ஒரு வாசகம் (சிறுகதை)
முனைவர் த. ஆதித்தன்
இணைப் பேராசிரியர்
அரிய கையெழுத்துச் சுவடித் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
அலுவலகத்தில் இருந்து மாலை வீடு திரும்பும் வழியில் தேநீர் அருந்துவதற்காகச் சாலையோரக் கடையில் வண்டியை நிறுத்தினார் கதிர். கண்ணாடிப் பெட்டிகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பலகாரங்களின் மணம் ஈர்த்தது.
“பருப்பு வடை கொடுங்க” என்றார். காகிதத் துண்டினுள் வைத்து கடைக்காரர் கொடுத்த வடையை வாங்கியபடி அங்கே சாலையோரம் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார். வடையைப் பிய்த்து வாயினுள் திணித்தார். மணம் தந்த ஈர்ப்பு ஒருபுறம், அதன் முறுமுறுப்பும், பருப்பு, மசாலா இவற்றின் சுவை ஒரு புறமும் என ஈர்ப்பினை அதிகரிக்க அனுபவித்து உண்டார்.
“சார் அப்படியே ஸ்டாங்கா ஒரு இஞ்சி டீ”. சென்ற மாதம் ஒரு நாள் ஊருக்குத் தபால் அனுப்புவதற்காக இக்கடையின் அருகில் இருக்கும் கொரியர் அலுவலகத்திற்கு வரும் போதுதான் இக்கடைக்கு முதன் முறையாக வந்தார். பதார்த்தங்களின் மணமும், சுவையும் ஈர்க்க இப்பொழுது அடிக்கடி வரும் வாடிக்கையாளர்.
பக்கத்தில் இருந்த நாற்காலியில் மாலைநேர நாளிதழ்கள் இருந்தன. ஒன்றை எடுத்து பெரிய எழுத்துகளில் இருக்கும் தலைப்புகளைப் படித்தப்படி கடைசிப் பக்கம் வரவும், வடை சாப்பிட்டு முடிக்கவும், கடைக்காரப் பையன் தேநீரைக் கொண்டு கொடுக்கவும் சரியாக இருந்தது.
கடையில் கூட்டம் குறைவுதான். இருந்தாலும் வாடிக்கையாளர்கள் கல்லாப் பெட்டி அருகில் அட்டையில் ஒட்டியிருக்கும் கியூ.ஆர் கோட் என்னும் விரைவுத் துலக்கிக் குறியீட்டை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து, பணம் செலுத்தும் போது வரும் ஒலி, சாலையில் செல்லும் வாகனங்களின் ஓசை, கடையின் முன் அமர்ந்ததும், நடந்தபடியும், போனில் எதை எதையோ பேசிக் கொண்டிருப்பவர்களின் சப்தம் போன்றவை ஒன்று சேர்த்து எழும்பும் ஓசை அவனுள் இசையாக ஊடுருவியது. அதை ரசித்தபடி தேநீரைக் குடித்து முடித்தார்.
அங்கிருந்த நபர்களின் முகங்களை ஏனோ இன்று கவனித்தார். அவரை அறியாமல் கண்கள் அவர்களை ஆராய்ந்தது. யாரும் தவறுதலாக எடுத்துவிடக்கூடாது என தோன்றியது. உடனே, “சார் பருப்பு வடை நல்லா இருக்கு. இன்னொரு வடை எடுத்துக்கிறேன்” என்றபடி எடுத்தார்.
சாப்பிட்டபடியே பார்வையைப் பரவவிட்டார். வரும்போது எல்லாம் பார்க்கும் கூட்டம்தான். இன்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது இயல்பாய் இல்லாமல் இருந்தது. நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தபடி வடையைக் கொஞ்சம் கொஞ்சமாக மென்று தின்றுகொண்டே கடைக்கு வந்திருந்தவர்களைக் கவனிக்கும்போது, திடீரென கவனத்தில் உறைத்தது. அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் விலைஉயர்ந்த ஆடை அணிந்து நாகரிகமாகவும், பகட்டுடனும் தோன்றினார்கள். அவர்கள் இங்கு ஏன் வருகிறார்கள் என்று எண்ணி ஆச்சரியப்பட்டார். காரணம், இந்த சாலையோரக்கடை அப்படியொன்றும் உயர்ந்ததாகத் தோன்றவில்லை. மீண்டும் மீண்டும் அவரது கண்கள் அவர்களின் முகங்களை நோக்கியே சென்றன. பெரும்பாலானவர்களின் விரலிடுக்குகளில் சிகரெட். அவர்களின் கண்கள் இலேசாகச் சிவந்து இருப்பது அதிர்ச்சியளித்தது. சிலர் பான்மசாலா பாக்கெட்களைத் திறந்து பகிர்ந்து கொண்டனர். பார்வைக்கு எங்குமே தென்படாத அப்பொருள்களைக் கடைக்காரர் மறைவாக வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து எடுத்துக்கொடுப்பதும் இன்றுதான் அவர் கண்களில் பட்டது. அதிர்ச்சியுடனே சாப்பிட்டதற்கான தொகையைக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.
*******
வீட்டிற்கு வந்ததும் உடைமாற்றி, கைகால்களை அலம்பிக்கொண்டு, முன்அறையில் ஷோபாவில் உட்கார்ந்தார். தொலைக்காட்சியை இயக்கினார். போதைப் பொருட்களுக்கு எதிரான அரசின் விளம்பரம் ஓடியது. ஆத்திரத்துடன் தொலைக்காட்சியை அமர்த்தினார். அவரது அறைக்குள் வந்த மனைவி,
“டீ குடிக்கிறீங்களா? கொண்டு வாரேன்”
“வேண்டாம், வரும்போது கடையிலேயே குடிச்சிட்டேன். நீ குடிச்சியா….. பையன் எங்க”?
“புதுசா கேக்குறீங்க பையன பற்றி….. வளந்திட்டானுல…. முன்னால போல இல்லனு தோணுது….. ”
“என்னாச்சு”
“உங்களுக்கு எப்போதும் ஆபீஸ் ஆபீஸ்னு, நானும் வீட்டுப்வேலைய பார்த்திட்டு டெய்லரிங் ஒர்க் பார்க்கிறதால சோர்ந்து போயிடுறேன்”.
“என்ன சொல்லவர்ற….. ஒழுங்கா சொல்லு… ”
“எப்பொழுதும் போல லேப்டாப் ஓப்பன் பண்ணி ஆபீஸ் ஒர்க்க பார்க்க வேண்டியதுதானே, புதுசா என்ன கேள்வி”?
“திட்டுறியா? அல்லது கோபிச்சுக்கிறியா”?
“ஒங்கள திட்டமுடியுமா? அல்லது உங்ககிட்ட கோபிச்சுக்கத்தான் முடியுமா”?
“நிறுத்து … நேரடியா விசயத்த சொல்லு…” அவள் கதிரின் அருகில் வந்து அமர்ந்தாள்.
கண்கள் கலங்கின.. “அவனுக்குப் படிப்புல கவனம் குறைஞ்சமாதிரி தெரியுது… ஆறாம் வகுப்பு வந்தாச்சு. அதுக்கு ஏத்த பொறுப்பும் இல்ல… ஒழுங்கா சாப்பிடறதும் இல்ல…. வந்ததுமே கதவ சாத்திகிட்டு தூங்கிடுறான். கேட்டா சோர்வா இருக்குங்கிறான்..”
“சரி சின்னப் பையன்தான.. நான் பாக்குறேன்.. சாப்பிட்டானா? ”
“ஸ்கூல்ல இருந்து வந்த உடனேயே பசிக்கிதுன்னான்.. யூனிஃபார்ம் கூட மாத்தல… கிச்சனுக்குப் போயி நாலு பிரட்ட எடுத்து ஜாம் தடவி சாப்பிட்டுட்டு படுக்கப் போயிட்டான்… ”
“படிக்க சொன்னியா? ”
“ஸ்கூல்லயே படிச்சிட்டானாம். போன வருசம்னா நீங்க ஆபீஸ் போகும்போது அவன ஸ்கூல்ல விட்டுட்டு போவீங்க.. இப்போ ஸ்கூல் வேன்ல அனுப்புறோம். ஆறே முக்காலுக்கே வேன் வந்திருது. காலையிலேயும் அவன் ரெடியாகி வேனுக்குப் போறதுக்குதான் நேரம் சரியா இருக்கு…. ”
“காலையில நான்கு மணிக்கு எழுந்திரிக்கணும்.. எழுந்திரிக்க வைக்கணும்”.
“சரிதான்.. அவன் குழந்தைங்க….. பத்துவயசுதான ஆகுது. இருந்தாலும் ஹோம்வொர்க் இருந்தா காலையிலேயே எழுந்திருச்சி பண்ணிடுறான்.. ”
“ம்….. கவனிக்கிறேன்” என்றபடி மகனின் அறைக் கதவைத் திறந்தார். மனைவியும் உடன் வந்தாள். கட்டில் அருகில் புத்தகப்பை திறந்த நிலையில் இருந்தது. கட்டிலில் படுத்திருந்த முருகன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான். அவள்,
“பாத்தீங்களா யூனிஃபாம்ம மாத்திட்டு படுன்னு சொன்னா…. சட்டய கழற்றவே இல்ல… நிக்கர மட்டும் கழற்றியிருக்கான், அதையும் கட்டில்லேயே போட்டிருக்கான். பீரோக்குள்ள எவ்வளவு துணி இருக்கு, நீங்களாவது ஒண்ண எடுத்து போட்டுவிடுங்க.. எனக்கு டெய்லரிங் ஒர்க் இருக்கு… வர்ரேன்…” என்றபடி சென்றுவிட்டாள்.
கதிர் கட்டிலில் சரிந்து படுத்திருந்த மகனைத் தூக்கி நேராகப் படுக்கவைத்தார். தினமும் காலையில் மட்டுமே, அதுவும் புறப்படும் போக்கில் மகனைப் பார்ப்பதோடு சரி. அவனோடு அமர்ந்து பேசி பல மாதங்கள் இருக்கும் போல் தோன்றியது. கட்டிலில் கிடந்த சீருடை கால்சட்டையையே போட்டு விடுவோம் என்று அதை எடுக்க முயன்றார். அதன் ஒரு பாக்கெட் பகுதி மகனின் ஒரு கைப்பிடிக்குள் இருந்தது. விரல்களைப் பிரித்து எடுத்தார். கால்சட்டையில் மாட்டியிருந்த பெல்ட்டை கூட கழற்றாமல் விட்டிருந்ததைப் பார்த்து வெறுப்பானார். பெல்ட்டை நீக்கி அருகில் இருந்த மேசையில் வைத்தார். கால்சட்டையை மாட்டிவிடுவதற்காக உதறினார். அதன் பாக்கெட்டிலிருந்து பான்மசாலா பாக்கெட் வெளியில் விழுந்தது. அதைக் கையில் எடுத்தப்படியே அதிர்ச்சியில் கட்டிலில் அமர்ந்தார்….
தலை சுற்றியது. நம்ம குழந்த, ஆறாவது படிக்குற பையன் பாக்கெட்ல….. அவரால் ஜீரணிக்க முடியவில்லை… ஆழ்ந்து தூங்கும் பையனைப் பார்த்தபடியே இருந்தார்….
அறைக்குள்ளே வந்த அவர் மனைவி, “எவ்வளவு நேரமா மகனையே பார்த்திட்டு இருப்பீங்க… நிக்கர போட்டுவிட்டுட்டு வராம, உங்க அழகுராசாவ ரசிச்சிட்டே இருக்கீங்க போலருக்கு…. பாசம் பொங்குது…. ”
எதுவும் பேசாமல் போர்வையைப் போர்த்திவிட்டுவிட்டு கால்சட்டையைப் பான்மசாலா பாக்கெட்டோடு கையில் எடுத்தபடி எழுந்திருந்தார்….
மீண்டும் அவர் மனைவி, “சரி சின்னபையன்தான… படுத்துகிடட்டும், நிக்கர அழுக்குத் துணிகள போடுற கூடையில போட்டிருங்க…. ”
“இவனா சின்னப்பையன்…..” என்று தொடங்கியவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார். தனது அதிர்ச்சியையும், பதட்டத்தையும் மனைவிக்குக் கடத்தவேண்டாம். மெதுவாகச் சொல்லிக்கொள்ளலாம் என நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்தார்..
“நீங்க அவன்கூட நேரம் செலவு பண்ணினாதான…. வேகமா வளர்ந்திட்டான்… அவன் வளர்ந்திருக்கிறதயே இண்ணைக்குத்தான் பாக்கிறதுபோல சின்னபையனாங்கிறீங்க….. ம் ஆனா எண்ணைக்கும் அவன் நமக்குக் குழந்தைதாங்க” என்றபடி நகர்ந்தாள்.
எதையும் அவர் உள்வாங்கும் மனநிலையில் இல்லை.. அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை. கடும் ஆபத்தான நிலையில் நிற்பதைப் போல தோன்றியது. பான்மசாலா பாக்கெட்டை மறைத்து வைத்துவிட்டு, கால்சட்டையை அழுக்குத்துணிகள் போடும் கூடையில் போட்டுவிட்டு திரும்பும்போது,
“சாப்பாடு ரெடி, சாப்பிடலாம் வாங்க… ” என்றாள். வலி நிறைந்த உள்ளத்தோடு பின்னால் சென்றார்.
*******
மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கதிர் எழுந்துவிட்டார். மனைவி “இண்ணைக்கு லீவுதான…. கொஞ்ச நேரம் படுங்க… ” என்றாள்
“நீ ரெஸ்ட் எடு… நான் உறுப்பினரா இருக்கிற பன்னாட்டு நண்பர்கள் சங்கம் சார்பா, நகராட்சி பூங்காவ கிளீன் பண்றோம்… ஆறு மணிக்கு ஆரம்பிக்கிறோம்… அப்போதான் வாக்கிங் வர்ரவங்ககிட்டேயும் விழிப்புணர்வ ஏற்படுத்தமுடியும், அங்கேயே டிபன் சாப்பிட்டிடுவேன். உங்க இரண்டுபேருக்கு மட்டும் சமைச்சுக்கோ… ” என்றபடி தயாராகத் தொடங்கினார்.
மகன் படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்தார்… இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.. மனதுக்குள் இருந்த அதிர்ச்சி, கோபமாக மாறியிருந்தது. அவனை எழுப்பி ஏண்டா.. எனக்கேட்டு ஓங்கி அறையலாம் போல் இருந்தது.
அடக்கிக் கொண்டார்… தயாரானதும் மனைவியிடம், “கதவ உள்பக்கமாகப் பூட்டிக்கோ… நான் கிளம்புறேன்…” என்றபடி பதில் எதிர்பாராமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
பூங்கா அருகில் செல்லும்போதே நிகழ்ச்சி தொடங்கும் நிலையில் இருந்தது புலப்பட்டது.. வண்டியை நிறுத்திவிட்டு வேகமாகச் சென்றார். வா வா என நண்பர்கள் அழைத்தனர். விழிப்புணர்வு நிகழ்வுக்கான பதாகையை இருவர் விரித்துப் பிடித்தனர். அதன் பின்னால் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் புகைப்படத்திற்காக நிற்க தொடங்கினர். இவரும் சேர்ந்து கொண்டார். அருகில் தூய்மைப்படுத்துவதற்கான உபகரணங்கள் இருந்தன. புகைப்பட நிகழ்வு முடிந்ததும் தன்னார்வலர்கள் உபகரணங்களை எடுத்துக்கொண்டு தூய்மைப் பணியில் இறங்கினர். சிலர் அங்கு வந்து செல்பவர்களிடம் விழிப்புணர்வுக்கான துண்டு பிரசுரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர். எதிலும் மனம் லயிக்காததால் பூங்காவினுள் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்தார். சில நிமிடங்களில் அருகில் இருந்த இருக்கையில், நடைபயிற்சியை முடித்த இரண்டு கல்லூரி மாணவர்கள் வந்தமர்ந்தனர். ஒருவன் சட்டைப்பையில் இருந்து பான்மசாலா பாக்கெட்டை எடுத்து சிறிது கையில் கொட்டினான். இது கண்ணில் பட்டதும் கதிர்க்குப் படபடப்பு அதிகமாயிற்று. அதற்கிடையில் ஒருமாணவன்,
“ஏண்டா இப்படி போதைக்கு அடிக்ட் ஆயிட்டே…. விட முயற்சி பண்ணுடா…. ”
“ஸ்கூல்ல வைச்சே பழகினதுடா….. விட முடியல…. என்றபடி பான்மசாலாவை வாயினுள் வைத்தான்…. ”
“வீட்ல கண்டுபிடிக்கலயா? …… ”
“எங்கப்பா எப்போதும் ஆபீஸ், ஆபீஸ்னு ஆபீஸ் வொர்க்கிலேயே இருப்பார்… லீவு நாளுனா இதோ சர்வீஸ்ங்கற பேர்ல பன்னாட்டு நண்பர்கள் சங்கம் பண்றாங்களே…. இதேபோல போயிடுவாரு…… “வீட்ட எங்க கவனிச்சாரு…. அவருக்கு வீட்டையும் ஆபீசையும் பேலன்ஸ் பண்ணத் தெரியலடா… ”
“சோசியல் சர்வீசும் தேவதானடா….. இதோ பாரு சிறப்பா… பண்றாங்களேடா…..”
“தெரியலடா உனக்கு… சர்வீஸ் நூறு ரூபாய்க்குப் பண்ணுனா ஆயிரம் ரூபாய்க்கு விளம்பரம், அவங்களுக்கான சாப்பாடுனு செலவு பண்ணுவாங்கடா….”
“கொஞ்சமாவது நல்லது நடக்குதா இல்லையா? …. ”
“டேய் முதல்ல… அவங்கவங்க வீட்ட ஒழுங்கா கவனிக்காங்களான்னு பார்த்தா உனக்குப் புரியும்…. ஒவ்வொரு வீடும் நல்லபடியா இருந்தாலே சமுதாயம் நல்லாயிடும்டா…. மாற்றம், சர்வீஸெல்லம் ஒவ்வொரு வீட்ல இருந்தும் வரணும்டா…. அங்கிருந்தே தொடங்கணும்டா….. ”
“நீ போதைக்கு அடிமையானதுல ஒங்க அப்பாவுக்குப் பங்கு இருக்குங்கிறியா?….. ”
“கண்டிப்பா….. ஊருக்கும், நாட்டுக்கும் உண்மையிலேயே நல்லது செய்றதுன்னா வீட்ல உள்ள குழந்தைகள நல்ல தலைமுறையா உருவாக்குறதுதான். வீட்ல எங்ககூட நேரம் செலவுபண்ணி கவனிச்சிருக்க வேண்டாமா? எங்க மாற்றத்த கண்டுபிடிச்சி திருத்துறத விட்டுட்டு…. சொல்வாங்களே கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானத்த கிழிச்சிட்டு வைகுண்டம் போக ஆசப்பட்ட கதைன்னு….. அது போலத்தான் இவங்க சேவையெல்லாம்”.
“உனக்கே நல்லா தெரியுதேடா….. இது கெட்டதுணு விட்டுட வேண்டியதுதானே….”
“இப்போ முத்திப்போச்சுடா….. ஸ்கூல்ல படிக்கும்போது திருந்தியிருந்தா ஈசியா இருந்திருக்கும்…..”
“கண்டிப்ப மட்டுமே காட்டுற அப்பாவுக்கு எங்கிட்ட அன்பா, அரவணைப்பா நடந்துக்ற, புரிஞ்சிக்கிற பக்குவம் இல்ல…. என்னாலயும் அவங்க ஓடுற ஓட்டத்துல டிராவல் பண்ண முடியல…. பிடிக்காம ஒதுங்கி ஒதுங்கி போனதுலதான் இப்படி மாட்டிக்கிட்டேன்டா….”
“அதுக்காக சர்வீஸ் பண்றதையும், சோசியல் கான்ட்றிபூயூசனையும் குறை சொல்லலாமா”?
“சரியான இடத்துல போடுற உழைப்புத்தான் பயன்தரும். அதேபோல நுனிமரத்துல இருந்திட்டு அடிமரத்த வெட்டுறது போலத்தான். குடும்பத்த பார்க்காம, சமுதாயத்த திருத்த வருவதும், அடுத்த எலக்சன பற்றி மட்டுமே, அதுதான் அடுத்த தேர்தல்ல வெற்றி பெறுவத மட்டுமே முதன்மையா நினைக்கிறவங்க ஆட்சிக்கு வந்தா இப்படித்தான்…. அவங்ககிட்ட அடுத்த தலைமுறைய பற்றி நினைக்குற எண்ணம் எப்படி இருக்கும்…. அவங்க எப்படி போதையில்லாத சமுதாயம் உருவாகவும், இளைய சமுதாயம் இப்படி அடிமையாகாம இருக்கவும், பாடுபட போறாங்க…. எப்படி போதைய ஒழிக்க போறாங்க? வாய்ப்பில்ல…. அதுவர பெற்றோர்களுக்குத்தான் அந்தபொறுப்பு… வீட்ட பாத்திட்டு அப்புறமா பொதுவெளிக்கு வரலாம்…. நல்லா புரிஞ்சுக்கோ ஒவ்வொரு வீடும் நல்லா இருந்தா நாடுதானா நல்லாயிடும்….”
அவர்களின் உரையாடல் தொடர்ந்தது கொண்டிருந்தது. மாணவர்களின் பேச்சு கதிரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எழுந்தார் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம், வீட்டிற்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருப்பதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டார். ஒவ்வொரு வீடும் நல்லாயிருந்தா நாடும் நல்லாயிருக்கும்ங்குற மாணவனின் வாசகம் மனதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது….
*******
வீட்டின் முன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார் கதிர். ஷோபாவில் அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்த மனைவி கதிரைப் பார்த்ததும், “ஏன்ன உடனே வந்திட்டீங்க….. ”
“ஆமா… அங்க ஒர்க் ஆரம்பிச்சாச்சி, நம்ம காம்பௌண்ட்டுக்குள்ள, வீட்டைச் சுற்றி இருக்கிற தோட்டத்தைச் சுத்தப்படுத்தலாம்னு தோணுச்சு… அதான் வந்துட்டேன்… பையன் எழுந்திருச்சிட்டானா? ”
“லீவுதான தூங்கட்டும்னு தான் விட்டுட்டேன்…. “சாப்பிட்டுவிட்டு வந்திடுவேன்னு சொன்னீங்களே…. ”
“இல்ல நாம மூணுபோரும் சேர்ந்தே வீட்ல சாப்பிடலாம்னுதான்……”
“சந்தோசம்…. பஸ்ட் நீங்க ஒரு கப் காப்பி குடிங்க…. எடுத்திட்டுவாறேன்…. அப்புறம் டிபனுக்கு என்ன பண்ணலாம்னு பார்ப்போம்…. ”
“ஓங்கையால எதசெய்தாலும் அது தேவாமிர்தம் போலத்தான் இருக்கும்…..”
“போலத்தான் இருக்கும்னா…. தேவாமிர்தமா இருக்காது….”
“அய்யய்யோ என்ன விட்டுடு” என்றபடி தோட்டத்தைச் சீர்செய்ய அரிவாள், மண்வெட்டி, துடைப்பம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார் கதிர்.
“சமையல முடிச்சிட்டு நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்….” என்றபடி சமையல்கட்டினுள் நுழைந்தாள்.
கதிர் தோட்டத்தைப் பார்த்தார். மலர்ந்த பூக்கள் உதிர்ந்து கிடந்தன…. அம்மலர்களின் ஊடே முதிர் இலைகளும் விழுந்து கிடந்தன. செடிகளில் ஒழுங்காக வெட்டபடாத கிளைகள் வெளிநீட்டிக் கொண்டிருந்தன. குறு மரங்களில் காய்ந்த கிளைகள் இருந்தன. தரையில் தண்ணீர் சென்று வரும் கால்வாயும், மணல் பாத்தியும் சிதைந்து போயிருந்தன. அங்கிருந்த செடிகளிலும், மரங்களிலும் இலைகள் அசைவது நின்றன. காற்றடிக்கவில்லை மழை வருவதற்கு முந்தைய புழுக்கம் பரவிஇருந்தது. விதவிதமான செடிகளும், பூக்களும் பச்சைப் போர்வையாக வரவேற்கையில் புழுக்கம் பெரிதாகப்படவில்லை.
தோட்டத்தின் உயிர்ப்பை மேலும் அழகாக்க கதிர் களத்தில் இறங்கினார். முதலில் களைச்செடிபோல வளர்ந்திருந்த புல்களை அப்புறப்படுத்தி ஒருமுனையில் குவித்துவைத்தார். ஊடுகிளைகளையும் கத்தரித்தார். தரையில் கிடந்த உதிர்ந்த பூக்களையும், இலைதழைகளையும் பெருக்கி ஒன்றாகச் சேர்த்து வைத்து அழுத்தினார்.
உடைந்திருந்த இரண்டு தொட்டிகள், பிற குப்பைகளையும் அப்புறப்படுத்திவிட்டு, தூய்மை செய்வதற்குப்பயன்பட்ட கருவிகளைச் தண்ணீர் விட்டு சுத்தம் செய்தார். அப்போது அங்கு குப்பைக்கூடையுடன் வந்த அவரது மனைவி, “வீட்ட சுத்தமா பெருக்கியாச்சி, கூடையில இருக்கிற குப்பைய காம்பவுண்டுக்குள்ள தூரமா போட்டு எரிக்கப்போறேன். நீங்க சேத்து வைச்சிருக்கிற வேஸ்ட்டையும் அதுல போட்டு எரிச்சிடவா?
“நல்லது அப்படியே செய்….. ”
“இப்பத்தான் தோட்டம் தோட்டம்போல இருக்கு….. உங்க கைவண்ணத்துல தோட்டமே அருமையா மாறிட்டுது… ”
“சரி சரி நான் குளிச்சிட்டு வந்திடுறேன்…. ”
குளித்துவிட்டு, புதிய உடைகளை மாற்றிய கதிர் முன்னறையில் ஷோபாவில் உட்கார்ந்தார். கையில் காப்பியோடு வந்த கதிரின் மனைவி… அதை அவரிடம் கொடுத்துவிட்டு, “குடிங்க…. சீக்கிரமா டிபன் ரெடியாயிரும்….” என்றபடி அருகில் உட்கார்ந்தாள்.
“பையன் என்ன பண்றான்… எழுந்திரிச்சிட்டானா? ”
“ம்….. இப்பதான் பிரஸ்.. பேஸ்ட் எடுத்திட்டு பாத்ரூம் போயிருக்கான்… ”
“அவனபற்றித்தான் கவலையா இருக்கு… வர்ற திங்கள்கிழமையில இருந்து நான் ஆபீஸ் போகும்போது நானே ஸ்கூல்ல கொண்டு விட்டுட்டு வந்திடுறேன்… 8.45 மணிக்கு கிளம்பினா போதும்…. ஈவினிங் மட்டும் நீ ஸ்கூல்ல இருந்து உன் ஸ்கூட்டரில் கூட்டிட்டு வந்திர முடியுமா”?
“ஓ.கே. நல்ல ஐடியாதான்… நமக்கு வேன் ஃபீஸ் மிச்சம். அதவிட படிக்கிறதுக்கு டைம் கிடைக்கும்.. ”
“நான் அவங்க கிளாஸ் டீச்சர்கிட்ட ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்… வரும் வாரத்தில் இருந்து வேன் வேண்டாம்னு சொல்லிடுறேன்”.
“காலையில இரண்டு மணிநேரம் பையனுக்கு மட்டுமல்ல நமக்கும் கிடைக்குது… ”
“ஆமா… இன்னொரு சர்ப்பிரஸ்”
“வீட்டச்சுத்தி கிலின் பண்ணியிருக்கீங்களே அதுவே சர்ப்பிரைஸ்தான்.. ”
“ம்….. இண்ணைக்கு டிபன் சாப்பிட்டதும் நாம மூணுபேரும் வெளியூருக்கு….. புரியல…. பிக்னிக் போறோம்…. ”
“என்ன திடீர்னு….. எந்த ஊருக்கு”?
“அத நாம மூணுபேரும் டிபன் சாப்பிடும்போது பேசி முடிவெடுப்போம்…உங்க ரெண்டு பேரோட முடிவுத்தான் என்னோட முடிவு… ஒருநாள் மட்டும் வெளியே தங்குறமாதிரி பிளான் பண்ணலாம்… ”
“உங்க பையன் இதகேட்டதும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க போறான்…. குக்கர் விசில் வர சத்தம் கேட்குது… டிபன் ரெடியாயிடுச்சி… நான் வெளியே கூட்டி வைச்சிருக்கிற குப்பைகளைக் கொளுத்திவிட்டிறேன்… நீங்க சிரமத்தப்பாக்காம உங்க பையன ரெடி பண்ணுங்க… இந்த செய்தி தெரிஞ்சா அவனாவே ரெடியாயிருவான்…. ”
குளியலறையில் இருந்து வெளியேவந்த முருகன், “ரெடியாயிக்றேன்…” உடனே….. அப்படினா தனியா சொல்ல வேண்டியதில்ல…….ஃபுல்லா கேட்டியா….” என்றார் கதிர்.
“நீங்களே ஸ்கூல்ல கொண்டு விடப்போறதுல இருந்து எல்லாத்தையும் கேட்டேன்… ஐயம் ரியலி ஹேப்பி அப்பா…. ” என்றபடி அப்பாவைக் கட்டிக் கொண்டான்… கதிரும் அணைத்துக் கொண்டார். ஆனால் முகம் மன அழுத்தத்தோடு காட்சியளித்தது. அன்பாலும், அரவணைப்பாலும் முருகனை மாற்றிவிட வேண்டுமே என்னும் உணர்வு மனதுக்குள் கவலையாய் பரவியிருந்தது.
“பையனைக் கொஞ்சுறது இருக்கட்டும்… குளிச்சிட்டு, நான் புதுசா தைத்த சட்டையும், நிக்கரும் மேசையில இருக்கு…. போடச் சொல்லுங்க… நேற்று போட்ட யூனிஃபாம் சட்டையிலேயே மகாராசா நிக்கிறாரு…. ” என்றபடி அம்மா எழுந்திருந்து தோட்டத்திற்குச் சென்றாள்.
கதிரின் அணைப்பில் இருந்து சட்டென விலகி படுக்கையறை நோக்கி ஓடினான் முருகன்.
“என்னாச்சுடா….” என்றார் கதிர்.
“இல்லப்பா என் யூனிஃபார்ம் நிக்கர்…. எங்கப்பா..” என்றபடி கட்டில் முழுவதும் தேடினான். போர்வையை எடுத்து உதறினான், கட்டிலின் அடியில் குனிந்து பார்த்தான்.
“அழுக்குத் துணியெல்லாம் போடுற கூடையில போயி பாரு… அங்க கிடக்கு” என்றதும் வேகமாகச் சென்றான்… கூடையை நோக்கி…. கூடையின் மேலேயே கிடந்தது நிக்கர்.
எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் கைவிட்டுத் தேடினான். மறு பாக்கெட்டுக்குள்ளும் தேடினான். எதுவும் இல்லை. உடலெல்லாம் குப்பென வியர்த்தது. தந்தையைப் பார்த்தான். அவர் கையில் இருந்த அலைபேசியை இயக்கி ஏதோ செய்துக் கொண்டிருந்தார். உண்மையில் அவன் செய்கைகளைத்தான் அவன் அறியாமல் கவனித்துக் கொண்டிருந்தார் கதிர். அவன் எதை தேடுகிறான் என்பதையும் அறிந்தே மவுனம் காத்தார்.
அவன் அழுக்குத்துணிகள் இருந்த கூடைக்குள் கைகளைவிட்டு துழாவினான். கூடை மூடியை ஒரு கையால் தன்னோடு அணைத்துக் கொண்டு கூடையைச் சரித்து, துணிகளைத் தனித்தனியே பிரித்து சோதித்தான். அவன் தேடியது கிடைக்கவில்லை. கூடையில் இருந்த தூசு வியர்வை ஈரத்தில் நனைந்திருந்த சட்டையில் ஆங்காங்கே ஒட்டிக் கறையாகத் தெரிந்தது.
“கதிர் மகனிடம், எத தேடுற இவ்வளவு பதட்டமா”?
“இல்லப்பா ஒரு முக்கியமான….. பேப்பரூ…. நிக்கர் பாக்கெட்டுக்குள்ள…. இருந்துது…. கா ….. ண்….ல….. ” என தடுமாறியபடியே சொன்னான்.
“வீட்டுக்குள்ள வேறுயாருவரப்போறா….. மூணு பேர்தான் இருக்கோம்…. ஒழுங்கா தேடுனா கிடைக்கும்… ” இன்னும் அதிகமாக வியர்த்தது முருகனுக்கு. மீண்டும் படுக்கையறைக்குச் சென்று தரையில் படுத்தபடி உன்னிப்பாகக் கட்டிலுக்கு அடியில் பார்த்தான். அதற்கிடையில் மறைத்து வைத்திருந்த பான்மசாலா பாக்கெட்டை கதிர் எடுத்தபடி வெளியே தோட்டத்திற்குள் வந்தார். அவர் மனைவி பெரும்பாலான குப்பைகளைக் கூட்டி வைத்து தீயிட்டுக்கொண்டிருந்தாள். அது எரிய ஆரம்பித்திருந்தது. “நான் குளிச்சிட்டு வந்திடுறேன்” என்றபடி அவள் வீட்டிற்குள் நுழைந்தாள். கதிர் பான்மசாலா பாக்கெட்டை நெருப்பில் போட்டார். வீட்டிற்குள் வந்தார். ஷோபாவில் அமர்ந்தபடி சன்னல் வழியே எரியும் குப்பையைப் பார்த்துக் கொண்டிருந்தார். முருகனைப் பார்த்த அம்மா, “என்னடா இப்படி நிக்குற…. படபடப்பும், பரபரப்புமா….. ”
“இல்லம்மா…. ஒரு…. பேப்பர காணல….. ”
“எப்பவும் பரபரப்பா இருக்கிற உங்க அப்பாவே அமைதியாயிருக்காரு … எவ்வளவு பெரிய மாற்றம் நமக்கு அனுசரணயா வேற…. எம் மனசும் அமைதியாயிருச்சி….. “டேய் ஏண்டா…. சட்டைய எல்லாம் ஈரமாக்கி அழுக்காக்கி…… துவைச்சா போகுமாடா …. முதல்ல கழட்டுடா” என்றபடி அருகில் சென்று சட்டையைக் கழற்றி கூடையில போட்டாள் அமைதியாக நின்றான் முருகன்.
“முதல்ல போய் குளிச்சிட்டு வாடா…. அப்புறமா அப்பாவும் பிள்ளையுமா தேடலாம்…. ”என்றபடி உள்ளறைக்குள் சென்றாள்.
கதிர், “இப்போதான் பெருக்குன குப்பையெல்லாம் தோட்டத்து சருகுகளோடு சேர்த்து கொளுத்திவிட்டுருக்கா உங்கம்மா…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தோட்டத்திற்கு ஓடினான்.
நெருப்பினுள் பாதி எரிந்த நிலையில் பான்மசாலா பாக்கெட் தெரிந்தது. குளிர்ந்த காற்று வேகமாக அடிக்கத் தொடங்கியிருந்தது. அதில் நெருப்பு அணைவதும், பற்றுவதுமாக இருந்தது. குனிந்து கையால் பாக்கெட்டை நெருப்பினுள் தள்ளிவிட்டான். காற்றடிப்பதால் விழுந்து கொண்டிருந்த சருகுகளையும், சரியாகக் கூட்டிப் பெருக்காமல்விட்ட காகிதக் குப்பை போன்றவற்றையும் வேகமாகப் பொறுக்கி எடுத்து எரியும் நெருப்பில் போட்டபடி இருந்தான் முருகன்.
அனைத்தையும் சன்னல் வழியே கதிர்பார்த்துக்கொண்டிருந்தார். தோட்டம் முழுவதும் அங்கும் இங்கும் ஓடி அனைத்து குப்பைகளையும் சேகரித்து நெருப்பில் போட்டுக்கொண்டிருந்தான். வீதியில் செல்வோர், வருவோர் யாரும் முருகன் கண்ணிற்குத் தெரிவது போல் இல்லை. குப்பைகள் எரிவதிலேயே கவனமாக இருந்தான். அதே தெருவில் இரண்டு வீடுகள் தாண்டி அவனுடன் வகுப்பில் படிக்கும் இராமனின் வீடு இருந்தது. இராமனின் தாத்தா தெருவழியாகச் செல்லும் போது, “முருகன் காலையிலேயே கிளீனிங் ஒர்க்கா”? என்றபடி சென்றார். எதுவும் காதில் விழவில்லை. குப்பைகள் முழுவதுமாக எரிந்து தணிந்தது. முருகனின் படபடப்பும் தணிந்திருந்தது. அப்பொழுது காம்பௌண்ட் வாசல் பக்கத்தில் குப்பைக் கூடையோடு சென்று கொண்டிருந்த இராமன், “முருகா” என்றான். அப்பொழுதுதான் இயல்பான முருகன் வாசல்பக்கம் சென்றான். மழையும் மெதுவாகத் தூற தொடங்கிற்று.
“எப்போ நல்லவனா மாறின….. எங்க தாத்தா உன்ன புகழ்ந்து சொன்னதோட, குப்பைக் கூடையைக் கொடுத்து தெருமூலையில இருக்கிற தொட்டியில கொட்டிட்டு வரச்சொல்லிட்டாரு. சரி குளுந்த காற்று அடிக்குதே இப்படி நிக்குற….” என்றபடி சிரித்தான். மழை திடீரென வேகமெடுத்து பெய்யத்தொடங்கியது. முருகன் வெட்கம் மேலிட “குளிக்கப்போறேண்டா” என்றபடி வீட்டை நோக்கித் திரும்பினான். இராமன் “வாறேண்டா” என்றபடி ஓடினான்.
முருகன் மழையில் நனைந்தபடி தோட்டத்தைப் பார்த்தான். குப்பைகள் நீங்கி சுத்தமாக இருந்தது. மழையின் குளிரைவிட எப்போ நல்லவனா மாறின என்ற இராமனின் வாசகம் இதயத்தைக் குளிர்வித்தது. குழந்தை மனது மேலிட, வீட்டு மாடியிலிருந்து குற்றால அருவிபோல விழும் மழைநீரில் குளிக்க தொடங்கினான்.
குளித்து, உடைமாற்றிவிட்டு வந்த முருகனின் தாயார் கதிரிடம், “பையன கவனிச்சிங்களா….. எங்க? ”
“வெளியில பாரு…… ”
இருவரும் வாசலுக்கு வந்தனர்…..
“ஷவர் குளியலைவிட அருமையா இருக்கு…. சோப் குடுக்கிறீங்களா….” என்றான் முருகன்… “சீக்கிரமா குளி…. அம்மா புது டிரஸ்….. வைத்திருக்கிறா… டிபன் சாப்பிட்டுட்டு பிக்னிக்குக்கு பிளாள் பண்ணனும்… ” என்றார் கதிர்.
மழையில் புழுதியெல்லாம் அடங்கிபோயிருந்தது. மழையின் வாசத்தோடு இளம் தளிர்களும், பூக்களும் காற்றில் வாசம் பரப்பின……
*******
