லா இருக்குண்ணா. இன்னு ரெண்டு இட்லி வைங்க” என்றான் முகிலன்.

முத்தையா மகிழ்ச்சியுடன் பரிமாறினார். சாப்பிடுபவர் உறவும் இல்லை. தெரிந்தவரும் இல்லை. ஆனால் இரவு மட்டுமே இருக்கும் அந்த வண்டிக்கடைக்கு வருபவர்கள் அனைவரும் அவரிடம் மிகவிரைவில் நெருங்கிப்பழகி விடுவார்கள்.

வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான் கடை. வியாபாரம் செய்யும் இடம் அரசமரத்தடி. இரவு மட்டுமே வியாபாரம். வண்டியைத்தள்ளிக் கொண்டு ஐந்து மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பிவிடுவார். மாவு, சட்னி, குழம்பு எல்லாம் வீட்டிலேயே தயார்செய்து வண்டியில் வைத்து விடுவார். கடையில்வைத்து தான் பலகாரம் செய்வார். மனைவியை கடைக்கு வியாபாரம் செய்யவிட்டதில்லை. வீட்டில் அனைத்து வேலைகளையும் அவள் கவனித்துக்கொள்வாள். வீடும் வாடகைதான். இப்போது கடைக்கு உதவ மக்களாகிய சரவணனும், அசோகனும் மட்டும்.

“பார்க்க சின்ன வண்டிக்கடைன்னு நெனைக்காதடா ..ஒரு தடவ சாப்பிட்டுப் பாரு, அப்புற நீ ஹோட்டல் பக்கமே போகமாட்டே. “ என சாப்பிடுபவர்கள் பேசிக்கொள்ளும் போது முத்தையாவிற்குப் பெருமையாக இருக்கும். எல்லாம் மனைவி சொல்லிக்கொடுத்த கைப்பக்குவம்.

கடையில் இட்லி, தோசை, ரோஸ்டு, புரோட்டோ, பனியாரம், ஆப்பம், புட்டு இவ்வளவு வகை சுடச்சுட கிடைக்கும். ஒவ்வொரு டிஃபனுக்கும் தேங்காய் சட்னி, காரச்சட்னி, புளிச்சட்னி, சாம்பார், பொடி இவ்வளவும் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும். அடுப்பிற்குப் பக்கத்தில் நின்று ஆர்டர் கேட்பவர்களுக்கு சூடாக சுட்டுவைப்பது முத்தையாவின் வேலை. புரோட்டா தேய்ச்சு சுடறதும் பனியாரமும் மூத்தவன் சரவணனோட வேல. சாப்பிட வர்றவங்களுக்கு பரிமாறி காசு கணக்குபோட்டு வாங்கறது இளையவன் அசோகனோட வேல.

வியாபாரம் முடிந்து வீட்டிற்கு வண்டியைத் தள்ளிக்கொண்டு போக மணி பத்தரை ஆகிவிடும். வீட்டிற்குப்போனதும் முத்தையா கை கால் கழுவி விட்டு முதல் வேலையாக மனைவி இரத்தினத்தின் படத்திற்கு விளக்கு வைப்பார்.

‘நீ இன்னக்கி இருந்திருந்தா நம்ம புள்ளகள நல்லா கவனிச்சிருப்ப. பாரு அதுகளும் நம்மள மாதிரியே கஷ்டப்படுதுக.”
அப்பா இல்லாம ஒரு பொண்ணு புள்ளகள வெச்சிட்டு எவ்வளவு கஷ்டப்படுவாளோ அதவிடக் கஷ்டம் அம்மா இல்லாம அவங்கள வளர்த்தரதுன்னு நீ போனதுக்கப்பறந்தாம்மா தெரிஞ்சுது என்று கண்ணீர் வடித்தார்.

அவரது கண்ணீரை யாரும் பார்க்கவில்லை பெரியவன் வண்டியிலிருந்து எல்லா பொருட்களையும் கீழே இறக்கிவிட்டு வண்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தான். அசோகன் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருத்தான். முத்தையா மக்கள் இருவருக்கும் பால்கலக்கி கொடுத்து அவர்களை படுக்க சொல்லிவிட்டு அடுத்தநாளைக்குத் தேவையான அரிசி உளுந்து ஊறவைத்து வெங்காயம் தோலுரித்துவைத்து, சாம்பாருக்குத் தேவையான காய்கறிகளை சரிபார்த்து எடுத்துவைத்துவிட்டு படுக்கப்போகும்போது மணி 12.30.

பறவைகளின் ஒலி அடங்கி தவளை சத்தம் நின்று, காற்றின் ஓசை காதுகளில் கேட்குமளவிற்கு ஊரே அமைதியாக இருந்தது. நேரத்தை அறிவிக்க ஒலிக்கும் பஞ்சாலையின் சைரன் ஒலி போன்று ஆந்தையின் அலறல் ஒலி இடைவிட்டு இடைவிட்டு கேட்டுக்கொண்டிருந்தது.

தூங்காமல் விழித்துக்கொண்டிருந்த முத்தையாவின் காதுகளில் இரத்தினத்தின் குரலும் ஒலித்துக்கொண்டிருந்தது.
“ஏங்க இந்த தாலி ஆறு பவுன் இருக்கும் என்ன கஷ்டம் வந்தாலும் அத மட்டும் வித்திடாதீங்க.”

மரணப்படுக்கையில் இருக்கும்போது அவள் வைத்த ஒரே வேண்டுகோள் அது. ஏங்க நா சாகறவர நா இத கழட்ட விடமாட்டே. நா செத்ததுக்கப்பறமும் இத மங்கலப்பொருளா தா பாக்கணும்”

“ஏம்மா நான் சேத்து வெச்ச காசெல்லாம் வைத்தியத்துக்கு செலவாயிடுச்சு. அதப்பத்தி நா கவலப்படல. டாக்டர்தா ஒரு ரெண்டு இலட்சம் செலவு செஞ்சா சரி பண்ண வாய்ப்பு இருக்கானு பாக்கலாம்னு சொல்றாரேம்மா. இப்போ பவுனு இருபத்தஞ்சாயிரத்துக்குப்போகும்.. உன் தாலிய கொடுத்தா மீதி பணத்த எங்கயாவது பொரட்டிக்குவே”

“இல்லீங்க இது நம்ம புள்ளகளுக்கு நான் சேத்து வெச்சிருக்கிற ஒரேசொத்து. இத ரெண்டா பிரிச்சு வர்ற மருமகளுக்கு தாலியா செஞ்சு போடுங்க. பசங்களக்குனு நாம வேறு எதயும் சேர்த்து வைக்கல. கிட்னி ஆப்பரேசன் செஞ்சாலும் வாய்ப்பு குறைவுதானு தானே டாக்டர் சொல்றாரு. எனக்கென்ன சாக ஆசயாவா இருக்கு. நம்ம பசங்களுக்கு ஒரு நல்ல காரியம் செஞ்சு பாக்கணுந்தா. ஆனா அன்னாடங்காச்சிகளுக்கு கடவுள் ஏதாவது ஒரு வியாதிய குடுத்திட்டா கடைசில கஞ்சிக்கே வழி இல்லாமப் போயிடும். எனக்கொன்னும் ஆகாது. நம்ம கோயில் பூசாரி சுந்தரத்துக்குத் தெரிஞ்ச ஏதோ வைத்தியர் இருக்காறாம். கைவைத்தியம் பண்றவரு. அவரப் போயி பாக்கலா. இப்போ போய் தூங்குங்க.” என்று இரத்தினத்துடன் பேசியதை எண்ணிப்பார்த்தான்.

அவள் சாகும்போது பெரியவன் எட்டாவது. சின்னவன் ஆறாவது படிக்கிறான். இப்போ பெரியவனுக்கு வயசு இருபது. காலம் எவ்வளவு சீக்கிரம் ஓடுகிறது. பெரியவன பிளஸ்டூ வரைதா படிக்கவெக்க முடிஞ்சுது. சின்னவனயாவது படிக்க வெக்கலாம்னுதா நெனச்சே. ஆனா நானும் சரவணனும் தனியா கஷ்டப்படறத பாத்திட்டு அவனேதா ‘அப்பா நா இனிமே படிக்கலப்பா உங்ககூட கடை வேலயப்பாக்கறேனுட்டு பத்தாவதோட நிறுத்திட்டா. டீச்சரு வீட்டுக்கே வந்து கூப்பிட்டு பாத்தாங்க. அவெ எனக்கு படிக்கப்புடிக்கலனு ஒரே பதிலா சொல்லிட்டா. நானும் நமக்கு ஒத்தாசயா இருக்குமேனு விட்டுட்டே.. கல்யாணம்னு வரும்போது இப்படியெல்லா பிரச்சனை வருங்கற யோசன போகலெ.

” ஏம்ப்பா பசங்களுக்கு இன்னும் ரெண்டு மூணு வருசத்தில கல்யாண வயசு வந்துடும். வேலக்குப் போகாமா இப்படி உனக்கு ஒத்தாசயா வெச்சிட்டிருந்தா யாரு பொண்ணு கொடுப்பாங்க’ என்று புரோகித நண்பர் மாரிமுத்து கூறியது முத்தையாவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தத் தொழிலை மாற்றவும் மனதில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்த போது இரத்தினத்தோட யோசனையோடு தொடங்கப்பட்ட தொழில். பலநேரங்களில் பட்டினியாக இருப்பதிலிருந்து எங்களக் காப்பாத்தின தொழில்.

ஒரு பெரிய கடையாப் பார்த்து வாடகைக்கு எடுத்து கொஞ்கம் சாமான்களை வாங்கிப்போட்டு மக்கள வெச்சு ஹோட்டல் நடத்தினா பசங்களுக்குத் திருமணம் ஆக வசதியாக இருக்குமென்ற யோசனை வந்தது. அதற்கு முதலீடாக தாலி மட்டுந்தான் மனதில் தோன்றியது.

ஒரு நாள் கடைவேலை முடிஞ்சு வந்ததும் மக்களை அழைத்தான். இரத்தினத்தின் படத்திற்கு முன்னால் மூவரும் நின்றனர். “இத பாருங்கப்பா அம்மா ஆசப்ட்டது இந்த தாலி வர்ற மருமக்களுக்குணு. அத உருக்கி ஆளுக்கு ரெண்டு பவுன் வச்சிட்டு, மீதி ரெண்டு பவுன வித்து, அந்தக்காச முதலீடா போட்டு நம்ம கடய பெரிசு பண்ணலாம்னு இருக்கே என்ன சொல்றீங்க”

“இதெல்லா எதுக்குப்பா எங்ககிட்ட கேட்டுட்டு நீங்க எது செஞ்சாலும் செரியாதாப்பா இருக்கும்” என்று இருவரும் ஒரே பதிலை சொன்னார்கள்.

மறுநாள் காலையிலிருந்தே அதே யோசனைதா ஓடிக்கிட்டே இருந்தது. அன்னிக்கினு பாத்து கடையில் சரியான கூட்டம். சட்னி தீர்ந்து விட்டது. சரி வீட்டிற்குச் சென்று சட்னி அரைத்து வரலாம் என்று சென்றான் முத்தையா. சட்னி அரைத்து விட்டு வெளியே வரும்போது

“நாளக்கி வெள்ளிக்கிழமயு அதுவுமா ஏன் தாலியெ விக்கணும். இன்னக்கே கடய பசங்கள பாத்துக்கச்சொல்லிட்டு போயிட்டு வந்தர்லாம்’. என்றெண்ணி தாலியை டாயர் ஜோப்பில் போட்டான்.

என்றுமில்லாத கூட்டம் அன்றைக்கு. தட்டுகளைக்கழுவ உட்காரும் போது ஞாபகம் வரவே தாலியை அசோகிடம் கொடுத்து யாருக்கும் தெரியாம வைக்கச் சொன்னான். ஜீன்சு போட்டிருந்ததால அவ கல்லாப்பெட்டில இருக்கற பணநோட்டுகள தூக்கி அதற்கடியில் வைத்தான். நாம தானே பணம் வாங்கறோம் இங்க பத்திரமாதா இருக்கும்னு எண்ணிக்கொண்டான். சரவணன் புரோட்டா போடுவதில் மும்முரமாக இருந்தான். அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால தாலி விற்க முடியவில்லை. மணி 10.30 ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்து பணம் எண்ணி கணக்கு சொல்வது அசோகின் வேலை.

கை கால் கழுவிவிட்டு வந்த முத்தையா அசோகிடம் தாலியைக் கேட்டான். ஓடிப்போய் கல்லாப் பெட்டியைப் பார்த்த அவன் பேயறைந்து நின்றான். தாலி பெட்டியில் இல்லை. யாரையும் கல்லாவை தொடவிடமாட்டான் அசோகன். அன்று கூட்டத்தில், ஐ டி கம்பெனில வேல செய்யற மனோஜும், சுந்தர அண்ணாவும் சாப்பிட்டுருந்தாங்க. அவங்க ரெகுலர் கஸ்டமர்ஸ்தா. ஆனா என்ன கம்பெனில வேல பாக்கறாங்கனெல்லா தெரியாது. அசோகிடம் எப்போதுமே நெருங்கிப்பேசுவார்கள். அஞ்சோ, பத்தோ மீதியிருந்தா வாங்க மாட்டார்கள். வெச்சுக்கோப்பா’ என்று சொல்லிவிட்டு போவார்கள்.

ஆனால் அன்று மீதி அம்பது ரூபாய் கேட்கவே. சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு சட்னி ஊத்திக்கொண்டிருந்த அசோகன்,‘ சுந்தரண்ணா கல்லாவிலிருந்து எடுத்துக்கோங்கண்ணா என்று கூறிய நினைவில் ஸ்தம்பித்து சிலையாய் நின்றான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.